இசைக்கவி ரமணன்

து அதிகாலை நேரம். ஒரு மூன்றரை மணி இருக்கும். நான் வாசல் அறையில், ஒரு சோபாவில் படுத்திருக்கிறேன். இயற்கை உபாதை. எழுந்து, பின்கட்டுக்குச் செல்லவேண்டும். செல்லும்போது, ஏதோ என்னை ஈர்த்ததாக உணர்ந்தேன். வலதுபக்கம் திரும்பினால், மீனாட்சி அம்மன் படம். ஒற்றைச் சுடர் குத்துவிளக்கு. அதன் எதிரே, ஒரு மனையில், ஊசிபோல், நேர்மையாளனின் நெஞ்சுபோல், சற்றும் வளையாமல் ஒரு மெலிந்த உருவம் அமர்ந்திருக்கிறது. மூடிய விழிகள். இடதுபுறத் தோளில் புரளத் துடிக்கும் ஈரக் கூந்தல். பொடிசாய் ஒரு மூக்குத்தி, சுடர்போல் அல்லாமல் அடக்கமாக மின்னுகிறது. பண்டைக் காலத்துத் தவமுனியின் மனைவிபோல், தவம் செய்வோர்க்கு வரம் அருளும் அம்பிகை போல், உடலைச் சுற்றி ஒரு மென்மையான ரோஜா நிறம் கலந்த வெண்மை ஒளியோடு உட்கார்ந்திருக்கிறாள் மன்னி.

துரையில் நான் தனியே இருந்தபோதும், எனக்குத் திருமணம் ஆன பிறகும், மன்னியின் தல்லா குள வீட்டிலும், பிறகு “க்ருபா சித்தம்” என்னும் விஸ்வனாதபுரத்துச் சொந்த வீட்டிலும் நான் கழித்த பொழுதுகள் பொன்னானவை.

aசுப்புலஷ்மி என்ற பெயர் எனக்குப் பிடிபடவே இல்லை. அவள், மன்னி. அப்படி அவளை அழைப்பதுதான் அழகு, முறை. கொடுமைக்கார சாவித்ரி அத்தையின் மூத்த மருமகள். கணவர் திரு. கிருஷ்ணமூர்த்தி. அவரை ஜகல் அத்தான் என்றால்தான் எங்களுக்குப் புரியும். அவரும் என் அப்பாவும் அந்தரங்க சிநேகிதர்கள். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். சாந்தி, லலிதா, சுந்தர்.

ன்னிக்கு, எவர் மூலமாகவும், எதன் மூலமாகவும் இறைவனைப் பற்றிச் சிந்திப்பதிலும், பேசுவதிலும், கேட்பதிலும்தான் வாழ்க்கையின் தலையாய ருசியாக இருந்தது. நம் ஒவ்வொருவருக்கும் விதவிதமான ரசனைகள் உண்டு. மன்னிக்கு ஒரேயொரு ரசனைதான். இறைவன்! இந்த தெய்வ ரஸம் அவளுடைய ஊனினை உருக்கி உள்ளொளியைப் பெருக்கி இருந்தது. அவளைப் பார்த்தால், இவள் சாப்பிடுவாளா என்பதே சந்தேகமாக இருந்தது. சுவாசத்தைத் தவிர அந்த தெய்வக் கூட்டில் வேறெதும் இல்லை என்றே தோன்றியது. கொஞ்சூண்டு சாப்பிடுவாள்; ஆனால், அதை ரசித்து ரசித்து, அதை வழங்கிய கடவுளை நன்றியோடு நினைந்து நெகிழ்ந்து, போதுமென்று நிறுத்தித் தண்ணீர் குடித்துவிடுவாள்.

அவள் என்ன செய்தாலும், அது தெய்வமே செய்தது போல அவ்வளவு நேர்த்தியாகவும், தூய்மையாகவும், உயர்ந்த ரசனை மிக்கதாகவும் இருக்கும். மாவடு போடுவாள். ரெண்டு வருஷத்துப் பழைய வடுவும் கடுக்கென்று இருக்கும். அல்வா கிண்டுவாள். அமிழ்தக் கோப்பைகளைத் தூக்கி எறிந்துவிட்டு அமரர்கள் நெருக்கியடித்துக்கொண்டு வருவார்கள். இதைவிட இதைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்னும்படிச் செய்வதுதான் அவள் இயல்பு. ‘செய்கையில் நேர்த்தியே யோகம்.’ ‘செய்வன திருந்தச் செய்.’ இந்த வாக்கியங்களுக்கு முழு உதாரணம் மன்னி.

ந்த ரசனையின் சாரம் அவளுடைய மூன்று குழந்தைகளுக்கும் இயல்பாக இறங்கி இருந்ததை நான் அனுபவித்திருக்கிறேன். சாந்தியின் நாட்டியம். ஆட மாட்டாள், அபிநயிப்பாள். மிதப்பாள். நகர்வாள். ஒரு மாலை நேரத்து மரத்தடியில், அவள் “கிருஷ்ணா நீ பேகனே பாரோ!” என்னும் பாடலுக்கு அபிநயம் செய்ததை என் அக்காக்களோடு சேர்ந்து நான் வியந்து பார்த்தேன். கோலக் குழலுடன் நீல நிறத்துக் கண்ணன் அவளை அன்புடன், கொஞ்சம் பனித்த கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தான் என்பதை, அப்போது நான் குழந்தையாகவே இருந்ததால் என்னால் உணர முடிந்தது. ஒரு பிறந்த நாள் வாழ்த்தென்றால், பட்டுத் துணியில், அழகான கையெழுத்தில், ஆத்மார்த்தமான கவிதை வரிகளை எழுதி, அதைச் சன்னமான குரலில் வாசித்து, மகிழ்ந்து பரிசளிப்பாள்.

அவளுடைய தங்கை துர்கா என்னும் லலிதாவின் படிப்புக்கு அளவே கிடையாது. மதுரை டாக்டர் எஸ். ராமகிருஷ்ணனின் செல்ல மாணவி.

சுந்தர் பெருங்குரலோன். கடும் உழைப்பாளி. தேசியம், மார்க்சியம், பெளதிகம் எல்லாம் அத்துப்படி. மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவன். பெங்களூர் டாடா இன்ஸ்டிட்யூடில் சூப்பர் கண்டக்டிவிடிக்காக பி.ஹெச்.டி. எடுக்க முயன்று, பிறகு அதைக் கைவிட்டு, அமெரிக்காவில் குழந்தைகள் கொண்டாடும் ஆசிரியனாக விளங்குகிறான். அவன், கரக்பூர் ஐ.ஐ.டி.யில் படித்துக்கொண்டிருந்தபோது, வெள்ளம் வந்தது. படகில் போய்ப் பலரையும் மீட்டிருக்கிறான். அம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது என்று, பெங்களூரிலிருந்து சைக்கிளில் மதுரைக்கு வந்தவன் அவன்!

ன்னிக்கு எல்லாவற்றுக்கும் எப்போதும் நேரம் இருந்தது. தண்ணீர் பிடிப்பது, சமையல் செய்வது, ஊறுகாய் போடுவது, தியானம் செய்வது, படிப்பது, கேட்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, கோயிலுக்குத் தவறாமல் செல்வது, விரும்பி விரும்பி விருந்தினர்களை உபசரிப்பது, இன்னும் எத்தனை எத்தனையோ பணிகள். அவற்றைச் சுமையாகக் கருதாமல், சுவைத்துச் சுவைத்தே செய்தாள்.

வள், துன்பத்தை எப்படி எதிர்கொள்கிறாள் என்று சோதித்துப் பார்க்கத்தானோ என்னவோ, ஆண்டவன் அவளைப் பலவித சோதனைகளால் தாக்கினான். வங்கியில் நல்ல பதவியில் இருந்த கணவர், ஒரு வழக்கில் சிக்கி நிலையை இழந்தார்; அது பரவாயில்லை; கண் பார்வையை இழந்தார். சாந்தி, இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகு, கணவனால் கைவிடப்பட்டாள்; அவளும் கண்பார்வையை மெல்ல மெல்ல இழந்தாள்; இறுதியில் புற்று நோய்க்கு சமீபத்தில்தான் பலியானாள்; லலிதாவின் படிப்புக்கும் அழகுக்கும் வேலையும் கிடைக்காமல் விவாகமும் நடக்காமல் ஆண்டுகள் சென்றன. இவை போதாதென்று, மாமியாரான சாவித்ரி அத்தையின் கடும் வசவுகள்.

”மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் சனகன் மதி” என்று பாரதி சொன்னது போல, அத்தனை துன்பங்களுக்கும் மத்தியில், இனிமை குன்றாமல் இருந்தாள்; இறைவனை நாடிக்கொண்டே இருந்தாள்; இன்முகத்துடன், வருவோர்க்கெல்லாம் அமுதனைய உணவிட்டு மகிழ்ந்தாள். சுந்தரத்தின் மிருதங்க வாத்தியார், வகுப்பு முடிந்தவுடனேயே, “இன்னிக்குப் பக்க வாத்தியம் என்ன?” என்று விசாரிப்பார். சாதாரண இட்டிலியை, ஒரு மகாராணியாக உயர்த்திவிடும் மன்னியின் வியஞ்சனத் தோழிக் கூட்டம்! இன்று புகழ்பெற்று விளங்கும் திரு பிரணதார்த்திஹரன், மன்னி வீட்டில் அடிக்கடி ஆஜர்! எல்லாம் மன்னியின் கைவண்ணம்தான்!

வெளியூரில் இருக்கும் சுந்தரத்திற்காக, மாதாமாதம் அவனுடைய நட்சத்திர நாளன்று, மீனாட்சி கோயிலுக்கு நடந்தே போய் அர்ச்சனை செய்வாள். அவன் நினைப்பு மேலிடும்போது, அவனுக்குப் பிடித்த இனிப்பு வகையைச் செய்வாள், நான் அன்றைக்கென்று பார்த்து அவள் வீட்டுக்குச் சென்று நிற்பேன். “எப்படித்தான் மூக்குல வேர்க்குமோ?” என்று கிண்டல் செய்தபடி, நம்மைக் குளிப்பாட்டித் தூய்மை செய்யும் அன்புடன் அதை அள்ளி இடுவாள்.

சுந்தரம் தோசை தின்ன உட்கார்ந்தால், ரெண்டடுப்பு; ரெட்டைக் கல். சத்தமே இல்லாத ஒரு பரபரப்பு அந்தச் சமையலறையில் நிலவும். ஒரு கட்டத்தில், மன்னி, “சுந்தரா! பாதி மாவு ஆயிடுத்துடா…” என்பாள் மெதுவாக. சுந்தரம் மிகவும் ஒத்தாசையாக, “கடைசி ஏழும்மா” என்பான். அப்படி ஒரு பதிலை நான் எங்கும் கேட்டதில்லை. அவன் சொன்னது சரிதான் என்று மகிழ்ந்த அப்படி ஒரு தாயையும் நான் எங்கும் கண்டதில்லை!

என் மனைவியின் சீமந்த வளைகாப்பை அவள்தான் தன் வீட்டில் நடத்தினாள்.

வள் குறைப்பட்டுக்கொள்ள ஆயிரம் காரணங்கள் இருந்தன. ஆனால், துன்பங்களைப் பரிசாகப் பணிவோடு ஏற்றுக்கொண்டு, ஆண்டவனை வெட்கப்படச் செய்தாள். என்னை ஒரு சகாவாகவே நடத்தி வளர்த்தாள். ஆம், நான் அவளால் வளர்க்கப்பட்டேன் என்பது மிகையல்ல. நான் அவளோடு கழித்த நேரம் கொஞ்சமாக இருந்திருக்கலாம். ஆனால் அதன் தரம், அதனால் என் மீது படிந்த தெய்வீகம் இதை நான் எப்போழுதும் நன்றியுடன் நினைப்பேன் மன்னி! இறுதிவரை, அவள் இறையனுபவத்தையே நாடி வாழ்ந்தாள்.

என்னிடம் கடைசியாகப் பேசும்போதும், அவள் இதைத்தான் தெரிவித்தாள். “மன்னி! நீ பழுத்த பழம். அது உனக்குத் தெரியவில்லை. நீ சாகமாட்டாய் மன்னி! இறைவன் உன்னை மரியாதையோடு உனக்கு நோகாமல் இந்த உடம்பிலிருந்து உன்னை அழைத்துச் செல்வான். அதை நீ உணர்வாய்,” என்று நெஞ்சாரச் சொன்னேன். அவள் என் கைகளைப் பற்றிக்கொண்டு, கண்மல்க, “ரமணா!” என்று தொண்டை அடைக்க, என் கைகளில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். என்னால் தாங்க முடியவில்லை…

துன்பத்தை ஒரு குறையாகக் கருதாத, சோதனைகளை ஒரு பொருட்டாக மதிக்காத, எத்தனை இடர்கள் வந்தாலும் இறைவனை இடைவிடாமல் நன்றியோடு நினைத்துக்கொண்டே இருந்த, உடல், உயிர். மனம் ஒருசேரக் கலந்து தினந்தினம் விருந்தினரை உபசரித்த, அதிர்ந்து ஒருவார்த்தை பேசாத, காதே கேளாத போதும், இலக்கியம், இறைவன் என்று நல்ல வார்த்தைகளைக் கேட்பதிலேயே ஆர்வம் கொண்ட, அன்பன்றி வேறேதும் அறியாத, உத்தமிகள் எத்தனை பேரை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

அப்படிப்பட்ட ஒப்பற்ற ஒருத்தியின் முழு அன்புக்குப் பாத்திரமானவன் நான்! மன்னியை யாரோடும் ஒப்பிட முடியாது. தன்னுடைய அறிவை அப்படியே புறந்தள்ளி முந்திவந்த அவளுடைய பணிவு, கடவுளைப் பதற வைத்திருக்கும்.

வள் விரும்பியபடியேதான் அவள் விடைபெற்றுச் சென்றுவிட்டாள். பீஷ்மரைப் போல, ரதசப்தமி நாளுக்காகக் காத்திருந்து, அன்பான மகனின் அருகாமையில், வலியின்றி வான்கலந்தாள். தேவர்கள் கண்ணீர் சிந்தினர். தெய்வம் சற்றே குற்ற உணர்வில் குமைந்தது. குடும்பத்திலிருந்து, கண்ணியத்தின் உருவாரமொன்று நீங்கிவிட்டது.

வையம் ஒரு வரத்தை இழந்தது.

சுந்தரா! அம்மா போய்ட்டாடா…

நன்றி : அமுத சுரபி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *