Featuredபோட்டிகளின் வெற்றியாளர்கள்

என் பார்வையில் கண்ணதாசன்

–எஸ். கிருஷ்ணசாமி

என் பார்வையில் கண்ணதாசன்

Kannadasanநம் செந்தமிழ் நாட்டில் இருபதாம் நுற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற கவிஞர்களில் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவர்கள் மூவர். அவர்கள் தான் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசு கண்ணதாசன்.

அந்த மூவரின் படைப்புக்களில் நான் அதிகமாக படித்தது கவியரசு கண்ணதாசன் படைப்புக்களைத்தான். என் பார்வையில் கவியரசு கண்ணதாசன் மிகப்பெரிய கவிஞராக காட்சியளிக்கிறார்.

கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா, படத்தயாரிப்பாளர், நடிகர், அரசியல்வாதி, ஆன்மீகப் பேச்சாளர், இலக்கியவாதி என்று பன்முகம் கொண்ட பண்பட்ட மனிதராக நான் கவியரசு கண்ணதாசனை பார்க்கிறேன்.

குறுகிய காலத்தில் கண்ணதாசன் 5000க்கும் மேற்பட்ட திரை இசைப் பாடல்களையும், 4000க்கு மேற்பட்ட கவிதைகளையும் 60க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். நோய் நாட்களைத் தவிர எஞ்சிய நாட்களிலெல்லாம் எழுதிக் கொண்டே இருந்திருந்தால் தான் இவ்வளவு படைப்புகள் சாத்தியமாகும். அவரின் எமுத்துப் பணியை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது.

அவர் தொட்டெழுதாத துறைகளே இல்லை. காதலை, கன்னியரை, மதுவை, அரசியலை, நீதியை, நியாத்தை, ஆண்டவனை, சிலுவையில் மாண்டவனை. தான் துய்த்த இன்பங்களை, பட்ட துன்பங்களை, செய்த தவறுகளை- அத்தனை பேர்களையும், அத்தனை நிகழ்வுகளையும் பாடலாக, கவிதையாக, கட்டுரையாகப் பதிவு செய்த ஒரே கவிஞர் கவியரசு கண்ணதாசன் ஒருவர் மட்டுமே!

அவர் எழுத்துக்கள் எல்லோராலும் போற்றப்படக் காரணம்; தன் அனுபவங்களையே வார்த்தைகளாக வழங்கிச் சென்றுள்ளார் அந்த மகாகவிஞன்!

ஒருவர் மாண்புற நடந்தால் அவரை வானளாவப் புகழ்வதும் அவர் மாறிவிட்டால் உடனே தாக்குவதும் அவர் எழுதுகோலின் இயல்பான வேலையாகும்.

மானிடரைப்பாடி அவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கையான பதிகம்
மலையளவு தூக்கி உடன்
வலிக்கும் வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வமிருகம்
என்கிறார் கவியரசு. அதுபோலவே மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அதை சமமாகப் பார்ப்பது அவர் பழக்கம்.

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்
இகழ்ந்தால் என்னுல் இறந்துவிடாது
புகழ்ந்தால் என்மனம் புல்லரிக்காது
என்று சாதரணமாக பாடிவிட்டு போகிறார்.  எனது பார்வையில் கண்ணதாசன் எதையும் தாங்கும் இதயம் படைத்தவராக தெரிகிறார்.

கண்ணதாசனின் கவிதைகள் இதுவரை ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. அதைப்போலவே அவரின்திரை இசைப்படால்கள் பல தொகுதிகள் வெளிவந்துள்ளன. நான் அவரின் படைப்புகள் அத்தனையும் படித்துள்ளேன். அதன் தாக்கத்தில் சென்ற ஆண்டு “கவியரசர் கண்ணதாசனின் கவிதைச் சிந்தனைகள்” என்ற ஒரு நுலை எழுதி வெளியிட்டுள்ளேன். அது அரசால் ஏற்கப்பட்டு அனைத்து நுலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவரின் எழுத்துக்களை கவனமாகக் கவனித்துப் படித்தால் நம் வாழ்வின் பல நிகழ்வுகள் அதில் வெளிப்படும். “தனி மனித வாழ்வில் எங்கு ஒரு சம்பவம் சடந்தாலும் அங்கு எனது பாடல் ஒன்று ஒலிக்கும்” என்று கண்ணதாசனே ஏழுதியிருக்கிறார்.

என்வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் எண்ணிப்பார்க்கிறேன். கவிஞரின் கூற்று நுற்றுக்கு நூறு என் வாழ்வில் நடந்துள்ளதை அறிகிறேன்.
என் கல்லுரிக் காலங்களில் நான் ரசித்துக் காதலித்த நாட்களில் என் கூடவே வந்தது கவிஞரின் பாடல்கள்.

காதலித்தவளைக் காணத் தவித்த நேரங்களிலெல்லாம் என் வாய் தானாக முணுமுணுத்த பாடல்:
கண்கள் இரண்டும் என்று
உன்னைக் கண்டு பேசுமோ!
காலம் இனிமேல் நம்மை
ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ!

காதலில் வெற்றிடைந்த நான் மணநாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது காற்றில் மிதந்து வருகிறது கண்ணதாசன் பாடல்:
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா…..நாம்
கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா!
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா?

ஒவ்வொரு தருணத்திலும் கவிஞரின் பாடல் ஒலிப்பதை உளமாற உணர்கிறேன்.

கவியரசர் வெள்ளை உள்ளம் படைத்தவர் தன் வாழ்நாளில் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாதவர். அவரைத் தான் பலபேர் பல துன்பங்களுக்கு ஆளாக்கியுள்ளனர்.

தன் மனதில் பட்டதை துணிச்சலாக எழுதும் தன்மை பாரதிக்கு பிறகு கண்ணதாசனிடம் காண்கிறேன்.
கோப்பையின் மதுவே உன்னைக்
குடித்து துடித்தாலே நான்
காப்பியக் கவிஞனானேன்

கிண்ணம் உடைந்தால் … என்
கிறுக்கும் முடிந்து விடும்

ஒர் கையிலே மதுவும் ஒர் கையிலே மங்கையரும்
சேர்ந்திருக்கும் வேளையிலே ஜீவன் பிரிந்தால் தான்
நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும் இல்லையெனில்
ஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் என்னைக் கேட்பான்

இப்படி தன்னைப் பற்றி வெட்ட வெளிச்சமாக எழுத எந்த கவிஞனால் முடியும்? தன்வாழ்வில் நடந்தவைகளை ஒளிவு மறைவின்றி எழுதிய ஒரே கவிஞன் என்னைப் பொருத்த வரையில் கவியரசு கண்ணதாசன் மட்டுமே!

மதுவிலும் மங்கையரிலும் திளைத்த போதும் தான் ஒரு மாபெரும் கவிஞன் என்பதை தன் எழுத்தில் நிரூபித்தவர் கவிஞர் கண்ணதாசன்.

தற்காலத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல் வெளிவந்தால், அடுத்த படம் வந்ததும் இப்பாடல் மக்களிடமிருந்து மறைந்து விடுகிறது. ஆனால் கண்ணதாசனின் பாடல்கள் காலங்கடந்தும் மக்களால் உச்சரிக்கப்பட்டே வருகின்றன.

அவரின் கவிதைகள், காலத்தின் சாத்திரங்கள்; அவரின் நான்காயிரம் கவிதைகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஏழு தொகுதிகளையும் படித்த நான் எல்லாக் கவிதைகளுக்கு முத்தாய்ப்புக் கவிதையாக போற்றுவது கண்ணதாசன் எழுதிய:
சுடுகாட்டு எலும்புகளை
சோதித்து பார்த்ததிலே
வடநாட் டெலும்பென்று
வந்த எலும் பில்லையடி!
தென்னாட் டெலும் பென்று
தெரிந்த எலும் பில்லையடி
எந்நாட் டெலும் பென்றும்
எழுதிவைக்க வில்லையடி
ஒரு நாட்டு மக்களுக்குள்
ஓராயிரம் பிரிவை
எரியூட்ட வில்லையெனில்
எந்நாளும் துன்பமடி
என்ற கவிதையைத்தான். இந்தக் கவிதையை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்து ஒவ்வொரு இந்தியனின் இல்லத்திலும் அவன் உள்ளத்திலும் மாட்டி வைத்தால் போதும்! இனச் சண்டை சாதிச் சண்டை என்றும் வராது!

இனவேறுபாடுகளைக் களையப்பாடிய கவியரசர் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் “அர்த்தமுள்ள இந்து மதம்” “ஏசு காவியம்” போன்ற நுல்களையும் படைத்துள்ளார். இஸ்லாமியர்களின் வேத நுலான திருக்குரனை தமிழ் காவியமாக மொழி பெயர்க்க விரும்பி குரானின் முதல் வசனத்தை “திறப்பு” என்ற பெயரில் கவிதையாக எழுதினார். சிலரின் தலையீட்டால் அது அப்படியே நின்று போய்விட்டது.

கண்ணதாசன் கவிதை பாடல் மட்டுமின்றி திரைப்பட வசனகர்த்தாவாவும் திறம்பட பணியாற்றி உள்ளார் பல படங்களுக்கு அவர் வசனம் எழுதியுள்ளார். அதில் நான் ரசித்துக் கேட்ட வசனம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த “நாடோடி மன்னன்” என்ற படத்துக்கு கவிஞர் எழுதிய கீழ்க்கண்ட வசனம். இதில் தமிழ் எவ்வளவு எளிமையாகவும், எதார்தமாகவும் கவிஞரால் கையாளப் பட்டுள்ளது என்று பாருங்கள்.

அப்படத்தில் நடிகை பானுமதி ஏற்ற பாத்திரம் மதனா என்ற பெயருடையது. மதனா இறந்து விடுகிறாள். வீராங்கன் (எம்.ஜி.ஆர்) அழுது துடிப்பதைக் கண்ட மதனாவின் தந்தை “அழாதே! வீராங்கா” என்பார் அதற்கு வீராங்கன்,
“இன்பம் வந்த போது சிரிக்கத்தான் விடவில்லை
அழக்கூடவா விடக்கூடாது” என்பார்.
அதற்கு மதனாவின் தந்தை பதில் கூறுவதாக வரும் வசனம்
“இருளைப் போக்கும் விளக்குக்கு …. தன்
நிழலைப் போக்கும் சக்தி இல்லை என்பார்.
உடனே எம்.ஜி.ஆர். “விரலை அறுத்து விட்டா வீணை மீட்டுவது” என்று சொல்வார்.
அது கேட்ட மதனாவின் தந்தை,
“உலகில் சாதிக்கப்பட்ட சாதனைகள்  எல்லாம்
பாதிக்கப்பட்டவர்கள் செய்தது வீராங்கா”
என்று சொல்வார்.

இப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடோடியாகவும் மன்னாகவும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இருவரும் உரையாடும் ஒரு காட்சி. இதில் கவியராசரின் அற்புதமான அறிவுப்பூர்வமான வசனத்தைப் பாருங்கள்.

மன்னன்:    எதற்காக புராட்சி? யாரை எதிர்த்து புராட்சி?
நாடோடி: உங்கள் ஆட்சியை எதிர்த்து, சர்வாதிகாரமுறையை ஒழிப்பதற்கு!
மன்னன்:    அப்படியானால் என்னை ஒழித்து விடப் போகிறீர்களா?
மக்களின் ஒருவர் தானே மன்னன். ஏன் நானே ஆட்சி செய்யக் கூடாதா?
நாடோடி:    மக்களில் ஒருவர்தான் நீங்கள், ஆனால் மக்களின் நிலையறியாதவர். ஏழைகள் இந்த நாட்டை ஆள வேண்டும் என்கிறோம்!
மன்னன்:    அதெப்படி முடியும் விவசாயிக்கு உழத்தெரியும், வியாபாரிக்கு தொழில் தெரியும். மன்னனுக்குத் தானே ஆளத்தெரியும்!
நாடோடி:    அப்படித்தான் மக்கள் இதுவரை நம்பி வந்தார்கள் ஆனால் விதிக்கப்படும் கொடிய வரிகளும், கொடுக்கப்படும் சவுக்கடிகளும், மன்னர்களாகிய நீங்கள் வாழத்தெரிந்தவர்கள் தானே தவிர, ஆளத் தெரிந்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து விட்டன. பாத்திரம் நிறைய பாலைக் கண்டு பழகிய உங்களுக்கு சாக்கடை நடுவே வாழும் மக்களின் நிலை புரியாதென்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரண்டாயிரம் ஆடைகளில் எதை அணிவது என்று புரியாமல் திண்டாடும் நீங்கள், ஏதாவது ஒரு ஆடையிருந்தால் மானத்தை மறைக்கலாமே என்று ஏங்கும் ஏழைகள் பற்றி எப்படி அறிய முடியும்? இங்கே தாதியர்கள் பட்டு விரிக்கிறார்கள் நீங்கள் நடந்து போகிறீர்கள். அங்கே காலில் குத்திய முள்ளில் பாதியை ஒடித்து எரிந்து விட்டு கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள், ஏழை மக்கள்!

என்ன அருமையான வசனம்! இதில் எங்காவது சினிமாத்தனம் தெரிகிறதா? இயல்பான நடை அது தான் கண்ணதாசன்.

இன்னொரு படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகையர் திலகம் சாவித்திரி நடித்த மகாதேவி. அதில் வில்லன் பேசும் ஒரு வசனம்.
“வசுந்தரா நாளை நீ எனக்கு இணங்க வேண்டும்
இல்லையேல் உன் குழந்தையைக் கொன்று விடுவேன்”;

அதே படத்தில் வேறொரு காட்சியில் கவிஞர் வசனம் எழுதுகிறார் இப்படி:
“பித்துப் பிடித்தவர்களுக்கு மற்ற பேச்சு
பிதற்றலாகவே இருக்கும்”

“ ஆத்திரமே நீதிபதியாகிவிட்டால்
அறிவுக்கு அங்கே வேலையில்லை”

“இந்தக் காதல் ஒரு பாதி இல்லை சரிபாதி”

“கண்ணீரில் சட்டம் கரைந்து விட்டால்
நீதி சுடுகாடு போக வேண்டியது தான்”
வசனத்தில் தான் என்ன ஒரு ஒட்டம்! என்ன ஒரு தெளிவு. கவியரசாரின் வசனத்திற்காகவே மகாதேவியை பலமுறை பார்த்தேன்.

“சிவகங்கைச் சீமை” கவிஞரின் சொந்தப்படம். மற்ற படங்களுக்கு சிறப்பாக வசனம் எழுதிய கவிஞர் தன் சொந்தப் படத்துக்கு தன்திறமை முழுவதையும் காட்டி எழுதியுள்ளார் பாருங்கள்.
ஒரு பெண் பாடுகிறாள்:
இமையும் விழியும் எதிரானால்
இயற்கை சிரிக்காதோ!
தாயும் சேயும் பகையானால்
தாரணி நகைக்காதோ!

இதற்கு அப்பெண்ணின் கணவர் என்ன சொல்வான்? கவியரசனின் வசனம் வாள்வீசுகிறது பாருங்கள்.
நகைக்கட்டும் நன்றாக நகைக்கட்டும் நீயும் சேர்ந்து
நகைத்து விடு. வலுவுள்ளவன் வாழுகிறான். வாழத்
தெரியாதவன் வறண்டு போன தத்துவங்களின் பிரதிநிதி.
சாவைக் கண்டு சிரிக்கப் பழகு. உன் சஞ்சலம் மறைந்து விடும்.
மண்டை ஓடுகளின் மேலே நடந்து மண்டலத்தை
ஆண்டவர் பலர். தன் தம்பியின் தலைமீது நடந்து
தரணியை ஆளாப்போகிறான் உன் கணவன்”
கவியரசரின் வசனங்களுக்காகவே படம் வெற்றி பெற்றது.

திரைத்துறை மட்டும் அல்லாமல் பத்திரிக்கைத் துறையிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் கண்ணதாசன். சண்டமாருதம், திருமகள், தாய்நாடு, திரைஒலி, கண்ணதாசன், தென்றல், தென்றல்திரை, அணிகலன், என்று பல்வேறு இதழ்களுக்கு ஆசிரியாராக இருந்து பத்திரிக்கையை திறம்பட நடத்தியுள்ளார் கண்ணதாசன்.

தான் நடத்திய “கண்ணதாசன்” என்ற பத்திரிக்கையில் கவிதைப் போட்டி நடத்தி பல இளம் கலைஞர்களை, கண்ணதாசன் உருவாக்கியுள்ளார். ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதும் போட்டி அக்காலத்தில் அனைவராருலும் வரவேற்கப்பட்டது.

காலத்தை வென்ற கவிஞராக வழ்ந்த கண்ணதாசன் அரசியலில் இறங்கி தன் பொன்னான நேரங்களை வீணடித்துள்ளார். அரசியலில் பேசும் பொய் பித்தலாட்டம் கவிஞருக்கு பழக்கமில்லாத ஒன்று. 1962 ஏப்ரால் 9 நாள் கண்ணதாசன் தான் சார்ந்திருந்த திராவிட முன்னேற்ற கழகத்தை விட்டு வெளியேறினார்.

அரசியலை விட்ட பிறகு அவரின் எழுத்து மேலும் மேலும் கூர்மையானது. அன்மீகத்தில் இறங்கி அற்புதாமான பல நூல்களைப் படைத்தார்.

கம்பனைப் போல் தானும் ஒரு பெரிய காவியம் படைக்க வேண்டும் என்பதே கவிஞரின் கடைசி ஆசை. அந்த ஆசை நிறைவேறுவதற்குள் காலன் அவசரப்பட்டு கவிஞரின் உயிரைப் பறித்து விட்டான்.

சிறு கூடல் பட்டியில் பிறந்த  அம்மகாகவிஞன் சிகாகோவில் மறைந்து கண்ணணிடம் சென்றுவிட்டார்.

Share

Comments (3)

  1. அய்யா, “என் பார்வையில கண்ணதாசன்” போட்டி முடிவு எப்போது அறிவிப்பீர்கள்?

  2. அருமையான கட்டுரை.கவியரசரின் அனைத்துத் திறமைகளையும் தொகுத்து தந்துள்ளார் கட்டுரியாசிரியர்.வாழ்த்துக்கள்!!

  3. A greate tribute to a great kavingar.i had an oppurtunity to meet him in 1974in the college mutha mizh vizha.kittu has recorded his acheivement serially with greate sense and sentiments.long live both.

Comment here