Author: கிரேசி மோகன்

  • படமும் பாடலும்….!

    கிரேசி மோகன்

    ——————————————————

    crazy
    ’’மால்செய்த கண்ணன் மயக்கம் தலைக்கேற
    வேல்விழியாள் தண்மேனி வெப்பமுற -மேல்சுமந்த
    பால்நழுவிப் பொங்கி பழமவள் மூங்கிலன்ன
    தோள்தழுவும் பூவான தே’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”அம்மணக் கண்ணன் , ஆமணம் வீசிட
    சம்மணம் இட்டான் சகாவுடன்: -நம்மனக்
    கந்தையைக் கட்டி கசக்கி எறிந்திடுவார்:
    எந்தையின் ஆடை எழுத்து’’(கீதை, பாசுரம், திருப்பாவை போன்ற நூல் ஆடைகள்)….கிரேசி மோகன்….!

    Share
  • நீலம்

    கிரேசி மோகன்

    ——————————-

    தக்காளி ரசத்தில் கடுகைத் தாளித்துக் கொட்டினா மாதிரி, பகலை இரவு சந்தித்துக் கை குலுக்கும் சாயங்கால நேரத்து வானைப் பார்த்தபடி….ஸாரி பார்க்காதபடி கண்களை துணியால் கட்டிக்கொண்டு அண்ணாந்து பார்த்தபடி ” சரியா!….தப்பா!….சரியா!….தப்பா!” சொல்லிக் கொண்டே அந்த சிறுமி நொண்டியபடி பாண்டி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள்… சக சிறுமிகளின் சத்தம் வராது போகவே, அவள் கண்கட்டை அவிழ்க்க….எதிரே தாடகை ராட்சஸி போல அவள் தாயார் சாமி ஆடிக் கொண்டிருந்தாள்….

    ” சரியில்லடி….தப்பு….நான் உன்னை பெத்தது தப்பு….உன்னை ஒங்கப்பன் வளத்த விதம் தப்பு” என்று தப்புக்களை அடுக்கியபடி, நிழலை உருவம் இழுத்துக் கொண்டு
    போல….தாய் மகளை அடித்தபடி தரதரவென்று இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்….

    ” ஏண்டி பொண்ணை போட்டு இந்த அடி அடிக்குற….”காதை மயிலிறகால் குடைந்தபடி கட்டிலில் கரிசன நைனா….

    ” அடிக்காம….மடில போட்டு கொஞ்சவா சொல்றீங்க….அவ செஞ்ச….இல்ல செய்யாத காரியத்துக்கு கொன்னே போட்ருக்கணும்….பால்காரம்மா வூட்டுக்கு போய் தாம்பு
    கயிறு வாங்கிகினு வான்னு காலீலயே சொல்லியாச்சு….இந்த சிறுக்கி இன்னும் வாங்கிகிட்டு வரா…”

    ”ஆத்தா சொன்னத கேக்க வேண்டியதுதானே….ஏம்மா ழாழாத்தி…” குடைச்சல் சிலிர்ப்பில் ”ராசாத்தியை” ழாழாத்தி என்று நைனா….!

    ” அது என்ன எப்பப்பாரு ராசாத்தி ராசாத்தினு கொஞ்சல்….சிறுக்கிக்கு பேர் வச்சிருக்கீங்க இல்ல….அத சொல்லி கூப்பிடறது….”

    ”நாம என்ன பேர் வச்சாலும் அவ என்னிக்குமே ராசாத்திதாண்டி…. போன வருசம் ராமாயணக் கூத்துல எம் பொண்ணுதானே ராசாத்தி….

    ராமன் வில் ஒடைக்க வர சொல்ல ஒரு பாட்டு பாடுவியே…”ஈன்றாத போதும் பெரிதுவந்தார் நைனா….

    ”நீல வண்ண ராமா நில் நில்….நீ ஒடைக்க தோ பார் வில் வில்” கீச்சு மழலையில் சிறுமி கூவினாள்….!

    ”நிறுத்துரி ஒன் ஒப்பாரியை….நீல வண்ணமாம் நீல வண்ணம்….ராமன் கருப்புடி…”

    ” நைனா நைனா ராமனை எனக்கு கட்டி வை நைனா….எனக்கு இந்த சேப்பு புடிக்கல….அவனை கட்டிக்கிட்டு நானும் நீலமாயிடுவேன்” குடையும் மயிலிறகு மறுகாது வழியாக வரும் அளவுக்கு சிறுமி தன் தகப்பனை உலுக்கி ஆட்டுகிறாள்….

    ”நீயே நீலம் பாரிச்சுதாண்டி பொறந்த….நல்லவேளை ஒன் சினேகிதி நப்பின்னையோட ஆத்தா உன்னை தலகீளா தொங்கவிட்டு காப்பாத்தினா….எப்பபாரு நீல
    ஆலாபனைதான்….ராமனை கட்டிக்கிட்டா காட்டுக்குத்தான் போவனும்….”

    ”ராமன் இருக்க சொல்ல நான் தெகிரியமா காட்டுக்கு போவேன்….”

    ”காட்டுக்கு அப்பால போவலாம்….இப்ப பால்காரம்மா வூட்டுக்கு போய் தாம்பு கயிறு வாங்கியா…”

    ”தாம்பு கயிறு வாங்கிட்டு வந்தா ராமனை கட்டி வப்பியா….?”

    ” தாம்பு கயிறை வாங்கியா….ஆத்தாளும்,பொண்ணும் தூக்குல தொங்குவோம்….ஏங்க இவ சிறுக்கியா இல்ல கிறுக்கியா….”

    ”அவ ராசாத்திடி….ராமன் மாதிரி அவளுக்குனு ஒத்தன் பொறக்கத்தான் போறான் பாரு….!”என்றார் கிழிஞ்ச கட்டில் சனக மவராசா….!

    ”எப்ப பொறந்து….எப்ப வளந்து….எப்ப கல்யாணம்…. அய்யோ அப்பன் பொண்ணு ரெண்டு பேரும் இப்படி கனாலயே காலத்தை தள்ளறீங்களே….

    பெத்த வயிறு பத்திகிட்டு எரியுது….”

    ”ஏண்டி என்னையும் நீயா பெத்தே….?”

    ”கேலில ஒண்ணும் கொறைச்சலில்ல….தோ பாருங்க நீங்க ஒங்க பொண்ணுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கிட்டீங்க….படிப்பு கிடிப்பு ஒண்ணும் கிடையாது. எப்பப்பாரு ஆகாசத்தை பாக்கறா…. அன்னிக்கு வான வில்ல பாத்துட்டு ”ஆத்தா ராமன் இத ஒடக்க வருவானா” கேக்கறா….பட்டாம் பூச்சிக்கு பாட்டு சொல்லித் தரா….மல்லிப் பூவுக்கு, நீல கனகாம்பரத்தை கல்யாணம் பண்ணி வக்கறா….இது எங்க போய் முடியப் போவுதோ…!உங்களுக்கே கண்ணுல ஜலம் வருது பாருங்க….”

    ”தோ பார் சொகமா காது குடஞ்சா அப்படித்தான் கண்ணுல ஜலம் வரும், வாய்ல ஜொள்ளு ஒழுகும்….அது ஒரு புல்லரிப்புடி….”சனக மவராசா காது குடைஞ்சு குடைஞ்சு கைலாசத்துக்கெ போயிடுவார் போல கிறக்கத்துல இருந்தார்….பிறகு பெண்ணைப் பார்த்து” உங்காத்தா எதான உளறுவா….நீகாதுல போட்டுக்காதே….போய் சாப்டு தூங்கு….”

    ”நீங்க காதுல மயிலிறகை போடறதை மொதல்ல நிப்பாட்டுங்க” என்ற தாயார்காரி, சிறுமி உள்ளே செல்வதைப் பார்த்து ” எங்கடி நழுவுற…உன்னை வளக்கற விதத்துல வளத்தாத்தான் உருப்புடுவ….மயிலே மயிலேன்னா இறகு போடாது….அப்படியே போட்டாலும் உங்கப்பன் அதுல காது குடைய ஆரம்பிச்சுடுவார்….”

    சிறுமி தாயைப் பார்க்க ”என்னடி பாக்கற….கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கறே….அடிச்சா அழ மாட்டேங்கறே….மனசுல என்ன மாகாளின்னு நெனப்பா…
    போயி பால்காரம்மா வுட்டுலேந்து தாம்பு கயிறு வாங்கிகினு வா….அத்தாலா தயிரு கடையறது முன்னாடி உன்னை விளாசறேன்….அப்பத்தான் உனக்குப் புரியும்….”

    ”இருட்டிடுச்சு ஆத்தா….நாளைக்கு காலீல….”என்று சிறுமி இழுத்தாள்….”இருட்டினா என்ன….அதான் ஒனக்கு துணைக்கு அந்த நீலப் பய இருக்கானே…போடி”

    என்று மகளை தள்ளி கதவை சாத்துகிறாள்….” என்னம்மா இப்படி கல்நெஞ்சுக்காரியா கீறே….காத்து கருப்பு உலாவுற வேளைல….பச்சை புள்ளையைப் போய்”

    காது சொகம் அலுத்து மயிலிறகால் முதுகை சொரிந்தபடி நைனா செய்த சிபாரிசு எடுபடவில்லை….”உங்க பொண்ணுக்கு காத்தும் புடிக்கும்….கருப்பும் புடிக்கும்…. இவ வயசுல நான் உங்களை கட்டிகிட்டாச்சு….பச்சை புள்ளையாம் பச்ச புள்ள….மொதல்ல அந்த நீலப் புள்ளையை மறக்க சொல்லுங்க….”உள்ளே போகிறாள்….

    அன்று பார்த்து பிரளய கால இருட்டு….இரவு ஆரம்பமே அர்த்த ஜாமம் போல் இருண்டது….வரப்போகும் மழைக்கு பராக் பராக் சொல்வது போல சிலு சிலுவென
    காத்து…..வானத்தில் யாரோ தக்கிளி நூற்பது போல மின்னல் தோன்றி பூமியைத் தொட்டது….இடிச் சத்தம் சிறுமியின் காதில் ராமர் வில்லை உடைத்த சத்தமாகக்
    கேட்டது….சிறுமி பயத்தைப் போக்கிக் கொள்ள ”லட்சுமணா லட்சுமணா” என்று மனசுக்குள் சொல்லியபடி ஆத்தோரமாக பால்காரம்மா வீட்டுக்கு பயணித்தாள்….

    ”வானத்திலிருந்து மழை பெய்கிறதா இல்லை ஆத்துத் தண்ணீர் வானத்துக்குச் செல்கிறதா” என்று குழம்பும் அளவுக்கு வானத்துக்கும் ,பூமிக்கும் தண்ணீரால் தறி போட்டது போல மழை பத்தினி சொல்லாமலேயே பெய்யெனப் பெய்தது….துணைக்கு ”ராமனோ, லட்சுமணனோ” வில்லை ஏந்தி வரவில்லை….சிறுமிக்கு பயம் பிடித்துக் கொண்டது….

    ஆத்தோரமாக இருந்த அய்யனார் மண்டபத்திற்குள் ஒதுங்கினாள்….அந்த மண்டபத்தில் ஒருவர் படுக்கலாம் ,இருவர் அமரலாம் ,மூவர் நிற்கலாம்….வெளியே
    பேய் இருட்டு ,பொய்கை மழை ,பூதக் காத்து….அச்சத்திலும் , அசதியிலும் சிறுமி மண்டபத்தில் படுக்கிறாள்….அப்போது ஆத்துப் படிதுறையிலிருந்து ஒரு மாமா தலையில் துணி மூட்டையோடு மண்டபத்தை நோக்கி வருகிறார்….அவர் உள்ளே நுழைந்தவுடன் ”உஸ்” என்ற சத்தம் ஓய்கிறது….பெருமூச்சு விடுகிறார் பெரியவர் என்று சிறுமி நினைத்த வண்ணம், எழுந்து அமர்ந்து அந்த மாமாவுக்கு உட்கார இடம் அளிக்கிறாள்….பெரியவர் தலையிலிருந்த துணி மூட்டையை இறக்கி வைக்க இடம் இல்லாததால் சிறுமி எழுந்து நிற்கிறாள்….இப்போது மாமா, சிறுமி இருவரும் நிற்க காலி இடத்தில் துணி மூட்டை….

    ”அந்த மூட்டைல என்ன மாமா ?”….சிறுமிதான் மெளனத்தைக் கலைத்தாள்….!

    ” நான் செஞ்ச புண்ணியத்தை மூட்டையா கட்டிண்டு எடுத்துண்டு போறேன்” மாமா முகத்தில் கலவரம் நிரந்தர நிலவரமாகப் படர்ந்து இருந்தது….

    ” பாவ மூட்டை கேள்விபட்டுருக்கேன்….அது என்ன புண்ணிய மூட்டை ?” சிறுமி விடவில்லை….

    கையை நீட்டி மழை பெய்கிறதா என்று பார்ப்பது போல பெரியவர் சிறுமியின் கேள்வியைத் தவிர்த்தார்….

    சிறுமி விடுவதாக இல்லை ”உங்க பேர் என்ன மாமா ?”

    ”பேர்ல என்னம்மா இருக்கு….பேர் சொல்ல பிள்ளை இருந்தா போறாதா….?”பெரியவர் முகத்தில் பெருமிதம் கொப்பளித்தது…அது சரி உம் பேர் என்ன….?”

    பெரியவர் பேச்சை மாற்றினார்….!

    ”எங்காத்தாக்கு ஒரு அண்ணாத்த இருக்கார்….எனக்கு அவர் மாமா முற….அவுரு பேரையே உங்களுக்கு வக்கறேன்….சர்தானா….”

    ”உன் சவுகரியம் எப்படியோ அப்படியே கூப்பிடுமா….”பெரியவர் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள்….” வாசு மாமா” என்று சிறுமி கூப்பிட

    ”என்ன சொன்ன ?” என்று திகைத்தார்….”என் மாமன் பேரு வாசு மாமா….உங்களுக்கும் என்ன மாதிரி அவரு பேர கேட்டாலே பயமா….?”

    இருவரும் சம்பாஷணையில் திருப்தி இல்லாததால் சிறிது நேரம் மெளனம் காத்தார்கள்….” எம் பேர் ராமி” என்றாள் சிறுமி….

    ” ராமியா….! கேள்விபடாத பேரா இருக்கே….!”

    ”ராமன் சம்சாரம் ராமிதானே….நான் ராமனைத்தான் கட்டிக்கப் போறேன்….ஏன்னு கேளுங்க….”

    வெளி மழையை விட இவள் கேள்வி மழையைத் தாங்க முடியாத பெரியவர் ” ஏன்?” என்று ஏனோ கேட்டு வைத்தார்….!

    ” எனக்கு நீலம் புடிக்கும்….ராமன் நீலமா இருப்பான்” பெரியவர் மூட்டையைப் பார்த்து விட்டு சிறுமியை மோகினிப் பிசாசைப் பார்ப்பது போல பார்த்தார்….

    ”அப்ப நான் கிளம்பறேன் தாயி” என்று பயபக்தியோடு அவளிடம் சொல்லிவிட்டு மூட்டையை எடுக்கக் குனிந்தார்….

    ”துணைக்கு வருவீங்கன்னு பாத்தா இப்படி தனியா வுட்டுட்டு போறீங்களே….பால்காரம்மா வூடு வர கூட வாங்க வாசு மாமா” என்றதும், பெரியவர்
    ஆச்சரியமா , அதிர்ச்சியா தெரியாத பாவத்தைக் காட்டியபடி ”என்ன….நீயும் பால்காரி வீட்டுக்குத்தான் போயிண்டுருக்கியா….?” என்று அவசரமாகக் கேட்டார்….

    ”ஆமாம்….நீங்க….?”

    ”நானும் அங்கதான்….!”

    ”உங்கம்மாவும் தாம்புக் கயிறு வாங்கிக்கிட்டு வர சொன்னாங்களா….?”

    ” நான் அங்க போறது தாம்புக்காக இல்ல தாயி….நோம்புக்காக….!”பெரியவர் பழையபடி தலையில் மூட்டையை சுமந்தபடி செல்ல ,அவர் தலைக்கு மேல்
    ”உஸ் உஸ்” என்ற சத்தம் வருவதைக் கேட்டபடி சிறுமி அவரைத் தொடர்ந்தாள்….” மாமா நீங்களும் எங்க நைனா மாதிரி மயிலிறகால காது குடைவீங்களா….?”

    ” ஏன் கேக்கற….?” என்று அவர் வெலவெலக்க, சிறுமி ”இந்தாங்க உங்க தலைல இருக்குற புண்ணிய மூட்டைலேந்து விழுந்துடிச்சு….” என்று ஒரு மயிலிறகை அவரிடம் தந்தாள்….மூட்டை மட்டும் நனையாமல், இருவரும் சொட்ட சொட்ட நனைந்தபடி பால்காரம்மா வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தனர்….!

    பால்கார அம்மா வசதியானவள்….வீடு தோப்பும் துரவுமாக பிரும்மாண்டமாக இருந்தது….சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர்….வந்த திருடன் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி நல்லவனாகும் அளவுக்கு வாசல் கதவு வீட்டையே மறைத்தது…..நாதாங்கியில் தொங்கும் பூட்டைத் திறந்து விட்டாலும் அதைக் கழட்டுவதற்குள் பொழுது விடிந்து விடும்….”எப்படி உள்ளே நுழைவது ” என்ற கவலையில் கதவையும், பூட்டையும் கவனித்த வாசு மாமாவின் முகம் மலர்ந்தது….கதவில் சிறுவர்,சிறுமியர்கள் மட்டும் போய் வருவதற்கு தோதாக ஒரு பொந்து இருந்தது….ஆஜானுபாகுவான வாசு மாமா அந்த பொந்தின் வழியாக மானசீகமாக நுழைய முயன்று பாதியில் மாட்டிக் கொண்டு பிதுங்கினார்….

    ”மாமா என்ன இது….உங்க கைல தாம்புக் கவுறு கட்டியிருக்கு….?” சிறுமி சொன்னதும்தான் பெரியவரே தன் பிழையை உணர்ந்தார்….

    அவசரமாகக் கிளம்பியதில் கை,கால்களில் கட்டப்பட்ட தாம்புக் கயிறுகளை அவிழ்க்க மறந்ததை எண்ணி அசடு வழிந்தார்….

    ”பால்காரம்மா தூங்கியிருப்பாங்க….அவங்கள எளுப்பி இந்நேரத்துல கவுறு கேட்டா என்ன கொன்னே போட்ருவாங்க….தாம்பு கவுறுஇல்லாம போனா எங்காத்தா என்ன அடிச்சே கொன்னுருவா….தயிரு கடைய இந்த அளவு கவுறு போதும்….” என்றவள், அவர் சம்மதத்துக்கு காத்திராமல் அவர் கையில் அரைகுறையாக கட்டித் தொங்கிக் கொண்டிருந்த தாம்புக் கயிறை உருவிக் கொண்டாள்….”அப்பால நான் வரேன்…. பொழுது விடியறதுக்குள்ளே ஊரு போய் சேரணும்” என்று கிளம்பியவளை பெரியவர் பிடித்து நிறுத்தி….” தோ பார்….உனக்கு நான் தாம்புக் கயிறு தந்தேன் இல்லையா….பதிலுக்கு நீ எனக்கு ஒரு உபகாரம் செய்யணும்” என்றார்….”என்ன?” என்பது போல பார்த்த சிறுமியிடம்,

    ”உள்ளே பால்காரம்மா தூங்கிகிடுருப்பாங்கா….அவங்க பக்கத்துல ஒரு பாப்பா தூங்கிகிட்டுருக்கும்” என்றவர் நாக்கைக் கடித்தபடி” அது தூங்கற குழந்தையா….!” என்று தனக்குள் முனகிக் கொண்டார்….தொடர்ந்து ”நீ என்ன பண்ணனும்….நான் இந்த மூட்டைல ஒரு பொருள் வச்சிருக்கேன்” என்றவர்

    மறுபடி நாக்கைக் கடித்தபடி….”வெறும் பொருளா அது” என்று முணுமுணுத்துவிட்டு….”நீ அந்த கதுவுல இருக்கற பொந்து வழியா வீட்டுக்குள்ள நுழைஞ்சு நான் கொடுக்கற இந்த பொருளை அங்க வச்சிட்டு, அங்க பால்காரம்மா பக்கத்துல தூங்கற பாப்பாவை நைஸா எடுத்திட்டு வந்து என் கைல கொடுக்கணும்…. புரிஞ்சுதா….”புரியாவிட்டாலும் தாம்பு கயிறு கிடைத்த சந்தோஷத்தில் சிறுமி பலமாக தலையாட்டினாள்….

    பெரியவர் மூட்டையைப் பிரிக்க, உள்ளே எட்டி அந்தப் பொருளைப் பார்த்த சிறுமியின் கண்கள் ஆச்சரியத்தில் ஆகாசமாக விரிந்தது…. ஆனந்தத்தில் ஆழ்கடலாக கொந்தளித்தது….” இப்ப புரிஞ்சு போச்சு….நீங்க தசரத மகாராசாதானே….?” என்றவள் பெரியவரைப் பேச விடாமல்,மூட்டைக்குள் மறுபடி பார்த்து ”அப்பா என்ன ஒரு நீலம்….கைகேசிக்கு பயந்துகினு நீல ராமனை காட்டுல வுட வந்தீங்க….மனசு கேக்கல….பத்திரமா வூட்டுல வுட்டுட்டு அதுக்கு பதிலா பால்காரம்மா பாப்பாவை….” என்று ஆரம்பித்தவள் நிறுத்தி….”ஆமாம் பால்காரம்மா பாப்பா உங்களுக்கு எதுக்கு….?”…..இனியும் இவளை பேசவிட்டால் ஊரையே எழுப்பிவிடுவாள் என்று பயந்த பெரியவர்….” மொதல்ல நான் சொன்னத செய்….அப்பத்தான் தாம்புக் கயிறு ”என்று அவளை அவசரப்படுத்தினார்….

    ”கஷ்க் முஷ்க் ” என்று கன்னங்கரேல் உருண்டையாய்(சிறுமி காதில் விழுந்தால் கோபிப்பாள்….நீல உருண்டையாய்) இருந்த அந்தப் பொருள் விளங்கா உருண்டையை கைகளில் பிரேமையாக ஏந்தியபடி பால்காரம்மா வூட்டுக் கதவை நோக்கி சென்றவள், திடீரென்று திரும்பி வந்து பெரியவரிடம்….”நீங்க எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு தரணும்….” என்ற அந்த சிறுமி….” இந்த நீல பாப்பா பெரியவன் ஆனப்பாடு இவன எனக்கு நீங்க கட்டி வக்கணும்….என்ன பதில் சொல்லாம முளிக்கறீங்க….” சூழ்நிலையின் தீராத விளையாட்டை எண்ணி தனக்குள் வேதாந்தமாக சிரித்துக் கொண்ட அந்தப் பெரியவர்….

    ” தாயி….உனக்கு என்ன வயசாகுது…?” ”மார்கழி பொறந்தா ஆறு….ஏன்….?” என்றவளை பரிவுடன் பார்த்து….”இது இப்பத்தான் பொறந்த பாப்பா….

    இவன் என்னதான் பெரிவனா ஆனாலும் உன்ன விட ஆறு வயசு சின்னவனாச்சே….எப்படி இவன கல்யாணம் பண்ணிப்பே….”என்று கூறி முடிப்பதற்குள்
    அந்த சிறுமி பாய்ந்து….” கவலையே படாதீங்க, இவன் பெரியவனா ஆறவரைக்கும் நான் ஆறுக்கு மேல என் வயசு ஆவாம பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் அந்த சிறுமி பால்காரம்மா வீட்டுக் கதவை நோக்கி நகர்ந்தாள்….

    தாயிடம் தாம்புக் கயிறை தந்து விட்டு, சிறுமி நடந்ததையெல்லாம் மூச்சு வாங்க சொல்லி முடித்து….” ஆத்தா….நீல பையன எனக்கு கட்டி வக்கறதா அவனோட நைனா எனக்கு வாக்கு கொடுத்துட்டார் ”…..மகளை ஏற இறங்கப் பார்த்த தாயார்….” அய்யோ பெருமாளே….ஏன் எனக்கு இப்படி ஒரு பைத்தியத்தை மவளா கொடுத்தே….” என்று ஒரு பாடு புலம்பிவிட்டு, அதே தாம்புக் கயிறால் நீலப் பிரேமையில் கட்டுண்ட மகளை தூணில் கட்டிப்
    போட்டு….” இனிமே இப்படீலாம் பேசுவியா….பேசுவியா….” என்று அழுதபடி கேட்டுக்கொண்டே அடிக்க ஆரம்பித்தாள்….அப்போது கட்டிலிலிருந்து
    தாவிக் குதித்து வந்து மனைவியைத் தடுத்த சிறுமியின் நைனா” உனக்கு என்ன புத்தி கித்தி கெட்டுப் போச்சா….எப்பப்பாரு ஏன் இப்படி போட்டு
    அடிச்சே கொல்ற….ராதைய….”என்றார்…..
    ——————————————————————————————————————————————————

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    தனத்தனந்த தானா தனன
    தனத்தனந்த தானா தனன
    தனத்தனந்த தானா தனன-தனதானா

    மதுரா
    ———–

    120429 -Bamboo notes -wmark -lores

    “மனத்தகந்தை நானார் அழிய சிவக்கொழுந்து சோணா சலனை
    அணைத்துணர்ந்த ஞானா சிரியன் -ரமணேசர்
    உரைத்தஅந்த தேகான் மவலை விரிப்பிலுழன்று மீனாய் புலனின்
    புழுக்களுண்டு சாகா வகையை -அருள்வாயே
    கனைத்தியங்கும் பாலா ழிவளர் பணத்தனந்தன் மீதே றிவள
    தனத்தணங்கு சீர்பா தமுற -துயில்வோனே,
    தவிப்படைந்த ஆய்பா டியரின், பொறுப்புணர்ந்து சேயாய் மழையில்
    பொருப்புகந்து வானோர் கருவம் -ஒழிமாலே.
    சினத்தகஞ்ச மாமா அழிய ,மதர்த்துவந்த மாவா னையுடன்
    எதிர்க்கவந்த கோமா ளிகளை -பலராமன்
    துணைக்கரங்கள் தோதா கநில வரைக்குள்சென்று தாயார் சமேத
    தகப்பன்விலங்கு தூளா கவட -மதுராவின்
    ஜனத்தரங்கின் ராஜா வெனஅ ரசுக்குகந்து பாமா உருகும்
    மணிக்கமைந்த தோளாய் வயதில் -பெரிதாகி
    வெளுத்தசங்கை வாயூ திகுரு களத்தில்நின்று பூபா ரமதை
    குறைக்கவந்த கீதா சிரிய -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • ”ஒத்தனும் மத்தொருத்தனும்’’

    கிரேசி மோகன்

    இன்று உலக கதை நாள்….International Story Day….
    ———————————————————

    பிரும்மாண்டமான கல்யாண மண்டபம்….உள்ளே மேடையில் மணமகன் ராமானுஜம்-மணமகள் ஜானகி….ஜானகி செக்கச் செவேலென்று வறுமையின் நிறம் சிவப்பில் ஜொலித்தாள்….ராமானுஜமோ நிறத்தில் வறுமையாக பெருமாள் கோயில் மூலவர் போல் இருந்தான்….இந்த அழகில் ஸிம்ஃபெனி வாசிக்கலாம் அளவுக்கு பியானோ பட்டன் ஸைஸ் பற்கள் தேங்காய் துறுவலாக வாயை விட்டு வெளியே விழாமல் ‘’பேய்ச் சிரிப்பு சிரித்த ‘’ முகமா வந்தவர்களுக்கு அழகு காட்டிக் கொண்டிருந்தது….காதலித்த ஜானகியை கைப்பற்றியதில் ராமானுஜத்திற்கு சந்தோஷம் தாங்காமல் எக்ஸ்ட்ரா ரெண்டு பல் முளைத்தது….காதலுக்கு கண் இல்லை, காதலித்த ஜானகிக்கும் கண்ணில்லை

    அப்போது ஜானகியின் தந்தை ,ராமானுஜத்தின் மாமானுஜம் ஓடிவந்து’’ மாப்ளே….என்பொண்ண கண்கலங்காம பாத்துக்குங்க’’என்றார் கண்கலங்க’’மாமா…நான் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பனில CEOவா இருக்கேன்….என் சம்பளத்தை சில்லறையா மாத்தினா சத்திரத்துல உள்ளவங்க கைநிறைய இருக்கும்….இதத் தவிர மெட்ராஸ்ல 4 வீடு இருக்கு’’என்று ஆறுதலாக பீத்திக் கொண்டவன் ‘’மாமா….உங்க பொண்ணுக்காக நான் வீட்டைக் கட்டிப் பாத்துட்டேன்….நீங்க உங்க பொண்ணு கல்யாணத்த பண்ணிப் பாக்கற வழியைப் பாருங்க’’ என்று ‘’எங்கே மனம் மாறி விடுவாரோ’’என்ற அச்சத்தில் அவசரப் படுத்தினான்….

    மண்டபத்தின் வாசலில் கவுண்டமணி -செந்தில் போன்று இருவர் லுங்கியில்….
    மத்தொருத்தன் (செந்தில்) -அண்ணே! இப்ப போய் கேக்கலாம் சந்தோஷத்துல தந்துருவான்….

    ஒத்தன் (கவுண்டமணி) – இல்ல ….இப்ப வாணாம் ….வா போவலாம்….செந்தில் சலிப்போடு கவுண்டரை தொடர்கிறான்…

    காட்சி-2
    —————-

    முதலிரவு அறை….ராமானுஜத்தின் எசகேடான பற்களில் டம்பளர் பட்டு ஜலதரங்கம் வாசிக்க, அவன் பாலை அருந்தி….பழங்களை மிக்ஸி போன்ற வாயிலிட்டு ஜூஸாக்கி குடித்து…,நாயகன் ராமானுஜம் நாயகி ஜானகியை வில்லன் போல நெருங்க, ஜானகி’’No நஹி’’ என்று தடுத்து ‘’என்னங்க எங்கப்பா கல்யாணத்துக்கு ஏகமா செலவு பண்ணிட்டார்…நீங்க கடனா….!’’ என்று கவர்ச்சிகரமாக கெஞ்ச’’ அசடே! அசடே!….எதுக்கு கடன் இந்தா ப்ளாங்-செக்….’’என்று தந்து ஸ்விட்சை அணைக்க அறையில் ராமானுஜ இருள் கும்மியது….

    வீட்டு வாசலில் லாம்ப்-போஸ்ட் அருகில் ஒத்தன் -மத்தொருத்தன்….செந்தில்-அண்ணே….நம்பாள் உச்சகட்ட கிக்குல இருக்கான் …..இப்ப போய் கேட்டா நிச்சயமா தந்துருவான்….
    கவுண்டமணி-இல்ல….இப்ப வாணாம்…வா போவலாம்….செந்தில் கவுண்டரை சபித்தபடி தொடர்கிறான்….

    காட்சி-3
    —————-

    நர்சிங்-ஹோம்….நர்ஸ் கையில் ராமானுஜ ஜாடையில் பிறக்கும் போதே பல்லுடன் கருப்பு வெளுப்பில்(கலரில் கொஞ்சம் அம்மாவையும் கொண்டு பிறந்த) குழந்தை….கிருஷ்ண தேவ ராயருக்கு வாரிசு பிறந்தாற் போன்ற பூரிப்பில் ராமானுஜம் நர்ஸின் பர்ஸை நூறு ரூபாய் நோட்டுக்களால் நிரப்புகிறான்….

    நர்சிங்-ஹோம் வாசல் வராண்டாவில் ஒத்தன் -மத்தொருத்தன்…செந்தில்- அண்ணே புள்ள பொறந்த குஷில பய இருக்கான்….இப்ப எத்த கேட்டாலும் தந்துருவான்….அடம் புடிக்காம வாங்கண்ணே’’

    கவுண்டர்-இல்ல இப்ப வாணாம்…வா போவலாம்….தன் தலையில் அடித்துக் கொள்ளப் போன செந்தில் கைதவறுதலாய் கவுண்டர் தலையில் அடித்தபடி பின் தொடர்கிறான்….

    காட்சி-4
    —————-

    பிரும்மாண்டமான கல்யாண மண்டபம்….மேடையில்….ஆறிலேயே பார்க்க சகிக்காத ராமானுஜம் அறுபதில் அடி பிடிச்ச கரிச் சட்டியாய், வாயில் வழுக்கையும் தலையில் பொக்கையுமாக அவதாரம் போல நிற்கிறான்….அருகில், மறுபடி ராமர் பார்த்தால் வில்லை உடைப்பார் என்னும் அளவுக்கு ஜானகி அதே அழகுடன் நிற்கிறாள்….ராமானுஜத்தின் 25 வயது மணமகன் லஷ்மணன்‘’அப்பனுக்கு தப்பாம’’ நிழல் போல(நிறத்தில்) தன்னருகே தேவதை போல நிற்கும் மைதிலிக்கு தாலி காட்டிக் கொண்டிருக்கிறான்(கட்டப் போகும் கட்டம்)….அப்போது ராமானுஜன் சம்பந்தி ஓடிவந்து ராமானுஜத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பிக்க, ராமானுஜம்’’நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்….என் சொத்து பூராவையும் உங்க பொண்ணு அதாவது என் மருமக மைதிலி பேர்ல எழுதிட்டேன்’’ என்று வீரவசனமாக பேசி பத்திரங்களை தாரை வார்த்தான்….

    மண்டபத்தின் வாசலில்….ஒத்தன் -மத்தொருத்தன்….

    செந்தில்-எண்ணன்ணே எல்லாத்தையும் கொடுத்துட்டான்….இப்ப நாம போய் கேட்டா….!

    கவுண்டமணி-இப்பவும் இல்ல….எப்ப கேக்கணும்னு எனக்குத் தெரியும்….

    செந்தில்-வா போவலாம் அதானே….நானே சொல்றேன்….வாங்க போவலாம்….

    காட்சி-5
    —————

    மருமகள் மைதிலி வீட்டு வாசல் திண்ணையில் கிழிந்த பாயாக ராமானுஜம் புரண்டு கொண்டிருக்கிறான்….உள்ளே அறைச் சுவரில் ஊதுபத்தி மாலையோடு ஜானகியின் படம்….வெளியே வந்த மருமகள் மைதிலியிடம், ராமானுஜம் பரிதாபமாக’’அம்மா மைதிலி மணி பத்தாகுது இன்னும் நான் காப்பி சாப்பிடல’’என்று கெஞ்ச, எதையோ மிதித்தவள் போல மைதிலி மாமனாரைப் பார்த்து, சத்தம் கேட்கும் டெஸிபெலில் மோவாய் கட்டையை தோளில் இடித்து’’ஏ! கிழட்டுப் பொணமே….எப்பப்பாரு என்ன காப்பி காப்பினு….பித்தம் தலைக்கேறி பாயைத்தான் நீங்க பிறாண்ட போறீங்க’’என்று நாலு வீடு கேட்கும் அளவுக்கு கூவி விட்டு நகர்கிறாள்….அவளுக்கு பிறகு தயங்கி வந்த மகன் லஷ்மணன் மூணு கண்ணால் தந்தையை(ஏற்கனவே இவனுக்கு ஒன்றரைக் கண்…இப்ப ப்ளஸ் ஒன்றரை….ஆக மூணு)வாத்ஸல்யத்துடன் முறைத்துவிட்டு மைதிலி கிழித்த கோட்டை தாண்டாமல் வந்த நிதானத்தில் வீட்டுக்குள் சென்று மறைகிறான்….அப்பளத்து உருண்டையாய் திண்ணையில் சுருண்டு கிடந்த ராமானுஜம் சிலிர்த்து எழுந்து வானத்தைப் பார்த்து’’தெய்வமே ! பாத்துண்டு சும்மா இருக்கியே….என்ன ஏன் இந்த வயசுல இப்படி அல்லாட விடறே….என்ன அழைச்சிண்டு போக மாட்டியா…இது உனக்கே சரியா’’ என்று விசும்பி விசும்பி அழ….

    தெருக்கோடியில் ஒத்தன் -மத்தொருத்தன்….

    ஒத்தன் -வாடா இப்ப போய் கேக்கலாம்….என்று கூறி எமனுருவில் பாசக் கயிறை உருவ….மத்தொருத்தன் சித்ரகுப்தனாகி-என்ணண்னே….அப்பல்லம் வாணானுட்டு….!
    உங்கள புரிஞ்சுக்கவே முடியல….!

    எமன் -அடேய்….நானா போய் யார் உசுரையும் வாங்கறதில்ல….அவங்களா தர்மமா தந்தா எடுத்துப்பேன்….அதான் எம்பேர் தர்மராஜன்….இது பேர் பாசக் கயிறு….
    சித்ரகுப்தன் -அப்ப எருமை….

    எமன் -உன்ன மாதிரி உசுர வாங்க அவசரப்படாம பொறுமையை ஞாபகப் படுத்த எருமை….வா இப்பத்தான் போகலாம்….அடுத்த தெருல தற்கொலைக்கு பயந்துண்டு ஆக்ஸிடெண்டுக்காக நடுத்தெருல நிக்கறான்’’என்று கூறி திண்ணையை நெருங்க…..ராமானுஜம் மாரடைப்பில் கோமானுஜமாகி சாய்கிறான்….

    —————————————————————————————————————————–

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170319 -New Forever -lores

    ”நாதரவர் நித்திய நூதரவர், பார்த்தர்க்கு
    கீதையவர், ராதைக்கு காதலவர் , -கோமாதா
    பாதமவர், வந்ததோ பூபார வேதனைக்காய்:
    தீதழிக்கும் தாமோ தரர்’’….

    தீதழிக்கும் யாதவஅவ் தார்….கிரேசி மோகன்….!

    Share
  • CrazY Quotes From Crazy’sகிழிஞ்ச Coat….

     

    தூக்கக் கலக்கத்தில் தோன்றியது….CrazY Quotes From Crazy’sகிழிஞ்ச Coat…. 🙂

     

    ”ஆறாவது அறிவுடன் நிறுத்திக் கொள்பவன் அடிமுட்டாள்
    ஏழாவது, எட்டாவது என்று தொடர்ந்து படித்து டிகிரி வாங்குபவனே புத்திசாலி’’….(1)

    ‘’இளமையில் கல்….முதுமையில் சிலை….நடுவயதில் வாழ்வின் நாராசமான உளியின் ஓசை’’….(2)

    ‘’பாவம் செய்தவன் நரகம் செல்கிறான்
    புண்ணியம் செய்தவன் சொர்கம் செல்கிறான்
    எதுவும் செய்யாதவன் பூமியில் பிறக்கிறான்’’….(3)

    ’’கெட்ட பழக்கத்தை நாம விடலாம்….பாழாய்ப்போன
    நல்ல பழக்கமோ நம்மை விட்டால்தான் உண்டு’’….(4)

    ‘’அளவுக்கு மீறிய பசியில் நஞ்சும் அமிர்தமாகும்’’….(5)

    ‘’சொறிவதற்கு தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’’….(6)

    ‘’ஐந்தில் வளையாத முதுகு ஐம்பதில் வளையும்’’….(7)

    ‘’நான் ஆடாவிட்டாலும் KNEE ஆடும்’’….(8)

    ‘’கற்றோர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு
    கல்லாதவனுக்கோ செல்ல வேண்டிய அவசியம்
    இல்லாததால் இருக்கும் இடத்திலேயே சிறப்பாக இருப்பான்’’….(9)

    ’’தானாய் வருவது வெற்றி
    முயன்று பெறுவது தோல்வி’’….(10)

    ‘’முக்கால்வாசி வெற்றி
    மயிரிழையில் தோல்வியிடமிருந்து
    தப்புவதுதான்’’….(11)

    ’’பசி தாளாமல் பொய் சொன்ன வாய்க்கு போஜனம் உண்டு’’….(12)

    ’’5 பெண்ணைப் பெத்தவன் ஆண்டியாகலாம்
    5 பிள்ளை பெத்தவன் அந்த ஆண்டிக்கு சம்பந்தி ஆனால்
    ஆண்டியாகலாம்’’….(13)

    ‘’தைரிய சாலிக்கு வீர மரணம்
    கோழைக்கோ இருமி இருமி சளி மாரடைத்து
    ஈர மரணம்’’….(14)

    ‘’சுலபமான யோகம் வினியோகம்’’….(15)

    ‘’மெளனம் சங்கடத்துக்கும் அடையாளம்’’….(16)

    ‘’அனாவசியமாக அடிக்கடி கசக்கி கட்ட முடியாத அளவுக்குக்
    கந்தையாக்காதே’’….(17)

    ‘’பாம்பு, பூரான்,பூச்சிக்கு பயப்படாதவர்கள்
    தாராளமாக இயற்கையோடு ஒன்றி வாழலாம்’’….(18)

    ‘’சுறுசுறுப்பாக இருக்க உடலில் உறுதி வேண்டும்
    சோம்பேறியாக சுகமாக வாழ மனதில் உறுதி இருந்தால் போதும்’’….(19)

    ‘’இடுக்கண் வருங்கால் நகருக’’….(20)

    ‘’அளவுக்கு அதிகமாக ஆப்பிளை சாப்பிட்டதால்
    ஆதாம் ஏவாளுக்கு வந்த அஜீர்ணமே காதல்’’….(21)

    ’’ஞானப் பசி வந்தால் பற்றும் பறந்து போம்’’….(22)

    ‘’பகைச்சுவை இல்லாத எதுவுமே நகைச்சுவைதான்’’….(23)

    ‘’பயம்தான் சாவு….செத்தால் கொள்ளி….
    பயந்தால் கொள்ளிதான் பயந்தாங்கொள்ளியாச்சோ!’’….(24)
    ————————————————————————————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ETERNAL COMPANION….!
    ——————————————–

    kesav

    ’’கன்றை வரைந்திடக் கண்ணனங்கு தோன்றிடுவார்,
    நின்றால் நடந்தால் நவனீதக்-கன்றின்
    Eternal Companion என்றுமே அய்யன்
    Paternal காப்பதற்குப் பார்’’….

    ”நின்றாலும், நித்திரையாய் நீளக் கிடந்தாலும்
    நன்றைவர்க் காக நடந்தாலும்*, -என்றுமிவன்
    கன்றுக்காய் வந்தவன்தான்: என்றாலும் எம்பிரான்
    இன்றிருப்பு கேசவ் இடம்’’….கிரேசி மோகன்….

    *நன்றைவர்க் காக நடந்தாலும்-நல்லவர்கள் ஐந்து பேர்களுக்காக தூது நடந்தாலும்….

    Share
  • தூதுபோ பாதுகா

     

    ’’தூதுபோ பாதுகா’’( வெண்பாக்கள்)
    ——————————————————————
    அதர்மமே யானாலும் அஞ்சாது செய்யும்
    சுதர்மம் சுதந்திர சொர்கம் -பதமுறும்
    பாதுகையே போய்ச்சொல் தூதுவனாய்க் கண்ணனிரு
    காதுகளில் காத்திருப்பே னென்று…..(1)
    அகங்காரம் ஆசை பயம்கோபம் என்றும்
    சுகம்காணும் சொந்த நலத்தில் -புகுந்தாடும்
    மால்கட்டு நீங்கிட மாலோலன் பங்கயக்
    கால்கட்டும் பாதுகாய் காப்பு….(2)
    அகஸ்மாத்தாய்க் கேட்டோர் அதிசயிக்கும் வண்ணம்
    சகஸ்ரம் எழுதிய சிங்கம் -நிகமாந்த
    தேசிகர் பாதுகையை யாசகமாய்ப் பெற்றுத்தா
    கேசவன் காலணியே காப்பு….(OR)
    வாசகனென் தோஷம் விடுத்து….(3)

    சாவடி ஆவிற்கு பாவடி ஆழ்வார்க்கு
    காவடி ஐவர்க்கு , மாபலிக்கு -மூவடி
    நீவடி வாவது நெஞ்சமர் ராதைக்கு
    சேவடி உன்கால் அணிக்கு….(4)

    வேத புராண இதிகாச சாத்திரம்
    ஓதும் உபநிடதம் ஓங்காரம் -ஆதிகள்
    நூலணி நான்முகன் தோளணி சம்புதொழும்
    காலணி பாதுகையே காப்பு….(5)

    வானத்து கங்கை வருடிடும், அன்று
    தானத்தை தோழர்க்குத் தந்திடும் -தூணித்துச்
    சாய்ந்திட தூர்த்திடும் ஸ்ரீரங்கன் கால்களை
    காய்ந்திடாது காப்போனே காப்பு….(6)

    நின்றாலும் நீண்டு வளர்ந்தாலும் எங்கு
    சென்றாலும் சேவடி சேவகரே -அன்றாலில்
    கண்ணுறங்கும் போது கழற்றி இருப்பானே
    எங்கிருந்தீர் சொல்லும் எமக்கு….(7)

    சேதாரம் இல்லாது செங்கட் திருமாலின்
    பாதார விந்தத்தைப் பாதுகாக்கும் -ஆதாரமே
    தூதுபோய்க் கண்ணன் ஏதுதான் கூறினான்
    பாதுகாய் பகர்வாய் புகன்று….(8)

    நூபுரம் தண்டை நொறுங்கப் பிரபஞ்ச
    கோபுரம் தாண்டிக் கிளர்ந்தவன் -மாபரம்பொருள்
    மாதவ னோடு மகோன்னதத்தில் பங்குற்ற
    பாதுகா சாகசனைப் போற்று….(9)

    மூவா முகுந்தரின் பாதாதி கேசத்தை
    நோவாமல் தாங்கி நடத்துவோய் -சேவா
    கணத்தில் உமக்கு அனந்தனின் காலை
    தினம்தினம் சேவிக்கும் வாய்ப்பு….(10)

    வாளி,சங்கு, சக்கரம், வாள்தண்டு கேடயம்
    தோளணி வில்லும் துயரறுக்கும் -கோளரி
    மாதவன்கை ஆயுதங்கள் ஆனாலும் பாதுகாக்கும்
    பாதுகையே காலணிந்த கை….(11)

    தூணுதைத்தான் பின்னர் வானளந்தான் பேதை
    மானுடனாய் காட்டில் அலைந்தான் -தானுகந்த
    நாளாலில் சேயாக வாளாய் இருந்தவன்
    காலளவு பாதுகாய் கூறு….(12)

    காதலில் ராதையைக் காண ரகசியம்
    சீதையை மீட்க அவசரம் -கோதையைப்
    பெண்ணெடுக்கப் போகையில் பின்னைடைந்தீர் பக்தியில்
    பெண்ணுருகும் பாசுரம் கேட்டு….(13)

    பதம்வரையும் வானுமுற்ற பாகவதக் காரன்
    பதவுறையாய் சென்ற கதையை -பதவுரையாய்
    கூறவல்ல காலணியே வேறுதுணை ஏனெமக்கு
    நீரிருக்க நிர்பயமா னேன்….(14)

    தோளணி பூந்துழாய் மேலணி பீலியென
    மாலணி ஆபரணம் ஆயிரம் -காலணி
    பாதுகைக்கு ஈடாய் படிதாண்டி ஓடிவர
    ஏதுகை நெஞ்சே நமக்கு….(15).

    கண்ணிரெண்டால், விண்ணளந்தோன் காணாது போனாலும்
    கண்ணிரெண்டு கொண்டோய் குமிழ்களாய் -மண்ணிருந்து
    போற்றும் அடியார்கள் புகழ்செலவம் கல்விபெற
    சாற்றுன் எஜமான் செவிக்கு….(16)

    வாயுள்ள பிள்ளை வரிசங்கும், ஓயாமல்
    கையாலா காதுசுழல் சக்கரமும் -பாயாம்
    அரவணையும், வாயில் கரமணைக்கும் சப்த
    மரவடியைக் காதால் மடுத்து….(17)

    சகியின் வெளுத்து வளைந்த கழுத்தின்
    மகிமையால் சங்கை மறந்தான் -திகிரியை
    வாய்க்களித்தான் வேழனுக்கு, வாய்ப்பளித்தான் காலணியே
    ஆய்க்குலத்தோன் என்றும் அணிந்து….(18)

    விதுரன் அகத்தில் வினயமும், யுத்த
    சதுரங்கத்தில் கீதையும், ராதை -மதுரம்
    சுதாமன் சினேகிதம், சந்தித்த தெல்லாம்
    பதாம்புயத்துப் பாதுகாய் பேசு….(19)

    காலன் எதிர்வரும் காலம் அணுகிட
    மாலன் மலர்த்தாள் முகர்ந்திடும் -காலன்
    சகஸ்ரம் உரைத்திட சித்திர குப்தன்
    புகஸ்ரமம் கொள்வான் பயந்து….(20)

    கர்ணனின் தாராளம் குபேரன் ஏராளம்
    நர்மதை நீர்வேகம் நின்னருளே -வர்ணணை
    செய்து வரவழைக்க சொற்களை தேசிகர்போல்
    பெய்திட வாக்கைப் பெருக்கு….(21)

    நிற்கையில் மெத்தை நடக்கையில் வாகனம்
    வெற்பெடுக்கும் போது வரைதாங்கி -தெற்குநோக்கித்
    தூங்கும் அரங்கன் துயிலெழுவ தற்குள்சொல்
    தாங்கிய யோகத் தெளிவு….(22)

    சாமா னியரை சதுர்வேதி ஆக்கிஹரி
    நாமா வளியயை நவிலவைத்த -ராமா
    னுஜனே முழுமுதல் நாரணனைத் தாங்கும்
    புஜனே நிஜத்தில் புகுத்து….(23)

    பைகொண்ட பாம்பில் படுத்த பரம்பொருள்
    வைகுண்ட நாதர் வடிவத்தை -கைகொண்டு
    ஏந்தும்கால் பாதுகையே நீந்திவா பாற்கடலில்
    ஏந்திச்செல் என்னை எடுத்து….(24)

    தென்னிலங்கை செல்கையில், தூதுசென்(று) ஐவர்க்காய்
    மண்ணளந்து கேட்கையில், மாவலிதன் வரமேற்று
    விண்ணளந்த வேளையில், விரகத்தில் ராதைக்காய்
    கண்ணலைந்த காலத்தில், காலிருந்த பாதுகாய்
    மண்ணளைந்து உண்டவனை என்னகத்திற்(கு) இழுத்துவா….(25)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”மாம்பழ வாயர், மஹாகவி சேவகர்,
    BambooNotes கீதம் பசுவுக்கு: -பூம்பூம்பூம்
    மாடதன் பாடது வீடுறக் கண்ணனின்
    ஜோடுறைக்(பாதுகைக்) காலை சுவைப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    unnamed

    நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
    நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
    வளிசொல்லி வேணு விட்டலனை வாழ்த்தி
    களிகொள் அடியார்தம் கூட்டு….

    ’’பாற்குடம் மீதேறி புல்லாங் குழலூதும்
    பாற்கடல் கண்ணன் பதங்களை, -யார்கடன்
    பட்டார்போல் மேயும் பசுவின் விடாமுயற்சி:
    கெட்டாலும் மேன்மக்கள் கன்று’’….கிரேசி மோகன்….!

    ”பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன்
    ஞாலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள்
    எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன்
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!

    Share
  • கபாலீஸ்வரர் கோயில் உற்சவம்….

    “மயிலை கபாலி-கற்பகாம்பாள் கோயில் உற்சவம்’’….ஏப்ரல் 2 கொடியேற்றம்….!

    06-1407304787-karpagambalshiva

    “பிட்டுக்கு மண்சுமந்தாய் ,பங்களித்து பெண்சுமந்தாய்
    ஜிட்டுக்குள் கங்கை ஜலம்சுமந்தாய் -பிட்ஷைக்கு
    ஓடும் சுமந்தாய் ,உனையறியா நானய்யப்
    பாடைச் சுமக்கின்றேன் பார்”….

    அறுபத்து மூவர்….’’வேண்டுதல் வெண்பா’’….!
    ————————————————————————————–

    ‘’ஆசு கவியாகி ,ஆலயம் ஆலயமாய்,
    ஈசன், இறைவியை பூசித்து -ஓசை
    நயத்துடன் பண்களைப் பாட அருள்வீர்
    வியத்தகு ஒன்பத்தேழ் வர்’’….

    இரவு ஜாமத்தில் வெள்விடையேறி கபாலீஸ்வரர் வலம் வருகிறார்….
    “வெள்ளை விடையேறி வாமத்தில் கற்பக
    வல்லி மயிலாட நள்ளிரவில் -வள்ளல்
    கபாலியைக் காணக்கண் கோடிகள் வேண்டும்
    உபாயம் (பாபநாச) சிவனார் உரைப்பு”….

     

    ரிஷப வாகன அம்பாளை வேண்டி….
    ———————————————
    “புள்ளி மயிலாக புன்னை வனநாதர்
    பள்ளியறை வாழ்பரம பத்தினியே -வெள்ளி
    விடையேறும் ஈசர் இடபாக ஈஷி
    மடையோன்என் நாவில் மலர்”….

     

    பிக்ஷாடனர் கோலம்….
    ——————————
    “மெய்யடி யார்கள் மிகுந்த மயிலையில்
    ஐயம் எடுப்பதேன் அய்யனே -ஐயம்
    விடுத்து கரத்தில் எடுத்திடு மாலை
    இடத்து உமைதோள் இட”….

    “மாடேந்த வந்தாய் மகிழ்ந்தோம் வரவேற்று
    ஓடேந்து கோலம் உனக்கெதற்கு -தோடேந்தும்
    பாகத்தாள், அன்னமா பூர்ணி, அருஞ்சுவை
    பாகத்தாள் வாய்த்துமேன் பாடு”….

    “ஓங்கி உலகளந்து உத்தமர் மூன்றுவரம்
    வாங்கிய பிச்சை வடிவையும் -தாங்கிய
    கப்பரை யோடரன் கோலத்தைக் கண்டதும்
    ஒப்பறிந்தேன் மாலீசன் ஒன்று”….

    “அட்சதை போடயிங்(கு) ஆயிரம் பேரிருக்க
    பிட்ஷை எடுப்பதேன் பித்தரே -சச்சைய் !(விளிச்சொல்)
    இரந்தது போதும் இறைகபா லீஸா
    மறந்தனையோ நாளை மணம்”….

    மாப்பிள்ளை அழைப்பு…
    “எந்தையும் தாயும் இணைந்து குலாவிட,
    முந்தைய ஆண்டுபோல் ,மாங்கல்யம் -தந்துனாவை
    மீண்டும் மயிலைவாழ் மக்கள் நடத்திட
    வேண்டுகிறோம் மாப்பிள்ளை வாள்”….
    திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ்….
    ——————————————————
    “செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம்
    கல்யாணம் செய்தவன் கைத்தலம்-செல்லும்
    தினம்நாளை சேர்வீர் திருமயிலாப் பூர்க்கு
    இனம்ஜாதி இல்லை இதற்கு”….

    “கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும்
    நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ
    வேதியர் ,மாலயன் ,வானோர் குழுமிட
    ஆதியின் பாதி அளிப்பு”….

    “அன்னைக்கும் தந்தைக்கும் ,அர்த்தமதன் சொல்லுக்கும்
    புன்னைக்கும் பூங்கொடி பெண்ணுக்கும் -இன்னைக்கு
    கையோடு கைகோர்க்கும் கல்யாண உற்ச்சவம்
    மொய்யெழுதும் நேரமிது மெய்க்கு”….

    “குங்குமமும் வெண்ணீறும் கூடிக் கலந்தின்று
    சங்கமம் ஆகுது சன்னிதியில் -தங்களை
    வாயாரக் கேட்கிறேன் வந்திதைக் காணவினை
    நோயாறிப் போகும் நொடித்து”….

    “பங்குனி உத்திரத்தில் சங்க ரனுமையாள்
    பங்குநீ என்றுதன் பாகத்தை -மங்களமாய்
    தந்த மணநாளாம் இன்று மயிலையில்
    வந்து வடுக்களை வாழ்த்து”….

     

    பலன்….
    ————–
    “கைத்தலம் பற்றிய கற்பகத்தின் காதலால்
    மெய்தலப் பாதி மகிழ்ந்தளித்த -வைத்திய
    பாகனின் பாதம் பணிய சனிபகவான்
    நோகான்நம் பாகம் நளன்”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170315 - Dialogue with Arjuna -lores

    ’’உள்ளத்தில் நல்லவுள்ளம் உள்ளதைக் காட்டிடும்,
    கள்ளமில் லாக்கலர் கண்ணாடி -பல்குனா(அருச்சுனா)
    வந்ததை ஏற்றதன்மேல் வில்லம்பு வீசடா
    பந்தங்கள் ,சொந்தங்கள் பொய்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    Anantha….!
    ———————-

    kesav

    ‘‘அவன்தான் களிறு ,அவன்தான் குமரன்,
    அவன்தான் அவன்தங்கை ஆயி -அவன்தான்
    சிவன்தான் அயன்தான் தவம்தான் வரம்தான்
    அவன்தான்ஆ னந்த அது”….
    ”முக்திமார்க ஆனந்தம் சத்தான சித்தாகும்
    யுக்தியுடன் பூமிக்கு வந்துவிட்டால் -பக்திமார்க
    பாதைக்கு அப்பனாகும்; பத்தினியே ஆனாலும்
    சீதைக்கு சித்தப்பா சீனு(சீனிவாசர்)’’….
    கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ‘’HOLYயில்லா மந்திரமும் ஜாலியில்லா இல்லறமும்
    வேலியில்லா தோட்டமும் வீணாமே: -ஹோலியில்(HOLIயில்)
    ராதையில் லாக்கண்ணன் ராத்திரி கண்விழிப்பு,
    சீதனக் கன்றுடன் சேர்ந்து’’….கிரேசி மோகன்….!

    Share