Author: கே. ரவி

  • சாஹஸ மோஹினி நீ

    கே.ரவி

     


    10365964_1412031469078978_5027039259935012318_n

     

    =========================================

    பாடலைக் கேட்க:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/06/Saahasa-Mohini_new2.mp3

    =========================================

     

    சாஹஸ மோஹினி நீ – என்
    மானஸ வீணையின் நாள நரம்புகள்
    ராகம் இசைத்திட ராஜஸம் பயில்
    சாஹஸ மோஹினி நீ

    காலையிலே செந்தாமரை நீ – பகல்
    வேளையிலே பொன்னோவியம் நீ – அந்தி
    மாலையிலே நீலோத்பலம் நீ – பின்
    இரவினிலே வரும் பேரமைதி
    சாஹஸ மோஹினி நீ

    கண்களிலே நீ ஒளிவடிவம்
    பண்களிலே நீ களிநடனம் – என்
    எண்ணமெல்லாம் ஒரு ஜீவநதி – அதன்
    ஒவ்வொரு துளியுமுன் சலங்கையொலி
    சாஹஸ மோஹினி நீ

    காதலர் நடுவே காற்றாக – நல்ல
    கவிதையிலே அமுதூற்றாகப்
    புன்னகையில் இளம் கீற்றாகப்
    புயல் இடி மழையென்று கூத்தாடப்
    புதுப்புது வடிவம் எடுப்பவளே – ஒன்றும்
    புரியாததுபோல் நடிப்பவளே
    சாஹஸ மோஹினி நீ

    Share
  • அமரத்வனி

    கே. ரவி

     

    (35 ஆண்டுகளுக்கு முன் ஷோபனா எழுதி என் இசையமைப்பில் எங்கள் இனிய நண்பர் ராஜு என்ற திரு.கே.எஸ்.ராஜகோபால் பாடிய ஒரு பாடல் இது. 1980-களில் வெளியான ‘அமரத்வனி’ என்ற இசைப்பேழையில் உள்ளது. ராஜு ஒரு பெரிய வங்கியின் மேலாளராகப் பணியில் இருந்தார். திரைப்படங்களிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் பாடிய பாடல்களில், “கீரை அறுக்கையிலே கிழக்கு வெளுக்கையிலே” என்ற பாடல் மிகவும் பிரபலமானது. தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சந்தியா ராஜகோபாலின் கணவர் இவர்.)

    பாடலைக் கேட்க:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/04.Layame-Sivame.mp3

     

    ஷோபனா ரவி

    shiv2_800x600

     

    லயமே சிவமே தயங்காத காருண்யமே
    மயனால் பிறந்த த்ரிபுரங்களை வெல்ல
    பாணம் தந்த சிலையே
    காலம் வென்ற நிலையே
    (லயமே சிவமே)

    பனியில் பூத்த தழலே – வெண்ணீறு
    கனவு காணும் நிழலே
    மதியும் அரவமும் நதியும் உலவிடும்
    கானகக் குழலே
    முகிலுலாவும் நுதலே
    (லயமே சிவமே)

    தீம் தோம் தீம் தோம் தீம்திரனதீம் தீம் தோம்
    தவம்கலைந்ததும் தாண்டவம் தீம் தோம் – புயல்
    நிமிர்ந்ததைப்போல் நர்த்தனம் தீம் தோம்
    இமை விரிந்து சடை பிரிந்து – இசை
    சிலிர்த்துத் தாளம் தெறிக்க
    வீழ்ந்தோம் எனத் தீமைகள் நடுங்கும்
    வாழ்ந்தோம் என வேதங்கள் முழங்கும்
    கண் பனிக்க மனம் துடிக்கக் – கை
    குவித்த படிவான் திகைக்க
    வந்தோம் எனத் துந்துபி பாடிவரும்
    தந்தோம் எனத் தாண்டவம் ஆடும் சிவம்
    (லயமே சிவமே)

     

     

    Share
  • பொன் மழையெனத் தா கவிதைகளே!

    கே. ரவி

     

    (23-05-2014 வல்லமை இதழில் “வாணியைச் சரண்புகுந்தேன்” என்ற தலைப்பில் வெளியான இசைக்கவி ரமணனின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் கவிதையும், சிந்தனையைத் தூண்டும் கட்டுரையும் அற்புதம்.
    1993-ல் என் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இனிய குரலில் பாடி வெளிவந்த ‘தெய்வ கானாம்ருதம்’ இசைப்பேழையில் இடம்பெற்ற என் கலைமகள் கவிதையை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.)

    பூமலர்வது போலுயிரிடை நீமலர்வதனால்goddess-saraswati-learning
    நீமலர்ந்ததும் மனமுழுவதும் தீவளர்வதனால்
    தீமலரென நானழைத்ததும் வாகலைமகளே
    தீச்சுடரிடை தேன்மழையெனத் தாகவிதைகளே
    தீச்சுடரிடை தேன்மழையெனத் தாகவிதைகளே

    நீர்நிலைகளில் மீன்புரள்வது போல்நினைவிடையே
    கார்முகில்களும் தாரகைகளும் தாமுலவிடவே
    வெண்ணிலவென வேயெழுந்திடும் புன்னகையொளியே
    புன்னகையிடை பொன்மழையெனெத் தாகவிதைகளே
    புன்னகையிடை பொன்மழையெனெத் தாகவிதைகளே

    புல்நுனிகளில் வெண்பனித்துளி வந்தமர்வதுபோல்
    என்னுணர்விலும் உன்சதங்கைகள் நின்றசைந்திடுமே
    கண்மணிகளில் விண்மணிகளின் நிழல்விரிவதுபோல்
    உன்சதங்கைக ளில்கவிதைகள் வந்துயிர்த்திடுமே
    உன்சதங்கைக ளில்கவிதைகள் வந்துயிர்த்திடுமே

    15-11-1990
    கே.ரவி

    Share
  • வெடித்துப் பிறந்தவள்

     

    கே. ரவி
    எங்கும் பரவசம் எல்லாம் அதிசயம்large_276238
    தங்கும் வரையித் தரையே நிச்சயம்

    ஒவ்வோர் அடியாய்த் தாங்கிக் கொண்டு
    ஓலமெல் லாமுள் வாங்கிக் கொண்டு
    வெவ்வே றான மரஞ்செடி கொடிகள்
    விதவித மான காய்கனி வகைகள்
    வளர விரிந்து தன்மடி தந்து
    மெளன மேவடி வாக இருக்கும்
    பூமித் தாய்க்கிங் கீடிணை யுண்டோ

    காற்று வந்து புழுதி வாரித்
    தூற்றி னாலும் பொறுமை யாக
    ஏற்றுக் கொள்ளும்
    தென்றல் வந்து
    சீண்டி னாலும் சிரித்துக் கொள்ளும்
    தேசங்க ளாகப்
    பிரித்துக் கொண்டு போர்புரிந் தாலும்
    ஒரேமு னைப்பில் ஒரேஏ கதியில்
    சுழன்று கொண்டேஇருக்கும்
    சூரியத் தேவனைச் சுற்றிச் சுற்றியே

    அவளே சற்று நடுங்கும் வண்ணம்
    அமைதி இழந்து குலுங்கும் வண்ணம்
    என்ன நடந்தது யாரழு தாரோ
    எங்கோ ஒருகண் ணகியா இல்லை
    இரணியன் மீண்டும் வந்துவிட் டானா
    தேவகு மாரனைச் சிலுவையில் அறைய
    யாரோ திட்டம் இடுகின் றாரோ
    மாமுனி வர்தவம் கலைப்ப தற்கே
    மீண்டும் ஊர்வசி ஆடுகி றாளோ
    குழந்தை பசியில் கதறிய ழத்தாய்
    கையில் சல்லிக் காசும் இன்றிக்
    கலங்கி நிற்கும் காட்சியோ இந்த
    நிலநடுக் கத்துக் கென்ன காரணம்
    ஊழிக் கூத்துக் (கு) ஒத்திகையோ
    பாழில் வெடித்துப் பிறந்தவள் தானே

    எங்கும் பரவசம் எல்லாம் அதிசயம்
    தங்கும் வரையித் தரைதான் நிச்சயம்.

    21-05-2014

    Share
  • நாடோடிப் பாடல்

     

    கே. ரவி

    10252036_618978758193600_5068132543127217621_n

    நேத்துரா வேளயிலே நீபாத்த பார்வையிலே
    நெஞ்செல்லாம் சல்லடையாப் போச்சுதடீ பொம்மயிலே ஓ! ஓஓஓ!

    காத்துலே பூவாசங் கலந்துவந்து மயக்குதடீ
    கண்ணுக்குள்ளே ஓன்சலங்க கலகலன்னு சிலும்புதடீ
    ஆத்துமணல் படுகையெல்லாம் அணலாக் கொதிக்குதடீ
    அம்மாடீ ஓம்மொவந்தான் அங்கும் இங்கும் தெரியுதடீ
    (நேத்துரா)

    பூத்தநெல வாமனச நான்தொறந்து வச்சீருக்கேன்
    பூப்போலப் பாதம்வச்சுப் பூமுடிக்க வந்தீருநீ
    காத்திருந்து காத்திருந்து காலம்வீ ணாச்சுதடீ
    கண்ணம்மா ஓன்பெயரக் காட்டுக்குயில் கூவதடீ
    (நேத்துரா)

    நிமுந்தா சூரியனாம் குனிஞ்சாத்தான் கும்மிருட்டாம்
    ஒன்னப்பத்தி ஊர்முழுக்கப் பாட்டுக்கட்டிப் பேசுதடீ
    தெரிஞ்சா ஆசப்பட்டேன் தேகத்தயா காதலிச்சேன்
    புரிஞ்சா போதுமடீ பொய்வேசம் ஏதுக்கடீ
    (நேத்துரா)

    கூட்டுக்குள்ள நானிருந்தா கூடமுடி யாதுனுதான்
    பாட்டுக்குள்ள ஏறிகிட்டுப் பாதிவழி வந்துபுட்டேன்
    மீதிவழி நீயிறங்கி மின்னலா வந்துதொடு
    மீறமுடி யாதபடி வார்த்தகளப் போட்டுவச்சேன்.
    (நேத்துரா)

     

    Share
  • பொன் மாலை

    கே. ரவி

    Plum-tree-poetry

     

    வானளாவி நின்றதென்ன வாமன ஸ்வரூபமோ
    வார்த்தையுள் வளர்வதென்ன மோனஞான தீபமோ
    கானமாகி கானமாகிக் கரைவதேவி தேகமோ
    காதலாகிக் காதலாகிக் கவிதையாக மாறுமோ

    தூண்பிளந்த சிங்கமேதா மோதரன்மா மாயக்கண்ணன்
    ஆதிசேட சயனனேயா லிலைக்கிடந்த நீலவண்ணன்
    பூவமர்ந்த செல்வியேபின் தீயெதிர்த்து நின்றவள்
    சொற்பிளந்து வந்தவளுள் ஜோதியுள்ம லர்ந்தவள்

    கூத்தெடுத்த பாதமேயக் கூற்றுதைத்த தென்னவோ
    தீயுதித்த பாலனைச்செந் தேன்னனைப்ப தென்னவோ
    தந்தமேயோர் எழுதுகோலாய் ஆனதாமது போலவே
    சந்தமேமென் மலர்களாகச் சூட்டுவேன்பொன் மாலையே

     

    Share
  • கல்யாணமாம் கல்யாணம்

     

    கே. ரவி

    images

    காத்துக்கும் பூமிக்கும் கல்யாணமாம் – இது
    காணக் கிடைக்காத வைபோகமாம்
    பூத்துக் குலுங்குமலர் தோட்டங்களாம் – அங்குப்
    பூவெல்லாம் பொறிவண்டுக் கூட்டங்களாம்
    (காத்துக்கும்)

    தோளுக்குப் பட்டாடை அருவிகளாம்
    தொங்கட்டான் போல்சிறு குருவிகளாம்
    காலுக்கு நீரோடை கொலுசுகளாம் – அலங்
    காரத்தில் பலநூறு தினுசுகளாம்
    (காத்துக்கும்)

    மேகங்களே நல்ல மேளங்களாம்
    மின்னல்கள் கூத்தாடத் தாளங்களாம்
    வானத்துத் தேவர்கள் ஆனந்தத் தோடுவந்து
    பூமாரி பொழிகின்ற சாரல்களாம்
    (காத்துக்கும்)

    சிற்றெறும்புக் கூட்டங்கள் ஊர்வலமாம் – புதுச்
    சீர்கொண்டு போகின்ற சிங்காரமாம்
    குட்டைக ளில்தவளைக் கச்சேரியாம்
    குண்டுமல்லிக் கூட்டங்கள் ரசிகர்களாம்
    (காத்துக்கும்)

    நாட்டுக்கு நாடிது நடப்பதுண்டாம் – எழில்
    நாடகமாய் நெஞ்சைக் கவர்வதுண்டாம்
    பாட்டுக்குள் மட்டும்கண் திறப்பதுண்டாம் – அந்தப்
    பார்வைக்குத் தானிது புலப்படுமாம்
    (காத்துக்கும்)

    Share
  • ஏதாயினும் சொல்

     கே. ரவி

     

    ஏதாயினும் சொல் ஏனிந்த மெளனம்goddess-saraswati-hindu-goddess-learning
    எங்கெங்கும் பொழியட்டும் பூமழையே
    காதோரம் வந்து சி றகடிக்கும் காற்றில்
    ஒலிக்கட்டும் ஒருமுறை உன்குரலே
    (ஏதாயினும்)

    நீதானே எந்தன் கவிதையின் ஊற்று
    தினமொரு தீபமென் சிந்தையில் ஏற்று
    (ஏதாயினும்)

    ஆதாரம் நீயே அனுபவச் சுவையே
    ஆவியில் அமுதம் நிறைப்பவளே
    ஆகாயமெல்லாம் எதிரொலிக்கும் – நீ
    ஆணையிட்டால் உடன் அதுபலிக்கும்
    (ஏதாயினும்)

    பாதாதி கேசம் பாட வல்லேன் அல்லேன்
    பாவனை சுகத்தில் மூழ்குகிறேன்
    பாராமுகம் எதற்குத் திரைவிலக்கு – இன்னும்
    பாராமுகம் எதற்குத் திரைவிலக்கு – இசைப்
    பாடலொன்றே நம் சுடர்விளக்கு
    (ஏதாயினும்)

    படத்திற்கு நன்றி:

    http://www.hindudevotionalblog.com/2011/09/goddess-saraswati-hindu-goddess-of.html

     

    Share
  • உன்னை ஒரு மலராய்….. !

     

    கே. ரவி

    vivid_flowers-wide

    உன்னையொரு மலராய் மாற்றுகிறேன் – இதழ்
    ஒவ்வொன்றிலும் சுடர் ஏற்றுகிறேன்
    என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
    எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
    (உன்னையொரு)

    பொன்னிறமும் செந்நிறமும் கூடியதாய்த் – துளிப்
    புன்னகையி லேஇழை ஓடியதாய்
    மின்னல் நடனம் களியேறியதாய் – மழை
    மேகமெல்லாம் அணை மீறியதாய்
    என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
    எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
    (உன்னையொரு)

    சின்ன சின்ன முத்துக்களும் தூவுகிறாய் – புயல்
    சீறிவரும் போதுநடை மாறுகிறாய்
    அந்திப்பகல் நாடகம் ஆடுகிறாய் – உயிர்
    அத்தனையிலும் கலந்தோடுகிறாய்
    என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
    எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
    (உன்னையொரு)

    வெட்டவெளியோ அதில் நட்ட விதையோ
    விண்ணும்மண்ணு மாய்ப்பிளந்து நிற்கும் வடிவோ
    பட்டப்பகலில் கரம் ஆயிரமோ – இருள்
    படர்ந்ததும் கோடிப் பூச்சரமோ
    (உன்னையொரு)

     

    Share
  • கும்ப முனியின் குறுநகை

    கே.ரவி

    26-10-1988, பெங்களூரு போகும் வழியில் உள்ள குறடு மலையில் சில நண்பர்களோடும்,ஷோபனாவோடும் இருந்தேன். அது ஒரு மிகச்சிறிய கிராமம். அதில் ஒரு மிகப்பழைய,சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வினாயகர் கோயில் உள்ளது. அதில் உள்ளவினாயகர் சிலை ஒரே சாளக்ராமக் கல்லால் ஆனது, மிகப் பெரியது, சுமார் 20 அடி உயரவினாயகர். அதை அகத்திய முனிவர் நிறுவினார் என்று குருநாதர் சொல்லியிருந்தார்.அங்கே, அன்று பகல் நேரத்தில் சற்றுக் கண்னயர்ந்தேன். துயில் கலைந்ததும் ஒரு பாடல்வந்தது, என் கனவில், வஷிஷ்ட, அகத்திய மாமுனிவர் இருவரும் வந்து சில வாசகங்கள் சொன்னதுபோல் …..

    thalakaveri
    அந்தக் கவிதையை, சென்னை வந்ததும் குருநாதருக்குப் படித்துக் காட்டினேன். உடனேஅவர் என்னைத் தலைக்காவேரிக்குச் சென்று அங்கே உள்ள குளம் அருகே அகத்தியமுனிவரை தியானம் செய்துவிட்டு, ‘கும்பமுனியின் குறுநகை’ என்ற தலைப்பில் ஒருகவிதையெழுதி அங்கேயே அதைப் படித்துவிட்டு வருமாறு பணித்தார். நானும்,ஷோபனாவும், ‘திராவிட மாயை’ சுப்புவும் 02-11-1988 புறப்பட்டு, மைசூர் சென்று, இன்னும் மூன்று நண்பர்களை அழைத்துக் கொண்டு மறுநாள் மாலை தலைக்காவேரி சென்றடைந்தோம். அங்கே, கும்பமுனியின் குறுநகை என்று ஐந்து பாடல்களை எழுதி அரங்கேற்றினேன். அந்தப் பாடல்கள் வரக் காரணமாய்க் குறடு மலையில் நான் எழுதிய பாடலையும், கும்பமுனியின் குறுநகை பாடல்களையும் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

    kuradu

                                                                                  குறடுமலை விநாயகர் : படம் கே. ரவி

    “குந்து மணியுள் குத்து விளக்கா கூர்ந்து கவனித்தேன்
    அந்த மணியென் அருகில் வந்தென் ஆக்ஞ விபூதியிலே
    சென்று நுழைந்து சிதறி வெடிக்கச் சித்துருவா யெழுந்தான்
    குந்து மணியுள் குறுகிக் கொண்டு குந்தி யிருந்தவனே

    பெயர்சொல்ல வில்லையந்தப் பெரிய சித்தன்
    பிடியென்றான் கைநீட்டிப் பிடித்துக் கொண்டேன்
    முயல்பாகம் இல்லாத முழுநி லாப்போல்
    முகமெங்கும் ஜோதியதில் முறுவல் வேறு
    குயவன்மண் பானைவரச் சுற்று தல்போல்
    குறுமுனிவன் எனைப்பற்றிச் சுற்றி விட்டான்
    சுயநினைவு நீங்கியது சூனி யத்தின்
    சூட்சுமத்தில் சுடராக அவனி ருந்தான்

    ஒன்றாக இருந்தவனே இரண்டு கூறாய்
    ஒளியோடு பிரிந்துநின்ற காட்சி கண்டேன்
    ஒருவன்கை ஜபமாலை பிடித்தி ருக்க – (இன்)
    னொருவன்கைக் கமண்டலத்தைக் கொண்டி ருக்க
    நின்றவர்கள் இருவருமே நெடிதி ருந்தார்
    நிலவுமழை போலவொளி வழிய நின்றார்
    நீண்டதொரு கரமந்த ஒளிவட் டத்துள்
    நேராக என்தோளைத் தொட்ட போது

    மூன்று மொழியென் சிந்தையிலே தோன்றி நிறைந்தனவே
    ஒன்று ‘பருகு வெளிச்சத்தை’ என்று பணிக்கிறது
    ஒன்று ‘பழகு ப்ரம்மத்தை’ என்று தொனிக்கிறது
    ஒன்று ‘புலர்க சித்தவெளி’ என்று முடிக்கிறது

    மீண்டும் எதிரே குந்துமணி – அதன்
    உள்ளே ஒருவிளக்கு
    கூண்டுக் குள்ளே சிறகடித்துத் – துயில்
    கலைந்த நினைவெனக்கு.”

     

    (நாள்: 3-11-1988. நேரம்: கும்மிருட்டு. இடம்: தலைக்காவேரி. பாத்திரங்கள்: சுப்பு, ஷோபனா, நான், பின்னணியில் மாமுனிகள் அகத்தியரும், விஸ்வாமித்திரரும். தலைப்பு: “கும்ப முனியின் குறுநகை” என்று குருநாதர் குறும்பாகத் தந்தது! இப்படி ஒரு சூழலில் வந்த பாடல்களை இங்கே பதிவு செய்கிறேன்)

    ஓங்கி எழுந்தவோர் ஓங்காரப் பேரொளியின் ஊற்றுத் தடாகத்திலே
    உந்துகதி யாகிவெளிச் சென்றுகலை யாதுவளி நின்றுநிலை யாகியுள்ளே
    வேய்ங்குழலும் ஆகியதை ஊதுமித ழாகியலை மோதுமுள் நாதமாகி
    மொட்டுமல ராகியதை முட்டியுற வாடியது கொட்டுகிற அமுதமாகி
    வானொன் றிலாதபடித் தானென் றெழுந்துநித் யானந்த லஹரியாகி
    வாசிவெளி யாகமுனை ஊசிவழி யாகவருள் வ்யாபித்து விட்டதிரையில்
    கூன்பிறை யணிந்தசிவ னார்விழி திறந்துதழல் மான்மழு வுடனுடுக்கை
    கொண்டுநட மாடுமெழில் கண்டுமல ரும்பொய்கை கும்பமுனி யின்குறுநகை (1)

    அன்றுதிரி சூலிநட மாடியவி நாடியிலிவ் வண்டச ராசரங்கள்
    விண்டுசித றுண்டுதிசை யென்றநிலை இன்றிவெளி யெங்கும் தெறித்துவீழ
    ஒன்றிலொன் றாயவை கொண்டுசெய் தானொரு மண்டலம் பெரியதேவன்
    மண்டலத் தைச்செய்த மந்திரத் தைத்தன்க மண்டலத் தேந்திவந் தான்
    வந்தமுனி வன்ஞான வாசல் திறந்தந்த மண்டலத் தொளிகொடுக்க
    விந்துமணி யுள்கோயில் கொண்டுபின் வேள்வியில் கும்பத் தெழுந்துவந்தான்
    குந்துமணி போல்சின்ன குண்டலியி லேயவன் குறுகிக் கிடந்தஅழகை
    என்றுநினைத் தாலுமுடன் இந்துவெனத் தோன்றுவது கும்பமுனியின் குறுநகை (2)

    வீடுமறி யாதுவெளி யேகிஉழல் வார்தம்மை வேண்டிச் சுமந்துவந்து
    வித்தையறி வித்துமன வீச்சிலொரு மித்துப்பொய் வித்தகம் அடக்கியாண்டு
    பாடுபடு கின்றபல தேவதூ தர்க்கெலாம் பரமகுரு கும்ப முனிவன்
    பாதையிது தானென்று பாடமுரைப் பானொரு பவித்திரம் புனையவைப்பான்
    ஆடுகட லத்தனையும் அள்ளிப் பருகியவன் ஆனந்த ஜோதி வள்ளல்
    ஆத்ம விதானத்தில் ஆழ்ந்த நிதானத்தில் ஆச்சர்ய மாய்முளைப்பான்
    கூடுபிரி யாமலொளி ஏடுபிரி யாதென்ற கூற்றுப்பொய் யானசரிதை
    கொண்டலுக் குள்மின்னல் கொண்டுவைக் கும்திங்கள் கும்பமுனி யின்குறுநகை (3)

    அன்றிலங் கைப்போரில் வெல்வதற் காதித்ய மந்திரம் சொன்னதென்ன
    அமரரெ லாரும்வந் அமர்ந்தும்கை லாசகிரி அழுந்தாது காத்ததென்ன
    தென்னகத் தேயொளி தங்கவைத் தேநல் லிலக்கணம் வகுத்ததென்ன
    தேடும்விழி யாவுமொளி சூடும்வழி யோகமெனத் தெளிவா யுரைத்ததென்ன
    ஒன்றுவழி என்றமறை வள்ளுவத் தையுடன் வாழ்த்தியருள் செய்ததென்ன
    ஓங்கிவளர் விந்தியத்தின் கர்வம் அகற்றியடி பணியப் புரிந்ததென்ன
    என்றுமுல காளுநெறி சத்யனெறி என்றதொரு சங்கல்பம் தந்ததென்ன
    என்றுமுள தென்றமிழ் இயம்பியிசை கொண்டமுகை கும்பமுனி யின்குறுநகை (4)

    ஐங்கரத் தான்கோயில் செய்துவைத் தானங்கே ஆனந்த ஜோதிவைத்தான்
    ஜோதியுள் ஜோதியெனச் சொல்லவைத் தானின்று சொன்னபடி யேசிரித்தான்
    திங்கள்பகல் என்றவிரு கண்கள்கொண் டானிந்த அகிலத்தின் ஆத்மஜோதி
    தேவமுனி யாவரையும் வரவழைத் தேயெமை அறிமுகம் செய்துவிட்டான்
    சங்கடம் அகன்றதினி சாதகம் கைகூடும் சத்ய யுகமலருமே
    சன்னிதியி லேநின்று சொல்லுகின் றேனிது சத்தியம் தேவதேவே
    செங்கதிரைச் சொல்லாக்கி மந்திரம் ஜபித்தமுனி யோகவிஸ் வாமித்திரன்
    கோமுனிவ னேயென்னைப் பாடவைத் தானதைப் பாடினேன் வணங்குகின்றேன்
    ஓமென் றுரைக்கட்டும் அண்டமெல் லாமிந்த உலகம் இனிதுவாழ்க
    ஆமென் றுரைக்கட்டும் அமரர்கள் அகிலத்தில் ஆனந்த அமைதிசூழ்க. (5)

    Share