கும்ப முனியின் குறுநகை
கே.ரவி
26-10-1988, பெங்களூரு போகும் வழியில் உள்ள குறடு மலையில் சில நண்பர்களோடும்,ஷோபனாவோடும் இருந்தேன். அது ஒரு மிகச்சிறிய கிராமம். அதில் ஒரு மிகப்பழைய,சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வினாயகர் கோயில் உள்ளது. அதில் உள்ளவினாயகர் சிலை ஒரே சாளக்ராமக் கல்லால் ஆனது, மிகப் பெரியது, சுமார் 20 அடி உயரவினாயகர். அதை அகத்திய முனிவர் நிறுவினார் என்று குருநாதர் சொல்லியிருந்தார்.அங்கே, அன்று பகல் நேரத்தில் சற்றுக் கண்னயர்ந்தேன். துயில் கலைந்ததும் ஒரு பாடல்வந்தது, என் கனவில், வஷிஷ்ட, அகத்திய மாமுனிவர் இருவரும் வந்து சில வாசகங்கள் சொன்னதுபோல் …..
அந்தக் கவிதையை, சென்னை வந்ததும் குருநாதருக்குப் படித்துக் காட்டினேன். உடனேஅவர் என்னைத் தலைக்காவேரிக்குச் சென்று அங்கே உள்ள குளம் அருகே அகத்தியமுனிவரை தியானம் செய்துவிட்டு, ‘கும்பமுனியின் குறுநகை’ என்ற தலைப்பில் ஒருகவிதையெழுதி அங்கேயே அதைப் படித்துவிட்டு வருமாறு பணித்தார். நானும்,ஷோபனாவும், ‘திராவிட மாயை’ சுப்புவும் 02-11-1988 புறப்பட்டு, மைசூர் சென்று, இன்னும் மூன்று நண்பர்களை அழைத்துக் கொண்டு மறுநாள் மாலை தலைக்காவேரி சென்றடைந்தோம். அங்கே, கும்பமுனியின் குறுநகை என்று ஐந்து பாடல்களை எழுதி அரங்கேற்றினேன். அந்தப் பாடல்கள் வரக் காரணமாய்க் குறடு மலையில் நான் எழுதிய பாடலையும், கும்பமுனியின் குறுநகை பாடல்களையும் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:
குறடுமலை விநாயகர் : படம் கே. ரவி
“குந்து மணியுள் குத்து விளக்கா கூர்ந்து கவனித்தேன்
அந்த மணியென் அருகில் வந்தென் ஆக்ஞ விபூதியிலே
சென்று நுழைந்து சிதறி வெடிக்கச் சித்துருவா யெழுந்தான்
குந்து மணியுள் குறுகிக் கொண்டு குந்தி யிருந்தவனே
பெயர்சொல்ல வில்லையந்தப் பெரிய சித்தன்
பிடியென்றான் கைநீட்டிப் பிடித்துக் கொண்டேன்
முயல்பாகம் இல்லாத முழுநி லாப்போல்
முகமெங்கும் ஜோதியதில் முறுவல் வேறு
குயவன்மண் பானைவரச் சுற்று தல்போல்
குறுமுனிவன் எனைப்பற்றிச் சுற்றி விட்டான்
சுயநினைவு நீங்கியது சூனி யத்தின்
சூட்சுமத்தில் சுடராக அவனி ருந்தான்
ஒன்றாக இருந்தவனே இரண்டு கூறாய்
ஒளியோடு பிரிந்துநின்ற காட்சி கண்டேன்
ஒருவன்கை ஜபமாலை பிடித்தி ருக்க – (இன்)
னொருவன்கைக் கமண்டலத்தைக் கொண்டி ருக்க
நின்றவர்கள் இருவருமே நெடிதி ருந்தார்
நிலவுமழை போலவொளி வழிய நின்றார்
நீண்டதொரு கரமந்த ஒளிவட் டத்துள்
நேராக என்தோளைத் தொட்ட போது
மூன்று மொழியென் சிந்தையிலே தோன்றி நிறைந்தனவே
ஒன்று ‘பருகு வெளிச்சத்தை’ என்று பணிக்கிறது
ஒன்று ‘பழகு ப்ரம்மத்தை’ என்று தொனிக்கிறது
ஒன்று ‘புலர்க சித்தவெளி’ என்று முடிக்கிறது
மீண்டும் எதிரே குந்துமணி – அதன்
உள்ளே ஒருவிளக்கு
கூண்டுக் குள்ளே சிறகடித்துத் – துயில்
கலைந்த நினைவெனக்கு.”
(நாள்: 3-11-1988. நேரம்: கும்மிருட்டு. இடம்: தலைக்காவேரி. பாத்திரங்கள்: சுப்பு, ஷோபனா, நான், பின்னணியில் மாமுனிகள் அகத்தியரும், விஸ்வாமித்திரரும். தலைப்பு: “கும்ப முனியின் குறுநகை” என்று குருநாதர் குறும்பாகத் தந்தது! இப்படி ஒரு சூழலில் வந்த பாடல்களை இங்கே பதிவு செய்கிறேன்)
ஓங்கி எழுந்தவோர் ஓங்காரப் பேரொளியின் ஊற்றுத் தடாகத்திலே
உந்துகதி யாகிவெளிச் சென்றுகலை யாதுவளி நின்றுநிலை யாகியுள்ளே
வேய்ங்குழலும் ஆகியதை ஊதுமித ழாகியலை மோதுமுள் நாதமாகி
மொட்டுமல ராகியதை முட்டியுற வாடியது கொட்டுகிற அமுதமாகி
வானொன் றிலாதபடித் தானென் றெழுந்துநித் யானந்த லஹரியாகி
வாசிவெளி யாகமுனை ஊசிவழி யாகவருள் வ்யாபித்து விட்டதிரையில்
கூன்பிறை யணிந்தசிவ னார்விழி திறந்துதழல் மான்மழு வுடனுடுக்கை
கொண்டுநட மாடுமெழில் கண்டுமல ரும்பொய்கை கும்பமுனி யின்குறுநகை (1)
அன்றுதிரி சூலிநட மாடியவி நாடியிலிவ் வண்டச ராசரங்கள்
விண்டுசித றுண்டுதிசை யென்றநிலை இன்றிவெளி யெங்கும் தெறித்துவீழ
ஒன்றிலொன் றாயவை கொண்டுசெய் தானொரு மண்டலம் பெரியதேவன்
மண்டலத் தைச்செய்த மந்திரத் தைத்தன்க மண்டலத் தேந்திவந் தான்
வந்தமுனி வன்ஞான வாசல் திறந்தந்த மண்டலத் தொளிகொடுக்க
விந்துமணி யுள்கோயில் கொண்டுபின் வேள்வியில் கும்பத் தெழுந்துவந்தான்
குந்துமணி போல்சின்ன குண்டலியி லேயவன் குறுகிக் கிடந்தஅழகை
என்றுநினைத் தாலுமுடன் இந்துவெனத் தோன்றுவது கும்பமுனியின் குறுநகை (2)
வீடுமறி யாதுவெளி யேகிஉழல் வார்தம்மை வேண்டிச் சுமந்துவந்து
வித்தையறி வித்துமன வீச்சிலொரு மித்துப்பொய் வித்தகம் அடக்கியாண்டு
பாடுபடு கின்றபல தேவதூ தர்க்கெலாம் பரமகுரு கும்ப முனிவன்
பாதையிது தானென்று பாடமுரைப் பானொரு பவித்திரம் புனையவைப்பான்
ஆடுகட லத்தனையும் அள்ளிப் பருகியவன் ஆனந்த ஜோதி வள்ளல்
ஆத்ம விதானத்தில் ஆழ்ந்த நிதானத்தில் ஆச்சர்ய மாய்முளைப்பான்
கூடுபிரி யாமலொளி ஏடுபிரி யாதென்ற கூற்றுப்பொய் யானசரிதை
கொண்டலுக் குள்மின்னல் கொண்டுவைக் கும்திங்கள் கும்பமுனி யின்குறுநகை (3)
அன்றிலங் கைப்போரில் வெல்வதற் காதித்ய மந்திரம் சொன்னதென்ன
அமரரெ லாரும்வந் அமர்ந்தும்கை லாசகிரி அழுந்தாது காத்ததென்ன
தென்னகத் தேயொளி தங்கவைத் தேநல் லிலக்கணம் வகுத்ததென்ன
தேடும்விழி யாவுமொளி சூடும்வழி யோகமெனத் தெளிவா யுரைத்ததென்ன
ஒன்றுவழி என்றமறை வள்ளுவத் தையுடன் வாழ்த்தியருள் செய்ததென்ன
ஓங்கிவளர் விந்தியத்தின் கர்வம் அகற்றியடி பணியப் புரிந்ததென்ன
என்றுமுல காளுநெறி சத்யனெறி என்றதொரு சங்கல்பம் தந்ததென்ன
என்றுமுள தென்றமிழ் இயம்பியிசை கொண்டமுகை கும்பமுனி யின்குறுநகை (4)
ஐங்கரத் தான்கோயில் செய்துவைத் தானங்கே ஆனந்த ஜோதிவைத்தான்
ஜோதியுள் ஜோதியெனச் சொல்லவைத் தானின்று சொன்னபடி யேசிரித்தான்
திங்கள்பகல் என்றவிரு கண்கள்கொண் டானிந்த அகிலத்தின் ஆத்மஜோதி
தேவமுனி யாவரையும் வரவழைத் தேயெமை அறிமுகம் செய்துவிட்டான்
சங்கடம் அகன்றதினி சாதகம் கைகூடும் சத்ய யுகமலருமே
சன்னிதியி லேநின்று சொல்லுகின் றேனிது சத்தியம் தேவதேவே
செங்கதிரைச் சொல்லாக்கி மந்திரம் ஜபித்தமுனி யோகவிஸ் வாமித்திரன்
கோமுனிவ னேயென்னைப் பாடவைத் தானதைப் பாடினேன் வணங்குகின்றேன்
ஓமென் றுரைக்கட்டும் அண்டமெல் லாமிந்த உலகம் இனிதுவாழ்க
ஆமென் றுரைக்கட்டும் அமரர்கள் அகிலத்தில் ஆனந்த அமைதிசூழ்க. (5)
பெருந்தகை, கே.ரவி அவர்கட்கு.
அகத்தியரின் அற்புத ஆசிகள் கோடியில் ஒருவராய் உங்கள் சிரசில்.
உதித்த கவிதைகள் நிலைத்த பெருமிதமாய் அமுதத் தமிழில் ஆர்ப்பரிக்க.
வாய்க்குமோ நல் வாய்ப்பு.வாய்த்தது பெரும் பேறு. கும்ப முனியின் குறுநகை படிக்கப் படிக்க நித்தியப் பாராயணத்துக்கு
இதை விட வேறேதும் வேண்டாததாகிறது.
மிக்க நன்றி.
ஜெயஸ்ரீ ஷங்கர்.