கே. ரவி
எங்கும் பரவசம் எல்லாம் அதிசயம்large_276238
தங்கும் வரையித் தரையே நிச்சயம்

ஒவ்வோர் அடியாய்த் தாங்கிக் கொண்டு
ஓலமெல் லாமுள் வாங்கிக் கொண்டு
வெவ்வே றான மரஞ்செடி கொடிகள்
விதவித மான காய்கனி வகைகள்
வளர விரிந்து தன்மடி தந்து
மெளன மேவடி வாக இருக்கும்
பூமித் தாய்க்கிங் கீடிணை யுண்டோ

காற்று வந்து புழுதி வாரித்
தூற்றி னாலும் பொறுமை யாக
ஏற்றுக் கொள்ளும்
தென்றல் வந்து
சீண்டி னாலும் சிரித்துக் கொள்ளும்
தேசங்க ளாகப்
பிரித்துக் கொண்டு போர்புரிந் தாலும்
ஒரேமு னைப்பில் ஒரேஏ கதியில்
சுழன்று கொண்டேஇருக்கும்
சூரியத் தேவனைச் சுற்றிச் சுற்றியே

அவளே சற்று நடுங்கும் வண்ணம்
அமைதி இழந்து குலுங்கும் வண்ணம்
என்ன நடந்தது யாரழு தாரோ
எங்கோ ஒருகண் ணகியா இல்லை
இரணியன் மீண்டும் வந்துவிட் டானா
தேவகு மாரனைச் சிலுவையில் அறைய
யாரோ திட்டம் இடுகின் றாரோ
மாமுனி வர்தவம் கலைப்ப தற்கே
மீண்டும் ஊர்வசி ஆடுகி றாளோ
குழந்தை பசியில் கதறிய ழத்தாய்
கையில் சல்லிக் காசும் இன்றிக்
கலங்கி நிற்கும் காட்சியோ இந்த
நிலநடுக் கத்துக் கென்ன காரணம்
ஊழிக் கூத்துக் (கு) ஒத்திகையோ
பாழில் வெடித்துப் பிறந்தவள் தானே

எங்கும் பரவசம் எல்லாம் அதிசயம்
தங்கும் வரையித் தரைதான் நிச்சயம்.

21-05-2014

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *