-கவிநயா

வெகு நாட்களுக்குப் பின் ஒரு படைப்பு…தொலைக்காட்சியில் மகாபாரதம் பார்க்க நேர்ந்ததன் பாதிப்பு…

பாராளும் சக்கரவர்த்தியின் மனைவியான திரௌபதியின் நிலையைப் பார்க்கையில் எழுந்த தவிப்பு!

துரியோதனாதியரின் அட்டூழியத்தை இப்போது பார்க்கும்போதுகூட, நாமே எழுந்து சென்று நாலு போடு போடலாமா என்று நமக்கே அத்தனை ஆத்திரம் வருகையில், பீஷ்மரும் விதுரரும் துரோணரும் எப்படி இந்த அதருமத்தை இத்தனைதூரம் வளர விட்டார்கள் என்ற ஆச்சர்யமும் ஆதங்கமும் ஏற்படுகிறது. அதருமத்தை வளர விடுவதுதான் தருமமா?!

பாரதி ஏற்கனவே எழுதிவிட்டான்…அதனால் என்ன, நானும் எழுதலாம்தானே? சில நிமிடங்கள் அவன் எழுதியதை மனதிலிருந்து தள்ளிவைத்துவிட்டு, இதனை வாசிக்க வேண்டுகிறேன்!

DRAUPADI

பாஞ்சாலியின் சபதம்

1.

அண்டம் நடுநடுங்க
அலைகடலும் இடம்மாற
தென்றல் காற்றதுவும்
சீற்றங்கொண்டு தடம்மாற
செய்யும் செயல்யாவும்
கைநழுவிப் புலம்மாற
வையம் முழுவதுமே
காரிருளில் தடுமாறப்
பெய்யும் மாமழையும்
பொய்த்துவிட்டுப் போயிருக்க
உய்யும் வகையின்றி
உயிர்களெல்லாம் பரிதவிக்கத்
தருமம் தலைகுனியத்
தவமுனிவர் தவித்துநிற்க
சாத்திரம் சொன்னதெல்லாம்
நீர்த்துவிட்ட பேச்சாக…!

2.

தீயில் உதித்து வந்த
தேவதைக்கும் இந்நிலையோ?
உலகை ஆளவந்த
உத்தமிக்கும் இத்துயரோ?
கண்ணிழந்த மன்னனவன்
மனதாலும் குருடானான்
பெண்ணின் துயர்த்தீயை
வளர்த்துவிட்ட நெய்யானான்!
சொல்லில் அடங்காத
வேதனைக்கு வித்திட்டான்
புல்லுக்கும் கீழான
புத்திரரைப் பெற்றிட்டான்!
வினையை விதைத்திட்டால்
அறுத்திடவும் வேண்டுமென
அறியாமல் அறிவிழந்தான்
அத்தினாபுர அரசன்!

 3.

ஐயோ என்றழுத
அன்னைக்குத் துணையில்லை
ஐவரை மாலையிட்டாள்
ஆனாலும் பலனில்லை
கண்ணீர் விட்டழுதாள்
காப்பாற்று வாரில்லை
கதறித் தானழுதாள்
கற்பரசி திரௌபதையாள்!
விவேக விதுரரவர்
வேதனையால் தலைகவிழ்ந்தார்
பிதாமகர் பீஷ்மருமே
பேசாதிருந் தாரே!
தருமத்தின் வாழ்வுதன்னைச்
சூதாட்டம் கவ்வியதே
அதருமப் பிடியினிலே
அவையோரும் சிக்கினரே!

 4.

துஷ்டன் துரியனுமே
தம்பிக்கு ஆணையிட
துச்சாதன அரக்கன்
துகிலுரிய வந்துவிட்டான்!
வீரர் ஐவருமே
வீணாக நின்றிருக்க
வில்லும் கதையம்பும்
வேலையற்றுப் போயிருக்கக்
கதறிப் பரிதவித்த
கண்மணியாள் திரௌபதியும்
கூவி அழைத்திட்டாள்
கார்மேகக் கண்ணனைத்தான்!
கண்ணா கோவிந்தா
நீயேயென் கதியென்றாள்
துவாரகையை விட்டெனக்குத்
துணையாய்வா என்றழுதாள்!

5.

கூப்பிய கரமிரண்டும்
சிரசின்மேல் வீற்றிருக்கக்
கூறிய சொல்லிலெல்லாம்
ஹரிநாமம் ஒலித்திருக்க
மூடிய விழியிரண்டில்
கண்ணீர் பெருகிவர
நாடிக் கலந்துவிட்டாள்
கண்ணனவன் திருவடியில்!
கமலத் திருவடியே
சரணமெனக் கொண்டுவிட்டாள்
கண்ணன் தனையன்றி
துணையில்லை என்றுவிட்டாள்
செதுக்கிய சிற்பம்போல்
சேயிழையாள் சமைந்துவிட்டாள்
ஒதுக்கிவிட்டாள் அனைவரையும்
ஒருவனையே பற்றிவிட்டாள்!

 6.

கண்ணன் வந்துவிட்டான்
வண்ணத் துகிலுருவில்!
பெண்ணிற் கருளிவிட்டான்
பிரியமுடன் மனமிரங்கி!
துஷ்டத் தம்பியும்
இழுத்துக்கொண் டிருக்கையிலே
விதவிதமாய் மேலாடை
முளைத்தபடி இருந்ததுவே!
பட்டாய்ப் பருத்தியாய்ப்
பகட்டாய்ப் பலநிறமாய்
கண்டவர் மயங்கிடவே
மலையெனவே குவிந்ததுவே!
இழுத்துக் களைத்துவிட்டான்
அற்பத் தம்பியுமே
கரமிரண்டும் சோர்ந்திடவே
நிலைகுலைந்து விழுந்துவிட்டான்!

7.

துரியன் தலைகவிழ்ந்தான்
பாண்டவரோ தலைநிமிர்ந்தார்!
போனஉயிர் வந்ததுபோல்
அவையோரும் விழித்தமர்ந்தார்!
பீமன் சூளுரைத்தான்
துரியன்தொடை பிளப்பதாக!
விஜயன் சூளுரைத்தான்
கர்ணனைத்தான் மாய்ப்பதாக!
துஷ்டர்தம் செந்நீரைப்
பூசிக் குளித்தபின்னே
குழல்முடிப்பேன் அதுவரையில்
குழல்முடியேன் தானெனவே
பாஞ்சாலத் திருமகளாம்
பாரதத்தின் நாயகியாம்
திரௌபதையும் சூளுரைத்தாள்
திக்கெட்டும் எதிரொலிக்க!

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “பாஞ்சாலியின் சபதம்!

 1. கனல்பொறிகள் வெடிக்கும் கவிநயாவின் காவியக் படைப்பில், சந்தமுடன் சிந்தை தொடும் விந்தை மொழிகள் நடனம் ஆடுகின்றன..

  பாஞ்சாலி சபதம் எழுதிய  பாரதியாரே காவிய நர்த்தகி கவிநயாவின் சீரிய புதுப் படைப்பைப் படித்து தலை நிமிர்வார்.

  பாராட்டுகள் கவிநயா.

  சி. ஜெயபாரதன்.

 2. அருமை! அருமை! சிறுதும் இடைவெளி இன்றி ஒரே மூச்சில் படித்தேன். பாராட்டுக்கள்.

 3. பாஞ்சாலி சபதத்தைப் பல மேடைகளில் பேசி, நாடகமாய் நடித்து 60 ஆண்டுகளாக
  பாரதிக்கு அஞ்சலி செலுத்தியவன் நான். கவிநயாவின் கவிதையைப் படித்ததும்
  பாரதியாரே மறு அவதாரம் எடுத்து இக்கவியை எழுதினாரோ என்று எண்ண வைத்துவிட்டாள் கவிநயா. பாரதி பானியி சபாஷ் பாண்டியா என்று சொல்லாமல் “சபாஷ் கவிநயா” எனச் சொல்லி வாழ்த்துகிறேன்.
  கோபாலசுந்தரம், நானா நானி, கோயம்புத்தூர், 0422-2970130 

 4. உணர்சசிமயமான கவிதைமொழி கவிநயாவுக்கு கைவந்த கலை.  ’நம்பி நின்னடி தொழுதேன், என்னை நாணம் அழியாதிங்குக் காத்தருள்வாய்’ என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதியின் வாசாகங்கள் மூலமாக பாஞ்சாலி சரணாகதி அடைவதை அதே உணர்ச்சிமயத்தோடு நாமும் படிக்கலாம். கவிநயாவின் பாஞ்சாலியும் அதே வகைதான். எக்ஸெலண்ட் பிரசண்டேஷன் கவிநயா!
  திவாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *