– சு.கோதண்டராமன்

தேவர்கள் யார்?

 

தேவ என்ற சொல் ஒளி விடுதல் என்ற பொருளுடைய திவ் என்ற வேரிலிருந்து வந்தது. அதிலிருந்து தோன்றிய சொற்கள் பல உண்டு. தேவ என்ற சொல்லும், ஆகாயம் எனப் பொருள்படும் த்யௌ, தெய்வீகமான என்று பொருள் படும் திவ்ய முதலான அதன் பிற வடிவங்களும் ரிக் வேதத்தில் சுமார் 3000 தடவைகள் வருகின்றன. வேறு எந்தச் சொல்லும் இவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப் படவில்லை. எனவே தேவர்கள் தாம் ரிக் வேதத்தின் முக்கியப் பொருள் என்று கொள்ளலாம்.

ரிக் வேதம் முழுவதும் தேவர்களைப் போற்றும் துதிப் பாடல்கள் தாம். இந்திரன், அக்னி, வாயு, ஸவிதா, வருணன், மித்ரன், அர்யமான், மருத்துகள், அசுவினி தேவர் எனப்படும் இரட்டையர், பூமி, ஆகாயம், பிரஹஸ்பதி, பிரம்மணஸ்பதி, ருத்ரன் எனத் தேவர்கள் பலராவர்.

தேவர்கள்

 

தேவர்கள் என்றால் இமையாத கண்களும், கீழே நிலத்தில் படாத கால்களும் உடையவர்கள் என்று புராணங்களில் படித்திருக்கிறோம். அதை எல்லாம் சற்று நேரம் மறந்து விட்டு ரிக் வேதத்தின் படி தேவர்கள் என்போர் யார், அவர்களின் இயல்பு என்ன என்பதைக் கவனிப்போம்.

ரிக் வேதத்தின்படி தேவர்கள் என்போர் ஒளி வடிவான உடல் உடையவர்கள். சூரியன், அக்னி முதலானோர் மட்டுமல்ல, வாயு, மருத் போன்ற நம் கண்களுக்குப் புலப்படாத தேவர்களும், நதி, நீர் போன்ற பொருட்களும் கூட ஒளி வடிவமான உடலைப் பெற்றிருப்பதாக வேதம் கூறுகிறது.

தங்கம்
தேவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கத்துடனான ஏதாவது தொடர்பு கூறப்படுகிறது. மருத்துகள் ருக்மவக்ஷஸ் (தங்க ஆபரணம் அணிந்தவர்), தங்கரதத்தில் பயணிப்பவர் என்று கூறப்படுகிறது. சவிதா ஹிரண்யபாணி (தங்கக் கையர்) எனப்படுகிறார். சந்தியா வந்தனத்தில் வரும் ஹிரண்யயேன சவிதா ரதேன ஆ தேவோ யாதி என்ற ரிக் மந்திரம், சவிதாவும் தங்க ரதத்தில் பயணிப்பவர் என்று காட்டுகிறது. பூஷன், இந்திரன் இருவரும் தங்க ஆயுதம் கொண்டவர்கள். இந்திரனின் வஜ்ராயுதம் தங்கத்தால் ஆனது. வருணனின் கவசம் தங்கத்தால் ஆனது (ஹிரண்யத்ராபி). இந்திரனே தங்க மயமானவர் என வர்ணிக்கப்படுகிறார். அவர் தன் பக்தர்களுக்கு தங்க ரதம் பரிசளிக்கிறார். ருத்ரன் தங்கம் போலப் பிரகாசிப்பவர் எனப்படுகிறார். அக்னியின் கேசமும், கொம்புகளும் தங்கமயமானவை (ஹிரண்யகேசி, ஹிரண்யச்ருங்க). மித்ரனும் வருணனும், பூமியும் ஆகாயமும் பொன் மேனி கொண்டவர்கள். மின்னல் தங்க ரதத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

இவை எதையும் நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. தேவர்கள் ஒளி வடிவமானவர்கள் என்பதைத் தான் இது குறிப்பிடுகிறது.

தேவர்களுக்குள்ளே சவிதா எனப்படும் சூரியன் சிறப்பிடம் பெறுகிறார். சவிதா என்ற பெயர் வரும்பொழுதெல்லாம் தேவ என்ற அடைமொழி பெரும்பாலான இடங்களில், அதாவது 60 சதவீதம் இடங்களில், வருகிறது. இதற்கு மாறாக, இந்திரனுக்கு இந்த அடைமொழி 12 சதவீத இடங்களிலும், உஷஸுக்கு 23 சதவீத இடங்களிலும், அக்னிக்கு 30 சதவீத இடங்களிலுமே கொடுக்கப்படுகிறது.

உதாரணத்திற்குக் காயத்ரி மந்திரத்தையும் அதற்கு அடுத்த இரண்டு மந்திரங்களையும் பாருங்கள்.

தத் ஸவிது: வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந: ப்ரசோதயாத். 3.62.10
தேவஸ்ய ஸவிது: வயம் வாஜயந்த: புரந்த்யா பாகஸ்ய ராதிம் ஈமஹே 3.62.11
தேவம் நர: ஸவிதாரம் விப்ரா: யக்ஞை: ஸுவ்ருக்திபி: நமஸ்யந்தி தியா இஷிதா 3.62.12

யஜுர்வேதத்தின் முதல் மந்திரத்திலும் சவிதா தேவ என்ற அடைமொழியுடன் கூடவே வருகிறது.

தேவ: வ: ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மணே

சூரியனின் ஒளியைக் கருதியே இந்த அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கையான ஒளி கொண்ட சூரியன் தான் முதல் தேவன் என்பது ரிக் வேதத்தின் கருத்து எனலாம். சூரியனுக்கு அடுத்தபடியாக ஒளியுள்ள பொருளாகிய அக்னியும் தேவ என்ற சொல்லின் நேர்ப் பொருளுக்கு உரியதாக உள்ளது.

தேவிகள்
தேவர்களில் பெண்பாலரும் உண்டு. அவர்கள் தேவி எனப்படுகின்றனர். உஷஸ், அதிதி, பூமி, நதி, நீர் ஆகியவை பெண் தெய்வங்களாகும். த்யௌஸ் எனப்படும் ஆகாயம் பொதுவாக ஆண்பாலாகக் கருதப்பட்டாலும், ஆகாயம் பூமி இரண்டையும் சேர்த்துக் குறிக்கும் சொல்லான ரோதஸீ என்பது இரு பெண்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேவபத்னி என்ற சொல் பல இடங்களில் வருகிறது. ஆனால் தேவர்களின் இந்த மனைவிமார்களைப் பற்றிக் குறிப்பிடும்படியான தகவல் எதுவும் இல்லை.

உறவு முறைகள்
தேவர்களிடையே தாய், தந்தை, சகோதரன், சகோதரி ஆகிய உறவு முறைகள் இல்லை. ருத்ரனின் மகன்கள் மருத்துகள் என்றும், சூரியனின் மகள் உஷஸ் என்றும் நீரின் மகன் அக்னி என்றும் கூறப்பட்டாலும், இவற்றை நாம் நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இரண்டு உதாரணங்களைப் பார்ப்பதன் மூலம் அதற்கான காரணம் தெரியும். அக்னியை இரண்டு தாய்மார்களின் மகன் என்று கூறப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தைக்கு இரண்டு தாய் என்பதை நேரடியாகப் பொருள் கொள்ள முடியாது. இரண்டு அரணிக் குச்சிகளைச் சேர்த்துக் கடைந்தால் அக்னி தோன்றுகிறது என்பதைத் தான் இப்படிக் கூறுகிறது வேதம்.

உஷா சூரியனின் மகளாகவும் கூறப்பட்டிருக்கிறாள். அவளை சூரியனின் மனைவியாகவும் வேதம் குறிப்பிடுகிறது. உண்மை என்னவென்றால், சூரியனைப் போலவே பிரகாசமாக, ஆனால் உருவத்தில் சிறியதாக இருப்பதால் உஷா சூரியனின் மகளாகக் கூறப்படுகிறாள். தினம் தோறும் சூரியனுக்கு முன் எழுந்து விடுவதால், சூரியனிடமிருந்து இணை பிரியாமல் இருப்பதால் மனைவியாகக் கூறப்படுகிறாள்.

கருத்தை விளக்குவதற்காக அவ்வப்போது பயன்படுத்தப்படும் இந்த உறவு முறைச் சொற்களை நேர்ப் பொருளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே தேவர்களிடையே உறவு முறைகள் இல்லை.

வசிக்குமிடம்
தேவர்களில் பெரும்பாலானவர்கள் ஆகாயத்தில் வசிப்பவர்கள். அதனால் அவர்களுக்கு திவக்ஷஸ், த்யுக்ஷஸ் என்ற பெயர் உண்டு. நதிகள் முதலான பூமியிலேயே வாழும் சில தேவர்களும் உண்டு. ஆகாயம், நீர், நிலம் என மூன்று இடங்களில் வாழ்பவர் அக்னி.

உணவு
தேவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் பெயர் ஹவிஸ். அதை அவர்கள் நேரடியாக நம் கையிலிருந்து பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அக்னியை நாக்காக உடையவர்கள் (அக்னி ஜிஹ்வா) என்று பெயர் உண்டு. ஹவிஸ்ஸை அக்னியிடம் சேர்ப்பித்துவிட்டால் அக்னி அதை எடுத்துக் கொண்டு போய் அவர்களுக்குத் தருவார். அதை உண்டபின் அவர்கள் யக்ஞ பூமிக்கு வருவார்கள். நாம் போட்டு வைத்திருக்கிற பர்ஹிஸ் எனப்படும் தர்ப்பை ஆசனத்தில் அமர்ந்து சோமபானத்தைக் குடிப்பார்கள்.

சோமபானம்
எல்லாத் தேவர்களும் சோமபானத்தில் விருப்பமுள்ளவர்கள் என்றாலும் இது இந்திரனுக்கு மிக விருப்பமானதாகக் கூறப்பட்டிருக்கிறது. சோமத்தினால் உற்சாகம் அடைந்த இந்திரன் பல வலிமையான செயல்களைச் சாதிக்கிறான் என்கிறது வேதம். சோம பானத்தால் மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பல நலன்களைக் கொடுப்பார்கள் எனவும் கூறுகிறது.

தேவர்கள் நாம் அளிக்கும் உணவை உண்டாலும் அவர்களுக்கு உணவு அவசியம் இல்லை. நாம் உணவு அளிக்காவிட்டாலும் அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. நம்முடைய பணிவின் அடையாளமாகத் தான் அவர்கள் அதைக் கருதி ஏற்றுக் கொள்கிறார்கள். அதே போல சோமத்தைக் குடித்து மகிழ்ச்சி அடைந்தாலும் அதையும் அவர்கள் நம்முடைய பக்தியின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்கிறார்களே அன்றி சோமம் இல்லாமலும் அவர்கள் மகிழ்ச்சியாக உயிர் வாழ முடியும்.

அமரர்கள்
தேவர்கள் அமர்த்யர்கள் எனப்படுகிறார்கள். அதாவது சாகா நிலை பெற்றவர்கள். மனிதனைப் போலவோ மற்ற பிராணிகளைப் போலவோ அவர்கள் இறந்து போவதில்லை. எனவே அவர்கள் நம்முடைய பல தலைமுறை முன்னோர்களைப் பார்த்திருக்கிறார்கள். இனி வரவிருக்கும் பல தலைமுறைகளைப் பார்க்கப் போகிறார்கள்.

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யு: (பிறந்தவர் இறப்பது உறுதி) என்ற கீதை உரை தேவர்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் அவர்கள் பிறந்தவர்கள். ஒரு முறை அல்ல, இருமுறை பிறந்தவர்கள் என்று ரிக் 6.50.2 கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு இறப்பு இல்லை.

பரஸ்பர சார்பு
தேவர்கள் எல்லோருமே வலிமை, அறிவு, செல்வம் மிக்கவர்களாகக் கூறப்படுகிறார்கள். தேவர்களில் உடல் குறையோ, குணக் குறையோ, அறிவுக் குறையோ கொண்டவர்கள் எவரும் இல்லை. எல்லோருமே மனிதர் பால் அன்பு உடையவர்கள். அவர்கள் மனிதர்க்கு வலிமையின் ஊற்றாக விளங்குகிறார்கள். கூப்பிட்டால் உடனே வந்து காப்பாற்றுகிறார்கள். பிரார்த்தனை செய்து சோம பானம் கொடுத்துவிட்டால் அவர்கள் மகிழ்ந்து பசு, குதிரை, குழந்தைப் பேறு, நீண்ட ஆயுள், தங்கம், ரயி எனப்படும் செல்வம், ஆரோக்யம், வேலைக்காரர்கள் என எதை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். எல்லாத் தேவர்களும் கொடையாளிகள், ஸுதானு, தானுனஸ்பதி என்று சிறப்பிக்கப் பெறுகிறார்கள். அவர்கள் நாம் செய்யும் பிரார்த்தனையால் வலிமை பெறுகிறார்கள். இவ்வாறு தேவர்களும் மனிதரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள்.

பேச்சு
தேவர்கள் செயல் வீரர்கள். பொதுவாக அவர்கள் பேசுவதில்லை. இந்திரன் பேசுவதாக சில சூக்தங்கள் இருந்தாலும் அவை இயற்றிய ரிஷிகளின் கருத்தே, நாடக பாணியில் சொல்லப்பட்டனவாக அறிகிறோம். தேவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

ஒற்றுமை
தேவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். வருணன், மித்ரன், அர்யமான் மூவரும் சேர்த்தே போற்றப்படுகிறார்கள். இந்திரனுக்கு மருத்துகள் உதவி புரிகிறார்கள். சில சமயங்களில் இரண்டிரண்டு தேவர்கள் சேர்த்தே வணங்கப்படுகிறார்கள். – அக்னி விஷ்ணு, அக்னி சோமன், அக்னி மருத்துகள், இந்திரன் அக்னி, இந்திரன் பிரஹஸ்பதி, இந்திரன் பூஷன்.

பகை
மனிதர்கள் தங்கள் பகைவர்களாகிய தஸ்யுக்களையும் ராட்சசர்களையும் வெல்வதற்கு தேவர்களின் உதவியை நாடுகிறார்கள். அவர்களுடன் மனிதர் சார்பாகத் தேவர்கள் போரிடுகிறார்கள். எல்லாத் தேவர்களுக்கும் ஆயுதங்களும் ரதங்களும் உண்டு. தேவர்கள் விண்ணிலும், மண்ணிலும் இடைவெளியிலும் பயணிக்கிறார்கள். கடல்களோ மலைகளோ அவர்களது ரதங்களைத் தடுப்பதில்லை.
இவ்வாறு தேவர்கள் ஆரோக்யம், சாகாமை, செல்வம், வலிமை, அறிவு எல்லாம் ஒருங்கே பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தத் துன்பமும் இல்லை. எப்பொழுதேனும் ராட்சசர்களுடன் நடக்கும் போரில் தேவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

படம் உதவி: விக்கிபீடியா, http://ta.wikipedia.org/s/33z9

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *