கே. ரவி

 

(23-05-2014 வல்லமை இதழில் “வாணியைச் சரண்புகுந்தேன்” என்ற தலைப்பில் வெளியான இசைக்கவி ரமணனின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் கவிதையும், சிந்தனையைத் தூண்டும் கட்டுரையும் அற்புதம்.
1993-ல் என் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இனிய குரலில் பாடி வெளிவந்த ‘தெய்வ கானாம்ருதம்’ இசைப்பேழையில் இடம்பெற்ற என் கலைமகள் கவிதையை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.)

பூமலர்வது போலுயிரிடை நீமலர்வதனால்goddess-saraswati-learning
நீமலர்ந்ததும் மனமுழுவதும் தீவளர்வதனால்
தீமலரென நானழைத்ததும் வாகலைமகளே
தீச்சுடரிடை தேன்மழையெனத் தாகவிதைகளே
தீச்சுடரிடை தேன்மழையெனத் தாகவிதைகளே

நீர்நிலைகளில் மீன்புரள்வது போல்நினைவிடையே
கார்முகில்களும் தாரகைகளும் தாமுலவிடவே
வெண்ணிலவென வேயெழுந்திடும் புன்னகையொளியே
புன்னகையிடை பொன்மழையெனெத் தாகவிதைகளே
புன்னகையிடை பொன்மழையெனெத் தாகவிதைகளே

புல்நுனிகளில் வெண்பனித்துளி வந்தமர்வதுபோல்
என்னுணர்விலும் உன்சதங்கைகள் நின்றசைந்திடுமே
கண்மணிகளில் விண்மணிகளின் நிழல்விரிவதுபோல்
உன்சதங்கைக ளில்கவிதைகள் வந்துயிர்த்திடுமே
உன்சதங்கைக ளில்கவிதைகள் வந்துயிர்த்திடுமே

15-11-1990
கே.ரவி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *