வாணியைச் சரண்புகுந்தேன்
இசைக்கவி ரமணன்
கற்பூர மேனி இவள் கற்பனை வேணி
கல்விக்குத் தோணி இவள் கவிதைக்குள் தேனீ
ஒவ்வொரு சொல்லையும் ஆள்கின்ற ராணி
உள்ளத்தில் பொங்கிடும் பேரின்பக் கேணி
ஏழைக்கு ஏணி எங்கள் செந்தமிழ் வாணி!
உள்ளக் கமலத்தை ஊடுருவி, அங்கு
ஊசி முனையொளி யாய்ச் சிரிப்பாள்
மெள்ள மிக மெள்ள இதழ்கள் விரித்தே
பேதையை மேதையாய்ச் செய்திடுவாள்
பள்ளத்தில் வீழ்ந்து தவித்தவனை, வண்ணப்
பல்லக்கில் ஏற்றி அமர்த்திடுவாள்
சற்று மிகச் சற்று கர்வங்கொண்டால், அவள்
சாவற்ற சகதியில் தள்ளிடுவாள்!
முத்து மழைத்துளி வீழ்கையிலும், நடு
முற்றத்தில் நிலவொளி சூழ்கையிலும்
சின்ன ரொம்பச் சின்னச் சத்தத்திலும், அவள்
வன்னச் சிரிப்பொலி கேட்டிருக்கும்
கத்துங் கடலினில் காற்றுவந்து, அந்த
ககனம் நடுங்கிட ஓங்குகையில், அவள்
காலின் சதங்கைகள் கேட்டிருக்கும், அதில்
கவிதையின் கர்ச்சனை போட்டியிடும்!
வாழ்வு தருவது வாணியின் பாதம்
வந்து பணிந்திடு வாழ்வெலாம் கீதம்
ஆழ்மனத் துள்ளே அவளடி நாதம்
அன்பில் விளைவது தானவள் வேதம்
தோழமை யாய்வரும் தோள்களினை, நம்
தொல்லைகள் தீர்க்கின்ற தாயிவளை
பாழில் நன்செய்தரும் பாதத்தினை, நாம்
பற்றிடுவோம் அருள் பெற்றிடுவோம்! (நவ.11,2012)
– ரமணன்
`விடையற்ற கேள்விகளின் வெளிச்சப் புள்ளி`
–கவிஞர் ஹரிகிருஷ்ணன்
கால மயக்கம்
எது வேத காலம் என்னும் ஏகோபித்த முடிவு இன்னும் ஏற்படவில்லை. பண்டிதர்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுவது ஒருபுறம் இருக்கட்டும். ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சியை அரசியலும், மதங்களும் ஆளும்படி விட்டுவிட்டார்கள். அதனால் அவர்களில் ஒருவர் கூறுவதை இன்னொருவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து நிலவும் இந்தப் பெருங்கூச்சலின் நடுவே, நமக்குச் சற்றேனும் தெளிவாகத் தெரியும் தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன:
1. ரிக்வேதம் கி.மு. 1600 ஐச் சேர்ந்தது என்றார்கள். துவாரகையில் மேல்மட்டத்தில் நடந்த ஆராய்ச்சியே அந்தக் கண்டுபிடிப்புகளை கி.மு. 1200 என்று தேதியிட்டது. மொத்தம் ஏழு மட்டங்கள் உள்ளன. அதில், இந்தக் கூற்று, மேல்மட்ட ஆராய்ச்சியால் வந்த கண்டுபிடிப்பு! அப்படியானால், ரிக் வேதத்திற்கும் துவாரகைக்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள்தானா? என்ன பிதற்றல் இது?
2. மஹாபாரதத்தின் காலம் கி.மு. 2550 லிருந்து கி.மு. 3212 வரை என்று கொள்வதற்கான ஆரய்ச்சி பூர்வமான தகவல்கள் இருக்கின்றன. அப்படியானால், ராமாயணக் காலம்? 3000 ஆண்டுகளேனும் முந்தியிருக்காதா? ராமன், இக்ஷுவாகு குலத்தில் 92 ஆவது அரசன் என்று ஒரு கணிப்பும் 62 ஆவது அரசன் என்று ஒரு கணிப்பும் இருக்கிறதென்று கேள்விப்படுகிறோம். அவனுக்குப் பல தலைமுறைகள் முன்பு ஹரிச்சந்திரன் ஆண்டான் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். ஹரிச்சந்திரன் காலத்திலேயே, காசி, உலகத்திலேயே மிகப் பழமையான நகரமாகக் கருதப்பட்டிருக்கிறது. எனில் திலீபன் காலம் எது?
3. ரிஷிகள் சரஸ்வதி நதியின் கரையில்தான் வாழ்ந்தார்கள் என்றும், புவியியல் மாற்றங்களால் அந்த நதி புதையுண்டு போன பிறகு, அவர்கள் சிந்து நதிக்கரைக்குப் புலம் பெயர்ந்தார்கள் என்றும், அதன்பின் கங்கைக் கரைக்கு வந்தார்கள் என்றும் கேள்விப்படுகிறோம். இதில் சிந்து சமவெளி நாகரிகத்தின் காலமெது? உயர்ந்த நாகரிகத்தைக் கடைபிடித்த அந்த மனிதர்கள் என்ன மொழி பேசினார்கள்? தெரியவில்லை. பாண்டங்களில் கிடைத்த சித்திரச் சின்னங்கள் இன்னும் புதிராகவே தொடர்கின்றன.
4. ஒரு சமூகம், ஒரு குறிப்பிடத்தக்க நாகரிக நிலையை எய்துவதற்கு எத்தனை நூற்றாண்டுகள் பிடித்திருக்க வேண்டும்?
இவற்றையெல்லாம் மனதில் வைத்துப் பார்க்கும்போது, வேத காலம் என்பது குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நாம் கொள்ளலாம்.
சரஸ்வதி யார் அல்லது என்ன?
அவள் நதியா? இல்லை, அறிவின் தாயா? என்ற சர்ச்சையில் இன்னும் பண்டிதர்கள் ஈடுபட்டிருக்க, `அவள் இரண்டும்தான்` என்று என் குருநாதர் சொன்னதால் என்னைப் பொறுத்தமட்டில், அவர் வாக்கே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி, அல்லது, ஹரி சொன்ன `வெளிச்சப் புள்ளி.`
ரிக்வேதம் சரஸ்வதியைப் பற்றிப் பாடும் ஸுக்தங்களை மேலோட்டமாகப் பார்த்தால் அவை ஒரு நதியை வர்ணிப்பது போலவும், உள்ளாழ்ந்து பார்த்தால் அவை ஒரு தெய்வ சக்தியைக் குறித்துப் புகழ்வது போலவும் தோன்றுகிறது என்கிறார்கள் பெரியோர்.
நதியை ஒரு பக்கத்தில் விட்டுவிட்டு, தேவியைப் பார்ப்போம்!
சரஸ்வதி என்பது சத்தியம் என்னும் செம்பொருளிலிருந்து இறங்கிவரும் ஓர் ஊக்கத்தின் சக்தி. அது மாமுனிகளின் சித்தத்தில் தெளிவான ஞானமாக தரிசனமாகிறது. அந்தத் சித்தத்திலிருந்துதான் வேதக் கவிதைகள் வெளிப்பட்டன. சத்திய தரிசனம் கண்டவனே ரிஷி. ரிஷி என்றாலே காண்பவன் என்று பொருள். ரிஷியே கவி. சத்தியத்தின் வெளிப்பாடே கவிதை. அறியாமையே அனைத்துப் பாவங்களுக்கும் காரணம். ரிஷிகளின் கவிதையே அந்த அறியாமையைக் களையும் மருந்து. ஆம், சத்தியமே, அவித்தைக்கு முறிவு.
சரஸ்வதி ஆனந்தமான உண்மைகளைத் தூண்டுபவள். (ஸுன்ருதானாம் சோடயித்ரி) சித்தத்தில், சத்தியத்த்தின் முறையான மனனங்களை விழிக்கச் செய்பவள். (சேதந்தி சுமதினாம்) அனைத்து எண்ணங்களையும் அல்லது புத்தியை (திய) ஒளிதிகழச் செய்கிறாள். (விராஜதே)
ஸுக்தம் குறிப்பிடும் ஸமுத்ரம் கடல் அல்ல, அது இதயத்தில் கொழிக்கும் இறைவெள்ளம். ஆம், ஸமுத்ரத்திற்கு முன் ஹ்ருத வருகிறது. பின்பு, க்ருத அதாவது தெளிவு வருகிறது.
குறைந்தது இரண்டு விதமாகப் பொருள்கொள்ளும்படி விளங்குகிறது வேதத்தின் பாஷை.
வாக் தேவி:
சத்தியத்தைக் கேட்கச் செய்யும் சக்தி சரஸ்வதி. சத்திய ரீங்காரமே ஸ்ருதி எனப்படுகிறது. வாக் என்பது பேச்சல்ல!
தீயென்றால் காடெரியத் தேனென்றால் பூமகிழ
வாய்நின்ற பேரருளே வாக்கு
நாம் பேசுவது பேச்சு. ரிஷிகளின் பேச்சு வாக்கு. `மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்,` என்றான் பாரதி. அது வாக்கு. ஏன்? அது உச்சத்தில் இருக்கும் சத்தியம் என்னும் பிரக்ஞையிலிருந்து வருவது. மாமுனிகளின் மூலம் மந்திரங்களாக வெளிப்படுவது. மகத்தான செயல்களை நொடியில் செய்வது.
பவபூதி சொல்வதைக் கேட்போம்:
`எத்தனை நல்ல மனிதர்கள் என்றாலும், அவர்களுடைய பேச்சு என்பது, அவர்கள் மனதில் ஏற்கனவே இருக்கும் எண்ணங்களுக்கு ஏற்பவேதான் இருக்கும். ஆனால், ஒரு முனிவரின் வாக்கு என்பது அவருடைய மனதிலிருந்து வருவதில்லை. அது எல்லாவற்றுக்கும் மேலான சத்திய சித்தம் என்னும் தளத்திலிருந்து நேரடியாக வருவது. அப்படி அது வெளிப்படும்போது, அந்த முனிவரைச் சுற்றியுள்ள சூழல் அல்லது உலகத்தையே மாற்றவல்ல ஆக்கசக்தி வாய்ந்ததாக அது விளங்குகிறது. அது அறியாமையை அழிக்கவல்லது.“
இதையே ஸ்ரீ அரவிந்தர் வாயிலாகக் கேட்போம்:
`சத்தியம் என்பது நம்மை ஒளியாய், அல்லது ஒளியின் குரலாய் வந்தடைகிறது. அது நம் புத்தியில் ஒரு மாறுதலை நிகழ்த்துகிறது. நம்மிலும் நம்மைச் சுற்றிலும் ஒரு தெளிவை வலிந்து வழங்குகிறது. எண்ணத்தில் நின்ற சத்தியம், காட்சியாய் விரிகிறது. அந்த சத்திய தரிசனம் ஆன்ம சத்தியமாய் நிலைபெறுகிறது. அதுவே உணர்ச்சி, புத்தி, செயல் யாவற்றையும் சத்தியத்தின் புறப்பாடாகவே ஆக்கிவிடுகிறது. இதுவே வேதத்தின் ஜீவக் கோட்பாடு.“
சரஸ்வதீ ஸுக்தம் (இலா, சரஸ்வதி, பாரதி:)
சரஸ்வதி என்னும்போது, ரிக்வேதம் இலா, சரஸ்வதி, பாரதி என்னும் மூன்று தெய்வங்களைச் சேர்த்தே கொண்டாடிப் போற்றுகிறது. மஹி என்னும் பெயரும் உண்டு. மஹியும் பாரதியும் ஒன்று என்பர் பெரியோர். மனுவின் பிள்ளை இல பெண்ணாகி இலாவானான் என்று புராணக் கதை ஒன்று உண்டு. ஆனால், இந்த மூன்று தெய்வங்கள், சத்திய வேள்வியில் ஈடுபட்டிருப்பவனுக்கு பார்வை, கேட்டல், மற்றும் விரிவு மூன்றையும் வழங்குகின்றனர். பாரதி என்பவள் அகண்ட பிரகாசம். இலா, அவ்வொளியின் அகண்டத்திற்கு ஏற்பவே, அதைச் சித்தத்தில் ஒளியாக்கித் தருபவள். ஊக்கத்தைத் தரித்தவளான சரஸ்வதி, அந்த ஒளியை, அதாவது சத்தியத்தைக் கேட்கச் செய்கிறாள்! இந்த சக்திகளெல்லாம் பார்க்கக் கூடிய வடிவில் தெரிபவை!
மங்கலமான சத்தியங்கள் மண்டிக் கிடப்பவள்
மனதில் ஆனந்த எண்ணங்களை விழிப்புறச் செய்பவள்
அந்த சரஸ்வதி இந்த வேள்வியை ஏற்கட்டும்!
(சோதயித்ரி ஸுந்ருதானாம் சேதந்தி ஸுமதீநாம்
யக்ஞம் ததே ஸரஸ்வதீ! 1:3:11)
சித்தத்தில் தரிசனத்தைச் சிந்திக்கும் வண்ணம் நிகழவைத்து
சத்தியமாம் பெருவெள்ளத்தை விழிப்புறச் செய்பவள் சரஸ்வதி
அத்தனை எண்ணங்களையும் ஒளியுறச் செய்கிறாள்1
(மஹோஅர்ண: ஸரஸ்வதீ ப்ரசேத்யதி கேதுனா
தியோ விஸ்வா விராஜதி 1:3:12)
தூய்மை நல்குபவள் சரஸ்வதி. நிறைவால் நிறைந்திருப்பவள். சித்தத்தில் ஞானமாய்ச் செழித்திருப்பவள். நம் வேள்வியை ஏற்பளாக!
(பாவகா ந: ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ
யக்ஞம் வஷ்டு தியாவசு: 1;3:10)
நிறைவால் நிறைந்திருப்பவள். செழுமையின் ஆற்றல் மிகுந்தவள், சித்தத்தில் ஞானத்தைப் பாதுகாப்பவள், எங்களைக் காப்பாற்றட்டும்!
(ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ
தீனாம் அவித்ரி அவது 6:61:4)
வாக் ஸுக்தம் : ரிக்வேதம் 10:125
இந்த ஸுக்தம், வாக் என்னும் பெண் ரிஷியின் மூலம் வெளிப்பட்டது. வேதத்தில் குறைந்தது 25 பெண் ரிஷிகளைக் காணலாம். அவர்களுள், வாக் என்னும் ரிஷி சிறப்புக்குரியவர். ஸ்ரீ ஸுக்தம் அவர்மூலம்தான் வெளிப்பட்டிருக்கிறது. அதில் அவரே பராசக்தியாக வெளிப்பட்ட அபூர்வ இடம் உண்டு. `ஷுத்பிபாசா மலாம்ஜ்யேஷ்டாம் அலக்ஷ்மி நாசயாமி அஹம். `பசி தாகம் போன்ற முன்னர் தோன்றிய அசுத்தங்களை, துர்பாக்கியங்களை நான் விரட்டியடிக்கிறேன்` என்று அம்பிகையே மொழிகிறாள்! அதே ரிக்கின் அடுத்த வரி அம்பிகையை இறைஞ்சுவதாக அமைந்திருக்கிறது!
அந்த வாக் ரிஷியின் மூலம்தான் இந்த வாக் ஸுக்தமும் வெளிப்பட்டது.
வாக் என்பது பேச்சல்ல என்று ஏற்கனவே பார்த்தோம். அது சத்தியத்தின் இதயத்திலிருந்து வருகின்ற ஊக்கம். அண்டம் முழுதும் படைப்பில் நீக்கமற நிறைந்திருக்கும் ஆர்வம். அறிவின் ஆக்கத்தின் ஊற்று.
எனவே. ஸுக்தம், `நான் ருத்திரர்கள், வசுக்கள், ஆதித்யர்கள், மித்ரன், வருணன், இந்திரன், அக்னி, அஸ்வினி தேவர்கள் இவர்களுடன் நடக்கிறேன், தாங்குகிறேன்,` என்னும் போது வாக் என்பதன் பொருள், பெரும் பிரமிப்பில் நம்மை ஆழ்த்துகிறது.
`உயிர்கள் உண்பதும், காண்பதும், கேட்பதும், ஏன், சுவாசிப்பதும் என்னுடைய சக்தியால். சித்தத்தை என்பால் வைக்காதவர்கள் சிதைவுறுகிறார்கள். யாரை விரும்புகிறேனோ, அவனை வலிவுடையோன் ஆக்குகிறேன். அவனை ரிஷியாய் ஆக்கி, ஞானத்தைத் தந்து, பிரம்மத்தில் நிலைபெறச் செய்கிறேன்.
ஒரு பெண்மூலம், இந்த மகாசக்தி பேச்சாகவும் வெளிப்பட்டிருக்கிறது என்பது நம்மை வாய்புதைக்க வைக்கிறது.
மேதா ஸுக்தம்
`நீ வருவதற்கு முன்னர், வருத்தம் தரும் பேச்சுக்களில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். எங்களை மகிழ்ச்சியுடன் அணுகும் அறிவின் தேவியே வருக! மங்கலமானவளே, மென்மனம் கொண்டவளே, எங்கும் நிறைந்திருப்பவளே வருக! நின் வருகையால், நாங்கள் ஒளி பெற்று, பரம சத்தியத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் வல்லமை பெறுவோமாக!` என்றே துவங்கும் இந்த ஸுக்தம் எதைப்பற்றிப் பேசுகிறது என்பதை விளங்கிக் கொள்வது சிரமமாக இல்லை. அறிவார்ந்த உணர்வே மேதா. Conscious awareness! Conscious intelligence!
`தேவியே! நின்னருள் பெற்றோர் ரிஷியாகலாம். செல்வங்கள் யாவும் பெறலாம். பிரம்ம ஞானம் எய்தலாம். பலவிதமாய்ப் பல்கும் ஐஸ்வரியங்களைப் பெறலாம். எம்மீது மகிழ்ச்சி கொண்டு, அறிவோடு கூடிய செல்வங்களையே அளிப்பாயாக! சரஸ்வதி தேவியின் அறிவு, என்னுள் அருளப்படட்டும்!`
இவள்தான் வாணி!
இவள் அறிவுத் தெய்வமல்ல, அறிவின் தெய்வம்! இவளுடைய நாதத்திலிருந்தே படைப்பு. சொல்லப்போனால், இவளுடைய வாக்கே இந்த சிருஷ்டி. எனவே, இவள் தேவதையல்ல, இவளுக்கு மேல் இன்னொரு சக்தி இல்லையென்னும்படி இருக்கின்ற பராசக்தியே இவள்.
இந்த வாணியைத்தான் பாரதி சரண்புகுந்தான். அதனாலேயே அவனில் பாரதி பூரணமாய்க் குடிகொண்டாள். வேதங்களை நேரடியாகப் பயின்றவன் பாரதி. எனவே, அவன், ஒரு தெய்வத்தைப் பற்றிப் பாடினால் அதில் வேதத்தின் சொற்கள், வேதத்தின் பொருள், வேதத்தின் கொள்கை இவை காணப்படுவதில் வியப்பில்லை. சரஸ்வதியைப் பற்றிய, மேற்குறிப்பிட்ட விளக்கங்களை மனதில் வைத்துக்கொண்டு, பாரதியின்,
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் – அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்!
என்னும் வரிகளை நோக்கும்போது நமக்கு மெய் சிலிர்க்கிறது!
..நாதமோ டெப்பொழுதும் –என்றன்
நாவினிலே பொழிந்திட வேண்டும்…
கண்மணி போன்றவரே
அண்மையில் இருந்திடுவீர் – இனி
அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ!
என்று அவன் பாடிய பாடல் ஸரஸ்வதி ஸ்தோத்திரம் எனப்படுகிறது. ஆனால் இது வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பாரதி, ஸரஸ்வதி, மஹி, வாக் எல்லோரையும் ஒருங்கே சேர்த்துத் துதிப்பது போலவே இருக்கிறது.
உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள்
என்னும் வரிகள் ரிக் வேத விளக்கமாகவே தெரிகின்றன.
வஞ்சமற்ற தொழில்புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்
வெஞ்சமர்க் குயிராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திரு சிற்பியர் தச்சர்
மிஞ்சநற்பொருள் வாணிகஞ் செய்வோர்
வீர மன்னர், பின் வேதியர் யாரும்
தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்..
இதுவும் வேதக் கொள்கையே! ஸரஸ்வதியைத் தொழில்களோடு இணைத்துப் பார்க்கும் தரிசனம் ஸ்ரீ அரவிந்தருடையது. அவர்தான் பாரதியின் நண்பராயிற்றே! அவர்கள் இதைப் பற்றி விவாதித்திருக்கலாம்.
வாணி யார்? இதோ பதில்:
வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியதாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே தொழுவோமே!
அறிவுமுத்து மாலையினாள் என்னும் சொற்றொடர் சிந்திக்கத் தக்கது. சனாதன தர்மத்தில் அறிவைப் பேணும் வழக்கம் உண்டே தவிர, அறிவைத் தொழும் வழக்கம் இல்லை. அப்படிச் செய்தல் அறியாமை என்று நம் முன்னோர்களின் முடிவு. ஓர் உபநிடதம் சற்றுக் கடுமையாகவே சொல்கிறது, `அறிவை மதியாதவன் முட்டாள். அறிவை வணங்குபவன் அடிமுட்டாள்,` என்று. ஏன்? அறிவு, ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். அதை நாம் ஆள வேண்டும். கருவியை எஜமானனாக்கித்தான் வேதத் திருவிழியாளுக்கு, மிக்க பல்லுரையெனும் கருமை யிட்டார்கள் பண்டிதர்கள். அது நம்மை ஆண்டால், நாம் ஆணவத்தின் வசம் இருக்கிறோம் என்றே பொருள். எனில், நம் அறிவு கனியாது, தெளிவடையாது. வேதத்தின் உட்பொருள் காணாது. பேச்சோடு நின்றுவிடும். வாக்கு வராது. இதைத்தான், என்னென்னவெல்லாம் அறிவுகளோ அதை முத்துமாலைகளாக்கி அணிந்திருக்கிறாள் வாணி என்கிறான் பாரதி. பாரதியின் இந்தப் பார்வை அவன் எவ்வளவு உயரமானவன் என்று நமக்குக் காட்டுகிறது.
அந்த தேவியைச் சிறுவயதில் நேரிலும் கண்டவனாதலின் அவன் அவள் மேல் காதலே கொண்டு `பகற் பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவையல்லால் பிற வாஞ்சையுண்டோ?` என்று கலைமகளிடம் காதல் வயப்பட்டதை வர்ணிக்கிறான்.
மஹா காளியின் புகழ் பாடப் புகுந்தவன்,
வேதமாய் அதன்முன்னுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம் விழும் பள்ளம் – ஆக
வேண்டுநித்தம் என்றன் ஏழை உள்ளம்
என்று வாணியைத்தானே பார்த்துப் பாடுகிறான்!
ஒரு கணம்கூட, தான் பேசக் கூடாது. தனது எண்ணம் என்ற ஒன்றிருந்து அது எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் அது சொல்லாக வெளிப்படுவதில் பாரதிக்கு சம்மதமில்லை. அவளுடைய வாக்கே இவனது நாவினின்று வெளிப்பட வேண்டும் என்பதே அவன் தவம்:
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாக விளங்கிடுவாள்
தெள்ளுகலைத்தமிழ் வாணி நினக்கொருவிண்ணப்பஞ் செய்திடுவேன்
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராதென்றன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்திவேல் சக்திவேல்!
அவள் வெளிப்பட்டால்தான், வேதக்கருப்பொருள் தன்னைப் புறந்தள்ளி வெளிப்பட்டால்தான் அது கவிதை, மந்திரச் சொல், வாழ்ந்த பயன். அல்லவெனில், `நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில்` எறிந்த கதைதான்.
ஓர் அரிய அக அனுபவத்தை வைக்கிறான், பராசக்தி என்ற கவிதையில். எல்லாமாகி இருப்பவள் பராசக்தி. அவளே கதையும் கவிதையும் சித்திரமும் சிற்பமும் நாடகமுமாய்ப் பல்கும்போது வாணியாகிறாள். காவியம் பாடென்கிறாள் வாணி. தன் கால்களைத் தவிர வேறெதையும் நினைக்காதே என்கிறாள் பராசக்தி. அல்லாடுகிறது மன்றாடும் கவிஞனின் மனம். (கவிதை..)
இந்த அற்புதக் கவிதையில்,
சொல்லினுக் கெளிதாக நின்றிடாள்
சொல்லை வேறிடம் சொல்ல வழிவிடாள்
என்னும் வரிகள் பராசக்தி, வாணி இருவருக்குமே கச்சிதமாகப் பொருந்தும்! அவர் இருவரல்லவே!
சரி, வாணியைப் பற்றி இவ்வளவு சேதிகளைத் தெரிந்துகொண்டோம். பாரதிக்கும் பாரதிக்கும் உள்ள பரவசமான பந்தத்தைக் கண்டோம். நமக்கும் வாணியருள் வேண்டுமென்று தோன்றுகிறது. அவளிடம் எதை எப்படிக் கேட்க? கவலையே வேண்டாம், பாரதியின் இந்தப் பாடலைச் சொன்னால் போதும்:
தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்
சிந்திப்பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்
கண்ணீர்த்
துளிவர உள்ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீயருளும்
தொழில்களன்றோ!
ஒளிவளரும் தமிழ்வாணி அடியனேற் கிவையனைத்தும்
உதவுவாயே!
இந்தப் பாட்டை, பாஞ்சாலி சபதத்தில் சூதாட்டச் சருக்கத்திற்குக் கடவுள் வாழ்த்தாக வைத்தான்! அறியாமையின் சூதிலிருந்து நம் ஆன்மா தப்பி, அகண்டப் பிரகாசமாகத் திகழவேண்டுமானால், அவளே கதி!
இறுதியாக, தன்னுடைய ஸரஸ்வதி வணக்கம் என்னும் பாட்டில், வாணிக்கு அழகான வடிவம் தந்து அவளைச் சரணெய்துகிறான்:
வெள்ளைக் கமலத்திலே – அவள்
வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசைதான் – நன்கு
கொட்டுநல் யாழிசை கொண்டிருப்பாள்
கள்ளைக் கடலமுதை – நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்திலே – எனைப்
பேணவந்தாள் அருள் பூணவந்தாள்!
அவள் வீற்ற இடம், உள்ளமாகிய வெள்ளைக் கமலம். வெள்ளை என்னும் சொல்லுக்குத் தூய்மை என்பது மட்டும் பொருளல்ல. அறிவின்மை என்றும் பொருளுண்டு! வெள்ளந்தி என்று சொல்வதில்லையா, அதுதான்! மேலு, எந்த நிறத்தின் சாயலையும் ஏற்காத தன்மை என்றும் பொருளுண்டு. அறிவை வைத்துக்கொண்டு அவளை அணுக முடியாது! நான் ஒன்றுமே இல்லை, எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது பணிவு. தெரியும், தெரியாது என்னும் சிந்தனைகளே இல்லாமல், ஒரு சின்னக் குழந்தையின் வெகுளித் தன்மையோடு வளையவருவதுதான் கள்ளமற்ற உள்ளமாகிய வெள்ளைக் கமலம்! தஞ்சம் விழைகிறேன், சரணம் எய்தவேண்டும் என்னும் நினைப்பும் இல்லாமல் தாயென்னும் கடலைச் சேரத் தாவிவரும் நதியைப்போல் இருப்பதுதான் அவன் சொல்லும் பிள்ளைப் பருவம்!
அப்படிப்பட்ட உள்ளத்தில்தான் அவள், அவளாகவே வந்து வீற்றிருப்பாள். அதுதான் அவளுக்கு உகந்த இடம். அதுதான் அவளுக்குத் தக்க ஆசனம். எனவே, தனது தகுதிக்கேற்ற இடத்தில் தான் அமர்ந்திருக்கும்போது இசைக்கப்படும் புகழை அவள் ஏற்றிருப்பாள்!
கனி என்பது, கொள்ளையடிக்கத் தூண்டுவது. அவளுடைய கனியிசையோ நம் இதயங்களைக் கொள்ளையடிப்பது!
அவளுக்கு இந்தப் பிள்ளையின் வெள்ளை உள்ளத்தில் என்ன வேலை? இப்படிப்பட்ட பிள்ளையைத்தான் அவள் தேடிக்கொண்டிருந்தாள்.
எதற்கு? கவிதை என்னும் வரத்தை அருளுவதற்கு!
ஏன்? எனக்கு இது தெரியும், அதுதான் தெரியாது என்னும் நினைப்புக்கள், பேதங்கள் இல்லாத பிள்ளை உள்ளம்தான் தான் வழங்கும் கவிதைக்கு ஏற்ற உள்ளம்.
எப்படிப்பட்ட கவிதையாம்? கள்ளை நிகர்த்தது – மயக்கமே வடிவாய் இருப்பது, மையலைத் தருவது, பழகப் பழகப் பெருமை கூடுவது! கடல் அமுதை நிகர்த்தது – சாகரத்தின் சாறு! உயிரின் இதயம்! அடர்த்தி, திரட்சி!
கவிதை அமரவிதை. அதைப் பயில்வதற்குத் தேவை அசுர சாதகம்! எனவே, ஏற்ற இடத்தில் வீற்றிருந்து, புகழை ஏற்றபடி இசைத்துக்கொண்டிருக்கிறாள் வாணி.
வேதத் திருவிழியாள் – அதில்
மிக்கபல்லுரை யெனும் கருமையிட்டாள்
சீதக் கதிர்மதியே – நுதல்
சிந்தனையே குழலென்றுடையாள்
வாதத் தருக்கமெனும் – செவி
வாய்ந்த நற்றுணிவெனும் தோடணிந்தாள்
போதமென் நாசியினள் – நலம்
பொங்குபல் சாத்திர வாயுடையாள்
வியாக்கியானங்களால் தொலைந்து போனது வீதியில் வளையவந்த சத்தியம். ஆயிரம் ஆண்டுகளாக எத்தனை புத்தகங்கள், கட்சிகள், பிரிவுகள், சண்டைகள்! ’இதோ சத்தியம்!’ என்ற பரவச அனுபவத்தின் வெளிப்பாடு வேதம். அனுபவம் இல்லாதது வியாக்கியானம். “Experience has no language and language has no experience,” என்பார் என் குருநாதர். விளக்கம் என்பது விகாரப்படுத்தும் அபாயம் உள்ளது; மேலும் தோதாய் இருப்பதற்குப் பதிலாக ஊறு விளைவிக்கும் தன்மையுடையது என்று பாரதியே குறிப்பு எழுதுகிறான்.
எனவே வேதங்களே விழிகள். அதுவும் கருவிழிகள். விழிகள் கருமை. வேதம் என்னும் அறிவு தரும் வெளிச்சம் வெண்மை!
நெற்றி எப்போதும் குளிர்ச்சியாக இருக்குமாம் வாணிக்கு. கவலைச் சூடு ஞானத்தின் தாய்க்கு ஏது?! எந்த இரவானாலும் தனது தண்மை மாறாத சந்திரனே நெற்றி – சீதக் கதிர்மதி – என்கிறான். அதென்ன கதிர் மதி? நிலவின் அமுதக் கிரணங்கள் என்று பொருள் கொள்ளலாம். அதைவிடவும் சிறப்பாக இன்னொன்று சொல்லலாம். கதிரவனின் கொடைதானே மதியின் ஒளி? எப்போதும் வெப்பமாக இருக்கும் கதிரவனின் கொடை, எப்போதும் குளுமையாகவே இருக்கும் சந்திரன்! ஆஹா! சிந்தனைமயமானது அறிவு. தெளிவுமயமானது ஞானம்! கேள்விகள் ஓய்வைத் தராது என்றாலும் கேள்விகள் இல்லாமல் உள்ளேயே வீற்றிருக்கும் ஒய்யாரமான ஓய்வை நாடுகின்ற நாட்டம் எப்படி வரும்?
ஞானம் ஞானமாய், வளர்ச்சியும், மாறுதலும், தேய்தலும் இல்லாமல் தானாய்த் தானிருக்க, மானுடர்க்கும், மற்றைய உயிரினங்களுக்கும் அவரவர் நிலைக்கு ஏற்பப் புரியும்படி அதை இறக்கி வழங்க வேண்டுமே! அதுதான் சிந்தனைக் கூந்தல்! நேர்த்தியான கூந்தல் எப்படி இருக்கும்? கரிய அருவியாய், கற்றை கற்றையாய் இருக்கிறது அவள் கூந்தல். ஒவ்வோர் இழையும் தனித்தனியாய், ஒட்டுமொத்தமான சேர்க்கையாய், உறுதியாய், நெகிழ்வாய், இன்பமே இயல்பாய், சுவாரசியமான சுருள்கள் கொண்டதாய்! சிந்தனையும் அப்படி இருக்கவேண்டும்.
அனுபவத்தை நோக்கிய பிரயத்தனம் நமது சிந்தனை. அனுபூதியாக இறங்கி வருவது அவளுடைய சிந்தனை!
வாதம், தருக்கம் என்னும் இரண்டு செவிகள். அதில் நல்ல துணிவென்னும் தோடு! வாதம் என்பது உரையாடல், discussion. தருக்கம் என்பது நியாயமாகப் படிப்படியாகப் பேசுதல், logic. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா? என்பார் கண்ணதாசன். இரண்டு செவிகள் இரண்டு விதமாய்க் கேட்கக் கூடாது! உரையாடல், அதாவது வாதம் என்பது உண்மையை அறியவே! எனவே அது நியாயமாக இருக்கவேண்டும். பாரபட்சமின்றி இருப்பதே நியாயம்! வாதம் உண்மையை அறிவதற்காக! தருக்கம், தாவி ஒரு முடிவுக்குப் பிடிவாதமாக வராமல், அந்த உண்மையைப் படிப்படியாக அறிவதற்காக!
சரி, வாதமும் தருக்கமும் வாயால் நிகழும் செயல்கள். அவற்றை ஏன் வாணியின் செவிகளாக்கினான்? வாதிப்பதிலும் தருக்கிப்பதிலும் இருக்கும் ஆர்வத்தைக் காட்டிலும், உண்மையைக் கேட்பதில்தான் கூடுதல் ஆர்வம் இருக்கவேண்டும்! அவளுடைய செவிகளே அழகான செவிகள். கச்சிதமான இணை பொருந்திய செவிகள். ஏனென்றால், அவளே வாதம், தருக்கம் இவற்றின் இலக்கான உண்மை. அதுவே அவளுடைய ஞானமாகிய வீணையின் இசை. அதை அவளே கேட்டுக்கொண்டிருக்கிறாள்! எப்படி, படைப்பின் கதையை, கணபதியின் பரந்த காதுகள் கேட்டுக்கொண்டிருக்குமோ அப்படி!
அறிவாய் விரிந்த விழிகள் வேதம்; தெளிவாய்க் குளிர்ந்த மதியே நெற்றி; மற்றவர் தழைத்து ஓங்க, தான் தழைத்து இறங்கும் சிந்தனையே கூந்தல்; ஞானமென்னும் கொள்ளைக் கனியிசை; வீற்றிருக்க வெள்ளை உள்ளம்; அந்த இசையைக் கேட்டுக்கொண்டிருக்க சீரான இரு செவிகள்!
துணிவென்னும் தோடு? சிந்திக்கவும், பேசவும் துணிவு வேண்டும்! அந்தத் துணிவைப் படிப்போ, பணமோ, பதவியோ, அழகோ, திறமைகளோ தராது! உண்மைதான் தரும்! உண்மையை அறிவது முடிவு. உண்மையை அறிந்தே தீருவேன் என்னும் ஆர்வமே துணிவு! இது ஆயுதத் துணிவு அல்ல! அழகான அணிகலத் துணிவு!
வாணிக்கு, நமது கல்வியைக் காட்டிலும், உண்மையை அறியவேண்டும் என்னும் ஆர்வமே இன்பம் தரும். எனவே, உண்மையைத் துணியத் துணிவோமாக!
வாயால் வெளிப்படுவதல்லவா போதம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்! இவன், நாசி என்கிறானே! போதம் என்பது வார்த்தையில் வருவதில்லை. அதற்கு அப்பாற்பட்டது. மெளனத்தின் முரசு அது. உயிருக்கு உயிரானது அது. எனவெ அது சுவாசத்தின் வழியே வருவது! ஞானம் என்பது சுவாசமாக வேண்டும்! அப்படிச் செய்வதுதான் போதம்! அது பேச்சில் வராது. சர்ச்சைக்குரிய, பாரதி ”சங்கையில்லாதன சங்கையாம்” என்று குறிப்பிடும் சாத்திரங்களே வாய் மூலம் வெளிப்படுவன என்பதனால் சாத்திர வாயுடையாள்!
கற்பனைத் தேனிதழாள் – சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையினாள்
சிற்பமுதற் கலைகள் – பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்
சொற்படு நயமறிவார் – இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்
விற்பனத் தமிழ்ப்புலவோர் – அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தாள்!
இதழில் தேன் என்பது பருகுவோரின் கற்பனைதானே! ”பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்” என்பாரே திருவள்ளுவர்! காதலில் கற்பனை அனுபவம்; அனுபவம் கற்பனை அன்று! இதழில் தேன் என்னும் கற்பனை, பருகப் பருகப் பெருகும் அனுபவம்!
இங்கே வாணியே அனுபவங்களுக்கெல்லாம் அனுபவம். அறியாமையில் உழலும் நமக்கோ அது வெறும் கற்பனைதான். ஆனால், அந்தக் கற்பனையும் அவளுடைய கொடைதான் அல்லவா? அவள்தான் தன்னைப் பற்றிய கற்பனையை நமக்குத் தருகிறாள்! தேனொழுக்காக!
”ஏந்திள முலை” என்பார் இளங்கோ. மணிக்கொங்கை என்கிறான் பாரதி. முத்திரை போன்ற மகுடம் தரித்த கொங்கை. வனப்பு, திரட்சி, உறுதி, மிருதுத்தன்மை எல்லாம் சேர்ந்தது! காவியம் என்றால் அப்படி இருக்க வேண்டும்!
கலைகளே அவளது கரங்கள்! கலைகள் என்னும் கரங்கள் மூலம் அவள் நம்மை அள்ளிக்கொள்கிறாள்; ஆதரிக்கிறாள்! கடுந்தவம் புரிந்து அடைவதைக் காட்டிலும் கலைகள் மூலம் இறையை அடைதல் எளிதென்பதைக் காட்டுகிறாள். அவள், கலை வாணியன்றோ!
வெள்ளையான உள்ளக் கமலம் அவளுடைய உறைவிடம்; வேதமே விழிகள்; தண்மை மதியமே நெற்றி; வாதமும் தருக்கமுமே செவிகள்; துணிவே தோடு; போத நாசி; சாத்திர வாய்; கற்பனைத் தேனின் ஊற்றே இதழ்; காவியக் கொங்கை; கலைகள் கரங்கள்.
சரி, பாதம்? அது எதுவாம்? எங்காம்?
சொல்லின் நயமறிந்தவர்கள்; அது இசையோடு தோய்வதால் வரும் சுவையறிந்தவர்கள்; கற்பனைக்கு அப்பாலிருக்கும் ஓர் உந்துசக்தியின் விவரங்கள் அறிந்த விற்பன்னர்கள்; சுருங்கச் சொன்னால் தமிழ்க் கவிஞர்கள். அவர்களுடைய நாவிலே இவள் பாதமாம்! இல்லை இல்லை, அவர்களுடைய நாவே இவள் பாதமாம்!
வாணியைச் சரண்புகுந்தேன் – அருள்
வாக்களிப் பாளெனத் திடம்மிகுந்தேன்
பேணிய பெருந்தவத்தாள் – நிலம்
பெயரளவும் பெயர் பெயராதாள்!
அப்படிப்பட்ட வாணியை நான் சரணடைகிறேன்! தீயென்றால் காடெரிய, தேனென்றால் பூமகிழ, வாய்நின்ற பேரருளே வாக்கு என்பேன் யான். அந்த வார்த்தைக்கு அப்பாலிருக்கும் மந்திரச் சொல்லின் மூலமான அருள் வாக்கை அவள் எனக்குக் கட்டாயம் அளித்தே தீருவாள் என்று நம்புகிறேன்.
நம்புகிறவனுக்கு ஐயங்கள் இருக்கக் கூடாது. சரணம் எய்திய பிறகு கவலை இருக்கவே கூடாது. நான் கேட்பேன் அவள் தருவாள். இது நம்பிக்கை. எனக்குத் தரவே அவள் என்னைப் பணியவைத்தாள். இது சரணாகதி. “In faith there is distance; in surrenderthere is none. In faith, there is you and Him; in surrender, you jump into Him,” என்பார் குருநாதர்.
உலகம் இருக்கும் வரைக்கும் அவளுடைய பெயர் இருக்கும். அவளுடைய பெயரே அவளுடைய உருவம். அது கல்லாலோ, பொன்னாலோ செய்ததல்ல. ஞானம் விழைவாரின் மோனத் தவத்தால் எழுந்தது! மோனக் கவிஞர்களின் கானப் பெருக்கால் விளைந்தது!
தவத்தால், கவிதையால் பேணி வளரும் பெரும் தெய்வம் வாணி. அவள், அந்தத் தவத்தின், அந்தக் கவிதையின் முடிவாம் ஞானத்தால் நம்மைப் பேணுவாள்.
திருஞான சம்பந்தரோடு அடியார்கள் ஜோதியில் கலந்ததுபோல்
பாரதியோடு நாமும் வாணியைச் சரண்புகுவோம்!