-முனைவர் இராம. இராமமூர்த்தி

 

sundaranarபேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை
(1855- 1897)

நம் செந்தமிழ் மொழியை முத்தமிழ் என முன்னோர் வழங்குவர். இயல், இசை, ’கூத்து’ என்னும் நாடகம் ஆகிய மூன்று பகுதிகளாகத் தமிழ் தொன்றுதொட்டு இலங்கி வருகின்றது. தொல்காப்பியர், நாடகத் தமிழுக்குரிய மெய்ப்பாடுகளைப் பொருளதிகார மெய்ப்பாட்டியலில் மிக விரிவாக விளக்கியுள்ளார். நாடகம் எழுதுவதற்கான இலக்கண நூல்களும் அந்நாளில் இருந்தனவென்பதைச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் எடுத்துக்காட்டியுள்ளார்.

அகத்தியம், குணநூல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற தமிழ் நாடக இலக்கண நூல்கள் பண்டை நாளில் வழக்கிலிருந்தன. அல்லிக்கூத்து, கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம் போன்ற கூத்துக்களைப் பண்டைத் தமிழர் போற்றியுள்ளனர். எனினும் தமிழில் நாடக இலக்கிய நூல்கள் கிடைக்காமல் போனது நம் தவக்குறைவே. மேலும், கலைகளைப் பற்றிக் குறிப்பாக நாடகக் கலை பற்றி, நாகரிகக் கலப்பால் தமிழர்களிடையே மாறுபட்ட எண்ணமும் நிலவுவதாயிற்று.

தமிழ்நாட்டில் பல நாடகங்கள் நடிப்பதற்காகத் தோன்றினாலும், இலக்கிய நாடகங்களாக அவை மிளிரவில்லை. இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சி தமிழ்நாட்டில் இடம்பெற்றபின் ஆங்கில மொழியும், இலக்கியமும் செல்வாக்குப் பெற்றன. சேக்ஸ்பியரின் நாடகங்கள் ஆங்கிலம் கற்ற தமிழர்களிடம் பாராட்டுப் பெற்றன.

இச்சமயத்தில், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருநெல்வேலிச் சீமையைச் சார்ந்த பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளையவர்கள், ‘மனோன்மணீயம்’ என்றவோர் அரிய நாடக நூலைத் தமிழ்மக்கள் படித்தின்புறவும், நடித்து மகிழவும் படைத்துத் தந்தார். இந்நாடக நூலே இன்றளவும் தமிழ் நாடக இலக்கியத் துறையில் தன்னேரில்லா நாடக இலக்கியமாக விளங்கிவருகின்றது என்றால் மிகையன்று.

இந்நூல், கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாகச் சென்னைப் பல்கலைக்கழக இடைநிலை (Intermediate), இளங்கலைப் பட்ட வகுப்புக்களில் நாடக இலக்கியமாகத் திகழ்ந்த பெருமை பெற்றது. ஆங்கில நாடக இலக்கியத்தைப் போலவே ஐந்து அங்கங்களையும் (Acts) பல உட்களங்களையும் (Scenes) கொண்டது இந்நூல். நாடக நூலின் ஐந்து அங்கங்களை, நாடக இலக்கணிகள், முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்று குறிப்பிடுவர். மனோன்மணீயமும் இவ்வைந்து உறுப்புக்களைப் பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, லிட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய ‘The Secret Way’ – இரகசியவழி என்ற நூலைத் தழுவியே மனோன்மணீயத்தைப் படைத்துள்ளார். எனினும், இந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலன்று; மூலக்கதை ஆங்கில மொழியில் அமைந்ததாயினும் மனோன்மணீயம் தமிழ்நாட்டுச் சூழலில் தமிழ் மண்ணில் தோன்றிய முதல் நூலே போன்று விளங்குகின்றதென்பதனை இந்நூலைக் கற்பார் நன்குணர்வர்.

நாடகம் நடைபெறும் இடங்கள், தண்டமிழ் மதுரையும், தீந்தமிழ்த் திருநெல்வேலியும் சேரவேந்தனின் திருவனந்தபுரமும் ஆகும். இவையெல்லாம் தமிழ் மணக்கும் நன்னிலங்கள் அன்றோ! அம்மட்டோ! நாடகத்தில் இடம்பெறும் நாடக மாந்தர்களை நினைப்பின் அவர்கள் எல்லாரும் தமிழ்ப் பண்பாட்டினை வெளிப்படுத்துகின்ற நன்மக்கள்; நனிநாகரிகர். சீவகவழுதி பாண்டிய மன்னன்; சுந்தர முனிவர் குலகுரு; குடிலன் கேடுசூழ் அமைச்சன்; மனோன்மணி மன்னனின் ஒரே மகள்; நற்பண்புகளின் உறைவிடம். வாணி மனோன்மணியின் தோழி; நடராசனின் காதலி; அறிவில் சிறந்த நங்கை. நடராசன் சுந்தர முனிவரின் சீடன். புருடோத்தமன் சேரவேந்தன்; மனோன்மணியின் காதலன்; நற்பண்பினன். நாராயணன் மன்னனின் நலம்நாடும் நற்குடிமகன். பலதேவன் குடிலனின் மகன். சகடன் வாணியின் தந்தை; பொருளாசை மிக்கோன்.

நாடக மாந்தர் மட்டுமல்லர், நாடகக் கதையும் தமிழ் நாகரிகத்தின் இரு கண்களாக விளங்கும் அகமும் புறமும் – காதலும் வீரமும் செறிந்து விளங்குவது. இதனைப் பின்புலமாகக்கொண்டு நடைபோடுவதே இம்மனோன்மணீய நாடகம். இந்நாடகத் தொடக்கம்கூட இந்நாட்டு நாகரிகத்தையும், பண்பாட்டினையும் பறைசாற்றுவதாகும்; அதனைக் காண்போம்.

பாண்டிய மன்னன் சீவகவழுதியின் அரசவைக்கு மன்னனின் குலகுரு சுந்தர முனிவர் எழுந்தருளுகின்றார். மன்னன், தம் குருவை வணங்கி இனிய நன்மொழி கூறி வரவேற்கின்றார். அவ்வரவேற்புரை மன்னனின் மாண்பினைச் சுட்டுவது.

“வருக! வருக! குருகிரு பாநிதே!
திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில்
அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ
குருகுல விசயன் கொடித்தேர்ப் பீடமோ
யாதென ஓதுவன்?”

இம்மொழிகள் நம் பண்பாட்டினை உலகிற்கெடுத்துரைப்பதல்லவா? கருணை முனிவ! அருள் வள்ளலே! வருக! தங்களின் பொன்னார் திருவடிகள் தீண்டப்பெற்ற இச்சிறுகுடில் வேதங்களின் முடிவுப் பொருளோ? தென்முகக் கடவுள் வீற்றிருக்கும் ஆலமரத்தின் நல்ல நிழலோ? கண்ணபிரான் கீதை அருளிய அருச்சுனனின் தேர்ப் பீடமோ? அப்புகழுரைகள் தன் குருவிடம் மன்னன் காட்டிய நல்லெண்ணத்தின் வெளிப்பாடேயன்றோ?

மேலும், இந்நாடகக் காப்பியத்தில் தமிழ்நாட்டின் இயற்கைஎழில் கவினுற எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நடராசனின் தனிமொழியில் இடம்பெற்றுள்ள புல், வாய்க்கால், நாங்கூழ்ப்புழு பற்றிய செய்திகள் இயற்கை வருணனைகளோடு குறிப்புப் பொருளைச் சுட்டுவனவாகவும் அமைந்துள்ளன. இதனினும் மேலாக நாஞ்சில்நாடு எனப்பெறும் நன்செய்நாட்டு வளங்கூறும் பகுதி – இயற்கையெழிலைக் கற்பார் உள்ளம் களிகூர எடுத்துக்கூறும் பகுதியாகும். மனோன்மணீயம் கூறும் நன்செய்நாட்டு வளம் பத்துப்பாட்டின் பல நூற்பகுதிகளின் பிழிவெனக் கூறலாம். மருதமும் நெய்தலும் மயங்கிய திணைமயக்கப் பகுதிச் செய்திகள் தமிழ் மாணாக்கர் அனைவரும் படித்தின்புறவேண்டிய பகுதியாகும்.

மேலும் இந்நூல் சுட்டும் நுண்பொருளாக அறிஞர்கள் சுட்டுவதையும் காணலாம். சீவகன் ஜீவாத்மாவாகவும், அவனை ஆட்டுவிக்கும் குடிலன் மாயா சக்தியாகவும், மனோன்மணி சுத்த தத்துவமாகவும், அவள் தோழி வாணி புத்தி தத்துவமாகவும், நடராசன் உபாசனா மூர்த்தியாகவும், புருடோத்தம வேந்தனை அனுக்கிரக சக்தியாகவும், சுந்தர முனிவரைக் கருணாமூர்த்தியாகிய ஞானாசிரியராகவும், மதுரையை மூலத்தானமாகவும் சுட்டுவர். இதனால் இந்நூல் தத்துவக் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டு விளங்கும் நன்னூல் என்பதும் அறியத்தக்கதாகும். மற்றும் கருணாகரரும், நிட்டாபரரும் சிலந்திப் பூச்சியை எடுத்துக்காட்டித் தம் சித்தாந்த, வேதாந்தக் கருத்துக்களை விளக்கும் பகுதி இந்நூலின் மேலாந்தன்மையை அங்கையின் நெல்லியாய்த் தெளிவுபடுத்தும்.

 இனி, இந்நூலில் இடம்பெற்றுள்ள சுவைமிக்க ’சிவகாமி சரிதை’யை அடுத்த பகுதியில் காண்போம்.

(வளரும்)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *