Author: ரா. பார்த்த சாரதி

  • சற்றே நினைத்துப்பாருங்கள் !

    –ரா. பார்த்தசாரதி.

     

    சற்றே  நினைத்துப்பாருங்கள்  !

    why_you_must_think_positive

     

    ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்
    அது சக்தியின் பிறப்பிடமாகும் !

    கடவுளின் அருளை வேண்டுங்கள்
    அது பக்தியின் இருப்பிடமாகும் !

    தியானம் செய்ய விரும்புங்கள்
    அது மனஅமைதியின் உறைவிடமாகும் !

    யோகாசனங்களை செய்ய பழகுங்கள்
    அது உணர்சிகளை நிலைநிறுத்தும் இடமாகும் !

    நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்
    அது அறிவு எனும் ஊற்று தோன்றும் இடமாகும் !

    உடற்பயிற்சியும், நடை பயிற்ச்சியும் தினமும் கடைபிடியுங்கள்
    அது இளமையென்னும் ரகசியத்தை ரசிக்கும் இடமாகும் !

    பிறருக்கு நல்லதை செய்ய நினையுங்கள்
    அது உங்கள் புகழினை பரப்பும் இடமாகும் !

    நாணயமாக இருக்க முயற்சி செய்யுங்கள் ,
    அது உங்கள் நேர்மைக்கு இடமாகும் !

    வாழ்வில் சேமிப்பை கற்றுக்கொள்ளுங்கள்
    அது எதிர்காலத்தில் நம்மை தாங்கும் தூணாகும் !

    சிரித்து வாழக் கற்றுக்கொள்ளுங்கள்
    அது நோயினை நீக்கும் மருந்தாகும் !

    ஆம்,
    வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் !
    சிரிக்க தெரிந்தவனே, சிந்திக்க தெரிந்தவனாவான் !!

     
     
     
     
     
     

    படம் உதவி:
    http://idiva.com/opinion-relationships/why-smart-people-practice-positive-thinking/28852

    Share
  • இருபத்துநான்கு மணி நேரம்

    — ரா.பார்த்தசாரதி.

     

     

    berkeley parkingஇருபத்துநான்கு மணி நேர ஆஸ்பத்திரி, ஏ டிஎம், மெடிக்கல் ஷாப், இவை எல்லாம் பெரிய அதிசயம் இல்லை. ஆனால் அமெரிக்காவில் பார்க்கிங் என்பதே ரொம்ப கஷ்டம்.

    ஒரு முறை பீட்டர் என்கிற 83 வயது முதியவர் தனது காரில் இரண்டு புள்ளி நான்கு மணி நேரம் பார்கிங் செய்வதற்காகச் சுற்றியலைந்து, கடைசியில் தனது காரை பார்க் செய்தார். செக்யூரிட்டியிடம் போய் தான் கஷ்டபட்டதைச் சொன்னார். தப்பாக புரிந்து கொண்ட அவர் தலைமை அதிகாரியிடம் சொல்ல, உடனே அவர் CNN TV க்குப் போன் செய்ததும், அவர்கள் உடனே பீட்டரை பேட்டி காண வந்தனர்.

    டிவி ரிபோர்ட்டர் அவரிடம், எப்படி நீங்க 24 மணி நேரம் பார்க் செய்வதற்காகச் சுற்றினீர்கள்? இது பெரிய சாதனை… இதை கின்னஸ் ரெக்கார்டில் போடபோகிறோம் என்றார். பீட்டருக்கு ஒன்றும் புரியவில்லை. டிவி ரிபோர்ட்டரிடம், சார் இரண்டு புள்ளி நான்கு மணிநேரம் சுற்றிய பின் பார்க்கிங் செய்தேன். நீங்கள் தவறுதலாக இருபத்துநான்கு மணி நேரம் என்று புரிந்து கொண்டது என் தவறில்லை என்றார். ரிப்போர்ட்டரும், தலைமை அதிகாரியும் அசடு வழிந்தார்கள்.

     

     

     

     

     
    பெர்க்லி நகர ஊர்திகள் நிறுத்துமிடம் படம் எடுத்தவர்: தேமொழி

    Share
  • அந்தரங்கம்

     ரா. பார்த்தசாரதி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    photo albumதிருமணம் முடிந்து ஒரு வருடம் நெருங்கிற்று. சுரேஷுக்கு அவசரம்.

    அன்று இரவு சுமதியிடம், “இன்னிக்காவது காட்டுவாயா, இல்லையா?”

    “என்னஅவசரம்? பொறு சுரேஷ் ”

    “ஏமாற்றாதே சுமதி என்றான்” அருகில் சென்று ஒரு முத்தம்.

    “இன்னிக்கு இது போதும், நாளை காட்றேன்”

    மறுநாள் …..

    இரவு சுமதி கதவை மூடினாள். மிக நெருக்கமாக அமர்ந்தாள், திறந்து காட்டினாள் அவர்களின் திருமண புகைப்படங்களை.

    அன்று அவர்களின் திருமணநாள்..

     

     

     

     

     

     

    படம் உதவி: http://imgarcade.com/1/south-indian-wedding-photo-album-design/

    Share
  • சந்தேகம்

    ரா. பார்த்தசாரதி.

    காலை ஆறு மணி. டேப் ரெகார்டரில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. விஜயா சுடச் சுட காப்பியை கொண்டுவந்து நீட்டினாள்.

    “டீப்பா மேலே வச்சிட்டு போ” என்றான் சிவா.

    சிவா எப்பொழுதும் காலையில் எழுந்த உடனே அன்றைய வேலைகளை டைரியில் மார்க் பண்ணி ஒரு முறை பார்த்துக்கொள்வான். ஆபீசில் அவனுக்கு ஆல்ரௌண்டெர் என்று பெயர். பொது சேவையிலும் அவனுக்கு ஈடுபாடு உண்டு. சாலைகளில் மர நடு விழா, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு
    மருந்து, ஓபன் ஹார்ட் சர்ஜெரிக்காக ப்ளட் ஏற்பாடு … மற்றும் பல. வீட்டை விட அவன் வெளியில் சுற்றுவதே அதிகம்.

    விஜயாவிற்கு அவனிடம் பிடித்தது அவனது பொறுமை. எந்த விஷயத்திலும் நியாயத்தை எடுத்துச் சொல்பவன். அப்படி பட்டவன் சிலவற்றை ஏன் மறைக்கின்றான். ஒரு பெண், ஒரு மகன் என்ற நிறைவான குடும்பம். சனி, ஞாயிறில் அவளையும் குழந்தைகளையும் வெளியே கூட்டிச் செல்வது வழக்கம். அவனுக்கு நாற்பது வயதானாலும், நரைக்காத தலைமயிர் முப்பதாகவே மதிப்பிட தோன்றும். அந்த அளவிற்கு உணவு கட்டுப்பாடு யோகா செய்தும் உடம்பை கட்டுடன் வைத்திருந்தான். எந்த பெண்ணும் அவன் பேச்சிற்கு வயப்படலாம். அதனால் சிலர் சில சமயம் பொறமை படுவார்கள். இதை விஜயாவின் காதுபட சொன்னவர்களும் உண்டு.

    விஜயாதான் அவனது துணிகளையும், குழந்தைகள் டிரெஸ்ஸையும் வாஷின் மெஷினில் போட்டு துவைப்பாள். போடும் முன் பேண்ட் பாக்கெட்டில், எதாவது இருகிறதா என்று செக் பண்ணிவிட்டுதான் போடுவாள்.

    அன்று ஞாயிற்று கிழமை. எல்லோர்க்கும் ஒரு சோம்பேறித்தனம் வரும் நாள். சிவா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் செல்லில் இருந்து ஒரு வாய்ஸ் மெயில். பல தடவை சிவாவே செல்லை எடுக்கச் சொல்வான். ஏதாவது அவசர காலாக இருக்கலாம் என நினைத்து கொண்டு எடுத்தாள். “நீங்க இல்லை என்றால் நான் இல்லை. நான்தான் உஷா. இன்று ஈவினிங்க் நான்கு மணிக்கு நீங்க என்னை கண்டிப்பாக மீட் பண்ணனும்…” என்று வாய்ஸ் மெயிலில் ரெகார்ட் ஆகி இருந்தது.

    சிவா எழுந்தவுடன் நிதானமாகத் தனது செல்லில் உள்ள ரிசிவிங் நெம்பர்களை செக் பண்ணும் போது உஷா அனுப்பிய வாய்ஸ் மெய்லைப் பார்த்ததும் விஜயாவிடம், “இன்னைக்கு எனக்கு இரண்டு மூன்று ப்ரோக்ராம் இருக்கு. எப்படியும் ஈவினிங்க் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன்,” என்று சொல்லி அவளது பதிலுக்குக் கூடக் காத்திராமல் கிளம்பினான்.

    ஈவினிங் லேட்டாக வந்தான். ஆறு மணிக்கு வந்தவன் எல்லோரையும் அவசரப் படுத்தி உட்லண்ட் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தான். விஜயா வேண்டா வெறுப்பாக அவனிடம் நடந்து கொண்டாள். சிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அன்று இரவு அவளை செல்லமாக கட்டியணைக்க முற்பட்டான். என்றும் விலக்காதவள், “சீ …கையை கொண்டு வராதிங்க. நீங்களும் சராசரி ஆம்பளை என்பதை நிரூபிக்கிறிங்க,” என்றாள்.

    washingசிவாவும் இன்று அம்மாவிற்கு மூடு சரியில்லை என நினைத்துத் தூங்கலானான். அவனுக்குத் தெரியாது அவள் உஷாவை நினைத்து பழிவாங்குகிறாள் என்று. மறுநாள், விஜயா அவன் துணிகளை வாஷின் மெஷினில் போடும்போது அவன் பேண்ட்டில் இருந்து ஒரு வண்டி டோக்கன், கூடவே ஒரு பேப்பர் ஆகியவறைக் கண்டாள். அவன் ஆபீஸ்ஸுக்குப் போன பின்னர் பிரித்துப் படித்துப் பார்த்தாள். அதில், ஜீவன் ப்ளட் பேங்க்… உஷா, அப்போலோ ஹாஸ்பிட்டல் இருதய மாற்று அறுவை சிக்கிச்சை, ப்ளட் அரெஞ்சமென்ட் அண்ட் பை சிவா என்று எழுதியிருந்தது.

    அன்று மாலை வந்ததும், “என்னங்க, உங்களுக்குப் பிடித்த பூரி மசாலா செய்து வச்சி இருக்கேன். குழந்தைகள் சாப்பிடாச்சு. நீங்க வாங்க,” என்று பக்கத்தில் இருந்து கனிவுடன் அவனை பார்த்துக் கொண்டே பரிமாறினாள். விஜயா நான் சொல்ல மறந்தேன். நேற்று உஷா என்ற முப்பது வயது பெண்ணிற்கு ஓபன் ஹார்ட் சர்ஜெரிக்காக நான் பிளட் ஏற்பாடு செய்தேன். அவளுக்கும் நம்ப மாதிரி இரண்டு குழந்தைகள். பணக்கார வீட்டுப் பெண். என்னைப் பாராட்டி அவள் தந்தைக்கும், கணவருக்கும் அறிமுகம் செய்தாள். அவள் கணவன் உடனே எனக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார். அதை அவரிடம் கொடுத்துவிட்டு, சார்… இதை நான் ஒரு சேவையாகச் செய்கின்றேன். இது எல்லாம் வேண்டாம் என்று சொல்லி கொடுத்து விட்டேன். இதோபார் விஜயா, நாம் செய்ற நல்லது எல்லாம் நம் பிள்ளைகளுக்கு நன்மை கொடுக்கும் என்றான்”.

    சிவாவின் செயலால் அவள் மனதில் அவன் உயர்ந்தான், அவள் பெருமை அடைந்தாள். அன்று இரவு சிவாவின் … நேற்றுதான் முரண்டு பண்ணின, இன்னிகாவது, என்ற கெஞ்சும் பார்வையை புரிந்துகொண்டு… உங்க இஷ்டம் என்றாள். சிவாவும் ஆனந்தமாக அவளை கட்டியணைத்தான்.

     

     

    படம் உதவி: http://www.token.uk.com/images/tips/img_washing_tips-5.png

    Share
  • நல்லவனாய் இரு!

        -ரா. பார்த்தசாரதி 

         அன்பில் அன்னையாய்  இரு
          புன்னகையில் சிறு குழந்தையாய்  இரு
          நடையினில் ஓர்  வீரனாய் இரு
          சொல் செயலில் கொஞ்சம் உத்தமனாய் இரு

          ஆழ்மனதில் அதிகத் தூய்மையாய் இரு
          உன் நலனில் என்றும் அக்கறை காட்டுபவனாய் இரு
          பிறர் நலனில் கடுகு அளவாது  இரக்கம் காட்டுபவனாய் இரு
          மறுபிறப்பிலே கொஞ்சம் நம்பிக்கையாய்  இரு

          இப்பிறவியிலே கர்ம வினைகளைப் போக்குபவனாய் இரு
          ஊரறிய மகானாய்  வாழ்வதைவிட
          இறைவன் மனம்குளிர மனதில் நல்லவனாய் வாழ்வதே போதும்
          உலகில் மாற்றங்கள் நிகழும் அன்புப்  பூக்கள்  பூக்கும்!

     

    Share
  • மாறிய ஜென்மங்கள்

    — ரா.பார்த்தசாரதி.

    கமலாவும், சாரதியும் அந்த முதியோர் இல்லத்திற்கு வந்து இரு வருடங்கள் ஓடிவிட்டது. இருவரும் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். சாரதி ஓய்வு பெற்று, கிராமபுரத்தில் இருந்த ஒரு கிரௌண்டை விற்று, அந்தப் பணத்தை வங்கியில் போட்டு, அதில் வரும் வட்டியில் அந்த முதியோர் இல்லத்திற்கு மாத வாடகை கொடுத்துவிட்டு காலம் தள்ளினர். சிட்கோ நகரில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்தப் பணத்தை இதர செலவிற்கு வைத்து கொண்டார்.

    சாரதிக்கும், கமலாவிற்கும் ஒரு மகள், ஒரு மகன். இருவருக்கும் வெளிநாட்டில் வேலை. தூர இருந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, பக்கத்தில் இருந்தால் செடியும் பகை. இது யாவரும் அறிந்ததே. சில வருடங்களுக்கு முன் தான் செய்ததை நினைத்து பார்த்தார் சாரதி. இரு பிள்ளைகளிடத்திலும் மாறாத அன்பும்… சனி, ஞாயிறு அவர்களை பீச், பார்க் என்றும்; பெண்ணை பாட்டு கிளாஸ் என்றும், பையனை ஓவிய வகுப்பு என்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிக்க வைத்தார். பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்தது, அவளுக்கு ஓர் ஆண் குழந்தை மூன்று வயதில் … பேரன் பெயர் கேஷவ். மகன் கார்த்திக்கிற்கு பெண் குழந்தை அனுஷா, இரண்டு வயதில் .

    இவ்வளவு தூரம் படிக்கவைத்து பிள்ளைகளிடமிருந்து ஒதுங்கி வாழக் காரணம் என்ன?

    வருடத்திற்கு ஒரு முறையாவது போய் அவர்களைப் பார்த்து வந்தனர் கமலாவும், சாரதியும். அவர்களுக்கு மகன் கார்த்திக், மகள் பிரியா இருவருமே இரு கண்கள். அதிலும் கமலா பாசத்திற்கு அடிமையானவள். சாரதியோ என்றும் தாமரை இலை தண்ணீர் மாதிரி. மகனுக்கு வரன் பார்க்கும்போது ஏற்பட்ட சண்டை அவர்களை நிரந்தரமாக விலக்கியே வைத்து விட்டது.

    தனக்கு நல்ல மருமகள் வரவேண்டும் என்று எந்த தாயும் விரும்புவாள். கார்த்திக் பாரத் மேற்றிமோனியில் பதிவு செய்து வரன்களை தானே முடிவு செய்வதாகவும், அப்பா, அம்மா இருவரையும் புகைப்படத்தையும், ஜாதகத்தையும் பார்க்க அனுமதித்தாலும் தானே பதில் அனுப்ப முடிவு கொண்டான் கார்த்திக். ஒரு நாள் மகனுக்குத் தெரியாமல் ஒரு வரனுக்கு புகைப்படமும், ஜாதகமும், அனுப்பச் சொல்லி பதில் அனுப்பினார் சாரதி. இதைக் கம்ப்யூட்டரில் பார்த்து அறிந்து மிகுந்த கோபத்துடன் தந்தை என்றும் பாராமல் அவமரியாதை செய்தான் மகன். உன் அப்பாவை நீ பேசியது தவறு, மன்னிப்பு கேள் என்று கூறிய தாயையும் கேட்க கூடாத கேள்விகளை கேட்டான். கடைசி வரை அவன் தவற்றை உணரவில்லை, மன்னிக்கவும் இல்லை.

    பிறகு பெற்றோர்கள் மகள் பிரியா வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கிவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார்கள். இதற்கிடையில் பிரியாவும் மற்றவர்களும் அறிவுரை கூற நிதானமாக சிந்தித்துத் தன் தவறை உணர்ந்தான் கார்த்திக். அவன் நிச்சியதார்த்தம் அமெரிக்காவிலே அப்பா அம்மா வருகை இல்லாமல் நடந்து, திருமணம் மட்டும் சென்னையில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவன் கைபிடித்த சுமதி மிக அழகாக இருந்தாள், பண்பாடு, கலாச்சாரம் அறிந்து அமெரிக்க வரும்படி அழைத்தாள். திருமணத்திற்கு முன் நடந்தவை ஒன்றும் அவளுக்குத் தெரியாது.

    இரண்டு வருடங்கள் சென்றன. சுமதி கருவுற்றாள். வளைகாப்பு, சீமந்தம் எதற்குமே தன் மாமியார், மாமனார் கூப்பிட்டும் வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். அவள் அப்பா, அம்மா, உத்தியோகத்திற்குச் செல்வதால், ஏதோ ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தான் அவளுடன் இருக்கமுடியும். நாத்தனருக்கும் இதே நிலைமைதான். அவளது குழந்தையை சீசேரியன் செய்து எடுத்தார்கள். அம்மா, அக்கா, நாத்தனார் ஒரு மாதத்திற்கு அருகில் இருந்து உதவினர்.

    பிரியாவை ஏர்போர்ட்டில் காரில் கொண்டு விடும்போது அவள் கார்த்திக்கிடம், “எனக்கு அம்மா, அப்பா பிரசவத்தின் போது ஆறு மாதம் கூட இருந்தா.
    உனக்கு என்றால் ஓடி வந்து செய்வா” என்றாள்.

    “எனக்கு செய்ய மாட்டா. நான் பணம் அனுப்புவதற்குதான் பிள்ளை.”

    “அப்படி எல்லாம் பேசாதே. நீ அனுப்பிய பணத்தை உன் மகள் மேல் டெப்பாசிட் செய்ய சொல்லி என்னிடமே அனுப்பிட்டா. நான்தான் ஒரு மாதம் விட்டு ஒரு முறை அவர்கள் பேங்க்குக்கு பணம் அனுப்புகின்றேன். உன் குழந்தயை கிரீச் அனுப்பி கஷ்டபடுகிறாய் !” என்றவள், தொடர்ந்தாள் …

    “அப்பா இப்போது ஒரு சீனியர் சிடிசன் ஆஷ்ரமத்தில் வேலை செய்துகொண்டே, அங்கேயே தங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அம்மாவும் பக்கத்தில் உள்ள குழந்தை காப்பகத்தில் வேலை செய்கிறாள். நீ செய்த தப்பை என்றைகாவது உணர்ந்தாயா ! இல்லை உனக்கு மன்னிக்கும் குணம்தான் இருக்கா?”

    இவர்களது உரையாடலை பின்னால் அமர்ந்திருந்த சுமதி கேட்டு கொண்டு இருந்தாள்.

    “நம்ம அப்பா, அம்மா மாதிரி யாருக்கும் கிடைக்காது! அப்பா நமக்கு ஸ்கூல் போகும் டிரெஸ்ஸை அயர்ன் பண்ணி, வண்டி வரவில்லை என்றால் நம்மை கொண்டுவிட்டு, என் படிப்பிற்காக தன் தம்பிகளிடம் பணம் கேட்டு, பாட்டு கிளாஸ், உன்னை கிரிக்கெட், டிராயிங் கிளாஸ் எல்லாம் கொண்டுவிட்டு அழைத்து வந்து, பள்ளிகூடத்தில் விண்ணப்பதிற்காக விடியற்காலையில் நின்று இவ்வளவும் பண்ணின அப்பாவை உன்னால் எப்படி ஏத்துக்க முடியவில்லை. அவருக்கு உரிய மரியாதையை நீ கொடுக்கவில்லை. அதனால்தான் இருவருமே உனக்கு செய்வதற்குத் தயங்குகிறார்கள். நீ இங்கு வருவதற்கு காரணமே அப்பாதான். பாங்கில் கடன்வாங்கி உன்னை முதலில் இங்கு அனுப்பி படிக்கவச்சி இன்று நீ சம்பாதித்து கடனை நீயே அடைத்தாலும், பிள்ளையார் சுழி போட்டது அப்பாதானே ! இன்னிக்கி நாம் நன்னா இருக்கோம் என்றால் அதற்கு அப்பா அம்மா தான் காரணம். The integrity of man is to be measured by the conduct and character and not by their profession. இந்த வார்த்தயை அப்பா அடிக்கடிசொல்வா.” என்றாள் பிரியா.

    சுமதி, “பிரியா அக்கா அடுத்த மாதம் என் அத்தை மகன் கல்யாணத்திற்கு இன்வைட் பண்ணிருக்கா நான் இவரையும் அழைச்சுண்டு போகப்போறேன்” என்றாள். திருமணம் தேதி, இடம், அத்தைமகன் பெயர், வேலை போன்றவற்றை விவரித்தாள். அவர்கள் என் கல்யாணத்திற்கு வரமுடியாதவங்க என்னை கூப்பிட்டால் போய்விட்டு வருவேன் என்றாள்.

    மறுநாள் பிரியா சுமதிக்கு போன் பண்ணி தான் பத்திரமாக வந்து சேர்ந்ததை சொன்னாள். “சுமதி உன் அத்தை பெயர் கொண்ட திருமண பத்திரிகை எங்களுக்கும் வந்திருக்கு. மணமகள் என் கணவனின் மாமா பெண்தான் நல்லதா போச்சு. நானும் இவரும் உடனே சென்னை வருவதற்கு ஏற்பாடு செய்கிறோம், உங்களுக்கும் டிக்கெட் புக் செய்யவா? இதை கார்த்திக்கை கேட்டு எனக்கு சொல்லு” என்றாள்.

    பிரியாவிற்கு தனது அம்மா அப்பாவை பார்க்க ஆசை. தன் மூன்று வயது கேஷவ்வை அவர்களிடம் காண்பிக்க ஆசைப் பட்டாள். அவள் அம்மா ஒரு வயது வரைக்கும் அவளது மகனை வளர்த்தாள்.

    இருபது நாட்கள் கடந்தன. சென்னைக்கு பேக்கிங் செய்த சுமதிக்கு கார்த்திக்கும் உதவி செய்தான். தன்னுடையதையும் எடுத்து வைத்தான். கார்த்திக்கும் பிரியாவும் ஏர்போர்ட்டில் சந்தித்து கொண்டார்கள்.

    “பிரியா எனக்கு எப்படியாவது இவருடைய அப்பா அம்மாவை அழைதுவரவெண்டும். என்ன செய்யலாம். நேற்று இரவே அவரிடம் கேட்டேன்.”

    “அது முடியாத காரியம் சுமதி. அவர்கள் வரமாட்டார்கள்” என்றாள் பிரியா.

    குழந்தை இருப்பதால் விமானத்தில் பிரியாவுக்கும், சுமதிக்கும் பக்கத்து பக்கத்து சீட். மறுநாள் விமானம் சென்னையை காலை ஐந்து மணிக்கு அடைந்தது. மூன்று நாள் ஜெட்லாக், நான்கு நாள் ரெஸ்ட் , மூன்று நாட்களுக்கு,நண்பர்கள் உறவினர்கள் விருந்து, ஆக பத்து நாட்கள் முடிந்தது.

    கடைசி நாள் அப்பா, அம்மாவைப் பார்பதற்கு சுமதியும், பிரியாவும் காலையில் கால் டாக்ஸி பிடித்து குடும்பத்துடன் ஆஷ்ராமத்தை அடைந்தார்கள். சாரதிக்கு ஒரு பக்கம் கோபம், மறுபக்கம் எரிச்சல். செகரட்டரிக்கு போன் செய்து அவர்களை பார்க்க விருப்பும் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடு என்றார்.

    கமலாவைப் பார்த்து, “உனக்கு வேண்டுமானால் பிள்ளை, பேரன் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்றால் நீ போய் பார்த்து வா. என்னைக் கூப்பிடாதே” என்றார்.

    கமலாவும், அரை மனதுடன் கேட்டை நெருங்கினாள். அம்மா என்று பிரியாவும் சுமதியும் ஓடிவந்தார்கள்.

    “அப்பா எங்கே? என்றாள் பிரியா.

    “அவர் இங்கு வர மறுத்துவிட்டார்”

    “அப்பாவைப் பார்க்காமல் நானும் சுமதியும் இங்கிருந்து நகர மாட்டோம்!”

    செக்கியூரிட்டியும் மூன்று தடவை சாரதிக்கு போன் செய்து, “சார், உங்க மகளும் மருமகளும் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாங்க தயவு செய்து வந்து எட்டி பார்த்துவிட்டு போங்க சார்” என்றார்.

    grandparentsதலை எழுத்தே என்று சாரதி கேட்டிற்கு வந்தார். உடனே பேரன் கேஷவ், தாத்தா, தாத்தா என்று ஓடி வந்ததும், பின்னாடியே பேத்தி ஓடி வந்து காலை கட்டிக்கொண்டு, குழந்தைகள் இரண்டும் தூக்கு, தூக்கு என்று கையை உயர்த்தியது.

    கமலாவும் பேத்தியை எடுத்துக் கொஞ்சினாள். இருவருமே குழந்தயை கொஞ்சிவதிலேயே இருந்தார்களே தவிர, பெண்ணையும், மருமகளையும் கவனிக்கவே இல்லை.

    அவர் மாப்பிளை, “அப்பா, நானும் உங்க மகனும் இரண்டு மணி நேரம் ஹாலில் வெயிட் பண்றோம், எங்களை நீங்க இருவருமே கண்டுகொள்ளவே இல்லை.” என்றார்.

    சுமதி பிரியாவிடம், “பார்த்தியா பிரியா, என் பொண்ணும் உன் பையனும் அவர்களிடம் எப்படி ஒட்டுகிறார்கள். இதுதான் ‘ப்ளட் இஸ் திக்கர் தான் வாட்டர்’ என்பது,” என்றாள்.

    கார்த்திக், “அப்பா, என்னை நீங்க மன்னிக்கணும். எப்போ இரண்டு பேரும் யு.எஸ் வருவிங்க. நான் டிக்கெட் வாங்கட்டுமா?” என்றான். சுமதியும், “அம்மா உங்க பேத்திக்காகவாவது எங்ககூட வந்து இருங்கள்” என்றாள்.

    “எல்லாம் அவரைக் கேளு” என்றாள் கமலா.

    சாரதி, “தூரத்துப் பச்சை கண்ணனுக்குக் குளிர்ச்சி. எங்களுக்கு இங்கேயே வசதியாய் இருக்கிறது. நாங்க இங்கேயே இருந்துவிடுகிறோம்” என்றார்.

    பிரியா அழுது விட்டாள். “அப்பா, தம்பி பண்ணின தப்பிற்கு என்னை தண்டிகின்றாய். அம்மா நீ இல்லாமல் நகரமாட்டாள்” என்றாள்.

    சாரதி கமலாவின் மீது பார்வையை செலுத்தினார். அவள் முகம் பேரன், பேத்தியின் பக்கமே இருந்தது.

    “நான் வரவில்லை. உன் அம்மா வந்தா அழைச்சிண்டு போ”

    கமலாவிடம் அவர்கள் போகலாமா என்று கேட்க, அவள் கணவரிடம் நாம் வேண்டுமென்றால்பேரன், பேத்தியை விமான நிலையம் வரை வழி அனுப்ப செல்வோமே என்றாள்.

    விடுதியில் பெர்மிஷன் சொல்லிவிட்டு அவர்கள் காரிலேயே கிளம்பினார்கள். வழி நெடுக பேரன், பேத்தி பற்றிதான் பேச்சு. இவ்வளவு ஆசை வச்சிண்டு வர மறுக்க காரணம் என்ன என்று தெரிந்தும் சுமதி காரணத்தைக் கேட்டாள்.

    “பட்டமரம் ஒட்டுவதில்லை, சுட்ட மண் ஒட்டுவதில்லை. இது தெரியாதாம்மா !” என்றாள் கமலா.

    அந்த அளவிற்கு கார்த்திக் அவர்கள் மனதை புண்படுத்தி இருந்தான். இவர்களிடம் பேரனையும், பேத்தியையும் விட்டுவிட்டு பிரியாவும், சுமதியும் குழந்தைகளுக்கு பால் வாங்கச் சென்றார்கள். சாரதியும் கமலாவும் குழந்தைகளின் மழலை பேச்சில் மயங்கினார்கள். பேத்தியின் சிரிப்பிலும், பேரனின் ஆங்கிலத்திலும் தன்னையே மறந்தார்கள். ஆயிரம் துக்கங்கள் குழந்தை பேச்சில் அமிழும் என்பது உண்மைதான்.

    பால் வாங்கிய பின் பிரியாவும், சுமதியும் குழந்தைகளை இவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் போது, “தாதா, கம்பா பாட்டி” என்ற பேரனின் அலறலும், பேத்தியின் அழுகையும், அவர்களை அழுத்தியது. வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டு இருந்தார்கள்.

    மாப்பிளையும், மகனும் இம்மிக்கிரேஷன் முடித்து விடை பெற வந்தார்கள். கார்த்திக் “அப்பா நான் வரட்டுமா, வரடுமாம்மா” என்றான்.

    “டேய் , கார்த்திக் எனக்கும் உங்க அம்மாவிற்கும் விசாவும், டிக்கெட்டும் ஏற்பாடு செய்” என்றார் சாரதி.

    கார்த்திக் அப்பா அம்மாவையும் கட்டிக்கொண்டு அழுதான்.

    “நீங்க இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ரொம்ப தேங்க்ஸ் அப்பா.”

    வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம் எது?

    தாய் தந்தையிடம் பார்த்த பாசமா? மகனிடமும், மகளிடமும் உணர்ந்த அன்பா? அண்ணன், தம்பி, தங்கைகள் இடையே உள்ள பந்த பாசமா?

    இது எந்த ரகம் என்று புரிந்துகொள்ள முடியாமல் நம்மை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கும் நமது பேரன்,பேத்திகளின் கள்ளமற்ற சிரிப்பா? பேரக்குழந்தைகளுக்காக மற்றவர்கள் செய்யும் தவறினை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனித நேயமா? பாசத்திற்காக நாம் எல்லோரையும் அரவணைத்துத்துதான் செல்லவேண்டுமா?

    உணர்தவர்கள் பதில் கூறட்டும்.

    Picture Source: http://daycare.sulekha.com/care-corner_all-about-the-grandchild-grandparent-bonding_blog_6158

    Share
  • காதல் என்றால். . . ?!

    -ரா.பார்த்தசாரதி

    கண்ணும் கண்ணும்  கலப்பதா
    இருமனங்கள்  ஒன்றாவதா!

    இரு இதயங்கள் ஒன்றோடுஒன்று இணைவதா
    காதலித்த பெண்ணை நெஞ்சுக்குள் நினைப்பதா!

    அன்பையும் நெஞ்சத்தையும் அள்ளித் தருவதா
    நீரோட்டம் போல் இருவரிடையே  ஓடி வருவதா! 

    இரு உள்ளங்கள் ஒன்றோடுஒன்று  பந்தாடுவதா
    இருவர் நெஞ்சில் அழகாய்ப் பூப்பதா, சுமையாய்த் தாக்குவதா!

    கண்கள் பேசாமல்   ஒன்றோடுஒன்று  பேசுவதா
    வார்த்தைகள்  மௌனமாய் நிலைத்து  நிற்பதா!

    நிலவையும் மலரையும்  பாடச்  சொன்னேன்
    அதில் என் காதலியை நடமாடச்  செய்தேன் !

    காதலர்களின்  நினைவிற்கும், ஊக்கத்திற்கும்  ஒரு தினம்
    அதுவே  உலகெங்கும் கொண்டாடும் காதலர் தினம் !

     

    Share
  • எண்ணமும், சிந்தனையும்!

    -ரா.பார்த்தசாரதி 

    எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும்
    வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்!
    நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை
    எழும்பியடங்கும்  அலைகளே உணர்த்தும்!

    மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும்
    இலைகளே அதன் பசுமையே  நமக்கு உணர்த்தும்!
    நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும்
    வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்!

    சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை
    நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை
    நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத்
    தம்மை நிஜமாக்கி கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!

    நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும்
    துணிந்தபின்  மனமும்  எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்!
    துயரமடைந்த  எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு
    அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!  

    நமக்குள் தோன்றும்  எண்ணங்கள் ஆயிரம்  இருந்தாலும்
    நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும்
    தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம்  மிக்கவை நம் எண்ணங்கள்!
    நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் !

    Share
  • புத்தாண்டே வருக 2015!

    -ரா. பார்த்தசாரதி

    puththandu

     

     

     

     

     

     

     

     

     

    கதிரவன் குணதிசையில் பன்முகமாய்  உதித்தான்
    புலரும் புத்தாண்டாய்ப் புதிதாய் உருவமெடுத்தான்!

    நதியால் இணைந்த  மாநில மக்கள்
    அவலம் அழிந்து போகாதோ  புத்தாண்டே!

    எவர் ஆட்சி செய்யவரினும் நல்ல எண்ணத்துடனே
    மக்களுக்கு நல்லதைச் செய்ய வேண்டும் புத்தாண்டே!

    சுயநலங்கள்  சூழ்ச்சிகள்  சுவடு தெரியாமல்
    அவனியில்  அழிந்து போகாதோ  புத்தாண்டே!

    தீவிரவாதம் ஒடுங்கிப்போகாதோ புத்தாண்டே
    வேற்றுமையில் ஒற்றுமை ஓங்காதோ புத்தாண்டே !

    நாட்டுக்கு நாடு மாநிலத்திற்கு மாநிலம்  சமாதானம்  மட்டும்
    தானமாய்க் கிடைக்காதோ புத்தாண்டே !

    ஆட்சியும்  அதிகாரமும் ஏழையின்
    ஏக்கத்தைத்  தீர்க்காதோ  புத்தாண்டே !

    பூமியெங்கும் அமைதி மட்டும்
    ஆட்சி   புரியாதோ  புத்தாண்டே!

     

    Share
  • மனிதனின் தேடல்!

    -ரா.பார்த்தசாரதி 

    தேடல் என்பது சுவாசம் போன்றது,
    ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நிமிடமும்
    ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறான்…
    கருத்தரித்த பெண்ணிற்குப் பிள்ளையின்
    முகம் தேடல்
    தந்தைக்கோ பணம் தேடல்
    பிறக்கும் வரை உலகம் தேடல்
    பிறந்த பிறகு உணவு தேடல்
    வளரும் வரைப் படிப்பு தேடல்
    வளர்ந்த பின்பு பட்ட பாடம்தான் தேடல்
    காதல் இல்லாதவனுக்குக் காதலி தேடல்
    காதல் வந்தவனுக்குக் கல்யாணம்  தேடல்
    பிறக்கும் போது அலுத்துக் கொண்டே  பிறந்த நாம்
    இறந்த பிறகு மற்றவர்க்கு அந்த அழுகையைக் கொடுத்துச் செல்கிறோம்…

    ஒரு மனிதன்
    இருக்கும் வரை அன்பைத் தேடுகிறான்…
    இறக்கும் வரை அரவணைப்பைத் தேடுகிறான்…
    இவ்விரண்டும் இல்லாதவன் அனாதையாகிறான்!

     

    Share
  • குழந்தைகள் தினம்!

    -ரா. பார்த்தசாரதி

    குழந்தைகளை  வரமாகவும், குல விளக்காகவும் கொண்டாடும் நம் நாடு
    பெண் சிசுவை இரக்கமின்றிக் கொல்வதும் நம் நாடு
    பெண் குழந்தைகளைச் சுமையாக நினைப்பதும் நம் நாடு  Childrens
    காலப்போக்கில் இதனை மாற்றியதும்  நம் நாடு!

    ஆயிரம் கோடிச் சொத்துக்கள் இருந்தும் ஓர் வாரிசு இல்லையெனில்
    அச்சொத்துக்கள் யாரோ அனுபவிப்பர்
    இதனைக்கண்டு அவர்கள் சுற்றத்தார்களும் பரிதவிப்பர்
    இந்நிலைமை கண்டும் தத்து எடுக்கச் சிலர் தயங்குவர்!

    தத்து எடுப்பதில் என்றும்  தவறில்லை
    நன் முறையில் வளர்த்தால் கேடு இல்லை
    அனாதை  என்ற  சொல்லை  அகற்றிடுங்கள்
    அதுவே  உன் வாழ்க்கைக்கும்  வழிகாட்டி என உணருங்கள்! 

    குழந்தையும் தெய்வமும்  ஒன்று எனக்  கொண்டாடுகிறோம்
    பிரதமர் நேருவின்  பிறந்த நாளாகக் கொண்டாடுகிறோம் இந்நாட்டினிலே
    குழந்தைகளிடத்தில்   அவர் கொண்ட  அன்பினை  மறக்க முடியுமா?
    நம் நாட்டில் உள்ள  எல்லாக் குழந்தைகளும் அவரைப் போற்றிடுமே! 

    குழல் இனிது  யாழ் இனிது  என்ப தம் மக்கள்
    மழலைச் சொல் கேளாதவர்  என்பது வள்ளுவன் வாக்கு
    குழந்தைச் செல்வம்  வாழ்க்கையின் இன்றியமையாத செல்வமே
    குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க இத்தினத்தில் சபதம் எடுப்போமே! 

     

    Share
  • தித்திக்கும் தீபாவளி!

    -ரா.பார்த்தசாரதி

    diwali

     

     

     

     

     

     

     

     

     

    மக்களுக்கு  மகிழ்ச்சியும் ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை
    எல்லோரும்  ஒன்றுகூடி மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகை
    வாழ்த்துகளை நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளிப் பண்டிகை
    சந்தோஷமும் உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!

    விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்துக் குளித்து
    மகிழ்வுடனே புத்தாடை உடுத்தி இனிப்பினைப் பகிர்ந்து
    பெரியவர்களிடம் வாழ்த்தும் நல்லாசியும் பெற்று
    ஊர் எங்கும்  ஒன்றாய்க் கலந்து கொண்டாடும்  தீபாவளி!

    நாட்டில் உள்ளவர்கள் பலவிதமாய்க் கொண்டாடும் தீபாவளி
    வடக்கே விளக்கு பூஜை எனக் கொண்டாடும் தீபாவளி
    இல்லத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி
    புன்சிரிப்புடன் மன நிறைவாய் வாழ்த்துப் பெறும் தீபாவளி !

    வெடியும் சரமும் மத்தாப்பும் கையில் ஏந்துவோமே
    வெடியின் சப்தமும் சித்திரப் பூப்போல சிதறும் மத்தாப்பினைக் காண்போமே!
    மாலையில் கம்பி மத்தாப்பையும் நம் கையில் பிடிப்போமே
    சங்கு சக்கரம் புஸ்வாணப்  பூக்களின் சிதறலைக் கண்டு களிப்போமே!

    அசுரன்  நினைவாக நாம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுகின்றோம்
    மனித உருவில் உள்ள அசுரர்களை அழிக்க நாம் திட்டமிடுவோம்!
    பார்வையற்றவர்கள் விடுதிக்கும் முதியோர் இல்லத்திற்கும் செல்வோமே
    அவர்களுடன் இனிப்பினைப் பகிர்ந்து தித்திக்கும் தீபாவளி கொண்டாடுவோமே!!

     

    Share
  • உலகத் தபால் தினம்!

    -ரா.பார்த்தசாரதி

    சிவப்பும் கருப்பும் நிறமுடைய பெட்டி
    உங்கள் கடிதங்களைத் தாங்கும் பெட்டி                                           Indian_Post_Box
    வேலையில்லாப் பட்டதாரிகள் எதிர்பார்க்கும் நண்பனாய் இருந்தேன்
    கல்லூரி மாணவனுக்கும் நான் ஒரு பாலமாய் இருந்தேன்

    காதலர்களுக்கு என்றும் ஒரு தூதுவனாய் இருந்தேன்
    நல்ல, கெட்ட  செய்திகளையும்   அறிவிப்பவனாய் இருந்தேன்
    சிறு சேமிப்புக்கு என்றும் துணையாய்  இருந்தேன்
    மழையிலும் வெயிலிலும் உங்கள் கடிதங்களைச் சுமந்து சென்றேன்

    காகிதம் மூலம் உங்கள்   கருத்துக்களை எடுத்துச் செல்பவன்
    பண்டிகை வந்தாலோ உங்கள் வாழ்த்துக்களை அனுப்பும் சேவகன்
    தந்திகளை ஒதுக்கிய நீங்கள் என்னை ஒதுக்கி விடாதீர்கள்!
    கணினி  வந்ததால் எங்களை நசுக்கிவிடாதீர்கள்!

    கணினி மூலம் கடிதங்களும் கருத்துக்களும்  பரிமாற்றமே
    கிராமத்திலும் நகரத்திலும் கணினியால் எங்களுக்கும் ஏற்றமே
    மக்கள்  எங்களை நண்பனாய், சேவகனாய்க் கருதுவதே நன்று
    எங்களை  உற்ற  சேவகனாய் நினையுங்கள் உலகத் தபால் தினத்தன்று!

     

    Share
  • காந்தி கல்லாகிவிட்டார்!

    -ரா. பார்த்தசாரதி

    உண்மை  எங்கே  விலை  போயிற்று எனத்  தேடுவேன்   gandi
    நேர்மை எங்கே என்று எல்லோரிடத்திலும் கேட்பேன்
    எளிமை எங்கே எனத் தேடி அலைந்து கொண்டிருப்பேன்
    தூய்மை  எங்கே என மனம் குமுறித் துடித்துப்போவேன்

    சத்தியத்திற்கே ஒரு சத்தியசோதனையா என எண்ணிடுவேன்
    ’அகிம்சை’  என்ற  வார்த்தை காணாமல் போயிற்றே  என்பேன்
    மனித நேயத்தை இந்நாட்டில் எங்கே என்று கேட்பேன்
    நான் சொன்னதெல்லாம் எங்கே போயிற்று என் நினைப்பேன்

    அன்று வெள்ளையரை வெளியேற்ற அமைதிப் போரைத் துவக்கினேன்
    இன்று மக்கள் தண்ணீருக்காகப் போராட்டத்தை நடத்துகிறார்களே
    எங்கும் ஊழலும், லஞ்சமும் தலை விரித்து ஆடுகிறதே
    நிலைகெட்ட  அரசாங்கத்தை நினைத்தால் தலை சுற்றுகிறதே

    நான் பாடுபட்டதெல்லாம் நாட்டின் விடுதலைக்காகவே
    இன்றைய தலைவர்கள் பாடுபடுவது தன் சொந்தங்களுக்காகவே
    என்னைத் தந்தையாக  நினைத்த  இந்திய மக்களே
    என் சொற்களை மந்திரமாக நினைப்பது எக்காலத்திலே?

    என் மதிப்பு, என் தலை ரூபாய் நோட்டின் முகப்பிலே
    என் கொள்கைகள் எல்லாம் வீசப்படுகின்றதே தெருவிலே
    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றேனே
    இன்று காணமுடியாமல் கடற்கரையில் கல்லாய் நிற்கின்றேனே!

     

    Share
  • நவராத்திரி

    ரா.பார்த்தசாரதி

    நங்கையருக்காகக்   கொண்டாடும்  ஒன்பதுநாள்   ராத்திரி
    பெண்களை  மதித்துக் கொண்டாடும் ராத்திரி,
    சிறு பெண்களையும், மற்ற பெண்களையும் போற்றும் ராத்திரி,
    பொம்மைகளை வைத்துக் கொண்டாடும் ராத்திரி!

    முதல் நாள் நவராத்திரி பூசை சிறுமியர்களுக்கே உரியதாம்,
    சுவாசினி எனும் மூத்த சுமங்கலிக்கும் உரியதாம்
    கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றின் தலைவிகளாம்
    கலைமகள், அலைமகள், மலைமகள் எனும் தெய்வங்களாம்!

    பெண்ணே  உலகில் சக்தியின்  வடிவமாகும்
    நாட்டையும், வீட்டையும், காக்கும் தெய்வமாகும்
    சக்திக்கு  இடப்பக்கம் அளித்தவர் அர்த்தனாரீஸ்வரராகும்
    பெண் தெய்வங்களைப் போற்றிக் கொண்டாடுவதே  நவராத்திரியாகும்!

    நவராத்திரி என்றாலே எல்லாப் பெண்டிருக்கும் ஓர் சுப ராத்திரி
    அலங்காரங்களும், பாட்டும், கேளிக்கையும் நிறைந்த ராத்திரி
    தொன்றுதொட்டுப் பெண்களுக்காகவே நடத்தப்படும் விழா
    பெண்மைக்கு மதிப்பும், நல்வாழ்வும் அளிக்கட்டுமே இந்நவராத்திரி விழா!

    Share