Author: க. பாலசுப்பிரமணியன்

  • குற்றாலச் சாரலிலே ……

    க. பாலசுப்பிரமணியன் 

     

    பொதிகையிருந்து பூத்துவரும் புதுப்புனலே

    பொழிந்துவிடும் பொலிவுடனே குற்றாலத்தில் ..

    பொங்குதமிழில்  புன்சிரிக்கும் கவிதையென

    புதுமணமே முகர்ந்துவிடும் மலைச்சாரல் !

     

    எதுகையின்றி மோனையின்றி தாளமின்றி

    இசைபாடும் இலையசைத்து மரங்கள் !

    கலையரசி யாழிசையைக் கவர்ந்துவந்து

    காதருகே கவிபாடும் கருவண்டுகளே !

     

    மங்குஸ்தான் பழம்பறித்து மகிழ்ந்திருக்கும்

    மந்தியெல்லாம்  மலையோர மரங்களிலே !

    மலைச்சாரல் நீர்நனைந்து மலர்களெல்லாம்

    மண்வீழ்ந்து மாலைதன்னை கோர்க்கும் !

     

    வானமுதம் வழிந்ததுபோல் வளைந்துவரும்

    வாசமுடை மூலிகையுடன் தேனருவி !

    வான்தெறிக்கும் நீர்திவலையில்  வானவில்லாட

    வள்ளலென பெருகிவரும் ஐந்தருவி !

     

    கைநனைத்துக் கால்நனைத்துத் தலைநனைத்து

    உடல்நனைக்க உளம்நனைத்திட ஓடும் !

    கடுகெண்ணை நல்லெண்ணெய் தலையூரக்

    களைப்பெல்லாம் நீரினிலே கரைந்தோடும் !

     

    தூதுவளை  வல்லாரை  நெல்லிப்பொடியோடு

    தூக்கம்வர நல்லதொரு ஜாதிக்காயும்

    தூயமனம்காண  மோனமுடன் யோகத்தையும்

    முதுகலையாய் ஓதிவிடும் யோகியர்கள் !

     

    மேகங்களைத் தலைசுமந்த மோகத்திலே

    புவியரசி காதலிலே மலையரசன்  !

    வேழங்கள் அசைந்தாடி நடப்பதுபோல்

    வேகமின்றி அரவணைக்கும் தென்றல் !

     

    கண்திறந்து பார்த்தோருக்கு காட்சியங்கே

    கயிலைநாதன் கயல்விழியின் திருக்கோலம் !

    கண்மூடி மலையருவி முன்னிருந்தால்

    காலம்மறந்து ஞாலம்மறக்கும் நல்யோகம் !

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் – 33

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றல் சிறப்புற  எவ்வளவு தூக்கம் தேவை ?

    education

    ” வகுப்பில் தூங்கி வழியாதே. போய் முகத்தைக் கழுவிக்கொண்டு வா…” என்று ஒரு முறையாவது மாணவர்களைப் பார்த்துக் கூறாத ஆசிரியர்களே இருக்க முடியாது. விருப்பமில்லாத பாடங்கள், சோர்வுற்ற மனநிலை, ஆசிரியர்களிடம் ஈடுபாடற்ற தன்மை, உடல் சோர்வு, உணவு வகைகள் மற்றும் உண்ணும்  முறைகளால்   தூக்க நிலை  ஊக்கப்படுத்தப்பட்டு கற்றலில் மற்றும்  கவனத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது .

    நல்ல தூக்கமின்மை கற்றலை வெகுவாக பாதிக்கும் என்று  ஆராய்ச்சிகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. சராசரியாக மூளை தொடர்ந்து 16  மணி நேரம் வேலைபார்த்தபின் களைப்புற்று தூக்கத்தைத் தழுவுகின்றது. சிலருக்கு தூக்கம் 6 அல்லது 7 மணி நேரம்  போதுமானதாக உள்ளது. இந்த நேரம் ஒரு தனி மனிதருடைய உடல்வாகு மற்றும்  பல பரிமாணங்களால் நிச்சயிக்கப் படுகின்றது. எனவே அனைவரையும்  ஒரே மாதிரியான நேரப் பரிமாணங்களில் கட்டுபடுத்துவதோ அல்லது வகைப் படுத்துதலோ  தவறாகின்றது.

    “ஒரு மனிதனுக்குள்ளே தூக்கத்திற்கும் விழிப்பிற்க்கும் இடையே ஒரு மிகப்பெரிய போராட்டமே நடக்கிறது” என்று மூளை அறிவியல் நிபுணர் ஜான் மெடீனா என்பவர் கூறுகின்றார். ஒரு தனி மனிதனுக்கு தூக்கம் ஒரு நாள் நிறைவு பெறவில்லையென்றால் அதை  உடலும் மூளையும் “தூக்கக் கடன் “(sleep Debt) கணக்கில்  சேர்த்து விடுகின்றன. இந்தக் கடன் சுமை கற்றலை கிட்டத்தட்ட 30 விழுக்காடுகள் குறைக்கின்றன என்றும், இந்தச் சுமையின் அதிகரிப்பும் கற்றலும் எதிர் விகிதத்தில் இருப்பதாகவும்  காணப்பட்டுள்ளது. ஆகவே தூக்கத்தை விலக்கி அதிக நேரம் கண்விழித்துப் படிப்பது மூளையின் ஆரோக்கியத்திற்க்குக் கெடுதலாக இருப்பதோடு மட்டுமின்றி நல்ல நினைவின் அடித்தளங்களை ஆட்டிவிடுகின்றன.

    “அன்றைய பாடங்களை அன்றே படி” என்று சொல்லப்படுவதும் “பாடங்களை  திரும்பத் திரும்பப் படி” என்று பல காலங்களாகக் கொடுக்கப்பட்ட அறிவுரை மூளையின் இயற்கையான குணங்களுக்கு ஏற்றதாக அமைந்ததாம்.

    தூக்கம் பாதிக்கப்படும் நிலையில் கற்றலில் கீழ்கண்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன:

    1. கவனமின்மை
    2. நினைவுச் சிதறல்
    3. ஆர்வக் குறைவு
    4. மன அழுத்தம்
    5. அமைதியின்மை
    6. வெறுப்பு
    7. தேவையற்ற கோபம்
    8. கருத்து ஒருங்கிணைப்பின்மை
    9. செயலில் தாமதம்
    10. தளரும் புத்திகூர்மை

    ஆகவே சரியான நிறைவான தூக்கம் எவ்வாறு கற்றலுக்குத் தேவைப் படுகின்றது என்பதை நாம் உணர வேண்டும். மேலும் நம்முடைய தூக்கத்திற்கான அட்டவணைகள் எப்படியிருந்தாலும் நமது உடல் தனக்கான அட்டவணையை தானே தயாரித்துக் கொள்கிறது. இதை உயிரி கடிகாரம் (Bio -clock ) என்று  அழைப்பார்கள். இந்த கடிகாரத்தை நாம் மாற்றி அமைக்க நினைக்கும் பொழுதில் அதனால் உடல் ஹார்மோன்களின் செயல்கள் பாதிக்கப்பட்டு பலவிதமாக உடல்நிலை மற்றும் அதன் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது.

    தூக்க நேரங்களை மாற்றி அமைத்து கற்றலைத் தொடரும் நிலையில் மூளையில் அதற்க்கான வலைத்தளங்கள் வலுவாக அமைவதில்லை. மாற்றாக நல்ல தூக்கத்தின் போது மூளை பல வினாக்களுக்கு அமைதியாக பதிலைத் தேடி வைத்துக்கொள்வதாகவும் கருதப்படுகின்றது.

    ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டிமிட்ரி மெண்டெலீவ் என்ற ஒரு வேதியல் ஆராய்ச்சியாளர் தன்னுடைய ஆராய்ச்சியின் வினாக்களுக்கு தூக்கத்தில் பதில் கண்டதாகக் கூறப்படுகின்றது. இதே போல கெகுலே என்ற விஞ்ஞானி தன் கண்டுபிடிப்பிற்கு தூக்கத்தில் கண்ட கனவே காரணம் என்று சொன்னதாக பரவலாகக் கூறப்படுகின்றது.

    சிக்கல் தீர்த்தல் (Problem Solving ), நெருக்கடி மேலாண்மை (Crisis Management) போன்ற பல சீரிய அறிவுத்திறன்களுக்கு  நல்ல  தூக்கத்தின் தேவையை வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

    தற்காலத்தில் மாணவர்கள் தூங்கும் நேரத்திற்கு முன் அதிக நேரம் கண்விழித்து அலைபேசிகளில் பேசிக்கொண்டிருத்தலும், உரை செய்திகளை (Text message)  அனுப்புதலும் மூளையின் ஓய்வுக்கும் அமைதியான உறக்கத்திற்கும் ஏதுவானதாக இல்லை என்று உணரப்படுகிறது.  இதனால் தூங்கும் நேரத்தில் மூளையில் நினைவு அழுத்தங்கள் ஏற்பட்டு கற்றலின் ஆழத்தையும் திறனையும் பாதிக்க வாய்ப்புள்ளதாக தற்போதைய ஆராய்ச்சிகள் கூறுவது மட்டுமின்றி மனநல வல்லுனர்களும்  கருதுகின்றனர்.

    (தொடரும்)

    Share
  • “நான்” என்னும் ஒரு நாடகம்  

    க. பாலசுப்பிரமணியன்

     

    கரையோரம் கால்நனைத்துக் கடல்மீளும் அலைபோல

    காற்றிழுக்கக் கரைசேரும் என்னுயிரே!

    கார்மேகம் இடையிடையே கண்சிமிட்டும் மின்னலைப்போல்

    களிப்படைந்த புலன்காட்டும் புன்சிரிப்பே!

     

    வானுயரப் பறக்கின்ற நீர்த்திவலை நிலம்காட்டும்

    வண்ணம்போல் வானவில் கனவுகளே !

    வாடாத மலரென்றும் வாசம்வரும் நித்தமென்றும்

    வாழ்க்கையை வாழ்த்துகின்ற மனமே !

     

    போகுமிடம் தெரியாத புதிரென்று புரிந்தபின்னும்

    போகத்திலே விடைதேடும் வாழ்வே !

    போதாத மனம்கொண்டு புகலிடம் தேடிச்சென்று

    போராடி புலியாட்டம் போடும் ஆசைகளே !

     

    முதல் இதுவென்றும் முடிவு அதுவென்றும்

    முன்னறியாப் பிறவியன்றோ நான் !

    முடியாத விளையாட்டிலென்னை முதலாக வைத்து

    முன்வினைக்குப் பழிதீர்க்கும் படலமிதோ?

     

    புலியாக, நரியாக, புள்ளாகப் புழுவாக

    புவியரசாய் நான் போடாத வேடமில்லை !

    புரியாத கதையிதுவும் முடிகின்ற நேரத்தில்

    புரியாமல் எனைக்கண்டே நான் நகைக்கின்றேன் !

    Share
  • அபிராமியே.. எழில்ராணியே !!!

    க. பாலசுப்பிரமணியன்

     

    ஒரு நாளும்  இரு விழியும்  போதுமோ உனைக்காண,

    ஒரு குரலும் ஒரு மொழியும் போதுமோ உனைப்பாட,

    ஓருயிரும் ஒருலகும்  போதுமோ உன்னருள்நாட,

    உலகாளும் அபிராமியே ! உளமாளும் எழில்ராணியே !

     

    நிறைஞானி நிலைமறந்து நிறைநிலவாய் நினைந்திடவே

    காரிருளில் ஒளிர்நிலவாய் வலம்வந்த ஓங்காரியே !

    பிறைதன்னை தலைசூடி பித்தான பரமேசன்

    பிணிதீர்க்க சரிபாதி உடல்கொண்ட சாம்பவியே !

     

    குலம்காத்து நலம்காத்து மனம்காத்து உயிர்காத்து

    விடையீசன் துணைகாத்து வினைதீர்க்கும் விசாலாட்சியே !

    மலையரசன் மகளாகி கலையரசன் துணையாகி

    அருளரசின் தாயான மாமேரு மலைவாசியே !

     

    விடியாத பிறவிக்கும் விதிமுடிக்கும் கூற்றுக்கும்

    இடையான வாழ்விற்கு வழிகாட்டும் இசைஞானியே!

    சிலையாக நீயிருந்தும் கலைக்கரும்பாக இனிக்கின்றாய் !

    விளையாட என்னைவைத்து விதியென்று சொல்கின்றாய்!

     

    வித்தாக வினையாக சொத்தாக சுகமாக

    விளையாத கனியாக வாசலில் நிற்கின்றாய்!

    அறியாத அறிவுக்கும் புரியாத புதிருக்கும்

    நினையாத நினைவுக்கும் அப்பாலே அழைக்கின்றாய்!

     

    பூவாகக் கனியாகப்  பொழிலாக எழிலாக

    பூங்காற்றின் இதமாக அறிகின்றேன் பூங்குயிலே !

    பொலிவாக நடைபயின்று பூபாரம் இறக்கிடவே

    புதுநிலவாக ஒளிதந்து புலன்காப்பாய் அபிராமியே!

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 32

    க. பாலசுப்பிரமணியன்

    தூக்கமும் கற்றலும்

    education-1-2-1

    “தூங்கி வழியாதே. புத்தகத்தைப் படி ” என்று புத்தகத்தோடு போராடும் மகனுக்கு அறிவுரை கூறும் தந்தை.

    “புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருது” என்று பரீட்சைக்கு முன்னால் தன் நண்பனுக்கு வழிமொழியும் நண்பன்.

    “தூங்குவதற்கு முன்னாலே நான் கொஞ்சம் புத்தகம் படிப்பேன் . தூக்கம் தானாக வந்துவிடும்” என்று புன்னகையுடன் தன் தூக்கக் கலையை விளக்கும் என் ஆபீஸ் நண்பர்..

    தூக்கத்தின் பேராண்மையைப் பற்றி போற்றாத மனிதரே கிடையாது எனச் சொல்லலாம். தூக்கத்திற்க்கும் புத்தகங்களுக்கும் கற்றலுக்கும் உள்ள  உறவுதான் என்ன?

    “தூக்கத்தின் போது மூளை பழுது பார்க்கப்படுகிறது. அது மீண்டும் வேலை பார்ப்பதற்கான சக்தியையும் புத்துணர்ச்சியையும் பெறுகிறது” என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜான் மெடீனா என்பவர். ஆகவே தூக்கம் என்பது இயற்கை தந்த வரப்பிரசாதம். ஆனால் உண்மையிலே நாம் தூங்கும் பொழுது நமது மூளை தூங்குவதில்லை. அது தன்னுடைய வேலையை அமைதியாக ஒரு தங்கு தடையின்றி செய்து கொண்டிருக்கிறது.

    அந்த நேரத்தில் தன் பதிவிலுள்ள எண்ணங்கள், கருத்துக்கள், நினைவுகள் அனைத்தையும் அது மறுபரிசீலனை செய்து அடுத்த செயலுக்காகத் தயாராக்கிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, நாம் கண்மூடிய சில நேரம் வரை உள்ளே கண்களில் அசைவுகள் எற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதை REM Sleep ( விரைவான கண் இயக்கத் தூக்கம் ) என்று சொல்லுவார்கள்.

    மூளை மிகச் சிறப்பாக வேலை பார்க்க ஒரு மனிதனுக்கு குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் தேவை என்று மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நல்ல தூக்கம் அடுத்த நாள் ஒரு மனிதனுடைய அறிதல் புரிதலுக்கும் கற்றலுக்கும் மிகத் தேவையாகவும்  இருக்கின்றது .  ஆகவே அதிக நேரம் கண்விழித்துப் படிப்பதால் மட்டும் கற்றல் சிறப்பாக நடக்கிறது என்பது ஒரு தவறான கருத்தாகத் தெரிகின்றது. கற்றலின் போது கவனச் சிதறல் இல்லாமை, ஈடுபாடு, மற்றும் ஆர்வம் ஆகியவையே கற்றலைச் சிறப்புறச்  செய்கின்றது  .

    நான் சிறுவனாக இருந்தபொழுது என்னை தினம் காலை நான்கு மணிக்கு படிப்பதற்காக எழுப்பி விடுவர். “காலை எழுந்தவுடன் படிப்பு ” என்ற பாரதியின் கூற்றுக்கேற்ப அந்த நேரம் முழுவதும் படிப்பதற்க்காகச் செலவிடப்படும் “அந்த நேரத்தில் படித்தால் மனதில் நன்றாகப் படியும் ” என்ற பெரியோர்கள் அறிவுரை தூக்கத்திற்குப் பின் தயாராக இருக்கும் மூளையின் திறனுக்கு ஊட்டமாக அமைந்தது. ஆனால் தற்காலத்தில் பலரும் கண்விழுத்து இரவில் படித்து தாமதமாகத் தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் காலையில் எழுந்து படிப்பவர்களை “குயிலென்றும் ” இரவில் கண்விழித்துப் படிப்பவர்களை “ஆந்தையென்றும்” அடைமொழி வைத்து அழைக்கின்றனர். இதில் எது சரியானது என்பது பற்றிய தொடர் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் “குயில்”களுக்குத்தான் இதுவரை  அதிக மதிப்பெண்கள்  கொடுக்கின்றனர்.

    பல நேரங்களில் சிறிது நேரம் படித்தாலே தூக்கம் வருகின்றது என்று அங்கலாய்ப்பவர்கள் தாங்கள் படிக்கும் பொழுது புத்தகத்தை சரியான தூரத்திலோ அல்லது முறையினில் வைக்காமலிருந்தாலோ, அல்லது அதிக நேரம் படித்திருந்தாலோ, அல்லது வேறு மன உளைச்சல்களுடன் படித்ததாலோ கண்கள் சோர்வடைந்து தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்பட வாய்ப்புண்டு, ஆகவே புத்தகங்களை படிக்கும் பொழுது அவைகளை எங்கே எப்படி வைக்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும், எந்த விதமானஎழுத்து மற்றும் எழுத்துருக்கள் கண்களுக்கும்  கற்றலுக்கும்  சாதகமாக அமைகின்றன என்பது பற்றியெல்லாம் அறிந்து கொள்ளுதல் அவசியம். இந்த முறைகளையும் பழக்கங்களையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் அவசியம்.

    சில சமயங்களில் பகல் நேரங்களில் நாம் உணவு உண்ட பின்னோ அல்லது பகலில் நீண்ட நேரம் ஆழமான சிந்தனையினாலோ அல்லது உடலுழைப்பினாலோ மூளை சோர்ந்து அறிதல், புரிதல், மற்றும் கற்றலுக்கு மறுப்புத் தெரிவிக்கின்றது. கொட்டாவி விடுதல், கண்களில் ஒரு கிறக்கம், மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே தூங்குதல், பயணங்களின் பொழுது கண்ணுறங்குதல் போன்றவை மூளை ஓய்வைத் தேடுவதின் அறிகுறியாகக் கருதப்படுகின்றது. அந்த நேரங்களில் ஒரு சிறிய தூக்கம் மூளையின் சோர்வை நீக்கி அதை மீண்டும் வேலைக்குத் தயார் செய்கின்றது.

    சப்பானில்  பள்ளிகளில் மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கட்டாய ஓய்வு தந்து உறங்க வைக்கின்றனர். அவர்களின் கற்றலை மேம்படுத்த இது மிக உதவியாக இருக்கிறது என்ற ஒரு கருத்து நிலவுகின்றது.

    தொடரும்…

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்- 31

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலுக்கான சூழ்நிலைகள்

    education-1-2
    மூளையின் திறன்பட்ட வேலைக்கும் சிறப்புமிக்க கற்றலுக்கும் பலவிதமான தேவைகள் கண்டறியப்பட்டுள்ளன.. அவைகளில் சில முக்கியமானவை. இந்த உள்ளீடுகள் அதன் வேலைத்திறனையும் திறனையும் கற்றல் திறனையும் வெகுவாக பாதிக்கின்றன.

    1. உணவு
    2. தூக்கம்
    3. உடலில் உள்ள நீர் விழுக்காடு
    4. உடல் பயிற்சி
    5. மன நிலை

    நம்முடைய உணவில் என்னென்ன ஊட்டச் சத்துக்கள் உள்ளன.- கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின் சத்துகள், தாதுக்கள் அனைத்தும் சேர்ந்த உணர்வு மிக அவசியமானது. ஒருவருடைய கற்றலில் ஈடுபாடு கவனம், ஆர்வம் அறிதல் புரிதல் செயல்கள் ஆகியவற்றை நம்முடைய உணவுகள் அதிகரித்து மேம்படுத்துகின்றன. அதிக அளவில் உணவு உட்கொள்ளும் நேரங்களில் கற்றலில் ஏற்படும் தாமதங்கள் ஈடுபாடற்ற தன்மை ஆகியவை பற்றிய ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன.

    காய்கறிகள், பழங்கள் இவற்றால் ஏற்படும் ஊட்ட நிலைகள் பற்றியும் கற்றலுக்கு ஏதுவான ஹார்மோன்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. இதேபோல் தற்கால உணவு முறைகளால் கற்றலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக துரித உணவு முறைகளால் ஏற்படும் மறதி, சோர்வு, கவனமின்மை பற்றியும் வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஆகவே உணவுக்கும் கற்றலுக்கும் உள்ள தாக்கங்களை நாம் அறிந்து கொள்ளுதல் மிக அவசியம். மற்றும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இதை பள்ளிகளிலும் மற்றும் மரபு சாரா முறைகளாலும் எடுத்துச் சொல்லுதல் அவசியம் என அறிய வேண்டும்.

    உடலில் நீரின் விழுக்காடு எவ்வாறு கற்றலின் திறன்களையும் கவனம் ஈடுபாடு ஆகியவற்றையும் பாதிக்கிறது என்று கற்பியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். நீரின் விழுக்காடு குறையும் பொழுதும் தாகம் அதிகமாக இருக்கும் பொழுதும் கற்றலில் ஈடுபாடு மிகவும் குறைகிறது. ஆகவே குழந்தைகளை தினம் போதுமான அளவு நீர் குடிக்க பழக்கவும் தூண்டவும் வேண்டும். பள்ளிகளிலும் குழந்தைகள் நீர் குடிக்க விரும்பும் பொழுது ஆசிரியர்கள் அவர்களை தடுக்காமல் அவர்களுக்கு உதவ வேண்டும். அதை மாணவர்களின் கட்டுப்பாடற்ற செயலாகவோ அல்லது ஒழுக்கமின்மையாகவோ கருதுதல் மிகத் தவறு.

    உடலில் நீர் குறைவு (Dehydration ) ஏற்படும் பொழுது கற்றலின் தரம் மிகக் குறைவானதாகவும் வலுவிழந்ததாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே கோடைக் காலங்களில் இதனால் படிப்பில் பாதிப்பு ஏற்படுகின்றது. அதிக உஷ்ணம் மற்றும் அதிகக் குளிர் கற்றலின் தரத்தை பாதிக்கின்றது. மற்றும் இந்த நேரங்களில் ஏற்படும் கற்றல் வலுவுடையதாகவும் நினைவாற்றலை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைவதில்லை.

    அது மட்டுமின்றி வெளிச்சம், காற்று போன்றவைகளும் கற்றலைப் பாதிக்கின்றன. எனவேதான் வீடுகளிலும் பள்ளிகளிலும் அறைகள் போதிய வெளிச்சம் உள்ளதாகவும் காற்றோட்டம் உள்ளதாகவும் இருத்தல் அவசியம். பல நாடுகளில் இதனைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டு இவற்றின் தாக்கங்களைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளனர்.

    தற்காலத்தில் சிறிய பெட்டகங்களைப் போல அடுக்குமாடிப் பள்ளிகள் நிச்சயமாக கற்றலுக்கும் மாணவர்களின் பொது மற்றும் மன நலன்களை பேணுவதற்கும் உகந்ததாக இருப்பதில்லை. வகுப்பறைகளில் அளவுக்கு அதிகமான மாணவர்களை அமர்த்தி அறையின் உஷ்ணம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொழுது அது மாணவர்களின் உடல் மற்றும் உள நலத்திற்கு சரியானதாக அமைவதில்லை.

    பொதுவாக ஆக்சிஜன் அதிகமாக உள்ள இடங்களில் கற்றலின் மேன்மை சிறப்பாக இருப்பதாகவும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் தூசிகள் அதிகமாக காற்றில் இருக்கும் இடங்களில் கற்றலின் தரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மரம், செடி கொடிகள், பசுமை மற்றும் நிழல் சார்ந்த இடங்களின் நடுவே கற்கும் பொழுது கற்றலின் திறமும் ஆழமும் வேகமும் வெகுவாக சிறப்புறுகின்றன. இப்படிப்பட்ட இடங்களில் கற்கும் கருத்துகள் நினைவினில் எளிதாகப் பதிவது மட்டுமின்றி நீண்ட கால நினைவாக மாறுவதற்கு வழி செய்கின்றன. (Long Term Memory). ஆகவே பள்ளிகளில் வகுப்பறைகளைச் சுற்றி மரம் செடி கொடிகள் வளர்த்தல் கற்றலின் சூழ்நிலையை மேம்படுத்த உதவியாக இருக்கும் . பள்ளிகளை கட்டும் பொழுதே “பசுமை பாராட்டும் கட்டிடங்களாகக்” (Green Schools ) கட்டுவதற்கான முயற்சிகள் சில இடங்களில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

    (தொடரும்)

    Share
  • கற்றல்  ஒரு  ஆற்றல் -30

    க. பாலசுப்பிரமணியன்

    மூளையும் கற்றலும்

    education-

    ஒலி ஒளி வடிவங்களை வெளி உலகிலிருந்து பெரும் மூளை இவ்வளவு புத்திசாலித்தனமாக வேலை பார்ப்பதற்கு அதனுள் என்னதான் இருக்கிறது என்ற கேள்வி எழுகின்றது. மூளை அறிவியல் நிபுணர்களின் கணக்குப் படி மூளைக்குள் கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் ( Trillion) ( சுமார் நூறு பில்லியன்) நியூரான்கள் இருக்கின்றன. புரியும் படி சொல்லப்போனால் இந்த பூமியிலே இருக்கின்ற மனிதர்களின் எண்ணிக்கையைப் போல் கிட்டத்தட்ட 166 மடங்கு எண்ணிக்கையில் அவைகள் உள்ளன. ஒரு நொடிக்கு ஒரு நியூரான் என்று எண்ணத் தொடங்கினோமானால், எண்ணிமுடிக்க 3171 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டிருக்கின்றனர்.  என்னே இந்த மூளையின் சக்தி !

    ஒரு நாளைக்கு சுமார் ஐந்து  லட்சம் நியூரான்கள் அழிந்து கொண்டிருக்கையில் அதே அளவுக்கான நியூரான்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த நியூரான்கள் ஒன்றோடு ஒன்று இணைத்து ஒரு வலைத்தளத்தையே மூளைக்குள் உருவாக்குகின்றன. இந்த இணைப்புக்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டும், விலகிக்கொண்டும், மாறிக்கொண்டும் இருக்கின்றன. எரிக் காண்டல் என்ற ஒரு மூளை நரம்பியல்  நிபுணர் இதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி கற்றலுக்கும் இந்த வலைத்தள இணைப்புகளுக்கும் இருக்கின்ற தொடர்பைப் பற்றி செய்த ஆராய்ச்சிக்கு  அவருக்கு 2000-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    அவர் தன் ஆராய்ச்சியின் மூலமாக எவ்வாறு மூலையிலுள்ள வலைத்தளங்கள் சிறிய செயல்களின் போதும் கற்றலின் போதும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை விளக்கினார். இந்த ஆராய்ச்சி கற்றலைப் பற்றிய பல  பரிமாணங்களை விளக்கவும் மாற்றி அமைக்கவும் உதவியது.

    இந்த நியூரான்களில் ஊக்குவிக்கும் நியூரான்கள் (Excitory neurons ) என்றும் நிறுத்துகின்ற (சமநிலைப்படுத்தும்) நியூரான்கள் (Inhibitory neurons) என்றும் இரண்டு வகை உண்டு. முதல் வகை சிந்தனைகளை ஊக்கிவிக்கவும், கற்றலை  மேம்படுத்தவும், கற்றலை உணர்வுகளுடன் ஒன்றுபடுத்தவும் செயல்படுகின்றன. இரண்டாவது வகை உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் அமைதியை காக்கவும் நிலைப்படுத்தவும் உதவுகின்றன. ஒரு  மனிதனின் மூளையில் இப்படிப்பட்ட நியூரான்கள் வளம், செயல்பாடுகள், வேகம் போன்ற பல நிகழ்வுகளால் கற்றல் என்ற செயல் பாதிக்கப்படுகின்றது. ஆகவே கற்றலைப் பொருத்தவரை எந்த இரண்டு மனிதர்களின் நிலையையோ அல்லது முறைகளையோ, கற்றலின் வழிகளையோ அல்லது கற்றல் வளத்தையோ ஒப்பிடுதல் அறிவுபூர்வமான செயல் அல்ல.

    கற்றலின் முறைகளிலும் வெளிப்பாடுகளிலும் தாக்கம் ஏற்படுத்தும் முக்கிய இரண்டு உள்ளீடுகளாக மரபணுக்களையும் (genes) மற்றும் சூழ்நிலைகளையும்(Environment) முன்னிலை வைக்கின்றனர். ஆனால் சூழ்நிலைகளால் மரபணுக்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை பெரிதளவும் மாற்றி அமைக்க முடியும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆகவே கற்றல் சிறப்பாக நடக்க நல்ல சூழ்நிலைகள் மிகவும் அவசியமானவை. அப்பொழுதான் மூளையில் கற்றலின் காரணமாக ஏற்படும் நியூட்ரான் வலைத்தளங்கள் மேன்மையாகவும் உறுதியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

    பல்லாண்டுகளுக்கு முன்னாள் “இளமையில் கல்” என்ற முதுமொழிக்கேற்ப கற்றலின் திறன் வயதுடன் குறைகின்ற வாய்ப்பினை விளக்கியிருந்தனர்.

    தற்போதைய ஆராய்ச்சியில் மூளையின் தொடர் உருமாற்றங்கள் (Neural Plasticity) காரணமாக “வாழ்க்கை முழுதும் கற்றல்” (Life Long Learning) என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

    எவ்வளவுக்கெவ்வளவு மூளைக்கு நாம் வேலைகொடுக்கிறோமோ அந்த அளவுக்கு அதன் ஆற்றல் தொடர்ந்து இருப்பது மட்டுமின்றி வளர்ந்தும் வருகிறது. அதனால் தான் கவிஞரின் பாட்டு “கத்தியைத் தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு” என்ற பாடலின் கருத்தின் சிறப்பு தெரிய வருகின்றது.

    மருத்துவ வல்லுனர்கள் முதுமை அடைந்தவர்களிடமும் மூளைக்கு ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். விளையாட்டாக ஒரு மனநல மருத்துவர் கூறுகின்றார் “உங்களுக்கு எழுபது வயதாகிவிட்டதா? உங்களிடம் அதிக நேரம் உள்ளதா? வேறு ஏதாவது மொழி கற்றுக்கொள்ளுங்களேன். உங்களுக்கு தொண்ணுறு வயதாகி விட்டதா? கைகால்களை நன்றாக அசைக்க முடிகின்றதா? கொஞ்சம் வயலின் கற்றுக்கொள்ளுங்களேன்”

    மூளையை தொடர்ந்து நாம் உபயோகித்து வந்தால் மூளையைச் சார்ந்த பல வியாதிகளிலிருந்து நாம் தப்ப முடியும் என்று அறிவுறுத்துகின்றனர்.

    கற்றல் – பிறக்கும் பொழுதிலிருந்து கடைசி மூச்சு உள்ளவரை நடக்கும் ஒரு ஆக்கபூர்வமான  செயல்!!

    (தொடரும்)

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் – 29

    க. பாலசுப்பிரமணியன்

    படிக்கும் திறன் (Reading Skills )

    education-

    “புத்தகத்தை எடுத்துக் கொஞ்சம் படியேண்டா” என்று தன் மகனைப் பார்த்துச் சொல்லாத பெற்றோர்களே இருக்க முடியாது. “புத்தகம் என்னவோ அவன் கையிலேதான் இருக்கு, ஆனால் மனசு எங்கேயோ அலை பாயுது ” என்றும்  “புத்தகத்தை கையிலே வைத்துக்கொண்டு இருக்கிறான், கண் திறந்துதான் இருக்கு, ஆனால் தூங்கிக் கொண்டிருக்கிறான்” என்று தன் குழந்தைகளை பல விதங்களில் வர்ணிக்கின்ற பெற்றோர்களை நாம் பார்த்திருக்கின்றோம்.

    படிக்கும் பொழுது என்ன நடக்கின்றது? படிப்பது எல்லாம் நம் மனதில் படிகின்றதா? மூளை படிப்பது அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுகிறதா? படிப்பது அனைத்தையும் நாம் புரிந்து கொள்கின்றோமா? படிப்பதில் எவ்வளவு விழுக்காடு நம் நினைவில் நிற்கின்றது? அது எவ்வளவு காலம் மனதில் நிற்கின்றது? நாம் படிப்பதை  எல்லாம் மூளை எங்கே அடைத்து வைக்கின்றது?  எல்லாம் புரியாத புதிரா? மூளை நரம்பியல் வல்லுனர்களின் ஆராய்ச்சிகள் கற்றலைப் பற்றியும் நினைவைப் பற்றியும் என்ன சொல்லுகின்றன?

    சற்றே யோசித்துப் பாருங்கள்… தமிழிலும் சரி, மற்ற மொழிகளிலும் சரி ..தற்போதைய எழுத்து வடிவங்கள் எத்தனை நூற்றாண்டுகளாக  வழக்கத்தில் இருக்கின்றன ? இதற்கு முன்னால்  இருந்த எழுத்து வடிவங்கள் எப்படி இருந்தன? அவைகளை நாம் இப்போது பார்த்தால் நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியுமா? ஆனால், அந்தக் காலத்து மக்களுக்கு அந்த வடிவங்கள் எப்படி எளிதாகப் புரிந்தன? உலக மாற்றங்களை மூளை எவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளுகிறது?

    ஆராய்ச்சியாளர்களிடம் பேசினால் அவர்கள் சொல்லுவார்கள் “கண்கள் உங்கள் எழுத்துக்களை புரிந்துகொள்வதில்லை. அவைகளுக்கு எந்த எழுத்தும் எந்த மொழியைச் சார்ந்தது என்று தெரியாது. அவைகள் தாங்கள் பார்க்கும் ஒளி வடிவங்களை மட்டும் திரைகளில் பதிவு செய்து மூளைக்கு அனுப்புகின்றன.” ஆங்கில இலக்கிய மேதை திரு பெர்னார்ட் ஷா அவர்கள்  அழகாகச் சொன்னார் ” Words are only postage stamps delivering the object for you to unwrap.” வார்த்தைகள் பொருள்களைக் கொண்டு சேர்க்கும் தபால் தலைகளைப் போன்றவை”

    ஆராய்ச்சியாளர்களின் கருத்துப் படி “Words are nothing but art museums in our brain- in the form of straight lines, circles, and other art forms. There is no such thing for the eye called words!! ” வார்த்தைகள் மூலையில் ஒரு கலைக்கூடம் போன்றவை. – நேர்கோடுகள், வட்டங்கள் மற்றும் மாறுபட்ட கலை வடிவங்கள். கண்களைப் பொருத்தவரை அவைகளுக்கு வார்த்தைகள் என்றால் என்னவென்று தெரியாது”… விந்தையாக இல்லையா?

    வார்த்தைகளையும் அறியாமல் மொழிகளையும் அறியாமல் இந்தக் கண்கள் என்ன சாதனை படைகின்றன ! அப்படியானால் நமக்கு வார்த்தைகளும், மொழிகளும், அதன் பொருள்களும் எவ்வாறு புலப்படுகின்றது?

    இயற்கையின் அமைப்பில் இந்த மூளை ஒரு ஆயிரம் சூப்பர் கணினிகளின் வேலைகளைச் சேர்த்துச் செய்கின்றது. கண்களால் அனுப்பப்படும் ஒளி வடிவங்கள் மூளையின் பல பகுதிகளுக்கு அனுப்பபடுகின்றன. மூளையில் கற்றல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி இந்த வடிவங்களில் நேர்கோடுகள் ஓரிடத்திற்கும் வட்டங்கள் மற்றொரு இடத்திற்கும் அது போல் மற்ற வடிவங்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகளிலும் பதிவாகின்றன. தன்னுடை முன் நினைவுகளோடு அவைகளை பரிசீலிக்கும் மூளை அவைகளை வார்த்தைகளாகவும் வடிவங்களாகவும் அமைக்கின்றது. இந்த செயல் நடப்பதற்கு மூளையின் பல்வேறு பாகங்கள் கைகோர்த்து ஒன்றாக வேலை செய்கின்றன.

    வடிவமைக்கப்பட்ட இந்த எழுத்துக்களுக்கும், வார்த்தைகளுக்கும், வடிவங்களுக்கும் பொருள் கொடுப்பது (Meaning  Making) மூளையின் ஒரு அசாதரணமான வேலை. இது அற்புதச் செயல், ஆனால் ஒரு நொடியின் சில விழுக்காடுகளில் இந்தச் செயல் மிகச் சாதாரணமாக நடந்து விடுகின்றது.

    இதைப் பற்றிய மேலும் சில அறிய தகவல்களை நாம் மேற்கொண்டு பார்ப்போம். ஆனால், படித்தல் என்ற ஒரு செயலுக்குப் பின்னே நடக்கின்ற ஒரு பெரிய போராட்டத்தை நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

    (தொடரும் )

    Share
  • காற்றினிலே வரும் கீதம்

     க.பாலசுப்ரமணியன்

     

    காலைப் பொழுதில் கரையும் காகம்

    காற்றினில் தெளிக்கும் கானம்!

     

    காதில் ஒலித்திடும் கருவண்டின் துடிப்பில்

    கற்பனை தேடும் ஞானம்!

     

    கூவிடும் கோழியின் குழைந்திடும் குரலில்

    தூதிடும் துள்ளும் கீதம்!

     

    கறந்திடும் பாலில் சொட்டிடும் சுகத்திற்கு

    கைகள் போட்டிடும் தாளம்   !

     

    தென்னையின் கீற்று தென்றலைத் தீண்டிட

    உலவிடும் உன்னத   ராகம் !

     

    புள்ளினம் ஒன்றாய் புகலிடம் தேடிட

    கள்ளுண்ட வண்டும் ஆடும் !

     

    விண்ணினில் எங்கும் சிதறிய மீன்கள்

    மண்ணின் மனதினை மாய்க்கும்!

     

    கண்ணின் விழிகள் களைத்திடும் போதும்

    காலத்தின் காவியம் பாடும்!

     

    புன்னகை சிதறிடப்  பூத்திடும் மனதில்

    புதிதாய் பாடல்கள் தோன்றும் !

     

    கல்லுறை நீரும் தமிழினில் கேட்டால்

    தந்திடும் தேனிசை கீதம்!

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல்  28

    க. பாலசுப்பிரமணியன்

     ஊடாடும் கற்றல் (Interactive learning)

    education-1-1

    சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோவில் ஒரு அரங்கத்தில் பேசிய பேச்சு உலகளவில் அனைவருடைய கவனத்தையும் பெற்று பாராட்டப்பட்டது. “சகோதரர்களே, சகோதரிகளே “என்று உலக அரங்கில் அனைவரையும் அழைத்தது  இந்திய  பண்பாட்டின் சிகரமாக அமைந்தது. இதே போன்று மார்டின் லூதர் கிங், வின்ஸ்டன் சர்ச்சில், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற பலரின் பேச்சுக்கள் சில நாடுகளின் தலைவிதியை மாற்றி அமைக்க அடிப்படையாக அமைந்தது. தொழில் நுட்பத்தின் தாக்கம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வரும் முன்னர் இலக்கியத்தின் தாக்கம் சிறப்பாக இருந்தது. மாணவர்களை பல தலைவர்களின் பேச்சுக்களை மேடைகளில் பேசச்சொல்லி அந்தத் தலைவர்களின் நோக்கங்களையும் கருத்துக்களையும் பாராட்டி சிறுவர்களின் திறன்களை வளர்ப்பர்.

    பள்ளிகளில் இது போன்ற மாதிரி பேச்சுப் பழக்கங்கள் மாணவர்களுடைய தன்னம்பிக்கையையும் சாதனைகள் படிப்பதற்குத் தேவையான உள்ளுணர்வுகளையும் கொடுக்கின்றன. பாடத்திட்டத்தில் எப்பொழுதெல்லாம் மாணவர்களுடைய திறன்களை வளர்ப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கின்றதோ அவைகளை ஆசிரியர்கள் முழுமையாக உபயோகிக்க வேண்டும்.

    பல நாடுகளில் வகுப்பறைகளை ஒரு நாடக மேடையாகக் கருதுகின்றனர். மொழி, சரித்திரம், பூகோளம், இயற்பியல், சுற்றுச்சூழல் கல்வி போன்ற பல பாடத்திட்டங்களை வகுப்பறைகளில் நடத்த கருத்துக்களை சிறு கதைகளாகவோ அல்லது நாடகமாகவோ மாற்றி நடத்தும் பொழுது அவைகளை அனுபவமாக புரிந்துகொள்ள முடிகின்றது. இத்தகைய ஈடுபாடுகளில் மாணவர்கள் மிக்க ஆர்வம் காட்டுவது மட்டுமின்றி அவர்களுடைய ஈடுபாடும் முழுதாக அமைகின்றது. மேலும் இத்தகைய செயல்களில் மாணவர்கள் கூட்டாக ஈடுபடும் பொழுது கற்றல் புத்தகத்தின் சுவர்களைத் தாண்டி அனுபம் சார்ந்த கற்றலாகவும் (Experiential Learning)  பங்கேற்றும் கற்றலாகவும் (Participative Learning), கூட்டாகக் கற்கும் கல்வியாகவும் (Cooperative Learning) அமைகின்றது.

    கற்றலைப் பற்றி ஆராய்ச்சி செய்யம் வல்லுனர்கள் (Cognitive Psychologists) இது போன்ற மாறு பட்ட கற்றல் முறைகளை கற்றலுக்கு மட்டுமன்றி மூளையின் வளர்ச்சிக்கும் நலத்திற்கும் இன்றியமையாததாகக் கருதுகின்றனர். அவர்களுடைய கருத்தின் படி புத்தகங்கள் கற்றலுக்கு ஒரு வழிகாட்டியாக மட்டும் இருக்கமுடியும். வழிகாட்டிகள் கற்றலுக்குத் துணையாக இருக்கலாமேயன்றி அதன் முடிவாக இருக்க இயலாது.

    “எப்படி ஒரு விமானம் பறப்பதற்கு ஒரு ஓடுகளம்  தேவைப்படுகிறதோ அதுபோல் கருத்துக்கள் வளர்வதற்கும் சிந்தனைத் திறன் பெருகுவதற்கும் புதிய கருத்துக்களும் அறிவுசால் அனுபவங்கள் அடைவதற்கும் புத்தகங்கள்  நல்ல ஒரு ஓடுகளமே ” என கற்பியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    கற்றலின் பொழுது மாணவர்களைக்  கூட்டாக அமர்த்தி சிந்தனைகளை வளர்க்கும் கருத்துக்களை கூட்டு விவாதங்களாகவும் (group discussions), விவாத மேடைகளாகவும் (debating platforms), சிக்கல் தீர்க்கும் மேடைகள் (Problem Solving Centers) மற்றும் அரங்கங்களாகவும் மாற்றினால் புதிய கருத்துக்கள், புதிய பார்வைகள் மூலம் பிரச்சனைகளைப் பரிசீலிக்க உதவியாக இருக்கும்.

    கற்றலை சீராக்கவும், மேம்படுத்தவும், நிலைநிறுத்தவும் பல வழிகளை நமது மூளைகள் கையாளுகின்றன. இவை  ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாகவும் சிறப்பானதாகவும் அமைகின்றது. இந்த முறைகளில் வாயால் சத்தமாகப் படித்து அறிந்துகொள்பவர்கள்  ஒரு பகுதி. இதே போல் தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டோ கற்றுக்கொள்ளுபவர்கள் இன்னொரு பகுதி. ஆகவே பேச்சுத் திறனும் நடிப்புத்திறனும் கற்றலை சிறப்பிக்கவும் வளர்க்கவும் மிக இன்றியமையாதவை.

    கேட்கும் திறன் (Listening Skills) மற்றும் பேசும் திறன் (Speaking Skills) போலவே படிக்கும் திறனும் ( Reading Skills) கற்றலை வளர்க்க உதவுகின்றது.  படிக்கும் திறனைப் பற்றிய சில்ல நுணுக்குங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    தொடரும் ..

    Share
  • நல்லதொரு குடும்பம்..

     

    ” வாசு,  சிவா… சீக்கிரம் வந்து சாப்பிட்டு போங்கடா.. அடுத்தவா சாப்பிட வேண்டாமா”  சமையல் அறையிலிருந்து குரல் கேட்க, இருவரும் சுவரில் மாட்டியிருந்த அலுமினிய தட்டுக்களை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல, அதே தட்டில் சாப்பிட அடுத்த இருவர் தயாராக இருக்க… ஒரு கூட்டுக் குடும்பத்தில் இது முதல் காட்சி.

    “எனக்கும் பசிக்கிறது… அவர்கள் சாப்பிடும் வரை நான் எதுக்கு காத்துக்கொண்டிருக்க வேண்டும் ” என்ற மணியின் துயர் கண்டு  “இதோ வந்துட்டேன் ” என்று அத்தை கல்சட்டியிலே தயிர் சாதத்தை பிசைந்து வந்து “இப்படி உட்காரு.. நான் கையிலே உருட்டி போடறேன்… சாப்பிடு ” என்று ஆறுதல் வார்த்தை கூற, அடுத்த   மூன்று பேர் தரையில்  உட்கார, அந்த சோற்று உருண்டைகளுக்கு நடுவே பழங்குழம்பை சுட வைத்து விட, சப்புக் கொட்டி சாப்பிடும் அந்த வீட்டு சிறுவர்களுக்கு சோற்றோடு  அன்பையும் கலந்து ஊட்டும் அந்த வயதான அத்தை… இது இரண்டாம் காட்சி..

    சிறிய ஹாலின் ஓரத்தில் அமர்ந்து வெற்றிலை பாக்கை ருசித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கும் அப்பா, சித்தப்பா, வெளி வராண்டாவில் ஒருபடி அரிசியை ஊறப்போட்டு இட்லிக்கு மாவை அறைத்துக்கொண்டிருக்கும் அம்மா, பழைய மர்பி ரேடியோவில் “காற்றினிலே வரும் கீதம்” பாட்டை ரசித்துகொண்டிருக்கும் சித்தி, இவர்களுக்கு நடுவே பள்ளி பரிட்சைக்காக படித்துகொண்டிருக்கும் ரவி, “கொஞ்சம் மெதுவா படிடா. நாங்களெல்லாம் பாட்டு கேட்டுகொண்டிருகிறோம் என்பது தெரியாம கத்தறே ” என்று முனகும் அக்கா,,,, இது குடும்பத்தின் மூன்றாவது காட்சி…

    ஒரு மண் பொந்துக்குள் முடங்கிக்கிடக்க உள்ளே செல்ல போட்டியிடும் முள்ளம்பன்றிகள்  ஒன்றையொன்று  தள்ளிக்கொண்டு உள்ளே  ஒதுங்க,அதன் கூர்மையான முற்கள் உரசி அடுத்ததின் உடலிலிருந்து ரத்தம் கசிவது போல்,  ஒரே ஹாலில் எல்லோரும் போர்வையில் படுத்துகொள்ள “நீ தள்ளிப் போடா .. ராத்திரி முழுதும் காலாலே  மிதித்துத் தள்ளுவே ” என்று அம்மா அண்ணனை விரட்ட.”நான் மொட்டை மாடியிலே படுத்துக்கப் போறேன் போ ” என்று அவன் கிளம்ப.. ” வேண்டாண்டா.. ராத்திரில காத்து கருப்பு அடிச்சுடும் ” என்று கவலையோடு அம்மா பதில் சொல்ல.. ..,,நான்காம் காட்சி.

    “என் செருப்பு அறுந்து போச்சே ” என்ற கவலையில் இருக்கும் சிவாவிடம் ” எனக்கு லீவ் தாண்டா.. என் செருப்பை போட்டிண்டு போ .. உன்னோட செருப்பை மதியம் தைத்து வைக்கிறேன் “என்று சொல்லும் மணியிடம் புன்சிரிப்புடன் “தேங்க்ஸ் .மணி.. அப்படியே உன்னோட புது சட்டையையும் கொடு ஒரு நாளைக்கு “என்று கேட்கும் மணி.. இவர்கள் சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள் மற்றவர்களுடைய துன்பத்தை அறிந்துகொள்ளும் உறவுகளின் வழியில் ஒரு குடும்பம் … ஐந்தாம் காட்சி…

    வயதான காலத்தில் வாத நோயால் நடக்க முடியாமல் வீட்டுக்குள்ளே மெதுவாக நகர்ந்தே செல்லும் தாத்தாவை இன்று குளிப்பாட்ட முடியாமல் சுரத்தில் தவிக்கும் பாட்டிக்கு பதிலாக மெதுவான சூட்டில் அவர்மேல் நீரூற்றி தேய்த்து துடைத்து விட்ட பேரனைப் பார்த்து “நல்ல பிள்ளை.. ஆனால் பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சே ” என்று தாத்தா வருத்தப்பட … தாத்தாவுக்கு உதவிசெய்யப் போய் வகுப்பிற்கு தாமதமாக வந்து வகுப்பிற்கு வெளியே காவல் தெய்வமாக நிற்கும் அந்தப் பிள்ளை… ஆறாம் காட்சி..

    மலரும் நினைவுகள்…

    அன்பால் பிணைக்கப்பட்ட உறவுகள்.. ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொண்டு மகிழ்வில் திளைக்கின்ற ஒரு குடும்பம்… கற்பனையல்ல… இது நாம் பல்லாண்டுகளாய் வாழ்ந்து வந்த முறை..

    மாறுகின்ற காலத்தில்..

    உறவுகளை நொறுக்கி உயரங்களைத் தேடுகிறோம்..

    அன்புப் பாலங்களை உடைத்து அகலமான வீடுகளை கட்டிக்கொண்டிருக்கின்றோம்.

    வாரம் ஒரு முறை வீதி உலா சென்று சொந்தங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றோம் ..

    மனிதர்களை இழந்து பொருள்களை வீட்டில் அடைத்துகொண்டிருக்கின்றோம்

    சிந்திக்க ஒரு நொடி…

    “நல்லதொரு குடும்பம்.. பல்கலைக் கழகம்..” பாடிய பாவலனை நன்றியோடு நினைக்கவேண்டும்…

    மே 15….. உலக குடும்ப தினம்… !!

     

     

    Share
  • உலக செவிலியர் தினம் (மே 12)

    க. பாலசுப்பிரமணியன்

    nurse

    தாய்மையை  தத்தெடுத்த தனிக்குலமே,

    தூய்மையைத்  தோள்சுமக்கும் நற்குணமே !

    துயர்நீக்கப்  பறந்துவரும் புள்ளினமே

    துயில்காத்துக் கண்விழிக்கும் உறவினமே!

     

    கண்களிலே கொண்டதுவோ கருணைமொழி

    கைகளிலே சேவைசெய்யும் கடமைவழி

    கனிவுடை சொற்களெல்லாம் ஆற்றும்வலி

    கலங்குகின்ற மனம் காக்கும் தீபஒளி !

     

    கருவோடு பிறவாதாது உன் உறவன்றோ

    கண்ணுக்குத் தெரிந்த கருணை வடிவன்றோ

    மழலைக்கும் முதுமைக்கும் கண்மணியன்றோ

    மாண்புடைய சேவைக்கு நீ அணியன்றோ!

     

    கூகிள் படத்திற்கு நன்றி.

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 27

     க. பாலசுப்பிரமணியன்

    மேடைப் பேச்சு – திறன்கள்

    education-1-1

    கிட்டத்தட்ட ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால்  நடந்த ஒரு நிகழ்ச்சி – மதுரையிலே சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலே எட்டாம் வகுப்பு படித்துக்  கொண்டிருந்தேன். அந்தப் பள்ளி ஆண்டு  விழாவின் போது என்னுடைய ஆசிரியர்  மேடையிலே ஒரு  உரை ஆற்றுமாறு பணித்தார். அதற்காக நல்ல முறையிலே உரையை எழுதி மனப்பாடம் செய்து பலமுறை பயிற்ச்சியும் செய்த பின்னர் மேடையில் ஏறி நின்றேன்.

    முன்னாலே அமர்ந்திருந்த சுமார் ஆயிரம் பேரையும் மேடை மேலிருந்து  பார்க்கையில் ஏதோ ஆயிரம் யானைகள் அணிவகுத்து நின்றதுபோல் காட்சி அளித்தது. தலை சுழன்றது. வார்த்தைகள் எழவில்லை! எப்படியோ ஆசிரியர் துணையுடன் ஒரு மாதிரியாக உரையை முடித்துவிட்டு கீழே இறங்கியதும் வாழ்க்கையில் இன்னொருமுறை மேடையில் ஏறக் கூடாது  என்ற சபதத்துடன் நின்றேன். ஆனால் அந்த அனுபவம் நல்ல ஒரு கற்றலைக் கொடுத்து என்னை ஒரு மேடை பேச்சாளனாக்கியது  .

    மேடைப் பேச்சு ஒரு வல்லமை  வளர்க்கும் கலை. எந்த மேடையிலே நாம் ஏறுகின்றோம் என்பது  பற்றிய அறிவு தேவை  இலக்கிய மேடை, அரசியல் மேடை, கருத்தரங்க மேடை, போன்ற ஒவ்வொரு மேடையிலும் பேசுவதற்கு வேறுபட்ட திறன் வேண்டும். மேலும் ஒரு மேடையிலே:

    1. எத்தனை மணித்துளிகள் நாம் பேசப் போகிறோம்
    2. அதற்குள் என்னென்ன கருத்துக்களைச் சொல்லவேண்டும்.
    3. அதை எப்படிச் சொல்லவேண்டும்.
    4. அரங்கத்தில் அமர்ந்திருப்போரின் அறிவுத்திறன் எப்படி;
    5. நாம் சொல்லுவது அவர்களுக்குப் போய்ச் சேருமா,
    1. நமது பேச்சில் எவ்வளவு கருத்தாழம் இருக்கவேண்டும்
    2. அவர்கள்ஆர்வத்தையும் கவனத்தையும் நம்மிடம் எப்படி ஈர்ப்பது
    3. நமது உரையில் சிரிப்பும் சிந்தனையும் எவ்வாறு கலந்திருக்க வேண்டும்.
    4. வேறுபட்ட அறிவும்கருத்தாழமும் கொண்ட அரங்கத்தில் அனைவரையும் கருத்துக்களுக்கு கைகோர்க்க வைப்பது எப்படி
    5. உரையின்போது உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி

    இது போன்ற பல கருத்துக்களை வளரும் பருவத்திலேயே மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் பிற்காலத்தில் அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்தத் தொழிலிலும் சிறப்பாக முன்னேறுவதற்கு உதவும். தற்காலத்திய தொழில் தளங்களில் மேடைப் பேச்சுத் திறன் (Public Speaking skills) மிக இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது.  பல நேரங்களில் பெரிய தொழிலதிபர்கள் கூட மேடையில் ஏறியதும் தயக்கப்படுவதும், வியர்த்தோ அல்லது ஒரு  விதமான நடுக்கம் அல்லது பய உணர்ச்சியோடு நிற்பதையோ நாம் கண்கூடாகக்  காண்கிறோம். இந்த உணர்வுகளை சிறு வயதிலேயே பயிற்சி மூலம் நீக்கிவிடலாம்.

    பல அரங்கங்களில் ஒரு சிறந்த பேச்சாளர் பேசி முடிந்ததும் அங்கே அமர்ந்திருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட விழுக்காடு மக்கள் அங்கிருந்து எழுந்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆகவே, சிறந்த பேச்சைக் கேட்பதற்காகவே பலர்  அரங்கங்களுக்கு வருவதை நாம் காணலாம்.

    எத்தனை சிறப்பாக நாம் பேசினாலும் அதைக் கேட்பவர்களின் ஆர்வமும் கவனமும் குறைந்துவிடுமுன் முடித்துக்கொள்ளுதல்  மிக்க அவசியம். விவேக சூடாமணி என்ற சம்ஸ்கிருத நூலிலே இவ்வாறு அழகாக சொல்லப்பட்டுள்ளது : “சொற்களின் வலையிலே ஒருவன் சிக்கிவிட்டால் ஒரு இருண்ட காட்டுக்குள்ளே சென்று தடுமாறுவதைப் போல; அது அறிவைத் தடுமாற வைத்துவிடும்”. பேசும் பொழுதில் முடிக்கத் தெரியாது தடுமாறுபவர்களின் நிலையும் இதுவே.

    தொடருவோம்

    அமெரிக்காவில் உள்ள ஒரு தலை சிறந்த மன இயல் வல்லுனரும் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான ஹோவர்ட் கார்ட்னெர் தான் வெளியிட்ட The Frames of Mind என்ற புத்தகத்தில் பலவிதமான புத்திகூர்மைகளை (Multiple Intelligence )பற்றி விவரிக்கும் நேரத்தில் மொழிசார்ந்த  புத்திகூர்மையை (Linguistic Intelligence ) சிறப்பாக விளக்குகின்றார். இந்தத் திறன் இருப்பவர்களை Word Smart என்று   கூறுவார். பலவித தொழில் மேன்மைக்கு இந்தத் திறன் அடிப்படியானது.

    மேடைப் பேச்சுக்கும் இந்தத் திறன் அவசியம். எந்த இடத்தில் எப்படிப் பட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தவேண்டும், அதன் விளைவுகள் என்ன, அதன் தாக்கங்கள் என்ன என்றெல்லாம் அறிந்து புரிந்து செயல் படுதல் அவசியம். இந்தத் திறனை முழுமையாக பயிற்ச்சிகள் மூலம் வளர்க்க முடியாவிட்டாலும் அதற்க்கான அடிப்படைத் திறன்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சொல்லிகொடுப்பது அவசியமாகத் தென்படுகின்றது.

    தொடரும்..

    Share
  • அட்சயமே….அட்சயமே….!!

    க. பாலசுப்பிரமணியன்

     

    போதுமென்ற மனமிருந்தால்
    பொழுதெல்லாம் அட்சயமே..!
    புன்சிரிப்பு புலர்ந்திருந்தால்
    போகுமிடமெல்லாம் அட்சயமே !!

    கண்ணிரண்டும் கருணைவளையம்
    அணிந்திருந்தால் அட்சயமே !
    காப்பியங்கள் காதணியாய்
    காதருகில் கிசுகிசுக்க
    காலமெல்லாம் அட்சயமே !

    கசடுபடா குரலிருந்து
    முத்தான பாடல்கள்
    முணுமுணுக்க முழங்கிவிட
    முப்பொழுதும் அட்சயமே…!

    கைகளிரண்டும் வலிமையுடன்
    கடமைகள் செய்திருக்க
    கங்கணமாய் பண்பிருந்தால்
    காலமெல்லாம் அட்சயமே…!!

    பசித்தவயிற்றை பக்கம்வைத்து
    பருப்போடு சோறுகலந்து
    பசியாறப் பார்க்கையிலே
    பார்வைகொள்ளும் சுகமென்றும்
    அட்சயமே… ..அட்சயமே. !!

    Share
  • கீதாஞ்சலி கவிஞருக்கு ஒரு நினைவாஞ்சலி (7 மே 1861)

     

    க. பாலசுப்பிரமணியன்

    thahoor_2272119a

    வங்கத்தில் பிறந்த தங்கமொன்று
    சிங்கமென உருவெடுத்து வந்தது…
    அங்கமெல்லாம் இறையுணர்வை
    தங்கவைத்து இன்பம்கண்டது !

    இருளினிலும் ஒளியினிலும்
    இசையினிலும் அசைவினிலும்
    இமைகளின் நீர்கசிவினிலும்
    இறைவனின் நடைகண்டது !

    முத்துப் பனித்துளிகளிலும்
    முத்தான வியர்வைமழையினிலும்
    மூப்புடையோர் சிரிப்பினிலும்
    மூவுலகின் வளம்கண்டது!

    நாதங்களை காற்றில்நிறுத்தி
    நாசியிலே சுவாசித்தது;
    நாளங்களின் தாளங்களில்
    நானைக் கரைத்தது !

    விண்ணுலகின் விந்தைகளை
    மண்ணுலகின் கவலைகளை
    கண்ணுலகின் பார்வைகளில்
    சொல்லழகில் சமைத்தது !

    பேரழகு உள்ளிருந்தால்
    பெயரழகு நமக்கெதற்கு?
    பேரன்பில் தன்னைவைத்து
    பாரெல்லாம் அணைத்தது !

    வங்கம்பெற்ற தங்கமது
    பங்கமில்லா பாரதத்தை
    மங்கிவிடா சொற்களிலே
    மனங்களிலே வடித்தது!

    Share