” வாசு,  சிவா… சீக்கிரம் வந்து சாப்பிட்டு போங்கடா.. அடுத்தவா சாப்பிட வேண்டாமா”  சமையல் அறையிலிருந்து குரல் கேட்க, இருவரும் சுவரில் மாட்டியிருந்த அலுமினிய தட்டுக்களை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல, அதே தட்டில் சாப்பிட அடுத்த இருவர் தயாராக இருக்க… ஒரு கூட்டுக் குடும்பத்தில் இது முதல் காட்சி.

“எனக்கும் பசிக்கிறது… அவர்கள் சாப்பிடும் வரை நான் எதுக்கு காத்துக்கொண்டிருக்க வேண்டும் ” என்ற மணியின் துயர் கண்டு  “இதோ வந்துட்டேன் ” என்று அத்தை கல்சட்டியிலே தயிர் சாதத்தை பிசைந்து வந்து “இப்படி உட்காரு.. நான் கையிலே உருட்டி போடறேன்… சாப்பிடு ” என்று ஆறுதல் வார்த்தை கூற, அடுத்த   மூன்று பேர் தரையில்  உட்கார, அந்த சோற்று உருண்டைகளுக்கு நடுவே பழங்குழம்பை சுட வைத்து விட, சப்புக் கொட்டி சாப்பிடும் அந்த வீட்டு சிறுவர்களுக்கு சோற்றோடு  அன்பையும் கலந்து ஊட்டும் அந்த வயதான அத்தை… இது இரண்டாம் காட்சி..

சிறிய ஹாலின் ஓரத்தில் அமர்ந்து வெற்றிலை பாக்கை ருசித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கும் அப்பா, சித்தப்பா, வெளி வராண்டாவில் ஒருபடி அரிசியை ஊறப்போட்டு இட்லிக்கு மாவை அறைத்துக்கொண்டிருக்கும் அம்மா, பழைய மர்பி ரேடியோவில் “காற்றினிலே வரும் கீதம்” பாட்டை ரசித்துகொண்டிருக்கும் சித்தி, இவர்களுக்கு நடுவே பள்ளி பரிட்சைக்காக படித்துகொண்டிருக்கும் ரவி, “கொஞ்சம் மெதுவா படிடா. நாங்களெல்லாம் பாட்டு கேட்டுகொண்டிருகிறோம் என்பது தெரியாம கத்தறே ” என்று முனகும் அக்கா,,,, இது குடும்பத்தின் மூன்றாவது காட்சி…

ஒரு மண் பொந்துக்குள் முடங்கிக்கிடக்க உள்ளே செல்ல போட்டியிடும் முள்ளம்பன்றிகள்  ஒன்றையொன்று  தள்ளிக்கொண்டு உள்ளே  ஒதுங்க,அதன் கூர்மையான முற்கள் உரசி அடுத்ததின் உடலிலிருந்து ரத்தம் கசிவது போல்,  ஒரே ஹாலில் எல்லோரும் போர்வையில் படுத்துகொள்ள “நீ தள்ளிப் போடா .. ராத்திரி முழுதும் காலாலே  மிதித்துத் தள்ளுவே ” என்று அம்மா அண்ணனை விரட்ட.”நான் மொட்டை மாடியிலே படுத்துக்கப் போறேன் போ ” என்று அவன் கிளம்ப.. ” வேண்டாண்டா.. ராத்திரில காத்து கருப்பு அடிச்சுடும் ” என்று கவலையோடு அம்மா பதில் சொல்ல.. ..,,நான்காம் காட்சி.

“என் செருப்பு அறுந்து போச்சே ” என்ற கவலையில் இருக்கும் சிவாவிடம் ” எனக்கு லீவ் தாண்டா.. என் செருப்பை போட்டிண்டு போ .. உன்னோட செருப்பை மதியம் தைத்து வைக்கிறேன் “என்று சொல்லும் மணியிடம் புன்சிரிப்புடன் “தேங்க்ஸ் .மணி.. அப்படியே உன்னோட புது சட்டையையும் கொடு ஒரு நாளைக்கு “என்று கேட்கும் மணி.. இவர்கள் சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள் மற்றவர்களுடைய துன்பத்தை அறிந்துகொள்ளும் உறவுகளின் வழியில் ஒரு குடும்பம் … ஐந்தாம் காட்சி…

வயதான காலத்தில் வாத நோயால் நடக்க முடியாமல் வீட்டுக்குள்ளே மெதுவாக நகர்ந்தே செல்லும் தாத்தாவை இன்று குளிப்பாட்ட முடியாமல் சுரத்தில் தவிக்கும் பாட்டிக்கு பதிலாக மெதுவான சூட்டில் அவர்மேல் நீரூற்றி தேய்த்து துடைத்து விட்ட பேரனைப் பார்த்து “நல்ல பிள்ளை.. ஆனால் பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சே ” என்று தாத்தா வருத்தப்பட … தாத்தாவுக்கு உதவிசெய்யப் போய் வகுப்பிற்கு தாமதமாக வந்து வகுப்பிற்கு வெளியே காவல் தெய்வமாக நிற்கும் அந்தப் பிள்ளை… ஆறாம் காட்சி..

மலரும் நினைவுகள்…

அன்பால் பிணைக்கப்பட்ட உறவுகள்.. ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்துகொண்டு மகிழ்வில் திளைக்கின்ற ஒரு குடும்பம்… கற்பனையல்ல… இது நாம் பல்லாண்டுகளாய் வாழ்ந்து வந்த முறை..

மாறுகின்ற காலத்தில்..

உறவுகளை நொறுக்கி உயரங்களைத் தேடுகிறோம்..

அன்புப் பாலங்களை உடைத்து அகலமான வீடுகளை கட்டிக்கொண்டிருக்கின்றோம்.

வாரம் ஒரு முறை வீதி உலா சென்று சொந்தங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றோம் ..

மனிதர்களை இழந்து பொருள்களை வீட்டில் அடைத்துகொண்டிருக்கின்றோம்

சிந்திக்க ஒரு நொடி…

“நல்லதொரு குடும்பம்.. பல்கலைக் கழகம்..” பாடிய பாவலனை நன்றியோடு நினைக்கவேண்டும்…

மே 15….. உலக குடும்ப தினம்… !!

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க