க. பாலசுப்பிரமணியன்

மேடைப் பேச்சு – திறன்கள்

education-1-1

கிட்டத்தட்ட ஐம்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால்  நடந்த ஒரு நிகழ்ச்சி – மதுரையிலே சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலே எட்டாம் வகுப்பு படித்துக்  கொண்டிருந்தேன். அந்தப் பள்ளி ஆண்டு  விழாவின் போது என்னுடைய ஆசிரியர்  மேடையிலே ஒரு  உரை ஆற்றுமாறு பணித்தார். அதற்காக நல்ல முறையிலே உரையை எழுதி மனப்பாடம் செய்து பலமுறை பயிற்ச்சியும் செய்த பின்னர் மேடையில் ஏறி நின்றேன்.

முன்னாலே அமர்ந்திருந்த சுமார் ஆயிரம் பேரையும் மேடை மேலிருந்து  பார்க்கையில் ஏதோ ஆயிரம் யானைகள் அணிவகுத்து நின்றதுபோல் காட்சி அளித்தது. தலை சுழன்றது. வார்த்தைகள் எழவில்லை! எப்படியோ ஆசிரியர் துணையுடன் ஒரு மாதிரியாக உரையை முடித்துவிட்டு கீழே இறங்கியதும் வாழ்க்கையில் இன்னொருமுறை மேடையில் ஏறக் கூடாது  என்ற சபதத்துடன் நின்றேன். ஆனால் அந்த அனுபவம் நல்ல ஒரு கற்றலைக் கொடுத்து என்னை ஒரு மேடை பேச்சாளனாக்கியது  .

மேடைப் பேச்சு ஒரு வல்லமை  வளர்க்கும் கலை. எந்த மேடையிலே நாம் ஏறுகின்றோம் என்பது  பற்றிய அறிவு தேவை  இலக்கிய மேடை, அரசியல் மேடை, கருத்தரங்க மேடை, போன்ற ஒவ்வொரு மேடையிலும் பேசுவதற்கு வேறுபட்ட திறன் வேண்டும். மேலும் ஒரு மேடையிலே:

  1. எத்தனை மணித்துளிகள் நாம் பேசப் போகிறோம்
  2. அதற்குள் என்னென்ன கருத்துக்களைச் சொல்லவேண்டும்.
  3. அதை எப்படிச் சொல்லவேண்டும்.
  4. அரங்கத்தில் அமர்ந்திருப்போரின் அறிவுத்திறன் எப்படி;
  5. நாம் சொல்லுவது அவர்களுக்குப் போய்ச் சேருமா,
  1. நமது பேச்சில் எவ்வளவு கருத்தாழம் இருக்கவேண்டும்
  2. அவர்கள்ஆர்வத்தையும் கவனத்தையும் நம்மிடம் எப்படி ஈர்ப்பது
  3. நமது உரையில் சிரிப்பும் சிந்தனையும் எவ்வாறு கலந்திருக்க வேண்டும்.
  4. வேறுபட்ட அறிவும்கருத்தாழமும் கொண்ட அரங்கத்தில் அனைவரையும் கருத்துக்களுக்கு கைகோர்க்க வைப்பது எப்படி
  5. உரையின்போது உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி

இது போன்ற பல கருத்துக்களை வளரும் பருவத்திலேயே மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் பிற்காலத்தில் அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்தத் தொழிலிலும் சிறப்பாக முன்னேறுவதற்கு உதவும். தற்காலத்திய தொழில் தளங்களில் மேடைப் பேச்சுத் திறன் (Public Speaking skills) மிக இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது.  பல நேரங்களில் பெரிய தொழிலதிபர்கள் கூட மேடையில் ஏறியதும் தயக்கப்படுவதும், வியர்த்தோ அல்லது ஒரு  விதமான நடுக்கம் அல்லது பய உணர்ச்சியோடு நிற்பதையோ நாம் கண்கூடாகக்  காண்கிறோம். இந்த உணர்வுகளை சிறு வயதிலேயே பயிற்சி மூலம் நீக்கிவிடலாம்.

பல அரங்கங்களில் ஒரு சிறந்த பேச்சாளர் பேசி முடிந்ததும் அங்கே அமர்ந்திருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட விழுக்காடு மக்கள் அங்கிருந்து எழுந்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆகவே, சிறந்த பேச்சைக் கேட்பதற்காகவே பலர்  அரங்கங்களுக்கு வருவதை நாம் காணலாம்.

எத்தனை சிறப்பாக நாம் பேசினாலும் அதைக் கேட்பவர்களின் ஆர்வமும் கவனமும் குறைந்துவிடுமுன் முடித்துக்கொள்ளுதல்  மிக்க அவசியம். விவேக சூடாமணி என்ற சம்ஸ்கிருத நூலிலே இவ்வாறு அழகாக சொல்லப்பட்டுள்ளது : “சொற்களின் வலையிலே ஒருவன் சிக்கிவிட்டால் ஒரு இருண்ட காட்டுக்குள்ளே சென்று தடுமாறுவதைப் போல; அது அறிவைத் தடுமாற வைத்துவிடும்”. பேசும் பொழுதில் முடிக்கத் தெரியாது தடுமாறுபவர்களின் நிலையும் இதுவே.

தொடருவோம்

அமெரிக்காவில் உள்ள ஒரு தலை சிறந்த மன இயல் வல்லுனரும் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான ஹோவர்ட் கார்ட்னெர் தான் வெளியிட்ட The Frames of Mind என்ற புத்தகத்தில் பலவிதமான புத்திகூர்மைகளை (Multiple Intelligence )பற்றி விவரிக்கும் நேரத்தில் மொழிசார்ந்த  புத்திகூர்மையை (Linguistic Intelligence ) சிறப்பாக விளக்குகின்றார். இந்தத் திறன் இருப்பவர்களை Word Smart என்று   கூறுவார். பலவித தொழில் மேன்மைக்கு இந்தத் திறன் அடிப்படியானது.

மேடைப் பேச்சுக்கும் இந்தத் திறன் அவசியம். எந்த இடத்தில் எப்படிப் பட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்தவேண்டும், அதன் விளைவுகள் என்ன, அதன் தாக்கங்கள் என்ன என்றெல்லாம் அறிந்து புரிந்து செயல் படுதல் அவசியம். இந்தத் திறனை முழுமையாக பயிற்ச்சிகள் மூலம் வளர்க்க முடியாவிட்டாலும் அதற்க்கான அடிப்படைத் திறன்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சொல்லிகொடுப்பது அவசியமாகத் தென்படுகின்றது.

தொடரும்..

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க