க. பாலசுப்பிரமணியன்

 

கரையோரம் கால்நனைத்துக் கடல்மீளும் அலைபோல

காற்றிழுக்கக் கரைசேரும் என்னுயிரே!

கார்மேகம் இடையிடையே கண்சிமிட்டும் மின்னலைப்போல்

களிப்படைந்த புலன்காட்டும் புன்சிரிப்பே!

 

வானுயரப் பறக்கின்ற நீர்த்திவலை நிலம்காட்டும்

வண்ணம்போல் வானவில் கனவுகளே !

வாடாத மலரென்றும் வாசம்வரும் நித்தமென்றும்

வாழ்க்கையை வாழ்த்துகின்ற மனமே !

 

போகுமிடம் தெரியாத புதிரென்று புரிந்தபின்னும்

போகத்திலே விடைதேடும் வாழ்வே !

போதாத மனம்கொண்டு புகலிடம் தேடிச்சென்று

போராடி புலியாட்டம் போடும் ஆசைகளே !

 

முதல் இதுவென்றும் முடிவு அதுவென்றும்

முன்னறியாப் பிறவியன்றோ நான் !

முடியாத விளையாட்டிலென்னை முதலாக வைத்து

முன்வினைக்குப் பழிதீர்க்கும் படலமிதோ?

 

புலியாக, நரியாக, புள்ளாகப் புழுவாக

புவியரசாய் நான் போடாத வேடமில்லை !

புரியாத கதையிதுவும் முடிகின்ற நேரத்தில்

புரியாமல் எனைக்கண்டே நான் நகைக்கின்றேன் !

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on ““நான்” என்னும் ஒரு நாடகம்  

  1. அருமையான ஆத்ம ஆய்வு பரிசீலனை

  2. தங்கள் பாராட்டுதலுக்கு உளங்கனிந்த நன்றி.

    அன்புடன்
    க பாலசுப்ரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.