எழுவகைப் பெண்கள்: 4. முரடாய்ப் போன இந்தப் பெண்ணின் உடம்பு

1

அவ்வை மகள்

ரேணுகா ராஜசேகரன்

விளையாட்டுத் துறையைப்போலவே காவல் துறை மற்றும் இராணுவத்திலும் பெண்களின் பணிப்பங்களிப்பு பற்றிய கரிசனங்கள் உலகெங்கிலும் எழுந்தவாறு உள்ளன. ஆண்-பெண் சமான அங்கீகாரத்திற்குப் பெயர் போனது அமெரிக்காவின் காவல் துறை. பெண்கள், காவல் துறையில் நுழைந்த 110 ஆவது ஆண்டைக் கொண்டாடி முடித்திருக்கிறார்கள். இத்தருணத்தில் அமெரிக்கக் காவல் துறையில் பெண் காவலர்கள் (அதிகாரிகளையும் உள்ளடக்கி) 15 விழுக்காடு மட்டுமே! இத்தருணத்தில், இங்கு, அமெரிக்கப் பெண்காவலர்களின் வரலாற்றைக் கொஞ்சம் மீள்பார்வை செய்வது பொருத்தமாய் இருக்கும்.

1908ல் முதல் காவல்துறைப் பெண் அதிகாரி பதவிப்பிரமாணம் எடுக்கிறார். 1912ல் முதல் பெண் ஷெரிப் பதவியேற்கிறார். 1968ல் இன்டியானாபோலிஸ் நகரில் முழுவதும் பெண்களாலான ரோந்துப்படை ஏற்படுத்தப்படுகின்றது . அதன் தலைமையும் அனைத்து அதிகாரிகளும் பெண்களே எனவும் ஆகிறது. 1970 களில் பெண்களைக் காவல்துறையில் கவர்ந்திழுக்கும்படியாய் எல்லாவகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பொது ஊடகங்களையும் கூடப் பயன்படுத்துகிறார்கள். தொலைக்காட்சியில் – சுவாரசியமான நாடகங்கள் கூட வருகின்றன. (விமன் போலிஸ் மற்றும் கெட் கிறிஸ்டி லவ் ஆகிய இரு நிகழ்ச்சிகளும் இவ்வகையில் பிரசித்தியானவை.) 1972ல் சிவில் உரிமைச் சட்டம் வெகு காட்டமாகத் தழுவப்படுகிறது. அதே ஆண்டில், ஜோயன் மிஸ்கோவும் சோசன் மலோனும் எப்.பி.ஐ அதிகாரிகளாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.

இத்தனை ஊக்கத்திற்கும் ஒரு முத்தாய்ப்பாக 1980ல் கண்ணாடிக்கூரை (glass ceiling) என்று சொல்வதான – பெண்ணுக்கு உள்ள பதவி உயர்வுத்தடையை உடைத்தெறிந்து காவல் துறையில் பெண்கள் அதிமேல் பதவிகளில் அமர்ந்தார்கள். 1985ல் போர்ட் லேண்ட் நகரில் போலிஸ் பியூரோவின் தலைமையில் அமர்ந்த பென்னி ஹாரிங்டன் மற்றும் 1994ல் காவல் தலைவராக அமர்ந்த முதல் கறுப்பினப் பெண்ணான அட்லாண்டாவின் பெவர்லி ஹார்வர்ட் ஆகியோர் காவல் பெண் முன்னோடிகளாக நின்று, பெண் குலத்தாருக்கு மிகப்பெரிய உந்து சக்தியாய் விளங்கினார்கள். பெண்கள் காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் பணிக்கு வருவதற்காக, பற்பல உத்வேக ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்தனர். பெண் காவலர் நலனுக்காகப் புதிய பணிசார் சட்டங்கள் மற்றும் புதிய சில அமைப்புக்களும் கூட உருவாகின. சட்டங்களை அமுல்படுத்துவதிலும் – பின்பற்றுவதிலும் – பின்பற்றாதோரைத்தண்டிப்பதிலும் – ஐக்கிய அமெரிக்கநாடு வெகு கறாரான நாடு என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எல்லாம் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையாகவே நடந்தன என்பதை நாம் கொஞ்சமாவது நம்பவேண்டும்.

இவ்வமைப்புகளுக்கு, காவல் துறையில் பெண் காவலர்களுக்குள்ள பணிசார் பிரச்சனைகள் என்ன என்பதைக் கண்டறிவதும் – அவ்வாறானப் பிரச்சனைகளில் தவிக்கும் பெண் காவலர்களுக்கு, சார்பும் உதவியும் வழங்குவதும் குறிக்கோளானது. உயர்நிலை அதிகாரிகளாகப் பெண்கள் வரத் தடையாக நிற்கும் முட்டுக்கட்டைகள் எவை எனக் கண்டறியவும் இவ்வமைப்புகள் முனைந்தன .

பட்டியலிட்டுப் பார்த்ததில் பிரமித்துப் போகிறோம்! காவல் துறையில் பெண்களை நுழைக்கவும் தக்கவைக்கவும் அமெரிக்கா செய்திருக்கிற முயற்சிகள் ஒன்றா இரண்டா? என்று!!

ஆனால், ஐயகோ! இந்த பகீரத முயற்சிகள் ஒன்றும் பட்டென்று எந்தப் பலனையும் என்றும் அளிக்கவில்லையே! மாறாக அங்குலம் அங்குலம் என்னும் அளவாய் நத்தை வேகத்தில் தான் இங்கே பெண்காவலர்களின் எண்ணிக்கை கூடலானது. இன்று 15 விழுக்காடு பெண் காவலர்கள்’ எனும் அளவை எட்ட 110 ஆண்டுகளாக, இந்நாடு படாத பாடு பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இங்கு இனிமேலும் காவல் துறையில் பெண்களின் அளவை உயர்த்த முடியுமா என்றால் “இயலாது” என்றே பதில் வருகின்றது பெண் காவல் தலைமைகளிடமிருந்து. “இருக்கும் இந்த எண்ணிக்கையும் தக்கவைக்க இயலுமா என்பதே கூட சந்தேகம் தான்” எனும் கூடுதல் பதிலும் வழங்கப்படுகிறது. 1905-லேயே காவல் துறையில் காவல்பணிக்காகப் பெண்ணை நியமித்த ஒரு நாட்டில் – உலகின் தலைமை எனும்படியாக மனிதவளக் குறியீட்டில் முதலிடத்தை வகிக்கும் ஒருநாட்டில் இந்நிலையா எனப் பலர் அதிர்ச்சியடையவும் கூடும். அதுவும் அமெரிக்கப் பெண்கள் அசாத்தியமானவர்கள். ஆண் -பெண் எனும் பாகுபாட்டு உணர்வு கூட இல்லாதவர்கள். தைரியத்திற்கும், ஆஜானுபாகுவானத் தோற்றத்திற்கும், கம்பீரக்குரலுக்கும் பேர் போனவர்கள். இவர்கள் நடந்தால் தரையே நடுங்கும். “என்னால் முடியாதது எதுவும் இல்லை!” என இயல்பான இறுமாப்பு உடையவர்கள். இவர்களா காவல்துறைக்கு வந்து பணிசெய்ய யோசிப்பது அல்லது மறுப்பது எனச் சற்றே நடுக்கம் கொள்பவர்களும் கூட உண்டு.

அமெரிக்கக் காவல் துறையில் உள்ள உண்மையான நிலைமை இப்படியென்றால் எங்கே பிசகு தட்டியது? – எங்கே திட்டக் கோளாறுகள் நிகழ்ந்தன? என்ன தவறு நிகழ்ந்தது? தொடர் கேள்விகள் எழுகின்றன.

அதுவும் காவல் சீருடையுடன், துப்பாக்கி இத்யாதிகளுடன் – குண்டுதுளைக்காத கவசத்தையும் மாட்டிக்கொண்டு அமெரிக்கப் பெண் போலிஸ் அதிகாரிகள் விருட்டென அமர்க்களமாய் நடப்பதைப் பார்த்தால் ஒரு கணம் நம் குலையே நடுங்கும் – அடுத்த கணம், . இத்தனை தைரிய சாலியாய் நாம் இருக்கக் கூடாதா என நம்மை நாமே கொஞ்சம் இடித்துக் கொள்வோம்.

அப்படிப்பட்ட, இந்தப் பலசாலிப் பெண்களுக்கு காவல் வேலையில் என்ன பிரச்சனை என்று கேட்கத் தோன்றியது.

படக்கென்று பதில் வந்தது ஒரு பெண் காவல் அதிகாரியிடமிருந்து, “இன்றைய போலீசில் பெண்களுக்குள்ள பிரச்சனை இந்தப் பெண்ணின் உடம்பும் மனதும் தான்!” என்று.

“போலிஸ் அதிகாரியாக நாடகங்களில் – சினிமாக்களில் நடிப்பது வேறு அன்றாடம் அதிகாரியாக வாழ்வது வேறு.” என்றார்.

“கத்தியையும், எக்குக் குழாயையும், துப்பாக்கியையும், குண்டு ரவைகளையும், மிளகுக் குழம்பு புட்டியையும் – இடுப்பில் மாட்டிகொண்டு – இந்தப் பிசாசுக்கவசத்தையும் – பூட்ஸையும் சுமந்து செல்லும் வேலையை முரடாய்ப் போன இந்தப் பெண்ணின் உடம்பு ஒருவேளை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டாலும் கூட – அவள் மனது – அதை ஏற்றுக்கொள்ள வில்லையே!”

“நான் ஒரு தாயல்லவா? இன்னொரு உயிரைக் கொல்ல என்னால் ஆகுமா? என் இடுப்பின் பாரத்தைப் போல் என் மனதிலும் தானே பாரம்? அதுவும் பெண்ணாயிருந்து கொண்டு நான் ஆண் என ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு நொடியும் – நிரூபிக்க வேண்டுமே! இது எத்தனைக் கொடுமை தெரியுமா?”

கண்ணில் பனித்த நீரைத் துடைத்தபடி, “துப்பாக்கியைத் தூக்கும் ஒவ்வொரு நொடியும் என் தோளும் தொடையும் நடுங்குகின்றன!” நான் பெண்ணா – போலிஸ் அதிகாரியா என்பது இங்கே பெரிய கேள்வி!” – மார்பைத் தடவிக் காட்டுகிறார்.

“நீங்களே சொல்லுங்கள் இந்த வேலை, பெண்ணுக்கு எத்தனை நாள் தாங்கும்?” எதிர் கேள்வி கேட்கிறார்.

மேலும் பேசுவோம்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எழுவகைப் பெண்கள்: 4. முரடாய்ப் போன இந்தப் பெண்ணின் உடம்பு

  1. சிந்தனையை கிளரும் கட்டுரை. நான் எழுதிவரும் ‘பெண்ணியம்: புதியபார்வை’ தொடரின் தூண்டுகோலே, கிட்டத்தட்ட ‘படக்கென்று பதில் வந்தது ஒரு பெண் காவல் அதிகாரியிடமிருந்து, “இன்றைய போலீசில் பெண்களுக்குள்ள பிரச்சனை இந்தப் பெண்ணின் உடம்பும் மனதும் தான்!” என்று.’ என்ற மாதிரி ஒரு பெண் என்னிடம் கூறியதின் விளைவே. மேலும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. தற்பொழுது இந்திய ராணுவத்தில் மூன்று பெண்கள் ஃபைட்டர் பைலட்ஸ். பார்க்கலாம்.

    வாழ்த்துக்கள், ரேணுகா, 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *