க. பாலசுப்பிரமணியன்

தூக்கமும் கற்றலும்

education-1-2-1

“தூங்கி வழியாதே. புத்தகத்தைப் படி ” என்று புத்தகத்தோடு போராடும் மகனுக்கு அறிவுரை கூறும் தந்தை.

“புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருது” என்று பரீட்சைக்கு முன்னால் தன் நண்பனுக்கு வழிமொழியும் நண்பன்.

“தூங்குவதற்கு முன்னாலே நான் கொஞ்சம் புத்தகம் படிப்பேன் . தூக்கம் தானாக வந்துவிடும்” என்று புன்னகையுடன் தன் தூக்கக் கலையை விளக்கும் என் ஆபீஸ் நண்பர்..

தூக்கத்தின் பேராண்மையைப் பற்றி போற்றாத மனிதரே கிடையாது எனச் சொல்லலாம். தூக்கத்திற்க்கும் புத்தகங்களுக்கும் கற்றலுக்கும் உள்ள  உறவுதான் என்ன?

“தூக்கத்தின் போது மூளை பழுது பார்க்கப்படுகிறது. அது மீண்டும் வேலை பார்ப்பதற்கான சக்தியையும் புத்துணர்ச்சியையும் பெறுகிறது” என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜான் மெடீனா என்பவர். ஆகவே தூக்கம் என்பது இயற்கை தந்த வரப்பிரசாதம். ஆனால் உண்மையிலே நாம் தூங்கும் பொழுது நமது மூளை தூங்குவதில்லை. அது தன்னுடைய வேலையை அமைதியாக ஒரு தங்கு தடையின்றி செய்து கொண்டிருக்கிறது.

அந்த நேரத்தில் தன் பதிவிலுள்ள எண்ணங்கள், கருத்துக்கள், நினைவுகள் அனைத்தையும் அது மறுபரிசீலனை செய்து அடுத்த செயலுக்காகத் தயாராக்கிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, நாம் கண்மூடிய சில நேரம் வரை உள்ளே கண்களில் அசைவுகள் எற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதை REM Sleep ( விரைவான கண் இயக்கத் தூக்கம் ) என்று சொல்லுவார்கள்.

மூளை மிகச் சிறப்பாக வேலை பார்க்க ஒரு மனிதனுக்கு குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் தேவை என்று மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நல்ல தூக்கம் அடுத்த நாள் ஒரு மனிதனுடைய அறிதல் புரிதலுக்கும் கற்றலுக்கும் மிகத் தேவையாகவும்  இருக்கின்றது .  ஆகவே அதிக நேரம் கண்விழித்துப் படிப்பதால் மட்டும் கற்றல் சிறப்பாக நடக்கிறது என்பது ஒரு தவறான கருத்தாகத் தெரிகின்றது. கற்றலின் போது கவனச் சிதறல் இல்லாமை, ஈடுபாடு, மற்றும் ஆர்வம் ஆகியவையே கற்றலைச் சிறப்புறச்  செய்கின்றது  .

நான் சிறுவனாக இருந்தபொழுது என்னை தினம் காலை நான்கு மணிக்கு படிப்பதற்காக எழுப்பி விடுவர். “காலை எழுந்தவுடன் படிப்பு ” என்ற பாரதியின் கூற்றுக்கேற்ப அந்த நேரம் முழுவதும் படிப்பதற்க்காகச் செலவிடப்படும் “அந்த நேரத்தில் படித்தால் மனதில் நன்றாகப் படியும் ” என்ற பெரியோர்கள் அறிவுரை தூக்கத்திற்குப் பின் தயாராக இருக்கும் மூளையின் திறனுக்கு ஊட்டமாக அமைந்தது. ஆனால் தற்காலத்தில் பலரும் கண்விழுத்து இரவில் படித்து தாமதமாகத் தூங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் காலையில் எழுந்து படிப்பவர்களை “குயிலென்றும் ” இரவில் கண்விழித்துப் படிப்பவர்களை “ஆந்தையென்றும்” அடைமொழி வைத்து அழைக்கின்றனர். இதில் எது சரியானது என்பது பற்றிய தொடர் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் “குயில்”களுக்குத்தான் இதுவரை  அதிக மதிப்பெண்கள்  கொடுக்கின்றனர்.

பல நேரங்களில் சிறிது நேரம் படித்தாலே தூக்கம் வருகின்றது என்று அங்கலாய்ப்பவர்கள் தாங்கள் படிக்கும் பொழுது புத்தகத்தை சரியான தூரத்திலோ அல்லது முறையினில் வைக்காமலிருந்தாலோ, அல்லது அதிக நேரம் படித்திருந்தாலோ, அல்லது வேறு மன உளைச்சல்களுடன் படித்ததாலோ கண்கள் சோர்வடைந்து தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்பட வாய்ப்புண்டு, ஆகவே புத்தகங்களை படிக்கும் பொழுது அவைகளை எங்கே எப்படி வைக்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும், எந்த விதமானஎழுத்து மற்றும் எழுத்துருக்கள் கண்களுக்கும்  கற்றலுக்கும்  சாதகமாக அமைகின்றன என்பது பற்றியெல்லாம் அறிந்து கொள்ளுதல் அவசியம். இந்த முறைகளையும் பழக்கங்களையும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் அவசியம்.

சில சமயங்களில் பகல் நேரங்களில் நாம் உணவு உண்ட பின்னோ அல்லது பகலில் நீண்ட நேரம் ஆழமான சிந்தனையினாலோ அல்லது உடலுழைப்பினாலோ மூளை சோர்ந்து அறிதல், புரிதல், மற்றும் கற்றலுக்கு மறுப்புத் தெரிவிக்கின்றது. கொட்டாவி விடுதல், கண்களில் ஒரு கிறக்கம், மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே தூங்குதல், பயணங்களின் பொழுது கண்ணுறங்குதல் போன்றவை மூளை ஓய்வைத் தேடுவதின் அறிகுறியாகக் கருதப்படுகின்றது. அந்த நேரங்களில் ஒரு சிறிய தூக்கம் மூளையின் சோர்வை நீக்கி அதை மீண்டும் வேலைக்குத் தயார் செய்கின்றது.

சப்பானில்  பள்ளிகளில் மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கட்டாய ஓய்வு தந்து உறங்க வைக்கின்றனர். அவர்களின் கற்றலை மேம்படுத்த இது மிக உதவியாக இருக்கிறது என்ற ஒரு கருத்து நிலவுகின்றது.

தொடரும்…

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கற்றல் ஒரு ஆற்றல் 32

  1. நான் மலாயா பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, இடையில் ஒரு மணி நேரம் கிடைத்தாலும் போதும், வாசகசாலைக்கு விரைந்து, மேசையில் தலை கவிழ்த்தபடி தூங்கிவிடுவேன். பிற மாணவர்களிடமிருந்து கற்றது இப்பழக்கம். தூங்குமுன் பக்கத்திலிருப்பவரிடம்` இத்தனை மணிக்கு என்னை எழுப்பி விடுங்கள்,’ என்று வேண்டுகோள் விடுத்திருப்போம். அவரும், குறிப்பிட்ட நேரத்தில் காசால் மேசையில் சன்னமாகத் தட்டி ஓசையெழுப்புவார். தூங்கி எழுந்ததும், அடுத்த பாடத்திற்கு ரெடி.

    நிர்மலா ராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *