Author: க. பாலசுப்பிரமணியன்

  • கற்றல் -ஒரு ஆற்றல் (14 ) 

    க. பாலசுப்பிரமணியன்

    பள்ளியின் முதல் படிகள்

    education112

    மழலைகள் தங்கள் பள்ளி வாழ்க்கையை எப்போது ஆரம்பிக்கவேண்டும்? எத்தனை ஆண்டுகள் தங்கள் வீட்டில் அம்மா, அப்பாவுடனோ அல்லது தாத்தா பாட்டிகளுடனோ இருந்து வாழ்க்கை முறைகளை கற்றுக்கொள்ளவேண்டும்?

    உலகமே தாயையே முதல் ஆசானாகக் கருதுகிறது. அது முற்றிலும் உண்மை. வீடுதான் குழந்தையின் முதல் பள்ளிக்கூடம். ஒரு நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே குழந்தைகள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் வரை வீட்டிலேயே இருந்து தங்கள் கற்றலை மறைமுகமாகவும் பழக்கங்கள் மூலமாகவும்  (  Indirect & Informal  Learning ) கற்றுக் கொண்டு வந்தனர். பள்ளிகளுக்குச் செல்லும் முன் வாழ்க்கை முறைகளைப் பற்றிய சிறிதளவு அறிவு அவர்களுக்கு இருந்தது. அவர்களின் அறிவு மட்டுமின்றி அவர்களுடைய உணர்வு நிலையம் (Emotional Status) ஓரளவு பக்குவப் பட்டிருந்தது.

    காலங்களின் தேவைகளுக்கும் சமூகச் சிந்தனைகளின் மாற்றங்களாலும் இன்று குழந்தைகள் மழலையர் பள்ளிகளில்   இரண்டாவது ஆண்டு முடிவடைந்த உடனே சேர்க்கப்பட்டு விடுகின்றனர். . இந்தத் தருணத்தில் குழந்தைகள் உடலாலும் உள்ளத்தாலும் உணர்வுகளாலும் முழுமையான நேரடிக் கற்றலுக்குத் தயாரான நிலையில் இல்லை. கற்றல் என்ற செயல் இயற்கையாக இல்லாமல் குழந்தையின் மூளையில் திணிக்கப் படுகின்றது .

    எவ்வாறு திருமணமான ஒரு பெண்ணுக்கு  தன்னுடைய கணவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது ஒரு தவிப்பான மனநிலை இருக்கின்றதோ அதே போன்று தான் புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தையின்  மனநிலையும் !

    புதிதாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? எந்த மாதிரியான உணர்வுகள் இருக்கும்? பொதுவாகக் கீழ்கண்ட உணர்வுகளை சொல்லலாம்.

    1.அச்சம் 2. தயக்கம் 3. பாதுகாப்பின்மை    4. ஆச்சரியம்    5. புதுமை

    6, சந்தேகம் ‘ 7. நம்பிக்கையின்மை 8. திருப்தியின்மை  9. உடல்சோர்வு 10.  ஆர்வம்

    எல்லாக் குழந்தைகளுக்கும் மேற்கண்ட எல்லா உணர்வுகளும் இருப்பதில்லை. ஆனால் எல்லாக் குழந்தைகளுக்கும் இவற்றில் சில  உணர்வுகள் நிச்சயமாக இருக்க வாய்ப்புண்டு. அது குழந்தைகளின் வீட்டுச் சூழ்நிலை, சமூகச் சூழ்நிலை, பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் பெற்றோர் அல்லது குடும்பத்தினரின் அன்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றது.

    குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் போது மேற்கண்ட உணர்வுகள் ஏற்படக் காரணம் என்ன? அவற்றின் தாக்கம் எப்படிக் குழந்தையை பாதிக்கின்றது?

    முதலாவதாக இடமாற்றம். (Change of Place) அறிந்த, பழகிய இடத்தை விட்டுத்  தெரியாத, புதிய, பழக்கமில்லாத இடத்திற்குச் செல்லும் பொழுது அது அச்சத்தையும் ஒரு பாதுகாப்பில்லாத உணர்வையும் ஏற்படுத்துகின்றது. (Moving from known to the unknown)

    இரண்டாவது காரணம் – ஒரு கட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையிலிருந்து கட்டுப்பாடு உள்ள சூழ்நிலைக்கு  ( from freedom to order ) குழந்தைகள் செல்கின்றன. இது ஒரு வரவேற்கத்தக்க கருத்து இல்லை. வீட்டில் இருக்கும் பொழுது அந்தக் குழந்தை எந்த விதமான உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் படுத்துப் புரளலாம். என்ன விதமான ஒலியோ அல்லது சப்தமோ செய்யலாம். அதன் நகர்வுகளுக்கு பூரண சுதந்திரம் உண்டு.. ஆனால் பள்ளிக்குச் சென்றவுடன் இந்த சுதந்திரம் அனைத்தும் பறிபோகின்றது.

    ஆகவே குழந்தைகளுக்கு ஒருவிதமான தயக்கம் மற்றும் திருப்தியின்மையும் ஏற்படுத்துகின்றது. இந்த நிலைமையை சமாளிப்பது எப்படி? இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எப்படி வெளி வரலாம் என்ற எண்ணங்கள் அந்தக் குழந்தையின் மனத்தில் உருவாகின்றன.

    மூன்றாவது காரணம்  ( A sense of suspicion )- பார்க்கின்ற மனிதர்களும் சூழ்நிலையும் புதிதானது. இங்கு நான் பார்க்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்? அன்புடன் இருப்பார்களா ? இவர்களால் எனக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? என் வயதில் இங்கே இருக்கின்ற எல்லோரும் என்னைப் போன்றவர்கள்தானா? அவர்களால் என்னுடைய தனித்துவத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? இவர்களோடு நான் சரிசமமமாக விளையாடலாமா? என்னைப் பற்றி இவர்கள் என்ன நினைப்பார்கள்? – என்ற பல ஐயப்பாடுகள் அந்தக் குழந்தைகளின் மனதில் ஏற்படுகின்றன..

    மேலும் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

    தொடரும். …….

    Share
  • மகாத்மாவின் குரல் (ஒரு நினைவாஞ்சலி)

    1. ஒரு மனிதனின் சிந்தனை ,சொல் மற்றும் செயல் ஆகியவற்றில் ஒருமைப்பாடு இருக்கும்பொழுதுதான் அவனுக்கு முழுமையான மகிழ்ச்சி கிடைக்கிறது.

    2. கோழைகளால் மன்னிக்க முடியாது. மன்னிப்பதற்கு ஒரு உறுதியான நெஞ்சம் தேவை.

    3. அகிம்சை மனிதனின் மிக சக்திவாய்ந்த ஆயுதம். உலகத்தில் புத்திகூர்மை கொண்டு தயாரிக்கப்பட்ட மிக வலுவான ஆயுதங்களை விட அகிம்சை வலுவானது.

    4. உலகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு நீங்கள் .முன்னோடியாக இருக்கவேண்டும்.

    5. நாளையே உங்கள் இறுதிநாள் என நினைத்துக்கொண்டு வாழவேண்டும். காலம்காலமாக நீங்கள் வாழப்போவதாக நினைத்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    Share
  • கற்றல் -ஒரு ஆற்றல் (13)                                  

     க. பாலசுபிரமணியன்

    ஒரு குழந்தையின் நடைப்பயணம்

    education11

     தவழுகின்ற குழந்தை ஓரிரு மாதங்களிலேயே உட்காரவும், பின்பு சுவர்களையோ அல்லது மற்ற பொருள்களையோ பிடித்துக் கொண்டு நிற்கவோ ஆரம்பிக்கிறது. இந்தச் செயல்கள் குழந்தையின் மூளை வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.. உடல் உறுப்புக்களின் அசைவிற்கும் (Motor Movements) அவற்றின் ஒருங்கிணைப்பிற்க்கும் இவை ஆதாரமாக அமைகின்றன. இப்படிப்பட்ட அசைவுகளின் தாக்கங்களைப் பற்றிய  கருத்துக்களை Kinesology என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

    ஏதாவது ஒன்றைப்பிடித்துக்கொண்டு நிற்க முயற்சிக்கும் பொழுது அந்தக் குழந்தை மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் முயற்சிக்கு ஒரு முன்னுதாரணமாகத் தெரிகின்றது. உள்ளத்தில் ஏற்படும் உந்துதல் அந்தச் செயலுக்குத் தேவையான சக்தியையும் தன்னுணர்வையும் அள்ளித் தருகின்றது. ஆகவே குழந்தைகள் இந்த முயற்சியில் ஈடுபடும் பொழுது பெற்றோர்கள் அருகில் இருந்து இந்த முயற்சிகளைப் பாராட்டவும் ஊக்குவிக்கவும் வேண்டும், அது குழந்தையின் தன்னம்பிக்கையையும் துணிச்சலான போக்கையும் வளர்க்கும்.

    பொதுவாக குழந்தைகள் நிற்கும்பொழுதோ அல்லது நடக்கும் பொழுதோ பெற்றோர்கள் தங்கள் பயத்தையோ அல்லது அச்சத்தையோ வெளிப்படுத்தக் கூடாது. அது குழந்தையின் முயற்சிகளுக்கும் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும். மாறாக அருகில் இருந்து அவர்களுடைய   செயல்களுக்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும்.

    மனிதர்களைத் தவிர மற்ற இனங்களில் ஒரு கன்று பிறந்தவுடன் சில நிமிடங்களிலேயே தங்கள் கால்களில் நிற்கவும் நடக்கவும் ஆரம்பித்து விடுகின்றது. மனித இனத்தில் குழந்தை பிறந்து கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு[ பின் தான் நடைபயணம் தொடங்குகின்றது. மேலும் ஒரு குழந்தையை நாம் கைகளால் பிடித்தோ அல்லது கூட நடத்தி வந்தோ  நடப்பதற்க்கான பயிற்சியை அளிக்கின்றோம்.

    ஆகவே பயிற்சி(Training) என்பது மனித இனத்தின் வளர்ச்சியிலும் கற்றலிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. கற்றலில் பயிற்சியினால் சில நன்மைகளும் உண்டு சில கெடுதல்களும் உண்டு. இவற்றை நாம் பின் கண்டு அறியலாம்.

    அமெரிக்காவிலுள்ள குழந்தை மனநல ஆராய்ச்சியாளர்கள் இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் நடை வண்டிகளை பற்றி மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இவை குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குத் தடையாக இருக்கும் என்றும், பிற்காலங்களில் தங்களுடைய எல்லா விதமான முயற்சிகளுக்கும் ஒரு உதவியையும் எதிர்பார்ப்பையும் உண்டுபண்ணும் என்றும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். ஆகவே, ஒரு குழந்தை நடைப்பயணத்தை ஆரம்பிக்கும் பொழுது பெற்றோர்கள் அந்தக் கற்றலை தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் பயமின்மையும் வளர்க்கின்ற  செயலாகக் கருதி துணை புரிதல் அவசியம்.

    நடைப் பயிற்சி ஆராம்பிக்கும் தருவாயில் குழந்தையின் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாக இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். இதனால் இரத்த ஓட்டம், தசைகளின் வளர்ச்சி மற்றும் அறிதல், புரிதல் வேட்டைகளுக்கான உந்துதல் ஆகியவை  அதிகரிக்கின்றன. குழந்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் சென்று பொருள்களைத்  தேடவும் அதனால் ஏற்படும் மகிழ்வையும் துயரத்தையும் வெளிப்படுத்த ஆரம்பிக்கின்றது. மூளையின் ஒரு பகுதியில் இருக்கின்ற மகிழ்வு நிலையமும்( Pleasure Center) மற்றும் துயர நிலையமும் ( Pain Center)தங்களுடைய உணர்வுகளை சற்றே துரிதமாக வெளிப்படுத்தத் துவங்குகின்றன. இந்த நிலையில் பெற்றோர்கள் குழநதைகளின் நகர்வுகள், நடைப் பயிற்சியின் தாக்கங்கள், மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து பேணுதல் அவசியமாகிறது.

    குழந்தைகள் நடைப்பயணத்தை ஆரம்பிக்கும் நேரங்களில் அவர்களை வெறும் கால்களில் நடக்கச் செய்தல் அவசியம். குழந்தைகளுக்கு காலணிகளை (shoes) அணிவித்தலை நிபுணர்கள் எதிர்க்கின்றனர். அவர்களுடைய கால்கள் தரையில் படும் பொழுது ஏற்படுகின்ற அழுத்தங்களால் இரத்த ஓட்டம் சிறப்பாக இருப்பதற்கும் மற்றும் இரண்டு கால்களுக்கும் இடையில் நகர்வின் சமன்பாடுகள் ஏற்படுவதற்கும், இரு கால்களில் நின்று சமநிலையான தன்மையைப் பெறுவதற்கும் அது தேவைப்படுகின்றது. சில நேரங்களில் காலணிகளை அழுத்தமாக அணிவிக்கும் பொழுது கால் வளர்ச்சிக்கு மட்டுமின்றி அதன் தாக்கம் மூளையின் வளர்ச்சிக்கும் ஏற்படுவதாகக் கருதுகின்றனர்.

    நடக்க ஆரம்பித்து விட்ட குழந்தை இனி பள்ளிக்குப் போகவேண்டாமா?

    அடுத்த இதழில் பள்ளிக்கு குழந்தையை வரவேற்போம் !

    தொடரும் ..

    Share
  •   கற்றல் -ஒரு ஆற்றல் (12)

    க. பாலசுப்பிரமணியன்

    கண்ணோடு கண் நோக்கின்…

    education11

    குழந்தையின் வளர்ச்சியின் படிக்கட்டுக்களில் ஒரு முக்கியமான நிகழ்வு “கண்ணோடு கண் நோக்குதல் “. இதைப் பற்றி நாம் குழந்தை பிறந்த சில வாரங்களில் ஏற்படும் வளர்ச்சியின் போது அறிந்தோம்..ஆனால் ஒரு குழந்தை ஐந்து அல்லது ஆறு மாதங்கள் ஆகிய பின் இதே நிகழ்வினால்  வேறு பல தாக்கங்கள்  ஏற்படுகின்றன.

    தன் தாயின் கண்களோடு உறவாடும் குழந்தை அந்தத் தாயின் உணர்வு நிலைகளை எளிதாகப் புரிந்துகொள்கின்றது. அதே போல் மற்றவர்கள் நோக்கும் பொழுதும் அவர்களின் கண்பார்வையின் பொருளை அறிந்து கொள்ள முற்படுகின்றது. சில நேரங்களில் மற்றவர்களின் பார்வை பயத்தை தூண்டுவதாகவோ அல்லது ஏதாவது அச்சத்தை எற்படுத்துவதையோ குழந்தை உணர்கின்றது. உடனே அதன் கண் விழிகள் தாமாகவே கீழ்நோக்கிச் செல்கின்றன. அதே போல் மற்றவர்களுடைய பார்வை ஒரு ஐயப்பாட்டை ஏற்படுத்துவதாக இருந்தால் விழிகள் மேல்நோக்கியோ அல்லது சுழன்றோ தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.  “கண்ணோடு கண்” நோக்கும் பொழுது மற்றவர்களிடமிருந்து தமக்கு பாதுகாப்புக்கான உத்திரவாதம் கிடைக்கிறதா என்று உணருகின்றது.  அந்த நேரங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அழுதோ அல்லது மறுப்பைத் தெரிவித்தோ உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது.

    மற்றவர்களுடைய கண்களைப் படிக்கும் குழந்தை – கோபமுள்ள முகங்கள், மலர்ந்த முகங்கள், துயரமான முகங்கள் மற்றும் ஏளனம், வீராப்பு போன்ற உணர்வுகளைக் காட்டும்  முகங்களை அடையாளம் கண்டு கொள்கின்றது. அந்தக் குழந்தைக்கு இந்த உணர்வுகளைப் பற்றி ஏதும் தெரியாமலிருந்தாலும் அந்த உணர்வுகள் தனக்கு ஒரு  சாதகமான சூழ்நிலையை  (Comfort  zone )உருவாக்கவில்லை என்பதை மட்டும் புரிந்துகொள்கின்றது.

    கண்ணோடு கண் நோக்கும் இந்தச் செயல் மூளையில்  அறிதல், புரிதல் ஆகிய நிகழ்வுகளுக்கு அடிவாரமாக அமைகின்றன. மற்றும் ஒரு குழந்தையின் உணர்வு நிலைகளை (emotional status) பாதுகாக்கவும் உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. ஆகவே பெற்றோர்கள் குழந்தைகள் தங்களோடும் மற்றவர்களோடும் உறவாடும் பொழுது அவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

    மேலும் மொழி வளர்ச்சிக்கும், உச்சரிப்புகளின் மேன்மைக்கும், உடல் மொழிகளை பக்குவப்படுத்துவதற்க்கும் இந்த கண்ணோடு-கண் நோக்கும் (eye-eye coordination) செயல் மிக்க பயனுள்ளதாக அமைகின்றது. குழந்தை பருவத்தில் இதை நாம் முகம் படித்தல் (face reading ) என்று சொல்லலாம் .

    “கண்ணோடு கண் நோக்குதல்” உளவியல் கருத்துகளின்படி ஒருவருடய கவனம் (attention) மற்றும் ஈடுபாடுகளை (Focus) வளர்க்க உதவுகின்றது., மேலும் மற்றவர்களுடைய  கருத்துக்களை ஊர்ந்து ஆழமமாக கேட்பதற்கும் (Listening Skills ) அறிவதற்கும் (cognition) இந்த நிகழ்வு  முதல் படியாக இருக்கின்றது.

    பின் காலங்களில் வளர்ச்சியின் மேல்படிகளில் நிற்கும்பொழுது இந்தக் கற்றல் மற்றவர்களை புரிந்து கொள்ளவும், (understanding behaviours) எடை போடவும், (evaluate) மற்றவர்களோடு தக்க முறையில் உறவாடவும் ( Relationship management ) உதவுகின்றது.

    மூளை வளர்ச்சி பற்றி ஆராயும் வல்லுனர்கள் எவ்வாறு இந்த நிகழ்வின் தாக்கம் கண்ணாடி  நியூரான்களின் மேல் (Mirror Neurons ) ஏற்படுகின்றது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். மூளை வளர்ச்சியில் சில குறைபாடுகள்  ஏற்படும் பொழுது இந்த “கண்ணோடு கண் நோக்கும் செயல் ” பாதிக்கப் படுகின்றது, அதன் காரணமாக வளர்ச்சியின் சில வடிவங்கள் அதிகமாக பாதிக்கப் படுகின்றன.

    டேனியல் கோல்மான் என்ற அறிஞர் தன்னுடைய “Social intelligence” என்ற புத்தகத்தில் ஒரு மனிதனுடைய சமூக புத்திகூர்மைக்கு “கண்ணோடு கண் நோக்கும் ” செயலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார். ஒரு சமூகத்தில் நாம் வாழும் பொழுதும் மற்றவர்களோடு பேசும் பொழுதும் நாம் அவர்களுடைய கண்களிலிருந்து பலவற்றைப் புரிந்து கொள்கின்றோம். “வாய் பேசாததையெல்லாம் கண் பேசியது ” என்று சொல்கின்றோம். ஆகவே குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில்  “கண்ணோடு கண் நோக்கும்” செயலை நாம் “கண்ணாக” கவனிப்போம்.

    தொடரும்…..

    Share
  • நானும் சங்கரன் தான்..  சிறுகதை .. க. பாலசுப்ரமணியன்

    “மகாலிங்கம் .. மகாலிங்கம்…”

    அந்த திருவிடைமருதூர் கோவில் பிரகாரம் முழுதும் அந்த ஒலி எதிரொலித்தது. காலை ஐந்தரை மணிக்கு அந்தக் குளத்திலே  நீராடி விட்டு, குளிர் காற்று  சில்லென்று உடம்பைத் தழுவ, திருநீறின் மணம் பக்தி பரவசத்தை உண்டாக்க அந்தக் கோவில் பிரகாரத்தை சுற்றி வருவது மனதுக்கு இனம் புரியாத மகிழ்ச்சியை த்  தந்தது. .

    மீண்டும் யாரோ அங்கே  “மகாலிங்கம், மகாலிங்கம்” என்று குரல் எழுப்பியதும் என் சுயனைவுக்குத் திரும்பினேன்.

    ” இந்தக் கோவில் ரொம்ப பெரிசு. இங்க வந்து தரிசனம் பண்ணினா ” பிரம்மஹத்தி தோஷம்” விலகிடுமாம். நிறையப் பேர் சொல்லுவா.” முன்னாலே போன பெரியவர் நான் இந்தக் கோவிலுக்கு முதல் முறையாக வருவதைப் புரிந்து கொண்டார் போலும்.., எனக்கு விளக்கிவிட்டுச் சென்றார்.

    பிரம்மஹத்தி தோஷம்னா  என்ன? என் மனதில் ஒரு கேள்வி. சான்றோரைக் கொன்றதாலா, இல்லை, கர்ப்பிணிப் பெண்களைக் கொன்றதாலா, இல்லை முதியோரையோக்  கொன்றதாலா .. சந்தேகத்திற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

    ‘”ஓம் நமச்சிவாய,  ஓம் நமச்சிவாய”  என்று சொல்லிக்கொண்டே முன் நகர்ந்தேன்.

    ” காலையிலே நீங்கள் தான் முதல் தரிசனம். விஸ்வரூப தரிசனம் மாதிரி.. பசிக்கறது.. ஏதாவது கொடுங்கோ..”

    ஒரு நாலு முழம் வேட்டியைக் கட்டிக்கொண்டு இடுப்பில் ஒரு துண்டை இருக்கிகொண்டு  திருநீறு அணிந்து முன்னே நின்ற உருவத்தைப் பார்த்ததும் பகீரென்றது.! இவரை எங்கேயோ பார்த்திருக்கேனே.. மனம் ஆழ்ந்த சிந்தனயில் ஈடுபட்டது..

    ” சார்,உங்களைத்தானே  ஹெல்ப் பண்ணுங்கோ..””

    இந்தக் குரலும் சற்று பழகிய குரலாகத் தெரிகிறதே..”

    ” ..நீங்க. “… கொஞ்சம் தயங்கிக் கேட்டேன் “அனந்து சார் இல்லே”

    ” அனந்து .. அனந்தன்.. ஆனந்தன்.. ஆனந்தம்  எல்லாம் என் பெயர் தான். கோவிலுக்கு உள்ளே இருக்கானே, அவனுக்கும் இந்தப் பெயரெல்லாம்  உண்டு., ..பசிக்கிறது.. ஏதாவது குடுங்கோ..”

    “நீங்க நாகர்கோயில் கணபதி கோயில் தெருவிலே இருந்தேளோ?”

    “பிள்ளையார்.. எல்லாக் கஷ்டத்தையும் நிவர்த்தி செய்வார். நோ டவுட். எதாவது தருவேளா..”

    மனம் வலித்தது.. இவருக்கு எதாவது மன நோயோ? ஏன் இங்கே வந்து பிச்சை கேட்டுக்கொண்டு இருக்கிறார்?  இவர் குடும்பம் முழுவதும் எனக்குத் தெரியுமே..”

    “சார், உங்கள் குழந்தைகளெல்லாம்..?”

    “குழந்தைகளா?…..” ஏதோ பெரிய ஜோக் சொல்லிவிட்டதைப் போல் சிரித்தார்… ” சின்ன வயசிலேதான் அவர்கள் குழந்தைகள்… அதுக்கப்பறம் படிச்சு வேலைக்குப் போயாச்சுனா அவா எல்லாம் ஆபீசர்கள் .. என் வாரிசுகளெல்லாம் பெரிய ஆபீசர்கள். …”

    அவர் சூசகமாகச சொன்னதிலிருந்து அவர் வாழ்வின் உண்மை தெரிய வந்தது..

    “‘ஜெர்மனி தெரியுமா, ஜெர்மனி அங்கதான் என் ஆபீசர் மகன். ..” அந்த வார்த்தைகளில் தொனித்தது பெருமையா ஏளனமா என்று தெரியவில்லை.

    ” உங்க மனைவி… ? ”  மீண்டும் வாய் விட்டுச் சிரிப்பு..

    பெண்டாட்டி ரொம்பப்  படுத்தினா, அவ்வை என்ன சொன்னா தெரியுமா “கூறாமல் சன்யாசம் கொள்”  .. சொல்லிவிட்டு மீண்டும் ஒரு சிரிப்பு..

    ” நீங்க ஒரு கம்பெனியிலே மக்கள் தொடர்பு  அதிகாரியாக இருந்தேளில்லையோ ..”

    “அன்னிக்கும் மக்கள் தொடர்பு .. இன்னிக்கும் மக்கள் தொடர்பு.. அன்னிக்கு நான் பேசினதுக்கு காசு கொடுத்தா .. இன்னிக்கு நான் பேசாம இருக்கறதுக்கு காசு கொடுக்கறா.. நீங்க எப்படி?  பசிக்கறது.. ஏதாவது தருவேளா…”

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்ற ஒரு அனுபவம். ,.” நிச்சயமா தரேன்.. ஆனா ஒரு கேள்வி.. உங்களுக்கு அந்த தெருவிலே ஒரு வீடு இருந்ததில்லையோ? ”

    “வீடு.. அந்த வீடு வேற.. நான் இனிமே போகப்போற வீடு வேற.. அந்த வீட்டை விலைக்கு விக்கலாம்.. எல்லாரும் ஷேர் பண்ணிக்கலாம் .. இந்த வீட்டுக்கு விலையே கிடையாது.. யாரும் ஷேர் பண்ணிக்கவும் மாட்டா ..”

    “வீடு வரை உறவு..: கண்ணதாசன் பாடல் கேட்டிருக்கேளோ? அதெல்லாம் கேட்ட பின்னும்  ஜனங்களுக்கு புத்தி வர மாட்டேங்கறது… சரிதானே?

    “மகாலிங்கம்  மகாலிங்கம்” .. கோவில் முழுதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது .. அந்த சிவன் அங்கே அமர்ந்து கொண்டு ஏன் இப்படி நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்  என்று  புரியவில்லை.

    “ஹலோ ..” அவர் குரல் மீண்டும் என்னை ஈர்த்தது. .”உங்களுக்கு ஆதி சங்கரரைத் தெரியுமோ…?:

    நான் தலையை அசைத்தேன் .. “அவர் எங்கே பிறந்தார்?”  ஏதோ விநாடி வினாவில் கேள்விகள் கேட்பது போல் கேட்டார்.

    :”காலடி” மெதுவாகச் சொன்னேன்.. “கரெக்ட்.  அவர் எப்படி சாப்பிட்டார் தெரியுமா?”

    நான் மௌனமாக இருந்தேன். அவர் தொடர்ந்தார்.

    ” பவதி பிக்ஷான் தேஹி.”.. தினசரி வீடு வீடாகப் போய்  “பவதி பிக்ஷான் தேஹி”  என்று பிக்ஷாவந்தனம்  செய்து தானியங்கள் பெற்று உணவு சமைத்து சாப்பிட்டார்.”

    எதோ ஒரு பெரிய உண்மையை  கண்டறிந்தது போல் நான் பேசாமல் இருந்தேன்.

    ” இப்போ நானும் “பவதி பிக்ஷான் தேஹி”  வீடு வீடாகப் போகலை. இங்கேயே இப்படியே கோவில் வாசலிலே நின்று கொண்டு :பவதி பிக்ஷான் தேஹி.,”

    “:சொல்லுங்கோ.. எனக்கும் சங்கரனுக்கும் என்ன வித்யாசம்? நானும் சங்கரன் தானே..”  சிரித்துக்கொண்டே  “அவர் ஆதி சங்கரர்.. நான் ஆதி அனந்தர்..”.. ஓ வெனக் கைகொட்டிச் சிரித்தார்.

    மெதுவாக அவர் கைகளைப் பிடுத்து அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்றேன். அவருக்கு வேண்டிய காலை  டிபன் கொடுக்கச் சொன்னேன்.. அவர் கைகளில் ஒரு நூறு ரூபாய் நோட்டைத் திணித்தேன்.

    அவரைப் பார்த்த அந்த ஹோட்டல் முதலாளி “யாரு? பவதி பிக்ஷான் தேஹி சாரா?” புன்னகை அவர் முகத்தில்.

    அருகில் இருந்த சிவபிரானின் படத்தை ஒருமுறை பார்த்து “மகாலிங்கம்” என்றார்.

    கடைசியாக அவரிடம் நான் “சார், நான் யார் என்று தெரிகிறதா?” எனக்கேட்டேன்.

    என்னை ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு  “ஆதி அனந்தருக்கு இன்னிக்கு பிக்ஷா வந்தனம் செய்த ஒரு நல்லவர்.. ராஜாராமன் என்ற நாமதேயம்.” இட்டிலியை சாம்பாரில் தோய்த்து வாய்க்குள் திணித்தார்

    என் சப்த நாடிகளும் அடங்கி நின்றன!!

     

    Share
  • மார்கழி மணாளன் 29 – ஸ்ரீ வைகுண்டம் – கள்ளபிரான்  

     க. பாலசுப்பிரமணியன்

    631591bb-352f-47f8-b69b-757f4f92dc99

    வேதங்களைக் காத்திடவே வேண்டி நின்றான் நான்முகனும்

    வைகுண்டம் விட்டுவந்த மாதவனும் மனமிரங்கிக் காத்தான்

    வானில் மட்டுமின்றி  மண்ணிலோர் வைகுண்டம் படைத்தான்

    வந்தவர்கள் நலம் காத்து வாழ்க்கைக்குப் பொருள் கொடுத்தான் !

     

    கல்லுக்கும்  பால் பொழிந்து கருணைகண்ட பசுவிடம்

    குறை கண்ட மன்னவனும் பசுவைப் பழித்தே தொடர

    குறைவில்லா கோபாலனை மண்ணுக்குள் கண்டான்

    குலம் வாழ நல்லதோர் கோவில் கட்டி மகிழ்ந்தான் !

     

    கள்ளனும்  கொண்டான் கண்ணனிடம் காதல் நெஞ்சம்

    காத்திட வேண்டியே  நின்றான் கோகுலன் முன்னம்

    கண்ணனே கள்வனாய்ச் சென்றான் காவலில் தஞ்சம்

    கருணையின் வடிவே என்றும்  கள்ளபிரான் மஞ்சம் !

     

    கொஞ்சுபவர்க்குக் குழந்தையாய் வரும் கண்ணன்

    கோலாகல வாழ்க்கைக்கு  குழலூதும் அன்பன்

    கோடித்துயர் வந்தாலும் கூட நிற்கும் நண்பன்

    கோசங்கள் அழிந்ததுமே அணைக்கும் வைகுந்தன் !

     

    வேண்டியவர்க்கு வேண்டியதைத் தந்துவிடும் வைகுண்டம்

    வேண்டாதவர்க்கும் உடல் வினை முடிய வீடு தரும் !

    வீதியில் வாழ்ந்தாலும் வீடு பணம் சேர்த்து உயர்ந்தாலும்

    விதி முடிவில் விரும்பிச் செல்லும் வாசல் வைகுண்டம் !

     

    மனம்விரும்பி மாதவனைத் தேடும் நேரம்

    மாதங்கள் பன்னிரண்டில் மார்கழியைச் சேரும் !

    மங்கலங்கள் பொங்கிவர வழிவிடும் மார்கழி

    மாதவன்  அருளோடு வருவாய் மீண்டும் வீடுதேடி !

    Share
  • மார்கழி மணாளன் – 28 திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள்

    க. பாலசுப்பிரமணியன்

     8a79f235-b849-4a74-9630-8b24b0d4ae02

    புல்லருடன் கன்வரும் வளர்த்திட்டார் வேள்வித்தீ

    புவியினிலே என்றும் பரந்தாமன் அருள் வேண்டி !

    அரசமரமாய் உருவெடுத்து அவன் அருள்தந்தான்

    அன்புடனே உருமாறி ஆனான் ஆதி ஜெகந்நாதன் !

     

    ஊழ்வினையில் உருண்டுவந்த பாவம் நீக்கி

    ஊர்போற்றும் வம்சத்தை வளர்த்திட வேண்டி

    தலைநாகர் சிலையொன்று முன் நிறுத்தி

    தவமிருக்க தயரதனும் வந்தான் திருப்புல்லாணி !

     

    ஊர்போற்றும் பிள்ளைகள் பெற்றான் தயரதனும்

    வான்போற்றும் வண்ணம் அருளியதே புல்லாணி !

    நாள்தோறும் தேடிவரும் நன் மக்கள் குறைதீர்க்கும்

    அற்புதமே ! ஆழ்வார்கள் போற்றிய திருத்தலமே !

     

    சூதுகொண்டு பண்பிழந்த சூர்ப்பனகையின் தமையன்

    சாதுவாக உருக்கொண்டு சத்தியத்தின் வேரழித்தான் !

    குலமகளைக் கடத்திச் சென்று கொக்கரித்த இராவணனின்

    குலமழிக்கக் கடலோரம் புடைசூழ வந்தான் காகுந்தனும் !

     

    தவத்தோர் விழைகின்ற தயரதனின் மைந்தனும்

    தர்பையிலே உடல் கிடத்தித் தவமிருந்தான் !

    குரங்கோடு அணிலும் கூடியொரு பாலமமைக்க

    குவலயமே வியந்திட்ட கோவில் புல்லாணி !

     

    ஆணவம் அழித்தே வருணனை வென்றான்

    அரங்கனின் அருளுடன் வில்லும் பெற்றான்

    அரக்கனின்  தம்பிக்கு அடைக்கலம் தந்தான்

    அன்புடை நெஞ்சுக்கு அருள்தரும் புல்லாணி !

     

    கண்மூடும் சொல்லிரண்டில் உனைச் சேர்க்க,

    கண்ணிரண்டில் நீ நிற்கச்  சொல் உறங்கும் !

    காட்சிக்கும் சொல்லுக்கும் ஏன் கண்ணாமூச்சி?

    காதலுற்றேன் ! கருணை செய்வாய்!  கற்பகமே!

     

    மண்ணுலகில் உன்னழகு மனம் கவரும்

    விண்ணுலகில் உன்னழகு என்ன சொல்லும் ?

    மண்ணுலகும் விண்ணுலகும் மயங்கிவிடும்

    மாதவனே! மலைத்தேனே ! மனம் நிறைவாய் !

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் – 27  திருக்கண்ணபுரம் – சௌரிராஜப் பெருமாள்

     க. பாலசுப்பிரமணியன்

    a0c91dd0-6b87-4e67-b173-c7053220b073

    கண்ணனின் கண்ணசைவில் கனிந்துவரும் பூபாளம்

    குழலூதும் கையசைவில் காற்றிசைக்கும் மோகனமே

    காலிரண்டும் தாளமிட கண்சிமிட்டும் கல்யாணி

    கார்மேகன் கண்ணபுரம் காலமெல்லாம் ஆனந்தபைரவி !

     

    கண்ணனின் கோவிலுக்கு மன்னவனும் மலரனுப்ப

    கள்ளமாய் பட்டரும் அதை காசுக்கு விற்றார் !

    கண்டறிந்த மன்னனுக்கு அளித்த மாலையிலே

    கரியதோர் மயிர் கண்டு கலக்கமுற்றான் வேந்தனுமே !

     

    கள்வனுக்குத் துணைவந்தான் கள்வன் கண்ணனுமே

    கரியதோர் சிகை கண்டு கண்டோரும் வியந்தனரே

    கண்ணனும் பெயர் கொண்டான் சௌரிராஜன்

    கணநேரம் நினைத்தாலும் காத்திடும் கண்ணபுரமே !

     

    மனமுடைந்து நின்றான் பக்தியுடன் முனயோதரன்

    மங்கலமாய் பொங்கலிட காலம் கடந்ததேன்றே !

    மனம்கசிந்து மாதவனும் மணியோசை ஒலித்திடவே

    பொங்கல்மணம்  பொங்கிடவே அருள் செய்தான் !

     

    கண்ணபுரத்தான் கைப்பிடித்தான் மீனவப் பெண்ணை

    காசினியில் சாதி பேதம் நீக்கி சமத்துவம் படைத்திடவே !

    பாருள்ள படைப்பெல்லாம் பரந்தாமன் பார்வையில் ஒன்றே

    பாதைகள் வேறானாலும் போகுமிடம் பரமபதம் ஒன்றே !

     

     

    Share
  • மார்கழி மணாளன் – 26 – திருக்கோஷ்டியூர் -ஸ்ரீ சௌம்ய நாராயணப் பெருமாள்

    க. பாலசுப்பிரமணியன்

    3b7d82e4-d54c-4465-be64-8d85f073c33b

    நல்லோரும் வல்லோரும் நான் முகனும்

    நமச்சிவாயத்தொடு கூடிய  திருத்தலமே !

    ஊர்வாழ உலகம்வாழ கைகோர்த்து வாழ

    உள்ளங்கள் ஒன்றாக்கி காட்டிய தத்துவமே !

     

    பூவலகில் கண்ணனின் கால் வண்ணம்

    பாற்கடலில் கிடக்கும் உடல் வண்ணம்

    வைகுந்தத்தில் அவன் முழுவண்ணம்

    மூவுலகும் ஒன்றாக்கும் எழில் வண்ணம் !

     

    நானென்று வந்தான் நல்லதோர் மாணவன்

    நாரணன் மந்திரம் நம்பியிடம் கற்றிட

    வாவென்று சொல்ல மறுத்து வருத்தியே

    வந்தானைத் திருப்பினார் ஆசானும் நம்பியே !

     

    நானழிந்து வந்தவன் நற்கதி பெற்றிட

    நாரணன் அட்சர மந்திரம் அறிந்தான் !

    நானிலம் அனைத்துமே நற்கதி பெற்றிட

    நற்கோவில் மேல்நின்றே  ஒதிட்டான் !

     

    நரகத்தின் பயமில்லை நல்லதோர் நெஞ்சுக்கு

    நானிலம் வாழ்ந்திட்டால் நலமே உலகுக்கு

    சாதியும் மதமும் சந்நிதியில் ஒன்றுதான்

    சமத்துவப் பார்வை கண்ணனின் கீதைதான் !

     

    பெருமாளின் அருள்பெற்ற அந்தணன் ராமனுஜன்

    பெருந்தகை நம்பியின் ஆசியால் எம்பெருமான் !

    ஊரினைக்கூட்டி   திருவடி மந்திரம் தந்தவன்

    திருவருள் பெருக்கிட்ட திருமாலின் திருத்தலம் !

     

     

     

    Share
  • கற்றல் -ஒரு ஆற்றல் (11)

     க. பாலசுப்பிரமணியன்

    தவழ்தல் – மூளையின் வளர்ச்சிக்கு முதல் படி

    education1

    வளரும் குழந்தைகளின்  மனத்தில் கற்றலின் வித்துகள் பதிந்து இருக்கின்றன. ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது அதைப் பற்றி அறிந்து கொள்ளக்கூடிய ஆர்வம் உள் மனத்தில் வேரூன்றுகிறது. அதைப் பற்றி அறிந்து கொள்ளவும் அதனை உணந்து பார்க்கவும்  மனம் விழைகின்றது. இதனால் ஏற்படும் ஊக்கத்தால் அதன் கை மற்றும் கண்ணசைவுகள்  அந்தப் பொருளை நோக்கிச் செல்கின்றன. கூடிய விரைவில் அந்தப் பொருளை நோக்கிச் செல்ல மனத்தில் தூண்டுதல் ஏற்படுவதால்  அந்தக் குழந்தையின் உடல் அசைவுகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    குழந்தை மன இயலையும் நலத்தையும் ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்கள் அவர்களின்  மன  மற்றும் மூளையின் வளர்ச்சிக்கு இந்தப் பருவத்தை மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர்.  எப்படி கண்ணோடு கண் நோக்குதல் உறவுகளுக்கும்  புரிதலுக்கும் இன்றியமையாததோ அதுபோன்று கண்ணும்- கைகளும் சேர்ந்து உறவாடுதல் (eye – hand coordination ) மிக முக்கியமான செயல். ஒரு குழந்தையை உன்னிப்பாகக் கவனித்தால் எந்தப் பொருளிடம் நாட்டம் இருக்கின்றதோ அதை நோக்கி கை காட்டுதல், கைகளை ஆட்டுதல், கால்களை நீட்டுதல் போன்ற சில  செயல்களைக் காணலாம்.

    கண்-கைகளின் உறவாடுதல் வளர்ச்சியில் பிற்காலத்தில் திறன்களை வளர்க்கவும் (Skill Development ), பார்வை சார்ந்த திறன்கள் (visual skills ) மற்றும் கைத்திறன்களையும் நகர்வு சார்ந்த கலைகள்( Kinesthetic Skills )

    மற்றும் திறன்களையும் வளர்ப்பதற்கு அடிவகுக்கும். ஆகவே குழந்தைகள் ஒரு பொருளை பிடித்தல், நகர்த்துதல், ஆட்டுதல், உடைத்தல், மற்றும் கிழித்தல் போன்ற செயல்களை வெறும் விளையாட்டாகக் கருதாமல் அதன் கற்றலின் உள்நோக்கங்களை அறிந்து பெற்றோர்கள் அதற்கு துணையாக இருத்தல் அவசியம். பொதுவாக மழலையர் பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் பொழுது  இது போன்ற திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் இந்தத் திறன்கள் மழலைப் பருவத்தில் பிறந்த சில மாதங்களிலேயே வெளிப்படத் துவங்குகின்றன.

    வளரும் பாதையில் அடுத்த முக்கியமான நிகழ்வு குழந்தை தவழும் போது உருவாகின்றது. பொதுவாக வீடுகளில் குழந்தை தவழுவதை ஒரு மகிழ்சிகரமான செயலாக நாம் பார்க்கிறோம். சில நேரங்களில் அவை தவழ்ந்து சென்று ஏதாவது பொருளை எடுத்துவிடுமோ அல்லது உடைத்து விடுமோ என்ற பயமும், பாதுக்காப்பற்ற சூழ்நிலைகளில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களையும், விபத்துக்களையும் கண்டு அஞ்சுகிறோம். ஆனால் தவழ்தல் என்ற ஒரு நிகழ்வு அந்தக் குழந்தையின் மன வளர்ச்சிக்கும் மன நலத்திற்கும் முக்கியமானதாக  மேலை நாட்டு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சியில்  வலது மற்றும் இடது பக்கத்தில் இருக்கின்ற பகுதிகள் ( left and right lobes)  மூளையின் பல வித செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன. பொதுவாக இடது பக்கத்து மூளை உடலின் வலது பாகத்தையும் வலது பக்கத்து மூளை இடது பாகத்தையும் கட்டுபடுத்துவதாகக் கூறுகின்றனர். ஆகவே குழந்தை தவழும் பொழுது  அந்த நகர்வுகள் வலது மற்றும் இடது பக்க மூளைகளை வலுப்படுத்த உதவும்.

    வாழ்க்கையின் பின் பகுதிகளில் இந்த இடது-வலது சமன்பாடு (left -right coordination ) உடலின் பல பகுதிகளின் வேலைப்பாடுகளுக்கும் நலனுக்கும் அவசியம் தேவை. சில உடல் மற்றும் மன நல வல்லுனர்கள் இந்தத் தவழும் செயலை  வயது முதிர்ந்தவர்களுக்கும் ஒரு பயிற்சியாகச் செய்ய ஆலோசனை அளிக்கின்றனர். இது பார்கின்சன் மற்றும் மூப்பு சார்ந்த பல நோய்களைத் தவிர்ப்பதற்கு உதவுவதாகப் பரவலான கருத்து நிலவுகின்றது.

    ஆகவே, உங்கள் குழந்தைகளோடு நீங்களும் கொஞ்சம் தவழ்ந்து பார்க்கலாமே ! !

    தொடருவோம்

    Share
  • மார்கழி மணாளன் – 25  கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள்  

     க. பாலசுப்பிரமணியன்

    2df0377e-26f3-47a1-8153-db2f1bdcacc0

    சிரஞ்சீவியானாலும் சிரம் தாழ்த்தி வாழ்ந்தான்

    சிந்தையிலே நின்றான் அனுமனுக்கு ஸ்ரீராமன்

    சிதறாத அறிவுடனே சீதையைக் கண்டவன்

    சிலையாகிக் காலடியில் அன்போடு அமர்ந்தான் !

     

    வானுயரப் பறந்தாலும் பணிவுக்கு இலக்கணமே

    வில்லோனின் உள்ளமதை வென்றிட்ட வித்தகனே

    வைதேகி ராமனின் அருள்பெற்றது  கபிஸ்தலமே

    வருகின்ற துயர்நீக்கும் வள்ளல்களின் மன்னவனே  !

     

    மாமுனியே மனம்நொந்து மதக்களிராகச் சாபமிட

    மன்னவன் மண்டியிட மாமுனி செப்பிட்டான்

    “மாதவனை மனம்நிறுத்தி மலர்கள் தூவிடுவாய்

    மாமன்னா! மாலனால் பெற்றுவிடுவாய் சிறப்பு !”

     

    பூபாள நேரத்தில் பூப்பறிக்க  வந்தது யானை

    புலனறியா வலியினிலே நோக்கியது மண்ணை

    காலிழுத்து உயிர்பறிக்க முனைந்தது முதலை

    காத்திடக்  கண்ணனை அழைத்தது நல்வினை !

     

    அடியவர் குரலுக்கு அடியவன் ஆண்டவன்

    அன்பினில் அடங்கிய ஆதவன் மாதவன்

    கருடனில் ஏறினான் கருணையைப் பகிர்ந்திட

    கால்களுக்கு கருணை கஜேந்திரனுக்கு மோட்சம் !

     

    ஆனைக்கும் கபிக்கும் கிடைத்தது ஆண்டவன் காட்சி

    அருந்தவ முனிவர்க்கும் கிடைக்காத அருளின் மாட்சி

    அன்பினால் இணைந்திடும் உறவுகளுக்கு அவன் சாட்சி

    அன்னையாய் தந்தையாய் நண்பனாய் நாரணன் ஆட்சி !

     

    சூதில்லா மனமும் சுவை ஞானப்பொருளும்

    மாசில்லாக் காற்றும் மங்களமும் வாழ்மரபும்

    மந்தாரப் புன்னகையும் மடியாத ஈகையும்

    மங்காமல் தந்தருள்வாய் மார்கழி மணாளனே !

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் – 24 -திருமோகூர் காளமேகப் பெருமாள்  

    க. பாலசுப்பிரமணியன்

    f813a8d7-64fa-458b-807e-19d7b5dca31b

    வைகுந்தத்திற்கு வழிகாட்டிய தலமன்றோ !

    விடியாத துயர் தீர்க்கும் சங்கு சக்கரமன்றோ !

    விழி வைத்தவர் கலி தீர்க்கும்  வழிகாட்டி

    வைகைக்கூடலிலே குடிகொண்ட காளமேகன் !

     

    அசுர மனமும் தேவ குணமும் அலைபாய்ந்தது

    அமுதத்தை அருந்திடவே கடல் கடைந்தது

    அழிவின்றி வாழ்ந்திடவே ஆணவமே துடித்தது

    அண்டங்கள் காத்திடவே அரங்கமே வந்தது !

     

    மோகிக்கும் அவதாரம் பத்தெடுத்தாலும் மோகனனே !

    மோகினியாய் மோகூரில் அழகை வளர்த்தவனே

    மோகத்தில் வீழ்ந்த அசுரர்களை மோதவிட்டு

    மோனத்தில் அமுதத்தை தேவருக்குத் தந்தவனே !

     

    காலத்தால் அழியாத வரமொன்று பெற்றான்

    கைவைத்த இடமெல்லாம் கனலாக்கப் பெற்றான்

    போகத்தில் மோகத்தில் சிறையான பதுமன்

    யோகத்தில் மோகினியின் தாகத்தில் எரிந்தான் !

     

    தன்தலையில் தானே கைவைத்து அழிந்தான்

    தரணியில் ஆணவத்திற்கு பாடம் அளித்தான்

    தான்மட்டும் வாழ நினைத்தவர் வாழ்ந்ததில்லை

    தருமம் காத்து நின்றவரேன்றும் தாழ்ந்ததில்லை !

     

    மோகத்தில் மூப்படையும் முடியாத தாகம்

    மோகூரான் போற்றிடவே மூவுலகும் தாண்டும் !

    மோனத்தில் மனம் நிற்க  மூலவனே காளமேகா

    மோகூரில் மோகினியாய் அருள்வாயே நீர்வண்ணா!!

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் – 23 திருச்சேறை – சாரநாதன்

     க. பாலசுப்பிரமணியன்

    2c0497a7-ff38-4cce-bc27-809ac8cf4fa3

    ஊழியிலிருந்து வேதங்கள் காத்திட வந்த மண்ணன்றோ

    உலகத்தை மீண்டும் உய்வித்தது திருச்சேறை நிலமன்றோ !

    பிரளயமும் கடந்திட புதுயுகமொன்று பிரம்மனும் படைத்திட

    பரந்தாமன் அருளாலே வந்த திருச்சேறை திருவருளே !

     

    புள்ளினமும் பூவினமும் காயோடு கனியினமும்

    புல்லினமும் கொடியினமும் மண்ணூறும் உயிரினமும்

    புவிசார்ந்த கோளினமும் புரியாத அசைவினமும்

    புன்னைமர மாலனின் புல்லாங்குழல் இசைவந்தது !

     

    யோகத்தில் உறங்கியும் கோளங்கள் காத்து

    உறவுக்குப் பாலங்கள் உணர்வாலே வைத்து

    உயிருக்கு உடலும் உடலுக்கு உணர்வும்

    உறவாடும் கலைகொடுத்த உத்தமன் நீயன்றோ !

     

    கங்கையோ உன் கால்கழுவி களிப்புற்றாள்

    காவிரியோ கருணை வேண்டித் தவமிருந்தாள்

    தவழ்கின்ற குழந்தையாய் தாய்பாசம் பெற்றே

    தந்தாய் அவதாரத்தின் அருள் தரிசனமே !

     

    கல்லொன்று வண்டியில் நித்தம் பூபாலன் களவாட

    காரிருளில் ஓரிரவில் கோயில் கொண்டோய் !

    காத்திடும் அபயக்கரத்தில் தாமரை எடுத்தாய்

    காத்திடுவாய் கண்ணா ! மலர் போலக் காசினியை !

     

    அஞ்சுகின்ற உள்ளமெல்லாம் காக்கும் அருளாளா !

    ஐந்துதேவியர் கூடநின்று அருள்கின்ற பெருமாளே  !

    அண்டங்களின்  சாரமான சத்வமே  சாரநாதா !

    அகிலமெல்லாம் அமைதியை அருள்வாயே ஆதிமூலா !

    Share
  • மார்கழி மணாளன் 22 திரு அன்பில் – வடிவழகிய நம்பி  

     க. பாலசுப்பிரமணியன்

    7e4175fa-f573-49ca-b2e5-0ba6d431f218

    நீர்பாதி நிலம்பாதி தன்னில் தவமாக  உடல் நிறுத்தி

    நிலையில்லா மனம்தன்னை இறை நினைவில் நிறுத்தி

    நினைவின் கருவாய் நீர்வண்ணன் உருவம் நிறுத்தி

    நினைவிழந்த தவத்தோனாய் நின்றான் சுதபனுமே !

     

    சுடுசொல்லில் சுவைகண்ட துர்வாசர் நிலையிழந்து

    உருமாற்றி உருக்குலைந்த தவளையாய் உருவாக்க

    உள்ளத்திலே தவமாகத் தாமோதரன்  மட்டுமிருக்க

    உளம்கனிந்த வடிவழகன் சுதபனுக்குக் காட்சி அன்பில் !

     

    தன்னழகில் நிலைகுலைந்த தவத்தோன் நான்முகனும்

    விண்ணுலகில் வேறில்லையென்ற மமதையில் நிற்க

    வடிவழகன் கண்டதுமே விழிநிறுத்தி வியந்தான் அன்பில்

    கண்ணமுது தேடியவன் விண்ணமுது கிடைத்திடவே !

     

    கண்ணழகு காலழகு கையழகு கண்ணா !

    காண்கின்ற திசையெல்லாம் உன்னழகு !

    கோலாட்ட நடையழகு கைகளிலே குழலழகு

    குசேலன் நட்பழகு நீ குறைவில்லா வடிவழகு !

     

    வாமன வடிவழகு!  வளர்ந்திட்ட விஸ்வரூபம் அழகு !

    வராஹ வடிவழகு! வீரனே! வில்லுந்தன் கையழகு !

    தாழம்பூ மணமழகு! உன்னருகே தாயாரின் துணையழகு !

    தாளாத அன்பழகு ! தூயவனே, உன் திருவுள்ளம் அழகு!

     

     

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் 21 – நைமிசாரண்யம் –  தேவராஜப் பெருமாள் 

    க. பாலசுப்பிரமணியன் 

    5c4a6a61-a8a5-4f32-a3c0-1ca8ef7fcaac

    நான்முகன் விடுத்த சக்கரம் நைமிசாரண்யம் வந்தது

    நானிலம் போற்றும் வண்ணம் விடியலைத்  தந்தது

    நான்மறை போற்றிட நல்லோருக்குப் புகல் தந்தது

    நாதங்கள் முழங்கியே நாரணன் புகழ் சொன்னது !

     

    மலர்வண்ணம் கனிவண்ணம்  எழில் பொங்கும்

    வான்மின்னும் கான்வண்ணம் மனம்கொள்ளும்

    இறைபோற்றும் வேள்வி பெருக்கும் ஒளிவண்ணம்

    இசையோடு இயல்சேர்க்கும் வேதியர் ஒலிவெள்ளம்  !

     

    வான்விட்டு மண் வந்து தவம்செய்த விண்ணவரும்

    ஊன்விட்டு உயிர்தொட்டு மனம் காக்கும் யோகியரும்

    இறைமட்டும் தேடி அமர்ந்த இனிய நைமிசாரிண்யம்

    இயற்கையை இசைத்து இறைவன் படைத்த காவியம் !

     

    மரணத்தை வெல்ல வரம்பெற்றான் விருத்தன்

    மதம்கொண்ட களிறுபோல் மயக்கம் கொண்டான்

    மனமுடைந்த இந்திரனும் மாலனின் சொல்கேட்டு

    மாதவத்தோன் ததீசியிடம் எலும்பைப் பெற்றான் !

     

    வஜ்ராயுத்தில் வளைந்தது விருத்தனின் ஆணவம்

    வானவர் யோகியர் மோனத்தில்  மலர்ந்தது கானகம் !

    மறைகளை போற்றிடும் மாதவர் காண மாலனும் வந்தான்

    மங்கலம் பொங்கிட மானுடம் தழைத்திட மார்கழி மணாளன் !

     

     

     

     

     

     

    Share