க. பாலசுப்பிரமணியன்

2c0497a7-ff38-4cce-bc27-809ac8cf4fa3

ஊழியிலிருந்து வேதங்கள் காத்திட வந்த மண்ணன்றோ

உலகத்தை மீண்டும் உய்வித்தது திருச்சேறை நிலமன்றோ !

பிரளயமும் கடந்திட புதுயுகமொன்று பிரம்மனும் படைத்திட

பரந்தாமன் அருளாலே வந்த திருச்சேறை திருவருளே !

 

புள்ளினமும் பூவினமும் காயோடு கனியினமும்

புல்லினமும் கொடியினமும் மண்ணூறும் உயிரினமும்

புவிசார்ந்த கோளினமும் புரியாத அசைவினமும்

புன்னைமர மாலனின் புல்லாங்குழல் இசைவந்தது !

 

யோகத்தில் உறங்கியும் கோளங்கள் காத்து

உறவுக்குப் பாலங்கள் உணர்வாலே வைத்து

உயிருக்கு உடலும் உடலுக்கு உணர்வும்

உறவாடும் கலைகொடுத்த உத்தமன் நீயன்றோ !

 

கங்கையோ உன் கால்கழுவி களிப்புற்றாள்

காவிரியோ கருணை வேண்டித் தவமிருந்தாள்

தவழ்கின்ற குழந்தையாய் தாய்பாசம் பெற்றே

தந்தாய் அவதாரத்தின் அருள் தரிசனமே !

 

கல்லொன்று வண்டியில் நித்தம் பூபாலன் களவாட

காரிருளில் ஓரிரவில் கோயில் கொண்டோய் !

காத்திடும் அபயக்கரத்தில் தாமரை எடுத்தாய்

காத்திடுவாய் கண்ணா ! மலர் போலக் காசினியை !

 

அஞ்சுகின்ற உள்ளமெல்லாம் காக்கும் அருளாளா !

ஐந்துதேவியர் கூடநின்று அருள்கின்ற பெருமாளே  !

அண்டங்களின்  சாரமான சத்வமே  சாரநாதா !

அகிலமெல்லாம் அமைதியை அருள்வாயே ஆதிமூலா !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.