Author: க. பாலசுப்பிரமணியன்

  • மார்கழி மணாளன் 6 சோளிங்கர் யோக நரசிம்மர்

    க. பாலசுப்பிரமணியன்

    bbd9c22f-1754-49df-9593-6c5846aa0993

    அரிபாதி நரன்பாதி சரிபாதி உருவாகி

    அருள்மாரி பொழிகின்ற அவதாரச் சிறப்பே!

    கல்பாதி மண்பாதி தூண்பாதி உடைய

    உள்பாதி வெளிபாதி அமர்ந்த  திருவே  !

     

    அகம்நாடி இகம்நாடி அருள்நாடா மதிமூடன்

    விதிமுடிக்க இடம்நாடி வந்த அருள்வடிவே !

    அரியன்றி வேறில்லையெனக் குறியுணர்ந்து

    கதிகேட்ட கோமகனை வாழ்வித்த கோவிந்தா  !

     

    விண்பாட மண்பாட வேதங்கள் புகழ்பாட

    பண்பாட சொல்லில்லா பாவலர் தடுமாற

    சொல்லுக்குள் சுவையாய் சுவைக்குள் சொல்லாய்

    கல்லுக்குள் கரும்பாய்  காட்சி தந்தாய் !

     

    கனலான கண்களிலே கருணைபொழிய

    கமலத்தில் அமர்ந்தாளும் வேண்டிடவே

    கனிவுடனே கால்தொடையில் அமர்த்தி

    களிப்புடனே காட்சி தந்த யோகேஸ்வரா !

     

    தீயோர்கள் மடிந்திடுவர் தீமைகள் விலகிவிடும்

    தீராத பிணியெல்லாம் தீர்த்தமொன்றே நீக்கிவிடும்

    தீண்டிய பயமெல்லாம் தீதின்றி மறைந்துவிடும்

    திருநாமம் சொல்லியுன் திருப்பதமே நாடிட்டால் !

     

    கடிகையிலே கண்திறக்கும் திருகடிகைவாசா !

    சோதனைகள் நீக்கிவிடும் சோழலிங்கநாதா !

    அருளுக்கு அழகுதரும் அன்பே,அழகியசிங்கா !

    ஆட்கொள்ள வந்திடுவாய் ஆழிவாழ் அமரேசா !

    Share
  • மார்கழி மணாளன் – 5 திருமலை (திருப்பதி) ஸ்ரீ வேங்கடாசலபதி  

     க.பாலசுப்பிரமணியன்

    96acbbf9-6813-401e-8ad1-f1f7968c3116

    விழித்தாலும் வேங்கடத்தில் விழிக்கவேண்டும்

    விழியிரண்டும் வேங்கடனைப்  பார்க்கவேண்டும்

    கோவிந்தாவெனக் குரல்கொடுக்க வேண்டும்

    குறைகளெல்லாம் அவனிடமே சொல்லவேண்டும் !

     

    ஆனந்த நிலையம் அவன் கோவில்

    ஆறுதல் அடைந்திட அவன் பாதம்

    அருள் வெள்ளம் அவன் திருமேனி

    அணைத்திடுமே அவன் அபயக்கரம் !

     

    ஏழுமலை ஏறிவந்தால் போதும்

    ஊழ்வினைகள் உருக்குலைந்து ஓடும்

    ஏழ்மையின் பொருளறிந்த வாசன்

    எழுபிறப்பும்  உயிர் காக்கும் நேசன் !

     

    பிரபந்தங்கள் பாடி வந்த பெரியோர்கள்

    பிரபஞ்சத்தில் வியந்து நின்ற தெய்வமன்றோ !

    தங்காத தங்கத்தை அவனுக்குத் தந்தாலும்

    தங்கி நின்று அருள் செய்யும் திருமாலன்றோ !

     

    திருமங்கை வாழ்கின்ற திருமார்பை

    தாளால் மிதித்திட்ட தவத்தோன்

    தாள் பிடித்த தெய்வமன்றோ நீ !

    தந்தருள்வாய் நின் தாளை நான் பிடிக்க !

     

    தானழித்து தலைமழித்துத்  தாள்தேடி வந்துவிட்டால்

    தந்தையாக நீயிருப்பாய் திருமாலே! தாமோதரா !

    மலையேறி வந்தோர் தம் மனம் கொள்வாய்

    மங்கையுடன் வந்தே நீ அருள் தருவாய் !

     

    அலர்மேல் மங்கையவள் அருள்பார்வை ஒரு பக்கம்

    அன்புடனே இலக்குமியும் இதயத்தின் ஒரு பக்கம்

    கண்மூடியே காதல் செய்யும் கள்வனவன் கண்ணன்

    கார்மேகன் கொடுப்பதிலே குறையில்லா குபேரன் !

     

    ஏழுமலைவாசன் இதயத்தில் இருந்தால்

    எழுகின்ற கதிரவனாய் ஒளி தருவான்

    ஏழு பிறப்பிற்கும் தருவான் செல்வம்

    ஏழ்மையால் வலிக்காத வாழ்வின் வண்ணம் !

     

    மலர்வாசம் கனிவாசம் மாதவன் பெயர்வாசம்

    மார்கழி வைகறை வாசலில் மண்வாசம்

    மனங்குளிரக் காலையில் பாவைக் குரல்வாசம்

    மனிதங்கள் காத்திடுமே திருமலை ஸ்ரீனிவாசம் !

    Share
  • கற்றல் -ஒரு ஆற்றல் (8)

    க. பாலசுப்பிரமணியன்

    ஒலியும் உணர்வும்

    education

    ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் பல படிகள் உள்ளன. இவற்றை நாம் வளர்ச்சியின் மைல் கற்கள் என்றே சொல்லலாம். உதாரணமாக ஒலிகளை அறிதலும் அந்த ஒலிகளுக்கு ஏற்ப உணர்வுகளை வெளிப்படுத்துதலும் முக்கியமான நிகழ்வு.  சில வாரங்களே ஆன ஒரு குழந்தை ஒரு ஒலியைக்கேட்டதும் அதன் கண்கள் அந்த ஒலி வரும் திசையை நோக்கிச் செல்கின்றன. (sensory Response). அந்த ஒலியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அந்தக் குழந்தைக்கு வருவதற்குமுன் அதைப் பற்றிய ஒரு பய உணர்வு அதன் மனத்தில் தோன்றுகிறது. இந்த நேரத்தில் அந்த பய உணர்வை நீக்கி ஒரு பாதுக்காப்பான செய்தியைத் தருதல் தாயின் முக்கிய கடமை. வரும் ஒலிகளுக்கு ஏற்றவாறு அந்தக் குழந்தையின் விழிகளின் நகர்வுகளைக் கவனித்து செயல் படுதல் அவசியம்.

    சில நேரங்களில் அந்த ஒலி அதிர்வுகள் குழந்தைக்குத் தாங்கமுடியாத பய உணர்வை ஏற்படுத்தும் பொழுது தன் துயரத்தை அழுகை மூலமாகமும் உடல் நகர்வுகளின் மூலமாகவும் வெளிப்படுத்தும். தாய் அந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு குழந்தையோடு உறவாட வேண்டும். குழந்தைகளை அணைத்தும் கொஞ்சியும் பேசியும் சிரித்தும் பயமான சூழ்நிலையிருந்து வெளிக் கொணர வேண்டும்.

    ஒரு குழந்தை ஒரு ஒலியைத் திரும்பத் திரும்பக் கேட்கும் பொழுது அந்த ஒலி அலைகளும் அதனைச் சார்ந்த உணர்வுகளும் குழந்தையின் மூளையில் அழுத்தமாகப் பதிவாகின்றன. அந்த நிலையில் குழந்தை முந்தைய பய உணர்வுகளிலிருந்து விடுபட்டு அந்த ஒலி அதிர்வுகளை ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது, பொதுவாக குழந்தைகளோடு உறவாடும் பொழுது சத்தமாகப் பேசுதல், அலறுதல், கத்துதல் போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் இப்படிப்பட்ட உணர்வுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் நீண்ட காலம் வரை தொடரும் வாய்ப்புகள் உண்டு.

    முந்தைய நாட்களில் குழந்தைக்குத் தொட்டிலிட்டு தாயோ உறவினரோ பாடிய தாலாட்டுக்கள் குழந்தைகளின் மன நலத்தை வளர்ப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தன. இசை, இனிய குரல், ஒலி வளம் மற்றும் சொல் நயங்கள் குழந்தையின் உணர்வுகளோடு நல்லுறவை ஏற்படுத்தி அன்பான அமைதியான பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தன. குழந்தையின் வளர்ச்சிப்பாதையில் இசைக்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் இசையின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும் மற்றும் அதை வளர்ச்சிப் பாதையில் இணைக்க வேண்டும்.

    இசை என்று சொல்லும் பொழுது அது படங்களில்; வருகின்ற பாடல்களைக் குறிக்காது. ஆக்கப்பூர்வமான உணர்வுகளை மென்மைப்படுத்துகின்றவற்றை குறிக்கும். தற்போது நடந்து வரும் மன நலம் பற்றிய ஆராய்ச்சிகளில் எவ்வாறு ஒலியும் சொற்களும் மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன, எவ்வாறு அவை ஒரு தனி மனிதனின் சிந்தனையையும் உணர்வுகளையும் பாதித்து அவன் வாழ்க்கை முறைகள் மீது தங்கள் பாதச் சுவடுகளை விட்டுச் செல்கின்றன என்று வெளிப்பட்டிருக்கின்றது.

    ஆகவே வளரும் பருவத்தில் நல்ல மன நலத்தை வளர்ப்பதற்கு ஆக்கபூர்வமான மன நலத்தை பேணக்கூடிய ஒலிகளையும் இசை வடிவில் அளித்தால் குழந்தைகள் பிற காலத்தில் சிறப்பான உணர்வுகளோடு வாழ வழி வகுக்கும்.

    தொடருவோம்

    Share
  • மார்கழி மணாளன் 4  அழகர் கோயில்    

    க. பாலசுப்பிரமணியன்

    9312761a-f371-4a49-b924-148c711fdcae

    அழகுக்கு அழகு சேர்க்கும் கள்ளழகா !

    அலைமகளும் நிலமகளும் துணைசேர

    குதிரைமேல் பவனிவந்து குறைகேட்டுக்

    கூடலுக்கும் அழகு சேர்க்கும் கூடலழகா  !

     

    மண்டூகர் தவமேற்று மனமிரங்கி

    விண்ணுலகம் காட்டிய மாதவனே !

    மலை நடுவே நூபுரகங்கை தந்து

    கல்லிலும் நீர்சுரக்கும் கள்ளழகா !!

     

    சீர்கொண்டு வந்த தங்கைக்குச்

    சிவனோடு மணம் முடிந்ததென்று

    சினத்தோடு  சீரெல்லாம் வைகையிலே

    சிதறவிட்ட ஸ்ரீமன் நாராயணா !

     

    சுந்தரத் தமிழில் சுவையோடு நக்கீரன் பாட

    சுவைத்து அருளிட்ட  சுந்தரராஜா !

    சோலையிலே சுந்தரவல்லி கைபிடித்து

    சோகமெல்லாம் நீக்கிடும் ஸ்ரீதரனே !

     

    ஆழ்வார்கள் பலரோடு ஆண்டாள் குரல்கேட்டு

    ஆனந்தநிலையிலே அருள்தரும் அமரா !

    கருப்பண்ணசாமிக்குக்  கருணை காட்டிக்

    கள்ளர் குலம்காத்த கார்மேகப் பெருமானே !

     

    மயிலோடு விளையாடும் மருகன் அருகில்

    குயில்பாட்டுப் பாடும் குறத்தியர் மலையினில்

    குணக்குன்றாய் நீ நின்றாய் குறைதீர்க்க

    குரல்கேட்டு உடன் வருவாய் கோவிந்தா !

     

    தவமொன்றும் நானறியேன் தரணியில்

    தனதாக யாருமில்லை புவியினில் !

    தாயாகத் தனயனாக நீ!  தோழனாகத்

    தோள் கொடுப்பாய் தூயவனே  தாமோதரா !

     

     

     

    Share
  • மார்கழி மணாளன்  -3  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  

    க.பாலசுப்பிரமணியன்

     f2bc8a78-423d-446a-a113-0094a4f2ee11

    குழலூதும் கண்ணனவன் வெண்ணை திருடும் கள்வனவன்

    கோதையர் தலைவனவன் கோவினத்தின் மன்னனவன்

    பாவங்கள் அழித்திடவே  தர்மங்கள் வாழ்ந்திடவே

    பாஞ்சஜன்யம் கையெடுத்தான் பார்த்தனுக்கு சாரதியாய்!

     

    ஆண்சிங்கம் போல் அவன் தோற்றம்

    ஆயிரம் ஆதவன் அவனில் அடக்கம்

    அங்கம் முழுதும் அமைதியே ஒளிரும்

    அகிலம் அனைத்தும் அவனைத் துதிக்கும் !

     

    போர்முனையில் அவன் முகத்தில் புன்னகை

    தேர்முனையில் அவன் தர்மத்தின் நம்பிக்கை

    சொந்தம்கண்டு சோர்வடைந்தான் தனஞ்ஜெயன்

    சொந்த மில்லையிது மாயையென்றான் மாதவன் !

     

    விண்ணிலும் மண்ணிலும் வேதங்கள் நான்கிலும்

    விளையும் பயிரிலும் உயிரிலும் உணர்விலும்

    நீரிலும் நெருப்பிலும் காற்றிலும் கதிரிலும்

    அண்ட சராசரங்கள் அனைத்திலும் நானே !

     

    நீயும் என்னுள் நின் நினைப்பும் என்னுள்

    நின் செயலும் வரும் பயனும் என்னுள்

    அண்ணன் தம்பி உறவுகள் அறுத்து

    கண்ணன் பாதங்களில் கவலைகள் விடுவாய் !

     

    காலமும் கடமையும் என்னுள் மறையும்

    காரணம் அறிந்தால் மனிதனும் தேவன் !

    கடமையைச் செய்வாய் விளைவினை விடுவாய்

    கண்ணன் மொழிந்தான்  கருணை பொழிந்தான் !

     

    அல்லிக்கேணியிலே அச்சுதன் தோற்றம்

    அமரர்கள் வாழ்த்தும் அற்புதக் கோலம் !

    ஆசையை அறுத்த பாச நெஞ்சங்களில்

    ஆதவன் ஒளியாய் அருள்வான் சாரதி !!

     

     

     

    Share
  • மார்கழி மணாளன்  2- (காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள்)

    க. பாலசுப்பிரமணியன்

     fcf83c72-1d36-44e4-a660-d6b0f85e3e61

    கையேந்தி வந்தவர் மெய் நிறையும்

    கண்ணிறைந்து அவர் மனம் நிறையும்

    கார்மேகம் நடு  நில் கதிரவன்போல்

    காஞ்சியிலே வரதனின் அருள்காட்சி !

     

    வருந்துயரும் வாராது சென்றுவிடும்

    வரதனின் அருட்பார்வை வென்றுவிடும் !

    பெருந்துயரும் பனிபோல நலிந்துவிடும்

    பெருந்தேவி துணைகண்ட பெருமானே! !

     

    அபயக்கரம் தரும் அருள் வெள்ளம்

    அதைப் பெருக்கும் சங்கு சக்கரம் !

    ஒளிவெள்ளம் அவன் திருமேனி

    விழிவண்ணம் வற்றாத அருள்கேணி !

     

    பல்லிக்கும் அருள்தந்த பரந்தாமன்

    அள்ளிக்கொடுக்கும் திருமங்கை மார்பன் !

    பன்னிரு ஆழ்வார் போற்றிய நாதன்

    பாரெல்லாம் காத்திடும் பேராளன் !

     

    அத்தியூரான் அவன் முக்தி தருவான்

    அலங்காரப் பிரியனவன் ஆனந்தன் !

    அலைபாயும் மனமடங்கக் கீதை சொல்வான் !

    அச்சமின்றி வாழ்ந்திடவே அருள் புரிவான் !

     

    குறையொன்றும் எனக்கில்லை நீயிருக்க

    குரலெடுத்துப் பாடுங்கள் கோவிந்தனை !

    குறையின்றிக் கொடுக்கின்ற வள்ளலவன்

    குழந்தைபோல் நம்மைக் காத்திடுவான் !

     

     

     

     

    Share
  • மார்கழி மணாளன்  (1) திருவரங்கம்  -ஸ்ரீ ரங்கநாதர்  

     க. பாலசுப்பிரமணியன்

    33e89dd1-7c75-49c4-a6d6-e2a6c08d2020

    மார்கழி மணாளன் திருக்காப்பு

     

    வாழிய வாழிய வலக்கை சக்கரம்

    வாழிய வாழிய மலர்க்கை சங்கம்

    வாழிய வாழிய துளசி மோகனன்

    வாழிய வாழிய மார்கழி மணாளன் !

     

    வண்ணங்கள் ஆயிரம் கண்களில் துள்ளும்

    கண்ணனின் நினைவில் காலங்கள் வெல்லும்

    விண்ணவர் அனைவரும் வாழ்த்திடும் வகையில்

    வைகறை நித்தம் மங்கலம் மலர்ந்திடும் !

     

    திருவருள் பொங்கிடும்  திருவடி சரணம்

    பொன்னிரு பாதம்  இன்னுயிர் காக்கும்

    கண்ணிரு விழியில் கண்ணனை வைத்தால்

    கருத்தில் காரிருள் நீங்கிக் கதிரொளி வீசும் !

     

    பூவிரித்  தாமரை பொற்பதச் செல்வி

    பூரணன் நெஞ்சினில் நித்தம் வேள்வி !

    போதுமென்ற மனம் புகுந்திட வருவாள்

    போதாதவர்க்குப் பொன்னும்  தருவாள் !

     

    அரங்கனின்  அயர்வினை நீக்கிடும் காலை

    ஆலயம் நெஞ்சினில் அமைந்திடும் வேளை !

    மார்கழிக் காலையில் மாதவன் போற்றி

    மங்கலம் தங்கிட வாழ்வினில் வெற்றி !

     

    மார்கழி மணாளன்  (1)

     

    அரங்கத்தான் திருமேனி துயிலுறங்கத் தான்

    அஞ்சுதலை ஆதிசேடன் குடைப் பிடித்தான் !

    அன்னை இலக்குமியும் அடி போற்றத்தான்

    அரங்கத்தான் தாள் அகிலமெல்லாம் காப்பு. !

     

    ஆதவன் சுடரெல்லாம் கார்மேனி கவர்ந்திருக்க

    அங்கமெல்லாம் புதுநிலவாய்ப்  பொலிந்திருக்க

    அரக்கன்தம்பி ஆள்திசைக்கும்  அருள்கிடைக்க

    அலையாழி துயில் செய்யும் அரங்கத்தான் காப்பு !

     

    விண்ணவரும் மன்னவரும் கண்விழியில் காத்திருக்க

    வேதமுடன் பாசுரங்கள் விண்வெளியில்  ஒலித்திருக்க

    விழிகாண ஆவினங்கள் விருப்பமுடன் காத்திருக்க

    விழிமூடி விளையாடும் வைகுந்தன்  அருள்காப்பு !

     

    துயிலுறங்கும் தூயவன் நினைவெல்லாம்

    துயர்துடைக்கச்  சென்றதுவோ அகிலமெல்லாம்?

    தூங்காமல் தூங்குகின்ற தோற்றமுற்றான்

    துளசி மாலையணி  துவாரகையான் திருக்காப்பு! !

     

    ஆழ்வார்கள் சாசனங்கள் அவன் கேட்டும்

    அமர்ந்திடவே  ஆசனங்கள் ஏற்கவில்லை !

    காவிரிக் கருணையில் கழனிப்பாசனம் போல்

    காதல் கொண்டோருக்குக் கண்ணன் காப்பு !

     

    நீலக்கடலிலே நீண்ட சேஷத்திலே

    நித்திரை காட்டும் முத்திரை மோனத்திலே

    நீர்மேகக் கண்ணனவன்  பாதத்தையே

    நினைத்தவருக்கெல்லாம் அருட்காப்பு !

     

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (7)

    க. பாலசுப்பிரமணியன்

    அனுபவப்பூர்வமாக அறிதலின் முதல் சில படிகள்

    education4

    ஒரு குழந்தை ஏதேனும் ஒரு பொருளை ஆழ்ந்து பார்க்கும் பொழுது அதைப் பற்றி அறிந்துகொள்ள மனதில் ஒரு உந்துதல் ஏற்படுகின்றது. உடனே அதைத் தொடவும் அதைப் பற்றிகொள்ளவும் முயற்சி செய்கின்றது. இது குழந்தை மேற்கொள்ளும் ஒரு ஆக்கபூர்வமான செயல். இதை பற்றி கிளைர் லெர்னெர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றார் : ” ஒரு பொருளைப் பார்த்து எடுத்துக்கொள்ளவும் அதை பற்றிக்கொள்ளவும் ஏற்படும் உந்துதல்  குழந்தையின் நோக்கத்தை வெளிப்படுத்தும் செயல் (intentionality ). அது குழந்தையின் வளர்ச்சியில் கவனம், ஆர்வம் மற்றும் ஈடுபாடு என்ற கற்றலுக்குத் தேவையான உள்ளுணர்வுகளுக்கு ஒரு முன்னுரை.”

    ஆகவே குழந்தையின் நோக்கங்களை உருவாக்குவதிலும் சீர்படுத்துவதிலும் தாயின் கவனம் தேவைப்படுகிறது. இதனால் தான் ஒரு தாயை குழந்தையின் முதல் ஆசானாகக் கருதுகின்றனர்.

    ஆகவே எந்தப் பொருளை குழந்தை நாடுகிறதோ அதை சிறுது தூரத்தில் வைத்து அதை குழந்தை எடுக்கும் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும். குழந்தை காட்டும் ஆர்வம், விருப்பம் மற்றும் உள்நோக்கத்தைப் பாராட்ட வேண்டும். அந்தப் பொருள் பாதுக்காப்பாக இருக்கும் பட்சத்தில் அதை உணருதல் முகர்தல் மற்றும் உருட்டியோ அல்லது திருப்பியோ பார்த்தல் ஆகிய நிகழ்வுகளை ப்   போற்றவேண்டும்.

    குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆர்வமும் உந்துதலும் ஏற்படும் பொழுது அதற்குத் தான் தேடும் அல்லது உணரும் பொருளைப் பற்றிய முன்னறிவும் அனுபவமும் இல்லை. ஆகவே அந்தப் பொருள் பாதுகாப்பானதுதானா இல்லையா என்ற அறிவும் இருப்பது இல்லை. இந்தநேரத்தில் தான் குழந்தைகளுக்கு அதிகமான பாதுக்காப்புத் தேவை. ஆகவே தம் குழந்தைகளின் மேல் தாயாரின் அல்லது வீட்டில் உள்ள மற்ற பெரியவர்களின் கவனம்  தேவை. சூடான பொருள்களின் மேல் அறியாமல் கை வைத்தல், சாப்பிடக்கூடாத அல்லது பாதுகாப்பில்லாத பொருள்களின் மேல் கைவைத்தால் போன்ற செயல்கள் அதிகமாக  நடக்க வாய்ப்புண்டு.

    பொதுவாக இவ்வாறு குழந்தைகள் கற்றுக்கொள்ளும் நேரத்தில் பெற்றோர்களின் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் குழந்தைகளைப் பார்த்து “இதைச் செய்யாதே, இப்படிச் செய்யாதே ” என்று செயல்களைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்வர். இது ஒரு சரியான நோக்கு அல்ல. “இப்படிச் செய்யாதே” என்று குழந்தைகளைத் தடுப்பதைவிட இப்படிச்செய்ய வேண்டும் என்ற ஆக்க பூர்வமான நோக்கை கையாளுதல் மிக்க அவசியம். என்பது மனஇயல்  வல்லுனர்கள் வாதம்.

    சில வீடுகளில் மிகச் சிறிய வயதில் இருக்கும் குழந்தைகளை தொலைக்காட்சி முன் பல மணி நேரங்கள் அமர்த்திவிடுகின்றனர். அதைப் பார்க்கும் வரையில் குழந்தைகளால் தங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது என்ற நல்லெண்ணத்தில்! (???). இதைப் பற்றிய ஆராய்சிகள் இதனால் ஏற்படும் தீமைகளை வெகு அழகாக விளக்குகின்றன.

    இளம் வயதில் குழந்தைகளைத் தனியாக தொலைக்காட்சி அனுபவங்களோடு விடுதல் அதனுடைய மன நிலையை மிகவும் பாதிப்பதாக பலதகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வகையான பதிப்புகள் சில நேரங்களில் குழந்தைகளின் உள்ளாழ்ந்த மன நிலையையும் உணர்வுகளையும் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதன் விரிவான பாதிப்புகளை நாம் தொடர்ந்து பார்ப்போம்..

    Share
  • தெய்வ தரிசனம்

    க.பாலசுப்ரமணியன்

    images

    எத்தனை வடிவங்கள் எடுத்தாய் இறைவா!

    பார்க்குமிடமெல்லாம் நீ படர்ந்திருக்க

    பத்து உருவினில் உன்னைச் சிறைப்பிடித்தல்

    பழுக்காத சிந்தனையின் பேதமையன்றோ !

     

    தோளிரண்டில் தன் செல்வங்களைச் சுமந்துநின்ற

    தந்தையின் அன்பினிலே உனைக் கண்டேன்  !

    தூங்காமல் தாயருகில் இரவெல்லாம் துணையிருந்து

    தேறுதல் சொன்ன மகனிடம் உனைக்கண்டேன் !

     

    காலமெல்லாம் துன்புறத்திக் கதறவிட்ட மனைவியினைக்

    கனிவாக அணைத்திட்ட கணவனிடம் உனைக்கண்டேன்!

    நட்டாற்றில் தள்ளாடும் நண்பனின் குடும்பத்தை

    நலமாகத் தன்வீடு அழைத்திட்ட நட்பினில் உனைகண்டேன்!

     

    தன்பசியைத் தன்னுள் அடக்கி ஊர்பசிக்கு உணவுதேடி

    உழைத்திட்ட உள்ளத்தில் உனைக்கண்டேன் !

    கடன்வாங்கி வைத்திருந்தக் கையிருப்பைக்

    கலங்காமல் கொடுத்திட்டகண்ணொளியில் உனைக்கண்டேன்

     

    சுமைதூக்கும் தோள்களில் உனைக்கண்டேன்

    சுவையாகச் சமைக்கின்ற கைகளில் உனைக்கண்டேன்

    சோர்வின்றி உழைக்கின்ற உடலில் உனைக்கண்டேன்

    சோதனையைச் சுமந்திட்டநெஞ்சங்களில் உனைக்கண்டேன்!

     

    கண்ணீரைத் துடைக்கின்ற விரல்களில் உனைக்கண்டேன்

    கைகொடுத்து உயிர்காத்த கருணையில் உனைக்கண்டேன்

    களைப்பின்றி சேவைசெய்யும் இளைஞனில் உனைக்கண்டேன்

    கலையாது  தலைதூக்கி நின்ற மனிதத்தில்  உனைக்கண்டேன் !

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல்   (6)

    க. பாலசுப்பிரமணியன்

    குழந்தையின் அறிதல் பரிமாணங்கள்

     education4

    டாக்டர் அன் லாக்ஸ்டேன் என்ற ஒரு மனநல அறிவியல் ஆராய்ச்சியாளர் தனது “உங்கள் குழந்தையின் முதல் ஆறு மாதங்கள்” என்ற நூலில் கூறுகின்றார் ” குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் – உடல் வளர்ச்சி, பெரும் உடற்கூறுகளின் நகர்வுகள்,(Gross Motor Movement),  சிறிய உடற்கூறுகளின் அசைவுகள் (Fine Motor movement) , ஒலி -ஒளிக்கான எதிர் அசைவுகள், ( Response to  light  and sound ) மொழி மற்றும் உடல் அசைவுகள் மூலம் தெரியப்படுத்துதல் (Verbal and non -verbal communication), உறவாடுதல் (emotional interaction) ஆகியவை.”

    அதே போல் ஒரு குழந்தை அழும் போது அது மறைமுகமாக தன் தேவைகளை வெளிப்படுத்துகிறது. அதைக் கண்ட தாய் அந்தக் குறையை நீக்க முயற்சிக்கிறாள். அதை அறியும் குழந்தை தான் அழுதால் தன் குறை நிறைவேறி தாயின் கவனம் தன் பக்கம் ஈர்க்கப் படும் என்று உணர்கிறது, ,, கற்றுக்கொள்கிறது   ஒரு குழந்தை இன்புறும்போதும் துன்புறும்போதும் அந்த உணர்வுகள் நினைவுகளாக மூலையில் சில குறிப்பிட்ட இடங்களில் பதிவு செய்யப் படுகின்றன. இன்புறும் உணர்வுகளை குழதையின் உள்ளம் மீண்டும் மீண்டும் நாடுகின்றது. துன்புறும் செயல்களிலிருந்து விலகிட தன் எதிர்ப்புகளை அழுகை மூலமாக வெளிப்படுத்துகின்றது. எனவே குழந்தையோடு உறவாடும் தாய் மிகக் கவனமாக இந்த உணர்வுகளைக் கவனித்து  குழந்தை வளர்ப்பில் நாட்டம் காண வேண்டும்.

    குழந்தைகள் தலையைத் திருப்பிப் பார்க்கும் செயல், கை விரல்களை மூடித் திறக்கும் செயல், மற்றும் ஒலி, ஒளி கண்டு அந்த திசையை நோக்கி பார்த்தல் போன்ற பல செயல்கள் கற்றல் என்ற திறனை வளர்க்க அடிகோலுகின்றன. அறிந்துகொள்ள முயற்சி செய்தல் (knowledge  exploration ) மற்றும் அனுபம் மூலமாக அறிதல் (Experiential learning ) என்ற இரண்டு வகையான அறிதல் பயிற்சிகளுக்கு இவை அடிகோலுகின்றன,

    சிறு குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பொம்மைகள் பற்றிய ஆராய்ச்சி பல வெளி நாடுகளில் நடத்தப் பட்டு இருக்கின்றன. அந்த பொம்மைகள் எவ்வாறு ஒரு குழந்தையின் மனதைப் பாதிக்கிறது. அதனுடன் விளையாடும் பொழுது உடனடியான தாக்கம் என்ன, அதனுடைய பின் விளைவுகள் என்ன என்பது பற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.. மற்றும் சில பொம்மைகளால் குழந்தையின் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி (safety  of Toys) ஆராய்ச்சிகள் செய்யப் பட்டுள்ளன. வலைத்தளங்களுக்குச் சென்று இது பற்றி பெற்றோர்கள் அறிந்து கொள்ளுதல் அவசியம்.

    பெற்றோர்கள் குழந்தைகளுக்கான பொம்மைகள் வாங்கும் பொழுது அவை தங்களுக்குப் பிடித்திருக்கின்றதா என்பதை விட  அதனால் குழந்தைகளின் மன நிலையில் என்ன பாதிப்பு ஏற்படும் என்று உணர்ந்து வாங்க வேண்டும். அவைகள் அந்தக் குழந்தையின் வயதுக்கு ஏற்றதா குழந்தையின் மனத்தில் உணர்வில் வன்முறையைத் தூண்டி விடுமா என்றெல்லாம் யோசித்து பின் வாங்க வேண்டும்.

    குழந்தைகளுடன் பழகும் பொழுது பொம்மைகள் மூலமாகவோ அல்லது படங்கள் அல்லது நிழல்கள் மூலமாகவோ குழந்தைகளை பய்முர்த்தும் போக்கை முற்றிலும் தவிர்க்கவேண்டும். சிறு குழந்தைகளை கண்டிக்க முயற்சிக்காமல் “இதைச் செய்யாதே” என்று சொல்வதை விட “இப்படிச் செய்யவேண்டும் ” என்று சொல்லி ஆக்கபூர்வமமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

     தொடருவோம்

    Share
  • தாணுப் பாட்டியின் பிள்ளை   -சிறுகதை

    க.பாலசுப்ரமணியன்

    முடிச்சூரில் மூன்று வருடங்களுக்கு முன்னால்தான் பாஸ்கரன் அடுக்குமாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் ஓர் வீடு வாங்கியிருந்தான். அதை வாங்குவதற்காக ஓர் வங்கியிலிருந்து முப்பது லட்சம் கடன் கூட வாங்கியிருந்தான். இனிமேல் தனக்கு என்று ஒரு வீடு இருக்கும் அதில் மனைவி, குழந்தை மற்றும் வயதான தாயாரோடு வீட்டுக்காரர் தொந்தரவின்றி வாழலாம் என்ற ஒரு ஆசையில்தான். ஆனால் ஏதாவது ஒரு வகையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் இறைவன் இன்னொரு வகையில் அதைப் பிடுங்கிவிடுகிறார் என்ற உண்மை அவனுக்குத் தெரிய வில்லை !

    இதுதான் அன்று அவன் வீட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி. அவன் மனைவி ரம்யா தன் மூன்றாவது வகுப்பில் படிக்கின்ற மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க அமர்ந்தாள்  ” ஏண்டா சங்கர் இன்னிக்கி என்ன ஹோம் வொர்க் கொடுத்தாங்க?”

    “அம்மா டீச்சர் போர்டில எழுதிப் போட்டாங்க. நான் எழுதிக்க மறந்துட்டேன். சாரி “

    ” இடியட் . எவ்வளவு செலவழிச்சு உன்னை படிக்க வைக்கறோம். பொறுப்பில்லாம ..”என்று சொல்லிக்கொண்டே அவன் தலையில் ஓர் குட்டு வைத்தாள்

    “அம்மா “என்று அலறிக்கொண்டே எழுந்து ஓட அவனை தாய் ரம்யா பின் தொடர… ” ஏண்டி ரம்யா.. சின்னக் கொழந்தையை இப்படி கஷ்டப்படுத்தற.. ஒரு நாள் அவன் அதைப் பண்ணலேன்னா என்ன குடியா முழுகிப் போயிடும்?” என்று பாஸ்கரனின் தாயார் சொல்ல, அதன் பின் ஒரே அமர்க்களம்தான்.

    “அம்மா. நீங்க சும்மா இருங்கோ. குழந்தை படிப்பில எல்லாம் மூக்கை நுழைக்காதிங்கோ. எவ்வளவு கஷ்டப்பட்டு அவனுக்குப் பணம் கட்டறோம் தெரியுமா.. உங்க காலம் வேற.. இந்தக் காலம் வேற. சாப்பிட்டோமா.. ராமா கிருஷ்ணான்னு இருந்தோமா என்று இருங்கோ.”

    தாணுப் பாட்டியின் முகம் தொங்கியது.. இந்த நேரத்தில் நீங்கள் தாணுப் பாட்டியை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். சின்ன வயதில் தன்யா என்ற அழகான பெயருடனும் அதற்கேற்ற அழகுடனும் ஜொலித்த பெண்தான் இன்று தாணுப் பாட்டி. அந்தக் காலத்து  பொருளாதரப் பட்டதாரி. சரளமாக ஆங்கிலம் வரும். அவருடைய கணவர் மத்திய அரசில்; ஒரு பொறுப்பான வேலையில் இருந்தவர். காலமாகிப் பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன.

    தன்னுடைய ஒரே மகனின் திருமணத்திற்குப் பிறகு அவர்களுடன் தங்கியிருக்கிறார். கணவருடைய பென்ஷன் பணம் கொஞ்சம் மாதம்தோறும் கிடைக்கிறது. அதை அப்படியே தன் மகன் பாஸ்கரனிடம் கொடுத்து விடுகிறார். இப்போது சில மாதங்களாக தன் மருமகளின் போக்கு பற்றி அவளுக்கு மனத்தில் கொஞ்சம் வருத்தம்.  ஆனால் வெளியே காட்டிகொள்வதில்லை.

    அன்று இரவு பாஸ்கரன் மெதுவாக அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான்

    “அம்மா. ரம்யா ஏதோ குழந்தைக்குப் பாடம் சொல்லிக்கொடுத்திட்டுப் போறா. அதிலே நீ ஏம்மா தலையிடறே .. உங்க ரெண்டு பேருக்கு நடுவில நான் மாட்டிக்கொண்டு..  ஒரே தலைவலி..” தன் மூக்குக்கண்ணாடியை சற்றே உயர்த்தி தாணுப் பாட்டி தன் மகனை ஒரு முறை உற்றுப் பார்த்தாள். ஆனால் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

    இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்னொரு காட்சி..

    பாஸ்கரன் தன்னுடைய ஆபீசிலிருந்து வீட்டில் நுழைந்து சோபாவில் அமர்ந்தான். ரம்யா உள்ளே இன்னொரு அறையில் வந்திருந்த தன் தோழியோடு பேசிக்கொண்டிருந்தாள்

    “ரம்யா.. ரம்யா. “தாணுப் பாட்டி குரலிட்டாள் . பதில் கிடைக்கவில்லை. பாஸ்கரன் அமைதியாகக் களைப்புடன் உட்கார்ந்திருந்தான் . மீண்டும் அவள் குரல் எழுப்பினாள் . “ரம்யா…”

    “என்னம்மா .. ஏன் அலறறேள் ? ஏதோ இடி விழுந்த மாதிரி.. நான் ரெண்டு நிமிஷம் யாரோடையாவது பேசிக்கொண்டிருந்தா உங்களுக்குப் பொறுக்காதே…”என்று சொல்லிக்கொண்டே ஹாலில் நுழைந்தாள் .

    ” பாஸ்கரன் வந்து எவ்வளவு நேரமாச்சு தெரியுமா.. ஒரு காப்பி கொடுக்க மாட்டியோ ?”

    “நான் மாட்டேன்னா சொன்னேன். ஏன் அவர் உள்ள வந்து காப்பி வேண்டும்னு கேட்கக் கூடாதா என்ன.?”

    “இல்லடி. அவன் ரொம்பக் களைப்பா உட்கார்ந்திருந்தானே .. என்று நினைத்துத் தான் நான் சொன்னேன்.”

    “நானும் ஆபீசிக்குத் தானே போறேன். எனக்கு மட்டும் களைப்பில்லையா? உங்க பிள்ளைக்கு மட்டும் தானா?”

    வாக்குவாதம் முற்றியது. முற்றுப் புள்ளியாக ரம்யா ஒரு பக்கம் அழ, தாணுப் பாட்டி ஒரு பக்கம், அழ…

    காட்சிகள் சில நாட்கள் தொடர்கதையாக, ….ஒரு நாள் ………….

    பாஸ்கரன் தன் தாயார் அருகில் அன்போடு அமர்ந்தான்,. ” அம்மா.. உன்னைப் பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இவ்வளவு நாள் சந்தோஷமா இருந்துட்டு இப்போ இவள் கிட்ட வேண்டாத வார்த்தையெல்லாம் கேட்டுக் கொண்டு… “

    தன் மகனைக் கூர்ந்து பார்த்த தாணுவிற்க்கு  அவன் வார்த்தைகளின் உள்ளர்த்தம் புரிந்தது .. “சொல்லுடா.. மேல..”

    தலையைக் குனிந்துகொண்டே ” இல்லே.. நீ வேற எங்கேயாவது சந்தோஷமா இருப்பியான்னு யோசிச்சுப் பார்க்கறேன். “

    “ம்…..”  பாஸ்கரன் மேலே பேச முடியாமல் அமர்ந்திருந்தான்.

    “சொல்லுடா.. முதியோர் விடுதிக்குப் போகணும்னு சொல்லறே .. அவ்வளவுதானே.. இதை சொல்லுவதற்கு என்னடா தயக்கம்? ” தைரியமாகப் பேசினாள் தாணு.

    தன் கண்களை உயர்த்தித் தன் தாயைப் பார்த்த பாஸ்கரனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

    இரண்டு வருட காலமாக அதனால்தான் தாணுப் பாட்டி இந்த முதியோர் விடுதியில் “சந்தோஷமாக”இருக்கிறாள். மாதம் ஒரு முறை பாஸ்கரனும் ரம்யாவும் தங்கள் குழந்தையோடு வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள். போன மாதம் தீபாவளிக்குக் கூட அம்மாவிற்கு ஒரு புடவை கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான் அன்பு மகன் பாஸ்கரன்.

    இன்று மாலையிலே அவள் தொலைக்காட்சிப் பெட்டி முன்னால் உட்கார்ந்து சென்னையை உலுக்கி எடுத்த மழையைப் பற்றிய செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்  முடிச்சூரில் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் அவளுக்கு ஒரே கவலை. தன் மகன் அவன் குடும்பத்தைப் பற்றித்தான்.. தொடர்புகொள்ள அவளுக்கு வழியில்லை. தொலைபேசிகளும் வேலை செய்ய வில்லை..

    திடீரென்று அவள் பார்த்த காட்சி அவளை உலுக்கியது..  பாஸ்கரன் அந்த வெள்ளத்தின் நடுவே ஒரு முதியவரை கைகளில் தூக்கிக்கொண்டு வந்த காட்சி.. செய்தியாளர் பாஸ்கரனை அறிமுகம் செய்து வைத்து வர்ணிக்கிறார். “இவர் பெயர் பாஸ்கரன். இது வரை இவர் இந்தப் பகுதியிலிருக்கும் பதினைந்து முதியவர்களையும் எட்டு குழந்தைகளையும் தன் கைகளிலும் தோள்களிலும் தூக்கி வந்து அவர்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கின்றார். மனித நேயத்திற்கு இவர் ஒரு முன்னுதாரணம். அவருக்கு எங்கள் பாராட்டுக்கள். “

    “சார்.. இவ்வளவு முதியவர்களை நீங்கள் தனியாகக் கைகளிலும் தோள்களிலும் தூக்கி வந்து காப்பாற்றியிருக்கின்றீர்கள் . அவர்களைத் தூக்கி வரும் பொழுது உங்களுக்கு மனதில் என்ன தோன்றியது ?”

    ” ஒவ்வொருவரைத் தூக்கும் பொழுதும் என்னுடைய சொந்தத் தாயையோ அல்லது தந்தையையோ தூக்கி வருவது போன்ற எண்ணமே எனக்கு இருந்தது. “

    தாணுப் பாட்டியின் கண்களில் நீர் வழிந்தது. பக்கத்தில் அமர்ந்திருத்த இன்னொரு மூதாட்டி தாணுவிடம் சொன்னார். “யார் பெத்த பிள்ளையோ .. என்ன நல்ல மனசு பாருங்க.. எல்லோரையும் தன் அம்மா அப்பா போல நினைக்குது.. இந்தக் காலத்திலேயும் பிள்ளைங்க இருக்காங்களே… சொந்த அம்மா அப்பாவை நம்மளைப் போல் விடுதியிலே சேர்த்துட்டு… “

    தாணு என்ற தன்யாவிற்க்குத் தன் கல்லூரி நாட்களில் தான் பங்கெடுத்த ஒரு விவாத மேடையின் தலைப்பு நினைவில் வந்தது -“சூழ்நிலைகள் ஒரு மனிதனை உருவாக்குகின்றனவா அல்லது ஒரு மனிதன் தன் சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்கிறானா?”  அன்று சரியான வாதங்களை மேடையில் எடுத்து வைக்காததால் அவளுக்குப் பரிசு கிடைக்கவில்லை. இன்றும் அவளுக்கு இதற்கான பதில் சரியாகத் தெரியவில்லை.

    தாணுப் பாட்டி தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள் .. அவள் மனது சொன்னது.. “பாஸ்கரனும் நல்ல பிள்ளைதான் “

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share
  • பிரளயம்

    க.பாலசுப்ரமணியன்

     

    வான்வீட்டுக் கூரை உடைந்ததினால்

    என்வீட்டுக் கூரையில் மழை பெய்தது !

    எவன் விட்ட கண்ணீரோ விண் விட்டு

    மண் வீட்டில் கண்ணீராய் பெருக்கெடுத்தது !

     

    ஊர்விட்டு ஊர் செல்ல வழியறியா மக்கள்

    நீர்மட்டில் நிலம் மறையப் பார்த்த கண்கள்

    தேரோட்டம் போலத் தெருவெல்லாம் மாக்கள்

    வெள்ளோட்டம் அழிவிற்கோ வேதனையில் நெஞ்சம் !

     

    கோடி கொடுத்துக் கூரை கட்டிக் கூவிய செல்வன்

    குப்பை வண்டி மேலேறிச் செல்லும் கோலம் !

    குறை யில்லா வண்ண உடை நூறு சேர்த்தும்

    கோவணத்தில் வீதிவழி செல்லும் காலம் !

     

    முலைப்பாலைக் குழந்தைக்குக் கொடுக்க

    மூலையொன்றைத் தேடும் தாயின் துயரம்

    மூழ்கிவிட்ட வீட்டைக் கண்டு இளமையிலும்

    முதுமையடைந்த மனிதத்தின் கோரம் !

     

    மும்மாரி வேண்டுமென்று தவமிருந்தோர்

    முகம்மாறி மனமுடைந்து  நிற்கும் நேரம்!

    மலர்மாரி பொழிந்து நல்மழை கேட்டோர்

    மனம்மாறி  ஆதவனைத் தேடும் நேரம் !

     

    பிரளயத்தின் பொருள் கேட்ட ஆசான் முன்னே

    பொருளறியாது மருண்டு நின்ற மாணவனும்

    பொருளான கட்டுரை அழகாக எழுதிடவே

    இருளான பள்ளியில் அருளில்லாத சோகம்!

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல்   (5)

     க.பாலசுப்பிரமணியன்

    தாயும் சேயும் – சில கற்றல் பரிமாணங்கள்

    education

    கற்றல் என்ற செயல்  கருவிலேயே வித்திடப்படுகிறது என்பதை நாம் அறிந்தோம்.  ஆனால் ஒரு குழந்தை தன்  தாயின் தொப்பிள் கொடியிலிருந்து விடுபட்டு இந்தப் பரந்த உலகை சந்திக்கும் செயல் மிகவும் உணர்ச்சி பூர்வமான மன அழுத்தம் கொடுக்கின்ற ஒரு நிகழ்ச்சி. தன் தாயின் முழுப் பாதுகாப்பிலிருந்த ஒரு குழந்தை தான் முன் அறியாத ஒரு உலகில் காலெடுத்து வைக்கின்ற செயல் குழந்தைக்கு பயத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகின்ற ஒரு செயல். மன வல்லுனர்கள் இதை ஒரு அறிந்த உலகிலிருந்து அறியாத உலகிற்கு செல்லும் பயணம் என்று சொல்வார்கள். ( Journey from known to the unknown) .

    பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் முதலில் தேடுவது பாதுகாப்பான சூழ்நிலைதான். இதை ஏற்படுத்துவதில் தாய்க்கு அளவற்ற பொறுப்பு உண்டு. தாயின் அரவணைப்பில் அந்தக் குழந்தைக்கு பாதுகாப்பிற்கான ஒரு செய்தி கிடைக்கின்றது. ஆகவே பிறந்த சில நாட்கள் வரை தாயின் அரவணைப்பு குழந்தைக்கு இன்றியமையாதது.

    தாயின் குரல், உணர்வுகள் இவற்றோடு பல மாதங்கள் பழகிவிட்ட குழந்தைக்கு அதைத் தவிர மற்றவை அனைத்தும் ஒரு சந்தேகத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள். ஆகவே கருவில் கற்ற  ஒலி  வடிவங்கள், உணர்வுசார் அசைவுகள் குழந்தையின் நினைவில் (memory) இருப்பதால் தாயிடம் குழந்தை பாதுகாப்பின்  குறியீடுகளை அறிந்துகொள்கிறது.

    தாய்க்கும் சேய்க்கும் பிறந்த சில மாதங்களில் இருக்கும் உறவுகள் பற்றி மனவல்லுனர்களால் பலவித ஆராய்சிகள் செய்யப்பட்டுள்ளன. தன் குழந்தையுடன் எவ்வாறு தாய் அதிக நேரம் செலவிட வேண்டும் எப்படியெல்லாம் உறவாட வேண்டும் என்று  வல்லுனர்கள் விளக்குகின்றனர்.

    சில உதாரணங்களை நாம் இங்கு சொல்லலாம். “கண்ணோடு கண் நோக்கின் ” என்று சொல்வதுபோல் குழந்தையின்  கண்களோடு உறவாடுதல் மிக அவசியம். (Visual Engagement ). இது குழந்தைக்கு பயத்தை நீக்குவது மட்டுமின்றி  தன்னம்பிக்கையை வளர்பதற்கும் அவசியம் என்று சொல்லபடுகின்றது. மேலும் தாயின் முகத்தில்  காணும் உணர்வுகளைக் குழந்தை அறிந்து பழக்கப் படுத்திக் கொள்ளுகின்றது. ஆகவே “முகம் பார்த்து சிரித்தல்” என்பது உறவாடும் கலையின் முதல் படி. (Relationship management ).

    இரண்டாவதாக தாய் தன குழந்தையுடன் பேசுதல் அவசியம். “தாயின் மொழி தாய் மொழி’ .தாயின் உதடுகளின் அசைவுகளைப் பார்க்கின்ற குழந்தையின் மனத்தில் அந்த அசைவுகள் ஆழமாகப் பதிகின்றன இதை கேட்கின்ற குழந்தையின் மனத்தில்  உதடுகளின் அசைவும் ஒலி அலைகளின் பதிவும் ஒன்று சேர்ந்து பதியும் நேரத்தில் கற்றல் என்ற நிகழ்வின் வாசல் கதவுகள் திறக்கப் படுகின்றன.

    மூன்றவதாக தாயின் கொஞ்சல் குழந்தையின் உணர்வுகளை மகிழ்விக்கின்றன. இதன் மூலமாக தாயின் உணர்வுகளுக்கும் குழந்தையின் உணர்வுகளுக்கும் இடையே ஒரு பாலம் அமைக்கப் படுகின்றது. (emotional bonding) இது உறவினை உறுதிப் படுத்தி தாயிடம் மீண்டும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி கற்றலுக்கான ஆர்வத்தை  (curiosity to learn ) அதிகரிக்கின்றது.

    இதனால் குழந்தையின் ‘அறிதல் -புரிதல் ” (cognition -understanding) செயல்களுக்கு ஓர் நல்ல ஆரம்பம் கிடைக்கிறது.

    குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் அதன் தேடுதல் வேட்டை தொடங்கி விடுகின்றது. (Exploration). சில மன வல்லுனர்கள் விளையாட்டாக இதை ஒரு மலை ஏறும் பயிற்சிக்கு ஈடானது என்று சொல்கிறார்கள். (Adventure seeking). குழந்தையின் கண்களின் பார்வை செல்லும் இடங்கள், கைகளும் விரல்களும் அசையும் முறைகள் இவற்றை உற்று நோக்கினால் அந்தக் குழந்தையின் தேடுதல் வேட்டையின்  தீவிரத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

    இந்த தேடுதல் வேட்டையை நாமும் பின்தொடர்வோம்.

    Share
  • மாடி வீட்டு மாதவன்

    க பாலசுப்ரமணியன்

    மாடிப்படி மாதுவை உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும், ஆனால் மாடி வீட்டு மாதவனைத் தெரிந்திருக்க நியாயமில்லை. கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள் அவர்கள் வீட்டில் என்ன நடக்கிறதென்று.—. அப்புறம் உங்களுக்கே தெரியும் அவர் யாரென்று.!

    ‘ அப்பா, அப்பா ” இது அவர் பெண் ரேவதி

    ” கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கப்பா… என்னோட ஜீன்ஸ் ரொம்ப பழசாப் போச்சு.. ஓரத்திலே கிழிசல் வேற.. ஒண்ணு புதிதா வாங்கணுமப்பா …

    “ம் … ” மாதவன் தன் கண்ணாடியைக் கொஞ்சம் சரி செய்துகொண்டு  குனிந்து அந்தப் பேப்பரை  பார்த்த வண்ணம் இருக்கிறார்.

    “உங்க கிட்டேன் தான் சொல்றேன் அப்பா “

    “ம் .. கேட்டுண்டுதானிருக்கேன் ..”

    “ரேவதி.. அந்த சுவத்துக் கிட்ட சொல்றதும் ஒண்ணுதான், உங்க அப்பா கிட்ட சொல்றதும் ஒண்ணுதான்.. போயி அடுத்த வேலையைப் பாரு. ”  இது  ஸ்ரீமதி என்ற அவர் மனைவி.

    மாதவன் தன மனைவியை திரும்பிப் பார்க்கிறார்.

    “இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லே…ஏதோ கதையெழுதறேன், கவிதையை எழுதறேன்னு  நேரத்தையும் காகிதத்தையும் வீணாக்கிகொண்டு …. காலணாவுக்கு பிரயோசனமில்லை.. இதுக்கு மேலே இங்கே சொற்பொழிவு அங்க  பேசறேன்னு .. எல்லாம்  தேங்காமூடிக் கச்சேரி. ,”

    தன் கண்ணாடியைக் கொஞ்சம் கழட்டி மேஜை மேல் வைத்துவிட்டு  “நாராயணா….ஏழுமலை வாசா..” என்று பெருமூச்சு விடுகிறார்.

    “கூப்பிடுங்கோ..  கொஞ்சம் சத்தமா.. அந்த ஏழுமலையானுக்கு கேட்கட்டும். அப்புறமாவது எதாவது பணம் வருதா  பாக்கலாம்”

    ” ஏம்மா, பணம் பணம்னு அலையற..வாழ்க்கையிலே பணம் ஒண்ணுதானா முக்கியம்? இருக்கறதை வெச்சு சந்தோஷப்படப் பாருங்கோ..”

    ” ஆனா.மாதவன் சார் .. நீங்க எழுதற கதையையும் அந்த காகிதத்தையும் சாப்பிட முடியாதே. உள்ளே போகதே.. அதையும் சாப்பிட்டா பக்கத்து வீட்டுக்காரெங்க நம்மள வேற ஏதோ ஜந்துவோடனா  கம்பேர் பண்ணுவா.,”

    மாதவனுக்குச் சுவரில் தலையை முட்டிக்கொள்ளலாம்போல இருந்தது. ஆனால், இது அவருக்குப் புதிதில்லை.நித்தியம் காலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பதுபோலத்தான்.

    “ஸ்ரீமதி, எனக்குன்னு ஒரு மரியாதை இந்த சொசைட்டியிலே இருக்கு.. புரிஞ்சுக்கோ.. இங்கே இருக்கறவா எல்லாருக்கும் மாதவனை நல்லாத் தெரியும்..”

    ” ஆஹா. தெரியாதா  என்ன… யாரு? அந்த மாடி வீட்டு மாதவனைத்தானே கேட்கறேள் .. பத்து வருஷமா ஒரு வேலையும் பார்க்காம  கதை எழுதறேன்னு ஜன்னல் பக்கத்திலேய உட்கார்ந்து வானத்தையே வெறிச்சுப் பார்த்திண்டிருப்பாரே  அவர்தானே? “

    ஸ்ரீமதிக்கு பணம் மட்டும் தான் வேண்டுமா இல்லை, அவளுடைய வேறு எதிர்பார்ப்புக்கள் என்ன என்று அவருக்குத் தெரியவில்லை.

    கற்பனையால் உலகை அளக்கும் அவருக்குத் தன் மனைவியின் உள்ளத்தை அளக்க முடிய வில்லை

    சிறிது நேரத்தில் அவர் தன்னை அலங்கரித்துக் கொண்டு புறப்பட்டார்.. கண்ணாடியில் தன் திருநாமத்தைச்  சரி செய்து கொண்டார்.

    “என்ன.. ஜானவாசம் கிளம்பியாச்சா?” ஸ்ரீமதி   நக்கலாகக் கேட்டாள்.

    துண்டை உதறிப் போட்டுக்கொண்டே “ஒரு சொற்பொழிவு.. கர்ணனைப் பத்திப் பேசணும்…”

    “அங்கேயே கொஞ்சம் தேடிப்பாருங்கோ.. ஏதாவது கர்ண மகாராஜா கிடைப்பாரான்னு…”

    தன் மனைவியின் குத்தலான பேச்சிலும் ஒரு ரசனையை அவர் மனம் கண்டது.

    “சாப்பாடு எப்படி? அங்கேயா, இங்கேயா?” மீண்டு ரேவதி.

    “கொஞ்சம் மோர் சாதம் வைத்திரு….”

    “வேறென்ன இருக்கு? ஏதோ பருப்பு பாயசம் மிஞ்சிப் போற மாதிரி…”

    வார்த்தைகள் ஒரு மனிதனை தூக்கி உட்காரவும் வைக்கும், அது ஒரு மனிதனுடைய சக்தியைப் பறித்து அவனை நிர்மூலமாகவும் ஆக்கிவிடும் என்பது அவருக்குத் தெரியும்.  ஆனால் அவளுக்கு ஏன் புரிய வில்லை?

    மதியம் அவர் திரும்பும் பொது கையில் ஒரு பூமாலை இருந்தது… மாதவனின் மகளும் மகனும் தன் அப்பா முகத்தில் இருந்த ஒரு சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் பார்த்து ரசித்தனர்.

    ” டேய் கோபி, இப்போ உங்க அப்பாவைப் பார்த்தா எப்படி இருக்குத் தெரியுமோ?”  ரேவதியும் கோபியும் தன்  தாயார் பக்கம் திரும்பினர்.தக் காலத்து கல்யாணப்பரிசு படத்திலே தங்கவேலு கைநிறைய மாலையை எடுத்துண்டு வர மாதிரி.. ” அதோடு அவள் நிறுத்தவில்லை..

    “ஏன்னா எல்லாரும் கை தட்டினாளா? ..” அவளுடய நையாண்டி அவர் மனிதத்தை புண்படுத்தினாலும் அந்த இரண்டு சிறிசுகளும் வாய் விட்டுச் சிரித்தனர்.

    “மோர் சாதம்..”

    ” எனக்கு .வேண்டாம்.. வயரும் மனசும் நிறைந்திருக்கு..”

    ” சந்தோஷம்.. சாப்பாடு மிச்சம்.”

    “அப்பா, உங்களுக்கு ஏதோ லெட்டெர் வந்திருக்கு. டேபிள் மேல வெச்சிருக்கேன்”  — கோபி

    அந்த கவரைப் பிரித்த மாதவன் அதை மீண்டும் மீண்டும் படித்தார்.

    ” நாராயணா. நாராயணா.. ” அவர் குரலில் ஒரு புதிய உயிர் இருந்தது..

    ” என்னப்பா? .. இவ்வளவு சந்தோஷம்? ” ரேவதி தந்தை அருகில் வந்தாள்

    “ரேவதி .. என்னோட கதைக்கு தமிழ்ச் சங்கத்தில் அவார்டு கிடைத்திருக்கு. எனக்கு சிறுகதை மன்னன் என்ற டைட்டில் குடுக்கறா..”

    “கங்க்ராட்ஸ் அப்பா”

    “ஏன்னா வெறும் டைட்டில் தானா.. இல்லே எதாவது காசு  கொடுப்பாளா?”

    தன் மனைவியை  ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்த மாதவன் “உனக்கு யார்தான் ஸ்ரீமதின்னு பெயர் வைத்தார்களோ?… கற்பூர வாசனை..கற்பூர வாசனை…”  தலையில் அடித்துக்கொண்டே தன்  நாற்காலியில் அமர்ந்தார்.

    காலையில் எழுதிய சிறுகதைக்கு ஒரு தலைப்புக் கொடுத்திருந்தார். “சொந்தங்கள் சுகமானவை” என்று ! கதையை ஒரு முறை மீண்டும் படித்துவிட்டு தலைப்பை மாற்றி எழுதினார் —

    “சொந்தங்கள் சுமையானவை”

    x x x

    Share
  • அண்ணாமலையில் ஒரு அக்கினிப் பொறி   

    க. பாலசுப்பிரமணியன்

    p53

    ஆகாய கங்கையிலிருந்து ஒரு அக்கினிப்பொறி

    அண்ணாமலைக்கு அருள் சேர்க்க வந்தது !

    அன்னையிட்ட பெயரின் பொருள் தேடி

    விண்ணை நோக்கிப் பிள்ளை தவமிருந்தது !

     

    பாலூட்டி ஊட்டிட்ட பெயரும்  என்ன !

    பார்கூட்டி அழைத்திட்ட பெயரும் என்ன !

    ஊனூட்டி  வளர்த்திட்ட  உயிரும் என்ன !

    உடலோடு  உயிர் சேர்த்த உறவென்ன !

     

    ஊருணி விலக்கிட்ட ஒரு நீர்த் திவலைபோல்

    ஊழ்வினை கழித்திடவே  உயிர்  வந்ததோ ?

    வாழ்விடை வந்த உறவுகள் பாசத்தில் வாடும்

    தானுறை  தவமே  வருவினை  போக்கிடும் !

     

    கோடியில் ஒருவனாய் குழந்தை ரமணன்

    நாடிய துறவும் நானினை அறிந்திட !

    சோதியைக் கண்டவன் சுமைகள் களைந்திட

    வாடிய உலகிற்கு வழிதனைத் தந்தான் !

     

    ஆதவன் ஒளி போல் அகமொன்று ஒளியிட

    கான்வழிக் கானல்நீர் வாழ்வென அறிவாய்  !

    கரையில்லா வெள்ளம்போல் காமக் களைப்பில்

    கலங்கிய மனமோ காலமெல்லாம் வாடும் !

     

    கந்தை மனத்தைக் கசக்கிப் பிழிந்து

    சிந்தையை அடக்கிச் சிவனிடம் தந்தால்

    விந்தையே! விந்தையே! அருணாசலா!

    வெளிச்சமே ! வெளிச்சமே ! லிங்கேஸ்வரா!

     

     

    Share