மார்கழி மணாளன்  -3  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  

க.பாலசுப்பிரமணியன்

 f2bc8a78-423d-446a-a113-0094a4f2ee11

குழலூதும் கண்ணனவன் வெண்ணை திருடும் கள்வனவன்

கோதையர் தலைவனவன் கோவினத்தின் மன்னனவன்

பாவங்கள் அழித்திடவே  தர்மங்கள் வாழ்ந்திடவே

பாஞ்சஜன்யம் கையெடுத்தான் பார்த்தனுக்கு சாரதியாய்!

 

ஆண்சிங்கம் போல் அவன் தோற்றம்

ஆயிரம் ஆதவன் அவனில் அடக்கம்

அங்கம் முழுதும் அமைதியே ஒளிரும்

அகிலம் அனைத்தும் அவனைத் துதிக்கும் !

 

போர்முனையில் அவன் முகத்தில் புன்னகை

தேர்முனையில் அவன் தர்மத்தின் நம்பிக்கை

சொந்தம்கண்டு சோர்வடைந்தான் தனஞ்ஜெயன்

சொந்த மில்லையிது மாயையென்றான் மாதவன் !

 

விண்ணிலும் மண்ணிலும் வேதங்கள் நான்கிலும்

விளையும் பயிரிலும் உயிரிலும் உணர்விலும்

நீரிலும் நெருப்பிலும் காற்றிலும் கதிரிலும்

அண்ட சராசரங்கள் அனைத்திலும் நானே !

 

நீயும் என்னுள் நின் நினைப்பும் என்னுள்

நின் செயலும் வரும் பயனும் என்னுள்

அண்ணன் தம்பி உறவுகள் அறுத்து

கண்ணன் பாதங்களில் கவலைகள் விடுவாய் !

 

காலமும் கடமையும் என்னுள் மறையும்

காரணம் அறிந்தால் மனிதனும் தேவன் !

கடமையைச் செய்வாய் விளைவினை விடுவாய்

கண்ணன் மொழிந்தான்  கருணை பொழிந்தான் !

 

அல்லிக்கேணியிலே அச்சுதன் தோற்றம்

அமரர்கள் வாழ்த்தும் அற்புதக் கோலம் !

ஆசையை அறுத்த பாச நெஞ்சங்களில்

ஆதவன் ஒளியாய் அருள்வான் சாரதி !!

 

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க