சு. கோதண்டராமன்

 மங்கையர்க்கரசி

vallavan-kanavu

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த ஆலவா யாவது மிதுவே

-சம்பந்தர்.

  அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்த பாண்டிய அரசி மங்கையர்க்கரசி நிலை கொள்ளாமல் அந்தப்புரத்தின் முன் முகப்பில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார். ‘கூப்பிட்ட உடன் வருவதற்கு அவர் என்ன பணியாளா? அவருக்கு எத்தனையோ முக்கியமான அரசாங்கக் காரியங்கள் இருக்கும். எப்படியும் வந்து விடுவார்’ என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டாலும் அவரது மனம் தவித்தது.

அமைச்சர் குலச்சிறையார் பழுத்த அனுபவம் உள்ளவர். மங்கையர்க்கரசியின் மாமனாரான சேந்தன் மாறவர்ம பாண்டியன் காலத்திலிருந்து இருந்து வருபவர். சிவபக்தி உள்ள சேந்தன் ஆலவாயில் கோவிலை விரிவுபடுத்தியதற்கு குலச்சிறையாரே காரணம். மங்கையர்க்கரசியின் கணவர் அரிகேசரி பராங்குச வர்மனும் முதலில் சைவ ஆதரவாளராகத்தான் இருந்தார். ஆனால் அரச பதவிக்கு வந்தபின் சமணர்கள் அவரைத் தங்கள் வலையில் வீழ்த்தினர். குலச்சிறையாருக்கு இது பிடிக்கவில்லை. ஆனாலும் தன் நிலை உணர்ந்து அடங்கி இருந்தார். மன்னனுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று நாளும் சிவபெருமானை வேண்டிக் கொண்டிருந்தார். அவர்தான் தன் பிரச்சினைக்குத் தீர்வு காண வல்லவர் என்று அரசி நினைத்தார்.

இதோ அமைச்சர் குலச்சிறையார் வந்துவிட்டார். “வாருங்கள், அமைச்சரே” என்றார் அரசி. “மன்னிக்க வேண்டும், அரசியாரே. அரசர் ஒரு முக்கியமான அரசாங்க வேலை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அதனால் உடனே வர முடியவில்லை. சொல்லுங்கள், என்ன விஷயமாகக் கூப்பிட்டீர்கள்?”

“நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறை சற்றும் இல்லாமல் அரசர் தன்னுடைய முத்தியைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்.”

“அது ஒன்றும் புதிது அல்லவே. அது நீண்ட நாட்களாக நாம் எல்லோரும் கவலைப்படும் விஷயம் தானே.”

“இல்லை. புதிதாகக் கவலைப்படுவதற்குக் காரணம் உள்ளது. நேற்று அவர் எங்கள் மகளுடன் பேசிக்கொண்டிருந்தார். எல்லாம் சமணத்தின் மேன்மை பற்றித்தான். குழந்தை மனதை அது மிகவும் கவர்ந்துவிட்டது. அவள், நானும் சமணத் துறவியாகித் தர்மத்திற்குத் தொண்டாற்றப் போகிறேன், அப்பா என்கிறாள். உண்மையில் அவள் துறவி ஆகிவிடுவாளோ என்று எனக்குக் கவலையாக இருக்கிறது அமைச்சரே.

“நம் நாட்டில் பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை. பெற்றோர் விருப்பப்பட்ட மணமகனுக்குத்தான் அவள் வாழ்க்கைப்பட வேண்டியிருக்கிறது. அரச குலப் பெண்களின் நிலைமையோ இன்னும் மோசம். அரசியல் விளையாட்டில் அவர்கள் ஒரு பகடைக்காய். களப்பிரர்களை முறியடித்த பாண்டிய மன்னர் தன் மீது படையெடுத்து வரக்கூடாது என்பதற்காக என் தந்தை இவருக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டார். என் தந்தை சிவனுக்கு எழுபது மாடக்கோயில்கள் கட்டியவர். என் அண்ணன் புகழ்ச்சோழனோ தன் படைவீரர்கள் ஒரு சிவனடியாரைக் கொன்றதற்குத் தான் பொறுப்பேற்று உயிர் துறந்தவர். இத்தகைய பரம்பரைச் சைவர்களான சோழ வம்சத்தில் பிறந்த நான் இன்று ஒரு சமணரின் மனைவியாகக் காலம் தள்ளுகிறேன். என் குழந்தைகள் சைவத்தை விட்டு விலகிப் போய்விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.”

“தங்கள் தந்தையைப் பற்றிக் குறைவாக மதிப்பிடவேண்டாம், தேவி. அவர் சிறந்த ராஜதந்திரி. பாண்டிய மறவர்கள் அகிம்சைக் கொள்கையைக் கைக்கொண்டு வீரம் இழந்துள்ளனர். களப்பிரர்கள் தோற்றதற்குக் காரணம் அவர்களது வீரமின்மையே தவிர பாண்டியர்களின் படைவலிமை அல்ல.  எனவே பாண்டியனால் ஆபத்து எதுவும் வராது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும். பாண்டிய நாட்டைச் சமணத்திலிருந்து மீட்கத்தான் அவர் தங்களை இங்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.”

“என்னால் பாண்டிய நாட்டை எப்படிச் சமணத்திலிருந்து மீட்க முடியும்? என் கணவரையே மீட்க முடியவில்லையே.”

“அதற்கான காலம் கனிந்து வந்துவிட்டது, அரசியாரே. சோழநாட்டின் பெரும்பகுதி மக்கள் சைவத்தின்பால் ஈர்க்கப்பட்டுவிட்டனர். சென்ற வாரம் மறைக்காட்டில் உள்ள என் மகளைக் காணச் சென்றிருந்தபோது நான் இரு மகான்களை ஒருசேரத் தரிசிக்கும் பேறு பெற்றேன். ஒருவர் முதியவர். வாழ்நாளின் பெரும்பகுதியைச் சமணத் துறவியாகக் கழித்துவிட்டு இறையருளால் சைவத்தை ஏற்றவர். சிவனைப் போற்றி அவர் உருகி உருகிப் பாடும் பாடல்கள் கேட்பவர் நெஞ்சை எல்லாம் கனிய வைக்கும். மற்றவர் ஒரு பாலகன். நம் இளவரசர் வயதுதான் இருக்கும். இவரும் சிவனைப் போற்றி இசையோடு தமிழ்ப்பாடல்கள் பாடுகிறார். இசைக்கு வயப்படாதவர் யார்? எனவே மக்கள் பெரும் அளவில் அவர்களைக் காண வருகின்றனர். இவர்கள் பின்னால் செல்லும் கூட்டம் வர வர அதிகரித்து வருகிறது.

“அப்படியா, என் மகன் வயது உள்ளவருமா பெரும் கூட்டத்தை ஈர்க்கிறார்?”

“ஆம் தேவி. அவர் இறைவனை உள்ளம் கவர் கள்வன் என்கிறார், இவரும் ஒரு உள்ளம் கவர் கள்வன்தான். எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள கோவிலில் வழிபட்டுப் பதிகம் பாடுகிறார். அதில் அந்த ஊரின் இயற்கை அழகை வர்ணிக்கிறார். அதைக் கேட்கும் மக்கள், ஆம், நம் ஊர் அழகானதுதான், அதை நாம் இது வரையில் கவனிக்கவில்லையே என நினைக்கிறார்கள். அவர்கள் அந்த மன நிலையில் இருக்கும்போது சம்பந்தர் இத்தகைய ஊரில் வாழும்  இறைவன் இத்தகையவன் என்று அவரது தோற்றத்தையும் சிறப்பித்துப் பாடுகிறார். மக்கள் ஆம், இந்தத் தெய்வத்தையும் நாம் மறந்து விட்டோம் என நினைக்கிறார்கள். ஏழு பாடல்களில் சிவனின் தோற்றத்தை வர்ணித்துவிட்டு எட்டாவது பாடலில் அவரை அடையக் கல்வியோ, செல்வமோ, வீரமோ பயன்படாது. காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கிப் போற்றுவது ஒன்றே வழி என்பதை எடுத்துரைக்கும் வகையில் ராவணனின் கதையைக் கூறுகிறார். ஒன்பதாவது பாடல் தோறும் இறைவன் சோதி மயமானவன் என்பதை நினைவூட்டி, தீயைப் பார்க்கும் போதெல்லாம் இறைவன் நினைவு வரும்படிச் செய்து விடுகிறார் அந்தச் சொல் சித்தர். பத்தாவது பாடலில்,  சமணர் சொல் கேளாதீர், நான் பாடும் இந்தத் தமிழ்ப்பாடலைப் பாடி வினைகளை நீக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது கூட்டம் மகுடி முன் நாகம் போல அப்படியே அவருக்குக் கட்டுப்பட்டு நிற்கிறது. நான் என்னை இன்னாரென்று அறிமுகப்படுத்திக்கொள்ளாமல் எங்கள் பாண்டி நாட்டுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அவர் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அவர் இங்கு வந்தால் சமணம் வீழ்வது திண்ணம்.”

“அப்படியா? நல்ல செய்தி சொன்னீர்கள். அவர்கள் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.”

 தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.