க. பாலசுப்பிரமணியன்

அனுபவப்பூர்வமாக அறிதலின் முதல் சில படிகள்

education4

ஒரு குழந்தை ஏதேனும் ஒரு பொருளை ஆழ்ந்து பார்க்கும் பொழுது அதைப் பற்றி அறிந்துகொள்ள மனதில் ஒரு உந்துதல் ஏற்படுகின்றது. உடனே அதைத் தொடவும் அதைப் பற்றிகொள்ளவும் முயற்சி செய்கின்றது. இது குழந்தை மேற்கொள்ளும் ஒரு ஆக்கபூர்வமான செயல். இதை பற்றி கிளைர் லெர்னெர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றார் : ” ஒரு பொருளைப் பார்த்து எடுத்துக்கொள்ளவும் அதை பற்றிக்கொள்ளவும் ஏற்படும் உந்துதல்  குழந்தையின் நோக்கத்தை வெளிப்படுத்தும் செயல் (intentionality ). அது குழந்தையின் வளர்ச்சியில் கவனம், ஆர்வம் மற்றும் ஈடுபாடு என்ற கற்றலுக்குத் தேவையான உள்ளுணர்வுகளுக்கு ஒரு முன்னுரை.”

ஆகவே குழந்தையின் நோக்கங்களை உருவாக்குவதிலும் சீர்படுத்துவதிலும் தாயின் கவனம் தேவைப்படுகிறது. இதனால் தான் ஒரு தாயை குழந்தையின் முதல் ஆசானாகக் கருதுகின்றனர்.

ஆகவே எந்தப் பொருளை குழந்தை நாடுகிறதோ அதை சிறுது தூரத்தில் வைத்து அதை குழந்தை எடுக்கும் முயற்சியை ஊக்குவிக்க வேண்டும். குழந்தை காட்டும் ஆர்வம், விருப்பம் மற்றும் உள்நோக்கத்தைப் பாராட்ட வேண்டும். அந்தப் பொருள் பாதுக்காப்பாக இருக்கும் பட்சத்தில் அதை உணருதல் முகர்தல் மற்றும் உருட்டியோ அல்லது திருப்பியோ பார்த்தல் ஆகிய நிகழ்வுகளை ப்   போற்றவேண்டும்.

குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆர்வமும் உந்துதலும் ஏற்படும் பொழுது அதற்குத் தான் தேடும் அல்லது உணரும் பொருளைப் பற்றிய முன்னறிவும் அனுபவமும் இல்லை. ஆகவே அந்தப் பொருள் பாதுகாப்பானதுதானா இல்லையா என்ற அறிவும் இருப்பது இல்லை. இந்தநேரத்தில் தான் குழந்தைகளுக்கு அதிகமான பாதுக்காப்புத் தேவை. ஆகவே தம் குழந்தைகளின் மேல் தாயாரின் அல்லது வீட்டில் உள்ள மற்ற பெரியவர்களின் கவனம்  தேவை. சூடான பொருள்களின் மேல் அறியாமல் கை வைத்தல், சாப்பிடக்கூடாத அல்லது பாதுகாப்பில்லாத பொருள்களின் மேல் கைவைத்தால் போன்ற செயல்கள் அதிகமாக  நடக்க வாய்ப்புண்டு.

பொதுவாக இவ்வாறு குழந்தைகள் கற்றுக்கொள்ளும் நேரத்தில் பெற்றோர்களின் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் குழந்தைகளைப் பார்த்து “இதைச் செய்யாதே, இப்படிச் செய்யாதே ” என்று செயல்களைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்வர். இது ஒரு சரியான நோக்கு அல்ல. “இப்படிச் செய்யாதே” என்று குழந்தைகளைத் தடுப்பதைவிட இப்படிச்செய்ய வேண்டும் என்ற ஆக்க பூர்வமான நோக்கை கையாளுதல் மிக்க அவசியம். என்பது மனஇயல்  வல்லுனர்கள் வாதம்.

சில வீடுகளில் மிகச் சிறிய வயதில் இருக்கும் குழந்தைகளை தொலைக்காட்சி முன் பல மணி நேரங்கள் அமர்த்திவிடுகின்றனர். அதைப் பார்க்கும் வரையில் குழந்தைகளால் தங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது என்ற நல்லெண்ணத்தில்! (???). இதைப் பற்றிய ஆராய்சிகள் இதனால் ஏற்படும் தீமைகளை வெகு அழகாக விளக்குகின்றன.

இளம் வயதில் குழந்தைகளைத் தனியாக தொலைக்காட்சி அனுபவங்களோடு விடுதல் அதனுடைய மன நிலையை மிகவும் பாதிப்பதாக பலதகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வகையான பதிப்புகள் சில நேரங்களில் குழந்தைகளின் உள்ளாழ்ந்த மன நிலையையும் உணர்வுகளையும் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதன் விரிவான பாதிப்புகளை நாம் தொடர்ந்து பார்ப்போம்..

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கற்றல் – ஒரு ஆற்றல் (7)

  1. நல்லதொரு கட்டுரை. குழந்தை ஜனிக்கும்போது, கூடவே ஜனித்தது அறிவு வளர்ச்சி. குழவி போலவே, அதுவும் வளரும்; அந்த வளரும் விதத்தைக் கையாளுவது ஒரு திறன். சாமர்த்தியம். கற்றுக்கொள்ள இயலும். கர்ப்பவதி யாவருக்கும் இந்த செய்தி போகவேண்டும். தந்தைமார் யாவருக்கும் பயிற்சி தேவை. இதை விட்டு விட்டு, தும்பை விட்டு விட்டு வாலைப்பிடிப்பது போல், மீசை முளைத்தப் பையனிடம் சத்தும் போடுவது அறிவீனம்.

  2. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் வார்த்தைகள் மிகவும் உண்மை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *