மாடி வீட்டு மாதவன்
க பாலசுப்ரமணியன்
மாடிப்படி மாதுவை உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும், ஆனால் மாடி வீட்டு மாதவனைத் தெரிந்திருக்க நியாயமில்லை. கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள் அவர்கள் வீட்டில் என்ன நடக்கிறதென்று.—. அப்புறம் உங்களுக்கே தெரியும் அவர் யாரென்று.!
‘ அப்பா, அப்பா ” இது அவர் பெண் ரேவதி
” கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கப்பா… என்னோட ஜீன்ஸ் ரொம்ப பழசாப் போச்சு.. ஓரத்திலே கிழிசல் வேற.. ஒண்ணு புதிதா வாங்கணுமப்பா …
“ம் … ” மாதவன் தன் கண்ணாடியைக் கொஞ்சம் சரி செய்துகொண்டு குனிந்து அந்தப் பேப்பரை பார்த்த வண்ணம் இருக்கிறார்.
“உங்க கிட்டேன் தான் சொல்றேன் அப்பா “
“ம் .. கேட்டுண்டுதானிருக்கேன் ..”
“ரேவதி.. அந்த சுவத்துக் கிட்ட சொல்றதும் ஒண்ணுதான், உங்க அப்பா கிட்ட சொல்றதும் ஒண்ணுதான்.. போயி அடுத்த வேலையைப் பாரு. ” இது ஸ்ரீமதி என்ற அவர் மனைவி.
மாதவன் தன மனைவியை திரும்பிப் பார்க்கிறார்.
“இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லே…ஏதோ கதையெழுதறேன், கவிதையை எழுதறேன்னு நேரத்தையும் காகிதத்தையும் வீணாக்கிகொண்டு …. காலணாவுக்கு பிரயோசனமில்லை.. இதுக்கு மேலே இங்கே சொற்பொழிவு அங்க பேசறேன்னு .. எல்லாம் தேங்காமூடிக் கச்சேரி. ,”
தன் கண்ணாடியைக் கொஞ்சம் கழட்டி மேஜை மேல் வைத்துவிட்டு “நாராயணா….ஏழுமலை வாசா..” என்று பெருமூச்சு விடுகிறார்.
“கூப்பிடுங்கோ.. கொஞ்சம் சத்தமா.. அந்த ஏழுமலையானுக்கு கேட்கட்டும். அப்புறமாவது எதாவது பணம் வருதா பாக்கலாம்”
” ஏம்மா, பணம் பணம்னு அலையற..வாழ்க்கையிலே பணம் ஒண்ணுதானா முக்கியம்? இருக்கறதை வெச்சு சந்தோஷப்படப் பாருங்கோ..”
” ஆனா.மாதவன் சார் .. நீங்க எழுதற கதையையும் அந்த காகிதத்தையும் சாப்பிட முடியாதே. உள்ளே போகதே.. அதையும் சாப்பிட்டா பக்கத்து வீட்டுக்காரெங்க நம்மள வேற ஏதோ ஜந்துவோடனா கம்பேர் பண்ணுவா.,”
மாதவனுக்குச் சுவரில் தலையை முட்டிக்கொள்ளலாம்போல இருந்தது. ஆனால், இது அவருக்குப் புதிதில்லை.நித்தியம் காலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பதுபோலத்தான்.
“ஸ்ரீமதி, எனக்குன்னு ஒரு மரியாதை இந்த சொசைட்டியிலே இருக்கு.. புரிஞ்சுக்கோ.. இங்கே இருக்கறவா எல்லாருக்கும் மாதவனை நல்லாத் தெரியும்..”
” ஆஹா. தெரியாதா என்ன… யாரு? அந்த மாடி வீட்டு மாதவனைத்தானே கேட்கறேள் .. பத்து வருஷமா ஒரு வேலையும் பார்க்காம கதை எழுதறேன்னு ஜன்னல் பக்கத்திலேய உட்கார்ந்து வானத்தையே வெறிச்சுப் பார்த்திண்டிருப்பாரே அவர்தானே? “
ஸ்ரீமதிக்கு பணம் மட்டும் தான் வேண்டுமா இல்லை, அவளுடைய வேறு எதிர்பார்ப்புக்கள் என்ன என்று அவருக்குத் தெரியவில்லை.
கற்பனையால் உலகை அளக்கும் அவருக்குத் தன் மனைவியின் உள்ளத்தை அளக்க முடிய வில்லை
சிறிது நேரத்தில் அவர் தன்னை அலங்கரித்துக் கொண்டு புறப்பட்டார்.. கண்ணாடியில் தன் திருநாமத்தைச் சரி செய்து கொண்டார்.
“என்ன.. ஜானவாசம் கிளம்பியாச்சா?” ஸ்ரீமதி நக்கலாகக் கேட்டாள்.
துண்டை உதறிப் போட்டுக்கொண்டே “ஒரு சொற்பொழிவு.. கர்ணனைப் பத்திப் பேசணும்…”
“அங்கேயே கொஞ்சம் தேடிப்பாருங்கோ.. ஏதாவது கர்ண மகாராஜா கிடைப்பாரான்னு…”
தன் மனைவியின் குத்தலான பேச்சிலும் ஒரு ரசனையை அவர் மனம் கண்டது.
“சாப்பாடு எப்படி? அங்கேயா, இங்கேயா?” மீண்டு ரேவதி.
“கொஞ்சம் மோர் சாதம் வைத்திரு….”
“வேறென்ன இருக்கு? ஏதோ பருப்பு பாயசம் மிஞ்சிப் போற மாதிரி…”
வார்த்தைகள் ஒரு மனிதனை தூக்கி உட்காரவும் வைக்கும், அது ஒரு மனிதனுடைய சக்தியைப் பறித்து அவனை நிர்மூலமாகவும் ஆக்கிவிடும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவளுக்கு ஏன் புரிய வில்லை?
மதியம் அவர் திரும்பும் பொது கையில் ஒரு பூமாலை இருந்தது… மாதவனின் மகளும் மகனும் தன் அப்பா முகத்தில் இருந்த ஒரு சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் பார்த்து ரசித்தனர்.
” டேய் கோபி, இப்போ உங்க அப்பாவைப் பார்த்தா எப்படி இருக்குத் தெரியுமோ?” ரேவதியும் கோபியும் தன் தாயார் பக்கம் திரும்பினர்.தக் காலத்து கல்யாணப்பரிசு படத்திலே தங்கவேலு கைநிறைய மாலையை எடுத்துண்டு வர மாதிரி.. ” அதோடு அவள் நிறுத்தவில்லை..
“ஏன்னா எல்லாரும் கை தட்டினாளா? ..” அவளுடய நையாண்டி அவர் மனிதத்தை புண்படுத்தினாலும் அந்த இரண்டு சிறிசுகளும் வாய் விட்டுச் சிரித்தனர்.
“மோர் சாதம்..”
” எனக்கு .வேண்டாம்.. வயரும் மனசும் நிறைந்திருக்கு..”
” சந்தோஷம்.. சாப்பாடு மிச்சம்.”
“அப்பா, உங்களுக்கு ஏதோ லெட்டெர் வந்திருக்கு. டேபிள் மேல வெச்சிருக்கேன்” — கோபி
அந்த கவரைப் பிரித்த மாதவன் அதை மீண்டும் மீண்டும் படித்தார்.
” நாராயணா. நாராயணா.. ” அவர் குரலில் ஒரு புதிய உயிர் இருந்தது..
” என்னப்பா? .. இவ்வளவு சந்தோஷம்? ” ரேவதி தந்தை அருகில் வந்தாள்
“ரேவதி .. என்னோட கதைக்கு தமிழ்ச் சங்கத்தில் அவார்டு கிடைத்திருக்கு. எனக்கு சிறுகதை மன்னன் என்ற டைட்டில் குடுக்கறா..”
“கங்க்ராட்ஸ் அப்பா”
“ஏன்னா வெறும் டைட்டில் தானா.. இல்லே எதாவது காசு கொடுப்பாளா?”
தன் மனைவியை ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்த மாதவன் “உனக்கு யார்தான் ஸ்ரீமதின்னு பெயர் வைத்தார்களோ?… கற்பூர வாசனை..கற்பூர வாசனை…” தலையில் அடித்துக்கொண்டே தன் நாற்காலியில் அமர்ந்தார்.
காலையில் எழுதிய சிறுகதைக்கு ஒரு தலைப்புக் கொடுத்திருந்தார். “சொந்தங்கள் சுகமானவை” என்று ! கதையை ஒரு முறை மீண்டும் படித்துவிட்டு தலைப்பை மாற்றி எழுதினார் —
“சொந்தங்கள் சுமையானவை”
x x x
வார்த்தைகள் ஒரு மனிதனை தூக்கி உட்காரவும் வைக்கும், அது ஒரு மனிதனுடைய சக்தியைப் பறித்து அவனை நிர்மூலமாகவும் ஆக்கிவிடும் என்ற வாக்கியம் அருமையினும் அருமை. சொந்தங்கள் சொர்க்கமானைவை, நாம் அதை நளினமாகக் கையாளும் போது. நன்றி வணக்கம்.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி