க.பாலசுப்ரமணியன்

images

எத்தனை வடிவங்கள் எடுத்தாய் இறைவா!

பார்க்குமிடமெல்லாம் நீ படர்ந்திருக்க

பத்து உருவினில் உன்னைச் சிறைப்பிடித்தல்

பழுக்காத சிந்தனையின் பேதமையன்றோ !

 

தோளிரண்டில் தன் செல்வங்களைச் சுமந்துநின்ற

தந்தையின் அன்பினிலே உனைக் கண்டேன்  !

தூங்காமல் தாயருகில் இரவெல்லாம் துணையிருந்து

தேறுதல் சொன்ன மகனிடம் உனைக்கண்டேன் !

 

காலமெல்லாம் துன்புறத்திக் கதறவிட்ட மனைவியினைக்

கனிவாக அணைத்திட்ட கணவனிடம் உனைக்கண்டேன்!

நட்டாற்றில் தள்ளாடும் நண்பனின் குடும்பத்தை

நலமாகத் தன்வீடு அழைத்திட்ட நட்பினில் உனைகண்டேன்!

 

தன்பசியைத் தன்னுள் அடக்கி ஊர்பசிக்கு உணவுதேடி

உழைத்திட்ட உள்ளத்தில் உனைக்கண்டேன் !

கடன்வாங்கி வைத்திருந்தக் கையிருப்பைக்

கலங்காமல் கொடுத்திட்டகண்ணொளியில் உனைக்கண்டேன்

 

சுமைதூக்கும் தோள்களில் உனைக்கண்டேன்

சுவையாகச் சமைக்கின்ற கைகளில் உனைக்கண்டேன்

சோர்வின்றி உழைக்கின்ற உடலில் உனைக்கண்டேன்

சோதனையைச் சுமந்திட்டநெஞ்சங்களில் உனைக்கண்டேன்!

 

கண்ணீரைத் துடைக்கின்ற விரல்களில் உனைக்கண்டேன்

கைகொடுத்து உயிர்காத்த கருணையில் உனைக்கண்டேன்

களைப்பின்றி சேவைசெய்யும் இளைஞனில் உனைக்கண்டேன்

கலையாது  தலைதூக்கி நின்ற மனிதத்தில்  உனைக்கண்டேன் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.