க.பாலசுப்பிரமணியன்

தாயும் சேயும் – சில கற்றல் பரிமாணங்கள்

education

கற்றல் என்ற செயல்  கருவிலேயே வித்திடப்படுகிறது என்பதை நாம் அறிந்தோம்.  ஆனால் ஒரு குழந்தை தன்  தாயின் தொப்பிள் கொடியிலிருந்து விடுபட்டு இந்தப் பரந்த உலகை சந்திக்கும் செயல் மிகவும் உணர்ச்சி பூர்வமான மன அழுத்தம் கொடுக்கின்ற ஒரு நிகழ்ச்சி. தன் தாயின் முழுப் பாதுகாப்பிலிருந்த ஒரு குழந்தை தான் முன் அறியாத ஒரு உலகில் காலெடுத்து வைக்கின்ற செயல் குழந்தைக்கு பயத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகின்ற ஒரு செயல். மன வல்லுனர்கள் இதை ஒரு அறிந்த உலகிலிருந்து அறியாத உலகிற்கு செல்லும் பயணம் என்று சொல்வார்கள். ( Journey from known to the unknown) .

பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் முதலில் தேடுவது பாதுகாப்பான சூழ்நிலைதான். இதை ஏற்படுத்துவதில் தாய்க்கு அளவற்ற பொறுப்பு உண்டு. தாயின் அரவணைப்பில் அந்தக் குழந்தைக்கு பாதுகாப்பிற்கான ஒரு செய்தி கிடைக்கின்றது. ஆகவே பிறந்த சில நாட்கள் வரை தாயின் அரவணைப்பு குழந்தைக்கு இன்றியமையாதது.

தாயின் குரல், உணர்வுகள் இவற்றோடு பல மாதங்கள் பழகிவிட்ட குழந்தைக்கு அதைத் தவிர மற்றவை அனைத்தும் ஒரு சந்தேகத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள். ஆகவே கருவில் கற்ற  ஒலி  வடிவங்கள், உணர்வுசார் அசைவுகள் குழந்தையின் நினைவில் (memory) இருப்பதால் தாயிடம் குழந்தை பாதுகாப்பின்  குறியீடுகளை அறிந்துகொள்கிறது.

தாய்க்கும் சேய்க்கும் பிறந்த சில மாதங்களில் இருக்கும் உறவுகள் பற்றி மனவல்லுனர்களால் பலவித ஆராய்சிகள் செய்யப்பட்டுள்ளன. தன் குழந்தையுடன் எவ்வாறு தாய் அதிக நேரம் செலவிட வேண்டும் எப்படியெல்லாம் உறவாட வேண்டும் என்று  வல்லுனர்கள் விளக்குகின்றனர்.

சில உதாரணங்களை நாம் இங்கு சொல்லலாம். “கண்ணோடு கண் நோக்கின் ” என்று சொல்வதுபோல் குழந்தையின்  கண்களோடு உறவாடுதல் மிக அவசியம். (Visual Engagement ). இது குழந்தைக்கு பயத்தை நீக்குவது மட்டுமின்றி  தன்னம்பிக்கையை வளர்பதற்கும் அவசியம் என்று சொல்லபடுகின்றது. மேலும் தாயின் முகத்தில்  காணும் உணர்வுகளைக் குழந்தை அறிந்து பழக்கப் படுத்திக் கொள்ளுகின்றது. ஆகவே “முகம் பார்த்து சிரித்தல்” என்பது உறவாடும் கலையின் முதல் படி. (Relationship management ).

இரண்டாவதாக தாய் தன குழந்தையுடன் பேசுதல் அவசியம். “தாயின் மொழி தாய் மொழி’ .தாயின் உதடுகளின் அசைவுகளைப் பார்க்கின்ற குழந்தையின் மனத்தில் அந்த அசைவுகள் ஆழமாகப் பதிகின்றன இதை கேட்கின்ற குழந்தையின் மனத்தில்  உதடுகளின் அசைவும் ஒலி அலைகளின் பதிவும் ஒன்று சேர்ந்து பதியும் நேரத்தில் கற்றல் என்ற நிகழ்வின் வாசல் கதவுகள் திறக்கப் படுகின்றன.

மூன்றவதாக தாயின் கொஞ்சல் குழந்தையின் உணர்வுகளை மகிழ்விக்கின்றன. இதன் மூலமாக தாயின் உணர்வுகளுக்கும் குழந்தையின் உணர்வுகளுக்கும் இடையே ஒரு பாலம் அமைக்கப் படுகின்றது. (emotional bonding) இது உறவினை உறுதிப் படுத்தி தாயிடம் மீண்டும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி கற்றலுக்கான ஆர்வத்தை  (curiosity to learn ) அதிகரிக்கின்றது.

இதனால் குழந்தையின் ‘அறிதல் -புரிதல் ” (cognition -understanding) செயல்களுக்கு ஓர் நல்ல ஆரம்பம் கிடைக்கிறது.

குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் அதன் தேடுதல் வேட்டை தொடங்கி விடுகின்றது. (Exploration). சில மன வல்லுனர்கள் விளையாட்டாக இதை ஒரு மலை ஏறும் பயிற்சிக்கு ஈடானது என்று சொல்கிறார்கள். (Adventure seeking). குழந்தையின் கண்களின் பார்வை செல்லும் இடங்கள், கைகளும் விரல்களும் அசையும் முறைகள் இவற்றை உற்று நோக்கினால் அந்தக் குழந்தையின் தேடுதல் வேட்டையின்  தீவிரத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த தேடுதல் வேட்டையை நாமும் பின்தொடர்வோம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கற்றல் – ஒரு ஆற்றல்   (5)

  1. மேலாண்மயை எடுத்துக் காட்டியமைக்கு பாராட்டுக்கள் நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *