எம். ஜெயராமசர்மா.

diwali

கரம்டவுண்ஸ் சிவா விஷ்ணு ஆலயம் 14 / 11 / 2015 சனிக்கிழமை அன்று பூலோக கைலாசமாகக் காட்சிகொடுத்தது. தீப ஒளித்திருநாளைக் கொண்டாடும் முகமாகக் கோவிலெங்கும் அலங்காரமும், பல வண்ண விளக்குகளுடன் கூடிய கடைகளும், கோவிலின் உள்ளே வேதமந்திர ஒலிகளும், பக்தியை வெளிப்படுத்தும் பாங்கான இசையும், வண்ண வண்ண உடைகளை அணிந்த பெரியவர்களும், சிறியவர்களும், என சொர்க்கமாகவே இருந்தது.

இந்த அழகான சூழலிலே அன்னை மொழியாம் அருந்தமிழை ஆங்கில மண்ணில் அரவணைத்து நிற்கும் “அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்” தன்னுடைய பதினைந்தாவது எழுத்தாளர் மாநாட்டை “பீக்கொக்” மண்டபத்தில் இடம்பெறச் செய்திருந்தது. மண்டப ஒழுங்கமைப்பு தமிழர் பண்பாட்டினை வெளிப்படுத்தி நின்றது. நிறைகுடம் விளக்கு வாசலில் வரவேற்பு வாசல் வண்ணமுடன். உள்ளே மேடையின் முன் நீண்டு நெடிதுயர்ந்த பளிச்சிடும் தங்கநிறத்திலான இரண்டு விளக்குகள் இருமருங்கும் மேடையை மெருகூட்ட நவீனமும், பாரம்பரியமும் கலந்த நாதஸ்வர வாத்தியக் கலைஞர்களின் அழகுமிகு சித்திரம்.

சரியாகப் பிற்பகல் நான்கு மணிக்கு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர் திரு எம் . ஜெயராமசர்மா மண்டபத்தின் உள்ளே வர அவரைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள், எழுத்தாளப் பெருமக்கள், விழாவைச் சிறப்பிக்க வருகை தந்த அத்தனைபேரும் உள்ளே வந்தார்கள். உள்ளே நுழைபவர்களைத் தமிழர் மரபுப்படி மலர்தூவி வரவேற்று நின்றார்கள் கொஞ்சுமொழி பேசும் பிஞ்சுச் சிறுமியர்கள். வண்ண உடையில் அவர்கள் வரிசையில் நின்று வரவேற்ற காட்சி மலர்கள் எல்லாம் விரிந்து நிற்கும் மலர்க்காட்சி போன்றுதான் காணப்பட்டது ! வரிசையாக வைக்கப்பட்ட ஆசனங்களில் அனைவரும் அமர்ந்ததும் கம்பீரக் குரலால் அறிவிப்பாளர் திரு ந . அல்லமதேவன் அவர்கள் தனது பணியினை ஆற்றத்தொடங்கிவிட்டார். மங்களவிளக்கை ஶ்ரீமதி சாந்தி ஜெயராமசர்மா ஏற்றிவைத்தார். மெளனப் பிரார்த்தனையைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்தினை ஆகர்ஷணா சாயிஜீவா நந்தக் குருக்கள், பிரவர்த்திக்கா சாயி ஜீவானந்தக் குருக்கள் சகோதரிகள் தங்களின் இணைந்த இனிமைக்குரலில் வழங்கினார்கள்.

ஆவூரான் சந்திரன் அவர்களால் ஆக்கப்பட்ட தமிழ் வாழ்த்தினை பத்தொன்பது இளந்தளிர்கள் பாடி சபையோரை மெய்மறக்கச் செய்தனர். தமிழ் வாழ்த்தினைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவர் திரு எம். ஜெயராம சர்மா அவர்களின் வரவேற்புரையும் தலைமையுரையும் இடம்பெற்றன. பதினைந்து வருடங்கள் என்பது சாதாரண மானதொன்றல்ல. பலவிதமான சோதனைகளை எதிர்வு கொண்டுதான் இந்தப் பதினைந்து வருடம் என்பதைப் பார்க்க வேண்டும் என்று தலைவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். ஆங்கிலம் பேசும் மக்கள் செறிந்து வாழும் அவுஸ்திரேலிய நாட்டில் தமிழர் பண்பாடு கலாச்சாரம் இவற்றை வளர்ப்பதற்குத் தமிழ் மொழியை வளர்க்கும் முகமாக ஏற்படுத்தப்பட்டதுதான் இச்சங்கம். இந்தச் சங்கத்தை வளர்த்தெடுக்கும் பணியில் பலபேரின் அயராத முயற்சி அடங்கியிருக்கின்றது என்பதை யாவரும் நினைத்துப்பார்ப்பது மிகவும் முக்கியம் என்று கூறியதோடு அவர்கள் பாராட்டப் படவேண்டியவர்கள் என்றும் தலைவர் ஜெயராமசர்மா குறிப்பிட்டார்.

எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களது ஆக்கங்களைப் பலபேரும் அறியச் செய்விப்பதோடு அவர்களுக்கு ஒரு அந்தஸ்தினையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தருவதில் இச்சங்கம் பெரிதும் விருப்புடையதாகச் செயற்பட்டுவருகிறது. புதியவர்களையும் அரங்கேற்றும் உயரிய சிந்தனையையும் இச்சங்கம் தன்னகத்தே கொண்டு மிளிர்கிறது என்றும் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார். தமிழர்கள் தமிழில் பேசுதல் அவசியம். அப்பொழுதுதான் வருங்காலச் சந்ததிகளும் தாய்மொழியான தமிழினை அரவணைப்பார்கள்.பெற்றோர்கள் வீட்டில் கட்டாயம் தமிழிலேயே பேசுங்கள், இல்லாவிட்டால் ஆங்கிலச் சூழலில் வளரும் எங்களது பிள்ளைகள் எதிர்காலத்தில் பெயரளவில் மட்டுமே தமிழர் என்று இருக்கும் நிலை வந்துவிடலாம் என்று தலைவர் தனது உரையில் வலியுறுத்திக் கூறினார். இங்கிலாந்து, இலங்கை, அண்டை மாநிலமான சிட்னி, ஆகிய இடங்களில் இருந்து வருகை தந்திருந்த சிறப்புவிருந்தினர்களையும் விழாவில் கலந்து சிறப்பிக்க வந்திருந்த உள்ளூர் தமிழிலக்கியக் கலைஞர்களையும் இரசிகப் பெருமக்களையும் இன்முகத்தோடு வருக வருக என வரவேற்கின்றேன் என்று தலைவர் கூறி தனது வரவேற்புரையினையும் தலைமை உரையினையும் நிறைவு செய்துகொண்டார்.

தலைவரின் உரையினைத் தொடர்ந்து “இலக்கியக் கருத்தரங்கு” இடம் பெற்றது. பிற்பகல் 4. 30 மணிக்கு – முன்னாள் ரூபவாஹினி தொலைக்காட்சி தமிழ் நிகழ்ச்சிப் பணிப்பாளரும், வீரகேசரி பத்திரிகையில் முன்னாள் செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்தவருமான இலங்கையைச் சேர்ந்த திரு சி . வன்னியகுலம் அவர்களது தலைமையில் “இலக்கியக் கருத்தரங்கு” ஆரம்பமானது. இதில் ஐவர் கலந்து அன்னைத் தமிழில் அரிய விஷயங்களை அவைக்கு அள்ளி வழங்கினார்கள். தமிழரது சங்ககால இலக்கியத்தைத் தமிழறிஞர்கள் எப்படி எல்லாம் நோக்கினார்கள் என்பதைப் பல உதாரணங்கள் வாயிலாக எடுத்து வைத்தார் கருத்தரங்கின் தலைவர் திரு சி . வன்னியகுலம் அவர்கள். இயற்கை நெறிக் காலம் எனப் பேராசிரியர் வேலுப்பிள்ளையும், வீரயுகக் காலம் எனப் பேராசிரியர் கைலாசபதியும், தமிழரது பண்பாடு உச்சத்திலிருந்த காலமென பேராசிரியர் செல்வநாயகமும், குறிப்பிட்டிருக்கின்றனர் என்பதைத் தெரிவித்தார்.

இலக்கியம் என்பது காலத்தைப் பிரதிபலித்து நிற்பதால் அவ்வக் கால நிகழ்வுகளைப் பதிவு செய்தே நிற்கும். அந்தவகையில்தான் புலம் பெயர் வாழ்வில் தமிழர்கள் இருந்தாலும் அவர்களது இலக்கியச் சிந்தனைகள் தாய்மண்ணையும், அங்கு நடைபெற்ற போராட்டங்களை மையப்படுத்துவதில் தவறவில்லை என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்து கருத்தரங்கின் முதல் பேச்சாளராக நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரை அரங்கேற்றினார். சிட்னிமாநகரில் இயங்கும் கார்த்திகா ஆடற்கலையகத்தின் இயக்குநராக விளங்கும் திருமதி கார்த்திகா அவர்கள் “மனிதவாழ்வில் ஆடற்கலைகளின் பரிணாமம்” என்னும் தலைப்பில் தனது கருத்துக்களை முன் வைத்தார். ஹரப்பா மொகஞ்சதாரோவில் ஆரம்பித்து சிலப்பதிகாரம், அடையாறு கலாசேத்திரா ருக்மணி அருண்டேல் வரையிலான வழியில் பயணித்து இன்றுவரை நடனம் அதாவது ஆடற்கலையானது மனித வாழ்வில் பெற்று நிற்கும் முக்கியத்துவத்தைத் தனது அனுபவ வாயிலாகவும். கற்றறிந்த நுண்ணறிவின் வாயிலாகவும் மிகவும் சிறப்பாக விளக்கி நின்றார்.

அவரைத் தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருந்த ” நாழிகை” பத்திரிகையின் ஆசிரியர் திரு மாலி மகாலிங்கம் அவர்கள் அமரர் காவலூர் இராசதுரை பற்றிய “நினைவுப்பேருரையை” நிகழ்த்தினார். இராசதுரை அவர்கள் இலங்கையின் மிகச்சிறந்த இதழியல் – வானொலி – தொலைக்காட்சி கலைஞர் என்பதை யாவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று எடுத்துரைத்தார். அவரின் பன்முக ஆற்றலைப் பலவிதப் பதிவுகள் வாயிலாகச் சபையில் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்க விதத்தில் அமைந்தது. ஊடகம் பற்றிப் பல விஷயங்களைத் திரு மாலி மகாலிங்கம் பகிர்ந்து கொண்டமை மிகவும் பயனுடையதாகவே இருந்தது.

“அமரர் எஸ் பொன்னுத்துரை நினைவுப் பேருரை” என்பதில் ஒரு படைப்பாளியின் சுயசரிதை குறித்த பார்வை பற்றி டாக்டர் நடேசன் அவர்களது உரை இடம் பெற்றது. சிறந்த தமிழ்ப் படைப்பாளியான எஸ். பொ. வின் நூலானது மிகவும் விரிந்தது, பரந்தது. அதனைப் பற்றிக் குறுகிய நேரத்தில் விளக்குதல் என்பது சற்றுக் கடினமான விஷயமாக இருந்தாலும் என்னால் இயன்றவரை எடுத்துச் சொல்லுவேன் என்று ஆரம்பித்து மிகவும் கச்சிதமாக – தான் எடுத்துக் கொண்ட தலைப்பை அழகுபடுத்தி நின்றார். டாக்டர் நடேசனை அடுத்து மீண்டும் ஒரு டாக்டர் வந்தார். அவர்தான் இலங்கையில் இருந்து வருகை தந்த டாக்டர் ந. முருகானந்தன் ஆவர். “ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் புதிய தலைமுறையின் பங்களிப்பு” என்பதைத் தனது பேசும் தலைப்பாக்கினார் அவர். தொழில் முறையில் ஒரு மருத்துவராக இருந்தாலும் தமிழைத் தன்வசம் ஆக்கிச் சிறந்த எழுத்தாளராக விளங்குகின்றார் என்பதை அவரது பேசும் தன்மை எடுத்துக் காட்டியது. பல புதியவர்கள் எப்படியெல்லாம் ஆக்கங்களை அளிக்கின்றார்கள் என்பதை மிகவும் பக்குவமாக முன்வைத்தமை மிகவும் பயனுடையதாய் அமைந்திருந்தது.

கருத்தரங்கின் நிறைவுப் பேச்சாளராக ஓவியர் திரு சு. ஶ்ரீநந்தகுமார் “தமிழ் அரங்குகளில் ஓவியத்தின் பரிமாணம்” என்னும் பொருள்பற்றித் தன்னால் வரையப்பட்ட ஓவியங்களைக் காட்சிப்படுத்தி மிகவும் பயனுடைய தகவல்களையெல்லாம் எடுத்துரைத்தார். ஓவியங்கள் மூலம் இவ்வளவு தகவல்களைத் திரட்டித் தந்த அவரின் பேச்சு மிகவும் காத்திரமான ஒன்றாகவே இருந்தது எனலாம். இலக்கியக் கருத்தரங்கு எல்லோருக்கும் பலவிஷயங்களைப் பலவிதத்தில் தந்த பயனுடையக் கருத்தரங்காக அமைந்தது. அதனைத் தொடர்ந்து நூல்களின் விமர்சன அரங்கு இடம்பெறும் என்னும் அறிவிப்பைத் தனது வெண்கலக் குரலால் திரு ந. அல்லமதேவன் அவர்கள் தெரியப்படுத்தியதும் சபையினர் ஆவலுடன் மேடையை நோக்கினர்! அனைவரும் – அறிவித்தலைக் கேட்டதும் அரங்கத்தையே பார்த்தபடி இருந்தனர்.

ஆறு தமிழறிஞர்கள் புடைசூழ வள்ளுவர் அறக்கட்டளையின் இயக்குநர் திரு நாகை சுகுமாரன் அவர்கள் அரங்கை அடைந்தார்கள். அவரது தலைமையின் கீழ் ஆறு அறிஞர் பங்குகொண்ட “நூல்களின் விமர்சன அரங்கு” ஆரம்பமாகியது. தலைவர் நாகை. சுகுமாரன் அவர்கள் இலக்கியம் பற்றியும், இலக்கியக் கர்த்தாக்கள் பற்றியும், நடைமுறை உதாரணங்களை முன்வைத்து நீண்டதொரு விளக்கம் அளித்தார். அதன்பின்னர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் நூல்கள் பற்றி திரு ச. ஜெயக்குமாரன் அவர்கள் தனது கருத்துக்களை முதலில் முன்வைத்தார். ஆசி கந்தராஜாவின் சிந்தனைகள் அவரது விஞ்ஞான வழியில் செல்லுவதையே அவரின் எழுத்துக்கள் காட்டி நிற்கின்றன என்று சொல்லி அதற்கான ஆதாரங்களை அவரால் புனையப்பட்ட புனைவுகளிலிருந்து எடுத்து விளக்கினார்.

மரபணு விஞ்ஞானியாக ஆசி. கந்தராஜா அவர்கள் விளங்குவதால் பலபுனைவுகள் அதனை ஒட்டியே வந்தமைகின்றது என்றும் சுட்டிக் காட்டினார். ஆசி . கந்தராஜாவின் எழுத்துக்கள் அவரின் அனுபவங்களாக விஞ்ஞான மயப்பட்டதாக இருக்கின்றது. இப்படி எழுதும் வல்லமைக்கு அவரை நிச்சயம் பாராட்டுதல் வேண்டும் என்று தனது பேச்சினை நிறைவு செய்தார். திரு ச. ஜெயக்குமரனது கருத்துக்களை உள்வாங்கியதாகவும் வருங்காலத்தில் அக்கருத்துக்களின் அடிப்படையில் எழுத முயலவதாகவும் ஆசி. கந்தராஜா அவர்கள் தனது ஏற்புரையில் கூறினார்கள். சிட்னியில் இருந்து வெளியாகும் தமிழ்முரசு மின்னிதழின் ஆசிரியர் திரு செ. பாஸ்கரன் அவர்களால் எழுதப்பட்ட கவிதை நூலான “முடிவுறாத முகாரி” என்னும் கவிதை நூலினை ஆய்வுசெய்யும் பணியில் அடுத்து வந்த திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்கள் வந்துநின்றார்.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் புலனெல்லாம் புகலிடத்தில்தான் இருக்கின்றது என்பதை “முடிவுறாத முகாரி” யில் காணமுடிகிறது என்று – தான் எண்ணுவதாகத் திருமதி சாந்தினி அவர்கள் குறிப்பிட்டார்கள். திரு செ. பாஸ்கரனின் தார்மீகக் கோபங்களை இந்தக் கவிதைகளில் காணமுடிகிறது. இதனை வாங்கிப் படித்தால் நன்கு புரியும் என்று தனக்கே உரித்தான வகையில் சபையினரிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரின் வேண்டுகோளினை அடுத்து நூலாசிரியர் திரு செ. பாஸ்கரன் தனது கருத்துக்களை முன்வைத்தார். தனது மனதிற்பதிந்த பல வடுக்களே தனது கவிதைகளாகி வந்திருக்கின்றன. இக்கவிதைகள் எழுதப்பட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும் என் நினைப்புகள் இக்கவிதைகளாகி வந்திருக்கின்றன என்றார்.

இவரின் ஏற்புரையின் பின்னர் திரு நவரத்தினம் இளங்கோ அவர்களால் டாக்டர் திரு நடேசன் அவர்களது “மலேசியன் ஏர்லைன்” சிறுகதை பற்றிய விமர்சனம் இடம் பெற்றது. டாக்டர் நடேசன் அவர்களின் எழுத்து சற்று வித்தியாசமானது. அவர் சொல்ல வந்ததை எவருக்கும் பயப்படாமல் சொல்லியே விடுவார். சொல்லுவதுகூட சுவையாக இருக்கும். சிலவேளைக் கிண்டலும் கேலியும் கூடச் சங்கமித்தும் விடும். இது டாக்டர் நடேசனது எழுத்துரிமை. அதனையே இந்தச் சிறுகதையிலும் காணமுடிகிறது என்று திரு நவரத்தினம் இளங்கோ அவர்கள் தனது கருத்தை முன் வைத்தார்.

நடைமுறையில் அன்றாடம் பயன்படுத்துகின்ற தமிழ்ச் சொற்களுக்கு ஏற்ற ஆங்கிலச் சொற்களைக் கண்டறிந்து “மொழிமாற்று அகராதி” தந்த தொண்ணூற்று ஐந்து வயதினை உடைய கலைவளன் சிசு. நாகேந்திரன் பற்றியும் அவரது ஆக்க முயற்சி பற்றியும் கேசி தமிழ் மன்றத்தைச் சேர்ந்த திரு. சிவசுதன் அவர்களின் விமர்சனம் அடுத்து இடம் பெற்றது. இந்தப் பெரியவரின் இடைவிடா முயற்சி எமக்கெல்லாம் நல்லதொரு படிப்பினை ஆகும் என்று எடுத்துரைத்து நாங்களும் எங்களால் இயன்றவரைத் தமிழ் வளர்ச்சிப் பாதையில் எம்மை ஈடுபடுத்திக் கொள்ளுதல் அவையாகும் என்று எடுத்துரைத்தார்.

அவரைத்தொடர்ந்து நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்கள் பற்றிய தனது எண்ணங்களைத் திரு. எஸ். சிவசம்பு அவர்கள் எடுத்துக் காட்டினார். இப்பேச்சு நாட்டியம் பற்றிய நுண்மாண் சிந்தனைகள் பலவற்றை ஆராய்ந்து வைக்கப்பட்டதாக அமைந்தது. மனிதனது தோற்றதோடு நாட்டியக் கலை எப்படிப் பின்னிப்பிணைந்து வந்திருக்கின்றது.அதனுடைய சமூகப் பெறுமதி எப்படியெல்லாம் வியாபித்து வந்திருக்கின்றது என்ற ரீதியில் ஆழமுடைய பேச்சாக அமைந்திருந்தது. இதற்கு ஏற்புரை வழங்கும் பொழுதுதான் எதை எண்ணியிருந்தேனோ அந்த எண்ணத்தைக் கண்டு பிடித்து விமர்சனம் செய்தமை தனக்குப் பெரிதும் மனநிறைவாக இருந்தது என்று நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் குறிப்பிட்டு – விமர்சனத்துக்குப் பாராட்டும் வழங்கினார்.

விமர்சன அரங்கின் நிறைவாகத் திரு கே. எஸ். சுதாகரின் சிறுகதைத் தொகுதி பற்றிய விமர்சனத்தைத் திரு க . குமாரதாசன் அவர்கள் வழங்கினார்கள். புலம்பெயர்ந்த நாட்டில் ஏற்பட்ட அனுபவங்கள் கதைகளாக இத்தொகுதியில் வந்திருக்கின்றன.பன்னிரண்டு சிறுகதைகளுமே பரிசுகள் பெற்ற கதைகள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். நல்ல கதைகள். வாங்கிப் படியுங்கள் யாவும் தெரியும் என்று கூறி விமர்சன அரங்கை நிறைவு செய்தார்.

தேநீர் இடைவேளை வந்தும்கூட எவருமே எழுந்து வெளியே செல்லாமல் தொடர்ந்து வந்த நிகழ்ச்சிகளை ரசிப்பதில் தம்மை மறந்து மண்டபத்தினுள் அமர்ந்திருந்தமையைக் காணமுடிந்தது. விழா அமைப்பாளர்கள் வந்திருந்த அனைவருக்கும் செவிக்கு விருந்தளித்த தோடு நின்றுவிடாமல் அவர்களது பசிக்கும் நல்ல சுவையான சிற்றுண்டிகளையும், தேநீரையும் கொடுத்து உதவியமை பாராட்டுக்குரியதாகவே எல்லோராலும் கருதப்பட்டது. அடுத்த அரங்காகக் கவியரங்கம் என்று அறிவிப்பு வந்ததும் அனைவரும் உற்சாகத்தோடு மேடைமீது கவனத்தைச் செலுத்தியபடி இருந்தார்கள்! கவியரங்கம் என்றதும் கைதட்டல் அதிர்ந்தது. இளமையானவர்கள் இன் தமிழ்கொண்டு இயம்பிட வந்தனர் இருக்கையில் அமர்ந்தனர். திரு லெ . கேதாரசர்மா அவர்களின் தலைமையில் “கவிஞனாய் நானிருந்தால்” என்னும் தலைப்பில் கண்ணதாசனாக எனத் திரு சி. அஜந்தனும், காசியாக தமிழ்ப்பொடியனும், புதுவையாக ஆவூரானும் வாலியாக ஒருவனும் கவிகொண்டு வந்தார்கள்.

கவியரங்கம் தொடங்கவே சிவா விஷ்ணு ஆலய தீபாவளி வாணவேடிக்கையும் தொடங்கிவிட்டது. வானதிர வாணவேடிக்கை இடம்பெற, அதை விஞ்சும் அளவுக்குக் கவிதை அரங்கம் களைகட்டி நின்றது. துடிப்போடு கவிபாடும் துணிவான தமிழ்கண்டு துடித்தெழுந்து நின்றார்கள் துணிவுடனே சபையோரும்.வெடித்து வந்த தமிழ் கேட்டார். விருப்புடனே முகம் பார்த்தார். படிப்பினையைத் தந்து நிற்கும் பாங்கான கவியென்றார். கவியரங்கம் நிறைவுற்றதை எவருமே விரும்பவில்லை. அத்தனை சுவையினை அள்ளித் தந்த கவிஞர்களை யாவரும் மனமார வாழ்த்தினர். கவிகண்டு மகிழ்ந்த சபையில் கன்னித்தமிழ் கொண்டு கனதியாய் கருத்துச் சொல்ல வந்தார்கள் காரிகைகள். திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்களது தலைமையில் “புலம்பெயர்வில் தமிழர் பண்பாடு” என்னும் மகுடத்தில் மகளிர் அரங்கு இடம் பெற்றது. புலம்பெயர் வாழ்வில் மகளிர் எதிர் நோக்குகின்ற பல்வேறு விஷயங்களை தனக்கே உரியப் பாணியில் திருமதி சாந்தினி அவர்கள் முன் வைத்தார்கள்.

அவரைத் தொடர்ந்து திருமதி சிராணி குமரன் அவர்கள் “புலம்பெயர்வில் தமிழர் பண்பாடுகள் பேணப்படுகின்றனவா? ” என்பது பற்றிய தனது கருத்துக்களை முன் வைத்தார். இவரின் கருத்துக்கள் தர்க்க ரீதியாகவும், பயன் மிக்கதாகவும் அமைந்திருந்தது. இவர் அண்மையில் புலம்பெயர்ந்து வந்த காரணத்தால் பல்வேறு விஷயங்களுக்கு முகங்கொடுத்து அதில் கண்ட தனது அனுபவங்களை முன்கொண்டுவந்ததை அவரின் ஆழமான துணிவான பேச்சு வெளிக்காட்டியது. அவரைத்தொடர்ந்து “புலம்பெயர்வில் தமிழ்ப் பெண்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்களா?” என்னும் விஷயம் தொடர்பாக அண்மையில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்திருந்த திருமதி கீதா மாணிக்கவாசகம் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி நின்றார்.

எழுத்தாளர் விழாவினை நிறைவு செய்யும் நிகழ்ச்சியாக அமைந்ததுதான் பட்டிமன்றம். ” வாழ்க்கையில் முன்னேறப் பெரிதும் தேவையானது … “துணிவான அணுகு முறையா?” என்னும் அணியில் திரு. ருத்திரபதியும், திரு. ஜனந்தனும் “பணிவான அணுகு முறையா?” என்னும் அணியில் திரு. பொன்னரசும், திரு. சுகந்தனும் இணைந்து திரு ஜெயந்தன் அவர்களது தலைமையில் கருத்துக்களை வாரிவழங்கிக் கைதட்டல்களைக் குவித்து விட்டார்கள். இந்தியத் தமிழும் இலங்கைத் தமிழும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிச் சிரிப்பாயும், சிந்தனையாயும், சபையோரைக் கல கலப்பாக்கியது என்பது முற்றிலும் உண்மையெனலாம். நேரமோ இரவு பத்தரையைத் தாண்டிய போதும் எவருமே தமது இருக்கையை விட்டு எழுந்திராமல் பண்ணியது பட்டிமன்றம் என்றால் அதை எவருமே மறுத்துரைக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது.

செயலாளர் ஶ்ரீநந்தகுமாரின் நன்றியுரையுடன் எழுத்தாளர் விழா இனிது நிறைவுற்றது. அவுஸ்த்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கத்தின் பதினைந்தாவது எழுத்தாளர் விழா பலராலும் பாராட்டப்பட்டது. இதற்கு முன்னர் நடைபெற்ற விழாக்களைவிட இந்த விழா பல நிலைகளில் சிறந்து விளங்கியது என்னும் கருத்துப் – பார்த்த பலராலும் முன் வைக்கப்பட்டது. விழாவில் பெண்கள் பலர் – விழா நிறைவு பெறும் வரை இருந்து நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்கள். அதேவேளை ஆண்களும் நிறைந்து இருந்தார்கள். சபையை நிறைத்து இளம் குருத்துகளும் இருந்தார்கள்.

விழாவின் ஆரம்பமே மிகவும் அற்புதமாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது. மண்டப அலங்காரம் மிக மிக அருமையாய் அமைந்தது. நிகழ்ச்சிகள் அத்தனையும் பெறுமதியாய் இருந்தன. மகளிர் அரங்கு ஒரு தனித்துவத்துவமாக அமைந்தது. பீக்கொக் மண்டபமே ஒரு வரப்பிரசாதம்தான். இறைவனது கோவில் வளாகத்தில், தீபஒளித் திருநாள் கொண்டாடும் தினத்தில் நல்லதொரு தலைமையின் கீழ் இந்த விழா இடம் பெற்றமையை யாவருமே பாராட்டி நிற்கும் இவ்வேளை இந்தப் பதினைந்தாவது எழுத்தாளர் விழாவானது “மனதில் நிற்கும் விழா ” என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனலாம் !

–எம். ஜெயராமசர்மா, மெல்பேண் அவுஸ்திரேலியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *