இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-7
-மீனாட்சி பாலகணேஷ்
சீர்கொண்ட நக்கீரனைச் சிறை விடுத்த குமரன்!
நக்கீரர் ஒரு பெரும் புலவர் என நாமறிவோம். திருமுருகாற்றுப்படை இவரால் இயற்றப்பட்டது. அவரை முருக பக்தராகத்தான் கண்டுள்ளோம். ஆனாலும் அவர் ஆரம்பத்தில் சிவபக்தராகவே இருந்து பின் முருகனையும் வழிபடலானார் என்பதற்கு ஒரு அழகான கதை உள்ளது. இதை ஒரு கவின்மிகு இலக்கியச்சித்திரமாகப் படைக்கிறார் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியரான பகழிக்கூத்தர்.
நக்கீரர் சிவபூசைக்குச் செல்லும் வழியில் நாள்தோறும் திருப்பரங்குன்றத்திலுள்ள சரவணப்பொய்கையில் நீராடிவிட்டுப் பின் மதுரைசென்று ஆலவாயண்ணலை வழிபட்டுச் செல்வதனை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள் காலை வழக்கம்போல நக்கீரர் சரவணப்பொய்கையில் சென்று நீராடினார். கரையில் இருந்த ஒரு அரசமரத்தடியே அமர்ந்தார். ‘சிவாயநம,’ எனும் திரு ஐந்தெழுத்தைச் சிந்தையிலே எண்ணி மோனநிலையிலிருந்தார்.
அப்போது அரசமரத்திலிருந்து ஓர் இலை கீழே இருந்த பொய்கையில் விழுந்தது. விழுந்த இலை சரியாக விழலாகாதா? தெய்வ சித்தத்தினால் அது பாதி நீரிலும் பாதி இலை நிலத்திலுமாக விழுந்தது! ஆகா! என்ன ஆச்சரியம்! நீரில் விழுந்த ஒரு பாதிப்பகுதி பாதி மீனாக மாறிவிட்டது. நிலத்தில் விழுந்த மறு பாதிப்பகுதி ஒரு பறவையாகி விட்டது. ஆனால் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன. ஒன்றைவிட்டு ஒன்று பிரியவேண்டி, அவை ஒன்றினை ஒன்று பற்றி இழுக்கலாயின.
கண்விழித்த புலவர் நக்கீரர் இந்தத் துடிப்பைக் கண்ணுற்றார். அவர் மனம் பதைத்தது. சிவபூசனையை மறந்துவிட்டு இதனைப்பற்றி என்ன செய்யலாம் எனச் சிந்தித்தார். உடனே அவ்விடத்தில் ஒரு பூதகணம் தோன்றி, “நீ சிவபூசையின் போது பிறழ்ந்தாய்,” என அவரை நையப் புடைத்துக் கொண்டுபோய் மலைக்குகையில் தான் ஏற்கெனவே சிறைவைத்திருந்த தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பூசைவழுவியர்களுடன் தான் உண்பதற்காகச் சிறை வைத்துவிட்டது.
பூதத்தின் எண்ணத்தினை அறிந்துகொண்ட நக்கீரர் தம் குற்றத்தினை உணர்ந்தவராகி முருகப்பெருமானை நோக்கி திருமுருகாற்றுப்படை என்னும் நூலினை இயற்றிப்பாடி, அவனருளை வேண்டினார். அவர் தமிழில் மனம் மகிழ்ந்த முருகன் நேரில் தோன்றி, பூதத்தினைத் துரத்தி, நக்கீரரையும், மற்றவர்களையும் விடுதலை செய்தான் என ஒரு வரலாறு உண்டு.
இந்த வரலாற்றினைச் செங்கீரைப்பருவப் பாடலொன்றில் உரைக்கிறார் பகழிக்கூத்தர்.
“இவ்வாறாகச் சீர்கொண்ட நக்கீரனை விடுதலை செய்தவனே! செங்கீரையாடியருளுக! அலைகளை வீசியெறியும் திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூரில் விரும்பிக் குடியிருக்கும் வடிவேலனே, செங்கீரையாடியருளுக,” எனத் தாய் வேண்டுவது போலப் பாடியுள்ளார்.
ஏர்கொண்ட பொய்கைதனில் நிற்குமொரு பேரரசின்
இலைகீழ் விழின்ப றவையாம்
இதுநிற்க நீர்விழின் கயலாமி தன்றியோர்
இலையங்கு மிங்கு மாகப்
பார்கொண்ட பாதியும் பறவைதா னாகஅப்
பாதியும் சேல தாகப்
பார்கொண்டி ழுக்கஅது நீர்கொண் டிழுக்கவிப்
படிகண்ட ததிச யமென
நீர்கொண்ட வாவிதனில் நிற்குமொரு பேழ்வாய்
நெடும்பூதம் அதுகொண் டுபோய்
நீள்வரை எடுத்ததன் கீழ்வைக்கும் அதுகண்டு
நீதிநூல் மங்கா மலே
சீர்கொண்ட நக்கீர னைச்சிறை விடுத்தவா
செங்கீரை யாடி அருளே
திரையெறியும் அலைவாய் உகந்தவடி வேலனே
செங்கீரை யாடி அருளே.
(திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்-செங்கீரைப்பருவம்- பகழிக்கூத்தர்)
இப்பாடலில் பொதிந்துள்ள சில கருத்துக்களை நாம் நோக்க வேண்டும். நக்கீரர் போன்ற சிறந்த அடியார் அத்துணை எளிதாகப் பூசையினின்றும் வழுவிட இயலாது. ஆகவே, அவர் வழுவினார் என உண்மையாகவே நாம் எண்ணுவதற்கு, உலகில் அபூர்வமாக நிகழும் ஒரு அதிசயமான நிகழ்வை- நீரில் விழுந்த இலை பாதி மீன், பாதி பறவையானது- ஆதாரப்படுத்தி, அதைக் கண்டுதான் நக்கீரர் தமது மோனம் கலைந்தார் என்கிறார் கதை புனைந்தவர். நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடியதற்குக் காரணமாக இக்கதை கூறப்படுகிறது. இதற்கு ஆதாரம் ஒன்றுமில்லை எனப் பெரியோர் கருதுகின்றனர். இருப்பினும் பகழிக் கூத்தர் ஒரு இலக்கியநயத்திற்காக இக்கருத்தினை எடுத்தாண்டுள்ளார்.
முருகப்பெருமான் என்றாலே அவனுடைய தமிழ்க்காதலும், அருள் நிறைந்த வீரமும், வள்ளியிடம் அவன் புரிந்த விளையாட்டுகளும் தான் எல்லோர் எண்ணங்களிலும் நின்று மகிழ்விக்கும். அதற்கொப்பவே இப்பாடலும் அமைந்துள்ளது.
குழந்தையைப் பற்றிய தமிழ் நூல் என்றாலும், தெய்வக் குழந்தைகளைப் பற்றி அவர்களின் காதல், வீரம், கொடை, அருள் ஆகிய எல்லாத் தன்மைகளையும் விவரித்து, புலவர்கள் தமது கவிதை நயத்தை வெளிப்படுத்த, எல்லாவகைச் சிற்றிலக்கியங்களையும் போலவே இதனையும் ஒரு பெருவாய்ப்பாகக் கருதினர் என்றால் மிகையாகாது.
அவ்விதத்தில், அடுத்ததொரு பாடலை நாம் நோக்கினால் அது, முருகன் போர்க்களத்தில் வீரம்காட்டி அசுரர்களை அழித்த திறத்தை நமது உள்ளம் நடுநடுங்குமாறு வருணிக்கும்! அக்காட்சியைப் பகழிக்கூத்தனார் இலக்கிய ஓவியமாக வரைந்ததைக் காணலாமே!
*****
வெம்மையும் கடுமையும் நிறைந்த போர்க்களம். முருகனின் படைகளுக்கும் சூரபத்மனின் அரக்கப்படைகளுக்கும் கடும்போர் நடக்கின்றது.
முருகனின் வேல்- அது பெருமை நிறைந்த கதிரவனின் பொன்னிறத்தைக் கொண்டு கூர்மையான தகடுபோன்ற இலைவடிவத்தையும் கொண்டு ‘தகதக’வென மின்னியவண்ணம் உள்ளது. அது தன்னிருப்பிடத்தை (முருகனின் திருக்கரம் தன்னை) விட்டு வெளிப்போந்து பகைவர்களை அழிக்கிறது. அதுகண்டு மகிழ்ந்து ‘இடாகினிகள்’ எனப்படுபவரான துர்க்கையின் ஏவல்பெண்கள் தமது சிவந்த வாயினை ஆச்சரியத்தினால் பிளந்தபடி களிப்பில் குதித்தாடுகின்றனராம்;
தலையையிழந்து (வெட்டப்பட்டு) குறையுற்ற உடல்கள் (பிணங்கள்) விரோதமாகக் குதிக்கின்றனவாம்; முதிய எருமைக்கடாவின்மீது அமர்ந்துவரும் ‘மறலி’ என அறியப்படும் இயமன் இந்த அழிக்கும் தொழிலுக்கு உடந்தை. அவனோ, இடையறாது ஓய்வுஒழிவின்றித் தனது தொழிலைச் செய்யவேண்டியிருப்பதனால், தனது கைகள் சலித்து, முருகனிடம் மன்றாடி வேண்டி நிற்கின்றானாம்! உடல்முழுமையும் கண்களைக் கொண்ட தலைவனான இந்திரன் (உடல்விழிக் குரிசல்) தேவசேனாபதியாகிய முருகனை- தனது மருமகனுமாகிய அத்திருமகனை, திருமால் மருகனை- கொண்டாடி நிற்கின்றான்.
நெடிய ஆகாயத்தின் உச்சியில் சிறிதுகூட இடைவெளியின்றிப் பருந்துகள் பறந்து (தமக்குப் பெரும் விருந்து கிட்டியதால்) விளையாடி மகிழ்கின்றன. இறந்து கிடக்கும் பகையரசர்களின் தலையிலுள்ள அழகிய பொற்கிரீடங்களைப் பறித்தெடுத்துப் பேய்கள் பந்தாடி மகிழ்கின்றன.
மலைக்காடுகளிலும் பாலை நிலங்களிலும் உறையும் தெய்வமான காளியின் (பாலைக்கிழத்தியின்) மூன்று கிளைகளாகப் பிரிந்த திரிசூலம் பகைவர்களின் பெருக்கெடுக்கும் குருதிவெள்ளமாகிய சேற்றில் ஆடுகின்றதாம்.
இங்ஙனம் பகைவரை வென்று வாகைசூடிய குமரனின் திருமுகத்தில் சிறு புன்னகை விளையாடுகின்றதாம்.
போதுமா போர்க்களக்காட்சிகள்?உள்ளம் அச்சத்திலும் அருவருப்பிலும் துடிக்க, இதனைப்பயிலும் நாம், குழந்தை முருகனின் சிறுமுறுவலால் சிறிது ஆசுவாசம் அடைகிறோம். இந்தச் சிறுகுழந்தைஎவ்வாறு இந்தச் சாகசங்களையெல்லாம் செய்தான் எனத்தாய் தவிப்பதுபோலச் சிலகணம் மயங்குகிறோம். பின் தெளிந்து கவிதையின் நயத்தை ரசிக்கிறோம்.
அன்னையிடம் வேல்வாங்கி, அவள் ஆசிகளையும் திருவருளையும் உடன்வாங்கிச் சென்று, சூரபத்மனை வென்று, தேவர்களைச் சிறைவிடுத்த முருகப்பெருமானின் வீரதீர பராக்கிரமத்தினை ஒரேயொருபாடலில் எத்துணை அழகாகக் காட்டிப் போர்க்கள நிகழ்வுகளையும் நேரில் காண்பது போலவே செய்துவிட்டார் புலவர் பெருமகனார்.
‘அத்தகைய வீரச் செயல்களைச் செய்த எம் குழந்தை குமரா! நீ செங்கீரை ஆடி அருளுகவே!
‘அழகான சிவந்த கொண்டையை உடைய வெண்ணிறச் சேவலைத் தனது கொடியில் (பதாகையில்) கொண்டவனே, கையைத் தரையில் ஊன்றிச் செங்கீரை ஆடியருளுவாயாக,’ எனத் தாயன்பு மிக, பகழிக்கூத்தருடன் நாமும் பாடி மகிழ்கிறோம்.
வீறாட வெங்கதிர்ப் புகர்முகக் கூரிலை
மிகுத்தவே லுறை கழித்து
வெவ்வாய் பிளந்துசிறு கட்பேர் இடாகினிகள்
விளையாட வெங்க வந்த
மாறாட முதுபகட் டுயர்பிடர்க் கரியநிற
மறலிஇரு கைச லித்து
மன்றாட உடல்விழிக் குரிசல்கொண் டாடநெடு
மாகமுக டிடைவெ ளியறப்
பாறாட அம்பொற் கிரீடம் பரித்தலகை
பந்தாட விந்தா டவிப்
பாலைக் கிழத்திமுக் கவரிலைச் சூலம்
பசுங்கொழுங் குருதி வெள்ளச்
சேறாட வென்றுசிறு முறுவலா டுங்குமர
செங்கீரை யாடி அருளே
செந்திறக் குடுமிவெண் சேவற் பதாகையாய்
செங்கீரை யாடி அருளே.
(திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்-செங்கீரைப்பருவம்- பகழிக்கூத்தர்)
நன்றாக விளக்கம்தந்து எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து இப்படியே எழுதிவருவதை எதிர்நோக்குகிறேன்.