அண்ணாமலையில் ஒரு அக்கினிப் பொறி
க. பாலசுப்பிரமணியன்
ஆகாய கங்கையிலிருந்து ஒரு அக்கினிப்பொறி
அண்ணாமலைக்கு அருள் சேர்க்க வந்தது !
அன்னையிட்ட பெயரின் பொருள் தேடி
விண்ணை நோக்கிப் பிள்ளை தவமிருந்தது !
பாலூட்டி ஊட்டிட்ட பெயரும் என்ன !
பார்கூட்டி அழைத்திட்ட பெயரும் என்ன !
ஊனூட்டி வளர்த்திட்ட உயிரும் என்ன !
உடலோடு உயிர் சேர்த்த உறவென்ன !
ஊருணி விலக்கிட்ட ஒரு நீர்த் திவலைபோல்
ஊழ்வினை கழித்திடவே உயிர் வந்ததோ ?
வாழ்விடை வந்த உறவுகள் பாசத்தில் வாடும்
தானுறை தவமே வருவினை போக்கிடும் !
கோடியில் ஒருவனாய் குழந்தை ரமணன்
நாடிய துறவும் நானினை அறிந்திட !
சோதியைக் கண்டவன் சுமைகள் களைந்திட
வாடிய உலகிற்கு வழிதனைத் தந்தான் !
ஆதவன் ஒளி போல் அகமொன்று ஒளியிட
கான்வழிக் கானல்நீர் வாழ்வென அறிவாய் !
கரையில்லா வெள்ளம்போல் காமக் களைப்பில்
கலங்கிய மனமோ காலமெல்லாம் வாடும் !
கந்தை மனத்தைக் கசக்கிப் பிழிந்து
சிந்தையை அடக்கிச் சிவனிடம் தந்தால்
விந்தையே! விந்தையே! அருணாசலா!
வெளிச்சமே ! வெளிச்சமே ! லிங்கேஸ்வரா!