Author: சு.கோதண்டராமன்

  • விகர்ண கீதை

    1998 ஓம் சக்தி தீபாவளி மலரில் வெளிவந்த இந்த என்னுடைய படைப்பை வல்லமை வாசகர்களுக்கு மறு பகிர்வாக வெளியிடுகிறேன்.-கோதண்டராமன்.  

     

    விகர்ண கீதை

          போர் தவிர வேறு வழி இல்லை என்று ஆன பிறகு பாரதப் போருக்கு நாள் குறித்தாகி விட்டது. இரு தரப்பு சேனைகளும் அணி வகுத்து நிற்கின்றன. தலைவர்கள் தங்கள் தங்கள் சங்குகளை முழங்கி தாங்கள் ஆயத்தமாக இருப்பதை அறிவித்து விட்டார்கள். அர்ஜுனனின் தேர் மட்டும் விரைந்து வந்து நடுவில் நிற்கிறது. எதிரி சேனையையும் தன் சேனையையும் ஒரு முறை நோட்டம் விட்டு விட்டு அர்ஜுனன் தன் தேரோட்டி கண்ணனிடம் ஏதோ கேட்கிறான். இவன் பதில் சொல்ல அவன் கேட்க நீண்ட நேரம் உரையாடல் நடக்கிறது. அதன் பின் அர்ஜுனனும் தன் சங்கை ஊதித் தான் போருக்கு ஆயத்தம் ஆகி விட்டதை அறிவிக்கிறான்.

            அப்பொழுது தருமபுத்ரன் தன் ஆயுதங்களையும் கவசத்தையும் கழற்றி வைத்து விட்டு விடுவிடென நடந்து எதிரி சேனையின் முன்னிலையில் நின்று கொண்டிருந்த பீஷ்மரையும் துரோணரையும் சல்லியரையும் வணங்குகிறான். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக, உனக்கு வெற்றி நிச்சயம் என்று ஆசீர்வதிக்கின்றனர்.

            திரும்பி வந்த யுதிஷ்டிரன், எங்களை விரும்புகிறவர்கள் கௌரவ சேனையை விட்டு வர விரும்பினால் வரலாம் என்று உரத்த குரலில் அறிவிக்கிறான்.

            அப்பொழுது துரியோதனின் மாற்றாந்தாய் மகனான யுயுத்சு தன் சேனைகளை அழைத்துக் கொண்டு பாண்டவர் பக்கம் போய்ச் சேருகிறான்.

    இது வரை பார்த்தது, வியாச பாரதத்தில் உள்ளபடி.

    இனி வருவது என் கற்பனை.

    ———————————————————————–

          கண்ணனும் அர்ஜுனனும் போர்க் களத்தின் நடுவில் பேசிக் கொண்டு நீண்ட நேரம் கடத்தி விட்டனர். உற்சாகத்தோடு போர்க் களம் வந்த துரியோதனன் போரையும் துவக்க முடியாமல் வேறு வேலைகளும் செய்ய முடியாமல் நின்றான். எப்பொழுதும் செயலாற்றிக் கொண்டே இருக்கும் இயல்புள்ள அவனுக்கு இந்த வெறுமை உள்ளத்தில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியது.

          யுதிஷ்டிரன் ராஜ தந்திரத்தோடு எதிர் அணியில் நிற்பவரிடம் ஆசி பெற்றதையும் யுயுத்சுவைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதையும் பார்த்தான் துரியோதனன். அவனது உள்ளத்தில் மேலும் கலக்கம் உண்டாயிற்று. இந்த யோசனைகள் நமக்குத் தெரியாமல் போய் விட்டனவே. நமது அணியில் உள்ள நமது தாத்தாவை நான் இது வரை ஒரு முறை கூட வணங்கி ஆசி கேட்டதில்லையே. தோற்று விடுவேனோ என்று சிந்திக்கத் தொடங்கினான்.

          சிந்தனையில் மூழ்கிக் கிடந்த அவனை அழைத்துப் பீஷ்மர் கேட்கிறார், “துரியோதனா, போரை ஆரம்பிக்கலாம் அல்லவா?”

    துரி- தாத்தா, ஒரு நிமிஷம். இந்தப் போரில் நாம் ஜெயித்து விடுவோம் அல்லவா?

    பீஷ்- இது என்னடா, இந்த நேரத்தில் இப்படி ஒரு சந்தேகம் உனக்கு?

    துரி- இல்லை தாத்தா, நிஜமாகத் தான் கேட்கிறேன். இந்தப் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தாங்கள் நினைக்கிறீர்கள்?

    பீஷ்- எங்கும் எல்லாப் போர்களிலும் இறுதி வெற்றி தர்மத்துக்குத் தான்.

    துரி- இந்தப் போரில் தர்மம் யார் பக்கம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

    பீஷ்- இது என்ன புதுக் கேள்வி? பாண்டவர்கள் பக்கம் தான் தர்மம் உள்ளது என்பதை நான் உனக்கு எத்தனை சந்தர்ப்பங்களில் சொல்லி இருக்கிறேன்?

    துரி- அப்படியானால் நாம் தான் தோற்கப் போகிறோமா? தோற்கப் போகிறோம் என்பது தெரிந்தே சண்டை செய்ய வந்திருக்கிறீர்களா? முடிவு முன்னதாகத் தெரிந்து விட்டதால் சண்டை செய்வது போலப் போக்குக் காட்டி விட்டுப் போகப் போகிறீர்களா?

    பீஷ்- துரியோதனா, அடக்கு வாயை. நான் சுத்த வீரன் என்பதை இந்த ஐம்பத்தாறு தேச மன்னர்களும் அறிவார்கள். போக்குக் காட்ட நான் ஒன்றும் கோழை அல்ல. சிரஞ்சீவி வரம் பெற்ற நான் உயிருக்குப் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

    துரி- மன்னிக்க வேண்டும் தாத்தா. தோல்வி நிச்சயம் என்பது தெரிந்தும் சண்டைக்கு ஆயத்தமாகிறீர்களே என்பதைத் தான் குறிப்பிட்டேன்.

    பீஷ்- துரியோதனா, எத்தனை நல்ல புத்தி சொன்னாலும் உனக்கு ஏறவில்லை. இந்தப் போரை இழுத்துக் கொண்டு விட்டிருக்கிறாய். ஆனாலும் நான் என் கடமையைச் செய்தாக வேண்டும். உன் வீட்டுச் சோற்றைத் தின்றதற்கு நான் வாலாட்டித் தான் ஆக வேண்டும்.

    துரி- இத்தகைய மன நிலையில் உங்களால் முழு மனத்துடன் கடமையைச் செய்ய முடியுமா?

    பீஷ்- பழைய கேள்வியையே மென்மையான வார்த்தைகளால் கேட்கிறாய். நான் கடமை செய்யும் போது என் சொந்த விருப்பு வெறுப்பு, லாப நஷ்டம், வெற்றி தோல்வி பற்றி எண்ணுவதில்லை. கண்ணனின் கொள்கையும் அப்படித் தான். இத்தனை நேரம் நட்ட நடுவில் தேரை நிறுத்தி விட்டு அர்ஜுனனுக்குக் கண்ணன் இதைத் தான் சொல்லி இருப்பான் என ஊகிக்கிறேன்.

    துரி- சரி தாத்தா. நான் இப்பொழுது போரை நிறுத்தி விடலாம் என்று சொல்லுவதாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமா?

    பீஷ்- என் பேரனுக்கு புத்தி வந்ததே என்று மகிழ்வேன். ஆனால் உன் இயல்பு அது அல்ல, நீ அந்த வழியில் போகமாட்டாய் என்பதும் நான் அறிவேன்.

    துரி- உண்மையிலேயே தாத்தா, இப்பொழுது அப்படி ஒரு எண்ணம் என் மனதில் நிழலாடுகிறது. இத்தனை நாள் பாண்டவர்களுக்குத் துன்பம் கொடுக்க முயன்று முயன்று மூக்கைத் தான் உடைத்துக் கொண்டேன். இன்று இத்தனை பேரை பலிக் களத்தில் இறக்கி விட்டிருக்கிறேன். இத்தனை பேரும் இறந்தாலும் என் கட்சி ஜெயிக்கப் போவதில்லை. என் ஒருவனுடைய வீம்புக்காக, தெரிந்தே மரணப் பாதையில் பதினெட்டு அட்சௌகிணிப் படைகளும் இறங்கி விட்டன. இத்தனை பேரைப் பலி கொடுப்பதை விட நான் ஒருவன் அடங்கிப் போகலாம் என்று தோன்றுகிறது.

    பீஷ்- அது நடவாத காரியம். நீ சமாதானமாகப் போக நினைத்தாலும் உன் தம்பிகள் உன்னைச் சும்மா விடமாட்டார்கள்.

    துரி- இல்லை, என் தம்பிகள் அத்தனை பேரும் நல்லதோ கெட்டதோ நான் எது சொன்னாலும் அதற்குக் கட்டுப்படுவார்கள்.

    பீஷ்- குழந்தாய், இதுவரை எந்த நல்ல செயலும் நீ செய்ததில்லை. எனவே உன் தம்பிகளின் சுபாவத்தின் மறு பக்கத்தை நீ அறியவில்லை. இன்று நீ நல்லவன் ஆகி விட்டால் அவர்களும் நல்லவர்கள் ஆகி விடுவார்கள் என்று எண்ணுவது பேதைமை.

    துரி- சரி தாத்தா. நான் மற்றவர்களைக் கலந்து வருகிறேன். அது வரையில் போரைத் துவக்க வேண்டாம்.

    ——————————————————————————–

     துரி- ஆசார்யரே, எனக்கு அவசரமாக ஒரு ஆலோசனை சொல்ல வேண்டும். இந்சப் போர் நடந்து தான் ஆக வேண்டுமா?

    துரோணர்- இது என்ன, சில நிமிஷங்களில் போர் துவங்க இருக்கும்போது இப்படி ஒரு கேள்வி? மாதக் கணக்கில் போருக்குத் தயார் செய்தாயே, அப்பொழுதெல்லாம் உனக்குத் தோன்றவில்லையா?

    துரி- இல்லை ஆசார்யரே. பதினெட்டு அட்சௌகிணி என்பது எவ்வளவு பெரியது என்பதை இப்பொழுது தான் கண்கூடாகக் காண்கிறேன். இத்தனை பேர் பலி ஆவதற்கு என் பேராசை தானே காரணம்?

    துரோ- போர் புரிவது அரசர்களுடைய ஸ்வதர்மம். இதில் போய்ப் பலி கிலி என்றெல்லாம் பிதற்றுவது சரியாக இல்லை.

    துரி- அரசர்களுக்குத் தான் பலி கொடுப்பதும் பலி ஆவதும் ஸ்வதர்மம். பிராமணராகிய உங்களைப் பலி கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்களும் உங்கள் மைத்துனரும், மகனும் போர்க்களத்தை விட்டு நீங்கி விட்டால் கூட என் மனம் மாறலாம். ஆனால் நான் போருக்குத் துணிந்ததே உங்களைப் போன்ற பெரு வீரர்களின் துணையை நம்பித் தான்.

    துரோ- துரியோதனா, போர்க் களத்திற்கு வந்த உடனே போர் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த மோசக்காரக் கண்ணன் அர்ஜுனனுக்கு ஏதோ அறிவுரை கூறுவது போலப் பாசாங்கு செய்து நேரத்தைக் கடத்தி விட்டான். காத்திருந்த அந்த நேரத்தில் உன் மண்டைக்குள் விநோதமான எண்ணங்கள் குடியேறிவிட்டன. போ, உன் இடத்துக்குப் போ, போரைத் துவக்கு.

    துரி- சற்றுப் பொறுங்கள், குருதேவா. கிருபாசாரியரிடம் ஒரு வார்த்தை கேட்டு வந்து விடுகிறேன்.

    ——————————————————————————

    துரி- கிருபாசார்யரே, போரை நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கிழவர்கள் என் கருத்தை ஏற்க மறுக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

    கிருபர்- துரியோதனா, அவர்கள் சொன்ன கருத்தை அன்று நீ ஏற்க மறுத்தாய். இபிபொழுது அவர்கள் மறுப்பதாகக் குறைப்படுகிறாய். போ, லக்னம் கடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நிமிஷங்களே உள்ளன. அதற்குள் உன் சங்கை ஊதிப் போரைத் துவக்கு.

    துரி- என்ன ஸ்வாமி, பெரிய லக்னம்? நான் தோற்பது உறுதி என்று தாத்தா சொல்லி விட்டார். எந்த லக்னத்தில் துவக்கினால் என்ன?

    கிரு- ஓகோ, தோல்வி நிச்சயம் என்றதும் மனக்கலக்கமோ?

    துரி- போரில் வெற்றி தோல்விகள் சகஜம் தான். நான் அதற்காகக் கவலைப்படவில்லை. நான் இப்போரில் இறந்து விடுவேன் என்று என் உள்ளுணர்வு கூறிக் கொண்டிருக்கிறது. இத்தனை நாள் தான் பாண்டவர்களுக்குத் தீமை விளைவித்தேன். சாகப் போகும் சமயத்திலாவது அவர்களுக்கு ராஜ்யத்தை விட்டுக் கொடுத்து விட்டால்  இத்தனை பேரைப் பலியிட்ட பாவமாவது இல்லாமல் போய்ச் சேருவேன்.

    கிரு- துரியோதனா, நீ சுத்த வீரன் அல்லவா? உனக்கு மரண பயம் உண்டாகலாமா? போ, உன்  வீரத்தைக் காட்ட ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. வாழ்நாள் முழுவதும், அர்ஜுனனை மெச்சுகிறாரே என்று துரோணரைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டிருந்தாய். இன்று அந்தத் துரோணரே அர்ஜுனனை அம்புகளால் துளைக்கப் போகிறார். நீ சாவதானாலும் அந்தக் காட்சியை ரசித்துவிட்டு மகிழ்ச்சியுடன் போ.

    ————————————————————————

    துரி- கர்ணா, நீ தான் அன்று முதல் என் அந்தரங்க நண்பன். என் மனதை முழுமையாக அறிந்தவன். இப்பொழுது எனக்கு ஏற்பட்டிருக்கும் கலக்கத்திற்கு நீ தான் ஆறுதல் சொல்ல வேண்டும்.

    கர்ணன்- துரியோதனா, போர் அவசியமா என்று சிந்திக்கிறாய். அவசியம் தான். பிறந்தது முதல் அர்ஜுனனிடம் பட்ட அவமானங்களுக்கு எல்லாம் பழி தீர்க்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறாயே என்று நான் மகிழ்கிறேன். அதற்கு இடம் இல்லாமல் செய்து விடாதே.

    துரி- நீ தனிப்பட்ட முறையில் அர்ஜுனனிடம் ஏதேனும் செய்து கொள். அதற்காகப் பதினெட்டு அட்சௌகிணிப் படைகளைப் பலியிட உனக்கு உரிமை இல்லை. எனக்கும் இல்லை.

    கர்- யாரையும் நாம் வஞ்சகமாகக் கொன்று விட இங்கு அழைக்கவில்லை. போர் என்றால் சாவு நிச்சயம் என்று தெரிந்த வீரர்கள் மட்டும் தான் இங்கே வந்திருக்கிறார்கள். அங்கே பார், எப்பொழுதும் அகிம்சை, சத்தியம் என்று பேசி வந்த அந்த வழவழத் தருமனே போருக்கு ஆயத்தமாக நிற்கிறான். உனக்கு எப்படி இந்த மனக் கலக்கம் வநதது? காலையில் போர்க்களத்திற்கு வந்த போது உற்சாகமாகத் தானே வந்தாய்? அர்ஜுனனையும் பீமனையும் சேர்ந்து பார்த்ததும் பயந்து விட்டாயா? ஒன்றை மட்டும் மனதில் கொள். ஆயிரம் அர்ஜுனர்கள் வந்தாலும் இந்தக் கர்ணன் உள்ள வரை உன் மேல் சிறு கீறல் விழ அனுமதிக்க மாட்டான். விரைவில் உன் இடத்துக்குப் போ. என் கைகள் தினவு எடுக்க ஆரம்பித்து விட்டன. நீ போரை ஆரம்பிக்காவிட்டால் நான் பீஷ்மருக்குச் செய்த சபதத்தை மீறி இன்றே வில் ஏந்துவேன். சில நொடிகளில் என் பாணம் புறப்பட்டு விடும், போ.

    ——————————————————————————-

    துரி- விகர்ணா, நீ தான் என்றைக்குமே தர்மம் நியாயம் என்று பேசுபவன். அப்பொழுதெல்லாம் நீ பேசியதை நான் மதிக்கவில்லை. சிறிய பையன் என்று அலட்சியப்படுத்தினேன். பிரச்சனையின் முழு ஆழத்தையும் புரிந்து கொண்டவன் நீ ஒருவன் தான் என்று எனக்கு இப்பொழுது தான் புரிகிறது. இந்தப் போர் அநியாயமானது தானே?

    விகர்ணன்- ஆம். அநியாயமானது தான்.

    துரி- இப்பொழுது நினைத்தால் கூட நாம் போரை நிறுத்தி விடலாம் அல்லவா? இது வரை செய்த அநியாயங்கள் போதும். இந்தப் பெரிய அநியாயத்தைத் தடுத்து விடலாம் அல்லவா?

    விக- அண்ணா, என்ன உளறுகிறீர்கள். ஐம்பத்தாறு தேச மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பி மாதக் கணக்கில் ஏற்பாடு செய்து விட்டு இப்போது போரை நிறுத்தவா? என்ன ஆயிற்று உங்களுக்கு?

    துரி- ‘இப்பொழுதும் ஒன்றும் மோசமில்லை, திருத்திக் கொள்ளுங்கள் அண்ணா’ என்று நீ என்னிடம் பலமுறை மன்றாடியிருக்கிறாய். விகர்ணா, எனக்குக் காலம் கடந்து இன்று தான் புத்தி வந்திருக்கிறது. இப்பொழுதும் ஒன்றும் மோசமில்லை. திருத்திக் கொள்கிறேன். போரை நிறுத்தி விட முடிவு செய்துள்ளேன்.

    விக- நிறுத்தி விட்டு………….?

    துரி- படைகளைத் திருப்பி அனுப்புவோம். பாண்டவர்களுக்குப் பாதி ராஜ்யம் கொடுப்போம். சமாதான சக வாழ்வைத் துவக்குவோம்.

    விக- உங்களுக்குத் தான் பைத்தியம் பிடித்திருக்கிறது. பாண்டவர்கள் பைத்தியங்கள் அல்ல. பயந்து போய்த் தான் போரை நிறுத்தினீர்கள் என்று உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்வார்கள். பாதி ராஜ்யத்துடன் திருப்தி அடையாமல் முழுவதையும் பறித்துக் கொள்வார்கள்.

    துரி- பறித்துக் கொள்ளட்டும். கவலை இல்லை. இத்தனை நாள் ஆண்டாகி விட்டது. இனி எனக்கு ஒரு கிராமம் போதும். நான் தான் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமம் கொடுக்க மறுத்தேன். யுதிஷ்டிரன் அப்படிச் செய்ய மாட்டான். நமக்கு நூறு கிராமங்கள் கொடுப்பான். அதிலேயே திருப்தி அடைந்து என் மீதி வாழ்நாளை அமைதியாகக் கழிக்கப் போகிறேன்.

    விக- அமைதியா? அது உங்கள் ஜாதகத்திலேயே இல்லையே அண்ணா. கிராமத் தலைவன் என்ற முறையில் கப்பத்தை ஏந்திக் கொண்டு தருமபுத்திரன் காலடியில் வைத்து விட்டுக் கை கட்டி நிற்க முடியுமா உங்களால்? அந்த அவமான வாழ்க்கையில் உங்கள் மனம் நிம்மதி அடையுமா?

    துரி- அது கூட எனக்குத் தேவை இல்லை. விகர்ணா, நான் துறவி ஆகி விடுவேன். என் வயிற்றுக்குத் தேவையானதைப் பிட்சை எடுத்து உண்பேன். எனக்கு வேறு ஆசைகளும் இல்லை, அதனால் வரும் துன்பங்களும் இல்லை. அப்பொழுது நான் நிம்மதியாயிருப்பதில் என்ன தடை இருக்க முடியும்?

    விக- உங்கள் ஸ்வதர்மத்துக்கு மாறான பேச்சுகளில் ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள்?

    துரி- அந்தப் பிராமணரும் ஸ்வதர்மம் ஸ்வதர்மம் என்று அடித்துக் கொள்கிறார். என்னடா பெரிய ஸ்வதர்மம்? அரச குலத்தில் பிறந்து விட்டால் போர் செய்து தான் ஆகவேண்டுமா? ஜனகர் முதலான ராஜாக்கள் அரச பதவியில் இருந்து கொண்டே துறவி போல் வாழவில்லையா?

    விக- அண்ணா, ஸ்வதர்மம் என்றால் குலத் தொழில் என்று பொருள் அல்ல.

    துரி- பின் என்னவாம்?

    விக- மனிதர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இயல்புடன் பிறக்கிறார்கள். ஒரே குலத்தில் பிறந்தவர்களுக்கிடையே ஸ்வபாவத்தில் வேறுபாடு உள்ளது. ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் இடையேயும் இதைப் பார்க்கலாம். இந்த ஸ்வபாவத்தை ஒட்டிச் செய்யப்படும் வினைகள் தான் ஸ்வதர்மம்.

    துரி- நேற்று வரை நான் மூர்க்க ஸ்வபாவம் உடையவனாக இருந்தேன். இன்று என் மனம் மாறி விட்டது. அதற்கேற்ற தொழிலை நான் செய்ய முடியாதா? கூடாதா?

    விக- உங்கள் ஸ்வபாவம் மாறாது அண்ணா. உங்களுக்கு மட்டுமல்ல, யாருக்குமே மாறுவதில்லை. மற்றவர்களைப் பார்த்து நாம் அது போலச் செயற்கையாக போலித்தனமாக வேஷம் போட்டுக் கொள்கிறோம். அது நிலைக்காது. இப்பொழுது நீங்கள் பேசும் பேச்சு அது போன்று போலித் தனமானது தான்.

    துரி- இல்லை, விகர்ணா. என் மனம் முற்றிலும் ஆசைகளை இழந்து விட்டுக் கருணையால் நிரம்பி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நான் தருமபுத்திரன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு விட வேண்டும் என்று துடிக்கிறது. இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கை தான் போலி. அந்தப் பாசி விலகி என் உண்மையான மனம் இப்பொழுது தான் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.

    விக- எது தெளிவு, எது குழப்பம் என்பதே அறியாத மன நிலையில் இருக்கிறீர்கள் அண்ணா. இதோ உங்களைத் தெளிய வைக்கிறேன். நீங்கள் துறவி ஆகிவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். பிட்சை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு ஊர் ஊராக அலைந்து மக்களுக்குத் தர்மத்தை எடுத்துச் சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் மனதில் யார் மேலும் கோபம் துவேஷம் இருக்காது அல்லவா?

    துரி- நிச்சயம் இருக்காது.

    விக- அப்படி அலைந்து கொண்டிருக்கும்போது ராஜாவான தர்மபுத்திரன் தங்களைப் பிட்சை ஏற்றுக் கொள்ளக் கூப்பிட்டு அனுப்புவான். அவன் துறவிகளிடமும் தபசிகளிடமும் பெருமதிப்பு உடையவன் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி அவன் மரியாதையாகக் கூப்பிடும்போது நீங்கள் அவனது அரண்மனைக்குப் போவீர்கள் அல்லவா?

    துரி- நிச்சயம் போவேன். எனக்கு அவன் மேல் கோபம் வெறுப்பு எதுவும் இல்லை.

    விக- உங்களுக்கு உணவு பரிமாறப் பாஞ்சாலி வருவாள். உங்களுக்குத் தான் மனம் மாறி விட்டதே தவிர அவள் மாற்றிக் கொள்ள மாட்டாள். “என்ன மைத்துனரே சௌக்கியமா?” என்று ஏளனமாகக் கேட்பாள். கேட்டுக் கொண்டு சும்மா இருப்பீர்களா, அண்ணா?

    துரி- ஏளனங்களுக்கு அப்பாற்பட்ட நிலையை நான் அடைந்து விட்டேன்.

    விக- அப்பொழுது பாஞ்சாலி சொல்வாள், “நான் இன்னமும் விரித்த கூந்தலோடு தான் நிற்கிறேன். போர் இல்லாமல் செய்து விட்டீர்கள். உங்கள் ரத்தத்தைத் தடவித் தான் கூந்தல் முடிப்பேன் என்று சபதம் செய்து விட்டேன். என் கணவர்கள் அதை எடுத்துத் தர மறுத்து விட்டார்கள். இப்பொழுது நான் அதை எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டுக் கையில் கத்தியுடன் வருவாள். சுத்த வீரனாகிய நீங்கள் ஒரு பெண் கையால் குத்துப் படவேண்டுமா? மார்பைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பீர்களா?

    துரி- போதும் விகர்ணா போதும். ஆ, அந்தப் பாஞ்சாலி! அவள் சிரித்த சிரிப்பு இன்னமும் என் மனதில் ஆழமான காயமாக இருக்கிறது. அவள் கையால் குத்தப்பட்டுச் சாவதை விட பீமன் கதைக்குப் பலியாவதையே நான் விரும்புகிறேன். போர் தொடங்கட்டும். சங்குகள் முழங்கட்டும். என் அறிவுக் கண்ணைத் திறந்து என் கலக்கத்தைப் போக்கினாயே, விகர்ணா, உனக்கு நன்றி.

    விக- இப்பொழுது தான் அண்ணா நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள். உங்களை நீங்கள் உணர்ந்து கொண்டு விட்டீர்கள். உங்கள் இயல்புப்படி போர் புரிந்து மரணம் அடையுங்கள். அதனால் உங்களுக்குப் புகழே ஏற்படும். மற்றவர் தர்மத்தைப் பின்பற்றித் துறவியானால் உங்களுக்கு அவமானம் தான் ஏற்படும். வெற்றி தோல்வி பற்றிக் கவலைப் படாமல் உங்கள் கடமையைச் செய்யுங்கள். வாழ்க உங்கள் புகழ்.

    Share
  • ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ?

    சு. ​​கோதண்டராமன்

    விதியா, மதியா?  இது தொல் நெடுங்காலமாக இருந்து வரும் பிரச்சினை. திருவள்ளுவரும் இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்.

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

    சூழினும் தான் முந்துறும்      

    என்று விதியின் வலிமை பேசிய அவர்

    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

    தாழாது உஞற்றுபவர் 

    என்று முயற்சியின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

                    இது பற்றிப் பாரதியின் கருத்து என்ன? அவரது பாஞ்சாலி சபதத்தைப் பார்ப்போம்.

                    பாரதப் போராகிய பேரழிவு வரப்போகிறது என்று தெரிந்தும் அதைத் தடுக்க முடியாமல் எல்லோருமே பலி ஆகிறார்கள். பாண்டவரைச் சூதாட அழைக்கப் போகிறேன் என்றும் அதற்குத் தந்தை இணங்காவிட்டால் உயிர் விடுவேன் என்றும் துரியோதனன் மிரட்டுகிறான். பிள்ளை மீதுள்ள பாசத்தால் அவனுடைய சதித் திட்டத்திற்கு வேறு வழியின்றி ஒப்புதல் அளிக்க நேர்ந்த போது திருதராட்டிரன் கூறுகிறான்,

    bharathiyar‘விதிசெயும் விளைவி னுக்கே-இங்கு

    வேறு செய்வார் புவிமீ துளரோ?

    …………

    ‘விதி! விதி! விதி! மகனே! –இனி

    வேறெது சொல்லுவன் அட மகனே!

    கதியுறுங் கால னன்றோ-இந்தக்

    கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்?

    கொதியுறு முளம் வேண்டா;-நின்றன்

    கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்;

    வதியுறு மனை செல்வாய்,’ –என்று

    வழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான்.

     

                    விதுரனுக்கு வருங்காலம் தெரிகிறது. ஆனால் அவனாலும் துரியோதனனின் திட்டத்தைத் தடுக்க முடியவில்லை. அவனுடைய ஆலோசனைகள் நலம் பயப்பவை என்று அறிந்தும் அவற்றைச் செயற்படுத்த முடியாமல் திருதராட்டிரனின் கைகள் கட்டப்பட்டுவிட்டன. அதை உணர்ந்து, திருதராட்டிரன் கூறுகிறான்,

    என்று விதுரன் பெருந்துயர் கொண்டே
    ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர்,
    ‘சென்று வருகுதி, தம்பி இனிமேல்
    சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன்.
    வென்று படுத்தனன் வெவ்விதி என்னை;
    மேலை விளைவுகள் நீஅறி யாயோ?
    அன்று விதித்ததை இன்று தடுத்தல்
    யார்க்கெளி’தென்றுமெய் சோர்ந்து விழுந்தான்.

                    அண்ணன் கூறியபடி விதுரன் துரியோதனனுடைய அழைப்பில் சூழ்ச்சி உள்ளது என்பதைத் தருமனுக்குத் தெரிவிக்கிறான். தருமனோ, ஆபத்து வரும் என்று அறிந்தும், தந்தை அழைத்திருக்கும் போது போகாமல் இருப்பது தவறு என நினைக்கிறான். தந்தையே சூழ்ச்சி இருப்பதைச் சுட்டிக் காட்டி இருந்தும், தம்பிகள் தடுத்தும் தருமன் தன் மனதை மாற்றிக் கொள்ள வில்லை. துன்பம் வரும் என்ற அச்சத்தால் கொள்கை தவறுவது சான்றாண்மை ஆகாது என்று கருதுகிறான். இது விதியின் செயல் என்று அழைப்பை ஏற்றுக் கொள்கிறான்.

    ‘இங்கிவை யாவுந் தவறிலா-விதி
    ஏற்று நடக்குஞ் செயல்களாம்;-முடி
    வெங்கணு மின்றி எவற்றினும்-என்றும்
    ஏறி இடையின்றிச் செல்வதாம்-ஒரு
    சங்கிலி யொக்கும் விதி கண்டீர்-வெறுஞ்
    சாத்திர மன்றிது சத்தியம்-நின்று
    மங்கியொர் நாளில் அழிவதாம்-நங்கள்
    வாழ்க்கை இதனைக் கடந்ததோ?

    ………

                                                                    ……..நெஞ்சில்
    ஊன்றிய கொள்கை தழைப்பரோ-துன்பம்
    உற்றிடு மென்பதொர் அச்சத்தால்?-விதி
    போன்று நடக்கும் உலகென்றே-கடன்
    போற்றி ஒழுகுவர் சான்றவர்.

                    ஊரை விட்டுப் பாண்டவர் தங்கள் துன்பக் களம் நோக்கிச் செல்கையில் கவிக் கூற்றாக வருவது விதியின் வலிமை பற்றிய இக்கருத்து.

    நீங்கிஅகன் றிடலாகுந் தன்மை உண்டோ

    நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில் நின்றே?

     

    நரிவகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்

    நழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும்;

    வரிவகுத்த உடற்புலியைப் புழுவுங் கொல்லும்;

    வருங்கால முணர்வோரும் மயங்கி நிற்பார்;

    கிரிவகுத்த ஓடையிலே மிதந்து செல்லும்;

    கீழ்மேலாம், மேல் கீழாம்; கிழக்கு மேற்காம்;

    புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்

    போற்றிடுவார், விதிவகுத்த போழ்தி னன்றே.

                    சூதாட்டத்தில் தான் தோற்று விடுவோம் என்பது தருமனுக்குத் தெரிகிறது. என்றாலும் சூதாட அழைக்கப்படும்போது மன்னர்கள் மறுக்கக் கூடாது என்ற மரபை அவன் பின்பற்ற வேண்டி இருக்கிறது. வேறு வழியின்றி சூதாட அவன் இணங்குகிறான்.

    வெய்ய தான் விதியை நினைந்தான்
    விலக்கொ ணாதறம் என்ப துணர்ந்தோன்;

                    இவ்வாறு பாஞ்சாலி சபதக் கதை முழுவதும் அறிஞர்கள், நல்லவர்கள் பலர் வர இருக்கும் பேரழிவை உணர்ந்தும், உணர்த்தியும் தடுக்க முடியாமல், ஒவ்வொரு நிலையிலும் போரை நோக்கிக் கதை நகர்வதைக் காணும்போது விதியின் வெல்லவொண்ணா வலிமை புலப்படுகிறது.

                    இதைக் கொண்டு பாரதி விதியை நம்பினார் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இது வியாசர் கூறியதன் மொழிபெயர்ப்பே என்று முன்னுரையில் அவரே கூறுவதால் இது வியாசருடைய கருத்தே அன்றிப் பாரதியின் கருத்து அல்ல என்று அறியலாம்.

                    ஆனால் தன் சுய சரிதையில் ஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ? என்று அவர் கேட்கும்போது விதி வலியது, வெல்ல முடியாதது என்று அவர் நம்பியதை உணர முடிகிறது.

                    ஆம். பாரதி விதியின் வலிமையை உணர்ந்திருந்தார். அது இறைவனின் மந்திரி என்று அவர் கூறுகிறார். கண்ணனைத் தந்தையாக உருவகித்த பாடலில்,

                                                    – ஒரு
    மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
    முன்பு விதித்த தனையே – பின்பு
    முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான்.

                    செய்த தவறுக்குத் தண்டனையாகத் துன்பத்தை தனது மந்திரியாகிய விதி தரும்போது இறைவன் குறுக்கிடுவதில்லை.

    நயமிகத் தெரிந்தவன் காண்; – தனி

    நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.

                    ஆனால் பாரதி பாடிய பாடல்களில் விதிக்குக் கட்டுப்பட்டு வாளா இராமல் முயற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். கஞ்சி குடிப்பதற்கிலாத நிலையில் அதன் காரணங்களை அறிந்து அதை நீக்கும் முயற்சியில் ஈடுபடாத எளியோரைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் தவிக்கிறார். துன்பம் வரும்போது இது விதிவசத்தால் வந்தது, எது வரினும் அனுபவித்தே தீருவேன் என்று கையைக் கட்டிக் கொண்டிருத்தல் தகாது என்பதைக் காட்டும் அறிவுரைகள் பல அவருடைய ஆத்திசூடியில் உள்ளன.

    கொடுமையை எதிர்த்து நில்.

    சீறுவோர்ச் சீறு.

    செய்வது துணிந்து செய். 

    சௌரியந் தவறேல்.

    ஞமலிபோல் வாழேல்.

    தேசத்தைக் காத்தல்செய்.

    நாளெலாம் வினைசெய்.

    பணத்தினைப் பெருக்கு.

    மிடிமையில் அழிந்திடேல்.

    மீளுமாறு உணர்ந்துகொள்.

    முனையிலே முகத்து நில்.

    யவனர்போல் முயற்சிகொள்.

    ராஜஸம் பயில்.

    ரௌத்திரம் பழகு.

    லௌகிகம் ஆற்று.

    வீரியம் பெருக்கு.

    வெடிப்புறப் பேசு.

    வையத் தலைமைகொள்

                    பாஞ்சாலி சபதத்தில் திரௌபதி தெருவில் இழுத்துச் செல்லப்படும்போது மக்கள் அதைத் தடுக்க முயலாமல் புலம்பினர் என்று அவர்களை இகழ்கிறார்.

    ஊரவர் தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ?

    வீரமிலா நாய்கள்,விலங்காம் இளவரசன்

    தன்னை மிதித்துத் தராதலத்தில் போக்கியே,

    பொன்னை அவள் அந்தப்புரத்தினிலே சேர்க்காமல்

    நெட்டை மரங்களென நின்று புலம்பினார்

    பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ”?

                    விதியின் பேரில் பழியைப் போட்டு விட்டு முயற்சியின்றி இருப்பவர்களை இறைவன் இகழ்வான் என்றும் அன்பு செய்தால், அதாவது பிறர் துயர் நீக்க முயற்சி செய்தால் அந்த முயற்சிக்குப் பலன் கொடுப்பான் என்றும் கூறுகிறார்.

    துன்பத்தில் நொந்து வருவோர் – தம்மைத்
    தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்;
    அன்பினைக் கைக்கொள் என்பான்; – துன்பம்
    அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;

                    விதி மதி இரண்டில் எது வலியது என்பது பற்றிய தன் கருத்தைச் சுருக்கமாக அழகுத் தெய்வம் என்னும் பாடலில் கூறுகிறார்,

    காலத்தின் விதி மதியை வெல்லுமோ என்றேன்

    காலமே மதியினுக்கோர் கருவியாமென்றாள்.

                    ஆம். மதியைத் தெளிவாக வைத்திருந்தால் விதி வசத்தால் துன்பம் நேர்கையில் அதைப் போக்கிக் கொள்ளச் செயல்படத் தூண்டும். முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற மொழிப்படி செயலுக்கு விளைவு நிச்சயம் உண்டு என்ற விதியின் நியமத்தைச் சாதகமாகப் பயன்படுத்தித் துன்பத்திலிருந்து விடுதலை அடையலாம்.

    வெற்றி செயலுக்குண்டு, விதியின் நியமம் என்று

    கற்றுத் தெளிந்த பின்னும் கிளியே கவலைப்படலாகுமோ?

                    ஆனால் சில சமயங்களில் முயற்சி பலன் தராமல் போவதும் உண்டு.

                                                    ………..     கிணற்றினுள்ளே

    மூழ்கிய விளக்கினைப் போல் – செய்யும்

    முயற்சியெல்லாம் கெட்டு முடிவதும்

    ஏழ்கடல் ஓடியுமோர் பயன்

    எய்திட வழியின்றி இருப்பதுவும்

    உண்டு.

                    அப்பொழுது என்ன செய்ய வேண்டும்? ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி என்பதால் இறைவனைச் சரணடைக என்கிறார் பாரதி. இறைவனிடம் பக்தி செய்தால் நிச்சயம் பலனுண்டு. உண்மையான பக்தியின் மூலம் துன்பங்கள் யாவும் நீங்கும். முன்னைத் தீய வினைப் பயன்கள் இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் என்று வேண்டினால் திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம். எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடையலாம். கேட்டது நீ பெற்றிடுவாய் ஐயமில்லை. அதற்கு அடிப்படையாக கடவுளிடத்தில் அசையாத நம்பிக்கை வேண்டும். நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு மறைத் தீர்ப்பு.

                    அப்படியும் துன்பம் தொடருமானால், சக்தி சோதனை செய்கிறாள் என்று உணர்க. பொறுமையுடன் இரு. நம்பிக்கை இழந்து பக்தியை விட்டு விடாதே. அவள் நிச்சயம் காப்பாள் என்ற சொல்லே துயர் போக்கும்.

    சக்தி சில சோதனைகள் செய்தால்  அவள்

    தண்ணருள் என்றே மனது தேறு

     

    பக்தியுடையார் காரியத்திற் பதறார் மிகுந்த பொறுமையுடன்

    வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்

     

    வையகத்துக்கில்லை, மனமே, நினக்கு நலம்

    செய்யக் கருதி இவை செப்புவேன்- பொய்யில்லை

    எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும் என்ற

    சொல்லால் அழியும் துயர்

                    பாரதியின் இவ்வழி வேதத்தையும் கீதையையும் ஆதாரமாகக் கொண்டது. பக்தி நெறி வேத நெறிக்கு விரோதமானது அல்ல. அறியாதார் சிலர் வேதம் என்பது வேள்வி முறையை மட்டுமே கொண்டதென்றும் பக்தி என்பது வேதச் சார்பு இல்லாத வழி என்றும் கூறுவர். இவர்களுக்குப் பாரதி பதில் கூறுகிறார்.

                    வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது, விக்கிரக ஆராதனை கிடையாது. ஸந்யாஸம் கிடையாது, அத்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா. பக்தி மாத்திரம் தானுண்டு. ….சரணாகதியே வழி. வேத ரிஷிகள் வேறு வழி காட்டியதாக ஸம்ஹிதைகளிலே தெரியவில்லை.

                    கீதையில் கண்ணனின் உபதேசமாகப் பாரதி கூறுகிறார், பயன் எண்ணாமல் உழைக்கச் சொன்னான், பக்தி பண்ணிப் பிழைக்கச் சொன்னான்.

                    இவ்வாறு விதி வலியது என்பதை உணர்ந்தாலும், பக்தியின் மூலமும் முயற்சியின் மூலமும் அதைப் புறங்காண முடியும்  என்று நம்புவதே வாழும் நெறி என்று பாரதி வழிகாட்டுகிறார்.

                    இந்தப் பக்தி நெறியே பாரதியின் பாடல்கள் அனைத்திலும் விரவிக் கிடக்கிறது.

    Share
  • குலதெய்வம்

    சு. கோதண்டராமன்

          ரயில் சென்னையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சுந்தரேசனின் மனம் மும்பையின் நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் தான் எத்தனை மாற்றங்கள்!  இன்று ரயிலில் பயணம் செய்வோம் என்று நேற்று இந்நேரம் அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. வலுக் கட்டாயமாக அல்லவா என்னை ரயில் அனுப்பி வைத்து விட்டாள். என் நலத்தை விரும்பித் தான் சொல்கிறாள். எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து தப்பினால் சரி என நினைத்துக் கொண்டான்.

          நேற்று ஜோதிடரைச் சந்தித்தது இவ்வளவு நீண்ட பயணத்தில் கொண்டு விடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தொழில் மந்தம் என்பது தற்போது உலகில் எல்லா நாடுகளுக்கும் உள்ள பிரச்சனை. ஆனால் இவன் விஷயமே வேறு. தென்னை மரத்தில் தேள் கொட்ட, பனை மரத்தில் நெறி கட்டியது என்கிற மாதிரி அமெரிக்காவிலிருந்து இவனுடைய சிறு தொழிலுக்கு மூலப் பொருள் அனுப்பி வந்த கம்பெனி மூடப்பட, இவன் தொழில் படுத்து விட்டது. அதே பொருளை உள் நாட்டில் ஒரு நிறுவனத்தில் வாங்கப் போய் இவனுடைய சரக்கின் தரம் குறைந்தது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராகக் கழன்று விட்டனர். வங்கியில் முடிந்த அளவுக்குக் கடன் வாங்கியாகிவிட்டது. தொழிலாளர்களையும் வேலையை விட்டு நீக்க முடியவில்லை. அடுத்த மாதம் சம்பளம் கொடுக்க வழி இல்லை என்ற நிலையில், அந்தப் பாலக்காட்டு ஜோதிடரைப் பற்றி அவன் மனைவி சொன்ன போது அரை மனதாக ஒப்புக் கொண்டான். அவனுக்குப் பொதுவாக, ஜோதிடம் மாந்திரீகம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என்றாலும் துன்பம் மிகும்போது யார் எது சொன்னாலும் கேட்கக் கூடிய மன நிலைக்கு வந்து விடுகிறோம் அல்லவா?

          ஜோதிடர் சோழி போட்டுப் பார்த்து என்னென்னவோ கணக்குகள் போட்டு, “நீங்கள் குல தெய்வத்தை மறந்து விட்டீர்கள். அதனால் தான் உங்களுக்கு இத்தனை தொல்லைகள்” என்றார். அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இவன் குல தெய்வத்தை மறந்ததனால் அமெரிக்கக் கம்பெனி மூடப்பட்டது என்பது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. என்றாலும் எதிர் வாதம் செய்யும் மன நிலையில் அவன் இல்லை.

          “குல தெய்வம் என்றால் என்ன?” சோதிடரைக் கேட்டான். “உங்கள் குலத்துக்கு என்று ஒரு தெய்வம் இருக்கும். உங்கள் மூதாதையர் வணங்கி வந்திருப்பார்கள். வீட்டில் பெரியவர்கள் அல்லது உங்கள் தாயாதி பங்காளிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்.

          தெய்வம் ஒன்று தான், அதைப் பலரும் பல பெயர்களில் வணங்குகிறார்கள் என்பது தான் அவனுடைய கல்வி அவனுள் ஏற்படுத்தியிருந்த நிலைப்பாடு. இவர் ஏதோ உன்னுடைய குலத்துக்கு என்று ஒரு தனித் தெய்வம் இருக்கிறது என்கிறார். அப்படியே இருந்தாலும் வணங்காமல் விட்டு விட்டதால் அது துன்பம் கொடுத்துப் பழி வாங்குகிறது என்றால் அதைப் போய்த் தெய்வம் என்று எப்படி ஏற்றுக் கொள்வது? அவன் குழம்பிக் கொண்டிருந்தான்.

          அவன் மனைவிக்கு அந்தக் குழப்பம் எதுவும் இல்லை. வீட்டுக்கு வந்தவுடன் “நம் குடும்பத்துக்குக் குல தெய்வம் எது?” என்று அவனுடைய அம்மாவிடம் கேட்டாள்.

          “கொட்டூர் ஐயனார்னு சொல்வாங்க. நானே ஒரு தடவை தான் கல்யாணம் ஆன புதுசில் போயிருக்கிறேன். இவனுடைய அப்பாவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் மாமனார் வற்புறுத்தி கல்யாணம் ஆன கையோடு அழைத்துப் போனார்.”

                    “அது எங்கே இருக்கு?’

                    “மாயவரம் போய் பஸ்ஸிலே போனோம். எந்தப் பக்கம்னு தெரியல்லே.”

          மணி பத்து ஆயிற்று. கால தாமதம் செய்யாமல் அவனது மனைவி தத்காலில் தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் சென்னைக்கு ஒரு டிக்கெட் புக் செய்தாள். கூகுள் ஆண்டவர் உதவியால் மாயூரம் என்ற மாயவரம் என்பது தற்போது மயிலாடுதுறை என்று அழைக்கப்படுகிறது என்பதையும் சென்னையிலிருந்து நாள் பூராவும் அடிக்கடி பஸ் போகிறது என்ற விவரத்தையும் தெரிந்து கொண்டாள். “மயிலாடுதுறையில் இறங்கி கொட்டூருக்குப் போகும் வழியை விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். நான் நாளைப் பயணத்துக்கான ஆகாரம் தயார் செய்கிறேன்” என்று உள்ளே போய்விட்டாள். இவனைப் பேசவே விடவில்லை.

          அவன் அம்மா முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு, “போய்ப் பார்த்து விட்டு வா. எந்தத் தெய்வமாவது கண்ணைத் திறக்கட்டும்” என்று சொன்னாள்.

          நம்பிக்கை இல்லாவிட்டாலும் வேறு வழி இல்லாததால் அவன் இதற்கு உட்பட்டான். இரவு தாதரிலிருந்து கிளம்பியாயிற்று. பன்னிரண்டு மணி நேரம் பயணம் பெரும்பாலும் தூக்கத்தில் போய் விட்டது. இன்னும் பன்னிரண்டு மணி நேரம் பகல் பொழுது போக வேண்டும். இதுவே சென்ற வருடமாக இருந்தால் அவன் ரயில் பயணத்தில் நேரத்தை வீணாக்கமாட்டான். விமானத்தில் வந்து போய் விடுவான். ஆனால் இன்று நிலைமை வேறு. விமானக் கட்டணத்துக்கு உள்ள காசில் ஒரு தொழிலாளிக்குச் சம்பளம் கொடுக்கலாம். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டான்.

          காலையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கி பல பேரை விசாரித்த பின் ஒரு நடத்துனர் சொன்னார், “கொட்டூர் தானே? ஏறி உக்காருங்க.”

          அரை மணி கழித்து, கொட்டூர் நிறுத்தத்தில் இறக்கி விட்டு விட்டு பேருந்து போய் விட்டது. இறங்கினவன் திரு திரு என்று விழித்தான். கண்ணுக்கெட்டியவரை வீடா வேறு கட்டிடங்களா காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் பசுமையான வயல்கள் தான். இப்படி நடுக்காட்டில் இறக்கி விட்டுப் போய் விட்டார்களே, விசாரிக்கலாம் என்றால் ஒரு மனித ஜீவனைக் கூடக் கண்ணில் காணோமே என்று அலுத்துக் கொண்டான்.

          அங்கே ஒரு மண் சாலை பிரிந்து சென்றது. அதன் முகப்பில் ஒரு காங்கிரீட் முகப்பு வளைவு தென்பட்டது. அதில் கொட்டூர் ஐயனார் கோவில்  கும்பாபிஷேக விழா வளைவு என்று எழுதி இருந்தது. இந்தச் சாலையில் போக வேண்டும் போல் இருக்கிறது. எவ்வளவு தூரம் போக வேண்டுமோ, சரி போவோம். வந்தாயிற்று. எது வந்தாலும் அனுபவிக்கத் தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு நடந்தான்.

          ஊர் எல்லையிலேயே ஐயனார் கோவில் இருந்தது. பூட்டி இருந்தது. அங்கே விளையாடிக் கொண்டிருந்த பையன்களிடம் கேட்டான். “இந்தக் கோவில் எப்போ திறப்பாங்க?’

          “பூசாரியார் வீட்டுக்குப் போய்க் கேளுங்க. வாங்க அழைச்சிட்டுப் போறேன்.”

          பூசாரி வீடு மண் குடிசை. முன்னும் பின்னும் தோட்டம். கொல்லையில் மாட்டுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த பூசாரி சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தார்.

          “வாங்க, எங்கேருந்து வரீங்க?’

          “மும்பையிலிருந்து. இந்த ஐயனார் எங்களுக்குக் குல தெய்வம்னு சொன்னாங்க. பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”

          “நீங்க இது வரைக்கும் இங்கே வந்ததில்லையே? யாரு வீடுன்னு தெரியல்லியே. உங்க அப்பா பேரு என்ன?”

                    “ராமநாதன்.”

                    “ராமநாதனா? தெரியல்லியே. உங்க தாத்தா பேரு?’

                    “சாம்பசிவம்.”

                    “ஓகோ, நம்ம சாம்பசிவம் ஐயா பேரனா நீங்க? ரொம்ப வருஷத்துக்கு முந்தி உங்க அப்பா ஒரு தடவை வந்துட்டுப் போனாரு. ரொம்ப நாளா குல தெய்வத்தை மறந்துட்டீங்க. பரவாயில்லே. இப்பவாவது நினைச்சுக்கிட்டு வந்தீங்களே. இந்த ஐயனார் ரொம்ப சக்தி வாய்ஞ்சவருங்க. ஒரு நடை வந்துட்டுப் போய்ட்டால் நினைச்ச காரியம் நடக்கும். நடத்திக் குடுத்துடுவாரு.”

          “அபிஷேகம் பண்ணணும். எவ்வளவு ஆகும்?”

          “காசு கிடக்குங்க. வீட்டிலே மாடு கறக்குது. பால் எடுத்துக்கலாம். கொல்லையிலே தென்னை மரம் இருக்கு. இளநீ பறிச்சுக்கலாம். நல்லெண்ணை மட்டும் கால் லிட்டர் வாங்கினாப் போதும். அதுக்குள்ள காசைக் குடுங்க. அப்புறம் காசு இருந்தா எனக்கு ஏதாவது தட்சிணை கொடுங்க. உங்க தாத்தா வருஷம் தவறாமே வந்துட்டுப் போவாரு. அவரு இந்நேரம் போயிருப்பாருன்னு நினைக்கிறேன். இருந்தா வராம இருக்க மாட்டாரு. உங்க அப்பா அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா?”

          “அப்பா போய் இருபது வருஷம் ஆவுது. அம்மா மும்பையிலே என்னோட இருக்காங்க.”

          “சரி. பல் விளக்கீட்டிங்களா?”

          “இல்லே. மயிலாடுதுறையிலே பஸ் ஏறி நேரே இங்கே தான் வரேன்.”

          “சரி. பையை இங்கே வைங்க. பையனை அனுப்பறேன். தோப்புக்குப் போய்ட்டு வாங்க. அங்கேயே குளத்திலே பல் விளக்கிட்டு வாங்க. வந்ததும் டீயைக் குடிச்சிட்டு கோவிலுக்குப் போகலாம். கோவில் கிணத்திலேயே குளிச்சிடலாம். மத்தியானம் ஒரு மணிக்குள்ளே பூசை முடிஞ்சு பிரசாதம் வாங்கிக்கலாம். இந்த ஊரிலே ஓட்டல் கீட்டல் கிடையாது. அதனாலே இந்தப் பிரசாதம் தான் மதியத்துக்கு உங்களுக்கு. திரும்ப மும்பை தான் போறீங்களா, இங்கே பக்கத்திலே வேறே வேலை இருக்கா?”

          “இன்னிக்கி சாயங்காலம் மயிலாடுதுறைலே பஸ் ஏறி நாளைக் காலைலே ஏழு மணிக்கு சென்னையிலே ரயிலைப் பிடிக்கணும்.”

          பூஜைகள் எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. பத்து மணிக்கு நாளைய தாதர் எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்திருந்தான். அங்கே சுற்றுவட்டாரத்தில் ப்ரௌசிங் சென்டர் என்று எதுவும் இல்லை என்பது தெரிந்தது. சரி, பரவாயில்லை. நாளை அன்ரிசர்வ்டில் போக வேண்டியது தான் என்று தீர்மானித்துக் கொண்டான்.

          முப்பத்தைந்து வருடமாகத் தன்னை வந்து பார்க்கவில்லை என்பதற்காக எப்படி எல்லாமோ காய்களை நகர்த்தித் தன்னை இங்கு வரவழைத்த அந்த ஐயனாரைத் தரிசனம் செய்து கொண்டான். கோவிலிலேயே சாப்பிட்டுவிட்டுக் கிணற்றங்கரையில் கை கழுவி விட்டு வரும்போது தான் ஐயனாருக்கு இன்னும் கோபம் தணியவில்லை என்பது தெரிந்தது. படி தடுக்கிக் கீழே விழுந்து விட்டான். கையை ஊன்றி எழுந்திருக்க முயலும்போது கையில் பயங்கர வலி.

          பதறிக் கொண்டு ஓடி வந்தார் பூசாரி. “படி இருக்கு, பார்த்து வரக்கூடாதா? சம தரையிலேயே நடந்து பழகி இருப்பீங்க போல. மெதுவா எழுந்திரிங்க.”

          எழுந்தான். தாங்க முடியாத வலி. கையைத் தூக்க முடியவில்லை. பூசாரி பார்த்தார். “கை எலும்பு முறிஞ்சிருக்குங்க. அது தான் இந்த வலி வலிக்குது. வலது கையாச்சே. ரொம்பக் கஷ்டமா இருக்குமே. வாங்க வீட்டுக்குப் போவோம். மருந்து போட்டுக்கலாம்.”

                    “இங்கே பக்கத்திலே டாக்டர் யாராவது இருக்காங்களா?”

          “டாக்டரா, மயிலாடுதுறைக்குத் தாங்க போகணும். எலும்பு முறிவுக்கு டாக்டர் கிட்டே போய்ப் பிரயோஜனமில்லீங்க. நல்ல வேளை, நாளைக்குப் புதன் கிழமை. தென்னமரக்குடி வைத்தியரு இருப்பாரு. நீங்க இங்கே தங்கிடுங்க. காலையிலே நான் அழைச்சி்ட்டுப் போறேன்.”

          “நடந்தாலே கை அதிருது. ஒரு சைக்கிள்  கிடைச்சுதுன்னா என்னை மெதுவா பஸ் ஸ்டாப்பு வரைக்கும் கொண்டு விட்டிருங்க. நான் பஸ் புடிச்சு மயிலாடுதுறையிலே டாக்டர் யார் கிட்டேயாவது காட்டிக்கிறேன்.”

          “தம்பி, நான் உங்களுக்கு நல்லதுக்குச் சொல்றேன். டாக்டர் கிட்டே போனீங்கன்னா கையைக் கோணல் மாணலா வெச்சு மாவுக் கட்டு போட்டுடுவாங்க. அப்புறம் ஆயுசுக்கும் கை வளைஞ்சே இருக்கும். அப்புறம் உங்க சௌகரியம்.”

          அதற்குள் வீடு வந்து சேர்ந்தது. மும்பைக்காரருக்கு கை முறிஞ்சு போச்சுங்கிற தகவல் கிடைச்சு தெரு வாசிகள் அனைவரும் கூடிவிட்டார்கள். எல்லோரும் ஒரு முகமாக, “டாக்டர் கிட்டே போகாதீங்க தம்பி. எந்தெந்த ஊரிலே இருந்தோ இங்கே தென்னமரக்குடிக்கு வராங்க. டாக்டர் கிட்ட போய் கையைக் கோணலாக்கிக்கிட்டவங்க இங்கே வந்து சரி பண்ணிட்டுப் போறாங்க. இந்த வட்டாரத்திலே விவரம் தெரிஞ்சவங்க இங்கே தான் வருவாங்க” என்று உரிமையோடு உபதேசம் செய்தார்கள்.

          வேறு வழி இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் மூட நம்பிக்கைகளிலேயே  வாழும் இந்த ஊரில் மாட்டிக் கொண்டு விட்டோம். இந்த மக்களின் தயவு இல்லாமல் இங்கே எதுவும் நடக்காது. இவர்கள் சொன்னதைக் கேட்டுத் தான் ஆகவேண்டும்.

          பூசாரி கையில் ஏதோ எண்ணையைத் தடவி விட்டு ஒரு பழைய துணியைக் கொண்டு கட்டுப் போட்டார். கையை அசைக்காமல் இருக்க கழுத்திலே சேர்த்துக் கட்டிவிட்டார். வீட்டுத் திண்ணையில் ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு, “இதிலே படுத்துங்க. காலைலே பொழுது விடிஞ்சதும் போகலாம்” என்றார்.

          மறுநாள் காலையி்ல் பூசாரி அவனைச் சைக்கிளில் பின்புறம் உட்கார வைத்து பஸ் நிறுத்தத்துக்கு அழைத்து வந்தார். மூன்று பஸ் மாறி மெதுவாகத் திருப்புகலூர் வந்தார்கள். ஒரு ஆட்டோ பிடித்து தென்னமரக்குடியை நோக்கிப் போனார்கள். போகிற வழியில் “திருப்புகலூர் பாடல் பெத்த தலங்க. அப்பர் முத்தி அடைஞ்ச ஊரு. இதோ வருது பாருங்க, திருக்கண்ணபுரம். சௌரிராஜப் பெருமாள். கோவிலும் பெரிசு. பாருங்க. குளமும் பெரிசு. தென்னமரக்குடி வைத்தியம் என்று பல ஊர்களில் பல பேர் வைத்தியம் செய்றாங்க. அது எல்லாம் போலி. இப்போ நாம போற இடம் தான் உண்மையான பரம்பரை வைத்தியர்” என்று ஏதேதோ சொல்லிக் கொண்டு வநதார் பூசாரி. இவனுக்கு அதை எல்லாம் கேட்கக் கூடிய மன நிலை இல்லை.

          ஒரு வாய்க்கால் கரையில் ஆட்டோ நின்றது. இரண்டே வீடுகள் தான் அங்கே. ஒரு வீட்டு வாசலில் ஆளோடியில் மக்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். பலர் வெளியில் நின்று கொண்டும் அடுத்த வீட்டில் இருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டும் இருந்தார்கள்.

          சட்டை அணியாத வைத்தியர் வந்து ஆளோடியில் தரையில் உட்கார்ந்தார். நோயாளிகளும் உதவிக்கு வந்தவர்களும் அவரைச் சுற்றி இருந்தார்கள். அந்த சூழ்நிலையைப் பார்த்தால் அது வைத்திய சாலை என்ற எண்ணமே ஏற்படவில்லை அவனுக்கு.

          ஒவ்வொருவராகப் பார்த்து வெளியேற வெளியேற கூட்டம் உட்கார்ந்தபடியே முன் நோக்கி நகர்ந்தது.          இவரிடம் வைத்தியம் செய்து என்ன ஆகப் போகிறதோ என்று பயம் ஏற்பட்டது. பூசாரிக்குத் தெரியாமல் பஸ் ஏறி மயிலாடுதுறை போய் விடலாமா என்று தோன்றியது.

          இவனுடைய முறை வந்தது. கையை அமுக்கிப் பார்த்துவிட்டு, “எலும்பு ஒடஞ்சிருக்குங்க. சிம்பு வெச்சுக் கட்டுப் போடறேன். பெசல் எண்ணை தரேன். கட்டின் மேலேயே எண்ணையை தினம் மூணு வேளையும் போட்டு வாங்க. அடுத்த புதன்கிழமை வாங்க. வரும் போது ஒரு கோழி முட்டையும், கொஞ்சம் உளுத்தம்மாவும் கொஞ்சம் வெள்ளைத் துணியும் கொண்டு வாங்க என்றார். மூங்கில் சிம்புகளை வைத்துக் கட்டுப் போட்டார்.

          எண்ணை எவ்வளவு வேணும் என்று வைத்தியர் கேட்டதற்கு “அம்பது ரூபாய்க்குக் குடுங்க” என்றார் பூசாரி. ‘ஃபீஸ்’ என்று இழுத்தான். “எண்ணைக்கு மட்டும் தாங்க காசு வாங்கறது” என்றார் வைத்தியர்.

          இன்னும் ஒரு வாரம் இங்கே தங்கணுமா? போச்சு. எல்லாத் திட்டங்களும் மண். தொழிற்சாலை ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. நானும் இல்லாவிட்டால் சர்வநாசம் தான். ஐயனார் மேல் கோபம் கோபமாக வந்தது. வந்து பார்க்கவில்லை என்று தண்டனை. வந்து பார்த்ததற்கும் தண்டனையா? கை வலியை விட மன வலி தான் பெரிதாக இருந்தது.

          பூசாரி வீட்டுக்கு அழைத்து வந்தார். கைதி போல உணர்ந்தான். “இன்னும் ஒரு வாரம் நீங்க என் வீட்டிலேயே தங்கிடுங்க. ஊருக்குப் போன் போட்டுச் சொல்லிடுங்க. ஒண்ணும் யோசனை பண்ணாதீங்க. உங்க தாத்தா குடும்பமும் எங்க தாத்தா குடும்பமும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணா இருந்தவங்க. சந்தோஷமா இருங்க. ஐயனாரு கை விட மாட்டாரு.”

          என்ன சொல்வது என்று தெரியவில்லை. வீட்டுத் திண்ணையில் கட்டிலே கதியாகக் கிடந்தான். முடிந்த போது ஐயனார் கோவிலில் போய் உட்கார்ந்தான். ஊர் மனிதர்கள் அடிக்கடி வந்து நலம் விசாரித்து விட்டுப் போனார்கள். இந்தக் கிராம வாசிகளுக்குத் தான் எத்தனை பாசம். நான் இவர்களுக்கு என்ன செய்தேன் என்று நினைக்கிறான். ஏதேனும் செய்தால் தான் பாசம் காட்ட வேண்டும் என்ற வணிகக் கலாசாரத்தில் வளர்ந்தவன் அவன்.

          பூசாரி கோவில், வயல் வேலைகளுக்குப் போன நேரம் போக மீதி நேரத்தில்  இவனை நன்றாகக் கவனித்துக் கொண்டார். வேளா வேளைக்கு அவரது மனைவி சாப்பாட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு ஸ்பூனுடன் கொடுத்தாள். இடது கையால் சாப்பிடப் பழகிக் கொண்டான்.

          பொழுது போக வேண்டுமே.

          “வீட்டிலே டீவி இருக்குங்க. கரண்ட் தான் கிடையாது. ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் தான் வரும். அதுவும் எப்ப வரும்னு சொல்ல முடியாது.”

          அவனுக்கு ஒரே பொழுது போக்கு பூசாரியின் மகனும் அவனுடைய நண்பர்களும் தான். இவனுடைய இளமைப் பருவம் சென்னை நகரில் கழிந்தது. கிராமப் புறங்களைப் பார்க்கவோ அந்த வாழ்க்கை முறையைப் பற்றி அறியவோ அவனுக்கு வாய்ப்புக் கிட்டியதில்லை. இப்பொழுது வாய்ப்பும் கட்டாய ஓய்வும் கிடைத்து, சிறுவர்கள் மாமரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுவதையும் கிட்டிப் புள், கோலி, பம்பரம் விளையாடுவதையும், சிறுமிகள் பாண்டி விளையாடுவதையும், ‘ஆலாப் பொறுக்கி, ஆரோட சேத்தி’ என்று நீளமாகப் பாட்டுப் பாடிக் கொண்டே கற்களை விட்டெறிந்து பிடிக்கும் விளையாட்டையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

          அவ்வப்போது பூசாரி வந்து தன் குடும்பக் கதையைச் சொல்வார். “எனக்கு நாலு பசங்க. இங்கே இருக்கிறவன் தான் கடைசி. பெரியவன் டிரைவிங் கத்துக்கிட்டான். இப்போ துபாயிலே இருக்கான். ரெண்டாவது பையன் ஃபிட்டர் தொழில் கத்துகிட்டு கும்மாணத்திலே வேலை  பாக்கிறான். மூணாவது பய அங்கேயே இஞ்சினீரிங் காலேஜிலே படிக்கிறான். பெரியவன் அனுப்பற பணத்திலே தாங்க அவன் படிப்பு நடக்குது. இப்ப பெரியவனுக்குக் கல்யாணம் ஆயிடிச்சின்னா அவன் தம்பிக்குப் பணம் அனுப்பறது நின்னு போயிடும். ஒரு நல்ல எடம் வந்திருக்கு. தம்பி படிப்புக்காக அவனுடைய கல்யாணத்தை ஒத்திப் போடறதும் சரியில்லே. பார்ப்போம். ஐயனாரு ஏதாவது வழி காட்டுவாரு.”

          பூசாரி மட்டுமல்ல, அந்த ஊர் ஆண்கள் ஒவ்வொருவரும் இவனிடம் வந்து தங்கள் சொந்தக் கதை முழுவதையும் சொல்லிக் கொண்டார்கள். இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறார்கள், கேட்டு எனக்கு என்ன உபயோகம் என்று நினைத்தாலும் வேறு வழி இல்லாமல் கேட்டுக் கொண்டான்.

          அதே போல, இவனைப் பற்றியும் ஒவ்வொருவரும் குடைந்து குடைந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அடுத்தவருடைய சொந்த விஷயங்களில் தலையிடுவது தவறு என்ற நாகரிகம் தெரியாத காட்டு வாசிகள் என்று நினைத்தான். முதலில் தன்னைப் பற்றி அரை குறைத் தகவல்களை மட்டுமே வெளியிட்டவன் பின்னர் மனம் மாறி இவர்கள் தங்களைப் பற்றி முழுமையாகச் சொல்லிக் கொள்வது போல என்னிடமும் எதிர்பார்க்கிறார்கள். சொல்வதில் என்ன தவறு என்று நினைத்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டான், தனது தொழிற்சாலை தள்ளாட்டத்தில் இருப்பது உள்பட.

          ஒருநாள் பூசாரியின் பையன், “வித்தை காட்டறேன் பாருங்கடா” என்று அக்கம் பக்கத்துப் பையன்களைக் கூட்டி வந்தான். ஒரு நூலில் ஒரு சிறு கல்லைக் கட்டி நூலின் மறு முனையை ஒரு குச்சியில் தொங்க விட்டான். மற்ற பையன்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து அந்த நூலில் வைத்தான். நூல் எரிந்தது. அதில் கட்டப்பட்டிருந்த கல் கீழே விழுந்தது. “இது தான் வித்தையாக்கும்” என்று பையன்கள் கேலி செய்தார்கள். “இருங்கடா, இன்னும் இருக்குடா” என்று சொல்லி விட்டு வேறு ஒரு நூலை எடுத்தான். அதில் ஏதோ பச்சிலைச் சாற்றைத் தடவினான். சற்று நேரம் காய வைத்து விட்டு முன்பு போல் அதில் கல்லைக் கட்டித் தொங்க விட்டான். இப்பொழுது அதைப் பற்ற வைத்தான். நூல் எரிந்தது. கரியாயிற்று. ஆனால் கல் விழவில்லை. மற்றப் பையன்கள் வாயைப் பிளந்தார்கள்.

                    “எப்படிடா? டேய் எனக்குச் சொல்லிக் குடுடா.”

                    “மூணு நாள் பட்டினி கிடக்கிறியா, அப்ப தான் சொல்லித் தருவேன்.”

          இதைப் பார்த்துக் கொண்டிருந்த போது சுந்தரேசனுக்கு மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் தோன்றியது. மூலப் பொருள் தரக் குறைவைச் சரி செய்ய ஒரு வழி புலப்பட்டு விட்டது. ஒரு வருஷமாக மூளையைக் கசக்கிக் கொண்டபோது கிடைக்காத திட்டம் ஒரு வாரமாக அதைப் பற்றிச் சிந்திக்காத போது தோன்றியது.

          “தம்பி, இங்கே வா, எனக்கு அந்த வித்தையைச் சொல்லிக் குடு, நான் மூணு நாள் பட்டினி கிடக்கிறேன்” என்றான்.

          “உங்களுக்குச் சொல்லித் தரேண்ணே. நீங்க பட்டினி எல்லாம் கிடக்க வேண்டாம். வேறே ஒண்ணும் இல்லீங்க. முருங்கை இலைச் சாறு அது ”

          அடுத்த புதன் கிழமை வந்தது. தென்னமரக்குடிக்கு அழைத்துப் போனார் பூசாரி. வைத்தியர் கட்டைப் பிரித்தார். கையில் ஒவ்வொரு இடமாக அழுத்திப் பார்த்துக் கொண்டே வந்தார். குறிப்பிட்ட ஓரிடத்தில் கட்டை விரலால் பலமாக அழுத்தினார். வலி தாங்காமல் ஆ என்று அலறினான் அவன். அடுத்த கணம் வலி மாயமாக மறைந்தது. எட்டு நாட்களாக கையில் இருந்த கனம் குறைந்தது. கை என்று ஒன்று இருப்பதான உணர்வே இல்லை. வைத்தியர் முட்டையையும் உளுத்தம் மாவையும் குழைத்துக் கை முழுவதும் பற்றுப் போட்டார். ஒரு வெள்ளைத் துணியை வைத்துக் கட்டினார்.

          “நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு கட்டை அவுத்துட்டு வெந்நீரை விட்டுக் கழுவி துன்னூத்தைப் பூசுங்க. ஒரு வாரத்துக்கு எண்ணெயைத் தடவிங்க. நீங்க உங்க ஊருக்குப் போகலாம்.”

          வெளியில் வந்ததும் பூசாரி சொன்னார், “ஒரு வாரம் எண்ணை போட்டதிலே எலும்பு தசை எல்லாம் இளகி ரப்பர் கணக்கா ஆயிருச்சு. இப்போ அது தன் இடத்திலே சரியா ஒக்காந்துகிச்சு. டாக்டர் கிட்ட போனீ்ங்கன்னா, அன்னிக்கே சேத்து வைச்சுக் கட்டுப் போடுவாங்க. தசை விறைப்பா இருக்கறப்போ எலும்பைப் பொருத்தினா அது முசிறிக்கிட்டுத் தான் இருக்கும். அதிலே ஒரு சின்னப் பிசிறு இருந்தாலும் கை கோணிப் போயிடும். இப்படி இளக்கிக் கட்டறது தான் இயற்கையான நிலைக்குக் கொண்டாரும்” என்றார்.

          “இதுவே மும்பையிலே இருந்தா எக்ஸ்ரே, ஆப்பரேஷன், ஸ்டீல் பிளேட் வைக்கறதுன்னு அம்பதாயிரம் ரூபாய் செலவு வெச்சுடுவாங்க. நீங்க வெறும் அம்பது ரூபாயிலே முடிச்சுக் குடுத்துட்டீங்க. ரொம்ப நன்றிங்க. இன்னிக்கு சாயங்காலம் பஸ்ஸிலே சென்னைக்குப் போறேன்” என்றான்.

          “எங்களை எல்லாம் நெனப்பிலே வெச்சுங்க” என்றார்.

          “உங்களை மறக்க முடியுமா? உங்க பையனையும் மறக்க முடியாது. இந்த ஒரு வாரம் ஓய்வு எடுத்ததிலே எனக்கு ஒரு புது வழி புலப்பட்டிருக்கு. ஐயனார் அருளாலே, அது வெற்றிகரமா முடிஞ்சுதுன்னா, என் தொழில் நிமிர்ந்துடும். அப்புறம் உங்க பையனோட காலேஜ் படிப்பை நான் பார்த்துக்குவேன்” என்றான்.

          “எல்லாம் நல்லபடியா நடக்கும் ஐயனாரு கை விடமாட்டாரு. போய்ட்டு வாங்க.”

          மூன்று மாதம் கழித்து பூசாரிக்குப் போன் வந்தது. “தொழில் நல்லா நடக்குது. உங்க மூணாவது பையன் ஃபோன் நம்பரைக் குடுங்க. அவன் காலேஜ் ஃபீஸ் எவ்வளவு, யார் பேருக்குப் பணம் அனுப்பணும்கிற தகவலை வாங்கிக்கிறேன், அத்தோட உங்க சின்னப் பையனுக்கும் என் நன்றியைச் சொல்லுங்க” என்றான் சுந்தரேசன்.

          “நன்றி ஐயனாருக்குத் தாங்க சொல்லணும். வருசா வருசம் வந்துட்டுப் போங்க” என்றார் பூசாரி.

    Share
  • நிலவைக் கண்டால் நீலா

    சு. ​கோதண்டராமன்

    “சுப்பையா, கொண்டைக் கடலை மாலை கட்டி வைச்சிருக்கேன். ஆபீசுக்குப் போகும்போது சிவன் கோவில்லே தட்சிணாமூர்த்திக்குப் போட்டுட்டு வேண்டிக்கிட்டுப் போப்பா” என்றார் தாய்.

    “சரிம்மா” என்றான்.

    “மறந்துடாமல் எடுத்துக்கிட்டுப் போ” என்று வலியுறுத்தினார்.

    அவனா மறப்பான்? இது அவன் தலையாய வேலை ஆயிற்றே!

    எத்தனையோ தெய்வங்களுக்கு எத்தனையோ விதமான மாலைகள் போட்டாகி விட்டது. சிவனுக்கு வில்வ மாலை 25 வாரம். அம்பாளுக்கு ரோஜாப்பூ மாலை 21 வாரம். செவ்வாய்க்கு அரளி மாலை 7 வாரம். துர்க்கைக்கு எலுமி்ச்சை மாலை 36 வாரம். அனுமாருக்கு வெத்திலை மாலை 18 வாரம். ஒரு தடவை சோளிங்கர் போய் நரசிம்ம சுவாமிக்கு ஏலக்காய் மாலை கூடச் சாற்றி வந்தான். அந்த வரிசையில் இப்பொழுது தட்சிணாமூர்த்திக்கு வியாழன் தோறும் கடலை மாலை போட்டுக் கொண்டிருக்கிறான். கடுகு மாலை, மிளகு மாலை, சீரக மாலை தான் பாக்கி. இனி யாராவது புதிய சோதிடர் வந்து அதைப் போடச் சொன்னால் அதற்கும் தயாராகத் தான் இருக்கிறான். இத்தோடு 15 வாரங்கள் ஆகிவிட்டது. இன்னும் 3 வாரங்கள் பாக்கி. அதற்குள் நல்ல சேதி எதாவது வருகிறதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.

    எதற்காக? இதெல்லாம் எதற்காக?

    எல்லாம் அவன் திருமணத்திற்காகத் தான். வயது 36 ஆகிவிட்டது. இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வயது முறையே 40, 38 ஆகிறது. 16 வருஷம் முன்பு பெரிய அண்ணனுக்கு பெண் தேட ஆரம்பித்த பெற்றோர்கள், சின்ன அண்ணனையும், பிறகு இவனையும் அதில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரம் கொடுக்காத பத்திரிகை இல்லை, பதியாத திருமணத் தகவல் நிலையம் இல்லை. நண்பர்கள், உறவினர்கள் எல்லாரிடமும் சொல்லி வைத்திருக்கிறது. யாருக்கும் திருமணம் ஆகிற வழியைக் காணோம். அண்ணன்கள் இரண்டு பேரும் அலுத்துப் போய், அந்த எண்ணத்தையே கை விட்டு விட்டார்கள்.  இவனுக்கு மட்டும் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.

    இருந்தாலும் இந்த சாமி எல்லாம் சுத்த மோசம், ஒரு சாமிக்காவது கொஞ்சம் நன்றி உணர்ச்சி இருக்கணுமே என்று கோபம் வந்தது சுப்பையாவுக்கு. அவன் ஒரு அரசாங்க ஊழியன். மிகவும் நேர்மையானவன். கை நீட்டி லஞ்சம் வாங்கிவி்ட்டால் அந்த வேலையை முடிக்காமல் அன்று வீட்டுக்குப் போக மாட்டான். தன் அளவு நேர்மை இல்லாவிட்டாலும், ஓரிரு மாதம் தாமதமாகவாவது சாமி தன் வேலையை முடித்துக் கொடுத்தால் பரவாயில்லை என்று நினைக்கிறான். இதை வெளியில் சொல்லிக் கொள்ளவும் முடியவில்லை. அவன் பேசுவது எந்த சாமி காதிலாவது விழுந்து, அது அவனுக்குக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அருளைத் தடுத்து நிறுத்திக் கொண்டால் என்ன செய்வது என்று பயமாக வேறு இருக்கிறது.

    லஞ்சம் வாங்கலாமா, தப்பில்லையா?  இந்தக் கேள்வியை வேறு யாரும் கேட்பதற்கு முன் அவனே கேட்டுக் கொள்வான். என்ன செய்வது? சோதிடர்களுக்கும் அவர்கள் சொல்லும் பரிகாரங்களுக்குமே ஒவ்வொரு மாதமும் ஐயாயிரம், பத்தாயிரம் என்று ஆகிறது. இதற்காகத் தான் கை நீட்டித் தொலைக்க வேண்டியிருக்கிறது. எந்த சாமியாவது கருணை காட்டிக் கல்யாணம் செய்து வைத்து விட்டால் அப்புறம் இந்த அதிகப்படி செலவுகளும் இராது, பாவம் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படாது என்று அவனே சமாதானப்படுத்திக் கொள்வான்.

    பெரிய பண்டிட் முதல் மரத்தடி சோதிடர் வரை எல்லாரையும் பார்த்தாகி விட்டது. கிளி ஜோஸ்யம், கீரி ஜோஸ்யம், பல்லி ஜோஸ்யம், பாம்பு ஜோஸ்யம் என ஒன்றும் பாக்கி இல்லை.

    ஒரு முறை 5000 ரூபாய் கட்டணம் கட்டி ஐந்து நட்சத்திர ஓட்டலில் முகாம் இட்டிருந்த ஒரு ஆந்திர ஜோஸ்யரிடம் ஜாதகம் பார்த்தான். அவர் இந்த மாதம் குரு பெயர்ந்த உடன் கண்டிப்பாகத் திருமணம் நிச்சயம் ஆகும் என்றார். குருவும் பெயர்ந்தார். அடுத்த ராசிக்குப் போவதற்கும் ஆயத்தம் ஆகிவிட்டார். எந்த சேதியையும் காணோம்.

    அடுத்த தடவை ஒரு மரத்தடி சோதிடர் கண்ணில் தென்பட்டார். நெற்றி நிறைய சந்தனமும், குங்குமமும், கழுத்து நிறைய ருத்ராட்சமும் அவரைப் பார்த்தாலே தெய்வீகமாக இருக்கவே அவரிடம் ஜாதகத்தைக் காண்பித்தான். பழைய சோதிடர் சொன்னது பலிக்கவில்லை என்பதையும் சொன்னான். அவர் நன்றாக ஆராய்ந்து பார்த்துவிட்டு, “எந்த மடையன் சொன்னது குரு பலம் வந்தால் உங்களுக்குக் கல்யாணம் ஆகுமென்று? உங்கள் ஜாதகத்தில் குரு நீசனாகி விட்டான். அவன் எந்த ராசியில் இருந்தாலும் உங்களுக்கு ஒன்று தான். உங்களுக்கு ஏழாம் இடத்திலே புதன் உச்சமாக இருக்கிறான். அதனாலே, புத தசை ஆரம்பிக்கும் போது தான் உங்களுக்குத் திருமண வாய்ப்பு” என்றார்.

    “அது எப்போ ஆரம்பிக்கும்?”

    “இன்னும் மூணு வருஷம் இருக்கு.”

    “மூணு வருஷமா? கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க.”

    “இதிலே எல்லாம் பேரம் பண்ண முடியாதுங்க. கிரகங்களுக்குப் பூர்வ பலன் என்று ஒன்று உண்டு. அதாவது முறையான அதிகாரம் வருவதற்கு முன்னதாகவே பலன் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு நீங்கள் புதன் கிழமை தோறும் மஞ்சள் வேட்டியைக் கட்டிக்கொண்டு நவக் கிரகத்தை 9 முறை அங்கப் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.”

    அப்படியே செய்தான். மூன்று வருஷமும் முடிந்துவிட்டது. பூர்வ பலனும் வரவில்லை, அபர பலனும் வரவில்லை.

    ஒரு முறை பத்திரிகைகளில் மணமகன் தேவை பகுதியை மேய்ந்து கொண்டிருந்தபோது “திருமணத் தடையா? பிரபல நேமாலஜிஸ்ட் நெற்குன்றம் நீலமேகத்தைச் சந்தியுங்கள். எத்தனையோ பேர் பலன் பெற்றுள்ளனர்” என்று ஒரு விளம்பரத்தைப் பார்த்தான். அவரிடம் போனான். நேமாலஜிஸ்ட், நியூமராலஜிஸ்ட், ஜெம்மாலஜில்ட், பொட்டாலஜிஸ்ட் என்று பல பட்டங்கள் அவருடைய பெயருக்குப் பின் இருந்தன.

    “உங்க பேரு?”

    “சுப்பையா”

    “என்ன ஸ்பெல்லிங் போடறீங்க? ”

    “எஸ் யூ பி பி ஏ ஐ ஒய் ஏ.”

    “கூட்டுத் தொகை 2 வருது. உங்க பிறந்த தேதி? ”

    “3-1-1977”

    “கூட்டுத் தொகை 1 வருது. உங்களுக்கு நினைச்ச காரியம் எதுவுமே நடக்காதே. வாழ்க்கையே ரொம்பக் கஷ்டமா இருக்குமே.”

    “ஆமாங்க. 12 வருஷமா முயற்சி பண்ணியும் திருமணம் நடக்கல்லிங்க.”

    “எப்படி நடக்கும்? எப்படி நடக்குங்குறேன்? ”

    “ஏன்? ”

    “பிறந்த தேதிப்படி நம்பர் 1. பேரு பார்த்தா 2 வருது. ஒண்ணாம் நம்பர் கொடுக்க நினைக்கிறதை ரெண்டாம் நம்பர் தடுத்துடுது. பிறந்த தேதியை மாத்த முடியாது. பேரை மாத்தினாத் தான் எதுவும் நல்லது நடக்கும்.”

    “அப்படியா? ”

    “உங்க பேரிலே ரெண்டு பி வருதுல்ல, ஆங்கில ரெண்டாவது எழுத்து பி. அதுக்குப் பதிலா ப்பி, அதாவது 16வது எழுத்து, அதைப் போட்டுங்க. உங்களுக்கு அதிருஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.”

    “அப்படியா? ”

    “எஸ் யூ ப்பி ப்பி ஏ ஐ ஒய் ஏ. இதிலே மூணு விசேஷம் இருக்கு. கூட்டுத் தொகை ஒண்ணு வருது. அதனாலே இதுக்கும் தேதிக்கும் இருந்த பகை போயிடுது. ப்பி ப்பி ன்னு வரது நாதஸ்வர ஓசை இல்லியா? மங்கள வாத்யம். கல்யாணம் நிச்சயம். இப்ப பேரிலே வர ப்பையா என்பது சிறு வயதுப் பையனைக் குறிக்கும். அதனாலே நீங்க வயசானது தெரியாம என்னிக்கும் சின்னப் பையனாவே இளமையா இருப்பீங்க.”

    “அப்படியா? ”

    “இந்தப் பேரை தினம் 307 தடவை எழுதிப் பாருங்க அந்த மாதிரி 307 நாள் செய்யணும். அதோட, இந்த நீலக் கல் மோதிரம் தரேன். இது விலை 10,000 ரூபாய் தான். இது உங்க நம்பருக்கு அதிருஷ்டக் கல். அப்புறம் பாருங்க. உங்களைக் கையிலே பிடிக்க முடியாது.”

    மோதிரத்தை வாங்கிக் கொண்டு வந்தான்.

    307 நாளும் ஆயிற்று. கையெழுத்து வேள்வியும் முடிந்தது. ஒண்ணாம் நம்பரின் அதிருஷ்டம் இன்னமும் அவன் ஒண்டிக் கட்டையாகத் தான் இருக்கிறான்.

    “ஏண்டா தம்பி, இந்த நாடி சோதிடம்னு சொல்றாங்களே, அப்படியே பலிக்குதாமே, அதை வேணா ஒரு தடவை பார்த்து விடலாமே” என்றார் அவன் தாய்.

    விசாரித்துக் கொண்டு வைதீஸ்வரன்கோவிலுக்குப் போனான். அங்கே நகர் வலம் வந்த போது இருபது முப்பது இடத்தில் நாடி ஜோதிடம் என்று போர்டுகள் தொங்கின. அதிலே யார் மிகச் சரியாகச் சொல்வார் என்று தெரியவில்லை. சரி, கோவிலுக்குப் போய் சாமியையே கேட்டு விடுவோம் என்று போனான். அங்கே பிரகாரத்தில் நான்கு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பேச்சுக் கொடுத்ததில் வழி புலப்பட்டது.

    “பிருகு நாடி ஜோதிடம் என்று போர்டு போட்டிருப்பது தான் ஒரிஜினல், மற்றதெல்லாம் போலி” என்றார்கள்.

    பிருகு முனிவர் பல லட்சம் வருஷங்களுக்கு முன்னே உலகத்தி்ல் எல்லா நாடுகளிலும் எல்லாக் காலத்திலும் பிறக்கப் போகும் மனிதர்களுடைய ஜாதகத்தை எல்லாம் தனித் தனி ஓலைகளில் எழுதி முத்து என்பவரிடம் கொடுத்தாராம். அவர் நாடி முத்து என்று பெயர் பெற்றார். அவருடைய பரம்பரையினர் எல்லோருமே நாடி முத்து, நாடி ரத்தினம் என்ற பெயரைத் தான் மாற்றி மாற்றி வைத்துக் கொள்வார்களாம்.

    “தற்போது இருப்பவர் பெயர் நாடி முத்து. அவரிடம் இருப்பது தான் பிருகு முனிவர் கையால் எழுதின ஓலைகள். மற்றவர்கள் எல்லாரும் செராக்ஸை வைத்துக் கொண்டு பிழைக்கிறார்கள்” என்றார்கள்.

    நாடி முத்துவை நாடிப் போனான். முன் அறையில் ஒரு வரவேற்பாளர் இருந்தார். “நாடி ஜோஸ்யம் பார்க்க வந்திருக்கிறேன்” என்றான்.

    “உடனே பார்க்க முடியாது. 190 பேர் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 191வது நபராக உங்களைப் பதிவு செய்து கொள்வோம்.”

    பணம் கட்டிவிட்டுக் கேட்டான், “நான் எப்போ வரணும்?”

    “ஒரு நாளைக்கு 12 பேருக்கு மேலே பார்க்கக் கூடாதுன்னு பிருகு முனிவர் சொல்லி இருக்கார். அதனாலே உங்களுக்கு நாளை முதல் 16வது நாள் மாலை 4 மணிக்குத் தான் அப்பாயிண்ட்மெண்ட்” என்றார்.

    அடுத்த 16வது நாள் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டுவிட்டு நாடிமுத்துவிடம் போனான்.

    போய் உட்கார்ந்ததும் நாடிமுத்து அவன் முகத்தை உற்றுக் கவனித்தார். “நீங்க இந்த நேரத்துக்கு வருவீங்கன்னு பிருகு முனிவர் சொல்லி இருக்கார். அதனாலே நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம். உங்கள் ஜாதகத்தை எடுத்துத் தருகிறேன், பாருங்கள்” என்றார்.

    உள்ளே போய் ஒரு ஓலையை எடுத்து வந்து படிக்கத் தொடங்கினார். ‘பார் பார் முருகனைப் பாரதிவேகமா மயில் மேலே வரார் பார்’ என்றார்.

    “உங்க பேரு முருகனுடைய பேர்களில் ஒன்று தானே?” என்றார்.

    அவன் தந்தை சுப்பிரமணிய பாரதியிடம் பற்றுக் கொண்டவர். அதனால் அவனுக்கு பாரதியின் செல்லப் பெயராகிய சுப்பையா என்ற பெயரை வைத்திருந்தார். இந்த ஜோதிடருக்கு அது தெரிந்திருக்கிறதே, பாரதி பெயரைக் கூடச் சொல்லி விட்டாரே என்று அதிசயித்தான்.  அது மட்டுமல்ல, அவனுடைய தந்தை தாய் பெயரையும் மறைமுகமாகக் குறிப்பிட்டார். பிறந்து மூன்று மாமாங்க காலம் ஆகியும் அவன் கன்னி கழியாமல் இருப்பது பற்றியும் குறிப்பிட்டார். தை மாதம் தாலி கட்டும் வேளை வந்து விட்டது என்றும் கூறினார். மிகுந்த மகிழ்ச்சியோடும் நம்பிக்கையுடனும் வீட்டுக்கு வந்தான்.

    தை வந்து போயிற்று. தாலியைத் தொடும் பாக்கியம் கிட்டவில்லை. பிருகு முனிவரிடம் போய் ஏமாற்றி விட்டீர்களே எனச் சண்டை போட வேண்டும் என்று போனான். விவாகக் காண்டம் பார்க்க வேண்டும் என்று மறுபடியும் ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வெயிட்டிங் லிஸ்டில் வைத்து பத்து நாள் கழித்து வரச் சொன்னார்கள்.

    போனான். நாடி முத்து மீண்டும் அவனுடைய ஓலையை எடுத்து வந்தார். அதை நன்றாக ஊன்றிக் கவனித்து விட்டு, “உங்களுக்கு சர்ப்ப தோஷம் இருக்கிறது, அதைச் சரி செய்யும் வரையில் திருமணம் ஆகாது என்று பிருகு முனிவர் சொல்கிறார்” என்றார்.

    “அதை எப்படிச் சரி செய்வது?”

    “சர்ப்ப யாகம் செய்ய வேண்டும். பத்தாயிரம் ரூபாய் ஆகும்.”

    “சர்ப்ப யாகமா? புராணத்தில் பரீட்சித்து ராஜா தான் எல்லாப் பாம்புகளையும் யாக குண்டத்தில் விழ வைத்து சர்ப்ப யாகம் செய்ததாகச் சொல்வார்கள். அந்த மாதிரிப் பாம்புகளை எல்லாம் பிடித்து ஹோமம் செய்ய வேண்டுமா? இது சாத்தியமா?”

    “கவலைப்படாதீங்க. செய்ய முடியாத பரிகாரம் எல்லாம் பிருகு முனிவர் சொல்ல மாட்டார். மாவால் பாம்பு மாதிரி செய்து ஹோமம் செய்வார்கள். அந்த மந்திரம் தான் முக்கியம்.”

    பத்தாயிரம் கொடுத்தான். மூன்று மணி நேரம் அவனைப் புகையில் திணற விட்டார்கள். ஹோமம் முடிந்த பின், நாடி முத்து அவனைக் கூப்பிட்டு, “ஹோமம் செய்தது மட்டும் போதாது. நீங்கள் ஒரு முறை காளஹஸ்திக்குப் போய் ஒரு இரவு அங்கே கோவிலில் படுத்து வாருங்கள்” என்றார்.

    அதையும் செய்தான். தூங்கும்போது எவரோ அவன் பர்ஸை அடித்துக் கொண்டு போய்விட்டார்கள். நல்ல வேளை. ஏடிஎம் கார்டு தனியாக வேறு இடத்தில் வைத்திருந்ததால் வீடு வந்து சேர முடிந்தது.

    எண்கண் என்ற முருகன் தலத்தில் சாமியார் ஒருவர் குறி சொல்வதாகக் கேள்விப்பட்டு அங்கே போனான். சாமியார் ஆஞ்சநேயர் படத்தின் முன் அவனை உட்கார வைத்தார். படத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்தார். அதில் ஒரு மைப் பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அதையே உற்றுப் பார்த்தார்.

    “உங்க பேரு சுப்பையாவா?”

    “ஆமாங்க.”

    “உங்க ஊரு கும்பகோணமா?”

    “ஆமாங்க.”

    “உங்க தெருக் கடைசியிலே ஒரு குளம் இருக்கா?”

    “ஆமாங்க.”

    “உங்க வீட்டுக்கு முன்னாலே ஒரு வேப்ப மரம் இருக்கா?”

    “ஆமாங்க.”

    “வீட்டின் கொல்லையில் ஒரு நெல்லி மரம் ரொம்ப நாளாக் காய்க்காமல் இருக்கா?”

    “ஆமாங்க.”

    நேரில் பார்த்தது போல புட்டுப் புட்டு வைக்கிறாரே என்று வியப்பில் அப்படியே உறைந்து விட்டான்.

    “உங்களுக்குக் கல்யாணம் ஆகல்லைன்னு ரொம்ப நாளா வருத்தமா இருக்கீங்க.”

    “ஆமாங்க.”

    “உங்க அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகல்லை.”

    “ஆமாங்க.”

    “வீட்டிலே தோஷம் இருக்கு அதனாலே தான் இப்படி எல்லாம் நடக்குது. எலுமிச்சம் பழம் மந்திரிச்சுத் தரேன். அதை ஒரு கயிற்றில் கட்டி வீட்டு வாசலில் தொங்க விடுங்க. ஓரு மாசத்திலே நெல்லியும் காய்க்கும், உங்களுக்கும் திருமணம் ஆகும். கிழக்குத் திசையிலிருந்து ஒரு பெண் வரதா ஆஞ்சநேயர் சொல்றார். உங்களுக்கு வரப் போற மனைவி பேரு நீலான்னும் சொல்றார்.”

    ஒரு வருஷம் ஆகிவி்ட்டது. எலுமிச்சம்பழம் காய்ந்து சுருங்கி வாசலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நெல்லியும் காய்க்கவில்லை, நீலாவும் வரவில்லை.

    அண்ணன்மார்களின் கதி தான் தனக்கும் என்ற முடிவுக்கு வந்து விட்டான். ஆனால் அவன் தாய் அவனுக்கு நம்பிக்கை ஊட்டினார், “உனக்குன்னு ஒருத்தி இனிமேலா பிறக்கப் போகிறாள்? எங்கேயோ இருக்கிறாள், வரத் தான் போகிறாள்” என்று.

    அவனும் கிழக்கிலிருந்து வரும் ரயில்கள் பஸ்களில் எல்லாம் நீலா வந்து இறங்குகிறாளா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏதேனும் நிழல் அசைந்தால் அது நீலாவாக இருக்கக் கூடுமோ என்று பரபரக்கிறான். நிலவைக் கண்டால் என் நீலாவின் முகம் இப்படித் தான் இருக்குமோ என்று மயங்கி நிற்கிறான்.

    நீங்கள் யாராவது நீலாவைப் பார்த்தால் விரைவில் இந்த மஜ்னுவை வந்து சந்திக்கச் சொல்லி அனுப்புங்கள்.

    Share
  • சம்பத்து – கிம்பத்து

    சு. ​கோதண்டராமன்

          “உனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கா, கிம்பத்து? நாம ஃபோர்த் ஃபார்ம் படிக்கும்போது ஒரு நாளைக்கு எங்க ஸான்ஸ்கிரிட் வாத்யார் வழக்கம் போல மேஜை மேலே சாய்ஞ்சு தூங்கிண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து, கல்வி அதிகாரி வரார். நாங்க ஜன்னல் வழியாப் பாத்துட்டு, சார், சார், டிஈஓ வரார் சார் என்று எழுப்பினோம். மனுஷன் பதட்டமே படாமல், தஸ்மாத் னு சொல்லிண்டே நிமிர்ந்தார். இவர் நிமிர்றதுக்கும் டிஈஓ உள்ளே நுழையறதுக்கும் சரியா இருந்தது.

          “என்னங்காணும் என்னைப் பாத்த உடனே தஸ்மாத்துங்கிறீர். வெய்யறீரா, என்ன அர்த்தம் தஸ்மாத்துன்னான்னு கேட்டார் அதிகாரி.

          “தஸ்மாத் னா அதனாலேன்னு அர்த்தம்னார் இவர்.

          “அதனாலேன்னா இதுக்கு முன்னாடி ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தீர்னு ஆகுதே. நீங்க மேஜையிலே குப்புறப் படுத்துத் தூங்கினதைப் பார்த்தேனேன்னார் அவர்.

          “கும்பகர்ண ஏவம் நித்ராயாம் மக்னஹன்னு முதல்லே சொன்னேன். நீங்க அதை விட்டுட்டு தஸ்மாத்தை மட்டும் புடிச்சிண்டிருக்கேளேன்னார் இவர்.

          “அதுக்கு என்ன ஓய் அர்த்தம்னார் அவர்.

          “இப்படியாகக் கும்பகர்ணன் தூக்கத்திலே ஆழ்ந்திருந்தான்னு அர்த்தம்.

          “தத்ரூபமா நடிச்சுக் காட்டறீரோ, சரி, சரி போம்ன்னுட்டார் வந்தவர்.”

          “இதைக் கேளு சம்பத்து, அதே வருஷம் எங்க தமிழ் வகுப்பிலே நடந்ததைக் கேளு. தமிழ் ஐயா இலக்கண வகுப்பு நடத்திண்டிருந்தார். எனக்குத் தூக்கம் சொக்கித்து. ஐயா என்னை எழுப்பி, கிம்பத்து எழுந்திரு. நான் சொன்னது காதிலே விழுந்ததான்னார்.

          “நன்னா விழுந்தது ஐயான்னேன்.

          “தேமாங்கா, புளிமாங்கான்னா என்னன்னு விளக்கம் சொல்லு பார்ப்போம்னார்.

          “புளி மாங்காய்ங்கிறது ஆவக்காய் ஊறுகாய். தே மாங்காங்கிறது தேனிலே ஊறப்போட்டு முரப்பா பண்றதுன்னேன். பெஞ்சி மேலே ஏறுடான்னார். நான் ஏறினேன். நாலு பக்கத்து ஜன்னல் வழியாவும் பார்த்துட்டேன் ஐயா. எந்த மரத்திலேயும் மாங்கா இல்லேன்னேன். எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சப்பறம் எனக்கு முழிப்பு வந்தது.”

          கிழவர்கள் இருவரும் சிரித்து மகிழ்ந்தார்கள்.

          “என்னவோ கிம்பத்து, பார்க்கிலே வந்து உன்னோட பேசிண்டிருக்கிற ஒரு மணி நேரம் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. வீட்டிலே அந்தக் கிழவி படுத்தற பாடு தாங்கல்லே. சித்த நாழி ஒக்கார விடமாட்டா. ரேஷன் கடைக்குப் போ, எலக்ட்ரிக் பில் கட்டு, பால் கார்டு வாங்கிண்டு வான்னு வெரட்டிண்டே இருக்கா.”

          “சேலை இல்லேன்னு சின்னாயி கிட்டப் போனாளாம். அவ ஈச்சம்பாயைக் கட்டிண்டு எதிர்க்க வந்தாளாம்கிற கதையா இருக்கு. எங்காத்துக் கதையும் ஒண்ணும் கொறச்சல் இல்லே. என் பேத்தி இருக்கே மகா ராட்சசி. அப்படியே அச்சு அவதாரம் பாட்டி. சித்த நாழி உக்கார விடாது. தூக்கிண்டு அங்கே போ, இங்கே போன்னு வெரட்டிண்டே இருக்கு. குழந்தையைப் பெத்தவா ஜாலியா ஆபீசுக்குப் போயிடறா. என் ஆம்படையாளான்னா எனக்கு அடுப்பங்கரையிலே வேலை இருக்கு, சித்த குழந்தையைப் பாத்துக்கப்படாதான்னு வெரட்டறா. மத்தியானம் ஆச்சுன்னா, நான் டீவிலே சீரியல் பாக்கணும், குழந்தையைத் தூங்கப் பண்ணுங்கோன்னு உத்திரவு. அதுவானா தூளிலே படுத்துண்டு கை விடாம ஆட்டிண்டே இருங்கறது. சித்த கண்ணை அசந்தா அலறி ஊரைக் கூட்டறது குட்டிப் பிசாசு. எங்கேயாவது போய் ஒரு வாரம் நிம்மதியா இருந்துட்டு வரலாம் போல இருக்கு. நம்ம அருமை அவாளுக்கும் அப்பத் தான் புரியும்.”

          “எனக்கும் அப்படித்தாண்டா இருக்கு. திருப்பதிலே வாலண்டியர் வேணும்னு பேப்பர்லே போட்டிருக்கான். ஒரு வாரம் தான் வேலையாம். போய்ட்டு வரலாமா?”

          “சரி, போகலாம். விசாரிச்சுப் பாரு.”

          *     *     *     *     *

          “ஹலோ, திருப்பதிக்கு வாலண்டியர் வேணும்னு கேட்டிருக்கேளே, நானும் என் சினேகிதரும் வரலாம்னு இருக்கோம்.”

          “என்ன வயசாறது?”

          “ரெண்டு பேருமே அறுபத்தஞ்சு தான்.”

          “உடம்பிலே எந்த வியாதியும் இல்லியே?”

          “சுகர் பிரஷர் எதுவும் இல்லே. அம்மா பிசைஞ்சு போட்ட பழையது மகிமை. கல்லுக்குண்டு மாதிரி இருக்கோம்.”

          “சரி. பேரைச் சொல்லுங்க.”

          “என் பேரு சம்பத்து. என் சினேகிதர் பேரு கிம்பத்து.”

          “அது என்ன பேரு, வடக்கத்திக்காரரா?”

          “இல்லே. நம்மூர் தான். கிருஷ்ணசாமின்னு பேரு. சின்ன வயசிலேருந்து ஒண்ணாப் படிச்சோம். எப்போதும் ரெண்டு பேரும் சேர்ந்தே இருப்போம். அதனாலே மத்த பசங்கள்ளாம் சம்பத்து- கிம்பத்துன்னு பேரு வெச்சுட்டா. அதுவே நிலைச்சுப் போச்சு.”

          “சரி, இன்னிக்கு ராத்திரி 9 மணிக்கு வேன் புறப்படறது. சத்திய நாராயணர் கோவிலுக்கு வந்துடுங்க.”

          *     *     *     *     *     *

          “ஏண்டா வயசைக் கொறைச்சுச் சொன்னே?”

          “எழுபதுன்னு உண்மையான வயசைச் சொன்னா சேத்துக்க மாட்டா. கவலைப் படாதே. பர்த் சர்ட்டிபிகேட் எல்லாம் கேக்க மாட்டா.”

          *     *     *     *     *     *     *

          “உனக்கு எங்கேடா ட்யூட்டி கிம்பத்? உன்னோடே சேத்துப் போடுன்னேன். கேக்க மாட்டேன்னுட்டார் அந்த சூபர்வைசர். எங்கே வேகன்சி இருக்கோ அங்கே தான் போடுவாராம். வைகுண்டம் க்யூவிலே வரவாளை ரெகுலேட் பண்ணுன்னுட்டார். நாள் பூரா நின்னு நின்னு காலை வலிக்கறதுடா.”

          “எனக்கு செருப்பு பாத்துக்கற வேலை. ஒரு புள்ளையாண்டான் கம்ப்யூட்டரை வெச்சிண்டு ஒக்காந்திருந்தான். நான் வரவா பாதுகை எல்லாம் வாங்கி ராக்கிலே வெச்சுட்டு அந்தப் பொந்து நம்பரைச் சொன்னா அவன் ரசீது அடிச்சுக் குடுப்பான். நாள் பூரா குனிஞ்சு நிமிந்து பெண்டு கயண்டு போச்சுடா. நாளைக்கி நாம இதிலேருந்து கயண்டுட வேண்டியது தான். என்ன சொல்றே?”

          “பண்டரிபுரம் போறோம், ஒரு வாரம் ஆகும்னு சொல்லிட்டு வந்திருக்கோம், நினைவு இருக்கா. இப்ப போய் நின்னா, என்ன ஏதுன்னு ஆயிரம் கேள்வி வரும். பேசாம கீழ்த் திருப்பதிக்குப் போயி ஒரு லாட்ஜிலே தங்கிட்டு சொன்ன தேதிக்கு வீட்டுக்குப் போயிடலாம்.”

          “சரிடா.”

                    *              *              *              *              *              *              *

          “என்னடா இது, இந்த லாட்ஜிலே மேனேஜர்லேருந்து ரூம் பாய் வரைக்கும் நம்மையே சுத்தி சுத்தி வரான். ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை கதவைத் தட்டறான். நிம்மதியா இருக்க விடமாட்டானுக போல இருக்கே.”

          “நம்மைத் தீவிரவாதின்னு சந்தேகப்படறாண்டா. நான் வெத்திலை வாங்கக் கீழே போனப்ப, அவா தெலுங்கிலே பேசிண்டிருந்தது காதிலே விழுந்தது. இளம் தம்பதிகளா வருவா, வயசான தம்பதிகளா வருவா, இள வயசுக்காரா ரெண்டு பேர் சினேகிதாளா வருவா. ரெண்டு கிழவாளா இதுவரைக்கும் வந்ததில்லே. தீவிர வாதிகள் தான் சந்தேகம் வராம இருக்கணும்னு கிழவாளைப் புடிச்சு அனுப்பி இருக்கான்னு பேசிண்டிருந்தா.”

          “சரி. இந்த எடம் சரிப்படாது. எனக்குத் தெரிஞ்சவர் ஒத்தர் முதியோர் இல்லம் நடத்தறார். அவர் கிட்டே கேக்கறேன், பேயிங் கெஸ்டா ஒரு அஞ்சு நாளைக்கு இருக்கலாமான்னு.”

          “சரி. உடனே கேளு.”

          *     *     *     *     *     *     *

          “என்னவோ தெரிஞ்சவர்னு சொன்னியேன்னு பாத்தேன். செமத்தியா வேலை வாங்கறார்டா. இங்கே பணம் குடுத்தவா, குடுக்காதவா, பர்மனெண்டா இருக்கறவா, டெம்பரரியா இருக்கறவா எல்லாரும் சமம். நமக்கு நாமேங்கிறார். பெஞ்சைத் துடை, எலையை எடுத்துப் போடு, தண்ணியை எடுத்து வைன்னு வெரட்டிண்டே இருக்கார்டா.”

          “வேலை கூடச் செஞ்சுடலாம் போல இருக்கு. மத்தக் கிழங்கள்லாம் பேசற பேச்சு புடிக்கல்லே. உங்க பையன் வெளிநாட்டிலே இருக்கானாங்கிறது ஒண்ணு. புள்ளே மாட்டுப் பொண்ணு வீட்டை விட்டு வெரட்டிட்டாளான்னு கேக்கறது இன்னொண்ணு. இவாளுக்குப் பதில் சொல்ல முடியல்லே.”

          “சும்மாத் தான் நாலு நாளைக்கு வந்திருக்கோம்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறா. குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்டுண்டே இருக்கா. பகல்லேயும் தூங்க முடியல்லே. ராத்திரிலேயும் கொசுக்கடி தூங்க முடியல்லே. நாளைக்குக் காலம்பற ஊரைப் பார்க்க போய்ச் சேர்நதுடுவோமா?”

          “அது தான் சரி. கஷ்டமோ, நஷ்டமோ நம்ம வீடு தான் நமக்கு சொர்க்கம்.”

    Share
  • ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ ! -4

     சு.கோதண்டராமன்

           இனி, பாட்டின் கருத்தை வேதாந்தமாக விரித்துரைக்க முடியுமா என்று பார்ப்போம். நாத உபாசனை என்ற பெயரில் இசை மூலம் இறைவனை வழிபடும் முறை நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இசையில் பாரதிக்கு இருந்த ஆர்வமும் ஞானமும் மிகுதி. அவருடைய பாடல்களில் பல பாடுவதற்கென்றே இயற்றப்பட்டவை. வந்தே மாதரம் என்ற பங்கிம் சந்திரரின் பாடலை முதலில் அகவல் பாவாக மொழிபெயர்த்த பாரதி, அது பாடுவதற்கு ஏற்றதாக இல்லை என உணர்ந்து மீண்டும் ஒரு முறை சந்தங்களுடன் தான் அதை மொழிபெயர்த்ததைக் கூறுகிறார். அவர் இசை வல்லுநராகவும் இருந்ததால் பொருளுக்கேற்ற சந்தமும் பண்ணும் அமைத்துப் பாட முடிந்தது. அவருடைய கட்டுரை ஒன்றில் அக்காலத்தில் தமிழ் நாட்டு இசை முறைகளைப்பற்றி விரிவான விமரிசனங்கள் செய்து அதை எத்திசையில் வளர்க்க வேண்டும் என்பதற்கான குறிப்புகளும் தந்துள்ளார்.

           குயிற் பாட்டு ஒரு உருவகம். இதில் இறைவன் குயிலாக உருவகப் படுத்தப் பட்டுள்ளான். ஏன் குயில்? உயிரினங்களிலே மனிதர் தவிர, பறவைகள் மட்டுமே இசை போன்ற இனிய ஓசை எழுப்பக் கூடியவை. பறவைகளுக்குள்ளே இனிய குரல் உடையது குயில். ஏழிசையாய் இசைப் பயனாய் விளங்கும் இறைவனைப் பாரதி குயிலாக உருவகித்தது பொருத்தமே.

           கதையில் வரும் கவிஞர் மானிடச் சாதியின் பிரதிநிதியாகவும், குரங்கும் மாடும் பிற உயிரினங்களைக் காட்டுவதாகவும் விளங்குகின்றனர். இறைவனின் வாயிலிருந்து நெஞ்சைக் கவரும் இனிய இசை தோன்றுகிறது. அந்த இசையின் பொருள் என்ன? வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடும் புதுவை அல்லவா? அங்கு குயில் பாட்டிலும் பாரதிக்கு வேதப் பொருளே புலப்படுகிறது.

           குயிலின் இசையில் மெய்மறந்து அதன் மேல் காதல் கொண்டு இறுதியில் அதனுடனேயே ஒன்றி விடுவதாக அமைந்த இக்கதை, இசையின் மூலம் தன்னை மறந்து, உலகை மறந்து இறைவனுடன் கலக்கும் முறையை விளக்க வந்ததே குயில் பாட்டின் வேதாந்தப் பொருளென்று காட்டுகிறது.

           குயிலின் முற்பிறப்புக் கதையை அறிவதற்கு முன், குயில் மாட்டுடனும குரங்குடனும் அன்புடன் பேசுவது பிடிக்காமல் கவிஞர் அதைக் கொல்லக் கருதுகிறார். இது இறைவனைப் பற்றி நன்கு அறியாதவர் இறைவனை நிந்திப்பதைக் காட்டுகிறது.

           தேவார திருவாசக ஆசிரியர்களும் ஆழ்வார்களும் இறைவனைக் காதலனாகக் கற்பித்துப் பாடியுள்ளனர். நாயக நாயகி பாவம் எனப்படும் இம்முறையில் பண்டைப் புலவர் எல்லோரும் தன்னைப் பெண்ணாகக் கருதிக்கொண்டு இறைவன் ஆகிய ஆண் மேல் காதல் கொள்வதாகப் பாடியுள்ளனர்.  பெண் சமத்துவம் பேண வந்த பாரதி, கண்ணன் என் காதலன் என்றும் பாடினார், கண்ணம்மா என் காதலி என்றும் பாடினார். இந்தக் குயில் பாட்டில் இறைவனைப் பெண் குயிலாகக் காட்டி, பெண்மை தான் தெய்விகமாம் காட்சியடா என்றும் கூறிப் பெண்மைக்குச் சிறப்புச் சேர்க்கிறார்.

           இறைவனை அடையும் வழியில் நான்கு படிநிலைகள் உண்டு. சாலோகம்- இறைவனின் இருப்பிடத்தை அடைதல்

    சாமீப்யம்- இறைவனின் அருகாமையை அடைதல்

    சாரூபம்- இறைவனைப் போன்ற உருவம் பெறுதல்

    சாயுச்யம்- இறைவனோடு இரண்டறக் கலத்தல்

           இந்த நான்கு நிலைகளையும் குயில் பாட்டில் காண முடிகிறது. குயில் வாழும் மாஞ்சோலையைக் கவிஞர் சென்றடைதல் சாலோகம் ஆகும்.

           முதல் சந்திப்பில் மரத்தருகே போய் நின்று பேடே திரவியமே என்று கவிஞர் பேசத் தொடங்குவதும், அடுத்த சந்திப்பில்

    காதலருள் புரிவீர், காதலில்லை யென்றிடிலோ

    சாதலருளித் தமது கையால் கொன்றிடுவீர்

    என்று குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண்

    என்பதுவும் படிப்படியான சாமீப்யம் ஆகும்.

           துவக்கத்தில் மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ என்று கவிஞர் ஏங்குகிறார். கதை முடிவில்

    அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு
    முன்புவைத்து நோக்கிபின் மூண்டுவரும் இன்பவெறி
    கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை

    விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா!
    ஆசைக் கடலின் அமுதமடா! அற்புதத்தின்
    தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!
    பெண்ணொருத்தி அங்குநின்றாள்;

    என்று சொல்லும்போது இறைவன் மானிட உருவம் தரித்து கவிஞருடன் சாரூபம் அடைந்ததையும் காண்கிறோம். பக்தன் தன்னைத் தேடி வரும் வரை காத்திராமல் ‘தானே வந்தெம்மை  தலையளித்தாட் கொண்டருளும்’ இறைவனின் எளிவந்த கருணைத் திறம் இதில் காட்டப்படுகிறது.

    பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண் டாங்ஙனே
    நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே
    முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்
    சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்தேன்

    என்று அவர் சொல்லும்போது சாயுஜ்ய –இரண்டறக் கலக்கும்- நிலைக்கு முந்திய படியில் அவர் இருப்பதையும் அதன் விளைவான ஆனந்தத்தை அவர் அனுபவித்ததையும் அறிகிறோம்.

    Share
  • ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ ! -3

     சு.கோதண்டராமன்

     

    இசையின் பெருமை

           குக்குக்கூ என்று குயில் பாடிய பாடலில் கவிஞருக்குத் தொக்க பொருளெல்லாம் தோன்றியதாம். அதன் உள்ளுறையை ஆராய்வோம்.

    காதல், காதல், காதல், .

    காதல் போயிற் காதல் போயிற்

    சாதல், சாதல், சாதல்.

           இது பல்லவி. இவ்வாறே மேலும்  ஒன்பது கண்ணிகள். ஒவ்வொன்றிலும் ஒரு பொருளும் அதன் எதிர்ப் பொருளும் கூறப்பட்டுள்ளன. அருள், இன்பம், நாதம், தாளம், பணம், புகழ், உறுதி, கூடல், குழல் என இவை அமைந்திருக்கும் வரிசை அமைப்பைப் பார்த்தால் அதில் ஒரு செய்தி புலப்படுகிறது.

    காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
    கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
    காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
    கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
    ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!
    அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
    காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
    கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

    என்று, பாரதி வேறு ஒரு இடத்தில் கூறியதே குயில் பாட்டிலும் வலியுறுத்தப் படுகிறது. இங்கு காதல் என்ற சொல் இரு பால் இளைஞரிடையே உடற் கவர்ச்சி காரணமாகத் தோன்றும் உணர்ச்சியைக் குறிக்கவில்லை. மாறாக, உள்ளத்தில் ஊறி உயிர் கலந்து நிற்கும் அன்பைக் குறிக்கிறது.

    வயது முற்றிய பின்னுறு காதலே

    மாசுடைத்தது, தெய்விகமன்று காண்

    இயலு புன்மை உடலுக்கின்பெனும்

    எண்ணமும் சிறிதேன்றதக் காதலால்

    என்று அவர் கூறுவதால் உடலின்பம் கலவாத காதலே தெய்விகமானது என்பது அவரது கருத்து என அறிகிறோம்.

                   ஸரஸ்வதி காதல், லட்சுமி காதல், காளி காதல் என்று தெய்வங்களின் மீதும் காதல் கொண்டவர் பாரதி. இத்தகைய அன்பின் விளைவு இறை அருளும் வாழ்வில் இன்பம். அந்த இன்பமும் எல்லை கடவாததாக  இருக்க வேண்டும். எல்லை மீறினால் துன்பம் ஏற்படும்.

           வாழ்வில் இன்பம் தரும் பொருள்களிலே தலையாயது இசை. நாதம் பண்ணோடும் தாளத்தோடும் கலந்து வரும்போது அது இசையாகி இன்பம் தருகிறது. அது காதலின் இணை பிரியாத அங்கமாக அமைகிறது. பாட்டுக் கலந்திடவே ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்று பாரதி மற்றொரு இடத்தில் பாடுகிறார்.

           மனிதன் வெறுமனே இசை கேட்டுக் கொண்டு பொழுதைப் போக்கக் கூடாது. அவன் புரையற்ற புகழ் தரும் செயல்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.  அதற்குத் தேவையான மன உறுதியையும் உடல் உறுதியையும் அவன் இறைவனிடம் வேண்டிப் பெறல் வேண்டும். மனதிலுறுதி வேண்டும் காரியத்திலுறுதி வேண்டும்  என்று பெரிய கடவுளை வேண்டுகிறார் அவர்.

           இத்தகைய  உறுதியுடன் புகழ் தரும் செயல்களைச் செய்துகொண்டு இசை நாட்டம் கொண்ட ஒருவன் அந்த இசை மூலம் இறைவனுடன் கூட வேண்டும்.

           காதலில் ஆரம்பித்து குயிலின் பாட்டு குழலில் அதாவது இசையில் முடிவது, வெளித் தோற்றத்தில் அது ஒரு காதல் கதையாக இருந்த போதிலும் அதன் ஆத்மா இசையே என்பதைச் சூசகமாகத் தெரிவிக்கிறது.

           இசையில் மயங்காத உயிரினம் இல்லை என்பதைக் குரங்கும் மாடும் குயிலின் பாட்டால் கவரப்பட்டு அதைக் காதலித்ததைக் கொண்டு அறிய முடிகிறது.  ஆனால் இசையை எழுப்பக் கூடிய திறமை மனிதர்க்கு மட்டுமே உண்டு. எனவே இறைவன் மற்ற உயிர்களிடம் பரிவு காட்டிய போதிலும் மனிதனிடம் சிறப்பான காதல் கொள்கிறான். இசை இறைவனையும் மனிதனையும் இணைக்கிறது.

           இசையின் காரணமாகத் தான் அவருக்குக் குயிலின் மேல் காதல் ஏற்பட்டது. துவக்கத்தில் தானும் குயிலாக மாறிவிட மாட்டோமா என்று ஏங்குகிறார்.  இறுதியில் குயில் மானிடப் பெண்ணாக மாறியதாக முடித்து மானிடர்க்கு இசையின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். கதை முழுவதுமே இசையின் பெருமை கூறுவது தான் என்றாலும் இசையின் சிறப்புகளைக் கூறும் வரிகளை மட்டும் பார்ப்போம்.

                    குயில் பாடிய பாட்டினால் அந்தச் சூழலில் ஏற்பட்ட விளைவுகள் என்ன? வர்ணிக்கிறார், கேட்போம்.

    ஆண்குயில்கள் மேனி புளகமுற,
    ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
    சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்

    காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
    இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
    மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
    வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
    இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல்,

    இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தை

           அது ஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையதாக உள்ளதாம்.

                    இசை என்பது மேடையில் பாடப்படுவது மட்டுமல்ல. அது அருவி நீர் முதலான எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது. அதைக் கூர்ந்து கேட்கும் அறிவு இருந்தால் தான் அதை ரசிக்க முடியும். உலகில் எங்கெங்கெல்லாம் இசை காணப்படுகிறது என்று பட்டியலிடுகிறார் பாரதி.

    கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
    காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
    ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்,

    நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
    ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
    மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
    ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
    ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங்

    கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
    சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
    பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
    வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
    கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்,

    வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
    வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
    நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
    பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.

           குயிலின் பாட்டுக்குக் கவிஞர் மட்டும் வசமாகவில்லை, குரங்கும் அடிமைப்பட்டதைக் காண்கிறோம்

    ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே: –
    காட்டின் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
    பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
    வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
    முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே

    தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
    ”ஆவி யுருகுதடி, ஆஹா ஹா” என்பதுவும்,
    கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்
    மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும்
    ”ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே!

    பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்,
    காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
    காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்,
    எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்,
    இப்போதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்”

           இறைவன் படைப்பில் பாட்டினைப் போல் ஆச்சரியமானது எதுவும் இல்லை.  அது உவமை இல்லாத இன்பம் தருவது, உலகையே மறக்க வைப்பது.

    பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்;
    கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்!
    தன்னை யறியேன்; தனைப்போல் எருதறியேன்;
    பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே
    கண்டேன், படைப்புக் கடவுளே! நான் முகனே!

    பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார்.
    நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்
    நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்.
    காற்றை முன்னே ஊதினாய் காணரிய வானவெளி
    தோற்றுவித்தாய், நின்றன், தொழில்வலிமை யாரறிவார்?

    உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
    கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி
    வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
    எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;
    எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப்

    பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ!
    காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்;
    ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து
    தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்!
    சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய், நான்முகனே!

    சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்!
    ஞாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்?
    ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
    கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா!
    காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில்,

    பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
    பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
    நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ?
    ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
    ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!

           மானிடப் பெண்ணாக மாறிய குயிலியின் உடல் அழகு, கவிதை  பண் கூத்து இவற்றின் சாரத்தோடு இன்னமுதைக் கலந்து செய்தது என்று சொல்லி இசையை அமுதத்திற்கு இணையாக ஆக்கிக் கதையை முடிக்கிறார் கவிஞர்..

                       ………….கவிதைக் கனிபிழிந்த
    சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
    ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான்கலந்து,
    காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்

    மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.

     

     

    Share
  • ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ !-2


    சு.கோதண்டராமன்

     

    இனி, கதையில் வெளிப்படையாகத் தெரியும் முக்கியக் கருத்துகளைக் கவனிப்போம்.

    பெண்மையின் தெய்விகம்

           பாரதி பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்று போற்றியவர் என்பதை நாம் அறிவோம். எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை என்று கும்மி அடித்தவர். நாணும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம் என்று பெண்களைத் திரை மறைவு அடிமைத் தளையிலிருந்து விடுவித்தவர். தெய்வத்தின் பல் வேறு வடிவங்களை அவர் பாடினாலும், தெய்வத்தின் பெண் வடிவத்தையே சக்தி என்னும் பெயரால் பெரிதும் போற்றினார். சந்திரிகையின் கதை பெண் விடுதலையையே மையக் கருத்தாகக் கொண்டது. அவருடைய பிற கதைகளிலும் பெண்மையின் உயர்வு பேசப்படுகிறது. அவருடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் பெரும்பாலும் பெண் குழந்தைகளே இடம் பெறுகிறார்கள். ஆண் குழந்தைகளை அவர் கதாபாத்திரமாகப் பயன்படுத்தியது மிக அரிதாகவே. கண்ணனைப் பல வடிவங்களில் பாடிய அவர் குழந்தையாகக் கற்பனை செய்யும் போது கண்ணம்மா என்ற பெண் குழந்தையாகவே வடிக்கிறார்.  இந்தப் பாட்டிலும் அவர் பெண்மையின் தெய்விகத் தன்மையைப் போற்றுவதையே முக்கியக் கருத்தாகக் கொண்டிருந்தார் என்பது இசையால் இவரைக் கவர்ந்த குயில் மானிட வடிவம் பெற்ற போது, பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!  என்று அவர் வியப்பதிலிருந்து தெரிகிறது.

    காதலின் உயர்வு

           சின்னக் குயிலியைக் கேட்காமல் அவளுடைய தந்தை அவளை நெட்டைக் குரங்கனுக்கு மணம் முடிக்க நிச்சயிக்கிறான். அவளுடைய இரக்க சுபாவத்தைப் பயன்படுத்தி, மாமன் மகன் மாடன் தன்னை மணக்குமாறு வற்புறுத்துகிறான். மனம் அவனிடம் ஈடுபடாவிட்டாலும் அவள் கருணையினால் அவனை மணக்கச் சம்மதிக்கிறாள். (நம் சமுதாயத்தில் பெண்ணின் இயல்பான நாட்டம் பற்றிக் கவலைப்படாமல் வேறு பல காரணங்களுக்காக அவளது மண வாழ்வைப் பலி ஆக்குவது இங்குக் காட்டப்படுகிறது.) சேர இளவரசனிடம் மட்டுமே அவளுக்கு உண்மையான காதல் ஏற்படுகிறது. அது அந்தப் பிறவியில் நிறைவேறாவிட்டாலும் அடுத்த பிறவியிலாவது நிறைவேறுவது குறித்து நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. காதல் செய்வீர் உலகத்தீரே; அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம் என்று அவர் காதலை உயர்த்துவது இங்கும் எதிரொலிக்கிறது.

    கற்பின் மாட்சி

           கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் இருக்க வேண்டிய பண்பு என்று கருதப்பட்டு வந்த காலத்தில், கற்பு நிலை என்று சொல்ல வந்தார் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்று துணிந்து கூறியவர் பாரதி. ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தான் காதலின் இன்பம். அவ்வாறின்றி, பல பெண்களை ஒரு ஆடவன் மணப்பதால் பெண் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுகிறாள். சமத்துவம் இல்லாவிடில் அது காதல் அல்ல. சமூகத்தில் நிலவி வரும் பல தார மணத்தைக் கண்டித்துப் புதுமைப் பெண்ணான சின்னக்குயிலி இளவரசனிடம் பேசும் வீர உரை இது.

    ”ஐயனே! உங்கள் அரண்மனையில் ஐந்நூறு
    தையலருண் டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்;
    கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்;
    அன்னவரைச் சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்,
    மன்னவரே வேண்டேன், மலைக்குறவர் தம்மகள்யான்;

    கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ ?

    வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்?

    பத்தினியா வாழ்வதல்லால் பார்வேந்தர் தாமெனினும்

    நத்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை,

    பொன்னடியைப் போற்றுகின்றேன், போய் வருவீர்

    பெண் குலப் பீழை

           மானிடர் போல் அல்லாமல், சுதந்தரமானது என்று நாம் கருதும் பறவைக் குலத்தில் பிறந்த போதிலும் குயிலின் காதல் அவ்வளவு எளிதாக நிறைவேறிவிடவில்லை. மாடனும் குரங்கனும் அவளைத் துரத்துகின்றனர். அபலைப் பெண் ஜன்மமான அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களைக் காதலிப்பதாக நடிக்க வேண்டியுள்ளது. அதை அவள் கவிஞரிடம் உரைக்கும் போது வேறொரு பாடலில் அவர் பாடிய,

    பெண்ணென்று பூமி தனில் பிறந்து விட்டால் மிகப்

    பீழை இருக்குதடி தங்கமே தங்கம்

    என்ற வரிகள் நம் நினைவுக்கு வருகின்றன.

    நகைச் சுவை

           சக்தியைச் சரணடைதல், நாட்டு விடுதலை, பெண் குல முன்னேற்றம், வேதநெறி தழைக்கச் செய்தல், பூமியிலே கிருத யுகத்தை நாட்டல் என்று பாரதி எடுத்துக் கொண்ட விஷயங்கள் யாவுமே கனமானவை. இத்தனை லட்சியங்களையும் சாதிக்கத் தனக்கு ஆயுள் போதாது என்ற உள்ளுணர்வால் உந்தப்பட்ட அவர் எப்பொழுதும் பக்தி, வீரம் ஆகிய உணர்ச்சிகளின் பிழம்பாக இருந்தார். எனவே அவருடைய படைப்புகளில், குறிப்பாகக் கவிதைகளில் நகைச்சுவையைக் காண முடிவதில்லை.

           ஆனால் பாரதி நகைச்சுவை உணர்வு இல்லாதவர் அல்லர். அவருடைய கவிதைகளில் இரண்டு இடத்தில் மட்டும் இது சற்றே தலை தூக்குகிறது. கண்ணன் என் சேவகன் என்ற பாடலில் சேவகரால் பட்ட தொல்லைகளை விவரிக்கும்போது,

    ஏனடா நீ நேற்று இங்கு வரவில்லை என்றால்

    பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார்

    பாட்டியார் செத்து விட்ட பன்னிரண்டாம் நாளென்பார்.

    வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்

    என்று சேவகர்கள் வழக்கமாகச் சொல்லும் பொய்களை நகைச்சுவையோடு சொல்வார்.

           அடுத்தது, குயில் பாட்டில் குயில் குரங்கினிடம் காதல் மொழிகள் பேசும்போது காணப்படுகிறது. குரங்கு இழிவான மிருகம் என்ற கருத்தை மாற்றி, குரங்கே மனிதரை விட மேலானது என்று சான்று காட்டிக் குயில் பேசும்போது நம்மை அறியாமல் நமக்குச் சிரிப்பு வருகிறது.

    பேடைக் குயிலிதனைப் பேசியது: – ”வானரரே!
    ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்
    எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
    தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?

    மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே,

    எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்,
    கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில
    வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
    மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்
    கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே
    வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ?

    ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்,
    பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
    எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
    மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம்

    ஆசை முகத்தினைப் போல் ஆக்க முயன்றிடினும்
    ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
    கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
    ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்,
    வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே

    வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
    ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?

    பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல்;
    வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
    தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ?

    சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் –
    வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?

    ஒளியைப் போற்றல்

           இறைவன் எல்லாமாக வியாபித்து நிற்பவன். வீசுறு காற்றில், நெருப்பில், வெளியில்  என்று எல்லா இடங்களிலும் இறைவன் வியாபித்து நின்றாலும் அவனை ஒளி வடிவாகவும் ஒலி வடிவாகவும் வணங்கும் வழக்கம் மிகப் பழமையானது.

    பண்ணில் இனிய பாடலோடு பாயும் ஒளியெலாம்

    பாரில் எம்மை உரிமைகொண்டு  பற்றி நிற்கவே

    …….

    வேண்டுமடி எப்போதும் விடுதலை

    என்ற  வரிகளிலிருந்து பாரதிக்கு அந்த இரண்டு வடிவங்களில் இருந்த சிறப்பான ஈடுபாடு தெரிகிறது. அந்த இரண்டு வடிவும் குயில் பாட்டின் அடிப்படைகளாக உள்ளன.

           முதலில், இறைவனின் ஒளி வடிவைக் காண்போம். பாரதிக்கு இயற்கை ஒளி மீது அளவற்ற ஆசை உண்டு. ஞாயிற்றின் ஒளி பற்றி அவர் பல பாடல்கள் பாடியுள்ளார். பல இடங்களில் இறைவனின் சோதி வடிவைப் போற்றுகிறார்.  எடுத்துக்காட்டாக, பாஞ்சாலி சபதத்தில் அவர் சூரிய உதயக் காட்சியை வர்ணிப்பதைக் காண்போம்.

    ‘பாரடியோ! வானத்திற் புதுமை யெல்லாம்,
    பண்மொழீ! கணந்தோறும் மாறி மாறி
    ஓரடிமற் றோரடியோ டொத்த லின்றி
    உவகையுற நவநவமாய்த் தோன்றுங் காட்சி
    யாரடிஇங் கிவைபோலப் புவியின் மீதே
    எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார்?
    சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
    செழுஞ்சோதி வனப்பையெலாம் சேரக் காண்பாய்.

    ‘கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
    கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
    கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
    கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?ஆங்கே,
    கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
    காளிபரா சக்தி அவள் களிக்குங் கோலம்
    கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
    கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.

    ‘அடிவானத் தேஅங்கு பரிதிக் கோளம்
    அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
    இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
    எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து,
    முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே
    மொய்குழலாய்,சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்!
    வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
    வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.
    **
    அமைதியொடு பார்த்திடுவாய் மின்னே! பின்னே
    அசைவுறுமோர் மின்செய்த வட்டு; முன்னே
    சமையுமொரு பச்சைநிற வட்டங் காண்பாய்.
    தரணியிலிங் கிதுபோலோர் பசுமை உண்டோ?
    இமைகுவிய மின்வட்டின் வயிரக் கால்கள்
    எண்ணில்லா திடையிடையே எழுதல் காண்பாய்;
    உமை கவிதை செய்கின்றாள், எழுந்து நின்றே
    உரைத்திடுவோம், ”பல்லாண்டு வாழ்க!” என்றே.

    ‘பார்; சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
    எத்தனை தீப்பட் டெரிவன? ஓகோ!
    என்னடி! இந்த வண்ணத் தியல்புகள்!
    எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
    தீயின் குழம்புகள்!- செழும்பொன் காய்ச்சி
    விட்ட ஓடைகள்!- வெம்மை தோன்றாமே
    எரிந்திடுந் தங்கத் தீவுகள்!- பாரடி!
    நீலப் பொய்கைகள்!-அடடா, நீல
    வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
    எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்,
    எத்தனை!- கரிய பெரும்பெரும் பூதம்!
    நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
    தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
    கருஞ்சிக ரங்கள்!- காணடி, ஆங்கு
    தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
    இருட்கடல்!-ஆஹா! எங்கு நோக்கிடினும்
    ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’

           இதற்கு விளக்கம் கொடுக்கையில் பாரதி குளக்கரைகளிற் போய் கருடன் பார்ப்பதென்றால் நம்மவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடுகிறார்கள். ஸூர்யாஸ்தமன காலத்தில் வானத்தில் தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன் கூடப் போகிறதில்லை என்று வருந்துகிறார். குயில் பாட்டில் ஒளியைப் போற்றுவதற்கென்று வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறார். கதையின் துவக்கமே சோதியையும் வேத ஒலியையும் கொண்டு மங்களகரமாக அமைந்துள்ளது.

    காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
    நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
    மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
    வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
    வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய

    செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
    மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,

           நடுவில் ஓரிடத்தில்

    சோலையிடை, செஞ்ஞாயிற் றொண்கதிரால்
    பச்சைமர மெல்லாம் பளபளென விளங்கும் காட்சியை வர்ணிக்கிறார்.

           கதை சொல்லிக் கொண்டு வரும்போதே பாதியில் ஒரு இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு ஒளியைப் புகழ்கிறார் பாரதி. இது கதைக்குச் சம்பந்தம் இல்லை எனினும் அவருக்கு ஒளியின் பால் இருந்த நாட்டம் காரணமாக, “குயிலின் வஞ்சகத்தால் மனமுடைந்து போனதால் மேற்கொண்டு கதை சொல்ல முடியாமல் போகவே, மன ஆறுதலுக்காக காலைக் கதிரழகை வர்ணிக்கிறேன்” என்று இதைக் கதையோடு தொடர்பு படுத்துகிறார்.

    வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
    மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்,

    …….

    மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம்,
    காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்.

    தங்க முருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி
    எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
    சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
    ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
    கண்ணையினி தென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி

    விண்ணை அளக்கும் ஒளி மேம்படுமோர் இன்பமன்றோ?

    மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
    மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்
    நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ?

    புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி

    மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து
    விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக்
    காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்.

    Share
  • ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ ! -1

     

    சு. கோதண்டராமன்

    பாரதியின் குயில் பாட்டு அவருடைய படைப்புகளில் தனித்தன்மை வாய்ந்தது. முதலாவதாக, இது செய்யுள் வடிவிலான கதைப் பாட்டு. பாரதி பல தலைப்புகளில் மரபுக் கவிதைகளும் வசன கவிதைகளும் எழுதியுள்ளார். பல கதைகளும் உரைநடை வடிவில் எழுதியுள்ளார். ஆனால் இது ஒன்று தான் பாடல் வடிவில் சொல்லப்பட்ட கதை.

    பாரதியின் ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி அல்லது சமூகத்திற்கான ஒரு செய்தி வெளிப்படையாகத் தெரியும். ஆனால் இக்கதையில் நீதிகளை வெளிப்படையாகத் தெரிவிக்காதது மட்டுமல்ல. முடிவில் ஒரு மர்மமான முடிச்சையும் வைத்திருக்கிறார்.

    சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும், 
    மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே 
    தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன். 
    ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும்,

    வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க 
    யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?

     

    எனவே ஏதோ செய்தி மறைந்துள்ளது என்று நமக்குத் தோன்றுகிறது. அது என்ன என்று அறிய, அந்தப் பாடலை முழுமையாகப் படிப்பதோடு மட்டுமல்லாமல் பாரதியின் மற்ற படைப்புகளையும் ஆழ்ந்து கற்க வேண்டும். ஏனெனில் நாம் சொல்ல இருக்கும் விளக்கம் நம் கற்பனையில் பிறந்ததாக இருக்கக் கூடாது. பாரதியின் பிற படைப்புகளில் காணப்படும் அவரது உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். இந்த அடிப்படையில் குயில் பாட்டில் மறைந்துள்ள செய்தியைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்வோம். முதலில் அந்தக் கதையைத் தெரிந்து கொள்வோம்.

    கவிஞர் ஒரு நாள் ஒரு மாந்தோப்பில் உலவிக் கொண்டிருந்தார். அங்கிருந்த குயில்களில் ஒன்று மட்டும் மற்றவற்றை விடச் சிறப்பாகப் பாடிக் கொண்டிருந்தது. கானத்தால் ஈர்க்கப்பட்டு அதன் மேல் காதல் கொண்டார் கவிஞர். தனக்கு ஏற்ற ஒரு காதலரைத் தேடிக் கொண்டிருந்த குயிலும் கவிஞருடன் இன் மொழிகள் பேசி, நான்காம் நாள் வருமாறு கேட்டுக் கொண்டது.

    காதல் நினைவால் பித்துப் பிடித்தவர் போல் ஆன கவிஞர், மறு நாளே தோப்பிற்குச் சென்றார். அங்கு அந்தக் குயில் ஒரு குரங்குடன் காதல் வார்த்தைகள் பேசிக் கொண்டிருப்பதை மறைவிலிருந்து காண்கிறார். வஞ்சகக் குயிலையும் குரங்கையும் கொல்லக் கருதி வாளை வீசுகிறார். அவை தப்பி விடுகின்றன.

    காதல் நினைவு வாட்டவே மறு நாளும் தோப்பிற்குச் செல்கிறார். அங்கு அந்த வஞ்சகக் குயில் ஒரு மாட்டுடன் காதல் செய்து கொண்டிருப்பதைக் கண்டு பதைக்கிறார். மாட்டைக் கொல்ல வாளை வீச, அது தப்பிவிடுகிறது.

    நான்காம் நாள் குயில் இவரை எதிர்பார்த்துக் காத்திருந்தது. கவிஞர் தான் கண்ட அதன் வஞ்சக நடத்தைகளைக் கூறி அதைக் கொல்லக் கருதுகிறார். குயிலோ தன் கதையை முழுவதும் கேட்டு விட்டுக் கொல்லுமாறு கெஞ்சுகிறது. குயில் தன் பூர்வ ஜன்மக் கதையைக் கூறுகிறது.

    வீர முருகனென்னும் வேடன் மகளாகச் சேர நாட்டில் ஓர் மலையில் பிறந்து சின்னக் குயிலி என்னும் பெயருடன் வளர்ந்தாள் அவள். அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய அவளை மணக்க விரும்பினான் அவளது மாமன் மகனான மாடன் என்பான். பொன்னை, மலரை, புதுத் தேனைக் கொண்டு வந்து நித்தம் கொடுத்து நினைவெல்லாம் அவளாக அவன் சித்தம் வருந்தியதால், அவள் மாலையிட வாக்களித்தாள்; மையலினால் இல்லை; அவன் சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாள்.

    இதை அறியாத அவளுடைய தந்தை அவளுக்கு நெட்டைக் குரங்கன் என்னும் இளைஞனைக் கணவனாக்க நிச்சயித்தான்.   இந்நிலையில் அவள் ஒரு இளவரசனைக் கண்டு காதல் கொள்கிறாள். அவனும் “நீயே துணை எனக்கு. நீயே குலதெய்வம். நின்னையன்றிப் பிற பெண்ணை  நினையேன். இப்பொழுதே நின் மனைக்குச் சென்றிடுவோம், நின் வீட்டிலுள்ளோர்பால் என் மனதைச் சொல்வேன். எனது நிலை உரைப்பேன், வேத நெறியில் விவாகம் உனைச் செய்து கொள்வேன்” என்று வலக் கைதட்டி வாக்களித்தான். பூரிப்புக் கொண்ட அவளை அவன் அணைத்து இதழ் பருகும் நேரத்தில் குரங்கனும் மாடனும் பார்த்துப் பதைபதைத்து இளவரசனை வாளால் வெட்டினர். அவனும் இவர்களைக் கொன்று தானும் வீழ்ந்து இறந்தான்.

    சின்னக் குயிலி குயிலாகப் பிறந்தாள். அவள் ஒரு முனிவரைச் சந்தித்த போது அவர் அவளது முற் பிறப்புக் கதையையும் கூறி வருங்காலத்தையும் உரைத்தார். மாடனும் குரங்கனும் பேயாகப் பிறந்து அவளைப் பின்தொடர்வார்கள் என்றும் அவளது நெஞ்சம் கவர்ந்த இளவரசன் தொண்டை நாட்டில் ஒரு மாந்தோப்பில் அவளது பாட்டால் கவரப்பட்டு அவளைச் சந்தித்து மணப்பான் என்றும் அவர் கூறினார்.

    முனிவர் கூறியபடியே, அவளுடைய முற்பிறப்புக் காதலனே கவிஞராக வந்துள்ளதைத் தான் உணர்ந்ததாக அவள் உரைக்க, கவிஞர் அக் குயிலை அணைத்து இன்பவெறி கொண்டு முத்தமிட்டார். கோகிலத்தைக் காணவில்லை. பெண்ணொருத்தி அங்கு நின்றாள்; பெண்ணவளைக் கண்டு பெருங்களி கொண்டார் அவர். இப்படி மகிழ்ச்சியாக முடிகிறது கதை.

     

    Share
  • நீத்தல் விண்ணப்பம்

     

    சு.கோதண்டராமன்

     

          திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி. இறையருள் பெற்ற அடியார் பலருண்டு, அவர்கள் பாடிய பனுவல்களும் பல உண்டு. இத்தனைக்கும் இல்லாத சிறப்பு திருவாசகத்திற்கு எப்படி வந்தது?

    எல்லா அடியார்களும் இறைவனைப் போற்றுவர். அவனது பேராற்றலைப் புகழ்வர். அவனது கருணையைப் பரவுவர். மணிவாசகரோ ஒவ்வொரு பாடலிலும் தன் சிறுமைகளை விரிவாகக் கூறி, இத்தனை தாழ்ந்த எனக்கும் அருள் புரிந்தாயே என்று வியக்கும் போது, இறைவனின் கருணையின் பெருமை மிகுதிப்படுகிறது. தன் சீவபோதம் ஒடுங்கும் வகையில் மாணிக்க வாசகர் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்ளும் சிறுமைகள் மானிட குலம் முழுமைக்கும் பொருத்தமானதாக உள்ளன. நம் சார்பில் அவர் பேசுவதாகவே தோன்றுகிறது.

    வாழ்க்கையில் தவறு செய்யாதவர் நம்மில் யார்? நாம் தவறு செய்து விட்டோம், நமக்கு உய்யும் வழி இல்லை என்று விரக்தி அடைந்த நிலையில் இருப்போர்க்கு, ‘எந்த நிலையிலும் மனம் திருந்தி இறை நாட்டம் கொண்டால் அவன் நம்மைக் கடைத்தேற்றக் காத்து இருக்கும் கருணை வள்ளலாக விளங்குகிறான்’ என்ற ஆறுதல் ஏற்பட்டு, திருவாசகம் படிக்கும் பொழுது வெளிப்படும் கண்ணீரில், செய்த பாவங்கள் கரைந்து மனம் பக்குவப்படுவது பலருடைய அனுபவம்.

    இப்படிப்பட்ட திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியிலிருந்து சில முத்துகளைச் சுவைப்போம், வாருங்கள்.

    பெயர் நீத்தல் விண்ணப்பம் என்று இருந்தாலும் அதில் கூறப்பட்ட விஷயம்- இறைவன் தன்னை விட்டு நீங்காது இருக்க வேண்டும் என்ற விண்ணப்பம் தான். அனைத்துப் பாடல்களிலும் வரும் ஒரு பொதுவான தொடர், விட்டிடுதி கண்டாய் என்பது. ‘என்னை விட்டு விடாதே’ என்பது பொருள்.

    நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டது. அந்தாதி முறையில் அமைந்தது. இதன் முதல் பாட்டின் முதல் சொல் ‘கடையவன்’ என்பது. அந்தாதி இலக்கணப்படி, கடைசிப் பாட்டின் கடைசிச் சொல்லும் இதுவே. முதலில் உள்ள ‘கடையவன்’ என்ற சொல்லைக் ‘கீழ்த்தரமானவன்’ என்ற பொருளில் தன்னைக் குறிக்குமாறும், கடைசியில் உள்ள ‘கடையவன்’ என்ற சொல்லைக் ‘கடைசித் தொழிலான சம்காரம் செய்பவன்’ என்ற பொருளில் சிவனைக் குறிப்பதாகவும் அமைந்துள்ளது.

    தத்துவரீதியாகப் பார்க்குமிடத்து, வாழ்க்கையை மும்மலங்களுடன் துவக்கும் சீவன் படிப்படியாகச் சீவபோதம் நீங்கி இறுதியில் சிவபோதம் அடைவதை இது குறிக்கிறது.

    மணிவாசகர் கூறுகிறார், “நான் கடையவன். காமத்தின் வசப்பட்டுக் கடவுளை மறந்தவன். ஆற்றங்கரையில் உள்ள மரத்தின் வேரடி மண், ஓடும் நீரால் அரிக்கப்பட்ட நிலையில் அந்த மரம் பார்வைக்கு நேராக நின்றாலும் எந்த நேரத்திலும் விழுந்து விடக் கூடிய நிலையில் இருப்பது போல, என் ஐம்பொறிகள் காம நீரால் அரிப்புண்டு என்னை நிலையற்றவனாக்கி விட்டன. இறைவா, நீ என்னை வளைத்துப் பிடிக்க வந்தாய். நானோ உன் கையில் பிடிபடாமல் புலனின்பமே பெரிது என்று மயங்கி இன்னமும் உலகாயதச் சேற்றில் உழல்கின்றேன். தீயினைப் பழம் என்று நினைத்து அதைச் சுற்றி வட்டமிட்டு இறுதியில் தன்னை அதில் மாய்த்துக் கொள்ளும் விட்டில் போல, நான் இந்த உலக வாழ்வே இன்பம் என்று கருதி அதையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். நீ உன் அருள் அமுதை என் வாயில் ஊட்ட வந்தாய். நான் அதை ஏற்காமல் மறுத்து விட்டேன். என்னே என் அறியாமை” என்று நொந்து கொள்கிறார்.

    செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழி யாரிற்பன்னாள்

    விழுகின்ற என்னை விடுதிகண் டாய்வெறி வாய்அறுகால்

    உழுகின்ற பூமுடி உத்தர கோசமங் கைக்கரசே

    வழிநின்று நின்னரு ளாரமு தூட்ட மறுத்தனனே.

    “என் ஐம்புலன்கள் எனக்கு வஞ்சனையைச் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையான இன்பம் எது என்று நான் உணர அவை வாய்ப்பு அளிக்கவில்லை. அதனால் நான் உன் மணி மலர்த் தாள் குறுகாமல் வேறுபட்டேன். எறும்புகள் நெய்க்குடத்தை மோப்பத்தால் அறிந்து நாடுவது போல என் புலன்கள் உலக இன்பத்தையே நாடிக் கொண்டிருக்கின்றன. உண்மையான மெய்ப்பொருள் நீ இருக்க, நான் பொய்மை செய்து வீண் பேச்சைப் பெருக்கிக் கொண்டிருக்கிறேன். கடைகின்ற மத்துப் பொருந்திய உடனே, தயிர் சுழல்வது போல என்னைப் பற்றிய பாசங்கள் ஐந்தினால் நான் அலைப்புண்டு வருந்துகிறேன். இவ்வாறாக, மீண்டும் ஒரு பிறவிக்கு உரியவனாக என்னை ஆக்கிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு புலன் வசப்பட்டு வாழ்ந்தது கூடப் பெரிதில்லை. அதை விடப் பெரிய தவறு ஒன்றும் செய்து கொண்டிருக்கிறேன். இறைவனை அடைய வேண்டும்  என்ற குதுகுதுப்பு (ஆர்வம்) என்னிடத்தில் எள்ளளவும் இல்லை. என் மனம் போன வழியில் சென்று கொண்டு இது தான் இறைவனின் குறிப்பு என்று தவறாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறேன். இது மன்னிக்கப்படக் கூடிய குற்றமா?”

    குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து நின்குறிப்பில்

    விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்

    “உன்னோடு ஒன்றுபடும் வழியும் எனக்குத் தெரியவில்லை. உன்னைப் பாடவில்லை. உனக்குப் பணி செய்யவில்லை. சிவன் யார் எங்குளான் என்று தேடவில்லை. ஓடிப் பார்க்கவில்லை. ஸ்தம்பித்து மனம் உருகவில்லை. அது மட்டுமல்ல, உன்னைப் பழிக்கவும் துணிந்தேன்.”

    திருவாசகத்தில் தோய்ந்து கிடந்த அருட் பிரகாச வள்ளலார் இதே கருத்தை எதிரொலிக்கிறார்.

    அல்லார்க்கும் குழலார் மேல் ஆசை வைப்பேன்

    ஐயா நின் திருத்தாள் மேல் அன்பு வையேன்.

    செல்லார்க்கும் பொழில் தணிகை எங்கே என்று

    தேடிடேன் நின் புகழைச் சிந்தை செய்யேன்

    கல்லார்க்கும் கடுமனத்தேன் வன்கண்ணினேன் புன்

    கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன்

    எல்லார்க்கும் உதவாத பாவியேன் யான்

    ஏன் பிறந்தேன் புவிச் சுமையாய் இருக்கின்றேனே.

    “இத்துணை நாள் இப்படி வாழ்ந்தது போதும். இனி புலால் நாற்றமுடைய, நோய்களுக்கு இருப்பிடமான இந்த உடலை நான் தாங்கி இருக்க மாட்டேன். நான் தளர்ந்து விட்டேன். என்னைத் தாங்கிக் கொள்வாயாக” என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்.

    தன் சிறுமைகளை எல்லாம் பட்டியலிட்ட மணிவாசகர் ஆங்காங்கு இறைவனின் கருணையையும் புகழ்ந்து பாடுகிறார். இறைவன் பேராற்றலும் பெருங் கருணையும் உடையவன் என்பது முன்னரே தெரிந்தது தான். ஆனால் இவ்வளவு குறை உடைய எனக்கும் அவன் கருணை செய்துள்ளான் என்பது அவனது கருணைக்கு எல்லையில்லை என்பதை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.

    கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட

    விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்

    உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே

    சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.

    “நான் கள்ளன் என்பது உனக்குத் தெரியும். அப்படியும் என்னை ஆண்டு கொண்டாயே அப்பா, அது என்ன காரணம் பற்றி?” என வினவுகிறார்.

    கள்ளேன் ஒழியவும் ஆண்டு கொண்டதெக் காரணமே

    “என்னை ஆண்டு கொண்டது மட்டுமல்லாமல் என் குறையை நிறையாக்கி என் பிறவிப் பிணியைத் தீர்த்தாயே இறைவா. முன்பு பாற்கடலைக் கடைந்த போது உண்டான ஆலகால விடத்தை அமுதமாக்கி  உண்டாயே அது போன்ற விந்தைச் செயல் அல்லவா நீ என்னிடம் செய்து விட்டாய்!”

    பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக்கொண்ட

    மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட முண்மிடற்று

    மையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே

    செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந் தீர்ப்பவனே

    “சுடர் விடும் பொருள்களுக்கு எல்லாம் ஒளி தந்த மூலப் பொருள் நீ. அதே நேரத்தில் எளிமையின் எல்லையைத் தொட்டவன். அதனால் அன்றோ, உன்னோடு கலந்து விட நான் வெளிவராத போதும் நீயாக வந்து என்னை ஆட்கொண்டாய்.”

    களிவந்த சிந்தையொ டுன்கழல் கண்டுங் கலந்தருள

    வெளிவந்தி லேனை விடுதிகண் டாய்மெய்ச் சுடருக்கெல்லாம்

    ஒளிவந்த பூங்கழல் உத்தர கோசமங் கைக்கரசே

    எளிவந்த எந்தை பிரான்என்னை ஆளுடைய என்னப்பனே

    “சிவனே, உன்னிடத்தே ஒன்றுக்கொன்று பகையான நிலவும் பாம்பும் இசைந்து வாழ்கின்றன. அது போலப் பண்பில் மேம்பட்ட பழ அடியார் பலரோடு கூட படிறு {பொய்} ஒழுக்கம் கொண்ட என்னையும் இசைத்தாயே, இந்த வித்தையை எப்படிப் புகழ்வேன்? பிறவி என்னும் ஐவாய் அரவத்துக்கு அஞ்சி என் மனம் பொந்தில் ஒடுங்குகிறது. என்னைக் கைவிட்டு விடாதே.”

    பரம்பர னேநின் பழஅடி யாரொடும் என்படிறு

    விரும்பர னேவிட் டிடுதிகண் டாய்மென் முயற்கறையின்

    அரும்பர நேர்வைத் தணிந்தாய் பிறவிஐ வாயரவம்

    பொரும்பெ ருமான்வினை யேன்மனம் அஞ்சிப் பொதும்புறவே.

    “நான் உன்னை ஏசினாலும் ஏத்தினாலும் பிழைகளை எண்ணி மனம் குழைகின்ற என்னை விட்டு விடாதே” என்று நீத்தல் விண்ணப்பத்தை நிறைவு செய்கிறார்.

    தாழ்மை உணர்வோடு பாடிக் கொண்டு வந்த மாணிக்க வாசகர் தோழமை உரிமையோடு பாடிய பாடல் ஒன்றும் நீத்தல் விண்ணப்பத்தின் இறுதிப் பகுதியில் உண்டு.

    “இறைவா, நீ கபால மாலை அணிந்து தீயை ஏந்தி அரவு பூண்டு வீரத்தின் நிலைக் களனாக விளங்குகிறாய். நீ என்னைக் கைவிட்டு விட்டால், நீ யாருடைய அடியவன் என்று ஊரார் என்னைக் கேட்கும்போது உத்தரகோசமங்கைக்கு அரசின் அடியார்க்கு அடியேன் என்று பதில் அளிப்பேன். என் கீழ்மையைப் பார்க்கும் அவர்கள் உன்னைப் பரிகசிப்பர். இது உனக்குத் தேவையா? உன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவாவது நீ என்னைக் கடைத்தேற்ற வேண்டும்” என்கிறார்.

    அடுத்த பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய் நிந்தா ஸ்துதியாக மிரட்டுகிறார்.

    “நான் பிழை செய்தவன் என்று என்னை நீ வெறுத்துப் புறக்கணித்தால் உன் செயல்கள் சரியல்ல என்று ஊரார் சிரிக்கும்படி செய்து விடுவேன். அப்படியும் நீ என்னை ஒதுக்குவாய் ஆயின் நீ யானைத் தோலைப் போர்த்த பித்தன், புலித் தோலை உடுத்த பித்தன், நஞ்சு உண்ட பித்தன், சுடுகாட்டுத் தீயில் விளையாடும் பித்தன், என்னை ஆண்டு கொண்டு பின்பு புறக்கணித்த பித்தன் என்றெல்லாம் ஏசி உன்னைப் பழிக்கு ஆளாக்குவேன்” என்கிறார்.

    கற்றுப் புலமை தேர்ந்து தன் அறிவுத் திறம் விளங்கப் பாடிய பாடல்கள் அல்ல இவை. பக்திச் சுவையில் தோய்ந்து கிடந்து பழுத்த மனத்திலிருந்து பீறிட்டு எழுந்தவை இவை. ஆயினும் இவற்றில் இலக்கியச் சுவைக்கும் பஞ்சமில்லை.

    மணிவாசகரின் உவமை நயம் சிறப்பு மிக்கது. புலனின்பமே மேலானது என்று கருதி வாழ்பவன் சிறப்புற வாழ்வது போலத் தோன்றினாலும் அவன் ஒரு நாள் வீழ்ந்து படுவது திண்ணம் என்பதைக் காட்ட வேரடி மண் அரிக்கப்பட்டும் நிமிர்ந்து நிற்கின்ற ஆற்றங்கரை மரத்தை உவமையாக்கியதை முதலில் பார்த்தோம்.

    புலனின்பம் தனக்கு அழிவு தர வல்லது என்பதை உணராமல் அதைத் தேடி அலைகின்ற மானிடரை தீப்புகு விட்டிலாகவும் நெய்க்குடம் மொய்க்கும் எறும்பாகவும் சித்தரித்ததையும் பார்த்தோம்.

    இறை நாட்டம் ஒரு புறமும் புலன் நாட்டம் ஒரு புறமுமாக இருப்பவர்களை இருதலைக் கொள்ளி எறும்புக்கு உவமிக்கிறார்.

    இறையருள் வெள்ளமாகப் பெருகிக் கொண்டிருந்தும் அதைப் பருக முடியாமல் தடுமாறும் மனிதக் கூட்டத்தை வெள்ளத்தில் மிதந்து கொண்டே தாகத்தால் நா வறண்டு துன்புறும் பேதை என வர்ணிக்கிறார்.

    யானைப் படை கொண்டு புரிகின்ற போரில் சிறு செடிகள் மிதியுண்டு மாய்வது போல, ஐம்புலன்கள் இன்பம் நாடிச் செல்லும் வேளையில் ஆன்மா நாசமடைகிறது என்கிறார்.

    நாங்கூழ்ப் புழுவைச் சுற்றி எறும்புகள் கூட்டமாக் மொய்த்து அதைக் கடித்து உண்ணும் வேளையில் தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் புழு துடிப்பது போல், ஐம்புலன்கள் துன்புறுத்த, என் மனம் தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் துடிக்கிறது என்கிறார்.

    இறைவனை அடைய வேண்டும் என்கிற இதய தாகத்துக்கு அவர் கொடுக்கும் உவமை, ‘பெரு நீர் அறச் சிறு மீன் துவண்டாங்கு.’ வெள்ளம் வற்றிய இடத்தில் உள்ள மீன் துடிப்பது போல இறைவனின் பிரிவாற்றாமையால் தான் துடிப்பதாகக் கூறுகிறார்.

    வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை

    நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

    தேன் கலந்து பால் கலந்து செழுங் கமலத்தின் சுவை கலந்து

    ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

    என்று வள்ளலார் பாடியது பொருத்தமானதே என்று உணர்கிறோம்.

     

    படத்துக்கு நன்றி: http://swarnaboomi.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

     

    Share
  • பாரதியின் வேத முகம் -18

     

    சு.கோதண்டராமன்

    மோதி மிதித்துவிடு பாப்பா

           பாரதியின் பாப்பாப் பாட்டில் ஒரு பகுதி-

    பாதகம் செய்பவரைக் கண்டால்நீ

    பயம் கொள்ளலாகாது பாப்பா

    மோதி மிதித்துவிடு பாப்பா அவர்

    முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

    அவருடைய பகைவனுக்கருள்வாய் பாட்டில் ஒரு பகுதி-

    தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு

    சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே

    அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

    அவளைக் கும்பிடுவாய் நன்னெஞ்சே

    இந்த இரண்டு பாடல்களின் கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றன. எதிரியை மோதி மிதித்து விடு என்று பாப்பாவுக்குக் கூறும் அவர் தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துவதோ தின்ன வரும் புலியைக் கும்பிடு.

    பாதகம் செய்யும் மனிதரைத் தண்டிக்க வேண்டுமாம். பாதகம் செய்யும் புலியைத் தண்டிக்காதது மட்டுமல்ல, அதைக் கும்பிடவும வேண்டுமாம். சாதிக்கொரு நீதியா? மகாகவியின் வாக்கில் முரண்பாடா ?

    இல்லை. ஆராய்ந்து பார்த்தால் இதில் முரண்பாடு இல்லை என்பது தெரியவரும்.

    தின்ன வரும் புலி தன் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக வருகிறது. கண்ணில் தென்பட்ட எதையாவது தின்று அது தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு வயிறு நிரம்பிவிட்டால் அது கொல்லப் போவதும் இல்லை, தின்னப் போவதும் இல்லை. நாம் அதைத் தொந்தரவு செய்யாத வரையில் அது தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும். அது மனிதனைப் பகைவனாகக் கருதி வன்மம் தீர்த்துக் கொள்வதில்லை.

    ஆனால் மனிதன் அப்படி அல்ல. பாதகம் செய்பவன், தான் செய்வது தவறு என்று தெரிந்தே செய்கிறான். முன் விரோதம் அகம்பாவம் இவற்றால் ஆட்டிப் படைக்கப்பட்டுப் பாதகம் செய்கிறான். தன் செயலை நியாயப்படுத்த அவன் பல யுக்திகளையும் பயன்படுத்தி வாதிடுவான். பாதகம் செய்துவிட்ட பின்னும் அவனது வெறி அடங்குவது இல்லை.

    ஆக, மனிதனைத் தூண்டுவது ஆணவம், புலியைத் தூண்டுவது பசி. பசி என்பது சக்தியின் ஒரு தோற்றம். இது எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்து அவற்றைச் செயல்படத் தூண்டுகிறது. பசி இல்லையேல் உயிர் இயக்கமே நின்று போகும். ஆனால் ஆணவம் என்பது சக்தியின் தோற்றம் அல்ல, இது மனிதனைப் பற்றிய ஒரு மலம்.

    தேவி பாகவதத்தில் சக்தியின் பல வேறு தோற்றங்களை வர்ணிக்கும் சுலோகங்களில் ஒன்று-

    யா தேவி ஸர்வ பூதேஷு க்ஷுதா ரூபேண ஸம்ஸ்திதா

    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

    எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் பசி வடிவில் விளங்குகிறாளோ, அவளுக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.

    இதன் அடிப்படையில், பாரதியும் தின்ன வரும் புலியின் பசியில் தேவியைக் காண்கிறார். எனவே புலியை வணங்கச் சொன்னதும் பாதகக்காரனை மிதிக்கச் சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்று அறிகிறோம்.

     

    Share
  • பிராயச்சித்தம்

    சு.கோதண்டராமன்

     
    (இந்த என்னுடைய கதை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஓம் சக்தி மாத இதழில் வெளிவந்தது. மறு பகிர்வாக இங்கு வெளியிடுகிறேன்.- சு. கோதண்டராமன்)

     
    மூடிய கதவுக்கு வெளியே பெருங் கூட்டம். எல்லோர் முகத்திலும் சோகம் கப்பியிருந்தது. அவ்வப்போது சிலர் தணிந்த குரலில் பேசிக் கொண்டார்கள். ஒரு சிலர் ஜபம் செய்து கொண்டிருந்தனர்.

    அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே,

    பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே,

    உம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

    பாவிகளாகிய எங்களுக்காக இப்பொழுதும்

    எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.

    இந்த ஜபத்தைத் திரும்பத் திரும்பக் கூறித் தங்கள் மனத் துயரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

    அறையின் உள்ளே அவரது அன்புக்குப் பாத்திரமான ஃபாதர் சின்னசாமி படுத்திருக்கிறார். ஒரு வாரமாகக் கண் திறக்கவில்லை. உணவு தண்ணீர் இல்லை. அருகில் இரண்டு அணுக்கத் தொண்டர்கள் அவரது தேவையை உணர்ந்து செயல்படத் தயாராக இருந்தனர். அவ்வப்போது கதவைத் திறந்து அவரது உடல் நிலை பற்றிய செய்தியை வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியப் படுத்தினர்.

    ஃபாதர் அசையாமல் படுத்திருந்தார். அவரது மூடிய கண் இமைகளில் ஒரு சுழிப்பு. உதடுகளில் லேசான அசைவு. ஏதேனும் சொல்ல விரும்புகிறாரோ? குனிந்து காது கொடுத்தனர்.

    “அருள் நிறைந்த அன்னையே வாழ்க”

    ஆகா, எப்பேர்ப்பட்ட தூய உள்ளம்! தன் நிலை மறந்த நேரத்திலும் இறை வழிபாட்டை மறக்கவில்லையே என வியந்தனர்.

    ஃபாதரின் உடல் தான் கிழித்த நாராகக் கிடந்ததே தவிர, அவரது மனதில் ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது. காட்சிகள் அவரது மனக் கண் முன் விரிந்து கொண்டிருந்தன.

    இதோ ஒரு குளத்தங்கரை மண்டபம். சிறுவர்களும் பெரியவர்களுமாகப் பல ஆண்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கின்றனர். ஒரு சிறுவன் அவர்களிடையே பரபரப்பாக ஓடி ஓடிப் பூணூல் வினியோகித்துக் கொண்டிருக்கிறான்.

    “சுப்புணி, எல்லாருக்கும் பூணூல் குடுத்துட்டயா?” அவனது தந்தை கேட்கிறார். அவன் தலை அசைத்ததும் கூட்டத்தைப் பார்த்து ‘ஆரம்பிக்கலாமா?’ என்று கேட்டு விட்டு “சுக்லாம்பர தரம் விஷ்ணும் …..” சொல்கிறார். கூட்டம் அவரது சொற்களை எதிரொலிக்கிறது.

    இதோ மற்றொரு காட்சி.

    பள்ளிக் கூடம். இடைவேளை. சுப்புணி தனியே உட்கார்ந்திருக்கிறான். தலைமை ஆசிரியர் அங்கு வருகிறார்.

    “ஏண்டா, சாப்பிடலையா?”

    “இல்லை, ஃபாதர்.”

    “அம்மா சாதம் கட்டிக் கொடுக்கல்லியா?”

    “இல்லை ஃபாதர்.”

    “என் அறைக்கு வா. காசு தரேன். ஓட்டல்லே போய் தயிர் சாதம் வாங்கிச் சாப்பிடு.”

    “வேண்டாம், ஃபாதர்.”

    “ஏண்டா?”

    “பிறத்தியார் கிட்டே வாங்கிக்கக் கூடாது என்று எங்கம்மா சொல்லியிருக்கா, ஃபாதர்.”

    “உங்கப்பா புரோகிதர் தானேடா. அவர் பிறரிடம் தானம் வாங்கறது இல்லையா? அது தேவலாம் என்றால் இதுவும் தப்பில்லை. வாங்கிக்க.”

    “இல்லே, ஃபாதர். எங்கப்பா தானம் வாங்கினா, கொடுத்தவாளுடைய நன்மைக்காக ஜபம் பண்ணுவார், அல்லது காவேரி ஸ்னானம் பண்ணுவார், ஃபாதர்.”

    “அந்த மாதிரி நீயும் இதை இப்ப வாங்கிக்க, பின்னாடி எனக்காகவும் இந்த ஸ்கூலுக்காகவும் ஜபம் பண்ணிடு.”

    வாதத்தில் தோற்றுப்போன சுப்புணி வயிற்றுப் பசி தீர்க்கக் கை நீட்டுகிறான்.

    அந்தக் காட்சி மறைகிறது. அடுத்த காட்சி விரிகிறது.

    ஒரு விதவைத் தாய்.

    “வாடா சுப்புணி, சந்தியா வந்தனம் பண்ணிட்டுவா, சாப்பிடலாம். காலம்பறலேர்ந்து சாப்பிடலை, பாவம்.”

    “இல்லேம்மா, மத்தியான்னம் ஸ்கூல்லே சாப்பிட்டுட்டேன்.”

    “யார்டா சாதம் போட்டா?”

    சொல்கிறான்.

    “போன வருஷம் ஒரு நாள் நீ அந்த மாதிரி சாப்பிட்ட போதே, அது தப்புன்னு சொன்னேனே அப்பா. கண்டவா கிட்டேயும் வாங்கிக்கக் கூடாதுடா. உங்கப்பா எல்லார் கிட்டேயும் தானம் வாங்கிட மாட்டார். யார் சாதம் போடறாளோ அவா குணம் நமக்கு வந்துடும்னு, நல்ல சத்துக்கள் வீட்டிலே தான் சாப்பிடுவார்.”

    “இல்லேம்மா, ஃபாதர் ரொம்ப நல்லவர். நான் நன்னாப் படிக்கறேன்னு எங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பார்ம்மா.”

    காட்சி மாறியது.

    அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறாள், “வாண்டாண்டா சுப்புணி, சொன்னதைக் கேளுடா, எனக்கு ஒரு கொள்ளி போட்டுட்டு நீ எப்படி வேணுமானாலும் போ. அவன் கையிலே சோறு வாங்கித் தின்னு அவன் புத்தியே உனக்கு வந்துடுத்தேடா.”

    சுப்புணியும் கெஞ்சுகிறான். “மதம் தான் மாறுகிறேனே தவிர, உன் பிள்ளை என்பது இல்லாமல் போகமாட்டேன் அம்மா. உன்னை மறக்க மாட்டேன்ம்மா. அப்பா இறந்தபின் எனக்காக நீ எப்படி உழைச்சு ஓடாப் போயிருக்கேங்கிறதை நான் பாத்துண்டு தானே இருக்கேன். எத்தனை வீட்டிலே பத்துப் பாத்திரம் தேச்சிருக்கே, எத்தனை கல்யாணத்திலே கல்லைக் கட்டி இழுத்து மாவு அறைச்சிருக்கே, இனிமே நீ கஷ்டப்பட வேண்டாம்மா. அடுத்த மாசத்திலேருந்து எனக்குச் சம்பளம் வரும். நீ சௌகர்யமா இருக்கலாம். உன்னைக் காப்பாத்தறது என் கடமை. நான் மறக்க மாட்டேம்மா.

    “அதே நேரத்திலே எனக்கு இன்னொரு கடமையும் இருக்கும்மா. எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்துப் படிக்க வைச்சு நான் பட்டினி கிடக்க நேரிட்ட போதெல்லாம் என் முகம் பாத்து சாப்பாடு போட்ட மதத்துக்கும் நான் நன்றி செலுத்தணும் அம்மா.”

    “அதுக்காக மதம் மாறித் தான் நன்றி செலுத்தணுமோ? இந்துவா இருந்துண்டே அவா நன்மைக்கு நீ உழைக்கப்படாதா?”

    ………..

    அன்று அவன் தான் செய்தது சரி என்று கருதி வீட்டை விட்டு வெளியேறி விட்டான். அம்மா அவனை அதன் பின் வீட்டில் அனுமதிக்கவில்லை.

    ஆயிற்று. அறுபது வருஷங்கள். எத்தனை பிரசங்கங்கள்! எத்தனை கூட்டங்கள்! எத்தனை பேருக்கு ஆறுதல் அளித்திருக்கிறார் ஃபாதர் சின்னசாமி! ஆனால் அந்த ஒரு ஜீவனுக்கு மட்டும் அந்திம காலத்தில் அவர் ஆதரவாக இருக்க முடியவில்லையே! மரண நேரத்தில் அந்த நினைவு வந்து வேதனை துளைக்கிறதே! ஜபம் சொல்லிப் பார்க்கிறார் ஃபாதர்.

    “அருள் நிறைந்த அன்னையே வாழ்க..”

    ‘என்னவோ இன்றைக்கு மரியே என்பதற்குப் பதில் அன்னையே என்ற சொல் தான் உள்ளத்தில் சுழல்கிறது. அவரது அன்னையைப் பொறுத்தவரை எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்! பெண்களுக்குள் அவள் ஒரு ரத்தினம் அல்லவா? என்ன தியாகம்! இருந்த ஒரே பிள்ளையை, வயதான காலத்தில் காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தவனை உயிருடன் தியாகம் செய்தவள் எவ்வளவு பெரிய மனது உடையவள்! ஆனால் அவளுடைய திருவயிற்றின் கனியாகிய நானோ பாவிகளுக்கெல்லாம் மேலான பாவியாகி விட்டேனே. எத்தனை பேருடைய பாவங்களுக்கு நான் மன்னிப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பிரத்தியட்சமான அன்னையைக் கடைசிக் காலத்தில் வறுமையில் வாட விட்டேனே!’

    ‘அவளுக்குத் தான் என்ன மன உறுதி! நான் அனுப்பிய பணத்தை விரலால் கூட தொட மாட்டேன் என்று மறுத்து விட்டாளே! அவளைப் பார்க்கக் கூட என்னை அனுமதிக்கவில்லையே! தான் பிறந்த மதத்தை அவள் நேசித்தது தவறா? வந்து குடி புகுந்த மதத்தை நான் நேசிக்கவில்லையா? நான் பிறந்த மதத்தை விட்டு வந்தது சரியா? என் தாயைத் தவிக்க விட்டது சரியா?

    ‘இது என்ன, இத்தனை நாள் இல்லாமல் அறுபது வருஷம் கழித்து இந்த சிந்தனை? அன்னையே, என் மரண நேரத்தில் எனக்காக வேண்டிக் கொள்ள மாட்டாயா?’

    ‘வெறும் ஜபம் செய்தால் மட்டும் ஒருவன் பாவங்களிலிருந்து தப்ப முடியாது. அவன் மனம் வருந்திப் பரிகாரமான செயல்களும் செய்து தான் திருந்தியதைத் தன் மனம் ஒப்பும் வகையில் நிரூபிக்க வேண்டும்.’

    அவர் மற்றவர்களுக்கு உபதேசித்த வார்த்தைகள் அவர் காதில் ரீங்காரமிட்டன. ‘என்ன செய்யலாம்? நாக்கைக் கூட அசைக்க முடியாத இந்த நிலையில் என் மனம் வருந்தியதை நிரூபிக்கும் பரிகாரம் நான் என்ன செய்ய முடியும்? அன்னையே, எனக்கு சக்தி கொடு.’

    அவரது உதடுகள் மெல்ல அசைந்தன. அணுக்கத் தொண்டர்கள் குனிந்து அவர் வாயருகே காதை வைத்துக் கேட்டனர்.

    “வைத்தி, வைத்தி”

    “யார் வைத்தி என்பது?” ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மீண்டும் அவரது உதடு அசைந்தது.

    “வைத்தி, பாஸ்கரராஜபுரம், பார்க்கணும்.”

    தங்கள் தெய்வத் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றத் தொண்டர்கள் பறந்தனர். எப்படியெல்லாமோ விசாரித்து வைத்தியைக் கொண்டு வந்துவிட்டனர்.

    அங்குக் கூடியிருந்த கூட்டத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத தோற்றம். குடுமி, துண்டு மட்டும் போர்த்திய மார்பு, பூணூல், பஞ்சகச்சம், நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம்.

    கூசிக் கொண்டு உள்ளே நுழைந்தார் வைத்தி. அவரது பால்ய நண்பன் சுப்புணி கட்டிலில் நார் போலக் கிடந்தான்.

    எவ்வளவு அன்யோன்யமாக இருந்தார்கள்! சுப்புணி வீட்டை விட்டு வெளியேறு முன் தாயையும் மகனையும் சேர்த்து வைக்க எத்தனை முயற்சிகள் செய்திருக்கிறார் இந்த வைத்தி. பின்னர் இவர் மூலம் தான் சுப்புணி அம்மாவுக்குப் பணம் அனுப்பினான். அம்மா காரியமும் சுப்புணி தான் செய்தார். அதன் பின் அவருடைய தொடர்பு விட்டுப் போயிற்று.

    “உட்கார்.”

    ஜாடை காட்டினார் சின்னசாமி. வைத்தி கூசிக் கொண்டே ஸ்டூலில் உட்கார்ந்தார். ‘அவரை எப்படிக் கூப்பிடுவது? சுப்புணி என்று கூப்பிடுவதா? சார் என்றா? எல்லோரையும் போல ஃபாதர் என்றா?’

    இருந்த சக்தி எல்லாம் திரட்டி ஃபாதர் பேசினார், மெதுவாக, ஆனால் நிதானமாக.

    “என் கணக்கிலே கொஞ்சம் பணம் இருக்கு. அதை நம்ம ஊர் வேத பாடசாலைக்கு சேர்ப்பித்து விடு. இந்த என் கடைசி ஆசையை நிறைவேத்துவியா?”

    அவரது குறிப்பு உணர்ந்த தொண்டர் அவரது செக் புத்தகத்தை நீட்டினார். நடுங்கும் கைகளால் அதில் கையெழுத்துப் போட்டு வைத்தியிடம் கொடுத்தார் ஃபாதர்.

    அடுத்த கணம் விவரிக்க முடியாத அமைதி அவரது உள்ளத்தில் தோன்றியது. அவரால் முடிந்த பரிகாரம் செய்துவிட்டார். மனம் லேசாகிக் காற்றில் பறப்பது போன்றும் தன் உடலைத் தானே மேலிருந்து பார்ப்பது போலவும் உணர்ந்தார். கண்கள் ஒரு கணம் மின்னின, பின் மூடிக் கொண்டன. அறுபது ஆண்டுக் காலம் இறை பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தது.

    அவரது நண்பர் வைத்தி- அவரைப் போலவே அறுபது ஆண்டு காலம் புரோகிதத் தொழில் செய்து மற்றவர்களின் நன்மைக்காக வேண்டுவதிலேயே காலம் கழித்த அந்தக் கிழவர் அந்த இடத்தை விட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டே வெளியேறினார்.

     

    Share
  • அசரீரி

     

    சு.கோதண்டராமன்

    தொலை பேசி பழுதாகி விட்டது. குறை பதிவு செய்யும் அலுவலக எண்ணை வேறு ஒரு தொலை பேசி மூலமாகத் தொடர்பு கொண்டேன். ஆளிலாக் குரல் கேட்டது.

    BSNL welcomes you

    பிஎஸ்என்எல் ஆப்கா ஸ்வாகத் கர்தா ஹே

    பிஎஸ்என்எல் உங்களை வரவேற்கிறது

    To proceed in English, press one

    ஹிந்தீ மேம் ஜான்காரீ கே லியே தோ தபாயேன்

    தமிழில் விவரங்கள் அறிய எண் மூன்றை அழுத்தவும்  

    அழுத்தினேன்.

    பழுதுபட்ட தொலைபேசியின் எஸ்டிடி கோடை டயல் செய்யவும்.

    செய்தேன்.

    நீங்கள் டயல் செய்த எஸ்டிடி கோட் 044. இதை உறுதிப்படுத்த எண் ஒன்றை அழுத்தவும்.

    அழுத்தினேன்.

    பழுதடைந்த தொலைபேசி எண்ணை டயல் செய்யவும்.

    செய்தேன்.

    நீங்கள் டயல் செய்த எண் ்்்் ்்்். இதை உறுதிப்படுத்த எண் ஒன்றை  அழுத்தவும்.

    அழுத்தினேன்

    உங்கள் தொலைபேசியில் எந்தப் பழுதும் இல்லை. பிஎஸ்என்எல்லின் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி.

    ????????????

    ………………………………………. ……………………………………………………. ……………………………………………….       இதோ மற்றொரு நிகழ்ச்சி.

    வோட­ஃபோன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

    உங்களுக்கான ஸ்பெஷல் ஆஃபர். இப்பொழுது நீங்கள் வெறும் 34 ரூபாயில் பத்து நாட்களுக்கு இலவசமாக உங்கள் போன் மூலம் இண்டர்நெட் வசதி பெற முடியும்………………………………………………………………………………………………….. …………………..  (நீண்ட விளம்பரத்துக்குப் பின்)

    தமிழில் தொடர எண் மூன்றை அழுத்தவும்.

    அழுத்தினேன்.

    பில் சம்பந்தமான விஷயங்களுக்கு ஒன்றை அழுத்தவும்.

    இண்டர்நெட் இணைப்பு தொடர்பான விஷயங்களுக்கு 2ஐ அழுத்தவும்.

    3ஜி சம்பந்தமான விஷயங்களுக்கு 3ஐ அழுத்தவும்.

    கால் டைரக்ட் சம்பந்தமான விஷயங்களுக்கு 4 ஐ அழுத்தவும்.

    ……………………………

    ………………………………..

    ………………………………….

    மீண்டும் முந்திய மெனுவுக்குப் போக 9 ஐ அழுத்தவும்.

    வரிசையாகப் போய்க் கொண்டிருந்தது. நான் வாங்கிய புதிய சிம்மை செயல்படுத்த வேண்டியிருந்தது. அதற்கான வாய்ப்பே இல்லை. மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்து கவனமாகக் கேட்டேன். எனக்குத் தேவைப்பட்டது இல்லவே இல்லை.

    வேறு வழியில் அவர்களைத் தொடர்பு கொள்ளவே முடியாது போல இருக்கிறதே. சரி முயன்று பார்ப்போம் என்று கருதி எண் ஒன்றை அழுத்தினேன்.

    மீண்டும் பதிவு செய்யப்பட்ட குரல்.

    எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பிற வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். தயவு செய்து காத்திருக்கவும்.

    அவர்களுக்காக நான் காத்திருக்கும் நேரம் வெட்டியாகக் கழியக் கூடாது என்ற பெரிய பொறுப்புடன், என்னை மகிழ்விக்க, இசை ஒலிக்கத் தொடங்கியது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை இசை தடைபட்டு,

    நீங்கள் எங்களுக்கு முக்கியமான வாடிக்கையாளர். தயவு செய்து காத்திருக்கவும். எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி உங்களைக் கவனிக்க வருவார்,

    என்று அறிவிப்பு. தொடர்ந்து இசை. பத்து நிமிடங்களுக்குப் பின் வேறு ஒரு அசரீரீக் குரல் கேட்டது.

    எங்கள் அதிகாரியுடனான உங்கள் உரையாடல் குறை தீர்த்தல் மற்றும் தர ஆய்வுச் சோதனைக்காகப் பதிவு செய்யப்படுகிறது என்பதை அறியவும்.

    …………

    …………..

    என் பெயர் சுபாஷிணி. நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்? (அப்பாடா, கடைசியில், மனிதக் குரல்!)

    முதல்லே, புகாரைக் காது கொடுத்துக் கேட்கிற மனிதக் குரலைக் கேட்க எந்த நம்பரை அழுத்த வேண்டும், சொல்லுங்க.

    என்ன சார் விஷயம்?

    நான் ஒரு புது சிம் வாங்கியிருக்கேன். அதை ஆக்டிவேட் பண்ணணும்.

    அதுக்கு நீங்க 172ஐத் தொடர்பு கொள்ளணும், சார்.

    அது எனக்கு முதலிலேயே தெரியும். அந்த நம்பருக்குத் தொடர்பு கொண்டால் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள உங்களுக்கு உரிமை இல்லைன்னு பதில் வருதே.  அந்தக் குறையை நான் யார் கிட்ட சொல்லி அழறது? குறை தீர்க்கும் நம்பர்னு போட்டிருக்கேன்னு இந்த நம்பரை டயல் செய்தால் ஒன்றை அழுத்தவும், இரண்டை அழுத்தவும்னு போய்க்கிட்டே இருக்கே தவிர என் புகாரைத் தெரிவிப்பதற்கான வழியையே காணுமே, அம்மா.

    மன்னிக்கணும் சார். உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?

    சொன்னேன்.

    நீங்க இப்ப பேசிக்கிட்டிருக்கிற நம்பர் உங்க பேர்லே தான் இருக்கா?

    இல்லே. என் மகன் பேர்லே இருக்கு.

    அவர் பேரை தெரிஞ்சுக்கலாமா?

    சொன்னேன்.

    அவருடைய விலாசம் சொல்லுங்க.

    சொன்னேன்.

    சரியா இருக்கு. இப்ப வாங்கின சிம் யார் பேரிலே வாங்கியிருக்கீங்க?

    சொன்னேன்.

    சரி சார். கம்ப்ளெய்ண்ட் புக் பண்ணிக்கிறேன். உங்க கம்ப்ளெய்ண்ட் நம்பர் 865348974562. மறுமுறை பேசும்போது இந்த நம்பரைக் குறிப்பிடுங்க. வேற ஏதாவது தேவையா?

    கொஞ்சம் இருங்க. நீங்க பாட்டுக்குப் படபடன்னு சொல்லிக்கிட்டே போனா, நான் எப்படி இத்தனை டிஜிட்டை ஞாபகம் வெச்சுக்கறது?

    சரி எழுதிக்கங்க சார்.

    இந்தப் பேச்சு முடிந்ததும் உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதுக்கு மறக்காமப் பதில் அனுப்பிவிடுங்க சார். அதுக்குக் கட்டணம் கிடையாது. வோடஃபோன் சேவையைப் பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி.

    தொலை பேசி அலுவலகங்கள் மட்டுமல்ல. குடிநீர்ச் சுத்திகரிப்பு யந்திரம் பழுது பார்ப்பு மையம்  போன்ற வேறு எந்த அலுவலகமானாலும் இதே நிலை தான்.

    யந்திரங்களை நாம் பயன்படுத்துகிறோமா? அல்லது அவை நம்மை ஆள்கின்றனவா?

     

    Share
  • பணப்பொருத்தம்!…

    எஸ். கோதண்டராமன்

     

    1 டிர்ரிங்.. டிர்ரிங்..

    “ஹலோ”

    “மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

    “சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

    “அவன் எம்.எஸ்சி படிச்சுட்டு காலேஜிலே லெக்சர………….. ”

    “சாரி. நாங்க ப்ரொபஷனல் மாப்பிள்ளையாப் பார்க்கிறோம். ”

    “இதுவும் ப்ரொபஷன் தானே. ”

    “சாரி, டாக்டர், எஞ்ஜினீயர்னா பேசுங்க. இல்லாட்டி போனை வெச்சுடுங்க.”

    2 டிர்ரிங்.. டிர்ரிங்

    “ஹலோ”

    “…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

    “சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

    “அவன் பி.டெக். படிச்சுட்டு மெட்ராஸ்லே டைடல் பார்க்லே ஒரு கம்பெனிலே சாப்ட்வேர் இஞ்ஜினீயரா வேலை பார்க்கிறான். ”

    “பி.டெக். எந்த காலேஜ்? ”

    “சேலம். ”

    “சாரி. அண்ணா யுனிவர்சிட்டி, ஐ.ஐ.டி அல்லது பிலானிலே படிச்ச பையனா இருக்கணும். என் பெண்ணும் பி.ஈ. அதை விட அதிகம் படிச்சவரா, பாரின்லே எம். எஸ். முடிச்சு பாரின்லே வேலை பார்க்கிற பையன் தான் வேணும். ”

     

    3 டிர்ரிங்.. டிர்ரிங்

    “ஹலோ”

    “…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”

    “சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”

    “அவன் சென்னை ஐ.ஐ.டி.லே பி.டெக். படிச்சுட்டு யு. எஸ்லே எம். எஸ் பண்ணினான். இப்போ பாஸ்டன்லே வேலை பார்க்கிறான். எங்களுக்கு இங்கே அடையாறிலே ஒரு பங்களா இருக்கு. நீலாங்கரையிலே பையன் பேரிலே ஒண்ணு வாங்கி இருக்கோம். அப்புறம் கொடைக்கானல்லே ஒரு பங்களாவும் எஸ்டேட்டும் இருக்கு. ”

    “வெரி குட். நீங்க பெண் பார்க்க எப்ப வரீங்க? ”

    “பையன் அடுத்த மாசம் தான் வருவான். நானும் என் வீட்டுக்காரரும் வர ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுக்கு வரோம். உங்க விலாசத்தைக் குடுங்க. ”

     

    4 டிர்ரிங்.. டிர்ரிங்..

    “ஹலோ”

    “ஆண்ட்டி, நான் பாஸ்டன்லேருந்து பாஸ்கர் பேசறேன். பானு போன் வேலை செய்யல்லியா? ”

    “ஒரு நிமிஷம். ”

    “பானு, மாப்பிள்ளே கூப்பிடறார்டி. ஏன் உன் போன் என்னாச்சு? ஏன் லேண்ட் லைன்லே கூப்பிடறார்? ”

    “பாட்டரி லோ. ஆப்ஃ ஆயிடுத்தும்மா. சார்ஜ் பண்ணலாம்னா கரண்ட் இப்பத் தானே வந்திருக்கு. ”

    “என்ன பொண்ணும்மா நீ. அவர் தான் தினமும் இந்த நேரத்துக்குக் கூப்பிடறார்னு தெரிஞ்சிருக்கே. முன்னுக்கு முன்னதா சார்ஜ் பண்ணி வெச்சுக்க வேண்டாமா? ”

     

    5 டிர்ரிங்.. டிர்ரிங்..

    “ஹலோ”

    “நான் பானு பேசறேம்மா. நான் நாளைக்குப் புறப்பட்டு சென்னைக்கு வரேம்மா.”

    “என்னடி இப்ப திடுதிப்புன்னு. இனிமே அடுத்த வருஷம் தான் லீவு எடுக்க முடியும்னு மாப்பிள்ளே சொன்னாரே. மாப்பிள்ளையும் வராரா? ”

    “அவன் வரல்லேம்மா. நான் மட்டும் தான் வரேன். ”

    “என்னடி இது? மாப்பிள்ளையைப் போய் அவன் இவன்னு பேசறே. ”

    “அவன் எனக்குப் புருஷனும் இல்லே. உனக்கு மாப்பிள்ளையும் இல்லே. ”

    “என்னடி சொல்றே நீ? ”

    “ஆமாம்மா நான் ஒரேயடியா வந்திடறேன். லக்கேஜ் ஹெவியா இருக்கு. ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க. ”

    “ஏண்டி? என்னடி ஆச்சு? ”

    “பின்னே என்னம்மா. தேடித் தேடி அமெரிக்க மாப்பிள்ளையைப் புடிச்சியே. சுத்த பழய பஞ்சாங்கம்மா. ”

    “என்னடி சொல்றே? ”

    “கொஞ்சம் கூட நாகரிகமா நடந்துக்கத் தெரியல்லே, அம்மா, அவனுக்கு. எப்போ பார்த்தாலும் பூஜை புனஸ்காரம். ரூமுக்கு ரூம் ராமகிருஷ்ணர், ரமணர், சாயிபாபான்னு சாமியார் படம் தான். அலமாரி பூரா விவேகானந்தர் புஸ்தகங்கள் தான். ஒரு க்ளப்புக்குப் போனோம், ஒரு டிஸ்கொதேயிலே கலந்துகிட்டோம் ஒண்ணு கிடையாது. ஒரு பீர் கூட குடிச்சதில்லையாம். வெளியிலே கூட்டிகிட்டுப் போனா, கோவில் இல்லாட்டா பஜனை, இந்த மாதிரித் தான். அமெரிக்காவிலே இருக்கிறவன் கொஞ்சம் நாகரிகமா இருப்பான்னு நெனச்சேன். இந்தக் கொட்டாம்பட்டியோட காலம் தள்ள முடியாது என்னாலே. ”

    “ஏண்டி, நிச்சயம் பண்ணி கல்யாணம் நடக்கிற வரைக்கும் ஆறு மாசம் நாள் தவறாமே போன்லே மணிக்கணக்காப் பேசினியே. என்னடி தெரிஞ்சுகிட்டே அவரைப் பத்தி?

    “அப்பல்லாம் நிறைய ஜோக் சொல்லிச் சிரிக்க வெச்சுக்கிட்டே தான் இருந்தான்.  நான் இந்த மாதிரித்தான் இருப்பேன்னு அவன் சொன்னப்போ, அமெரிக்காவிலே இருந்துகிட்டு இந்த மாதிரி யாராவது இருப்பாங்களா, விளையாட்டுக்குச் சொல்றான்னு தான் நான் நெனைச்சேன். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் நாம மாத்திடலாம்னு நெனச்சேன். அது முடியாதுன்னு தீர்ந்து போச்சு. நான் நாளை ராத்திரி பதினோரு மணிக்கு வருவேன். ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க”

     

     

    Share
  • அந்த நூறு நாட்கள்!…

    சு. கோதண்டராமன்

    அதிகாலையில் ஒரு கனவு.

       அஞ்சல் என்ற கூவல் கேட்டு வாசலுக்கு வந்தேன். தபால்காரர் தன் சைக்கிளில் இருந்தபடியே, “நீங்கள் தானே சங்கரன் என்பது?” என்றார்.

    “ஆம். நானே தான்.”

    “பதிவுத் தபால். கையெழுத்திட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.”

       ஒப்புகைச் சீட்டையும் பேனாவையும் கொடுத்தார். அடியில் வைத்துக் கொள்ள அவருடைய கடிதக் கட்டையும் தந்தார். அதை வாங்கி சைக்கிள் ஹாண்டில் பாரில் வைத்துக் கையெழுத்திட்டு விட்டு அவரிடம் கொடுத்தபின் தான் கவனித்தேன். அது ஹாண்டில் பார் அல்ல. கொம்பு. நன்றாகப் பார்த்தேன், சைக்கிள் இருந்த இடத்தில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. தபால்காரரைப் பார்த்தேன்.

    “நீர்….நீர் தான் எமன் என்பவரோ?”

    “இல்லை. நான் அவருடைய பணியாட்களில் ஒருவன். இந்த வட்டார அஞ்சல்காரன். பெயர் கிங்கரன்123.”

    “ஓஹோ, கிங்கரன் ஒன் டூ த்ரீ அட் எருமை மெயில் டாட் காமா!”

       தபாலைத் தந்தார். உறையில்லாத தனித் தாள். அதில் முத்துப் போல மூன்று வரிகள் எழுதப்பட்டிருந்தன.

       இன்றிலிருந்து நூறாவது நாள் நீர் நம்முடைய நரகத்துக்கு

    விசாரணைக்காக வரவேண்டும்.

    இப்படிக்கு,

    யம தரும ராஜா உத்திரவுப்படி சித்திரகுப்தன்.

    தலைமைக் கணக்கர்

    என்றிருந்தது. படித்ததும் சிரிப்பு வந்தது. கிங்கரனைப் பார்த்து, “என்னய்யா கடுதாசி எழுதியிருக்காங்க உங்க ஆளுங்க, மொட்டைத் தாத்தன் குட்டையிலே விழுந்தான் என்கிற மாதிரி. உங்க யமனையும் சித்ரகுப்தனையும் நிர்வாக இயல் கல்லூரியிலே சேர்ந்து ஒரு வருஷம் பயிற்சி பெறச் செய்யணும்.”

    “ஏன், என்ன விஷயம்?”

    “இன்றிலிருந்துன்னா என்றிலிருந்து? எங்கேயாவது தேதி போட்டிருக்காங்களா, பாருங்க, நீங்க கடிதம் கொடுத்த தேதியிலிருந்தா? இது எழுதின தேதியிலிருந்தா? இந்த வாகனத்திலே ஏறி நீங்க வரதுக்கே பத்து நாள் ஆகி இருக்குமே. நான் எந்தத் தேதியிலிருந்துன்னு கணக்கு வெச்சுக்கறது?”

    “கடுதாசி பட்டுவாடா ஆன தேதி தான் கணக்கு.”

    “ஏன்யா, இப்படி எல்லாரும் அஞ்சக் கூடிய விஷயத்தைக் கொண்டு வந்திட்டு, அஞ்சல் னு கூவுறியே, எல்லாரும் போஸ்ட்னு தானே சத்தம் போடுவாங்க”.

    “அந்தந்த வட்டாரத்தில் அந்தந்த மொழியில் பேச வேண்டும் என்பது எங்களுக்கு உத்தரவு.”

    “தமிழ் நாட்டுக்கு வேணா வட்டார மொழி தமிழா இருக்கலாம். சென்னையின் வட்டார மொழி ஆங்கிலம் தான். இது தெரியாதா உங்களுக்கு? எந்த இசை அரங்குக்குப் போங்கள். தெலுங்கு, கன்னட, தமிழ்க் கீர்த்தனைகள் பாடுவார்கள். ஆனால் பேசுவது என்னவோ ஆங்கிலத்தில் தான். ஆன்மிக நிகழ்ச்சிகள்லே கூட நாலு வார்த்தை இங்கிலீஷ் கலக்காட்டா ஜனங்களுக்கும் புரியாது. பேசினவருக்கும் திருப்தி இருக்காது.

       “தொக்காவில் ஆங்கிலம் கலக்காமல் யாராவது பேசுறாங்களா? அன்னிக்கு ஒரு அம்மா சமையல் பகுதியிலே காப்பி போடச் சொல்லிக் கொடுத்தாங்க, கேளுங்க.”

       “டூ டீஸ்பூன் காபி பவுடரை ஃபில்டரிலே ஃபில் பண்ணுங்க. வாட்டரை பாயில் பண்ணி பவுடர் மேல போர் பண்ணுங்க. மில்க்கை பாயில் பண்ணுங்க. பெர்கோலேட் ஆன டிகாக்ஷனை ரிக்வயர்ட் குவான்டிடி எடுத்துக்கிட்டு மில்க்கோட மிக்ஸ் பண்ணுங்க. டூ டீஸ்பூன் ஷுகர் ஆட் பண்ணுங்க. காபி ரெடி. இந்தப் ‘பண்ணு’ தமிழ் தான் சென்னையின் வட்டார மொழி.”

    “இன்னும் டென் லெட்டர்ஸ் டெலிவரி பண்ணணும். நோ டைம் நௌ” என்று அவர் நகர்ந்தார்.

    “பாத்தீங்களா, ரெண்டு நிமிஷம் சென்னைக் காத்தைச் சுவாசிச்ச உடனேயே உங்களுக்குத் தமிழ் மறந்து போச்சு. மறுபடியும் சந்திப்போம். நூறு நாள் கழிச்சு வருவீங்கள்லே?”

    “அதுக்கு வேறு நாலு பேர் வருவாங்க”.

    “நீங்களும் வாங்க. அடையாளம் காட்டணுமில்லே. அவங்க பாட்டுக்கு வேறே யாரையாவது அழைச்சிட்டுப் போயிடப் போறாங்க.”

    அவர் போய்விட்டார்.

       ஆக, இறுதிப் பயணத்துக்கான பயணச்சீட்டு உறுதி ஆகிவிட்டது. விடுதலை! மாதத்தில் பாதி நாள் மருத்துவர் வீட்டின் வரவேற்பு அறையில் தவம் கிடப்பதிலிருந்து விடுதலை! வீட்டில் தொக்காவின் அறுவைத் தொடர்களிலிருந்து விடுதலை! வெளியில் செல்லும்போது நெருக்கடி, இரைச்சல், பெட்ரோல் புகை, சாக்கடை நாற்றம் இவற்றிலிருந்து விடுதலை! சாலையைக் கடக்கும்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பதிலிருந்து விடுதலை! உற்சாகத்தில் மனம் துள்ளிக் குதித்தது.

       துள்ளிக் குதித்ததில் விழிப்பு வந்து விட்டது. மணியைப் பார்த்தேன்.   5-40. விடியற்காலைக் கனவு பலிக்கும் என்பார்கள். நல்ல கனவானால் தூங்கக் கூடாது, கெட்ட கனவானால் உடன் தூங்கி எழுந்திருக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரை இது நல்ல கனவு தான். இருந்தாலும் வழக்கத்தை விட 20 நிமிடம் முன்னதாக விழிப்பு வந்து விட்டது. அதனால் தூங்கிவிடுவோம் என்று தீர்மானித்துப் படுத்தேன்.

       தூக்கம் வந்தால் தானே. வழக்கமான தந்திரங்களைக் கையாண்டேன். அருவியைக் கற்பனை செய்து பார்த்தேன். ஆட்டுக் கூட்டத்தை எண்ணினேன். 100,99…. என்று தலை கீழாக எண்ணினேன். -15, -16 என்று எதிர்த் திசையில் போயிற்றே தவிர தூக்கம் வரவில்லை. மணி ஆறு ஆகிவிட்டது. எழுந்தேன்.

       கனவு பலிக்கப் போவது நிச்சயம். போவதற்கு முன் முடிக்க வேண்டிய வேலைகள் என்ன என்று யோசனை செய்தேன். ஒன்றுமில்லை. வங்கிக் கணக்குகளுக்கு எல்லாம் வாரிசுப் பதிவு இருக்கிறது. வேறு யாரிடமும் கொடுக்கவேண்டிய, வரவேண்டிய கடன் எதுவும் இல்லை. சந்தோஷமாகப் புறப்பட வேண்டியது தான்.

       எப்படிப் போகப் போகிறோம் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.  எனக்கு மட்டும் ராவணன், இரணியன் போல சாகும் வழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுக்கப்பட்டால் நான் பல ‘கூடாது’களைக் கூறுவேன். மருத்துவ மனையில் சாகக் கூடாது. சாலையில், கோயிலில், உறவினர் நண்பர் வீட்டில் கூடாது. நோய் வந்து சாகக் கூடாது. சினிமாக் கிழவர்கள் போல இருமி இருமித் தலை தொங்கக் கூடாது. தற்கொலை, விபத்து கூடாது.

       இந்தக் கனவு விஷயம் மட்டும் யாருக்கும் தெரிவிக்கக் கூடாது. என் மனைவி காதில் விழுந்தால் புராணத்து சாவித்திரி மாதிரி புருஷன் உயிரை மீட்கும் வரை போராடுவாள். இந்த நூறு நாளும் திருக்கடையூரிலேயே தங்கி இருந்து தினமும் மிருத்யுஞ்ஜய ஹோமம் பண்ண வேண்டும் என்று ஆரம்பித்து விடுவாள். ஹோமம் செய்து உயிரைக் காப்பாற்ற முடியும் என்றால் உலகில் யாருமே சாக மாட்டார்கள் என்ற வாதம் அவளிடம் எடுபடாது.

       ஆ, ஒரு விஷயம். போவதற்கு முன் என் கெட்ட குணம் ஒன்றைத் திருத்திக் கொண்டாக வேண்டும். அது என்ன என்று சொல்ல வேண்டுமா?

       இதோ, என் மனைவி ஆஸ்திரேலியாவில் உள்ள தன் தங்கையிடம் போனில் பேசுகிறாள். அதை ஒட்டுக் கேளுங்கள்.

       “இந்த மனுஷனோட காலம் தள்ளறது பெரிய ளொள்ளா இருக்கு. எப்படிக் காப்பி போட்டாலும் அதுக்கு ஒரு நொட்டாங்கு சொல்றது. ஒரு நாளைக்கு, இதுக்குப் பேரு என்னன்னு சொல்லிட்டு வை என்பார். திக்கா இருந்தா நாக்கைச் சுத்தறதே, இது காப்பியா, வடிச்ச கஞ்சியான்னு கேப்பார். கொஞ்சம் நீர்க்க இருந்தா இது கழுநீரா என்பார். சர்க்கரை குறைவா இருக்கு, இன்னும் கொஞ்சம் போடுன்னு சொல்ல மாட்டார், இந்தக் கஷாயத்தை மெதுவா உள்ளே எறக்கிட்டேன் என்பார். சர்க்கரை அதிகமா இருந்தா, என்ன விசேஷம் இன்னிக்கு பானகம் கரைச்சு வெச்சிருக்கே என்பார். நானும் எப்படி எல்லாமோ காப்பி போட்டுப் பாத்துட்டேன். இத்தனை வருஷத்திலே ஒரு நாளாவது நன்னா இருக்குன்னு சொன்னதில்லே. நீங்களே உங்களுக்கு வேண்டியபடி போட்டுங்கோன்னும் சொல்லிப் பாத்துட்டேன். அடுப்பே மூட்டத் தெரியாது. எப்படிக் காப்பி போடுவார்?”

       பாவம், அவள் மனத்தை எவ்வளவு புண்படுத்தி இருக்கேன். இந்தக் கெட்ட குணத்தை முற்றிலும் போக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம்மைப் பற்றின கசப்பான அபிப்பிராயம் தான் அவள் மனதில் நிலைத்து நிற்கும். இந்த நூறு நாளிலாவது அவள் மனம் புண்படாமல் நடந்து கொள்ள வேண்டும்.

       காப்பி வந்தது. ‘வாயைத் திறக்காதே, வாயைத் திறக்காதே’ என்று மனதுக்குச் சொல்லிக் கொண்டேன். என்னிடமிருந்து எந்த எதிர் வினையும் இல்லாததை அதிசயித்தபடியே டம்ளரை எடுத்துச் சென்றாள் மனைவி.

       மூன்று நாள் இப்படி எந்த விமரிசனமும் இல்லாமல் நான் காப்பி குடித்ததைப் பார்த்ததும் அவளுக்குப் பயம் வந்து விட்டது. மகனிடம் மெதுவாகச் சொன்னாள், “மூணு நாளா அப்பா ஒரு மாதிரியா இருக்கார்டா. சரியாப் பேச மாட்டேங்கிறார். உடம்புக்கு என்ன பண்றதுன்னு தெரியல்லே. கேட்டா ஒண்ணுமில்லேங்கறார். டாக்டர் கிட்டே தான் கேட்கணும்.”

       எனக்கு ஒண்ணுமில்லேன்னு நான் கதறியும் கேட்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். வழக்கமான மருத்துவர் தான். அவரிடம் நான் ‘தற்போது எனக்கு உடம்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மனதும் சந்தோஷமாக இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே என் மனைவி குறுக்கிட்டு, “அவர் வழக்கம் போல இல்லே, டாக்டர். பேச மாட்டேங்கறார். நீங்க நல்லாப் பாத்து மருந்து கொடுங்க” என்றாள். அவரும் நாக்கை நீட்டு, மூக்கை நீட்டு, கண்ணைக் காட்டு, முதுகைக் காட்டுன்னு சொல்லி எல்லாவற்றையும் சோதனை செய்துவிட்டு, “வெளிப்படையா ஒண்ணும் தெரியல்லே. யூரின் டெஸ்ட், ப்ளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்திடுவோம்” என்றார்.

       பல வகையான சோதனைகளுக்குப் போய் வருவதிலும் மருத்துவரிடம் காட்டுவதிலும் நாள் 92, 91, 90 என்று குறைந்து கொண்டு வந்தது. கடைசியில் ஒரு நாள் அவர், “இது உடல் சம்பந்தமான வியாதி அல்ல. நீங்கள் மன நல மருத்துவரிடம் காட்டுங்கள்” என்று சொன்னார்.

       ‘வேண்டாம், எனக்குப் பைத்தியம் இல்லை’ என்று கதறினேன். கேட்பார் இல்லை. ‘எந்தப் பைத்தியமும் தான் பைத்தியம் என்று ஒப்புக் கொண்டதாக வரலாறு இல்லை’ என்று சொல்லி விட்டார்கள். மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன்.

       மன நல மருத்துவர் பல விதமான வண்ண அட்டைகளை என் முன் பரப்பினார். மூன்று மூன்று அட்டைகளாக வைத்து, ‘நடுவில் உள்ளது என்ன கலர்?’ என்று கேட்டார். சொன்னேன். ‘வெரி குட்’ என்றார்.

       என் தலை எழுத்து. என் அறிவுத் தெளிவை இப்படி எல்லாம் நிரூபித்துக் காட்ட வேண்டி இருக்கிறது!

       “எனக்கு ஒண்ணும் இல்லே, டாக்டர். வழக்கமா என் மனைவி போடற காப்பியைப் பத்தி வேடிக்கையா கமெண்ட் அடிப்பேன். அதை நிறுத்திக் கொண்டு விட்டேன். இவர்கள் அதைப் பெரிது படுத்தி என்னை இங்கே அழைச்சிட்டு வந்திருக்காங்க” என்றேன்.

    “ஏன் நிறுத்திக் கிட்டீங்க?”

    “அவள் மனம் புண்படும் என்பதை உணர்ந்தேன். நிறுத்திக் கொண்டேன்.”

    “இது எத்தனை வருஷப் பழக்கம்?”

    “40 வருஷம்.”

    “40 வருஷப் பழக்கத்தை ஒரு நாள்ல நிறுத்த முடியாது. உங்களாலே இப்போ திடீர்னு இடது கையாலே எழுத முடியுமா? ஒரே நாள்லே மாற்றம் ஏற்பட்டதுன்னா அதுக்கு அடிப்படையா ஒரு வலுவான காரணம் இருக்கணும். அடி ஏதாவது பட்டதா? கீழே விழுந்தீங்களா? யாராவது தாக்கினார்களா?”

    “எதுவும் இல்லே.”

    “கனவு ஏதேனும் கண்டீர்களா?”

    “இல்லை.”

    நல்ல வேளை. என் உடம்பில் மெய்யறி சோதனைக் கருவி பொருத்தப் படவில்லை. இருந்தால் என்னைக் காட்டிக் கொடுத்திருக்கும்.

       “மேலே போய் கம்ப்யூட்டர் டெஸ்டு செஞ்சிட்டு வாங்க” என்றார். அங்கே ஒரு கணினி முன் உட்கார்த்தி வைக்கப்பட்டேன். உங்கள் பெயர் சங்கரனா, ஆம் என்றால் ஒய் யை அழுத்துங்கள். இல்லை என்றால் என் னை அழுத்துங்கள் என்பது போல 400 கேள்விகள். கடைசிக் கேள்விக்கு நான் பதில் அளித்து முடித்ததும் கணினி முடிவுகளைத் தொகுத்து அச்சடித்துக் கொடுத்தது.

       அடுத்த அறைக்குப் போகச் சொன்னார்கள். அங்கே ஒரு கட்டிலில் படுக்க வைக்கப் பட்டேன். தலையிலும் கால்களிலும் மின் இணைப்புக் கொடுத்தார்கள். தூக்கம் வந்தது. அரை மணி நன்றாகத் தூங்கினேன்.

    பின் மீண்டும் மருத்துவரிடம் போனோம்.

       “உங்களுடைய திடீர் மாற்றத்துக்குக் காரணம் ஏதோ ஒரு அதிர்ச்சியான சம்பவம் தான். அதை நீங்கள் மறந்திருக்கலாம். அல்லது சொல்ல விரும்பாமல் இருக்கலாம். ஒரு மாதத்திற்கு தினமும் வந்து ட்ரான்க்விலைசர் வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாத்திரைகளை ஆறு மாதம் சாப்பிட வேண்டும்.”

       நீர் வழிப்படும் துரும்பு போல் எல்லாவற்றுக்கும் உட்பட்டேன். முதல் நாள் மாத்திரை சாப்பிட்டதும் நாள் பூராவும் தூங்கிக் கொண்டிருந்தேனாம். பயந்து போய் மருத்துவரிடம் சொன்னார்கள். அவர் வேறு மருந்து கொடுத்தார். அதன் பின் தூக்கமே இல்லாமல் போயிற்று. மீண்டும் அவரிடம் போய் மருந்தை மாற்றி வந்தார்கள்.

       இந்தக் குளறுபடியில் ‘கவுண்ட் டௌன்’ மறந்து போயிற்று. கனவு நாள் நினைவில் இருந்தது. பிப். 5. அது முதல் 100 நாள் என்றால் மே 15. அது தான் என் இறுதி நாள் என்று மனதில் இருத்திக் கொண்டேன்.

       தினம் ஆறு வேளை மாத்திரை சாப்பிடுவது தான் பிடிக்கவில்லை. எல்லாம் கேட்ட ராவணன் மனிதரால் சாவு வரக் கூடாது என்பதை மட்டும் கேட்க விட்டு விட்டானாம். நானும் பல கூடாதுகளை வேண்டிக் கொண்ட போதிலும் மனைவியின் அன்புத் தொல்லைக்கு ஆட்பட்டுச் சாகக் கூடாது என்பதை மட்டும் கேட்கவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு இன்னும் சில நாள் தானே என்று சகித்துக் கொண்டிருந்தேன்.

       மனம் அமைதியாக இருந்தது. சொல்லும் ஒவ்வொரு சொல்லையும், செய்யும் ஒவ்வொரு செயலையும் இன்னும் சில நாட்கள் தான் என்ற எண்ணத்தை மனதில் இருத்தியே செய்தேன். வழக்கத்துக்கு மாறாக, உடம்பில் எந்த நோயும் இல்லை. வேண்டிக் கொண்டபடி அமைதியாக என் உயிர் பிரியப் போகிறது.

       ஆயிற்று. மே 15 உம் வந்தது. காலையில் வழக்கம் போல எழுந்தேன். இது கடைசி முகச் சவரம், கடைசிச் சிற்றுண்டி, கடைசி மதிய உணவு, கடைசி உணவு என்று எல்லாம் முடிந்து, கடைசி மாத்திரையும் விழுங்கியாகி விட்டது. படுக்கச் செல்லும் போது நான் காலையில் எழுந்திருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து எல்லோரிடமும் மானசீகமாக விடை பெற்றுக் கொண்டேன். படுத்தவுடன் தூங்கிவிட்டேன்.

       விழித்தேன். பொழுது விடிந்திருந்தது. வீட்டில் தான் இருக்கிறேன். அப்படியானால் நான் நேற்று இரவு சாகவில்லையா? கிங்கரன் ஒன் டூ த்ரீ, ஃபோர் ட்வெண்டி செய்திருக்கிறானா?

       அல்ல, அல்ல. அதிகாலைக் கனவு பலிக்கும் என்று நம்பியது என் அசட்டுத் தனம்.

       சாகாதது பற்றி வருத்தமில்லை. இந்த மாத்திரைத் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும்.

       காப்பி வந்தது. ஒரு வாய் உறிஞ்சினேன். இனி என்ன விரதம் வேண்டிக் கிடக்கிறது? விமரிசனத்தை ஆரம்பித்து விட வேண்டியது தான். மாத்திரையிலிருந்து விடுதலை பெற அதுவே வழி.

    “இது என்ன காப்பியா, பாயசமா?”

         “ஆரம்பி்ச்சுட்டீங்களா உங்க ளொள்ளை. மூணு மாசமா நிம்தியா இருந்தேன். அம்பி, ஒங்க அப்பாவை டாக்டர் கிட்டே அழைச்சிண்டு போய் அவர் வாயை அடைக்கிறதுக்கு ஏதாவது மருந்து இருந்தா வாங்கிக் குடு.”

    Share