சு.கோதண்டராமன்

மோதி மிதித்துவிடு பாப்பா

       பாரதியின் பாப்பாப் பாட்டில் ஒரு பகுதி-

பாதகம் செய்பவரைக் கண்டால்நீ

பயம் கொள்ளலாகாது பாப்பா

மோதி மிதித்துவிடு பாப்பா அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

அவருடைய பகைவனுக்கருள்வாய் பாட்டில் ஒரு பகுதி-

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு

சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே

அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

அவளைக் கும்பிடுவாய் நன்னெஞ்சே

இந்த இரண்டு பாடல்களின் கருத்துகளும் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றுகின்றன. எதிரியை மோதி மிதித்து விடு என்று பாப்பாவுக்குக் கூறும் அவர் தன் நெஞ்சுக்கு அறிவுறுத்துவதோ தின்ன வரும் புலியைக் கும்பிடு.

பாதகம் செய்யும் மனிதரைத் தண்டிக்க வேண்டுமாம். பாதகம் செய்யும் புலியைத் தண்டிக்காதது மட்டுமல்ல, அதைக் கும்பிடவும வேண்டுமாம். சாதிக்கொரு நீதியா? மகாகவியின் வாக்கில் முரண்பாடா ?

இல்லை. ஆராய்ந்து பார்த்தால் இதில் முரண்பாடு இல்லை என்பது தெரியவரும்.

தின்ன வரும் புலி தன் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக வருகிறது. கண்ணில் தென்பட்ட எதையாவது தின்று அது தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு வயிறு நிரம்பிவிட்டால் அது கொல்லப் போவதும் இல்லை, தின்னப் போவதும் இல்லை. நாம் அதைத் தொந்தரவு செய்யாத வரையில் அது தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும். அது மனிதனைப் பகைவனாகக் கருதி வன்மம் தீர்த்துக் கொள்வதில்லை.

ஆனால் மனிதன் அப்படி அல்ல. பாதகம் செய்பவன், தான் செய்வது தவறு என்று தெரிந்தே செய்கிறான். முன் விரோதம் அகம்பாவம் இவற்றால் ஆட்டிப் படைக்கப்பட்டுப் பாதகம் செய்கிறான். தன் செயலை நியாயப்படுத்த அவன் பல யுக்திகளையும் பயன்படுத்தி வாதிடுவான். பாதகம் செய்துவிட்ட பின்னும் அவனது வெறி அடங்குவது இல்லை.

ஆக, மனிதனைத் தூண்டுவது ஆணவம், புலியைத் தூண்டுவது பசி. பசி என்பது சக்தியின் ஒரு தோற்றம். இது எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்து அவற்றைச் செயல்படத் தூண்டுகிறது. பசி இல்லையேல் உயிர் இயக்கமே நின்று போகும். ஆனால் ஆணவம் என்பது சக்தியின் தோற்றம் அல்ல, இது மனிதனைப் பற்றிய ஒரு மலம்.

தேவி பாகவதத்தில் சக்தியின் பல வேறு தோற்றங்களை வர்ணிக்கும் சுலோகங்களில் ஒன்று-

யா தேவி ஸர்வ பூதேஷு க்ஷுதா ரூபேண ஸம்ஸ்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் பசி வடிவில் விளங்குகிறாளோ, அவளுக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.

இதன் அடிப்படையில், பாரதியும் தின்ன வரும் புலியின் பசியில் தேவியைக் காண்கிறார். எனவே புலியை வணங்கச் சொன்னதும் பாதகக்காரனை மிதிக்கச் சொன்னதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்று அறிகிறோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பாரதியின் வேத முகம் -18

 1. “கூடி விளையாடு பாப்பா ஒரு 
  குழந்தையை வையாதே பாப்பா!”
  என்றவன், 

  “பாதகம் செய்பவரைக் கண்டால்நீ
  பயம் கொள்ளலாகாது பாப்பா
  மோதி மிதித்துவிடு பாப்பா அவர்
  முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”

  “ரௌத்திரம் பழகு” என்று கூறியதன் அர்த்தம் இன்று இந்திய அளவிலே நாம் அனைவரும் அறிந்ததே….

  பாதகம் செய்பவரை காணும் போது… கூடி விளையாடும் ஒவ்வொருவருக்குமாக தனித்தனியாகவே சொல்லி வைத்திருக்கிறான் விடாதே பாதகரை சும்மா விடாதே.. கூடி விளையாடும் நீங்கள் யாவரும் ஒன்றாகக் கூடி அவனின் மீது மோதி மிதித்தி விடு.. அட, கேடு கெட்டவனே.. இனியும் இப்படிப் பாதகம் செய்யத் துணிவாயா என்று ஒன்றாகக் கூடி நின்று அவன் வெட்கித் தலை குனியும் படி அவனின் முகத்திலே துப்பு… அடச் சீ நீயெல்லாம் ஒரு மனிதனா என்று.. அப்படி செய்யப் போவது அவனுடன் பிறந்த சகோதரியும் தான்….

  “தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு
  சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே
  அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்
  அவளைக் கும்பிடுவாய் நன்னெஞ்சே”

  பாரதி ஒரு மிகச் சிறந்த அத்வைதி…

  அவன்… மலத்திலும் இருப்பது அதுவே என்றுக் கூறும் அளவிற்கு அத்வைதத்தை போற்றியவன்… இது கீதையின் சாரம்.. அனைத்திலும் அந்தயாமியாக யாமே இருக்கிறோம் என்பது பகவானின் கூற்று….

  “புகை நடுவினில் தீயிருப்பதைப்
  பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!
  பூமியிற் கண்டோ மே.
  பகை நடுவினில் அன்புரு வானநம்
  பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே!”

  கீதையின் கூற்றை…. அப்படி, நோக்கும் தன்மையை விளக்க நிற்பது… புலி போன்ற கொடுமையோடு வரும் வெறிகொண்ட மாந்தரையும் புலியன்ன மாந்தரையும் அன்பால், அவரின் பால் கருணையை பொலிந்து அவரை அன்பால் மாற்று அப்படிப் பட்ட மாந்தரை எப்படி வணங்கி அன்பு காட்டுவது என்றுக் கலங்காதே அவர்களுள்ளும் அன்னையே இருக்கிறாள்.. அவர்களை வணங்கினால் அன்னையை வணங்கியதாக்வேத் தான் அர்த்தம்.
  அந்த அன்னை உனக் காப்பவளாக நிற்பாள் என்கிறார்…

  பாப்பா பாட்டு வளரும்பருவத்தில் முக்கியமாக பெண் பிள்ளைகளுக்கு தைரியத்தை தரப் பாடியது.. அது வெறும் தைரியத்திற்காக அல்ல.. 

  உண்மையில் கலி எப்படி முத்திப் போய்.. இன்று உலகிற்கே நாகரிகம் கற்றுக் கொடுத்த இனம், நதியிலிருந்து நாடுவரை அனைத்தையும் பெண்ணாக பார்க்கும் ஓரினத்தின் வாரிசுகள் செய்யும் செயல்களை முன்னமே எதிர் பார்த்தவனாய் தீர்க்க தரிஷியாய் தான் பாரதி முன்னமே பாப்பாவிற்கு சொல்லி இருக்கிறான்…. 

  அது அநாகரிக மிருகங்களை பெண்பிள்ளைகள் எதிர் கொள்ள வேண்டிய திறத்தை ஓன்று கூடி எதிர்க்கும் வல்லமையை பெறவேண்டிச்  சொன்னது…. 

  பின்னது வளர்ந்த பெரிய மனிதனும் உணர்சியிற்கு அடிமையாகி தன்மான உணர்வோடு அறிவு மங்கி பொறுமை இழந்து நெருங்கிய உறவுகளையும்.. 

  புலியன்ன எதிர்த்த பக்கத்து வீட்டு நண்பர்களையும்… தன்னை எதிரியாகக் கருதும் அன்பில்லாத மனிதர்களுக்கு அருள வேண்டும் என்பதையும் குறிக்கிறது..

  என்பதாகவே நான் புரிந்துக் கொள்கிறேன் ஐயா.. 

  மன்னிக்கணும் ஐயா இது எனது தாழ்மையானக் கருத்தே. இருந்தும் அதில் நான் உறுதியாகவே இருக்கிறேன் ஐயா!

  தங்களைப் போல நானும் ஒரு பாரதி பித்தன் அந்த உரிமையில் தங்களின் கருத்திற்கு மாற்றல்ல எனது கருத்தையும் கூறுகிறேன். ஆசிர்வதிக்க வேண்டும்.

 2. நன்றி, திரு. ஆலாஸ்யம்.
  பன் முகக் கவிஞன் பாரதியைப் பல கோணங்களில் பார்க்கலாம்.  தின்ன வரும் புலியினிடத்தில் பராசக்தி விளங்குகிறாள் என்றால் பாதகம் செய்பவனிடத்தில் அவள் இல்லையோ என்ற கேள்வியை மையமாக்குகிறது என் கட்டுரை.

  நீங்கள் இரண்டும் வெவ்வேறு சந்தர்ப்பத்துக்கு ஏற்றதாக வெவ்வேறு நபர்களுக்குச் சொல்லப்பட்டதாகக் கூறுகிறீர்கள். பார்க்கும் கோணம் தான் வேறே தவிர உங்கள் கருத்து மாறுபட்டதல்ல. இரண்டும் ஒத்தவை தாம். 

 3. மதிப்பிற்குரிய  திரு, கோதண்டராமன் ஐயாவிற்கு!
  ///பார்க்கும் கோணம் தான் வேறே தவிர உங்கள் கருத்து மாறுபட்டதல்ல. இரண்டும் ஒத்தவை தாம். ///

  மிக்க நன்றிகள் ஐயா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *