1998 ஓம் சக்தி தீபாவளி மலரில் வெளிவந்த இந்த என்னுடைய படைப்பை வல்லமை வாசகர்களுக்கு மறு பகிர்வாக வெளியிடுகிறேன்.-கோதண்டராமன்.  

 

விகர்ண கீதை

      போர் தவிர வேறு வழி இல்லை என்று ஆன பிறகு பாரதப் போருக்கு நாள் குறித்தாகி விட்டது. இரு தரப்பு சேனைகளும் அணி வகுத்து நிற்கின்றன. தலைவர்கள் தங்கள் தங்கள் சங்குகளை முழங்கி தாங்கள் ஆயத்தமாக இருப்பதை அறிவித்து விட்டார்கள். அர்ஜுனனின் தேர் மட்டும் விரைந்து வந்து நடுவில் நிற்கிறது. எதிரி சேனையையும் தன் சேனையையும் ஒரு முறை நோட்டம் விட்டு விட்டு அர்ஜுனன் தன் தேரோட்டி கண்ணனிடம் ஏதோ கேட்கிறான். இவன் பதில் சொல்ல அவன் கேட்க நீண்ட நேரம் உரையாடல் நடக்கிறது. அதன் பின் அர்ஜுனனும் தன் சங்கை ஊதித் தான் போருக்கு ஆயத்தம் ஆகி விட்டதை அறிவிக்கிறான்.

        அப்பொழுது தருமபுத்ரன் தன் ஆயுதங்களையும் கவசத்தையும் கழற்றி வைத்து விட்டு விடுவிடென நடந்து எதிரி சேனையின் முன்னிலையில் நின்று கொண்டிருந்த பீஷ்மரையும் துரோணரையும் சல்லியரையும் வணங்குகிறான். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக, உனக்கு வெற்றி நிச்சயம் என்று ஆசீர்வதிக்கின்றனர்.

        திரும்பி வந்த யுதிஷ்டிரன், எங்களை விரும்புகிறவர்கள் கௌரவ சேனையை விட்டு வர விரும்பினால் வரலாம் என்று உரத்த குரலில் அறிவிக்கிறான்.

        அப்பொழுது துரியோதனின் மாற்றாந்தாய் மகனான யுயுத்சு தன் சேனைகளை அழைத்துக் கொண்டு பாண்டவர் பக்கம் போய்ச் சேருகிறான்.

இது வரை பார்த்தது, வியாச பாரதத்தில் உள்ளபடி.

இனி வருவது என் கற்பனை.

———————————————————————–

      கண்ணனும் அர்ஜுனனும் போர்க் களத்தின் நடுவில் பேசிக் கொண்டு நீண்ட நேரம் கடத்தி விட்டனர். உற்சாகத்தோடு போர்க் களம் வந்த துரியோதனன் போரையும் துவக்க முடியாமல் வேறு வேலைகளும் செய்ய முடியாமல் நின்றான். எப்பொழுதும் செயலாற்றிக் கொண்டே இருக்கும் இயல்புள்ள அவனுக்கு இந்த வெறுமை உள்ளத்தில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியது.

      யுதிஷ்டிரன் ராஜ தந்திரத்தோடு எதிர் அணியில் நிற்பவரிடம் ஆசி பெற்றதையும் யுயுத்சுவைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதையும் பார்த்தான் துரியோதனன். அவனது உள்ளத்தில் மேலும் கலக்கம் உண்டாயிற்று. இந்த யோசனைகள் நமக்குத் தெரியாமல் போய் விட்டனவே. நமது அணியில் உள்ள நமது தாத்தாவை நான் இது வரை ஒரு முறை கூட வணங்கி ஆசி கேட்டதில்லையே. தோற்று விடுவேனோ என்று சிந்திக்கத் தொடங்கினான்.

      சிந்தனையில் மூழ்கிக் கிடந்த அவனை அழைத்துப் பீஷ்மர் கேட்கிறார், “துரியோதனா, போரை ஆரம்பிக்கலாம் அல்லவா?”

துரி- தாத்தா, ஒரு நிமிஷம். இந்தப் போரில் நாம் ஜெயித்து விடுவோம் அல்லவா?

பீஷ்- இது என்னடா, இந்த நேரத்தில் இப்படி ஒரு சந்தேகம் உனக்கு?

துரி- இல்லை தாத்தா, நிஜமாகத் தான் கேட்கிறேன். இந்தப் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தாங்கள் நினைக்கிறீர்கள்?

பீஷ்- எங்கும் எல்லாப் போர்களிலும் இறுதி வெற்றி தர்மத்துக்குத் தான்.

துரி- இந்தப் போரில் தர்மம் யார் பக்கம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

பீஷ்- இது என்ன புதுக் கேள்வி? பாண்டவர்கள் பக்கம் தான் தர்மம் உள்ளது என்பதை நான் உனக்கு எத்தனை சந்தர்ப்பங்களில் சொல்லி இருக்கிறேன்?

துரி- அப்படியானால் நாம் தான் தோற்கப் போகிறோமா? தோற்கப் போகிறோம் என்பது தெரிந்தே சண்டை செய்ய வந்திருக்கிறீர்களா? முடிவு முன்னதாகத் தெரிந்து விட்டதால் சண்டை செய்வது போலப் போக்குக் காட்டி விட்டுப் போகப் போகிறீர்களா?

பீஷ்- துரியோதனா, அடக்கு வாயை. நான் சுத்த வீரன் என்பதை இந்த ஐம்பத்தாறு தேச மன்னர்களும் அறிவார்கள். போக்குக் காட்ட நான் ஒன்றும் கோழை அல்ல. சிரஞ்சீவி வரம் பெற்ற நான் உயிருக்குப் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

துரி- மன்னிக்க வேண்டும் தாத்தா. தோல்வி நிச்சயம் என்பது தெரிந்தும் சண்டைக்கு ஆயத்தமாகிறீர்களே என்பதைத் தான் குறிப்பிட்டேன்.

பீஷ்- துரியோதனா, எத்தனை நல்ல புத்தி சொன்னாலும் உனக்கு ஏறவில்லை. இந்தப் போரை இழுத்துக் கொண்டு விட்டிருக்கிறாய். ஆனாலும் நான் என் கடமையைச் செய்தாக வேண்டும். உன் வீட்டுச் சோற்றைத் தின்றதற்கு நான் வாலாட்டித் தான் ஆக வேண்டும்.

துரி- இத்தகைய மன நிலையில் உங்களால் முழு மனத்துடன் கடமையைச் செய்ய முடியுமா?

பீஷ்- பழைய கேள்வியையே மென்மையான வார்த்தைகளால் கேட்கிறாய். நான் கடமை செய்யும் போது என் சொந்த விருப்பு வெறுப்பு, லாப நஷ்டம், வெற்றி தோல்வி பற்றி எண்ணுவதில்லை. கண்ணனின் கொள்கையும் அப்படித் தான். இத்தனை நேரம் நட்ட நடுவில் தேரை நிறுத்தி விட்டு அர்ஜுனனுக்குக் கண்ணன் இதைத் தான் சொல்லி இருப்பான் என ஊகிக்கிறேன்.

துரி- சரி தாத்தா. நான் இப்பொழுது போரை நிறுத்தி விடலாம் என்று சொல்லுவதாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமா?

பீஷ்- என் பேரனுக்கு புத்தி வந்ததே என்று மகிழ்வேன். ஆனால் உன் இயல்பு அது அல்ல, நீ அந்த வழியில் போகமாட்டாய் என்பதும் நான் அறிவேன்.

துரி- உண்மையிலேயே தாத்தா, இப்பொழுது அப்படி ஒரு எண்ணம் என் மனதில் நிழலாடுகிறது. இத்தனை நாள் பாண்டவர்களுக்குத் துன்பம் கொடுக்க முயன்று முயன்று மூக்கைத் தான் உடைத்துக் கொண்டேன். இன்று இத்தனை பேரை பலிக் களத்தில் இறக்கி விட்டிருக்கிறேன். இத்தனை பேரும் இறந்தாலும் என் கட்சி ஜெயிக்கப் போவதில்லை. என் ஒருவனுடைய வீம்புக்காக, தெரிந்தே மரணப் பாதையில் பதினெட்டு அட்சௌகிணிப் படைகளும் இறங்கி விட்டன. இத்தனை பேரைப் பலி கொடுப்பதை விட நான் ஒருவன் அடங்கிப் போகலாம் என்று தோன்றுகிறது.

பீஷ்- அது நடவாத காரியம். நீ சமாதானமாகப் போக நினைத்தாலும் உன் தம்பிகள் உன்னைச் சும்மா விடமாட்டார்கள்.

துரி- இல்லை, என் தம்பிகள் அத்தனை பேரும் நல்லதோ கெட்டதோ நான் எது சொன்னாலும் அதற்குக் கட்டுப்படுவார்கள்.

பீஷ்- குழந்தாய், இதுவரை எந்த நல்ல செயலும் நீ செய்ததில்லை. எனவே உன் தம்பிகளின் சுபாவத்தின் மறு பக்கத்தை நீ அறியவில்லை. இன்று நீ நல்லவன் ஆகி விட்டால் அவர்களும் நல்லவர்கள் ஆகி விடுவார்கள் என்று எண்ணுவது பேதைமை.

துரி- சரி தாத்தா. நான் மற்றவர்களைக் கலந்து வருகிறேன். அது வரையில் போரைத் துவக்க வேண்டாம்.

——————————————————————————–

 துரி- ஆசார்யரே, எனக்கு அவசரமாக ஒரு ஆலோசனை சொல்ல வேண்டும். இந்சப் போர் நடந்து தான் ஆக வேண்டுமா?

துரோணர்- இது என்ன, சில நிமிஷங்களில் போர் துவங்க இருக்கும்போது இப்படி ஒரு கேள்வி? மாதக் கணக்கில் போருக்குத் தயார் செய்தாயே, அப்பொழுதெல்லாம் உனக்குத் தோன்றவில்லையா?

துரி- இல்லை ஆசார்யரே. பதினெட்டு அட்சௌகிணி என்பது எவ்வளவு பெரியது என்பதை இப்பொழுது தான் கண்கூடாகக் காண்கிறேன். இத்தனை பேர் பலி ஆவதற்கு என் பேராசை தானே காரணம்?

துரோ- போர் புரிவது அரசர்களுடைய ஸ்வதர்மம். இதில் போய்ப் பலி கிலி என்றெல்லாம் பிதற்றுவது சரியாக இல்லை.

துரி- அரசர்களுக்குத் தான் பலி கொடுப்பதும் பலி ஆவதும் ஸ்வதர்மம். பிராமணராகிய உங்களைப் பலி கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்களும் உங்கள் மைத்துனரும், மகனும் போர்க்களத்தை விட்டு நீங்கி விட்டால் கூட என் மனம் மாறலாம். ஆனால் நான் போருக்குத் துணிந்ததே உங்களைப் போன்ற பெரு வீரர்களின் துணையை நம்பித் தான்.

துரோ- துரியோதனா, போர்க் களத்திற்கு வந்த உடனே போர் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த மோசக்காரக் கண்ணன் அர்ஜுனனுக்கு ஏதோ அறிவுரை கூறுவது போலப் பாசாங்கு செய்து நேரத்தைக் கடத்தி விட்டான். காத்திருந்த அந்த நேரத்தில் உன் மண்டைக்குள் விநோதமான எண்ணங்கள் குடியேறிவிட்டன. போ, உன் இடத்துக்குப் போ, போரைத் துவக்கு.

துரி- சற்றுப் பொறுங்கள், குருதேவா. கிருபாசாரியரிடம் ஒரு வார்த்தை கேட்டு வந்து விடுகிறேன்.

——————————————————————————

துரி- கிருபாசார்யரே, போரை நிறுத்தி விடலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கிழவர்கள் என் கருத்தை ஏற்க மறுக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கிருபர்- துரியோதனா, அவர்கள் சொன்ன கருத்தை அன்று நீ ஏற்க மறுத்தாய். இபிபொழுது அவர்கள் மறுப்பதாகக் குறைப்படுகிறாய். போ, லக்னம் கடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நிமிஷங்களே உள்ளன. அதற்குள் உன் சங்கை ஊதிப் போரைத் துவக்கு.

துரி- என்ன ஸ்வாமி, பெரிய லக்னம்? நான் தோற்பது உறுதி என்று தாத்தா சொல்லி விட்டார். எந்த லக்னத்தில் துவக்கினால் என்ன?

கிரு- ஓகோ, தோல்வி நிச்சயம் என்றதும் மனக்கலக்கமோ?

துரி- போரில் வெற்றி தோல்விகள் சகஜம் தான். நான் அதற்காகக் கவலைப்படவில்லை. நான் இப்போரில் இறந்து விடுவேன் என்று என் உள்ளுணர்வு கூறிக் கொண்டிருக்கிறது. இத்தனை நாள் தான் பாண்டவர்களுக்குத் தீமை விளைவித்தேன். சாகப் போகும் சமயத்திலாவது அவர்களுக்கு ராஜ்யத்தை விட்டுக் கொடுத்து விட்டால்  இத்தனை பேரைப் பலியிட்ட பாவமாவது இல்லாமல் போய்ச் சேருவேன்.

கிரு- துரியோதனா, நீ சுத்த வீரன் அல்லவா? உனக்கு மரண பயம் உண்டாகலாமா? போ, உன்  வீரத்தைக் காட்ட ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. வாழ்நாள் முழுவதும், அர்ஜுனனை மெச்சுகிறாரே என்று துரோணரைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டிருந்தாய். இன்று அந்தத் துரோணரே அர்ஜுனனை அம்புகளால் துளைக்கப் போகிறார். நீ சாவதானாலும் அந்தக் காட்சியை ரசித்துவிட்டு மகிழ்ச்சியுடன் போ.

————————————————————————

துரி- கர்ணா, நீ தான் அன்று முதல் என் அந்தரங்க நண்பன். என் மனதை முழுமையாக அறிந்தவன். இப்பொழுது எனக்கு ஏற்பட்டிருக்கும் கலக்கத்திற்கு நீ தான் ஆறுதல் சொல்ல வேண்டும்.

கர்ணன்- துரியோதனா, போர் அவசியமா என்று சிந்திக்கிறாய். அவசியம் தான். பிறந்தது முதல் அர்ஜுனனிடம் பட்ட அவமானங்களுக்கு எல்லாம் பழி தீர்க்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறாயே என்று நான் மகிழ்கிறேன். அதற்கு இடம் இல்லாமல் செய்து விடாதே.

துரி- நீ தனிப்பட்ட முறையில் அர்ஜுனனிடம் ஏதேனும் செய்து கொள். அதற்காகப் பதினெட்டு அட்சௌகிணிப் படைகளைப் பலியிட உனக்கு உரிமை இல்லை. எனக்கும் இல்லை.

கர்- யாரையும் நாம் வஞ்சகமாகக் கொன்று விட இங்கு அழைக்கவில்லை. போர் என்றால் சாவு நிச்சயம் என்று தெரிந்த வீரர்கள் மட்டும் தான் இங்கே வந்திருக்கிறார்கள். அங்கே பார், எப்பொழுதும் அகிம்சை, சத்தியம் என்று பேசி வந்த அந்த வழவழத் தருமனே போருக்கு ஆயத்தமாக நிற்கிறான். உனக்கு எப்படி இந்த மனக் கலக்கம் வநதது? காலையில் போர்க்களத்திற்கு வந்த போது உற்சாகமாகத் தானே வந்தாய்? அர்ஜுனனையும் பீமனையும் சேர்ந்து பார்த்ததும் பயந்து விட்டாயா? ஒன்றை மட்டும் மனதில் கொள். ஆயிரம் அர்ஜுனர்கள் வந்தாலும் இந்தக் கர்ணன் உள்ள வரை உன் மேல் சிறு கீறல் விழ அனுமதிக்க மாட்டான். விரைவில் உன் இடத்துக்குப் போ. என் கைகள் தினவு எடுக்க ஆரம்பித்து விட்டன. நீ போரை ஆரம்பிக்காவிட்டால் நான் பீஷ்மருக்குச் செய்த சபதத்தை மீறி இன்றே வில் ஏந்துவேன். சில நொடிகளில் என் பாணம் புறப்பட்டு விடும், போ.

——————————————————————————-

துரி- விகர்ணா, நீ தான் என்றைக்குமே தர்மம் நியாயம் என்று பேசுபவன். அப்பொழுதெல்லாம் நீ பேசியதை நான் மதிக்கவில்லை. சிறிய பையன் என்று அலட்சியப்படுத்தினேன். பிரச்சனையின் முழு ஆழத்தையும் புரிந்து கொண்டவன் நீ ஒருவன் தான் என்று எனக்கு இப்பொழுது தான் புரிகிறது. இந்தப் போர் அநியாயமானது தானே?

விகர்ணன்- ஆம். அநியாயமானது தான்.

துரி- இப்பொழுது நினைத்தால் கூட நாம் போரை நிறுத்தி விடலாம் அல்லவா? இது வரை செய்த அநியாயங்கள் போதும். இந்தப் பெரிய அநியாயத்தைத் தடுத்து விடலாம் அல்லவா?

விக- அண்ணா, என்ன உளறுகிறீர்கள். ஐம்பத்தாறு தேச மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பி மாதக் கணக்கில் ஏற்பாடு செய்து விட்டு இப்போது போரை நிறுத்தவா? என்ன ஆயிற்று உங்களுக்கு?

துரி- ‘இப்பொழுதும் ஒன்றும் மோசமில்லை, திருத்திக் கொள்ளுங்கள் அண்ணா’ என்று நீ என்னிடம் பலமுறை மன்றாடியிருக்கிறாய். விகர்ணா, எனக்குக் காலம் கடந்து இன்று தான் புத்தி வந்திருக்கிறது. இப்பொழுதும் ஒன்றும் மோசமில்லை. திருத்திக் கொள்கிறேன். போரை நிறுத்தி விட முடிவு செய்துள்ளேன்.

விக- நிறுத்தி விட்டு………….?

துரி- படைகளைத் திருப்பி அனுப்புவோம். பாண்டவர்களுக்குப் பாதி ராஜ்யம் கொடுப்போம். சமாதான சக வாழ்வைத் துவக்குவோம்.

விக- உங்களுக்குத் தான் பைத்தியம் பிடித்திருக்கிறது. பாண்டவர்கள் பைத்தியங்கள் அல்ல. பயந்து போய்த் தான் போரை நிறுத்தினீர்கள் என்று உலகம் முழுவதிலும் பிரச்சாரம் செய்வார்கள். பாதி ராஜ்யத்துடன் திருப்தி அடையாமல் முழுவதையும் பறித்துக் கொள்வார்கள்.

துரி- பறித்துக் கொள்ளட்டும். கவலை இல்லை. இத்தனை நாள் ஆண்டாகி விட்டது. இனி எனக்கு ஒரு கிராமம் போதும். நான் தான் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமம் கொடுக்க மறுத்தேன். யுதிஷ்டிரன் அப்படிச் செய்ய மாட்டான். நமக்கு நூறு கிராமங்கள் கொடுப்பான். அதிலேயே திருப்தி அடைந்து என் மீதி வாழ்நாளை அமைதியாகக் கழிக்கப் போகிறேன்.

விக- அமைதியா? அது உங்கள் ஜாதகத்திலேயே இல்லையே அண்ணா. கிராமத் தலைவன் என்ற முறையில் கப்பத்தை ஏந்திக் கொண்டு தருமபுத்திரன் காலடியில் வைத்து விட்டுக் கை கட்டி நிற்க முடியுமா உங்களால்? அந்த அவமான வாழ்க்கையில் உங்கள் மனம் நிம்மதி அடையுமா?

துரி- அது கூட எனக்குத் தேவை இல்லை. விகர்ணா, நான் துறவி ஆகி விடுவேன். என் வயிற்றுக்குத் தேவையானதைப் பிட்சை எடுத்து உண்பேன். எனக்கு வேறு ஆசைகளும் இல்லை, அதனால் வரும் துன்பங்களும் இல்லை. அப்பொழுது நான் நிம்மதியாயிருப்பதில் என்ன தடை இருக்க முடியும்?

விக- உங்கள் ஸ்வதர்மத்துக்கு மாறான பேச்சுகளில் ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள்?

துரி- அந்தப் பிராமணரும் ஸ்வதர்மம் ஸ்வதர்மம் என்று அடித்துக் கொள்கிறார். என்னடா பெரிய ஸ்வதர்மம்? அரச குலத்தில் பிறந்து விட்டால் போர் செய்து தான் ஆகவேண்டுமா? ஜனகர் முதலான ராஜாக்கள் அரச பதவியில் இருந்து கொண்டே துறவி போல் வாழவில்லையா?

விக- அண்ணா, ஸ்வதர்மம் என்றால் குலத் தொழில் என்று பொருள் அல்ல.

துரி- பின் என்னவாம்?

விக- மனிதர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இயல்புடன் பிறக்கிறார்கள். ஒரே குலத்தில் பிறந்தவர்களுக்கிடையே ஸ்வபாவத்தில் வேறுபாடு உள்ளது. ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் இடையேயும் இதைப் பார்க்கலாம். இந்த ஸ்வபாவத்தை ஒட்டிச் செய்யப்படும் வினைகள் தான் ஸ்வதர்மம்.

துரி- நேற்று வரை நான் மூர்க்க ஸ்வபாவம் உடையவனாக இருந்தேன். இன்று என் மனம் மாறி விட்டது. அதற்கேற்ற தொழிலை நான் செய்ய முடியாதா? கூடாதா?

விக- உங்கள் ஸ்வபாவம் மாறாது அண்ணா. உங்களுக்கு மட்டுமல்ல, யாருக்குமே மாறுவதில்லை. மற்றவர்களைப் பார்த்து நாம் அது போலச் செயற்கையாக போலித்தனமாக வேஷம் போட்டுக் கொள்கிறோம். அது நிலைக்காது. இப்பொழுது நீங்கள் பேசும் பேச்சு அது போன்று போலித் தனமானது தான்.

துரி- இல்லை, விகர்ணா. என் மனம் முற்றிலும் ஆசைகளை இழந்து விட்டுக் கருணையால் நிரம்பி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் நான் தருமபுத்திரன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு விட வேண்டும் என்று துடிக்கிறது. இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கை தான் போலி. அந்தப் பாசி விலகி என் உண்மையான மனம் இப்பொழுது தான் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.

விக- எது தெளிவு, எது குழப்பம் என்பதே அறியாத மன நிலையில் இருக்கிறீர்கள் அண்ணா. இதோ உங்களைத் தெளிய வைக்கிறேன். நீங்கள் துறவி ஆகிவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். பிட்சை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு ஊர் ஊராக அலைந்து மக்களுக்குத் தர்மத்தை எடுத்துச் சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் மனதில் யார் மேலும் கோபம் துவேஷம் இருக்காது அல்லவா?

துரி- நிச்சயம் இருக்காது.

விக- அப்படி அலைந்து கொண்டிருக்கும்போது ராஜாவான தர்மபுத்திரன் தங்களைப் பிட்சை ஏற்றுக் கொள்ளக் கூப்பிட்டு அனுப்புவான். அவன் துறவிகளிடமும் தபசிகளிடமும் பெருமதிப்பு உடையவன் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி அவன் மரியாதையாகக் கூப்பிடும்போது நீங்கள் அவனது அரண்மனைக்குப் போவீர்கள் அல்லவா?

துரி- நிச்சயம் போவேன். எனக்கு அவன் மேல் கோபம் வெறுப்பு எதுவும் இல்லை.

விக- உங்களுக்கு உணவு பரிமாறப் பாஞ்சாலி வருவாள். உங்களுக்குத் தான் மனம் மாறி விட்டதே தவிர அவள் மாற்றிக் கொள்ள மாட்டாள். “என்ன மைத்துனரே சௌக்கியமா?” என்று ஏளனமாகக் கேட்பாள். கேட்டுக் கொண்டு சும்மா இருப்பீர்களா, அண்ணா?

துரி- ஏளனங்களுக்கு அப்பாற்பட்ட நிலையை நான் அடைந்து விட்டேன்.

விக- அப்பொழுது பாஞ்சாலி சொல்வாள், “நான் இன்னமும் விரித்த கூந்தலோடு தான் நிற்கிறேன். போர் இல்லாமல் செய்து விட்டீர்கள். உங்கள் ரத்தத்தைத் தடவித் தான் கூந்தல் முடிப்பேன் என்று சபதம் செய்து விட்டேன். என் கணவர்கள் அதை எடுத்துத் தர மறுத்து விட்டார்கள். இப்பொழுது நான் அதை எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டுக் கையில் கத்தியுடன் வருவாள். சுத்த வீரனாகிய நீங்கள் ஒரு பெண் கையால் குத்துப் படவேண்டுமா? மார்பைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பீர்களா?

துரி- போதும் விகர்ணா போதும். ஆ, அந்தப் பாஞ்சாலி! அவள் சிரித்த சிரிப்பு இன்னமும் என் மனதில் ஆழமான காயமாக இருக்கிறது. அவள் கையால் குத்தப்பட்டுச் சாவதை விட பீமன் கதைக்குப் பலியாவதையே நான் விரும்புகிறேன். போர் தொடங்கட்டும். சங்குகள் முழங்கட்டும். என் அறிவுக் கண்ணைத் திறந்து என் கலக்கத்தைப் போக்கினாயே, விகர்ணா, உனக்கு நன்றி.

விக- இப்பொழுது தான் அண்ணா நீங்கள் நீங்களாக இருக்கிறீர்கள். உங்களை நீங்கள் உணர்ந்து கொண்டு விட்டீர்கள். உங்கள் இயல்புப்படி போர் புரிந்து மரணம் அடையுங்கள். அதனால் உங்களுக்குப் புகழே ஏற்படும். மற்றவர் தர்மத்தைப் பின்பற்றித் துறவியானால் உங்களுக்கு அவமானம் தான் ஏற்படும். வெற்றி தோல்வி பற்றிக் கவலைப் படாமல் உங்கள் கடமையைச் செய்யுங்கள். வாழ்க உங்கள் புகழ்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “விகர்ண கீதை

  1. தங்களின் கற்பனை அருமை ஐயா! தத்தம் இயல்பிலிருந்து மாறாமல் வாழ்வதே மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களின் இயல்பு என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *