சு. கோதண்டராமன்

அதிகாலையில் ஒரு கனவு.

   அஞ்சல் என்ற கூவல் கேட்டு வாசலுக்கு வந்தேன். தபால்காரர் தன் சைக்கிளில் இருந்தபடியே, “நீங்கள் தானே சங்கரன் என்பது?” என்றார்.

“ஆம். நானே தான்.”

“பதிவுத் தபால். கையெழுத்திட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.”

   ஒப்புகைச் சீட்டையும் பேனாவையும் கொடுத்தார். அடியில் வைத்துக் கொள்ள அவருடைய கடிதக் கட்டையும் தந்தார். அதை வாங்கி சைக்கிள் ஹாண்டில் பாரில் வைத்துக் கையெழுத்திட்டு விட்டு அவரிடம் கொடுத்தபின் தான் கவனித்தேன். அது ஹாண்டில் பார் அல்ல. கொம்பு. நன்றாகப் பார்த்தேன், சைக்கிள் இருந்த இடத்தில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. தபால்காரரைப் பார்த்தேன்.

“நீர்….நீர் தான் எமன் என்பவரோ?”

“இல்லை. நான் அவருடைய பணியாட்களில் ஒருவன். இந்த வட்டார அஞ்சல்காரன். பெயர் கிங்கரன்123.”

“ஓஹோ, கிங்கரன் ஒன் டூ த்ரீ அட் எருமை மெயில் டாட் காமா!”

   தபாலைத் தந்தார். உறையில்லாத தனித் தாள். அதில் முத்துப் போல மூன்று வரிகள் எழுதப்பட்டிருந்தன.

   இன்றிலிருந்து நூறாவது நாள் நீர் நம்முடைய நரகத்துக்கு

விசாரணைக்காக வரவேண்டும்.

இப்படிக்கு,

யம தரும ராஜா உத்திரவுப்படி சித்திரகுப்தன்.

தலைமைக் கணக்கர்

என்றிருந்தது. படித்ததும் சிரிப்பு வந்தது. கிங்கரனைப் பார்த்து, “என்னய்யா கடுதாசி எழுதியிருக்காங்க உங்க ஆளுங்க, மொட்டைத் தாத்தன் குட்டையிலே விழுந்தான் என்கிற மாதிரி. உங்க யமனையும் சித்ரகுப்தனையும் நிர்வாக இயல் கல்லூரியிலே சேர்ந்து ஒரு வருஷம் பயிற்சி பெறச் செய்யணும்.”

“ஏன், என்ன விஷயம்?”

“இன்றிலிருந்துன்னா என்றிலிருந்து? எங்கேயாவது தேதி போட்டிருக்காங்களா, பாருங்க, நீங்க கடிதம் கொடுத்த தேதியிலிருந்தா? இது எழுதின தேதியிலிருந்தா? இந்த வாகனத்திலே ஏறி நீங்க வரதுக்கே பத்து நாள் ஆகி இருக்குமே. நான் எந்தத் தேதியிலிருந்துன்னு கணக்கு வெச்சுக்கறது?”

“கடுதாசி பட்டுவாடா ஆன தேதி தான் கணக்கு.”

“ஏன்யா, இப்படி எல்லாரும் அஞ்சக் கூடிய விஷயத்தைக் கொண்டு வந்திட்டு, அஞ்சல் னு கூவுறியே, எல்லாரும் போஸ்ட்னு தானே சத்தம் போடுவாங்க”.

“அந்தந்த வட்டாரத்தில் அந்தந்த மொழியில் பேச வேண்டும் என்பது எங்களுக்கு உத்தரவு.”

“தமிழ் நாட்டுக்கு வேணா வட்டார மொழி தமிழா இருக்கலாம். சென்னையின் வட்டார மொழி ஆங்கிலம் தான். இது தெரியாதா உங்களுக்கு? எந்த இசை அரங்குக்குப் போங்கள். தெலுங்கு, கன்னட, தமிழ்க் கீர்த்தனைகள் பாடுவார்கள். ஆனால் பேசுவது என்னவோ ஆங்கிலத்தில் தான். ஆன்மிக நிகழ்ச்சிகள்லே கூட நாலு வார்த்தை இங்கிலீஷ் கலக்காட்டா ஜனங்களுக்கும் புரியாது. பேசினவருக்கும் திருப்தி இருக்காது.

   “தொக்காவில் ஆங்கிலம் கலக்காமல் யாராவது பேசுறாங்களா? அன்னிக்கு ஒரு அம்மா சமையல் பகுதியிலே காப்பி போடச் சொல்லிக் கொடுத்தாங்க, கேளுங்க.”

   “டூ டீஸ்பூன் காபி பவுடரை ஃபில்டரிலே ஃபில் பண்ணுங்க. வாட்டரை பாயில் பண்ணி பவுடர் மேல போர் பண்ணுங்க. மில்க்கை பாயில் பண்ணுங்க. பெர்கோலேட் ஆன டிகாக்ஷனை ரிக்வயர்ட் குவான்டிடி எடுத்துக்கிட்டு மில்க்கோட மிக்ஸ் பண்ணுங்க. டூ டீஸ்பூன் ஷுகர் ஆட் பண்ணுங்க. காபி ரெடி. இந்தப் ‘பண்ணு’ தமிழ் தான் சென்னையின் வட்டார மொழி.”

“இன்னும் டென் லெட்டர்ஸ் டெலிவரி பண்ணணும். நோ டைம் நௌ” என்று அவர் நகர்ந்தார்.

“பாத்தீங்களா, ரெண்டு நிமிஷம் சென்னைக் காத்தைச் சுவாசிச்ச உடனேயே உங்களுக்குத் தமிழ் மறந்து போச்சு. மறுபடியும் சந்திப்போம். நூறு நாள் கழிச்சு வருவீங்கள்லே?”

“அதுக்கு வேறு நாலு பேர் வருவாங்க”.

“நீங்களும் வாங்க. அடையாளம் காட்டணுமில்லே. அவங்க பாட்டுக்கு வேறே யாரையாவது அழைச்சிட்டுப் போயிடப் போறாங்க.”

அவர் போய்விட்டார்.

   ஆக, இறுதிப் பயணத்துக்கான பயணச்சீட்டு உறுதி ஆகிவிட்டது. விடுதலை! மாதத்தில் பாதி நாள் மருத்துவர் வீட்டின் வரவேற்பு அறையில் தவம் கிடப்பதிலிருந்து விடுதலை! வீட்டில் தொக்காவின் அறுவைத் தொடர்களிலிருந்து விடுதலை! வெளியில் செல்லும்போது நெருக்கடி, இரைச்சல், பெட்ரோல் புகை, சாக்கடை நாற்றம் இவற்றிலிருந்து விடுதலை! சாலையைக் கடக்கும்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பதிலிருந்து விடுதலை! உற்சாகத்தில் மனம் துள்ளிக் குதித்தது.

   துள்ளிக் குதித்ததில் விழிப்பு வந்து விட்டது. மணியைப் பார்த்தேன்.   5-40. விடியற்காலைக் கனவு பலிக்கும் என்பார்கள். நல்ல கனவானால் தூங்கக் கூடாது, கெட்ட கனவானால் உடன் தூங்கி எழுந்திருக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரை இது நல்ல கனவு தான். இருந்தாலும் வழக்கத்தை விட 20 நிமிடம் முன்னதாக விழிப்பு வந்து விட்டது. அதனால் தூங்கிவிடுவோம் என்று தீர்மானித்துப் படுத்தேன்.

   தூக்கம் வந்தால் தானே. வழக்கமான தந்திரங்களைக் கையாண்டேன். அருவியைக் கற்பனை செய்து பார்த்தேன். ஆட்டுக் கூட்டத்தை எண்ணினேன். 100,99…. என்று தலை கீழாக எண்ணினேன். -15, -16 என்று எதிர்த் திசையில் போயிற்றே தவிர தூக்கம் வரவில்லை. மணி ஆறு ஆகிவிட்டது. எழுந்தேன்.

   கனவு பலிக்கப் போவது நிச்சயம். போவதற்கு முன் முடிக்க வேண்டிய வேலைகள் என்ன என்று யோசனை செய்தேன். ஒன்றுமில்லை. வங்கிக் கணக்குகளுக்கு எல்லாம் வாரிசுப் பதிவு இருக்கிறது. வேறு யாரிடமும் கொடுக்கவேண்டிய, வரவேண்டிய கடன் எதுவும் இல்லை. சந்தோஷமாகப் புறப்பட வேண்டியது தான்.

   எப்படிப் போகப் போகிறோம் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.  எனக்கு மட்டும் ராவணன், இரணியன் போல சாகும் வழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுக்கப்பட்டால் நான் பல ‘கூடாது’களைக் கூறுவேன். மருத்துவ மனையில் சாகக் கூடாது. சாலையில், கோயிலில், உறவினர் நண்பர் வீட்டில் கூடாது. நோய் வந்து சாகக் கூடாது. சினிமாக் கிழவர்கள் போல இருமி இருமித் தலை தொங்கக் கூடாது. தற்கொலை, விபத்து கூடாது.

   இந்தக் கனவு விஷயம் மட்டும் யாருக்கும் தெரிவிக்கக் கூடாது. என் மனைவி காதில் விழுந்தால் புராணத்து சாவித்திரி மாதிரி புருஷன் உயிரை மீட்கும் வரை போராடுவாள். இந்த நூறு நாளும் திருக்கடையூரிலேயே தங்கி இருந்து தினமும் மிருத்யுஞ்ஜய ஹோமம் பண்ண வேண்டும் என்று ஆரம்பித்து விடுவாள். ஹோமம் செய்து உயிரைக் காப்பாற்ற முடியும் என்றால் உலகில் யாருமே சாக மாட்டார்கள் என்ற வாதம் அவளிடம் எடுபடாது.

   ஆ, ஒரு விஷயம். போவதற்கு முன் என் கெட்ட குணம் ஒன்றைத் திருத்திக் கொண்டாக வேண்டும். அது என்ன என்று சொல்ல வேண்டுமா?

   இதோ, என் மனைவி ஆஸ்திரேலியாவில் உள்ள தன் தங்கையிடம் போனில் பேசுகிறாள். அதை ஒட்டுக் கேளுங்கள்.

   “இந்த மனுஷனோட காலம் தள்ளறது பெரிய ளொள்ளா இருக்கு. எப்படிக் காப்பி போட்டாலும் அதுக்கு ஒரு நொட்டாங்கு சொல்றது. ஒரு நாளைக்கு, இதுக்குப் பேரு என்னன்னு சொல்லிட்டு வை என்பார். திக்கா இருந்தா நாக்கைச் சுத்தறதே, இது காப்பியா, வடிச்ச கஞ்சியான்னு கேப்பார். கொஞ்சம் நீர்க்க இருந்தா இது கழுநீரா என்பார். சர்க்கரை குறைவா இருக்கு, இன்னும் கொஞ்சம் போடுன்னு சொல்ல மாட்டார், இந்தக் கஷாயத்தை மெதுவா உள்ளே எறக்கிட்டேன் என்பார். சர்க்கரை அதிகமா இருந்தா, என்ன விசேஷம் இன்னிக்கு பானகம் கரைச்சு வெச்சிருக்கே என்பார். நானும் எப்படி எல்லாமோ காப்பி போட்டுப் பாத்துட்டேன். இத்தனை வருஷத்திலே ஒரு நாளாவது நன்னா இருக்குன்னு சொன்னதில்லே. நீங்களே உங்களுக்கு வேண்டியபடி போட்டுங்கோன்னும் சொல்லிப் பாத்துட்டேன். அடுப்பே மூட்டத் தெரியாது. எப்படிக் காப்பி போடுவார்?”

   பாவம், அவள் மனத்தை எவ்வளவு புண்படுத்தி இருக்கேன். இந்தக் கெட்ட குணத்தை முற்றிலும் போக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம்மைப் பற்றின கசப்பான அபிப்பிராயம் தான் அவள் மனதில் நிலைத்து நிற்கும். இந்த நூறு நாளிலாவது அவள் மனம் புண்படாமல் நடந்து கொள்ள வேண்டும்.

   காப்பி வந்தது. ‘வாயைத் திறக்காதே, வாயைத் திறக்காதே’ என்று மனதுக்குச் சொல்லிக் கொண்டேன். என்னிடமிருந்து எந்த எதிர் வினையும் இல்லாததை அதிசயித்தபடியே டம்ளரை எடுத்துச் சென்றாள் மனைவி.

   மூன்று நாள் இப்படி எந்த விமரிசனமும் இல்லாமல் நான் காப்பி குடித்ததைப் பார்த்ததும் அவளுக்குப் பயம் வந்து விட்டது. மகனிடம் மெதுவாகச் சொன்னாள், “மூணு நாளா அப்பா ஒரு மாதிரியா இருக்கார்டா. சரியாப் பேச மாட்டேங்கிறார். உடம்புக்கு என்ன பண்றதுன்னு தெரியல்லே. கேட்டா ஒண்ணுமில்லேங்கறார். டாக்டர் கிட்டே தான் கேட்கணும்.”

   எனக்கு ஒண்ணுமில்லேன்னு நான் கதறியும் கேட்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். வழக்கமான மருத்துவர் தான். அவரிடம் நான் ‘தற்போது எனக்கு உடம்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மனதும் சந்தோஷமாக இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே என் மனைவி குறுக்கிட்டு, “அவர் வழக்கம் போல இல்லே, டாக்டர். பேச மாட்டேங்கறார். நீங்க நல்லாப் பாத்து மருந்து கொடுங்க” என்றாள். அவரும் நாக்கை நீட்டு, மூக்கை நீட்டு, கண்ணைக் காட்டு, முதுகைக் காட்டுன்னு சொல்லி எல்லாவற்றையும் சோதனை செய்துவிட்டு, “வெளிப்படையா ஒண்ணும் தெரியல்லே. யூரின் டெஸ்ட், ப்ளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்திடுவோம்” என்றார்.

   பல வகையான சோதனைகளுக்குப் போய் வருவதிலும் மருத்துவரிடம் காட்டுவதிலும் நாள் 92, 91, 90 என்று குறைந்து கொண்டு வந்தது. கடைசியில் ஒரு நாள் அவர், “இது உடல் சம்பந்தமான வியாதி அல்ல. நீங்கள் மன நல மருத்துவரிடம் காட்டுங்கள்” என்று சொன்னார்.

   ‘வேண்டாம், எனக்குப் பைத்தியம் இல்லை’ என்று கதறினேன். கேட்பார் இல்லை. ‘எந்தப் பைத்தியமும் தான் பைத்தியம் என்று ஒப்புக் கொண்டதாக வரலாறு இல்லை’ என்று சொல்லி விட்டார்கள். மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன்.

   மன நல மருத்துவர் பல விதமான வண்ண அட்டைகளை என் முன் பரப்பினார். மூன்று மூன்று அட்டைகளாக வைத்து, ‘நடுவில் உள்ளது என்ன கலர்?’ என்று கேட்டார். சொன்னேன். ‘வெரி குட்’ என்றார்.

   என் தலை எழுத்து. என் அறிவுத் தெளிவை இப்படி எல்லாம் நிரூபித்துக் காட்ட வேண்டி இருக்கிறது!

   “எனக்கு ஒண்ணும் இல்லே, டாக்டர். வழக்கமா என் மனைவி போடற காப்பியைப் பத்தி வேடிக்கையா கமெண்ட் அடிப்பேன். அதை நிறுத்திக் கொண்டு விட்டேன். இவர்கள் அதைப் பெரிது படுத்தி என்னை இங்கே அழைச்சிட்டு வந்திருக்காங்க” என்றேன்.

“ஏன் நிறுத்திக் கிட்டீங்க?”

“அவள் மனம் புண்படும் என்பதை உணர்ந்தேன். நிறுத்திக் கொண்டேன்.”

“இது எத்தனை வருஷப் பழக்கம்?”

“40 வருஷம்.”

“40 வருஷப் பழக்கத்தை ஒரு நாள்ல நிறுத்த முடியாது. உங்களாலே இப்போ திடீர்னு இடது கையாலே எழுத முடியுமா? ஒரே நாள்லே மாற்றம் ஏற்பட்டதுன்னா அதுக்கு அடிப்படையா ஒரு வலுவான காரணம் இருக்கணும். அடி ஏதாவது பட்டதா? கீழே விழுந்தீங்களா? யாராவது தாக்கினார்களா?”

“எதுவும் இல்லே.”

“கனவு ஏதேனும் கண்டீர்களா?”

“இல்லை.”

நல்ல வேளை. என் உடம்பில் மெய்யறி சோதனைக் கருவி பொருத்தப் படவில்லை. இருந்தால் என்னைக் காட்டிக் கொடுத்திருக்கும்.

   “மேலே போய் கம்ப்யூட்டர் டெஸ்டு செஞ்சிட்டு வாங்க” என்றார். அங்கே ஒரு கணினி முன் உட்கார்த்தி வைக்கப்பட்டேன். உங்கள் பெயர் சங்கரனா, ஆம் என்றால் ஒய் யை அழுத்துங்கள். இல்லை என்றால் என் னை அழுத்துங்கள் என்பது போல 400 கேள்விகள். கடைசிக் கேள்விக்கு நான் பதில் அளித்து முடித்ததும் கணினி முடிவுகளைத் தொகுத்து அச்சடித்துக் கொடுத்தது.

   அடுத்த அறைக்குப் போகச் சொன்னார்கள். அங்கே ஒரு கட்டிலில் படுக்க வைக்கப் பட்டேன். தலையிலும் கால்களிலும் மின் இணைப்புக் கொடுத்தார்கள். தூக்கம் வந்தது. அரை மணி நன்றாகத் தூங்கினேன்.

பின் மீண்டும் மருத்துவரிடம் போனோம்.

   “உங்களுடைய திடீர் மாற்றத்துக்குக் காரணம் ஏதோ ஒரு அதிர்ச்சியான சம்பவம் தான். அதை நீங்கள் மறந்திருக்கலாம். அல்லது சொல்ல விரும்பாமல் இருக்கலாம். ஒரு மாதத்திற்கு தினமும் வந்து ட்ரான்க்விலைசர் வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாத்திரைகளை ஆறு மாதம் சாப்பிட வேண்டும்.”

   நீர் வழிப்படும் துரும்பு போல் எல்லாவற்றுக்கும் உட்பட்டேன். முதல் நாள் மாத்திரை சாப்பிட்டதும் நாள் பூராவும் தூங்கிக் கொண்டிருந்தேனாம். பயந்து போய் மருத்துவரிடம் சொன்னார்கள். அவர் வேறு மருந்து கொடுத்தார். அதன் பின் தூக்கமே இல்லாமல் போயிற்று. மீண்டும் அவரிடம் போய் மருந்தை மாற்றி வந்தார்கள்.

   இந்தக் குளறுபடியில் ‘கவுண்ட் டௌன்’ மறந்து போயிற்று. கனவு நாள் நினைவில் இருந்தது. பிப். 5. அது முதல் 100 நாள் என்றால் மே 15. அது தான் என் இறுதி நாள் என்று மனதில் இருத்திக் கொண்டேன்.

   தினம் ஆறு வேளை மாத்திரை சாப்பிடுவது தான் பிடிக்கவில்லை. எல்லாம் கேட்ட ராவணன் மனிதரால் சாவு வரக் கூடாது என்பதை மட்டும் கேட்க விட்டு விட்டானாம். நானும் பல கூடாதுகளை வேண்டிக் கொண்ட போதிலும் மனைவியின் அன்புத் தொல்லைக்கு ஆட்பட்டுச் சாகக் கூடாது என்பதை மட்டும் கேட்கவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு இன்னும் சில நாள் தானே என்று சகித்துக் கொண்டிருந்தேன்.

   மனம் அமைதியாக இருந்தது. சொல்லும் ஒவ்வொரு சொல்லையும், செய்யும் ஒவ்வொரு செயலையும் இன்னும் சில நாட்கள் தான் என்ற எண்ணத்தை மனதில் இருத்தியே செய்தேன். வழக்கத்துக்கு மாறாக, உடம்பில் எந்த நோயும் இல்லை. வேண்டிக் கொண்டபடி அமைதியாக என் உயிர் பிரியப் போகிறது.

   ஆயிற்று. மே 15 உம் வந்தது. காலையில் வழக்கம் போல எழுந்தேன். இது கடைசி முகச் சவரம், கடைசிச் சிற்றுண்டி, கடைசி மதிய உணவு, கடைசி உணவு என்று எல்லாம் முடிந்து, கடைசி மாத்திரையும் விழுங்கியாகி விட்டது. படுக்கச் செல்லும் போது நான் காலையில் எழுந்திருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து எல்லோரிடமும் மானசீகமாக விடை பெற்றுக் கொண்டேன். படுத்தவுடன் தூங்கிவிட்டேன்.

   விழித்தேன். பொழுது விடிந்திருந்தது. வீட்டில் தான் இருக்கிறேன். அப்படியானால் நான் நேற்று இரவு சாகவில்லையா? கிங்கரன் ஒன் டூ த்ரீ, ஃபோர் ட்வெண்டி செய்திருக்கிறானா?

   அல்ல, அல்ல. அதிகாலைக் கனவு பலிக்கும் என்று நம்பியது என் அசட்டுத் தனம்.

   சாகாதது பற்றி வருத்தமில்லை. இந்த மாத்திரைத் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும்.

   காப்பி வந்தது. ஒரு வாய் உறிஞ்சினேன். இனி என்ன விரதம் வேண்டிக் கிடக்கிறது? விமரிசனத்தை ஆரம்பித்து விட வேண்டியது தான். மாத்திரையிலிருந்து விடுதலை பெற அதுவே வழி.

“இது என்ன காப்பியா, பாயசமா?”

     “ஆரம்பி்ச்சுட்டீங்களா உங்க ளொள்ளை. மூணு மாசமா நிம்தியா இருந்தேன். அம்பி, ஒங்க அப்பாவை டாக்டர் கிட்டே அழைச்சிண்டு போய் அவர் வாயை அடைக்கிறதுக்கு ஏதாவது மருந்து இருந்தா வாங்கிக் குடு.”

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அந்த நூறு நாட்கள்!…

  1. மென்மையான நகைச்சுவை இழையோடிய கதை படிக்கவும் சுவையாக இருந்தது. சாவைக் கண்டு அஞ்சாது அதை விடுதலை என்பது போல எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் பிடித்திருந்தது. நல்ல கதைக்கு நன்றி.

    அன்புடன்
    ….. தேமொழி

  2. பல இடங்களில் சிரிக்க வைத்துக் கொண்டே செல்கிறது கதை.

    //சொல்லும் ஒவ்வொரு சொல்லையும், செய்யும் ஒவ்வொரு செயலையும் இன்னும் சில நாட்கள் தான் என்ற எண்ணத்தை மனதில் இருத்தியே செய்தேன். // போன்ற இடங்களில் சிந்திக்க வைக்கவும் செய்கிறது உங்கள் கதை அய்யா. நன்றி,

  3. யதார்த்தமான சூழலை,  ஒரு சிறிய மாற்றம் கூட  எப்படியெல்லாம் தலைகீழாய்ப் புரட்டிப்போடும் என்பதை மிக அழகாக  நகைச்சுவையுடன் சொன்னவிதம் அசத்தல். மிதிவண்டியின் ஹாண்டில்பாரை எருமையின் கொம்புகளாய் மாற்றியதிலிருந்து விரதம் முறித்து கமெண்ட் அடித்தவரைக்கும் வரிக்கு வரி ரசித்தேன். பாராட்டுகள் ஐயா.

  4. பாராட்டிய அனைவருக்கும் நன்றி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.