இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (66)
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்களுடன் உங்களுடன் அடுத்த மடலில் உறவாடுவதில் மகிழ்கிறேன். காலமாற்றம் மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில் சில முன்னேற்றங்களாகவும், வேறு சில பின் தள்ளல்களாகவும் இருக்கின்றன.
ஒவ்வொரு நாடும் காலத்தோடு தனது நாட்டு மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவே அந்நதந்த அரசாங்கங்களின் மூலம் முயற்சிக்கின்றன.
ஆதிவாசிகளான காடுகளில் வாழ்ந்த மனிதன் இன்று நாகரீகமாக நகரங்களில் வசதிகளோடு வாழும் ஒரு நிலை மக்களின் தேவைகளின் நிமித்தமே சாத்தியமாயிற்று.
நான் வாழும் இந்தப்புலம் பெயர் தேசமான இங்கிலாந்து நாட்டில் மக்களின் வாழ்க்கை முறையில் காலகாலமாக பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
எத்தனையோ நூறு வருடங்களாகப் பொருளாதார வளர்ச்சியில் துரித முன்னேற்றத்தைக் கண்ட நாடு இங்கிலாந்து. பல கண்டு பிடிப்புகள், பல ஆராய்ச்சிகள் என்பனவற்றின் பிறப்பிடமாக இவ்விங்கிலாந்து தேசம் விளங்கியிருக்கிறது.
ஆனால் இன்றோ பொருளாதார வீழ்ச்சி எனும் சிக்கலுக்குள் அமிழ்ந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் ஜரோப்பிய நாடுகளில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இப்பொருளாதாரச் சிக்கலுக்கு யார் காரணம் அல்லது இது ஏன் நிகழ்ந்தது எனும் ஆராய்ச்சிகளை ஒரு பக்கம் வைத்து விடுவோம். நம் முன்னே பூதாகரமாக இருக்கும் உண்மை நாம் பொருளாதாரச் சிக்கல் எனும் நிலைக்காட்பட்ட ஒரு தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே.
அடிமட்ட மனிதனும் தன் அன்றாட வாழ்விற்கு அல்லாடக் கூடாது எனும் காரணத்திற்காகவே இங்கிலாந்தில் பல காலங்களாக “சமூக வாழ்வாதாரம் (சோஷல் வெல்வெயார்) “ எனும் ஒரு சலூகை அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது வேலையின்றித் தவிக்கும் மக்களுக்கு அவர்களின் அன்றாடத் தேவைகளுக்காக ரசாங்கம் உதவிப் பணம் கொடுத்து வருகிறது.
ஆனால் இத்தகைய சலுகையே இன்று மக்களின் சோம்பலுக்கு வித்திட்டு விட்டது எனும் கருத்தே பலரின் மத்தியில் மிகவும் பாரமான வினாவாக எழுந்துள்ளது.
வேலையின்றி அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தையே தமது தொழிலாகக் கொண்டு வாழும் ஒரு பகுதி இன்று சமுதாயத்தில் உருவாகி விட்டது என்பது அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகக் காணப்படுகிறது.
அரசியல்வாதிகளின் மத்தியில் காணப்படும் இந்த ஒருமித்த அடிப்படைக் கருத்துக்குக் காரணம் பொதுவான மக்களின் மனதில் அலையடிக்கும் பொதுக்கருத்துக் கணிப்பே.
இத்தகைய “அரசாங்க உதவிப்பண” வாழ்வாளர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருந்தாலும் இவர்களைப் பற்றிய அன்றாட ஊடகங்களின் அங்கலாய்ப்புகளும், இவர்களின் சலுகைத் துஷ்பிரயோகத்திற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் அரசாங்கத்திர்கு வரிப்பணத்தைச் செலுத்தி ஒழுங்காக வாழும் மக்களின் மனதில் ஒருவகை ஆவேசத்தைக் கிளறி விட்டுள்ளது.
இதற்கு மிக முக்கியமான காரணம் இன்றையப் பொருளாதாரச் சிக்கல் என்று சொன்னால் மிகையாகாது. அரசாங்கத்தின் வரவு செலவுக் கணக்கைச் சீர் செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துகிறோம் என்று கூறி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட இன்றைய கூட்டரசாங்கம் இந்த மூன்றரை வருடங்களில் அதற்கான வழி பல அரசாங்கத் திட்டங்களை கட்டுப்படுத்திப் பொதுத்துறைகளுக்கான செலவுகளைக் குறைப்பது என்று கூறி மக்களுக்கான சேவையில் பலரைக் குறைத்து விட்டது என்று கூறலாம்.
தாம் தமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்காகவே வரிப்பணத்தைச் செலுத்துகிறோம் ஆனால் தமக்கான சேவைகளைக் கட்டுப்படுத்தி, வேலையில்லாமல் வாழ்வோர்களுக்கான உதவிப் பணத்தை மட்டும் தாராளமாக வழங்குவது எவ்வகையில் நியாயமாகும் என்று பலரின் மனதில் சீற்றம் தோன்றியுள்ளது.
அது மட்டுமல்ல மற்றைய நாடுகளில் இருந்து அகதிகளாகவும், குடியேற்றம் செய்பவர்களும் இதே சலுகைகளைப் பெறுவது எவ்வகையில் நியாயம் என்பது வலதுசார அரசியல்வாதிகளினதும், வலதுசார எண்ணங் கொண்டவர்களினதும் வாதம்.
அதேசமயம் அரசாங்கம் செய்யும் ஆட்குறைப்பு முதலான பொருளாதாரக் கட்டுப்படுத்தும் கொள்கைகளின் மூலம் பதிவியிழந்த பலர் இத்தகைய உதவியகளைக் குறைப்பதன் மூலம் பாதிக்கப்படுகிறார்களே ! இவர்களை சோம்பேறிகள் என்று வாதிடுவது எவ்வகையில் நியாயமாகும் என்று வாதிடுகிறார்கள் மறுசாரார்.
பணிபுரியும் போது மிகவும் வசதியாக பெரிய மனைகளில் வசித்து வந்தவர்கள் பதவியிழந்த பின்பும் அதே மனையில் வசிப்பதற்கு எதற்காக அரசாங்கம் அவர்களுக்கு உதவிப்பணம் கொடுக்க வேண்டும் ? வேலையை இழந்து விட்டால் அவர்கள் தமது பெரியமனைகளில் வசிக்க வசதியில்லை என்றால் தம்மால் பராமரிக்கக் கூடிய சிறிய மனைகளுக்கு இடம் மாறவேண்டியது தானே நியாயம் என்று வாதிடுபவர்கள் பலர்.
நாம் பணிபுரியும் போது அனைவரையும் போலத்தானே வரிப்பணம் செலுத்தினோம் இப்போது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையினால் பதவியிழந்த நாம் எமது இல்லத்தை விட்டு குடிபெயர்ந்து சிறிய இல்லங்களில் வசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயமாகும் என்பது மறு பகுதியினருடைய வாதம்.
வேலையற்றோருக்கு கிடைக்கும் உதவிப்பணத்தை விட முறைவான தொலையே வேலை செய்யும் போது ஊதியமாகக் கிடைக்கிறது எனவே நாம் வேலை தேடிச் செய்வது எமக்கு நஷ்டமே என்பதால் அரசாங்க உதவிப்பணத்தில் வாழ்வதையே தமது பணியாகக் கொண்டோர்கள் இல்லாமலில்லை.
இவர்களில் பலர் இதை மிகவும் வெளிப்படையாக ஏதோ தமது புத்திசாலித்தனம் போல தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் இதை ஊடகங்கள் வேறு ஊதிப் பெரிதாக்குகிறார்கள். அதுவும் அவர்கள் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றால் அதைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
இந்த பொதுமக்களின் அபிப்பிராய அலையைத் தமக்கு சாதமாக்கிக் கொள்ள கூட்டரசாங்கத்தின் முக்கிய கட்சியான கன்சர்வேடிவ் கட்சி முயற்சிக்கிறது. அதன் பலனாக அவர்கள் கொண்டு வந்த பல புதிய சட்டங்கள் நேற்றிலிருந்து (15.07.2013) அமுலுக்கு வந்துள்ளன.
இதன் விளைவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த மடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan