விசாலம்

 

திருஞான சம்பந்தர் “எண்திசைக்கும் புகழ் இன்னம்பர் “என்று இந்தத் திருத்தல ஈசனைப் பற்றி புகழ்ந்து பாடியுள்ளார். திருநாவுக்கரசரும் இவரைப்பற்றி “இன்னம்பரான் “என்று புகழ்ந்திருக்கிறார் . இத்தலத்திருநாதன் தன் பக்தன் சுதன்மனைக் காப்பாற்ற தானே கீழ்க்கணக்கராக மாறி சோழப்பேரரசர் முன் சென்று வரவு சிலவு கணக்குகளைச் சமர்ப்பித்தார் . இது என்ன கதை? சுதன்மன் என்ற சிவபக்தனும் அவன் தந்தையும் அந்தக் கோயிலில் கணக்கர்கள். முதலில் தந்தை பார்த்துக்கொள்ள பின் சுதன்மன் அதை ஏற்றுக்கொண்டான் . தினமும் வரவு செலவுகளை சண்டிகர் முன் ஒப்பித்து விடுவது அவன் வழக்கம் . சண்டீஸ்வரரே கணக்குகளுக்கு அதிபதி.  அவரே ஆடிட்டர்.  அவர் முன்னால் தப்பு கணக்கு காட்ட முடியாது. வரவுக்கேற்ப செலவும் இருக்கும் . அதற்கெல்லாம் சாட்சி சண்டிகேஸ்வரர்தான்.

கோயில் திருப்பணி ஆரம்பமானது . பலர் நன்கொடையாக மரங்கள், சிற்பங்கள், பாறைகள் என கொடுத்தனர். அப்படிக் கொடுக்கும் போது சண்டிகேஸ்வரர் முன் நின்று தான் கொடுக்கப் போகும் பொருளைச் சொல்லி சம்மதம் வாங்கி கொடுப்பர். இதற்கெல்லாம் எழுத்து வழியாக கணக்கு வைத்துக் கொள்ளவில்லை எல்லாவற்றுக்கும் ஈசனே சாட்சி . திடீரென்று சோழ மன்னன் அந்தக்கோயிலுக்கு வந்து நடக்கும் பணிகளை பார்வையிட்டு பின் எல்லாவற்றுக்கும் ஏடுகள் மூலமாக கணக்கு காட்டவேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தார். சுதன்மன் ஈசனையே மனதில் நினைத்து கவலையின்றி வேலைகளை கவனித்தார். ஆனால் மன்னர் திரும்பவும் இதைப்பற்றி உடனே தகவல் சொல்லும்படி உத்தரவு பிறப்பிக்க சுதன்மனுக்கு இரவில் நித்திரை வரவில்லை. ஏதோ ஞாபகம் வந்ததைக் குறித்து எழுதி அனுப்பி வைக்கலாம் என்றால் பின்னால் ஏதாவது விட்டிருந்தால் தவறாகிவிடுமே ! குழம்பிப்போனான். பக்தன் கண் கலங்க விடுவாரா ஈசன்! கிளம்பிவிட்டார் தன் கணக்கர் சண்டிகேஸ்வரருடன் . சிவபெருமான் சுதன்மன் ஆனார். சண்டேஸ்வரர் கணக்குப் பிள்ளையானார் . பின் என்ன ? மிகத் துல்லியமான கணக்கு மன்னர் முன் சமர்ப்பிக்கப்பட்டது. பேரரசர் பிரமித்துப் போனார் . புகழ்ந்தார் பின் சுதன்மனுக்கு தலைமை கணக்கர் என்ற சான்றிதழ் வழங்கினார் . பின் தன்னிடம் இருந்த கணக்கர்களை சுதன்மனிடம் கணக்கு படிக்க அனுப்பிவிட்டார். நடந்த விவரம் எல்லாம் புரிந்தவுடன் சுதன்மன் “எல்லாம் என் ஈசனின் கருணை “என்று மெய்யுருகிப் போனான். சுதன்மனுக்கு உதவிய “எழுத்தறிநாதர்”எழுந்தருளியிருக்கும் இடம் தான் இந்த இன்னம்பூர் .சுதன்மன் எழுதாமல் மனதிலேயே எழுதி வைத்த கணக்கை எழுதியதலால் இவருக்கு இந்தப்பெயர் வந்ததாம்.

ஊருக்குள் நுழைந்தவுடன் எளிதாக இந்தகோயிலைக் கண்டு பிடித்து விடலாம். முதல் பிரகாரத்தில் கிழக்குத் திசையில் சூரியனைக் காண்கின்றோம். உள் பிரகாரம் மிகப் பெரிதாக இருக்கிறது. மேற்கு பகுதியில் வாகனங்கள் வைக்கும் இடம் உள்ளது. தெற்கு மூலையில் கன்னிமூலை கணபதி அருள் புரிகிறார் . பின் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி . அருள்மிகு பாலசுப்பிரமண்யர், விஷ்ணுதுர்க்கை , ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ காலபைரவர் என்று பல தெய்வங்களைப் பார்க்க முடிகிறது. இந்த ஊரில் சூரியனும் ஈசனை வழிப்பட்டாராம். இதனால் சூரியன் பங்குனி மாதம் பதிமூன்று,பதினாலு,பதினைந்து தேதிகளில் ஈசன் மேல் தன் ஒளியை வீசி வணங்குகிறார். காலை நேரத்தில் இதைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் இந்தக் கண் கொள்ளாக் காட்சியை ரசிக்கும்.

பண்டைக்காலத்தில் காலையில் மூன்று பிரகாரங்களைச் சுற்றி வந்தாலே நல்ல “வாகிங் ” தேகப் பயிற்சி என்பதை உணர்ந்து அந்தக் கால மக்களும் காலை ,மாலை இரு நேரங்களும் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் பக்தியும் பெருகியது. ஆன்மீகமும் வளர்ந்தது . மனம் தவறு செய்யும் முன் இரு முறை யோசித்தது . கோயிலுக்குச் சென்று அமைதியாய் அங்கிருக்கும் ஒவ்வொரு சிற்பங்களையும் ரசித்து கர்ப்பகிரகத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூலவரை தியானத்துடன் வணங்க அதனால் கிடைக்கும் அமைதியே தனிதான். ஓம் சாந்தி.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இன்னம்பூர் பற்றிய தகவல்!..(2)

  1. எழுத்தறிநாதர் பற்றிய தங்களின் கட்டுரை மிகவும் அருமை. மிக்க நன்றி அம்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.