ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ ! -4

1

 சு.கோதண்டராமன்

       இனி, பாட்டின் கருத்தை வேதாந்தமாக விரித்துரைக்க முடியுமா என்று பார்ப்போம். நாத உபாசனை என்ற பெயரில் இசை மூலம் இறைவனை வழிபடும் முறை நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இசையில் பாரதிக்கு இருந்த ஆர்வமும் ஞானமும் மிகுதி. அவருடைய பாடல்களில் பல பாடுவதற்கென்றே இயற்றப்பட்டவை. வந்தே மாதரம் என்ற பங்கிம் சந்திரரின் பாடலை முதலில் அகவல் பாவாக மொழிபெயர்த்த பாரதி, அது பாடுவதற்கு ஏற்றதாக இல்லை என உணர்ந்து மீண்டும் ஒரு முறை சந்தங்களுடன் தான் அதை மொழிபெயர்த்ததைக் கூறுகிறார். அவர் இசை வல்லுநராகவும் இருந்ததால் பொருளுக்கேற்ற சந்தமும் பண்ணும் அமைத்துப் பாட முடிந்தது. அவருடைய கட்டுரை ஒன்றில் அக்காலத்தில் தமிழ் நாட்டு இசை முறைகளைப்பற்றி விரிவான விமரிசனங்கள் செய்து அதை எத்திசையில் வளர்க்க வேண்டும் என்பதற்கான குறிப்புகளும் தந்துள்ளார்.

       குயிற் பாட்டு ஒரு உருவகம். இதில் இறைவன் குயிலாக உருவகப் படுத்தப் பட்டுள்ளான். ஏன் குயில்? உயிரினங்களிலே மனிதர் தவிர, பறவைகள் மட்டுமே இசை போன்ற இனிய ஓசை எழுப்பக் கூடியவை. பறவைகளுக்குள்ளே இனிய குரல் உடையது குயில். ஏழிசையாய் இசைப் பயனாய் விளங்கும் இறைவனைப் பாரதி குயிலாக உருவகித்தது பொருத்தமே.

       கதையில் வரும் கவிஞர் மானிடச் சாதியின் பிரதிநிதியாகவும், குரங்கும் மாடும் பிற உயிரினங்களைக் காட்டுவதாகவும் விளங்குகின்றனர். இறைவனின் வாயிலிருந்து நெஞ்சைக் கவரும் இனிய இசை தோன்றுகிறது. அந்த இசையின் பொருள் என்ன? வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடும் புதுவை அல்லவா? அங்கு குயில் பாட்டிலும் பாரதிக்கு வேதப் பொருளே புலப்படுகிறது.

       குயிலின் இசையில் மெய்மறந்து அதன் மேல் காதல் கொண்டு இறுதியில் அதனுடனேயே ஒன்றி விடுவதாக அமைந்த இக்கதை, இசையின் மூலம் தன்னை மறந்து, உலகை மறந்து இறைவனுடன் கலக்கும் முறையை விளக்க வந்ததே குயில் பாட்டின் வேதாந்தப் பொருளென்று காட்டுகிறது.

       குயிலின் முற்பிறப்புக் கதையை அறிவதற்கு முன், குயில் மாட்டுடனும குரங்குடனும் அன்புடன் பேசுவது பிடிக்காமல் கவிஞர் அதைக் கொல்லக் கருதுகிறார். இது இறைவனைப் பற்றி நன்கு அறியாதவர் இறைவனை நிந்திப்பதைக் காட்டுகிறது.

       தேவார திருவாசக ஆசிரியர்களும் ஆழ்வார்களும் இறைவனைக் காதலனாகக் கற்பித்துப் பாடியுள்ளனர். நாயக நாயகி பாவம் எனப்படும் இம்முறையில் பண்டைப் புலவர் எல்லோரும் தன்னைப் பெண்ணாகக் கருதிக்கொண்டு இறைவன் ஆகிய ஆண் மேல் காதல் கொள்வதாகப் பாடியுள்ளனர்.  பெண் சமத்துவம் பேண வந்த பாரதி, கண்ணன் என் காதலன் என்றும் பாடினார், கண்ணம்மா என் காதலி என்றும் பாடினார். இந்தக் குயில் பாட்டில் இறைவனைப் பெண் குயிலாகக் காட்டி, பெண்மை தான் தெய்விகமாம் காட்சியடா என்றும் கூறிப் பெண்மைக்குச் சிறப்புச் சேர்க்கிறார்.

       இறைவனை அடையும் வழியில் நான்கு படிநிலைகள் உண்டு. சாலோகம்- இறைவனின் இருப்பிடத்தை அடைதல்

சாமீப்யம்- இறைவனின் அருகாமையை அடைதல்

சாரூபம்- இறைவனைப் போன்ற உருவம் பெறுதல்

சாயுச்யம்- இறைவனோடு இரண்டறக் கலத்தல்

       இந்த நான்கு நிலைகளையும் குயில் பாட்டில் காண முடிகிறது. குயில் வாழும் மாஞ்சோலையைக் கவிஞர் சென்றடைதல் சாலோகம் ஆகும்.

       முதல் சந்திப்பில் மரத்தருகே போய் நின்று பேடே திரவியமே என்று கவிஞர் பேசத் தொடங்குவதும், அடுத்த சந்திப்பில்

காதலருள் புரிவீர், காதலில்லை யென்றிடிலோ

சாதலருளித் தமது கையால் கொன்றிடுவீர்

என்று குயிலும் எனது கையில் வீழ்ந்தது காண்

என்பதுவும் படிப்படியான சாமீப்யம் ஆகும்.

       துவக்கத்தில் மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ என்று கவிஞர் ஏங்குகிறார். கதை முடிவில்

அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு
முன்புவைத்து நோக்கிபின் மூண்டுவரும் இன்பவெறி
கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை

விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா!
ஆசைக் கடலின் அமுதமடா! அற்புதத்தின்
தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!
பெண்ணொருத்தி அங்குநின்றாள்;

என்று சொல்லும்போது இறைவன் மானிட உருவம் தரித்து கவிஞருடன் சாரூபம் அடைந்ததையும் காண்கிறோம். பக்தன் தன்னைத் தேடி வரும் வரை காத்திராமல் ‘தானே வந்தெம்மை  தலையளித்தாட் கொண்டருளும்’ இறைவனின் எளிவந்த கருணைத் திறம் இதில் காட்டப்படுகிறது.

பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண் டாங்ஙனே
நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே
முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்
சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்தேன்

என்று அவர் சொல்லும்போது சாயுஜ்ய –இரண்டறக் கலக்கும்- நிலைக்கு முந்திய படியில் அவர் இருப்பதையும் அதன் விளைவான ஆனந்தத்தை அவர் அனுபவித்ததையும் அறிகிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ ! -4

  1. மிக அருமையான விளக்கம் ஐயா! மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *