தொலைத்ததும்…….கிடைத்ததும்..! – 7

​​ஜெயஸ்ரீ ஷங்கர்

என்ன வில்லத்தனம்…என்று பாண்டியும், திமிறும் மலரை அழுத்திப் பிடித்தபடி…..அந்த அழுத்ததிலேயே சில சங்கேதங்களை உணர்த்தியவன் கண்களால் ஜாடை காட்டியது  இங்கிருந்து தப்பித்து  ஓடு…என கட்டளையிட்டது போலிருந்தது அவளுக்கு.

அவனது கைகளை அழுத்திக் கடிப்பது போல பாசாங்கு செய்து விட்டு அவனை விலக்கித் தள்ளி அறையை விட்டு வெளியேறி தலை தெறிக்க ஓடியவள் படிகளில் பதுங்கி பதுங்கி இறங்கி லிப்ட் வழியாக கீழிறங்கி அங்கு லோடு இறக்கிவிட்டுத் தயாராக நின்றிருந்த வண்டியின் கதவு சார்த்தப் படுவதற்குள் தாவி ஏறிக் கொண்டாள் .

அங்கு அடுக்கி வைக்கப் பட்டிருந்த அட்டைப்பெட்டிகளின் பின்னாலிருந்து வெளிப்பட்ட ஒரு முரட்டு உருவம்…இவளைப் பார்த்ததும், கையை ஓங்கவும், மலர்விழி அவனது காலடியில் விழுந்து நடுங்கினாள்.  காப்பாத்துங்க…..காப்பாத்துங்க அண்ணே….அவளின் குரல் உடைந்து போயிருந்தது.

சரி….சரி….உள்ளார போயி அந்த சின்ன ஜன்னல் பக்கமா குந்திக்க…நான் தான் வண்டிய ஓட்டுவேன்…பயப்படாதே…..குதித்து இறங்கியவன் கதவைப் இழுத்துச் சார்த்தி பூட்டும் போடும் சத்தம் கேட்டது.

 

மலரின் குரங்கு புத்தி, இவனையும் சந்தேகமாகவே ‘இவன் ஒழுங்கா வெளிய கொண்டு போய் விட்டு என்னைக் காப்பாத்துவானா….? இல்ல…..எதற்கும் நான் தயாரா இருக்கனும் …பாண்டி…ரொம்ப தாங்க்ஸ்ண்ணே..மானசீகமாக நன்றி கூறியவள் , வண்டியின் விரைவின் அதிர்வைக் கண்டு நாம எங்கே போயிட்டிருக்கோம்…..ஆமா…ரோட்டைப் இந்த இக்கினிக்காண்டு துவாரம் வழியாப் பார்த்தா நமக்கு எடமெல்லாம் தெரிஞ்சிடுமாக்கும்….ஏதோ அந்தத் திரிபுர சுந்தரி தாயி எனக்கு ஆதரவாயிருக்கு.நல்ல வேளையா  நாலு வேளைக்குத் தேவையான சோத்தைப் திங்கச் சொல்லிப் போட்டானுங்க. இல்லாங்காட்டி என் நெலமை….அம்பேல் தான்.

 

வியர்த்து வியர்த்து உடம்பு முழுதும் தொப்பமாய் நனைந்து போயிருந்தாலும், மூக்கை மட்டும் அந்தத் துவார சன்னலில் பதித்து காற்றை உறிஞ்சிக் கொண்டு வந்தவள், திடீரென வண்டி நின்று விட்டிருந்ததை உணர்ந்தவள், என்ன நடக்கப் போவுதோ….நெஞ்சம் முழுதும் திக் திக் திக் திக்…என அடித்துக் கொள்ள அந்த முரட்டு டிரைவர் கதவைத் திறக்கக் காத்திருந்தாள்.

 

இவள் நினைத்தது போலவே, கதவை டமார்…டிமீர் என்று பெருஞ் சத்தத்துடன் திறந்தவன்…..ஏ …புள்ள….வெளிய வா…..என்று அதட்டலாகக் குரல் கொடுக்கவும்….

 

தயங்கியபடியே தலையை மட்டும் மெல்ல நீட்டியவளுக்கு…..வெளிச்சம்….சூரிய வெளிச்சம்…..கண்களுக்குள் பிரகாசமாக வீச, தென்றல் காற்று மெல்லத் ததும்பி வந்து இவள் தலையைக் கோதி விட்டது போல தெய்வங்கள் நேரே நிற்பது போலிருந்தது மலருக்கு.

 

அண்ணே…..ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணா …..அந்த முரட்டு மனிதனின் காலில் விழுந்து குலுங்கினாள்.

 

கண்ணீர் மல்க நின்றவளைப் பார்த்தவன், ‘தங்கச்சி…..நான் பாக்குறதுக்குத் தான் முரடு…..எம்புட்டுப் புள்ளங்கள நானும் காப்பாத்திருக்கேன்…..மூச்…..! வெளிய சொல்லிப்புடாத புள்ள….என்றவன், இந்தாக் கைச் செலவுக்கு….என்று இருநூறு ரூபாயைத் கையில் திணித்தவன்…..இது கோவளம் கூட் ரோடு…..சாக்கிரதையா போய்ச்சேரு….சினிமால நடிக்க, சீரியல்ல நடிக்கன்னு வந்து இவிங்க கைல மாட்டிக்கிட்டு சக்கையா சாக்கடையில் போய் விழறது….அம்புட்டும் தலைவிதி…சொல்லிக் கொண்டே அவன் முன்பக்கக் கதவைத் திறந்து குதித்து ஏறி, ஹாரன் அடித்தபடி…விருட்டென்று காணாப் போனான்.

 

பாறைக்குள்ளும் ஈரம் இருக்குமாம்…தேரைக்காக…..நீர்..! அம்மா தாயே…நீ தான் இந்த முரட்டு டிரைவரா வந்து என்னைக் காப்பாத்தினே……திரிபுர சுந்தரி….இன்னும் கூடவே வா…உன் கோயில் கோபுரம் பார்த்தே வளர்ந்த கண்ணு…உன் தெப்பக் குளத்து மீனுக்கெல்லாம் பொரி போட்டு அதுங்க தின்னரதப் பார்த்து பார்த்து சலித்துப் போன மனசு….ஏதோ சின்ன ஆசையில அந்த ஊரையே பழிச்சுப்புட்டு இங்கிட்டு ஓடியாந்தேன். பணக்காரங்களுக்குத் தான் இந்தச் சென்னை. தனியா வந்து நல்லா மாட்டிக்கிட்டேன். ஊரப் பார்த்தா ஜம்முன்னு தான் இருக்கு…..புத்துக்குள்ளார கை விடப் போற கதையா…..நான் இந்தப் பத்து நாள்ல நாய் படாத பாடு பட்டுப்புட்டேன்.

 

ஒரு கோயில் கோபுரமாச்சும் கண்ணுல பட்டுச்சா…..அதெல்லாம் எங்கிட்டிருக்குமோ ? எந்தப் பக்கம் திரும்பினாலும்…..குச்சி குச்சியா வீடுங்க.

 

எண்ணச் சங்கிலிகள் பஸ்ஸைக் கண்டதும் டக்கென்று அறுந்தது.

 

பஸ் நிறுத்துமிடத்தில் நின்றது  பஸ், இவளைப் பார்த்ததும் கண்டக்டருக்கு மனக்குழப்பம். இவள் பஸ் ஏற வந்தவளா…இல்லை…பைத்தியக்கார வேஷம் போட்ட பிச்சைக்காரியா? பஸ்ஸே சிறிது தயங்கி நின்றது.

 

சீர்காழி……போகுமா.?

 

துட்டுகீதா….மே…..நூத்தி அம்பது ரூவா…..டிக்கிட்டு…! அதிகாரமாக வந்தது குரல்.

 

ம்ம்ம்…..இருக்குண்ணே …..ஒருவழியா ஏறிக் கொண்டாள்.

 

பஸ்ஸுக்குள் அமர்ந்திருந்த அத்தனைக் கண்களும் அவளையே ஒரு நொடி பார்த்து விலகியது. சில பார்வைகள் அளவெடுத்து கதை எழுதிக் கொண்ருந்தது.

 

பஸ் நகர்ந்து வேகம் பிடித்தது.

 

ஜன்னல் வழியாக வீசிய அனல் காற்று கூட மலர்விழிக்கு சுகமான மயக்கத்தைத் தந்தது. இத்தனை நாட்களாக தனது மனத்துள்  அடைத்துக் கொண்டிருந்த ஷீலா,மேனேஜர்,பாண்டி,இறால் மீன்கள்..அதோட முள்ளு…நாற்றம்…..என்று ஒவ்வொன்றாகத் தூக்கி ஜன்னல் வழியாக தூர  விட்டெறிந்தாள் ….கூடவே சென்னையையும் ..!

 

என் பெட்டி, என் உழைச்ச காசு அம்புட்டும் போச்சு….அம்மா எம்புட்டு சொல்லிச்சு..கேட்டனா….நான் கேட்டனா…ஒரு பெரிய தேவத கணக்காத் திமிரா சம்பாரிக்கப் போறேண்டு கிளம்பினேன். இப்ப என்னாச்சு…? உள்ளதும் போச்சு….சம்பாரிச்சதும் போச்சு..!

 

எனக்கு நல்லா வேணும். பொறந்த ஊரையும், காப்பத்துற சாமிய, பெத்தவள அம்புட்டு பேத்தையும் குற சொல்லிப்போட்டு வந்துப்புட்டேன். அதான்…..! ஒவ்வொரு பேராசைக்குப் பின்னும் ஒரு பேராபத்தும் காத்திருக்கும் போல. ஆமா…நாம மட்டும் தப்பிச்சு வந்துட்டமே…..மத்த பொண்ணுங்க….அதுங்களும் மாட்டிகிட்டு முழி பிதுங்க நின்னுச்சுங்க பாவம்…!

 

கண் டிரைவர் சீட்டுக்குப் பின்னால் இருந்த தகர ஷீட்டில் எழுதி இருந்த திருக்குறள் வாசகத்தைப் படித்தது…படித்தது….படித்தது….

 

படித்தபின் அவளுக்குள் புரிந்தது…!

 

“சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது…”

 

இது என்னவாயிருக்கும்……? இதற்கும் இப்போது நான் தப்பித்து வந்ததற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ…? அவளின் களைத்த  மனம் காரணம் தேடியது.

 

“ஒரு செயலைப்பற்றிய ஆராய்ச்சியின் முடிவு மனத்தில் துணிவு பெறுவதே ஆகும்.  அவ்வாறு துணிவு கொண்டபின் , அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும்..”

 

நான் துணிவோடு வெளியேறிட்டேன்…அதற்கு…என்னோட துணிவு என்னை காப்பாத்திச்சு…..சரி தான்….ஆனால்…அங்க இருக்குற ..மத்தவங்க….?

 

மனத்துள் எழுந்த வினாவுக்கு அடுத்த பகுதியில் எழுதி இருந்த திருக்குறள் பதிலானது.

 

“ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலுள் எல்லாம் தலை ”

மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது. அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம் மிகச் சிறந்தது ஆகும்..!

அப்படீன்னா…என்னால அவங்களையும் காப்பாத்த முடியுமா? கண்களும் மனமும் பஸ்ஸுக்குள் அலைபாய்ந்தது.

 

என்னைப் போலவே அங்கிருக்கும் அனைவரும் சுதந்திராமாக வேண்டுமே….நான் இப்போ என்ன செய்வது..?

 

திருவள்ளுவரின் படத்திற்கு அருகில் சிகப்புக் கலரில் வெள்ளை எழுத்துக்களோடு இருந்த ஸ்டிக்கர் கண்களைப் பறித்தது.

 

அதில் பதிவாகி இருந்த தொலைபேசி எண்ணைக் மனசுக்குள் குறித்துக் கொண்டவள், அடுத்த பஸ் நிறுத்ததிற்க்காக காத்திருந்தாள்.

 

மாமல்லபுரம் தாண்டி ஒரு இடத்தில் பஸ் நின்றது…பதினைந்து நிமிடங்கள் வண்டி நிக்கும்…சாபிற்றவிங்க எறங்கலாம்…..கண்டக்டர் இறங்கி நடந்தார்.

 

காத்திருந்த மலர்விழி வேகமாக இறங்கி கண்டக்டரைத் துரத்தியபடி .இந்தப் பத்து ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா.?

 

..ம்ம்.ம்ம்ம்….இந்தா…..என்று கையில் திணித்த சில்லறையை  எண்ணிப் பார்த்துக் கொண்டாள்.

 

அங்கிருந்த டெலிபோன் காயின் பாக்ஸ் டெலிபோன் அருகே நின்று…அவசரமா ஒரு ஃபோன் போடணும்.

 

எண்ணைச் சுழற்றி ரிங் டோன் வந்ததும் காசைப் போட்டு ஹலோ என்ற ஒற்றை வார்த்தைக்கு காத்திருந்து விஷயத்தை தனது மெல்லிய குரலில் பதட்டப் படாமல் சொன்னவள், கெஞ்சிய குரலில்….என்னிய மாட்டி விட்றாதீங்க…பாவம் அந்தப் பொண்ணுங்க…!

 

விஷயம் வெளியேறிவிட்ட நிம்மதியில் திரும்ப வந்து பஸ்ஸில் அமர்ந்தாள்.

 

பஸ் கிளம்பியதும் நிம்மதியில் உறங்கிப் போனாள் மலர்விழி.

 

சிதம்பரம் வந்ததும் …..கண்டக்டர் கொடுத்த நீண்ட விசில் சப்தம் காதைக் கிழிக்க, விழித்த மலர்விழி….அங்கிருந்த கடைப்பலகையில் ஊர் பெயரைக் கண்டு உயிர் வந்தவளாக இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் சீர்காழி போயிருவேன்…..அம்மா..அம்மா….ஆச்சரியப்படுவாங்க.

அப்பா….அப்பா…என்னோட இந்தக் கோலத்தைப் பார்த்தால் ….நினைக்கவே வேதனையாய் இருந்தது அவளுக்கு.

 

இரவு மெல்ல மாலை நேரத்தை விழுங்கிக் கொண்டிருந்தது.

 

நான் ஃ போன் பண்ணி சொல்லிட்டேனே,,,,இப்போ அவங்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்திருப்பாங்க…? இல்லை அவங்களும் ஏமாத்திர்வாங்களா ? நடராச மூர்த்தே….நீ தான் இதுக்குப் பொறுப்பு. நான் என்னால செய்ய முடிஞ்சத செய்தாச்சு. நானும் உன்னையத் தான் நம்பறேன். எல்லாத்தையும் காப்பாத்து. கைகூப்பி வேண்டிக் கொண்டாள் .

 

பஸ் காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த ஒற்றைப் பாதையில் குலுங்கிக் குலுங்கி ஓடியது. அவளது மனோவேகம் அதற்குள் அவள் வீட்டு வாசல் படியை ஆயிரம் முறை தொட்டு வந்தது.

 

தன்னை இறுக்கியிருந்த அத்தனை சங்கிலியிலிருந்தும் விடுபட்டவளாக உணர்ந்தவள் சீர்காழி…சீர்காழி…சீர்காழி…என்று ஜெபித்துக் கொண்டிருந்தாள்.

 

நீண்ட .விசிலுடன்……சீர்காழி….சீர்காழி….சீர்காழியெல்லாம் எறங்கு…..!

 

ஒரு கூடை மல்லிகைப்பூ தலைமேல் பூச்சொறிந்தது போல சிலிர்த்துப் போனவள் நாலுகால் பாய்ச்சலில் இறங்கி விடு விடுவென்று நடந்தாள் . சுளுக்கு வலி பறந்தது….செருப்பில்லாமல் .கல்லும் முள்ளும் கூட பூவாகிப் போனது போலிருந்தது…மலர்விழிக்கு.

 

தூரத்தில் தெரிந்த அவளது காரைவீடு….மாடமாளிகையாய் தெரிந்தது அவளுக்கு.

 

அம்மா….பசுவைத் தேடும் கன்று போல துள்ளித் துள்ளி ஓடினாள் மலர்விழி.

 

எதுவெல்லாம் அவள் அவளுக்குப் பெருமை என்று நினைத்து பொய்யான கௌரவம் பார்த்தாளோ….அதெல்லாம் அவளை விட்டு நகர்ந்து நின்று அவளை வேடிக்கை பார்த்தது.

 

வீட்டு வாசல்படியை மிதித்தும் பொன்மாரி பொழிந்தது போல உடம்பெல்லாம் சிலிர்க்க…..அம்மா…..அம்மா…அப்பா….அப்பா…!

நா….நா….நான்….மலரு…..வந்திருக்கேன்.

 

இவள் குரலுக்கே கதவு அகன்று திறந்தது. உள்ளே, பூக்களை பரப்பி வைத்துக் கட்டிக் கொண்டிருந்த அம்மா, டீயை ஆற்றிக் கொண்டிருந்த அப்பா இருவரும் முமுரமாக சன் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் , இவளைக் கண்டதும் திகைத்து ஆச்சரியத்துடன் விருட்டென எழுந்த அம்மா…

 

“யம்மாடி….மலரு ..என்னடி திடுதிப்புன்னு இப்படிச் சொல்லாமே கொள்ளாமே வந்து நிக்கிற…..எங்கடி போயிருந்த இம்புட்டு நாளு எப்பிடிம்மா இருக்கே…என்ன ஆனியோ…எங்கிட்டு இருக்கியோன்னு..துடியாத் துடிச்சிப் போனமேடி…என் செல்லமே…

இறுக்கிக் கட்டிக் கொண்டு கண்ணீர் மல்க, மறந்துட்டியேடி பாவி…அப்பாவின் கண்களில் தாரையாய் பாசம் வழிய….என்னடா ராசா …

ஒரு தகவலும் இல்லாமே தவித்தவரின் கைகளில் நடுக்கம்..!

 

என்ன கோலத்தில் வந்து இப்படி நிக்கிற…என்னாச்சு? எதைத் தொலைச்சிட்டு வந்து இப்படி பயித்தியக் காரி மாதிரி வந்து நிக்கிற…நான் அப்பமே சொன்னேனே….பட்ணம் பாளாப் போகுதுன்னு போகுறியான்னு …? அம்மா தளர்ந்து உட்கார, அவள் மடியில் முகம் புதைத்து குலுங்கியவளை ஆதரவாக முதுகைத் தடவிக் கொண்டே….

 

என்னாச்சுடி…..காத்துக் கருப்பு அடிச்சாப்புல…! என் அடி வவுறு ….கலந்குதுடி.சொல்லுடி….என்னாச்சு? எதைத் தொலைச்சே….? நீ கவலைப் படாதே…..என் தாலிக்கொடியை வித்தாவது உன்னிய நான் டீச்சர் படிப்புல சேக்குறேன்….நீ கவலைப் படாதே…நாங்க இருக்கோம்….இல்லீங்க…புள்ள எதையோ களவாணிப் பய ஊருல பணத்தை பொட்டிய களவு கொடுத்துட்டு வந்து நிக்குது..நம்ம புள்ளைய நாம படிக்க வெச்சிடலாம். சரீங்களா…..?

 

ம்ம்ம்…அதுக்கென்னாடா நாம பார்த்துக்கிடலாம்….இந்த வாட்டி நல்ல வெளைச்சல். நீ அளுவாத பாப்பா..!

 

டீவி யாருக்கோ செய்தி வாசித்துக் கொண்டிருந்தது.

 

“மர்மக் கும்பல் சிக்கியது….எங்கிருந்தோ வந்த தகவலின் பேரில் முற்றுகை இட்டதில் பெண்களைக் கடத்தும் பயங்கர மர்மகும்பல் சிக்கியது. நூற்றுக் கணக்கான இளம் பெண்கள் பல்வேறு மாநிலத்திலிருந்து கடத்தப்பட்டு அடிமைகளாக ஆட்டிப் படைத்த  வடநாட்டு மர்ம கும்பல் பலவித நாச வேலைகளில் ஈடுபட்டு வந்திருப்பது தெரிந்து அவர்களை நமது தமிழக போலீஸ் கைப்பற்றி கைது செய்து புழலில் அடைத்தது. இளம் பெண்களைக் காப்பாற்றி உரிய இடத்தில் சேர்க்கும் முயற்சியில் தனியார் தொண்டு நிறுவனம் ஆவன செய்கிறது.

இந்த செய்தி காட்டுதீ போல சென்னையில் மக்களுக்குப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

கணீரென்ற குரல் செய்திகளை வாசித்துக் கொண்டிருக்க, ஆவலுடன்  தாயின் மடியை விட்டு எழுந்தவள் , தனக்கும் அந்தச் செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல… அம்மா….நான் குளிச்சுட்டு கோயிலுக்குப் போயிட்டு திரிபுரசுந்தரிக்கி தீபம் போட்டுட்டு சூடம் கொளுத்திட்டு வாரேன் ..என்றாள்.

 

இப்பவாச்சும் சொல்லுடி….நீ எதைத் தொலைச்சே…? பணத்தையா….பெட்டியையா..? இல்ல….

 

ஷ்…..நான் தொலைச்சது…..இங்கன இப்போ கிடைச்சது….ரெண்டுமே…….”நிம்மதி ‘ தான்.வேறொண்ணுமில்லை  இந்த நிம்மதிக்கி முன்னாடி பணம் தூசி தான்மா….என்று நிம்மதி பெருமூச்சு விட்டுச் மென்மையாய் சிரித்தாள் மலர்விழி. அவள் மனசுக்குள் மகிழ்ச்சி பொங்கிப் பெருகியது.

 

மலர்விழியின் குடும்பமே இழந்த நிம்மதியை மீண்டும் பெற்றது.

முற்றும்

About ஜெயஸ்ரீ ஷங்கர்

எழுத்தாளர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க