Advertisements
Featuredஇலக்கியம்பத்திகள்

சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 7

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ

ஓரினத்தின் பழமொழிகள் அவ்வினத்தின் நம்பிக்கைகள், அனுபவங்களைக் குறிக்கும். பழமொழிகளைக் கொண்டே அவ்வினத்தின் பழக்க வழக்கங்களை மரபுகளை அறிதல் கூடும். பழைய இனமான தமிழினத்திலும் ஏராளமான பழமொழிகள் உண்டு.அவற்றுள் சில :

விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
– அப்பனுக்குப் பிள்ளை தப்பியா பிறக்கும்
– தாயைப் போலப் பிள்ளை நூலைப் போலச் சேலை
– தினை விதைத்தவன் தினை அறுப்பான் ; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

பெற்றோர்கள் சாடையில் பிள்ளைகள் பிறப்பதை அனைவரும் அறிவர்.மகனின், மகளின் குழந்தைகளைப் பெயரன் (பேரன்), பெயர்த்தி (பேத்தி) என அழைப்பது நம் மரபு. தாத்தாவின் பெயரைப் பெறுபவன் பேரன் ; அதனால் தாத்தாவின் பெயரையே பேரனுக்கும் இடும் வழக்கமும் நம்மிடையே உண்டு. இவற்றை வைத்துப் பார்க்கும் போது வழி வழி வரும் வழக்கம், பாரம்பரியம், மரபியல் பற்றி நம்மவர் அறிந்திருந்தனர் என்பது புலனாகும். இதுதான் மரபியல்.

அறிவியலின் இளைய குழந்தையான இது 19 -ஆம் நூற்றாண்டில் பிறந்தது. இதன் தந்தை ஜோகன் கிரகொர் மெண்டல். ஆத்திரிய நாட்டுக் கிறித்துவத் துறவி. தம் மடாலயத்துத் தோட்டத்தில் செடி கொடிகளை வைத்து ஆராய்ச்சி செய்து வந்தவர். பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படிப் போய்ச் சேருகிறது என்பதைக் கண்டறிந்தார். இந்த மரபியல் துறை, குளோனிங் என்ன ஸ்டெம்செல் மருத்துவம் என்ன … என்று வெகு வேகமாக வளர்ந்துவிட்டது. அறிவியலின் பல துறைகளிலும் இதன் தாக்கம் உள்ளது.

ஒரு தலைமுறையின் பண்புக் கூறுகள் அடுத்த தலைமுறைக்குப் போக வழி செய்பவை பண்பணுக்கள் (genes) என இப்போது அறிவோம். கரு உருவாகும்போதே இப்பண்பு அணுக்கள் கருவின் உள்ளே பொதிந்து வைக்கப்பட்டுள்ளன. முந்திய தலைமுறை மட்டுமல்ல பலபல தலைமுறைக்கு முந்திய தகவல்கள் கூட இவற்றுள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் வாய்ப்பும் உண்டு.

திருமூலர் தம் பாடல் ஒன்றில் புலப்படுத்தும் மரபியல் தத்துவத்தைக் காண்போம் :

“ஏய் அங்கு அலந்த இருவர்தம் சாயத்துப்
பாயும் கருவும் உருவாம் எனப் பல
காயம் கலந்தது காணப் பதிந்தபின்
மாயம் கலந்த மனோலயம் ஆனதே”.

கலவியில் ஈடுபடும் இருவரின் சாயல்கள் கருவில் பாயுமாம். இதனை இக்கால அறிவியலும் ஒப்புக்கொள்கிறது. மேற்கொண்டு திருமூலர் கூறுவது வியப்பைத் தருகிறது : தாய், தந்தையரின் மனத்திலுள்ள எண்ணங்களும் உணர்வுகளும்கூட கருவிலுள்ள குழந்தையிடம் வந்து பதியும் என்கிறார் அவர்.

கரு உருவாகும் வேளையிலேயே தாய், தந்தை இருவரின் மனத்திலுள்ள எண்ணங்களும் உணர்வுகளும் (விந்தின் வழியாகவும், கருமுட்டையின் வழியாகவும்) கருவில் பதிந்து விடுகின்றன என்கிறார். ஆக, ஆணும் பெண்ணும் நல்ல உணர்வுகள், நல்ல நினைவுகள், எண்ணங்கள் ஆகியவற்றால் நிரம்பியிருந்தால் மட்டுமே அவர்களின் கூடலால் உருவாகும் கருவும் நல்ல நிலையில் பிறக்கும். நல்லவனாக வளரும்.

அடுத்ததாக, பாடலின் முதல் வரியில்

”ஏய் அங்கு அலந்த …கரு” – எனத் திருமூலர் குறிப்பிடும் சூட்சுமத்தை அலசுவோம்.

முந்திய பிறவியில் (பிறவிகளில்) அலைந்து திரிந்து பலவேறு அனுபவம் பெற்ற உயிர் (ஆன்மா) ஆண்-பெண் கலவியினால் உருவாகும் கருவில் நுழைகிறது. முந்திய பிறவி(கள்) பற்றி ஏன் திருமூலர் இங்கே குறிப்பிடுகிறார்? ஏற்கனவே அந்த உயிர் பெற்றிருக்கும் அனுபவங்களும் உருவாகும் அக்கருவுக்குள் பாய்ந்து பதிகின்றன என்னும் கருத்தை புலப் படுத்தவே அதனைக் குறிப்பிடுகிறார்.

முன்பிறவி நினைவுகளும் உணர்வுகளும் அனுபவங்களும் கற்றுக் கொண்டவையும் கூட அந்தக் கருவினுள் நுழைந்து பதிந்து விடுகின்றன. அதனால்தான் திருவள்ளுவரும்

“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்றார் போலும்”.

பிறந்த குழந்தை இந்த அனுபவப் பதிவின் விளைவாகத்தான் தாயின் மார்பைத் தேடவும் பால் குடிக்கவும் முனைகிறது. நாம் முன்பு பார்த்த 25 தத்துவங்களையும் கருவிலேயே பெற்றுக்கொண்ட குழந்தை அவற்றைப் பயன்படுத்த விழைவதும் அந்த அனுபவங்களின் விளைவுதான். சுருக்கமாகக் கூறின் குழந்தை கருப்பையில் இருக்கும் போதே அடிப்படை அறிவுடன் இருக்கிறது பிறக்கும் போதே அடிப்படை அறிவுடன் பிறக்கிறது. இவற்றை உள்ளடக்கித்தான் கரு வெறும் பிண்டமாக இராமல் (அறிவார்ந்த) உருவமாகிறது என்கிறார் திருமூலர் (‘கருவும் உருவாம்’). இயல்பாகவே அறிவு வரப் பெற்ற குழந்தைக்கு மனமும் சேர்கிறது ; அந்தப் பிஞ்சு மனத்துக்கே உரிய லயத்தோடு (ஒன்றிப்போடு) அறிந்துகொள்ள வேண்டும் என்னும் பெரு வேட்கையோடு (மாயம்: கலந்த = பெருவேட்கை சேர்ந்த. மனோலயம் – உள்ளத் தொருமை) அறிவைத் தேடுகிறதாம்.

அறிவைத் தேடுகிறது எனக் கேட்பதற்கு வியப்பாகவே இருக்கும். அதுவும் கருவிலேயேவா? இக்கால மருத்துவ அறிவியலாரும் குழந்தை உளநல நிபுணர்களும் இவற்றை உறுதிப் படுத்துகின்றனர் :

‘The researchers say this ability to learn exists in a baby even before birth’.
(http://learningenglish.voanews.com/content/how-babies-learn-when-and-even-what-position/1582366.html)

” For years, doctors assumed that babies were born without any knowledge about the outside world. But recent research is questioning this assumption, offering clues to what babies comprehend in utero, what they remember after they’re born, and how that information prepares them for the world outside the womb. Today, doctors realize that babies begin to engage many of their senses and to learn about the world around them during the last trimester of pregnancy — and maybe even before.”

(http://www.parenting.com/article/what-babies-learn-in-the-womb).

திருமூலர் இன்னும் பல தத்துவக் கருத்துகளைக் கூறுகிறார். எடுத்துக்காட்டாக

“கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்”

என்னும் அழகான உருவகம் ஒன்றின் வழியாகத் திருமூலர் உடல் பற்றிய தத்துவத்தை விளக்குகிறார். பருவுடல்தான் வீடாம் (கூடம்). இடகலை, பிங்கலை ஆகிய இரு நாடிகளும் அந்த வீட்டில் குடிபுக வந்த இரு மங்கையராம் ; கூடம் என்பது பருவுடல். நமது உடலிலுள்ள கண், காது, மூக்கு போன்ற அவயங்களும்; இதயம், நுரையீரல், குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உள்ளுறுப்புகளும் இந்தப் பருவுடலின் அங்கங்கள்; பருவுடலைச் சார்ந்தவை. இவை அனைத்தும் இணைந்தே பருவுடல் உருவாகிறது.

நாடிகள் இந்த வீட்டைச் சார்ந்தவை அல்ல! வெளியிலிருந்து இந்த வீட்டினுள் வந்து குடியேறியவை! வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடிபுகுகிறோம் அல்லவா? அது போன்றே இடகலை, பிங்கலை ஆகிய இரு மங்கையரும் இந்தப் பருவுடலின் உள்ளே குடிவந்துள்ளனர். (“கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்’). நமது நாடிகள் அனைத்துமே சூட்சுமமானவை. நமது ரத்த நாளங்கள், நரம்புகள் போன்றவை பருவுடலைச் சார்ந்தவை; கண்ணுக்குத் தெரிபவை. ஆனால் பிராணசக்தியைச் சுமந்து செல்லும் நாடிகள் பருவுடலைச் சார்ந்தவை அல்ல. அவை நமது சக்தி உடலைச் சார்ந்தவை. எனவேதான் திருமூலர் நாடிகளை பருவுடலினுள்ளே குடிபுக வந்த மங்கையர் என வருணிக்கிறார்! இந்தக் கூடம் அழியும் நாள் வரும்போது குடிபுகுந்த மங்கையர் அதிலிருந்து வெளியேறிவிடுவர். சக்தி உடல்களுக்கும், அதிலுள்ள சக்கரங்கள், நாடிகள் போன்றவற்றிற்கும் அழிவு என்பது கிடையாது. ஆன்மா மறுபிறவி எடுக்கும் போது சக்தி உடல்களும் சக்கரங்களும் நாடிகளும் வேறொரு பருவுடலில் குடிபுகும்.

இறப்பை வெல்லும் உத்தியை இன்னொரு பாடலில் கூறுகிறார்:

“ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்

கூற்றை யுதைக்குங் குறியது வாமே’.

இதனை இக்கால அறிவியல் அறிந்து புரிந்துகொண்டால் எவ்வளவு நலம் விளையும்!

இவை போன்றவற்றை எல்லாம் விளக்கி, விரித்துக் கூறப் பல ஆயிரம் பக்கங்கள் தேவை. கோடிட்டுக் காட்டினேன்; மேலும் அறிய விழைவோர் உரையுடன் கூடிய ‘திருமந்திரத்தை’ வாங்கிப் படித்துப் பயன்பெறுக!

இனி, சைவ சமயம் கூறும் இன்னொரு தத்துவத்தைப் பார்ப்போம்; உலகின் முதற்பொருள் ‘கடவுள்’ அல்லது இறை(வன்). இது நாதம், பிந்து (விந்து) என இரண்டாக உள்ளது. நாதம் – சிவன் ; பிந்து – சக்தி. இவை இரண்டும் பின்னிப் பிணைந்து உள்ளன. சிவனை ‘ஆண் ‘ என்றும் சக்தியைப் ‘பெண்’ என்றும் சொல்வது மரபு.

இது சைவ ஆகமங்களின் கோட்பாடு. நாதம் வேறு ; பிந்து வேறில்லை. சிவன் வேறு, சக்தி வேறில்லை. ஒன்றில் இருந்து ஒன்று தோன்றும் ; ஒன்றில் ஒன்று அடங்கும்.அதாவது சிவனில் சக்தி உண்டு ; சக்தியுள் சிவன் உண்டு. இக்கருத்தை அறிவியல் (கருவியல் – embriology) மிகத் தெளிவாக விளக்குகிறது. எப்படி?

சிவன் என்பது வெறும் சடம் (matter) ; இந்தச் சிவனின் தன்மையை அறிவியல் இப்படி விளக்குகிறது : “An object at rest will remain at rest unless acted on by an unbalanced force. An object in motion continues in motion with the same speed and in the same direction unless acted upon by an unbalanced force. This law is often called “the law of inertia”. (Newton’s first law of motion).

‘சும்மா இருப்பதே சுகம்’ எனச் சும்மா அசைவின்றி இருப்பதே சிவம். இதனை இயக்கச் சக்தி தேவை. சக்தி இருந்தால் சிவம் நடக்கும் இல்லையேல் வெறுமனே கிடக்கும். இதனால்தான் பழகு தமிழில், “சக்திதான் இல்லையே, சிவனே என்று கிடக்க வேண்டியதுதானே ” என்கிறார்கள்.

ஏற்கனவே, விந்து (spermatazoa), முட்டை (ovum) பற்றி அறிந்திருக்கிறோம். இதில் விந்து உயிர் உள்ளது. உயிரின் அடிப்படைத் தன்மை அசைவு. அசையும் ஆற்றல் உள்ளதால் இந்த விந்து ‘சக்தி’ உள்ளதாகிறது. இந்த விந்து எங்கே இருக்கிறது? ஆணின் உடலில்தானே! அதாவது ஆணாகிய சிவனின் உள்ளே தானே உள்ளது. எனவே சிவத்தின் உள்ளே சக்தி இருக்கிறது அல்லவா! முட்டைக்கு உயிர் கிடையாது. உயிர் இல்லாத முட்டை வெறும் சடம்தான். இந்த சடத்தைத்தானே ‘சிவம்’ என்கிறோம். இந்தச் சடம் (சிவம்) எங்கே உள்ளது? பெண்ணின் உடலில்! பென்மைதானே சக்தி. ஆகவே சக்தியாகிய பெண்ணின் உடலில் முட்டையாகிய சடம் இருக்கிறது. எனவே, சக்தியுள் ‘சிவம்’ (சடம்) இருப்பது உண்மைல்லவா! சிவத்துள் சக்தியும் சக்தியுள் சிவமும் இருப்பதாகக் கூறும் சைவ சமயத் தத்துவத்தை அறிவியல் (கருவியல்) இப்படியாக உறுதி செய்கிறது. இதே கருத்தை அதாவது சிவத்தில் (சடத்தில் – matter -இல்) இருந்து சக்தியும் சக்தியில் இருந்து சிவமும் (சடமும்– matter) தோன்றலாம் என்னும் கருத்தை ஐன்ஸ்டீன் என்ற மேதையின் சமன்பாடும் உறுதி செய்கிறது. இவர்தம் புகழ்பெற்ற, எளிய, சிறிய சமன்பாடு: E=mC2 . இதில் E என்பது ஆற்றலைக் குறிக்கும். m என்பது matter (சடம்). C ஒளியின் வேகத்தைக் குறிக்கும். ஒளியின் வேகம் ஏறக்குறைய வினாடிக்கு 300 000 மீட்டர்கள். இக்கணக்கின் படிப் பார்த்தால், மிகச் சிறிய துகள் (சடம்) ஒன்றை ஆற்றலாக மாற்ற முடிந்தால் கிடைக்கும் (வெளிப்படும்) ஆற்றல் மிகப் மிகப் பேரளவாக இருக்கும். இதனால்தான் அணுக்குண்டு ஆற்றல் மிக்கதாக அழிவு மிக்கதாக உள்ளது!!

இதனையே திருப்பிப் பார்த்தால்? அதாவது மிகச் சிறிய துகள் ஒன்றை உருவாக்கத் தேவைப்படும் ஆற்றல் மிகப் பேரளவினது ஆகும். இப்பேரளவு ஆற்றலுக்கு எங்கே போவது? இதனை மனிதனால் உருவாக்க முடியுமா? அதனால்தான் மனிதனால் எதனையும் ஆக்க முடியவில்லை; ஆக்கவும் முடியாது. (ஆனால் துகளை அழித்துப பேராற்றலை வெளிப்படுத்தி அழிவு செய்ய முடியும்!).

ஆக, சைவ சமயம் கூறும் இத்தகு தத்துவங்கள் உண்மை, உண்மை என இக்கால அறிவியல்(கள்) கட்டியம் கூறுகின்றதே (கூறுகின்றனவே!).

சக்தியும் சிவனும் இணைந்திருப்பதற்கு உவமை: மெழுகுதிரி அல்லது அகல் விளக்கு. திரியின் அடியில் (கரு)நீலப் பகுதி தென்படும். மேலே சிவந்த மஞ்சள் நிறம் ஒளிரும். Several zones of a candle flame can be seen with the eye. At the bottom is a region that gives off blue light. Further up the flame is a region that is substantially opaque and which gives off yellow light. சிவனின் நிறம் சிவப்பு; சக்தியின் நிறம் நீலம் என்பர். காண்க :

“நீல சுந்தரி கோமளி யாமளி

நாட கம்பயில் நாரணி பூரணி

நீடு பஞ்சவி சூலினி மாலினி …… யுமைகாளி”

(அருணகிரிநாதரின் திருப்புகழ் – பாடல் 727).

“முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;

கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!” – என்கிறார் காளமேகப் புலவர். முண்டகம் என்பது தாமரை மலர். அதாவது தாமரை மலரின் செம்மை நிறத்தை உடையவர் சிவபெருமான். அதே போல் குவளை மலரின் நீல நிறத்தை உடையவர் சக்தி உமையாள். தாமரை மலரின் செம்மை நிறத்தை உடைய சிவபெருமான் தன்னில் சரிபாதியை குவளை மலரின் நீல நிறத்தை உடைய சக்தி உமையாளுக்குக் கொடுத்திருக்கிறார். எனவே தாமரைப்பூவில் குவளை மலரின் நீல நிறம் படிந்துள்ளது (பூத்ததுண்டு) என்றும் இக்காட்சியைக் காண முடியும் என்றும். அதற்கான சான்றுகள் ஏட்டிலோ அல்லது நாட்டிலோ கிடையாது என்றும் கூறியுள்ளார் புலவர்.

இதுவரை எந்த சமயமும் கூறாத இத்தத்துவத்தை அடுத்துக் காணப் போகிறோம். அந்தத் தத்துவத்தின் உண்மைத் தன்மையை அறிவியல் (கருவியல்) ஏற்கனவே நிறுவி உள்ளது. அஃது என்ன?

______________________________

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (4)

 1. Avatar

  நல்ல  கட்டுரை. தவமியற்றும் முனிவர்களும், ரிஷிகளும் ஆராய்ச்சியாளர்கள், அனுபவ ஆய்வுக்கு தம்மை உட்படுத்தும் போது சிரஞீவி சித்தர்களானார்கள்.  அவர்களின் அனுபவ வாக்கு எப்படி பொய்க்கும் ? சக்தி சிவத்தின் தத்துவத்தை சரியாக அறிந்து தக்க வார்த்தைகளுடன் விளக்கியுள்ளீர்கள். பாராட்டுகள்.

 2. Avatar

  அன்புடையீர்!
  வணக்கம்.
  தங்கள் பாராட்டுக்குப் பணிவான நன்றிகள்.

  பயில் தொறும் பயில் தொறும் நூல் நயம் போலும்
  நவில் தொறும் நவில்தொறும் நம் முன்னோர் அறிவுத் திறம் வியக்க வைக்கிறது.

  நனி நன்றியன்
  பெஞ்சமின்

 3. Avatar

  ’சிவசக்தி’ தத்துவத்தை எளிமையாகவும், அழகாகவும் விளக்கியுள்ளீர்கள் ஐயா. பாராட்டுக்கள்!
  தாங்கள் குறிப்பிட்டுள்ள,
  “ஏற்றி யிறக்கி யிருகாலும் பூரிக்குங்..” எனத் தொடங்கும் திருமந்திரப் பாடலின் எண் என்ன என்று தெரிவித்தீர்களானால் அப்பாடலின் பொருளை அறிந்துகொள்ள வசதியாயிருக்கும்.
  கட்டுரையைத் தொடர்ந்து வாசிக்க ஆவலாயிருக்கிறேன். நன்றி!

 4. Avatar

  அன்புடையீர்!
  வணக்கம்.

  எளிமையும் தெளிவுமே நல்ல எழுத்துகளின் அடையாளங்கள்.
  நல்ல எழுத்துகளைத் தெளிவாய்க் கண்டுபிடித்துப் (கண்டு, பிடித்து /படித்துப் )
  பாராட்டும் தங்கள் எளிமைக்கும் அளிமைக்கும் நன்றிகள் பல.

  கம்ப இராமாயணம் மட்டும் அல்ல திருமந்திரம் போன்ற பாடல் கோவைகளிலும்
  பாடல் எண்கள் பதிப்புக்குப் பதிப்பு -பதிப்பகத்துக்குப் பதிப்பகம்) வேறு படுகின்றன.
  அதனால் குழப்பமே விளைகிறது.
  ஆகவே பாடல் எண்களைக் குறிப்பிடாமல் எழுதுகிறேன்.
  அப்படிக் குறிப்பிட நேர்ந்தால், எந்த பதிப்பு என்பதையும் குறிப்பிட்டுவிடுவேன்.

  தாங்கள் கேட்ட பாடல் : எண் 571.

  ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
  காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
  காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
  கூற்றை யுதைக்குங் குறியது வாமே.571.

  இணையதளத்தில் இதன் சுட்டி :
  http://thirumoolarthirumandhiram.blogspot.fr/2013/07/1-883.html
  வேறொரு தளத்தில் இதே பாடல் 564 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  எனவே கவனமாய்க் கண்டு தெளிக!

  திருமந்திரத்துக்கு இப்போது நிறைய உரைகள் வந்துள்ளன
  வாங்கும் முன்பு நூலைப் பரட்டிப் பார்த்து உங்கள் தேவைக்கு ஏற்ற
  உரை நூலைத் தேர்ந்து எடுக்கவும்.

  நனி நன்றியன்
  பெஞ்சமின்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க