Author: பவள சங்கரி

  • புதிய அரசிற்கு நம்பிக்கையின் பாராட்டு விழா!

    இன்று ஈரோட்டில், புதிதாக அரசு அமைத்துள்ள, த.வெ.க கட்சியின் மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு விஜய் பாலாஜி அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் திரு கே.கே. ஆனந்த மோகன் அவர்களுக்கும், ஈரோட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு பாராட்டு விழா, பல்வேறு அமைப்புகளின் மூலம் மிகச் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.
    இருவரும் மிக யதார்த்தமாக, இயல்பான உரை வழங்கியது மக்களிடையே மிகப்பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றது. மக்கள் முன்னிலையில் தாங்கள் எக்காரணம் கொண்டும் எந்த வகையிலும் 1 உரூபாய் கூட கையூட்டு பெறாமல், நேர்மையான முறையில் மக்கள் பணி ஆற்றப்போவதாக உறுதி மொழி அளித்தார்கள். தங்கள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் தங்களுடைய ஆட்சி நிரந்தரமாக இன்னும் பல காலங்களுக்கு தங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆசிகளுடன் இந்திய அளவில் தொடர உறுதி கொண்டுள்ளதாகவும் பேசி அசத்தியுள்ளனர். இது உண்மையாக நடந்தால் மகிழ்ச்சிதான் என்ற நம்பிக்கையுடன் மக்கள் கைதட்டி வரவேற்றனர். ஈரோட்டில் கைத்தறித்துறையிலும், துணிகள் தயாரிப்பு, சாயக்கழிவுகள் என்று பலப்பல பிரச்சனைகள் தீர்வு காணப்பட வேண்டியுள்ளன . மிகப்பெரிய நம்பிக்கைகளுடன் மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். காலம்தான் பதில் சொல்ல வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம். ஈரோடு மாவட்டத் தமிழியக்கத்தின் சார்பாக, மாவட்டச் செயலாளர் என்ற முறையிலும், வல்லமை இணைய இதழ் சார்பாகவும், தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை சார்பாகவும் நம் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டோம். நலமே விளைக என்ற நம்பிக்கையுடன் நகர்கிறோம் ……

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 38

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 33 சாக்கிய நாயனார்

    பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!

    ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்ற்!

    வாழி திருநாவலூர் வன்றொண்டர் பதம் போற்றி!

    ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!

     

        

    தொண்டை நாட்டில், திருச்சங்க மங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் சாக்கிய நாயனார். சாக்கியர் என்பது சாக்கிய மதத்தைச் சார்ந்தவர் என்ற பொருளாகும். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் தெரியவில்லை. இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அனைத்து உயிர்களிடத்தும் அருளுடையவராக விளங்கிய சாக்கியர், பௌத்த மதத்தில் ஞானம் பெற முயன்றவர், இறைவன் திருவருளால் சிவநெறியே உயர் நெறி என்று உணர்ந்தார். காஞ்சிபுரத்தில் ஏகாம்பர நாதரைத் தொழுதார். ஆனாலும் அவர் சாக்கிய உடையை மாற்றிக் கொள்ளாமல் அதே உடையிலேயே இருந்தார்.

    “வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
    மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்”

     என்று சுந்தரமூர்த்தி நாயனார் இவரைப் புகழ்கின்றார்.

     

    காணாத அருவினுக்கும்

      உருவினுக்கும் காரணமாய்

    நீள் நாகம் அணிந்தார்க்கு

      நிகழ் குறியாம் சிவலிங்கம்

    நாணாது நேடியமால் நான்

      முகனும் காண நடுச்

    சேணாரும் தழல் பிழம்பாய்த்

      தோன்றிது தெளிந்தாராய்.

     

    சிவலிங்க வழிபாடே சிறந்தது என்று மனம் தெளிந்த சாக்கியர் உள்ளம், நாள்தோறும் சிவலிங்கத்தைக் கண்ட பின்னரே உண்ண வேண்டும் என்ற முடிவை மேற்கொண்டார். வெட்டவெளியில் கேட்பாரற்று இருந்த ஒரு சிவலிங்கத்தைக் கண்டு களிப்புற்றவர், செய்வதறியாது அருகிலிருந்த ஒரு கல்லை எடுத்து சிவலிங்கத்தின் மீது எறிந்து வழிபட்டபோது சிவபெருமானும் அக்கல் அடியை இனிமையாக அன்புடன் ஏற்றுக்கொண்டார்.  இறைவன் மீது கொண்ட அளவிலாத அன்பினாலே அவன் திருவருளையே நினைந்து தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே கல் எறிந்த சாக்கியரை எம்பெருமான் மகிழ்ந்து ஏற்றார். மறுநாளும் சாக்கியர் சிவபெருமானைக் கண்டு களிக்க வந்தார். முதல் நாள் நடந்த நிகழ்வுகளைப் பற்றி எண்ணிப் பார்த்தவர், தாம் செய்த அச்செயல் இறைவன் திருவருளாலே நடந்துள்ளது என்று உணர்ந்து நாளும் அதையேச் செய்வது இறைவன் திருவுளம் என்றும் உணர்ந்தார்.

     

    சாக்கியரின் கல்லெறியும் வழிபாடு இங்கனமே தொடர்ந்தது. ஒரு நாள் கல் வழிபாட்டைச் செய்ய மறந்து உணவு உண்ண அமர்ந்தவர், எம்பெருமானுக்கு கல்லெறியாமல் உண்ண வந்துவிட்டோமே என்று பேரன்புடன் கல்லை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார் சாக்கியர். அப்போது அவர் முன் சிவபெருமான் உமாதேவியுடன் தோன்றி திருக்காட்சி வழங்கினார். தேவாதி தேவர்களுக்கும் கிடைக்காத பெரும்பேறு சாக்கிய நாயனாருக்குக் கிடைத்தது. அவருக்கு சிவலோகமும் அன்போடு வழங்கினார் எம்பெருமான்.

     

    சாக்கிய நாயனார் புராணம் சொல்லும் கருத்து

     

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரே நாயனார் சாக்கிய நாயனார். இவர் அனைத்து உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார். சிவபெருமானை வழிபடுவோர் மலர் தூவியும், பதிகங்கள் பாடியும் வழிபடுவது வழக்கம். ஆனால் சிவபெருமானைக் கல்லெறிந்து வழிபட்டு, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார்.

    பிறப்பதும், இறப்பதும் மனித இனத்தின் சாபக்கேடு என்பதை உணர்ந்த சாக்கிய நாயனார், நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்லப் போகிறோம் என்றும் சிந்திக்க ஆரம்பித்தார். பிறப்பையும், இறப்பையும் தவிர்க்க வேண்டுமென்ற கருத்து அவர் எண்ணத்தில் ஆழமாக ஊன்றிவிட்டது. கல்வியில் கரையிலாக் காஞ்சி மாநகருக்குச் சென்றார். காஞ்சி மாநகர் தத்துவக் கோட்டையாகத் திகழ்ந்த பொற்காலம் அது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சீன நாட்டில் இருந்து பலர் காஞ்சி மாநகர் வந்து தத்துவம் பயின்று சென்றதாகவும் வரலாறு அறியத் தருகின்றது. சாக்கிய நாயனார் காஞ்சி மாநகர் சென்று பல நூல்களை ஆராய்ந்து, பல அறிஞர்களின் உரைகளைக் கேட்டுத் தாமும் அறிஞராய்த் திகழ்ந்தார்.

     

    பௌத்தர்களின் அரிய  “திரிபிடகம்” என்ற கலை நூலைக் கற்று அதன் துணிபாகப் பெறப்பட்ட முடிபும் இன்னும் மற்றப் புறச்சமயங்களின் சார்பாகக் கூறும் முடிவுகளும் உண்மைப் பொருள் அல்ல என்ற உண்மையைத் தெளிந்தார். தத்துவத்தின் ஈர்ப்பால் சாக்கிய மதத்தைச் சேர்ந்தவர், இறைவன் திருவருளால் சிவநெறியே உயர்நெறி என உணர்ந்தார். ஆனாலும் சாக்கியர் தோற்றத்திலேயே இருந்தார். சிவநெறியில் சிந்தை இருந்தாலும் புறத்தே சிவ வேடம் தரிக்காமல் சாக்கிய வேடத்திலேயே இருந்தார்.

     

     

    எந்நிலையில் நின்றாலும்

      எக்கோலம் கொண்டாலும்

    மன்னிய சீர்ச் சங்கரன் தாள்

      மறவாமை பொருள் என்றே

    துன்னிய வேடம் தன்னைத்

      துறவாதே தூய சிவம்

    தன்னை மிகும் அன்பினால்

      மறவாமை தலை நிற்பார்

     

    வினை என்பது சடம். வினைச்செயல் செய்கின்ற உயிர் செய்கின்ற செயல், செயலுக்கேற்ற பலன், பலனைக் கூட்டுகின்ற இறைவன் இந்த நான்கும் சைவத்திற்கு அடிப்படை. இறைவன் வினைப்பயனைக் கூட்டுவிக்கின்றான். எந்த நிலையில் ஒருவர் நின்றாலும், எந்தக் கோலத்தைக் கொண்டாலும், நிலையான சிறப்புடைய சிவபெருமானின் திருவடிகளை மறவாமையே உண்மையான உறுதிப் பொருளாகும், எனத் துணிந்து சாக்கியர் வேடம் தரித்தவாறே சிவபெருமானை வணங்கி வந்தார்.

     

    செய்வினையும் செய்வானும் அதன்

      பயனும் கொடுப்பானும்

    மெய் வகையால் நான்காகும் விதித்த

      பொருள் எனக் கொண்டே

    இவ்வியல்பு சைவநெறி அல்ல

      வற்றுக்கு இல்லை என

    உய்வகையால் பொருள் சிவன் என்று

      அருளாலே உணர்ந்து அறிந்தார்.

     

    கண்ணுக்குத் தெரியாத அருவமாய் உள்ள மேனிக்கும், கண்ணுக்குத் தெரியும் உருவ மேனிக்கும் மூலமான இருப்பிடமாகி, நீண்ட பாம்பினை அணிந்த எம்பெருமான் சிவனை அறிந்து வழிபட சிறந்த அடையாளமான குறியாய் விளங்கும் சிவலிங்கம் தேடிய திருமாலும், நான்முகனும் காணுமாறு அவர்கள் நடுவே அனல் தூணாகித் தோன்றிய வடிவமே ஆகும் எனத் தெளிவு கொண்டார்.

     

    செய்யும் வினை ஒன்று. செய்பவனான கருத்தா ஒன்று. பயன் ஒன்று. அதனை வழங்கி ஊட்டுபவனான இறைவன் ஒன்று என உண்மை காணும் வகையினால், விதியினால் கிடைக்கும் பொருட்கள் நான்காகும் என்ற தெளிவும் கொண்டார். இந்தச் சிறப்பு இயல்புநிலை சைவநெறி அல்லாத மற்ற நெறிகளுக்கு இல்லை என்ற துணிபையும், நிலை பெறும் தவத்தால் சிவபெருமானின் துணையால் பொருளாவது சிவனே ஆவார் என்பதனையும் உணர்ந்து அறிந்து கொண்டார்.

     

    அகம் நிறைந்த பேர்

      உவகை அடங்காத ஆதரவால்

    மகவு மகிழ்ந்து உவப்பார்கள்

      வன்மை புரிசெயலினால்

    இகழ்வனவே செய்தாலும் இளம்

      புதல்வர்க்கு இன்பமே

    நிகழும் அது போல் அதற்கு

      நீள் சடையார் தாம் மகிழ்வார்.

     

    எப்போதும் செயலுக்கு முக்கியத்துவம் இல்லை. செயல்புரிவார் உள்ளத்தில் திகழும் நினைவுகளுக்கே முதன்மை கொடுக்கிறோம்.

     

    கல்லாலே எறிந்ததுவும் அன்பான

      படி காணில்

    வில்வேடர் செருப்பு அடியும்

      திருமுடியில் மேவிற்றால்

    நல்லார் மற்று அவர் செய்கை

      அன்பாலே நயந்து அதனை

    அல்லாதார் கல் என்பார்

      அரனார்க்கு அஃது அலராமால்.

     

    சாக்கிய நாயனார் அச்செயல் தொடங்கிய நாளில் இறைவர் அருள் செய்த அச்செயல் இடையறாது தொடர்ந்து செல்லும் கடமையை எண்ணுபவராய்க் கல்லைச் சிவலிங்கத்தின்மீது எறிபவராய்த் துவராடையை அணிகின்ற சாக்கிய வேடத்தையும் தொடர்ந்தார். பெருந்தவமுடைய சாக்கிய நாயனார் சிவபெருமானின் அருட்செயலே அனைத்தும் என்ற உணர்வுடையவராக விளங்கினார். கல்லால் எறிந்த செயலும் அன்பால் செய்யும் தொண்டே என்பதற்கு ஆதாரமாக, வில்வேடரான கண்ணப்பரின் செருப்படியும், இறைவரின் திருமுடியில் பொருந்தப் பெற்ற தன்மையை அறிவோம். நாயனார் அன்பால் விரும்பிய அச்செயலை, அவர் எறிந்தது கல் என்பர் அறியாதார். ஆனால் அது எம்பெருமான் சிவனுக்கு மனமிக்க மலரேயாகும்.

     

    சிவபெருமானை வழிபட தூய அன்பும், உண்மையான பக்தியும் இருந்தால் போதும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கல்லெறிந்து வழிபட்டு, கயிலாய பதவியைப் பெற்றவர் சாக்கிய நாயனார். வீரட்டானேசுவரருக்கு எதிரே சாக்கிய நாயனார் திருமேனி கையில் கல்லுடன் காணப்படுகிறது. வீரட்டானேசுவரர் திருமேனி மீது சாக்கியர் கல்லால் எறிந்ததால் ஏற்பட்ட வடுவும் காணப்படுகிறது. இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

     

    “திருச்சிற்றம்பலம்”

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 37

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 32 சோமாசிமாற நாயனார்

     “அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் போற்றப்படும் சோமாசிமாற நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.
    பாடல் பெற்ற திருத்தலமான, மாஞ்சோலை சூழ்ந்த ஊரான ‘அம்பர்’ மாகாளம் (தற்போது “கோவில் திருமாளம்’ என அழைக்கப்படுகின்றது),  சோழ வளநாட்டில் அமைந்துள்ள ஒரு புண்ணியத் தலமாகும். இவ்வூரில் வேதங்கள் பயிலும் மறையவர் குலத்தில் அவதரித்தவர் சோமாசிமாற நாயனார். சோமயாகம் செய்பவர்கள் சோமையாசி என்று அழைக்கப்பட்டனர். இதுவே பின்னாளில் சோமாசிமாற நாயனார் என்று மாறியுள்ளது. தவறாது மழைபொழியவும், உலகம் செழிக்கவும் செய்யப்படும் யாகமே சோம யாகம். இவர் சிவனடியார்கள் என்றால் அவர் எக்குலத்தவராயினும் பேதம் பாராட்டாது தொண்டு செய்வதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார்.

    அம்பர்நகர் அந்தணர்சோ மாசி மாறர்

        அன்பர்களாம் யாவர்க்கும் அன்பின்அமு த்ளிப்பார்

    உம்பர்நிகழ் வகையாகம் பலவுஞ் செய்யும்

        உண்மையினார் ஐந்தெழுத்தும் ஓவா நாவார்

    நம்பர்திகழ் திருவாரூர் நயந்து போற்றும்

        நாவலர் கோன் அடிபரவும் நன்மை யாலே

    இம்பர்தொழ உம்பர்பணிந்து ஏத்த வேலை

        ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

    எந்நாளும் சிவத்தலங்கள் தோறும் சென்று சிவதரிசனம் செய்து, சிவபெருமானின் “நமச்சிவாய” எனும் திருவைந்தெழுத்தை சித்தந் தெளிய ஓதும் ஒழுக்கம் உடைய இவர் தம் இளம் வயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு வேண்டிய பொருள் உதவிகளையும், உணவுகளையும் அளிப்பதைத் தமது தலையாயக் கடமையாகவும் கொண்டிருந்தார்.

    பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்த, சோமாசிமாற நாயனார்  பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலமான திருவாரூர் திருக்கோவிலுக்குச் சென்ற சோமாசிமாற நாயனார் தேவாசிரியத் திருமண்டபத்தைத் தொழுது நின்றார். அப்போது சுந்தரமூர்த்தி நாயனார் பரவை நாச்சியாரோடு திருவாரூர் திருக்கோவிலுக்கு வந்திருந்தனர். சோமாசிமாற நாயனார் அவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பாதம் பணிந்து வழிபட்டார். இந்த நேரத்தில் சோமயாகத்தின் இறுதியில் சமர்ப்பிக்கப்படும் அவிர்ப்பாகத்தை எம்பெருமானே நேரில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. சுந்தரரின் பாதம் பணிந்தால் எம்பெருமானை எளிதில் அணுகமுடியும் என்று எண்ணியவர், சுந்தரரின் நட்பைப் பெறும் முயற்சியில், தினமும் அவருக்கு தூதுவளைக் கீரையைப் பறித்து பரவை நாச்சியாரிடம் அளிப்பார். பரவை நாச்சியாரும் சுந்தரருக்கு கீரையை சமைத்துப் போட, அவரும் தினமும் அவருக்கு யார் அந்த தூதுவளைக் கீரையைத் தருகிறார் என்று கேட்டார்.

    பரவை நாச்சியாரும், அவருக்கு சோமாசிமாற நாயனாரை அறிமுகம் செய்துவைத்தார். பணிந்து நின்ற சோமாசி மாற நாயனாரைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், அவர்களுக்கு வேண்டுவது யாது என்று வினவினார். சோமாசிமாற நாயனாரும், தாம் செய்ய இருக்கும் சோமயாகத்தின் அவிர்ப்பாகத்தை எம்பெருமான் தாமே வந்து பெற்றுக்கொள்ள ஆவண செய்ய வேண்டும் எனத் தம் மனத்தின் ஆசையை அவரிடம் வெளியிட்டார். ஈசன் நிகழ்த்த இருக்கும் திருவிளையாடலைத் தம் மனக்கண்ணில் முன்னரே அறிந்துகொண்ட சுந்தரரும், இறையருளால் அனைத்தும் நலமாகும் என்று உறுதியளித்தார். வேள்விக்கான நாளும் வந்தது.

     

    வேள்வி நிறைவுபெறும் தருணத்தில் அவிர்ப்பாகத்தை சமர்ப்பிக்க வேண்டுமென அனைவரும் ஈசனின் வருகைக்காகக் காத்திருந்தபோது, பறை ஒலியும் கேட்டது. தெருவில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு வேடன் பறையை இசைத்தபடி, தோளில் இறந்த மானின் உடல் கிடக்க நடந்து வந்துகொண்டிருக்கிறார். கைகளில் நான்கு நாய்களைக் கட்டி இழுத்துக்கொண்டு வரும் அவருடன், தலையில் மதுக்குடத்தைச் சுமந்தபடி வந்த அவர் மனைவி,  தன் முதுகில் இரு பிள்ளைகளையும் கட்டிக்கொண்டிருந்தாள்.

     

    ஆனால் சோமாசிமாற நாயனாரோடு வேள்வியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் வேடரைக் கண்டதும், அதை அபசகுனமாகக் கண்டு அங்கிருந்து விலகி ஓடியபோது சோமாசிமாற நாயனாரோ, அனைத்தையும் அறிந்திருந்தவராக அவிர்ப்பாகத்தை எடுத்தார். நேரே அந்த வேடனிடம் எடுத்துச் சென்று அவரிடம் நீட்டினார். சுற்றியிருந்தவர்கள், எம்பெருமானுக்குத் தரவேண்டிய அவிர்ப்பாகத்தை பைத்தியக்காரத்தனமாக ஒரு பாவப்பட்ட மனிதனுக்குத் தருகிறாரே என்று கோபப்பட்டனர். அப்போதும் சோமாசிமாற நாயனாரோ மிகுந்த பக்தியோடு பணிந்து நின்று அவிர்ப்பாகத்தை வேடனின் கைகளில் அளித்தார். அப்போதுதான் அங்கு அந்த அதிசயம் நடந்தது. அந்த வேடன் நாயனார் அளித்த அவிர்ப்பாகத்தைப் பெற்ற அதே கணத்தில் இடப வாகனாக உமையம்மையோடும், விநாயகரோடும், முருகப் பெருமானோடும் பிரகாசமாகக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியைக் கண்ட ஊர் மக்கள் மகிழ்ந்து கொண்டாடினர். ‘காட்சி கொடுத்த நாயகர்’ என்ற பெயரும் சோமாசிமாற நாயனாருக்கு உண்டாயிற்று.

     

    சோமாசிமாற நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    புகழ், பயன் என ஏதும் கருதாது உலக நலன்களுக்காகச் செய்யப்படும் வேள்விகளால் உலகத்தில் துன்பம் நீங்கும், மழை பொழியும், வளம் பெருகும் என்பது ஆன்றோர் வாக்கு.

    கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே

    செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

    முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே

    பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

    என்பார் ஞானசம்பந்தப் பெருமான்.

    ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
    கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
    அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!

    என்னும் அப்பர் பெருமானின் வாக்கிற்கிணங்க, ஒருவர் எந்தக் குலத்தில் பிறந்தவராயினும் அவர் ஈசருக்கு அன்பர் என்றால் அவர் நம்மை ஆளும் குருநாதர் என்று இயல்பினர். எப்போதும் சிந்தை தெளிய சிவன் ஐந்தெழுத்தை ஓதுபவர். அப்படிப்பட்ட அடியவர்கள் யாராயினும் வேறுபாடு கருதாது அவர்களைப் போற்றி வணங்கினார்.

    எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு

      அன்பர் என்றால்

    அத் தன்மையர் தாம் நமை

      ஆள்பவர் என்று கொள்வார்

    சித்தம் தெளியச் சிவன்

      அஞ்செழுத்து ஓதும் வாய்மை

    நித்தம் நியமம் எனப்

      போற்றும் நெறியில் நின்றார்

    அடியவர்களுக்குள் சாதி, இனம் பாராது, சிவபெருமானை அவர்கள் உருவில் கண்டு வணங்கல் வேண்டும். இக்கொள்கையை சோமாசிமாற நாயனார் கடைபிடித்து இறைவனையும், இறையடியார்களையும் போற்றினார். நாயன்மார்களில் அனைத்துப் பிரிவைச் சேர்ந்தவர்களும் உள்ளார்கள். தீண்டத்தகாதவராகப் பயிர் பார்த்துக் கொண்டிருந்த நந்தனாரிலிருந்து, வேடர் (கண்ணப்பர்), செம்படவர் (அதிபத்த நாயனார்) , வண்ணார் இனத்தைச் சேர்ந்தவர் (திருக்குறிப்புத் தொண்ட நாயனார், குயவர் (திருநீலகண்டர்) என்றும், சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்கள் வரையில் அத்தனை சாதிகளையும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பார்க்கிறோம். இவர்களில் ஞானசம்பந்தர் உள்பட பன்னிரண்டு வைதிக பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் சோமாசிமாற நாயனாரும் ஒருவர்.

    எம்பெருமானுக்குத் தரவேண்டிய அவிர்ப்பாகத்தை பைத்தியக்காரத்தனமாக ஒரு பாவப்பட்ட மனிதனுக்குத் தருகிறாரே என்று கோபப்பட்டபோதும், அத்வைதத்தின் அரும்பொருள் அறிந்த சோமாசி மாற நாயனாருக்கு அந்தக் காட்சியின் பொருள் விளங்கியது. அந்த வேடர் பிடித்துவந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்கள் என்றும் கொம்பு, தாரைத் தப்பட்டைகளை எல்லாம் இந்திராதி தேவர்கள் என்றும் புரிந்துகொண்டார். அருகில் இருந்த வேடரின் மனைவியை அன்னை பார்வதி என்றும் அவள் முதுகில் இருக்கும் இரு மழலைகளும் ‘விநாயகனும் முருகனும்’ என்றும் தெளிந்தார்.

     

    திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்தலமான திருமாளம் எனும் தலத்தில் ஆண்டுதோறும், சோமயாகப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பெருவிழாவில் தியாகராசப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். முன்னதாகக் காலை 9 மணியளவில், சுந்தரமூர்த்தி நாயனாரும், பரவை நாச்சியாரும் யாகசாலைக்கு எழுந்தருளி சோமயாகத்தைத் தொடங்கி வைப்பர். சோமயாகம் செய்வதன் மூலம் மழைபொழியும் என்பது நம்பிக்கை. திருமாகாளம் மகாகாளநாதர் கோயிலில் பிராகாரத்தில் சோமாசிமாற நாயனார் அவர் மனைவி சுசீலை தனி சந்நிதி உள்ளது. இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

     

    “திருச்சிற்றம்பலம்”

     

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்

    தொண்டை நாடு சான்றோர் உடைத்து, எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித்த தொண்டை நாட்டில், நீர் வளமும் நில வளமும் மிக்க ஊரான திருவேற்காட்டில், வேளாண்மை குலத்தில் தலைமை சார்ந்த பெரியார் ஒருவர் வாழ்ந்தார். திருநீற்றினையே மெய்ப்பொருளாகக் கருதியவர், சிவனடியார்களுக்கு அன்புடன் திருவமுது படைத்து, அவர்களையே சிவமெனக் கருதித் துதித்துப் பின்னர் தாம் உண்ணும் நியதியைக் கொள்கையாகக் கொண்டவர்.

    தொண்டைவள நாட்டுவளர் வேற்காட் டூர்வாழ்

        தொல்லுழவர் நற்சூதர் சூது வென்று

    கொண்டபொருள் கொண்டன்பர்க்கு அமுத ளிக்குங்

        கொள்கையினார் திருக்குடந்தை குறுகி யுள்ளார்

    விண்டிசைவு குழறுமொழி வீணர் மாள

        வெகுண்டிடலான் “மூர்க்கர்” என விளம்பும் நாமம்

    எண்டிசையும் மிகவுடையார் அண்டர் போற்றும்                                                 

        ஏழுலகும் உடனாளும் இயல்பி னாரே

    அடியார்கள் விரும்பும் அனைத்தையும் அவர்களுக்கு அன்புடன் அளித்து அமுதும் செய்வித்து வந்தார் மூர்க்க நாயனார். அடியவர்கள் திரண்டு வர ஆரம்பித்ததால் அவர் தம் உடைமைகளை விற்றும் திருத்தொண்டு செய்து வந்தார். இருப்பினும் மேலும் அத்தொண்டு செய்வதற்குப் போதிய பொருள் இன்மையால், முன்பு அவர் கற்ற சூதாட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். அதன் மூலம் பொருள் ஈட்டி அடியவர்களுக்கு அமுது படைக்க எண்ணினார். ஆனால் அவ்வூரில் சூதாடுவோர் இல்லாமையினால் அவ்வூரை அகன்று ஒவ்வொரு சிவத்தலங்களுக்கும் சென்று, அவ்வூரிலுள்ள சிவபெருமானை உள்ளம் உருகி வழிபட்டுப் பின் சூதாடி அதன் மூலம் வரும் பொருளினால் அடியவர்க்கு அமுது ஊட்டி வந்தார்.

    பெற்றம் ஏறிப் பலிக்கு வரும்

      பெருமான் அமரும் தானங்கள்

    உற்ற அன்பால் சென்று எய்தி

      உருகும் உள்ளத்தொடும் பணிந்து

    கற்ற சூதால் நியதியாம்

      கடனும் முடித்தே கருதாரூர்

    செற்ற சிலையார் திருக் குடந்தை

      அடைந்தார் வந்து சில நாளில்

    பின்னர் கும்பகோணத்தை அடைந்து அங்கே சூதாடிப் பொருள் தேடி தம் கடமையை நிறைவேற்றியவர், சூதிலே முதல் ஆட்டத்தில் தோற்றவர் பின்னாட்டங்களிலே பல முறையும் வென்றவர் பொருள் பெற்றார். சூதிலே மறுத்தவர்களை மூர்க்கமாக உடைவாளை உருவிக் குத்தியதால், நற்சூதர் மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்றார். சூதினால் பெற்ற பொருளை அடியார்களுக்கு திருவமுது செய்தபின் கடைப்பந்தியில் அமர்ந்து தம் பசியாறினார்.

    சூதினில் வென்று எய்தும் பொருள்

      துரிசு அற்ற நல் உணர்வில்

    தீது அகல அமுது ஆக்குவார்

      கொள்ளத் தாம் தீண்டார்

    காதலுடன் அடியார்கள் அமுது

      செயக் கடைப் பந்தி

    ஏதம் இலா வகை தாமும் அமுது

      செய்து அங்கு இருக்கும் நாள்.

    எம்பெருமானின் அடியார்களுக்கு அன்றாடம் அமுது படைத்தவர், அப்பெருமக்களின் அருளால் அனைத்துத் துன்பங்களும் நீங்கப் பெற்று இவ்வுலகை விட்டு இறையடி நிழல் சென்று சார்ந்தார்.

    மூர்க்க நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    “உலகினிலென் செயலெல்லா முன்விதியே நீயே உண்ணின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றாய் என்றும் நிலவுவதோர் செயலெனக்கின்றுன் செயலேயென்றும் நினைவார்க்கு வினைகளெலாம் நீங்குந்கானே” என்று சிவஞான சித்தியாரிலும்,

    “எல்லா முன்னுடைமையே எல்லாமுன் அடிமையே எல்லாமுன்னுடைய செயலே” – “அறிந்தபடிநின்று சுகநான் அவ்வண்ணமாகாமை இவ்வண்ணமாயினேன் அதுவுநின் செயலதென்றே கல்லாத வறிஞனுக்குள்ளே யுணர்த்தினை” – “சந்ததமுமெனது செயல் நினது செயல் யானெனுந் தன்மை நினையன்றியில்லாத் தன்மையால் வேறலேன்” என தாயுமான சுவாமிகள் பாடலிலும்,

    “என்செயலாவதி யாதொன்றுமில்லை இனித்தெய்வமே உன் செயலே என்றுணரப் பெற்றேன்” என பட்டினத்தடிகள் பாடலிலும் வருவன கொண்டு, செய்யும் செயல் யாவும் சிவனருளால் மட்டுமே நடைபெறுவதை அறியத் தருகின்றனர்.

    ஐம்பெரும் பாவங்களில் ஒன்றான சூதாட்டத்தை இறையடியாரான ஒரு நாயனார் செய்வது தகுமோ என்ற வினா எழுவது இயல்புதானே. ஆனால் இந்நாயனார் அந்த சூதாட்டத்தை தம் மகிழ்ச்சிக்காகவோ அல்லது தம் குடும்பத்திற்காகவும், சுய நோக்கிற்காகவும் செய்திருந்தால் அது மாபெரும் தவறாகும். ஆனால் நாயனார் தாம் முன்பு கற்ற அந்த சூதாட்டத்தை தம் வாழ்வு வளம் பெற பயன்படுத்தவில்லை. தம் உடைமைகள் அனைத்தும் தீர்ந்து விட்ட பிறகு வேறு வழியின்றி அடியவர்களின் நலன் கருதி அந்த சூதாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். அடியார்களுக்கு அமுது படைக்கவும், அவர்களுக்குத் தேவையான பொருட்களை அள்ளி வழங்க வேண்டும் என்ற தம் கொள்கை நிறைவேறவும் அவர் இறுதி வரை பாடுபட்டார். பொதுவாகவே அடியார்கள் தாம் கொண்ட கொள்கைகளை நிறைவேற்ற தம் உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். அதனால் வரும் பாவத்தை ஏற்கவும் அவர் தயாராக இருந்தார். அந்த வகையில் அவர் சூதாடி வந்த பொருளில் தனக்காகவோ, தன் குடும்பத்தினர்க்காகவோ ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை.

    “செய்தற்கரிய செயல்பலவுஞ் செய்து சிலர் எய்தற்கரியதனை எய்தினர்கள் ஐயோ நாம் செய்யாமை செய்து செயலறுக்கலாயிருக்கச் செய்யாமை செய்யாதவாறு” என்று திருக்களிற்றுப்படியார் கூற்றினாலும்,

    “நடமாடுங் கோயில் நம்பர்க் கொன்றீயிற் படமாடுங் கோயிற் பகைவற் கதாமே” எனத் திருமூலர் திருவாய் மலர்ந்தருளியதாலும் அறிய முடிகிறது.

    வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்       

    மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா

    எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்       

    ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்

    நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்       

    நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்

    அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்       

    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                   

     

    நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்        

    நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்

    கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி        

    கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்

    குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்        

    கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்

    பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்        

    பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே. 

    சுந்தரர் தேவாரம்

     

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 35

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 30  தண்டியடிகள் நாயனார்

     

     

    சோழநாட்டுத் திருத்தலங்களில் முக்கியமான ஒன்றான திருவாரூர் எனும் திருத்தலம் நால்வர் பெருமக்களால் பாடப்பெற்ற அருட்தலமாம். நம்பியாரூரர் வலது கண் பெற்ற திருத்தலம் என்பதோடு ஆரூரருக்கு இறைவன் தோழமை கொடுத்த மிகத் தொன்மையான அருட்தலமும் இதுதான். “நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” என்று தண்டியடிகள் நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகையில் புகழப்படும், சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டிருந்த தண்டியடிகள் நாயனார், செங்குந்தர் மரபில் அவதரித்தவர். பிறந்தபோதே கண்காணார், புறக்கண்ணால் உலகத்தைக் காண இயலாத இவர் தம்முடைய அகக்கண் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தார். கண் காண்பது சிவன் மெய்த்தொண்டே என்று சிவன் கழல் போற்றித் திருத்தொண்டின் நெறி நின்றவர் இவர்.

    திருவாரூர் வருந்தண்டி யடிகள் காட்சி

        சேராதார் குளந்தொட்டற்கு அமணர் சீறிக்

    “குருடா! நீ முன்செவிடுங் கூடிற்று” என்று

        குறித்தறியைப் பறித்தெறியக் கொதித்துத் தங்கண்

    அருளாலே விழித்தெவரும் அந்தராக

        அமணர் கலக் கம்பலகண் டவர்கள் பாழிப்

    பருவான கற்பறித்தா விக்கரையுங் கட்டிப்

        பரனருளால் அமருலகம் பற்றி னாரே.

    தண்டியடிகள் நாயனார், அன்றாடம் தண்டியடிகள் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்குச் சென்று தேவாசிரிய மண்டபத்தை வணங்கி,  ஆலயத்தை வலம் வந்து, ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து, சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தார். திருவாரூர்க் கோயிலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கமலாலயம் எனும் திருக்குளம், பெருமானுக்குத் தீர்த்தக் குளமாகவும், அடியவர்கள் குளிப்பதற்கும் உரியதாகும். அங்கு வாழ்ந்த சமணர்கள், ஒரு நாள் அங்கு பாழிகளும், பள்ளிகளும் அமைத்ததால் குளத்தின் இடமும் குறைந்தது. இதனை அறிந்த தண்டியடிகள் அக்குளத்தினை தூர்வாரி அகலப்படுத்தவும் எண்ணினார்.

    பிறவியிலேயே பார்வையற்றவராக இருந்தும் குளத்தினை சீரமைக்கும் திருத்தொண்டினைச் செய்தவர். அதற்கு வழிகாட்டும் வகையில் குளத்தை அகலமாக்கும் குழிவாயில் ஒரு தறியையும், குளக்கரையில் ஒரு தறியையும் நட்டார். இரண்டையும் ஒரு கயிற்றால் இணைத்தார். குளத்தில் இறங்கி மண்ணைத் தோண்டி ஒரு கூடையில் எடுத்தவர் அதைக் கரைமேட்டில் கொட்டினார். தண்டியடிகள் நாயனாரின் இந்தத் தொண்டால், வெகு விரைவிலேயே குளம் சுத்தமாகி, ஆழம் ஏற்பட்டு, தண்ணீர் பெருகத் தொடங்கியது. தண்டியடிகள் நாயனாரின் செயலைக் கண்ட சமணர்கள் பொறாமை கொண்டு, இத்தொண்டினைக் கண்டு வெதும்பியவர்கள், மண்ணைக் கிளறினால் அதில் உள்ள சிற்றுயிர்கள் அழிந்து போகும் என்று கூறி அதனைத் தடுத்தனர்.

    சிவபெருமானுக்குத் தான் செய்யும் இப்பணியால், சிறு உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களுக்கும் எவ்விதத் தீங்கும் நேராது என்றார். ஆனால் அவர்கள் தாங்கள் கூறிய அறிவுரை காதில் விழவில்லையா, கண்தான் இல்லை காதுமா செவிடு என்று கேட்டவர்களிடம்,

    “சிவபெருமான் திருவடிகளன்றி வேறு ஒன்றையும் நான் காணவில்லை. காண விரும்பவும் இல்லை. சிவபெருமானின் திருவருளால் என் கண் காணப்பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றார்.

    அதற்கு சமணர்கள் தண்டியடிகளிடம், அவர் தம் கடவுள் அருளால் கண் பெற்றால் தாங்கள் அந்த ஊரை விட்டே சென்றுவிடுவதாகக் கூறியவர்கள், அவர்தம் கரத்திலிருந்த மண் வெட்டியையும், கூடையையும் பிடுங்கி எறிந்தனர்.

    மிகவும் வருந்திய தண்டியடிகள் நாயனார், ஆரூர் பெருமானின் திருமுன் நின்று, தனது துன்பத்தை நீக்கி அருள்புரிதல் வேண்டும், என்று கண்ணீர் மல்க வேண்டியவர், அப்படியே தூங்கியும் போனார். அவரது கனவில் தோன்றிய எம்பெருமான், “மனக்கவலையை விடு. உன் கண்கள் நாளை ஒளி பெறும். உன் தொண்டினைத் தடுத்துப் பழித்துப் பேசியவர்கள் கண்களை இழப்பார்கள்” என்று அருளினார். அன்று இரவே சோழ அரசனின் கனவிலும் தோன்றி, “தண்டியடிகள் நாயனார் செய்யும் கமலாலய குளத் திருப்பணிக்கு ஊறு விளைவிக்கும் சமணர்களின் வழக்கினை முடித்து வை.” என்று கட்டளையிட்டார். சோழ அரசன் கண்விழித்து எழுந்து திருவாரூரை அடைந்தவர், தண்டியடிகளைச் சந்தித்து நடந்தவைகளைக் கேட்டறிந்தார். பின்னர் சமணர்களை அழைத்து விசாரித்தார். சமணர்கள் இறையருளால் தண்டியடிகளுக்கு கண்ணொளி கிடைத்துவிட்டால் திருவாரூரைவிட்டு வெளியே செல்வதாக ஒப்புக்கொண்டதையும் தெரிவித்தனர். மறுநாள் இருத்தரப்பினரையும் அழைத்துக் கொண்டு குளத்திற்கு வந்தார் சோழ அரசன். அடிகளாரைப் பார்த்து, அவரை கண் பெறும் நிகழ்வினைச் செய்து காட்டும்படி கூறினார். தண்டியடிகள் நாயனார் இறைவனை மனத்தால் வழிபட்டு திருவைந்தெழுத்தை ஓதியபடி குளத்தில் மூழ்கி எழுந்தபோது, கண்கள் செம்மையாகக் காண ஒளிபெற்று எழுந்தார். வானவர்கள் பூமாரி பொழிந்தனர். தண்டியடிகள் நாயனார் பார்வை பெற்ற அதே நேரம் அவர்களைச் சுற்றியிருந்த சமணர்கள் கண்பார்வை பறி போனது. தண்டியடிகள் நாயனாரின் இறை பக்தியை எண்ணி அனைவரும் பரவசம் அடைந்தனர். சமணர்கள் அனைவரும் தங்கள் நிலையை எண்ணி வருந்தியபடி ஊரை விட்டே புறப்பட்டு போய்விட்டனர்.

    ஏய்ந்த வடிமை சிவனுக்கியா னென்னி லின்றென் கண்பெற்று
    வேந்த னெதிரே திருவாரூர் விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்;
    ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே யாவ” தென்றே யஞ்செழுத்தை
    வாய்ந்த தொண்ட ரெடுத்தோதி மணிநீர் வாவி மூழ்கினார்.

    தண்டியடிகள் நாயனார் தான் எண்ணியபடி, திருக்குளத்தை அரசரின் உதவியுடன் பெரிதாகக் கட்டி முடித்தார். தண்டியடிகள் நாயனாரின் அறப்பணியை அரசரும், மக்களும் கொண்டாடி பெருமிதம் கொண்டனர். அதன்பிறகு பல காலம் இறைவனுக்குத் தொண்டு செய்து வந்த தண்டியடிகள் நாயனார் சிவபெருமான் திருவடி நிழல் சார்ந்தார்.

    தண்டியடிகள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    “முகத்திற் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்” திருமந்திரம்.

    சிவன் கழல் அல்லது வேறு காணாத அக நோக்கு உடைமையன்றிப் புறத்தில் வேறு எதையும் காணாதவர் என்ற குறிப்பினால் பிறந்தபோதே கண்காணார் கண் காண்பது சிவன் மெய்த்தொண்டே என்று சிவன் கழல் போற்றித் திருத்தொண்டின் நெறி நின்றார். அகக்கண் காட்சியாகிய ஞானக்கண் காட்சிக்கு சிவம் அல்லாது  வேறு ஒன்றும் தோன்றாது. அகக் காட்சியில் சிவதரிசனம் பெற்றோர் புறக்காட்சியாகிய மற்றெந்த உணர்வுகளும் முற்றாக அற்றிருப்பர் என்பதற்கிணங்க இந்நாயனார் பிறப்பிலேயே புறக்கண் அற்றவராய்ப் பிறந்துள்ளார் என்பதை சேக்கிழார் பெருமான்,

    “தண்டியடிகள் திருவாரூர் பிறக்கும் பெருமைத் தவமுடையார்

    அண்டவாணர் மறைபாட ஆடுஞ்செய்ய கழல்மனத்துக்

    கொண்ட கருத்தி னகநோக்குங் குறிப்பே யன்றிப் புறநோக்குங்

     கண்டவுணர்வு துறந்தார்போற் பிறந்த பொழுதே கண்காணார்”

    என்பார்.

    எனவே, “நாட்டம்மிகு தண்டிக்கும் (மூர்க்கர்க்கும்) அடியேன்” என்னும் இத்திருத்தொண்டத்தொகை வாக்கு நிற்றல் அறியப்படும்.

    “காணுங் கண்ணாற் காண்பது மெய்த் தொண்டேயான கருத்துடையார்” என அடுத்துவரும் சேக்கிழார் திருவாக்காலும் அறியப்பெறும்.

    “கந்தை மிகையாங் கருத்து” எனத் திருநாவுக்கரசு நாயனார் புராணத்திலும் வருவனவற்றாலும் விளங்கப் பெறும்.

    எவ்வகைப் பற்றுதலுமின்றி முழுமையாகச் சிவன் பேரிலும் சிவன் சார்பிலும் பணி செய்து கிடப்பவர்க்கு சிவ புண்ணியம் எனப்பட்டு, அதன் தரமும் தகுதியும் உயர்வாகும்.

    “நானவனென் றெண்ணினர்க்கு நாடுமுளமுண் டாதல்

     தானென ஒன்றின்றியே தானதுவாய் –

    நானென வொன்று இல்லென்று தானே எனுமவரைத்

    தன்னடி வைத்து இல்லென்று தானும் இறை”

    எனச் சிவஞான போதத்திலும்,

    “யாதே செய்து மியாமலோ நீ என்னில் ஆதே என்னும் அளவில் பெருமையான்” எனத் தேவாரத்திலும்,

    “சிவனுமிவன் செய்தியெல்லா மென்செய்தி என்றுஞ் செய்ததிவனுக் கெனக்குச் செய்ததென்றும் பவமகல உடனாகி ஏன்று கொள்வன்” எனச் சிவஞான சித்தியாரிலும் வருவனவற்றால் அறியப்படும்.

    தண்டியடிகள் நாயனார் புறக்கண் இன்மையாகிய தமது மீப்பெரும் குறைபாட்டின் இடையிலும், அகக்கண் கூர்மை மிகப் பெற்று, திருவாரூர்த் திருக்கோயிலின் திருக்குளத்துக்கு அநீதியான முறையில் ஏற்பட்ட அவலத்தை உற்றுணர்ந்து தாமே தனி ஒருவராய் நின்று திருக்குளத் திருப்பணியாற்றிய சீர்மை சிவத்திருப்பணியைத் தம் இலட்சியமாகக் கொண்டு சைவத்திருப்பணி வரலாற்றின் பொன் எழுத்துக்களாற் பொறித்துப் போற்றப்படும் தகைமையுடைவரானார்.

    திருச்சிற்றம்பலம்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 34

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 29 – திருமூல நாயனார்

    ‘நம்பிரான் திருமூலன்’ அடியார்க்கும் அடியேன், என்று ஆரூரர் தம் திருத்தொண்டத் தொகையில் போற்றிப் புகழும் திருமூல நாயனார், சைவ சமயத்தில் காலத்தால் முதிர்ந்தவர் மட்டுமின்றி கருத்தால், எண்ணத்தால், சிந்தையால் முதிர்ந்தவர் என்று அறியப்படும் ஆகச்சிறந்த சிவயோகி ஆவார். திருக்கையிலை மலையின் திருக்கோயிலுக்கு முதற்பெரும் நாயகரான திருநந்திதேவர், இந்திரன், மால், அயன் முதலிய தேவர்களுக்கு நெறி அருள்கின்ற திருவருள் பெற்றவர். இத்தகைய நந்தி தேவரின் திருவருள் பெற்ற சிவயோகிகளில் ஒருவர் என்ற பேர் பெற்றவர். திருமந்திரத்தில் திருமூலர் என்று குறிப்பிடப்படும் இவர் சுந்தரநாதன் அன்று அழைப்பட்டவர்.

    “நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
    என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே” 

    திருமூலரின் பழைய நண்பராகிய, பொதிகையில் எழுந்தருளியுள்ளஅகத்திய மகாமுனிவருடன் சில நாட்கள் தங்கியிருக்க விரும்பியவர் கயிலையினின்றும் புறப்பட்டுத் தென் திசையை நோக்கி வந்தார். திருக்கேதாரம், நேபாளம், காசி, திருசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, சிதம்பரம் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே ஆவடுதுறைப் பெருமானை வணங்கத் திட்டமிட்டார்.

    ஒருநாள் அந்தத்தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்தினில் பசுக்கூட்டங்கள் அழுது கொண்டிருப்பதைக் கண்டார். சாத்தனூரில் மூலன் எனும் இடையன் அவைகளை மேய்க்கின்றவன். அன்று அவன் அவ்விடத்தில், பசும்புல்வெளியில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவன் மீது உள்ள அன்பினால் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கதறி அழுதன.

    பசுக்களின் துன்பத்தைக் கண்ட சிவயோகியார், எம்பெருமானின் திருவருளால் அப்பசுக்களின் துயரத்தை நீக்க  வேண்டும் என்று முடிவெடுத்தார். தம் திருமேனியை ஒரு பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்துவிட்டு, மூலனின் உடலிலே தன் உயிரைப் புகுத்தினார். பசுக்களின் துயரத்தைப் போக்குவதற்காக திருமூலராய் எழுந்தார். மூலனை மோந்த பசுக்கள் அளவற்ற மகிழ்ச்சி கொண்டன. திருமூலநாயனார் அது கண்டு திருவுளமகிழ்ந்து, அவைகள் மேயுமிடத்திற் சென்று மேய்த்தார். மகிழ்ந்து, துள்ளிக் குதித்து, மேய்ந்திருந்த பசுக்கள் அந்தி நேரத்தில், பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனூரை அடைந்தன. சிவயோகியார் அப்பசுக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம் தத்தமது வீடுகளுக்குச் செல்லத் தாம் வெளியிலே நின்றார்.

    மூலனுடைய மனைவி தன் கணவனைத் தேடி வந்தவள், சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, அவருடைய திருமேனியைத் தீண்ட, அவர் விலகி நின்றார். திருமூலநாயனார், தனக்கும் மூலனின் மனைவிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று மறுத்து, ஒரு பொது மடத்தினுள்ளே புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி கவலை கொண்டிருந்தவள் மறுநாள் அதனை ஊர்ப்பெரியவர்களிடம் சென்று முறையிட்டாள். தன் கணவனுக்கு சித்தம் பேதலித்துவிட்டதாகவும் கூறினாள். திருமூலனைக் கூர்ந்து கவனித்த அப்பெரியவர்கள் அவர் சிறந்த ஞானியாகத் தெரிவதாகவும், சிவயோகியாராகத் தெரிவதாகவும் கூறி, அவரை இனி அவள் என்றும் சேர முடியாது என்று புரிய வைத்து திரும்ப அழைத்துச் சென்றனர்.

    சிவயோகத்தில் இருந்த திருமூல நாயனார் எழுந்து, பசுக்கள் வந்த வழியே சென்று தாம் மறைத்து வைத்திருந்த தம் உடலைக் காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, சிவபெருமான் அருள் செய்த ஆகமத்தினுடைய பொருள் அனைத்தும் தமிழ் ஆக்க எம்பெருமான் திருவருள் இவ்வுடலைத் தந்தது என்று உணர்ந்தார்.

    “தண்ணிலவார் சடையார்தாம் தந்த ஆகமப் பொருளை
    மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்பக்
    கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
    எண்ணிறைந்த உணர்வுடையார் ஈசர் அருள் எனவுணர்ந்தார்” 

     திருமூலரும் எம்பெருமானின் திருவருளைத் துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்தின் சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப் புறத்தில் உள்ள அரசின் கீழ் அமர்ந்து சிவயோகத்தில் நிலைத்திருந்தார். மூவாயிரம் ஆண்டுகள் அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு ஆண்டிற்கு ஒவ்வொரு திருப்பாடலாக மூவாயிரம் திருப்பாடலால் சைவாகமங்களில் உணர்த்தப்பட்ட ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரம் எனும் தமிழ்நூலைப் பாடியருளி, பின் திருக்கையிலையை அடைந்தார்.

    முன்னிய அப் பொருள் மாலைத்

      தமிழ் மூவாயிரம் சாத்தி

    மன்னிய மூவாயிரத்து ஆண்டு

      இப்புவிமேல் மகிழ்ந்து இருந்து

    சென்னி மதி அணிந்தார் தம்

      திருவருளால் திருக் கயிலை

    தன்னில் அணைந்து ஒரு காலும்

      பிரியாமைத் தாள் அடைந்தார். 

     

    திருமூலதேவ நாயனார் புராணம் சொல்லும் கருத்து

     

    “என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”

    திருமூலர் அருளிய மூவாயிரம் பாடல்களும் திருமந்திரம் என்ற நூலாகப் பன்னிரெண்டு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக விளங்குவது. திருமூலர், இறைவன் தம்மைப் படைத்தது இறைவனுடைய தன்மைகளைத் தமிழில் அழகுற எடுத்தியம்புவதற்காகவே என்றார். திருமூலர் திருமந்திரம் ஆகமப் பொருளையெல்லாம் திரட்டி ஒன்பது தந்திரங்களாக அருளிச் செய்தார்.

    “ஞானமுதல் நான்கும் மலர் நற்றிரு மந்திரமாலை” என்ற திருத்தொண்டர்புராண வசனமாகிய புறச்சான்றினாலும் அது வலுவுறும்.

     

    “பக்தன் சரியை கிரியை பயில்வுற்றுச்

    சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்

    உய்த்தநெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்

    சித்தங் குருவருளாற் சிவமாகுமே”

    சிவப்பேறடைதற்குரிய நெறிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கும் சைவநாற்பாதங்களாம். நான்காவதாகிய ஞானம் சிவப்பேற்றை நேரே அருள்வதாக, ஏனைய மூன்றும் படிமுறைக்கிரமத்தில் அதற்குத் தகுதியளிப்பன. ஞானம் என்பது சிவத்தில் இலயித்த உயிர் சிவத்தையுணர்தலாகிய மெய்யுணர்வு விளக்கமுற்றிருப்பதாகவும் அமையும்.

    திருவாவடுதுறையில் அரசின் கீழ் திருமூலர் யோகத்தில் இருந்ததை ,

    சேர்ந்திருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச்
    சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்டுறை
    சேர்ந்திருந்தேன் சிவ போதியின் நீழலில்
    சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே

    என்று குறிப்பிடுகின்றார்.

    சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கு முன்னோடியாக விளங்கும் திருமந்திரம், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அனைவராலும் பயன்படுத்தப்படுகின்ற சொற்றொடரை அருளியவர் திருமூலர். சாத்திரங்களின் சாரத்தை மிக எளிமையாகவும், முழுமையாகவும் உரைத்தவர் திருமூலர். ஆகமங்கள் 28 தமிழாகமம் சொல்ல வந்த திருமூலர் வரலாறு 28 பாடல்களில் அமைந்துள்ளதும் போற்றத்தக்கது.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • விதி

     

    காலை நேரத்தில் மட்டும் இன்னும் இரண்டு கைகள் சேர்த்து முளைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    சாந்தாம்மா வேலைக்கு வருவதற்குள் பரபரவென, காலை சிறுதானிய கஞ்சி, கருவேப்பிலைத் தொகையல், மதிய உணவிற்கு சாம்பார், காய், கீரை என அனைத்தையும் சமைத்து முடித்தாக வேண்டும். இதற்கிடையில் பால்காரர் வந்தால் பால் வாங்கவும், காய்காரம்மா வந்தால் வாங்குவதும், கணவர்,  “கங்கா அதெங்கே, இதெங்கே” என்று கேள்விக் கணைகள் தொடுத்தால் அதற்கு விடை சொல்லவும்  வேண்டும். பால் காய்ச்சி காபி தயாராகணும். இதற்கு நான்கு கைகளே போதாதென்றாலும் இரண்டு கைகளுடன் வேகமாகச் செய்து பழகிக் கொண்டாகிவிட்டதற்கு என்னையே பாராட்டிக் கொள்ளத்தான் வேண்டும். ஆகா இந்த நேரத்தில் போன் வேறு அடித்துக் கொண்டிருக்கிறதே. யாராக இருக்கும்?

    இந்த நேரத்தில் என் அன்பு மகள் இனியாதான் கூப்பிடுவாள். மகப்பேறியல் மருத்துவத்தில் உயர் கல்வியான எம்.டி. டி,ஜி.ஒ படித்துவிட்டு அரசு மருத்துவமனையில் ராஜஸ்தானில் பணிபுரிகிறாள். ஆனாலும் இன்று வெள்ளிக்கிழமை, அவளுக்கு போர்ட் மீட்டிங் இருக்குமே, மாலையில்தானே பேசுவாள். பால் பொங்கும் நிலையில் ரொம்ப நேரமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. பார்த்துக் கொண்டேயிருந்தால் இப்படித்தான் அப்படியே அசங்காமல் இருக்கும், சற்று நகர்ந்தால் போதும் புசுபுசுவென்று பொங்கிவிடும். போன் அடித்து ஓய்ந்துவிட்டது. பாலை இறக்கிவிட்டுப் போய் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன் அமைதியாக நின்று கொண்டேன்.

    இனியாதான் கூப்பிட்டிருக்கிறாள். கார் ஓட்டும்போது கூப்பிட்டிருப்பாள்போல. எப்போதும் கண்மூடித்தனமாக வேகமாக ஓட்டுபவள் என்பதால் கார் ஓட்டும்போது போன் பேசக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறேன்.  ஆனாலும் ஏதாவது முக்கியமான விசயமாக இருக்குமோ? சரி போன் செய்து பார்க்கலாம் என்று டயல் செய்தேன்.  போன் முழுவதும் அடித்து ஓய்ந்துவிட்டது. மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்திருப்பாள். மீட்டிங் ஆரம்பித்திருக்கும். ஓய்வு நேரத்தில் அவளே கூப்பிடும் வரை காத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

    வேலையெல்லாம் முடித்துவிட்டு ஓய்வாக வந்து உட்கார்ந்த மறுநொடி மகளின் நினைவுதான் வந்தது. கொஞ்ச நாட்களாக அவள் ஏதோவொரு குழப்பத்திலேயே இருக்கிறாள். அழகான பெண் குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டோடு நல்ல ஆளும் அமைந்துவிட்ட பின்புதான் அவளை ராஜஸ்தானில் விட்டுவிட்டு மதுரைக்குத் திரும்பினேன். மருமகன், கதிரவன் இந்திய இராணுவத்தில் உயர் பதவியில் இருப்பவர். மரியாதைக்குரிய பணி, வீட்டில் பாதுகாப்பு, எல்லா வேலைக்கும் கூப்பிட்ட குரலுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். தன் மகளையும், மனைவியையும் பொக்கிசமாக வைத்துப் பார்த்துக்கொள்கிறார். ஆனால் மாப்பிள்ளை அடிக்கடி காம்ப் என்று சென்றுவிட்டால் திரும்புவதற்கு வாரக்கணக்காகவோ அல்லது பல நேரங்களில் மாதக்கணக்காகக் கூட ஆகலாம். மற்றபடி வேறு எந்தக் குறையும் இல்லை அவளுக்கு.

    என்றாலும் சில நாட்களாக அவளுக்கு அந்தக்  கனவு அடிக்கடி வந்து அவளைக்  குழப்பிக்கொண்டிருக்கிறது. ஒருமாதம் முன்னால் ஒருநாள் காலையில் ஏழு மணிக்கே போனில் அழைத்தவள் ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள். பதறிப்போய் விட்டேன் நான்.

    “அம்மா, இன்று விடிகாலையில் அப்படியொரு கெட்ட கனவு கண்டேன்மா. விடியற்காலை கனவு பலிக்கும்னு நீதானே சொல்லுவே. அதான் ஒரே டென்சனா இருக்கு”

    “அப்படி என்னம்மா கனவு அது. நீதான் அதெல்லாம் மூட நம்பிக்கைன்னு சொல்லுவியே. இப்ப என்னாச்சு”

    “இல்லம்மா, இது கனவு மாதிரியே இல்லம்மா. எதோ நேரில் பார்த்த காட்சி போலவே தெளிவா இருந்துச்சி. விடியற்காலம் அப்பவே முழிச்சிக்கிட்டேன். ஒரு வேலையும் ஓடல. பயமா இருக்குமா”

    “என்னடா இது. டாக்டருக்குப் படிச்ச பொண்ணு ஒரு கனவுக்கா  இப்படி பயந்துடுவே. அப்படி என்னதான் கனவு அது?”

    “அம்மா, வீட்டில் ஒரே கூட்டமா இருக்கு. ஹால்ல ஒரு பெரிய பெட்டி வந்து இறங்குது. எல்லோரும் கூச்சல் போடுறாங்க. நான் மட்டும் அழாமல் அப்படியே நிற்கிறேன். கதிரோட அலுவலகத்திலிருந்து நிறைய பேர் வந்திருக்காங்க. அந்தப் பெட்டியில் என்ன இருக்குன்னு பார்க்க முயற்சி செய்தேன். கடைசிவரை பார்க்கவே முடியல”

    “அடடா, என்னம்மா இது. இப்ப இந்தியா – பாகிஸ்தான் போர் நடக்குதில்ல. அதையே நினைச்சுக்கிட்டு படுத்திருப்பே. மாப்பிள்ளையும் பிசியா இருக்கிறதாலே நீ எதையோ நினைத்து குழம்பிட்ட போல. அதெல்லாம் ஒன்னும் இருக்காதும்மா. நிம்மதியா இருடா” என்று சொல்லிவிட்டாலும் பெற்ற தாயான என் மனதிலும் மகளின் இந்தக் கனவு பாரமாக அழுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

    இருப்பது ஒரே பெண், இராணுவ மாப்பிள்ளை வேண்டாம், அதுவும் ராஜஸ்தானில்  என்றுதான் கூறிக்கொண்டிருந்தேன். அவ்வளவு தொலைவு சென்று மகளை அடிக்கடிப் பார்க்க முடியாதே என்ற வருத்தம்.  அப்பா போலவே தன் கணவனும் இராணுவத்தில் பணியாற்றுவதில் அவ்வளவு பெருமை இனியாவிற்கு. அம்மாவானாலும் என் பேச்சு எடுபடாமல் போய்விட்டது. மாப்பிள்ளையின் குணம் சொக்கத்தங்கம் என்று அப்பாவும், மகளும் சேர்ந்துகொண்டு ஒரே பிடிவாதமாக அதே மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து விட்டார்கள்.

    மாப்பிள்ளை கதிரவனின் சுறுசுறுப்பான, கம்பீரமான தோற்றம்  அழகு தேவதையான என் மகளுக்குப் பொருத்தமாக இருப்பதால் எனக்கும்  பிடித்துவிட்டது. மாப்பிள்ளையின் குடும்பத்தில் எல்லா ஆண்களும்  பரம்பரையாக இராணுவத்தில் உயர் பதவி வகிப்பவர்கள். மாப்பிள்ளையும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதாவது தனது 22 வயதிலேயே ‘பரம் வீர் சக்ரா’ விருது பெற்றிருந்தார். அவ்விருதைப் பெற்றவர்களில் மிகவும் இளையவர்  இவர்தான். இந்தியா, பாகிஸ்தான் போரில் இவர் செயல்பட்ட விதத்தைப் போற்றும் வகையில் இந்த விருது கதிரவனுக்கு வழங்கப்பட்டது. எனவே அப்படிப்பட்ட மாப்பிள்ளையை யார் வேண்டாம் என்று சொல்ல முடியும்?

    திருமணம் முடிந்த மூன்று மாதங்களில் கதிரவன் எல்லைப் பாதுகாப்பில் இருந்தபோது, எதிரிகளுடன் ஏற்பட்ட மோதலால் பதுங்கு குழியில் இருந்தவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்பதில் துடிதுடித்துப் போய் விட்டாள். அரசு வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று அவளுடன் தங்கியிருந்த என்னால் அவளை சமாதானப்படுத்தவே முடியவில்லை. தந்தை உடனிருந்து தைரியம் சொன்னதால் அமைதியானாள். நல்ல வேளையாக ஒரு சில நாட்களிலேயே கதிரவன் திரும்பி வந்து வயிற்றில் பாலை வார்த்தார்.

    ***

    ராஜஸ்தான் செல்வதற்கு விமானத்தில் அடுத்த நான்கு நாட்களில் டிக்கெட் போட்ட பின்புதான் மனம் ஆறுதலடைந்தது.  அப்பாவும் மகளைப் பார்க்க உடன் வருவார் என்றுதான் பார்த்தேன். ஆனாலும் அவர் பணி ஓய்வு பெற்ற பின்பும் எப்போதும் ஏதோவொரு சமூகச் சேவையில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதன் நிவாரணப் பணிகளில் ஒத்தாசையாக இருப்பதற்காகச் சென்று கொண்டிருக்கிறார். எப்போதும் சுறுசுறுப்பாக அவர் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கவே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அப்பாவைப் பார்த்தால் இனியா மகிழ்ச்சியாக இருப்பாள் என்றுதான் கூப்பிட்டும் பார்த்துவிட்டேன். 10 நாட்களுக்குப் பிறகு வருவதாகக் கூறியுள்ளார். இனியாவிடம் சொன்னேன். அவள் குரலில் மகிழ்ச்சி இருந்தாலும், அதில்  ஒரு சலிப்பும் இருந்தது. மாப்பிள்ளை கேம்ப்பிலிருந்து திரும்புவதற்குப் பதினைந்து நாட்கள் ஆகும் என்றாள். அதற்குள் நான் சென்று அவளுடன் சில நாட்கள் இருந்தால் அவள் இயல்பு நிலைக்கு வந்துவிடலாம் என்று நம்பினேன்.

    இதோ, இனியாவுக்கும் பேத்தி அனன்யாவுக்கும் பிடித்த பலகாரங்கள் மற்றும் சட்டை துணிமணிகள் தயார். என் கணவருக்கும் தொக்கு, ஊறுகாய் என்று போட்டு வைத்தாகிவிட்டது. மறுநாள் மகளையும், பேத்தியையும் காணப்போகும் மகிழ்ச்சியில் மனம் துள்ளிக் குதித்தது.

    இந்த நேரம் பார்த்தா இப்படியொரு செய்தி வரவேண்டும்? என் அம்மா குளியலறையில் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் உடனே கிராமத்திற்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. தம்பியும், மனைவியுடன் மகளைப் பார்க்க அமெரிக்கா சென்றுவிட்டதால் அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேறு யாரும் இல்லாததால் தவிர்க்க முடியவில்லை. மகளுக்குத் தகவல் சொல்லக்கூட நேரம் இல்லாமல் கணவனிடம் சொல்லி இனியாவிற்கு போன் செய்யச் சொல்லிவிட்டு கிளம்ப வேண்டியதாகிவிட்டது. காரில் போகும் வழியெல்லாம் அம்மாவின் நினைவு ஒருபுறம் இருந்தாலும் மகளுக்கு மிகவும் ஏமாற்றமாகியிருக்குமோ என்றும் கவலையாக இருந்தது.

    அடுத்த ஒரு வாரம் அம்மாவுடன் மருத்துவமனையில் இருந்துவிட்டு பின்னர் வீட்டில் கொண்டுவந்து விட்டு நல்ல கேர்டேக்கர் கிடைக்கும்வரை உடன் தங்க வேண்டியதாகிவிட்டது. பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. இடையில் மகளிடம் ஒரு சில முறைகள் பேசியபோதும் அவளிடம் பழைய உற்சாகம் இல்லை.

    நான் ராஜஸ்தான் கிளம்புவதற்கு விமான பயணச் சீட்டு ஏற்பாடு செய்தாகிவிட்டது. இன்னும் மூன்று நாட்கள்தான். நேரில் பார்த்து ஆறுதலாகப் பேசி அவள் மனதில் உள்ளதை அறிந்துகொண்டால் பின் மெல்ல சமாதானம் செய்துவிடலாம். முடிந்தால் அவளை ஊருக்குச் கூட்டிவந்து ஒருமாதமாவது வைத்திருந்து அனுப்ப வேண்டும் என்று மனது கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது.

    காலை ஒன்பது மணிக்கு விமான நிலையம் செல்லவேண்டும். இரவெல்லாம் சரியான உறக்கமில்லை. விடியற்காலையில்  என்னையறியாமல் கண்ணயர்ந்துவிட்டேன்.

    அருகில் யாரோ தோளைத்தட்டி அம்மா .. அம்மா என்று அழைக்கிறார்கள்.

    “அட இனியா செல்லம், நீயே இங்கே வந்திட்டியா. அம்மாவுக்காக காத்திருந்து விட்டு நீயே நேரில் வந்துவிட்டாயா கண்மணி. நல்ல வேளை. நம்ம வீட்டிற்கு வந்திட்ட இல்லையா. இனிமேல் பாரேன், எல்லாமே சரியாகிவிடும். குட்டிப் பாப்பா எங்கே காணோம். தூங்கிட்டாளா. என்ன ஆச்சு, சொல்லாம கொள்ளாம திடீர்ன்னு வந்துட்ட. சரி, சரி பரவாயில்லை. மாப்பிள்ளை வரும்வரை நீ இங்கேயேதான் இருக்கணும். சரியா” என்று படபடவென கொட்டித் தீர்த்தபோது, இனியா ஒன்றும் பேசாமல் அமைதியாக பார்த்துக்கொண்டே நிற்கிறாள். கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது.

    “என்னம்மா .. என்னம்மா .. என்னாச்சுடா தங்கம். ஏன் இப்படி …..” என்று சத்தமாக நான்  படபடக்கவும் அருகில் இருந்த கணவர் திடுக்கிட்டு விழித்தார்.

    “கங்கா என்னாச்சுமா?  ஊருக்குக் கிளம்பும் நேரத்தில் இப்படிப்  புலம்பற. போய் மகளோட சந்தோசமா தானே  இருக்கப் போற?  அதுக்குள்ள என்ன ஆச்சு உனக்கு. கிளம்பு நேரத்தோட” என்றார்.

    நான் அவர் கைகளை விலக்கினேன். “இல்லைங்க. இனியா இங்க வந்துட்டாளே.. இதோ என் பக்கத்தில் இருந்தாளே.. இதோ இப்பதான் என்னைத் தொட்டு அம்மா.. அம்மான்னு கூப்பிட்டாளே. எங்கே போனாள்?  கண்ணம்மா விளையாடாதே . எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறாய். வெளியே வாடா கண்ணு” என்று கட்டிலை விட்டு இறங்கிப்  பரபரவென வீடு முழுக்கத் தேட ஆரம்பித்தேன்.

    ஆனால் அவர், “ஏய் என்ன பைத்தியமா உனக்கு. நான் சொல்லிட்டே இருக்கேன். நீ என்னமோ இனியா வந்தாள்னு உளறிக்கிட்டிருக்கே. போய்ப் பார்.  கதவு பூட்டியிருக்கு. அப்படின்னா அவ என்ன மாயாவியா, அப்படியே உள்ளே நுழைந்து வருவதற்கு” என்று சொல்லிச் சிரிக்க, எனக்கு மட்டும் ஏனோ சிரிப்பே வரவில்லை.

    இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. வீட்டிற்குள் எங்கோதான் என் இனியாக் குட்டி இருக்கிறாள் என்றே தோன்றுகிறது…

    மெல்ல இயல்பு நிலைக்கு நான் வர முயன்றபோது, போன் அடித்தது. அப்போது விடியற்காலை ஐந்து மணி. இந்த வேளையில் யாராக இருக்கும்? கடவுளே அம்மாவுக்கு ஏதும் ஆகியிருக்கக் கூடாதே என்ற படபடப்புடன் போனை எடுத்தேன்.

    புதிய எண்ணிலிருந்து வந்த அழைப்பு. ஒன்றும் புரியாமல் “ஹலோ, யாருங்க” என்றேன்.

    போனில் வந்த செய்தி தலையில் இடியென இறங்கியது. “என்னது. என்னது, என்ன சொல்றீங்க.. நீங்க யாரு. ஏதோ தப்பான நம்பருக்கு கூப்பிட்டிருக்கீங்க. இல்லை .. இல்லை” என்றவாறு மயங்கிச் சரியப் போனேன். சட்டென்று கைபேசியைப் பிடுங்கிய என் கணவர், பொறுமையாகக் கேட்டுவிட்டு “ஐயோ இனியா, என் தங்கம்..” என்று அலற ஆரம்பித்துவிட்டார்.

    இரவுப் பணி முடிந்து வீடு திரும்பும்போது இனியாவின் கார் மலைப்பகுதியில் ஒரு வளைவில் கட்டுப்பாடில்லாமல் உருண்டு விழுந்துவிட்டதாம். அந்த இடத்திலேயே அவள் உயிர் பிரிந்து விட்டதாம்.

    என்னென்னவோ நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு,  தன்னுடைய முடிவைத்தான் காட்சியாகக் கனவில் பார்த்திருக்கிறோம் என்று தெரியாமலே போயிருக்கிறது. விதியின் விளையாட்டை யாரால்தான் கணிக்க முடிகின்றது?

    மாப்பிள்ளையின் நிலைதான் மிகவும் பரிதாபமாக இருந்தது. அவருடைய பெற்றோர் அவரைச் சமாதானம் செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள். குழந்தையை அங்கு விட்டுவிட்டு வர மனம் இடங்கொடுக்கவில்லை. இதைப்பற்றி விவாதிக்கும் மன நிலையிலும் அவர்கள் இல்லை. குழந்தையை எடுத்துக்கொண்டு நாங்கள் கிளம்பத் தயாரானபோதுதான் சுயநினைவு வந்தவராக மாப்பிள்ளை ஓவென்று கதற ஆரம்பித்துவிட்டார். எத்தனையோ மரணங்களை நேரில் சந்தித்தவர். தனக்கென்று ஒரு இழப்பு வரும்போது அதெல்லாம் மறந்து ஒரு சாதாரண மனிதனைப்போல மாறிவிடுவதுதானே மனித இயல்பு. கிடைத்தற்கரிய ஒரு பொக்கிசத்தை இழந்துவிட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர இயலாமல் தவிப்பதைக் காணும்போது ஈரக்குலையெல்லாம் நடுங்கத்தான் செய்கிறது. ஆனாலும் வேறு என்னதான் செய்ய முடியும்?

    சம்பந்தி வீட்டாரிடம் ஒருவழியாகச் சமாளித்து குழந்தையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டோம். அவர்களும் சில நாட்களுக்குப் பிறகு நேரில் வந்து மற்ற விசயங்களைப் பேசிக்கொள்ளலாம் என்றிருக்கிறார்கள். அடுத்து நடக்கப்போவதை இறைவன்தான் முடிவு செய்ய வேண்டும்.

    இன்று அந்த இரண்டு வயதுக் குழந்தை அனன்யாவைக் கையில் வைத்துக்கொண்டு இதயத்தில் பெரும் பாராங்கல்லைச் சுமந்தபடி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மகளை இழந்த துக்கத்தை எங்கள் பேத்தியான குட்டி இனியாதான் இனித்  தீர்த்து வைக்கவேண்டும். விதி வலியது, என்றாலும் நம்பிக்கைகள்தானே நம்மைப் பிழைக்க வைத்திருக்கிறது!

    ***

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 33

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 28 – ஏயர்கோன் கலிக்காம நாயனார்

    ஏதமில்வே ளாளர்பெரு மங்க லத்துள்

        ஏயர்கோன் கலிக்காமர் ‘இறையை நேரே

    தூதுகொளும் அவன் அணுகில் என்னாம்‘ என்னும்

        துணிவினர்பால் இறைவன் அருஞ் சூலைஏவி

    ‘வேதனைவன் றொண்டன்வரின் நீங்கும்’ என்ன

        வெகுண்டு உடல்வாள் கொடுதுறந்து மேய நாவாற்

    போதகமும் உடல்இகழ எழுந்துதாழ்ந்து

        போற்றியது விலக்கியருள் பொருந்தி னாரே.

    சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையில், “ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றும் ஏயர்கோன் கலிக்காம நாயனார், சோழ நாட்டில் திருப்பெருமங்கலம் என்னும் தலத்தில், வேளாளர் குலத்தில் தோன்றியவர். சோழ மன்னர்களிடம் பரம்பரை பரம்பரையாக சேனாதிபதியாக இருந்து வந்துள்ள குடும்பம் இவருடையது. ஏயர்கோன் கலிக்காமர் சிவபக்தியிலும் சிவனடியார் திருத்தொண்டிலும் சிறந்து விளங்கியவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்தில் அளவில்லாத திருப்பணிகள் செய்தவர். “ஏயர்கோன்” என்பது சிறந்த சேனைத் தலைவனுக்கு மன்னன் வழங்கும் பட்டமாகும். சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலமான எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார் இளம் வயதிலேயே சிவ பக்தியில் சிறந்து விளங்கினார்.

    ஏயர்கோன் கலிக்காமர் மானக்கஞ்சாற நாயனாரின் மகளைத் திருமணம் செய்து கொண்டு சிறப்பாகத் தமது இல்லறத்தை இனிது நடத்தி வந்தார். இக்காலகட்டத்தில் ஒருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை, தமது இல்லத்தரசியான பரவை நாச்சியாரிடம் தூது செல்லுமாறு வேண்டிக் கொண்டதால் சிவபெருமானும் அவ்வண்ணமே அவரிடம் சென்றார். இதைப் பற்றி கேள்வியுற்ற, சிவனையே முழுமுதற் பொருளாகப் போற்றிய ஏயர்கோன் கலிக்காம நாயனார், இத்தகைய காரியத்தைச் செய்து, தன்னை அடியார் என்று கூறிக்கொள்ளும் சுந்தரர் எவ்வளவு பெரிய பாவத்தை செய்திருக்கிறார். சிவபெருமானே இதற்கு இசைந்திருந்தாலும் சுந்தரர் செய்த இந்தக் காரியத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவராய், இப்படிப்பட்டச் செய்தியை கேட்ட பின்னும் தன்னுயிர் போகவில்லையே என்று வருந்தி சுந்தரமூர்த்தி நாயனார் மீது சொல்லொணா துயரமும், கடுங்கோபமும் கொண்டார். இதையறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிகவும் மனம் வருந்தி, அவர்தம் சினத்தை தணித்தருள வேண்டும் என்று சிவபெருமானிடம் பணிந்து வேண்டினார். அவ்விருவரையும் நண்பர்களாக்கத் திருவுளம் கொண்ட சிவபெருமானின் திருவிளையாடல் தொடங்கிய இடமும் இதுதான்.

    சூலை நோயை உண்டாக்கி ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு ஆறாத வலியைக் கொடுத்தார் எம்பெருமான். கலிக்காம நாயனாரும் என்ன செய்தும் தம் வலி குறையவே இல்லையே என்று வருந்தி அதனைப் போக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியவர் அப்படியே மயங்கினார். அந்த மயக்கத்தில் சிவபெருமான் தோன்றி, இந்த சூலை நோயால் ஏற்பட்டுள்ள வலியைத் தீர்க்க வல்லவன் சுந்தரன் மட்டுமே என்று கூறினார். இந்த வார்த்தையைக் கேட்டு கொதித்துப் போனார் கலிக்காமர். ஆனால் கலிக்காமரோ, சுந்தரர் வந்துதான் என் வயிற்று நோய் தீரும் என்றால் அந்நோய் தீரவே வேண்டாம் என்றார். இறைவனார் மறைந்தாலும் அவர் அத்தோடு நிற்கவில்லை. ஆரூரரிடம் சென்று, தம்முடைய ஆணையை ஏற்று கலிக்காமரின் சூலையைத் தீர்க்க வேண்டும் என்று பணித்துவிட்டு மறைந்தார். எம்பெருமானின் கட்டளையை ஏற்று நம்பியாரூர் ஏயர்கோன் உற்ற பிணியைத் தீர்ப்பதற்குத் தாம் வருகின்ற செய்தியைச் சொல்லி அனுப்பினார்.

    ஆனால் ஏயர்கோன் தம் மனைவிக்காக எம்பெருமானையே தூது அனுப்பிய சுந்தரன் வந்து தம் நோயைத் தீர்ப்பதற்கு வருகிறார் என்றால், அவர் வந்து தம் நோயைத் தீர்ப்பதற்கு முன் தான் மாய்ந்து விடுவதாகக் கூறி, சூலை உள்ள வயிற்றைக் கத்தியால் கீறிக்கொள்வேன் என்று தன் உடைவாளை எடுத்துக் குத்திக்கொண்டு உயிர் துறந்தார். வேகமாக வந்த ஆரூரரை வெளியே சென்று மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார் அவருடைய துணைவியார்.

    சுந்தரர் தான் வந்த காரியத்தைக் கூற, கலிக்காமர் அவ்வாறு நோயால் வருந்தவில்லை என்றும், அவருக்கு நோயுமில்லை துன்பமுமில்லை, அவர் உறங்குகிறார் என்று கூறி தன் கணவரின் இறப்பை மறைக்க முயன்றார். சுந்தரர் விடாது தன் மனம் தடைபடுவதைக் கூறி அவரைக் காண வேண்டும் என்று வற்புறுத்தவே வேறு வழியின்றி தன் கணவரின் அறைக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு கலிக்காமர் இரத்த வெள்ளத்தில் வயிறு கிழிந்து, குடல் வெளிப்பட்டு இறந்து கிடப்பதைச் சுந்தரர் கண்டார். நடந்த எல்லாவற்றுக்கும் தாமே காரணம் என்று வருந்திய சுந்தரமூர்த்தி நாயனார் தம்மிடம் உள்ள வாளால் குத்திக்கொள்ளும் போது சிவபெருமான் அருளால் கலிக்காமர் உயிர்த்தெழுந்தார்.

    இறையருளால் உயிர்த்தெழுந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரை அன்பினால் தழுவிப் பிரியாத நண்பர்களானார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் சில நாட்கள் ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் தங்கி திருப்புன்கூர் திருத்தலத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டனர். பின்னர் சுந்தரமூர்த்தி நாயனாரின் விருப்பத்துகிணங்க அவருடன் திருவாரூர் சென்று சில நாட்கள் தங்கியிருந்து தியாகராசரை வணங்கி மகிழ்ந்தார். பின்னர் ஏயர்கோனார் திருப்பெருமங்கலம் திரும்பி வந்து சிவப்பணி செய்து சிவனடி சேர்ந்தார்.

     

    ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    மெய்ஞ்ஞானம் உற்றார்க்குப் பக்தி பொதுவாயினும் அவரவர் ஆன்ம எழுச்சியின் நிலையைப் பொறுத்து ஒவ்வொருவர் பக்திக்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதை திருத்தொண்டர் புராண வரலாறுகளின் மூலம் அறியலாம்.

    “தந்தம் பெருமைக்களவாகிய சால்பினிற்கும் எந்தம் பெருமக்களை யாவர் தடுக்க வல்லார்” – மூர்த்தி நாயனார் புராணம்.

    “ஆரங்கண்டிகை ஆடையுங் கந்தையே பாரமீசன் பணியலதொன்றிலார் ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரமென்னால் விளம்புந் தகையதோ” – திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

    தீது ஒன்றுமில்லை என்று தன் கணவர் ஏயர்கோன் கலிக்காம நாயனார் மாண்டதையே மறைக்கத் துணிந்த அவருடைய பத்தினியின் மாண்பைப் போற்றினாலும், தம் மனம் தடைப்பட ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் என எண்ணிய ஆரூரர் அவரைக் காண வேண்டும் என்று வற்புறுத்த அவர் இருந்த அறையினைக் காட்ட, அங்கு அவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காண்கிறார். தம்பால் வந்த கோபத்தினால் ஏயர்கோனார் இந்த முடிவுக்கு வந்தார் என்றால் அவர் சென்ற இடத்திற்கே தானும் செல்லப்போவதாகக் கூறி, ஏயர்கோன் கலிக்காம நாயனார் தம் உடைவாளினால் தமது வயிற்றைத் தாமே குற்றிக் கிழித்துக் கொள்ளப் போனார். இதனை கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தில்,

    “பொன்னம் பலத்துறை புண்ணிய னென்பர்

    புயன்மறந்த கன்னன்மை தீரப்புனிற்றுக்

    கலிக்காமற் கன்று புன்கூர் மன்னு

    மழைபொழிந் தீரறு வேலிகொண் டாங்கவற்கே

    பின்னும் மழைதவிர்த் தீரறு வேலிகொள் பிஞ்ஞகனே” என்றும்

    திருத்தொண்டர் புராணத்தில்,

    “பெருங்கொடையுந் திண்ணனவும் பேருணர்வுந் திருத்தொண்டால் வரும்பெருமைக் கலிக்காமனார்” எனவும்

    சுந்தரர் தேவாரத்தில்,

    “வையகம் முற்றும் மாமழை துறந்து

    வயலில் நீரிலை மாநிலந் தருகேம்

    உய்யக்கொள்கமற் றெங்களை யென்ன

    ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும்

    பெய்யுமாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்

    பெயர்த்தும் பன்னிரு வேலிகொண்டருளுஞ்

    செய்கைகண்டுநின் திருவடியடைந்தேன்

     செழும்பொழிற்றிருப் புன் கூருளானே”

    எனவும் வருபவற்றால் அறியப்படும்.

    சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானை, தம் பத்தினி பரவைபால் தூதனுப்பிய செய்தியைக் கேட்டமாத்திரத்தே, அதிசயித்து எரிச்சலுற்றவர் இவரெல்லாம் ஒரு தொண்டரா, எத்தகையதொரு பெரிய பாவத்தைச் செய்துள்ளார். இச்செய்தியைக் காதால் கேட்கவும் இயலவில்லை என்னால் என்று புலம்புகிறார்.

    “நம்பியாரூரர் நெஞ்சினடுக்கமொன்றின்றி நின்று

    தம்பிரானாரைத் தூது தையல்பால்விட்டா ரென்னும்

    இம்பரின் மிக்கவார்த்தை யேயர்கோனார்தாங் கேட்டு

     வெம்பினாரதிசயித்தார் வெருவினார் விளம்பலுற்றார்”

     

    “நாயனை அடியானேவுங் காரியம் நன்று

    சால ஏயுமொன்றிதனைச் செய்வான்

    தொண்டனாமென்னே பாவம் பேயனேன்

    பொறுக்கவொண்ணாப் பிழையினைச் செவியார்

     கேட்ப தாயின பின்னும் மாயா திருந்ததென் ஆவியென்பார்”

    மற்றும்

     “நம்பர்தா மடியாராற்றாராகியே நண்ணினாரேல்

    உம்பரார்கோனும் மாலு மயனுநேருணரவொண்ணா

    எம்பிரானிசைந்தாலேவப் பெறுவதே யிதனுக்குள்ளங்

    கம்பியாதவனை யான்முன் காணுநா ளெந்நா ளென்று”

    என வரும் சேக்கிழார் பெருமானின் பாடல்களால் அறியலாம்.

     

    குண்டையூரில் நெல்மலை அளிக்கப் பெற்றது:

    நம்பியாரூரர் திருவாரூரில் தியாகேசப் பெருமானை முப்பொழுதும் வணங்கி வாழ்ந்து கொண்டிருந்தார். அச்சமயம் திருக்கோளிலி என்னும் திருத்தலத்திற்கு அருகில் உள்ள குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டிருந்தார். அந்த அன்பின் காரணமாக அவருக்காக பரவையார் திருமாளிகைக்கு, செந்நெல், பருப்பு போன்ற பொருள்களைத் தவறாமல் அனுப்பி வரும் கடமையைக் கொண்டிருந்தார். ஒரு சமயம் மழையின்மையால் விளைச்சல்கள் குறைந்தன. குண்டையூர்க் கிழார் வழமைபோல் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய தானியங்கள் இல்லாமல் வருந்தியவர், உணவு உண்ணாமல்  உறங்கச் சென்றார். சிவபெருமான் அவர் கனவில் தோன்றி “ஆரூரன் தனக்கு உன் பொருட்டாக நெல் கொடுத்தோம் என்று அருள்பாலித்தார். காலையில் எழுந்து பார்த்தபொழுது குண்டையூர் முழுதும் நெல் மலை குவிந்திருந்தது. நெல்மலையைக் கண்டு வியந்தவர், திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் நடந்தவற்றைக் கூறினார். குண்டையூர்க்கிழார் அந்நெல்மலையைப் பார்த்து இது மனிதர்களால் எடுத்து வரும் அளவினதன்று. மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது என்றார். அப்போது சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக் கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து,

    நீள நினைந்தடி யேனுமை

      நித்தலுங் கைதொழுவேன்

    வாளன கண்மட வாளவள்

      வாடி வருந்தாமே

    கோளிலி எம்பெரு மான்குண்டை

      யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

    ஆளிலை எம்பெரு மானவை

      அட்டித் தரப்பணியே.

    என்னும் திருப்பதிகம் பாடி நெல்லை எடுத்துச் செல்ல ஏவலாட்களைத் தரும்படி விண்ணப்பித்துக்கொண்டார். அன்றிரவு தம்முடைய பூத கணங்களைக் கொண்டு பரவையார் இருந்த வீதியில் நெல்லைக் கொண்டுவந்து குவித்தார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளைப் போற்றித் திருவாரூரை அடைந்தவர் பரவையார்க்கும் அந்த நற்செய்தியை தெரிவித்து மகிழ்ந்திருந்தார்.

     

    ஆரூர்ப் பெருமானைப் பரவையாரிடம் தூதனுப்புதல்:

    சுந்தரர் எம்பெருமானை வணங்கச் சென்ற பொழுது அவருடைய பரிசனங்களில் சிலர் பரவையார் மாளிகையை அடைந்தனர். சங்கிலியாரை மணந்த சுந்தரரின் செய்கையை முன்பே அறிந்திருந்த பரவையார் அவர்களைத் தடுத்த செய்தியினை சிலர் சுந்தரரிடம் சென்று கூறினர். அதனைக் கேட்ட ஆரூரர் மனங் கலங்கிச் சங்கிலியை மணந்தமையால் உண்டான வருத்தம் இது என உணர்ந்தவர், பெரியார் பலரைப் பரவையார்பால் தூது விடுத்தும், அவர்கள் பலவாறு எடுத்துக் கூறியும் சினந்தணியாமல் பரவையார், மீண்டும் பேசினால் தன்னுயிர் இழப்பது உறுதி என்று கூறினார். அதனால் மனம் வருந்திய சுந்தரர் உறங்காது சிவபிரானை எண்ணி வேண்டினார். அடியார் துயர் பொறுக்காத  எம்பெருமான் நள்ளிரவில் சுந்தரர் முன் வந்தணைந்தார். சுந்தரர் வீழ்ந்து பணிந்து எழுந்து நின்று, தமக்குற்ற குறையை எடுத்துக்கூறி தன்னுடைய துன்பத்தைப் போக்கியருள வேண்டும் என்று வேண்டினார். பெருமானும் அப்போதே பரவைபால் தூது செல்ல இசைந்தார். பரவையார்பால் சுந்தரர் கொண்டுள்ள வேட்கையைக் காண வேண்டுமென்ற திருவிளையாடலை மனத்திற்கொண்டு பரவையார் வீட்டிலிருந்து சிவபிரான் மீண்டும் சுந்தரரை வந்தடைந்தார். சுந்தரர் எம்பெருமானை எதிர்கொண்டு வணங்கி விவரம் கேட்டவரிடம், எம்பெருமான் `நாம் பரவையின் இல்லம் அணுகி அவளிடம் வேண்டியும் மறுத்துவிட்டாள்` என்று கூறினார். அச்சொற்கேட்டு நடுங்கிப் போனவர், பரவையிடம் தன்னைக் கூட்டவில்லை என்றால் தன்னுயிர் நீங்குவது உறுதி என்று பலவாறு கூறித் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்.
    சிவபெருமானும் நம்பியாரூரரைப் பார்த்து,  மீண்டும் ஒருமுறை தூது சென்று அவர்தம் குறையை தீர்த்து வைப்பதாகக் கூறியவர் பரவையார் மாளிகையை நோக்கி மீண்டும் எழுந்தருளினார். பரவையார் அடியவர் பொருட்டு நள்ளிரவில் அங்கு மிங்குமாக அலைந்து உழலும் எம்பெருமானின் கருணையை வியந்து, இசைவுற்றதால் பரவையாரைப் பாராட்டிச் சுந்தரரிடம் மீண்டும் எழுந்தருளினார். சிவபெருமான் சுந்தரரைப் பரவையார்பால் அனுப்பிவைத்த பின்னர் திருக்கோயிலினுள் புகுந்தருளினார். இருவரும் இறைவனது எளிவந்த கருணையை வியந்து இன்ப வெள்ளத்துள் திளைத்தனர்.

    தங்கக்கட்டியான செங்கல்

    திருவலிவலம் பெருமானின் திருவடிக் காட்சியைக் கண்டு களித்த ஆரூரர், திருவாரூர் சென்று அங்கு தங்கியிருந்தார். பங்குனித் திருவிழாவிற்கு ஆகும் பெருஞ்செலவில் தம்முடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் , இல்லையென்றால் பரவையார் முகம் வாடிவிடுமே என்று வருந்தியவர், பணம் பெறுவதற்காக திருப்புகலூர் சென்று பொன் வேண்டிப் பாடினார். திருக்கோயிலை வலம் வந்து வழிபாட்டினை நிறைவு செய்து புறப்படும் சமயம் அயர்ச்சியில், அங்கு அக்கோயில் திருப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த செங்கல்லை எடுத்து வைத்து அதன்மீது தமது துண்டினை விரித்து அப்படியே கண் அயர்ந்து உறங்கி விட்டார். தூக்கம் விழித்து துண்டை எடுத்தவர் அதிசயித்துப் போனார். துண்டின் கீழிருந்த அச்செங்கல் தங்கக்கட்டியாக மாறியிருந்த்தே அதன் காரணம். இன்றும் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில், இந்த அரிய திருப்பாசுரத்தைப் பாடினால் இறைவன் வேண்டிய பொருளை அளிக்க வல்லான் என்ற நம்பிக்கை அடியவர்களிடம் உண்டு என்பதும் சத்தியம்! அப்பாடல்,

    தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ்

      சார்வினுந்தொண்டர் தருகிலாப்

    பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை

      புகலூர்பாடுமின் புலவீர்காள்

    இம்மையேதருஞ் சோறுங்கூறையும்

      ஏத்தலாமிடர் கெடலுமாம்

    அம்மையேசிவ லோகமாள்வதற்

      கியாதுமையுற வில்லையே. 

     

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 32

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (5)

    எலும்பைப் பெண்ணாக்கியது

    மயிலாப்பூரில் வணிகர் குலத்தில், சிவனடி மறவாச் சீலர் சிவநெறித் தொண்டில் ஈடுபட்டு ஈசனடியாரை நேசிக்கும் இயல்புடையாரான  சிவநேசர் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், பிற சமயமாகிய சமண, பௌத்த மதங்களைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி, சைவப் பயிர் செழித்தோங்கச் செய்யும் உறுதியுடையோராய்த் திகழ்ந்தவர். தமது மூன்றாம் அகவையில் திருக்காழிப்பதியில் ஞானப்பால் உண்டு, முத்துச் சிவிகை, முத்துப்பந்தர், பொற்றாளம் சிவபெருமான் கருணையால் பெற்றவர், மதுரை மூதூர் சென்று சமணர்களை வென்று சைவம் தழைத்தோங்கச் செய்த அருமைப் பெருமைகளுக்கு உரியவரான ஞானசம்பந்தர் பற்றி கேள்வியுற்று அவர்பால் எல்லையில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு அழகிற் சிறந்த பூம்பாவை எனும் ஒரு பெண் மகவு இருந்தாள். மணப்பருவம் எய்திய நிலையில் இருந்த அப்பெண் திருமகளென அழகும் கலைமகளென அறிவும் மிக்கவளாய் இருந்தாள். அவளையும், தன்னையும், தன் செல்வத்தையும் ஞானசம்பந்தருக்கே உடமையாக்கி அவர் மடியில் சமர்ப்பிப்பேன் என்று உறுதி கொண்டார்.

     

    இந்நிலையில் பூம்பாவை பூஞ்சோலையில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி உயிர் துறந்தாள்.  சிவநேசர் மிகவும் வருந்தினாலும் அப்பெண், சம்பந்தப் பெருமானின் உடமையென்பதால் தாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று உளம் தெளிந்து, அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதைக் கன்னி மாடத்தில் வைத்து அக்குடத்திற்குப் பூம்பாவை பூணும் அணிகலன்களையெல்லாம் அணிவித்துப் பூசனை செய்து வந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூரில் தங்கியுள்ளார் என்ற செய்தியை அவ்வூர் மக்கள் சிவநேசரிடம் தெரிவித்தனர். அகமலர்ந்த சிவநேசர் சம்பந்தரை வரவேற்கத் திருவொற்றியூர் சென்று எதிர் கொண்டழைத்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார்கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியையும் அவரிடம் கூறினர்.

    ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி கபாலீசுரரை வழிபட்டு, சிவநேசரை அழைத்து அவர்தம் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன் வைக்கும்படி பணித்தார். சிவநேசரும் வெந்த சாம்பலோடு எலும்பு நிறைந்த குடத்தினைச் சிவிகையில் வைத்து எடுத்து வந்து கபாலீச்சுவரப் பெருமான் திருமுன் வைத்து வணங்கினார். `மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக` எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப்பதிகமாகிய,

     

    மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
    கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
    ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
    கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

     

    எனத் திருப்பதிகம் தொடங்கி, முதல் பாடலிலே உருவம் பெற்ற பூம்பாவை, இப்பதிகத்தின் இரண்டு முதல் ஒன்பது வரையான எட்டுப் பாடல்களைப் பாடிய அளவில் பன்னிரெண்டு வயதுடையவளாக மாறி நின்றாள்.

     

    உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்

    இருஞ்சாக் கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில்

    கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்

    பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்!

     

    எனும் பத்தாவது பாடலைப் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உயிர் பெற்று குடம் உடைய வெளிப்பட்டு எழுந்தவள், ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமெனவும் வேண்டினார். அது கேட்ட ஞானசம்பந்தர், அரவு தீண்டி உயிர் துறந்த மகளை இறைவன் திருவருளால் பூம்பாவையாக மீண்டும் பிறப்பித்த்தால் அவள் தமக்கு மகளாவாள் என்ற மறை நெறி மரபை அவருக்கு உணர்த்தினார். சிவநேசர் மனத் தெளிவுற்று அப்பெண்ணை வேறொருவர்க்கு மணம் முடிக்க மனமின்றிக் கன்னிமாடத்தே இருக்கச் செய்தார். பூம்பாவையும் சிவன் அருளையே சிந்தித்துச் சிவனடி சேர்ந்தார்.
    பின்னர் ஞானசம்பந்தர் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள், திருவான்மியூர், இடைச்சுரம், திருக்கழுக்குன்றம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு தில்லையை அடைந்து திருச்சிற்றம்பலம் உடையானைப் போற்றிச் சீர்காழிக்கு எழுந்தருளிப் பிரமபுரத்துப் பெருமானை வழிபட்டுத் தம் திருமாளிகையை அடைந்தார்.

    காழிவேந்தருக்குக் கடிமணம்!

     

    ஞானசம்பந்தர் சீர்காழிமேய பெருமானை நாளும் வணங்கி முருக நாயனார், திருநீலநக்க நாயனார் முதலிய அடியவருடன் இனிதிருந்தார். சிவபாத இருதயரும் சுற்றத்தாரும் ஞானசம்பந்தர், அக்கால மரபுப்படி திருமண வயதான பதினாறு ஆண்டு எய்திய நிலையினராய் இருத்தலை எண்ணி அவரை அணுகி மறை நெறிப்படி வேள்வி செய்ய ஒரு கன்னியைத் திருமணம் புரிந்து இவ்வுலகிற்கு நல்வழி காட்ட வேண்டும் என வேண்டினர். ஞானசம்பந்தர் முதலில் மறுத்தாலும் திருவருளை நினைந்து மறைவாழவும் அந்நெறியின் துறைவாழவும் திருமணத்திற்கு இசைந்தார்.

     

    சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழ்ந்த சீலமிக்க அந்தணர் குடியில் தோன்றிய நம்மாண்டவர் என்பாரின் திருமகளை மணம் பேசி நிச்சயித்தார். திருமண நாளும் குறிக்கப்பட்டது. நல்லூர் மணவிழாவினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய அத்திருநாளில் தோணிபுரத்தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் எம்பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து, கோயிலின் அருகே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்மாண்டவர் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தி, மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்புறம் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். இறைவன் திருமுன் நின்று `கல்லூர்ப் பெருமணம் வேண்டா` எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அப்போது சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று `ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காண வந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளினார். திருநீலநக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்மாண்டவர் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் மணமகளைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமானோடு ஒன்றி உடனானார்.
    அச்சோதி மறைய பெருமணக் கோயில் முன் போலவே அமைந்தது. அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்.

     

    கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
    பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
    சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
    நல்லூர்ப் பெருமண மேயநம் பானே

    ஞானசம்பந்தர் உலகத்தார் உய்யும் பொருட்டு நன்னெறியினை அறிவுறுத்த உளங்கொண்டு ஞானமெய் நெறிதான் யார்க்கும், ‘நமச்சிவாயச் சொல்லாம்’ என்று அனைவருக்கும் ஐந்தெழுத்தாகிய நமச்சிவாயத் திருப்பதிகத்தினை அருளிச் செய்து கூட்டுச் சிவதீக்கை செய்வித்துச் சோதியில் கலக்கச் செய்தார்.

     

    திருச்சிற்றம்பலம்

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பது வரலாற்று ஆசிரியர்கள் கணித்துள்ள உண்மையாகும். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சம காலத்தவர் என்பதும் அவர் தம் வரலாறுகளால் விளங்கும். குணபரன் என்ற சிறப்புப் பெயரோடு வாழ்ந்த பல்லவன் மகேந்திர வர்மன் காலம் கி.பி. 600 முதல் 630 வரை ஆகும் என்ற வகையில் அம்மன்னனும் திருநாவுக்கரசர் காலத்தில் வாழ்ந்தவன் ஆவான். திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களில் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் மகேந்திரவர்மனின் புதல்வனான நரசிம்மவர்மப் பல்லவன் காலத்தில் படைத் தளபதியாக இருந்து சாளுக்கியரோடு வாதாபியில் நிகழ்த்திய போரில் வெற்றி கண்டவர். அதன் பின்னரே அவர் திருச்செங்காட்டங்குடி சென்று சிவனடித் தொண்டு பூண்டு அடியவராக விளங்கினார். நரசிம்மவர்மன் வாதாபிப் போர் நிகழ்த்திய காலம் கி.பி.642 ஆகும் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். திருஞானசம்பந்தரால் வெப்புநோய் தவிர்த்தருளப் பெற்ற பாண்டிய மன்னன் நெடுமாறன் மாறவர்மன் அரிகேசரி என்ற பெயருடையவன். மங்கையர்க்கரசியாரின் மணாளனான இம்மன்னனின் காலம் கி.பி. 640-670 என்ற வகையில் திருஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாகும் என்பதை ஐயம் இன்றித் துணியலாம் என்கின்றனர்.

    “வேதெநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை

    விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனிதவாய்

    மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

    பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்”

    என்ற திருத்தொண்டர் புராணச் செய்யுளால், வேதநெறியையும் சைவத்துறையையும் புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டாகத் திருவவதாரம் செய்தருளியுள்ளவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் என்பது உறுதிப்படும். ஆன்மாவானது ஞானத்தால் விளையும் மெய்யன்பின் மூலம் சிவனருளிற் படிந்து மூழ்கித் திளைத்தற்குரிய இடம் என்ற நயப் பாட்டினாலும் அத்தகு மெய்யன்பை இடமாகக் கொண்டு அதன் மயமாகவே சிவம் வெளிப்படும் என அறியப்படுதலானும் மெய்ஞ்ஞான நிலை சைவத்துறையாதல் அமையும். “ஞானம் ஈசன்பாலன்பே” எனத் திருத்தொண்டர் புராணத்தும் “அன்பே சிவமாவது” எனத் திருமந்திரத்தும் வருவன கொண்டும் அது தெளியப்படுகிறது.

    அன்பு, அறம், மறம் ஆதியனவும் அச்சிவத்தினால் அமைந்தவையே என்பது,

    “பூவினில் வாசம் புனலினிற் பொற்பு

    புதுவிரைச்சந்தினின் நாற்றம் நாவினிற்

     பாடல்கள் நள்ளாறுடைய நம் பெருமான்”

     

     “கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே

    கடல்மலைவா னாகாசமானாய் நீயே”

     

     “பண்ணி னிசையாகி நின்றாய் போற்றி”

    என்பன போன்ற தேவாரத் திருப்பதிகங்களாலும்,

     “தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்

    நீ கல்லினுள் மணியுநீ சொல்லினுள்

    வாய்மைநீ அறத்தினுளன்புநீ

    மறத்தினுள் மைந்து நீ வேதத்து

    மறைநீ பூதத்து முதலுநீ அனைத்துநீ

    அனைத்தினுட் பொருளுநீ”

    என்னும் பரிபாடலாலும் அறியப்படும்.

    வேள்வி நெறியாகிய வேத நெறி மீளத் தலையெடுத்தோங்க வைத்து அருளிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் விறல் மிக்க தொண்டின் மகிமை அளப்பரியது என்பது அவர்தம் வரலாற்று நிகழ்வுகளும் அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருப்பாடல்களுமாகிய அகச் சான்றுகளாலேயே இன்றளவிலும் உறுதியாக நிற்பதும் கண்கூடு.

    சைவத்துறை தழைத்தோங்கும் பொருட்டு அவர்தம் திருவவதாரம் அமைந்தது என்பதற்கு ஆதாரம், அவர் தமது மூன்றாண்டுப் பருவத்திலேயே உமாதேவியாரால் ஞானப்பாலூட்டப் பெற்று, சைவத் துறையாகிய ஞான நிலையில் விளங்கி, ஞானமுண்டார் – திருஞானசம்பந்தர் – சிவஞானசம்பந்தர் என்ற திருப்பெயர்களால் வழங்கப் பெற்றதனாலும், நின்றசீர் நெடுமாறன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்போர் சிவஞானிகளாகி நாயன்மார் அறுபத்து மூவர் நிரலில் அம்மூவரும் இடம்பெற அருளியமையாலும் சிவம் எனும் ஞானம் பெருக்கும் பிள்ளையார் என்றே போற்றப் பெற்றிருத்தலாலும், திருவோத்தூர்ப் பனைகளே பாசநீக்கம் பெற்றுச் சிவப்பேறடைய வைத்தமையாலும், அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்தமிழ், தனிப்பட்டதொரு ஞான எழுச்சியும் விறலும் உடைத்தாதலைச் சுட்டியே அதனைத் திருநெறிய தமிழெனவும் அதை விளம்பிய ஞானச்செல்வனைத் தமிழ்ஞான சம்பந்தன் எனவும் விதந்தோதப்பட்டுள்ளார்.

    “காகமுணவு கலந்துண்ணக் கண்டீர்

    அகண்டாகாரசிவ போக மென்னும்

    பெருவெள்ளம் பொங்கித் ததும்பிப்பூரணமாய்

    ஏகவெளியாய்க் கிடக்குதையோ இன்புற்றிடநாம்

    இனியெடுத்த தேகம் விழுமுன்

    புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே”

    எனத் தாயுமான சுவாமிகள் விடுத்துள்ள அறைகூவலால், உலகமுள்ள அளவும் சைவஞானத்தின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்க வல்லதாக இருக்குங்கால் இதற்குக் காரணகர்த்தராய் விளங்கிய சுவாமிகளாகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் ஞான மகிமை எக்காலத்தும் போற்றுதலுக்குரியதாம்.

    ஞானப்பிள்ளையார், தென்பாண்டி நாட்டில் சென்றபோது நாடு இருந்த நிலையும் சைவம் இருந்த நிலையும் வேதனைக்குரியதாக இருந்தது. சமணரைக் கழுவில் ஏற்றியது சரியா என்ற வாதம் எழுவது இயல்புதான் என்றாலும் அது சிந்திக்கத்தக்க வினாவாகும். ஆனால் திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவில் ஏற்றச் சொல்லவில்லை என்பதும் உண்மைதான். சமணர்களைப் பொருத்தவரை, அவர்களே சூளுரைத்து அவர்களுக்கு, அவர்களே விதித்துக் கொண்ட தண்டனைதான் அது. வாதிலே தோற்ற சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படி, பாண்டி வேந்தன், கழுவிலே ஏற்றுமாறு உத்தரவிட்டான். குலச்சிறையாரும் அதனை நிறைவேற்றினார். ஆனால் சமணர்கள் பல்லாயிரம் அடியார்கள் தங்கியிருந்த மடத்தில் தீ வைத்தது தண்டனைக்குரிய குற்றம் என்பதும் உண்மை. நாடாளும் மன்னனான நின்றசீர் நெடுமாறன் அரச நீதி காக்கும் பொருட்டே அவர்களைக் கழுவேற்றினான். நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சீர் குலைப்பது மக்களின் அமைதியான வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் அதனைச் சரி செய்வதும் மன்னனின் கடமையாகும். எனவே மன்னன் உரிய தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டினான். இதனை சம்பந்தர் தடுத்திருக்கலாமே என்ற வினாவும் எழலாம். அவருக்குச் சமணர்கள்பால் காழ்ப்புணர்ச்சி இல்லையென்றாலும் அரச நீதியில் மதம் கலந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் அடியவர்களுக்கு இழைத்த அநீதிக்காகவும் அவர் இதில் தலையிடவில்லை என்றே அறியலாம்.

    வழிபாட்டு மொழி பற்றிய ஐயம் எழுபவருக்கு ஞானச்செல்வர் எம்பெருமானை வழுத்தும் அடியவருக்கும் பெருமானுக்கும் இடையில் மொழி எந்த தடையும் இல்லை. காரணம் அனைத்து மொழியும் அறிந்தவன் சிவபெருமான். ஆகவே அடியாருக்குத் தெரிந்த மொழியால் அவன் புகழ் சொல்லிப் பரவலாம் என்பதைத் தெள்ளென விளக்குகிறார்.

    1. தம்மலரடி யொன்ற அடியவர் பரவத்

    தமிழ் சொல்லும் வட சொல்லும் தாணிழற்சேர

    அம்மலர் கொன்றை அணிந்த எம் அடிகள்

     

    1. கல்லால் நிழல்மேய கறை சேர் கண்டா என்று

    எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த

     

    1. பத்தரொடு பலரும் வொலியும்மலர் அங்கை புனல்தூவி

    ஒத்த சொல்லி யுலகத்தவர் தாந்தொழ

     

    1. செந்தமிழ் தெய்வமறை நாவர் செழுநற்கலை தெரிந்த அவரோடு

    அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன்.

     

    சம்மந்தப் பெருமான் வழிபாட்டு மொழி எது எனில், தம் உள்ளத்தை எது ஒன்றச் செய்கிறதோ அம்மொழியே வழிபாட்டு மொழி என வழிகாட்டுகிறார்.

     

    வழிபாட்டு நெறிகள்

    1. சிவ வழிபாடு செய்தல்
    2. திருநீறு அணிந்து மகிழ்தல்
    3. ஐந்தெழுத்து ஓதல்

    ஆகிய மூன்று நெறிகளை வலியுறுத்தி நாம் வாழச் சிந்தை நிலை பெறச் சிவ வழிபாடும் அதற்குச் சாதனமாகத் திருநீறு அணிதலும், திருஐந்தெழுத்தை ஓதலுமே முத்தி பெற எளிய வழி என வலியுறுத்தி வாழ்ந்து காட்டினார்.

    திருஞானசம்பந்தர் துதி

    பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனம் சூழ்ந்த

    சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேய மெல்லாம்

    குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்கள் குலதீ பத்தை

    விரவிஎமை ஆளுடைய வென்றிமழ இளங்களிற்றை விரும்பி வாழ்வாம்.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 31

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (4)

    சண்பை வேந்தர் முன்பு சென்று பணிந்த மங்கையர்கரசியாரையும், குலச்சிறையாரையும் தம் மலர்க்கரங்களால் எடுத்தருளியவர், அவர்களுக்கு அஞ்சத் தேவையில்லை என்றும் உணர்விலா சமணர்களை அவர்கள் கண்டு மகிழும்படி வென்று விதிப்படி பாண்டிய வேந்தனை வெண்ணீறு அணிவிப்பான் எனக் கூறியருளினார். அதன்படி ஞானசம்பந்தர் எம்பெருமான் திருவருள் பெற்று பாண்டிமாதேவியின் அழைப்பினை ஏற்று அரண்மனை சென்றடைந்தார். ஞானப்பிள்ளையாரின் திருவடியைத் தொழுது வரவேற்றவர்கள் மன்னன் படுத்துக்கொண்டிருந்த அறைக்கு அழைத்துச் சென்று அவர் அருகில் இடப்பெற்ற பொற்றவிசில் எழுந்தருளச் செய்தனர். மன்னன் ஞானசம்பந்தரைத் தரிசித்த அளவில் நோய் சிறிது தணியப் பெற்றவனாய் மகிழ்ச்சியுடன் அவரோடு உரையாடும் முறையில் அவர்தம் ஊர் குறித்துக் கேட்டவரிடம் `பிரமனூர்` என்ற திருப்பதிகத்தால் விடையளித்தார்.

     

    சமணர்கள் அச்சமுற்றாலும் அதனை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டு சம்பந்தரை நோக்கி `உங்கள் உறுதிப் பொருளைக் கூறி வாது செய்து வென்றவர்கள் மதத்தை ஏற்போம்` எனக்கூறினர். `மன்னனும், வாது செய்வதெல்லாம் வேண்டாம் என்றும் தமது உடற்பிணியை யார் இறையருளால் நீக்குகிறார்களோ அவர்கள் பக்கமே தாம் சாரப்போவதாகவும், நோய் தணிந்த பிறகு வாது செய்யலாம் என்றும் கூறினார். ஞானசம்பந்தர் அரசமா தேவியாரைப் பார்த்து `அஞ்சற்க; என்னைப் பாலகன் எனக் கருத வேண்டா; ஆலவாயரன் துணை நிற்க வாதில் வெல்வோம்` என்றார். அது கேட்ட சமணர்கள் மன்னன் உடலில் இடப்பாகம் பற்றிய நோயை தாங்கள் குணப்படுத்துகிறோம் என்றும் வலது பக்கம் அவர் தீர்க்கட்டும் என்று கூறி குண்டிகை நீரைத் தெளித்து பீலி கொண்டு உடலைத் தடவிய அளவில் அது தீயில் பட்ட நீராகக் கொதிக்க நோய் மேலும் கூடியது. ஆனால் ஞானசம்பந்தர் `மந்திரமாவது நீறு` என்ற திருப்பதிகம் பாடி, தம் திருக்கரத்தால் வலப்பாகத்தில் திருநீற்றைத் தடவிய அளவில் நோய் தணிந்து இடப்பாகத்தே மூண்டெழக் கண்ட மன்னன் அப்பாகத்தையும் தாங்களே தீர்த்தருள வேண்டுமென வேண்டினான். ஞானசம்பந்தர் இடப்பாகத்திலும் திருநீறு பூசிய அளவில் நோய் தணிந்தது.

     

    மந்திர மாவது நீறு

      வானவர் மேலது நீறு

    சுந்தர மாவது நீறு

      துதிக்கப் படுவது நீறு

    தந்திர மாவது நீறு

      சமயத்தி லுள்ளது நீறு

    செந்துவர் வாயுமை பங்கன்

      திருஆல வாயான் திருநீறே.

     

    ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப்

    புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்

    தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்

    சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!!!

    பாண்டிய மன்னன் முற்றாகக் குணமுற்றுத் தெளிந்து எழுந்து ஞானசம்பந்தரைப் பணிந்து அவர்தம் திருவடிகளில் விழுந்து வணங்கிப் போற்றினான்.

     

    பாண்டியனது வெப்பு நோயைப் போக்க இயலாத சமணர்கள் தருக்க வாதம் புரிவதை விடுத்துத் தீயிலும் நீரிலும் அவரை வெல்லலாம் என்று மனக்கணக்குப் போட்டனர். திருஞானசம்பந்தர் `இனி உங்கள் வாய்மையே பேசுமின்` எனப் பணித்தார். சமணர்கள் `இருதிறத்தாரும் தாங்கள் கண்ட பேருண்மையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டால் வேகாத ஏடு எவருடையதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்வோம்` என்றனர். ஞானசம்பந்தரும் அதற்கிசைந்தார். பாண்டிய மன்னனும் தீக்குண்டம் அமைக்கக் கட்டளையிட்டான்.
    அத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. சிவபெருமானே மெய்ப்பொருள் என உணர்ந்த ஞானசம்பந்தர் தாம் அதுவரை  அருளிய திருப்பதிகச் சுவடியைக் கொணரச் செய்து வழிபட்டு அதனை விரித்தருளினார். `போகமார்த்த பூண்முலையாள்` என்ற திருநள்ளாற்றுத் திருப்பதிகம் உதயமாயிற்று. ஞானசம்பந்தர் திருநள்ளாற்று இறைவனைப் போற்றி அவ்வேட்டினை எடுத்து மெய்ப்பொருளாகும் இவ்வுலக மாந்தருக்கு அறிவுறுத்தும் வகை இவ்வேடு அனலிடை வேகாதிருக்க வேண்டி `தளிரிள வளரொளி` எனத்தொடங்கும் திருப்பதிகம் அருளி எடுத்த ஏட்டினைத் தீயில் இட்டார். அவ்வேடு கொழுந்து விட்டு எரியும் தீயில் வேகாது பசுமையாய்க் காட்சியளித்தது. சமணர்கள் தங்கள் நூற் பொருள் எழுதப் பெற்றதொரு ஏட்டினைத் தீயில் இட்டனர். அது எரிந்து கரிந்து சாம்பலாயிற்று. ஞானசம்பந்தர் குறித்த நேரம் வரை காத்திருந்து தான் இட்ட ஏட்டை யாவரும் காண எடுத்தருளினார். அது தீயில் இட்டும் முன்னையினும் பசுமையாக இருந்த காரணத்தால் பச்சைத் திருப்பதிகம் எனப் போற்றப் பெறுவதாயிற்று.

     

    சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு நகைத்த மன்னனை நோக்கி `ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இரு தரப்பினரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் விட்டால் எவருடைய ஏடு நீரில் அடித்துச் செல்லாமல் எதிர்த்து வருகிறதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம்` என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு என்ன என்பதையும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டார். அது கேட்ட சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவில் ஏற்றட்டும் என்றனர். மன்னனும் அவர்கள் ஆத்திரத்தில் அறிவிழந்துப் பேசிவிட்டதாகக் கூறி அதற்கு உடன் பட்டான்.

    ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மையாகக் கூறும் `அதி நாதி` என வடமொழி மந்திரத்தை எழுதி ஆற்றில் இட்டனர். அவ்வேடு ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே கடலை நோக்கி விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், தம் திருக்கரத்தால்,

    வாழ்க அந்தணர்

      வானவர் ஆனினம்

    வீழ்க தண்புனல்

      வேந்தனும் ஓங்குக

    ஆழ்க தீயதெல்

      லாம்அரன் நாமமே

    சூழ்க வையக

      முந்துயர் தீர்கவே

     

    என்னும் திருப்பதிகத்தை எழுதி அதனை வைகையாற்றில் இட்டனர். வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்துக் கொண்டு எதிர் ஏறிச் சென்றது. குலச்சிறையாரும் அந்த ஏட்டினையொட்டி குதிரை மீது ஏறிச் சென்றார். இத்திருப்பாட்டில் `வேந்தனும் ஓங்குக` என ஞானசம்பந்தர் அருளிச் செய்ததால் பாண்டியன் கூன் நிமிர்ந்து நின்றசீர் நெடுமாறன் ஆக மாறினான். ஏடு எதிரேறிச் செல்வதைக் கண்ட பிள்ளையார் `வண்ணியும் மத்தடும் மதிபொதி சடையினன்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அவ்வேடு வைகையின் வடகரையில் அமைந்த ஒரு கோயிலுக்கு அருகே சென்று சேர்ந்தது. அதனை குலச்சிறையார் வணங்கி எடுத்து வந்தவர், நின்றசீர் நெடுமாறனிடமும், மங்கையர்கரசியாரிடமும் காட்டினார். மக்களும் இறைவன் திருவருளை எண்ணி வியந்துப் போற்றினர்.  ஏடு நின்ற இத்திருக்கோயில் இன்றும் திருவேடகம் என்று வழங்கப்படுகிறது.
    வாதிலே தோற்ற சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படிக் கழுவேறினர். பாண்டிய மன்னன் கட்டளைப்படி குலச்சிறையாரும் அதை நிறைவேற்றினார். ஞானசம்பந்தர் பாண்டிய மன்னனுடன் ஆலவாய் இறைவர் திருக் கோயில் சென்று `வீடலால வாயிலாய்` என்ற திருப்பதிகம் பாடி வழிபட்டுத் தம் திருமடத்துக்கு எழுந்தருளினார்.

    ஆளுடைய பிள்ளையார் மதுரையில் சில நாள் தங்கியிருந்து ஆலவாய் அப்பனைப் பரவினார். பின்னர் பாண்டிய மன்னன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் ஆகியோரோடு திருப்பரங்குன்றம், திருவாப்பனூர், திருப்புத்தூர், திருக்கானப்பேர், திருச்சுழியல், குற்றாலம், திருநெல்வேலி முதலிய தலங்களை வழிபட்டு திருஇராமேச்சுரம் சென்றடைந்தார். திருமால் இராமாவதாரத்தில் சிவ வழிபாடு செய்த இராமேசுவரத்தை அடைந்து அங்கு இராமநாதரைத் தரிசித்து அங்கிருந்தபடியே ஈழத்தலங்களாகிய திருக்கேதீச்சரம், திருக்கோணமலை ஆகிய தலங்களை நினைந்து போற்றினார். இராமேச்சுரத்திலிருந்து ஆடானை, புனல்வாயில், மணமேற்குடி ஆகியவற்றை வழிபட்டுப் பாண்டிய மன்னன் அரசியார் அமைச்சர் முதலானோர்க்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுச் சோழநாடு புகுந்து பாதாளீச்சரம், திருக்களர் முதலான தலங்களை வழிபட்டுக் கொண்டு திருக்கொள்ளம்பூதூர் வந்தடைந்தார்.

     

    பாண்டிய நாட்டிலிருந்து புறப்பட்டுச் சோழ நாட்டையடைந்த பிள்ளையார் திருக்களர், திருப்பாதாளீச்சுரம் முதலிய தலங்களையும் வழிபட்டு முள்ளிவாய்க்கரை என்னும் ஊரைச் சேர்ந்தார். அங்கு முள்ளியாறு எனும் ஆறு உள்ளது. ஆற்றின் மறுகரையில் கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலம் உள்ளது. அங்கு சென்று பரமனைப் பாடும் அவாவினால் சம்பந்தர் தம் அடியார் குழாத்துடன் முள்ளியாற்றின் கரையை அடைந்தார். முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. மறுகரைக்கு ஏற்றிச் செல்லும் ஓடக்காரர்கள் வெள்ளமிகுதி கண்டு ஓடத்தைக் கரையில் கட்டி விட்டுப் போயிருந்தனர். ஞானசம்பந்தர் ஓர் ஓடத்தை அவிழ்க்கச் செய்து அடியவர்களுடன் தானும் ஏறிக்கொண்டு கொள்ளம்பூதூர் இறைவனைப் போற்றி, `கொட்டமே கமழும்` என்ற திருப்பதிகத்தை இசைத்துத் தன் நாவன்மையே கோலாகக் கொண்டு ஓடத்தைச் செலுத்தினார். ஆறாவது பாடல் பாடும்போது ஓடம் கரையை அடைந்தது. ஞானசம்பந்தர் கொள்ளம்பூதூர் ஆலயத்தை அடைந்து எடுத்த திருப்பதிகத்தின் எஞ்சிய பாடல்களால் இறைவனைப் பரவினார். திருநள்ளாறு அடைந்து மதுரை மாநகருக்கு வந்து அனல் வாதத்தில் வெற்றியருளிய திருநள்ளாற்று இறைவன் மீது `பாடகமெல்லடி` என்ற பதிகத்தால் போற்றித் தன் பயணத்தைத் தொடர்ந்தார். பின்னர்த் திருக்கடவூர் சென்று வழிபட்டு அப்பர் எங்குள்ளார் எனக் கேட்டு அவர் திருப்பூந்துருத்தியில் இருக்கும் செய்தி அறிந்து அவரைக் காணத் திருப்பூந்துருத்தி வந்து அடைந்தார்.

    ஞானசம்பந்தர் வருகையை அறிந்த அப்பர், திருப்பூந்துருத்தி எல்லைக்குமுன் சென்று அடியவர் கூட்டத்தினரோடு அவர் ஏறி வரும் சிவிகையைத் தானும் ஒருவராய்ச் சுமந்து வருவாராயினார்.
    திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தி எல்லையை அடைந்தபோது அப்பர் வரவைக் காணாது `அப்பர் எங்குற்றார்?` என அடியவர்களை வினவினார். அவ்வுரை கேட்ட அப்பர் `உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு வந்து எய்தப் பெற்று இங்குற்றேன்` என்றார். ஞானசம்பந்தர் விரைந்து சிவிகையிலிருந்து இறங்கி `இவ்வாறு செய்தருள்வது தகுமா?` எனக் கூறி அப்பரை வணங்கினார். அப்பரும் உடன் வணங்கினார். பின்னர் இருவரும் ஆலயம் சென்று இறைவனை வணங்கினர். ஞானசம்பந்தர் அப்பர் திருமடத்தில் அவரோடு உடன் உறைந்து பாண்டி நாட்டில் நடந்தவைகளை விவரித்தார். அப்பர் `திருநெறித் தொண்டெனும் வான்பயிர் தழைக்கச் சூழும் பெருவேலி ஆயினீர்` எனப் போற்றினார். பாண்டி நாட்டில் சைவம் தழைக்கத் தொடங்கியதை அறிந்த அப்பர் அந்நாடு செல்லும் விருப்புடையவரானார். அப்பர் தொண்டை நாட்டின் சிறப்பைக் கூறக் கேட்ட ஞானசம்பந்தர் தொண்டை நாடு செல்ல விரும்பினார். இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து பயணம் மேற்கொண்டனர். ஞானசம்பந்தர் காவிரி வடகரையை அடைந்து நெய்த்தானம் ஐயாறு பழனம் முதலிய தலங்களை வணங்கி, சீர்காழிப் பதியை அடைந்து தோணிபுரப் பெருமானைப் போற்றித் தம் திருமாளிகையை அடைந்தார்.

    தொண்டைநாட்டில் உலா

    தொண்டை நாட்டில் திருப்பயணம் மேற்கொண்ட ஞானசம்பந்தர் கச்சித்திருஏகம்பப் பெருமானை வழிபடும் விருப்பத்துடன் சீர்காழியிலிருந்து புறப்பட்டுத் தில்லை சென்று ஆனந்தக் கூத்தனைப் பணிந்து திருத்திணைநகர், திருமாணிக்குழி, திருப்பாதிரிப்புலியூர், திருவடுகூர், திருவக்கரை, திருஇரும்பை, மாகாளம் முதலிய தலங்களை வழிபட்டு அப்பரடிகட்கு அருள் செய்த, தற்போது பண்ருட்டி என வழங்கும் ஊரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள அழகிய ஆலயமான திருவதிகை வீரட்டானத்தைச் சென்றடைந்தார். அங்கு வீரட்டானத்து இறையைத் தொழுது போற்றியவர், பின்னர் கோவலூர் அறையணி நல்லூர் ஆகிய தலங்களை வணங்கி அண்ணாமலை சென்றடைந்தார். ‘உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய நடுவன்’ எனும் திருப்பதிக இசை பாடி திருவோத்தூர் எனும் திருத்தலத்தை அடைந்து இறைவனைப் போற்றினார். திருவோத்தூர் தற்போது செய்யாறு திருவத்தூர் என வழங்கப்படுகிறது.

     

    திருவோத்தூரில் சிவனடியார் ஒருவர் இருந்தார். அவர் ஆலயத்தருகில் அன்பர்கள் வேனிற்காலத்தே பருகுவதற்காகப் பனை மரங்கள் நட்டு நீர் வார்த்து வளர்த்து வந்தார். அடியவர்க்கெனத் தான் வளர்த்த, வானுற ஓங்கி வளர்ந்த அப்பனை மரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன. இதனைக் கண்ணுற்ற சமணர்கள் அவ்வடியாரைக் கேலி செய்து உன் சிவனருளால் ஆண் பனையெல்லாம் பெண் பனையாக மாறி காய்க்க வைக்க முடியுமா? என ஏளனமாகக் கேட்டதையும் ஞானசம்பந்தரிடம் கூற அவர் ஆலயம் சென்று வணங்கி, `பூத்தேர்ந்தாயன` என்னும் பதிகம் பாடிய அளவில்,

     

    குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்    

        அரும்பு கொன்றை யடிகளைப்    

        பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்    

        விரும்பு வார்வினை வீடே.    

    என முடிக்கும்போது ஆண்பனைகளனைத்தும் பெண் பனைகளாய்க் குலையீன்றதைக் கண்ட அடியவர் அதிசயித்தனர். சமணர்கள் பிழை பொறுக்க வேண்டியதோடு சைவ சமயத்தின் சிறப்பினை அறிந்து சைவ சமயத்திற்கு மதம் மாறி ஞானசம்பந்தரைப் போற்றினர்.

     

    திருவோத்தூரிலிருந்து புறப்பட்டு ஞானசம்பந்தர் திருமாகறல் குரங்கணில் முட்டம் ஆகிய தலங்களை வணங்கிக் காஞ்சிபுரம் சென்றடைந்தார். கச்சி ஏகம்பம், காமகோட்டம் ஆகிய ஆலயங்களை வணங்கிக் கொண்டு அத்தலத்தின் அருகில் விளங்கும், ஆலயங்களைப் போற்றி, காரைக்காலம்மையார் முத்திப் பேறு பெற்றருளிய திருவாலங்காட்டை வணங்கிப் போற்ற எண்ணினார். அம்மையார் தலையால் நடந்து வந்த அத்தலத்தை மிதித்தற்கு அஞ்சி அத்தலத்தின் அருகில் உள்ளதொரு ஊரில் அன்றிரவு துயில் கொண்டார். ஆலங்காட்டு இறைவர் அவர் கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என்ன உடனெழுந்து `துஞ்சவருவாரும்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். பின்னர் அவ்வூரை விட்டகன்று பாசூர் வெண்பாக்கம் காரிகரை ஆகிய தலங்களை வணங்கிக் கொண்டு காளத்தியை அடைந்தார். கண்ணப்பரின் பக்தித் திறம் போற்றி திருக்காளத்தி இறைவரைப் பணிந்து அங்குள்ள திருமடம் ஒன்றில் பலநாள் தங்கிப் பரவினார். அங்கிருந்தே வடதிசையிலுள்ள திருக்கயிலாயம், கேதாரம், திருப்பருப்பதம் முதலிய தலங்களைப் போற்றிப் பதிகங்கள் அருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவேற்காடு பணிந்து திருவொற்றியூரை வந்தடைந்தார்.

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 30

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (3)

    திருஞானசம்பந்தர் திருப்புகலூர், வர்த்தமானிச்சுரம் ஆகிய தலங்களை வணங்கச் சென்றார். முருக நாயனார் எனும் அடியவர் வர்த்தமானச்சுரத்துப் பெருமானை நாளும் பூவும், பட்டும் கொண்டு அலங்கரித்து, அகில் கொண்டு புகைத்து ஐயன் அழகில் அவர்தம் அடி பரவும் அத்திருத்தொண்டர் வழிபடும் திருக்கோயில் வர்த்தமானிச்சுரம் எனப் போற்றிப் பாடியருளினார். முருக நாயனார் எதிர் கொண்டழைக்கத் திருப்புகலூர் சென்ற ஞானப்பிள்ளையார் ஆலயம் சென்று பெருமானை வணங்கி திருப்பதிகம் பாடிப் போற்றி முருக நாயனார் திருமடத்தில் தங்கியிருந்தார். ஞானப்பிள்ளையார் திருப்புகலூரில் உள்ளார் என்ற செய்தியறிந்த அப்பரடிகள் ஆரூர்ப் பெருமானின் ஆதிரைப் பெருவிழாவினைக் கண்டு களித்து திருப்புகலூர் வந்து சேர்ந்தார்.

    அப்பர் பெருமான் வருகையை அறிந்த ஞானசம்பந்தர் ஆராத அன்புடன் அவரை எதிர்கொண்டழைத்து அளவளாவி மகிழ்ந்தார். திருவாரூரில் நிகழ்ந்த திருவாதிரைத் திருநாளின் சிறப்பை விரித்துரைக்கக் கேட்ட ஞானசம்பந்தர் அப்பரைத் திருப்புகலூரில் இருக்கச் செய்து விற்குடி வீரட்டத்தைப் பணிந்து விழா கண்ட ஆரூரைத் தொழுது வருவதாகக் கூறி திருவாரூருக்கு எழுந்தருளினார். ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த நகர மக்கள் எதிர்கொண்டு போற்றினர். ஞான சம்பந்தர் திருவாரூர்ப் பூங்கோயிலை அடைந்து `சித்தம் தெளிவீர் காள்` என்பது முதலிய பல திருப்பதிகங்களை அருளிப் பரவி வழிபட்டார். அரனெறியைத் தரிசித்தார். பின்னர் வலிவலம் கோளிலி முதலான தலங்களை அடைந்து வழிபட்டு மீண்டும் திருவாரூரை அடைந்து தங்கியிருந்து வழிபட்டு, வழியிடையே பனையூரைத் தொழுதுப் பின்னர் திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார். ஊர் எல்லையில் முருக நாயனார் முதலிய அடியவர்கள் வரவேற்கத் திருப்புகலூரை அடைந்து இறைவனை வழிபட்டு முருகநாயனார் திருமடத்தில் திருநாவுக்கரசர், நீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய அடியவர்களோடு உரையாடிக் கலந்து மகிழ்ந்திருந்தார்.

     

    ஞானசம்பந்தரும் அப்பரடிகளும் நீலநக்கர் சிறுத்தொண்டர் முதலானோர்க்கு விடையளித்து இறைவன் வீற்றிருக்கும் பல திருத்தலங்களையும் வழிபட விரும்பிப் புறப்பட்டனர். ஞானசம்பந்தர் அப்பர் உடன் வருவதால், முத்துச்சிவிகை பின்வர, தானும் அவருடன் நடந்து செல்லலானார். அதைக்கண்ட அப்பர் பெருமான் இறைவன் அளித்த சிவிகையில் வராமல் நடந்து வரும் வகையில் அதைப் புறக்கணிப்பது தகாது என்றும், தன்னுடனேயே பல்லக்கில் பவனி வரவேண்டும் என்று கேட்டுக் கொள்ள எண்பதாண்டு முதியவரான அப்பர் பெருமானை நடக்க வைத்துத் தாம் மட்டும் சிவிகையில் செல்வது சரியாகாது என்று எண்ணிய  ஞானசம்பந்தர் அப்பரை முன்னே விடுத்து அவர் செல்லும் திருத்தலங்களைத் தொடர்ந்து சென்று வழிபட்டார்.

     

    இருவரும் அம்பர் மாகாளத்தை வணங்கித் திருக்கடவூர் சென்றனர். அங்கு குங்குலியக்கலய நாயனார் அவர்களை வரவேற்க இருவரும் கடவூர் வீரட்டத்தைத் தொழுது போற்றி அந்நாயனார் திருமனையில் அமுது கொண்டு திருக்கடவூர் மயானம் ஆக்கூர் மீயச்சூர் பாம்புரம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு திருவீழிமிழலை எனும் திருத்தலத்தை வந்தடைந்தனர். அப்பரடிகளும் ஞானசம்பந்தரும் திருவீழிமிழலையில் வீழிமிழலைப் பெருமானை வணங்கி அங்கு தங்கியிருந்தார்கள். ஞானசம்பந்தர் வீழியில் இருந்தபோது காழிமக்கள் அவர் பிரிவாற்றாது, காழிப்பதியை விட்டு வந்து வெகுநாட்கள் ஆகிறது, தங்களோடு சீர்காழிக்கு வந்து சில நாட்கள் தங்கியருள வேண்டுமென விண்ணப்பித்தனர். ஞானசம்பந்தர் வீழிநாதனின் அருள் பெற்று இன்று கழித்து நாளை செல்வோம் எனக் கூறி, அவர்களைத் திருமடத்தில் தங்க வைத்துத் தாமும் துயில் கொண்டார்.

     

    பெருமான் அவர் தம் கனவில் தோன்றி, தம்மைத் திருமால் வணங்க, இந்திரனால் இங்கு வரவழைக்கப்பட்ட விண்விழி விமானத்தே தாம் தோணியிலமர்ந்த வண்ணத்தை நாளை வீழிமிழலையிலேயே காட்சியளிப்பதாகக் கூறக் கேட்டு பெருமான் கருணை வெள்ளத்தை நினைந்து மகிழ்ந்து அதிகாலை விழித்தெழுந்து நீராடி ஆலயம் சென்றபோது இறைவன் காழிக்காட்சியை அவ்வாலயத்திலேயே காட்டக் கண்டு `மைம் மருபூங் குழல்` எனத் தொடங்கும் திருப்பாசுரம் பாடி வியந்தார். காழி மக்கட்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீழிமிழலையிலேயே தங்கியிருந்தார்.

    ஞானசம்பந்தரும் அப்பரும் திருவீழிமிழலையில் தங்கியிருந்த சமயம் அங்கு மழையின்றி, நீர்வரத்தும் குன்றி, நதிநீர் குறைந்து, வளம் இன்றி நாடு வறட்சியுற்றதால் பஞ்சம் ஏற்பட்டது. உணவு உற்பத்தி குறைந்து வறுமையுற்றதால் உயிர்களெல்லாம் பசியால் வாடின. மக்களோடு அடியார்களும் துயருற்றனர். அதனை அறிந்த பிள்ளையார் `கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலை வருமோ? என்று கருதியவராய் பெருமானை எண்ணியவாறு இருவரும் கண்ணயர்ந்தனர்.

     

    உறங்கிய பெருமக்களின் கனவில் பெருமான் தோன்றி நாட்டின் பஞ்சம் நீங்கும் காலம் வரை ஆலயத்தின் கிழக்குப் பலிபீடத்திலும் மேற்குப் பலிபீடத்திலும் இருவருக்கும் பொற்காசு அளிப்பதாகக் கூறி மறைந்தார். விழித்தெழுந்த ஞானசம்பந்தர் அப்பரடிகளுடன் ஆலயம் சென்றார். கனவில் கண்டதுபோல் கிழக்குப் பலிபீடத்தில் ஞானசம்பந்தர் காசு பெற்றார். மேற்குப் பலிபீடத்தில் அப்பர் பெருமான் காசு பெற்றார். இருவரும் அக்காசுகளைப் பெற்றுத் தத்தம் திருமடங்களில் அடியவர்களுக்கு அமுதளிப்பதாக பறை அறிவித்துச் செய்தியளித்தனர். அடியவர்கள் அனைவரும் உணவு உண்டு மகிழ்ந்திருந்த நேரத்தில், நாவுக்கரசர் திருமடத்தில் உரிய காலத்திலும், ஞானசம்பந்தர் திருமடத்தில் சிறிது காலம் தாழ்ந்தும் உணவளிக்கப் பெறுவதை அறிந்த ஞானசம்பந்தர், பணியாளர்களை அழைத்துத் தாமதத்திற்குரிய காரணம் வினவினார். இறைவன் தனக்கு அளிக்கும் காசுகள் வாசியுள்ளதாக இருத்தலையும், நாவுக்கரசர் அளிக்கும் காசு நல்ல காசு என்பதையும் அறிந்தார். அக்காசினை மாற்றிப் பொருள்கள் பெற்று வருதலினால் காலத்தாமதம் ஏற்படுதலையும் அறிந்தார் ஞானசம்பந்தர். அப்பர் கைத்தொண்டும் செய்தலால் அவருக்கு வாசியில்லாத காசு வழங்குதலை அறிந்து மறுநாள் ஆலயம் சென்று `வாசிதீரவே காசு நல்குவீர்` எனத் திருப்பதிகம் பாடி நல்ல காசினைப் பெற்று உரிய காலத்தில் தமது திருமடத்திலும் அடியவர்களுக்கு அமுதளிக்கச் செய்து மகிழ்ந்திருந்தார்.

     

    வாசி தீரவே, காசு நல்குவீர்

    மாசின் மிழலையீர், ஏச லில்லையே.

     

    இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்

    கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

     

    செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்

    பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

     

    நீறு பூசினீர், ஏற தேறினீர்

    கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

     

    காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்

    நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.

     

    பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்

    அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.

     

    மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்

    கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.

     

    அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்

    பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.

     

    அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்

    இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.

     

    பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்

    வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.

     

    காழி மாநகர், வாழி சம்பந்தன்

    வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

     

    சில திங்களில் மழைபெய்து நாடு செழித்தது. பஞ்சம் நீங்கி மக்கள் இனிது வாழத் தொடங்கினர்.

     

    ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழிமிழலையிலிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வழிபட்டுக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு வரவேற்க, தற்போது வேதாரண்யம் என்று வழங்கப்படுகிற திருமறைக்காடு சென்று அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகியபோது வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக்கதவுகள் திறக்கப்படாமல் இருந்ததையும் மக்கள் மற்றொரு புறத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருவதையும் கண்ட ஞானசம்பந்தர் வேதவனப் பெருமானை உரிய வாயில் வழியே சென்று வழிபட வேண்டும் என்று எண்ணி அப்பரடிகளிடம், அத்திருக்கதவுகள் திறக்க வேண்டி திருப்பதிகம் பாடியருள வேண்டுமென வேண்டினார். அப்பர் பெருமானும் `பண்ணினேர் மொழியாள்` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடியருளினார். அப்பதிகப் பொருட் சுவையில் ஈர்க்கப்பட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் மகிழ்வுடன் ஆலயத்தினுள் சென்று மறைக்காட்டுறையும் இறைவனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமெனவும் வேண்டினார்.
    ஞானசம்பந்தர் `சதுரம் மறை` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாட, அந்த முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொள்ள ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் மகிழ்ச்சியுடன் திருமடம் சேர்ந்தனர்.

     

    அப்பர் திருமடத்தைச் சார்ந்து தான் 10 பாடல்கள் பாடி அரிதில் திறக்கவும், முதல் பாடல் சம்பந்தர் பாடிய உடனே மூடியதையும் நினைத்துப் பார்த்து இறைவன் திருவருள் குறிப்பை உணராது திருக்கதவந் திறக்கப் புகுந்தது தவறெனக் கருதி அம்மடத்தின் ஒரு பால் துயில் கொண்டார். அவர்தம் மனக்கருத்தை அறிந்த சிவபெருமான் அவர் எதிரே சைவ வேடத்துடன் தோன்றி, `நாம் வாய்மூரில் இருப்போம். நம்மைப்பின் தொடர்ந்து வருக` எனப் பணித்தார். அப்பர் பெருமான் கை, தலை குவித்து பின் தொடர்ந்து சென்றார். அப்பெரியவர் அண்மையில் இருப்பது போலக் காட்டி மறைந்தார். சண்பை வேந்தர் எழுந்து அப்பரடிகள் பற்றி வினவ, அடியார்கள் அப்பர் வாய்மூர் சென்றமையைத் தெரிவித்தனர். அப்பரடிகளை அவர் சென்ற வழி கேட்டறிந்து அவரைத் தேடித் திருவாய்மூர் வந்தடைந்தார்.

     

    ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த அப்பரடிகள் அகமகிழ்ந்து தாம் திருக்கதவம் திறக்கப் பாடிய திருப்பதிகத்தினினும் சிறப்புடைய செந்தமிழ் பாடித் திருக்கதவம் அடைப்பித்த ஞானசம்பந்தர் வருகையைக் கூறி அவருக்காக திருக்காட்சி நல்க வேண்டினார். வாய்மூர் பெருமான் ஞானசம்பந்தருக்கு மட்டும் தமது ஆடல் காட்சியைக் காட்டியருள ஞானப்பிள்ளையார் `தளிரிள வளரென` எனத் திருப்பதிகம் பாடிப் போற்றி அக்காட்சியை அப்பருக்கும் காட்டியருளினார். அவ்வருட் காட்சியைக் கண்ட அப்பரடிகளும் பதிகம் பாடிப் போற்றினார். இருவரும் திருவாய்மூரில் சில நாட்கள் தங்கியிருந்து மகிழ்ந்தவர்கள் மீண்டும் திருமறைக்காடு சென்று சேர்ந்தனர்.

     

    பாண்டிநாடு சமண சமய இருளில் மூழ்கியிருந்த காலம் அது. பல்லாயிரம் சமணத் துறவிகளைத் தோற்றுவித்து  ஆனைமலை முதலிய மலைகளைத் தம் இருப்பிடங்களாகக் கொண்டு தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். சைவத் திருக்கோயில்கள் அனைத்தும் சமணப் பாழிகளாக மாற்றமடைந்தன. அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டிய மன்னனையும் சமண சமயத்தில் சேர்த்தனர். மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத் தலைப்பட்டனர். பாண்டிய மாதேவியான மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைபிடித்து காத்து வந்தனர். இந்நிலையில் ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் இறையருள் பெற்ற அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து பரிசனங்களை அனுப்பி வணங்கித் தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமென வேண்டிக் கொண்டனர். ஞானசம்பந்தரும் அப்பரடிகளும் மறைக்காட்டீசர் திருக்கோயில் சென்று வணங்கினர். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் விருப்பத்தை அப்பரிடம் தெரிவிக்க, அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் `பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக்கோர் அளவில்லை. அதை நானே அனுபவித்திருக்கிறேன். ஆயினும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது` எனத் தடுத்தருளினார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி `நாம் பரவுவது நம் பெருமான் கழல் ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது` எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க `வேயுறு தோளிபங்கன்` என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார். பாடல் கேட்டு வந்த அப்பரடிகள் தானும் உடன் வருவதாகக் கூறிப் புறப்பட்டார். சம்பந்தர் அவரது வயது கருதி அவரை சோழ நாட்டுத் திருத்தலங்களை வழிபட்டு இருந்தருள வேண்டினார். அப்பரடிகளும் அதற்கு இசைந்தார்கள்.

     

    திருஞானசம்பந்தர் திருமறைக்காட்டிலிருந்து அடியவர் புடைசூழச் சிவிகையில் அமர்ந்து அகத்தியான்பள்ளி, கோடிக்குழல் முதலிய தலங்களை வணங்கிச் சோழ நாட்டிலிருந்து தென் மேற்றிசை நோக்கிச் சென்று திருக் கொடுங்குன்றத்து இறைவனைப் பணிந்து மதுரை மூதூர் மருங்கணைந்தார். மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தர் வருகையை அறிந்து குலச்சிறையாரை ஊர் எல்லையில் அவரை வரவேற்குமாறு பணித்திருந்தார். மதுரை எல்லையை அடைந்த ஞானசம்பந்தரைக் குலச்சிறையார் வணங்கி வரவேற்றார். பிள்ளையார் சிவிகையிலிருந்து இறங்கி, மங்கையர்கரசியாருக்கும் அமைச்சருக்கும் திருவருளால் நன்மைகள் விளைய வேண்டும் என வாழ்த்தினார். குலச்சிறையாரும், சம்பந்தப் பெருமான் எழுந்தருளப் பெற்ற பேற்றினால் என்றைக்கும் திருவருள் உடையவராவோம் என்றார். தங்கள் நாட்டில் இனி திருநீற்றொளி விளங்குவது உறுதி எனவும் முகமனுரை கூறியவர் மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வரவேற்கத் தன்னை அனுப்பியுள்ளதையும் தெரிவித்தவர், மதுரை மிக அண்மையிலுள்ளது என்றும் கூறினார். ஞானசம்பந்தர் மதுரையை நெருங்கிய நிலையில் `மதுரை இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது` எனக் கேட்க அடியவர்கள் கோபுரத்துடன் திருக்கோயிலைச் சுட்டிக்காட்டி `அதுவே திருவாலவாய்` எனக் கூறக்கேட்டு `மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகியோரின் பக்தி நலத்தைப் புகழ்ந்து திருப்பதிகம் அருளிச் செய்து கொண்டே ஆலவாய்த் திருக்கோயிலை அடைந்து குலச்சிறையாருடன் வலங்கொண்டு பணிந்து `நீலமாமிடற்று` எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடியருளினார்.

    மங்கையர்க்கரசியார் ஆலவாய் இறைவர் திருக்கோயிலில் வழிபாடு முடித்தவர், கோயில் முன்றிலில் திருஞானசம்பந்தரைக் கண்டு அவர்தம் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து பணிந்தார். பிள்ளையார் தம் மலர்க்கரங்களால் அவரை எடுத்தபோது தாங்கள் செய்த தவப்பயனால் சம்பந்தப் பிள்ளையாரைத் தரிசிக்கும் பேறு பெற்றதாகக் கூறினார். ஞானசம்பந்தரும் புறச்சமயச் சூழலிலும் சிவனடித் தொண்டினை மறவாது போற்றும் அவர்களைக் காணும் பொருட்டே அங்கு வந்ததாகக் கூறி அவருக்கு விடைகொடுத்து அனுப்பியவர், திருக்கோயில் புறத்தில் சென்று குலச்சிறையார் காட்டிய திருமடம் ஒன்றில் அடியவர்களோடு எழுந்தருளியிருந்தவர்களுக்கு அரச மாதேவியாரின் கட்டளைப்படி குலச்சிறையார் நல்விருந்தளித்து உபசரித்தார்.

    பகற்பொழுது கழிந்து இரவு வந்த நேரத்தில் ஞானசம்பந்தரோடு உடன் வந்த அடியவர்கள், அந்தணர்களின் வருகையை அறிந்த சமணர்கள் கண்டு முட்டு ஆயினர். மன்னனிடம் சென்று முறையிட்டவர்கள், தாங்கள் அறிந்த மந்திரத்தால் ஞானசம்பந்தர் தூங்குகின்ற மடத்திற்குத் தீவைக்கவும் அனுமதி பெற்றனர்.

    ஆனால் சமணர் அனலை ஏவிய மந்திரம் ஞானசம்பந்தரின் அடியவர் ஓதும் ஐந்தெழுத்துக்கு முன்னால் பலிதம் ஆகவில்லை என்பதை அறிந்த சமணர்கள் ஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீ வைத்தனர். அந்த மடத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. அடியவர்கள் சமணர்களின் வஞ்சனையை அறிந்து ஞானசம்பந்தரிடம் முறையிட்டனர். `இத்தீ அரசன் முறை செய்யாமையால் நேர்ந்தது என்பதால் இத்தீ அவனைச் சென்று பற்றுதலே முறை என்றாலும் மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணுக்கு ஊறு நேராதவாறு பையச் சென்று பாண்டியனைப் பற்றுவதாகட்டும் என்று கூறி `செய்யனே திரு` என்று பதிகம் ஓதி தீயை ஏவினார்.
    பொழுது விடிந்து, ஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்தில் சமணர்கள் தீவைத்த செய்தி மதுரை மாநகர் முழுதும் பரவியதைக் கேள்வியுற்ற மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் பேரச்சம் கொண்டனர். இத்தகைய கொடியவர்கள் வாழும் நாட்டில் ஞானசம்பந்தப் பெருமானை வரவழைத்த குற்றத்துக்குத் தாங்கள் இறப்பதே சரியான தண்டனையாக இருக்கும் என்று எண்ணினர். ஆனாலும் திருமடத்தில் இடப்பட்ட தீயால் எவருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாததால் மன ஆறுதல் உற்றனர். இந்நிலையில் பாண்டி மன்னனை வெப்பு நோய் பற்றி வருத்தியதை அறிந்து அச்சமுற்று அரசனைக் காணச் சென்றனர். எவ்வளவு முயன்றும் மருத்துவர்களாலும் சமண முனிவர்களாலும் அந்த வெப்பு நோயைக் குணப்படுத்த இயலவில்லை.
    அப்போது அமைச்சர் குலச்சிறையார் அரசனை அணுகி, ஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்துக்குச் சமணர்கள் இட்ட தீயே நோயாகி வந்துள்ளதால் அவர் வந்தால் இந்நோய் தீரலாம்` என்றார். பாண்டிய மன்னனும் ஞானசம்பந்தர் என்ற திருநாமத்தைக் கேட்ட உடனேயே அவருடைய அயர்வு நீங்கியதை உணர்கிறார். அதனால் அவரை அழைக்கும்படியும் கூறினார். ஆனால் சமணர்கள் அரசனிடம் சென்று அவருடைய இந்த நோய் ஞானசம்பந்தரால் தீர்க்கப் பெற்றாலும் சமணர்களாகிய தங்களாலேயே தணிந்தது எனப் பொய்யுரைக்க வேண்டினர். மன்னன் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் நடுநிலை பிறழ முடியாது என்று மறுத்தான்.

     

    குலச்சிறையாரும் அரசியாரும் ஞானசம்பந்தரை தரிசித்துத் திருமடத்திற்குத் தீயிடப்பட்ட செயலுக்கு மிகவும் வருந்தியதோடு, வெப்பு நோயால் வாடும் மன்னன் பற்றி எடுத்துரைத்து சம்பந்தப்பெருமான் எழுந்தருளி மன்னனின் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்று  விண்ணப்பித்துக் கொண்டனர். ஞானசம்பந்தர் சமணர்களோடு செய்யும் வாதில் வென்று `தென்னர் கோனுக்குத் திருநீறு அணிவிப்போம்` எனக் கூறிப் புறப்பட்டுத் திருக்கோயிலை அடைந்து `காட்டு மாவது உரித்து` என்ற திருப்பதிகத்தால் பாடிப்பரவினார்.  சமணர் மேற்கொள்ளும் வாதங்களிலும் வெற்றி நல்க `வேத வேள்வியை` என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விடை பெற்று வெளிவந்து சிவிகையில் ஏறி மன்னனின் மாளிகையை அடைந்தார்.

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 29

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (2)

     

    திருஞானசம்பந்தர் எனும் அந்த அருட்குழந்தையை சீர்காழியின் மக்கள் அனைவரும் திரண்டெழுந்து வந்து வரவேற்று அவருடைய இல்லம் சேர்ப்பித்தனர். ஏழாவது வயது தொடங்கியது அக்குழந்தைக்கு. வேதியர்கள் தங்கள் குலமரபை எடுத்துக்கூறி அவருக்கு முப்புரிநூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கினைச் செய்து `மறை நான்கும் தந்தோம்` என்று மந்திரங்கள் மொழிந்தனர் மறையோர். ஆனால் ஏதும் ஓதாதுணர்ந்த அந்த அருட்குழந்தை வேதங்களையெல்லாம் எடுத்து இயம்பினார். வேதங்களின் பல பகுதிகளையும் அவற்றின் பொருளோடு ஓதக் கேட்ட அந்தணர்கள் வேதங்களில் தங்களுக்கு இருந்த ஐயங்களை ஞானசம்பந்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி, அந்தி நேரத்தில் அந்தணர்கள் ஓத வேண்டிய மந்திரம் வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை, `துஞ்சலும் துஞ்சல்` என்று தொடங்கிப்பாடி அனைவர்க்கும் உணர்த்தி அருளினார். ஞானசம்பந்தப் பெருமான் சீர்காழியில் தங்கியிருந்த நாட்களில் மொழி மாற்று, மாலைமாற்று முதலிய பல திருப்பதிகங்களைச் சித்திரகவிகளுக்குரிய இலக்கியங்களாகப் படைத்து சீர்காழி இறைவனைப் பாடி இன்புற்றார். திருநீலகண்டயாழ்ப்பாணரும் அவர்தம் துணைவியார் மதங்கசூளாமணியாரும் அப்பதிகங்களை யாழில் இணைத்து இசைத்து மேலும் சிறப்பு செய்து வாழ்ந்து வந்தனர்.

    அருட்குழந்தையின் அற்புத அருளிப்பாட்டினைக் கேள்வியுற்ற அப்பரடிகள் அத்தவச் செல்வனை காணப் பெரிதும் விரும்பி சீர்காழி நோக்கிப் புறப்பட்டார். உபநயனச் சடங்கு முடிந்து ஞானசம்பந்தர் சீர்காழியில் தங்கியிருக்கும் பொழுது, கல்லைப் புணையாகக் கொண்டு கடலிடைக் கரையேறிய நாவுக்கரசர் பெருமைகளைக் கேட்டறிந்திருந்தவர் அவர் தன்னைக் காண வருகின்றார் என்பதை அறிந்து அன்பர்களோடு சென்று அவரை எதிர்கொண்டு அழைத்தனர். தூய வெண்ணீறு பூசிய பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடிதைவரும் நெஞ்சும் அன்பு பாய்வது போல் கண்ணீரும்கொண்டு முதுமைக் கோலத்தில் வந்த திருநாவுக்கரசரை ஞானசம்பந்தர் வணங்கினார். நாவுக்கரசரும் அவரை வணங்கித் தன்னை வணங்கிய ஞானசம்பந்தரைத் தம் மலர்க்கையால் எடுத்து `அப்பரே` என அழைக்க அவரும் அடியேன் என மகிழ்ந்துரைக்க, இருவரும் அளவளாவி மகிழ்ந்து திருத்தோணியப்பரை வழிபட திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் ஞானசம்பந்தர் அப்பரைத் தம் திருமாளிகைக்கு அழைத்துச் சென்று, இருவரும் திருவமுது கொண்டு அளவளாவி மகிழ்ந்தனர். சில நாட்கள் சீர்காழிப் பதியில் தங்கிப் போற்றிய அப்பர் பெருமான் பிரியா விடைபெற்றுச் சோழ நாட்டுத் திருத்தலப் பயணம் மேற்கொண்டார்.

    திருஞானசம்பந்தர் தன் தந்தையாரான சிவபாதஇருதயரிடம் மீண்டும் தமது பயணத்தைத் தொடரும் விருப்பத்தைத் தெரிவிக்க, தமது பிள்ளையைப் பிரிய மனமில்லாத தந்தை சில தலங்கட்கு உடன் வருவதாகக் கூறி தாமும் அவரோடு உடன் செல்ல திருப்பயணம் சிறப்பாகத் தொடர்ந்தது.

    திருஞானசம்பந்தர் திருத்தோணிபுரப் பெருமானை வணங்கி விடைபெற்றுப் பயணம் மேற்கொண்டார். திருக்கண்ணார்கோயில், புள்ளிருக்கு வேளூர் முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு காவிரி வடகரை வழியே மழவர் நாட்டுத் திருப்பாச்சிலாச்சிராமம் சென்றடைந்தார். பண்டைய நாளில் மழவ நாடு என்று அழைக்கப்பட்ட, திருப்பாச்சிலாச்சிரமம் எனும் அழகிய ஊர், தற்போது திருச்சி மாவட்டத்தில் திருவாசி என வழங்கப்படுகிறது. குறுநில மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பாக இருந்த அந்நகரில் வாழும் குறுநில மன்னனாகிய கொல்லி மழவன் தம் முன்னோர் வழி ஈசனடியவராக இருந்தவர். வளர்ந்து மங்கைப் பருவம் எய்தியுள்ள அவனது மகள், பெற்றோர் திருமணம் செய்ய முடிவெடுத்த வேளையில் உணர்வுகள் இருந்தும், உணர்ச்சிகள் இல்லாததொரு மயக்க நிலையை எட்டியிருந்தாள்.

     

    தன் மகளைப் பல்வகை மருத்துவம் செய்தும் குணப்படுத்த இயலாத நிலையில் கொல்லிமழவன் அவளை பாச்சிலாச்சிராமத்து ஆலயத்தில் இறைவர் திருமுன் கிடத்தி நம்பிக்கையுடன் பெருமானை அனுதினமும் வேண்டி நின்றார். இந்நிலையில் .திருஞானசம்பந்தர் திருத்தலப் பயணமாக அங்கு வந்ததை அறிந்த அம்மன்னன் நகரை அலங்கரித்து நன்முறையில் அவரை வரவேற்று ஆலயத்துக்கு அழைத்துச் சென்றான். ஆலயத்தின் கொடிமரத்தின் முன் இளம்பெண் ஒருத்தி உணர்வற்ற நிலையில் நிலத்திற் கிடத்தலைக் கண்டு மன்னனை அழைத்து அப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நோயைப் பற்றி அறிந்து ஈசனருளை வேண்டிப் பணிந்து, `துணிவளர்திங்கள்` என்று தொடங்கித் திருப்பதிகம் பாடியருளினார்.

     

    துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்     

            சுடர்ச்சடை சுற்றிமு டித்துப்    

        பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ     

            வாரிட மும்பலி தேர்வர்    

        அணிவளர் கோலமெ லாஞ்செய்து பாச்சி     

            லாச்சிரா மத்துறை கின்ற    

        மணிவளர் கண்டரோ மங்கையை வாட     

            மயல்செய்வ தோஇவர் மாண்பே.  

     

    அப்பெண் மயக்கம் தெளிந்து நல் உணர்வு பெற்று எழுந்து ஞானசம்பந்தரை வணங்கிப் போற்றினாள். மழவனும் மகிழ்ந்து அவர் திருவடிகளை வணங்கினான்.

    திருப்பாச்சிலாச்சிராமத்துப் பரமனைத் தாள்பணிந்துப் போற்றிய ஞானசம்பந்தர் அவ்வூரினின்றும் புறப்பட்டுப் பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலான பல தலங்களையும் வழிபட்டுத் திருக்கொடிமாடச் செங்குன்றூர் எனப்படும் திருச்செங்கோடு எனும் திருத்தலத்தைச் சென்று சேர்ந்தார். அங்கு பல மாதங்கள் தங்கியிருந்து மாதொருபாகரைப் போற்றி அருகிலுள்ள திருநணாவை வழிபட்டு, திருச்செங்குன்றூர் வந்து திருமடம் ஒன்றில் தங்கியிருந்தார். அக்காலம் பனிக்காலம் என்பதால் அப்பகுதியில் தோன்றும் பனி நோய் என்னும் குளிர் சுரம் அவருடன் வந்த அடியார்களைப் பற்றி வருத்தியது. அதனை அறிந்த ஞானசம்பந்தர் அடியவர்களைப் பற்றியிருந்த அந்நோய் தீருமாறு நஞ்சுண்டு அமரர்களைக் காத்த திருநீலகண்டப் பெருமானைப் போற்றி `அவ்வினைக்கு இவ்வினை` என்னும் திருப்பதிகம் அருளிச் செய்தார். அக்கணமே அடியவர்களுக்கு மட்டுமின்றி கொங்கு நாடெங்கிலும் அந்நோய் வாராது நீங்கியது.

     

    அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
    உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
    கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
    செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

    சம்பந்தப்பெருமானின் நினைவு இல்லம் அமைக்கப்பட வேண்டிய இடமான, அந்நாட்களில் அப்பெருமான் தங்கியிருந்த அத்திருமடம் இன்றும் திருச்செங்கோடு திருத்தலத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

     

    திருஞானசம்பந்தர், திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டு, பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக்tகூடல், கருவூர் ஆனிலை முதலிய தலங்களைப் பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக்கொண்டு திருவலஞ்சுழி வந்தடைந்த அந்த காலம் இளவேனிற் பருவம் தொடங்கிய காலம். திருவலஞ்சுழி இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி முற்றத்தையும் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் திருத்தலம் வந்தடைந்தார். அந்த உச்சிப் பொழுதில் கடும் வெப்பம் தாக்க அதனைச் சற்றும் பொருட்படுத்தாது பயணத்தைத் தொடங்கினார்.

     

    அப்போது இறையருளால் சிவபூத கணங்கள் வானத்தில் மறைந்து நின்று பட்டீசுரர் அளித்த முத்துப் பந்தரை ஏந்தியவாறு `எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர்` எனக் கூறி ஞானசம்பந்தரின் சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர் வானினின்று இழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த் தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். இறைவன் திருவருள் இதுவானால் ஏற்றுக்கொள்ளத் தகுவது எனக்கூறிப் பணிந்தார். ஞானசம்பந்தப் பெருமான் இறைவனது பெருங் கருணையை வியந்தவாறு `பாடல் மறை` பதிகம் பாடிப் பட்டீச்சுரரை வழிபட்டு மகிழ்ந்தார். அங்கிருந்து புறப்பட்டு பல தலங்களையும் வழிபட்டுத் திருவாவடுதுறையைச் சென்று சேர்ந்தார்.

     

    வழிபாடு செய்து தங்கியிருந்தபோது சிவபாத இருதயர் அன்பு மகனைக் காண வந்தவர், தான் வேள்வி செய்தற்குப் பொருள் வேண்டுமென ஞானசம்பந்தரிடம் தெரிவித்தார். ஞானசம்பந்தர் தந்தையாருக்கு அளிக்கப் பொருள் இல்லையே என வருந்தியவராய் `இடரினும் தளரினும்` என்ற திருப்பதிகத்தால் இறைவனிடம் விண்ணப்பித்தார்.

     

    இடரினுந் தளரினும் எனதுறுநோய்
    தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
    கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
    மிடறினில் அடக்கிய வேதியனே
    இதுவோஎமை யாளுமா
    றீவதொன் றெமக்கில்லையேல்
    அதுவோவுன தின்னருள்
    ஆவடு துறையரனே

     

    சிவபூதம் ஒன்று ஆயிரம் பைம் பொற்காசுகள் நிரம்பிய உலவாக்கிழியை ஆலயத்தில் மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து மறைந்தது. ஆளுடைய பிள்ளையார் உலவாக் கிழியைத் தலைமேற் கொண்டு போற்றி அதனைத் தந்தையார் கையில் கொடுத்து, இக்கிழியின் பொன்னைக் கொண்டு தந்தையாரையும் கழுமலத்திலுள்ள ஏனைய அந்தணர்களையும் நல் வேள்விகள் பலவும், செய்யுமாறு கூறி வழியனுப்பி வைத்தவர், இப்பதிகத்தை நம்பிக்கையோடு ஓதும் அடியவர்களுக்கும் வழித்துன்பம் நீங்கி, இன்பம் பெருகும் என்பதையும், சம்பந்தர் வாக்கு சத்தியவாக்கு என்பதையும் விளங்கச் செய்கிறார்.

    ஞானசம்பந்தரும், அடியார்களும் திருக்கோழம்பம் வைகல் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு திருத்தருமபுரம் எனும் அருட்பதியை அடைந்தனர். தருமபுரம் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயார் பிறந்த ஊர் என்பதால் அங்கு வாழும் அவரது சுற்றத்தார் ஞானசம்பந்தரையும், யாழ்ப்பாணரையும் அன்புடன் வரவேற்றுப் போற்றினர்.

     

    பாணர் தம் உறவினர்களோடு உரையாடுகையில் பிள்ளையாரின் திருப்பாசுரங்களை யாழில் வாசிக்கும் பெரும்பேறு பெற்றமையை சிந்தை மகிழச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ஞானசம்பந்தரின் திருப்பதிக இசைச் சிறப்புக்கு பாணரின் யாழ் வாசிப்பே காரணம் எனக் கூறினர். அதைக் கேட்டு பதைபதைத்த பாணர் மனம் பொறாது சிந்தை நொந்து ஞானசம்பந்தரைப் பணிந்தவர், யாழ்க்கருவியில் அடங்காத திருப்பாசுரத்தை பாடியருள வேண்டும் என விண்ணப்பித்தார். ஞானசம்பந்தரும் கண்டத்திலும் கருவியிலும் அடங்காத,  இசைக் கருவிக்கு அப்பாற்பட்ட கூறுடைய `மாதர் மடப்பிடியும்` என்ற திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.

     

    மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்  

        நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் 

    பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்  

        அவர் படர் சடை நெடு முடியதோர் புனலர் 

    வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை  

        இரைந்து தாழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை இரைந்து தாழிவினி 

    கரை மலர்ச்சிறை வண்டறை  

        எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

     

    யாழ்ப்பாணர் எப்போதும் போல அப்பாடலைத் தம் கருவியில் வாசிக்கத் தொடங்கியவர், அப்பாடல் யாழ்க்கருவியில் அடங்காததை உணர்ந்து நடுக்கமுடன் அவர் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தவர், அதனை உடைத்தற்கும் ஓங்கினார். ஆனால் ஞானசம்பந்தர் ஓங்கிய கையைப் பிடித்து, அதனைத் தடுத்து, இறைவன் திருவருட்கருணையெல்லாம் இவ்யாழில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் சிந்தையில் அளவுபடாப் பதிக இசை, செயலிலும் எய்தாதலின், இந்த யாழ் கொண்டே இறைவர் திருப்பதிக இசையினை இயன்றவாறு வாசிப்பீர், ஏழிசையாய் உள்ள எம்பெருமான் திருப்புகழை எவ்வாறு கருவியால் கட்டுப்படுத்த இயலும் என்று கூறினார். பாணரும் பின்னர் அப்பாடலை யாழில் இட்டு வாசித்தார். சில நாட்கள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து `போகமார்த்த பூண் முலையாள்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்று ஈசனை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.

     

    சாத்தமங்கை என்பது சோழ நாட்டுத் திருத்தலம். தற்போது நாகப்பட்டிணம் தாலுக்காவில் அமைந்துள்ள தலம் இது. சீலமிக்க நீலநக்கர் எனும் அந்தணர் ஒருவர் அங்கு வாழ்ந்து வந்தார். திருச்சாத்த மங்கையில் அயவந்தி என்னும் ஆலயத்திலுள்ள பெருமானையும், அடியவர்களையும், தம் குருநாதரான பிள்ளையாரையும் போற்றிப் பரவும் பெற்றியர் அவர். ஞானப்பிள்ளையார் தம் ஊர் நோக்கி வரும் செய்தியறிந்து பெருமகிழ்வுற்றவர், அவரை எதிர்கொண்டழைத்துத் தம் திருமனையில் திருவமுதளித்து உபசரித்தார். இறைவனை வழிபட்டவர், அத்தலத் திருப்பதிகத்தில் நீலநக்கரின் அன்பின் திறத்தையும் பாடினார். அவர் இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்து திருநாகைக் காரோணமுடையாரைப் பணிந்து, பின்னர் பல பதிகளையும் வழிபட்டுத் திருச்செங்காட்டங்குடியை அடைந்தார். திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சுரம் சென்று `பைங்கோட்டு மலர்ப் புன்னை` எனத் தொடங்கிப் பதிகம் பாடிப் பரவினார். அத்திருப்பதிகத்தில் சிறுத்தொண்டர் பக்திச் சிறப்பைப் பாராட்டித் திருமருகல் சென்றடைந்தார். திருஞானசம்பந்தர் மருகற் பெருமானை வழிபட்டுச் சிலநாள் அங்குத் தங்கியிருந்தார். அப்பொழுது ஓர் அற்புத நிகழ்ச்சி நடந்தது.

     

    ஊரே ஆழ்ந்த அமைதியில் இருந்த அந்த நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. தொடர்ந்து விடியும்வரை அந்தக் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஞானசம்பந்தர் அதிகாலை எழுந்து புனித நீராடி ஆலயம் செல்லும் வழியில் அழுகுரல் வந்த திக்கு நோக்கிச் சென்றார். அங்கு ஒரு பழைய மடம் இருந்த்து. அங்கு அவர் கண்ட காட்சி மிக அவலமானதாக இருந்தது. அம்மடத்தின் ஒரு புறத்தே ஒரு மனிதன் இறந்து கிடக்க மற்றொரு புறத்தே ஒரு பெண் ஆறாத்துயரத்தோடு கதறியபடி இருந்தாள். சம்பந்தப் பெருமானைக் கண்ட அந்தப் பெண் அவர் திருப்பாதங்களில் விழுந்து கதறினாள். தன் விவரமும் கூறினாள். வைப்பூர் எனும் ஊரைச் சேர்ந்த தாமன் செட்டியார் என்பவரின் மகள் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அவனுக்கு மகளிர் எழுவர்.  இறந்து கிடக்கும் அவன் தன் மாமன் மகன் என்றும் கூறினாள்.

     

    வணிகனான அவன் முறைப் பெண்ணான தன்னை உடன் அழைத்துக் கொண்டு தனது ஊருக்குச் செல்லக் கிளம்பியிருந்தான். மாலை நேரம் ஆனதால் மேலும் பயணத்தைத் தொடர முடியாமல் திருமருகல் ஆலயத்தின் அருகிலுள்ள ஒரு திருமடத்தில் தங்கியுள்ளார்கள். இரவில் அவள் மாமனை நாகம் தீண்டிவிட, அதன் விடம் தலைக்கேறி மயங்கிச் சரிந்துள்ளான் அவன். அவளோ மணமாகாத நிலையில் அவனைத் தொடவும் முடியாதவளாய் செய்வதறியாது குழம்பி நிற்கிறாள். பெற்றோருக்கும் கூடத் தெரியாமல் அவனுடன் வந்தவள் என்பதால் மேலும் திகைப்புற்று அழுது அரற்றினாள். அவளுடைய தந்தை அவனிடம் பெரும் பொருளைப் பெற்றுக்கொண்டு அவளுடைய தமக்கைகளைத் தருவதாகக் கூறிவிட்டு, அடுத்த பெண்ணை உனக்குத் தருகிறேன் என்று ஆறுதல் கூறிக்கொண்டே ஆறு பெண்களையும் இவ்வாறே பிறருக்கு மணம் முடித்து வந்தார். ஒவ்வொருவரையும் வேறு ஒரு மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டதால், தந்தையின் சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக அவனை மணமுடிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறுகிறாள். அவன் மீது கொண்ட காதலால் அவள் தன் வீட்டை விட்டு வெளிவரவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினாள்.

     

    ஞானசம்பந்தரும் அவள் கதையைக் கேட்டு மனம் நெகிழ்வுற்றாலும், இறந்தவர்களையெல்லாம் எழுப்புவது தன் பணியல்ல என்று நினைத்தாலும் ஆண்டவனையே சரணடைந்து சத்தியத்தைக் காக்க வந்த அடியவளுக்கு இது நேர்ந்திருக்கலாகாது என்று கருதி மருகல் பெருமானைப் பணிந்து அம்மங்கைக்கு நீதி நல்க வேண்டி நின்றார். `சடையாயெனுமால்` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார். அந்நிலையில் வணிகனும் உயிர்பெற்று எழுந்தான். இருவரும் தங்கட்கு வாழ்வளித்த ஞானசம்பந்தர் திருவடிகளைப் பணிந்தனர். ஞானசம்பந்தர் அவ்விருவருக்கும் இறைவன் திருமுன்னிலையில் மணம் புணரும் பெருவாழ்வு வழங்கி வாழ்த்தினார்.
    திருஞானசம்பந்தர் திருமருகலில் பெருமான் திருவருளில் சிலநாள் மூழ்கியிருந்தபோது, சிறுத்தொண்ட நாயனார் அவரை வணங்கி மீண்டும் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். திருமருகற் பெருமானை வணங்கி விடைபெறச் சென்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் செங்காட்டங்குடிக் காட்சியைக் காட்ட இரு தலங்களையும் இணைத்து `அங்கமும் வேதமும்` என்ற திருப்பதிகம் பாடிப் போற்றிச் சிறுத்தொண்டருடன் செங்காட்டங்குடி சென்று கணபதீச்சுரத்தை வழிபட்டுக் கொண்டு, பின்னர் சிறுத்தொண்டருக்கு விடையருளித் திருப்புகலூர் எனும் அருட்தலத்தை சென்றடைந்தார்.

    தொடரும்

     

     

    Share
  • மேட் இன் கொரியா

    “மேட் இன் கொரியா” (2026) மார்ச் 12, 2026 அன்று வெளியான இப்படம், தனது கலாச்சாரங்களுக்கிடையிலான கதைக்களத்தின் காரணமாக உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. ரா. கார்த்திக் எழுதி இயக்கிய ஒரு திரைப்படம். ‘ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்’ பதாகையின் கீழ் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், பார்க் ஹே-ஜின், சி-ஹன் பேக் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், கொரிய மற்றும் ஆங்கில மொழிகளில் வசனங்கள் இடம்பெற்றுள்ள இப்படத்தில், சியோலில் தனது கனவுகளைத் துரத்தும் ஒரு பெண்ணாகப் பிரியங்கா மோகன் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப், தரண் குமார் மற்றும் சைமன் கே. கிங் ஆகியோர் இசையமைத்துள்ளனர்; ஒளிப்பதிவை பிரசன்னா குமார் மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணியை அந்தோணி கையாண்டுள்ளார்.
    ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12, 2026 அன்று நெட்ஃபிக்ஸ் (Netflix) தளத்தில் நேரடியாக வெளியானது.
    பார்த்த மாத்திரத்தில் உடனடியாக நம் மனதைத் தாக்காவிட்டாலும், பார்த்து முடித்த பிறகு மனதில் தங்கிவிடும் ஒரு சுவையான படம். விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் ஏதும் இன்றி, வாழ்க்கையின் உண்மையான போராட்டங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் யதார்த்தமான கதை. எளிமையான, நேர்மையான, அமைதியான சக்தி வாய்ந்த ஒரு கதை என்றால் அது மிகையில்லை.
    என்னுடைய, ‘செம்பவளம்’ புதினத்தின் ஆழமானக் கருவை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்துள்ள அற்புதமான கதை இது. கன்னியாகுமரி துறைமுகத்திலிருந்து கிளம்பிச் சென்ற செம்பவளம் எனும் தமிழ்நாட்டு இளவரசி கொரியா சென்று அந்த அரசனை மணமுடித்து, 150 ஆண்டுகள் வாழ்ந்து ஐந்து தலைவர்கள் ஆண்ட அந்த மண்ணை ஒரு சிறப்பு வாய்ந்த நாடாக உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறாள். இந்த வரலாற்று கதையை பள்ளியில் நாடகமாக அமைத்து அதில் கதாநாயகியாக நடித்த அந்தச் சிறுமி தன் வாழ்நாள் இலட்சியமாக தென்கொரியாவிற்குச் சென்று செம்பவளத்தின் நினைவிடத்தை ஒரு முறையேனும் தரிசித்து வரவேண்டும் என்பதுதான். வளர்ந்து பருவ மங்கையான பின் கொரியா செல்லும் வாய்ப்பைப் பெறுபவளின் வாழ்வியல் போராட்டமே இத்திரைக்கதை.
    நாடகத் தன்மையாலோ, திடீர்த் திருப்பங்கள் மூலமாகவோ நம்மைக் கவரும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை இப்படத்தில். வாழ்க்கையை அதன் இயல்பான அமைதியான போக்கிலும், சிக்கலான நேரங்களையும் வெகு இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ள படம். கதாபாத்திரங்கள், தாங்கள் தேர்ந்தெடுக்காத, எதிர்பார்க்காத சூழ்நிலைகளை எதிர்கொண்டு வாழ வேண்டிய உண்மையான மனிதர்களைப் போல உணர்த்துகிறார்கள். அந்த வகையில் அனைத்து விதமான உணர்ச்சிகளையும் அவசரமாகக் கடந்து செல்லாமல், அவற்றைப் புரிந்துகொள்ள நேரம் அளிக்கிறது. வெளிப்படையாகச் சொல்லப்படாத சில இனிய தருணங்களும். கருத்தாக்கங்களிலிருந்தே இதன் தாக்கம் அதிகமாகிறது எனலாம். கதாநாயகர்கள் வில்லன்களை அடித்து நொறுக்குவதையும், காவல்துறை இறுதிக் காட்சியில் வந்து கதாநாயகியைக் காப்பாற்றும் படங்களையேப் பார்த்துப் பழகிவிட்டவர்களுக்கு இப்படம் மெதுவாக ஊர்ந்து செல்வது போன்று தோன்றலாம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒருவேளை அந்த மகிழ்ச்சியான முடிவைத் தராமல் போகலாம்! ‘மேட் இன் கொரியா’ என்ற இந்தப் புதிய தொடர் பிரியங்கா அருள்மோகன், ரிஷிகாந்த், ஹியூன் பின், ஜங் வூ – சங் போன்றவர்களின் நடிப்பில், வூ மின் – ஹோ வின் இயக்கத்தில் சிறப்பாக அமைந்துள்ள படம். வாழ்க்கை என்பது முடியப்போகிறது என்று அதிரும் நேரத்தில், அப்படியல்ல அதுதான் வாழ்க்கையின் ஒரு புதிய ஆரம்பம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு அருமையான படம்!
    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 28

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

     

    திருஞானசம்பந்தர் வரலாறு

    `வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

    மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத

    எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்`

    என்று சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில், இவர் வரலாற்றை முதன்முதலில் குறிப்பிட்டு அருளியதோடு, திருஞானசம்பந்தர் பெருமைகளைத் தாம் அருளிய தேவாரத் திருப்பதிகங்களிலும் போற்றிப் பாடியுள்ளார். நம்பியாண்டார் நம்பிகள், இரண்டு பாடல்களில் இவர் வரலாற்றை அந்நூலில் விளக்கியதோடு பதினொராம் திருமுறையில் இலங்கும் ஆறு பிரபந்தங்களில் திருஞானசம்பந்தர் வரலாற்றையும், அவர் தம் அருள் நலங்களையும், அவர் அருளிய தேவாரத் திருமுறைகளின் பெருமைகளையும் தெளிவுற விளக்கியுள்ளார். பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளை அருளிச் செய்தவரான திருஞானசம்பந்தர் பெருமானின் அருள் வரலாற்றைப் பெரியபுராணத்தில் 1256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் அழகுற விரித்துரைத்துள்ளார்.

    சிவநெறி செழித்தோங்கிய சீர்மிகு திருப்பதியாம் சீர்காழி எனும் அருள் நகரில் அவதரித்தவர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சுவாமிகள். ஊழிக்காலத்தே உலகெலாம் அழிந்தாலும், பன்னிரண்டு ஊழியிலும் அழியாது அடியாருக்கு அருள் சுரக்கும் அருட்பதியாகி நின்றமையால், பிரமபுரம், புகலி, வேணுபுரம், தோணிபுரம், சீரபுரம், சீர்காழி, வெங்குரு, பூந்தராய், புறவம், சண்பை, கொச்சைவயம், கழுமலம் எனும் பன்னிரண்டு திருப்பெயர்களைக் கொண்டது இவ்வூர்!

     

    வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

    பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

    சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

    பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

    அந்தணர் குலத்தில் சிவபாத இருதயர் என்னும் வேதியர், அவர்தம் அருமைத் துணைவியார் பகவதியார் எனும் இல்லறத்தை நல்லறமாகக் கருதி, இறைவழிபாடு, அடியார் வழிபாடு, குருவழிபாடு ஆகிய முத்திற வழிபாட்டிலும் சிறந்து விளங்கும் அருட்பேராற்றல் பெற்ற இணையருக்குத் தவப்புதல்வனாய் அவதரித்தவர், திருஞானசம்பந்தர். வேத நெறி வளர்ச்சி குன்றியிருந்த தமிழகத்தில் அப்போது சமண புத்த சமயங்கள் தலைதூக்கி நின்றன. இதனைக் கண்டு மனம் நொந்த சிவபாத இருதயர் இந்த மன்பதை வாழ, சிவநெறி உலகெலாம் பரவி தமிழ்ச் சமுதாயத்தை தழைத்தோங்கச் செய்யவும், தமிழர் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் காக்க நல்லதொரு ஞானக்குழந்தை ஒருவரைத் தங்களுக்குத் தந்தருளுமாறு திருத்தோணிபுரத்து இறைவனை வேண்டித் தவம் புரிந்தனர். இறைவனின் இன்னருளால் பகவதியாரும் கருக்கொண்டு, சைவமே அவ்வம்மையார் மணி வயிற்றில் உருக்கொண்டது!

    வேத நெறி தழைத்து ஓங்க

      மிகு சைவத் துறை விளங்கப்

    பூத பரம்பரை பொலியப் புனித

      வாய் மலர்ந்து அழுத

    சீத வள வயல்

      புகலித் திருஞான சம்பந்தர்

    பாத மலர் தலைக் கொண்டு

      திருத் தொண்டு பரவுவாம்

    ஒரு திருவாதிரைத் திருநாளில், சிவநெறி சிறந்து விளங்கவும், தமிழ் மக்கள் செய்த தவம் நிரம்பவும், தவநெறி தழைக்கவும் ஆளுடைய பிள்ளையார் திருவவதாரம் செய்தருளினார். அனைத்துயிர்களும் மகிழ்வுற்றன. திருப்பெயரிடுதல், தொட்டிலிற் கிடத்தல் போன்று அனைத்துச் சடங்குகளும் உரிய காலங்களில் நிகழ்ந்தன. பகவதி அம்மையார் அத்தெய்வக் குழந்தைக்கு  இறையன்பைத் தம் திருமுலைப்பாலுடன் கூட்டி ஊட்டி வளர்த்து வந்தார். குழந்தையின் அழுகையை சேக்கிழார் பெருமான் புனிதவாய் மலர்ந்தருளினார் என்று அழகாகக் குறிப்பிடுகிறார். ஆளுடையப் பிள்ளையாருக்கு வயது இரண்டாண்டுகள் நிரம்பின. மூன்றாவது வயதின் தளர் நடைப்பருவத்தில் பிள்ளையார் ஏனைய குழந்தைகளோடு வீதியில் விளையாடும் நிலையை எய்தினார். நீடுதுயில் கொண்டுள்ள சைவத்தைச் சிவநெறியைத் தட்டி எழுப்பித் தரணிக்கெல்லாம் பரப்ப வந்த செந்தமிழ்ச் செல்வனுக்குத் தாலாட்டுப் பாடித் தூங்க வைத்தால் சிவநெறி தழைக்க, சைவம் சிறக்கக் கால தாமதமாகும் எனக் கருதியதால் சேக்கிழார் பெருமான் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கவில்லை போலும்!

    ஒரு நாள் காலையில் சிவபாத இருதயர் வழக்கம்போல் தம் வழிபாட்டு நெறியினைச் செய்வதற்கு, வேதவிதிப்படி நீராடுதற்குத் திருக்கோயிலின் உள்ளிருக்கும் பிரம்மதீர்த்தத்திற்குப் புறப்பட்டார். தந்தையார் வெளியில் செல்வதைக் கண்ட பிள்ளையார் தானும் உடன் வரவேண்டுமென்ற குறிப்போடு கால்களைக் கட்டிக் கொண்டு அழுதார்.

    கண் மலர்கள் நீர் ததும்பக்

      கைம் மலர்களால் பிசைந்து

    வண்ண மலர்ச் செங்கனிவாய்

      மணி அதரம் புடை துடிப்ப

    எண்ணில் மறை ஒலி பெருக

      எவ் உயிரும் குதூகலிப்ப

    புண்ணியக் கன்று அனையவர்

      தாம் பொருமி அழுதருளினார்

    தந்தையாரும் தம் மைந்தனை உடனழைத்துக் கொண்டு சென்று பிரம்ம தீர்த்தக்கரையில் பிள்ளையாரை இருத்திவிட்டு விரைந்து நீராடித் திரும்பும் எண்ணத்தோடு நீர்நிலையில் இறங்கினார். கரையில் அமர்ந்திருந்த பிள்ளையார் தந்தையைக் காணாமல் முற்பிறப்பின் நினைவு மேலிட்டவராய் திருத்தோணி மலைச் சிகரத்தைப் பார்த்துக் கண்மலர்கள் நீர் ததும்பக் கைமலர்களால் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப `அம்மே அப்பா` என அழைத்து அழுதருளினார். அருளுடையப் பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன் விடைமீது அமர்ந்து குளக்கரைக்கு எழுந்தருளிய வேளையில் எம்பெருமான் உமையம்மையிடம் `அழுகின்ற பிள்ளைக்குத் தன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து ஊட்டப் பணித்தார். அம்மையாரும் அவ்வாறே சிவஞானமாகிய அமுதைக் குழைத்து அழுகின்ற குழந்தை கையில் கொடுத்து உண்ணச் செய்து அழுகை தீர்த்தருளினார்.

    குளித்து முடித்து வந்த தந்தை குளக்கரையில் தங்கள் தவச்செல்வன் கையில் பொற்கிண்ணத்துடன், எச்சிற்பால் உண்ட வாயும், இன்ப நடம் புரியும் பாங்கைக் கண்டு சினந்தவர், அருகிருந்த சிறுகோல் எடுத்து யார் கொடுத்த எச்சில் பால் இது என்று வெகுண்டு கையை ஓங்கினார்.

    போதையார் பொற்கிண்ணத்து

    அடிசில் பொல்லாதென

    தாதையார் முனிவுறத்

    தான் எனை ஆண்டவன்

    காதையார் குழையினன்

    கழுமல வளநகர்ப்

    பேதையாள் அவளொடும்

    பெருந்தகை இருந்ததே

     

    எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி

    உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்

    கண்மலர்நீர் துடைத்தருளிக் கையில்பொற் கிண்ணம்அளித்(து)

    அண்ணலை அங்கு அழுகைதீர்த்து

    அங்கணனார் அருள்புரிந்தார்.

     

     

    சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்

    பவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்

    உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்

    தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்

    எனச் சேக்கிழார் பெருமான் போற்றி உரைத்தலைக் காணலாம்.

    “தோடுடை யசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்

            காடுடை யசுடலைப் பொடி பூசியென் னுள்ளங்கவர்கள்வ

            னேடுடை யமல ரான்முனை நாட்பணிந் தேத்த வருள் செய்த

            பீடுடை யபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே”

    சிவஞானச்சம்பந்தப் பெருந்தகையார், தலைக்குமேல் கையைத் தூக்கி வேண்டியபடி தம் சிறு விரல்களால் எதனாலும் கட்ட முடியாத பரம்பொருளைச் சுட்டிக்காட்டி தம்மெதிரேத் தோன்றிய தோணிபுரத்து இறையை தம் தந்தையாருக்கு அடையாளம் காட்டினார். ஞானக்குழந்தை தாம் பாடிய முதல் பதிகத்தின் முதல் அடியிலேயே தமிழ் மொழியைத் தலைக்கேற்றி மந்திரங்களுக்கெல்லாம் மூலக்கூறாகிய, ‘ஓம்’ எனும் ஓங்காரத்தினைத் தமிழ் என்றும் பெயரின் முதல் எழுத்தாம், ‘த’ மெய்யுடன் இசைத்துத் ‘தோ’ எனத் தொடங்கிப் பாடினார். தம் உள்ளத்துள் எழுந்த உயர் ஞானத் திருமொழியால் தனக்கு ஞானப் பாலளித்த உமை அம்மையின் தோடணிந்த திருச்செவியைச் சிறப்பிக்கும் முறையில் `தோடுடைய செவியன்` என்ற முதற்பெரும் பாடலால் கடவுளின் அடையாளங்களைச் சுட்டித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அதனைக் கேட்ட தந்தையார் சிவபாத இருதயர் தாம் அடிப்பதற்காக ஓங்கிய கோல் நெகிழ்ந்து வீழும் வண்ணம் வியப்பும் வெருட்சியும் மேலிட்டவராய் நின்றார். ஞானசம்பந்தப் பெருமானை அழைத்துக்கொண்டு ஆலயம் சென்று  எம்பெருமானை வணங்கிப் போற்றி மீண்டார். இச்செய்தி நகர் முழுவதும் பரவிய நிலையில் அன்பர்கள் ஞானசம்பந்தரைப் போற்றி வரவேற்க, சிவபாத இருதயர் பிள்ளையாரைத் தம் தோள்மேல் அமர்த்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் தம் இல்லம் சென்றடைந்தார்.

    உமையம்மையார் அளித்த ஞானப்பாலை உண்ட திருஞானச்சம்பந்தர் திருநெறியத் தமிழ் பாடி தம் திருமாளிகையில் இறையருளையே எண்ணியிருந்தவர் மறுநாட் காலையில் துயிலெழுந்து நீராடி ஈசனை வணங்கிப் போற்றி, தன் தாய்வழிப் பாட்டனார் ஊரான நனிபள்ளி முதலிய ஊர்களை வணங்கி பின்பு சீர்காழி சேர்ந்தார். `காரைகள் கூகைமுல்லை` எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து வணங்கிப் போற்றி அவ்வூரின் அருகிலுள்ள தலைச்சங்காடு, சாய்க்காடு, வெண்காடு முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு மீண்டும் சீர்காழிப் பதிக்குத் திரும்பினார். வளம் குன்றிப் பாலையாயிருந்த நனிபள்ளி, ஞானசம்பந்தர் வரவால் நெய்தலாய்ப் பின் மருதமாயிற்று. இது ஞானசம்பந்தர் வரலாற்றில் அமைந்த இரண்டாவது தல யாத்திரையாகும்.

     

    சீர்காழிக்கு அருகிலுள்ள திருக்கோலக்காவைத் தரிசிக்கும் வேட்கை எழ அத்தலத்தை தம் தந்தையாரின் தோளில் மீதேறி அடைந்து ஆலயத்தை வலம் வந்து இறைவன் திருமுன் நின்று `மடையில் வாளை` எனத் தொடங்கும் இசைத்தமிழ்ப் பதிகத்தை அழகுற தம் பிஞ்சுக் கைமலர்களால் தாளம் இட்டுப் பாடினார். அதனால் பிள்ளையார் தம் பிஞ்சுக்கரங்கள் சிவப்பதைக்கண்டு மனம் பொறாது திருவைந்தெழுத்து எழுதப் பெற்ற பொற்றாளத்தைத் திருஞானசம்பந்தப் பெருமானார்க்கு அளித்தருளினார். அவரும் அத்தாளத்தைத் தலைமேல் கொண்டு போற்றி, தாளமிட்டு அத்திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிய அத்திருத்தலமே திருஞானசம்பந்தர் மேற்கொண்ட முதல் தல யாத்திரையாகும். அவ்வாறு திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீர்காழி திரும்பிய ஞானசம்பந்தப் பெருமான் நேரே ஆலயம் சென்று `பூவார் கொன்றை` எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடிப் பரவியவர் பின்னர் தம் மாளிகையைச் சென்றடைந்தார். நம் தமிழ்ச் சமுதாயத்திற்குச் சிவனடி பரவும் ஒரு நெறியே தம் திருநெறி எனப் போர்முரசு கொட்டி வழிப்படுத்தினார்.

     

    திருஞானசம்பந்தர் மிக இளைய பருவத்திலேயே இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற அற்புதத்தைக் கேள்வியுற்று அவரை வணங்குதற் பொருட்டு, திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர்தம் மனைவியார் மதங்கசூளாமணியாரும் சீர்காழிப் பதியை அடைந்தனர். ஞானசம்பந்தர் அவர்களை எதிர்சென்று அழைத்து வந்து திருத்தோணிபுரத் திருக்கோயிலில் இருத்தி யாழிசையில் இறைவரைப் போற்றுமாறு செய்து அவர்கள் தங்குதற்குத் தனி இல்லம் அமைத்துக் கொடுத்தருளினார். திருநீலகண்டர் ஞானசம்பந்தர் பாடும் பாடல்களை யாழிசையில் வாசித்து மகிழ்ந்தார். பின்னர் அடியவர் புடைசூழ யாழ்ப்பாணருடன் கொள்ளிட நதியைக் கடந்து தில்லை சென்றடைந்தார். தென் திசைவாயில் வழியே ஆலயத்திற்குள் சென்றவர் பேரம்பலத்தைக் கண்டு வணங்கியவர், `கற்றாங்கு எரியோம்பி` `ஆடினாய் நறுநெய்` என்பனவாகிய திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டார். திருவேட்களத்தில் தங்கியிருந்து நாள்தோறும் தில்லைக் கூத்தனை வழிபட்டார். அங்குத் தங்கியிருக்கும் நாட்களில் திருக்கழிப்பாலை, திருநெல்வாயில் முதலிய தலங்களை வழிபட்டார்.

    செல்லும் வழியில் திருஎருக்கத்தம்புலியூர் எனும் தலத்தை அடைந்தபோது திருநீலகண்ட யாழ்ப்பாணர் அப்பதி அவருடைய பதி எனக் கூறக் கேட்ட சம்பந்தப் பெருமான் மாதவம் செய்த பதி அது என்று கூறி மகிழ்ந்தார்.

    ஞானசம்பந்தர் எருக்கத்தம்புலியூரிலிருந்து திருமுதுகுன்றம் திருபெண்ணாகடம் ஆகிய தலங்களை வணங்கிக்கொண்டு திருநெல்வாயில் அரத்துறை செல்லப் புறப்பட்டார். தந்தையார் தோள்மேல் அமர்ந்து செல்ல மனம் இன்றித் திருவடி நோக நடந்தே வருவதைக் கண்ட தந்தையாரும் அடியவர்களும் மிகவும் பரிவுற்றனர். திருநெல்வாயில் அரத்துறை அணுகியபோது மாலை நேரம் நெருங்க, வழி நடந்த களைப்பு ஏற்பட்டதால் ஞானசம்பந்தர் அடியவர்களோடு மாறன்பாடி என்ற ஊரில் தங்கினார்.

    அரத்துறை இறைவன் ஞானசம்பந்தரின் களைப்பை அறிந்து அரத்துறை அந்தணர்கள் கனவில் தோன்றி `ஞானசம்பந்தன் தம்மைக் காண வருகிறான் என்றும், அவனுக்கென ஆலயத்துள் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் ஆகியன வைத்துள்ளதாகவும், அவற்றை எடுத்துச் சென்று கொடுத்து பாலகனை அழைத்து வரப் பணித்தார். எம்பெருமான் ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி தாம் அளிக்கும் பொருள்களை ஏற்றுக்கொண்டு வருக` எனக் கூறியருளினான். அரத்துறை அந்தணர்கள் வியந்து எழுந்து இறைவனளித்த அப்பொருட்களைக் கொண்டு சென்று ஞானசம்பந்தரிடம் நடந்ததைக் கூறிச் சிவிகையில் ஆரோகணித்து அரத்துறை வரவேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் இறைவன் திருவருளை எண்ணி வியந்து அச்சிவிகையை மும்முறை வலம் வந்து பணிந்து ஐந்தெழுத்தோதி அச்சிவிகையில் அமர்ந்து “எந்தை ஈசன் எம்பெருமான்` என்ற திருப்பதிகத்தால், இறையருளை வியந்து அரத்துறை ஈசனை வணங்கிப் போற்றினார். திருநெல்வாயில் அரத்துறையில் சில நாள் தங்கியிருந்து புறப்பட்டுச் சிவிகையில் விசையமங்கை, திருவைகா, புறம்பயம், சேய்ஞலூர், திருப்பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம் புலியூர், வாழ்கொளிப்புத்தூர், கடம்பூர், நாரையூர், கருப்பறியலூர், முதலிய தலங்களைப் பணிந்து திருப்பிரமபுரம் மீண்டருளினார்.

     

    தொடரும்

     

     

    Share