Category: ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வுக் கட்டுரைகள்

  • புறநானூற்றில் இசைக்கருவிகள்

    -ர.ஜெகன்

    இசை என்பது யாவராலும் அறியத்தக்க மொழி ஆகும். ஐம்புலன்களில், காதுகளால் கேட்டு இன்புறத்தக்க ஓர் அரிய கலை இசைக்கலை ஆகும். இசை என்பது இசைவிப்பது; தன்வயப்படுத்துவது என்பது பொருள்படும். அன்பைப் பெருக்கி ஆருயிரையும் வளர்ப்பது இசையாகும். மரம், செடி, கொடி முதலிய ஓரறிவு உயிர்கள் முதலாக மக்கள் என்னும் ஆறறிவு உயிர்கள் வரையுமுள்ள எல்லா உயிர்களையும் இசையினால் வசப்படுத்த முடியும் என்பதை மெய்ப்பித்துள்ளனர்.

    தொல்காப்பியத்தில் ஐவகை நிலத்திற்கும் உரிய பண்களை வரையறை செய்வதில் இருந்து தமிழிசையின் தொன்மை புலப்படுகின்றது. பண்களைப்  பற்றியும் இசைக்கருவிகளைப் பற்றியும் பல செய்திகள் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.

    “தணிபிறை அறையும் அணிகொள் தோர்வழி”       (புறம் – 68 – 14)

    “ஏம முரசம் இழுமென முழங்க”    (புறம் – 3-3)

    “மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப”           (புறம் – 65-1)

    “நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை”      (புறம் – 70-2,3) என்ற பாடல் வரிகளில் முரசு, முழவு, யாழ், பறை, உடுக்கை, சங்கு, துடி, தண்ணுமை முதலிய இசைக் கருவிகளின் பெயர்களை அறிய முடிகின்றது. முரசு போன்ற தோற்கருவிகள் மிகப் பழமையான இசைக்கருவிகள் ஆகும். கொம்பு, மகுடி, சங்கு, போன்ற தொன்மைக் கருவிகள் இதன் பின்னரும், யாழ், போன்ற நரம்புக் கருவிகள் கடைசியாகவும் தோன்றியிருக்க வேண்டும்.

    இசைக்கருவிகளின் தோற்றம்

    சங்க இலக்கியச் சமுதாயத்தில் காதலைப் போலவே, வீரமும் உயிர்ப் பண்பாகக் கொண்டுள்ளது. போரின் ஈடுபடும் மறவரின் உணர்வை வளர்த்தல் போர் உத்திகளில் ஒன்றாகும். இத்தகைய உணர்வுக் களத்தில் இசைக்கருவியின் பங்கு பெரியதாகும். போருக்கு அழைப்புவிடுக்கும் தொடக்க நிகழ்ச்சியிலிருந்து போர்த்திறனைக் காட்டி நடுகல்லாய் சமைத்த மறவன் புகழ்பாடுதல் வரையிலான பல்வேறு நிகழ்ச்சிக் கூட்டங்களிலும் இசைக்கருவிகள் முழங்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மன்னர்கள் இசைக்கலையை வளர்க்க இசைக் கலைஞர்களை ஆதரித்துப் போற்றி வந்திருகின்றனர். புலவர்கள், புரவலர்களை நாடிச்சென்று பரிசில் பெற்றமை இலக்கியங்களில் வெளிப்பட்டுள்ளது. ‘பாணர், விறலியர், கோடியர், இணையர், வயிரியர்’ போன்றோரை இசைக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாகவே இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

    பாணர் குடி அக்காலக் குடிகளில் சிறப்புடைய ஒன்றாகக் கருதப்பட்டிருக்கின்றது. இதனை,

    “துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
    இந்நான்கு அல்லது குடியும் இல்லை”  (புறம் 335 – 7-8)

    என்ற பாடல் வரிகளின் மூலம் துடி கொட்டுபவன் குடி துடியன். யாழிசைக்கும் பாணர்குடி, பறையடிக்கும் பறையன்குடி, கடம்பனுடைய குடி ஆகிய நான்கு குடிகளைத் தவிர வேறு எந்த குடிகளும் இசைத்துறையில் இடம்பெறவில்லை என்பதை அறிய முடிகிறது.

    “பண்டைக் காலத்தில் இசைக் கலையில் வல்லவராயிருந்தவர் பாணர் என்னும் இனத்தவராவர். எனவே சங்க காலத்திலே பாணர்கள் அரசர், சிற்றரசர், செல்வர் முதலியவர் வீடுகளுக்குச் சென்று இசைப் பாடல்கள் பாடினர். பாணர்களின் திறமையை அறிந்து பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினார்கள்”. எனவே பண்டைய காலத்தில் பாணர்கள் உயர்வாக இருந்துள்ளனர் என்று தமிழ்வளர்த்த அழகுக் கலைகள் என்னும் நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்.

    இசைக் கருவிகள் நான்கு வகைப்படும். அவை,

    1. தோல் கருவி
    2. துளைக் கருவி
    3. கஞ்சக் கருவி
    4. நரம்புக் கருவி

    என்பனவாகும். இசைக் கருவிகள் பெரும்பாலும் மரத்தாலும், தோலாலும், நரம்புகளாலும் ஆனவை. புறநானூற்றில் கூறப்படும் இசைக்கருவிகள் பெரும்பாலும் மன்னரைப் புகழ்ந்து பாடுவதாகவும், போர்க்கு செல்லும் முன்பும் போரில் வெற்றி பெற்ற பிறகும் இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றது.

    நரம்புக் கருவிகள்

    இக்கருவிகள் மரத்தினால் செய்யப்பட்டு நரம்புகள் அல்லது கம்பிகளால் பூட்டப்பட்டவை ஆகும். யாழ், சீறியாழ், பேரியாழ் என்ற மூன்று இசைக்கருவிகளும் நரம்புக் கருவிகள் வகையைச் சேர்ந்ததாகும்.

    யாழ்

    எழுத்து நிலைமாற்றத்திலிருந்து அமைத்தது ‘யாழ்’ என்னும் தமிழ்ச் சொல்லாகும். யா- கட்டு, யாக்கை – தசை நரம்பு, எலும்பால் கட்டப்பட்ட உடல், யாப்பு – சொல்லால் கட்டப்படுவது. யாத்தல் – கட்டுதல் எனவே யாழ் என்பது நரம்புகளால் கட்டப்பட்டது என்று பொருள்படும். புறநானூற்றில் யாழ் எளிய இசைக்கருவியாகவே கூறப்பட்டுள்ளது. யாழ் என்னும் இசைக்கருவி பாணர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகக் காணப்படுகிறது. “சங்க காலத்தில் யாழ் கொன்றை, கருங்காலி ஆகிய இரு மரங்களைக் கொண்டு செய்யப்பட்டது. புறநானூற்றில் கூறப்படும் யாழ் காளம்பழம் என்ற கரிய வளைந்த காம்பில் செய்யப்பட்டதாகும்” என்ற கருத்து லி.சி. சசிவல்லியின் பண்டைத் தமிழர் தொழில்கள்,என்னும் நூலினால் அறியமுடிகிறது.

    யாழ் வகைகள்

    யாழ் பொதுவாக நான்கு வகைப்படும். அவை. 1. பேரியாழ், 2. மகரயாழ், 3. சகோடயாழ், 4. செங்கோட்டுயாழ் என்பவையாகும். இவை நான்கும் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது.

    சீறியாழ்

    சீறியாழ் என்பது உருவத்தில் சிறியதாகும். இது கையடக்கமாகக் காணப்படும். இதுதான் முதலில் தோன்றியது. இதனிலும் பெரியதாகச் செய்யப்பட்டதே பேரியாழாகும். பாணர்கள் மன்னனை நாடிப் பரிசில் பெறச் செல்லும் போது விறலியை உடன் அழைத்துச் செல்லுதல் வழக்கம். அவ்வாறு காடும் மலையும் கடந்து செல்லும்போது பல்வேறு இன்னல்களுக்கிடையே பாணர் விறலியை தனது ஒரு கையில் பிடித்துக் கொண்டும், மற்றொரு கையில் யாழையும் பிடித்துக் கொண்டும் செல்வர். காடுகளில் பயம் தெரியாமல் இருக்க சீறியாழை வாசிப்பர் என்பதை,

    “வளைக்கை விறலி என் பின்னள் ஆக
    பொன் வார்த்தன்ன புரி அடங்கு நரம்பின்
    வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப
    படுமலை நின்ற பயம் கொழு சீரியாழ்”  
    (புறம் 135. 4-7)

    என்ற பாடல் வரிகளின் மூலம் பாணர் நரம்புகளால் ஆன சீறியாழ் என்ற இசைக் கருவியை பயன்படுத்தியதை அறியமுடிகிறது.

    பேரியாழ்

    பேரியாழ் என்பது அளவில் பெரியதாகவும், சிறியதாகவும் காணப்படும். அதில் ஒன்பது வார்கள் காணப்படும். வடித்து முறுக்கிக் கட்டின நரம்புகளால் இனிய ஓசையைத் தருகின்றது. நேர்மையான வரகின் கதிர்கள் இரண்டு வரிசையாக ஒழுங்குபட்டு அமைந்திருப்பதுபோலத் தனது நடுநிலத்தில் வரிசையாகவும், நெருக்கமாகவும் அமைந்த சிறிய துளைகளில் சுள்ளாணிகள் தைக்கப் பெற்றிருக்கும். யானைக் கொம்பினால் புதிதாகச் செய்யப்பட்ட அழகிய ஆப்பு, அந்த யாழின் குறுக்கே செருகப் பட்டிருக்கும். யாமினி கோடு நுண்ணிய தூரத்தினால் நுட்பமாக அமைக்கப்பட்டிருக்கும். அது வளைந்து நிமிர்ந்த காளம்பழத்தின் நிறத்தினை ஒத்துக் கருமையாகக் காணப்படும்.

    “இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
    மூவேழ் துறையும் முறையளிக் கழிப்பி
    ‘கோ’ எனப் பெயரிய காலை, ஆங்கு அது
    தன் பெயர் ஆகலின் நாணி மற்று ‘யாம்’.

    என்ற பாடலில் மூவேழ் துறையும் முறையளிக் கழிப்பி என்ற வரியிலிருந்து வலிவு, மெலிவு, சமம் என்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றிலும் ஏழுதாளம் சேர்த்து இருபத்தொரு நரம்பாலான பேரியாழ் என்னும் இசைக்கருவியினைக் கொண்டு பாடப்பட்டவையாகும்.

    இசை மருந்து

    இசைக்கருவிகள் போரில் புண்பட்டோருக்கு வலிதோன்றா வண்ணம் உள்ளத்தை ஈர்க்கவும், சிகிச்சை தரவும் பயன்படுத்தப்பட்டன. யாழ், பல்லியம், இசைமணி முதலிய இசைக்கருவிகள் மருத்துவத்திற்குப் பெரிதும் பயன்பட்டதை

    “வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க”    (புறம் 281 – 2)

    என்ற பாடல் வரிகளில் உணர முடிகிறது.

    “இசை மணி ஏறிந்து, காஞ்சிபாடி
    நெடு நகர் வரைப்பில் கடிநறை புகைஇ”        (புறம் 281: 5-6)

    என்ற பாடல் வரிகளின் மூலம் பல இசைக் கருவிகள் முழங்கி காஞ்சிப் பண்பாடியும், மனையின் கண் நறுமணம் கமழும் அகில் புகையை எழுப்பியும் இசை மருத்துவம் செய்வர் என்பதை அறியமுடிகிறது.

    தோல் கருவிகள்

    தோல் கருவிகள் மரத்தினால் செய்யப்பட்டுத் தோலால் கட்டப்பட்டவை, அவை ‘முழவு, தண்ணுமை, பதலை, சல்லி, தடாரி, பறை ஆகியவை ஆகும். தோற்கருவிகளை‘ வன்மைக் கருவி, மென்மைக் கருவி, சமக்கருவி’ என வகைப்படுத்தலாம்.

    கிணைப்பறை

    பறை         – வன்மைக் கருவிகள்

    முழவு

    தடாரி      – மென்மைக் கருவிகள்

    மத்தளம்

    எல்லரி    – சமயக்கருவிகளாக

    பாகுபடுத்தப்பட்டுள்ளது.

    முழவு

    “முழவு என்னும் சொல் முழங்கும் இசைக் கருவிகட்குப் பொதுப் பெயராயும் அமைகின்றது. அகமுழவு, புறமுழவு, வீரமுழவு, நாண்முழவு, நாழிகை முழவு என்னும் தொடரால் முழவின் பயனும், பண்பும், பருமனும் அறியலாம். (த. கோவேந்தன், தமிழும் இசையும் ப. 69). குழலிசையும், யாழிசையும் இணையும்போது ஒன்றுக்கு மேற்பட்ட முழவுகள் கையாளப்படுகின்றன. முழவுத் திருவிழாக்களில் அதிகமாகப் பயன்படும் தாளவிசைக் கருவியாகும் என்பதை,

    “முழவு மிக மகலாங்கண்
    விழவு நின்ற வியன் மறு இற”     (கலி – 102)

    என்ற பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகின்றது.

    தண்ணுமை

    தண்ணுமைக்கு ‘மத்தளம்’ அல்லது ‘மிருதங்கம்’ என்பது பெயர் உண்டு. ‘மத்து’ என்பது ஓசைப்பெயர், ‘தளம்’ என்பது இசையிடனாகிய கருவிகளுக்கெல்லாம். தாளமாக இருக்கும். அதனால் ‘மத்தளம்’ என்று பெயர் பெற்றது. இது தோல் கருவியாகும். அஞ்சாது போர்புரியும் மறப்பண்பு மிக்க வீரர்களுக்கு அரசன் சிறப்புச் செய்தலையும் போர்புரியும் பாசறையில் இன்று போருக்குரிய பூவை மறவர்க்குத் தரும் நாள் என்று அறிவிக்கும் கருவியாக மத்தளம் பயன்படுத்தப்பட்டது என்பதை,

    “கோட்டியோ வழி – பாண! பாசறை
    பூக்கோன் இன்று என்னறு அறையும்
    மடிவாயத் தண்ணுமை இழிசின் இரலே”?
    (புறம் – 289. 8-9)

    என்ற பாடல் வரிகளில் அறியமுடிகின்றது.

    சங்கு

    சங்கு தொன்மையான கருவியாகும். இது இயற்கை செய்துதரும் இசைக்கருவி ‘ஆதிமனிதன் சங்கை ஊதி வழிபட்டான், குடும்பச் சடங்குகளுக்கும் சங்கைப் பயன்படுத்திதான், சங்கு முழங்குவது மங்களமாக கருதப்பட்டது. கோயில்களிலும், அரண்மனைகளிலும் சங்கு ஊதுவது வழக்கம். அரண்மனைகளில் காலை வேளையில் முரசு கொட்டியும் சங்கு முழங்கியும் அரசரைத் துயிலெழுப்பினார்கள் அரண்மனையில் வலம்புரிச் சங்கு காலையில் முழங்கியதை.

    “தூக்கணங்குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப
    ஒரு சிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி”
    “மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
    வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய
    காலை முரசங் கனைகுரல் இயம்ப”
        (சிலம்பு – 14 : 12-14)

    என்ற பாடல் வரிகளில் கோயில்களிலும், அரண்மனைகளிலும் இந்தச் சங்கு முழங்கியது அறிய முடிகிறது.

    சல்லி

    சல்லென்னும் ஓசையையுடையதனால் சல்லிகை என்னும் பெயர் பெற்றது. சல்லி அல்லது எல்லா என்பது தாளவிசைக் கருவியேயாகும். இந்த இசைக் கருவி பறை போன்று ஓசையைக் கொடுக்கும் என்பதை,

    “எல்லரி தொடுமின் ஆருளி தொடுமின்”        (புறம் 152 – 16) என்ற பாடல் வரிகளின் மூலம் அறியமுடிகிறது.

    முரசு

    போரில் எழுச்சி தருவதற்கேற்பத் தோல் கருவிகளே முழக்கப்பட்டுள்ளன. போர் முரசு செய்தவற்குரிய தோலின் இசை நுணுக்கச் செய்தியைவிட, போர் முரசு செய்வதற்கேற்ற தோலின் மறப்பின் புலமே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. மண்ணைக் கீறிய மிகக் கூரிய கொம்பினையிடைய பெருமை பொருந்திய நல்ல ஆனேறு இரண்டினைத் தம்முட்போர் செய்யவிடுத்து வெற்றி பெற்ற ஏற்றினுடைய தோலை மயிர் சீவாது போர்த்துத் திண்ணியதாய்க் கட்டி முரசு செய்யப்பட்டது என்பதை,

    “மண் கொள வரித்த வைந்நுதி மருப்பின்
    அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மருந்து
    வென்றதன் பச்சை சீவாது போர்த்த
    திண் பிணி முரசம் இடைப்புலத்து இரங்க”
    (புறம் 288: 1-4)

    என்ற பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகின்றது.

    பறை:-

    பறப்பற என்ற ஒலிப்பின் அடியாகப் ‘பறைகள்’ எனப்பெயர் பெற்றன. பறைகள் தோற் கருவிகட்குப் பொதுப்பெயராகும். முழக்கப்படுவனயாவும் முழவுகள் எனப் பொதுப் பெயர் பெற்றுள்ளன.

    “அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க்கு உய்த்து உரைக்கலான்”      (குறள்-1076)

    என்ற குறளில் ஐவகை நிலத்திற்கும் பறை உரியதாகக் காட்டப்பட்டுள்ளது.

    போர் வீரர்கள் தம்முடைய வீரம் நிறைந்த தோளினைத் தட்டுவர். அவ்வீரர்களின் மனத்தில் இருக்கும் பழிவாங்கும் உணர்ச்சியும் மறைந்து மன அமைதி ஏற்படுமாறு பறையோசை கேட்கும் மனயோசை போரின் முடிவில் அடிக்கப்படும் ஒரு வகை இசையாகும் இதனை,

    “நீங்கா மறவார் வீங்கு தொன்புடைப்ப
    தனிபறை அறையும் அணிகொள் தேர்வழி” 
    (புறம் 68: 13-14)

    என்ற பாடல் வரிகளில் பறையோசைப்பற்றி அறிய முடிகின்றது.

    கருத்துரை:-

    • பழந்தமிழர் வாழ்வில் இசை முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை இசையின் ஆதிக்கம் அமைந்திருந்தது.
    • இசைக் கருவிகள் கண்டுபிடிக்கும் முன்னர் வாயிலிருந்து வெளிப்படுத்தும் ஓசையால் இசையை அறிந்து கொண்டனர்.
    • முன்பு காணப்பட்ட நால்வகைக் கருவிகளும் இன்று ஒரே கருவியினுள் அமைந்து விளங்குகின்றன. நாட்டுப்புறங்களில் மட்டுமே இன்றும் பழைய கருவிகள் வழக்கிலுள்ளன.
    • இயற்கையில் கிடைத்த பொருட்களைத் தட்டுவதில், ஊதுவதில், மீட்டுவதில் இசைப்பதில் கிடைத்த ஓசை வேறுபாட்டை அறிந்து அதற்கேற்ப இசைக்கருவிகளைத் தெரிந்து கொண்டனர்.

    பயன்படுத்தப்பட்ட நூல்கள்:

    • புறநானூறு –     வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
    • கலித்தொகை   –     வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
    • மயிலை சீனி. வேங்கடசாமி –      தமிழ் வளர்த்த அழகுக் கலைகள்.
    • லி.சி. சசிவல்லி –      பண்டைத் தமிழர் தொழில்கள்.
    • திருக்குறள்         –      சாரதா பதிப்பகம்.
    • சிலப்பதிகாரம்    –      உ.வே.ச பதிப்பகம், சென்னை.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோவை. -46

     

    Share
  • பழந்தமிழர்கள் வாணிபத்தால் பெற்றவளம்

    முனைவர் கு.சரஸ்வதி, 

    உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

    சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி, திருச்சி.

     

    சங்ககாலத்தில் தமிழகம் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் நீண்ட கடற்கரையைக் கொண்டிருந்தது. கிழக்கே குணகடலும்,  மேற்கே குடக்கடலும், தெற்கே கடற்கரை பக்கமாக இருந்த சேரநாடு மிகப்பிற்காலத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம் பேசப்படுகிற நாடாகப் பிரிந்து இப்போது கேரளம் என்று பெயர் பெற்றிருக்கிறது. கேரளம் தனியொரு மாநிலமாகப் பிரிக்கப் படுவதற்கு முன்பு நெடுங்காலமாகச் சேரநாடு என்று பெயர் பெற்று தமிழ்நாட்டின் ஒரு கூறாக இருந்தது.

     

    “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

     பிறவும் தம்போற் செயின்”(குறள்-120).

     

    என்கிறார் வள்ளுவர். பண்டைக்காலம் முதல் தமிழ்நாடு வாணிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. தம்மிடம் உள்ள பொருளை அல்லது நாணயத்தைக் கொடுத்துத் தம்மிடம் இல்லாத பொருளைப் பெறுவது வாணிகம் எனப்படும். ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்பத் தொழில்கள் வேறுபடும். தொழில் வேறுபாடுகளுக்கு ஏற்ப வாணிகமும் வேறுபடும். தம்நிலத்தில் கிடைத்த பொருளை வேற்று நிலத்திற்குக் கொண்டு சென்று விற்றுப் பொருள்களைப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டு வாணிபத்தை இருபிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று தரைவழி வாணிபம் மற்றொன்று கடல்வழி வாணிபம். அவற்றின் வழி பழந்தமிழர்கள் பெற்ற வளத்தினை இக்கட்டுரை ஆராய்கிறது.

     

    தரைவழி வாணிபம்

                    தரைவழி வாணிபக்குழுக்கு சாத்து என்று பெயர். அயல் நாடுகளுக்குத் தரை வழியாகச் சென்று வாணிகம் செய்த சாத்தர் கழுதைகள், எருதுகள்,வண்டிகள் ஆகியவற்றில் வாணிகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கூட்டமாகச் செல்வர். அவர்கள் செல்கின்ற பாலை நில வழிகளில் வழிபறிக் கொள்ளையர்கள் கொள்ளையடித்ததால் அவர்களிடமிருந்து தங்களைக் காத்து கொள்வதற்காக வாணிகச் சாத்தர் தங்களோடு வில்வீரர்களையும் அழைத்துக்கொண்டு சென்றனர்.

     

                    வாணிகச்சாத்தை வேடர்கள் கொள்ளையடித்ததைச் சங்க நூல்கள் கூறுகின்றன. மருதன்இளநாகனார் பாலை நிலத்தின் வழியே சென்ற வாணிகச் சாத்தைக் கொள்ளையிட்ட வேடரைப் பற்றி,

     

    “மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில்

    செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை

    வல்வில் இளையர்”(அகநானூறு-பா.245)

    என்று கூறுகிறார்.

    “……………………………………… சாத்தெறிந்து

    அதர்கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்

    கொடுவில் ஆடவர்” (அகநானூறு-பா.167).

     

                    என்று வாணிகச்சாத்துடன் பாலை நிலத்து மறவர் செய்த போரை அகநானூறு குறிப்பிடுகின்றது.

     

                    பலாப்பழம் அளவாகச் சிறு சிறு பொதிகளாகக் கட்டப்பட்ட மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வாணிகச் சாத்து தங்களுடைய வில் வீரர்களோடு சென்றதையும், ஆங்காங்கே வழியில் இருந்த சுங்கச் சாவடிகளில் அரசனுடைய அலுவலர்கள் அவர்களிடமிருந்து சுங்கம் வாங்கினார்கள் என்பதையும் பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கின்றது.

     

    “தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட

    சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்

    புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து

    அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்

    உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்

    வில்லுடை வைப்பின் வியன் காட்டி”                             (பாடல் 77)

     

    என்ற பாடல் அடிகள் சுங்கவரி பெறப்பட்டமையை குறிப்பிடுகின்றது.

     

    தரைவழிப் போக்குவரத்துச் சாதனங்கள்

                    வாணிகப் பொருட்களை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குக் கொண்டு செல்ல எருது,கழுதை,வண்டி,படகு, பாய்மரக்கப்பல்களைப் பயன்படுத்தினர். சிந்து, பாரசீகம், அரபி நாடுகளிலிருந்து குதிரைகள் அக்காலத்தில் கொண்டு வரப்பட்டன. கோவேறு கழுதைகளுக்கு அத்திரி என்று பெயர் வழங்கப்பட்டது. நாகரிகமுள்ள செல்வ நம்பிகள் அக்காலத்தில் கோவேறு கழுதைகளை ஊர்தியாக பயன்படுத்தினார்கள். ஆனால் பொதி சுமக்கவும்,சரக்கு வண்டிகளை, இழுக்கவும் அவற்றைப் பயன்படுத்தவில்லை, ஊர்தியாக மட்டும் பயன்படுத்தினார்கள். அத்திரிக்கு இராசவாகனம் என்றும் பெயர் வழங்கப்பட்டது.

     

                    பாண்டிநாட்டுக் கொற்கைக் கடலுக்கு அருகில் பரதவர் ஊருக்கு ஒருவன் அத்திரி பூட்டின வண்டியில் சென்றான் என்பதை,

     

    “கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி

    வடிமணி நெடுந்தேர் பூண”(அகநானூறு-பா.350).

     

    என்று அகநானூறு குறிப்பிடுகின்றது.

     

                    வாணிகப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு எருதுகள் பயன்பட்டன. மாட்டுவண்டிகளில் வாணிகப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு சென்றனர். வணிகர்கள் தங்களோடு வில் வீரர்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

    “ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகமம்”(பாடல் வரி 50).

    என்று வாணிகப் பொருள்களை மாட்டு வண்டிகளில் எடுத்துச் சென்றதை பெரும்பாணாற்றுப்படை சுட்டுகின்றது.

     

                    பாறைகளும், குன்றுகளும் உள்ள நாட்டிற்குள் செல்ல கழுதைகள் பயன்பட்டன. கழுதைகளின் முதுகின்மேல் பொதிகளை ஏற்றி வாணிகச் சாத்து ஒன்று சேர்ந்து சென்றதை,

     

     “நெடுஞ்செவிக் கழுதை குறுங்கால் ஏற்றைப்          

    புறம்நிறை பண்டத்து பொறை” (அகநானூறு- பா.343)

     

    என்ற அகநானூற்றுப் பாடல் கூறுகின்றது.

     

    பண்டமாற்று

                    சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்து கொண்டனர். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும், பணம்கொடுத்து பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும் ஊர்களிலும், கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது.

     

                    முல்லைத்திணை பாடலொன்றில் இடையன் பாலைக்கொடுத்து அதற்கு ஈடாக மருத நிலத்து மக்களிடமிருந்து அரிசி, கேழ்வரகு, தினை போன்ற தானியத்தை பெற்றுக்கொண்டதை பின்வரும் அடிகள் சுட்டுகின்றன.

     

     “பாலொடு வந்து கூழொடு பெயரும்

    ஆடுடைஇடைமகன்” (குறுந்தொகை-பா-221)

     

                    குறிஞ்சி நிலத்து வேடன் தான் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லை மாற்றிக் கொண்டதை கோவூர் கிழார் புறநானூற்றின் வாயிலாக கூறுகிறார்.

     

     “கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்

    மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்”(புறநானூறு-பா.33).

     

    நெய்தல் நிலத்தில் வசித்த பரதவர் கடலிலே சென்று சுறா, இறால், முதலான மீன்களை பிடித்து வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த மீனைப் பரதவ மகளிர் எளிதில் தானியத்துக்கு மாற்றினார்கள் என்பதை நற்றிணையில் அமைந்த

     

     “இனிதுபெறு பெருமீன் எளிதினின் மாறி” (நற்றிணை-பா.239)

     

    என்ற அடிகள் புலனாக்குகின்றது. இவ்வாறு உணவு பொருள்களை சங்காலத்தில் பண்டமாற்றமாகவும் கொண்டதை சங்க இலக்கிய பாக்கள் உணர்த்துகின்றன.

    நாணய மாற்று

                    பண்டமாற்று வழங்கிய காலத்திலும் காசு வழங்கப்பட்டது. செம்பு, வெள்ளி, பொன் முதலிய காசுகள் வழங்கி வந்தனர் என்பதையும், சங்க இலக்கிய அடிகள் பிரதிபலிக்கின்றன. காசுகள் நெல்லிக்காயின் வடிவம்போல உருண்டு சிறிது தட்டையாக இருந்தன என்றும் பாலை நிலத்து நெல்லிக்காய்கள் பொற்காசுகள் உதிர்ந்துகிடப்பன போலக் காணப்பட்டன என்பதையும்

     

                    ‘’புல்இலை நெல்லிப் புகரில் பசுங்காய்

    கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப்

    பொலஞ்செய் காசின் பொற்பத்தாஅம் அத்தம்”

                                                                                                                                                    (அகநானூறு பா .363)

    என்று வெண்ணாகனார் கூறியுள்ளார்.

     

    நாளங்காடி அல்லங்காடி

                    சங்ககால உள்நாட்டு வாணிபத்தில் இருவகையான அங்காடிகள் இருந்தன.அவை 1) நாளங்காடி 2) அல்லங்காடி என்பனவாகும். நாளங்காடி  என்பது பகல் நேரத்தில் இருந்த அங்காடியாகும். அல்லங்காடி என்பது இரவு நேர விற்பனைக் கூடமாகும். மதுரையில் அங்காடிகளில் வியாபாரம் நடந்த விதத்தையும் அங்கு கூடியிருந்த மக்களது கூட்டத்தையும் பற்றி மதுரைக்காஞ்சி சிறப்பாக கூறுகின்றது. அல்லங்காடியில் இருந்து வாணிகர் எங்கு வியாபாரம் செய்யச் சென்றாலும் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். இதற்கு காரணம் பெரும்சாலைகளில் கள்வர்கள் அதிகமாக இருந்ததால் வாணிகர்கள் ‘’வாணிகச் சாத்து” என்ற குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

     

    கடல் வாணிபம்

                    தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல்  சூழ்ந்திருந்தபடியால் தமிழர் இயற்கையாகவே கடற்பயணம் செய்வதிலும் கப்பல் வாணிகம் செய்வதிலும் தொன்றுதொட்டு ஈடுபட்டிருந்தார்கள். கிழக்கு கடற்கரை, மேற்கு கடற்கரை போன்ற இடங்களில் கடல் வாணிபம் சிறந்து விளங்கின என்பதை பத்துப்பாட்டு நவில்கின்றது.

     

                    தமிழரின் கடல் வாணிகத்தைக் கிழக்குக்கடல் வாணிகம் என்றும் மேற்குக்கடல் வாணிகம் என்றும் இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். தெற்கே குமரிக்கடலுக்கு அப்பால் நிலம் இல்லாத படியால் தெற்கு கடலில் வாணிகம் நடக்கவில்லை. கிழக்குக் கடல் வாணிகம் என்பது குணக்குக் கடலாகிய  வங்காள விரிகுடாக்கடலில் உள்ள இலங்கை, ஆந்திரம், கலிங்கம், வங்காளம் காழகம்(பர்மா), சாவகம் முதலிய நாடுகளுடன் செய்யப்பட்ட வாணிகம் ஆகும். மேற்குக்கடல் வாணிகம் என்பது குடகுக்கடலாகிய அரபிக்கடலில் செய்யப்பட்ட வாணிகம். அங்கு கிரேக்க, ரோம, எகிப்து தேசத்து யவனர்களுடனும் அரபிநாட்டு அராபியருடனும் வாணிகம் நடந்தது.

     

    கிழக்குக் கடல் வாணிகம்

                    தமிழர்களின் வாணிகக் கப்பல்கள் மரப்பலகைகளில் இரும்பு ஆனி அடித்து இணைக்கப்படாமல் பனைநார், தென்னை நாரினால் இணைத்து கட்டப்பட்டிருந்தன. இந்தக்கப்பல்களின் பாய்மரங்களில் துணிப்பாய்கள் கட்டப்பட்டிருந்த படியால் காற்றினால் தள்ளப்பட்டு நினைத்த இடங்களுக்குச் சென்றன. இந்தப்பாய்மரக் கப்பல்களில் தமிழ் வாணிகர் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்றுவிற்று அங்குள்ள பொருள்களை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்தனர்.

     

                    அக்காலத்தில் உலகப்புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்து துறைமுகத்தில் வெவ்வேறு மொழிகள் பேசும்  வெவ்வேறு நாட்டு கப்பல் வாணிகர் வந்து தங்கினார்கள் என்று சங்கச் செய்யுள் பின்வருமாறு கூறுகின்றன.

     

                                                    மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

                                                    புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்

                                                    முட்டாச் சிறப்பிற் பட்டினம்.       (பட்டினப்பாலை.பா.216-218)

     

                    சாவகத்தீவுகளுக்கு அருகில் வடக்கே உள்ள காழகம், கடாரம், மலயம் முதலிய நாடுகளுடன் தமிழர் வாணிகம் செய்தனர்.’’ காழகத்து ஆக்கம்’’ என்று பட்டினப்பாலை கூறியபடியால் காழகத்துப் பொருள்களும் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

     

                    தமிழகத்துக்கு வடக்கேயுள்ள கிழக்குக்கடல் துறைமுகப் பட்டினங்களிலும் தமிழர்வாணிகம் செய்தார்கள். வடக்கே வங்காளத்தில் கங்கையாற்றுத் துறைமுகத்துடன் அவர்கள் வாணிகம் செய்ததை “வடமலைப்பிறந்த பொன்னும் மணியும்’’ ’’கங்கையும் வாரியும்’’ என்று பட்டினப்பாலை கூறுகிறது.    

     

    மேற்குக்கடல் வாணிகம்

                    அராபியரும், பாரசீகரும், எகிப்தியரும், யவனரும் மேற்குக் கரையில் தமிழர்களோடு வாணிகஞ் செய்தனர். அக்காலத்தில் சேர நாட்டில் முக்கியமான ஏற்றுமதிப் பெருளாக இருந்தது மிளகு. மேற்குக்கடற்கரைத் துறைமுகங்களில் ஆதி காலத்தில் வாணிகஞ் செய்யத் தொடங்கியவர்கள் அராபியர்.முசிறித் துறைமுகத்துக்கு அருகில் கொடுமனம், பந்தர் என்னும் ஊர்கள் இருந்தன. பந்தர் என்னும் இடத்தில் அராபிய வாணிகர் தங்கி வாணிகம் செய்தார்கள். அரபி மொழியில் பந்தர் என்ற சொல்லுக்கு அங்காடி அல்லது  வாணிகம் செய்யும் இடம் என்பது பொருள். பதிற்றுப்பத்தில் பந்தர் என்னும் இடம் குறிக்கப்படுகிறது.

     

                                                    கொடுமணம்பட்ட வினைமாண் அருங்கலம்

                                                    பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம். (எட்டாம்பத்து பா 74 வரி 4.5)

     

                    பந்தரில் பொன்நகைகளும் முத்துக்களும் விற்கப்பட்டன என்பது அறியமுடிகிறது. யவனர்கள் வருவதற்கு முன்பே அராபியர் சேரநாட்டில் வந்து வாணிகம் செய்தனர். அவர்கள் முக்கியமாகத் தமிழ்நாட்டிலிருந்து மிளகை ஏற்றிக்கொண்டு சென்று எகிப்து நாட்டு அலக்ஸாந்திரியா துறைமுகப்பட்டினத்தில் விற்றனர்.

     

    வாணிகர் பண்பு

                    வணிகர்களின் பண்பினை பட்டினப்பாலை மிக நயம்பட கூறுகின்றது.

     

                    நெடுநுகத்துப் பகல்போல

                    நடுவுநின்ற நன்னெஞ்சினோர்

                    வடுவஞ்சி  வாய்மொழிந்து

                    தமவும் பிறவு மொப்பநாடிக்

                    கொள்வதுஉ மிகை கொளாது

                    கொடுப்பதூஉம் குறைகொடாது (பட்டினப்பாலை-பா வரி 206-210)

     

    என்று நடுநிலைமையோடு நடந்ததை எடுத்துரைக்கின்றது.

     

    தொகுப்புரை

                    சங்ககாலத் தமிழக பொருளாதார வளர்ச்சியில் வாணிபம் முக்கிய பங்கு வகிக்கின்றது.உள்நாட்டு வர்த்தகம் பெரும்பாலும் பண்ட மாற்று முறையிலேயே நடைபெற்றபோது அயல்நாட்டு வர்த்தகம் நாணய மாற்றுமுறையில் நடைபெற்றது.

     

                    வாணிபத்தொடர்பு  மட்டுமின்றி பண்பாட்டுத் தொடர்பு, நாட்டின் பொருளாதாரம் வாணிகர்களால் சிறப்புற்றது. பண்டைத் தமிழரின் வாணிகம் மிகச்சிறந்த முறையில் எக்காலத்தவரும், எந்நாட்டவரும் போற்றும் வகையில் அமைந்திருந்தது என்பதை சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது.

    பார்வை நூல்கள்

    1. கதிர் முருகு, பத்துப்பாட்டு , சாரதா பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை – 600 004 – முதற்பதிப்பு மே (2009)
    2. வெ.கிருஷ்ணசாமி, தமிழ் இலக்கியத்தில் பயணச் செய்திகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் – முதற் பதிப்பு – டிசம்பர் (2003).
    3. சீனி. வேங்கடசாமி, பழங்காலத் தமிழர் வாணிகம், நீயூ செஞ்சுரிபுக் ஹவுஸ், சென்னை-600098 – முதற்பதிப்பு மார்ச் (1974)
    4. 4. அ.மாணிக்கனார்(உரை),  அகநானூறு,  வர்த்தமானன் பதிப்பகம்,   சென்னை-600017 – முதற்பதிப்பு-1999.

     

    Share
  • பண்பாட்டியல் நோக்கில் சங்க இலக்கியங்கள்

    -முனைவர். க. தமிழ்அழகன் 

    புகுமுன்

    நன்மொழியும், நம்மொழியும், செம்மொழியுமாகிய தமிழ் மொழியின் தொல் பழமைக்கும் நல்வளமைக்கும் நற்சான்றுகளாய் மிளிர்ந்தும் ஒளிர்ந்து கிடப்பன சங்க இலக்கியங்களாகும். இதனை முறையாகவும் நிறைவாகவும் அறிதலும், அறிந்து அறிவித்தலும் தமிழறிந்தாரின் தலையாய கடனாகும்! நற்றமிழ் இலக்கயங்களின் நல்லதோர் இலக்கு இன்புறுத்தலும் அறிவுறுத்தலுமேயாகும்! இக்கோட்பாட்டிற்குத்தகப் “பண்பாட்டு நோக்கில் சங்க இலக்கியங்கள் இவ்வாய்வின் பொருண்மையாகும்.

    பண்பாடு சொற்சிந்தனை

    “பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்”! எனவரும் பாப்பகுதி தமிழறிந்தார் அறிந்தபகுதி, “பண்பு எனப்படுவது உலக ஒழுக்கம் அறிந்து ஒழுகுதல்” என்பது இத்தொடர்க்குரிய பொருளாகும். “பாடறிந்து ஒழுகும் பண்பினாரே”2 எனவரும் புறநானூற்றுப் பாப்பகுதியும் இத்தன்மைத்தேயாகும்.

    பண் என்னும் சொல்லிற்குத் “தகுதி” என்ற பொருளும் பாடு என்பதற்கு உலக ஒழுக்கம் என்ற பொருளும் கொண்டால் பண்பாடு என்பதற்குத் தகுதி மிக்க உலக ஒழுக்கம் எனப் பொருள் கொள்ளலாம். “பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன்”3 எனவரும் திரைப்பாட்டுத் தொடக்கம் உலக வழக்கறியேன் என்பதாகக்கொள்ளலாம்.

    பண்படுத்துதல் (சீர்திருத்தல்) என்ற சொல்லடியாகப் பண்பாடு எனும் சொல் அமைந்தது எனக் கொண்டால் “திருத்தமிக்க சீரிய பண்புகள் கொண்ட ஒழுகலாறு” என விரித்துப் பொருள் உரைத்துப் பார்க்கலாம்.

    ‘பாடு’ எனும் சொல் “வருத்தம்” என்ற பொருளில் வரும். “ஏழை படும் பாடு” வருத்தம் நீங்கி வாழ்தற்குரிய நற்பண்புகள் மிக்கநிலை பண்பாட்டு நிலை எனக் கொள்ளலாம்.

    நிலத்தில் வாழும் மக்கள் பண்பாட்டு நிலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் ‘CULTURE’ என்பதாகும். நிலத்தைப் பண்படுத்தி உழுதொழில் செய்யும் நிலையைக் குறிக்கும் ஆங்கிலச்சொல் ‘AGRICULTURE’ என்பதாகும். மக்கள் மனநிலையைப் பண்படுத்தி உயர்நிலைக்கு இட்டுச் செல்வது பண்பாடாகும்.

    பண்பாடு குறித்து BRITANNICA ENCYCLOPEDIA வின் தமிழாக்கச் செய்திகள் இங்குக் குறிப்பிடுவதற்குரியனவாகும். “கற்றுக் கொள்வதற்கான ஆற்றலும், தான் கற்றதை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் ஆற்றலும் மனிதருக்கு இயல்பாக கைவரப் பெற்றவை. இந்த ஆற்றல்களின் விளைவாக அவனுக்கு ஏற்படக்கூடிய அறிவு, நம்பிக்கை, அவனுடைய நடவடிக்கை ஆகியவற்றின் கலவையே பண்பாடு (அல்லது கலாசாரம்) எனப்படுகிறது. பண்பாடு என்பது மனிதர்களுடைய மொழி, எண்ணங்கள், நம்பிக்கைகள், வழக்கங்கள், தடைகள், விதிமுறைகள், நிறுவன அமைப்புகள், கருவிகள், செயல்முறைகள், காலப்பொருட்கள், சடங்குகள், விழாக்கள், அடையாளச் சின்னங்கள் போன்ற எல்லா அம்சங்களும் கலந்திருக்கும் ஒரு கலவையையே மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இந்தக் கலாசாரம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது”4

    இத்தகைய பண்பட்ட நிலைகள் அடிப்படையில் எழுந்த பண்பாட்டு நிலைகள் பதினெண்மேற்கணக்கு நூல்களாம். சங்க இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் பாங்குகளில் சிலவற்றைப் பறவைப்பார்வையாய்ச் சுட்டிக்காட்ட விழைந்ததன் விளைவு வரும் பகுதிகளாகும்.

    சங்கப்பாட்டுக்கள் எவை எவை?

    பதினெண்மேற்கணக்கு நூல்கள் எனக் குறிக்கப்பெறும் சங்க  இலக்கியங்கள் பாட்டும் தொகையும் என இருவகைப்படும். பாட்டு பத்துப்பாட்டு தொகை எட்டுத்தொகை. இவற்றின் பாடல் எண்ணிக்கை (பத்துப்பாட்டுள் பத்துப்பாக்களும், எட்டுத்தொகையுள் 2365 பாக்களும் ஆக) 2375 ஆகும்.5 இச் சங்க இலக்கியங்களின் பெயர்களைக் குறிப்பிடும் பழம் பாட்டு வருமாறு.

    “முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
    பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
    கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
    பாலை கடாத்தொடும் பத்து”

    “நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
    ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
    கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
    இத்திறத்த எட்டுத்தொகை”

    இவ்வெண்பாக்கள் சுட்டும் சங்க இலக்கியங்களின் பெயர்களின் முறைவைப்பும், இப்பாக்களில் காணலாகும் அடைமொழிகளும் பாடல் தந்தாரின் பண்பட்ட திறனாய்வுப்போக்கைக் காட்டி நிற்கிறது.

    பத்துப்பாட்டு நூல்களுள் திருமுருகாற்றுப்படையை முதற்கண் வைத்து எண்ணப்பட்டது. இறைசிந்தனைக்கு முதலிடம் என்பதனைப் புலப்படுத்துகின்றது. அது மட்டுமல்ல, எட்டுத்தொகை நூல்களுக்குத் தனித்தனிக் கடவுள் வாழ்த்துப்பாக்கள் அமைந்திருப்பது போல் பத்துப்பாட்டு நூல்கள் முழுமைக்கும் திருமுருகாற்றுப்படை கடவுள் வாழ்த்தாக அமைந்திலங்குகிறது எனக் கொள்ளுதலும் ஏற்புடையதேயாகும்.

    எட்டுத்தொகையின் முதல் நூல் நற்றிணை, நல் திணை நற்றிணை. திணையாவது ஒழுக்கம், நல்லொழுக்கம், காதல் நெறியில் நல்லொழுக்கப்போக்கைக் குறிப்பிடமைந்தது. நற்றிணை என்பதால் எட்டுத்தொகையுள் முதலில் வைத்து எண்ணப்பட்டுள்ளது. “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”6 என்பது வள்ளுவரின் குறளாகும்.

    இவ்வெண்பாக்களும், “பெருகுவளம்” “மருவினிய கோலம்”, “கோல்” (அழகு) “நல்ல” “ஒத்த” “ஓங்கு”, “கற்றறிந்தார் ஏத்தும்” என்பவரும் அடைமொழிகளும் பண்பட்ட திறணாய்வுச்சிந்தனைகளின் பதிவுகளேயாகும்.

    பாட்டும் தொகையுமாகிய இச்சங்க நூல்களுள் அமைந்துள்ள பண்பாட்டியியல் சிந்தனைகளை இனி, அகநிலையில் அமைந்தன மாறும் புறநிலையில் அமைந்தன எனப் பகுத்துக்காணுதல் நமக்கு நல்லின்பம் பயக்கும்.

    அகநிலைப்பாங்கில் அமைந்திலங்கும் பண்பாட்டு நிலைகள்

    நாடு தழுவியன புறநிலை என்றால் வீடு தழுவியன அகநிலை என்றாகும். வீடெல்லாம் நன்கு வாழ்ந்தால் நாடெல்லாம் நன்கு வாழும் எனும் கோட்பாட்டிற்குத்தக வீட்டு வாழ்வைச் செம்மைப்படுத்தும் நோக்கில் அமைந்த, அஃதாவது அகநிலையில் அமைந்திலங்கும் பண்பாட்டு நிலைகளைச் சங்க இலக்கியங்கள் வழி இனி வரும் பகுதி சுட்டிக்காட்ட முயலும்.

    இல்லற வாழ்வின் நல்லறநிலைகள்

    இல்லற வாழ்வு என்பது “இல்லாளொடு கூடி வாழ்தலின் சிறப்பு” என்று பரிமேலழகரும் இல்லின்கண் இருந்து வாழும் திறன் கூறுதல் இல்வாழ்க்கை என்று மணக்குடவராலும் விளக்கம் தரப்படுகிறது. “சமூக அமைப்பில் குடும்பம் என்பது அடிப்படை அலகாகும். (Basic Unit). இவ்வமைப்பு இல்லையேல் சமுதாயம் என்ற கட்டுக்கோப்பே நொறுங்கிப்போகும். மானுட வாழ்வில் அடித்தளம் குடும்பமே”7 எனவரும் முனைவர் க.ப.அறவாணனாரின் சிந்தனைக்குத்தக இனிய இல்லற வாழ்வு முறைகளில் பண்பட்ட நிலைகளைச் சங்க இலக்கியங்கள் வழி கற்றலும் கற்பித்தலும் இனிதான நிகழ்வுகளாகும்.

    தலைவன் தலைவியிடத்தும், தலைவி தலைவனிடத்தும் பேரன்பு பூண்டிருந்ததால் அவர்கள் வாழ்வில் பெருமகிழ்வு சேர்ந்திருந்தது. தலைவன் தலைவி உறவுக்கு அடித்தளமான காதலன் – காதலி நிலையிலேயே நல்லன்பு பூண்டிருந்த பாங்கு மிகச் சிறப்புடையதாகும்.

    ”நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆர் அளவின்றே – சாரல்
    கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
    பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” 8

    தலைவன் தலைவியர் இடையே உள்ள நட்பிற்குத் தேவகுலத்தார் காட்டிய மூன்று அளவீடுகளும் நயத்தற்குரியன.

    “நிலம், வான், நீர் ஆகியவை வெவ்வேறாகப் பெருகி விளங்குவன. தலைமக்கள் நட்பு, ஒரே இடத்தில் பெருகி விளங்குவது.  இவை மூன்றும் இணைந்தவழியே பயன்பெறுதல் கூடும். இம்மூன்றின் சேர்க்கை போலத் தங்களுடைய நட்பும் இயைந்த நட்பு எனத் தலைவி கூறினாள். போஷகமாகிய உணவு நல்கும் நிலத்தினையும், தாரமாகிய நீர்நல்கும் வினையும், போக்கியமாகிய மணி முதலியன நல்கும் கடலினையும் எடுத்துக்காட்டி, அம்மூன்றனையும் இந் நட்பு ஒன்றே நல்க வல்லது எனச் சிறப்பித்தனள் என இப்பாடலுக்கு இரா.இராகவையங்கார் உரை வகுத்துள்ளார். நிலம், பயந்தராமையும், வானம் பெய்யாது போதலும், நீர் தன் நீர்மை குன்றுதலும் கூடும். ஆனால் இந் நட்பு எஞ்ஞான்றும் பயன்பட்டுப் பின்னரும் தொடர்ந்து வரும் சிறப்புடையதாகும்”9

    இங்கிலாந்து நாட்டு இலண்டன் மாநகரத்தொடர் வண்டிகளில் இடம் பெற்றிருக்கும்.

     ”யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல் நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”10

    இதன் நுண்பொருள் விரிக்கிற் பெருகும்.

    “அரிதாய அறன் எய்தி”11 எனவரும் பாலைக்கலிப் பாட்டுக் காட்டும் அன்புநெறி பண்பின் உயர் நெறியாகும்.

    முழுமையான அன்பு எப்பொழுதும் குறைகாணாது. கார்காலத் தலை நாளில் ஊர் மீளவேண்டிய தலைவன் வாரா நிலையில், தலைவன் வரும் காலமே கார்காலம் எனக் கொள்ளும் போக்கும். அவர் “பொய்வழங்கலரே” என்னும் நம்பிக்கை மிகுந்த போக்கும் தலைவியின் பண்பட்ட உள்ளம் காட்டி நிற்கும்.

    “வண்டு படத் ததைந்த கொடி இணர் இடை இடுபு
    பொன்செய் புனை இழைகட்டிய மகளிர்
    கதுப்பில் தோன்றும் புதுப் பூங்கொன்றைக்
    கானம், கார் எனக் கூறினும்,
    யானோ தேறேன் அவர் பொய்வழங்கலரே” 12

    பிரிந்த தலைவன் மீள ஏனோ காலம் தாழ்ந்தது. தாழவே தலைவி உள்ளம் வாடி நொந்து வெந்து கிடக்காது எவ்வாறாவது மீள்வான். மீளாவிடில் தேடிக் காணுவேன் என்பது படத் தலைவி கூறும் நம்பிக்கைப் பண்பு வியப்பும் நயப்பும் நல்குகின்றது.

    “நிலம் தொட்டுப் புகாஅர், வானம் ஏறார்,
    விலங்கு இடு முந்நீர்காலின் செல்லார்,
    நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
    குடிமுறை குடிமுறை தேரின்
    கெடுநரும் உளரோ நம் காதலரோ” 13

    நம்பிக்கை மிகுந்த பண்பு யாவர்க்கும் வேண்டியதொரு பண்பாகும்.

          நம்பிக்கை எனும் நந்தா விளக்கு
    உள்ள வரையில் உலகம் நமக்கு

    இல்வாழ்வின் உயர் பண்பு விருந்தோம்பல் எனும் பண்பு 

    “சாறு அயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி
          வருநர்க்கு வரையா, வளநகர் பொற்ப,
          மலரத் திறந்த வாயில் பலர் உண
          பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
          வரை இல் வாந்திணைப்புரையோர் கடும்பொடு
          விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
          நின்னொடு உண்டலும் புரைவது 14 எனக் குறிஞ்சிப்பாட்டுத்தலைவனும்,

     ”நள் என வந்த நாரில் மாலை,
    பலர்புகு வாயில் அடைப்பக், கடவுநர்
    வருவீர் உள்ளீரோ” 15

    எனக் குறுந்தொகைத் தலைவியும் விருந்தோம்பல் பண்பில் இருவரும் கொண்டுள்ள விருப்பமும் பண்பட்ட உள்ளப் போக்கும் தெள்ளிதின் விளங்கும்.

    ”மெல் இயல் அறிவை! நின் நல் அகம் புலம்ப
    நின் துறந்து அமைகுவென் ஆயின் என்துறந்து
    இரவலர் வாரா வைகல்
    பல ஆகுக யான் செலவுறு தகவே” 16

    இல்லற நெறியில் நிற்போர்க்கு இரவலர் வாராத நாள் துன்பம் தருவது போல் துன்புறுக என்றான்.

          “உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர்
          அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
          தமியர் உண்டலும் இலரே” 17 எனவரும் தொடரும் இத்தன்மைத்தே.

    பிறந்த மனையினும் புகுந்த மனையே மனைவிக்கு உயர்வு

    வளமான குடியில் பிறந்தபெண் மணமுடித்தான். மணம் கொண்ட மணாளன் வீடு ஒரு பொழுது வறுமைக்குட்பட்டுவிட்டது. இவள் நிலை என்ன? நற்றிணை நவில்கிறது இவள் பண்பினை இப்படி.

          “அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்?
    கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென,
    கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்,
    ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
    பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே!” 18

    தந்தை சோற்றைக் கருதாது பொழுதுமறுத்து உண்ணும் வன்மையுடைய தலைவிக்கு,

          “தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
          உவலைக் கூவற்கீழ்
          மான் உண்டு எஞ்சிய கலுழி நீரே” 19

    விரும்பப்படுவது எனக் கூறியமை மணமானதும் மணாளனுக்குப் பெருமை சேர்க்கும் உயர்பண்பை விளக்குகின்றது.

    வாக்கு நாகரிகம் மிக்க வாழ்க்கை நாகரிகம்

    பரத்தமை நிலைக்கு ஆட்பட்டு மீண்ட தலைவனைத் திரும்பிவந்தவனா? திருந்திவந்தவனா? என உணர்தற்கும் மீண்டும் இப்பிழை நேரலாகாது என்பதற்கும் தலைவி கூறும் பண்பட்ட சொல்லோவியம் தலைவியின் பண்பாட்டு நிலைமைக் காட்டுவதாக அமைந்திலங்குகிறது.

    “அணிற்பல்லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
    மணிக்கேழ் அன்னமாநீர்ச் சேர்ப்ப!
    இம்மை மாறி மறுமை ஆயினும்
    நீ ஆகியர் எம் கணவனை,
    யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” 20

    பரத்தமையிலிருந்து திரும்பிவந்தவனை திருந்தி வந்தவனாக ஆக்கிட வழி செய்யும் இப்பாங்கு தும்பிசேர்கீரனின் “தச்சன் செய்த சிறுமா வையம்”21 எனத் தொடங்கிப் பாடிய தலைவிக்கு உண்டு.

    இவ்வாறே, சங்க இலக்கியங்களுள் காணலாகும் உள்ளுறை உவமப் பாக்கள் மற்றும் இறைச்சிநிலைப் பாக்களும் வாக்கு நாகரிகப் பண்பைப் பறைசாற்றும்.

    மனக்காயம் ஒருபோதும் தரலாகாது என்ற தலைவனின் பண்பாடு இக்கால இல்லறத்தார் அறிய வேண்டிய அரிய பண்பாகும்.

    “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
    கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ,
    குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
    தான் துழந்தட்ட தீம்புளிப்பாகர்
    இனிது எனக்கணவன் உண்டலின்
    நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே” 22 தீம்புளிப்பாகர் உண்ட தலைவன் இழித்தும் பழித்தும் பேசாது முதல் முறை ஆக்கிய ஆர்வமும், அன்பும் கண்டு இனிது எனக்கூறிய தலைவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தது தலைவியின் முகமே! இம்மகிழ்ச்சி தந்த தலைவனின் பண்பு மனக்காயம் செய்யாப்பண்பு உயரியதாகும். உணவின் சுவை உணவுக்குள்ளே இருப்பதைவிடவும் உணவை வழங்குவார் உள்ளத்தின் உள்ளே உள்ளது. எனவரும் கருத்துப்பட அமைந்த நாலடியார் பாடல் இங்கு இணைத்து நினைத்து மகிழத்தக்கது.

    “கழுநீருள் கார் அடகேனும் ஒருவன்
    விழுமிதாக கொள்ளின் அமிழ்தாம், விழுமிய
    குயத்துவை ஆர் வெண்சோறே ஆயினும், மேலாதார்
    கைத்துண்டல் காஞ்சிரங் காய்” 23

    அகப்பாக்களின் துறை அமைப்பும், அறத்தொடு நிற்றல் முதலிய துறைகளின் அமைப்பும், பண்பாட்டு நிலையைக் காட்டி நிற்கும் ஆதிமந்தியார் குறித்துக் குறிப்பிடும் நச்சினார்க்கினியர், “பெயர் கூறின் புறமாம் என்றஞ்சி வாளாது கூறினார்”24 என்பார். “கூறினாள்” எனாது “கூறினார்” எனக் கூறியதும் நல்ல பண்பாட்டு உயர்வுப் போக்கேயாகும். இன்னும் புலமையை மதிக்கும் போக்கும் குறிப்பிடுதற்குரியது. இதனை அவனை அவர் பாடியது எனவரும் தொடரமைப்புக்கொண்டு உணரலாம்.

    புறநிலைப்பாங்கில் அமைந்திலங்கும் பண்பாட்டு நிலைகள்

    காதலும் வீரமும் இரு கண்கள் எனக் கொள்ளினும் வீரத்திற்கு முதலிடம் தந்து நின்றன நம் சங்க இலக்கியங்கள் காவிரிப்புனல் விழாவில் தலைவனை இழந்த தலைவி ஒருத்தி, ஆதிமந்தி, வேற்றூரில் தேடுகின்றாள். பரத்தையர் ஆடவரைத் தழுவி ஆடும் துணங்கைக்கூத்து நிகழும் இடத்தில் (காதல் நிலை) முதலில் சென்று தேடாமல், வில்விழா நிகழ்த்திப்பல வீரர்கள் குழுமியிருக்கும் இடத்திலேயே (வீரநிலை) முதலில் தேடினாள் அத்தலைவி.

    “மள்ளர் குழீஇய விழவி னானும்
    மகளீர் தழீஇய துணங்கை யானும்
    யாண்டும் காணேன் மாண்டக் கோனை” 25

    இவ்வாறே இறவாப் புகழ்பெற்ற புறநானூற்றின்,

          “சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
          யாண்டு உளனோ? என வினவுதி, என் மகன்
          யாண்டு உளன் ஆயினும் அறியேன், ஓரும்
          புலிசேர்ந்து போகிய கல்அளை போல,
          ஈன்ற வயிறோ இதுவே
          தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே” 26

    எனவரும் பாட்டு, தலைவனின் போரஞ்சா வீரமரபையே விழைவு நனி புலனாக்குகிறது. காதல் தன்னலம் பற்றியது என்றால், வீரம் பொதுநலம் சார்ந்தது. பொதுநலம் பேணும்போக்கு முதற்கண் வேண்டும் என்னும் பண்பட்ட நிலை சங்கப்பாட்டுக்கள் காட்டும் நிலை.

    போரின் பகுதிகளாகிய ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் எனவரும் துறைகளின் விளக்கத்தால் ஐயறிவினவாகிய பசுக்கூட்டங்களுக்கும் அருளும் போக்கை, துன்புறுத்தா நிலையைக் கொண்டு வீரர்தம் வீரப்பண்பும் ஈரப்பண்பும் (கருணைத்திறம்) தெற்றெண உணரப்பெறலாம்.

    தடையிலாக் கொடையுணர்வு

    வறுமையில் வாழும் மக்கள் பசிதீர மன்னனை அண்டியே ஆக வேண்டும். மன்னனும், மக்கள் பசிதீர்த்தலை மாண்பான செயல்களுள் தலையாயதாக எண்ணினான் சங்ககாலத்தில். இதனைப் புறநானூறு நன்கு புலப்படுத்தும். வழங்கி வாழ்ந்த வள்ளல் பாரியை மாரியை விட உயர்த்திக் கூறும் பாங்கைப் புறநானூறு காட்டும் “அறஞ்செய விரும்பு” என்னும் வாக்கிற்குத்தக்க, விரும்பித்தந்த பாங்கு பண்பட்ட பாங்கு.

    “ஒரு நாள் செல்லலம் இருநாள் செல்லலம்
    பலநாள் பயின்று, பலரோடு செல்லினும்
    தலைநாள் போன்ற விரும்பினன் மாதோ” 27

    “இன்று செலினும் தருமே, சிறுவரை
    நின்று செலினும் தருமே, பின்னும்
    முன்னே தந்தனென், என்னாது, துன்னி
    வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
    யாம் வேண்டியாங்கு எம் வறுங்கலம் நிறைப்போன்” 28

    கொடைபெற்றே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து விடலாம் என்னும் போக்கு அக்காலத்தில்லை.

          “ஈ என இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று,
    கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்
    கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று”29

    கொடைபெற்றுத் தானும் தன் குடும்பமும் மட்டுமே உண்ணாது தன் மனைவியிடம் ”எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே” என வரும் பாங்கும் கொடை வேண்டுவோரைக்கண்டு ஆற்றுப்படுத்தும் இயல்பும் நல்ல உள்ளத்தின் வெளிப்பாடு, உயர்ந்த பண்பாட்டின் வெளிப்பாடு. ஆற்றுப்படை என்னும் துறையும், ஆற்றுப்படை இலக்கியங்களும் இதற்கு நன்றான சான்றுகளாகும்.

    மண்ணின் மைந்தன் என்னும் குணம் எண்ணில் இழிவே!

    இக்காலத்துலவும் மண்ணின் மைந்தர் (SON OF SOIL) என்னும் இழிகுணம் துன்பம் மிக்கது. ஆனால் அக்காலத்துச் சங்க இலக்கியம்.

    “யாதும் ஊரே யாவரும் கேளிர்”30 (ALL ARE MY NATIVES; ALL ARE MY RELATIVES) என இயம்பும் போக்கு மிகப் பண்பட்ட உள்ளத்தில் எழுந்த போக்காகும். இதனால்தான் இந்தியாவின் முன்னைப் பிரதமர் இந்திரா காந்தியார் ஐக்கியநாடுகள் சபையில் ஐக்கிய நாடுகள் தினத்தில் (UNO DAY) உரையாற்றும்போது எடுப்புரையாக “TWO THOUSAND YEARS AGO A POET SAYS YATHUM OORAY YAVARUM KELIR” எனத் தொடங்கித் தொடர்ந்து உரையாற்றியது யாவரையும் வியக்கச் செய்தது அந்நாளில், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவியது அந்நாளில்.

    அறவுரையாய் அமைந்த அறிவுரை உரைக்கும் பண்பாட்டு முத்துக்கள்

    அறிவுறுத்தும் அறிவுரைகளுள் பண்பாட்டுக்கூறுகள் இயைந்து கிடக்கும் பகுதிகளுள் சிலவற்றைப் பொதுநிலைப்பட்டன. தனி மனித நிலைப்பட்டன என இரு வகை நிலைகளில் காணல், அறிவுக்கு நலம் நல்கும்.

          “உண்டால் அம்ம இவ்வுலகம்……
    தமக்கென முயலா நோன்தாள்
    பிறர்க்கென முயலுநர் உண்மையானே” 31

    எனவும்

          “நல்லது செய்தல் ஆற்றீர் எனினும்
    அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
    எல்லாரும் உவப்பது அன்றியும்
    நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே” 32

    எனவும்

          “ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்
    மாண் இழை மகளிர் கருச்சிதைத்தோர்க்கும்
    பார்ப்பார் தப்பிய கொடுமையோருக்கும்,
    வழுவாய் மருங்கில் கழுவாயும் உளஎன
    நிலம்புடை பெயர்வதாயினும் ஒருவன்
    செய்திகொன்றோர்க்கு உய்தி இல்என
    அறம் பாடிற்றே – ஆயிழை கணவ!” 33

    எனவும் வரும் சங்கப்பாக்களின் பகுதி தான் அறிந்த நல்லற நெறிகளை மக்களுக்கு உரைத்து மக்களை நன்றான வாழ்வு வாழச் செய்திடும் பண்புணர்வு மெச்சத்தகுந்ததாகும்.

    தனிமனித நிலைப்பட்டன எனும் பாங்கில் கோவூர்கிழாரும் பிசிராந்தையாரும் பாடிய பாக்கள் புலவர்களின் பெருமையையும் புலவர்களுக்கு இருந்த உரிமையையும் காட்டுவனவாக அமைந்துள்ளன. யானையின் உணவிற்கு நெற்பயிரைச் சிறிது சிறிதாகக்கொள்ளுவது போல நாட்டு மக்களிடம் வரியைச் சிறிது சிறிதாகக் கொள்ளுதல் வேண்டும்34 என்று பாண்டியன் அறிவுடை நம்பியிடம் உரைப்பதும், “சோழர் குடியினர் தம்முள் பகைத்தால் சோழன் ஒருவன் தோற்றான் என்ற பழிச்சொல் சோழர் குடிக்கு நேரும் எனவே போரைத் தவிர்ப்பாயாக”38 என்று சோழன் நலங்கிள்ளிடமும் சோழன் நெடுங்கிள்ளிடமும் உரைத்தமையும் புலவர்கள் பண்புகளைப் பறைசாற்றுகின்றன. இவைபோலும் பொருளில் அமைந்த பாட்டுக்கள் பலவாகும்.

    பழிக்கு அஞ்சும் விழுமிய பண்பு

    “உண்டாலம்ம இவ்வுலகம்….
          … பிறர் அஞ்சுவதி அஞ்சி,
          புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
          உலகுவுடன் பெறினும் கொள்ளலர்” 36

    எனவும்,

    “தாம் இரந்துண்ணும் அளவை ஈன்மரோ
    இவ்வுலகத்தானே”
    37   எனவும்

    “குடிபழிதூற்றும் கோலோன் ஆகுக; புலவர் பாடாது வரைக; இன்மைநிலை யான் அடைக”38 எனவும் வரும் பகுதிகள் உள்ளிட்ட இன்னபிறவும் பழிச்செயல்களின் இழிதன்மைகளை உணர்த்தி உயர்பண்பு நிலைகளை உயர்த்தி நிற்கும் பகுதிகளாகும்.

    வறுமை நிலையிலும் பெருமை நிலைச்செயல்கள்

    புலவர்கள் புரவலர்களை நாடிப்பொருள் பெற்றுவாழ்தல் இயல்பு. புலவர்-புரவலர் என்னும் இவர்களுக்கிடையில் பொருள் மட்டும் பிணித்திடும் தகைமையதன்று.  புரவலனாகிய அரசன் தடம்மாறித் தடுமாறும் நிலைகளில், மனைவியைப்பிரிந்து பரத்தையரிடம் இருந்த நிலைகளில், அரசனுக்கு வாழும் நெறி உரைத்திட்ட பாங்கும் (தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து பரத்தை ஒருத்தி மனையில் இருந்த பேகனைக் கண்டு கபிலர் எடுத்துரைத்து இடித்துரைத்தமைப் பாங்கில் பாடப்பட்ட பாடல் பாங்கும்) 39 பாரி மகளிரை அழைத்துக்கொண்டு கபிலர் அவர்களுக்கு வாழ்வமைத்துத்தர மிக முயன்ற பாங்கில் அமைந்த பாடல்களும் 40 புலவர்களின் பெருமை மிகு பண்புகளின் நிலைமை பேசும் தன்மையனவாகும்.

    இவ்வாறே கோவூர்கிழார் எனும் புலவர் மலையமான் மக்களாகிய இளஞ்சிறார்களைக் கிள்ளிவளவன் யானைக்கு இடுவுழி உய்யக்கொண்ட பாடலும்,41 நெடுங்கிள்ளியிடமிருந்து இளந்தத்தன் என்னும் புலவன் “ஒற்று வந்தான்” எனக்கொல்லப்புக்குழி, கோவூர்கிழார் உய்யக்கொண்ட பாடலும்42

    இப்போக்குடைய இன்னபிறப் பாக்களும், வறுமை நிலைப்பட்ட புலவர்களின் பெருமைநிலைப்பட்ட செயல் செய்யும் போக்கிற்குச் சான்றுகளாய் நின்று, பண்பாட்டில் உயர்ந்துநின்று, வாழ்ந்தமையை வெளிப்படுத்துகின்றன.

    நிறைவாக….

    சங்கத் தமிழறிவார்
    தண்தமிழின்சீரறிவார்

    சங்க இலக்கியங்கள் இயம்பிச்செல்லும் பண்பாட்டுக் கூறுகளும் சிலவற்றை, இதுகாறும், அகவாழ்வுநிலை மற்றும் புறவாழ்வுநிலை என்னும் இரு கூறுகள் கொண்டு ஒருசிறிது தொகுத்துத் தொட்டுக்காட்டப்பெற்றன.

          சொல்லநினைத்தது ஆயிரம் – ஆனால்
          சொன்னதோ பாயிரம்

    என்பதுபோல் கால அளவு கருதுவதுடன் என் சிந்தனை அளவு கருதியும் இதுகாறும் சொல்லப்பெற்ற சில செய்திகளைத் தமிழ் அறிந்தார் நன்கு உள்ளத்தில் அமைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

    சங்க இலக்கியம் காட்டும் பெருகிய பிறவேறு பண்பாட்டுக் கூறுகளையும் அறிவதும், அறிந்து இன்புறுதலும், இன்புற்று அறிவுறுத்தலும் அறிவுறுத்துதலுடன் பின்பற்றி வாழ்தலும், வாழ்ந்து சிறத்தலும் வேண்டும் என்ற எளியேனின் இவ்வுணர்வுடன் நிறைவெய்துகிறது. “பண்பாட்டியல் நோக்கில் சங்க இலக்கியங்கள்” என்னும் பொருண்மையினால் ஆக்கப்பெற்ற இக்குறுங்கட்டுரை.

    ***** 

    சான்றெண் விளக்கம்

    1. நல்லந்துவனார். கலித்தொகை. நெய்தற்கலி, பாவெண் 133
    2. கோனாட்டு எறச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார், புறநானூறு, பாவெண்.197
    3. இரா.வைரமுத்து, சிந்துபைரவி திரைப்பாட்டு
    4. பிரிட்டாணிக்கா தகவல் களஞ்சியம், தொகுதி.2 ப.805
    5. சங்க இலக்கியங்கள், நூற்பெயரும் கிடைக்கும் பாக்கள் எண்ணிக்கையும், நற்றிணை 401-குறுந்தொகை, 402-ஐங்குறுநூறு, 501-பதிற்றுப்பத்து, 80-பரிபாடல், 22-கலித்தொகை, 150-அகநானூறு, 401-புறநானூறு, 398-ஆக எட்டுத்தொகையின் பாக்கள் எண்ணிக்கை 2365 ஆகும். இவைகளுடன் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெருபாணாற்றுப்படை, முல்லைபாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், பத்துப்பாட்டுகள் சேர (2365+10) 2375 ஆகும். பத்துப்பாட்டின் பாட்டில் 3552 ஆகும்.
    6. திருவள்ளுவர், திருக்குறள்.13, ஒழுக்கமுடைமை, குறளெண்.131
    7. முனைவர்.க.ப.அறவாணன், சமூகவியல் பார்வையில் அற இலக்கியக்களஞ்சியம், குடும்பவியல்.ப.579
    8. தேவகுலத்தார், குறுந்தொகை பா.வெண்.3
    9. முனைவர்.வி.நாகராஜன் (உரையாசிரியர்) குறுந்தொகை பா.3ன் உரைப்பகுதி
    10. செம்புலப்பெயனீரார். குறுந்தொகை பாவெண்.3
    11. பாலைபாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகை, பாலைக்கலி, பாவெண்11
    12. ஓதலாந்தையார், குறுந்தொகை, பாவெண்.21
    13. வெள்ளிவீதியார், குறுந்தொகை, பாவெண்.130
    14. கபிலர்.குறிஞ்சிப்பாட்டு, பாவடி 201-207
    15. நன்னாகையார், குறுந்தொகை, பாவெண்.118
    16. பாலைபாடிய பெருங்கடுங்கோ, குறுந்தொகை.பாவெண்.137
    17. படலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறநானூறு பாவெண்.203
    18. போதனார். நர்றிணை. பாவெண்.110
    19. கபிலர்.ஐங்குறுநூறூ. அன்னாய்வாழிப்பத்து, பாவெண்.203
    20. அம்மூவனார், குறுந்தொகை, பாவெண் 49
    21. தும்பிசேர்கீரன், குறுந்தொகை, பாவெண் 61
    22. கூடலூர்கிழார், குறுந்தொகை பாவெண் 167
    23. நாலடியார், 22 நட்பாராய்தல், பாவெண் 7
    24. நச்சினார்கினியர், தொல்காப்பியப் பொருளதிகாரத்து அகத்திணையியல் நூற்பா 54ன் உரைப்பகுதி.

    *****

    கட்டுரையாசிரியர் – உதவிப்பேராசிரியர்
    தமிழாய்வுத்துறை
    ஏ.வி.சி. கல்லூரி, (தன்னாட்சி)
    மன்னன்பந்தல், மயிலாடுதுறை – 609 305

     

     

    Share
  • இலக்கியங்களில் வாழ்வியல்

    -இரா.சீனிவாசன் 

    முன்னுரை

    “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்ற ஔவைப் பிரட்டியாரின் வாக்கிற்கு இணங்க மானிடப் பிறவியைப்  பெற்ற மக்கள் நல்ல வாழ்வியல் முறைகளைப் பின்பற்றி வாழ்தல் அவசியமாகும். இயற்கையோடு இயைந்து இணைந்து இன்பமாக வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். மனிதன் தன் வாழ்க்கைக்கு இயற்கையே துணை என்பதை உணர்ந்தான். ஆதலால் இயற்கையைத் தன் வாழ்வோடு இணைத்து, மனிதன் தன் தேவைகள் அனைத்தும் இயற்கைப் பொருட்களிடமிருந்துக் கிடைக்கின்றன என்பதைப் புரிந்துக் கொண்டான். அவ்வாறு அவர்கள் இயற்கையோடு இணைந்து நிலத்தையும், பொழுதையும் பயன்படுத்தியதைத் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களின் வழி அறியலாம். தமிழில் தோன்றிய இலக்கிய வகைகளுள் மிகவும் முக்கியமானது திணை இலக்கியமாகும். இவை நில அடிப்படையானது. நிலமும் பொழுதும் இயற்கைப் பின்னணியும் மனித வாழ்வும் இயைபடப் புனையப்படுவது திணை இலக்கியமாகும். திணை இலக்கியத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பிரிக்கிறார் தொல்காப்பியர்.

    முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்
    இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே
       (தொல்.அகத்,4)

    மேலும் தமிழ்மொழியின் சிறப்பினைக் கூறுகையில்,

    ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து’
    எனத் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் தமிழகத்தின் எல்லையைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

    ‘கல்தோன்றி மண்தோன்றிக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ எனப் புறப்பொருள் வெண்பாமாலை தமிழர்களின் தொன்மையைக் குறிப்பிடுகின்றது. இலக்கண இலக்கிய வளங்களோடும் வாழ்வின் மேம்பட்ட நாகரிகத்தோடும் வாழ்ந்த இனம் தமிழினம். தமிழர் தாம் வாழுகின்ற நிலங்களுக்கேற்பத் தமது தொழில், வாழ்க்கை அமைப்பு முறையை வகைப்படுத்தி வாழ்ந்துள்ளனர் என்பதை,

    முதல் கரு உரிப்பொருள் என் மூன்றே      எனத் தொல்காப்பிய நூற்பா–  949உம்    மாயோன் மேய  எனத் தொல்காப்பிய நூற்பா– 951-உம் இயம்புவதை நாம் உணரவேண்டும். இதன் மூலம் தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்கள் வெளிப்பட உணர்கிறோம். தமிழர்கள் தாம் வாழும் நிலங்களுக்கு ஏற்றாற் போல வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டனர் எனலாம். அவற்றை முறையே,

    1) குறிஞ்சிநில வாழ்வியல்    2) முல்லைநில வாழ்வியல்
    3) மருதநில வாழ்வியல்      4) நெய்தல்நில வாழ்வியல்
    இங்கே நாம் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் வாழ்வியலைக் குறித்து ஆய்வுக் கட்டுரையில் காண்போம்.

    குறிஞ்சி நில வாழ்வியல்:

    மலையும், மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனலாயிற்று. இங்கு வாழும் மக்கள் குறிஞ்சிநில மக்கள் என அழைக்கப்பட்டனர். நிலம் பொழுது என்பதை முதற்பொருளாகவும், தம் வாழ்வியலோடு இயைந்த தெய்வம், உணவு, விலங்குகள், மரம், செடி, கொடிகள், தொழில் போன்றவற்றைக் கருப்பொருளாகவும், தலைமகனுக்கும், தலைமகளுக்கும் இடையே உள்ள உணர்வைக் கொண்டு உரிப்பொருள் எனவும் வகைப்படுத்தினர். குறிஞ்சிக்கான பெரும்பொழுது கூதிர், முன்பனி எனவும், சிறுபொழுது யாமம் எனவும் பிரித்ததனை

    “…………… குறிஞ்சி:  கூதிர், யாமம் என்மனார் புலவர்                              எனப் பாடுகிறது தொல். நூற்பா பாடல் எண் (952). இந்நில மக்களினுடைய தொழில் தேன் எடுத்தல், தினைப்புனம் காத்தல், இந்நில மக்களுடைய அகவொழுக்கமானது களவு, கற்பு என வரினும் அவை அறத்தொடு நிற்றலாய் விளங்குவதை அகப்பாடல்வழி நம்மால் உணர முடிகிறது. இந்நில மக்களின் காதற்சிறப்பு சங்கப் பாடல்களின் கற்பனைத் திறனையும், வாழ்வியல் விழுமியங்களையும், தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் காதல் நிலைப்பாடுகளையும், தோழி, செவிலித்தாய், நற்றாய் முதலானோர்களின் அறவுரைகளையும், அறிவுரைகளையும் எல்லாவற்றிற்கும் மேலாகக் கதைப்பாங்கிலும் அமைந்துள்ளதை நம்மால் உய்த்துணர முடிகிறது. ஒரு குறமகள் வேங்கை மலர்களைப் பறிக்க எண்ணினாள். மிக உயர்ந்த மரக்கிளையில், பூத்த பூக்களாய் இருப்பதால் அதனைப் பறிக்க விரும்பிய தலைவி “வேங்கை! வேங்கை!” என்று கூச்சலிட்டாள். கானவர்கள் பசுவைக் கொல்லும் புலியென அஞ்சி வில்லோடு காவல் காக்கச் சென்றனர் தத்தம் குடியிருப்பை. அத்தகைய மலைச்சாரலை சொந்தமாய் உடைய தலைவனின் மார்பைத் தன் நெஞ்சு சொந்தமாகக் கொண்டது. “அவனால் அவனது காதலால் என்னுயிரே போவதாயினும் போகட்டும். உனது மகளின் விழிகளில் படர்ந்த பசலையானது காமநோயினால் வந்தது என்று மட்டும் கூறாதே தோழி” என்று தலைவியின் கூற்றைப் படம் பிடிக்கிறது.

    “……………. யாக்கை இன்உயிர் கழிவது ஆயினும்,
    நின்மகள்               (அகம் -52, 12-15)

    எனும் நொச்சி நியமங்கிழார் இயற்றிய குறிஞ்சிப்பாடல்.

    முல்லை நில வாழ்வியல்:

    “காரும், மாலையும் முல்லை”      (தொல். நூற்பா  952)
    “மாயோன் மேய காடுறை உலகமும்”   தொல். நூற்பா 951  என முல்லை நிலத்தின் நிலம் பொழுதினை வரையறுக்கின்றது.

    இந்நில மக்கள் காடும், காடு சார்ந்த இடங்களில் வாழ்கின்றனர். இயற்கை எழில் சூழ வாழ்ந்தனர். இந்நிலவாழ் காதல் தலைமகளானவள் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் கொண்டு தன் தலைவனை எண்ணி நினைந்து உருகுகிறாள். இந்நில மாந்தர் அன்பில் உயரியவர் எனில் அது மிகையாகாது. வாடுகின்ற தலைவிக்கு கார்காலம் வந்து விட்டது. பிச்சிப் பூக்கள் பூக்கத் தொடங்கி விட்டன. “பெண்ணே! உயிர்களை வருத்தாத உன் அன்பிற்குரிய தலைவன் உனைநினைத்து விரைந்து வருவான், கவலை கொள்ளாதே” எனத் தோழியானவள் ஆறுதல் வழங்கித் தலைவியின் ஆற்றாமையைப் போக்க முயலுகிறாள்.

    அதனை காட்சிப்படுத்தும் விதமாகக் குறுங்குடி மருதனார் இயற்றிய பாடல் விரிவதை

    தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
    மணிநா
    ஆர்த்த மாண்வினைத் தேரன் (அகம் – 4, 11-12) கூறுகிறது.

    “கொன்றை மரத்தின் மொட்டுக்கள் அரும்பி மலரும் நாளில் கொம்புகிளைத்த மான்கள் துள்ளிக் குதித்தன. வானகம் தூறலிட்டதில் கானகம் பசுமை பூத்தது. இந்நாளில் வருவதாய் சொன்ன உன் தலைவன் செங்காந்தள் மலர்களைக் காணும் நேரம் உன்னழகினை நினைந்து வருவான். நினைத்ததும் உனைத்தேடி குதிரைபூட்டிய தேரில் விரைந்து வருவான். அவ்வாறு வரும் வழியில் கோவை மலர்களில் தேன் எடுக்க மூழ்கியிருக்கும் வண்டுகள் தேனின் மணிச்சத்தம் கேட்டு பறந்து விடும் என்றஞ்சி மணியின் நாவைக் கட்டி ஓட்டி வருவான்” எனக் கூறும் தோழி, “வண்டினத்தைக் கூட வாடவிடக்கூடாது என்று நினைக்கும் உன் தலைவன் உனை வாட விட்டு விடுவானோ?” எனக் கேட்கிறாள். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காரணத்தால் மட்டுமே வண்டிற்கும் கூட வலி ஏற்படாதிருக்க மனம் இரங்கினான் தமிழன் எனும் நிலையை முல்லைப் பாடல் வழி நம்மால் அறிய முடிகிறது.

    இயற்கையை இரசிப்பது மட்டுமன்று, போர்க்காலத்து நாளிலும் பகைவரை எல்லாம் சாடித் தன் காதல் தலைவியின் இளமை நலம்துய்க்கத் தேரினை விரைந்துசெலுத்திடத் தேர்ப்பாகனுக்கு ஆணையிடுகிறான் தலைவன் என்பதை

    “முரண்செறிந் திருந்த தானை இரண்டும்”     (அகம் – 44, 3-6)

    எனும் பாடல் வழிக் குடவாயில் கீரத்தனார் கூறுவதை காணும் போது, தலைவனானவன் தலைவியை எக்காலத்தும் தனித்து தவிக்கவிடக்கூடாது எனும் உன்னத நோக்கோடு விளங்குகிறான் என்பதை அறிய முடிகிறது. தலைவன், தலைவியின் நினைவாக மூவிடப் பிரிதலும், தலைவி, தலைவன் நினைவாகக் காத்திருத்தலும் காதலின் இன்பத்தை பெருக்குவதாக விளங்குகின்றது. இதனையே வள்ளுவர் தமது அன்புடைமையில்

    அன்புற்று அமர்ந்த வழக்கென்ப…  (குறள் – 75) என்கிறார்.

    கொலை புரிதல் கொடிய பாவம் எனினும், கூடிய உயிரை வருத்துவது அதை விடப் பாவம் என்பதை முல்லை நில மக்களின் வாழ்வியலால் அறிய முடிகின்றது.

    மருத நில வாழ்வியல்:

    “வைகறை விடியல் மருதம்” என்கிறது தொல்நூற்பா  954. வயலும், வயல்சார்ந்த நீர் நிலை நிரம்பியபகுதி இந்திரனுக்குரிய ஒன்றாகும். இந்நில மக்கள் விவசாயத்தைப் பெரிதும் போற்றி வளர்த்தனர்.

    கற்பு நெறியில் தலைவி சிறந்து விளங்குகிறாள். தலைவன் இளமை நலம்துய்க்கப் பரத்தையரிடம் செல்கின்றான். தலைவன் ஒழுக்கம் தவறுவதை மருதநில வாழ்வியல் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது எனினும், இன்பம்துய்த்துத் திரும்பிய தலைவனை, தலைவி ஊடல் நிலையில் வெறுக்கிறாள்.          

    வரைவிலா மாணிழையார்… (குறள் – 919)

    மிக இழிந்தவர் கிடக்கும் நரகம் எது? ஒரு வரம்பில்லாத பரத்தையரின் தோளாகும் என வள்ளுவப் பெருந்தகை கூறும் கூற்றைத் தலைவியானவள் தன்னை மறந்து தன் இளமை நலம் துய்க்காது பரத்தையரை நாடிச்சென்ற தலைவனைப் பார்த்துக் கூறுகிறாள். மருதத்திணைக்குரிய அகத்திணை ஒழுக்கமென்பது ஊடலும், ஊடல் நிமித்தமும் ஆகும். இங்கே தலைவியானவள் இளமை நலம் எனும் காதல் பெண்பருவத்தில் இருப்பதில்லை. பிள்ளைபெற்ற தாயாகத்தான் பெரும்பாலும் மருதத்திணையில் காட்டப்படுகிறாள். இக்கூற்றை மருதநிலப்பாடல்கள் நமக்கு அறிவிக்கின்றன.

    தலைவியோ தன் இளமைக் காலத்துத் தலைவன் தன்னை எவ்வாறு இன்பம் துய்த்தான்; அத்தகைய தலைவன் தான் பிள்ளைபெற்ற தாயானதும், தன்னைத் தலைவன் அணைக்க விரும்பாது ஒதுங்கிப் போகிறான். அவனை அன்போடு தானே அணைக்கச் சென்றாலும் மார்பில் கசியும் பால் தன்மீது படுமென்று ஒதுங்கி நிற்கின்றான் எனத் தோழியிடம் கூறுகிறாள் தலைவி.

    தலைவனின் செயலானது, தாமரை நிறைந்த தடாகத்தை எருமையானது கலக்கிச் சேறாக்கும்; பின்பு தாமரையை தின்று மகிழும். அத்தகைய குணம்கொண்ட நீ எனக்கு யாரோ? உன்னோடு நான் எதற்கு ஊடல் கொள்ள வேண்டும்? இவ்வூரே உன்னைப் பற்றித் தூற்றுகிறது. அதனை என்வாயால் நான் சொல்லமாட்டேன். நீ வாழ்க! களிறுகள் நிறைந்த போர்க்களத்தைச் செழியனது வெற்றிபொருந்திய போர்வாள் அழித்ததுபோல, எனது வளையல்கள் நெகிழ்ந்து வீழ்ந்தாலும் வீழ்க என்றாலும், நீ நினைத்த இடத்திற்கே சென்று நீ நினைத்தது போலவே இன்பம் துய்த்திடு. உன்னைத் தடுப்பவர் எவரிங்கே? என்பதை அள்ளூர் நன்முல்லையார் தம்பாடல் வாயிலாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். இங்கே தலைவன், தலைவியின் ஊடல் நிலை மட்டுமல்லாது போர்நிகழ்வும் குறித்தது குறிப்பிடத்தக்கது. ஆகவேதான் அகநானூறு தமிழர்களின் அகவாழ்வை மட்டுமின்றி அந்நாளைய போர் நிலைக்களன்களையும் குறிப்பிடுகிறது.

      “களிறுடை அருஞ்சமம் ததைய நூறும் (அகம் – 46, 12-14) எனும் பாடல் விளக்குகிறது. தமிழரின் பண்டைய திருமண நிகழ்ச்சியை கூறும் மருதநிலப்பாடல் ஒன்றைப் பார்ப்போம். சிலப்பதிகாரத்தில் மணவிழாவிலே “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிய…” என்பது போன்ற நிகழ்ச்சி ஏதும் அன்றைய தமிழர் தம் வாழ்க்கையில் இல்லை என்பதை உரையாசிரியர் உரைக்கின்றார்.

    தமிழர் பண்பாட்டின் விழுமியங்களாக இலக்கியச் செப்பேடுகளாக அகநானூற்றைப் போற்றுவது இதன் காரணத்தால் எனின் அது மிகையாகாது. அந்நாளைய தமிழர்கள் நல்லநாள் பார்த்தல், புத்தாடை உடுத்தல், பெருஞ்சோறளித்தல், மங்கல மகளிர் வாழ்த்தல், தமர் அளித்தல் போன்றவைகளே நிகழ்ந்துள்ளன என்பதை நல்லாவூர் கிழார் இயற்றிய மருதநிலப்பாடல் உணர்த்துகிறது.

    கோள்கள் நீங்கிய கொடுவெண் திங்கள்  (அகம் – 86, 6-15) என்கின்ற பாடல்வழித் திருமண நாளில் நடைபெறும் நிகழ்வுகளை வரிசைக் கிரமமாகக் கூறி அதாவது, உளுத்தம் பருப்புப் பொங்கலைக் கூடியிருக்கும் சொந்தங்கள் இடைவிடாது உண்டுகொண்டிருந்தனர். முழுமதி வந்த தீங்கற்ற உரோகணி நன்னாள் அது! இருள்நீங்கிய புலர்காலை பூத்தது. உச்சியிலே நிறை நீர்க்குடம் சுமந்தும், இடையிலே மண்கலயங்கள் சுமந்த மங்கல மகளிர் கூடினர். அன்பளிப்பு வழங்கியபடி இருந்தனர். மங்கல மகளிரின் நீராட்டலில் நீரும், பூவும், நெல்லும் கூந்தலோடு உறவாடி நின்றன. அதன்பின் வதுவை மணமும் நிகழ்ந்தது. பின் “கற்பினின்று வழுவாது மணவாளனுக்குரிய இல்லக்கிழத்தி ஆவாய்” என சுற்றம்கூடி வாழ்த்தி எம்மைத் தனி அறை காட்டினர். புணர்ச்சி கொள்ளும் முதலிரவில் புத்தாடைக்குள் புதைந்து கிடந்த பூவையை மெல்ல அணைத்தேன். “உன் உள்ளம் விரும்புவதை ஒளியா சொல்” என்றேன். பொத்திய என் கரமெடுத்து தலைகவிழ்ந்த சித்திரமாய் மௌனமாய் நின்றாள். பூமுகம் என்றும் அவள் தன்பால் எப்போதும் அன்புகொண்டவள். தோழியே தடைபுரிகிறாள் எனத் தலைவியின் அன்புநலம் பாராட்டும் அற்புதப் படப்பிடிப்பாய் அமைந்த பாடலிது. இத்தகைய உயரிய பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட இலக்கியங்களைக் கற்று இன்புறுவதே தமிழர்களாகிய நமக்குக் கிடைத்த பெரும்பேறு.

    முடிவுரை

    இக்கட்டுரையின் மூலம் மனிதன் தங்கள் வாழ்க்கையோடு நிலத்தையும் பொழுதையும் தொடர்புபடுத்தி வாழ்ந்தான். நிலத்தின் பெயரால் மக்கள் பெயர் அமைவதால் நிலத்தினை உயர்திணையாக்கிப் பேசுவதையும் காணலாம். நிலத்தையும் பொழுதையும் மக்களுக்கு நன்மை பயக்கும் கருவிகளாகக் கொண்டனர். மேலும் அவற்றைப் போற்றிப் பாதுகாத்து வந்தனர். எதிர்காலத்தில் நாமும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அவற்றின் இன்றியமையாமையை உணர வேண்டுமென்ற உயரிய நோக்கத்தை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
    அரசு கலைக்கல்லூரி,
    கோவை.

     

     

    Share
  • தொல்காப்பியச் செய்யுளியலில் பேராசிரியரின் பாட பேதம்

    -முனைவர் பா. கலையரசி

    முன்னுரை

         தமிழின் வளமையும், இனிமையும் அதன்கண் உள்ள இலக்கிய, இலக்கணங்களில் பொதிந்து கிடக்கின்றது.  ஒரு மொழியின் உடல், இலக்கியமெனில், அவ்வுடலின் குருதி இலக்கணமாகும்.  அந்த வகையில், நம் மொழிக்குக் குருதியாய் அமைந்து நாட்டின் வரலாற்றினை அறிவதற்குரிய சான்றுகள் பலவற்றுள் ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூலுக்கு முக்கிய இடம் உண்டு.
    தொல்காப்பியம் மூன்று பகுதிகளைக் கொண்டது. தமிழ் ஒலிகளை ஆராய்வதை முதல் பகுதியும், சொற்கள், சொற்றொடர்களின் அமைப்பை ஆராய்வதை இரண்டாவது பகுதியும் விளக்குகிறது.  மூன்றாவது பகுதியான பொருளதிகாரம் தமிழிலக்கியத்தை ஆராய்ந்து உரைப்பதாய் அமைந்துள்ளது. அவற்றுள் குறிப்பாக, செய்யுளுக்கு இலக்கணம் கூறும் செய்யுளியலில் பேராசிரியர் காட்டும் பாடபேதத்தை மட்டும் இக்கட்டுரை ஆராய்ந்து தெளிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  

     

     

    பேராசிரியரின் உரைத்திறன்

        தமிழ்ப் படைப்புகளில் நிரம்பிக் கிடக்கும் வளங்களை உணர்ந்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு வெளிப்படுத்தியவர்கள் உரையாசிரியர்கள்.  வேற்று மொழியும் நாகரிகமும் தமிழ்மண்ணில் புகுந்து தமிழ்ப் பண்பாட்டினை மறக்கச் செய்த போதெல்லாம், பழம்பெரும் இலக்கண, இலக்கியச் செல்வங்களை தமிழர்களுக்கு எடுத்துக்காட்டி, விளக்கித் தமிழ்மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு மட்டுமே உண்டு.

          தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் இறுதி நான்கு இயல்களான மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கு இயல்களுக்கு மட்டுமே பேராசிரியரின் உரை இப்பொழுது கிடைக்கின்றது. இந்நான்கு இயல்களிலும் பேராசிரியர் தமக்கென ஒரு தனிநடையைக் கையாண்டு உரை யாத்திருப்பதால், இவரது உரைநெறியில் ஒரு தனித்தன்மையைக் காண இயலுகிறது.

          பேராசிரியரின் உரைநெறிகள் அனைத்தையும் பகுத்தாய்ந்து வகுத்து வரையறுத்தால், சிறந்ததொரு உரைநூலின் கோட்பாட்டையும் நம்மால் உருவாக்க இயலும்.

    பாடபேதம் – விளக்கம்

          ஒரு சொல்லுக்கு மாற்றாகப் பொருளிலும், ஓசையின் அமைப்பிலும் ஒத்த சொற்கள் வருவது பாடபேதம் சுட்டி விளக்கல் எனப்படும். அதாவது, அசையின் அமைதியையும், ஓசையையும், தொடரமைப்பையும், பொருளையும் ஒத்து அமையக்கூடிய வேற்றுமைச் சொல்லைக் குறிப்பது இவ்வகை ஆகும்.

            மூல நூலிலுள்ள சொற்களுக்கும், பேராசிரியரின் உரையில் உள்ள சொற்களுக்கும் பாடவேறுபாடு குறிப்பிடப்பட்டிருப்பினும், பேராசிரியர் யாத்துள்ள சொற்கள் யாவும் எந்நிலையிலும் மூலநூலின் பொருளை சிதைக்கா வண்ணம் அமைந்திருப்பது பேராசிரியத்தின் தனிச் சிறப்பென்றே கொள்ளலாம்.

    ஏனைய வுரியசை – ஏனவை உரியசை
    “இயலசை முதலிரண் டேனவை உரியசை”

    [தொல்-பொருள்-இளம்பூரணம்-314]

          என்ற சூத்திரத்திற்கு முதல் இரண்டு இயலசையும், ஏனைய உரியசையும் இயையும் தன்மையை உடையன எனப் பொருள் கொள்ளலாம். இயலசை என்பதற்கு இயற்கையால் இணையும் நேர், நிரை, என்பவற்றையும், இவை செய்யும் தொழிலைக் குறிக்கும் உரியசைக்கு நேர்பு, நிரைபு என்பவற்றையும் நேரடிப் பொருளாகக் கொள்ள வேண்டும்.  இச்சூத்திர உரையில் பேராசிரியரினின்று மாறுபட்ட இளம்பூரணர் ‘ஏனவை உரியசை’ என்று பாடங் கொண்டுள்ளார்.

          பேராசிரியர் ‘ஏனைய வுரியசை’ என்று குறிப்பிடுகிறார். எனவே, ஏனையவை என்பதே ஏனவை என்று திரிவதால் பேராசிரியரின் பாடத்தினின்று பிறந்ததே இளம்பூரணர் கொண்டுள்ள வேறுபாடும் என்பது இதன்கண் தெளிவாகிறது.

    நிரையுறினும் – நிரை இறினும்

          இயலசையும் உரியசையும் கலந்து வரக்கூடிய ஈரசைச் சீர்களை ஆசிரியவுரிச் சீராகக் கொள்ள வேண்டும் என்பதை,

         “முன்னிரை யுறினு மன்ன வாகும்” [தொல்-பொருள்-பேராசிரியம் – 326]

          என்ற செய்யுளியல் சூத்திரம் தெளிவுற விளக்குகிறது.  இதில் பேராசிரியர் ‘நிரை யுறினும்’ எனவும், இளம்பூரணர் ‘நிரை இறினும்’ எனவும் பாடபேதம் காட்டியுள்ளனர்.

          நிரை இறினும் என்ற இளம்பூரணரின் பாடமானது நேர்பு, நிரைபு என்னும் உரியசைகளின் பின்னால் நிரை வந்து நிரையே ஈறாய் முடிந்து நிற்கும் முறைமையைச் சுட்டிக்காட்டுகிறது.  பேராசிரியர் கொண்ட நிரையுறினும் என்பது நிரையுதறுலைக் குறிக்கிறது. அதாவது, உரியசைகளான நேர்பு, நிரைபு ஆகியவற்றின்  பின்னால் நிரையசை வந்து மயக்கமுற்று, அது ஈரசைச் சீராய் மாறுவதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.  இவ்விடத்தில், சூத்திரப் பொருளையும் ஒப்பு நோக்கினால் பேராசிரியர் கொண்டுள்ள பாடம் நுட்பமுடையது என்பது தாமாகவே புலப்படும்.

    கடியவும் படாஅ – கடியவும் பெறாஅ

          வெண்பா உரிச்சீரும் ஆசிரிய வுரிச்சீரும் கலித்தளையில் அடுத்தடுத்து முறைப்படி நிற்கும் தகைமையை உடையன என்ற கருத்தை,

          “கலித்தளை மருங்கிற் கடியவும் பெறாஅ”
    [தொல்-பொருள்-இளம்பூரணம்-332]

    என வரும் செய்யுளியல் நூற்பா விளக்குகிறது.

          ஆசிரியப்பாவில் கூறப்படவில்லையெனில், அது கலிப்பாவிலும் கூறப்படாது என்பதை உறுதிசெய்யும் வகையில் ‘கடியவும் படாஅ’ என்ற சொல்லை பேராசிரியர் பயன்படுத்தியுள்ளார். கடியவும் என்பதிலுள்ள மகர ஒற்று இறந்தது தழீஇய எச்சவும்மையாக நின்று ‘கடியவும் படாஅ’ என உரை செய்யப்பட்டுள்ளது.

          இதே பொருளில் இளம்பூரணர் ‘கடியவும் பெறாஅ’ என்று குறிப்பிட்டிருந்தாலும், தளை என்பன எல்லாம் எழுத்தெண்ணிச் சீர் வகுக்கப்படும் கட்டளையடியையே குறிக்கும் என்ற அடிப்படையை நிலைநிறுத்திப் பாடம் வகுத்த பேராசிரியரின் உரைத்திறன் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    ஓரொரு வழியே – ஒரோவொரு வழியே

    செய்யுள் உறுப்புகளுள் ஒன்றான சீரின் ஒட்டுமொத்த வகையினை,

    “அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீ
          ரொன்றுத லுடைய வோரோர் வழியே”

    [தொல்-பொருள்-பேராசிரியம் – 343]

          என்ற நூற்பா விளக்குகிறது.  இதில் “ஒரோவொரு” என இளம்பூரணரும், “ஓரொரு” எனப் பேராசிரியரும் பாடங்கொண்டுள்ளனர்.  இளம்பூரணரைப் போன்று ஒருவழி என்று மட்டும் உரைக்காமல், ‘ஓரொருவழி’ எனப் பேராசிரியர் சுட்டி உரைத்திருப்பதால் பத்து வஞ்சியுரிச்சீரும் ஆசிரியப்பாவில் மயங்கி வரும் இயல்புடையது என்பது தெளிவாகிறது.  எனவே, பேராசிரியரின் பாடத்தை பின்பற்றி ஆய்வது சீரின் வகைமை குறித்த தெளிவான சிந்தனைக்கு வித்திடுவது குறிப்பிடத்தக்கச் சிறப்பாகும்.

    நேர்நிலை வஞ்சி – நேர்நிறை வஞ்சி

    வஞ்சியுரிச் சீருக்குரிய எழுத்தின் வரையறையைக் குறிப்பிடும்,
              “சீர்நிலை தானே ஐந்தெழுத் திறவாது
                நேர்நிறை வஞ்சிக் காறும் ஆகும்”       [தொல்-பொருள்-இளம்பூரணம்-349]

          என்ற சூத்திரம் நேரீற்றுச் சீர்கள் அனைத்திலும் எழுத்துக்கள் நிற்கக் கூடிய நிலை ஐந்தெழுத்தை விட அதிகமாகப் பயின்று வராது என்பதையும், நிரையினை இறுதியாகக் கொண்டு வஞ்சியுரிச்சீர் வந்தால் அது ஆறெழுத்தினைப் பெறும் என்பதையும் விளக்குகிறது. மேற்காணும் நூற்பாவின் இரண்டாவது அடியில் வந்துள்ள நேர்நிறை என்பதையே இளம்பூரணர் பாடமாகக் கொண்டுள்ளார்.

          பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் இரண்டு அடிகளால் அமையப் பெற்ற இச்சூத்திரத்தின் முதலடியை ஒரு சூத்திரமாகவும், இரண்டாவது அடியை அதற்கடுத்த சூத்திரமாகவும் பிரித்து நேர்நிறைக்குப் பதிலாக நேர்நிலை எனப் பாடவேறுபாடு காட்டியுள்ளனர்.

          இளம்பூரணர் ஐந்தெழுத்தினைக் கொண்டு அதற்கு அதிகமாகாமல் வரக்கூடியவை நேரீற்றுச் சீர்கள் எனவும், ஆறு எழுத்தினைக் கொண்டவை நிரைவஞ்சி எனவும் இரு தொடர்களாக இணைத்துப் பொருள்கொண்டு ‘நேர்நிறை’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சூத்திரத்தில் குறிப்பிடப் பெறும் வஞ்சியுரிச்சீர் இரண்டு சீர்களால் வருவதால் அதனை ‘சமநிலை வஞ்சி’ எனப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவது சமநிலையைக் குறித்து நிற்கிறது. இளம்பூரணரும், பேராசிரியரும் அவரவர் வகுத்துக் கொண்ட சூத்திர அடிகளுக்கு ஏற்ப அதன் பொருளையும், பாடத்தையும் மாறுபடக் குறிப்பிட்டுள்ள பாங்கு கூர்ந்து நோக்குவதற்குரியது.

    குறிப்பிடத்தக்க பாட வேறுபாடுகள்: 

    • “பொழிப்பு மொரூஉவுஞ் செந்தொடை மரபு
      மமைத்தனர் தெரியி னவையுமா ருளவே”
      [தொல்-பொருள்-பேராசிரியம்- 402]
    • “தெரிந்தனர் விரிப்பின் வரம்பில ஆகும்”
      [தொல்-பொருள்-இளம்பூரணம்- 407]
      “தொடைநிலை வகையே யாங்கென மொழிப”
      [தொல்-பொருள்-இளம்பூரணம்- 408]
    • “துகளொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயிற்
      செவியுறைச் செய்யு ளதுவென மொழிப”
      [தொல்-பொருள்-பேராசிரியம்- 440] 

    முடிவுரை:

       பேராசிரியர் பாடபேதம் சுட்டும்போது பிற உரையாசிரியர்களின் கருத்துக்களை எடுத்துக்காட்டித் தம் கருத்தை நிறுவுவது அவரின் தெளிந்த நோக்கை வெளிப்படுத்துகிறது.  செய்யுளியலில் மட்டும் பேராசிரியர் நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட பாடபேதங்களைச் சுட்டியுள்ளார்.  இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள அவ்வகைச் சில வேறுபாடுகள் இலக்கியப் பயிற்சிக்கு நல்லதோர் வழிகாட்டியாய் அமைவதோடு, செய்யுள் யாப்பதைக் கசடறக் கற்றுத் தெளிவுற விளக்கும் திறனாய்வாளர் பேராசிரியர் என்பதையும் நிறுவுகிறது.

    *****

    துணைநின்ற நூல்கள்

    1) கணேசையர் [ப.ஆ], தொல்காப்பியம், பொருளதிகார மூலமும் பேராசிரியருரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.  இரண்டாம் பதிப்பு – 2007.

    2) இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், பொருளதிகாரம் பகுதி-3, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 2001.

    3) இளங்குமரன், இரா., உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம், அப்பர் அச்சகம், சென்னை, 1971.

    *****

    கட்டுரையாசிரியர் – உதவிப் பேராசிரியர்,
    தமிழ் உயராய்வுத்துறை,
    சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி,
    மண்ணச்சநல்லூர்,
    திருச்சி.

     

     

    Share
  • சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்

    -நிலவளம் கு.கதிரவன்

    முன்னுரை:

    இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி.  நமது வாழ்க்கையே இலக்கியம்.  அவ்வகையில் உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் சங்ககால இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக ஏற்று அங்கீகரித்துள்ளனர்.  தமிழ்மொழியானது இன்றும் நிலைத்து நீடித்திருப்பதற்குக் காரணம், அது காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றித் தகவமைத்துக் கொண்டே வருவதால் வழக்கிலும், வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்து செம்மொழியாக மிளிர்ந்து நன்னடைபோட்டு வருகிறது.

    தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் வரிசையில் சிலப்பதிகாரத்திற்கு மிக ஏற்றமுண்டு.  இரண்டாம் நுற்றாண்டுக் காப்பியமான இதில் இளங்கோவடிகள் அதன் பாத்திரங்கள் வழியாக பல்வேறு வாழ்க்கை நெறிகளை மிக விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.  அவ்வகையில் சிலம்பில் காணப்படும் வாழ்க்கை நெறிகளில் முக்கியமான அம்சங்களை இக்கட்டுரையில் தொடர்ந்து காண்போம்.

    சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்: –

    ”நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” என்று பாரதி கூறியதுபோல் சிலப்பதிகாரமானது தமிழினத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது.  தமிழர்களின் பண்பாடுகளை மிகத் தெளிவாகக் காட்டும் நூல் சிலப்பதிகாரமாகும்.  இதற்குப் பிறகு நமது பண்பாட்டினை படம்பிடித்துக் காட்டும் பெருங்காப்பியம் இதுவரை தோன்றவில்லை எனலாம்.   சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், துறவி கவுந்தியடிகள் போன்றோர் வாயிலாக பல்வேறு வாழ்க்கைக் கூறுகளை நயம்பட உரைக்கிறார் இளங்கோவடிகள்.

    1. பெருமைமிக்க பத்தினியை பெரியோர் தொழுவர்.
    2. அரசியல் பிழை செய்தவர்களுக்கு அறமே யமன்.
    3. ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்.
    4. கவுந்தியடிகள் வடக்கிருந்தது.
    5. மானுடவியல் நோக்கில் ஐவகைநிலத் தெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு, நாட்டாரியல் கலை மற்றும் இசை, நடனம்.

    பெருமைமிக்க பத்தினியை பெரியோர் தொழுவர்: –

    கண்ணகியின் கற்புத் திறத்தை கற்புடை மகளிர் என இரண்டு சொற்களில் கூறாமல்

          ”பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டுகொல்
           கொண்ட தொழுநர் உறுகுறை தாங்குறுஉம்
           பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டு கொல் ” ( ஊர்சூழ் வரி 51 – 53 )

    அதாவது கணவன் செய்யும் துன்பங்களைத் தாங்குபவரே கற்புடைப் பெண்டிர்.  கணவன் துன்பங்களுள் பெண்களுக்கு மிகக் கொடியதாய் இருப்பது அவனது போற்றா ஒழுக்கமான பரத்தமையே.  என்றாலும் கோவலனின் செய்கைகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு ஆறியக் கற்பு (அ) அறக் கற்பு மற்றும் சீறிய கற்பு (அ) மறக் கற்பு என கண்ணகி உயர்ந்து இருந்தாள்.

    கண்ணகி புகார் நகர வாழ்க்கையில் கணவன் தனக்கு செய்யும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு ஆற்றியிருந்தாள்.  இதுவே ஆறிய கற்பொழுக்கம். மதுரை நகரில் மன்னனிடம் நீதிகேட்கச் செல்லும்போது தனது சீறிய கற்பொழுக்கமான மறக் கற்பை வெளிப்படுத்தினாள்.

    மதுரை செல்லும் வழியில் கண்ணகியிடம் கோவலன் கழிவிரக்கமாகத் தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறான்.  வறுமொழியாளருடனும், புதிய பரத்தையருடனும் திரிந்து கெட்டேன், அறிஞர் பெருமக்கள் அறிவுரைகள் மறந்தேன்.  எனக்கு நன்னெறியே அமையாது.  நன்மையே வாய்க்காது.  என் பெற்றோர் இருவருக்கும் அவர்கள் முதிய பருவத்தில் பணிவிடை செய்ய வேண்டும்.  அதை மறந்துவிட்டேன்.  பேரறிவு படைத்த உனக்கும் தீமை செய்துவிட்டேன்.  எழுக என்றேன்.  மறுப்புக் கூறாமல் என்னுடன் வந்துவிட்டாய் என புலம்பினான்.

    ஆனால் கண்ணகி, கோவலன் தன்னைவிட்டு பிரிந்த துயரை எடுத்துக் கூறவில்லை.  மாறாக,

                அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
                 துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
                விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை (கொலைக்களக் காதை 71-73)

    என்று அறம் செய்வோர்க்கு உதவுதல், அந்தண மரபினரைப் போற்றுதல், துறவிகளை எதிர்கொண்டு அவர்களுக்கு வேண்டுவன செய்தல், விருந்தினரைப் பாதுகாத்தல் என்ற நான்கு அறங்களை நான் தனித்திருந்ததால் செய்ய இயலவில்லை என்று கூறுகிறாள்.  மேலும் கோவலனின் பெற்றோர்கள் அடைந்த வருத்தத்தையும், உன் பெற்றோர்கள் வந்து விசாரித்தபோது விசனத்தைக் காட்டாமல் வியர்த்தமாகச் சிரித்தேன் என்றும்,  நீர் போற்றா ஒழுக்கம் விரும்பினீர். அது உங்கள் உரிமை.  அதனை மறுத்து உரைப்பது உகந்தது அன்று.  மேலும் பெண்களுக்கு அழகு எதிர் பேசாதிருத்தல் என்பதையும் கூறுகிறாள்.

    தவிர, கண்ணகியின் பார்ப்பனத் தோழியான தேவந்தி காவிரியின் சங்கமுகத் துறையை அடுத்த கானலில் உள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் என்னும் பொய்கைகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தைத் தொழுத மகளிர் இம்மையிற் கணவரைக் கூடி இன்புற்று, மறுமையிலும் போக பூமியிற் பிறந்து, கணவரைப் பிரியாதிருப்பர்.  எனவே நாமும் ஒருநாள் நீராடுவோமா? எனக் கேட்க, அதற்குக் கண்ணகி அது பெருமை தருவதன்று என மறுக்கிறாள்.  இதுவும் கண்ணகியின் கற்புக் கோட்பாட்டுக்கு நல்ல உதாரணமாகும்.

    அரசியல் பிழை செய்தவர்களுக்கு அறமே யமன்:-

    கொலை செய்யப்பட்ட கோவலனின் செய்தியைக் கேட்ட கண்ணகி, வீறு கொண்டு நீதி கேட்டு அரச சபைக்குச் சென்றாள்.  பாண்டிய மன்னனின் மனைவி கோப்பெருந்தேவியுடைய சிலம்பு, என் சிலம்போடு ஒத்திருப்பினும், அரசியின் காற்சிலம்பு முத்துக்கள் எனக் கூறுவதைவிட, தன்னுடையது மாணிக்கப் பரல்கள் கொண்டது எனத் தனது வாதத்தின் மூலம் நிரூபித்தாள்.  அரசன் உடைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது தனது அவசரமான முந்தைய தீர்ப்பு தவறு என்பதை உணர்ந்து, அறநெறி தவறியது தன் மானத்துக்கு ஊறு என உணர்ந்து உடனே தன் உயிர்துறந்து அறத்தை நிலை நிறுத்தினான்.  இதில் இரண்டு செய்திகள். சிலம்பு என்ற தடயத்தோடு ஒப்பிட்டு முடிவெடுத்ததால் இன்றைய தடய அறிவியல் நுட்பத்திற்கு அன்றே அச்சாரமிட்டவள் கண்ணகியே எனலாம்.  தவிரவும் வழக்கு, மேல் முறையீடு என்ற இன்றைய நீதிபரிபாலனத்திற்கு காரணமும் கண்ணகியே என்பதை உணரலாம்.

    ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்:-

    கோவலனைப் பார்த்து மாடலன் என்பவன் கூறுகிறான். ” இம்மைச் செய்தன யானறி நல்வினை, உம்மைப் பயன் கொல் ”( அடைக்கலக் காதை -90-94 ) அதாவது நான் பார்த்தவரையில் இப்பிறப்பில் நானறிந்தவரை நீ நன்மையைத்தான் செய்திருக்கிறாய்.  பின்னர் உனக்கு ஏன் இந்நிலை.  ஒரு வேளை முற்பிறவியின் பயனாக இருக்குமோ? என்று கேட்கிறான்.  அதாவது ஊழ்வினைக்கான பயன் அனுபவித்தே தீர வேண்டும் என்பது நியதி. கோவலன் முற்பிறவியில் ஒருவன் கொலை செய்யப்பட காரணமாக இருந்துள்ளான். அப்பயனே அவன் இப்பிறப்பில் கொலை செய்யப்படக் காரணம் என்பதே இதன் தாத்பர்யம்.

    கவுந்தியடிகள் வடக்கிருத்தல்:-

    வடக்கிருத்தல் என்பதைச் சமணர்கள் சல்லேகனை என்று கூறுவார்கள்.  வடக்குப் பக்கமாக அமர்ந்து உணவு உண்ணாமல் இருந்து இறப்பது வடக்கிருத்தல் எனப்படும்.  அதாவது பொறுக்கமுடியாத மனவேதனையைத் தருகின்றபோது வடக்கிருந்து உயிர் விடலாம் என்பது சமணர் கொள்கை.  சமணர் தவிர்த்து சங்க காலத் தமிழர்களிடையேயும் இத்தகைய வழக்கம் இருந்தது புறநானுறு வழியாக அறிய முடிகிறது.  உறையூரை ஆண்ட கோப்பெருஞ்சோழன், தமது வாரிசுகளின் கலகத்தால் வடக்கிருந்து உயிர்விட்டான். சோழனின் பிரிவைத் தாங்காமல் அவனது நண்பர் பிசிராந்தையார், மற்றொரு நண்பர் பொத்தியார் ஆகியோரும் வடக்கிருந்து உயிர்விட்டனர். சிறுபஞ்ச மூலம் என்னும் நூலிலும் வடக்கிருக்கும் குறிப்பு காணப்படுகிறது.

                வலியழிந்தார் மூத்தார்வடக்கிருந்தார் நோயின்
                  நலிபழிந்தார் நாட்டறைபோய் நைந்தார்………….(சிறுபஞ்ச மூலம்)

     அதே வகையில், துறவியாக இருந்தாலும் கோவலன் கண்ணகி இருவர் மீதும் மாறாப் பற்று வைத்திருந்த கவுந்தியடிகள் அவர்களின் பிரிவினால் பெரிதும் மனத் துயர் அடைந்து உயிர்விட்டது சிலப்பதிகாரம் மூலம் அறிய முடிகிறது.

    சிலப்பதிகாரத்தில் மானுடவியல் மற்றும் நாட்டாரியல் கோட்பாடுகள் :-

     காப்பியத்தில் அதன் ஆசிரியர் இளங்கோவடிகளால் அந்தணன், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வகையானவர்களிலிருந்தும் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.  மேலும் குறிஞ்சி, முல்லை, மருதம்,  நெய்தல், பாலை என ஐந்து வகை நிலங்களைப் பிரித்து, அதற்குரிய தெய்வங்களையும், மக்கள் வழிபடுவதையும் கூறியுள்ளார்.

    ”தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிமை” (இந்திரவிழவூரெடுத்த காதை – 59-67 ) என்ற வரியிலிருந்து காவல் தெய்வ வழிபாடு உள்ளதைக் காணமுடிகிறது.  தவிரவும் இக் காவல் தெய்வத்தின் முன் வில், வேல், வாள், ஈட்டி படையலிட்டு வீரர்கள் வணங்குவதிலிருந்து சிலப்பதிகாரத்தில் காவல் தெய்வ வழிபாடு உள்ளதையும் அறிய முடிகிறது.

    ஐயை கோட்டம் எனக் கொற்றவை வழிபாடு பற்றியும், சாலினி என்ற பெண்மீது தெய்வமேறி கண்ணகியை புகழ்ந்து கூறுவதாக வரும் காட்சி மக்கள் சாமியாடுபவர்கள், அவர்கள் கூறும் வார்த்தைகள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் என அறிய முடிகிறது.  மதுரை செல்லும் வழியில் ஆய்ச்சியரோடு தங்கியிருந்த கண்ணகிமுன் ஆய்ச்சியர் குரவைக் கூத்தை நடித்துக் காண்பித்துள்ளனர்.

     தவிரவும் சிலப்பதிகாரம் ஓர் இசைக் கருவூலம் எனலாம்.  அரங்கேற்று காதையில் ஆடல் கலைக் களஞ்சியமாக உள்ளதை அறிய முடிகிறது.  சிலப்பதிகாரத்தில் ஆடலாசிரியன், பாடல் ஆசிரியன், மத்தளம் கொட்டுவோன், யாழ் இசைப்பவன், ஆடும் பெண் ஆகியோருக்கு உரிய தகுதிகள், ஓர் ஆடல் அரங்கத்திற்குத் தேவையான நீளம், அகலம், உயரம் ஆகியவை பற்றி மிக நுட்பமாக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டு நடைபெற்றது வியப்பைத் தருகிறது.

    முடிவுரை :-

     மற்றைய தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் போலல்லாமல், இலக்கியக் கொள்கைத் தீர்மானங்களுடன், சொல்லவந்த கதையை எந்தெந்தக் களத்தில் அது நிகழ்கிறதோ, அக் களத்தின் புவியியல் பின்னணியிலும், அக்களத்திற்குரியப் பாரம்பரிய கலை வடிவங்களைப் புலப்படுத்தும் கையேட்டு ஆவணமாக ஆக்கிக் கூறும் படைப்பு சிலப்பதிகாரம் என்றால் அது மிகையாகாது.

    துணை நின்ற நுல்கள் : –
    1.   சிலப்பதிகாரம் – அரும்பதவுரை – அடியார்க்கு நல்லாருரை,
    டாக்டர் வே.சாமிநாதையர், கபீர் அச்சுக் கூடம், சென்னை.
    2.   Tamil Heritage Group அமைப்பில் திரு.இந்திராபார்த்தசாரதி அவர்கள் ஆற்றிய உரை.
    3.   சிலம்பின் கதை, – டாக்டர்.ரா.சீனிவாசன்., வெளியீடு – Mukil e-Publishing Pvt ltd.

     

     

     

    Share
  • சங்க இலக்கியத்தில் விழாக்கள்

    -முனைவர் க.லெனின்

    முன்னுரை

    பண்டைய காலத்தில் வெயில் மழையென்று பாராமல் உழைத்தவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அந்த ஓய்வானது மனத்திற்கு இன்பத்தையும் சுகமான அனுபவங்களையும் கொடுக்க வேண்டும் என்று எண்ணினான். வேலைமுடிந்து வீடு திரும்பியவன், கையில் கிடைத்த பொருட்களை வைத்துக்கொண்டு இசைத்தும் ஆடியும் பாடியும் தன்னை திருப்திப்படுத்திக் கொண்டான். அதுவே பெரியதாகவும், அனைத்து உறவுகளையும் ஒன்று கூட்டி விழாவாகச் செய்தால் எப்படி இருக்கும் என எண்ணி மகிழ்ச்சி அடைந்தான். விழா நடத்துவதற்கு காரணம் வேண்டுமே! தெய்வத்தின் திருப்பெயரைச் சொல்லி மக்களை அழைத்து விழாக்கொண்டாடினான். புதுஆடை உடுத்தியும், இல்லையென்று வந்தவருக்கு வேண்டியவைகளைக் கொடுத்தும் தன்னுடையக் குலம் இவ்பூவுலகில் நிலைபெறச் செய்தான். “மனிதன் வேட்டையாடினான். ஓய்வாக இருந்தபோது தன் களைப்பைப் போக்க ஆடிப்பாடினான். இதன் பயனாக விழா கொண்டாடி மகிழ்ந்தான். கிழமைக்கு ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டான். சங்ககாலத்தில் தைந்நீராடல், கார்த்திகை விழா, ஓணவிழா, இந்திரவிழா, உள்ளி விழா, பூந்தொடை விழா முதலிய விழாக்கள் குறிக்கின்றன”1 என்று பா.இறையரசன் குறிப்பிடுகின்றார்.

    விழாக்கள் என்றால் என்ன?

    விழவு, சாறு, திருவிழா, பண்டிகை, நோன்பு, திருநாள் என விழாவிற்கு வேறுபெயர்களாகச் சுட்டுவர். “விழாக்கள் உடலுக்கு ஓய்வும், உள்ளத்திற்கு இன்பமும் தரவல்லன. எனவே மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டாடுவதால் விழா என்று அழைக்கப்படுகிறது. விழா எனும் சொல் விழை என்ற சொல்லின் அடியாகத் தொன்றியது. இதற்கு விருப்பம், பற்று ஆகியபொருள்கள் உள”2 என்று கா.மு.பாபுஜி கூறுகின்றார். பரந்துபட்ட மக்கள் அனைவரும் ஒன்றுகூடி எடுக்கும் நிகழ்வினை விழா என்கிறோம். விழாக்களைப் பொது விழாக்கள், வழிபாட்டு விழாக்கள் என்று இருவகைப்படுத்தலாம். பொது விழாக்களை ஆண்டுவிழாக்கள், தின விழாக்கள், வாழ்வியல் சார்ந்த விழாக்கள் (திருமண விழா, காதணி விழா, பூப்பு விழா போன்றவைகள்) என வகைப்படுத்தலாம். வழிபாட்டு விழாக்களை தேர்த்திருவிழா, எருதுவிடும் விழா, குடமுழக்கு விழா எனப் பிரிக்கலாம்.

    விழாவும் விருந்தோம்பலும்

    பெரும்பாலான விழாக்கள் ஒற்றைப்படை நாட்களிலே நடைபெற்றன. முதல் நாள் பொங்கல் வைப்பது, இரண்டாம் நாள் கிடா வெட்டி உறவுகளுக்குச் சோறிடுவது, மூன்றாம் நாள் மஞ்சள் நீராட்டு விழாவோடு திருவிழாவினை முடித்து விடுகின்றனர். அக்காலத்தினர் இரவு நேரங்களில் சமைத்த பாத்திரங்களில் ஒரு பிடி சோற்றையாவது வைப்பர். ஏனெனில் இரவு நேரத்தில் யாரேனும் உறவினர்கள் வந்தால், இல்லையென்று சொல்லாது உணவிட்டு மகிழ்வார்கள். திருவிழாக்கள் என்பது உறவுகளைக் கூட்டி சோறிடுதலே முக்கிய நோக்காக அமைகின்றது.

    கூடி வாழும் பண்பு

    வறுமையின் காரணமாகவும், உறவுகளின் மூலமும் பிரிந்து சென்றவர்கள் கூடத் திருவிழாக்காலங்களில் சரியான நேரத்திற்கு உள்ளூர்க்கு வந்து விடுகின்றனர். இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடுதலை திருவிழாக்களில் பார்க்க முடியும். விவசாயிகள் மழைவருவதற்கு வெயில் காலத்தில் விழா எடுக்கின்றார்கள்.  பெரும்பாலும் தெய்வ வழிபாட்டு திருவிழாக்கள் அனைத்தும் கோடைக்காலத்தில் நடைபெறுவதைக் காணமுடியும். “கோயில் திருவிழாக்கள் நடைபெற்றன. திருவிழாவிற்கு பொதுமக்கள் பல பகுதியில் இருந்து வந்தனர். அவர்கள் செய்யும் நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் மூலம் நடைபெறும் தொழில்கள் ஆகியவை கூறப்படுகிறது”3 என்று பா இறையசரன் கோயில்கள் மூலமே திருவிழாக்கள் நடைபெறுகின்றன என்கிறார். விழாக்களைப் பொறுத்தவரையில் அரசன் முதல் ஆண்டி வரை மனமகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது எனலாம்.

    விழாக்களினால் ஏற்படும் நன்மைகள்

    1. அனைத்து மக்களும் ஒன்று கூடி உறவாட முடிகிறது.
    2. விருந்தோம்பல் பண்பு வெளிப்படல்.
    3. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வு ஒருநிலைப்படுத்தல்.
    4. விழாக்களினால் திருமணம் நிச்சயமாதல்.
    5. தெய்வங்களுக்கு வழிபாடுகள் மூலம் நேர்த்திக்கடன் செலுத்துதல்.

    ஆகியவைகள் திருவிழாக்காலங்களில் மக்களுக்கு நன்மைகளாக அமைகின்றன. மேலும், விழாக்காலங்களில் ஊரில் ஒரே இரைச்சல் நிறைந்திருக்கும் என்பதை ‘கல்லென் விழவு’ என்ற புறநானூற்றுத் தொடரால் ஏற்றுக்கொள்ளலாம். கல் என்பது ஓசையை உணர்த்தும் ஓர் இடைச்சொல்”4 என்று கண்ணப்ப முதலியார் கூறுகின்றார். இக்கட்டுரையில் சங்க இலக்கியங்களில் விழாக்கள் எவ்வாறு அமைகின்றன என்பதை இவ்வாய்வு எடுத்துரைக்க முயல்கிறது.

    சங்ககால திருவிழாக்கள்

    சங்க காலத்தில் அழகிய குடில்களையுடைய சிற்றூரில் எப்பொழுதும் விழாக்களைக் கொண்டாடி மகிழும் ஊராகத் திகழ்ந்தது என்கிறது குறுந்தொகை,

    “சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற” (குறும்.41:2)

     இங்கு சாறு என்னும் சொல் விழாவினைக் குறித்தது. சிற்றூர் மட்டும் அல்லாது பலதரப்பட்ட மக்கள் வாழுகின்ற நகரத்திலும் விழாக்களினால் மிகுந்த ஆரவாரம் உண்டானது.

    “பேர்ஊர் கொண்ட ஆர்கலி விழவின்
    செல்வாம் செல்வாம் என்றி என்று, அன்று இவன்
    நல்லோர் நல்ல பலவால் தில்ல” (குறும்.223:1-3) 

    விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால், அவ்விடத்தில் வாழுகின்ற நல்லோர்களைப் பார்க்க முடியும். அவர்களிடமிருந்து நற்சொற்களைப் பெற்று நம்முடைய வாழ்வு சிறக்க உதவும் என்கிறாள் தலைவி. பண்டைய தமிழ் மக்கள் விழாக்களை இறைவனைத் தொடர்புபடுத்தியே நடத்தி வந்தனர். ஏதேனும் ஒரு கடவுளை முன்னிறுத்தியே விழாக்கள் கொண்டாடப்பட்டன. நற்றிணையில்,

    “விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!” (நற்.19:5)

    அரும்பு முதிர்ந்த தாழை மரங்களை கொண்டு வந்து விழா நிகழும் இடத்தினை அழகுப்படுத்துவர். அத்தாழை மரங்களில் உள்ள நறுமணம் விழா நடைபெறும் களமெல்லாம் வீசும்.

    மகளிர் அலங்கரித்தல்

     விழாக்காலங்களில் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். புது ஆடை உடுத்தியும், நீர்முள்ளிச் செடியில் வெண்மையான காம்புகளையுடைய பூக்களைப் பறித்து தலைநிறையப் பூச்சூடியும் விழா நடக்கும் இடத்தினை அழகுப்படுத்துகிறார்கள். அகநானூற்றில்,

    “மீன் முள் அன்ன, வெண்கால் மா மலர்
    பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்” (அகம்.26:2-3)

    என்கிறார் ஆசிரியர். பெண்கள் அணிகின்ற தழையாடைக்கு அழகு செய்யும் விதமாக நெய்தற் பூக்களைப் பறித்து அணிந்து கொள்கின்றனர் (அகம்.70:12). ஊரில் நடைபெறும் விழாவானது எவ்வாறு சிறப்புடன் விளங்குகின்றதோ, அதுபோல் தன்னுடைய பெண்மையும் சிறப்புடையவனாக விளங்கியது என்கிறாள் தலைவி,

    “விழவு மேம்பட்ட என் நலனே” (குறும்.125:3-4)

    இப்பாடல் வரிகள் மூலம் திருவிழாக்களினால் பெண்களிடம் உண்டாகும் தன்னம்பிக்கை எடுத்தாளப்பட்டுள்ளது.

    ஒழிவில்லாத விழாக்கள்

    விழாக்கள் பகல்பொழுதில் நடைபெற்றாலும், இரவுநேரத்தில் நிலவொளியில் ஆடல் பாடல் எனப் பார்ப்பது மிகவும் இனிமையுள்ளதாக தோன்றும். நற்றிணையில்,

    “நிலவே நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பி,
    கலிகெழு மறுகின், விழவு அயரும்மே” (நற்.348:1-4)

    மகிழ்வுடன் விழா எடுக்கும் இந்நேரத்தில் நிலவின் ஒளியும், மத்தளத்தின் இசையும் (அகம்.4:14) தலைவிக்கு மிக்க காமத்தை உண்டாக்கின. தலைவன் இல்லாது இவ்விழாவில் கலந்து கொள்ளுதல் துயரத்தை ஏற்படுத்தியது. ஆகவே கணவன் மனைவி என்று கூட்டங்கூட்டமாய்த் திருவிழாவினைக் காண வந்திருந்தார்கள் என்பதை உணரமுடிகிறது. மாதம் மும்மாரிப் பொழிந்திருக்கிறது. அக்கால மக்கள் செல்வச்செழிப்புடன் வாழ்ந்திருக்கிறார்கள். பகைவர்களுக்கு அச்சத்தைத் தரக்கூடிய பழமை வாய்ந்த இவ்வூர். ஒழிவில்லாத விழாக்களை என்றும் கொண்டுள்ளது என அகநானூறு (115:1) உரைக்கின்றது.

    பங்குனி விழா

    தமிழக மக்களிடையே மிகப் பெரியதாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று பங்குனி உத்திர விழாவாகும். இவ்விழாவில் பக்தர்கள் காவடி எடுப்பதும், மொட்டைப் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதும் உண்டு. அகநானூற்றில்,

    “உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
    பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்” (அகம்.137:8-9)

    பகைவர்களை வென்று அடிக்கின்ற முரசினையும், போர் வெற்றியையும் உடையது சோழனின் உறையூர். அவ்விடத்தே காவிரிப் பேரியாற்றின் பெரிய கரையில் மணம் கமழும் சோலையில் முருகக்கடவுள் வீற்றிருக்கிறார். முருகப்பெருமானை வழிபடுவதற்கு ஏற்றதருணமாக உத்திர நட்சத்திரத்தில் நிறைமதியும் கூடிய நன்னாளில் பங்குனி உத்திர விழா நடைபெறும்.

    “பல்பொடி மஞ்ஞை வெல்கொடி உயரிய,
    ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து”
    (அகம்.149:15 – 16)

    பாண்டிய மன்னன் ஆட்சிபுரிகின்ற மதுரை மாநகரில் கொடிகள் அசைந்தாடும் வீதிகளையுடையது. அனைத்து வீடுகளிலும் மயில் தோகையினைத் தொங்கவிட்டிருப்பார்கள். இடைவிடாது நடைபெறும் விழாக்களையுடைய முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அங்கே அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை முழுவதும் முருகப்பெருமானின் வழிபாடுகளும் விழாக்களும் சொல்லப்படுகின்றன.

    இந்திர விழா

    சங்க காலத்தில் இந்திரவிழா நடைபெற்று வந்துள்ளது. அக்காலத்தில் மக்கள் நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ ஆகியவைகளையே கடவுளாக வணங்கி வந்தனர்.  ஐம்பூதங்களின் தலைவராகவும், இயற்கையின் தெய்வமாகவும் இந்திரனே விளங்கினார். மருதநிலக் கடவுள் இந்திரன் ஆவார். வருடா வருடம் இந்திரனுக்கு விழாஎடுத்து கொண்டாடி மகிழ்வது வழக்கமாகிக் கொண்டிருந்தனர். அன்றைய விழாக்களில் சிறந்ததாக இந்திரவிழா கொண்டாப்பட்டது.

    “இந்திர விழவிற் பூவின் அன்ன” (ஐங்.62:1)

    நறுமணம் மிக்க பூக்களைச் சூடிய நடன மங்கையர் ஒன்றாகச் சேர்ந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இவ்விழாவில் மக்கள்  கூட்டங்கூட்டமாய் அலைமோதுவார்கள். கடைகள், வாண வேடிக்கை எனக் களைக்கட்டும். சிலம்பில்,

    “கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித்
    தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து
    மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து” (சிலம்பு.5:144-146)

     விழாத் தொடங்குகிறது என்பதை மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பதற்காகக் கொடியேற்றுதல் மரபு. இந்திரவிழாவின் போது வச்சிரக்கோட்டத்திலிருந்தும் முரசைக் கச்சணிந்த யானையின் பிடரியின் மேல் ஏற்றி ஐராவதம் நிற்கும் கோட்டத்திற்குக் கொண்டு செல்வார்கள். விழாவின் தொடக்கம் முடிவுபற்றிய விவரங்களை முரசறைந்து தருநிலைக் கோட்டத்தில் கொடி வானளாவப் பறக்குமாறு ஏற்றப்பட்டது.

    காமன் விழா

    இளவேனிற் காலத்தில் நடக்கக்கூடிய விழாவாகும். மன்மதனே காமன் என்று அழைக்கப்படுகிறார். காமன் விழா மக்கள் இன்பமாகப் பொழுதை கழிக்கக் கொண்டாடிய ஒரு விழாவாகும். சிற்றூர்களில் மழைவேண்டி மன்மதனுக்கு விழாஎடுக்கும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளதை அறியலாம். திருமணமாகாத ஆண்களும் பெண்களும் காமனை வணங்குவதால் விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாத் தம்பதிகளுக்கு குழந்தை கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது. கலித்தொகையில்,

    “வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ” (கலி.35:14)

    நீர் நிறைந்த ஆற்றின் கரையில் குடிகொண்டிருக்கும் மன்மதனுக்குப் பரத்தையர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விழா எடுக்கின்றனர்.  அவ்விழாவில் தலைவனும் கலந்துகொண்டு தன்னுடன் உறவாட வேண்டும் என எண்ணுகிறார்கள்.

    “விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான் மன்னோ” ( கலி.30:13)

    காமனுக்கு எடுத்த விழாவில் தலைவன் பரத்தையருடன் விளையாடியதை நினைத்து வருத்தம் அடைகின்றாள்.  காமவேளுக்குச் செய்யும் விழாவில் தலைவன் இல்லாத தலைவிக்குத் தனிமைத் துயரம் துன்பத்தைக் கொடுத்தது. கலித்தொகையில்,

    “காமவேள் விழவாயின், கலங்குவள் பெரிது என” (கலி.29:24)

    என்கிறார் ஆசிரியர். “காமன் விழாவை உயர்ந்தவன் விழா, வில்லவன் விழா முதலிய பெயர்களில் கொண்டாடுவதையும், அவ்விழா இளவேனிற் காலத்தில் நடைபெற்றது”5 என்று கா.மு.பாபுஜி கூறுகின்றார்.

    கார்த்திகை விழா

    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும் பூரண திதியும் கூடிய நாளில் கொண்டாடப்படும் விழா. சிவபெருமான் திரிபுர அசுரரைக் கண்டு சிரித்து எரித்ததை நினைவூட்டும் வகையில் இவ்விழாவானது கொண்டாடப்படுகிறது. இரவு நேரங்களில் அனைத்து வீடுகளிலும் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றப்பட்டிருக்கும். எங்கும் ஒளிபரவி புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. அகநானூற்றில்,

    “அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
    மறுகுவிளக் குறுத்து மாலை நோக்கி”
    (அகம்.141:8 – 9)

    மழைபெய்து ஓய்ந்த சாயங்காலம். வானில் நிறம்மங்கி இரவை நெருங்கிற்று. மதி நிறைந்த கார்த்திகை நன்னாளில் இருள் அகன்ற வீதிகள் திருவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

    “பெருவிழா விளக்கும் போலப் பலவுடன்” (அகம்.185:11)

    கார்த்திகைத் திருநாளில் இடும் விளக்குகளைப் போல, இலவ மரங்களின் பூக்கள் பூத்திருக்கிறது. இந்நாளில் அறம் செய்வதற்கு நன்னாள். அன்றைய தினத்தில் விளக்கில் ஏற்றப்பட்ட ஒளியானது வானத்து நட்சத்திர சந்திரனின் ஒளியைவிட மிஞ்சி நிற்கும் (நற்.202:910) எனப் பாடல் அடிகள் குறிப்பிடுகிறது.

    புனல் விழா

     நீர் விழா என்றும் அழைக்கப்படுகிறது. நீர்இன்று அமையா உலகம் போல என நற்றிணை உரைக்கும். மனிதத் தேவையின் மிகவும் இன்றியமையாதன  ஒன்று தண்ணீர்தான். இவ்வுலகமானது வறண்டு விட்டால் நிலத்தில் வாழுகின்ற அனைத்து உயிரினங்களும் மண்ணில் புதைய வேண்டியதுதான். அன்றைய மக்கள் காவிரி ஆற்றில் வருகின்ற புதுப்புனலை ஆடி மகிழ்ந்தனர். ஆடிப்பெருக்கின் நாளன்று காவிரிக்கரையில் புதுத்துணி உடுத்தி புனலாடுதல் வழக்கம்.

    “மலிபுனல் பொருத மருதுஓங்கு படப்பை
    கலிகொள் சுற்றமொடு கரிகால் காண” ( அகம்.376:3-5)

    நன்றாக வளர்ந்த கதிர்களையுடையது கழார் என்னும் பகுதியாகும். அப்பகுதியில் கரிகால மன்னன் தன் சுற்றத்தாருடன் ஆரவாரம் மிக்க புனல்விழாவினைக் கண்டு மகிழ்ந்தான் என்கிறார் ஆசிரியர். அகநானூற்றில் (222:4-7) மிகுந்த அழகுப் பொலிவினையும் திரண்ட தோள்களையும் உடைய ஆட்டனத்தி என்பான் முரசொலி இடைவிடாது கேட்கும் புனல்விழாவில் நடனம் ஆடினான் என்கிறது.

    தைத்திருவிழா

    இக்காலத்தில் பொங்கல் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. உழவர்களின் அறுவடை நாள் தைத்திருவிழாவாகக் கொண்டாப்படுகிறது. “மழைப்பெய்து பூமி விளைந்து அறுவடை ஆனபின் ஆயமகளிர் விழாச் சிறப்புக்களைப் பற்றி  முன்கூட்டியே சொல்லுகிறார்கள். பொங்கல் பொங்கும்போது பெண்கள் குரவையிடுகிறார்கள். இது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் குரல் ஒலி. இது குரவைக் கூத்தின் எச்சம்”6 என்கிறார் நா.வானமாமலை. சூரிய பகவானுக்கு நெல்லும் பூவும் இட்டு, ஏர்க்கலப்பை முன்னே பொங்கல் வைத்து இறைவனை வணங்குகின்றனர்.

    “நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
    தைஇத் தண்கயம் போல” (ஐங்.84:3-4)

    என்ற ஐங்குறுநூற்று அடிகள், நறுமணம் மிக்க மலர்களை அணிந்து ஐந்து வகையில் அலங்காரம் செய்யத்தக்க கூந்தலையுடையவர்களும், விடியற்காலையில் குளிர்ந்த நீரில் தைத்திங்கள் நோன்பிற்காக  நீராடுகின்றார்கள். பாவை நோன்பிற்கும் இவ்வாறு நீராடுதல் உண்டு.  இவ்வகை நோன்பின் பயனாகப் பிரிந்துசென்ற தலைவன் மீண்டும் என்னை விரும்பி நாடி வருவான் எனத் தலைவி நம்புகிறாள். தன்னிடம் உள்ளப் பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவுகிறாள் (நற்றிணை.80:7) என்றும், தை்திருநாளில் இறைவனை வழிப்பட்டு நிற்கும் தலைவி வகைவகையாய் அணிகலன்கள் புனைந்து பொலிவுப்பெற்று   (கலித்தொகை.59:13)  விளங்கினாள்.

    முழவு விழா

     முழவு என்பது இசைக்கருவிகளில் ஒன்றாகும். விழாக்காலங்களில் மேளம் அடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடுவார்கள். முழவுக்கருவி விலங்குகளின் தோலினால் செய்யப்பட்டதும், வட்டமாகவோ சதுரமாகவோ இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும். நெருப்பில் சூடு பறக்கக் காட்டி அடிப்பார்கள். நற்றிணையில்,

    “முழவு கண் புலரா விழவுடை ஆங்கண்” (நற்.220:6)

    சிறுவர்கள் பனைமடலில் செய்யப்பட்டக் குதிரையை வீதியில் இழுத்து வருகின்றார்கள். இவ்விளையாட்டுச் செயலுக்கு முழவு அடித்து ஆடியும் பாடியும் வருகிறார்கள். திருவிழாக்களின் போது அடிக்கின்ற மேளத்திற்கு ஏற்ப ஆட்டம் ஆடுவார்கள். அவ்வாட்டத்தைப் பார்க்க மக்கள் கூட்டகூட்டமாய் அலைமோதுவார்கள். முழவு விழா என்பது தனியாக நடைபெறக்கூடியது இல்லை. விழாக்காலங்களில் முழவு இசைக்கப்படும். இந்நிகழ்வானது பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் நடைபெறும். 

    உள்ளி விழா

    கொங்கு மண்டலத்தின் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறுவது உள்ளிவிழா. கொங்கர்கள் இடுப்பில் மணிகளைக் கட்டிக்கொண்டு ஆடுகின்ற விழாவாகும்.

    “கொங்கர்கள் மணிஅரை யாத்து மறுகின் ஆடும்
    உள்ளி விழவின் அன்ன”
    ( அகம்.368:16-18)

    என்று அகநானூறு உரைக்கும். இவ்விழாவினைக் காணவந்த மக்களின் ஆரவாரம் மிகப்பெரிது.

    வில் விழா

    வெற்றிப்பெற்ற மறவனின் வில்லினை வைத்துக் கொண்டாடப்படுவது.    இற்றை நாள் போர் செய்வோம் என்று கருதி வீரத்தைக் கொண்டிருப்பவர்கள். தங்களின் வீரத்தை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்த எண்ணி தெருக்களில் தம்மில் தாம் மாறுபட்டுப் போர் செய்கிறார்கள். தம்மீது பட்ட அடியால் வடுவழுந்திய நெற்றியையும் உடையவர்கள் மறவர்கள்.

    “மள்ளர் குழிஇய விழவினானும்” (குறும்.31:1)

    என்று குறுந்தொகை கூறுகிறது. போரிலே வெற்றி கண்ட வில்லினை சிறப்பிக்கும் பொருட்டு வீரர்கள் கூடி எடுக்கும் விழாவாக அமைந்துள்ளது.

    பூந்தொடை விழா

    படைக்கலப் பயிற்சி பெற்று திரும்பிய வீரர்களை அரகேற்றும் விழாவாகும். பெரும் வீரனான தன் மகன் பயிற்சி முடிந்து வீடு திரும்புகிறான். அவனுடைய வெற்றியை இவ்வுலகம் காணட்டும் என்று தங்களின் வீடுகளில் புது வண்ணம் பூசுவர். வீட்டின் முன்னால் பரந்துபட்ட இடத்தில் மணல் பந்தலிட்டுத் துணங்கைக் கூத்தினை ஆடி மகிழ்வார்கள்.

    “வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
    பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன
    தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்” (அகம்.187:7-9)

    பயிற்சிக் காலத்தில் விற்போர், வாட்போர், குதிரையேற்றம், யானையேற்றம், மதிலைக் காத்தலும் அழித்தலும், முன்னின்று சண்டையிடுதல் போன்றவற்றைக் கற்றுத்தெளிந்து வந்துள்ள மழவர்கள் பூந்தொடை விழாவினைப் பொலிவுடன் கொண்டாடினார்கள்.

    கோடியர் விழா

    கோடியர் என்போர் கூத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பாணர்கள், கூத்தர்கள், பொருநர்கள், விரலியர்கள் என அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து விழா நிகழ்த்துகிறார்கள்.

    “கோடியர்  விழவு கொள் மூதூர் விறலி பின்றை
    முழவன் போல அகப்படத் தழீஇ,” (அகம்.352:4- 6)

    என்கிறது அகநானூறு. ஆடல் பாடல் நிகழ்த்தும் கலைஞர்கள் இணைந்து பழமையான ஓர் ஊரின்கண் விழா எடுக்கின்றனர். இவ்விழாவில் ஆடுவோர், பாடுவோர், முழவு வாசிப்போர் என அவரவர் திறனை மக்களிடையே வெளிப்படுத்துவர். விழா நேரங்களில் ஆடும் கூத்தர்கள் வெவ்வேறான ஒப்பனைகளுடன் திகழ்வார்கள் என்று புறநானூற்றுப் பாடல் அடிகள் (29:22-23) குறிப்பிடுகின்றன.

    ஓணவிழா

    பலம் வாய்ந்த அசுரரை அழித்தும், பொன்னால் செய்த மாலையை அணிந்தும், கருநிறம் உடைய திருமால் பிறந்த திருவோண நட்சத்திர நன்னாளில் ஊரிலுள்ளோர் விழா எடுப்பர். தங்களைத் திருமாலாக நினைத்து அழகுப்படுத்திக்கொண்டு நடனம் புரிவர்.

    “கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
    மாயோன் மேய ஓணநல் நாள்” (மதுரை.590-591)

    என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. திருமாலுக்கு மதுரையில் ஓணநாள் விழா நிகழ்த்தப்பெற்றது. அவ்விழாவில் யானைகளுக்குப் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது கேரள மக்கள் மட்டும் ஓணவிழாவினைக் கொண்டாடுகிறார்கள்.

    சங்க இலக்கியத்தில் விழாவைப் பற்றியக் குறிப்புகள்

    • தழையாடையை உடுத்திய தங்கைமார்கள் திருவிழாக்கள் நடைபெறும் தெருக்களில் மீன்களை விற்று வருவார்கள். (அகம்.320:3-5)
    • “விழவும் மூழ்த்தன்று, முழவும் தூங்கின்று” (நற்.320:1) – ஊரினர் நடத்திய திருவிழாவும் முடிவுற்றது. மத்தளங்களின் ஓசையும் அடங்கிவிட்டது என்று விழா முடிந்த நிகழ்வினை நற்றிணை உரைக்கிறது.
    • விழா நடைபெறுவதற்கு முன் முந்நீர் (ஆற்று நீர், கிணற்று நீர், கடல் நீர்) கொண்டு வந்து இறைவனைத் தொழுது, ( புறம்.9:10) பின் தொடங்குவார்கள்.
    • குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல நிலப்பகுதிகள் உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபட்டு விழா கொண்டாடுகின்றார்கள் என்று புறநானூறு (17:1-4) கூறுகிறது.
    • பல சிறப்புகளையுடைய பாசறையில் சிறு சோற்று விழாவினை வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். (புறம்.33:22)
    • புறப்புண்ணுக்கு நாணி சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருத்தலால் அவ்வூரில் விழாக்களே மக்கள் மறந்து போயினர். ( புறம். 65:1-4)
    • போர் தொடங்குவதற்கு முன்னும், போரில் வெற்றிப்பெற்ற பின்பும் விழா எடுப்பார்கள். (புறநானூறு.84:3-5)
    • விழாக்காலங்களில் செம்மறி ஆட்டுக்கறியை உண்ணல். (புறம்.96:6)

    விழாக்கள் பற்றியச் செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக்கிடக்கின்றன. 

    முடிவுரை

    வழிபாட்டை முன்னிறுத்தியே விழாக்கள் நடைபெறுவதால் ஆங்காங்கே சிறுமாறுபாடு அடைகின்றன. விழாக்களின் தோன்றலே மக்களின் மன மகிழ்வுதான். கடன் பெற்றாவது விழாவினை நன்முறையில் கொண்டாட வேண்டும். தன்னால் இயன்ற நாலு பேருக்காவது வயிறுநிரம்ப உணவு கொடுக்க வேண்டும்.  விழாக்காலங்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு தன்னிறைவு பெறவும், பிரிந்துசென்ற உறவுகளை மீண்டும் சந்திக்கக் கிடைக்கும் விழாவினை மக்கள் எந்நாளும் வரவேற்றுக்கொண்டிருப்பார்கள்.

    சான்றெண் விளக்கம்

    1. பா.இறையரசன், தமிழர் நாகரிக வரலாறு, பூம்பூகார் பதிப்பகம், சென்னை- 600 108, பக்.237-242
    2. கா.மு.பாபுஜி, சிலப்பதிகாரத்தில் விழாக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-108, பக்.5-6
    3. பா.இறையரசன், தமிழர் நாகரிக வரலாறு, பூம்பூகார் பதிப்பகம், சென்னை- 600 108, ப.235
    4. கண்ணப்ப முதலியார், கட்டுரைக்கொத்து, அம்மையப்பர் அகம், சென்னை -7, ப.40
    5. கா.மு.பாபுஜி, சிலப்பதிகாரத்தில் விழாக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-108, ப.51
    6. நா.வானமாமலை, தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்), NCBH, சென்னை – 98, பக்.14-15

    **********

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    தமிழாய்வுத் துறை
    எம்.ஜி.ஆர் கல்லூரி
    ஓசூர் – 635 130
    9789246983

     

     

    Share
  • கைகோள் நோக்கில் மருதத் திணையில் பரத்தமை

    -ம. ஆனந்தன்

    சங்க இலக்கியங்களில் பரத்தமை என்பது முக்கியப் பாடுபொருளாக விளங்கியது. காதலை மையப்படுத்திய அக இலக்கியங்களில் பரத்தமை தனி இடத்தைப் பெற்று இருந்தது. தொல்காப்பியர் தலைவன் தலைவியின் காதல் களவிலிருந்து கற்பில் பயணிக்கும் பொழுது பரத்தமையொழுக்கம் அவர்களது வாழ்வில் உட்புகுந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்கிறார். இதன் விளைவால் தலைவி அடையும் துன்பங்கள், ஊராரின் அலர், விருந்தோம்பல் நிகழாமை போன்ற  இன்னல்கள் தோன்றுகின்றன.

    பரத்தமை என்ற ஒழுக்கம் சங்க காலத்தில் ஆதரிக்கப்பட்ட ஒன்றாகத் திகழ்ந்தது. பரத்தையர் இற்பரத்தை, சேரிப்பரத்தை எனக் கூறப்பட்டனர். இது கூடா ஒழுக்கம் எனினும் அன்றைய மக்கள் ஏற்றுக் கொண்டொழுகினர். பிற்காலத்தில் இவ்வொழுக்கம் சாடப்பட்டது. பரத்தமை பெரும்பாலும் மருதநிலத்தில் மிகுந்து காணப்பட்டது. இதற்கு காரணம் அங்குக் காணப்பட்ட செல்வ வளம், சூழல், மக்களின் வாழ்வியல் இயல்பு போன்றவையாகும்.

    தொல்காப்பியர் குறிப்பிடும் செய்யுளியல் உறுப்புகளில் ஒன்றான கைகோளின் கற்பு வாழ்க்கையில் பரத்தமை நீங்கா இடம்பெற்றுள்ளது. அத்தகைய பரத்தமை வாழ்க்கையை எட்டுத்தொகையில் குறிப்பிடும் அக இலக்கியங்களில் மருதத்திணையில் காணலாகும் பரத்தமை வாழக்கையோடு பொருத்திக் காட்டுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

    தொல்காப்பியரின்  கைகோள்

    தொல்காப்பியத்தின் மூன்றாவது அதிகாரமாகிய பொருளதிகாரத்தின் உட்பிரிவுகளுள் எட்டாவதாக அமைவது செய்யுளியல் என்ற பகுதி. இலக்கிய மரபினைப் பற்றிய இயல் செய்யுளியலாகும். தமிழண்ணல் அவர்கள் இன்று படைப்பிலக்கியம் என்று நாம் கூறுகிறோமே அதே பொருளில்தான் தொல்காப்பியர் செய்யுள் எனும் சொல்லை ஆள்கின்றார் எனக் கூறுகிறார். அகத்திணையைப் பற்றிக் கூறி அகப்பாடலின் பொருளை உணர்த்தும் தொல்காப்பர் 14 ஆவது உறுப்பாகக் கைகோள் என்பதைக் குறிப்பிடுகிறார்.

    சோடிகளின் வாழ்வே கந்தருவ மணம் என்கிறார். எனவே வடமொழியில் கந்தருவ மணம் போன்று இங்கு ‘களவு’என்பதாகும். கைகோள் வகையில் களவு இன்னது என்பதை,

    காமப் புணர்ச்சியும் இடந்தலைப்படலும், கைகோள் என்பதற்குப் பவானந்தர் தமிழ்ச்சொல்லகராதி ஓழுக்கம் எனப் பொருள் தருகிறது. மக்களின் ஒழுக்கம் பற்றிக் கூறுவது கைகோளாகும். இதனைத் தொல்காப்பியார் களவு, கற்பு என இருவகைப்படுத்துகிறார்.

    கைகோளில் பரத்தமை

    பரத்தமை-அயன்மை, பரத்தையர்-அயலார்: களவொழுக்கம் ஒழுகி, மணஞ்செய்து கொண்டு கற்பொழுக்கம் ஒழுகும்- இல்லறம் நடத்தும் தலைவியரல்லாத பிற மகளிர் அதாவது களவொழுக்கம் ஒழுகாமலும், மணஞ்செய்து கொள்ளாமலும் காமத்திற்காக ஆடவருடன் கூடி வாழும் பெண்டிர். இவர்,

    1.காமக் கிழத்தியர்
    2.காதற் பரத்தையர்
    3.சேரிப்பரத்தையர்  என மூன்று வகைப்படுவர்.

    இன்று சமயக் கன்னிப் பெண்கள் இருப்பது போல. ஆனால் இன்பத்தை வெறுக்காமல், அதற்காகவே பண்டு மணஞ்செய்து கொள்ளாது சில பெண்கள் இருந்து வந்தனர். அவர்கள் தன்னுரிமையுடனேயே வாழ்ந்து வந்தனர். அவர்களே இம்மூவகையினரும்.

    “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
    ஐயர் யாத்தனர் கரணம் என்ப”        (கற்பு – 4)

    என்பதால், தமிழரிடை, களவொழுக்கம் ஒழுகி, கரணம் இன்றி-பலரறிய மணம் செய்து கொள்ளாது கற்பொழுக்கம் ஒழுகி இல்லறம் நடத்தி வந்த காலமும் ஒன்று இருந்து வந்தது. அதாவது ஒருவனும் ஒருத்தியும் காதல் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். திருமணம் என்பதே அன்றில்லை பின்னர் தான்  திருமணம் குலப்பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இப்பரத்தையர் களவொழுக்கமொழுகாது காம நுகர்பவர். எனவே முன்னது தூய ஒழுக்கமாகும். பின்னது தீய ஒழுக்கமாகும்.

    காமக் கிழத்தியர்

    தக்க பருவத்தே காதலுற்று முறையாகக் களவொழுக்கம் ஒழுகாமலும் மணஞ்செய்து கொள்ளாமலும் காமத்திற்காக மனைவியர்போல் இருந்து வருபவர்.

    காதற் பரத்தையர்

    இவர் தலைவனிடம் அன்பு கொண்டு இன்பந்துய்ப்பவர். ஆனால் காமக்கிழத்தியர் போலத் தலைவனோடு உடனிருந்து வாழ்க்கை நடத்தாமல் தனிவாழ்க்கை வாழ்பவர். தலைவன் குடும்பத்திற்கும் இவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பரத்தையர் என்பதே இதற்குச் சான்றாகும்.

    சேரிப் பரத்தையர்

    இவர் தமக்கென ஒருவரை வைத்துக் கொள்ளாமல் விருப்பமுள்ள போது விரும்பியவரைக் கூடி வாழ்பவர். இவர் தலைவன் மீது அன்பின்றித் தலைவன் கொடுக்கும் பொருள் மீது அன்புடையவர்.

    “ஒழுங்கங் காட்டிய குறிப்பினும்”
    “காமக் கிழத்தி மனையோள் என்றிவர்
    ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்”       (கற்பு – 5)

    என உயிரினும் ஒழுக்கமே பெரிதெனக் கொண்ட நம் முன்னையோர்க்கு இஃதொரு பேரிழுக்கே யாகும். ஒரு சில ஒழுக்கத்தை மதியாதவர்களால் உண்டான இத்தீமை தமிழினத்திற்கே ஒரு களங்கமாக விளங்கி வருகிறது.

    மருதத்திணையில் பரத்தமை

    மருதத்திணையின் திணை ஒழுக்கம் ஊடல் ஆகும். அவ்வூடலானது தோன்றுதற்கு முக்கியக் காரணம் பரத்தமையே. இதன் விளைவாகவே தலைவன், தலைவியிடையே ஊடல் மிகுந்தது.

    ஒளி இழந்த தலைவி

    புதல்வனை ஈன்ற தலைவி அதன் காரணமாகத் தான் அடைந்த முதுமை நிலையைத் தலைவன் வெறுப்பான் என ஐயமுடையவளாய் இருக்கின்றாள். அப்பொழுது தலைவன் பரத்தையரோடு தன் பொழுதினைக் கழித்து வருகின்றான். இதனைக் கேள்வியுற்ற தலைவி அவனை நோக்கி அவனது பரத்தமையை வெகுண்டு கூறுகின்றாள். இதனை,

    “பழனப் பன்மீ  னருந்த நாரை
    கழனி
    மருதின் சென்னி சேக்கு
    ………  ………         ……….   ……………
    ……..     ………         ……….    …………..
    பேஎ யனையமியாஞ் சேய் பயந்தனமே”

    ஐங்குறுநூற்றுப் பாடல் புலப்படுத்துகின்றது. ஊர்ப் பொது நிலத்தின்கண் வாழும் பல்வேறு வகை மீன்களையும் பற்றித் தின்ற நாரையானது நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ள மருதமரத்தின் உச்சியிலே தங்குவதற்கு ஏற்ற இடமான மிகுந்த நீரை உடைய பொய்கையையுடைய புது வருவாய் மிக்க ஊரனே! யாம் மகப் பெற்றுள்ளோம். ஆகவே உனக்குப் பேய் போலத் தோன்றுகிறோம். அதனால் உன்னுடைய பிற பரத்தை மகளிர் தூய்மையும் நறுமணமும் கமழுகின்றோர் போலத் தோன்றுகின்றனர். அதனால் நீ இங்கு வர வேண்டாம் அவர்களிடத்தே தங்கிக் கொள்வாயாக! என வெகுண்டு கூறுகின்றாள்.

    இதில் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தினைத் தலைவி சாடுகின்றாள். பல வகையான மீன்களை உண்ட புலவு நாற்றத்தை உடைய நாரையானது கழனி மருதின் உச்சியிலே சென்று தங்குவது போலப் பல பரத்தையரோடு கலந்து உறவாடிக் களித்த பின் நீ இப்பொழுது சிறிது இளைப்பாற என்னுடைய இல்லத்திற்கு வந்திருக்கிறாய். இழிந்த புலால் உண்ணும் நாரைக்கு உயர்ந்த மருதின் உச்சி தங்குமிடம் போல மகவை ஈன்று ஒழிந்த என் இல்லம் உனக்கு தங்கும் இடம் போல ஆயிற்று என்று தலைவனின் பரத்தமையை இடித்துரைக்கின்றாள். இப்பாடல் தலைவனின் பரத்தமையைத் தலைவி நேரடியாக அவனுக்கு உணர்த்துவதாய் அமைந்துள்ளது.

    வாளை மீனை உண்ணும் நீர்நாய்

    பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனிடம் தலைமகள் அவனது பரத்தமையை இடித்துரைக்கின்றாள். இதனை

    “அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை
    பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண்
    ………….     ………….               ………….    ……………….
    ………….      ………….               …………      ………………….
    இனிமையெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே ”

    என்ற நெடுந்தொகைப் பாடல் புலப்படுத்துகின்றது. பரல்கள் இடம்பெற்ற சிலம்பினையும் ஆம்பல் மலராகிய அழகிய மாலையினையும் அரத்தால் பிளக்கப் பெற்ற அழகிய வளைகளாற் பொலிந்த முன் கையினையும் அணிகலன் அணிந்த மூங்கிலையொத்த தோளினையும் உடைய ஐயை என்பாளுக்கு தந்தையாகியவன் மழைவளம் தரும் பெரிய வண்மையையுடைய தித்தன் ஆவான். அத்தகையவனின் நெற்குவியல்களை உடைய உறையூரிடத்தில் ஓடக்கோலும் நிலைத்து நில்லாத்தன்மையுடைய காவிரி நீர்ப்பெருக்கில், குழை முதலாகிய மாண்புறம் ஒளி பொருந்திய அணிகளையுடைய உன்னால் விரும்பப்பட்ட பரத்தையொடு வேழக் கரும்பாலாகிய வெள்ளிய தெப்பத்தினைக் கொண்டு அந்த இடத்து பூமி நாட்டாரது குளத்தினை நாடிச் சென்று விளையாடும்.

    களிறும் பிடியும் போல முக மலர்ச்சியுற்று உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மலர்மாலையின் அழகுகெட நேற்று நீ புனலாடினாய்! ஆனால் இன்று இங்கு வந்து மார்பிலுள்ள அழகிய முலையில் தேமல் தோன்றிய குற்றமற்ற கற்பினையுடைய என் புதல்வன் தாயே என்று வஞ்சனை பொருந்திய பொய்ம்மொழியினை வணங்கிப் பல முறை கூறுகின்றாய்! என்னுடைய முதுமையை இகழாதே. இந்நிலைக்கு நான் காரணமல்ல என்று கூறுகின்றாள்.

    பின்பு தீப்போலும் தாமரைப் பூக்களையுடைய நீர் மிகுதியாக உள்ள வயலில் அழகிய உட்டுளையுடைய வள்ளையின் மெல்லிய கொடிகளை உழக்கி வாளைமீன்களைத் தின்ற கூரிய பற்களையுடைய நீர் நாயானது முட்கள் பொருந்திய தண்டினையுடைய பிரம்பின் பழைய தூறுகளில் தங்கி இருக்கும். ‘மத்தி’ என்பனது ‘கழாஅர்’ என்ற ஊரினைப் போன்ற எனது இளமை கழிந்து மிகப் பழையதாயிற்று. எனவே உன் பரத்தமையை மறைக்க என்னிடம் உன் பொய்ம்மொழிகளைக் கூறாதே. எனக்கு உன் நிலை அனைத்தும் தெரியும். எனவே உனது பொய்ம்மொழிகள் எனக்கு இன்பம் செய்விக்காது அதை நீ புரிந்து கொள்வாயாக! எனக் கடிந்துரைக்கின்றாள்.

    வாளைமீனை உண்டு களிக்கும் நீர் நாயைத் தலைவனது பரத்தமைக்குச் சான்று படுத்திக் கடிந்துரைக்கின்றாள்.

    நாணமில்லாதவன்

    நெல்லரியும் வினைஞர் தம் தொழிலை விடுத்து இழிந்த கள் வண்டியில் ஆழ்ச்சியைப் போக்குவதற்குச் சிறந்த கரும்பினைச் சிதைப்பது போல நீ இல்லறக் கடமைகளைச் செய்யும் ஒழுக்கத்தினைக் கைவிட்டு இழிந்த பரத்தையின் இன்பத்தை நுகர்வதற்குப் பண்பிற் சிறந்த தலைவியை வருத்துகின்றாய் எனத் தலைவனின் பரத்தமையைச் சாடி வாயில் மறுக்கின்றாள் தோழி. இதனை,

    “எரியகைந் தன்ன தாமரை யிடையிடை
    அரிந்துகால் குவித்த செந்நெல் வினைஞர்
    கட்கொண்டு மறுகுஞ் சாகாடளற்றுறின்
    ஆய்கரும் படுக்கும் பாய் புனல் ஊர
    ஆடுகொள் வியன்களத் தார்ப்பினும் பெரிதே” 

    அகநானூற்றுப் பாடல்வழி புலவர் மிக அழகாய்ப் புலப்படுத்தியுள்ளார். நெருப்பு எரிவது போன்ற தாமரைப் பூக்களின் இடைஇடையே நெல்லரிவோர் நெல்லினை அரிந்து அரி அரியாகப் போட்டனர். உழைப்பின் களைப்புத் தெரியாமல் இருக்கவும் மகிழ்ச்சிக்காகவும் தங்களுக்குக் கள்ளினைக் கொண்டு வரும் வண்டி சேற்றில் பதிந்து கொள்ளக்கூடும் என அப்பாதைகளில் கரும்பினை அடுக்கி அதன் மீது வண்டியினை செலுத்தும் வளம் பொருந்திய ஊரனே உறுதியாக நீ மிகவும் நாணமில்லாதவனானாய்.

    ஏனெனில் பொரி போலப் புன்கம்பூ மலரும்; அகன்ற நீர்த்துறை பொலிவு பெற ஒளி பொருந்திய நெற்றியினையும் நல்ல நறுமணம் வீசும் மலர்களைச் சூட்டிய பார்ப்பவர்க்கு இனிமை பயக்கும் கூந்தலையும் மாவடு போன்ற கண்ணினையும், முத்துவடம் அசையும் அழகிய முலையினையும் நுண்ணிய அழகின் நலத்தையும் உடைய ஒரு பரத்தையோடு நேற்று இடையூறு இல்லாமல் செல்லும் புனலில் நீ விளையாடினாய் எனப் பலர் கூறினர். ஆனால் அதை நாங்கள் பொய்யென புறத்தே மறைத்தோம். எனினும் எங்கள் செயலினையும் கடந்து அச்செயல் அலரானது.

    அது எத்தகு தன்மையுடையது என்றால், மலர்ந்த பூமாலையினையும் தலையில் மை அணிந்த யானையையும் உடைய மறம் பொருந்திய போரில் வல்ல பாண்டியனது என்றும் நீங்காத விழவினையுடைய போர்க்களத்தில் தம்முள் ஒருங்கே இயைந்து எழுந்த சோழ,சேரர்களது கடல் போன்ற பெரிய படைகளைக் கலக்கும் பரிசு தாக்கி ஒலிக்கும் ஒலியினையுடைய முரசு ஒழிந்து கிடைக்க, அவர் பறந்து ஓடும் புறக் கொடையைக் கண்ட நாளில் வெற்றி கொண்ட பெரிய களத்தின் கண் எழுந்த ஆரவாரத்தினை விடப் பெரியதாக இருந்தது. அவ்வாறு பேரலர் தோன்றும் அளவிற்கு உனது புறத்தொழுக்கம் அமையலாயிற்று. எனவே நீ நாணமில்லாதவனானாய் எனத் தலைவனின் பரத்தமையின் இயல்பைத் தோழி கூறி வாயில் மறுக்கின்றாள்.

    இந்நிலையை நோக்கும்போது அன்றைய காலகட்டச் சமுதாயச் சூழல் புலனாகின்றது. செல்வ வளத்தின் காரணமாக ஆடவர்கள் தீயொழுக்கம் புரியத் தலைப்பட்டனர். அத் தீய பண்பு நலனின் வெளிப்பாடு பிறர் அறிய நிகழ்ந்துள்ளது என்பதைப் பழம் பாடல்கள் பதிவு செய்துள்ளன.

    கூடிக் களிக்கும் கொழுநன் மார்பு

    தலைவி தன்னைப் பற்றி இழிவாகப் பேசக் கேட்ட பரத்தை அவளது தலைவனின் நிலையைக் கூறி நகையாடுகின்றாள். அதனை குறுந்தொகைப் பாடல் பதிவு செய்கின்றது.

    “கூந்தல் ஆம்பன் முழுநெறி யடைச்சிப்
    பெரும்புனல்
    வந்த இருந்துறை விரும்பி
    …………         …………..          …………..      ………….
    முனையான் பெருநிரை போலக்
    கிளையொடு காக்கதன் கொழுநன் மார்பே”

    பரத்தைத் தலைவியின் இயலாமையைக் கூறி அவளது தலைவனைத் தம்மிடமிருந்து காக்கும் தன்மை அவளுக்கு இல்லை. எனவே அவள் என்னைப் புறங்கூற எந்தத் தகுதியும் இல்லை என்று எள்ளுவது போன்று இப்பாடல் அமைந்துள்ளது.

    கூந்தலில் ஆம்பலின் முழுநெறிப்புள்ள அறுப்பினைச் செருகிக் கொண்டு மிகுந்த நீர்வளம் பொருந்திய நீர்த்துறையை விரும்பி நானும் தலைவனும் நீர் விளையாட்டைச் செய்வதற்காக செல்வோம். தலைவி தான் அவ்விளையாட்டை அஞ்சுதலைக் கொண்டாளாயின், கொடிய போரில் தூசிப்படை அழியும்படி, மேலேறிச் செல்லும் பல வேல்களை உடைய ‘எழினி’ என்பவனின் போர்க்களத்திடத்தில் விளங்கும் பெரிய மன்னர்திரளைப் போல, அவளது சுற்றத்தாரோடு சேர்ந்து எம்மோடு கூடிக்களிக்கும் அவளது கொழுநன் மார்பைக் காப்பாளாக! எனக் கூறுகின்றாள்.

    தொல்காப்பியக் கைகோளில் பரத்தமையானது களவொழுக்கம் ஒழுகாது, திருமணம் செய்து கொள்ளாமலும் காமத்திற்காக ஆடவருடன் கூடி வாழும் பெண்கள் என்று கூறப்படுகிறது. அதே போல் சங்க இலக்கிய மருதத்திணையில் தலைவன் கற்பு வாழ்க்கையில் மனைவியை விடுத்து பரத்தையுடன் சில நாள் தங்கி மகிழ்கிறான். இத்தகு பரத்தமை ஒழுக்கத்தை வெறுத்து ஊடல் கொள்கிறாள் தலைவி. மருதத்திணைக்குரிய உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பதை தலைவியின் ஊடலுக்குத் தலைவனின் பரத்தமை ஒழுக்கமே காரணம் என்பதை இதன் மூலம் அறியலாம். இவ்வாறு மருதத்திணைப் பாடல்களில் பரத்தமை ஒழுக்கம் பெரிதும் குறிக்கப்படுகிறது.

    *****

    துணை நூல்கள்

    தொல்காப்பியம் – இளம்பூரணர் உரை
    தொல்காப்பியம் – தமிழண்ணல் உரை
    நற்றிணை    – நியூ செஞ்சுரி வெளியீடு
    குறுந்தொகை  – நியூ செஞ்சுரி வெளியீடு
    ஐங்குறுநூறு  – நியூ செஞ்சுரி வெளியீடு
    அகநானூறு  – நியூ செஞ்சுரி வெளியீடு
    கலித்தொகை – நியூ செஞ்சுரி வெளியீடு
    சங்க காலப் பெண்மை – பதிப்பு முனைவர் அன்னிதாமசு
    தொல்காப்பியர் காலத் தமிழர் – புலவர் குழந்தை
    சங்கத் தமிழர் வாழ்வியல் – மு.சண்முகம் பிள்ளை,உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
    சங்க மரபு – தமிழண்ணல்

    *****

    கட்டுரையாளர் – முனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை,
    பாரதியார் பல்கலைக்கழகம்,
    கோயம்புத்தூர்-46.

     

     

    Share
  • சிற்றிலக்கியச் சமுதாய வாழ்வியல் மதிப்புகள்

    -முனைவர் நா.கவிதா

    இல்வாழ்க்கையில் தனிமனித நிலை, குடும்ப நிலை, உறவினர் நிலை, சமூக உறுப்பினர் நிலை, குடிமக்கள் நிலை என்னும் தளங்களில் மனிதர்கள் பாதுகாக்க வேண்டிய, ஆற் வேண்டிய பணிகள் போற்றத்தகுந்த பண்புகள் எனப் பன்முகக் கூறுகளை ஒழுங்குற வகைப்படுத்தினால் அவை வாழ்வியல் மதிப்புகள் ஆகும். இத்தகைய சமுதாய வாழ்வியல் மதிப்புகள் சிற்றிலக்கியக் காலகட்டத்தில் எத்தன்மையுடன் திகழ்ந்தன என்பனவற்றை ஆராய்வதாக இவ் ஆய்வு அமைந்துள்ளது.

    சமுதாய வாழ்வியல் மதிப்புகள் விளக்கம்

    உலகில் தோன்றும் ஒவ்வொரு மொழி இலக்கியமும் வாழ்க்கை மதிப்புகளை எடுத்துரைப்பதை முதன்மை நோக்கமாகக் கருதுகின்றது.

    வாழ்வியல் என்பதற்கு விளக்கம் தருகையில், “வாழ்வியல் என்பதில் ‘வாழ்வு’ என்பதன் பொருள் முறைமை, வாழ்தல் என்பதாகும். ‘இயல்’ என்பதற்கு ‘ஒழுங்கு’ என்று பொருள். வாழ்வு + இயல் = வாழ்வியல். முறையான ஒழுங்கினைக் கடைப்பிடித்து வாழும் வாழ்க்கை முறை வாழ்வியல் ஆகும்.”1 என்று கூறுவர்.

    மேலும் சமுதாய வாழ்வியல் மதிப்புகளே வாழ்வியல் நெறிகளாக மலர்கின்றன என்று கூறுவதை, “முறையான சமுதாய வாழ்க்கைக்குப் பயன்படுகின்ற பண்புகளே சமுதாய மதிப்புகள் (Social Values) எனப்படுகின்றன. இவையே சமுதாய ஒழுங்கு முறையினை உருவாக்கும் வாழ்வியல் நெறிகளாகின்றன; சமுதாயத்தின் குறிக்கோளை வகுத்துத் தந்து, மக்கள் நடத்தைக்கு வழிகாட்டுகன்றன.”2 என்பது சமூகவியலார் கருத்து.

    உடன்பாட்டு, எதிர்மறை வாழ்வியற் மதிப்புகள்

    சமுதாயவியல் அணுகுமுறையில் அதிகக் கவனத்தைப் பெறுவது சமுதாய வாழ்வியல் மதிப்புகள் சார்ந்தது ஆகும். இது “சமுதாய உறவுகளின் பிணைப்பிலே, சமுதாய நடப்பின் காரணமாகத் தோன்றுகிற சமுதாய உணர்வு வடிவங்களிலே ஒன்று”3 என தி.சு.நடராஜன் வரையறை செய்கின்றார். இவர் சமுதாய வாழ்வியல் மதிப்புகளைப் பின்வருமாறு பகுத்துக் கூறுகின்றார்.

    சமுதாய மதிப்புகள் (Social Values)

    உடன்பாட்டு மதிப்புகள்        எதிர்மறை மதிப்புகள்

    (Positive Values)                                (Nagative Values)

    காதல், கற்பு, தாய்மை, பாசம், புகழ்,          பொய்ம்மை, தீமை, பாவம், பக்தி, கொடை போன்றவை.                    குடிப்பழக்கம், லஞ்சம், பித்தலாட்டம்
    போன்றவை.”4

    சிற்றிலக்கிய காலச் சமுதாயத்திலும் இவ்விருவகை மதிப்புகளும் வழக்கில் இருந்தன என்பதனைச் சிற்றிலக்கிய கால கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களை ஆராய்வதால் அறியமுடிகிறது. இவ்விரு வகையானவற்றுள் உடன்பாட்டு மதிப்புகள் போற்றப்பட வேண்டியவை, எதிர்மறை மதிப்புகள் மாற்றப்பட வேண்டியன.

    உடன்பாட்டு மதிப்புகள் என்ற பிரிவினில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம், தானம் வழங்கும் நெறி, நிலையாமை நெறியை அறிவதால் கிடைக்கலாகும் புகழ், பக்தியுணர்வு ஆகியவற்றை அடக்கலாம்.

    எதிர்மறை மதிப்புகள் என்ற பிரிவினில் கள் குடிக்கும் வழக்கம், பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் வசிய மருந்திடும் முறை ஆகியவற்றை அடக்கலாம்.

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம்

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை உலகிற்குப் பறைசாற்றியது தமிழகம் எனலாம். ஒழுக்கத்தை உயிருக்கும் மேலாகக் கற்பித்தார் திருவள்ளுவர். அவர்தம் பார்வையில் கல்விக்கு இரண்டாம் இடம்; ஒழுக்கத்திற்கே முதலிடம். ஆக ஒழுக்கமாக வாழும் வாழ்க்கையே தவம். ஒழுக்கம்கெட்டு வாழும் வாழ்க்கையே சவத்திற்கு ஒப்பானது என்று கூறலாம். இவ்விடத்தில் கலாசாரம் குறித்துக் கூறும் இலக்கணம் குறிப்பிடத்தக்கது.

    “கலாசாரம் என்பது இடங்கள், எண்ணங்கள், நம்பிக்கைகள், சுய அடையாளங்கள், சமூக அடையாளங்கள், மொழி, இலக்கியம், கலை மற்றவர்களுடன் பழகும் முறைகள், குடும்ப அமைப்புகள், கட்டுப்பாடுகள் என வாழ்க்கையின் பல அம்சங்களை உள்ளடக்கியது. கலாசாரம் காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் வேறுபடும்.”5 என்று கூறுவர். இத்தகைய பண்பாடு சமூகத்தின் அடையாளமாகும். சிற்றிலக்கிய காலச் சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் ஏற்புடைய ஒன்று என்றாலும் ஒருத்திக்கு ஒருவன் என்பதுவே வழக்கில் இருந்தது.

    திருக்குற்றாலக் குறவஞ்சியில் குறவர்களின் வாயிலாக அவர்களின் குலமரபு குறித்த கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாம். குறவர்கள் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழும் மக்கள் என்பதை,

    “உறவு பிடித்தாலும் விடோம் குறவர் குலம் நாங்கள்” (திருக்குற்றாலக் குறவஞ்சி, செ.எ., 7)

    என்ற அடிகள் வாயிலாக அறியலாம். இதிலிருந்து குறவர் குலத்தில் ஒருவரை வாழ்க்கைத் துணை உறவாகப் பிடித்துக் கொண்டனர் என்றால் எந்நாளும் அந்த உறவை கைவிடாத ஒழுக்கம் உண்டு என்பதை அறிய முடிகின்றது.

    ஆனால் இக் கலாசாரம் காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் வேறுபடும் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி ஏற்பட்ட காலத்தில் ஆட்சி செய்த மன்னர்தம் கலாசாரம் மக்களுக்கும் பரவியது என்று கூறலாம். அதனில் ஒன்றே பலதார மணம்.  ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் பின்பற்றப்பட்டு வாழ்ந்த தமிழ் மக்களிடையே மன்னனைப்போன்று பலதார மணம் பின்பற்றப்பட்டது. இதனைப் பின்வரும் கூற்றினால் அறியலாம்.

          “மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி” என்பதற்கு ஒப்ப நாயக்கர் கால ஆண்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைப் பெற்றிருந்தனர். அத்துடன் உயர்வர்க்கத்தவரிடையே பலதார மணம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.”6 என்ற கூற்று கலாசார மாற்றத்தை இயம்புகிறது.

    தானம் வழங்கும் நெறி

    தானம் வழங்குவதின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்காத இலக்கியங்களே என்று கூறலாம். அத்தகைய தானத்தை எவ்வாறு, எத்தகைய நெறியுடன் வழங்க வேண்டும் என்பதை தைத்திரிய உபநிஷதம்,

    “ச்ரத்தயா தேயம்! அச்ரத்தயா தேயம்! ச்ரியா தேயம்!
    ஹ்ரியா தேயம்!
    பியா தேயம்! ஸம்விலிதா தேசம்”
    7

    என்ற சுலோகத்தில் கூறுகின்றது. இதில், வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்தல் வேண்டும். அத்துடன் பணிவுடனும், தகுந்த அறிவுடனும் தானம் செய்வதே சாலச் சிறந்தது என்று தானம் குறித்துச் சுட்டப்பட்டுள்ளது. தானம் வழங்குதல் பற்றி முக்கூடற்பள்ளு, செய்தக்காதி நொண்டிநாடகம், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நூல்கள் குறிப்பிட்டுள்ளன. முக்கூடற்பள்ளுவில் பண்ணைக்காரனிடம் வடிவழகக் குடும்பன் தானமாக அளந்த நெல்லின் கணக்கு வகைகளை,

    “ஆடித் திரு நாளுக்கு நெல்
    ஆறாயிரங் கோட்டை நெட்டைத்
    தாடிப்பிச்சன் நேருஞ் சம்பா
    நெல் அளந்தேன்.
    வருபங் குனித் திருநாட்படி
    வகைக் காயிரம் கோட்டை சின்னத்
    திருவன் பயிரிடும் புள்ளியில்
    செந்தாழை நெல் அளந்தேன்.” (முக்கூடற்பள்ளு, செ.எ.,143)

    என்று குறிப்பிடுவதன் வாயிலாக அறியலாம். மேலும், ஆடித் திருநாளுக்குச் சம்பா நெல்லும், பங்குனித் திருநாளுக்கு செந்தாழை நெல்லும் அளந்து கொடுத்த வழக்கையே அறிய இயலுகின்றது.

    செய்தக்காதி நொண்டி நாடகத்தில் வள்ளல் செய்தக்காதியின் கொடை வளத்தை,
    “சங்கநிதி பதுமநிதி போல் நிதிவாரிச்
    சடையாமலிரு கையுங் கொண்ட கொடுக்க
    தருப்போற் கொடை கொடுக்கும் வட்டாவுந்
    தாம்பூல முந்துகிலந் தாங்கி நிற்க
    விருப்பொடு முத்துரத்தினப் பரீட்சையர்
    மேன்மை யொடு தானிருக்க” (செய்தக்காதி நொண்டி நாடகம், செ.எ.,190) என்ற பாடலடிகள் சுட்டுகின்றன.

    புகழ்பெறும் முறை

    சமயங்கள் எவ்வாறு தங்கள் கருத்தை வலியுறுத்தி இறைவனை நோக்கி மக்களை அழைத்துச் செல்கின்றனவோ, அதனைப் போன்றே அறஇலக்கியங்களும் நிலையாமைக் கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களுக்கு நல்வாழ்க்கை நெறியைக் கற்றுத் தருகின்றன. இவ்வுலகில் காணப்படும் செல்வம், இளமை, யாக்கை போன்றவை நிலையற்றவை என்று எடுத்துரைக்காத அறஇலக்கியங்களே இல்லை. குமரேச சதகம் இவ்வுலகில் எவை எவை நிலையற்றன என்று வரையறுத்துள்ளது. ஆநிரையும், வீடும், மனைவியும், உறவினரும், மக்களும், செல்வமும், அணிகலன்களும் கனவைப் போலவே மாறிவிடும் நிலையற்ற தன்மையுடையது. ஆகவே நிலையாமை நெறியினை உணர்ந்து வாழும் காலத்தே அறச் செயலைப் புரிதல் வேண்டும் என்று வழிகாட்டுகின்றது. இக்கருத்தினை,

    “மாடுமனை பாரிசனம் மக்கள்நிதி பூடணமும்
    மருவுகன வாகும் அன்றோ”
    (குமரேச சதகம், செ.எ.,73)

    என்ற வரிகளில் அறியலாம். இந்நெறியினை அறிந்து வாழ்வில் பின்பற்றினால் புகழ் என்ற உடன்பாட்டு மதிப்பு கிடைப்பது திண்ணம்.

    கள் குடிக்கும் பழக்கம்

    மக்கள் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் பழக்கங்கள் வழக்கங்களாக அமைந்துவிடுகின்றன என்று கூறுவர். அவ்வகையில் கள் குடிக்கும் வழக்கம் அன்றிலிருந்து இன்று வரையிலும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. என்றாலும் அது எதிர்மறை மதிப்பாகவே விளங்கியது. கள்ளுண்ணுதல் குறித்துப் பதிவு செய்யாத சங்க இலக்கியங்களே இல்லை என்று கூறலாம். தெளியுங் கள்ளையும், நறவையும் உண்ட நபர்களுடைய உலகியல் கெட்ட மயக்கம் போல காணப்படுகின்றது என்று கூறுவதை,

    “தேறுகள் நறவுண்டார் மயக்கம் போற் காமம்”      (கலித்தொகை – நெய்தல் கலி-30:2)

    என்ற அடியின் மூலம் காணலாம். இவ்வாறே கள் குடிக்கும் வழக்கத்தினை சிற்றிலக்கியங்களில் முக்கூடற்பள்ளு, செய்தக்காதி நொண்டி நாடகம், நந்தனார் சரித்திரம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன. முக்கூடற்பள்ளில் இடம்பெறும் பள்ளர்கள் தங்களது உழைப்பினால் விளைந்த நெல்லினைக் கண்ட மனமகிழ்ச்சியால் மிகுதியான மதுவைக் குடித்து மயக்கத்துடன் காணப்படுகின்றனர். அத்துடன் பெண்களும் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை,

    “வடிக்கும் மதுவைக் குடிக்கும் ஆசை
    மயக்கமும் பெருந் தியக்கமும்
    வரம்பிற் பாய்ந்து பரம்பிற் சாய்ந்த
    வாட்டமும் முகக் கோட்டமும்”
    (முக்கூடற்பள்ளு, செ.எ., 130)

    என்றும்,

    “பெண்பிள்ளை ஆண்டே – பொல்லாத்
    தண்ணீர் குடித்த வெறியால்
    முதற் சொன்னேன் ஆண்டே
    கால் மரம் வெட்டி விடுவிக்க
    வேணுங்கான் ஆண்டே” (முக்கூடற்பள்ளு, செ.எ., 107)

    என்றும் குறிப்பிடுவதிலிருந்து முறையே பள்ளர்கள் மது அருந்தி மயங்கிய விதத்தையும், ஆண்டையிடம் மூத்தபள்ளி கள்ளுண்ட வெறியிலே பள்ளனைக் காவலில் வைக்குமாறு கூறிவிட்டேன் விடுவிக்க வேணும் என்று முறையிடுவதையும் அறியலாம். மனமகிழ்வு மற்றும் துயர காலங்களில் கள் அருந்திய சூழலை மேற்கூறிய கருத்துக்களில் இருந்து அறியலாம்.

    செய்தக்காதி நொண்டி நாடகத்தில் இடம்பெறும் ஒடுங்காப்புலியை சுலூபுகான் கூடாரத்தில் உள்ள துலுக்கர்கள் வரவேற்று கஞ்சாத் தண்ணீர் தருகின்றனர். அதனை மறுக்காமல் இஸ்லாமிய மார்க்க நெறியைக்கூறிக் கொண்டே ஒடுங்காபுலி அருந்துகிறான். இதனை,

    “கடைபடு கஞ்சாத் தண்ணீர் பாத்திரத்திற்
    கட்டளையிட்டார் பிரமன் கட்டளையன்றே
    யிடையூறு பேசாமல் மண்டிபோட
    டிருந்து பிசுமிச் சொல்லி யருந்தினேன்”                          (செய்திக்காதி நொண்டி நாடகம், செ.எ., 96) என்னும் வரிகளால் அறியலாம்.

    வசிய மருந்திடுதல்

    பொதுவாக மருந்து என்பது ஓர் உயிரினத்திற்கு ஏற்பட்ட நோயை அல்லது உடற்கேட்டைத் தீர்க்கவோ தணிக்கவோ பயன்படும் பொருள். ஆனால், வசிய மருந்து கொண்டு விலங்குகளையும் தன் வசியமாக்கலாம் என்பர். கருவூரார் எனும் சித்தர் இயற்றிய ‘கருவூரார் பலதிரட்டு’ என்ற நூலில் மிருகங்களை வசமாக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. வெண்குன்றி மூலிகை எடுத்து, ‘வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்’ என்ற மந்திரத்தை கூறி மூலிகை வேரை வாயில் போட்டு, எந்த மிருகத்தை அழைக்கிறோமா அது வசியமாகும் என்று கருவூரார் சுட்டுகிறார். இதனை,

    “பாரப்பா வேண்குன்றி மூலம் வாங்க
    நேரப்பா மந்திரத்தான் வம்வம் வசிவசி
    நிறைமிருக வசீகரி ஓமென்று போற்றி
    வேரப்பா பிடுங்கி யதைவா யிலிட்டு
    பேசவே மிருக வசீகரங் காணும்”8 

    என்ற பாடலடி சுட்டும். இவ்வாறு பண்டை காலம் தொட்டே தமிழர்களிடம் வசிய மருந்தினைப் பயன்படுத்தும் முறைமை இருந்ததை அறியலாம். எவ்வாறு விலங்குகளையும் வசியப்படுத்தலாம் என்று கூறினார்களோ அதனைப் போல மனிதர்களையும் வசியமிட்டு, தவறான ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்த பாங்கினை சிற்றிலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. முக்கூடற்பள்ளு, குற்றாலக் குறவஞ்சி, செய்தக்காதி நொண்டி நாடகம் போன்ற நூல்கள் வசிய மருந்திடும் முறையைப் பதிவு செய்துள்ளன. முக்கூடற்பள்ளில் மூத்தபள்ளி மாடு குத்திய வடிவழகக் குடும்பனைக் காண வரும்போது இவ்வாறு நடக்கக் காரணம் இளையபள்ளி உனக்கு வைத்த கீழான வசிய மருந்தே என்று கூறுகிறாள். இதனை,

    “……………………………………………………………………………
    …………………… மருதூர்ச்
    சக்களத்தி புலைமருந்தின் வெறியோ
    முதலேயீ தார் விளைத்த இடும்போ – தெரிந்திலேன்
    முக்கூடல் அழகர் பண்ணைக் குடும்பா”
    (முக்கூடற்பள்ளு, செ.எ., 118) எனக் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

    திருக்குற்றாலக் குறவஞ்சியில் வசிய மருந்துடன், வேறுசில மருந்துகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சிங்கியைத் தேடிவரும் சிங்கன், தன்னுடன் வந்திருக்கும் நூவனிடம் சிங்கி இருக்கும் இடத்தைக் கூறினால் உனக்கு வாடை மருந்துப் பொடி, அம்மியிலேறி ஊர்ந்து வரும் மரப்பாவையுங்கூடப் பின்தொடர்ந்து வரச் செய்யும் மாயப்பொடி, பிரிந்தவர் கூடியிருக்குமாறு செய்யும் மருந்து, பிரியாமல் கூடி இருப்பவரைக் கலைப்பதற்கான மருந்து, இத்துடன் பொட்டிட்டு வசீகரம் செய்யும் முறையையும் உனக்கு கற்றுத் தருவேன் என்று கூறுகிறான். இதனை,

    “வாடை மருந்துப் பொடியும் அம்மியூர்
    மரப்பாவை பின்தொடர மாயப்பொடியும்
    கூடியிருக்க மருந்தும் இருபொழுதும்
    …………………….
    கூடியிருப்பார்களைக் கலைக்க மருந்தும் …………
    திலக வசீகரம் செய்வேன் …………………
    சிங்கிதனைக் காட்டாய் ஐயே!”
    (திருக்குற்றாலக்குறவஞ்சி, செ.எ., 36) என்னும் பாடலால் அறியலாம்.

    செய்தக்காதி நொண்டி நாடகத்தில் வேசியர்கள் பொருள் பறிப்பதற்காக ஒடுங்காப்புலிக்கு மருந்துப் பொருள்களைக் கலந்துதரும் செய்தி காணப்படுகின்றது. இன்றும் வெற்றிலை, பால், உணவு முதலியவற்றில் மருந்தைக் கலந்துதரும் வழக்கம் நாட்டுப்புறங்களில் காணப்படுகின்றது. இந்த நாட்டுப்புற வழக்கத்தின் தாக்கமே நொண்டி நாடகத்தில் வேசியர் மருந்திட்டனர் என்று கூறுவதற்கு வழி வகுத்தது எனலாம். வசிய மருந்தினை தரும் முறையுடன், அதனை உட்கொண்டதால் உண்டாகிய விளைவையும்,

    “கைவேர்வையும் மருந்தும் பல
    காரத்துடன் கூட்டிச் சேரத் தந்தாள்
    தந்தட ருத்தா லே மித்
    தள்ளாடித் தள்ளாடி யுள்ளாகிச்
    சிந்தை தடுமா றியொட்டுச்
    சிட்டு போல் நானகப் பட்டுக் கொண்டேன்” (செய்தக்காதி நொண்டி நாடகம், செ.எ., 33)

    எனச் சுட்டுவதிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் பள்ளர்கள், குறவர்கள், திருடர்கள் வாழ்க்கையில் வசிய மருந்தினை பயன்படுத்தியுள்ளதை உணர இயலுகின்றது. சமுதாய வாழ்வியல் மதிப்புகளில் எதிர்மறை மதிப்பினைத் தருவதாக வசிய மருந்திடும் முறைமை திகழ்கின்றன. சிற்றிலக்கிய காலச் சமூகம் இம்முறையை வரவேற்கும் ஒரு பிரிவாக விளங்கியுள்ளமையையும் அறிய இயலுகின்றது.

    *****

    குறிப்புகள்

    1. நா.கதிரைவேற்பிள்ளை, தமிழ் மொழி அகராதி, ப.14.
    2. N.Shankar Rao, Sociogy, P.469.
    3. தி.சு.நடராசன், திறனாய்வுக்கலை, ப.63.
    4. மே.நூ., ப.55.
    5. http:// tawp.in தமிழ் விக்கிப்பீடியா, கலாச்சாரம், ப.2.
    6. Rajayyan, History of Tamilnadu, P.68.
    7. kadampavanpoonga.com, கடம்பவன பூங்கா, தானத்தில் சிறந்த தானம், ப.4.
    8. keetru.com, கருவூரார், கருவூரார் பாடல் திரட்டு, ப.9.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
    சிவகாசி

     

    Share
  • நோய்மையின் உளவியல்

    -செ. செல்வி     

    “மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா எண்ணிய மூன்று”
    -திருக்குறள்

    மருத்துவ அறிஞர்கள் கூறிய வாதம், பித்தம் சிலேட்டுமம் இவை கூடினாலே குறைந்தாலோ நாம் நோய் என்கிற துன்பத்திற்கு ஆளாகிவிடுகிறோம் என்பது நோய் குறித்த வள்ளுவரின் கூற்று.

    மனிதனுக்கு நேரும் சிக்கல்களிலே அவன் பெரிதும் அஞ்சுவது நோய்க்குத்தான்.  நோயில்லாமல் எந்த ஒரு மனிதனும் வாழமுடிவதில்லை.  ஏதாவது ஒருவகையில் மனிதமனம் நோயுற்றிருப்பதாகவே கற்பனைசெய்து கொண்டு நலிவடைந்து அதனை எதிர்கொள்ள தயங்கிக்கொண்டே இருக்கிறது.

    இப்படிப்பட்ட நோய்மையை, நோயுற்றவர்களை அவர்களின் உளவியலை எஸ்.ராமகிருஷ்ணன் தன் ‘துயில்’ என்ற நாவலின் வழி விரிவாக எடுத்துரைக்கின்றார்.  நோய்மையை இதுவரை இந்த அளவிற்கு உற்றுநோக்கி விரிவாகப் பேசியிருப்பவர் இவராகத்தான் இருக்கமுடியும் என்பதில் ஐயமில்லை.

    ‘துயில்’ என்ற நாவலில் ‘தெக்கோடு’ தேவாலயத் திருவிழாவிற்காக துயில்தரு மாதாவை தரிசிக்க பல்வேறு திசைகளிலிருந்து பலர் வந்துகொண்டிருக்கிறார்கள். நோயாளிகள் தத்தம் இடங்களிலிருந்து கால்நடையாகவே நடந்து திருவிழாவிற்கு வந்து சேர்ந்தால் அவர்களின் தீர்க்கமுடியாத பிணிகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். அவ்வாறு வந்துசேரும் நோயாளிகள் இடையில் தங்கிச்செல்லும் இடமாகவும், ஆரோக்கியம் நல்கும் இடமாகவும் விளங்குவது ‘எட்டூர்மண்டபம்’ என்னும் இடமாகும். அங்கே சேவையாற்றும் ‘கொண்டலு அக்கா’ என்பவர் அன்னை தெரசாவை நினைவூட்டும் வகையில் நோயாளிகளிடம் பரிவும், பாசமும், சேவையும் ஆற்றும் தொண்டுள்ளம் கொண்டவராக விளங்குகிறார்.  அவர் ஒரு மருத்துவரல்லர், மருந்து மாத்திரைகள் நோயைத் தணிப்பதை விட மனத்திற்கு ஆறுதல் சொல்வதுதான் நோய் தீர்க்கும் ரகசியம் என்பதை அறிந்துவைத்திருக்கும் சமுதாய மருத்துவராக விளங்குகிறார்.  நோயாளிகளின் உளவியலை, ஏக்கங்களை, தேவைகளை இவர் வாயிலாகவே நமக்கு உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

    அதைப்போலவே நோய்மை என்பதை வெறும் பாசமும், பரிவும், மதமும் மட்டுமே சீராக்கி விடாது. அதோடு சரியான சிகிச்சையும் தேவை என்பதை உணர்த்தவே படைக்கப்பட்ட பாத்திரம் ‘ஏலன்பவர்’ என்ற மருத்தவருடையது. அயல்நாட்டிலிருந்த ஞானத்தந்தை லகோம்பாவில் சேவை செய்வதில் மிகுந்த ஆர்வமுள்ள ‘ஏலன்பவர்’ மருத்துவப்பணி செய்வதற்காக தெக்கோட்டிற்கு அனுப்பப்படுகிறார்.  இவ்விருவரின் பாத்திரத்தின்வழி நோயாளிகளின் உளவியல் மருத்துவத்தின் முக்கியத்துவம், மதத்தின் தலையீடு, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை விளக்க முற்படுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

    நமது பிறப்பே ஒரு நோய்மைதான், பின் எப்படி நோய்மையில்லாத மனிதர்கள் இருக்க முடியும்? நோய்மை தவறானதில்லை. அதைக்கொண்டு நாம் பயம் கொள்வதுதான் தவறு.  நோய்மை எல்லா மனிதர்களின் வயதையும் கரைத்துவிடுகிறது. நோய்மையின்போது அவனுக்குள் இருந்து ஒரு சிறுவனோ, சிறுமியோ வெளிப்பட்டுவிடுகிறாள்.  அந்த பால்ய பருவம் பிடிவாதமானது, வலி தாங்கமுடியாமல் புலம்பக்கூடியது. உலகைக் கண்டு பயப்படக்கூடியது, நோயுற்றிருக்கையில் மனம் இடைவிடாமல் எதை எதையோ நினைத்துக்; கொண்டேயிருக்கிறது.  தறியில் ஒடும் ஓட்டத்தைப்போல மனது சதா பயத்தை நெசவுசெய்ய ஆரம்பிக்கின்றது.

    நாம் நோய்மையுறும்போது அதைப்பற்றி அடுத்தவரோடு பேச விரும்புகிறோம், ஆனால் நோயுற்றவரின் பேச்சை யாருமே செவிகொடுத்துக் கேட்க தயாராக இல்லை, அதனால்தான் நோயாளிகள் தனக்குத் தானே பேசிக்கொள்ளத் துவங்குகிறார்கள்.  தன்னோடு பேசிக்கொள்ளாத நோயாளி எவருமே இருக்க முடியாது. நோய்மையின் வலியை, வேதனையை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது அது உலர்ந்துபோகத் துவங்குகிறது, பகிர்ந்துகொள்ளப்படாத, பொத்திவைக்கப்பட்ட வேதனைகள் இரணமாக்கி அறுத்துக்கொண்டேயிருக்கக் கூடியது. மனம்விட்டுப் பேசுவதால் மனத்தில் உள்ள துயரம் குறையும்.

    ஒவ்வொரு நோயும் ஒரு விசித்திரம், அது எப்படி உருவானது என்பதை யாருமே அறிந்துகொள்வதில்லை. நோயாளி நலமடைவது என்பது மருந்தால் மட்டுமே ஏற்படுவதில்லை.  அது ஒரு அக விளைவு, நலமடைய வைப்பதற்கு மருந்து துணைசெய்கிறது.  மருந்திற்குச் சமமாக, மருந்தை விடச் சில நேரங்களில் மேலானதாக நோயாளியின் உடனிருப்பவர்கள் அல்லது குடும்பம் அவன்மீது அக்கறை கொண்டவர்களின் நம்பிக்கைகள், பிரார்த்தனைகள், தீராத அன்பு அவனை நோய்மையிலிருந்து நலமடைய செய்கிறது. நோயாளி குணமடைவது பெரும்பாலும் நம்பிக்கையில்தான். அது ஒரு மகத்தான மருந்து, அது எல்லா மருந்துகளையும் விட வலிமையானது, நோயாளியின் மீது எவர் ஒருவர் தீராத அன்பும், பரிவும் காட்டுகிறாரோ அதுவே உன்னதமானது. அந்த அன்பு மட்டுமே நோயிலிந்து விடுபடும் உந்துதலை ஏற்படுத்திவிடக்கூடியது.

    நோய்மையுற்றோர் தனது வலி, வேதனைகளை யாரோடும் பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்றுதான் ஆதங்கப்படுகிறார்கள்; கண்ணீர் விடுகிறார்கள். ஓர் அரவணைப்பும், ஆறுதலான சொற்களும், உறக்கத்தில்கூட நம்மை யாரோ அருகிலிருந்து கவனித்துக்கொள்கிறார்கள் என்ற நம்பிக்கையும்தான் நோயாளியை முற்றிலும் குணப்படுத்தும்.

    நோய்மை என்பது கடவுள்தரும் தண்டனையில்லை, ஆனால் அது கடவுளைப்பற்றி சிந்திப்பதற்கான முதல் வழிகாட்டுதல் என்று எடுத்துக்கொள்ளலாம்.  மனிதர்கள் தங்கள் உடலை எப்போதும் ஓர் இயந்திரமாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அது செம்மையாக இயங்கிக்கொண்டிருக்கும்வரை அவர்கள் அதை கவனிப்பதே இல்லை.  ஆனால் அதில் ஏதாவது கோளாறு என்று வந்துவிட்டால் உடனே பயம் கொள்கிறார்கள்.

    ஓவ்வொரு மனிதனும் நோயிலிருந்து நிறையக் கற்றுக்கொள்கிறார்கள்.  அப்போதுதான் அவனுக்கு உடலின் அமைப்பும், நுணுக்கமும், விசித்திரங்களும் புரியத் துவங்குகிறது.  உடல் வெறும் எந்திரமல்ல, அது ஓர் ஆத்மாவின் கூடு என்பதை உணர்த்தவே மதம் தேவைப்படுகிறது.  மதம் என்பது நம்பிக்கையை உருவாக்கும் ஒரு மையம்.  அது மனிதனை துயரத்தில் விழுந்துவிடாதபடி தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறது.  ஒருவேளை மதம் என்ற அமைப்பே இல்லாமல் போயிருந்தால் மனிதன் மிருக நிலைக்குத்தான் போயிருப்பான்.

    ஆனால் உண்மையில் மருத்துவத்தின் முதல் எதிரியாக மதத்தைக் கருதுவதும் ஏற்புடையதாக இருக்கின்றது.  மதத்தின் பெயரால்தான் எல்லா நோய்மைகளும் அடையாளப்படுத்தப்படுகின்றன. நோயை சொல்லித்தான் மனிதர்களை மதம் தன்வசம் இழுக்கின்றது.  இந்த பயத்தால்தான் அவர்கள் கடவுளை வணங்குகிறார்கள்.  மனிதனை பயமுறுத்தும் எந்தக் கடவுளும் மனிதர்களுக்குத் தேவையில்லை, அந்த பயத்தை யாராவது திணிக்க முயன்றால் அதற்கு கட்டுப்படக் கூடாது.

    மனிதர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவமாகவே அவர்களுக்கு வந்த நோய்கள் கருதப்படுகின்றன.  இன்றைய காலகட்டத்தில் கூட குழந்தையின்மைக்கான காரணம் தெய்வக்குற்றமாக கருதப்படும் நிலை உள்ளது.  மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டு பிரச்சனைகளை தெரிந்துகொள்ளாமல் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு தலைவிதியென பேசாமல் இருந்துவிடுகிறார்கள். மேலும் பலர் பைத்தியங்கள் என அடையாளப்படுத்தப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு முற்றும் தெரிந்த மருத்துவராகக் கருதப்படும் பூசாரியிடம் சவுக்கடிபட்டு அல்லலுறும் நிலையே காணப்படுகிறது.  தேவையற்ற பச்சிலைகளை அரைத்துக் குணமாக்குவதாக அவர்கள் கொடுக்கும் சாற்றை உட்கொண்டு மயக்கமடையச் செய்கிறார்கள், இதனால் மேலும் பல உபாதைகள் வருகின்றன.  இதைப்பார்த்து பேய் குடிகொண்டுள்ளதென எண்ணி அடித்து வதைக்கின்றனர்.  இந்நிகழ்வு அவர்களை மேலும் மூர்க்கமடையச் செய்கின்றது.  மனச்சிதைவு நோய்க்கும் ஆளாக நேரிடுகிறது.

    மனச்சிதைவு நோய் கண்டவர்களை குணமாக்குவது என்பது தேர்ந்த மருத்துவர்களால் மட்டுமே இயலும் காரியம்.  அவர்களை குழந்தைகள் போலக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பரிகாசம் செய்யக்கூடாது.  அது ஆழ்ந்த அக்கறையும் ஆறுதலும் காட்டப்படவேண்டிய நோய்மை. அதை அணுகுவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் முறையான மருத்துவம் வேண்டும்.  மனத்தை அறிந்து மென்மையாகவும், நுட்பமாகவும் வைத்தியம் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்களை அதிலிருந்து மீட்கமுடியும்.

    நோயாளியின் உளவியலை இவ்வாறு விளக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் மனிதனை நோய்மையிலிருந்து விடுவிக்கச் சமுதாயமும், மருத்துவரும் ஆற்றவேண்டிய கடமைகளையும் கூறுகிறார்.

    “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்” 
    -திருவள்ளுவர்.

    நோய்களைத் தீர்க்கும் மருத்துவர் தன்னிடம் வரக்கூடிய நோயாளிகளிடம் உள்ள நோயின் தன்மையையும் அந்த நோய் வந்ததற்குக் காரணத்தையும் அந்த நோயைத் தணிக்கும் மருத்துவத்தையும் அறிந்து பின் மருத்துவம் செய்ய வேண்டுமென்பது வள்ளுவர் கூற்று.

    நோய் பிடிக்கப்பட்ட மனிதனைக் கையாள்வது சற்றுக் கடினமான காரியம் தான்.  அதைக் கையாளத் தெரிந்தவரே சிறந்த மருத்துவர்.  நாம் எல்லோரும் அதிகமாகக் கோபப்படுவது நோயாளிகளிடம்தான். அவர்களது உபாதைகளைத் தேவையற்ற தொந்தரவுகளாகக் கருதுகிறோம். நல்ல மருத்துவர் நோயாளியைத் தோழனைப்போல நடத்த வேண்டும்.  அவனது அந்தரங்க வலியைத் தொட்டு உணர்ந்து ஆறுதல் சொல்லவேண்டும்.

    நோயாளியிடம் பரிவுகொள்ளத் தெரியாத மருத்துவரைப் போலஇந்த உலகில் மோசமானவர் எவரும் இருக்க முடியாது, மருத்துவம் என்பது பணம் சேர்க்கும் தொழில் இல்லை. அது ஒரு கைமாறில்லாத சேவை.  அது கறைபடும்போது மனிதன் மீட்சியுறவே முடியாது. நல்ல மருத்துவர் நோயாளியிடம் பேசும் முன்பாக அவனுடன் வந்திருப்பவர்களிடம் பேசி முதலில் அவர்களை ஆறுதல்படுத்த வேண்டும்.  அவர்கள் நோயாளிகளை விடவும் அதிகம் துயருற்று இருப்பார்கள். அவர்களோடு நல்ல வார்த்தை பேசி கவலையிலிருந்து விடுவித்து அமைதி கொள்ளச்செய்யவேண்டும்.  அதன்பின்னரே நோயளியிடம் பேசவேண்டும்.  ஒருபோதும் நோயாளியை பரிகாசம் செய்துவிடக்கூடாது.  அது அவனுக்குள் ஆறாத வடுவினை உண்டாக்கிவிடும்.  பேச்சின் வழியே அவன் இதயத்தைத் தொட முயல்வதுதான் மருத்துவரின் முதல் கடமை.  மருத்துவரால் அவன் மனத்திற்குள் செல்ல முடிந்தாலே பாதி மருத்துவம் முடிந்துவிடும்.

    மருத்துவரிடம் சென்றால் அற்புதம் நடக்கும் என ஒவ்வொரு நோயாளியும் எதிர்பார்க்கிறான்.  அந்தக் கனவை வளர்த்துக்கொள்ள, நம்பிக்கையுடன் இருக்க மருத்துவர் உதவி செய்யவேண்டும்.  அந்த நம்பிக்கைதான் அவனை குணமாக்கும்.  ஒரே நேரத்தில் இரண்டு நோயளிகளிடம் ஒருபோதும் மருத்துவர் உரையாடக்கூடாது.  அது மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும்.  அதுபோல எந்த நோயாளியையும் மற்றவரோடு ஒப்பிட்டுப் பேசக்கூடாது, அதுவும் அவனை பலவீனமாக்கிவிடும்.  நோயை குணப்படுத்துவதில் மருத்துவரின் தோற்றப்பொலிவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    நோயாளியை விசாரணை செய்யும் மருத்துவர் ஆரோக்கியமானவராகவும், பொலிவோடும் இருக்கவேண்டும்.  மருத்துவரது தோற்றம், கவலையற்ற முகம், மென்மையான பேச்சு இவைகள் தான் நோயாளி மருத்துவரை நம்புவதற்கான எளிய வழிகள். மருத்துவரின் அரவணைப்பில், மருத்துவரின் பலத்தில்தான் ஒவ்வொரு நோயாளியும் நோய்மையிலிருந்து விடுபட முயற்சி செய்கிறான், எனவே மருத்துவர் சஞ்சலமோ, குழப்பமோ கொண்டிருக்கக் கூடாது.  அதேசமயம் நோயாளிகளோடு தனிப்பட்ட விதத்தில் நெருங்கிய உறவு கொள்ளவும் கூடாது.  அது மருத்துவரை உணர்ச்சிவயமாக்கிவிடும்.  நோய்மையை அறிவது உன்னதமான கலை, அதை முறையாகப் பயிலாவிட்டால் சிறந்த மருத்துவராக முடியாது.

    சில நேரங்களில் மருத்துவர்கள் பொய்யைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. பல நேரங்களில் உண்மை மனிதனைக் கொன்றுவிடும்.  அந்தச் சூழ்நிலையில் பொய்யான நம்பிக்கையும், பொய்யான ஆறுதலும் நோயாளியைத் தேற்றும் எனும்போது அவனை தொடர்ந்து செயல்பட வைக்க அது உதவும்.  ஒரு நல்ல மருத்துவர் எல்லா நேரங்களிலும் உண்மையைச் சொல்வதில்லை. இந்த ஒட்டுமொத்த உலகில் தான் மட்டும் எதற்கும் உதவாதவன் என்ற நினைப்பு தலைதூக்கும்.  அந்த நினைப்பு வந்தவுடன் மனம் கனக்கத் துவங்கிவிடும், யாராவது தன்னுடன் பேசி ஆறுதல் படுத்தமாட்டார்களா என்று ஆதங்கமாக இருக்கும். ஆனால் அவர்களை யாருமே புரிந்துகொள்ள முன்வரமாட்டார்கள்.  அது அவர்களது தாழ்வுணர்ச்சியை மேலும் மேலும் அதிகப்படுத்தும்.

    அந்த உணர்வு தன்னை ஒரு வீட்டுச்செடியாகவும், அதற்கு யாராவது தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்கவேண்டும், இல்லையென்றால் வாடிப்போய்விடும் என்பது போன்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது.  தன் பலம் தெரியாதவர்களாக பிறருக்கு இருக்கும் திறமை, சமாளிப்பு, சாதுர்யம் போன்ற எதுவுமே தமக்கில்லையே என்று எண்ணவைத்துத் தங்களைத் தாங்களே குறைத்து மதிப்பிடக் காரணமாகிறது.

    உடல் குறைபாட்டினால் தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்புகள், புண்படுத்தும் பலரது கேலி மற்றும் மீள முடியாத தாழ்வுணர்ச்சி அவர்களுக்குள் தீவிரமான மன பாதிப்பினை உருவாக்குகிறது. அந்த மன பாதிப்பு அவர்களுக்குள் பயத்தை ஏற்படுத்துகிறது.  அவர்கள் செயல்களை முடக்கத் துவங்குகிறது.  தான் ஒரு இறந்துபோன பல்லி, தன்னை எறும்புகள் இழுத்துக்கொண்டு போவதாக எண்ண வைக்கிறது.

    தனித்து வாழமுடியாது என்ற எண்ணத்தை நம் சமூகம் உடற்குறைபாடுள்ளவர்கள் மேல் திணித்துள்ளது.  இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை அவர்கள் முழுமையான தோல்வியின் அடையாளமாகவே கருதுகிறார்கள்.  யாரோ ஒருவரை நம்பித்தான் வாழ்ந்தாகவேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்படும் அவர்கள் தங்களை யாரிடமாவது முழுமையாக ஒப்படைத்துவிட்டு ஒரு வளர்ப்பு நாயைப்போல வாழ்ந்துவிட்டு போகவேண்டியதுதான் என எண்ணுகிறார்கள். தொடர்ச்சியான தோல்விகளையும், அவமானங்களையும் சந்திப்பதால் தங்களுக்கென்று கனவுகளும், சுயமரியாதையும் தேவையில்லை என்ற நினைப்புக்குள் வந்துவிடுகிறார்கள்.  தங்களைத் தாங்களே தாழ்வாக எண்ணிக்கொண்டிருப்பதாலோ அவர்களுக்கு அவர்களையே பிடிக்காமல் போகிறது.  தன்னைத்தானே நேசிப்பதும், மதிப்பதும் முக்கியமான ஒன்றாக அவர்களுக்கு தோன்றுவதில்லை.

    உடற்குறைபாடுடையவர்கள் தங்களைப் பயந்து ஓடும் எலியாக எண்ணிக் குறுகிப் போய்விடக்கூடாது.  துரத்தும் ஆளாக எண்ண வேண்டும். அடிக்கிற ஆளே ஜெயிப்பான், பயந்து ஓடுகிறவன் தோற்றுப்போய்விடுவான் என்பதை மனத்தில் கொண்டு எண்ணத்தை நேர்மறையாக மாற்றிக்கொள்ளவேண்டும். உடற்குறைபாட்டை காரணம் காட்டி ஒடுங்கியோ, ஒதுங்கியோ வாழ வேண்டிய அவசியமில்லை. சக மனிதர்களாகவே தங்களையும் எண்ணிக்கொண்டு அனைத்திலும் தன்னை முன்னிறுத்தவேண்டும், இதற்கு எடுத்துக்காட்டாக ஜோசப் என்ற கதாபாத்திரத்தை ‘நிமித்தம்’ என்ற தன் நாவலில் படைத்திருக்கிறார் எஸ்.ரா. அவனுடைய நேரிய செயல்களை விவரிக்கும்போது,

    ”அவன் தன் உடற்குறைபாட்டினை என்றும் ஒரு பொருட்டாகவே எண்ணமாட்டான், எப்போதும் சந்தோஷமாகவே காணப்படுகிறான், தனது சந்தோஷத்தை உருவாக்கிக்கொள்ள அவன் எதையும் செய்யத் தயாராக இருக்கிறான், அவன் தன்னைப்பற்றி என்றுமே தன்னிரக்கம் கொள்வதில்லை, இந்த உலகின் கேலிகள் எதுவுமே அவனுக்கு  ஒரு பொருட்டில்லை, தனது சந்தோஷத்தை அவன் உலகின் மீது பரவ விடுகிறான், உலகை பதிலுக்குக் கேலி செய்கிறான். எற்றி உதைத்து விளையாடுகிறான், இயற்கையை ரசிக்கிறான், மழையில் விளையாடுகிறான், அவனது இம்மனநிலையை ஒவ்வொரு உடற்குறைபாடுடையவரும் வளர்க்க வேண்டும், அப்போதுதான் தன்னம்பிக்கையும், நேரிய எண்ணங்களும் வளரும் என்கிறார்.

    உலகில் வாழும் அனைவருக்குள்ளும் ஆச்சர்யம் ஒளிந்துகொண்டுள்ளது. ஆனால் அதை நாம் தேடிப்பார்ப்பதில்லை, வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் புதிதாக எதையாவது ஒன்றைக் கண்டுபிடிக்கவேண்டும். இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு உதவும் வகையில் எதையாவது செய்துவிட்டுப் போகவேண்டும். நமக்குள் இருக்கும் ஆச்சர்யத்தைத் தேடிப்பார்த்து அறிந்துகொள்ளவேண்டும். மனிதன் வயதாவதை என்றுமே தடுக்க முடியாது. வயதாவதைப் பொருட்படுத்தாது வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் உபயோகமானதாக மாற்றமுடியும் என்ற எண்ணத்தோடு செயலாற்ற வேண்டும்.  உடற்குறைபாடுடையவர்களை இங்கு, இவர்களுக்கு, இவர்களுடன்தான் பிறக்க வைக்கவேண்டும் என்று உலகம் நிர்ணயித்துத்தான் பிறக்க வைக்கிறது. அதன் போக்கில் நாமும் அவர்களை ஏற்று வாழவைக்கத் துணைபுரிய வேண்டும்.  அவர்களை ஒடுக்காமல், அவர்களுக்கு துணையாக இருந்து, உடற்குறைபாடு என்பது என்பது ஒரு பொருட்டல்ல என்பதை உணர்த்தவேண்டும், அவர்கள் வாழ வழிசெய்ய வேண்டும், வினோதங்கள் நிறைந்த இவ்வுலகம் ஏற்ற இறக்கங்கள் நிரம்பியது, அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு அதனுடன் திறமையாகப் பயணிப்பதே நம்முள் உள்ள சவால். அதைத் திறம்படச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும், உலகத்தில் நமக்கெனக் கொடுக்கப்பட்ட தனிஇடத்தைச் செவ்வனே நிறைவு செய்வதே நாம் இவ்வுலகில் பிறந்ததற்கு அர்த்தமுள்ளதாக அமையும்.

    இவ்வாறு எஸ்.ரா., உடற்குறைபாடுடையவர்களின் வலியையும், சமூகத்தின் கடமையையும், தீர்வுகளையும் ‘நிமித்தம்’ நாவலின் வழி நமக்கு உணர்த்துகிறார்.

    “இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபே ரிரையான்கண் நோய்
    ” -திருக்குறள்

    அதிகமாக உணவை உண்பதினால் வரும் துன்பத்தை அறிந்து அளவோடு உண்பவர்களிடம் இன்பம் குடிகொள்ளும், அதுபோல அதிகமாக உணவு உண்பவர்களிடம் நோயானது குடிகொள்ளும் என்ற வள்ளுவரின் கூற்றிற்கிணங்க நோய்வரும் காரணங்களை அறிந்து, அதுவராமல் காக்கும் வழிகளை மேற்கொண்டால் நோய்மை என்ற துன்பத்திற்கு ஆளாக நேரிடாது என்று எஸ்.ராமகிருஷ்ணன் தன் நாவலின் வழி அறிவுறுத்துகிறார்.

    மனிதன் நோய்மையை முதலாக உணர்வது, தான் சாப்பிடும் உணவு கசக்கும்போதுதான், அல்லது விரும்பிய உணவை உடல் ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கும்போதுதான். நாம் நம் உடலை ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். உடல் ஒரு தேவாலயம் என்று நாம் உணர்வதே இல்லை.  எவன் ஒருவன் தன் உடலைத் தேவனின் இருப்பிடமாக உணர்கிறானோ அவனே விழிப்புற்ற மனிதன்.

    உள்ள குறைபாடே உடற்குறைபாடு

    ‘சமுதாயத்தை மாற்ற வல்லது எழுத்து’ என்பதை பல்வேறு அறிஞர்பெருமக்கள் நிரூபித்து வருகின்றனர்.  அதனடிப்படையில் எத்தனையோ இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள், இந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்பட்டிருக்கிறது. அந்தவகையில் உடற்குறைபாடுடைய ஒருவரின் வலியைச் சமூகத்திற்குத் தெரிவிக்க முயன்றதன் விளைவே எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘நிமித்தம்’ என்ற நாவலாகும்.

    உடற்குறைபாட்டால் பலர் தங்கள் வாழ்க்கையையே தொலைத்தவர்களாக காணப்படுகிறார்கள்.  உடற்குறைபாடு அவர்களுக்கு ஏற்படுத்தும் வலியும், துக்கமும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று.  இதை நன்குணர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், உடற்குறைபாட்டினையும், அது கொடுக்கும் வலியையும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் தாழ்வுணர்ச்சியையும், அவர்களைச் சமூகம் நடத்தும் விதத்தையும் அதிலிருந்து மீளும் வழியையும் ‘நிமித்தம்’ நாவலின் முதன்மைப் பாத்திரமான தேவராஜின் எண்ணக் குமுறல்களாக வெளிப்படுத்துகிறார்.

    வாழ்க்கை என்பது மனிதர்களுக்கு இறக்கும் வரை போராட்டமாகவே அமைந்துவிடுகிறது.  இவ்வுலகில் வாழவும், நிலைபெறவும், மனிதன் சமூகத்தோடும், மனிதர்களோடும், போராடித் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வுலகில் நல்ல உடல்நலத்தோடும், நல்ல பொருளாதாரத்தோடும், உள்ளவர்களே பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.  இந்நிலையில் உடற்குறைபாடுடையவர்கள் நிலை கேள்விக்குறிதான்.

    உடற்குறைபாடு என்பது அவர்களின் தவறல்ல, உடற்குறைபாட்டை விரும்பி ஏற்றுக்கொண்டு யாரும் இவ்வுலகில் பிறப்பதில்லை.  இயற்கை எப்போதுமே சில விதிவிலக்குகளை உருவாக்கி கொண்டே இருப்பது போலவே தான் உடற்குறைபாடுடைய மனிதர்களை இவ்வுலகில் ஜனிக்க வைத்துள்ளது.  இவ்வுண்மையை மனிதர்களோ, சமூகமோ உள்ளபடியே ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.  தாங்கொணாத் துயரங்களையும், அவமானங்களையும், அவர்களுக்கு தருகிறது.

    உடற்குறை  உள்ளவர்களுக்கு எதிலும் முன்னுரிமை மறுக்கப்படுவதோடு இரண்டாம்தர மனிதர்களாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர்.  உடற்குறைபாடுடைய மனிதர்களுக்குச் சமூகம் கொடுக்கும் அவமானங்கள் ஒருபுறமிருக்க ஏன் சொந்தங்களான தாயும், தந்தையும் உடன்பிறப்புகளுமே உதாசீனப்படுத்துகிறார்கள், ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். தங்களது பிள்ளைகளிலேயே ஒருவரைத் தனிமைப்படுத்திப்பார்ப்பது மற்றவரை வேறுமாதிரிப் பார்ப்பது எனப் பாகுபாடு காட்டுகின்றனர். உடற்குறைபாடுடைய குழந்தை ஏதோ அடுத்தவீட்டு குழந்தைபோல நடத்தப்படும் விதமும் அரங்கேறி வருகின்றது. அடியும், உதையும், வசவுகளும் பெறாத உடற்குறைபாடுடைய மனிதர்கள் இருப்பது அபூர்வமாகத்தான் இருக்கிறது. இதுமட்டுமல்லாது வெளியே ஆசிரியரின் வெறுப்பும், சக மாணவர்களின் கேலிப்பேச்சும் என எங்குப் பார்த்தாலும் அவமானங்களையே சந்திக்க வேண்டியுள்ளது.

    இதனால் இவர்கள் மனது சித்திரவதைக்குள்ளாகிறது, மறக்க நினைக்கின்ற ஆனால் மறக்கமுடியாத கசப்பான நினைவுகள் அவர்களுக்குள் தங்குகின்றது.  தொடர்ந்த புறக்கணிப்பு அவர்களை மற்றவர்களை வெறுக்க தூண்டுகிறது. இவ்வுலகில் ஏன் பிறந்தோம் என்று கடவுள்மேல் கோபத்தை ஏற்படுத்துகிறது.  ஒருவரை வெறுக்கத்துவங்கிவிட்டால் அது ஒருவகை இன்பத்தை அளிக்கிறது.  அந்த இன்பம் தேன்கலந்த இஞ்சிச்சாறு குடிப்பதைப் போல, புண்ணைச் சொறிந்து சுகம் காண்பது போல வேதனையான இன்பத்தை கொடுக்கிறது. வெறுப்பு ஒரு சருமநோய் போன்றது.  அடிக்கடி சொறிந்து இன்பம் காணத் தூண்டுகிறது வெறுப்பின் வழியே தான் மனதின் கசப்புணர்வு பொங்கி வழிகிறது.  ஒருவரை வெறுக்கத் துவங்கிய பிறகு அவர்களின் எல்லாச் செயல்களையும் நாம் விமர்சிக்கத் துவங்கி விடுகிறோம்.  அதன்பிறகு அவரிடம் நல்லவை துளிகூட கிடையாது என்ற முடிவிற்கே வருகிறோம். வெறுப்பு சிம்னி விளக்கில் கரும்புகை படிவதைப்போல நம்மை கருமையாக்கி விடுகிறது. மிஞ்சிப்போவது கரும்புகை மட்டுமே.

    உடற்குறைபாடுடையவர்களின் கடந்தகாலம் என்பது கசப்பான நினைவுகளின் குவியலால் ஆனது.  அவர்களின் கசப்பான நினைவுகள் எளிதில் மறைந்துபோக கூடியதாக இருப்பதில்லை.  அந்நினைவுகள் யாவும் மறந்துபோக கூடுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுமளவிற்கு அது அவர்களை வதைக்கிறது.  அவமானப்பட்ட நினைவு என்றுமே அவர்களுக்குள் கனன்றுகொண்டே இருக்கிறது. சிறு வயதிலிருந்து பட்ட அவமானங்கள், புறக்கணிப்புகள், அடிபட்ட வலி இன்னும் கூட ஒவ்வொருவருக்குள்ளும் பசுமையாகவே இருக்கிறது.  அவர்களது மனது இன்பங்களை எளிதில் மறந்துவிடுகிறது. ஆனால் அவமதிப்புகளையும், புறக்கணிப்புகளையும் மறப்பதேயிலலை.  என்றுமே அது அவர்களுக்குள் சுடர்விட்டுக்கொண்டேதான் இருக்கும். இவ்வாறு உடற்குறைபாடுடையவர்கள் உளவியல் குறித்து விளக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

    உடற்குறைபாடுடையவர்கள் புறக்கணிக்கப்படுவதால் அவர்களுக்குள் ஏற்படும் தாழ்வுணர்ச்சி பற்றியும் கூறுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். உடற்குறைபாடு ஒருமுறை என்றால் அதைவிட பெரிய குறைபாடு தாழ்வுணர்ச்சி அவர்களுக்குள் பூதாகரமாக உருப்பெறுகிறது. குரங்கு தன் புண்ணை நோண்டிக்கொண்டிருப்பது போல அவர்கள் மனது சதா தாழ்வுணர்ச்சியை கிளறிக்கொண்டேயிருக்கும்.

    *****

    கட்டுரையாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர்

     

    Share
  • வெளிச்சமும் இருட்டும் நம் உள்வெளிகள்

    -முனைவர் வீ.மீனாட்சி

    தமிழ்க்கவிதை உலகின் வசந்த காலமான இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீனத் தாக்கம் பெற்ற புதுக்கவிதையின் போக்குகள் நாம் அதற்கு முன் கண்டிராத புதிய பரிணாமங்களை உள்அடக்கியவை. இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கு என்ற நிலையை மாற்றிப் பொருளாதாரப் பிடியிலும், சமுதாயச் சீர்கேடுகளிலும் போட்டி நிறைந்த இயந்திர வாழ்வாதாரத்திலும் சிக்கிய மனிதனின் மன வலிகளையும், புற வாழ்வைத் தாண்டி அகவாழ்வைத் தேடும் பயணத்தையும் பிரதிபலிக்கும் கருக்களைக் கொண்ட சிறுகதை, புதினம், கவிதைகள் என்ற இலக்கியப் பரிணாமங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக இன்றையக் காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் புதுக்கவிதைகள்

                   “காலத்துக்குக் காலம் வாழ்க்கை மாறிவரும் போது  வாழ்க்கையின் காலடியில் பிறக்கும் சிந்தனைகள் மாற்றமுறும்போது அவை வெளிப்படும்
    கலை வடிவங்களும் மாறுகின்றன”

    என்ற பாலாவின் வரிகளுக்கு ஏற்ப தன் வடிவ மாற்றத்தோடு பாடுபொருளிலும் பல்வேறு மாற்றங்களை தாங்கி வருகின்றன.

    இத்தகைய ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சி சூழ்நிலைகளின் மத்தியில் ‘யாப்பின் சிரமங்களைத் தவிர்ப்பதற்கல்ல புதுக்கவிதை, மரபுக்கவிதை தொடாத உயரங்களைப் புதுக்கவிதை தொடவேண்டும். பழைய வடிவங்கள் தராத வசதிகளை அது தர வேண்டும்’ என்ற, மரபுக்கவிதையில் வேர்பதித்து புதுக்கவிதையில் மலர்பார்த்த கவிக்கோ அப்துல் ரகுமான் தன் சொல்லாடல்களுக்குத் தக்கவாறே தமிழ்க்கவிதை உலகில் மரபுக்கவிதைகள், கவியரங்கக் கவிதைகள், வசனக்கவிதைகள் என்று கவிதையின் பன்முகத்தளங்களில் முத்திரைகள் பதித்தவர். இதனால்தான் கலைஞர் ‘வெகுமானம் வேண்டுமென்றால் ரகுமானைக் கேட்பேன்’ என்று பாராட்டியுள்ளார். உருவகம், படிமம், பேச்சு, குறியீடு, தொன்மம், சர்ரியலிசம், கஜல் என்று பல்வேறு கவிதை உத்திகளைக் கையாண்டுப் புதுக்கவிதையில் பரிசோதனை முயற்சி செய்தி வெற்றிக் கண்ட அப்துல்ரகுமானின் பித்தன் என்ற கவிதை தொகுப்பு காட்சிப்படுத்தியுள்ள மனித மனத்தின் உள்வெளி பயணத்தை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

                  “அறிவியல் உளவியல் கண்டுபிடிப்புகளால் பிரபஞ்சத்தின் புதிர்களும்  மனித இனத்தின் மர்மங்களும் அவிழ்ந்து வருகின்றன. இதனால்              வருங்காலக் கவிதை உயரங்களில் பறக்கும் ஆழங்களில் மூழ்கி அதிசயங்களை எடுத்து வரும்.”

    என்று சொல்லும் அப்துல் ரகுமான் தன்னுடைய படைப்புகளிலேயே அத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளதைப் பித்தன் கவிதைத் தொகுப்பில் காணமுடிகிறது.

    இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது மனசக்தியால் ஆட்டுவிக்கப்படுகிறான். புறவாழ்வு, அகவாழ்வு என்ற நிலைகளில் பயணப்படுகின்றான். இதில் எதில் அவன் சிந்தை மீசெல்லுகிறதோ அதனைப் பொறுத்தே அவனது வாழ்வும் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இந்த அகம், புறம் என்ற உள்வெளி இரண்டு நிலைகளிலுமே போராட்டத்தோடுதான் பயணப்பட்டு கொண்டிருக்கிறான் என்பதை,

                  “எனக்குள் இருவர்  / இருக்கின்றனர்
                  ஒருவன் பாடகன்  / மற்றொருவன் பித்தன்
                  பாடகன் ஏதாவது / ஒரு ராகத்தை
                  ஆலாபனை செய்து / கொண்டிருப்பான்
                  அவன் ஸ்வரங்கள் சப்தங்களால் / ஆனவை
    அல்ல
    பித்தன் ஏதாவது ஒரு நதியில் / எதிர்நீச்சல்
    போட்டுக் கொண்டிருப்பான்
                  அந்த நதிகள் / நீரால் ஆனவை அல்ல
                  பாடகன் நேர்களின் ரசிகன் /பித்தன்
    எதிர்களின் உபாஸகன்
    இருவருக்கும் ஒத்துப் போவதில்லை / இருவரும் இரு துருவங்கள்”

    என்ற கவிக்கோவின் வரிகள் மூலமே அறியலாம்.

    உலகம் ஒரு நாடகமேடை; அதில் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரம் என்ற நிலையையும் தாண்டி இன்று ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரமாக இல்லாமல் ஒவ்வொரு கணமும் ஒரு கதாபாத்திரமாக வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நாடக மேடையில் அந்தரங்கம் என்பது உண்மையின் மறுபக்கமாக இருக்கிறது என்பதை

                  “அவர்கள் ஏன் உன்மீது  / கல்லெறிகிறார்கள்? என்றேன்
                  ‘நான் அவர்களுடைய / அந்தரங்கத்தின் கண்ணாடி
                  அதனால்தான் என்னை / உடைக்கப் பார்க்கிறார்கள்’ என்றான்
       ‘ஏன்? என்றேன் / அவர்கள்
                  வெளிப்படுவதற்கு / பயப்படுகிறார்கள்
                  அவர்கள் / வேடங்களில்
                  வசிக்கிறார்கள் / அது அவர்களுக்கு
      வசதியாக இருக்கிறது /   வேடம் கலைந்தால்
                  மேடை போய்விடும் / நான் அவர்களுடைய
                  அம்பலம்”  என்கிறான் பித்தன்.

    இன்றையப் பொருளாதார நெருக்கடியில் தொலைந்துபோன மனிதன்தான் வாழ்வதற்காக மற்றவனை நோகடிப்பதோடு அல்லாமல் தனது மனம் தவறு என்று சொல்வதையும் நியாயப்படுத்துகிறான் என்பதை

                  “பித்தன்  / தன் சட்டையைக்
                  கிழித்துக் கொண்டிருந்தான் / சட்டையை ஏன்   கிழிக்கிறாய்? என்றேன்
    ………………………………………………………………………………

                  பொய்க்குத்தான் /ஆடை தேவை
    மெய்க்குத் / தேவையில்லை
                  உங்கள் ஆடை / விலக்கப்பட்ட கனியைத்
                  தின்ற பாவத்தால் / நெய்யப்பட்டதல்லவா?
                  உங்கள் ஆடை / இறந்துபோன
    கள்ளமின்மைக்குப்   போர்த்திய / சவக்கோடி அல்லவா?
                  பூக்களும் பறவைகளும் / ஆடை
    அணிவதில்லையே?
                  நீங்கள் / ஆபாசமானீர்கள்
                  அதனால் உங்களை / ஆடையால் மறைத்தீர்கள்
                  ஆடையை / முகவரி ஆக்கியபோது
                  நீங்கள் காணாமல் போனீர்கள்” என்கிறான் பித்தன்.

    சாதி, மதம் என்ற அரிதாரங்களைப் பூசிக்கொண்டு அதனையே உயர்ந்த பீடங்களாகக் கருதி இறந்த காலத்துக் குப்பைகளை சுமந்து கொண்டு பயணப்பட்டுக் கொண்டிருப்பவர்களைச் சங்காரம் செய்பவன் பித்தன் என்பதை

                  “நீ சீர்திருத்தவாதியா? என்று / பித்தனைக் கேட்டேன்.

          ‘இல்லை  நான் / திருத்துவதற்காக அல்ல
                  சங்காரத்திற்காக / வந்திருக்கிறேன்
                  …………………………………………………………………
                போதிக்க அல்ல / உங்களுக்குப்
             போதிக்கப்பட்டதை / அழிக்கவே
    வந்திருக்கிறேன்
    ………………………………………………………………..
           உங்கள் பீடங்கள் / சமாதிகள் என்று
    காட்டவே வந்திருக்கிறேன்” 
    என்ற வரிகள் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

         “அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
                   புறத்த புகழும் இல”

    என்ற வள்ளுவத்தின் வழி ஒருவன் வாழமுற்பட்டாலும் இன்றைய சூழலில் மற்றவரின் சுயநலத்திற்காக அவர்கள் சூறையாடப்படுகிறார்கள் என்பதை

                  “நீங்கள்
                  கடைத் தேங்காயாக
                  இருக்கிறீர்கள்
                  வழிப் பிள்ளையார்களுக்காக
                  உடைக்கப்படுகிறீர்கள்” என்கிறான் பித்தன்.

    மனிதனின் இத்தகைய மனவெளிப் போராட்டம் தொடர்ந்து பயணிப்பதற்கு காரணம் அவன் சுயத்தை மறந்ததே ஆகவே

                  “உங்கள் / சுயத்தை நோக்கி
                  புறப்படுங்கள்
    ……………………………………….
            உங்கள் பயணம் / உங்கள் பாதையில்
        நடக்கட்டும் / மற்றவர்கள் போட்ட
                  பாதையில் அல்ல
    ……………………………………………..
                  உங்கள் பயணம் / சப்தத்திலிருந்து           மௌனத்திற்குச் செல்லும் / இசையைப் போல்
                  இருக்கட்டும்” என்கிறான் பித்தன்.

    வாழ்க்கை என்பது சூழ்நிலைகளால் செதுக்கப்படுவதாக இருந்தாலும் அதில் சமநிலை தவறாமல் இருந்தால் மட்டுமே வெற்றி காண முடியும் என்பதை

                  “வாழ்க்கை என்பது
                  கழைக்கூத்து
                  சமநிலை தவறுகிறவன்
                  விழுந்து விடுகிறான்” என்றான் பித்தன்.

    தன் வாலையே விழுங்கிக் கொண்டிருக்கும் கால சர்ப்பத்தில் பரமபதம் விளையாடிகொண்டிருக்கும் மனிதர்களுக்கு வாழ்வின் பொருளைப் பித்தன் போதிக்கிறான். சமநிலையற்ற உலகில் பித்தன் சமநிலையோடு வாழ கற்றுத்தருகிறான். உங்கள் உலகம் குழந்தைகள் கிழித்துவிடும் புத்தகங்களை உங்களுக்கு வழங்குகிறது. ஆனால் குழந்தைகளே பாடப்புத்தகங்களாக இருக்கிறார்கள் என்பதை மறுத்தும் விடுகிறது. அதனால் தான்

                  “உங்கள் புத்தகங்கள்
                  விளக்குகளாக இருக்கின்றன
                  சூரியனைக் காண
                  விளக்குகள்
                  தேவைப்படுவதில்லை” என்கிறான் பித்தன்.

    இருட்டில் இருந்து கொண்டு இருட்டைச் சபிப்பதை விட விளக்கை ஏற்றுவது மேல் என்பது போல இருட்டின் உடலில் நட்சத்திரக் காயங்கள் அழகாக இருக்கின்றன என்று பித்தன் சொல்வது வாழ்வின் தவிர்க்க முடியாத இரு பக்கங்களான இருட்டையும் வெளிச்சத்தையும் நம் மனக்கண் முன் நிறுத்துகின்றன. இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும் இடையில் வெளிச்சத்தில் வாழ்வதாக எண்ணி இருட்டிலும், இருட்டில் வாழ்வதாக எண்ணி வெளிச்சத்திலும் போலியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் போலித்தனங்கள் தோலுரித்துக் காட்டும் பித்தனே நம் உள்வெளிகளில் உலவும் வெளிச்சமாகவும் இருட்டாகவும் இருக்கிறான் என்பதையே பித்தனின் வாயிலாக அப்துல் ரகுமான் சுட்டுகிறார்.

    *****

    பயன்பட்ட நூல்கள்:

    1. அப்துல் ரகுமான் – பித்தன் – கவிக்கோ பதிப்பகம், சென்னை 2002
    2. அப்துல் ரகுமான் – ஆலாபனை நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை 2008
    3. அப்துல் ரகுமான் – சோதிமிகு நவகவிதை நேஷனல் பப்ளிஷர்ஸ்,     சென்னை  2007
    4. பாலா – புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை – அகரம் வெளியீடு 1983
    5. முனைவர் சுவாசு – எது புதுக்கவிதை – சுபாலிகா பதிப்பகம், திருச்சி 1998
    6. திருக்குறள் – கழக வெளியீடு

    *****

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை
    பிஷப் ஹீபர் கல்லூரி
    திருச்சிராப்பள்ளி-17.

     

    Share
  • பழந்தமிழக வரலாறு – 6

     

     

             மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு

     

                                          கணியன்பாலன்

    பண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச்சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட நெடிய காலத்தைக்கொண்டதாகும். இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு ‘பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனை’ என்கிற ஒரு உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. அதில் சாங்கியம்(எண்ணியம்), உலகாயதம், பூதவாதம், வைசேடிகம்(சிறப்பியம்), ஆசிவகம், நியாயவாதம் எனப்பலவிதமான மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. கடவுள் மறுப்பும், வைதீக எதிர்ப்பும்  பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையில் உறுதியாக நிலை கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளாகச் சங்கம் மருவிய காலம் முடியும்வரை(கி.மு. 1000-கி.பி. 200), இந்தப் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள்தான் தமிழ் சமூகத்தின் அடித்தளக் கருத்தியலாக இருந்து வந்தன.

    முனைவர். கா. இராசன் அவர்கள் தான் எழுதிய தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் கி.மு. 1000 வாக்கில் தமிழகத்தின் தென் பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டிலும், வடபகுதியில்புதிய கற்காலப் பண்பாட்டிலும் வாழ்ந்த மக்கள் இருவரும் இணைந்து ஒரு மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டனர் எனவும், அன்றே அவர்கள் ஒருவகையான வரிவடிவத்தைத் தமது கருத்துப்பரிமாற்றத்திற்குப் பயன் படுத்தினர் எனவும், இவர்களே ஒரே வகையான மொழி, வரிவடிவம் என்ற கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழ்ச் சமுதாயம் என்ற  அமைப்பை ஏற்படுத்தவும், தமிழகத்தின் சங்ககால எழுச்சிக்கும் வித்திட்டவர்கள் என்கிறார்-(1).   தென்பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வின் காலம் சுமார் கி.மு. 2000 என அறிவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது என்கிறார் முனைவர் அ. இராமசாமி-(2). ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கில் ஒரு தொழில் நகரமாக இருந்தது எனவும் அங்கு உயர் தொழில்நுட்பமிக்க உயர்தரமான இரும்பு எஃகும், பிற உலோகங்களும் தயார் செய்யப்பட்டன எனவும், வெண்கலப் பொருட்கள் தயாரிப்பில் அவர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர் எனவும் முனைவர் அ. இராமசாமி குறிப்பிடுகிறார்-(3).  ஆகவே இப்பண்பாட்டுப்புரட்சி தென்பகுதியில் கி.மு. 1000க்கு முன்பே நடந்து, பின் வடபகுதியோடு இணைந்து மேலும் வலிமை பெற்றது எனலாம். இந்த மிகப்பெரிய தொழிநுட்பப் பண்பாட்டுப் புரட்சியின் தொடர்ச்சியாக உருவாகியதுதான் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட  ‘மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு’ ஆகும்.

    பண்டையத் தமிழ்ச் சமூகம்:

    தமிழ்ச் சமூகம் பண்டையகாலத்திலிருந்து மெய்யியல்,  அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம் ஆகியவற்றில் ஒரு புகழ்பெற்ற மரபைக்கொண்டிருந்தது. கி.மு. 1000க்கு முன்பிருந்து நிறையச் சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன. நறுமணத் திரவியங்களின் உலகத்தேவையும் அதன் வணிகமும், தமிழர்களைப் பெரும் கடலோடிகளாக மாற்றியமைத்தன.  இவையெல்லாம் கி.மு. 1000 க்கு முன்பிருந்து நடந்து வருகிறது எனினும் கி.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழக வணிகம் தொடர்ச்சியாகவும் உலகளாவிய அளவிலும் நடைபெற்றது. தமிழகத்தில் தனித்தனி வேந்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிளைஅரசர்கள்,  சிறுகுறு மன்னர்கள், வேளிர்கள் எனப் பலதரப்பட்ட அரசுகளின் கீழ் நிறைய சுதந்திரமான  நகர்மைய அரசுகள் இருந்தன. அவை தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் சுதந்திரமான வணிக நகர்மைய அரசுகளாகவும் பரிணமித்தன. பொருள் உற்பத்தியும், தொழில் நுட்பமும் வணிகமும் பெருகி வளர்ந்து கொண்டிருந்தன. இந்தச் சிறு குறு நகர்மைய அரசுகளே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைக்கும் அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் காரணகர்த்தாக்களாக இருந்தன. ஆதலால் கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே மூலச்சிறப்புள்ள தமிழ் மெய்யியல் சிந்தனை ஒரு சிறப்பு வடிவத்தைப்(தொல்கபிலரின் எண்ணியம்)  பெற்றுக்கொண்டது.

    திரு. வி. கிரபிவின் அவர்கள் “உலகத்தைப்பற்றிய பொருள்முதல் வாதக்கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும், பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், கி.மு. இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது” என்கிறார்-(4). அக்காலகட்டத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் நகர அரசுகள் தோன்றி வளர்ந்து உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை மாறிக்கொண்டிருந்தன. ஆதலால் நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை வளர்கிற போது  பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்கிறது எனலாம். கிரேக்கத்தில், கிரேக்க நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி, அவை வணிக நகர அரசுகளாக வளர்ந்த போது பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்ந்தது.  மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், இத்தாலியின் வெனிசு போன்ற நகரங்களில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சிதான் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது. ஆகவே சுதந்திரமான வணிகநகரங்கள் முற்போக்கான அறிவியல் கண்ணோட்டம் உடைய சிந்தனைகளின் வளர்ச்சிக்கான காரணிகளாக இருந்துள்ளன என்பதை வரலாறு பலவிதங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த வணிக நகர அரசுகள் பேரரசுகளாக மாறும்பொழுது பொதுமக்களையும் அடிமைகளையும் கட்டுப்படுத்தி வைக்கப் பொருள் முதல்வாத மெய்யியலை அழித்து அவ்விடத்தில் கருத்துமுதல்வாத மெய்யியலைக் கைக் கொள்கின்றன. வட இந்தியாவில் 16 ஜனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகள் உருவாகி வணிகம் பெருகி வளர்ந்துகொண்டிருந்தபொழுதுதான் கி.மு. 8ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதச்சிந்தனையை  ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியது. அதன் விளைவாகவே பல்வேறு பொருள்முதல்வாதச் சிந்தனைபள்ளிகள் அங்கு வளர முடிந்தது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நிலை மாறி அங்கு பேரரசுகள் உருவாகத்துவங்கின. பேரரசுகளின் உருவாக்கம் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ச்சியைத்தடுத்துவிடும் என்பதால் வட இந்தியாவில் ஓரிரு நூற்றாண்டுகள் மட்டுமே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைபள்ளிகள் வளர முடிந்தது. ஆனால் தமிழகத்தில் முன்பு கூறியவாறு கி.மு. 1000 க்கு முன்பிருந்து நகர்மைய அரசுகள் தோன்றி வளர்ந்து, கி.மு. முடிய, 1000 வருடங்களுக்கும் மேலாக கிரேக்க, உரோம நகர அரசுகளைப்போன்ற வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகளாகப் பண்டைய தமிழக நகர்மைய அரசுகள் இருந்து கொண்டிருந்தன. அதனால்தான் சாங்கியம், போன்ற மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை மரபு தோன்றி வளர முடிந்தது. தமிழகத்தில் எண்ணியம் மட்டுமின்றி பூதவாதம், சிறப்பியம், ஆசிவகம், கடவுள் மறுப்புச் சிந்தனையான நாத்திகம் போன்ற பலவகையான பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தோன்றி வளர்ந்தன. இந்தச் சிந்தனைகள்தான் இந்தியா முழுவதும் பரவின. எண்ணியம், சிறப்பியம் ஆகியவற்றின் மூலவர்களான தொல்கபிலர், கணாதர் ஆகிய இருவர் குறித்து, இந்திய மெய்யியல் வள₹₹ர்ச்சியடைவதற்குக் கபிலரும், கணாதரும் முன்னொடிகளாக இருந்தனர் எனவும், இருள் சூழ்ந்திருந்த இந்திய வானில் ஒளிவீசும் விண்மீன்களாக இந்த இரண்டு மாமனிதர்களும் தோன்றினார்கள் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(5). தமிழ்ச்சிந்தனை மரபின் மூலவர்களான தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார், பூரணகாயபர், நரிவெரூத்தலையார் போன்றவர்கள் தமிழர்கள்தான் என உறுதிப்படுத்தியதில் க.நெடுஞ்செழியன் அவர்களின் பங்கு மகத்தானதாகும்.

     

    தமிழகத்தில் இருந்த ஆட்சியாளனின் அரச அதிகாரம் பொதுமக்கள் சபைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என கி.மு. 4ஆம் நூற்றாண்டு கிரேக்கத் தூதுவரான மெகத்தனிசு அவர்கள் கூறுவதாகக் கூறுகிறார் நேரு அவர்கள்-(6). மெகத்தனிசுவின் கருத்தைக் கணக்கில் கொள்வதன் மூலம் தமிழகத்தின் பண்டைய நகர அரசுகளின் அமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். நகரங்களிலும், ஊர்களிலும் குடவோலை முறையில் நகர, ஊர்ச் சபைகளின் பிரதிநிதிகளையும், பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும் நியமிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன என்பதை மருதன் இளநாகனாரின் பாடல்(அகம்-77) தெரிவிக்கிறது.  இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். ஆகவே சங்ககாலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரச் சபைகளும், ஊர்ச்சபைகளும், வாரியப் பொறுப்பாளர்களும் இருந்தனர் என்பதும் அவர்கள் பலவிதங்களில் அரசனுடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர் என்பதும் மேற்கண்ட மெகத்தனிசின் கூற்று மூலமும், மருதன் இளநாகனார் தரும் தேர்தல் முறை மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆகவே தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் மிக நீண்ட காலமாக இருந்து வந்த சுதந்திரமான பலவகைப்பட்ட வணிக நகர, நகர்மைய அரசுகள் தான் மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்ததற்கான அடிப்படைக் காரணம் ஆகும். 3000 ஆண்டுகளுக்கும் முந்தைய, மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபானது, பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையைத் தனது அடித்தளமாகக் கொண்டு, வளர்ச்சி பெற்ற வணிக நகர அரசுகளைக் கொண்டிருந்த பண்டைய தமிழ்ச் சமூகத்தில், 1000 வருடங்களுக்கும் மேலாக மிகப்பெரும் செல்வாக்குடனும், புகழுடனும் இயங்கி வந்துள்ளது.

    பார்வை:

    1. முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 75, 76.

    2.அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிகவரலாறு, டிசம்பர்-2013, பக்:62.

    1. “ “    பக்: 52-64.

    4.’இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’  இரசிய நூல், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ பக்:43.

    5.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில் கே.சுப்ரமனையன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்:131.

    6.சவகர்லால் நேரு, உலகச் சரித்திரம், தமிழில் ஒ.வி. அளகேசன், முதல் பாகம், 2006, பக்: 153.

    ஆதார நூல்: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 777-818.

     

     

     

     

     

    Share
  • அந்தகனைக் காட்டி, அருள்கூட்டுவிக்கும் அப்பர்

    -கோப்பெருந்தேவி. சு., 

    முன்னுரை 

    ’சொல்லுக்கு உறுதி அப்பர்’ என்பது முதுமொழி. அவர்தம் திருப்பதிகங்கள், அரியபொருளான சிவபெருமானை அறிவதற்குச் சிறந்த துணையாகின்றன. அத்திருப்பாடல்களில் அமைந்திலங்குகின்ற தொன்மக்கூறுகள், கதைப்போக்கிலான தத்துவ வலியுறுத்தலுக்கும், அருள்நெறி கூட்டலுக்கும், இலக்கிய இனிமைக்கும் வகைசெய்கின்றன. அவ்வகையில், அட்டவீரட்டனாகிய பெருமான், அந்தகனை அடர்த்தருளிய தொன்மக்கூறினை அப்பர்பெருமான், தமது பல திருப்பதிகங்களிலும் கையாண்டுள்ளார். அதன்வழியே, காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களும் நீங்கி, உயிர்கள் மேன்மையுற அவர் அருள்நெறி காட்டுகின்ற பாங்கினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

     திருமுறைகளில் தொன்மக்கூறுகள்

    அரும்பொருளான இறைவனை, ஆருயிர்கள் உணர்ந்துய்ய, வேதம், ஆகமம், இதிகாசம், புராணம், சாத்திரம் என்பன கருவிகளாகின்றன. இவற்றுள், வேதங்களின் உட்பொருளாகிய பரத்துவத்தை, இறைவன், கல்லாலின் கீழிருந்து நால்வர்க்கு அருளிச்செய்தான். வேதங்களின் கிரியாநெறி விளக்கமாகிய ஆகமங்களின் பொருளை, பெருமான் அம்மைக்கு அருளிச்செய்தான். வேத, ஆகம நன்னெறிகளை மண்ணுலகில் நிலைநிறுத்தவேண்டி இறைவன், தானே மனித உருவேற்று வந்தான். அதை, இதிகாசங்கள் விளக்கியுரைக்கின்றன. வேத, ஆகம, இதிகாசங்களின் பரத்துவ நுண்பொருள் தத்துவங்களை எளிமைகொண்டதாக, மக்களிடையே வலியுறுத்துவதற்கு, கதைக்கூறாக அவற்றை அருளிச்செய்த அணுகுமுறையினைத் திருமுறை ஆசிரியர்களிடத்தில் காணலாம். அவ்வரிசையிலேயே,  ஆதிபுராணனாகிய பெருமானைத் தொன்மங்களாகிய புராணக்கூறுகளால், அப்பர்பெருமான் போற்றிப்பரவியுள்ளார்.

     ஆதிபுராணனின் அட்டவீரட்டம்

    போற்றித்திருத்தாண்டகம் உள்ளிட்ட,  பல  திருத்தாண்டகத் திருப்பதிகங்களிலும், பல்வகைத் தொன்மக்கூறுகள் அப்பர்சுவாமிகளால் எடுத்தாளப்பட்டுள்ளன. அவ்வரிசையில்,  ‘பொருப்பள்ளி வரைவில்லா’ என்றமைந்த அடைவுத் திருத்தாண்டகத்தின் இரண்டாம் திருப்பாடல், சிவபிரான்,  பிரமனின் சிரம் கொய்தருளிய திருக்கண்டியூரையும், அந்தகாசுரனுக்கு மறக்கருணை அளித்தருளிய திருக்கோவலூரையும், முப்புரத்தையும் எரித்தருளிய திருவதிகையையும், தக்கனது வேள்வியினைத் தகர்த்தருளிய திருப்பறியலூரையும், சலந்தராசுரனின் ஆணவத்தை அடக்கியருளிய திருவிற்குடியையும், அத்தி உரித்து, அதுபோர்த்தருளிய திருவழுவூரையும், மன்மதனை நெற்றிக்கண்ணால் சுட்டருளிய திருக்குறுக்கையினையும், மார்க்கண்டேயர்க்காக, கூற்றுவனை அட்ட திருக்கடவூரையும் ஏற்றிப்போற்றுகிறது. அட்டவீரட்டத் திருவிளையாடல்கள், பிற திருத்தாண்டகப் பதிகங்களில் மிகுதியும் அமைந்துள்ளன.

     அப்பர்பெருமான் திருஉள்ளம்

    ‘ஆமயந்தீர்த் தடியேனை’ எனத் தொடங்குகின்ற தனித்திருத்தாண்டகத்தில், அட்டவீரட்டத் திருவிளையாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. இத்திருப்பதிகத்தின் இரண்டு இடங்களில், அந்தகனைக் குறிக்கின்ற தொன்மத்தை அப்பர்பெருமான் எடுத்தாண்டுள்ளார். அத்தொன்மப் பயன்பாட்டில், பெருமான், தனக்குத் தொண்டுநெறி அருளிய வரலாற்றை இயைத்துப் பாடியுள்ளார்.  ‘ஆமயம்’ என்பது, ‘நோய்’ என்று பொருள்படும். அப்பர்பெருமான், ‘ஆமயந்தீர்த்து அடியேனை ஆட்கொண்டான்’ எனத் தொடங்கி, சிவபெருமானைப் பாடியநிலையில், தான் சமணசமயத்தைச் சார்ந்திருந்த முந்தைய அறியாமையினை நினைந்தார் எனலாம். பெருமான், ‘தகுதிநோக்காமல், அடியார்களின் ஆணவமல அறியாமையினையும் பொறுத்தருளி, குற்றத்தையும் குணமாக ஏற்றருளிக் காக்கின்ற பெருங்கருணையை நீளநினைக்கின்றார். அவ்வாறே, தனக்கும் சூலைநோயினைத் தந்து ஆட்கொண்டதை உடன்நினைந்து உருகுகின்றார். பெருமானின் இத்தகைய எளிவந்த பெருங்கருணையை வலியுறுத்தவேண்டி, அட்டவீரட்டத் திருவிளையாடல்களால் ஆட்கொள்ளப்பட்டோரைக் குறித்த தொன்மங்கள் அனைத்தையும் இத்திருப்பதிகத்தில் எடுத்தாண்டுள்ளார். இத்தொன்மக் குறிப்புகள், கதைநிகழ்வுகள் என்னும் நிலையில் பல புராணங்களில் இடம்பெற்றிருப்பினும், உள்பொருளாக சித்தாந்தத் தத்துவங்களையும், வாழ்வியல்நெறிகளையும் வலியுறுத்துகின்ற வகையில் அப்பர்பெருமானால் சுட்டப்பெற்றுள்ளன.

     அந்தகனைக் குறித்த தொன்மக்கூறு

    ஒரு சமயம் உமையம்மை, சிவபெருமானின் கண்புதைத்த வேளையில், அவளை அறியாத அச்சம் ஏற்பட்டது. அச்சத்தால், அவள் உடலில் பூத்த வியர்வைப்பெருக்கு, பெருமானின் நெற்றிச் சூட்டினால், கரியநிறமுடையதாக, கண்பார்வையற்றதாக உருப்பெற்றது. அக்குழந்தை அசுரத்தன்மை கொண்டிருந்ததனால், இரண்யாட்சன் என்னும் அசுரனால் வளர்க்கப்பெற்றது. கண்ணொளி இல்லாமல் பிறந்த அக்குழந்தை, பின்னாளில் பிரமனிடம் பெற்ற வரத்தால், கண்பார்வையும், எவரையும் வெற்றிகொள்கின்ற வலிமையும் பெற்றது. அரியவலிமையும், பெரியவரமும் பெற்ற அந்தகன், ‘தான் இனியும் பெறத்தக்க பேறு எவையும் இல்லை’ என்ற தருக்கினால்,  ஆணவமலம், அவன் அறிவை மறைக்க, அறியாமை இருளில் ஆழ்ந்தான். ‘யான்’ ; ‘எனது’ என்னும் ஆணவப்பற்றுக்கு ஆட்பட்டான். பற்றற்றவனாகிய பெருமானைப் பணிய மறந்தான். அதனால், ஆருயிர்க்கு அன்புசெய்தலையும் மறந்தான். நெறியல்லாத வகையில், உயிர்களுக்குத் துன்பத்தையே செய்தான். பால்நினைந்தூட்டுகின்ற தாயினும் பரிகின்ற பெருமான், உயிர்களுக்கு ஏற்பட்ட  துன்பத்தைத் தீர்க்க, சூலம் எடுத்தான்;  சூலத்தால் அந்தகனைப் பழிகொண்டான். (சிங்காரவேலனார், அபிதான சிந்தாமணி, பக்கம்: 23).

    அந்தகன் அருள்பெற்றுய்ந்த வரலாற்றை அப்பர் பெருமான்,

    ‘அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்’ (திருத்தாண்டகம்: 96:5) எனக் குறித்தருளியுள்ளார்.

    அடியேனையும் ஆட்கொண்ட பெருமான்

    ‘எந்தவொரு இலக்கியப் படைப்பிலும், படைப்பாளனது சாயலையுடைய மாந்தன், படைப்பாளனையும் அறியாமல் நுழைந்துவிடுகிறான். படைப்பாளன், அக்கதைமாந்தனைப் பற்றிப் பேசுகின்ற இடங்களில், படைப்பாளனைக் குறித்த பதிவுகளும் இடம்பெற்றுவிடுகின்றன’. (படைப்பாக்க ஆளுமைகள்: பக்:11).   பெருமான், ‘சூலத்தால், அந்தகனுக்கு மறக்கருணை தந்தான்’ என்று பாடிய அப்பர்பெருமான், அத்தொடரில், பெருமான், தன்னை ஆட்கொண்ட வரலாற்றையும் ஒருசேரச் சுட்டியுள்ளார்.

    சிவபெருமான், அறக்கருணை அல்லது மறக்கருணை என்ற இருவேறு நிலைகளில்நின்று உயிர்களுக்கு அருள்கின்றான். ‘வல்வினைகள் கொண்டிருந்த அந்தகனுக்குச் சிவபெருமான், மறக்கருணை தந்தருளினான். அதுபோன்றே தன்னை ஆட்கொள்ள வேண்டியும் சிவபெருமான், மறக்கருணயையே தந்தருளினான்’ என்று அப்பர்பெருமான் நினைந்தார் போலும். கூற்றுவனை ஒத்த சூலைநோயினைப் பெற்றுத் தாம் துன்புற நேர்ந்ததற்கும், ஆணவமலத்தால் தம்மிடம் விளங்கிய  அறியாமையே காரணம் என்றும் அவர் உணர்ந்திருந்தார். அதனாலேயே, ஆணவத்தின் உருவாகி, அறநெறியில் பிழைத்த அந்தகனை எண்ணியஅளவில், அவனது அறியாமை போன்றே, தானும் பெருமானை மறந்து சமணத்தில் வாழ்ந்திருந்ததாகக் கழிவிரக்கம் கொண்டார்’ எனக் கருதத்தகும். அதனாலேயே,  அந்தகனுக்கு மட்டுமல்லாமல், தனக்கும் அருள்செய்து காத்த பெருமானின் பெருங்கருணையை ஒருசேர நினைவுகூர்பவரானார். இதனை,

    ‘சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக் கொண்டாரே’ (திருத்தாண்டகம்: 96:7)

    என்று குறித்தருளியுள்ளார். சிவபெருமான், அப்பருக்கு அருளிய தொண்டுநெறியே, அவர்தம் பிறவிப் பெருநோய்க்கு மருந்தானது. ‘யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்னும் நோக்கில், பெருமானைப் பற்றி உய்கின்ற பெருநெறிக்கு வழிகாட்டவேண்டி, உயிர்களின் பேரறியாமையினைத் தனது அறியாமையாக ஏறிட்டுக்கொள்கின்றார். தன்னை, பார்வையற்ற குருடனாக, திருக்கோவலூர் திருப்பதிகத்துள் சுட்டியுள்ளார்.

    ‘கொத்தையேன்’ என்று குறித்துள்ளமை

    பெருமான், அந்தகாசுரனுக்கு அருளிய திருத்தலமாக அறியப்படுவது, நடுநாட்டிலுள்ள திருக்கோவலூர் வீரட்டமாகும். இத்தலத்துக்குரிய திருப்பதிகங்கள் இரண்டு (2:100, 4: 69). அப்பர்பெருமான், இத்திருத்தலத்தைப் பாடத்தொடங்கிய நிலையில், அந்தகனின் நிலையினைப் போன்றே, அனைத்து உயிர்களும் அறியாமை கொண்டிருப்பதை எண்ணிக் கலங்கியுள்ளார். பெருவரத்தால், கண்ணொளி பெற்றநிலையிலும், அந்தகனுக்குக் கண்களின் பயனாகிய பெருமானின் திருக்காட்சி காணுதலில் அறிவு செல்லவில்லை. அதைப்போன்றே, இயல்பாகவே ஆணவமலத்தால் பிணிக்கப்பட்டுள்ள அனைத்து உயிர்களிடத்திலும், அறியாமை மட்டுமே மிகுந்திருக்கின்றது. ஆணவமலத்தின் இருள்வலிமை மெலிந்தால் மட்டுமே, உயிர்களால், இறைவனை உணர இயலும்; அதுகாறும், பெருமானை உணராத அறியாமைக்கு உயிர்கள் இரங்கி, அவனை அணுப்பொழுதும் பிரியாமல் பற்றி உய்கின்ற அருள்பேற்றுக்குத் தலைப்படும். அவ்வாறு, பெருமானைப் பற்றுகின்ற பெரும்பேறு வாய்க்கப்பெற்றாலும், ஆணவமல வாசனை, உயிர்களிடத்தில் மெலியாது. ஆணவமலத்தின் இவ்வலிமையினைச் சிவஞானபோதம், ‘நிகழ்செம்பினிற் களிம்பு’ எனக் குறிக்கிறது. துலக்கித் தூய்மையாக்கிய செம்புப் பாத்திரத்தில், ஓரிருநாளில் களிம்பு தோன்றுவதைப்போல, மலக்கட்டில் உழல்கின்ற உயிர்களிடத்தில், ஆணவமலம் மீண்டும் மீண்டும் பெருமுனைப்புடன் செயல்பட்டு, அவை பெருமானை மறந்து, காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங்களுக்கும் ஆட்படுகின்ற கீழ்நிலைக்குத் தள்ளும். அக்கீழ்நிலையிலிருந்து விடுபட, உயிர்களின்  ஊனக்கண் உதவாது. பெருமானின் திருவருளே கண்ணாக இருந்து அவனைக் காட்டியருளவேண்டும்’ என்கின்ற நல்லறிவு, உயிர்களுக்கு வாய்ப்பதில்லை.

    அந்தகன், பிறப்பின்பொழுது கண்ணில்லாமல் இருந்து, அரனருளால் கண்பார்வை பெற்றவன்.  ஆயினும் அவன், தனது கண்ணின் மணியாக அரனாரே விளங்குவதை உணரவில்லை. ஆணவமலம், அவனது அறிவை மறைத்ததால், கண்களும் அவனுக்கு, அரனாரைக் காட்டி உதவவில்லை. மண்ணுலகில், பல்லுயிர்களும் இத்தகைய அறியாமையையே கொண்டுள்ளன. அப்பர்பெருமான், இதை நினைந்து இரங்குகின்றார். உயிர்களின் அறியாமையினை, தன்னுடைய அறியாமைக் குறையாக ஏறிட்டுக்கொள்கின்றார். அதன் வெளிப்பாடாக, தம்மைத் திருப்பதிகத்துள் இரண்டு இடங்களில், ’மெய்ப்பொருளை ஞானக்கண்ணால் உள்ளவாறு உணர்ந்தறிய இயலாத குருடன்’ என்பவராக, ‘கொத்தையேன்’ என்று  குறித்துள்ளார் (திருமுறை:4-69-1,8). குழந்தையின் பிழையினைத் தனது பிழையாக ஏற்றுக்கொள்கின்ற அவர்தம் தாயுள்ளத்துடன், ‘உயிர்களின், காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களும் நீங்க, அந்தகன் அருள்பெற்ற வரலாற்றின்வழியே அருள்நெறி  காட்டுகின்றார். ‘முக்குற்ற நீக்கத்துக்கும் திருவருளே துணையாகும்’  என்பதைக் காஞ்சிப்புராணமும், அந்தகேச வதைப்படலத்தில் விரிவாக வலியுறுத்தியுள்ளது (தமிழ் இணைய கல்விக்கழகம், காஞ்சிப் புராணம், பக்கம் 401-409).

     அந்தகன் போல அறிவழிந்தோர்

    இப்புராண வரலாறு, அரனருளால், அளவில்லாத ஆற்றலைப்பெற்ற அந்தகன் அறநெறி தவறி, தனது ஆற்றலை மிகவும் வியந்து, ஆணவத்தால், விண்ணவரையும், மண்ணவரையும்  வெகுண்டு  அஞ்சச்செய்தான். அந்தகனுக்கு அஞ்சிய திருமால் முதலான வானவர்கள், பெண்ணுரு எய்தி, உமையம்மையிடம், சரண்புகுந்து, அவர்தம் சேடியர்களாக மறைந்து வாழ்ந்தனர். ஆனால், அந்தகனோ, வானவர்பால் இரக்கம் கொள்ளாமல், தன்பால் அச்சம்கொண்ட வானவரைச் சிறைப்படுத்த அறியாமையுடன் முனைத்தெழுந்தான். ஆணவம்கொண்டு படைநடத்திவந்த அந்தகனை எதிர்க்கவேண்டி, உமையம்மை வீரகன்னியர்களை எதிர்விடுத்தாள். வீரகன்னியர்களுக்கு அஞ்சிய அந்தகன், புறங்காட்டி ஓடிப் பிழைத்தான். அம்மையோ, பசுங்குழவிகளாகிய நமக்காக அப்பனிடமிருந்து என்றும் குறைவில்லாமல் திருவருளைப் பெற்றுத்தருபவள். அத்தகைய தாயுள்ளத்துடனேயே, ‘அந்தகனும் உயிர்கொண்டு வாழட்டும்’ என எண்ணி, அம்மை அவன் தோற்றோடி உயிர்ப் பிழைத்திருக்க அருளினாள். திருவருள் நிலையுடையவளாகிய அம்மையால் அறிவுறுத்தப்பெற்றும், அவனால் நன்மையை உணர இயலவில்லை. ஆணவமலம் மிகுந்த வலிமையுடன், அவனது அறிவை மறைத்தது. அதனால், தான் உய்கின்ற நல்லறிவை அவன் சிந்திக்கவில்லை. தோல்வியால் ஏற்பட்ட சோர்வு நீங்கி, அவன் ஆணவ எழுச்சியுடன் மீண்டும், வானவரை எதிர்க்கவந்தான். அந்நிலையில், அவனை அழித்தொழிக்கச் சிவபிரானார், வைரவத்தேவரை அனுப்பியருளினார்.

    பெருமானின் அருளாணையின்வண்ணம் வந்தருளிய வைரவத்தேவரும், தமது கூரிய முத்தலைச் சூலத்தில் அவனைக் கோத்து, அல்லல்படுத்தி, மறக்கருணையால் அவன் மெய்யுணர்வைப் பெற்றுய்ய வகைசெய்தார். ‘மேலும் தன்னிடத்தில் மெய்யுணர்வை மிகுவித்து, வீடுபேற்றினைத் தந்தருள வேண்டும்’ என்று அவன், வைரவத்தேவரைப் பணிந்தான். அதற்கு, வைரவத்தேவரோ, ‘பெரும்பேறாகிய, வீடுபேற்றினைப் பெருமான் ஒருவனே தந்தருள வல்லவன்’ என்று உணர்த்தியருளினார். அந்நல்லுணர்வின் மேன்மையால், சிவபிரானை அவன் சரண்புகுந்தான். ‘ஊரே சிவலோகமாகவும், மக்கள் அனைவரும், சிவகணங்களாகவும், அங்குப் பிறத்தலே, வீடுபேற்றுக்கான வகை’ என்ற உயர்மேன்மைகள் உடையதாகிய,  ‘காஞ்சி மாநகரை’ அடைந்துய்ய அருளினார். அந்தகனும், பலகாலம் அங்கிருந்து, பெருமானை இலிங்கத் திருமேனியாக வழிபட்டு, இறுதியில் அத்திருமேனியிலேயே கலந்துய்ந்தான்’ என்று காஞ்சிப்புராணம் விவரிக்கிறது. அந்தகன் திருவருள் பெற்றுய்ந்த அத்திருத்தலமானது, ‘அந்தகேசுரம்’ என்னும் திருப்பெயரால் இன்றும் விளங்குகிறது.

    பிச்சை உகக்கின்ற திருவிளையாடல்:

    மேற்கண்ட புராணவரலாற்றின் இடைப்பகுதி, பெருமான், தாருகாவனத்து முனிவர்களுக்கும், அவர்தம் மனைவிகளுக்கும் அருளவேண்டி, பிச்சை உகக்கின்ற பெருமானாகச் சென்றருளிய திருவிளையாடலையும் மிகவிரிவாகச் சுட்டியுள்ளது.  அந்தகன், திருமால் முதலான வானவரை எதிர்க்கக் கயிலையை நோக்கி முதன்முறை வந்து தோற்றோடிய அளவில், அவனை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டிய சூழல் அமைந்தநிலையிலும், பெருமான் அவனைத் தனது வலிமையால் அந்நொடியிலேயே அழித்தொழிக்க எண்ணவில்லை.  ‘தாம் வளர்த்த நச்சுமரத்தையும் வெட்டத் துணியாத சான்றோனாகிய பெருமான், கயிலையிலிருந்தும் தாருகாவனத்தை அடைந்ததாகப் புராணம் கூறுகிறது.

    அந்தகன், ஆணவம் தந்த வெகுளியின் மயக்கில், வானவரைத் துன்புறுத்த நினைத்த அறியாமையினைக் கடிவதற்கும்கூட மேலும் சில காலம் பொறுக்கலாம்’ என்று பெருமான் நினைத்திருந்தான் போலும். அதனாலேயே, ஆணவத்தால் சினம்கொண்ட அவனை உடனே அடர்த்து அருள்செய்வதையும் விடுத்து, ‘தாருகாவனத்தில் புகுந்தான்’ எனலாம். பிறப்பால், அசுரத்தன்மை பெற்றிருந்தும், அறிவால் ஆணவம் மிக்கும் இருந்தவன் அந்தகன். அவனுக்கு அருளவேண்டிப் பெருமான், சற்றே காலம் தாழ்த்தினான். ஆனால், பெருமானை மறந்திருந்த, தாருகாவனத்து முனிவர்கள் மற்றும் அவர்தம் மனைவியரிடத்தில் ஆணவ அறியாமை மிக்கிருந்ததைக் கண்டு பொறுத்திருக்க மனமின்றி, உடனே அதனைக் களைந்தெறிந்து அவர்களை உய்விக்கத் தாருகாவனத்திற்குச் சென்றான். ‘வேதமும், வேள்வியும், அதன் பயனும்’ என அனைத்துமாகப் பெருமானே விளங்குகிறான்.

    முனிவர்கள் ஆணவத்தால் இதை மறந்து, தமது முயற்சியால் மட்டுமே வேள்வியும், அவற்றுக்கான பயன்களும் சிறந்திருப்பதாக தருக்கினர்; மேலும், பெருமானை வணங்குதற்குரிய, வேள்வி முதலான நற்செயல்களுக்கு அரனருளே துணைசெய்கிறது’ என்பதையும் முனிவர்தம் மனைவியர்கள் மறந்திருந்தனர். ‘தமது கற்பாகிய மனவலிமையே, வேள்வி முதலான புண்ணியங்களுக்குக் காரணம்’ என்றும் ஆணவம் கொண்டிருந்தனர். இவ்வாறு, பெருமானையும், அவனது, திருவருளையும் மறந்து, அவர்கள் செய்த வேள்வி முதலான செயல்கள், பதிபுண்ணியங்களாகப் பெருகாமல், அவர்களிடத்தில், ஆணவஇருளை மேலும் வளர்க்கின்ற பாவச்செயல்களாகிய பசுபுண்ணியங்களாகவே அமையக்கண்டு, அதற்கு இரங்குபவன் பெருமான்.  பசுபுண்ணியங்கள், வினைப்பயனைத் தந்து, முனிவர்களுக்கும், அவர்தம் மனைவியர்க்கும், மேலும் பல பிறவிகளைத் தந்து, துன்புறச்செய்யும் என்பதை நினைந்தான். எனவே, முனிவர்தம் மனைவியர்கள், மெய்யுணர்வு பெறுகின்றவகையில், அவர்கள்தம் ஆணவத்தின் தன்முனைப்பைச் சிதைத்தருள்கின்றநோக்கில், பேரழகனாக, பிச்சை உகக்கின்ற திருக்கோலத்தில் வந்தருளினான். அங்கிருந்த பெண்களும், பெருமானின் பேரழகில் திளைத்தனர். தாம், பெண்கள் என்பதையும் மறந்தனர். காமமாகிய ஆணவச்சேட்டையில் ஆழ்ந்து, பெருமானை அடையத் துடித்தனர்.  தம்மை மறந்து, தம்நாமம் கெட்டு, பெருமானுக்கே பித்தியராக அறிவழிந்த அவர்களைப் பெருமான், கருணைநோக்கத்தால் காத்தருளி மெய்யுணர்வைத் தந்தருளினான்.

    இதை அறிந்த முனிவர்கள், ஞானக்கண் கொண்டு பெருமானைப் பணிய முற்படவில்லை. ‘ஊனக்கண்கள், பதியை உணராது’ என்ற அறியாமைக்கு இலக்கணமாகி, பெருமானை எதிர்க்க, முயலகனையும், பாய்புலியையும், கொல்களிற்றையும், விடநாகத்தையும் வேள்வியிலிருந்து ஏவினர். வைதாரையும் வாழ்விப்பவனாகிய பெருமான், முயலகனைத் தன் திருவடிக்கீழ் இருத்தி அருளினான்; புலித்தோலும், நாகமும், யானையின் தோலும் திருமேனியில் விளங்கும்படிச் செய்தருளினான்.  பசுஞானம் தந்த அறியாமையால், தம்மை மறந்த முனிவர்களின் அறிவைப் பிணித்திருந்த ஆணவ மயக்கத்தையும், தனது ஞானநோக்கத்தால் பெருமான் விலக்கியருளினான். அதன் பின்பு, தாருகாவனத்து முனிவர்கள் தமது மனைவியருடன், காஞ்சி மாநகரத்தில் பிறந்து, இல்லறம் நடத்தி, இறுதியில் தம்மை வந்தடைந்துய்ய அருளினன்’ என்பது புராண வரலாறு.

    வாழ்வியல் நெறி

    இப்புராணத்தில், ஆணவமலப் பிணிப்பின் அறியாமையால் நெறியற்று, காம வலைப்பட்டவர்களாக, தாருகாவனத்து முனிவர்களின் மனைவியரைக் காண்கின்றோம். தனக்குக் கிடைத்த அரியபேற்றை மதியாமல், ஆணவத்தால் அறிவழிந்து, சினம் என்னும் குன்றேறிச் சிறப்பழிந்தவனாகவும், அறியாமை உடையவனாகவும் அந்தகனைக் காண்கின்றோம். அத்துடன்,

       வேதங்கள் பல கற்றிருந்தும்,  ‘ஞானம் ஈசன்பால் அன்பே’ என்பதை மறந்து, புண்ணியங்களைச் செய்வதே பெரும்பேறு’ என்று கருதிய ஆணவமயக்கத்தின் அறியாமையுடையவர்களாக முனிவர்களைக் காண்கிறோம். ‘காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களும் நீங்கினால் மட்டுமே உயிர்கள் பிறவிப் பிணிநீங்கி உய்வடையும்.   இவ்வுண்மையை,
    ‘காமம், வெகுளி, மயக்கம் என்னும்மூன்றன்  நாமம்கெடக் கெடு நோய்’      (திருக்குறள்: 360)

    என வள்ளுவமும் வலியுறுத்துகின்றது. அவ்வகையில், ‘நெறியுடைய காமமும், சினத்தை நீக்கிய சிந்தையும், மெய்ப்பொருளைக் காண்கின்ற அறிவும், நம்மை மண்ணில் நல்லவண்ணம் வாழச்செய்து, வானுறையும் தெய்வப்பேற்றுக்கு வகைசெய்யும்’ என்பதே அந்தகனைக் குறிக்கின்ற தொன்மம் உணர்த்துகின்ற வாழ்வியல்நெறியாகும். 

    முடிவுரை:

    ஆணவமலத்தின் வலிமையால், உயிர்களிடத்தில், ‘காமம், வெகுளி, மயக்கம்’ என்னும் முக்குற்றங்களும் விளையும் என்பதை விளக்கவும், ‘சிவபிரானின் பெருங்கருணை,  ஆணவத்தின் வலிமையை மெலியச்செய்து, ‘ஞானம் ஈசன்பால் அன்பே’ என்னும், உயர்ஞானத்தை விளங்கச்செய்யும்’ என்பதை வலியுறுத்தவும், அப்பர்பெருமான், அந்தகனின் வரலாறாகிய தொன்மத்தைத் தமது திருப்பதிகத்துள் எடுத்தாண்டு அருள்நெறி காட்டியுள்ளார்.

    *****

    ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:

    1. தேவாரத் திருப்பதிகங்கள்., ஞானசம்பந்தன். அ.ச., கங்கை புத்தக நிலையம், சென்னை:17,         ஐந்தாம் பதிப்பு: ஜனவரி 2005.
    1. அபிதான சிந்தாமணி., சிங்காரவேலு முதலியார். ஆ., சீதை பதிப்பகம், சென்னை: 5, முதற் பதிப்பு (செம்பதிப்பு): டிசம்பர் 2004.

    *****

    கட்டுரையாசிரியர்
    ஆய்வாளர் – தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.
    நெறியாளர்: முனைவர் இரா. மதன் குமார்.

    Share
  • “சோழர்காலப் பெண்மை”

     

     

     

    டாக்டர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி

    இணைப் பேராசிரியர்  (ம)  துறைத்தலைவர்(iஃஉ)

    தமிழ்த்துறை

    தியாகராசர் கல்லூரி

    மதுரை-625009

     

    தமிழ்நாட்டின் பழம்பெருமையை பழந்தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகளை, பழந்தமிழ் இலக்கியங்களோடு மட்டும் அல்லாமல் மூவேந்தர், குறுநிலமன்னர்கள் போன்ற இவர்தம் வரலாற்றுப் பதிவுகளில் இருந்தும் அறிந்து கொள்ள முடிகின்றது.

     

    குறுநில  மன்னர்களை    உள்ளடக்கி  முடியுடை    மூவேந்தர்களாக    சேரர், சோழர்,

     

    பாண்டியர் என முடியாட்சியுடன் குடியாட்சி நிகழ்த்தியுள்ளனர். அவர்களுள் சோழர்களின் கலை, இலக்கியம், சமயம் ஆகியவற்றுக்கான பணிகள் தனித்துவம் பெறுவதாக விளங்குகின்றன.

     

    முற்காலச்    சோழர்களின்             வரலாற்றை               எழுதப்புகுந்த             திரு.    நீலகண்ட      சாஸ்திரி,

     

    திரு.    கே.கே.             பிள்ளை,         டாக்டர்.           இராசமாணிக்கனார்,           திரு.                வேங்கடசாமிநாட்டார்,

     

    திரு. மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்கள் வெற்றி பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் ஆவர். இவர்களையெடுத்து ரா. இராகவ ஐயங்கார், மு. இராகவ ஐயங்கார் போன்றவர்களும் அடங்குவர். (பழங்கால சோழர்களின் வரலாறு – அ. சவரிமுத்து – பக். 4)

     

    சோழ மன்னர்கள்   அவர்களின் பரம்பரை        பற்றிய             செய்திகள்,   சோழர்களின்

     

    படைத்தளபதிகள், படைச்சிறப்புகள், ஆட்சிமுறைகள், பாசனக் கொள்கைகள், நாணயங்கள், பழங்கால நாட்டு மக்களின் சமுதாய பழக்க வழக்கங்கள், திருமண முறைகள் எனப் பல்வகைக் கூறுகளையும் மேற்குறித்தோரின் ஆய்வுகள் நமக்குப் பறைசாற்றி நிற்கின்றன.

     

    சோழநாடு சோறுடைத்து என்ற சொலவடை நாம் அறிந்ததே. ஆனால் சோழநாடு எனும் பெயர் நபர்களை மையமிட்டதா? அன்றி நிலத்தை மையமிட்டதா? என்று கேள்வி எழுகின்றது. இதற்கு விடையாக நாம் சோழ நாட்டின் அமைப்பையும் தொன்மையையும் அறிய வேண்டும்.

     

    “கடல் கிழக்குத் தெற்குக்கரை பொரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல்.”

     

    என்று                சோழ நாட்டு               எல்லையைப்            பழம்பாடல்  ஒன்று              பகர்ந்துள்ளது.

     

    கிழக்கு – மேற்கில் 24 காத தூரம், வடக்குத் தெற்கில் 24 காத தூரம் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கடலில் கலக்கிடும் காவிரி, பாலாறு, தென்பெண்ணை, வடபெண்ணை, கிருட்டிணா ஆகிய ஆறுகளின் கழி முகப் பகுதியாக, வடிநிலமாக சோழநாடு அமைந்துள்ளது.

     

    நீர் சுழல் நாடு  நீர்சூழ்நாடு  நீர்சோழநாடு  சோழநாடு. இதையே ஆங்கிலத்தில் சோழ மண்டலக் கடற்கரை என்ற பொருளில் “ஊhழசய அயவெயட ளுநயளாழசந” என்று வழங்குகின்றனர்.

     

    சோழநாடு என்பது சோழவளநாடு, தொண்டை நாடு என்று இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டு, பிறகு ஒவ்வொரு நாடும் கூற்றங்களாக, சிறுநகரங்களாக, சிறுநாடுகளாக, மண்டலங்களாக வகுக்கப்பட்டன.

     

    தலாமி என்ற யவண வரலாற்று ஆசிரியர், பிளினி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், கிரேக்கர் தம் பெரிப்ளுஸ் என்ற நூல் இவற்றின் வாயிலாக அறியலாகும் செய்திகள் சோழநாட்டின் பெருமையை நமக்குப் பறை சாற்றி நிற்கின்றன.

     

    சோர்நாடு என்று இவர்தம் குறிப்பில் இடம்பெறுவது சோழநாடு என்பது வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு கிரேக்கத்தில் உள்ள காபேரிஸ் என்ற சொல்

     

    காவிரியைக் குறிக்கும். அம்மொழியில் கடைசியில் ஸ்(5) உச்சரிக்கப்படுவதில்லையாம். அவ்வாறெனில் காபேரி என்பது நமது காவிரியைக்

     

    குறித்து அதன் பட்டினமாம் காவேரிப் பூம்பட்டினத்தையே குறித்து நிற்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

     

    நவீன தேசப் படத்திற்கும் தாலமி வரைந்துள்ள தேசப்படத்திற்கும் வேறுபாடு உள்ளதாம். நவீன தேசப் படத்தில் அட்சரேகை நில நடுக்கோடு 0 (சுழியம் – பூஜ்ஜியம்) (பாகை – டிகிரி) என்பது சுமத்திர தீவின் நடுவில் செல்கிறது. ஆனால் தலாமி வரைந்த நிலப்படத்தில் இலங்கையின் நடுவில் நிலநடுக்கோடு செல்கிறது. இதனால் 60 பாகையைக் கூட்ட நவீன அட்சரேகை கிடைத்து விடுமாம்.

     

    அதுமட்டுமா? அது போலவே 0 (சுழியம் – பூஜ்ஜியம்) நவீன தீர்க்கக் கோடு கிரீன் வீச் வழியே செல்கின்றது. ஆனால் தாலமி கணிப்பு 00 டிகிரி (பாகை) ஐஸ்லாந்தில் தொடங்கிற்று. ஐஸ்லாந்து கிரீன் வீச்சுக்கு மேற்கே 200 டிகிரி உள்ளது. 200 டிகிரியைக் கழித்தால் நவீன கிரீன்வீச் கிடைத்துவிடும்.

     

     

    தாலமி 329.7-ல் இருப்பது பெரே (டீநசயந) இது திருச்சிக்கும் கரூருக்கும் செல்லும் பாதையில் “பாராய்” என்ற திருப்பராய்த்துறை என்னும் இடத்தைக் குறிக்கின்றது.

     

     

    இது மேற்கே திருச்சியிலிருந்து 13கி.மீட்டர் தொலைவில் உள்ளது. பெரே என்ற இந்தப் பதிவு பேரூர் ஆகக் கூட இருக்கலாம்.

     

    தென்னகரா  என்ற சொல்   தென்னரங்கரம்   என்பதான     ஸ்ரீரங்கத்தைக்

     

    குறிக்கலாம் என்று தாலமி பற்றி எழுதிய வி.எஸ்.வி. இராகவன் அவர்கள் குறிப்பிடுகிறார். (பழங்கால சோழர் வரலாறு – பக். 16,22)

     

    வடமொழியில் சோரன் என்ற சொல்லுக்குத் திருடன் அல்லது கள்ளன் என்பது பொருள். சோரன் என்பது உருமாறி சோழன் என்று ஆனதாக வரலாற்று ஆசிரியர் டி.ஆர். பந்தர்க்கர் கூறியுள்ளார். (டீhயனெயசமயச. னுச. யுnஉநைவெ ஐனெயை Pயபந-89). இது தவறான பொருளாகும். தமிழினத்தை இழித்துப் பேச நினைப் போரின் இழிந்த தன்மை. மேலும் வல்லின ற கரம்தான் ழ கரமாகத் திரியுமே ஒழிய, இடையின ர கரம் ழ கரமாகத் திரியாது. இது தமிழ்மொழியின் இயல்பினை அறியாதவரின் விழைவார்ந்த விருப்பமாகத் தோன்றுகிறது என்று “சேர சோழ பாண்டியர்” என்ற நூலில் மயிலை. சீனி வேங்கடசாமி கருத்துரைத்துள்ளார்.

     

    சோழர்களைச்           செம்பியன்,  சென்னி,          வளவன்,        கிள்ளி               எனத்  தனித்தனியாக

     

    அழைப்பினும்           இவர்தம்         ஒட்டுமொத்தப்        பெயர்                சோழரே.        மன்னர்கள்   மட்டும்

     

    அல்லாது நிழக்கிழார்களும், அரையர்களும் சிற்றரசர்களாக இருந்தும் சங்க காலத்தில் ஆண்டு இருக்கிறார்கள்.

                 பழவேல்  தரையன்   பழுவேட்டரையன்.

     

                 முத்தரையன்   முத்தரசன்.

     

                 சோணாட்டுப்  பிடவூர்க்  கிழான்.

     

                 சிறுகுடிக்  கிழான்.

     

                 இருங்கோவேள்.

     

                 வல்லம்  கிழான்.

     

                 மலையமான்.

     

                 கொல்லிமலை  அரசன்.

     

                 ஆர்க்காடு  சோழன்.

     

                 தொண்டைமான்.

     

                 ரேனாட்டுச்  சோழன்

     

    என்பவர்களே            அவர்கள்,       இவர்களைத்              தவிரவும்       பட்டையதார்கள்,   நிலம்

     

    உடையர்வர்கள், அம்பலக்காரர்கள், கிழார்கள், நாட்டார்கள், வேளாளர்கள், முத்தரையர்கள், காவுந்தர்கள், காவல்காரர் போன்றவர்களும் சோழப் பேரரசிற்குத் துணையாக நின்று ஆள்வதற்குத் துணை நின்றிருக்கிறார்கள். (பழங்காலச் சோழர் வரலாறு – பக். 32)

     

    இவர்களிடம்   அந்தப்               பகுதி  வளம்;,    நீர்ப்பாசனம்,    வரிவசூல்,    தண்டம்,

     

    வாணிகம், தொழில், வேளாண்மை, மேற்பார்வையிடுதல் போன்றவை ஒப்படைக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டது.

     

    சோழவள நாட்டில் அகத்திய முனிவர் வருகைக்கு முன்னரே சோழர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். சோழ மன்னன் முசுகுந்தன் காலத்தில்தான் ஆரிய

     

    பிராமணர்     செல்வாக்கு ஏற்பட்டது     என்கின்றனர்             ஆய்வாளர்கள்.         ஊர்தோறும்

     

    பிராமணர் செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. பிராமணர் குடியிருப்பு மையப்படுத்தப்பட்டது. சாதியமுறை குடியிருப்பு உருவானது என்பதும் அவர்தம் கணிப்பு. (பழங்காலச் சோழர்களின் வரலாறு – பக். 71).

     

    தமிழ்நாட்டில்           சாதிய               முறைக்கு     வித்திட்ட      முசுகுந்தச்    சோழனுக்குப்            பின்னர்

     

    காலந்தோறும்         கடைப்பிடிக்கப்பட்டு           வந்தாலும்    களப்பிரர்,       பல்லவர்,       பிற்காலச்

     

    சோழர்கள் காலத்தில் மெல்ல மெல்ல உயர்ந்து தீண்டாமை உச்சத்துக்கு உயர்ந்தது. அதனால் சாதீயம் ஒழிக்கப் பெரியபுராணத்தைச் சேக்கிழார் எழுதி சாதீயத்தை ஒழிக்கப் பாடுபட்டார் என்பதும் தெளிவு.

     

    இத்துணை   சிறப்பு               வாய்ந்த          சோழப்             பேரரசின்        பெண்மை      நிலைப்பாடு                குறித்து

     

    அறிய வேண்டியுள்ளது அவசியம் மட்டுமல்ல ஆர்வமும் கூட. ஏனென்றால் சோழர்காலத்தில் தான் கலைகளின் வளர்ச்சியும் போற்றுதலும் உச்சகட்டத்தில்

     

    இருந்திருக்கிறது. குறிப்பாக கட்டடக்கலையும், கோயில் கலையும் மகுடம் கூட்டியது என்றே கூறமுடியும். அவ்வாறெனின் கலைகளுக்கும் பெண்களுக்கும் உள்ள சம்பந்தமும் பிரிக்க முடியாததே!

     

    எனவே            சோழர்              காலப்                பெண்மையை           ஒட்டு                மொத்தமாகக்           கூறிவிட                முடியுமா?

     

    என்பது             கேள்விக்குறியே.  அரசமகளிர்,                சாமானியப் பெண்டிர்,        கலைகளோடு தொடர்புடையவர் என முப்பரிமாணங்களில் சோழர் காலப் பெண்களை நோக்குவதே! சாலப் பொருத்தம் என்று தோன்றுகிறது.

     

    சோழ அரசன் என்றவுடன் ராஜராஜசோழன் அவன் குலப் பெண்டிர் என்றவுடன் அவன் தமக்கையார் குந்தவைநாச்சியாருந்தான் இக்காலத் தமிழ் மக்கள் மனதில்

     

    முதற்கண்    தோன்றும்    உருவங்களாக          உள்ளன.         அதற்குக்        காரணம்

     

    தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த இராஜராஜசோழன் என்ற திரைப்படம். அப்படத்தில் வரும் காட்சி ஏடுதந்தானடித் தில்லையிலே… என்ற கணீர்க் குரலுடன்

     

    தோன்றும் ராஜலெஷ்மியின் இராஜமாதா தோற்றம். ஆணையிடும் தோரணை, வழிநடத்தும் பாங்கு, பக்தித் திறம், இசைப் புலப்பாடு, அழகும் அறிவும் நிறைந்த இராஜகளை இத்தனையும் அச்சோழர் குலப் பெண்ணிடம் நிறைந்திருந்ததை நாம் கண்டு களித்தோம்.

     

    மற்றொரு     புனைகதை  கல்கியின்     “பொன்னியின்          செல்வன்”  தமிழ் மக்களை

     

    எழுத்தாலும், வரலாற்றுச் செய்திகளாலும் இராஜதந்திரக் காட்சிகளாலும், விவரணைகளாலும் கட்டிப் போட்ட நாவல். அதில்வரும் பெரிய குந்தவை, சின்ன

     

    குந்தவை,      நந்தினி,           பூங்குழலி     எனும்                இவர்கள்         நம்       மனதில்          ஆழப்பதிந்த

     

    கதாபாத்திரங்கள். அரசகுலப் பெண்டிரின் அத்தனை திறமைகளும் கொண்ட பெண்கள் இருவர். பழிவாங்கும் மனம் படைத்த பெண். அன்பு செலுத்துதற்கும் விட்டுக் கொடுத்தற்கும் முகாரி ராகம் பாடுவதற்கும் என சோக வடிவில் ஒரு

     

    சாமானியப் பெண் என இவர்களைப் படைத்துக் காட்டியது அந்நாவல். கற்பனை மாந்தர்கள்தானே என்று கடந்து போக முடியாத கல்வெட்டுப் பாத்திரங்கள் அவை.

     

    சங்க இலக்கியப் பக்கங்களைப் புரட்டினால் அரிதான ஒரு சம்பவத்தை உணர்த்தும் பாடல் ஒன்று புறநானூற்றிலே பதிவாகியுள்ளது. முட்டிக் கொண்டும்

     

    முறைத்துக் கொண்டும் திகழ்கின்ற சேரசோழ பாண்டியராம் மூவேந்தர் ஒரு பெண்பாற் புலவரின் அறிவுரையை ஒருங்கே அமர்ந்து கட்டிக் கொண்டு கேட்டனர் என்பது அதிசயத்தக்கதுதானே! ஆம்! பாடாண் திணையில் அமைந்த வாழ்த்தியல் துறைப் பாடல்தான் அது.

     

    சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு கூடியிருக்க அவரை ஒளவைப் பிராட்டி பாடிய பாடலும் அதுவே.

     

    “நாகத்து அன்ன பாகுஆர் மண்டிலம் தமவே ஆயினும் தம்மொடு செல்லா@ வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும் ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து புhசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய நார் அரிதேறல் மாந்தி, மகிழ் சிறந்து, இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டும், இவண் வரைந்தவைகல்@ வாழச் செய்த நல்வினை அல்லது ஆழுங்காலைப் புணைபிறிது இல்லை@

     

    ஒன்று              புரிந்து               அடங்கிய      இருபிறப்பாளர்

    முத்தீப்            புரையக்          காண்தக         இருந்த

    கொற்ற            வெண்குடைக்           கொடித்தேர் வேந்திர்!

    யான்  அறி     அளவையோ             இதுவே@       வானத்து

    வயங்கித்       தோன்றும்    மீனினும்,      இம்மெனப்

    பரந்து                இயங்கு           மாமழை        உறையினும்

    உயர்ந்து          மேந்   தோன்றிப்     பொலிக           நும்      நாளே.”(புறம்.            பா.        எண்.   367).

     

    “மூவேந்தர்களே!                வேந்தராயினும்      இறக்குங்கால்           ஆட்சிபுரிந்த                நாடு                அவருடன்

    செல்லாது.   அவருடைய               நாடு    வழித்தோன்றல்     கட்டு  என்றாலும்   சிலபோது

     

    அதுவன்றி நோற்றார்க்கு உரிமை உடைத்தாக மாறிவிடும். இவ்வுலகத்தே வாழுங்காலம் நல் வினை புரிந்து வாழ வேண்டும். இறக்கும் போது ஒருவன் செய்த நல்வினையே துணையாவது அன்றிப் பிறிதில்லை என்பதை உணருங்கள்.” என்று

     

    பெண்பாற் புலவர் ஒருவர் அறிவுரை கூறும் காட்சி பெண்மையின் திறத்தையும் உயர்நிலையையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

     

    இப்பாடற்       சம்பவத்தினின்றும்            மற்றொரு     நுட்பத்தையும்          காண முடிகிறது.

     

    சேரமான் மாரி வெண்கோ, பாண்டியன் காணப் பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என மூவரும் கூடிய கூட்டுறவு அவையில் மூவர்க்கும் பொதுவாகவே,

     

    “ஏற்ற  பார்ப்பார்க்கு  ஈர்ங்கை  நிறைப்

    பூவும் பொன்னும்   புனல்படச்     சொரிந்து”

     

    என்று                ஒளவை         அறிவுறுத்துகிறார்.              அவர்  காலத்தில்    பிராமணர்களுக்குத்                தகுந்த

     

    மதிப்பளிப்பது           குறைந்திருக்க         மீண்டும்         அம்மதிப்பை              ஒளவையார்              பெற்றுத்

     

    தருகிறார்.     அதன்                பின்னரே        இராயசூயம் வேட்ட             பெருநற்கிள்ளி         மீண்டும்

     

    பிராமணர்களுக்கு மதிப்புத்          தரத்    தொடங்கினான்       என்று                வரலாற்று    ஆசிரியர்கள்

     

    விகசித்து எழுதியுள்ளனர். வாழ்வின் உண்மை உரைத்தலோடு மட்டும் நின்றுவிடாது. ஒரு இனப் போற்றுதலுக்கான பரிந்துரையையும் மன்னர்க்கு ஒரு

     

    பெண் வழங்கியதையும், அதனைச் சோழமன்னன் ஏற்றதையும் காணும்போது, சோழர்கள் பெண்மையைப் போற்றி வந்துள்ளனர் என்றே தெளிய முடிகிறது.

     

    தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தின் வழி நாம் அறிந்து கொண்ட சேரன் செங்குட்டுவன், இளங்கோ அடிகள் இவர்களின் தாய் நற்சோணை என்பவள் கி.பி. 105-135 வரை வாழ்ந்த சோழ மன்னன் மணக்கிள்ளி என்பவனின் மகளாவார். “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்ற உன்னத சிந்தனையை

     

    உலகுக்கு தருதற்பொருட்டு கருவிலே உருவேற்றிய நற்சோணைக்கு நல்வணக்கங்கள் கூறுவோம்.

     

     

     

    பாண்டிய நாட்டில் சைவந் தழைத்தற்குக் காரணமாக விளங்கிய மங்கையர்க்கரசியாரும் சோழர் குலப் பெண்ணே. பாண்டிய மன்னனை மணந்து சோழர் குலமகளாய் சைவந்தழைக்கத் தக்க துணையாய் நின்றவர். அதனால்

     

    தானே பக்தி இலக்கியமாம் தேவாரமும் அவரைப் போற்றிப் பரவுகின்றது. மன்னனுக்காய் புறத்தும் மதத்திற்காக அகத்தும் வெளித்தெரியாது திருநீறுபூசிக் கொண்டு அத் திருநீற்றை மன்னணும், மன்னன் வழி மக்களும் ஏற்றுப் பகிரங்கமாய்

     

    பறைசாற்றிய இராஜதந்திரி மிகுந்த மதியூகியாகவும் மங்கையர்க்கரசியார் திகழ்ந்தார் என்பது வியத்தற்குரியது.

     

    “மங்கையர்க்கரசி  வளவர்  கோன்  பாவை  வரிவளைக்  கை  மடமானி

    பங்கயச்          செல்வி            பாண்டிமா     தேவி பணிசெய்து நாடொறும்   பரவ…”

     

    என்று சோழர்குலமகள் பாண்டியன் மாதேவி பரவும் பெருமையுடைவன் சிவன், ஆலவாய் அண்ணல் என்று இறையையே குறிப்பிடும் அளவிற்குப் பக்தியின் உன்னத இடத்தைச் சோழர்குலப் பெண்கள் பெற்றிருந்திருக்கிறார்கள் என்பது போற்றுதற்குரியது.

     

    மூவேந்தருடன் தொடர்புடையதோடு மட்டுமல்லாமல் வரலாற்றில் பிறநாட்டுடன் அல்லது அண்டைநாட்டுப் பெண்களின் தொடர்புடனும் சோழதேசம் தனது ஆட்சி

     

    எல்லையை மற்றும் கலாச்சார எல்லையினை விரிவுபடுத்தியிருந்ததையும் காணமுடிகிறது.

     

    மணிமேகலை என்ற ஐம்பெருங் காப்பியத்தால் அறியப்படும் மன்னன் சோழன் நெடுமுடிக் கிள்ளி. பூம்புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன்

     

    (கி.பி. 135-170) அவனுடைய மகன் உதயகுமாரன். இளவரசனான இவன் சிலப்பதிகார மாதவியின் மகள் மணிமேகலையை ஒருதலையாகக் காதலித்து வந்தான். பல நேரங்களில் பல வழிகளில் அவளை அடையமுயன்றான். அவனது தொல்லைக்குப் பயந்து மணிமேகலா தெய்வத்தை வேண்டுகிறாள் மணிமேகலை.

     

    அத்தெய்வம் அவளை மணிபல்லவத்தீவிற்குத் தூக்கிச் செல்கிறது. அங்கே மணிமேகலைக்கு அமுத சுரபி கிடைக்கிறது. அதைக் கொண்டு காஞ்சியிலும், பூம்புகாரிலும் பட்டினி இருப்போரைக் கண்டு அவர்களுக்குப் பசிப்பிணி மருத்துவம் புரிகிறாள் மணிமேகலை. இங்கே காதலை மறுக்கும் உரிமையும், பொதுத்தொண்டு புரியும் மனத்தின்மையையும் பெண் பெற்றிருக்கிறாள் என்பதை அறிய முடிகிறது.

     

    அதனோடு அமையாது, இளவரசன் கொல்லப் படுகிறான். தன் மகனின் மரணத்திற்குக் காரணம் மணிமேகலையே என்று தவறாக எண்ணிய அரசமாதேவி சீர்த்தி பல துன்பங்கள் தந்து மணிமேகலையைக் கொடுமைப்படுத்தி சிறையில் அடைக்கிறாள். ஈண்டு பழிவாங்கும் மனநிலையிலும் பெண்கள் இருந்திருக்கிறார்கள். அந்தச் சிறைக் கோட்டத்தையும் அறக்கோட்டமாக்கிப் பின் அரசமா தேவியைத் தவறுணர்ந்து திருந்துமாறு மணிமேகலையின் செயல்கள் அமைகின்றது.

     

    “இன்னா  செய்தார்க்கும்  இனியவே  செய்யாக்கால்

    என்ன                பயத்ததோ   சால்பு”

     

    எனும் வள்ளுவனின் வாக்குக்கு வாழ்வியல் சான்றாகவும் மணிமேகலை விளங்கியிருக்கிறாள்.

     

    இம்மணிமேகலையில்   வரும்                நெடுமுடிக்கிள்ளி  மன்னன்தான்

     

    “புன்னையங்கானல்” எனும் மணல்பகுதியில் இருக்கும்போது அங்கு வந்த அழகியை காந்தருவமணம் புரிகிறான். அந்தப்பெண் பீலிவளை. முகா ஈழநாகன் (கி.பி. 180 – கி.மு. 200) என்ற இலங்கை மன்னனின் மகள் அவள். அந்த ஈழநாட்டுப் பெண்ணுடனான தொடர்பு நாகர் எனும் வம்சத்தோடு கொண்ட கலப்பு பின்னர் இலங்கையிலும் தமிழக்க் கலாச்சாரப் பண்பாட்டுக் கலப்பு ஏற்படுவதற்குக் காரணமாயிற்று. (பழங்காலச் சோழர்களின் வரலாறு – அ. சவரிமுத்து – பக்.146)

     

    அக்காலகட்டத்தில் அமைந்த மன்னர்களின் பெயர்கள் தமிழ் பெயர் பாதியாகவும் நாகா பெயர் பாதியாகவும் இருப்பதை அறிய முடிகிறது. சான்றாக சில இலங்கை மன்னர்களின் பெயரைக் காண்போம்.

     

    முதலாம் கயவாகு, மகா ஈழநாகன், பட்டிகதீசன், கனித்த தீசன், குஞ்சநாகன், குகநாகன், ஸ்ரீநாகன், ஒகரிக நாகன், அபய நாகன் என அடுத்தடுத்து ஒன்றரை நூற்றாண்டுகள் இவர்கள் ஆட்டி புரிந்துள்ளார்கள்.

     

    மகா வம்சத்தை ஈழத்தின் கதை என்ற எழுதிய கே.வி.எஸ். வாஸ் என்பவரே இதனை வலியுறுத்திக் கூறுகிறார். நாகன் என்ற பெயருடைய மன்னர்கள் தமிழ் இரத்தக் கலப்புடையவர்கள் என்று யூகிக்க இடமுண்டு. இவர்கள் புராதன நாகர்

     

    வகுப்பைச் சார்ந்தவர்களுடன் ரத்த சம்பந்தம் உடையவர்கள் என்ற சிலர் கருதுகிறார்கள். இன்றுள்ளது போல் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வகுப்பு வேற்றுமையோ அல்லது பாஷை வேற்றுமையே அன்று இல்லாத படியால் கலப்பு மணம் நடப்பதும், ஒரே குடும்பத்தில் தமிழர் பெயருடையவர்களும் சிங்களப் பெயருடையவர்களும் இருப்பது சர்வ சாதாரணம். அனேக சிங்கள மன்னர்களின் பட்டத்து இராணிகள் தமிழ்ப் பெயர் கொண்டவர்களாகவும், தமிழ்ப் பெண்களாகவும், சுத்த சைவர்களாகவும் இருந்தனர். எனவே தான் பௌத்தத்தையும் சைவத்தையும் பேணி வளர்த்ததோடு ஒவ்வொரு பௌத்த விகாருக்கும் அருகில் ஒரு சிவன்கோயில்

     

    கட்டுவது       அன்றைய     வழக்கமாக  இருந்தது.      இன்றைக்கும்            கூட     பாழடைந்து

     

    கிடக்கும்        தாது   கோபுரங்களுக்கும்               அருகில்          சிவலிங்கம் தென்படுவதும்

     

    இந்தப்புராதன           சரித்திர           உண்மையையே    காட்டுகின்றன.        (ஈழத்தின்      கதை.

     

    திரு.கே.வி.  வாஸ்-பக்.     262-263).

     

    இதைக்            கொண்டு        பார்க்கும்போது        நெடுமுடிக்கிள்ளி  மனைவி        மகாராணி

     

    தனது                மகன் உதயகுமாரன்           கொல்லப்பட்ட         சோகத்தால்                மணிமேகலையைச்

     

    சிறையில்     இட்டுக்             கொடுமைப்படுத்தினாள்.               அதை                ஒடுக்கப்         பௌத்தர்கள்

     

    (மணிமேகலை பௌத்தப் பெண் துறவி என்பதும் அவள் தாய் மாதவி தன் மகள் மணிமேகலையுடன் தன் கணவன் கோவலன் மரணத்திற்குப் பின் பௌத்தம் தழுவினாள் என்பதும் சிலப்பதிகாரத்தின் மூலம் பெறப்பட்ட செய்தியே) திட்டமிட்டு

     

    மணிமேகலையைச் சிறையில் இருந்து மீட்டு பாய்மரக்கப்பலில் ஏற்றி இலங்கைத் தீவில் இறக்கி அவளைத் துணிவுடையவளாக மாற்றியுள்ளனர். பின் அவளுடன்

     

    இணைந்து அனுராதபுரம் மாவலி கங்கைப் பகுதியில் கிடைக்கும் உணவுப் பொருள்களைப் பாய்மரக்கப்பலில் ஏற்றி சோழ நாட்டின் பஞ்சத்தைப் போக்கி சோழநாட்டு மக்களைத் தன் வசம் செய்து இருக்கிறார்கள்.

     

    பின்னர் அதன் மூலம் சமணர்களும், பௌத்தர்களும் சோழநாட்டிலும் பாண்டிய நாட்டிலும் தொண்டைநாட்டிலும் மக்களைத் தன் வசப்படுத்தி உள்ளனர்.

     

    இதற்குக் காஞ்சியை ஆண்ட இளங்கிள்ளி ஒத்துழைத்து இருக்கிறான். மணிமேகலையை காய சண்டிகைப் போன்று உருவாய்க் கொண்டு வந்துள்ளாள். இது கோச் செங்கண்ணானுடன் கணைக்கால் இரும்பொறை செய்த போருக்குப் பின் கிடைத்த பாடத்தைக் கொண்டு மணிமேகலை என்ற பெண் துறவி மூலம் களப்பிரர்

     

    படையெடுப்புக்கு   முன்   தயாரிப்புச்    செய்யப்பட்டிருக்க                வேண்டும்.   இதற்கு

     

    நெடுங்கிள்ளி பகடைக் காயாகப் பயன்பட்டு இருக்கிறான் என்பது வரலாற்று ஆய்வாளர்களுடைய கருத்து. இச்சம்பவத்திற்குப் புராணங் கலந்த செயல்பாடுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அமுதசுரபி அள்ள அள்ளக் குறையாது. பசிப்பிணி பஞ்சத்தைப் போக்கும் ஆற்றல் உடையது என்றெல்லாம் பகுத்தறிவுக்குப் புறம்பான

     

    விசயங்கள் கூறப்பட்டன. அவ்வாறெனில் அப்பிச்சைப் பாத்திரம் பின்னர் என்னவாயிற்று? யாரேனும் அழித்து விட்டனரா? இல்லையேல் தானே மறைந்து விட்டதா?

     

    மணிமேகலா தெய்வம் சோழன் மகாராணி சீர்த்தியிடம் இருந்து காப்பாற்ற மணிமேகலையை வான மண்டல வழியாக மணிபல்லவத் தீவிற்குக் கொண்டு சென்றது. அங்கே புத்தப் பீடிகை வைக்கப்பட்டிருந்தது. அந்தப் புத்த பீடிகையில் புத்தர் பிரானை தினமும் வழிபட்டது. ஏழு நாட்கள் கடந்து அமுத சுரபியைத் தந்து மீண்டும் பூம்புகாருக்குக் கொண்டு வந்துவிட்டது. இவையெல்லாம் பகுத்தறிவுக்கு

     

    ஒத்து வராத கருத்துகள். ஏனெனில் அக்காலத்தில் இலங்கைக்கு நீர்வழி மாத்திரமே செல்ல முடியும்.

     

    இந்த   நெடுமுடிக்கிள்ளி  மன்னன்         காலத்தில்    மெல்ல            மெல்லக்        காவிரியின்

     

    வெள்ளம் சரியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தப் படாமல் கவனிக்காது விடப்பட்டது. எனவே அந்தச் சூழலில் மழையுமின்றி போகப் பஞ்சம் வந்திருக்கிறது. இன்றும் உறையூரில் மணல் வாரி மழை ஒருகாலத்தில் பெய்ததாகச் செவிவழிச் செய்தி உலவுகின்றது.

     

    ஆகவே, இயற்கைச் சூழலாலும் சோழ மன்னனின் கவனம் இன்மையாலும், பாலாறு போன்றவை மழையின்றி வரண்டு போனதாலும் பஞ்சம் நிலவி உள்ளது. அதைப் பௌத்தர்கள் மணிமேகலை வாயிலாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

     

    இச்சம்பவங்கள் எல்லாமே நெடுமுடிக்கிள்ளி காலத்தில் நடந்தவை. அதன் தொடக்கமாக பௌத்த மதப் பிரச்சாரத்தின் களமாக அமைந்தது மணிமேகலை காவியம் பௌத்த மதக் கோட்பாடுகளைப் புகுத்தி சீத்தலைச்சாத்தனார் அதனை அரங்கேற்றினார் என்பது வரலாற்றாசிரியர்களின் முடிவு. இவ்வாறாக இராஜாங்க மாற்றத்திற்கான காரியங்களிலும் பெண்கள் ஈடுபட்டிருந்தமை புலனாகிறது.

     

    சோழர்களின் நகர அமைப்பும் மக்கள் குடியிருப்பும் பெண்களை மனதிற்கொண்டே அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. கோ நகர் என்று சொல்லக் கூடிய உறையூர், பூம்புகார், கழுமலம், அழுந்தூர், நெய்தலங்கானம், கரூர், ஆவூர் இவைகள் எல்லாம் தலைநகரமாக ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்று இருந்தவை. அதிலும் குறிப்பாக உறையூர் பூம்புகார் பன்னெடுங்காலமாக இருந்தன. கோஇல் – அரசன் வாழும் இல்லம். நட்ட நடுவில் அரசன் வாழும் அரண்மனை ஆகும். அதை அடுத்து அந்தணர்கள் அறங்கூறும். அவையர், சான்றோர்கள், புலவர்களின் வீடுகள்

     

    உள்ள                தெருக்கள்     சுற்றிலும்      இருக்க,            அதை                அடுத்த            சுவற்றில்                வணிகர்கள்

     

    வீடுகள்            இருக்க             அதற்கும்       வெளிவட்டத்தில் இருக்குமாறு              அமைக்கப்பட்டன.

     

    காரணம், நதிகள் கடற், அறங்கூற உள்வட்டம், உள்நாடு, வெளிநாடுகளில் வாணிகம் செய்ய வேண்டி வணிகர் செல்ல வேண்டி இருப்பதால் உள்வட்டத்தில் குடியிருப்பு வணிகர்களுக்கு அமைக்கப்பட்டது.

     

    “முந்நீர்  வழக்கம்  மகடூஉ  வோடு  இல்லை”(தொல்.  அகம்.  980)

     

    என்பதால் உள்வட்டத்தில் பெண்கள் பாதுகாப்புக் கருதி அமைக்கப்பட்டது. வேளாண்மை செய்ய வயலுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் வேளாண் மக்கள் குடியிருப்புகள் சற்றே புறத்தே அமைக்கப்பட்டன.

     

    வெளிச்சுற்றில் வினை ஏவலர் குடியிருப்பு அமைக்கப்பட்டது. அரண்மனைவேலை, வணிகவேலை, வேளாண் வேலை எல்லோருக்;கும் வினை

     

    ஏவலர்ப் பணியாள் வேண்டியிருப்பதால் அவர்கள் வெளி வட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர். இவைகள் வேலை வாய்ப்பைக் கருதியே தொல் தமிழ்நாட்டில் சோழர் நாட்டில் குடியிருப்புகள் சிந்து சமவெளி காலம் முதல் அமைக்கப்பட்டன. அந்தணர் என்போர் காமம், குடும்பவாழ்வு, செல்வம், புகழ் இவற்றை விரும்பாது ஒதுக்கித் துறவு பூண்டவர் ஆவர்.

     

     

     

    அந்தணர் என்போர் அறவோர் அவரும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்… என்ற வரிகள் ஈண்டு சிந்திக்கத்தக்கது. பின்னர் அவரே துறவோர்கள் ஆயினர். இவர்கள் ஒதுக்கப்பட்டு பிராமணர்கள் அங்கே குடியமர்த்தப்பட்டனர். முதல்நிலைச் சாதிகள் உருவாகாத காலத்தில் தமிழகத்தின் நிலை குறிப்பாக சோழர்கால

     

    ஊர்களின் நிலை இவ்வாறகத்தான் இருந்திருக்கவேண்டும். பிறகு வடஆரியர் நுழைவிற்குப் பின்னரே துறவோர், அந்தணர் ஆகியோர் பின்னுக்குத் தள்ளப்பட்டு பிராமணர் அந்த இடத்தில் வைக்கப்பட்டுச் சாதிப்பிரிவினையும் வர்ணாசிரம தர்மமும் ஏற்கப்பட்டிருக்க வேண்டும் என்பது வரலாற்றாய்வாளர்தம் முடிவாக அமைந்துள்ளது.

     

    வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் என்ற நிலையில் பூம்புகாரிலிருந்து புறப்பட்ட வணிககுல அப்பாவிப் பெண்ணொருத்தி “தேரா மன்னா! என் கணவன்

     

    கள்வன் அல்ல என வீரமங்கையாய் விசுவரூபம் எடுத்துப் பாண்டிய மன்னனின் சாம்ராஜ்யத்தையே போரின்றிச் சேதமின்றி சொற்போரால் தகர்த்த கண்ணகி கதை நாம் அறிந்ததே.”

     

    கணவன்         இழந்த              செல்வம்        அனைத்தையும்     மீண்டும்         பெற்று              விடும்

     

    அளவிற்குப் பெண்ணுக்கும் பொருளாதாரநிலை பெற்றோரால் ஏற்படுத்தித்தரப் பட்டிருக்கிறது என்பதை “சிலம்புள கொன்ம்” எனும் கண்ணகியின் ஒரு சொல்லால் இளங்கோவடிகள் நமக்கு உணர வைக்கிறார்.

     

    மதுரையைத் தீக்கிரையாக்குகிறபோது கண்ணகியின் முன்னெச்சரிக்கை வார்த்தைகள் தீயார் மீது பற்ற வேண்டும் என்று கூறுவது சோழர்தம் வழக்கம் என்ற அறிய முடிகிறது. “பார்ப்போர், அறவோர், அந்தணர், பெண்கள், பசுக்கள்

     

    இந்த ஐவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்பது எழுதாத சட்டமாக தமிழ்நாட்டு அரசர்களுள் ஓர் உடன்பாடு இருப்பதற்கும் சோழர்களே அடிப்படையாக

     

    இருந்துள்ளனர். இந்நிலை சோழர்தம் பெண்களைப் பற்றிய கரிசனம் வெளிப்படுதற்கு அடித்தளமாக அமைகிறது.

     

    வதுவைமணம் எனப்படும் அக்காலத் தமிழர்தம் திருமண முறையை அகநானூற்றுப் பாடல் ஒன்று பதிவு செய்திருக்கிறது. பண்பாட்டுச் சடங்கான

     

    அந்நிகழ்வில் பெண்டிர்தம் நிலையினையும், அவர்தம் முக்கியத்துவத்தையும் வாழ்வியல் முறைகளையும் நல்லாவூர் கிழார் எனும் புலவர் நம் கண் முன்னே

     

    படம்பிடித்துக் காட்டுகிறார். சங்ககாலத் திருமண முறையையே வலியுறுத்துக் காட்டுகிற நிகழ்வுகளை வரிசைப் படுத்துகிறார் சோழர் வரலாறு நூல் எழுதிய

     

    டாக்டர்.           இராசமாணிக்கனார்.

     

    1. இசைக் கருவிகள்  ஒலித்தல்.

     

    1. கடவுள் வணக்கம்.

     

    1. மணப்பெண்ணைப் பெற்ற பெண்டிர் பிள்ளையைப் பெற்றப் பெண்டிர், வாழ்வரசிகள் நால்வர் கூடி அரிசியும் மலரும் கலந்த நீரால் பெற்றோன் பெட்கும் பிணையை ஆகுக என வாழ்த்தி நீராட்டுதல்.

     

    1. அன்றிரவே மணமக்களை  மங்கலப்  பொழுதில்  இல்லறப்படுத்துதல்.

     

    1. புpன்னர் திருமணவிருந்து

     

    எனப்  பொதுவாகவே          சாமானியரின்           திருமண        முறைகள்     அமைந்திருக்கின்றன.

     

    பின்னாளில் ஐயர் வந்து நடத்தும் திருமணத்தை அக்காலத்தில் பெண்களே நடத்தியிருக்கின்றனர்.

     

    “உழுந்து தலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிறை கால் தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி, மனை விளக்குறுத்து, மாலை தொடரி,

     

    கனை இருள் அகன்ற கவின் பெறு காலை கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழுப்புகழ் நாள் தலை வந்தென உச்சிக்குடத்தர், புத்தகல் மண்டையர், பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தர, புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடி, கற்பினின் வழாஅ, நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக! ஏன, நீரோடு சொரிந்த ஈர் இதழ் அலரி,

     

    பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க,

    வதுவை         நல்மணம்     கழிந்த     பின்றை,

    கல்லென்       கம்மையர்,   ஞெரே   ரெனப் புகுதந்து,

     

    “பேர் இற்கிழத்தி ஆக” எனத் தம்ர்தர, ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல், கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து, ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ, முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப அஞ்சினள் உயிர்த்த காலை “யாழ நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை” என இன்நகை இருக்கை பின், யான் வினைவயின் செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல் வர, அகம் மலி உவகையள் ஆகி, முகன் இகுத்து ஒய்யென இறைஞ்சியோளே – மாவின் மடம் கொள் மதை இய நோக்கின்,

     

     

     

    ஒடுங்கு          ஈர்         ஓதி     மா        அயோளே”.(நல்லாவூர்க்             கிழார்-மருதம்-86    அகம்.)

     

    இப்பாடல் பழந்தமிழ் மக்கள் நடத்திய திருமணம் குறித்து விளக்கம் தருவதாக அமைகின்றது. திங்கள் உரோகிணியோடு கூடிய நாள் திருமணத்திற்கு உரிய சிறந்த நாளாகக் கருதப்பட்டது. வீட்டிற்கு முன் வரிசையாக கால்களை நட்டுப் பந்தலிட்டனர். பந்தலின் கீழ்ப் புதுமணல் பரப்பினர். மனைவிளக்கு ஏற்றி

     

    மாலைகளைத்         தொங்க           விட்டனர்@  உழுந்தம்       பருப்புடன்     கூட்டிச்            சமைத்த

     

    குழைவாக வெந்த பொங்கலோடு பெருஞ்சோற்றுத் திரளை உண்பது இடைவிடாது நிகழ்ந்து கொண்டே இருந்தது.

     

    முழுமையான செவ்விய பெண்கள் திருமணத்தைச் செய்து வைத்தனர். புதல்வனைப் பெற்றெடுத்த மங்கல மகளிர் நால்வர் கூடிக் கற்பினின்றும் வழாது வாழ்க என வாழ்த்தினர். நீரோடு நெல்லும் மலரும் கலந்து மணமகனின் கூந்தலில் தூவினர். இவ்வாறு வதுவையாகிய திருமணச் சடங்குகள் நிகழ்ந்தன.

     

    பின்னர் உறவினர்கள் தலைமகனிடம் தலைவியைத் தந்து “பெருமனைக் கிழத்தி ஆகுக” என வாழ்த்திய செய்தியும் இப்பாடல் வழி அறியமுடிகிறது.

     

    சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருப்பது போல மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிய நிகழ்ச்சி இப்பாடலுள் இடம் பெறவில்லை. மங்கல நாண் அணிதல் எனும் தாலி கட்டிய குறிப்பும் இல்லை. இது பின்னாளில் புகார் நகரம் சோழநாட்டில் வந்து சேர்ந்த வழக்கமாக இருக்க வேண்டும். எனவே தான் மங்கல வாழ்த்துப்

     

    பாடலில் தாலிகட்டி, மறை ஓதி அந்தணர் நடத்திய திருமணத்தை சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளனர்.

     

    மற்றைய பெண்டிர் கூடி நின்று வாழ்த்த “பெருமகனைக் கிழத்தி ஆகுக” என்ற வரிகளால் சோழர்காலச் சாமானியப் பெண்கள் மனைக்கு விளக்கம் மடவார் என்பதற்கிணங்கவே வாழ்ந்திருந்தனர்.

    Share
  • பழந்தமிழக வரலாறு – 5

     

     

             தமிழக வரலாற்றில் நகர்மைய அரசுகள்

     

                                         -கணியன்பாலன்

    மனித இன நடவடிக்கைகள் குறித்தக் காலவரிசைப் படியான வரலாற்றுத்தரவுகளின் தொகுப்பே வரலாறு ஆகும். மொழிக்கு எழுத்து உருவான காலம் முதல் வரலாறு தொடங்குவதாகக் கருதப்படுகிறது. நமது பழந்தமிழகத்தை எடுத்துக்கொண்டால், அதன் வரலாறு சங்க காலத்திலிருந்து(கி.மு.750-50). தொடங்குகிறது. சங்ககால இலக்கியங்கள், மதச் சார்பான பல பாடல்களைக் கொண்டிருந்த போதிலும், பெரும்பாலான பாடல்களில் பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் உள்ளன. சங்ககாலத்திலும், சங்க காலத்திற்கு முன்பும் பாடப்பட்ட பல பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்களைக் கொண்ட பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்புகளில் இடம்பெறவில்லை. சங்ககாலத்தில் இருந்த வளர்ச்சிபெற்ற தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன், உலகளாவிய வணிகம், தமிழர்கள் வணிகத்துக்காகப் பிறநாடுகளில் சென்று தங்கியது, அவர்களிடம் இருந்த மிகப்பரவலான கல்வியறிவு, எழுத்தறிவு போன்ற பல தரவுகள் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், மொழியியல், மனித இனவியல் போன்றவற்றில் நடைபெற்று வரும் தற்போதைய ஆய்வுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன.

    அரசு உருவாக்கமும் நகர உருவாக்கமும்:

    ஆரம்பகால அரசு உருவாக்கம் என்பது நகர உருவாக்கத்தோடு தொடர்பு உடையதாகும். வேளாண்மையை அறிந்தபின் மனிதன் ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கினான். வேளாண்மையில் ஏற்பட்ட வளர்ச்சி சிற்றூர்களையும், பேரூர்களையும் தோற்றுவித்தது. வேளாண்மையில் கிடைத்த உபரி உற்பத்தியோ, கைத்தொழில், பட்டறைத்தொழில், வணிகம் முதலியவற்றை வளர்த்தெடுத்தது. சொத்துடமை வர்க்கம் உருவாகி வளரத் தொடங்கியது. சொத்துடமை ஆணாதிக்கத்தைக் கொண்டு வந்தது. ஆணாதிக்கம் இன்றையக் குடும்ப முறையைக் கொண்டு வந்தது. குடும்பத்தில் பெண் ஆணுக்கு அடிமையாக்கப்பட்டாள். பெண்ணின் கற்பு புனிதமாக மாற்றப்பட்டது. கைத்தொழில்களிலும், பட்டறைத்தொழில்களிலும், வணிகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சி சிற்றூர்களையும் பேரூர்களையும் சிறு நகரங்களாகவும், பெரு நகரங்களாகவும் மாற்றத்தொடங்கின. நாளடைவில் நகரத்தில் இருந்த சொத்துடமை வர்க்கம் ஒன்றினைந்து தன்னையும், தனது சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒட்டுமொத்த நகரத்தையே பாதுகாப்பவனாகவும் பராமரிப்பவனாகவும் தன்னை நியமித்துக் கொள்கிறது. இதன் காரணமாக நகர மக்களுக்கு மேம்பட்ட ஒன்று உருவாக்கப்பட்டு, அது அரசாக வடிவமெடுக்க வழிவகை செய்யப்படுகிறது. இவ்விதமாக நகர அரசுகள் உருவாகி நிலைபெறத்தொடங்கின எனலாம்.

    தொடக்கத்தில் உலகெங்கும் அரசு உருவாக்கம் நகரங்களில்தான் தொடங்கியது. உலக வரைபடத்தில் ஆரம்பத்தில் உருவான அனைத்து நாகரிகங்களிலும் முதலில் நகர அரசுகள் உருவாவதை நாம் காண முடிகிறது. கிரேக்கத்தில், உரோமில், கார்த்தேஜில் முதலில் நகர அரசுகளே தோன்றின. மெசபடோமியாப் பகுதியில் உருவான சுமேரியா நாகரிகமும், பிற நாகரிகங்களும் முதலில் நகர அரசுகளையே தோற்றுவித்தன. சுமேரியா நாகரிகம் என்பது உண்மையில் நகர அரசுகளின் நாகரிகமே. அங்கு இன்றைக்கு கி.மு 3500 வாக்கில் ‘ஊர்’ என்ற நகர அரசு உருவாகியிருந்தது. அது ஒரு மிகப் புகழ்பெற்ற நகர அரசாக இருந்தது. சுமேரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் பாபிலோனிய நகர அரசு அங்கு முக்கியத்துவம் பெற்றது.  பின் இந்த நகர அரசு பிற நகர அரசுகளை வென்று ஒரு பேரரசாக உருவாகியது. எகிப்திலும் கி.மு. 3000 வாக்கில் சிறு சிறு நகர அரசுகளே தோன்றின-(1). பின் அவை ஒன்று சேர்ந்து எகிப்தியப் பேரரசு உருவாகியது.

    நமது சிந்துவெளி நாகரிகத்திலும் முதலில் நகர அரசுகளே தோன்றின. அந்நாகரிகம் பல நகர அரசுகளின் நாகரிகமே. ஆரிய வருகைக்குப் பின் உருவான வட இந்திய நாகரிகத்தில் கூட முதலில் 16 ஜனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகளே தோன்றின. இந்த நகர்மைய அரசுகளிடையே ஏற்பட்ட போட்டிகளாலும், போர்களாலும் கி.மு. 6ம் 5ம் நூற்றாண்டு வாக்கில் மகத அரசு பிற நகர்மைய அரசுகளை வென்று ஒரு பேரரசாக உருவெடுத்தது. எனவே உலகெங்கும் ஆரம்பகால நகர உருவாக்கம் என்பது அரசு உருவாக்கத்தின் தொடக்கமாக இருந்துள்ளது. அதன்பின் இந்த நகர அரசுகள் பிற நகர அரசுகளை வென்று பெரிய அரசுகளாக, பேரரசுகளாக உருவாகின.

    சங்ககாலத்தில் அரசு உருவாக்கம்:

    பழந்தமிழகத்தில் கி.மு. 1500 வாக்கிலேயே சிறு சிறு நகரங்களும், நகர்மையங்களும் உருவாகத்துவங்கி, பின் அவை நாளடைவில் நகர்மைய அரசுகளாகப் பரிணமித்தன. கி.மு 8ஆம் நூற்றாண்டு வாக்கில் சேர, சோழ, பாண்டிய நகர அரசுகள் வலிமை பெற்று இந்த நகர்மைய அரசுகள் பலவற்றை வென்று ஒன்று சேர்ந்துப் பெரிய அரசுகளாக உருவெடுத்தன. அதன் பின்னரும் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் உறவினர்களால் இந்த நகர்மைய அரசுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே ஆளப்பட்டு வந்தன. “ஐந்து பாண்டியர்களால் ஆளப்பட்ட ஐந்து பாண்டிய அரசுகள் இருந்தன” என்பது ஒரு தொன்மக்கருத்தாகும். பாண்டியர்கள் பலர் பல நகர்மைய அரசுகளை ஆண்டு வந்தனர் என்பதை இக்கருத்து உறுதிப்படுத்துகிறது. பாண்டியர்களைப் போன்றே சேர சோழ அரசுகளும் பல நகர்மைய அரசுகளைக் கொண்டிருந்தன.

    சேர, சோழ, பாண்டிய அரசுகள் போக பல குறுநில மன்னர்களும், வேளிர்களும் பல சிறு சிறு நகர்மைய அரசுகளை ஆண்டு வந்தனர். அவர்கள் அந்தந்தச் சிறு சிறு நகர்மைய அரசுகளின் நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்தனர். பாழிநகர் நன்னன், வியலூர் நன்னன், போஓர் பழையன், மோகூர் பழையன், எயில் ஊர் ஆந்தை, நீடூர்த் தலைவன் எவ்வி, உறையூர் தித்தன், காமூர்த் தலைவன் கழுவுள், இருப்பையூர் வீரான், ஊனூர் தழும்பன், ஆர்க்காட்டு அழிசி எனப் பல குறுநில மன்னர்களும், வேளிர்களும் அவரவர்களின் நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.          சேர, சோழ, பாண்டியர்கள் கூட தொண்டி அரசன், கொற்கைப் பாண்டியன், புகார்த்தலைவன் என நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகிறது. ஆக நகரங்கள் அன்று அரசின் மிக மிக முக்கிய அங்கமாக இருந்தன என்பதை இவை தெரிவிக்கின்றன. மூவேந்தர்கள் தவிர அதியன், நன்னன் போன்ற அரச பரம்பரைகளும் ஒருசில நகர்மைய அரசுகளை வென்று, பெரிய அரசுகளாக ஆக முயன்றுள்ளன. ஆனால் அம்முயற்சி மூவேந்தர்களால் முறியடிக்கப்பட்டது. மூவேந்தர்கள் உருவாகிய பின்னரும், நகர்மைய அரசுகள் முழுச் சுதந்திரத்தோடு தனி அரசுகளாகவே செயல்பட்டு வந்துள்ளன. வேந்தன் ஒரு பெரிய நகர்மைய அரசை ஆண்டான் எனில், அவனது கிளை உறவினர்கள் பிற நகர்மைய அரசுகளை ஆண்டனர். இவைபோக குறுநில மன்னர்களும், வேளிர்களும் இருந்தனர். எனவே தமிழகமெங்கும் நகரங்கள் பல ஊர்களைக் கொண்ட தனித்தனி அரசுகளாக இயங்கி, தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டன.

    அரசும் எழுத்தும் :

    கி.மு. 6ஆம் நூற்றாண்டில் உரோம் நகர அரசு உருவாகி நிலை பெற்ற பின்னர்தான் இலத்தின் மொழிக்கு எழுத்து உருவானது. எகிப்து, சுமேரியா போன்ற இடங்களிலும் நகர அரசுகள் உருவாகி நிலை பெற்ற பின்னர்தான் எழுத்துக்கள் உருவாகின. சீனாவில் அரசு உருவாகியபின் கி.மு 15ஆம் நூற்றண்டு வாக்கில் எழுத்து உருவானது. இந்தியாவில்  அசோகர் ஆட்சியில்தான் அசோகன் பிராமி எழுத்து பயன்படுத்தப்பட்டது(2). எனவே எழுத்து உருவாகிவிட்டது எனில் அங்கு அரசு உருவாகி நிலைபெற்றுவிட்டது என்பதுதான் உலகெங்கும் இருந்த நிலையாகும். கிரீட்(CRETE) தீவின் மினோன்(MMIMINOAN) எழுத்துக்களைக் கிரேக்கத்தில் இருந்த மைசீனியர்களின் (MMYCENAEANS) நகர அரசுகள் கி.மு. 13ஆம்  நூற்றண்டு வரை பயன்படுத்தினர். அதன் பின் கிரேக்கத்தில் இருந்த மைசீனியர்களின் நகர நாகரிகம் அழிந்து போனதால் அவர்கள் எழுத்தும் இல்லாது போயிற்று. அதன் பிந்தைய மூன்று, நான்கு நூற்றாண்டுகள் கிரேக்க வரலாற்றில் இருண்ட காலமாகும். கி.மு. 8ஆம் நூற்றாண்டில், மீண்டும் கிரேக்க நகர அரசுகள் உருவாகி நிலைபெற்ற பொழுதுதான் பொனிசியன்(PHOENICIAN) எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கிரேக்க எழுத்து முறை உருவாகியது(3).

    ஆகவே அரசுகள் உருவாகி நிலைபெற்ற பின்னர்தான் எழுத்துக்கள் உருவாகின்றன என்பதற்கு கிரேக்க வரலாறே ஒரு சான்றாகத் திகழ்கிறது எனலாம். தமிழகத்தில் தமிழி எழுத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரையான காலகட்டத்தில் தமிழர்கள் குறியீடுகளை எழுத்துக்களாகப் பயன்படுத்தினர். ஆதலால் கி.மு.1500 முதல் கி.மு. 1000 வரையான காலகட்டத்தில் தமிழகத்தில் சிறு சிறு நகர அரசுகள் உருவாகி இருந்தன. சங்ககாலத்திற்கு முன், கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் அவை வளர்ந்து, நிலைபெற்ற நகர அரசுகளாக ஆகியிருந்தன.

    தமிழகத்தின் வளர்ச்சி:

    தமிழகச் சேர சோழ பாண்டிய அரசுகளின் ஆட்சிக்கும், வட இந்திய மகதப் பேரரசின் ஆட்சிக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. மிகப்பெரிய, பரந்து விரிந்த பேரரசுகளின் நகரங்களை பேரரசின் மண்டல அதிகாரிகளே ஆட்சி செய்து வந்தனர். பேரரசுகளில் படிப்படியான அதிகாரவர்க்க நிர்வாகமுறை இருந்து வந்தது. அதனால் பேரரசின் நகரங்களும் பிற பிரதேசங்களும் போதிய சுதந்திரம் இல்லாதவைகளாக இருந்தன. பேரரசரால் மண்டல அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படவும் வாய்ப்பிருந்தது. இந்நிலைமை பாரசீகப் பேரரசிலும், இந்தியாவில் மகதப் பேரரசிலும் இருந்தது. ஆனால் தமிழக நகர்மைய அரசுகள் பெரும்பாலும் மூவேந்தர்களின் கிளை அரசர்களால் ஆளப்பட்டன. அல்லது குறுநில மன்னர்களாலும், வேளிர்களாலும் ஆளப்பட்டன. அவை அனைத்துமே தங்கள் நகர்மைய அரசுகளை நிர்வகிப்பதில் முழு சுதந்திரம் உடையவைகளாகவும், தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டவைகளாகவும் இருந்தன. மிக நீண்ட காலமாக ஆளப்பட்டு வந்தன. மக்கள் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு ஆளப்பட்டன. இவைகளின் காரணமாக தமிழகத்தின் பண்டைய நகர அரசுகள் பலவிதங்களிலும் நன்கு வளர்ச்சி அடைந்தவனாக உருவாகின.

    தமிழ் அரசுகள் மக்களின் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப் பட்டவைகளாக இருந்தன என கிரேக்கப்பயணி மெகத்தனிசு அவர்கள் கூறியுள்ளார் என்கிறார் சவகர்லால் நேரு அவர்கள். “அரசியல் துறையில் தென்னாட்டு சனப்பிரதிநிதி சபைகள் அரசர்களின் அதிகாரத்தை ஒரு கட்டுக்கு உட்படுத்தி வைத்திருந்தன என கிரேக்க யாத்திரிகரான மெகத்தனிசு கூறுகிறார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்(4). ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற வேளிர்கள் அல்லது பிரபுக்கள் குழுக்களும் இன்னபிற மக்கள் பிரதிநிதிக்குழுக்களும் அரசை கட்டுப்படுத்தி வந்திருக்கவேண்டும். அதன் காரணமாக அரசனின் அதிகாரம் வரம்பற்றதாக இல்லாமல் கட்டுப்படுத்தப் பட்டதாக இருந்தது. அதனைத்தான் மெகத்தனிசு தனது குறிப்பில் கொடுத்துள்ளார். இவை தமிழக நகரங்களின் வளர்ச்சிக்கு ஒரு மிக முக்கியக் காரணமாக இருந்தது எனலாம்.

    சங்ககாலத்தில் இருந்த அளவு எழுத்தறிவும், கல்வியறிவும் வடஇந்தியாவில் இருக்கவில்லை. பிற தொழில்நுட்பமும், உற்பத்தித்திறனும், வணிகமும்கூட பழந்தமிழகத்தில் இருந்த அளவு வட இந்தியாவில் இருக்கவில்லை. பழந்தமிழகத்தில் இருந்து உலகம் முழுவதும் பெரிய அளவில் வணிகம் நடைபெற்றது. இவ்வளர்ச்சிகளால்தான் கி.மு. 3ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி மௌரியப் பேரரசைத் தோற்கடிக்க முடிந்தது. சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்களை உருவாக்க முடிந்தது. மகதப் பேரரசு காலத்தில் வட இந்தியாவில் செவ்வியல் இலக்கியம் எதுவும் உருவாகவில்லை என டி. டி. கோசாம்பி குறிப்பிடுகிறார். உலக அளவில் நடந்த பண்டைய இந்திய வணிகம் பெருமளவு தமிழகம் வழியேதான் நடந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் இன்று உறுதி செய்துள்ளன. சங்ககாலத் தமிழ் மக்கள் மிக அதிக அளவில் எழுத்தறிவு கொண்டிருந்தனர் என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார். ஆகவே மிக நீண்டகாலத்திற்கு முன்னரே தமிழகத்தில் நகர அரசுகள் உருவாகி அவை ஒப்பீட்டளவில் பண்டைய கிரேக்க, உரோம நகர அரசுகளைப் போன்ற வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாக ஆகியிருந்தன.

    பார்வை:

    1. The World Book Encyclopedia, 1988 USA. vol-4, pages : 578-580

    2.விக்கிபீடியா: Greek_alphabet,  Latin_alphabet  & ’இன்றைய இந்திய இலக்கியம்’ சாகித்திய அக்காதெமி வெளியீடு, பக்; 87, 185;

    3.The World Book Encyclopedia, 1988 USA.  vol-8, pages : 396

    4.சவகர்லால் நேரு,  ‘உலக சரித்திரம்’  தமிழாக்கம்- ஓ.வி. அளகேசன், 3ஆம் பதிப்பு, அக்டோபர்- 2006, பக்: 153.

    ஆதார நூல்:

    பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 261-269

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share