தமிழக வரலாற்றில் நகர்மைய அரசுகள்

 

                                     -கணியன்பாலன்

மனித இன நடவடிக்கைகள் குறித்தக் காலவரிசைப் படியான வரலாற்றுத்தரவுகளின் தொகுப்பே வரலாறு ஆகும். மொழிக்கு எழுத்து உருவான காலம் முதல் வரலாறு தொடங்குவதாகக் கருதப்படுகிறது. நமது பழந்தமிழகத்தை எடுத்துக்கொண்டால், அதன் வரலாறு சங்க காலத்திலிருந்து(கி.மு.750-50). தொடங்குகிறது. சங்ககால இலக்கியங்கள், மதச் சார்பான பல பாடல்களைக் கொண்டிருந்த போதிலும், பெரும்பாலான பாடல்களில் பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் உள்ளன. சங்ககாலத்திலும், சங்க காலத்திற்கு முன்பும் பாடப்பட்ட பல பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்களைக் கொண்ட பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்புகளில் இடம்பெறவில்லை. சங்ககாலத்தில் இருந்த வளர்ச்சிபெற்ற தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன், உலகளாவிய வணிகம், தமிழர்கள் வணிகத்துக்காகப் பிறநாடுகளில் சென்று தங்கியது, அவர்களிடம் இருந்த மிகப்பரவலான கல்வியறிவு, எழுத்தறிவு போன்ற பல தரவுகள் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், மொழியியல், மனித இனவியல் போன்றவற்றில் நடைபெற்று வரும் தற்போதைய ஆய்வுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன.

அரசு உருவாக்கமும் நகர உருவாக்கமும்:

ஆரம்பகால அரசு உருவாக்கம் என்பது நகர உருவாக்கத்தோடு தொடர்பு உடையதாகும். வேளாண்மையை அறிந்தபின் மனிதன் ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கினான். வேளாண்மையில் ஏற்பட்ட வளர்ச்சி சிற்றூர்களையும், பேரூர்களையும் தோற்றுவித்தது. வேளாண்மையில் கிடைத்த உபரி உற்பத்தியோ, கைத்தொழில், பட்டறைத்தொழில், வணிகம் முதலியவற்றை வளர்த்தெடுத்தது. சொத்துடமை வர்க்கம் உருவாகி வளரத் தொடங்கியது. சொத்துடமை ஆணாதிக்கத்தைக் கொண்டு வந்தது. ஆணாதிக்கம் இன்றையக் குடும்ப முறையைக் கொண்டு வந்தது. குடும்பத்தில் பெண் ஆணுக்கு அடிமையாக்கப்பட்டாள். பெண்ணின் கற்பு புனிதமாக மாற்றப்பட்டது. கைத்தொழில்களிலும், பட்டறைத்தொழில்களிலும், வணிகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சி சிற்றூர்களையும் பேரூர்களையும் சிறு நகரங்களாகவும், பெரு நகரங்களாகவும் மாற்றத்தொடங்கின. நாளடைவில் நகரத்தில் இருந்த சொத்துடமை வர்க்கம் ஒன்றினைந்து தன்னையும், தனது சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒட்டுமொத்த நகரத்தையே பாதுகாப்பவனாகவும் பராமரிப்பவனாகவும் தன்னை நியமித்துக் கொள்கிறது. இதன் காரணமாக நகர மக்களுக்கு மேம்பட்ட ஒன்று உருவாக்கப்பட்டு, அது அரசாக வடிவமெடுக்க வழிவகை செய்யப்படுகிறது. இவ்விதமாக நகர அரசுகள் உருவாகி நிலைபெறத்தொடங்கின எனலாம்.

தொடக்கத்தில் உலகெங்கும் அரசு உருவாக்கம் நகரங்களில்தான் தொடங்கியது. உலக வரைபடத்தில் ஆரம்பத்தில் உருவான அனைத்து நாகரிகங்களிலும் முதலில் நகர அரசுகள் உருவாவதை நாம் காண முடிகிறது. கிரேக்கத்தில், உரோமில், கார்த்தேஜில் முதலில் நகர அரசுகளே தோன்றின. மெசபடோமியாப் பகுதியில் உருவான சுமேரியா நாகரிகமும், பிற நாகரிகங்களும் முதலில் நகர அரசுகளையே தோற்றுவித்தன. சுமேரியா நாகரிகம் என்பது உண்மையில் நகர அரசுகளின் நாகரிகமே. அங்கு இன்றைக்கு கி.மு 3500 வாக்கில் ‘ஊர்’ என்ற நகர அரசு உருவாகியிருந்தது. அது ஒரு மிகப் புகழ்பெற்ற நகர அரசாக இருந்தது. சுமேரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் பாபிலோனிய நகர அரசு அங்கு முக்கியத்துவம் பெற்றது.  பின் இந்த நகர அரசு பிற நகர அரசுகளை வென்று ஒரு பேரரசாக உருவாகியது. எகிப்திலும் கி.மு. 3000 வாக்கில் சிறு சிறு நகர அரசுகளே தோன்றின-(1). பின் அவை ஒன்று சேர்ந்து எகிப்தியப் பேரரசு உருவாகியது.

நமது சிந்துவெளி நாகரிகத்திலும் முதலில் நகர அரசுகளே தோன்றின. அந்நாகரிகம் பல நகர அரசுகளின் நாகரிகமே. ஆரிய வருகைக்குப் பின் உருவான வட இந்திய நாகரிகத்தில் கூட முதலில் 16 ஜனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகளே தோன்றின. இந்த நகர்மைய அரசுகளிடையே ஏற்பட்ட போட்டிகளாலும், போர்களாலும் கி.மு. 6ம் 5ம் நூற்றாண்டு வாக்கில் மகத அரசு பிற நகர்மைய அரசுகளை வென்று ஒரு பேரரசாக உருவெடுத்தது. எனவே உலகெங்கும் ஆரம்பகால நகர உருவாக்கம் என்பது அரசு உருவாக்கத்தின் தொடக்கமாக இருந்துள்ளது. அதன்பின் இந்த நகர அரசுகள் பிற நகர அரசுகளை வென்று பெரிய அரசுகளாக, பேரரசுகளாக உருவாகின.

சங்ககாலத்தில் அரசு உருவாக்கம்:

பழந்தமிழகத்தில் கி.மு. 1500 வாக்கிலேயே சிறு சிறு நகரங்களும், நகர்மையங்களும் உருவாகத்துவங்கி, பின் அவை நாளடைவில் நகர்மைய அரசுகளாகப் பரிணமித்தன. கி.மு 8ஆம் நூற்றாண்டு வாக்கில் சேர, சோழ, பாண்டிய நகர அரசுகள் வலிமை பெற்று இந்த நகர்மைய அரசுகள் பலவற்றை வென்று ஒன்று சேர்ந்துப் பெரிய அரசுகளாக உருவெடுத்தன. அதன் பின்னரும் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் உறவினர்களால் இந்த நகர்மைய அரசுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே ஆளப்பட்டு வந்தன. “ஐந்து பாண்டியர்களால் ஆளப்பட்ட ஐந்து பாண்டிய அரசுகள் இருந்தன” என்பது ஒரு தொன்மக்கருத்தாகும். பாண்டியர்கள் பலர் பல நகர்மைய அரசுகளை ஆண்டு வந்தனர் என்பதை இக்கருத்து உறுதிப்படுத்துகிறது. பாண்டியர்களைப் போன்றே சேர சோழ அரசுகளும் பல நகர்மைய அரசுகளைக் கொண்டிருந்தன.

சேர, சோழ, பாண்டிய அரசுகள் போக பல குறுநில மன்னர்களும், வேளிர்களும் பல சிறு சிறு நகர்மைய அரசுகளை ஆண்டு வந்தனர். அவர்கள் அந்தந்தச் சிறு சிறு நகர்மைய அரசுகளின் நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்தனர். பாழிநகர் நன்னன், வியலூர் நன்னன், போஓர் பழையன், மோகூர் பழையன், எயில் ஊர் ஆந்தை, நீடூர்த் தலைவன் எவ்வி, உறையூர் தித்தன், காமூர்த் தலைவன் கழுவுள், இருப்பையூர் வீரான், ஊனூர் தழும்பன், ஆர்க்காட்டு அழிசி எனப் பல குறுநில மன்னர்களும், வேளிர்களும் அவரவர்களின் நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.          சேர, சோழ, பாண்டியர்கள் கூட தொண்டி அரசன், கொற்கைப் பாண்டியன், புகார்த்தலைவன் என நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகிறது. ஆக நகரங்கள் அன்று அரசின் மிக மிக முக்கிய அங்கமாக இருந்தன என்பதை இவை தெரிவிக்கின்றன. மூவேந்தர்கள் தவிர அதியன், நன்னன் போன்ற அரச பரம்பரைகளும் ஒருசில நகர்மைய அரசுகளை வென்று, பெரிய அரசுகளாக ஆக முயன்றுள்ளன. ஆனால் அம்முயற்சி மூவேந்தர்களால் முறியடிக்கப்பட்டது. மூவேந்தர்கள் உருவாகிய பின்னரும், நகர்மைய அரசுகள் முழுச் சுதந்திரத்தோடு தனி அரசுகளாகவே செயல்பட்டு வந்துள்ளன. வேந்தன் ஒரு பெரிய நகர்மைய அரசை ஆண்டான் எனில், அவனது கிளை உறவினர்கள் பிற நகர்மைய அரசுகளை ஆண்டனர். இவைபோக குறுநில மன்னர்களும், வேளிர்களும் இருந்தனர். எனவே தமிழகமெங்கும் நகரங்கள் பல ஊர்களைக் கொண்ட தனித்தனி அரசுகளாக இயங்கி, தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டன.

அரசும் எழுத்தும் :

கி.மு. 6ஆம் நூற்றாண்டில் உரோம் நகர அரசு உருவாகி நிலை பெற்ற பின்னர்தான் இலத்தின் மொழிக்கு எழுத்து உருவானது. எகிப்து, சுமேரியா போன்ற இடங்களிலும் நகர அரசுகள் உருவாகி நிலை பெற்ற பின்னர்தான் எழுத்துக்கள் உருவாகின. சீனாவில் அரசு உருவாகியபின் கி.மு 15ஆம் நூற்றண்டு வாக்கில் எழுத்து உருவானது. இந்தியாவில்  அசோகர் ஆட்சியில்தான் அசோகன் பிராமி எழுத்து பயன்படுத்தப்பட்டது(2). எனவே எழுத்து உருவாகிவிட்டது எனில் அங்கு அரசு உருவாகி நிலைபெற்றுவிட்டது என்பதுதான் உலகெங்கும் இருந்த நிலையாகும். கிரீட்(CRETE) தீவின் மினோன்(MMIMINOAN) எழுத்துக்களைக் கிரேக்கத்தில் இருந்த மைசீனியர்களின் (MMYCENAEANS) நகர அரசுகள் கி.மு. 13ஆம்  நூற்றண்டு வரை பயன்படுத்தினர். அதன் பின் கிரேக்கத்தில் இருந்த மைசீனியர்களின் நகர நாகரிகம் அழிந்து போனதால் அவர்கள் எழுத்தும் இல்லாது போயிற்று. அதன் பிந்தைய மூன்று, நான்கு நூற்றாண்டுகள் கிரேக்க வரலாற்றில் இருண்ட காலமாகும். கி.மு. 8ஆம் நூற்றாண்டில், மீண்டும் கிரேக்க நகர அரசுகள் உருவாகி நிலைபெற்ற பொழுதுதான் பொனிசியன்(PHOENICIAN) எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கிரேக்க எழுத்து முறை உருவாகியது(3).

ஆகவே அரசுகள் உருவாகி நிலைபெற்ற பின்னர்தான் எழுத்துக்கள் உருவாகின்றன என்பதற்கு கிரேக்க வரலாறே ஒரு சான்றாகத் திகழ்கிறது எனலாம். தமிழகத்தில் தமிழி எழுத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரையான காலகட்டத்தில் தமிழர்கள் குறியீடுகளை எழுத்துக்களாகப் பயன்படுத்தினர். ஆதலால் கி.மு.1500 முதல் கி.மு. 1000 வரையான காலகட்டத்தில் தமிழகத்தில் சிறு சிறு நகர அரசுகள் உருவாகி இருந்தன. சங்ககாலத்திற்கு முன், கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் அவை வளர்ந்து, நிலைபெற்ற நகர அரசுகளாக ஆகியிருந்தன.

தமிழகத்தின் வளர்ச்சி:

தமிழகச் சேர சோழ பாண்டிய அரசுகளின் ஆட்சிக்கும், வட இந்திய மகதப் பேரரசின் ஆட்சிக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. மிகப்பெரிய, பரந்து விரிந்த பேரரசுகளின் நகரங்களை பேரரசின் மண்டல அதிகாரிகளே ஆட்சி செய்து வந்தனர். பேரரசுகளில் படிப்படியான அதிகாரவர்க்க நிர்வாகமுறை இருந்து வந்தது. அதனால் பேரரசின் நகரங்களும் பிற பிரதேசங்களும் போதிய சுதந்திரம் இல்லாதவைகளாக இருந்தன. பேரரசரால் மண்டல அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படவும் வாய்ப்பிருந்தது. இந்நிலைமை பாரசீகப் பேரரசிலும், இந்தியாவில் மகதப் பேரரசிலும் இருந்தது. ஆனால் தமிழக நகர்மைய அரசுகள் பெரும்பாலும் மூவேந்தர்களின் கிளை அரசர்களால் ஆளப்பட்டன. அல்லது குறுநில மன்னர்களாலும், வேளிர்களாலும் ஆளப்பட்டன. அவை அனைத்துமே தங்கள் நகர்மைய அரசுகளை நிர்வகிப்பதில் முழு சுதந்திரம் உடையவைகளாகவும், தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டவைகளாகவும் இருந்தன. மிக நீண்ட காலமாக ஆளப்பட்டு வந்தன. மக்கள் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு ஆளப்பட்டன. இவைகளின் காரணமாக தமிழகத்தின் பண்டைய நகர அரசுகள் பலவிதங்களிலும் நன்கு வளர்ச்சி அடைந்தவனாக உருவாகின.

தமிழ் அரசுகள் மக்களின் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப் பட்டவைகளாக இருந்தன என கிரேக்கப்பயணி மெகத்தனிசு அவர்கள் கூறியுள்ளார் என்கிறார் சவகர்லால் நேரு அவர்கள். “அரசியல் துறையில் தென்னாட்டு சனப்பிரதிநிதி சபைகள் அரசர்களின் அதிகாரத்தை ஒரு கட்டுக்கு உட்படுத்தி வைத்திருந்தன என கிரேக்க யாத்திரிகரான மெகத்தனிசு கூறுகிறார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்(4). ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற வேளிர்கள் அல்லது பிரபுக்கள் குழுக்களும் இன்னபிற மக்கள் பிரதிநிதிக்குழுக்களும் அரசை கட்டுப்படுத்தி வந்திருக்கவேண்டும். அதன் காரணமாக அரசனின் அதிகாரம் வரம்பற்றதாக இல்லாமல் கட்டுப்படுத்தப் பட்டதாக இருந்தது. அதனைத்தான் மெகத்தனிசு தனது குறிப்பில் கொடுத்துள்ளார். இவை தமிழக நகரங்களின் வளர்ச்சிக்கு ஒரு மிக முக்கியக் காரணமாக இருந்தது எனலாம்.

சங்ககாலத்தில் இருந்த அளவு எழுத்தறிவும், கல்வியறிவும் வடஇந்தியாவில் இருக்கவில்லை. பிற தொழில்நுட்பமும், உற்பத்தித்திறனும், வணிகமும்கூட பழந்தமிழகத்தில் இருந்த அளவு வட இந்தியாவில் இருக்கவில்லை. பழந்தமிழகத்தில் இருந்து உலகம் முழுவதும் பெரிய அளவில் வணிகம் நடைபெற்றது. இவ்வளர்ச்சிகளால்தான் கி.மு. 3ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி மௌரியப் பேரரசைத் தோற்கடிக்க முடிந்தது. சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்களை உருவாக்க முடிந்தது. மகதப் பேரரசு காலத்தில் வட இந்தியாவில் செவ்வியல் இலக்கியம் எதுவும் உருவாகவில்லை என டி. டி. கோசாம்பி குறிப்பிடுகிறார். உலக அளவில் நடந்த பண்டைய இந்திய வணிகம் பெருமளவு தமிழகம் வழியேதான் நடந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் இன்று உறுதி செய்துள்ளன. சங்ககாலத் தமிழ் மக்கள் மிக அதிக அளவில் எழுத்தறிவு கொண்டிருந்தனர் என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார். ஆகவே மிக நீண்டகாலத்திற்கு முன்னரே தமிழகத்தில் நகர அரசுகள் உருவாகி அவை ஒப்பீட்டளவில் பண்டைய கிரேக்க, உரோம நகர அரசுகளைப் போன்ற வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாக ஆகியிருந்தன.

பார்வை:

  1. The World Book Encyclopedia, 1988 USA. vol-4, pages : 578-580

2.விக்கிபீடியா: Greek_alphabet,  Latin_alphabet  & ’இன்றைய இந்திய இலக்கியம்’ சாகித்திய அக்காதெமி வெளியீடு, பக்; 87, 185;

3.The World Book Encyclopedia, 1988 USA.  vol-8, pages : 396

4.சவகர்லால் நேரு,  ‘உலக சரித்திரம்’  தமிழாக்கம்- ஓ.வி. அளகேசன், 3ஆம் பதிப்பு, அக்டோபர்- 2006, பக்: 153.

ஆதார நூல்:

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 261-269

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *