சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்

0

-நிலவளம் கு.கதிரவன்

முன்னுரை:

இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி.  நமது வாழ்க்கையே இலக்கியம்.  அவ்வகையில் உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் சங்ககால இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக ஏற்று அங்கீகரித்துள்ளனர்.  தமிழ்மொழியானது இன்றும் நிலைத்து நீடித்திருப்பதற்குக் காரணம், அது காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றித் தகவமைத்துக் கொண்டே வருவதால் வழக்கிலும், வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்து செம்மொழியாக மிளிர்ந்து நன்னடைபோட்டு வருகிறது.

தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் வரிசையில் சிலப்பதிகாரத்திற்கு மிக ஏற்றமுண்டு.  இரண்டாம் நுற்றாண்டுக் காப்பியமான இதில் இளங்கோவடிகள் அதன் பாத்திரங்கள் வழியாக பல்வேறு வாழ்க்கை நெறிகளை மிக விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.  அவ்வகையில் சிலம்பில் காணப்படும் வாழ்க்கை நெறிகளில் முக்கியமான அம்சங்களை இக்கட்டுரையில் தொடர்ந்து காண்போம்.

சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்: –

”நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” என்று பாரதி கூறியதுபோல் சிலப்பதிகாரமானது தமிழினத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது.  தமிழர்களின் பண்பாடுகளை மிகத் தெளிவாகக் காட்டும் நூல் சிலப்பதிகாரமாகும்.  இதற்குப் பிறகு நமது பண்பாட்டினை படம்பிடித்துக் காட்டும் பெருங்காப்பியம் இதுவரை தோன்றவில்லை எனலாம்.   சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகி, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், துறவி கவுந்தியடிகள் போன்றோர் வாயிலாக பல்வேறு வாழ்க்கைக் கூறுகளை நயம்பட உரைக்கிறார் இளங்கோவடிகள்.

  1. பெருமைமிக்க பத்தினியை பெரியோர் தொழுவர்.
  2. அரசியல் பிழை செய்தவர்களுக்கு அறமே யமன்.
  3. ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்.
  4. கவுந்தியடிகள் வடக்கிருந்தது.
  5. மானுடவியல் நோக்கில் ஐவகைநிலத் தெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு, நாட்டாரியல் கலை மற்றும் இசை, நடனம்.

பெருமைமிக்க பத்தினியை பெரியோர் தொழுவர்: –

கண்ணகியின் கற்புத் திறத்தை கற்புடை மகளிர் என இரண்டு சொற்களில் கூறாமல்

      ”பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டுகொல்
       கொண்ட தொழுநர் உறுகுறை தாங்குறுஉம்
       பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டு கொல் ” ( ஊர்சூழ் வரி 51 – 53 )

அதாவது கணவன் செய்யும் துன்பங்களைத் தாங்குபவரே கற்புடைப் பெண்டிர்.  கணவன் துன்பங்களுள் பெண்களுக்கு மிகக் கொடியதாய் இருப்பது அவனது போற்றா ஒழுக்கமான பரத்தமையே.  என்றாலும் கோவலனின் செய்கைகள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு ஆறியக் கற்பு (அ) அறக் கற்பு மற்றும் சீறிய கற்பு (அ) மறக் கற்பு என கண்ணகி உயர்ந்து இருந்தாள்.

கண்ணகி புகார் நகர வாழ்க்கையில் கணவன் தனக்கு செய்யும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு ஆற்றியிருந்தாள்.  இதுவே ஆறிய கற்பொழுக்கம். மதுரை நகரில் மன்னனிடம் நீதிகேட்கச் செல்லும்போது தனது சீறிய கற்பொழுக்கமான மறக் கற்பை வெளிப்படுத்தினாள்.

மதுரை செல்லும் வழியில் கண்ணகியிடம் கோவலன் கழிவிரக்கமாகத் தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறான்.  வறுமொழியாளருடனும், புதிய பரத்தையருடனும் திரிந்து கெட்டேன், அறிஞர் பெருமக்கள் அறிவுரைகள் மறந்தேன்.  எனக்கு நன்னெறியே அமையாது.  நன்மையே வாய்க்காது.  என் பெற்றோர் இருவருக்கும் அவர்கள் முதிய பருவத்தில் பணிவிடை செய்ய வேண்டும்.  அதை மறந்துவிட்டேன்.  பேரறிவு படைத்த உனக்கும் தீமை செய்துவிட்டேன்.  எழுக என்றேன்.  மறுப்புக் கூறாமல் என்னுடன் வந்துவிட்டாய் என புலம்பினான்.

ஆனால் கண்ணகி, கோவலன் தன்னைவிட்டு பிரிந்த துயரை எடுத்துக் கூறவில்லை.  மாறாக,

            அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
             துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
            விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை (கொலைக்களக் காதை 71-73)

என்று அறம் செய்வோர்க்கு உதவுதல், அந்தண மரபினரைப் போற்றுதல், துறவிகளை எதிர்கொண்டு அவர்களுக்கு வேண்டுவன செய்தல், விருந்தினரைப் பாதுகாத்தல் என்ற நான்கு அறங்களை நான் தனித்திருந்ததால் செய்ய இயலவில்லை என்று கூறுகிறாள்.  மேலும் கோவலனின் பெற்றோர்கள் அடைந்த வருத்தத்தையும், உன் பெற்றோர்கள் வந்து விசாரித்தபோது விசனத்தைக் காட்டாமல் வியர்த்தமாகச் சிரித்தேன் என்றும்,  நீர் போற்றா ஒழுக்கம் விரும்பினீர். அது உங்கள் உரிமை.  அதனை மறுத்து உரைப்பது உகந்தது அன்று.  மேலும் பெண்களுக்கு அழகு எதிர் பேசாதிருத்தல் என்பதையும் கூறுகிறாள்.

தவிர, கண்ணகியின் பார்ப்பனத் தோழியான தேவந்தி காவிரியின் சங்கமுகத் துறையை அடுத்த கானலில் உள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் என்னும் பொய்கைகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தைத் தொழுத மகளிர் இம்மையிற் கணவரைக் கூடி இன்புற்று, மறுமையிலும் போக பூமியிற் பிறந்து, கணவரைப் பிரியாதிருப்பர்.  எனவே நாமும் ஒருநாள் நீராடுவோமா? எனக் கேட்க, அதற்குக் கண்ணகி அது பெருமை தருவதன்று என மறுக்கிறாள்.  இதுவும் கண்ணகியின் கற்புக் கோட்பாட்டுக்கு நல்ல உதாரணமாகும்.

அரசியல் பிழை செய்தவர்களுக்கு அறமே யமன்:-

கொலை செய்யப்பட்ட கோவலனின் செய்தியைக் கேட்ட கண்ணகி, வீறு கொண்டு நீதி கேட்டு அரச சபைக்குச் சென்றாள்.  பாண்டிய மன்னனின் மனைவி கோப்பெருந்தேவியுடைய சிலம்பு, என் சிலம்போடு ஒத்திருப்பினும், அரசியின் காற்சிலம்பு முத்துக்கள் எனக் கூறுவதைவிட, தன்னுடையது மாணிக்கப் பரல்கள் கொண்டது எனத் தனது வாதத்தின் மூலம் நிரூபித்தாள்.  அரசன் உடைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது தனது அவசரமான முந்தைய தீர்ப்பு தவறு என்பதை உணர்ந்து, அறநெறி தவறியது தன் மானத்துக்கு ஊறு என உணர்ந்து உடனே தன் உயிர்துறந்து அறத்தை நிலை நிறுத்தினான்.  இதில் இரண்டு செய்திகள். சிலம்பு என்ற தடயத்தோடு ஒப்பிட்டு முடிவெடுத்ததால் இன்றைய தடய அறிவியல் நுட்பத்திற்கு அன்றே அச்சாரமிட்டவள் கண்ணகியே எனலாம்.  தவிரவும் வழக்கு, மேல் முறையீடு என்ற இன்றைய நீதிபரிபாலனத்திற்கு காரணமும் கண்ணகியே என்பதை உணரலாம்.

ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்:-

கோவலனைப் பார்த்து மாடலன் என்பவன் கூறுகிறான். ” இம்மைச் செய்தன யானறி நல்வினை, உம்மைப் பயன் கொல் ”( அடைக்கலக் காதை -90-94 ) அதாவது நான் பார்த்தவரையில் இப்பிறப்பில் நானறிந்தவரை நீ நன்மையைத்தான் செய்திருக்கிறாய்.  பின்னர் உனக்கு ஏன் இந்நிலை.  ஒரு வேளை முற்பிறவியின் பயனாக இருக்குமோ? என்று கேட்கிறான்.  அதாவது ஊழ்வினைக்கான பயன் அனுபவித்தே தீர வேண்டும் என்பது நியதி. கோவலன் முற்பிறவியில் ஒருவன் கொலை செய்யப்பட காரணமாக இருந்துள்ளான். அப்பயனே அவன் இப்பிறப்பில் கொலை செய்யப்படக் காரணம் என்பதே இதன் தாத்பர்யம்.

கவுந்தியடிகள் வடக்கிருத்தல்:-

வடக்கிருத்தல் என்பதைச் சமணர்கள் சல்லேகனை என்று கூறுவார்கள்.  வடக்குப் பக்கமாக அமர்ந்து உணவு உண்ணாமல் இருந்து இறப்பது வடக்கிருத்தல் எனப்படும்.  அதாவது பொறுக்கமுடியாத மனவேதனையைத் தருகின்றபோது வடக்கிருந்து உயிர் விடலாம் என்பது சமணர் கொள்கை.  சமணர் தவிர்த்து சங்க காலத் தமிழர்களிடையேயும் இத்தகைய வழக்கம் இருந்தது புறநானுறு வழியாக அறிய முடிகிறது.  உறையூரை ஆண்ட கோப்பெருஞ்சோழன், தமது வாரிசுகளின் கலகத்தால் வடக்கிருந்து உயிர்விட்டான். சோழனின் பிரிவைத் தாங்காமல் அவனது நண்பர் பிசிராந்தையார், மற்றொரு நண்பர் பொத்தியார் ஆகியோரும் வடக்கிருந்து உயிர்விட்டனர். சிறுபஞ்ச மூலம் என்னும் நூலிலும் வடக்கிருக்கும் குறிப்பு காணப்படுகிறது.

            வலியழிந்தார் மூத்தார்வடக்கிருந்தார் நோயின்
              நலிபழிந்தார் நாட்டறைபோய் நைந்தார்………….(சிறுபஞ்ச மூலம்)

 அதே வகையில், துறவியாக இருந்தாலும் கோவலன் கண்ணகி இருவர் மீதும் மாறாப் பற்று வைத்திருந்த கவுந்தியடிகள் அவர்களின் பிரிவினால் பெரிதும் மனத் துயர் அடைந்து உயிர்விட்டது சிலப்பதிகாரம் மூலம் அறிய முடிகிறது.

சிலப்பதிகாரத்தில் மானுடவியல் மற்றும் நாட்டாரியல் கோட்பாடுகள் :-

 காப்பியத்தில் அதன் ஆசிரியர் இளங்கோவடிகளால் அந்தணன், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வகையானவர்களிலிருந்தும் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.  மேலும் குறிஞ்சி, முல்லை, மருதம்,  நெய்தல், பாலை என ஐந்து வகை நிலங்களைப் பிரித்து, அதற்குரிய தெய்வங்களையும், மக்கள் வழிபடுவதையும் கூறியுள்ளார்.

தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிமை” (இந்திரவிழவூரெடுத்த காதை – 59-67 ) என்ற வரியிலிருந்து காவல் தெய்வ வழிபாடு உள்ளதைக் காணமுடிகிறது.  தவிரவும் இக் காவல் தெய்வத்தின் முன் வில், வேல், வாள், ஈட்டி படையலிட்டு வீரர்கள் வணங்குவதிலிருந்து சிலப்பதிகாரத்தில் காவல் தெய்வ வழிபாடு உள்ளதையும் அறிய முடிகிறது.

ஐயை கோட்டம் எனக் கொற்றவை வழிபாடு பற்றியும், சாலினி என்ற பெண்மீது தெய்வமேறி கண்ணகியை புகழ்ந்து கூறுவதாக வரும் காட்சி மக்கள் சாமியாடுபவர்கள், அவர்கள் கூறும் வார்த்தைகள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் என அறிய முடிகிறது.  மதுரை செல்லும் வழியில் ஆய்ச்சியரோடு தங்கியிருந்த கண்ணகிமுன் ஆய்ச்சியர் குரவைக் கூத்தை நடித்துக் காண்பித்துள்ளனர்.

 தவிரவும் சிலப்பதிகாரம் ஓர் இசைக் கருவூலம் எனலாம்.  அரங்கேற்று காதையில் ஆடல் கலைக் களஞ்சியமாக உள்ளதை அறிய முடிகிறது.  சிலப்பதிகாரத்தில் ஆடலாசிரியன், பாடல் ஆசிரியன், மத்தளம் கொட்டுவோன், யாழ் இசைப்பவன், ஆடும் பெண் ஆகியோருக்கு உரிய தகுதிகள், ஓர் ஆடல் அரங்கத்திற்குத் தேவையான நீளம், அகலம், உயரம் ஆகியவை பற்றி மிக நுட்பமாக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டமிட்டு நடைபெற்றது வியப்பைத் தருகிறது.

முடிவுரை :-

 மற்றைய தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் போலல்லாமல், இலக்கியக் கொள்கைத் தீர்மானங்களுடன், சொல்லவந்த கதையை எந்தெந்தக் களத்தில் அது நிகழ்கிறதோ, அக் களத்தின் புவியியல் பின்னணியிலும், அக்களத்திற்குரியப் பாரம்பரிய கலை வடிவங்களைப் புலப்படுத்தும் கையேட்டு ஆவணமாக ஆக்கிக் கூறும் படைப்பு சிலப்பதிகாரம் என்றால் அது மிகையாகாது.

துணை நின்ற நுல்கள் : –
1.   சிலப்பதிகாரம் – அரும்பதவுரை – அடியார்க்கு நல்லாருரை,
டாக்டர் வே.சாமிநாதையர், கபீர் அச்சுக் கூடம், சென்னை.
2.   Tamil Heritage Group அமைப்பில் திரு.இந்திராபார்த்தசாரதி அவர்கள் ஆற்றிய உரை.
3.   சிலம்பின் கதை, – டாக்டர்.ரா.சீனிவாசன்., வெளியீடு – Mukil e-Publishing Pvt ltd.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.