நோய்மையின் உளவியல்
-செ. செல்வி
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று” -திருக்குறள்
மருத்துவ அறிஞர்கள் கூறிய வாதம், பித்தம் சிலேட்டுமம் இவை கூடினாலே குறைந்தாலோ நாம் நோய் என்கிற துன்பத்திற்கு ஆளாகிவிடுகிறோம் என்பது நோய் குறித்த வள்ளுவரின் கூற்று.
மனிதனுக்கு நேரும் சிக்கல்களிலே அவன் பெரிதும் அஞ்சுவது நோய்க்குத்தான். நோயில்லாமல் எந்த ஒரு மனிதனும் வாழமுடிவதில்லை. ஏதாவது ஒருவகையில் மனிதமனம் நோயுற்றிருப்பதாகவே கற்பனைசெய்து கொண்டு நலிவடைந்து அதனை எதிர்கொள்ள தயங்கிக்கொண்டே இருக்கிறது.
இப்படிப்பட்ட நோய்மையை, நோயுற்றவர்களை அவர்களின் உளவியலை எஸ்.ராமகிருஷ்ணன் தன் ‘துயில்’ என்ற நாவலின் வழி விரிவாக எடுத்துரைக்கின்றார். நோய்மையை இதுவரை இந்த அளவிற்கு உற்றுநோக்கி விரிவாகப் பேசியிருப்பவர் இவராகத்தான் இருக்கமுடியும் என்பதில் ஐயமில்லை.
‘துயில்’ என்ற நாவலில் ‘தெக்கோடு’ தேவாலயத் திருவிழாவிற்காக துயில்தரு மாதாவை தரிசிக்க பல்வேறு திசைகளிலிருந்து பலர் வந்துகொண்டிருக்கிறார்கள். நோயாளிகள் தத்தம் இடங்களிலிருந்து கால்நடையாகவே நடந்து திருவிழாவிற்கு வந்து சேர்ந்தால் அவர்களின் தீர்க்கமுடியாத பிணிகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். அவ்வாறு வந்துசேரும் நோயாளிகள் இடையில் தங்கிச்செல்லும் இடமாகவும், ஆரோக்கியம் நல்கும் இடமாகவும் விளங்குவது ‘எட்டூர்மண்டபம்’ என்னும் இடமாகும். அங்கே சேவையாற்றும் ‘கொண்டலு அக்கா’ என்பவர் அன்னை தெரசாவை நினைவூட்டும் வகையில் நோயாளிகளிடம் பரிவும், பாசமும், சேவையும் ஆற்றும் தொண்டுள்ளம் கொண்டவராக விளங்குகிறார். அவர் ஒரு மருத்துவரல்லர், மருந்து மாத்திரைகள் நோயைத் தணிப்பதை விட மனத்திற்கு ஆறுதல் சொல்வதுதான் நோய் தீர்க்கும் ரகசியம் என்பதை அறிந்துவைத்திருக்கும் சமுதாய மருத்துவராக விளங்குகிறார். நோயாளிகளின் உளவியலை, ஏக்கங்களை, தேவைகளை இவர் வாயிலாகவே நமக்கு உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
அதைப்போலவே நோய்மை என்பதை வெறும் பாசமும், பரிவும், மதமும் மட்டுமே சீராக்கி விடாது. அதோடு சரியான சிகிச்சையும் தேவை என்பதை உணர்த்தவே படைக்கப்பட்ட பாத்திரம் ‘ஏலன்பவர்’ என்ற மருத்தவருடையது. அயல்நாட்டிலிருந்த ஞானத்தந்தை லகோம்பாவில் சேவை செய்வதில் மிகுந்த ஆர்வமுள்ள ‘ஏலன்பவர்’ மருத்துவப்பணி செய்வதற்காக தெக்கோட்டிற்கு அனுப்பப்படுகிறார். இவ்விருவரின் பாத்திரத்தின்வழி நோயாளிகளின் உளவியல் மருத்துவத்தின் முக்கியத்துவம், மதத்தின் தலையீடு, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை விளக்க முற்படுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
நமது பிறப்பே ஒரு நோய்மைதான், பின் எப்படி நோய்மையில்லாத மனிதர்கள் இருக்க முடியும்? நோய்மை தவறானதில்லை. அதைக்கொண்டு நாம் பயம் கொள்வதுதான் தவறு. நோய்மை எல்லா மனிதர்களின் வயதையும் கரைத்துவிடுகிறது. நோய்மையின்போது அவனுக்குள் இருந்து ஒரு சிறுவனோ, சிறுமியோ வெளிப்பட்டுவிடுகிறாள். அந்த பால்ய பருவம் பிடிவாதமானது, வலி தாங்கமுடியாமல் புலம்பக்கூடியது. உலகைக் கண்டு பயப்படக்கூடியது, நோயுற்றிருக்கையில் மனம் இடைவிடாமல் எதை எதையோ நினைத்துக்; கொண்டேயிருக்கிறது. தறியில் ஒடும் ஓட்டத்தைப்போல மனது சதா பயத்தை நெசவுசெய்ய ஆரம்பிக்கின்றது.
நாம் நோய்மையுறும்போது அதைப்பற்றி அடுத்தவரோடு பேச விரும்புகிறோம், ஆனால் நோயுற்றவரின் பேச்சை யாருமே செவிகொடுத்துக் கேட்க தயாராக இல்லை, அதனால்தான் நோயாளிகள் தனக்குத் தானே பேசிக்கொள்ளத் துவங்குகிறார்கள். தன்னோடு பேசிக்கொள்ளாத நோயாளி எவருமே இருக்க முடியாது. நோய்மையின் வலியை, வேதனையை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது அது உலர்ந்துபோகத் துவங்குகிறது, பகிர்ந்துகொள்ளப்படாத, பொத்திவைக்கப்பட்ட வேதனைகள் இரணமாக்கி அறுத்துக்கொண்டேயிருக்கக் கூடியது. மனம்விட்டுப் பேசுவதால் மனத்தில் உள்ள துயரம் குறையும்.
ஒவ்வொரு நோயும் ஒரு விசித்திரம், அது எப்படி உருவானது என்பதை யாருமே அறிந்துகொள்வதில்லை. நோயாளி நலமடைவது என்பது மருந்தால் மட்டுமே ஏற்படுவதில்லை. அது ஒரு அக விளைவு, நலமடைய வைப்பதற்கு மருந்து துணைசெய்கிறது. மருந்திற்குச் சமமாக, மருந்தை விடச் சில நேரங்களில் மேலானதாக நோயாளியின் உடனிருப்பவர்கள் அல்லது குடும்பம் அவன்மீது அக்கறை கொண்டவர்களின் நம்பிக்கைகள், பிரார்த்தனைகள், தீராத அன்பு அவனை நோய்மையிலிருந்து நலமடைய செய்கிறது. நோயாளி குணமடைவது பெரும்பாலும் நம்பிக்கையில்தான். அது ஒரு மகத்தான மருந்து, அது எல்லா மருந்துகளையும் விட வலிமையானது, நோயாளியின் மீது எவர் ஒருவர் தீராத அன்பும், பரிவும் காட்டுகிறாரோ அதுவே உன்னதமானது. அந்த அன்பு மட்டுமே நோயிலிந்து விடுபடும் உந்துதலை ஏற்படுத்திவிடக்கூடியது.
நோய்மையுற்றோர் தனது வலி, வேதனைகளை யாரோடும் பகிர்ந்துகொள்ள முடியவில்லையே என்றுதான் ஆதங்கப்படுகிறார்கள்; கண்ணீர் விடுகிறார்கள். ஓர் அரவணைப்பும், ஆறுதலான சொற்களும், உறக்கத்தில்கூட நம்மை யாரோ அருகிலிருந்து கவனித்துக்கொள்கிறார்கள் என்ற நம்பிக்கையும்தான் நோயாளியை முற்றிலும் குணப்படுத்தும்.
நோய்மை என்பது கடவுள்தரும் தண்டனையில்லை, ஆனால் அது கடவுளைப்பற்றி சிந்திப்பதற்கான முதல் வழிகாட்டுதல் என்று எடுத்துக்கொள்ளலாம். மனிதர்கள் தங்கள் உடலை எப்போதும் ஓர் இயந்திரமாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அது செம்மையாக இயங்கிக்கொண்டிருக்கும்வரை அவர்கள் அதை கவனிப்பதே இல்லை. ஆனால் அதில் ஏதாவது கோளாறு என்று வந்துவிட்டால் உடனே பயம் கொள்கிறார்கள்.
ஓவ்வொரு மனிதனும் நோயிலிருந்து நிறையக் கற்றுக்கொள்கிறார்கள். அப்போதுதான் அவனுக்கு உடலின் அமைப்பும், நுணுக்கமும், விசித்திரங்களும் புரியத் துவங்குகிறது. உடல் வெறும் எந்திரமல்ல, அது ஓர் ஆத்மாவின் கூடு என்பதை உணர்த்தவே மதம் தேவைப்படுகிறது. மதம் என்பது நம்பிக்கையை உருவாக்கும் ஒரு மையம். அது மனிதனை துயரத்தில் விழுந்துவிடாதபடி தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை மதம் என்ற அமைப்பே இல்லாமல் போயிருந்தால் மனிதன் மிருக நிலைக்குத்தான் போயிருப்பான்.
ஆனால் உண்மையில் மருத்துவத்தின் முதல் எதிரியாக மதத்தைக் கருதுவதும் ஏற்புடையதாக இருக்கின்றது. மதத்தின் பெயரால்தான் எல்லா நோய்மைகளும் அடையாளப்படுத்தப்படுகின்றன. நோயை சொல்லித்தான் மனிதர்களை மதம் தன்வசம் இழுக்கின்றது. இந்த பயத்தால்தான் அவர்கள் கடவுளை வணங்குகிறார்கள். மனிதனை பயமுறுத்தும் எந்தக் கடவுளும் மனிதர்களுக்குத் தேவையில்லை, அந்த பயத்தை யாராவது திணிக்க முயன்றால் அதற்கு கட்டுப்படக் கூடாது.
மனிதர்கள் போன ஜென்மத்தில் செய்த பாவமாகவே அவர்களுக்கு வந்த நோய்கள் கருதப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் கூட குழந்தையின்மைக்கான காரணம் தெய்வக்குற்றமாக கருதப்படும் நிலை உள்ளது. மருத்துவப் பரிசோதனைகளுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டு பிரச்சனைகளை தெரிந்துகொள்ளாமல் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு தலைவிதியென பேசாமல் இருந்துவிடுகிறார்கள். மேலும் பலர் பைத்தியங்கள் என அடையாளப்படுத்தப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு முற்றும் தெரிந்த மருத்துவராகக் கருதப்படும் பூசாரியிடம் சவுக்கடிபட்டு அல்லலுறும் நிலையே காணப்படுகிறது. தேவையற்ற பச்சிலைகளை அரைத்துக் குணமாக்குவதாக அவர்கள் கொடுக்கும் சாற்றை உட்கொண்டு மயக்கமடையச் செய்கிறார்கள், இதனால் மேலும் பல உபாதைகள் வருகின்றன. இதைப்பார்த்து பேய் குடிகொண்டுள்ளதென எண்ணி அடித்து வதைக்கின்றனர். இந்நிகழ்வு அவர்களை மேலும் மூர்க்கமடையச் செய்கின்றது. மனச்சிதைவு நோய்க்கும் ஆளாக நேரிடுகிறது.
மனச்சிதைவு நோய் கண்டவர்களை குணமாக்குவது என்பது தேர்ந்த மருத்துவர்களால் மட்டுமே இயலும் காரியம். அவர்களை குழந்தைகள் போலக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பரிகாசம் செய்யக்கூடாது. அது ஆழ்ந்த அக்கறையும் ஆறுதலும் காட்டப்படவேண்டிய நோய்மை. அதை அணுகுவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் முறையான மருத்துவம் வேண்டும். மனத்தை அறிந்து மென்மையாகவும், நுட்பமாகவும் வைத்தியம் செய்யவேண்டும். அப்போதுதான் அவர்களை அதிலிருந்து மீட்கமுடியும்.
நோயாளியின் உளவியலை இவ்வாறு விளக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் மனிதனை நோய்மையிலிருந்து விடுவிக்கச் சமுதாயமும், மருத்துவரும் ஆற்றவேண்டிய கடமைகளையும் கூறுகிறார்.
“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” -திருவள்ளுவர்.
நோய்களைத் தீர்க்கும் மருத்துவர் தன்னிடம் வரக்கூடிய நோயாளிகளிடம் உள்ள நோயின் தன்மையையும் அந்த நோய் வந்ததற்குக் காரணத்தையும் அந்த நோயைத் தணிக்கும் மருத்துவத்தையும் அறிந்து பின் மருத்துவம் செய்ய வேண்டுமென்பது வள்ளுவர் கூற்று.
நோய் பிடிக்கப்பட்ட மனிதனைக் கையாள்வது சற்றுக் கடினமான காரியம் தான். அதைக் கையாளத் தெரிந்தவரே சிறந்த மருத்துவர். நாம் எல்லோரும் அதிகமாகக் கோபப்படுவது நோயாளிகளிடம்தான். அவர்களது உபாதைகளைத் தேவையற்ற தொந்தரவுகளாகக் கருதுகிறோம். நல்ல மருத்துவர் நோயாளியைத் தோழனைப்போல நடத்த வேண்டும். அவனது அந்தரங்க வலியைத் தொட்டு உணர்ந்து ஆறுதல் சொல்லவேண்டும்.
நோயாளியிடம் பரிவுகொள்ளத் தெரியாத மருத்துவரைப் போலஇந்த உலகில் மோசமானவர் எவரும் இருக்க முடியாது, மருத்துவம் என்பது பணம் சேர்க்கும் தொழில் இல்லை. அது ஒரு கைமாறில்லாத சேவை. அது கறைபடும்போது மனிதன் மீட்சியுறவே முடியாது. நல்ல மருத்துவர் நோயாளியிடம் பேசும் முன்பாக அவனுடன் வந்திருப்பவர்களிடம் பேசி முதலில் அவர்களை ஆறுதல்படுத்த வேண்டும். அவர்கள் நோயாளிகளை விடவும் அதிகம் துயருற்று இருப்பார்கள். அவர்களோடு நல்ல வார்த்தை பேசி கவலையிலிருந்து விடுவித்து அமைதி கொள்ளச்செய்யவேண்டும். அதன்பின்னரே நோயளியிடம் பேசவேண்டும். ஒருபோதும் நோயாளியை பரிகாசம் செய்துவிடக்கூடாது. அது அவனுக்குள் ஆறாத வடுவினை உண்டாக்கிவிடும். பேச்சின் வழியே அவன் இதயத்தைத் தொட முயல்வதுதான் மருத்துவரின் முதல் கடமை. மருத்துவரால் அவன் மனத்திற்குள் செல்ல முடிந்தாலே பாதி மருத்துவம் முடிந்துவிடும்.
மருத்துவரிடம் சென்றால் அற்புதம் நடக்கும் என ஒவ்வொரு நோயாளியும் எதிர்பார்க்கிறான். அந்தக் கனவை வளர்த்துக்கொள்ள, நம்பிக்கையுடன் இருக்க மருத்துவர் உதவி செய்யவேண்டும். அந்த நம்பிக்கைதான் அவனை குணமாக்கும். ஒரே நேரத்தில் இரண்டு நோயளிகளிடம் ஒருபோதும் மருத்துவர் உரையாடக்கூடாது. அது மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும். அதுபோல எந்த நோயாளியையும் மற்றவரோடு ஒப்பிட்டுப் பேசக்கூடாது, அதுவும் அவனை பலவீனமாக்கிவிடும். நோயை குணப்படுத்துவதில் மருத்துவரின் தோற்றப்பொலிவும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நோயாளியை விசாரணை செய்யும் மருத்துவர் ஆரோக்கியமானவராகவும், பொலிவோடும் இருக்கவேண்டும். மருத்துவரது தோற்றம், கவலையற்ற முகம், மென்மையான பேச்சு இவைகள் தான் நோயாளி மருத்துவரை நம்புவதற்கான எளிய வழிகள். மருத்துவரின் அரவணைப்பில், மருத்துவரின் பலத்தில்தான் ஒவ்வொரு நோயாளியும் நோய்மையிலிருந்து விடுபட முயற்சி செய்கிறான், எனவே மருத்துவர் சஞ்சலமோ, குழப்பமோ கொண்டிருக்கக் கூடாது. அதேசமயம் நோயாளிகளோடு தனிப்பட்ட விதத்தில் நெருங்கிய உறவு கொள்ளவும் கூடாது. அது மருத்துவரை உணர்ச்சிவயமாக்கிவிடும். நோய்மையை அறிவது உன்னதமான கலை, அதை முறையாகப் பயிலாவிட்டால் சிறந்த மருத்துவராக முடியாது.
சில நேரங்களில் மருத்துவர்கள் பொய்யைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. பல நேரங்களில் உண்மை மனிதனைக் கொன்றுவிடும். அந்தச் சூழ்நிலையில் பொய்யான நம்பிக்கையும், பொய்யான ஆறுதலும் நோயாளியைத் தேற்றும் எனும்போது அவனை தொடர்ந்து செயல்பட வைக்க அது உதவும். ஒரு நல்ல மருத்துவர் எல்லா நேரங்களிலும் உண்மையைச் சொல்வதில்லை. இந்த ஒட்டுமொத்த உலகில் தான் மட்டும் எதற்கும் உதவாதவன் என்ற நினைப்பு தலைதூக்கும். அந்த நினைப்பு வந்தவுடன் மனம் கனக்கத் துவங்கிவிடும், யாராவது தன்னுடன் பேசி ஆறுதல் படுத்தமாட்டார்களா என்று ஆதங்கமாக இருக்கும். ஆனால் அவர்களை யாருமே புரிந்துகொள்ள முன்வரமாட்டார்கள். அது அவர்களது தாழ்வுணர்ச்சியை மேலும் மேலும் அதிகப்படுத்தும்.
அந்த உணர்வு தன்னை ஒரு வீட்டுச்செடியாகவும், அதற்கு யாராவது தினமும் தண்ணீர் ஊற்றி வளர்க்கவேண்டும், இல்லையென்றால் வாடிப்போய்விடும் என்பது போன்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது. தன் பலம் தெரியாதவர்களாக பிறருக்கு இருக்கும் திறமை, சமாளிப்பு, சாதுர்யம் போன்ற எதுவுமே தமக்கில்லையே என்று எண்ணவைத்துத் தங்களைத் தாங்களே குறைத்து மதிப்பிடக் காரணமாகிறது.
உடல் குறைபாட்டினால் தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்புகள், புண்படுத்தும் பலரது கேலி மற்றும் மீள முடியாத தாழ்வுணர்ச்சி அவர்களுக்குள் தீவிரமான மன பாதிப்பினை உருவாக்குகிறது. அந்த மன பாதிப்பு அவர்களுக்குள் பயத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் செயல்களை முடக்கத் துவங்குகிறது. தான் ஒரு இறந்துபோன பல்லி, தன்னை எறும்புகள் இழுத்துக்கொண்டு போவதாக எண்ண வைக்கிறது.
தனித்து வாழமுடியாது என்ற எண்ணத்தை நம் சமூகம் உடற்குறைபாடுள்ளவர்கள் மேல் திணித்துள்ளது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை அவர்கள் முழுமையான தோல்வியின் அடையாளமாகவே கருதுகிறார்கள். யாரோ ஒருவரை நம்பித்தான் வாழ்ந்தாகவேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்படும் அவர்கள் தங்களை யாரிடமாவது முழுமையாக ஒப்படைத்துவிட்டு ஒரு வளர்ப்பு நாயைப்போல வாழ்ந்துவிட்டு போகவேண்டியதுதான் என எண்ணுகிறார்கள். தொடர்ச்சியான தோல்விகளையும், அவமானங்களையும் சந்திப்பதால் தங்களுக்கென்று கனவுகளும், சுயமரியாதையும் தேவையில்லை என்ற நினைப்புக்குள் வந்துவிடுகிறார்கள். தங்களைத் தாங்களே தாழ்வாக எண்ணிக்கொண்டிருப்பதாலோ அவர்களுக்கு அவர்களையே பிடிக்காமல் போகிறது. தன்னைத்தானே நேசிப்பதும், மதிப்பதும் முக்கியமான ஒன்றாக அவர்களுக்கு தோன்றுவதில்லை.
உடற்குறைபாடுடையவர்கள் தங்களைப் பயந்து ஓடும் எலியாக எண்ணிக் குறுகிப் போய்விடக்கூடாது. துரத்தும் ஆளாக எண்ண வேண்டும். அடிக்கிற ஆளே ஜெயிப்பான், பயந்து ஓடுகிறவன் தோற்றுப்போய்விடுவான் என்பதை மனத்தில் கொண்டு எண்ணத்தை நேர்மறையாக மாற்றிக்கொள்ளவேண்டும். உடற்குறைபாட்டை காரணம் காட்டி ஒடுங்கியோ, ஒதுங்கியோ வாழ வேண்டிய அவசியமில்லை. சக மனிதர்களாகவே தங்களையும் எண்ணிக்கொண்டு அனைத்திலும் தன்னை முன்னிறுத்தவேண்டும், இதற்கு எடுத்துக்காட்டாக ஜோசப் என்ற கதாபாத்திரத்தை ‘நிமித்தம்’ என்ற தன் நாவலில் படைத்திருக்கிறார் எஸ்.ரா. அவனுடைய நேரிய செயல்களை விவரிக்கும்போது,
”அவன் தன் உடற்குறைபாட்டினை என்றும் ஒரு பொருட்டாகவே எண்ணமாட்டான், எப்போதும் சந்தோஷமாகவே காணப்படுகிறான், தனது சந்தோஷத்தை உருவாக்கிக்கொள்ள அவன் எதையும் செய்யத் தயாராக இருக்கிறான், அவன் தன்னைப்பற்றி என்றுமே தன்னிரக்கம் கொள்வதில்லை, இந்த உலகின் கேலிகள் எதுவுமே அவனுக்கு ஒரு பொருட்டில்லை, தனது சந்தோஷத்தை அவன் உலகின் மீது பரவ விடுகிறான், உலகை பதிலுக்குக் கேலி செய்கிறான். எற்றி உதைத்து விளையாடுகிறான், இயற்கையை ரசிக்கிறான், மழையில் விளையாடுகிறான், அவனது இம்மனநிலையை ஒவ்வொரு உடற்குறைபாடுடையவரும் வளர்க்க வேண்டும், அப்போதுதான் தன்னம்பிக்கையும், நேரிய எண்ணங்களும் வளரும் என்கிறார்.
உலகில் வாழும் அனைவருக்குள்ளும் ஆச்சர்யம் ஒளிந்துகொண்டுள்ளது. ஆனால் அதை நாம் தேடிப்பார்ப்பதில்லை, வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் புதிதாக எதையாவது ஒன்றைக் கண்டுபிடிக்கவேண்டும். இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு உதவும் வகையில் எதையாவது செய்துவிட்டுப் போகவேண்டும். நமக்குள் இருக்கும் ஆச்சர்யத்தைத் தேடிப்பார்த்து அறிந்துகொள்ளவேண்டும். மனிதன் வயதாவதை என்றுமே தடுக்க முடியாது. வயதாவதைப் பொருட்படுத்தாது வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் உபயோகமானதாக மாற்றமுடியும் என்ற எண்ணத்தோடு செயலாற்ற வேண்டும். உடற்குறைபாடுடையவர்களை இங்கு, இவர்களுக்கு, இவர்களுடன்தான் பிறக்க வைக்கவேண்டும் என்று உலகம் நிர்ணயித்துத்தான் பிறக்க வைக்கிறது. அதன் போக்கில் நாமும் அவர்களை ஏற்று வாழவைக்கத் துணைபுரிய வேண்டும். அவர்களை ஒடுக்காமல், அவர்களுக்கு துணையாக இருந்து, உடற்குறைபாடு என்பது என்பது ஒரு பொருட்டல்ல என்பதை உணர்த்தவேண்டும், அவர்கள் வாழ வழிசெய்ய வேண்டும், வினோதங்கள் நிறைந்த இவ்வுலகம் ஏற்ற இறக்கங்கள் நிரம்பியது, அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு அதனுடன் திறமையாகப் பயணிப்பதே நம்முள் உள்ள சவால். அதைத் திறம்படச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும், உலகத்தில் நமக்கெனக் கொடுக்கப்பட்ட தனிஇடத்தைச் செவ்வனே நிறைவு செய்வதே நாம் இவ்வுலகில் பிறந்ததற்கு அர்த்தமுள்ளதாக அமையும்.
இவ்வாறு எஸ்.ரா., உடற்குறைபாடுடையவர்களின் வலியையும், சமூகத்தின் கடமையையும், தீர்வுகளையும் ‘நிமித்தம்’ நாவலின் வழி நமக்கு உணர்த்துகிறார்.
“இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்” -திருக்குறள்
அதிகமாக உணவை உண்பதினால் வரும் துன்பத்தை அறிந்து அளவோடு உண்பவர்களிடம் இன்பம் குடிகொள்ளும், அதுபோல அதிகமாக உணவு உண்பவர்களிடம் நோயானது குடிகொள்ளும் என்ற வள்ளுவரின் கூற்றிற்கிணங்க நோய்வரும் காரணங்களை அறிந்து, அதுவராமல் காக்கும் வழிகளை மேற்கொண்டால் நோய்மை என்ற துன்பத்திற்கு ஆளாக நேரிடாது என்று எஸ்.ராமகிருஷ்ணன் தன் நாவலின் வழி அறிவுறுத்துகிறார்.
மனிதன் நோய்மையை முதலாக உணர்வது, தான் சாப்பிடும் உணவு கசக்கும்போதுதான், அல்லது விரும்பிய உணவை உடல் ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கும்போதுதான். நாம் நம் உடலை ஒரு குப்பைத்தொட்டியாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். உடல் ஒரு தேவாலயம் என்று நாம் உணர்வதே இல்லை. எவன் ஒருவன் தன் உடலைத் தேவனின் இருப்பிடமாக உணர்கிறானோ அவனே விழிப்புற்ற மனிதன்.
உள்ள குறைபாடே உடற்குறைபாடு
‘சமுதாயத்தை மாற்ற வல்லது எழுத்து’ என்பதை பல்வேறு அறிஞர்பெருமக்கள் நிரூபித்து வருகின்றனர். அதனடிப்படையில் எத்தனையோ இலக்கியங்கள், கவிதைகள், கட்டுரைகள், இந்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்பட்டிருக்கிறது. அந்தவகையில் உடற்குறைபாடுடைய ஒருவரின் வலியைச் சமூகத்திற்குத் தெரிவிக்க முயன்றதன் விளைவே எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘நிமித்தம்’ என்ற நாவலாகும்.
உடற்குறைபாட்டால் பலர் தங்கள் வாழ்க்கையையே தொலைத்தவர்களாக காணப்படுகிறார்கள். உடற்குறைபாடு அவர்களுக்கு ஏற்படுத்தும் வலியும், துக்கமும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று. இதை நன்குணர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், உடற்குறைபாட்டினையும், அது கொடுக்கும் வலியையும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் தாழ்வுணர்ச்சியையும், அவர்களைச் சமூகம் நடத்தும் விதத்தையும் அதிலிருந்து மீளும் வழியையும் ‘நிமித்தம்’ நாவலின் முதன்மைப் பாத்திரமான தேவராஜின் எண்ணக் குமுறல்களாக வெளிப்படுத்துகிறார்.
வாழ்க்கை என்பது மனிதர்களுக்கு இறக்கும் வரை போராட்டமாகவே அமைந்துவிடுகிறது. இவ்வுலகில் வாழவும், நிலைபெறவும், மனிதன் சமூகத்தோடும், மனிதர்களோடும், போராடித் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வுலகில் நல்ல உடல்நலத்தோடும், நல்ல பொருளாதாரத்தோடும், உள்ளவர்களே பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் உடற்குறைபாடுடையவர்கள் நிலை கேள்விக்குறிதான்.
உடற்குறைபாடு என்பது அவர்களின் தவறல்ல, உடற்குறைபாட்டை விரும்பி ஏற்றுக்கொண்டு யாரும் இவ்வுலகில் பிறப்பதில்லை. இயற்கை எப்போதுமே சில விதிவிலக்குகளை உருவாக்கி கொண்டே இருப்பது போலவே தான் உடற்குறைபாடுடைய மனிதர்களை இவ்வுலகில் ஜனிக்க வைத்துள்ளது. இவ்வுண்மையை மனிதர்களோ, சமூகமோ உள்ளபடியே ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தாங்கொணாத் துயரங்களையும், அவமானங்களையும், அவர்களுக்கு தருகிறது.
உடற்குறை உள்ளவர்களுக்கு எதிலும் முன்னுரிமை மறுக்கப்படுவதோடு இரண்டாம்தர மனிதர்களாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். உடற்குறைபாடுடைய மனிதர்களுக்குச் சமூகம் கொடுக்கும் அவமானங்கள் ஒருபுறமிருக்க ஏன் சொந்தங்களான தாயும், தந்தையும் உடன்பிறப்புகளுமே உதாசீனப்படுத்துகிறார்கள், ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். தங்களது பிள்ளைகளிலேயே ஒருவரைத் தனிமைப்படுத்திப்பார்ப்பது மற்றவரை வேறுமாதிரிப் பார்ப்பது எனப் பாகுபாடு காட்டுகின்றனர். உடற்குறைபாடுடைய குழந்தை ஏதோ அடுத்தவீட்டு குழந்தைபோல நடத்தப்படும் விதமும் அரங்கேறி வருகின்றது. அடியும், உதையும், வசவுகளும் பெறாத உடற்குறைபாடுடைய மனிதர்கள் இருப்பது அபூர்வமாகத்தான் இருக்கிறது. இதுமட்டுமல்லாது வெளியே ஆசிரியரின் வெறுப்பும், சக மாணவர்களின் கேலிப்பேச்சும் என எங்குப் பார்த்தாலும் அவமானங்களையே சந்திக்க வேண்டியுள்ளது.
இதனால் இவர்கள் மனது சித்திரவதைக்குள்ளாகிறது, மறக்க நினைக்கின்ற ஆனால் மறக்கமுடியாத கசப்பான நினைவுகள் அவர்களுக்குள் தங்குகின்றது. தொடர்ந்த புறக்கணிப்பு அவர்களை மற்றவர்களை வெறுக்க தூண்டுகிறது. இவ்வுலகில் ஏன் பிறந்தோம் என்று கடவுள்மேல் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஒருவரை வெறுக்கத்துவங்கிவிட்டால் அது ஒருவகை இன்பத்தை அளிக்கிறது. அந்த இன்பம் தேன்கலந்த இஞ்சிச்சாறு குடிப்பதைப் போல, புண்ணைச் சொறிந்து சுகம் காண்பது போல வேதனையான இன்பத்தை கொடுக்கிறது. வெறுப்பு ஒரு சருமநோய் போன்றது. அடிக்கடி சொறிந்து இன்பம் காணத் தூண்டுகிறது வெறுப்பின் வழியே தான் மனதின் கசப்புணர்வு பொங்கி வழிகிறது. ஒருவரை வெறுக்கத் துவங்கிய பிறகு அவர்களின் எல்லாச் செயல்களையும் நாம் விமர்சிக்கத் துவங்கி விடுகிறோம். அதன்பிறகு அவரிடம் நல்லவை துளிகூட கிடையாது என்ற முடிவிற்கே வருகிறோம். வெறுப்பு சிம்னி விளக்கில் கரும்புகை படிவதைப்போல நம்மை கருமையாக்கி விடுகிறது. மிஞ்சிப்போவது கரும்புகை மட்டுமே.
உடற்குறைபாடுடையவர்களின் கடந்தகாலம் என்பது கசப்பான நினைவுகளின் குவியலால் ஆனது. அவர்களின் கசப்பான நினைவுகள் எளிதில் மறைந்துபோக கூடியதாக இருப்பதில்லை. அந்நினைவுகள் யாவும் மறந்துபோக கூடுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுமளவிற்கு அது அவர்களை வதைக்கிறது. அவமானப்பட்ட நினைவு என்றுமே அவர்களுக்குள் கனன்றுகொண்டே இருக்கிறது. சிறு வயதிலிருந்து பட்ட அவமானங்கள், புறக்கணிப்புகள், அடிபட்ட வலி இன்னும் கூட ஒவ்வொருவருக்குள்ளும் பசுமையாகவே இருக்கிறது. அவர்களது மனது இன்பங்களை எளிதில் மறந்துவிடுகிறது. ஆனால் அவமதிப்புகளையும், புறக்கணிப்புகளையும் மறப்பதேயிலலை. என்றுமே அது அவர்களுக்குள் சுடர்விட்டுக்கொண்டேதான் இருக்கும். இவ்வாறு உடற்குறைபாடுடையவர்கள் உளவியல் குறித்து விளக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
உடற்குறைபாடுடையவர்கள் புறக்கணிக்கப்படுவதால் அவர்களுக்குள் ஏற்படும் தாழ்வுணர்ச்சி பற்றியும் கூறுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். உடற்குறைபாடு ஒருமுறை என்றால் அதைவிட பெரிய குறைபாடு தாழ்வுணர்ச்சி அவர்களுக்குள் பூதாகரமாக உருப்பெறுகிறது. குரங்கு தன் புண்ணை நோண்டிக்கொண்டிருப்பது போல அவர்கள் மனது சதா தாழ்வுணர்ச்சியை கிளறிக்கொண்டேயிருக்கும்.
*****
கட்டுரையாளர்
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்