இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (269)

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் மற்றொரு வாரத்தில் உங்களுக்கு மடல் வரைவதில் மனம் மகிழ்கிறேன். காலநீரோட்டத்தில் மிதந்து செல்லும் எம் வாழ்க்கைப்படகு எதிர் கொள்ளும் சாவால்கள் எண்ணற்றவை. அவற்றை எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் நாம் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் விலைமதிப்பற்றவை.பெரும்பான்மையான சமயங்களில் அவ்வனுபங்களின் அடிப்படையில் நாம் எடுத்துக்கொள்ளும் முடிவுகள் எமது வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கின்றது. சில சமயங்களில் அம்முடிவுகள் மேலும் பல பாதிப்புகளையும் அதன் மூலம் அனுபவங்களையும் புகட்டுகின்றன. ஆனால் மிகவும் சொற்பமான வேளைகளில் எமது நடவடிக்கைகள் தரும் விளைவுகள் எமது வாழ்க்கையின் முடிவிற்கே எம்மை அழைத்துச் செல்கின்றது.

சமுதாயத்தில் நிகழ்த்தப்படும் பல நிகழ்வுகள் அன்றி எடுக்கப்படும் நடவடிக்கைகள் சட்டத்தின் கண்களில் குற்றமாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் நீதிதேவதையின் முன்றிலில் தீவிர விசாரணைகள் அந்நிகழ்வின் மீது பாய்ச்சும் ஒளி அந்நடவடிக்கையின் மீது செலுத்தப்படும் சட்டத்துக்குப் புறம்பானது எனும் முத்திரையைக் கேள்விக்குறியாக்குகிறது. சட்டப்புத்தகத்தில் குற்றமாகக் விபரிக்கப்படும் செயல்கள் அனைத்து,ம் நீதிமன்றத்தில் குற்றமாக நிரூபிக்கப்படுவதில்லை. எமக்கு இழைக்கப்படும் அல்லது எம்மீது இழைக்கப்படும் தாக்குதல் அன்றி எமது பிரத்தியேக வெளியில் அனுமதியின்றி நுழைந்து பயமுறுத்தும் வேளையில் அதிலிருந்து தப்புவதற்காக நாம் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம். அந்நடவடிக்கை கூடச் சட்ட விரோதமானது என்றோ அன்றி அடுத்தவர் மீது இழைக்கப்படும் தாக்குதல் என்றோ சட்டப்புத்தகத்தில் விபரிக்கப்படலாம் ஆனால் நீதிமன்றத்தில் தீர்ப்புகள் வித்தியாசமாகலாம்.

கடந்த ஏப்பிரல் மாதம் 4ஆம் திகதி லண்டனில் உள்ள “ஹிதர் ஹிறீன் ( Hither Green ) “என்னும் இடத்தில் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. அப்பகுதியில் வசித்து வந்த 78வயதான முதியவர் ” றிச்சார்ட் ஒஸ்போர்ன்-புறூக்ஸ் (Richard Osborne-Brooks) “என்பவரின் இல்லத்தில் இரண்டு திருடர்கள் நள்ளிரவில் புகுந்தனர். அரவம் கேட்டு விழித்த முதியவர் அவர்களை சமையலறையில் எதிர்கொண்டார். அவரை நோக்கி ஸ்குருட்ரைவர் சகிதம் வந்த ஒரு திருடனுடன் அவருக்குக் கைகலப்பு ஏற்பட்டது தற்காப்புக்காக கைகளில் கத்தியை எடுத்த அந்த முதியவரின் கத்திக்குத்துக்கு அந்தத் திருடன் ஆளானான். அதைத்தொடர்ந்து வெளியே ஒடிய அவ்விருவரில் கத்திக்குத்துக்கு இலக்கான திருடன் தரையில் விழ அவனை இழுத்துச் சென்ற மற்றைய திருடன் அவனை அப்படியே நடைபாதையில் விட்டுவிட்டு தனது வேனில் ஏறித் தப்பித்து விட்டான். தரையில் விழுந்தத் திருடனை அவ்விடத்துக்கு விரைந்த அவசர சிகிச்சை பிரிவினரால் காப்பாற்ற முடியவில்லை. இறந்தவன் 37வயதுடைய ” ஹென்றி வின்சென்ட்(Henry Vincent)” என்னும் மனிதன். மற்றைய 28வயதுடைய “பில்லி ஜீவ்ஸ்(Billy Jeeves) எனும் திருடன் தப்பியோடி விட்டான். அவனை போலிசார் வலைவிரித்துத் தேடுகிறார்கள். அவன் தப்பிச்சென்ற வேன் எரியுண்ட நிலையில் “ஓப்பிங்டன்” எனும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடந்த அடுத்தநாளே 78 வயது நிரம்பிய வயதானவர், அத்திருடனைக் கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். அவருக்காக பொதுமக்கள் மத்தியில் பரந்த அனுதாப அலை வீசியது. ஊடகங்கள் பலவற்றிலும்,சமூக வலைத்தளங்களிலும் அவ்வயதானருக்கு ஆதரவான குரல்கள் ஒலித்தன. தீவிர விசாரணையின் பின்னால் அம்முதியவர் எந்தவிதக் குற்றச்சாட்டும் இல்லாமல் விடுவிக்கப்பட்டார். இது நடந்ததன் பின்னால் நிலைமை அவ்விடத்தில் கொஞ்சம் சிக்கலானது. உயிரிழந்த திருடனின் குடும்பத்தினர் அவனது அஞ்சலிக்காக அத்தெருவில் அவன் இறந்து விழுந்து கிடந்த இடத்தில் அதன் முன்னால் இருந்த ஒரு வீட்டின் வேலியில் அவனின் அஞ்சலிக்காக,மலர்க்கொத்துக்களைக் கட்டிவிட்டார்கள்.

கொதித்தெழுந்தது சுற்றியிருந்த சமூகம். இறந்தவன் என்ன தியாகியா? இல்லை யாரையாவது காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தவனா? அன்றி ஏதுமறியாத ஒருவன் விபத்தில் அகப்பட்டு உயிரிழந்தானா? அவனுக்காக எதற்கு மலர்க்கொத்துகள் வைக்க வேண்டும்? ஒரு வயதான 78 வயது முதியவரைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு அவருடைய இல்லத்துக்குள் நுழைந்த திருடனுக்கா கெளரவம் அளிப்பது ? எனும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கட்டி வைக்கப்பட்ட மலர்க்கொத்துகளை பிடுங்கி எறிந்தனர் அத்தெருவில் வசிக்கும் அயலவர்கள்.

இறந்தவன் திருடனாக இருந்தாலும் மனிதன் தானே! அவன் எமது மகன், சகோதரன் அவனின் இழப்புக்காக நாம் அஞ்சலி செய்வது எமது உரிமை என்று வாதடியபடி மீண்டும் மலர்க்கொத்துகளை அவ்விடத்தில் வைத்தார்கள் அத்திருடனின் உறவினர்கள். அதை மீண்டும் பிடுங்கி எறிந்தார்கள் அயலவர்களிவர்களுக்கிடையில் நடைபெறும் போராட்டத்தைக் கண்டு தலையிடாது அவர்கள் கைகலப்பில் ஈடுபடாமல் கண்காணித்துக் கொண்டி ருந்தனர் காவற்துறையினர்.

இந்நிலையில் தான் சட்டத்தின் முன்னால் எமது வீட்டில் புகும் கொள்ளையர்களைத் தடுப்பதற்கு நாம் எதுவரை போகலாம்? எனும் கேள்வி எழுகிறது. இங்கிலாந்துச் சட்டத்தின் பிரகாரம் எமது வீட்டுக்குள் புகும் கொள்ளையரிடமிருந்து நாம் தப்பித்துக் கொள்வதற்கு “ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் தற்காப்புத் தாக்குதல்களை பிரயோகிக்கலாம்” என்று கூறப்படுக்கிறது. இந்தக் “குறிப்பிட்ட வரம்புக்குள் தற்காப்புப் தாக்குதல்கள்” என்பதன் விளக்கம் முன்னர் திட்டமிடாமல் அந்தப் பொழுதில் தப்பித்துக் கொள்வதற்காகக் கையில் அகப்படும் ஆயுதத்தைப் பிரயோகிக்கலாம் என்றே கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் அத்தாக்குதல் நடைபெற்ற வேளையில் இருந்த சூழல், குற்றம் யார்மீது இழைக்கப்படுக்கிறதோ அவர் பிரயோகித்த தாக்குதல் நியாயமாகத் தான் தப்பித்துக் கொள்வதற்காகவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் நிகழ்த்தப்பட்டதுதானா ஆழமாக விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

எது எப்படியிருப்பினும் ஒரு முதியவர் தொடரும் அச்சத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரால் தாக்கப்பட்டு இறந்த திருடனின் நண்பர்களிடமிருந்து அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்போது அவர் யாருக்கும் தெரியாத இடத்தில் பொலீசாரின் பாதுகாப்பிலிருக்கிறார். ஒரு தெருவில் உரிமைப் போர் நடைப்பெறுகிறது. பேராசையினால் ஒரு மனிதன் உயிரிழந்திருக்கிறான்.ஒன்றாகக் குற்றச்செயலில் ஈடுபட்டு விட்டு நண்பன் இறந்தாலும் பரவாயில்லை நாம் தப்பித்தால் போதும் என்று ஒருவன் தலைமறைவாகியிருக்கிறான்.

இதனால் தான் “சட்டம் ஒரு இருட்டறை” என்றாரோ அறிஞர் அண்ணா?

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.