ஆதிசங்கரர் அவதார தினத்தில் தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமங்கள்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 20.04.2018 வெள்ளிக் கிழமை சித்திரை மாதம் மிருகசீர்ஷ நக்ஷத்திரம், சதுர்த்தி திதியில் அவதரித்த ஸ்ரீமத் ஆதிசங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை 21.04.2018 சனிக்கிழமை சித்திரை திருவாதிர நக்ஷத்திரத்தை ஸ்ரீமத் இராமானுஜருடைய 1001 வது ஆண்டு ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மகான் ஆதிசங்கரர்!
எளிய விளக்கங்களாலும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகளாலும் இந்து மதத்தை எழுச்சியுறச் செய்த மகான் ஆதிசங்கரர்! சிவபெருமானின் அம்சமாகப் போற்றப்படும் ஆதிசங்கரரின் அவதார தினம் இன்று! கேரளாவின் காலடி என்ற ஊரில் சிவகுரு – ஆர்யாம்பாள் தம்பதிக்கு, திருச்சிவபேரூர் என்னும் திருச்சூர் வடக்குநாதப் பெருமானின் அருளால் பிறந்தவர் ஆதிசங்கரர். மகாலட்சுமியை ஸ்தோத்திரங்களால் துதித்து, தங்க நெல்லிக்கனிகளைப் பொழியச் செய்தவர். அந்த ஸ்தோத்திரம்தான் ‘கனகதாரா ஸ்தோத்திரம்.
இவர் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம், பகவத் கீதை ஆகியவற்றுக்கு விளக்கம் எழுதிய மகா ஞானி. மாத்ருகா பஞ்சகம், கோவிந்தாஷ்டகம், ஆத்மபோதம், பஜகோவிந்தம், சுப்ரமண்ய புஜங்கம், மனிஷா பஞ்சக ஸ்தோத்திரம், சிவானந்த லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், சித்தாந்த சாங்கியம், விவேக சூடாமணி ஆகிய ஸ்தோத்திரம் மற்றும் சாஸ்திர நூல்களை இயற்றினார்.
ஸ்ரீஆதிசங்கரர் உருவாக்கியதுதான் ஸ்ரீசக்கர வழிபாடு. அம்பிகையை ஸ்ரீசக்கர வடிவில் வழிபடுவது இன்றும் தொடர்கிறது. இதில் விஞ்ஞானமும், துல்லியமான கணிதமும் இருப்பதைக் கண்டு இன்றைய விஞ்ஞானிகளும் வியக்கின்றனர்.
`காலடி’-யில் அவதரித்து, தம் காலடித் தடங்களை புண்ணிய பாரதம் முழுவதும் பதித்த மகான் ஆதிசங்கரர். தம்முடைய 32-வது வயதில் தாம் எங்கிருந்து வந்தாரோ அந்தப் பரம்பொருளிடமே ஐக்கியமாகிவிட்டார். இந்து தர்மத்துக்கு இணையற்ற அரும் பணிகள் ஆற்றிய மகான் ஆதிசங்கரரின் அவதார தினத்தில், அவருடைய திருவடிகளைப் பணிந்து புனிதமடைவோம்!