-முனைவர் வீ.மீனாட்சி

தமிழ்க்கவிதை உலகின் வசந்த காலமான இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீனத் தாக்கம் பெற்ற புதுக்கவிதையின் போக்குகள் நாம் அதற்கு முன் கண்டிராத புதிய பரிணாமங்களை உள்அடக்கியவை. இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கு என்ற நிலையை மாற்றிப் பொருளாதாரப் பிடியிலும், சமுதாயச் சீர்கேடுகளிலும் போட்டி நிறைந்த இயந்திர வாழ்வாதாரத்திலும் சிக்கிய மனிதனின் மன வலிகளையும், புற வாழ்வைத் தாண்டி அகவாழ்வைத் தேடும் பயணத்தையும் பிரதிபலிக்கும் கருக்களைக் கொண்ட சிறுகதை, புதினம், கவிதைகள் என்ற இலக்கியப் பரிணாமங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக இன்றையக் காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் புதுக்கவிதைகள்

               “காலத்துக்குக் காலம் வாழ்க்கை மாறிவரும் போது  வாழ்க்கையின் காலடியில் பிறக்கும் சிந்தனைகள் மாற்றமுறும்போது அவை வெளிப்படும்
கலை வடிவங்களும் மாறுகின்றன”

என்ற பாலாவின் வரிகளுக்கு ஏற்ப தன் வடிவ மாற்றத்தோடு பாடுபொருளிலும் பல்வேறு மாற்றங்களை தாங்கி வருகின்றன.

இத்தகைய ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சி சூழ்நிலைகளின் மத்தியில் ‘யாப்பின் சிரமங்களைத் தவிர்ப்பதற்கல்ல புதுக்கவிதை, மரபுக்கவிதை தொடாத உயரங்களைப் புதுக்கவிதை தொடவேண்டும். பழைய வடிவங்கள் தராத வசதிகளை அது தர வேண்டும்’ என்ற, மரபுக்கவிதையில் வேர்பதித்து புதுக்கவிதையில் மலர்பார்த்த கவிக்கோ அப்துல் ரகுமான் தன் சொல்லாடல்களுக்குத் தக்கவாறே தமிழ்க்கவிதை உலகில் மரபுக்கவிதைகள், கவியரங்கக் கவிதைகள், வசனக்கவிதைகள் என்று கவிதையின் பன்முகத்தளங்களில் முத்திரைகள் பதித்தவர். இதனால்தான் கலைஞர் ‘வெகுமானம் வேண்டுமென்றால் ரகுமானைக் கேட்பேன்’ என்று பாராட்டியுள்ளார். உருவகம், படிமம், பேச்சு, குறியீடு, தொன்மம், சர்ரியலிசம், கஜல் என்று பல்வேறு கவிதை உத்திகளைக் கையாண்டுப் புதுக்கவிதையில் பரிசோதனை முயற்சி செய்தி வெற்றிக் கண்ட அப்துல்ரகுமானின் பித்தன் என்ற கவிதை தொகுப்பு காட்சிப்படுத்தியுள்ள மனித மனத்தின் உள்வெளி பயணத்தை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

              “அறிவியல் உளவியல் கண்டுபிடிப்புகளால் பிரபஞ்சத்தின் புதிர்களும்  மனித இனத்தின் மர்மங்களும் அவிழ்ந்து வருகின்றன. இதனால்              வருங்காலக் கவிதை உயரங்களில் பறக்கும் ஆழங்களில் மூழ்கி அதிசயங்களை எடுத்து வரும்.”

என்று சொல்லும் அப்துல் ரகுமான் தன்னுடைய படைப்புகளிலேயே அத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளதைப் பித்தன் கவிதைத் தொகுப்பில் காணமுடிகிறது.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது மனசக்தியால் ஆட்டுவிக்கப்படுகிறான். புறவாழ்வு, அகவாழ்வு என்ற நிலைகளில் பயணப்படுகின்றான். இதில் எதில் அவன் சிந்தை மீசெல்லுகிறதோ அதனைப் பொறுத்தே அவனது வாழ்வும் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இந்த அகம், புறம் என்ற உள்வெளி இரண்டு நிலைகளிலுமே போராட்டத்தோடுதான் பயணப்பட்டு கொண்டிருக்கிறான் என்பதை,

              “எனக்குள் இருவர்  / இருக்கின்றனர்
              ஒருவன் பாடகன்  / மற்றொருவன் பித்தன்
              பாடகன் ஏதாவது / ஒரு ராகத்தை
              ஆலாபனை செய்து / கொண்டிருப்பான்
              அவன் ஸ்வரங்கள் சப்தங்களால் / ஆனவை
அல்ல
பித்தன் ஏதாவது ஒரு நதியில் / எதிர்நீச்சல்
போட்டுக் கொண்டிருப்பான்
              அந்த நதிகள் / நீரால் ஆனவை அல்ல
              பாடகன் நேர்களின் ரசிகன் /பித்தன்
எதிர்களின் உபாஸகன்
இருவருக்கும் ஒத்துப் போவதில்லை / இருவரும் இரு துருவங்கள்”

என்ற கவிக்கோவின் வரிகள் மூலமே அறியலாம்.

உலகம் ஒரு நாடகமேடை; அதில் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரம் என்ற நிலையையும் தாண்டி இன்று ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரமாக இல்லாமல் ஒவ்வொரு கணமும் ஒரு கதாபாத்திரமாக வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நாடக மேடையில் அந்தரங்கம் என்பது உண்மையின் மறுபக்கமாக இருக்கிறது என்பதை

              “அவர்கள் ஏன் உன்மீது  / கல்லெறிகிறார்கள்? என்றேன்
              ‘நான் அவர்களுடைய / அந்தரங்கத்தின் கண்ணாடி
              அதனால்தான் என்னை / உடைக்கப் பார்க்கிறார்கள்’ என்றான்
   ‘ஏன்? என்றேன் / அவர்கள்
              வெளிப்படுவதற்கு / பயப்படுகிறார்கள்
              அவர்கள் / வேடங்களில்
              வசிக்கிறார்கள் / அது அவர்களுக்கு
  வசதியாக இருக்கிறது /   வேடம் கலைந்தால்
              மேடை போய்விடும் / நான் அவர்களுடைய
              அம்பலம்”  என்கிறான் பித்தன்.

இன்றையப் பொருளாதார நெருக்கடியில் தொலைந்துபோன மனிதன்தான் வாழ்வதற்காக மற்றவனை நோகடிப்பதோடு அல்லாமல் தனது மனம் தவறு என்று சொல்வதையும் நியாயப்படுத்துகிறான் என்பதை

              “பித்தன்  / தன் சட்டையைக்
              கிழித்துக் கொண்டிருந்தான் / சட்டையை ஏன்   கிழிக்கிறாய்? என்றேன்
………………………………………………………………………………

              பொய்க்குத்தான் /ஆடை தேவை
மெய்க்குத் / தேவையில்லை
              உங்கள் ஆடை / விலக்கப்பட்ட கனியைத்
              தின்ற பாவத்தால் / நெய்யப்பட்டதல்லவா?
              உங்கள் ஆடை / இறந்துபோன
கள்ளமின்மைக்குப்   போர்த்திய / சவக்கோடி அல்லவா?
              பூக்களும் பறவைகளும் / ஆடை
அணிவதில்லையே?
              நீங்கள் / ஆபாசமானீர்கள்
              அதனால் உங்களை / ஆடையால் மறைத்தீர்கள்
              ஆடையை / முகவரி ஆக்கியபோது
              நீங்கள் காணாமல் போனீர்கள்” என்கிறான் பித்தன்.

சாதி, மதம் என்ற அரிதாரங்களைப் பூசிக்கொண்டு அதனையே உயர்ந்த பீடங்களாகக் கருதி இறந்த காலத்துக் குப்பைகளை சுமந்து கொண்டு பயணப்பட்டுக் கொண்டிருப்பவர்களைச் சங்காரம் செய்பவன் பித்தன் என்பதை

              “நீ சீர்திருத்தவாதியா? என்று / பித்தனைக் கேட்டேன்.

      ‘இல்லை  நான் / திருத்துவதற்காக அல்ல
              சங்காரத்திற்காக / வந்திருக்கிறேன்
              …………………………………………………………………
            போதிக்க அல்ல / உங்களுக்குப்
         போதிக்கப்பட்டதை / அழிக்கவே
வந்திருக்கிறேன்
………………………………………………………………..
       உங்கள் பீடங்கள் / சமாதிகள் என்று
காட்டவே வந்திருக்கிறேன்” 
என்ற வரிகள் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

     “அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
               புறத்த புகழும் இல”

என்ற வள்ளுவத்தின் வழி ஒருவன் வாழமுற்பட்டாலும் இன்றைய சூழலில் மற்றவரின் சுயநலத்திற்காக அவர்கள் சூறையாடப்படுகிறார்கள் என்பதை

              “நீங்கள்
              கடைத் தேங்காயாக
              இருக்கிறீர்கள்
              வழிப் பிள்ளையார்களுக்காக
              உடைக்கப்படுகிறீர்கள்” என்கிறான் பித்தன்.

மனிதனின் இத்தகைய மனவெளிப் போராட்டம் தொடர்ந்து பயணிப்பதற்கு காரணம் அவன் சுயத்தை மறந்ததே ஆகவே

              “உங்கள் / சுயத்தை நோக்கி
              புறப்படுங்கள்
……………………………………….
        உங்கள் பயணம் / உங்கள் பாதையில்
    நடக்கட்டும் / மற்றவர்கள் போட்ட
              பாதையில் அல்ல
……………………………………………..
              உங்கள் பயணம் / சப்தத்திலிருந்து           மௌனத்திற்குச் செல்லும் / இசையைப் போல்
              இருக்கட்டும்” என்கிறான் பித்தன்.

வாழ்க்கை என்பது சூழ்நிலைகளால் செதுக்கப்படுவதாக இருந்தாலும் அதில் சமநிலை தவறாமல் இருந்தால் மட்டுமே வெற்றி காண முடியும் என்பதை

              “வாழ்க்கை என்பது
              கழைக்கூத்து
              சமநிலை தவறுகிறவன்
              விழுந்து விடுகிறான்” என்றான் பித்தன்.

தன் வாலையே விழுங்கிக் கொண்டிருக்கும் கால சர்ப்பத்தில் பரமபதம் விளையாடிகொண்டிருக்கும் மனிதர்களுக்கு வாழ்வின் பொருளைப் பித்தன் போதிக்கிறான். சமநிலையற்ற உலகில் பித்தன் சமநிலையோடு வாழ கற்றுத்தருகிறான். உங்கள் உலகம் குழந்தைகள் கிழித்துவிடும் புத்தகங்களை உங்களுக்கு வழங்குகிறது. ஆனால் குழந்தைகளே பாடப்புத்தகங்களாக இருக்கிறார்கள் என்பதை மறுத்தும் விடுகிறது. அதனால் தான்

              “உங்கள் புத்தகங்கள்
              விளக்குகளாக இருக்கின்றன
              சூரியனைக் காண
              விளக்குகள்
              தேவைப்படுவதில்லை” என்கிறான் பித்தன்.

இருட்டில் இருந்து கொண்டு இருட்டைச் சபிப்பதை விட விளக்கை ஏற்றுவது மேல் என்பது போல இருட்டின் உடலில் நட்சத்திரக் காயங்கள் அழகாக இருக்கின்றன என்று பித்தன் சொல்வது வாழ்வின் தவிர்க்க முடியாத இரு பக்கங்களான இருட்டையும் வெளிச்சத்தையும் நம் மனக்கண் முன் நிறுத்துகின்றன. இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும் இடையில் வெளிச்சத்தில் வாழ்வதாக எண்ணி இருட்டிலும், இருட்டில் வாழ்வதாக எண்ணி வெளிச்சத்திலும் போலியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் போலித்தனங்கள் தோலுரித்துக் காட்டும் பித்தனே நம் உள்வெளிகளில் உலவும் வெளிச்சமாகவும் இருட்டாகவும் இருக்கிறான் என்பதையே பித்தனின் வாயிலாக அப்துல் ரகுமான் சுட்டுகிறார்.

*****

பயன்பட்ட நூல்கள்:

  1. அப்துல் ரகுமான் – பித்தன் – கவிக்கோ பதிப்பகம், சென்னை 2002
  2. அப்துல் ரகுமான் – ஆலாபனை நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை 2008
  3. அப்துல் ரகுமான் – சோதிமிகு நவகவிதை நேஷனல் பப்ளிஷர்ஸ்,     சென்னை  2007
  4. பாலா – புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை – அகரம் வெளியீடு 1983
  5. முனைவர் சுவாசு – எது புதுக்கவிதை – சுபாலிகா பதிப்பகம், திருச்சி 1998
  6. திருக்குறள் – கழக வெளியீடு

*****

கட்டுரையாளர்
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை
பிஷப் ஹீபர் கல்லூரி
திருச்சிராப்பள்ளி-17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.