நாகேஸ்வரி அண்ணாமலை

 

அமெரிக்காவில் நடந்த ஒரு சோகக் கதை.  தன்னால் எங்கும் இருக்க முடியாது என்பதால்தான் இறைவன் தாயைப் படைத்தார் என்று சொல்வார்கள்.  இது பல சமூகங்களில் வழங்கும் ஒரு பழமொழி என்று நினைக்கிறேன்.  அப்படிப்பட்ட ஒரு தாய்தான் தன் மகனையே நடக்க முடியாமல், பேச முடியாமல் மற்றப் பிள்ளைகளைப்போல் வளரவிடாமல் செய்திருக்கிறாள் என்று அறியும்போது நெஞ்சு கனக்கிறது. ஆனாலும் குற்றம் நடந்த இருபத்தியொரு வருஷங்களுக்குப் பிறகு அந்தக் குற்றத்திற்குத் தண்டனையும் கிடைத்திருக்கிறது என்று அறியும்போது மனம் கொஞ்சம் லேசாகிறது.

 

இந்தச் சம்பவம் நடந்தது 1997-இல் வட கரோலினா மாநில பிரன்ஸ்விக் மாவட்டத்தில்.  குழந்தை பிறந்து ஒரு வருஷத்திற்குள் அவனுடைய தாயும் அவளோடு சேர்ந்து குடும்பம் நடத்தியவனும் (பார்ட்னர்; அமெரிக்காவில் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து குடும்பம் நடத்துபவர்களை இப்படித்தான் அழைக்கிறார்கள்). அந்தக் குழந்தையைப் பலவாறாகத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.  அவர்களின் துன்புறுத்தலுக்கு ஆளான அந்தப் பையனைப் பரிசோதித்த மருத்துவர்  அவனுக்குக் கபாலத்தில் எலும்பு முறிவு உட்படப் பல காயங்கள், கீழ் உதட்டில் பெரிய கீறல், கால்களில் எலும்பு முறிவுகள், கடும் சுடு தண்ணீரில் குழந்தையை முக்கி எடுத்ததால் ஏற்பட்ட தீக்காயங்கள், பலமாக அழுத்தப்பட்டதால் தலையில் ஏற்பட்ட ஊமைக்காயங்கள் ஆகியவை இருந்ததாகக் குறிப்பிட்டார்.  அந்த மருத்துவரின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

இந்தக் கொடுமைகளைச் செய்த அவனுடைய தாயும் அவளுடைய பார்ட்னரும் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை ஆனார்கள்.

 

இப்படிக் கொடுமைக்கு ஆளான குழந்தை பெத் ஸ்மிட் என்னும் பெண்ணாலும் அப்போதைய அவருடைய பார்ட்னராலும் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டான். இவர்கள் தத்தெடுத்த பிறகு அந்தக் குழந்தையின் பெயர் டேவிட் என்று மாற்றப்பட்டது.  டேவிட்டுக்கு இந்தத் துன்புறுத்தலால் வாழ்க்கையே நின்றுவிட்டது.  அவனால் நடக்க முடியவில்லை; பேச முடியவில்லை.  குழந்தையைப் போன்றே தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்த டேவிட் ஒரு மாதத்திற்கு முன்பு தன்னுடைய இருபத்தியொன்றாவது வயதில் இறந்து போனான்.  அவன் இறந்ததற்குக் காரணம் அவனுடைய தாயும் அவளுடைய பார்ட்னரும் அவன் ஒரு வயதாக இருக்கும்போது அவனைத் துன்புறுத்தியதுதான் என்று குற்றம் சாட்டி அரசு வக்கீல் அவர்களை மறுபடி கைதுசெய்திருக்கிறார்.

 

பெத் ஸ்மிட் கொடுத்த ஒரு பேட்டியில் டேவிட்டிற்கு உடைலில் பல குறைபாடுகள் இருந்தாலும் அவன் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.  இருபது வருஷங்கள் அவன் வளர்ந்து வந்ததை அவர் கவனித்துவந்தார்.  டேவிட்டிற்கு இசை மீது அலாதிப் பிரியமாம்; இசையைக் கேட்டால் புன்னகை பூப்பானாம்.  விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகத்தோடு கலந்துகொள்வானாம்.  ஒரு முறை உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான பேஸ்பால் விளையாட்டில் ல்பங்கெடுத்துக்கொண்டானாம்; அதில் இவனுடைய நண்பன் ஒருவன் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ஓடுவானாம்.

 

துன்புறுத்தப்பட்டதால் பல உபாதைகளுக்கு உள்ளான டேவிட்டிற்கு. மூச்சுத் திணறல், நிமோனியா போன்ற உபாதைகள் அடிக்கடி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் அடிக்கடி ஏற்படுமாம்.  ஆனாலும் மருத்துவர்கள் அவன் ஆறு வயதிற்கு மேல் உயிர் பிழைத்து இருக்க மாட்டான் என்று கூறியிருந்தும் அதற்குமேல் அவன் வாழ்ந்ததால் அந்த வருஷங்கள் தனக்கு மிகவும் சிறப்பானவை என்கிறார் பெத் ஸ்மிட்.  தன்னுடைய முகபாவக்களாலும் கத்தல்களாலும் அவர்களோடு உரையாடுவானாம்.

 

அரசு வழக்கறிஞர் இப்போது டேவிட் இறந்ததற்கு அவன் ஒரு வயதாக இருந்தபோது துன்புறுத்தப்பட்டதுதான் காரணம் என்று கூறி அவனுடைய தாயையும் அவளுடைய பார்ட்னரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.  இவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஜாமீன் இல்லாத வாழ்க்கை முழுவதும் சிறை என்ற தண்டனைகள் வழங்கப்படலாம்.  குற்றம் நடந்து இருபத்தியொரு வருடங்கள் ஆகிவிட்டிருந்தாலும் வட கரோலினா மாநிலத்தில் குற்றம் சுமத்துவதற்கு கால எல்லை எதுவும் இல்லை என்றும் தீங்கிழைக்கப்பட்டவர் இறந்துவிட்டால் தீங்கிழைத்தவர்கள் மீது பல வருஷங்களுக்குப் பிறகும் கொலைக் குற்றம் சுமத்தப்படலாம்  என்றும் அரசு தரப்பு வக்கீல் கூறியிருக்கிறார்.

 

டேவிட் இல்லாத வாழ்க்கைக்குப் பழகிவரும், அவனை தத்தெடுத்து வளர்த்த பெத் ஸ்மிட், “டேவிட் வாழ்க்கை எவ்வளவு அபூர்வமானது, மதிப்பு மிக்கது என்று எங்கள் எல்லோருக்கும் உணர்த்தினான்.  அவனை வளர்ப்பதில் நிறைய பிரச்சினைகள் இருந்தன; நிறைய வேலை இருந்தது.  இருப்பினும் இன்னொரு முறை அதை மறுபடி நான் செய்வேன்” என்றார்.

 

தன்னுடைய சொந்தக் குழந்தையையே துன்புறுத்தி ஊனமாக்கிய குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து அதில் இன்பம் காணும் ஒரு பெண்ணை அமெரிக்காவில்தான் பார்க்க முடியும்; குற்றம் நடந்து இருபத்தியொரு வருடங்களுக்குப் பிறகு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதும் அமெரிக்காவில்தான் நடக்கும்.

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.