Category: ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வுக் கட்டுரைகள்

  • சிவப்பிரகாசம் குறிப்பிடும் மூவகை வாசகர்கள்

    -முனைவர் த. சரவணன்

    “தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
    தோன்றிய
    நூல்எனும் எவையும் தீதாகா”

    மேற்கண்ட பாடலடி உமாபதி சிவாசாரியார் இயற்றிய சிவப்பிரகாச அவையடக்கப் பாடலில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலடி தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் செல்வாக்குப் பெற்றது. பழமையை மட்டும் போற்றிப் புதுமையை இகழ்வதை இப்பாடலடி கண்டிக்கின்றது.  இவ் அவையடக்கப் பாடலில் இப்பாடலடியைத் தொடர்ந்து வரும் அடிகளில், ஒரு பனுவல் மூன்று வகை வாசகர்களால் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பது விளக்கப்படுகின்றது. எனவே இக்கட்டுரை சிவப்பிரகாச அவையடக்கப் பாடல் குறிப்பிடும் மூவகை வாசகர்களைப் பற்றி எடுத்து இயம்புகிறது.

    எழுதப்பட்ட ஒரு பனுவல் (Text), தனக்கான வாசகர்களாலும் உருவாக்கம் பெறும்போதுதான் அதற்குப் பன்முகப் பரிமாணம் கிடைக்கிறது. மேலும் எந்த ஒரு பனுவலும் தனக்கான வாசகர்கள் என்ற நினைப்பு இல்லாமல் உருவாவதில்லை. படைப்பு உருவாக்கத்தில் நிலவும் இந்தத் தன்மைதான் ஆற்றல் வாய்ந்த ஒன்றாக வாசித்தல் விளங்குவதற்கு அடிப்படை ஆதாரமாகிறது.

    வாசகர் என்கிற ஒரு கூட்டத்தாரின் பல்வேறு வகையான புலனுணர்வுகளால் உணரத்தக்க ஒரு நிகழ்வுதான் இலக்கியம். அவரவர் புலனுணர்வுகளுக்குத் தக்கவாறு ஒரு படைப்பிலக்கியம் எவ்வாறு புரிந்துகொள்ளப்படும் என்பதை இன்றைய திறனாய்வாளர்கள் வாசகர்கள் ஏற்புடைமைத் திறனாய்வில் (Readers Response theory) குறிப்பிடும் கூறுகளை உமாபதி சிவாசாரியார் சிவப்பிரகாச அவையடக்கப் பாடலில் குறிப்பிடுகின்றார்.

    உண்மையான வாசகர் (Actual reader), மேலான வாசகர் (Super reader), அறிவார்ந்த வாசகர் (Informed reader), இலட்சிய வாசகர் (Ideal Reader), மாதிரி வாசகர் (Model Reader), உள்ளுறை வாசகர் (Implied Reader), கொள்கை வாசகர் (Encoded reader) என்று வாசகர்கள் பல்வேறு திறனாய்வாளர்களால் பெயரிட்டழைக்கப்படுகின்றனர்.(Jeremy Hawthorn. 2011. A Glossary of Contemporary Literary Theory, pp.289-292) ஆனால் உமாபதி சிவாசாரியார்  பின்வரும் பாடலில் துணிந்த நன்மையினார், நடுவாம் தன்மையினார், ஆராய்ந்தறிதல் இன்மையினார் என்னும் மூவகை வாசகர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

    தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
    தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா துணிந்த
    நன்மையினார் நலங்கொள்மணி பொதியும்அதன் களங்கம்
    நவையாகா தெனஉண்மை நயந்திடுவர் நடுவாந்
    தன்மையினார் பழமைஅழ காராய்ந்து தரிப்பர்
    தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந் தறிதல்
    இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே திலருற்
    றிகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன் றிலரே.            (சிவப்பிரகாசம் பாடல் எண்.12)

    துணிந்த நன்மையினார்

    துணிந்த நன்மையினார் என்பவர் ஒரு நூலைப் படித்த உடனேயே அதனுடைய பழமையும் புதுமையும் சொற்குற்றமும் கொள்ளாமல் அப்படியே ஏற்றுக்கொள்வர். அது எவ்வாறெனில் நல்ல இரத்தினமானது ஒரு நாய்த்தோலிலே கட்டியிருந்தாலும் இரத்தினமறிந்தவர்கள் தோலின் குற்றம் கொள்ளாது மாணிக்கத்தின் நன்மையை மட்டும் கைக்கொள்ளுவர். இங்கு மாணிக்கத்தின் நன்மையைக் கொள்ளுபவரைப் போலத் துணிந்த நன்மையினார் என்பவர் குறிப்பிடப்படுகின்றார்.

    நடுவாந்தன்மையினார்

    இவர் முற்சொன்னவரைப் போல் அல்லாமல் ஒரு பனுவலை வாசித்தவுடன் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் வேதாகமத்தைப் பின் செல்லுகின்ற நூல் என்றும் நன்மையை உடையது என்றும் மெதுவாக ஏற்றுக்கொள்வார்.

    ஆராய்ந்தறிதல் இன்மையினார்

    இவர் குணமும் குற்றமும் பொருளிடத்தில் பொருந்தியுள்ள முறைமையை ஆராய்ந்து அறியாதவராய் இருப்பார். ஒரு நூலை உத்தமர்கள் கொண்டாடினால் கொண்டாடியும் ஒரு நூலின் மீது பொறாமை கொண்டோர் இகழ்ந்துரைத்தால் அதற்கு ஏற்றவாறு  அந்த நூலை இகழ்ந்தும் உரைப்பார். இவர் தமக்கென்று நன்மை தீமையைத் தீர்மானிக்கும் அறிவு இல்லாமல் திகழ்வார்.

    தொல்காப்பியர் இந்த மாந்தர்களைக் குறித்துக்

    “கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
    உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
    நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே”–      தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் நூற்பா எண். 27

    எனச் சுட்டுகிறார். அத்தகைய உணர்வில்லாத மாந்தருக்குப் பனுவலின் பொருள் புலப்படாது  என்றும் பதிவு செய்கிறார். ஆக, தொல்காப்பியர் வாசகர்/மாந்தர் என்று கருதுவது பனுவலோடு இரண்டறக் கலந்த ஒருவரைத்தான் எனத் தெரிகின்றது. நவீனத் திறனாய்வும் பனுவலின் பண்பாக்கத்தோடு உருவாகும் ஒருவரைத்தான் வாசகர் என்று கருதுகிறது. இங்குச் சிவப்பிரகாசப் பாடல் குறிப்பிடும் முதல்வகை வாசகர்/மாந்தர் என்பவர் பனுவலோடு இரண்டறக் கலந்த உணர்வுடைய ஒருவர். மூன்றாம் வகை வாசகர்/மாந்தர் கண்ணினும் செவியினும் உணர்வில்லாத ஒருவர்.

    முடிவுரை

    சிவப்பிரகாச அவையடக்கப் பாடல் வெறும் அவையடக்கப் பாடலாக மட்டுமல்லாமல் இன்றைய இலக்கியத் திறனாய்வாளர் குறிப்பிடும் வாசகர் ஏற்புடைமை பற்றியும் விளக்குவதை அறிய முடிகிறது. ஒரு தத்துவ இலக்கியப் பனுவல் மூன்றுவகை மாந்தர்களால்/வாசகர்களால் மூன்றுவிதமாக புரிந்துகொள்ளும் முறையும் இப்பாடலால் விளக்கப்படுகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1.திருவிளங்கம், மு. (உ.ஆ.). 1933. கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த சிவப்பிரகாசம் மூலம். சுன்னாகம்: திருமகள் அச்சியந்திரசாலை.

    2.கணேசையர், சி. (ப.ஆ.). 1943. தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) பின்னான்கியல்களும் பேராசிரியமும். சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்.

    3.Jeremy Hawthorn. 2011. A Glossary of Contemporary Literary Theory. New Delhi: Heritage Publishers.

     ******

    கட்டுரையாளர்
    இளநிலை ஆய்வு அலுவலர்
    இலக்கியத்துறை
    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
    தரமணி, சென்னை -113

     

     

     

    Share
  • கருவாச்சி காவியத்தில் குடும்ப அமைப்புமுறை

    -மோ. பவானி

    முன்னுரை

         குடும்பம், இன வாழ்வுடைய சமுதாயத்தின் அடிப்படையாக அமைகின்றது. முழுமைபெற்ற சமுதாய வாழ்வை மனிதா்களே மேற்கொள்ளத்தக்கவா்கள். குடும்பம் ஆண் பெண் சோ்க்கையில்தான் உருவாகின்றது. சமூகம் மனித இனத்துக்கு மட்டும் முதன்மையும் சிறப்பும் தருகின்ற ஓா் அமைப்பாகும். சமுதாயம் என்பது பலவகைக் குடும்பங்களின் கூட்டமைப்பு. சமுதாயத்தின் அடிப்படை அலகுகளாகக் குடும்பங்கள் கருதப்படுகின்றன. குடும்பம் என்பது ஆண் பெண் சோ்க்கை இல்லாமலோ அச்சோ்க்கையும் அவா்களுடைய சமுதாய இசைவில்லாமலேயே அதன்பயனாக மக்கட்பேறு இல்லாமலோ அமைவதில்லை. எனவே சமுதாயத்தின் அடிப்படை அலகும், உயிரியல் அமைப்புமான குடும்பங்கள் பற்றி அறிந்துகொள்வதாக, அக்குடும்பங்கள் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

    குடும்பம்

      ஊா் என்பது சிற்றெல்லை அமைப்பை கொண்டிருப்பதுபோல, குடும்பம் என்பது சிற்றெல்லை உறுப்பாக அமைகிறது. குடும்பம் என்பது கணவன் மனைவியும், பின் குழந்தைகளுமாக அமைவதாகும். குடும்பம் என்பது தொடக்கத்தில் கணவன் மனைவி என்று இருவா் மனவழியாகச் சோ்வதையும் பின் இரத்த உறவும், கொப்பூழ்க்கொடி உறவுமாகக் குழந்தைகள் சோ்வதையும் குறிக்கும். கணவன், மனைவி, மக்கள் என்றும் இவா்களோடு பெற்றோர்களும் சோ்வதைக் குறிக்கும். இதன் விளக்க அடிப்படையிலேயே குடும்பம் என்பது, ஓா் உயிரியல் அமைப்பாகிறது என்று பக்தவத்சலபாரதி குறிப்பிடுகிறார்.

    குடும்பத்தின் தோற்றம்

         குடும்பத்தின் தோற்றம் குறித்துப் பல்துறை அறிஞா்களால் பல்வேறு கோட்பாடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை, பாலுணா்வுக்கோட்பாடு, தந்தை தலைமைக்கோட்பாடு, தாய்த் தலைமைக்கோட்பாடு, ஒருதுணை மணக்கோட்பாடு, பல காரணிகோட்பாடு என ஐந்து கோட்பாடுகளைப் பக்தவத்சலபாரதி குறிப்பிடுகிறார். பிறிதொரு வகைப்பாட்டிலும் குடும்பத் தோற்ற நினைவுகள் கூறப்படுகின்றன. அவை, இரத்தஉறவு குடும்பம், குழுமனக் குடும்பம், நிறைவுபெற்ற பிணைப்புடைய மனக்குடும்பம், தந்தைத் தலைமைக் குடும்பம், தாய்த்தலைமைக் குடும்பம் என்பனவாகும், ஆயினும், இவற்றைப் படிமுறைகள் கோட்பாட்டின் உள்ளடக்கம் என்று குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

         குடும்பம் என்பது கணவன், மனைவி, மக்கள், பெற்றோர், உடன்பிறந்தோர், அவா் தம் மனைவி, மக்கள் என இரத்த உறவுடையவா்களைக் கொண்டது. இரத்த உறவு அல்லாமல் பணியாட்கள் அல்லது வேலையாட்கள் குடும்ப உறவினா்களாக அமைவதும் உண்டு. இதனை காப்பியங்களில் காணமுடிகிறது. இவ்வகையான உறவுமுறைகள் கொண்ட குடும்பங்கள் சங்க காலத்திலும் இருந்தன என்பதைப் புறநானூறு எடுத்துரைக்கின்றது.

    கருவாச்சி காவியம்

         கருவாச்சி காவியத்தில் கொண்ணவாயன் என்னும் பதினைந்து வயதுச் சிறுவன் பெரியமூக்கி வீட்டில் பண்ணையாளராகச் சேர்ந்து காடு வீடு சார்ந்த தொழில்களைச்செய்து குடும்பத்தில் ஒருவன் போல இடம் பெற்று வளா்கிறான். இதனால் இரத்த உறவு இல்லாதவா்கள்கூடக் குடும்ப உறுப்பினா்களாக இருக்கக்கூடும் என்பது தெரிகிறது. இத்தகையவா்கள் நீண்ட நெடுங்காலமாகக் குடும்பங்களில் இடம்பெற்று வந்திருக்கிறார்கள் என்பதை இலக்கியக் குறிப்புகள், இலக்கணக் குறிப்புகள் போன்றவை உறுதிப்படுத்துகின்றன. இதனை,

         “யான் கண்டனையா் என் இளையரும்“ (புறம் 191)

         “ஏவல் மரபின் ஏனோர்
         அடியோர் வினைவலோர்” (தொல்காப்பியம் 969, 970)

    என்று கூறுகிறது.

    கருவாச்சி காவியம்

         கருவாச்சி காவியத்தில் பெரியமூக்கி குடும்பம் தாய்த் தலைமைக் குடும்பமாகும். இதற்குச் சூழலே காரணமாகும். கணவன் இறந்தபின் குடும்பப் பொறுப்பு அவளுக்காகிறது. இவளது குடும்பம் தாயும் மகளும் கொண்ட சிறு குழுக்குடும்பமாகும்.

    குடும்ப அமைப்பு

         குடும்பம் என்பது சிறுகுழுக் குடும்பமாகவும், பெருங்குழுக் குடும்பமாகவும் இருக்கும், ஓா் ஆணும் பெண்ணும் தம் சமுதாய இசைவில் மணவழியாகப் பிணைப்புக்கொண்டு குழந்தைகளோடு இருப்பது சிறுகுழுக் குடும்பமாகும். இவா்களோடு பெற்றோரும், அவா் தம் மணமாகா மக்களும் சோ்ந்திருப்பது பெருங்குழுக் குடும்பமாகும், இந்நிலைகளை,

    கள்ளிக்காட்டு விவசாயக் கலாசாரத்தில் புருசன் பொண்டாட்டி உறவு என்பது வெறும் உரிமைகளை முன்னிறுத்தி ஏற்படுவதல்ல, கடமைகளை முன்னிறுத்தியே கட்டப்படுவது. மண்ணைக் கிண்டும் ஒருத்தனுக்கு வாக்கப்பட்ட வாழ்க்கை கட்டில் உற்பத்தியில் மட்டுமல்லாமல் காட்டில் உற்பத்தியிலும் அவள் வோ்வை விழுந்தாக வேண்டும். கள்ளிக்காட்டுக் கலாசாரத்தில் அப்படி இல்லை. இந்த சேலையும், அரைப்படி சோளமும் அவித்தக் கஞ்சியுமே அன்றாடங்களாகிவிட்ட ஒரு வறட்டு வாழ்க்கைக்கு வாக்கப்பட்டு வருகிற ஒரு பொம்பள திருடிக்கொள்வதற்குச் சௌகரியங்கள் ஏதும் இல்லாததால் பாடுகளை மட்டுமே பகிர்ந்து கொள்கிறாள். இக்குறிப்புவழி நோக்கும்போது உடைமை உறவுக்கு இடமில்லை உற்பத்தி உறவுக்கே இடமுண்டு அந்த உற்பத்தியே இருவரையும் இணைத்துக் குடும்பத்தை நடத்திச்செல்ல துணைபுரிகிறது என்பதும் தெரிகின்றது. இவற்றால் குடும்பத்தின் அகநோக்கமும், புறநோக்கமும் தெரிகின்றன.

         சடையத்தேவா் கட்டையன் ஆகியோர் தந்தை மகன் உறவில் ஆண்களே வாழ்வதும் அதேபோல் பெரிய மூக்கி கருவாச்சி ஆகியோர் தாய்மகள் உறவில் பெண்களே வாழ்வதுமான இக்குடும்பங்கள் சிறுகுழுக் குடும்பங்களாகும். ஆண்களே இருப்பதும், பெண்களே இருப்பதுமான குடும்பங்கள் சமுதாயத்திலும் அவற்றில் மனைவி இல்லாமல் ஆடவனாகிய தந்தையும் மகனும் வாழ்கின்ற நிலையும், கணவன் இல்லாமல் மனைவியாகிய தாயும் மகளும் வாழ்கின்ற நிலையும் இருப்பதைக் காணமுடிகிறது.

         காவக்காரச் சக்கனன் தன் மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் பலராக வாழ்வது பெருங்குழுக் குடும்பமாகும். இது கூட்டுக்குடும்பம் என்றும் சொல்லப்படும். இதில் மணமான மகனும், மனைவி மகளோடு சோ்ந்து வாழ்வதால் இதனை நோ்வழி விரிந்த குடும்பம் என்றும், அடிப்படைக்குடும்பம் என்றும் குறிப்பிடமுடிகிறது.

         குடும்பம் என்ற அமைப்போ திருமணம் என்ற நிகழ்வோ நிறுவனமோ இல்லாத நிலை மனிதஇனத் தொடக்ககாலத்தில் இருந்தது என்று குறிப்பிடுவதுண்டு. பாலின உணா்வு, பால் வேறுபாடு தெளிவாகத் தோன்றிய பின்பே பாலியல் ஒழுங்கு பேணத் திருமணம் என்னும் நிகழ்வின்வழிக் குடும்பம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்திருக்க வேண்டும். இது வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்த விலங்கின வாழ்க்கையிலிருந்து பண்பாட்டுமயமாதல் தன்மைக்கு வளா்ச்சி பெற்றுவந்த தொடக்க நிலையாகும்.

    கருவாச்சி காவியத்தில் காணப்படும் குடும்ப வகைகள்

         சடையத்தேவா் மனைவி இல்லாமல் கட்டையன் என்னும் மகனோடு வாழ்வதும், பெரிய மூக்கி கணவனை இழந்து கருவாச்சி என்னும் மகளோடு வாழ்வதுமான நிலையைக்கொண்ட இவ்விரு குடும்பங்களும் சிதைந்த குடும்பம் என்னும் வகையைச் சோ்கின்றன. இதேபோல வளவி கப்பஞ்செட்டியார் மனைவியை இழந்து தன் பெண் மக்களோடு வாழ்வதும், உருமாப் பெருமாத்தேவா் மனைவியை இழந்து தன் பெண் மக்களோடு வாழ்வதுமான இவையும் சிதைந்த குடும்பம் என்னும் வகையைச் சோ்ந்தனவாகும்.

         இப்புதினத்தில் வாழும் வைத்தியச் சிரங்கம்மா என்பவள் கணவனும் குழ்ந்தைகளும் இல்லாமல் தனி ஒருத்தியாக தன் ஒருத்திக்காகப் பல தொழில்களும் செய்துகொண்டு வாழ்வது தெரிகிறது. இதேபோலக் கேப்பக்களியான் என்பவனும் தனி ஆளாக வாழ்வதும் அறியமுடிகிறது.

    தனிக்குடும்பம் 

         கணவன் மனைவி என்றிருவரோடு பிறக்கும் குழந்தைகளும் அடங்கிய குடும்பம் தனிக்குடும்பம். கணவன் மனைவி மக்கள் என்னும் உறவுகளோடு வாழும் ஒரு குடும்பம் முழுவடிவம் பெற்ற குடும்பம் எனப்படும். எனவே இதன்படி குடும்பத்தின் முழுவடிவம் இதில் கிடைப்பதால் இதனை அடிப்படைக்குடும்பம். என்று மானிடவியலாளா் கருத்து அடிப்படையில் குறிப்பிடலாம். இக்கருத்தின் அடிப்படையில் கருவாச்சி குடும்பத்தில் புனைவியல் உறவு வகையில் கொண்ணவாயன் சோ்ந்திருப்பதும் சோ்ந்து வாழ்வோருடன் அமைந்த குடும்பங்களாகின்றன.

    சிதைந்த குடும்பம்

         கணவன் மனைவி குழந்தைகள் என்று அமைந்திருக்கும் தனிக் குடும்பத்தில் கணவனோ, மனைவியோ இறந்துபோவதில் அமையும் குடும்பம் சிதைந்த குடும்பம் எனப்படும்.

         இப்புதினத்தில் உருமாப் பெருமாத்தேவா், வளவி சுப்பஞ்செட்டியார், சடையத் தேவா் ஆகியோரின் குடும்பங்கள் மனைவியா் இல்லாமல் மக்களோடு வாழ்கின்ற குடும்பங்களாக இருப்பதால் இவை சிறுகுழுக் குடும்பமாதலோடு சிதைந்த குடும்பங்களாகவும் அமைந்திருக்கின்றன. பெரிய மூக்கி குடும்பம் கணவன் இல்லாமல் மகளோடு வாழ்வதால் இக்குடும்பம் சிறு குழுக்குடும்பம் சிதைந்த குடும்பம் என்னும் தன்மைகளை ஒருங்கே பெற்ற குடும்பமாக விளங்குகிறது.

    குடும்பத்தின் சிறப்பியல்புகள்

    1. மணஉறவுவழி ஆள்சேர்க்கையில்தான் குடும்பம் அமையும்.
    2. தொடா்ந்து முறைப்படியான இன்ப நுகா்ச்சியைக் குடும்பமே தர முடியும்.
    3. சட்டப்படி அமையும் சொத்துரிமை வாரிசுகளாகச் சமுதாயம் ஏற்கும் குழந்தைச் செல்வங்கள் குடும்பத்தின் வழியே கிடைப்பது, இத்தகைய தன்மைகள்வாய்ந்த குடும்பம் புகுந்த குடும்பம் எனப்படும் என்று சமூகவியல் அறிஞா் குறுிப்பிடுவா்.
    4. குடும்ப உறுப்பினரிடையே காணப்படும் இரத்த உறவு இது மரபுத் தொடா்ச்சியாக அமைந்து வளா்வதாகும். இத்தகைய குடும்பத்தைப் பிறந்த குடும்பம் என்று சமூகவியல் அறிஞா் குறிப்பிடுவா்.
    5. குடும்ப உறுப்பினா்களின் பொருளாதாரத் தேவை போன்றவற்றை அமைத்துக் கொடுப்பது.
    6. குடும்ப உறுப்பினா்களை ஒரே நிழலில் வாழவைப்பது.
    7. நிறுவனமற்ற சிறு சிறு குடும்பங்கள் காலப்போக்கில் வளா்ச்சிப் பெற்று சமூக அடிப்படையில் கிடைத்த சமூகத்தை உருவாக்குவது போன்றவையாகும். 

    குடும்பத்தின் கடமைகள்

         குடும்பத்தின் கடமைகள் இரு நிலைப்படும் அவை,

    1. குடும்பம் மட்டுமே குடும்ப உறுப்பினா்களுக்கு செய்யக்கூடியவை.
    2. குடும்பம் சமுதாயம் சார்ந்ததாகச் செய்யக்கூடியவை எனவே குடும்பத்தின் பணிகள் தனிமனிதருக்கு என்றும், சமுதாயத்திற்கு என்றும் பகுப்புறுகின்றன எனலாம்.

    குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினா்களுக்குச் செய்யக்கூடிய கடமைகள்

         குழந்தையைச் சமூக வயமாக்குதல், பண்பாட்டு வயமாக்குதல், பண்பாடு சமூகமரபு இவைஒட்டிக் குழந்தையின் ஆளுமையை உருவாக்குதல் அன்பு, பாசஉணா்வு போன்றவற்றை வளா்த்தல், பழக்கம், பிறரிடம் நடந்துகொள்ளும் முறை ஆகியவற்றை வளா்த்தல், கற்பித்தல் போன்றவை குடும்பத்துக்கு மட்டுமே உரிய கடமைகளாகும். இவற்றோடு இனப்பெருக்கம் என்பதும் குடும்பத்திற்கே உரியதாகும்.  இனப்பெருக்கம் இன்றிக் குடும்பம் வளா்ச்சியுறாது. குடும்ப வளா்ச்சியின்றேல் சமுதாயம் இல்லை.

         இவற்றுக்கு மேலாக ஒரு குழந்தையை மனிதனாக்கும் பெரும்பணி குடும்பத்தையே சாரும். அதனால்தான் மகனைச் சான்றோன் என்று பிறா் வாயால் சொல்லப்படுவதைத் தாய் விரும்புவாள் என்று திருக்குறள் குறிப்பிடக் காண்கிறோம்.

    குடும்பத்தின் சமுதாயம் சார்ந்த கடமைகள்

         சீலயச் சல்லடையாக்கி கொடிக்கள்ளிப்பாலில் புழுக்களை ஒட்டி விடும் வடிகட்டி மெடாவிலும் கொடத்திலும் நெப்பிக்கிட்டு இறங்கி வாராக பொம்பளைக மொடத் தன்னியாக கொதிக்க வைத்து குளிர வச்சுத் தண்ணிப்பந்தலும் போட்டுட்டா கருவாச்சி, ஊா் மந்தையில் கத்தாழக்கிழங்கு மஞ்சத் தண்ணியில் உப்புப்போட்டு ஊறவைத்தாள்,  கள்ளி கத்தாழமட்டை புளியம்பொட்டு போட்டு அடுப்பெரித்தாள். குழைய வேகவைத்தாள். அருவாள எடுத்து சின்ன சின்னதாக வகுத்து ஊா் மக்களைச் சாப்பிடச் சொன்னாள் என்று கருவாச்சி தன் ஊரில் நிலவிய கடும்பஞ்சத்தைப் போக்க மேற்கொண்டவை சமூகம்சார்ந்த பணிகளாகும். அதுவும் சமூகக் கூட்டுப்பணியாகும். மேலும் தோழிகளும், பெண்களுமான கனகமும், பவளமும், வாழ்வதற்காக அவா்கள் தனக்குத் திரும்பக் கொடுத்த அணிகலனை விற்றுப் பெட்டிக்கடை வைத்துக் கொடுத்தாள்.

         கருவாச்சியின் இவ்வகை உதவிகளைத் தற்கொலை மனப்பாங்கு என்று மானிடவியல் அறிஞா் சண்முகலிங்கன் குறிப்பிடுகிறார். இந்த மனப்பாங்கு பிறர் நிலையைத் தன்னிலைபோல உணா்வதால் உண்டாகும் என்று கூறுகின்றார்.

    முடிவுரை

         கருவாச்சி காவியத்தில் காணப்படும் குடும்ப அமைப்பு முறைகளையும், குடும்பத்தை பலவகையாகப் பிரித்த முறைகளையும் கிராமிய மாந்தா்களின் நிலையைப் பற்றியும் இப்புதினத்தின் வழியாக அறிய முடிகின்றது.

    பார்வை நூல்கள்

    1. வைரமுத்து – கருவாச்சி காவியம்
    2. பக்தவத்சலபாரதி – மானிடவியல் கோட்பாடுகள்.

    ******

    கட்டுரையாளர்
    முனைவா் பட்ட ஆய்வாளா்
    பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூா்

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 13

    -மேகலா இராமமூர்த்தி 

    தோழியின் இனிய இதயத்தை எண்ணி உளம்நெகிழ்ந்தவண்ணம் தலைவனும் தலைவியும் தம் பயணத்தைத் தொடரலாயினர். நடக்க நடக்க நீண்டுகொண்டே சென்றது சுரவழி. பகல்கழிந்து அந்திமாலையும் வந்து சேர்ந்தது! அப்போதும் தலைவனின் ஊர்நோக்கிய நெடும்பயணத்தை நிறுத்தாது, தலைவனும் தலைவியும் சென்றுகொண்டிருந்தனர். வழியில் எதிர்ப்பட்ட ஊரை அவர்கள் கவனித்திலர். ஆனால் அவ்வூரினர் களைத்துவரும் இவ்விளையோரைக் கவனித்துவிட்டனர். இவர்கள் உடன்போக்கு நிகழ்த்தும் காதலர்கள் என்பதையும் கணித்துவிட்டனர்.

    நில்லாது சென்றுகொண்டிருந்த தலைவன் தலைவியைப் பார்த்து,

    ”சிறியபிடி போன்றவளுக்குத் துணைவ! பகலவன் வானைவிட்டு அகலும்நேரம் நெருங்கிவிட்டது. வணிகக்கூட்டம் வந்திருக்கின்றது என்றெண்ணி, பகைப்புலத்தில் கொள்ளும் பகைபோல், வளையணிந்த நெடுவேலேந்தி அவ்வணிகரின் பொருள்களைக் களவாடும் ஆவலில் எம் காவற்காடுவரைவந்து வணிகரைக் காணாது வறிதே பெயரும் ஆறலை கள்வர் முழக்கும் தண்ணுமையெனும் வாத்திய ஒலியைக் கேளுங்கள்! நீவிர் இருவரும் பயணம் மேற்கொள்வதை இவ்வேளையில் தவிர்த்தலே நலம்” என்று நவின்றனர்.

    பாலைநிலத்திற் செல்லும் வணிகர்கூட்டத்தை எதிர்த்து, அவரது பொருளைக் கைக்கொள்ளல் ஆறலை கள்வரின் இயல்பு. ஆறலைகள்வர் தண்ணுமை ஒலியைக் கேள் என்று தலைவனுக்கு இடைச்சுர மக்கள் சொன்னதன் நோக்கம், அக்கள்வரால் இக்காதலருக்கு ஏதம்வரும் என்பதை உணர்த்தவே.

    எல்லும் எல்லின்று பாடுங்  கேளாய்
    செல்லா  தீமோ  சிறுபிடி  துணையே
    வேற்றுமுனை  வெம்மையிற்  சாத்துவந்  திறுத்தென
    வளையணி  நெடுவேல்  ஏந்தி
    மிளைவந்து  பெயரும்  தண்ணுமைக்  குரலே.  (குறுந்: 390 – உறையூர் முதுகொற்றனார்)

    அம்மக்களின் விருப்பப்படியே அன்றிரவை அவ்வூரில் கழித்துவிட்டு மறுநாள்காலை தம் பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர் காதலர்கள்.

    thalaivan thalaiviதலைவனுடன் செல்லும் பயணமாதலால் கல்லும் முள்ளுங்கூடத் தலைவியின் கால்களுக்கு மெத்தையாகவே இருந்தன. சிறிதுதூரம் சென்றதும் கண்ணிற்பட்ட நெல்லிமரத்திலிருந்து காய்களைப் பறித்துத்தின்ற தலைவி, அருகிருந்த சுனையின் அழுக்குநீரைக்கூட அமுதமாய் எண்ணிப் பருகினாள். நாவினித்தது! உடனே, நெல்லியைத் தின்னச்சொன்ன அருமைத்தோழியின் நினைவுவந்ததால் நெஞ்சினித்தது. இத்தகு உத்தமத் தோழியைப் பெற்றநான் பேறுபெற்றவள் என நினைந்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.

    அவள் கண்ணீரைத் துடைத்த தலைவன் அவளை அன்பொடு நோக்கி, “கண்ணே! தம் வழிபடுதெய்வத்தை நேரிற்கண்ட மக்கள் எப்படி உளம் மகிழ்வரோ அவ்வாறு உனையடைந்ததால் நான் மகிழ்கின்றேன். நம் நடைப்பயணத்தால் நீ களைக்கலாகாது; ஆதலால் நிழல்காணுந்தோறும் இளைப்பாறு! மணல் காணுந்தோறும் வண்டலிழைத்து (சிற்றில்கட்டி) விளையாடு! அவசரம் ஏதுமில்லை” என்றான்.

    இதனிடையே, தலைவியின் தமர்க்குத் தலைவி ஆடவன் ஒருவனோடு உடன்போக்கு மேற்கொண்ட விவரம் தெரியவர, அவர்கள் அடைந்த துயருக்கோர் அளவில்லை. தலைவியின் நல்வாழ்வை எண்ணியே நாளுங்கவலும் தம்மிடங்கூடச் சொல்லாமல் தன் வாழ்வைத் தானே முடிவுசெய்துவிட்ட அருமை மகளையெண்ணி நற்றாயும் செவிலித்தாயும் வெகுளியும் வேதனையும் அடைந்தனர்.

    தோழியும் இதற்கு உடந்தையோ என்று ஐயுற்ற அவர்கள், அம்மடந்தையிடம் இதுகுறித்து விசாரிக்கலாயினர்.

    அவளோ, “அயல்மணத்தைத் தலைவிக்கு நீங்கள் நிகழ்த்தவிரும்பும் இத்தருணத்தில், உம்மிடம் தன் காதலைச் சொன்னால் அதனை நீங்கள் ஏற்பீர்களோ… மாட்டீர்களோ என்றஞ்சி அவ்வஞ்சி தான்விரும்பிய காதலனோடு சென்றிருக்கலாம்” என்று பட்டும்படாமலும் பதில்சொல்லித் தனக்கும் தலைவியின் உடன்போக்குக்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்று காட்டிக்கொண்டாள்.

    தலைவியின் பிரிவால் அருமணி யிழந்த நாகம்போல அலமரலுற்றனர் தாயர் இருவரும். மகளின் எதிர்காலத்தை எண்ணியெண்ணி, பெற்றவளான நற்றாயும் பாலூட்டி வளர்த்த செவிலித்தாயும் புலம்பலாயினர்.

    ”பாலுமுண்ணாது, தனக்கினிய பந்தையும் விரும்பாது, மகளிர் கூட்டத்துடன் இடைவிடாது விளையாடுவதிலேயே நாட்டம்கொண்டிருந்த தலைவி, உலர்ந்த கிளையையுடைய ஓமை மரத்தினைக் குத்திய உயர்ந்த கொம்புடைய ஆண் யானை, வேனிற் தன்மையுடைய, மலையின் வெப்பம் மிகுந்த அடிவாரத்தில், மேகம் முழங்குகின்ற கடிய முழக்கத்தைக் கூர்ந்து கேட்கின்ற, மூங்கில்கள் உலர்ந்த, செல்லுதற்கரிய இடத்திலே, தலைவனோடு செல்லுதல் எளிது என நினைத்தாளோ?” என்று தலைவியின் மென்தன்மைக்கு வன்மைமிகு பாலைவழிப் பயணம் எப்படிப் பொருந்தும் என வருந்தினாள் நற்றாய்.

    பாலும்  உண்ணாள்  பந்துடன்  மேவாள்
    விளையாடு  ஆயமொடு  அயர்வோ  ளினியே
    எளிதென  உணர்ந்தனள்  கொல்லோ  முளிசினை
    ஓமை  குத்திய  உயர்கோட்டு  ஒருத்தல்
    வேனிற்  குன்றத்து  வெவ்வரைக்  கவாஅன்
    மழைமுழங்கு  கடுங்குரல்  ஓர்க்கும்
    கழைதிரங்  காரிடை  அவனொடு  செலவே.  (குறுந்: 396 – கயமனார்)

    பெற்றவளைத் தொடர்ந்து வளர்த்தவளான செவிலித்தாய் தன் மனவருத்தத்தை வெளிப்படுத்தலானாள்…

    ”கையிலேந்திய செம்பொன்னாலாகிய பாத்திரத்திலுள்ள அழகிய பொரியோடு கலந்த பாலையும் மிகுதி என்று கூறி உண்ணாத, திரட்சியமைந்த குறிய வளையணிந்த, தளிர்போன்ற மென்மையையுடைய என்மகள், நிழல் அடங்கி அற்றுப் போன, நீர் இல்லாத கடத்தற்கரிய பாலை நிலத்திலே வீரக்கழலணிந்த தலைவன் தன்னைப் பாதுகாப்ப விரைந்து சென்று, நீர்வளமற்ற சுனையின் பக்கத்தில் உலர்ந்து வெம்மை கொண்ட கலங்கல் நீரை ’தவ்’வென்னும் ஓசைபடக் குடிக்கும் வலிமையை எங்ஙனம் பெற்றாள்?” என்று சொல்லித் துயருற்றாள் செவிலித்தாய்.

    நிழலான்  றவிந்த  நீரில் ஆரிடைக்
    கழலோன்  காப்பக்  கடுகுபு  போகி
    அறுசுனை  மருங்கின்  மறுகுபு  வெந்த
    வெவ்வெங்  கலுழி  தவ்வெனக்  குடிக்கிய
    யாங்கு  வல்லுநள்கொல்  தானே  ஏந்திய
    செம்பொற்  புனைகலத்து  அம்பொரிக்  கலந்த
    பாலும்  பலவென  உண்ணாள்
    கோலமை  குறுந்தொடித்  தளிரன்  னோளே. (குறுந்: 356 – கயமனார்)

    இப்பாடலில் ‘செம்பொற் புனைகலத்து ஏந்தியபால்’ என்பது தலைவியின் தாய்வீட்டுச் செல்வநிலையை உணர்த்தி நிற்கின்றது. இத்துணை வளமையாய் வாழ்ந்தவள் வறண்டநிலத்தைக் கடக்கும் துன்பத்துக்கு ஆளாக நேர்ந்ததே என்பது செவிலியின் வேதனை. இவ்வாறு மாற்றி மாற்றித் தாயர் இருவரும் தம் மகளின் உடன்போக்கினைக் கடிந்தும், அவள் பிரிவினால் மனமொடிந்தும் புலம்பிக்கொண்டே இருந்தனர்.

    ஒருவாறு சற்றே சமாதானமடைந்த செவிலி, ”நம்மைப் பிரிந்து, ஒளிபொருந்திய நெடிய வேலையுடைய தலைவனோடு, மடப்பத்தையும் மாமையையும் உடைய நம் மகள் சென்ற பாலைநிலம், கதிரவன் காயாது மரத்தின் நிழல் பொருந்தியதாய்,  மலையிடத்தேயுள்ள சிறிய வழியின்கண் மணல்மிகப் பரவப்பெற்று குளிர்ந்த மழை பெய்ததாகுக” என்று தலைவிசென்ற சுரவழி அவளுக்கு இடரளிக்காது இதமளிக்க வேண்டும் என்று கரங்குவித்து இறைதொழுதாள்!

    inside-the-forestஞாயிறு  காயாது  மரநிழற்  பட்டு
    மலைமுதற்  சிறுநெறி  மணன்மிகத்  தாஅய்த்
    தண்மழை  தலையின்  றாக  நந்நீத்துச்
    சுடர்வாய்  நெடுவேற்  காளையொடு
    மடமா  அரிவை  போகிய  சுரனே.     (குறுந்: 378 – கயமனார்)

    தலைவி சென்றபாதை அவளுக்கு இனிதாய் இருக்கவேண்டும் என்று செவிலித்தாய் வேண்டுவதை ஐங்குறுநூற்றுப் பாடலொன்றிலும் நாம் காணவியலும்.

    மள்ளர்  கொட்டின்  மஞ்ஞை  யாலும்
    உயர்நெடுங்
     குன்றம்  படுமழை  தலைஇச்
    சுரநனி
     யினிய  வாகுக  தில்ல
    அறநெறி
     யிதுவெனத்  தெளிந்தவென்
    பிறைநுதற்
     குறுமகள்  போகிய  சுரனே’’     (ஐங். 371)

    தம் பிள்ளைகள் இன்னாதன செய்தாலும் அவர்களுக்கு இனியவே நினைப்பது தாயர்க்கே வாய்த்த தனிக்குணம் போலும்!

    ஆனால், நற்றாயின் மனம் மகளைப் பிரிந்த துயரிலிருந்து சிறிதும் விடுபடவில்லை. கண்ணீரும் கம்பலையுமாக அவள் பித்துப்பிடித்தவள்போல் அமர்ந்திருப்பதைக் கண்ட செவிலிக்கு மனம் பதறியது. ஒருமுடிவுக்கு வந்தவளாய் நற்றாயின் கண்ணீரைத் துடைத்தவள், ”கவலாதே தோழி! சுரவழி சென்ற தலைவியின் கரம்பற்றி அழைத்துவந்து, விரைவில் ஒப்படைக்கிறேன் உன்னிடம்!” என்று சூளுரைத்துப் புறப்பட்டாள் தலைவியைத் தேடி! 

    [தொடரும்]

     

     

     

    Share
  • வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் சடங்கு முறைகள்

    -மோ. பவானி

    முன்னுரை

         நாடோடிகளாகத் திரிந்த மானிடச் சமூகம் ஓரிடத்தில் நிலையாகத் தங்கித் தங்கள் குடிகளை அமா்த்திச் சமுதாய அமைப்பினை உருவாக்கிய காலகட்டங்களில் தனக்குத்தெரிந்த சடங்கு முறைகளைத் தோற்றுவித்தனா். மனிதர்கள் தம் வாழ்க்கையைக் குறிக்கோளுடை.யதாக்கி ஒற்றுமையுடனும் ஒழுங்குநெறியுடனும் வாழத் தலைப்பட்டபோது ஏற்படுத்திக்கொண்ட ஒரு சம்பிரதாயச் சாத்திரமே சடங்கு ஆகும். மனித வாழ்வில் இடம்பெறும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து மக்களால் கையாளப்படுமானால் அவையே சடங்குகள் எனப்படும். அத்தகைய சடங்கு முறைகளைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

    சடங்கின் நோக்கம்

       மனித வாழ்வு சிறப்பாகவும், செழிப்பாகவும் தழைத்தோங்கச் செய்வது சடங்கின் முதன்மை நோக்கமாகக் கருதலாம். மகிழ்ச்சி, நம்பிக்கை, அமைதி, நோயின்மை, பீடைகள் நீங்கவும், சமுதாயம் ஒருமைப்பாட்டுடன் செயல்படவும், குடும்பஉறவுகள் வலுப்பெறவும் சடங்குகள் தேவையானதாகக் கருதப்படுகின்றன. மனிதன் நம்பிக்கையுடன் செயல்படவும் மனநிறைவு கொண்டு வாழவும்  சடங்குகள் தேவையாக அமைகின்றன.

    சடங்கு நடத்தப்படுவதால் ஏற்படும் நன்மைகள்

         சமுதாயத்தில் சடங்குகள் நடத்தப்படுவதால் பல நன்மைகள் விளைகின்றன. சமுதாயத்தில் ஒருமைப்பாடு தழைத்தோங்குகிறது. உறவினா்களுக்கிடையே நல்லுறவு, கட்டுப்பாடுகள் போன்றவை நிலைபெறுகின்றன. நம்முன்னோர்களை நினைவுபடுத்திக்கொள்வதோடு, வழிவழியாக வந்த மரபுகளும், பண்பாடுகளும் பாதுகாக்கப்படுகின்றன.

         சமுதாயத்தில் சடங்கு நடத்தப்படுவதால் ஏற்படும் நன்மையினை அழகர் சடங்குகளின் மூலம் ஓர் இனத்திற்கும் மற்றோர் இனத்திற்கும் உள்ள வேறுபாட்டையும், அச்சடங்குகளைச் செய்கின்ற மக்களின் மனநிலைகளையும், அவர்கள் வாழும் இடங்களையும் அவர்களுடைய கல்வி, நாகரிகம், பண்பாடு, ஒழுக்கம், மதம் போன்றவற்றையும் அவர்களுடைய எதிர்காலச் சமுதாயம் எப்படி இருக்கும் என்பதையும் அறியமுடிகின்றது.

    வாழ்வியல் சடங்குகள்

         மனிதவாழ்வில் இரண்டறக் கலந்துள்ள சடங்குகள் அவனின் வாழ்க்கைச் சூழல்களுக்கு தகுந்தபடி மாற்றம்பெறுகின்றன. சடங்குகளை மங்கலம், அமங்கலம் என இருவகையாகப் பகுத்துக் காண்பதும், பிறப்பு, காதுகுத்துதல், பூப்பு, திருமணம் முதலான சடங்குகள் மங்கலச் சடங்குகள் என்றும், இறப்புத் தொடா்பான சடங்குகள் அமங்கலச் சடங்குகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. கள்ளிக்காட்டுக் கிராமிய மக்களின் வாழ்வில் இடம்பெற்ற வாழ்வியல் சடங்குகளை வைரமுத்து தெளிவாக எடுத்துக்காட்டுகிறார்.

    1. பிறப்புச் சடங்குகள்
    2. காதுகுத்துச் சடங்குகள்
    3. திருமணச் சடங்குகள்
    4. இறப்புச் சடங்குகள்
    5. இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள்

    எனும் ஐந்து நிலைகளில் வகைப்படுத்தியுள்ளார்.

    பிறப்புச் சடங்குகள் 

         சமுதாயத்தில் வாழக்கூடிய மனித இனத்தின் மாபெரும் செல்வம் குழந்தைச் செல்வமாகும். மழலைச் செல்வம் இல்லையெனில் அவா் பெற்றிருந்த செல்வத்தால் யாதொரு பயனும் இல்லை. குடும்பத்தின் செல்வமாக விளங்கும் குழந்தைக்கு எவ்விதத் தீவினையும் நிகழாமல் இருப்பதற்காக மக்கள் மேற்கொள்ளும் சடங்கு முறையே பிறப்புச் சடங்குகள் எனலாம்.

         குழந்தை பிறப்பதற்கு அறிவியல் முறையான காரணம் கண்டறிய இயலாத பழங்குடியினா் அவற்றைக் காக்கச் சடங்குகளின் துணையை நாடினர். இச்சடங்குகள் மந்திரம், சமயம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திச் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறாகத் தொடா்ந்து இச்சடங்கு முறைகள் இன்றளவும் மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. பிறந்த குழந்தைக்கு நலன்வேண்டிச் செய்யப்படும் சடங்குகள் பிறப்புச் சடங்குகள் என்று ஞானசேகர் விளக்கிக் காட்டுகிறார்.

         பிறந்த குழந்தை நலமுடன் வாழவேண்டும் என்ற நல்ல நோக்கத்தினாலேயே பிறப்புச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. குழந்தைக்கு சடங்குகள் நடத்துவதன் நோக்கத்தினை நடேச சாஸ்திரி என்பவர் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.

        குழந்தைச் செல்வத்தின் முக்கியத்துவத்தாலும் நன்மக்கள் போற்றும் இறையருளின் இன்றியமையாலும் பல்வேறு சடங்குகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

    தேனைத்தொட்டு வைத்தல்

         பிறந்த குழந்தையின் நாக்கில் சீனியைக் கரைத்து அதை விரலால் தொட்டு வைப்பதற்கு தேனை வைத்தல் என்று பெயர்.

         பேயத்தேவரின் மகள் செல்லத்தாயிக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்குப் பேயத்தேவரும் அவர் மனைவி அழகம்மாளும் தேனைத்தொட்டு வைக்கும் காட்சியினைக் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்தின் வழியே காட்சிப்படுத்துகின்றார் வைரமுத்து.

         பிறந்த குழந்தைக்குச் தேனைத்தொட்டு வைப்பது என்பது, அந்த ஊர் வழக்கம். வசம்பின் நுனியில் எண்ணெய்தொட்டு குழந்தையின் வாயில் மூன்றுமுறை வைக்கும்போது ஓம்புத்தி போயி ஏம்புத்தி வரவேண்டும் என்று சொல்லிச் சொல்லி வைப்பது மரபு. எனத் தேனைத்தொட்டு வைக்கும் சடங்கு முறையினைக் கிராம மக்கள் பின்பற்றிய விதத்தினை எடுத்துரைக்கிறார். குடும்பத்தில் அனுபவம் வாய்ந்த நல்ல குணநலன்களை உடையவா்களின் பண்புநலன்கள் அக்குழந்தைக்கு அமைய வேண்டும் என்ற நோக்கில் இச்சடங்கு முறை அமைந்துள்ளமையை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

    காதுகுத்தும் சடங்கு

         காதுகுத்தும் சடங்கு கிராமமக்களின் தவிர்க்க இயலாத சடங்கு முறையாகும். குழந்தை பிறந்த சில மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ காதுகுத்தும் சடங்கு நடைபெறும். குழந்தைப் பருவத்தில் காது குத்தவில்லை எனில் இறப்பதற்குள்ளாகவும், இல்லை இறந்த பின்பாவது காது குத்தியே அடக்கம் செய்யும் வழக்கம் இன்றளவும் மக்களிடையே நிலவி வருகின்றது.

         வைரமுத்து படைப்பில் இடம்பெறும் காது குத்தும் சடங்கு முறையினை,

    1. காது குத்துவதால் ஏற்படும் நன்மை
    2. தாய்மாமன் சீர் கொண்டு வருதல்
    3. காது குத்து நடைபெறும் முறை

    என்ற நிலைகளில் வகைப்படுத்தியுள்ளார்.

         கள்ளிக்காட்டு கிராம மக்களின் வாழ்வில் காதுகுத்தும் சடங்கு மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்துள்ளமையைக் கருவாச்சி காவியம் எனும் புதினம் வழியாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். காது குத்தும் சடங்கில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினையும், மக்களின் மனநிலையினையும் வாழ்வியல் பின்புலங்களையும் இதன்மூலம் காட்டுகிறார்.

         காதுல ஓட்ட போட்டதும் சலசலன்னு இரத்தம் ஒழுகுதா இல்லையா? இரத்தம் ஒழுங்குமுறையா இருந்தா செத்த நேரத்துல ஒறையனும் அப்படி ஒறையலனா சக்தி இருக்கா இல்லையான்னு சோதிக்கிறதுதான் காது குத்தாம். இது ஒரு வைத்தியன்கணக்கு என்று காதுகுத்துச் சடங்குகள் நடைபெறுவதற்குரிய காரண காரியங்களை மேற்கண்ட கூற்று வழியே ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும் மருத்துவ ரீதியான அடிப்படையிலும் இச்சடங்கு நன்மையை மட்டும் விளைவிக்கும் நிலையினை எடுத்துரைக்கிறார்.

    திருமணச் சடங்கு

         கிராமப்புற மக்களின் வாழ்வியல் பின்புலங்களைத் தெளிவாக உணர்த்த வைரமுத்து ஒவ்வொரு சடங்கு முறையினையும் நுட்பமாகக் கவனித்துத் தம் படைப்பு வழியே பதிவு செய்துள்ளார். மனித வாழ்வின் திருப்புமுனைச் சடங்காகக் கருதப்படும் திருமணச் சடங்கின் மேன்மையையும் தேவையினையும் தெளிவுபடுத்தும் ஆண், பெண் இருவரும் இணைந்து வாழும் திருமண வாழ்வினை,

         ஓா் ஆணும் பெண்ணும் உறவுகொள்ளச் சடங்குகள் சம்பிரதாயங்களோடு சம்மதம் வாங்கிக் கொண்டால் ஊர் அதைக் கல்யாணம் என்கிறது என்று விளக்கம் தருகின்றார்.

         நாகரிகம் வளா்ச்சியடையாத பொழுதும் கிராமங்களில் திருமணச் சடங்குகள் இன்றளவும் சிதையாமல் பின்பற்றப்பட்டு வருவதைத் தம் படைப்பின் வழியே அடையாளப்படுத்துகின்றார். இதுவே வைரமுத்துவின் படைப்பில் காணலாகும் திருமணச் சடங்குகளாகுகின்றன.

    • மணமக்கள் திருமணம்
    • மார்க்கத் திருமணம்

    எனும் இருநிலைகளில் வகைப்படுத்தி ஆராயலாம்.

    இறப்புச் சடங்குகள் 

         இறப்பு என்பது மனித வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இறுதி நிகழ்வாகும். இறப்பில் சிலர் இயற்கையாகவும், சிலர் நோய்வாய்ப்பட்டும் இறப்பர். மனிதா்களின் வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்த்தும் நிகழ்வே இறப்பு எனலாம். வாழ்க்கையில் மனிதர்கள் தம்முடைய குடும்பத்தோடும், உறவினர்களோடும், சமுதாயத்தோடும் வாழ்ந்து வரும்போது  “இறப்பு” ஒரு மிகப்பெரிய மாறுதலை உண்டாக்குகிறது.

         இறப்பு மனித வாழ்வின் இறுதிநிலை என்றாலும், அதற்குப் பின்னர் மீண்டும் இவ்வுலகில் பிறக்கிறான் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே பரவலாக நிலவிவருகின்றது. இதனாலயே மற்ற நிலைகளில் கடைப்பிடிக்கும் சடங்கு முறைகளைக் காட்டிலும் இறந்தவர்களுக்குச் செய்யும் ஈமச்சடங்குகள் மனித வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்நிலை பழங்குடியினர் முதல் தமக்கென ஒரு நாகரிகத்தைக் கொண்டிருக்கும் பல்வேறு சாதிக் குழுவினர் வரை அனைவரிடமும் காணக்கூடியதாகும் என்று வாழ்வியல் களஞ்சியம் எடுத்துரைக்கிறது.

         வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் மனிதர்கள் இறந்துவிட்டால் அவர்களை அடக்கம்செய்யும் முறை இல்லாமல் காணப்பட்டது. இறந்தவர்களின் உடலைப் பறவைகளும், மிருகங்களும் சிதைத்து உணவாக உட்கொள்ளும் நிலையே இருந்தது. மனிதர்களின் நாகரிக வளர்ச்சியால் சமுதாயத்தில் இறந்த மனிதனை அடக்கம் செய்யும் வழக்கம் ஏற்படத் தொடங்கியது எனலாம். உலக மக்கள் இறந்தவர்களின் உடலினை அடக்கம்செய்யப் பல வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர்.

         பண்டை நாளில் திபெத் மக்களும், அமெரிக்க ஆஸ்திரேலிய மக்களும் பிணத்தைப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவாக விட்டுவிடுவர். மத்தியத்தரைக் கடற்கரைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இறந்தவா்களைத் தங்கள் குகைகளில் புதைத்தார்கள். திபெத் மக்கள் மேற்கு ஆப்பிரிக்க ஆதிகுடிகள், பாலிவேசிய மக்கள் பிணத்தைக் கடலிலோ, ஆற்றிலோ எறிந்து இருக்கிறார்கள். அந்தமானியர், நாகர், அஸ்ஸாம்வாசிகள், தோண்டுகள் மக்கள் மரத்தின்மேல் பரண்கட்டிப் பிணத்தை அதன் மீது வைத்துவிடுவர். மேலும் சிந்துசமவெளி மக்கள் பிணத்தை உட்காரும் நிலையில் தாழிகளில் வைத்து அடக்கம் பண்ணி அடைத்தனர் என்று கலைக்களஞ்சியம் எடுத்துரைக்கிறது.

         கள்ளிக்காட்டு கிராம மக்களின் வாழ்வியல் இடம்பெறும் சிறப்புச் சடங்கின் நிலைப்பாட்டினை வைரமுத்து தன்னுடைய படைப்புகளில் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார். கிராம மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ள இறப்பு குறித்த நிகழ்வுகள் வழியே மக்களின் வாழ்வியல் பின்புலங்களையும் எடுத்துரைக்கின்றார். இதனை,

    1. இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள்
    2. இடுகாட்டில் நடத்தப்படும் சடங்குகள்

    எனும் இரு நிலைகளில் வகைப்படுத்தி ஆராயலாம்.

    இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள்

         உடலைவிட்டு உயிர்பிரிந்த பின் அவ்வுடலுக்குச் செய்யப்படும் சடங்குகள் இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள் எனலாம். வைரமுத்து தம் நாவல்களில் கிராமமக்களின் வாழ்வியலில் நடைபெறும் இறப்பு குறித்த நிகழ்வுகளையும், சடங்கு முறைகளையும் தெளிவுபட எடுத்துக்காட்டுகிறார்.

         பேயத்தேவரின் மனைவி அழகம்மாள் இறந்த செய்தியினை உறவினர்களுக்கும், பிற ஊர்களுக்கும் சொல்லச் சொல்லும் நிலையினைக் கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் நாவல்வழியாகக் கவிஞர் எடுத்துரைக்கிறார். அப்போது தான் ஊர் ஊருக்கு எழவு சொல்லப் போய்க்கொண்டிருந்த மாதாரிக் கொத்தன் தொங்கித் துவண்டுவரும் பேயத்தேவரைக் கண்டு யப்பே! நான் என்னத்தச் சொல்லுவேன் ஆத்தா எழவு சொல்லவும் நான் உசுரோட இருக்கனே என்றான். அழுக்குத் துண்டை வாயில் வைத்து அடைத்துக்கொண்டு போடா….. போயி பொழுதோட சொல்றா என்றார். பேயத்தேவர். கண்ணீா்பேய் உடைந்த வார்த்தைகளால் எனும் பகுதியில் இறந்தவுடன் இறப்புச் செய்தியினைச் சொல்வதற்கு ஆள் அனுப்பும் நிலையினைக் கிராம மக்கள் கையாண்டுள்ளமைத் தெளிவாகக் காட்டுகிறார்.

         இறப்புச் செய்தியினைப் பிறருக்குத் தெரிவிக்க ஆண்களே சென்று வந்துள்ளனர். கிராமப்புறங்களில் இவ்வேலையினை வெட்டியான் என்னும் இனமக்களே செய்துவந்துள்ளனா் என்பதை வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் புதினம் வழியே புலப்படுத்தியுள்ளார்.

         ”யப்பே! வண்டி நாய்க்கரு செத்துப் போயிட்டாரப்பே”ன்னு எழவு சொல்லி நின்னான் நச்சர்வரம் வெட்டியான் என்று பேயத்தேவரின் உற்ற நண்பராக விளங்கும் வண்டி நாயக்கர் இறப்புச் செய்தியைப் பெறுவதன் வழிச் சுட்டிக்காட்டுகின்றார்.

    முடிவுரை 

         மனிதர்களின் வாழ்வில் எந்தவொரு செயலாக இருந்தாலும் நன்கு நடைபெற வேண்டும் என்று கருதி முறையாகச் செய்யப்படுகின்ற செயல்பாடுகள் சடங்கு என்ற வடிவம் பெறுகின்றது எனலாம். தாயும், சேயும் எவ்வித நோய்நொடியும் தாக்காமல் இருக்கத் தீட்டுக் கழிக்கும் சடங்குகளும், காதுகுத்தும் சடங்குகளும் கிராம மக்களின் வாழ்வில் தவிர்க்க இயலாத சடங்கு முறைகளாகும். இன்றும் அவை நடைமுறையில் இருப்பதை வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளதைக் காணமுடிகின்றது.

    பார்வை நூல்கள்

    1. வைரமுத்து – கள்ளிக்காட்டு இதிகாசம்
    2. வாழ்வியல் களஞ்சியம்
    3. கள்ளிக் களஞ்சியம்

    *****

    கட்டுரையாளர்
    முனைவா்பட்ட ஆய்வாளா்
    பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூா்

    Share
  • கலித்தொகைப் பாடல்களில் கவிதை வளம் – 2

    -முனைவர் சு. செல்வகுமாரன்

    கவிதைமொழியின் சொற்பயன்பாடு பற்றிக் குறிப்பிடும் க. பூரணச்சந்திரன் “நடைமுறை ரீதியான எழுத்தாளன் சொற்களை பயன்படுத்தும்போது ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தம் மட்டுமே தரமுயலுவான். ஆனால் கவிஞனோ எத்தனை அர்த்தங்களை ஒரு சொல் தருகிறதோ அத்தனையையும் பயன்படுத்த முயற்சி செய்வான்.

        கவிதை மொழியைப்பற்றிய ஒரு தவறான கருத்து என்னவென்றால், கவிஞர் மிக அழகான, ஒலிநயத்துடன் கூடிய சிறப்பான சொற்களைப் பயன்படுத்துவார் என்பதுதான். உண்மையில் கவிஞர்கள் தேடுவது மிக அர்த்தப்பாங்கான – அர்த்தச்செறிவான சொற்களைத்தான். சொற்கள் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பொருள் தருகின்றன. மொழியில் பல தளங்களும் விதங்களும் இருக்கின்றன. கவிஞன் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். அவன் தேர்ந்தெடுக்கும் சொல் மிக உன்னதமானதாக – எளிமையானதாக அழகுத்தன்மை உள்ளதாக – அற்றதாக, ரொமான்ண்டிசத் தன்மை வாய்ந்தாக – யதார்த்தத்தன்மை கூடியதாக, பழங்காலச் சொல்லாக – புதிய சொல்லாக, கலைச்சொல்லாக – சாதாரணமாகப் புழங்குவதாக, ஓரிரு அசை கொண்டதாக – பல அசைகள் கொண்டதாக, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

    ஒரு தளத்தில் இயங்கும் கவிதைக்கு வேறுஒரு தளத்திலிருந்து கூடச் சொற்கள் ஆளப்படலாம். இதைச் சிறப்பாகச் செய்தால் ஒரு வியப்பதிர்ச்சி உருவாக்கும். கவிதையின் ஆழத்தைக் கூட்டும். கவிஞனின் தொழிலே சொற்களை மேலும் மேலும் தேடிச் செல்வதும் கண்டுபிடிப்பதும்தான். அச்சொற்களின் இரகசியத் தொடர்புகள் புலப்படும் சமயத்தில் கவிதையின் ஆழமும் கனமும் கூடுகின்றன. வெடித்துச் சிதறும் ஒரு வெடிகுண்டின் அழுத்தத்தைப் போல அதில் அழுத்தம் கூடுகிறது.” 14 என்று குறிப்பிடுவது கவிதைமொழியின் இயக்கம் குறித்துப் புரிந்துகொள்ள உதவுகிறது.

    முல்லைக்கலிப் பாடல் (3) ஏறுதழுவுதல் பற்றியதான தோழியின் கூற்றாக அமைகின்றது. இப்பாடலில் ஏறுதழுவுதல் தொடர்பான நிகழ்வினைக் காணாதவரும் கண்டுகொள்கின்ற விதமாய் புலவர் காட்சிப்படுத்தும் விதம் படைப்பாக்க மொழிசார்ந்த ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாய் உள்ளது.

         “அவர் மிடை கொள
          மணிவரை மருங்கின் அருவி போல
          அணிவரம்பு அறுத்த வெண்காற் காரியும், ….” 15
         “ஓவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற
          சேஎச் செவி முதற்கொண்டு, பெயர்ந்து ஒற்றும்….” 16

    ஆயமகளிர் தங்களுக்குரிய பரண்களில் வந்தமர்கின்றனர். அப்போது தொழுவினுள் பசுக்களைப் புகச்செய்கின்றனர். அந்தப் பசுக்கள் பல்வேறு விதமாக அழகுபடவும், வன்மம் மிக்கதாகவும் விளங்குகின்றன. அவற்றினை காட்சிப்படுத்தும் புலவன் மலையினின்று வீழும் அருவி போல அழகின் எல்லை மீறிய வெள்ளிய கால்களை உடைய கரிய எருதுகளையும், விண்மீன்கள் பூத்து விளங்கும் அந்திவான் போல வெள்ளிய புள்ளிகள் கொண்ட வெள்ளை எருதுகளையும், இறைவனின் தலையில் சூடியுள்ள பிறை போல வளைந்த கொம்புகளை உடைய சிவந்த எருதுகளையும் பொருந்துகின்ற மாறுபாட்டினை உடைய வலிய பிற ஏறுகள் பலவற்றையும் தொழுவினுள் புகவிட்டனர் என்பதாக பதிவு செய்கின்றார். இன்னொரு இடத்தில் காயாம் பூக்கண்ணி சூடி ஏறுதழுவுகின்ற பொதுவன் ஒருவன் இடையறாத வேகத்துடன் கோபம் கொண்டு தன்னை நோக்கி வந்த சிவந்த நிறமுடைய ஒரு எருதினை அதன் செவியடியிற் பற்றிக் கொண்டு அதன் வலியை அடக்கிய அழகைத் தலைவிக்கு தோழி மூலம் காட்சிப்படுத்துகின்றார்.

          இதற்கு நல்லுருத்திரனார் ஒரு தொன்மத்தை ஒப்புமை செய்கின்றார். பகைவிடுத்த பிடரி மயிர் கொண்ட குதிரையை வாயைப் பிளந்து, கொன்ற சமயத்தில் மாயனும் இத்தகையனோ? என்று என் நெஞ்சம் அச்சம் கொண்டதாக தோழிக் கூறுவதாக அமைகின்றது. பாடல் ஆயர் வாழ்வியல் தொடர்பான பல விவரங்களை பதிவுசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுருங்கச் சொன்னால் அவையே முல்லைக்கலிப்பாடலின் அடிக்கருத்தியலாகவும் விளங்குகின்றது. ஆக முல்லைக்கலியைப் பொறுத்தமட்டில் கருத்தியலை அழகியல் உறுப்புக்களைக் கொண்டு காட்சிப்படுத்துகின்றவிதமுமே கவிதையினை வளமையுடையதாகவும், செழுமையுடையதாகவும் இனங்காணச் செய்கின்றது. அத்தோடு கவிதையில் இயல்பாய் அமைந்து விடுகின்ற உணர்ச்சியும், கட்டமைப்பும் கூட முல்லைக்கலிப் பாடலின் வளமைக்கு காரணமாக அமைகின்றன.

        முல்லைக்கலிப் பாடல் (4) தோழி, தலைவி கூற்றாக அமைந்துள்ள உரையாடல்களாகவே அமைந்துள்ளன. அவர்களின் உரையாடல்கள் வெவ்வேறான காட்சிப்படுத்தல்களை நிகழ்த்துகின்றன. பாடலின் முதல்பகுதி ஏறுதழுவுலுக்காக தொழுவத்தில் விடப்பட்ட வெவ்வேறு எருதுகளின் வலிமை குறித்தனவாகவும், வலிமையும் கொலைத்தன்மை மிக்கதுமான எருதுகளை அடக்கிவிடும் ஆயன் எத்தகைய சிறப்பு மிக்க ஆயர்குலத் தலைவியை அடையலாம் என்பதனையும் விவரணைவதாக அமைகின்றன.

       “அவ்வழி, முள்எயிற்று ஏர் இவளைப் பெறும், இது ஓர்
        வெள்ஏற்று எருத்து அடக்குவான்.
    ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில்பெறும், ….”  17   

    அதாவது, எருதுகள் நிறைந்திருக்கும் இந்தத் தொழுவத்தினிடத்தே நிற்கின்ற ஒப்பிடுதற்கு அரிதான பலம் பொருந்திய வெள்ளை ஏற்றின் கழுத்திலே கிடந்து அடக்குபவன் முள்எயிற்று அழகியான இவளைப் பெறுவான் என்பதும்,  கூரிய கொம்புகளை உடைய கார் என்று சொல்லக் கூடிய எருதின் சினத்தை அஞ்சாது தழுவி அடக்குபவன் ஒளிமிக்க அணிகலன்களையுடைய தலைவியின் நீண்ட கூந்தலிலே துயிலுகின்ற பாக்கியத்தைப் பெறுவான் என்பதும்,  குரால் நிறம் உடையக் கண்களைக் கொண்ட கொலைத்தொழில் மிக்க ஏற்றை அடக்குபவன் வெருவுதலையுடைய பிணை மானைப் போல பார்க்கும் வலிபடர்ந்த கண்களை உடைய இந்த நல்லவளைப் பெறுவான் என்பதும், மிகுதியான வலிமையுடைய சிவந்த எருதின்  சினத்தை அஞ்சாமல் அடக்கி ஆள்பவன், வரிபொருந்திய காதணியினையும், மூங்கில் போன்ற தோள்களையும் உடைய தலைவியுடன் துயிலுறுதலைப் பெறுவான் என்றும் ஆயர்கள் முறைப்படி அறிவித்தல் செய்து பல விண்மீன்கள்  சூழ்ந்த அழகிய சந்திரனைப் போலப் பல பெண்கள் சூழ்ந்திருந்த அந்தப் பரணிடத்தே தலைவியையும் அழகு நிரம்பியவளாக கொண்டு சேர்த்தனர் என்பதாகக் காட்சிப்படுத்தி நம் மனக்கண்ணில் நிறுத்தப்படுவதன் மூலம் தலைவியின் சிறப்பு  உணர்த்தப்படுகிறது.

     இங்கு ஆயர்குலப் பெண்கள் ஏறுதழுவல் மூலமாகத் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட நிலையினை விவரிக்கும் டாக்டார் மு.வ “ஏறுதழுவுதல் என்ற ஒரு வழக்கம் முல்லை நிலத்துக்கு உரியது. அது மற்ற சங்க நூல்களில் இல்லாமல் கலித்தொகையில் மட்டும் காணப்படுகிறது. அப்பகுதியில், ஆயர்களின் வீரமும் அஞ்சாமையும் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஆயர் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதனால், அவளுக்கு உரிய கணவன் வீரம் மிக்கவனாக இருத்தல் வேண்டும். இன்ன காளையைத் தழுவி அடக்கவல்ல வீரனே அவளை மணப்பதற்கு உரியவன் என்று பலரும் அறியத் தெரிவிப்பது வழக்கம். அவ்வாறே வேறு குடும்பத்துப் பெண்களுக்கும் திருமண ஏற்பாடாக ஏறுகள் குறிக்கப்படும். இந்த ஏறுகளைத் தழுவி அடக்குவதற்கு வீரர்கள் காத்திருப்பார்கள். இதற்கு ஒரு நாள் குறிக்கப்படும் அன்று அஞ்சாமல் களத்தில் புகுந்து ஏறுகளை எதிர்த்து, அவற்றின் கொம்புகளால் குத்துண்டும் புண்பட்டும் வெற்றி பெறும் வீரர்களை அந்தந்தப் பெண்கள் மணந்து கொள்வார்கள். இவ்வாறு நிகழ்வதே ஏறுதழுவுதல் என்பது. இன்ன ஏற்றை அடக்கித் தழுவும் வீரனுக்கே உரியவள் இப்பெண் என்று பலமுறை சொல்லிப் பலர் அறியச் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது.” 18  எனக் குறிப்பிடுவது முதன்மையானதாகும்.

    மேலும் முல்லைக்கலிப் பாடல் (14) தலைவியை தலைவன் உரிய காலத்தில் வரைந்து கொள்ளாத நிலையில், தலைவியை அயலானுக்கு மணம்செய்து கொடுக்க வீட்டில் முயல்கின்றனர். அந்தத் தருணத்தில் தலைவி தோழியின் வாயிலாகத் தலைவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வரைவு கடாவுகின்றாள். அப்பாடலின் இறுதிப் பகுதியாக இடம்பெற்றுள்ள

         “தருமணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
    எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்…” 19

    என்னும்  வரிகள் ஆயமகளிரின் திருமணம் தொடர்பான நிகழ்வு அல்லது சடங்கில் பெண் எருமையின் கொம்பினை வைத்தல் என்பது இனவரைவியல் நோக்கில் ஆராயப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனைப் போலவே ஆயர்குலப் பெண்களின் கற்பொழுக்கமும் வலியுறுத்தப்படுவது உணர்த்தப்படுகின்றது. இது குறித்து தம் கருத்தினை பதிவு செய்யும் ராஜ்கெவுதமன்,

         “(114) தலைவி கூற்றாக உள்ள பாடலாகும். ஆயர்குடிப் பிறந்த பெண் ஒருவனோடு மட்டுமே மணவாழ்க்கை உண்டு என்பதில் கௌரவம் கொள்ளுகிறாள்.

    தலைவி தருமணல் தாழப்பெய்து வீட்டைச் செம்மண்ணால் பூசி பெண் எருமையின் கொம்போடு எமர் (வீட்டார்) இங்கு அயரும் பெரும்மணம் எல்லாம் தனித்து ஒழிய – (முன்னர்) வரிமணல் முன்துறையில் சிற்றில் புனைந்து ஆடிய ஆயத்தாரிலிருந்து நான் தனிநீங்கி அவனோடு புணர்ந்த ஒருமணம்தான் அறிவேன். இந்த உலகமே பெறினும் அருநெறி ஆயர்மகளிருக்கு இருமணம் கூடுதல் இயல்பு இல்லை. (என்று பிறர் வரைவு கேட்டுவந்த போது தலைவி கூறுகிறாள்.)

         ஆணுக்கு வீரம் மாதிரி, பெண்ணுக்குக் களவு மணம் புரிந்த ஒருவனே கணவன் என்ற மதிப்பீடு ஆகியுள்ளதை இங்கே காண இயலும். தொல்காப்பியம் கற்பு பற்றி வரையறுத்த நெறி இந்தியத் துணைகண்டம் முழுமைக்கும் உரிய நெறியாக இருந்தது.” 20

         முல்லைக்கலிப் பாடல்கள் நிறைந்த வர்ணிப்புகளைக்  கொண்டுள்ளன. அவை முல்லைநில மக்களின் வாழ்வில் முக்கியத்துவம் பெற்ற ஏறுதழுவுதல், குரவையாடுதல்,  ஆயர்குலப் பெண்களின் கற்புநெறி உள்ளிட்ட செய்திகளைத் தமிழ்ப் பண்பாட்டு முறையியலோடு வெளிப்படுத்துவது ஆகியன இதன் நோக்கமாகவும் கருத்தியலாகவும் அமைகின்றன. இங்கு பாடுபொருள் முக்கியத்துவம் பெறுகின்றது. அப்படியாயின் கவிதையின் வளத்திற்கு வெறுமனே அணிசார்ந்த அமைப்புகளும், மொழியும் மட்டுமே காரணியாக இருக்க முடியாது. மாறாக இலக்கியத்தின் அடிநாதமாக விளங்கக்கூடிய பாடுபொருளும் அதன்  வளமைக்கும் செழுமைக்கும் காரணியாக அமைவதை நாம் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆக கவிதையின் வளமை என்பது ஒரு பெருங்கடல் போன்று விரிந்தும் நீண்டும் செல்லத்தக்கது.

    சான்றெண் விளக்கம்

    1. வீ.அரசு – சங்க நூல்களின் காலம், ப – 7
    2. சுந்தரபாண்டியன் . க – தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி, ப-24
    3. நடராசன். இரா – செம்மொழிகள், ப – 8
    4. டாக்டர், மு.வ, மொழி வரலாறு, ப – 330, முதல் பதிப்பு – 1952
    5. ஜானதன் கல்லர் தமிழில் ஆர். சிவக்குமார் – இலக்கியக் கோட்பாடு, ப -112
    6. தனிநாயகம் அடிகளாரின் படைப்புகள், ப – 341
    7. தொல், அகத்திணை, பா – 5
    8. தொல் – அகத்திணை – 1
    9. ராஜ்கெவுதமன்- கலித்தொகை பரிபாடல் ஒரு விளிம்பு நிலை நோக்கு, ப-112
    10. முல்லைக்கலி, பா 1:1-3
    11. மேலது, பா – 1: 18-20
    12. மேலது, பா – 1: 24-26
    13. மேலது, பா – 101: 30 – 32
    14. க. பூரணச்சந்திரன், கவிதையியல், ப – 73
    15. முல்லைக்கலி, 3: 11-13
    16. மேலது, 3: 50-51
    17. மேலது, 4: 20 -28
    18. மு.வ, முல்லைத்திணை, பக் – 13, 14
    19. முல்லைக்கலி, பா-14:12-13
    20. ராஜ்கௌதமன்- கலித்தொகை பரிபாடல் ஒரு விளிம்புநிலை நோக்கு, பக் – 121, 122

     

     

    Share
  • மண்டைப் பாணர் – ஓர் ஆய்வு

    -ஆ.ஜெயகணேஷ்

    முன்னுரை

         பாணர் குறித்த செய்திகள் சங்கப் பாடல்களிலும் தொல்காப்பியத்திலும் காணப்படுகின்றன. இப்பாணர் மூன்று வகையினர் என்று கூறுவர் அறிஞர் பெருமக்கள். அவற்றுள் மண்டைப்பாணர் என்றொரு வகையையும் கூறியுள்ளனர். மண்டைப்பாணர் என்றொரு வகைப் பாணர் மரபில் இருந்தனரா? மண்டை என்பது பாணர்க்கு மட்டும் உரிய ஒன்றா? மண்டை என்பது யாழ்க்கருவி போல் இசைக்கருவியா? மண்டைப்பாணர் என ஏன் அழைக்கின்றனர்? போன்ற வினாக்கள் தோன்றுகின்றன. எனவே, ~மண்டைப் பாணர் என்றொரு வகையினர் சங்க காலத்தில் இருந்தனரா? என்னும் சிக்கலை முன்னிறுத்தி இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    மண்டை என்பது என்ன?

         மண்டை என்பது சங்ககால இரவலர்கள் உணவுபெற்று உண்பதற்கு வைத்திருந்த ஓர் உணவுப் பாத்திரம் ஆகும். மன்னரது அரண்மைக்குச் சென்ற இவர்கள், மன்னனைப் புகழந்துபாடி முடித்தபின்பு அரசர்கள் கொடுக்கும் கள், சோறு போன்ற உணவுகளை இம்மண்டையில் பெற்று உண்டுள்ளனர். அரண்மனைக்காரர்களும் அம்மண்டையில்தான் உணவுகளை வழங்கியுள்ளனர். இம்மண்டை இரவலர்களின் உண்கலமாக விளங்கியுள்ளன எனப் புறநானூற்றுப் செய்யுட்கள் கூறியுள்ளன. இதனைப் பின்வரும் தலைப்பின் கீழ் காணலாம்.

    புறநானூற்றில் மண்டை இடம்பெறும் சூழல்

         புறநானூற்றுப் பாடல்கள் பல செய்திகளை எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் மண்டை என்பதைக் குறித்து சில பாடல்கள் கூறியுள்ளன.  அவற்றினை எடுத்துக்காட்டி இப்பகுதியில் ஆராயப்பட்டுள்ளது.

         விறலியை ஆற்றுப்படுத்திய ஒளவையார், ‘கவிழ்ந்து கிடக்கும்  உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்? என ஏங்கிக் காட்டில் இருந்த சில்வளை விறலியே!, சேய்மைக்கண்ணன்றி அண்மையிலேயே நெடுமானஞ்சி உள்ளான். அவன்பால் செல்வையாயின், அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருட்களை, ஒரு பொழுதும் ஈரம் பார்க்காத மண்டை நிரம்ப ஊன் கொடுப்பதில் வல்லவன். அவனை நாடிச் செல்க’ எனக் கூறியுள்ளார். இதனை,

               “ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத்
              தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
              கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்
              சுரன்முத லிருந்த சில்வளை விறலி
              செல்வை யாயிற் சேணோ னல்லன்
              முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
              மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
              பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
              பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
              மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப
              அலத்தற் காலை யாயினும்
              புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே” (புறம்.103)

    என்னும் செய்யுளால் அறியலாம். இச்செய்யுளில் மண்டை என்னும் சொல் “கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரென” என்னும் அடியிலும் “பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை” என்னும் அடியிலும் இடம்பெற்றுள்ளது. உணவு இருந்தால் மண்டை மலர்தல் தன்மையுடையது; உணவு இல்லையெனில் அது மலர்தல் தன்மையற்றது என உணர்த்தப்பட்டுள்ளது. ஆகையால் மண்டையில் புரவலர்கள் உணவினை இட்டு, அதனை மலரச்செய்தல் தன்மை இன்மையால் அது கவிழ்ந்து காணப்பட்டது என்ற செய்தியை  “கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரென”  என்னும் அடி உணர்த்துகிறது. பொழுது இடைப்படாமையால் புலராத மண்டையைப் “பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை” என்றார். இவ்விரண்டு இடங்களிலும் மண்டை இடம்பெற்ற சூழல் உண்கலம் என்னும் பொருள் விளங்க அமைந்துள்ளது. மேலும், விறலிக்குரிய உண்கலமாக மண்டை அமைந்திருக்கிறது. எனவே, மண்டை என்பது இரவலர்கள் உணவுபெற்ற உணவுப் பாத்திரம் எனத் தெளிவாகிறது.

         அடுத்து வருகின்ற செய்யுளும் இச்செய்தியை உணர்த்தியுள்ளது. அதாவது, ‘இவ்வுலகில் வள்ளல்கள் இறந்தொழிந்தனர். இரப்போர் குறிப்பறிந்து ஈயும் வேந்தரும் இலராயினர். இந்நிலையில் ஏங்கி நிற்காது (வறுமையுற்று) கவிழ்ந்த என் இரவல் மண்டையை ஈத்து மலர்ப்பவர் யாவருளர் என இரவலர் வினவினர்’ என்னும் செய்தியை,

               “ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
              ஏலாது கவிழ்ந்தவென் னிரவல் மண்டை
              மலர்ப்போர் யாரென வினவலின்”   (புறம்.179:1-3)

    என்னும் செய்யுளடிகள் கூறுகின்றன. புரவலர் கொடுக்கும் பொருளை நிமிர்ந்து ஏந்திய மண்டை, அவர்கள் இன்மையால் அத்தன்மையை இழந்து, ஏலாது கவிழ்ந்தது என்னும் கருத்து உணர்த்தப்பட்டுள்ளது. இரத்தலைப் பெற்ற மண்டையாதலால் “என் இரவல் மண்டை” என்றார் இரவலர். என் இரவல் மண்டை என்று கூறப்பட்டுள்ளதிலிருந்து மண்டை என்பது இரவல் பாத்திரம் என அறிய முடிகிறது. மேலும், ஒளவை.சு.து. அவர்கள், “மண்டை-உண்கலம். அடிகுவிந்து வாய்விரிந்து இருப்பதனாலும் ஏற்கும்பொழுது அதன் வாய்தோன்ற ஏந்துவதும், ஏலாப்பொழுது கவிழ்த்து வைப்பதும் இயல்பாதல்பற்றி, ‘ஏலாது கவிழ்ந்த மண்டை’ என்றும் இட்டு ‘மலர்ப்போர்’ என்றும் கூறினார்” (2009:599) என்பார். இக்கருத்திலிருந்து இரவலர்கள், வேந்தர்கள் ஈயும் பொருளை அல்லது  உணவைப் பெற மண்டையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என அறிய முடிகிறது. எனவே, மண்டை என்பது இரவலர்கள் இரந்துண்ணும் பிச்சைப் பாத்திரம் அல்லது உணவுப் பாத்திரம் என்பதை இச்செய்யுள் அடிகள் உணர்த்தியுள்ளன.

         பாரி இறந்தது குறித்துப் பாடிய கபிலர், ‘பாரியின் குன்றம், இவர் இருந்த காலத்தில், தன்னிடம் வந்த பாணர்க்கு மண்டை நிறையத் தரும் பொருட்டு இனிய கள் வடிக்கப்பட்டது. இப்பொழுது அத்தன்மையை இழந்தது’ எனக் கூறியுள்ளார். இதனை,

               “ஒருசா ரருவி ஆர்ப்ப வொருசார்
              பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
              வாக்க வுக்க தேக்கள் தேறல்
              கல்லலைத் தொழுகு மன்னே”      (புறம்.115:1-4)

    என்னும் அடிகள் உணர்த்துகின்றன.  கள்ளைப் பாணர்க்கு மண்டை நிறைய ஊற்றிக் கொடுப்பர் என்னும் கருத்திலிருந்து மண்டை உணவு வழங்கப்பட்ட உண்கலம் என்பது தெளிவாகிறது. “பாணர் மண்டை” என்றதற்குப் பாணருடைய மண்டை என்று விளக்கம் கூறுவர் உரையாசிரியர்கள். எனவே, பாணர்க்கு மண்டையில் கள்நிறையக் கொடுத்துள்ளனர் என்னும் செய்தியின் மூலம்  பாணரது உண்கலமாக மண்டை விளங்கியிருக்கிறது என அறிய முடிகிறது.

         மன்னனிடம் பரிசில் பெறச்சென்ற பெருஞ்சித்தரனார், ‘நெருப்புத் தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய, நெய்யினால் வறுத்தெடுத்த கொழுவிய ஊனையும் கள்ளையும் மண்டையோடு பெற்று மாறிமாறி உண்வோமாக, உன்னைக் காண வந்தேன் என்னுடைய தலைவா’ எனக் கூறியுள்ளார். இதனை,

               “நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
              பரூஉக்கண் மண்டையொ டூழ்மாறு பெயர
              உண்கு மெந்தைநிற் காண்குவந் திசினே”   (புறம்.125:2-4)

    என்னும் அடிகளால் அறியலாம். இச்செய்யுள் அடிகளில் இடம்பெற்ற மண்டை, ஊனும் கள்ளும் உணவும் பெறப் பயன்படுத்திய பாத்திரமாக இடம்பெற்றுள்ளது. அரசனது அரசவையில் ஊனும் கள்ளும் மண்டையோடு சேர்த்தே வழங்கப்பட்டுள்ளன.  இதன்மூலம் அரசர்கள் அரண்மனைக்கு வரும் இரவலர்க்கு உணவு வழங்க மண்டையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என அறிய முடிகிறது.  மேலும், ஒளவை.சு.து. அவர்கள், பரூஉக்கண் மண்டை என்பதற்குக் “கள்ளையுடைய உடலிடம்பரிய மண்டை” (2009:416) எனக் கூறியுள்ளார். எனவே, மண்டை என்பது அனைத்து இரவலர்களுக்கும் உரிய ஒன்றாக திகழ்ந்துள்ளது என இச்செய்யுள் மூலம் தெளிவாகிறது. அடுத்து வருகின்ற செய்யுள் அடிகளும் இக்கருத்தைக் கூறியுள்ளன.

         தன் தலைவன் இறந்ததால் வருத்தமுற்ற ஆவூர் மூலங்கிழார், ‘வண்டுகள் வந்துபடியும் மதுவினால் ஒழியாத மண்டையொடு மிக்க சோற்றினை யாவர்க்கும் குறையாமல் வழங்கும் பெரிய இல்லமாக விளங்கியது. மன்னன் இறந்ததனால் அம்முற்றம் நீரற்ற ஆற்றின் ஓடம் போலப் பொலிவையிழந்தது’ எனக் கூறியுள்ளார். இச்செய்தியை,

               “அந்தோ வெந்தை யடையாப் பேரில்
              வண்டுபடு நறவின் தண்டா மண்டையொடு
              வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
              வெற்றியாற் றம்பியி னெற்றற் றாகக்
              கண்டனென் மன்ற”  (புறம்.261:1-5)

    என்னும் அடிகளால் அறியலாம். இச்செய்யுள் அடிகள் இரவலரது மண்டையில் உணவு வழங்கியதைக் கூறி நிற்கவில்லை. மாறாக அரசர்கள் அரசவையில் இரவலர்களுக்கு உணவு வழங்குவதற்காக வைத்திருந்த மண்டையில் உணவு கொடுத்துள்ளனர் என்பதை உணர்த்தியுள்ளன. அதாவது இரவலர்களுக்கு மண்டையோடு சேர்த்தே சோற்றினை வழங்கியுள்ளனர். தற்பொழுது அன்னதானம் செய்பவர்கள் உணவினை ஒரு தட்டில் வழங்குவது போன்று சங்கக்காலத்தில் மண்டையில் வழங்கியுள்ளனர். இச்செய்தியை இரண்டு செய்யுட்களும் கூறியுள்ளன. எனவே, அரசர் மண்டையை இரவலர்களுக்கான உணவுப்பாத்திரமாக பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

         வரிசையால் உயர்ந்த முதுகுடி மறச் சான்றோர் ஒருவரைச் சிறப்புற நோக்கி அவர்க்குக் கள் வழங்குமாறு வேந்தன் பணியாளரை ஏவிச் சிறப்பித்தான். அதனை வியந்துநோக்கிய பாணனைக் கழாத்தலையார் அழைத்து, ‘பாணனே! தன்பாலுள்ள அன்பால் தனக்காகக் கள் முகந்தெடுத்துத் தந்த பசும் பொன்னாலாகிய மண்டையை, உனக்கு நல்குவாயாக எனச் சொல்லிச் செய்யும் அச்சிறப்பை வியந்து நோக்குதலை ஒழிக’ என்றார். இதனைக்,

                                    “காதலின்
              தனக்குமுகந் தேந்திய பசும்பொன் மண்டை
              இவற்கீ கென்னு மதுவுமன் றிசினே
              கேட்டியோ வாழி பாண”  (புறம்.289:5-8)

    என்னும் அடிகள் உணர்த்துகின்றன. அரசவையில் இரவலர்களுக்கென்று இருக்கும் மண்டையில் கள்வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இப்பாடல் அடிகளும் உணர்த்தியுள்ளன. தலைசிறந்தவர்களாயின் பசும்பொன் மண்டையில் உணவு வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இதனை ஒளவை.சு.து. அவர்களும் ‘சிறந்தார்க்கன்றிப் பிறர்க்குக் கொடுக்கப்படாது என்றதற்குப் ‘பசும் பொன் மண்டை’ எனக் கூறினார்” (2010:313) என்று கூறுவார். எனவே, சங்க காலத்தில் பொன்னால் செய்யப்பட்ட மண்டை உண்கலம் இருந்துள்ளது என்றும் சிறப்பானவர்களுக்கே அதில் உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிய முடிகிறது.

          பாணனைச் சிறப்பு செய்வதற்காகப் பசும்பொன் மண்டையில் உணவு வழங்கப்பட்டுள்ளது என்னும் செய்தி கூறப்பட்டுள்ளது. இப்பசும்பொன் மண்டை பாணருடையது அல்ல; இது அரண்மனைக்குரியது. எனவே, மண்டை பாணர்க்கே உரியதல்ல என்பது  இச்செய்யுள் மூலம் தெளிவாகிறது.

    மண்டையில் கள் நிரம்பியிருந்தது என்னும் செய்தியை,

    “தேஎங் கொண்ட வெண்மண்டையான்”     (புறம்.352:1)

    என்னும் அடியால் அறியலாம். மண்டையில் கள் கொடுக்கப்பட்டதையே பெரும்பாலான பாடல்கள் கூறுகின்றன. ஒளவை.சு.து. அவர்களும், “மண்டை, கள் முதலியன உண்டற்குரிய மட்கலம்” (2010:511) என்று கூறுவார்.

         மேற்காட்டப்பட்ட செய்யுட்கள் மண்டை என்னும் உண்கலம் விறலி, பாணர், இரவலர் ஆகியோர்க்குரியது எனக் கூறின. உழவர்க்குரிய உண்கலமாகவும் மண்டை விளங்கியது என்பதைப் புறநானூற்றுச் செய்யுள் ஒன்று கூறியுள்ளது. அதாவது, ‘ஊரில் விழா ஒன்றும் இல்லையாயினும், உழவரது மண்டையில் பெரிய கெடிற்று மீன் உணவுடன், பூவுடன் கலந்த கள்ளும் நிறைந்திருக்கும்’ என்னும் செய்தியை,

               “விழவின்று ஆயினும் உழவர் மண்டை
              இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து”  (புறம்.384:8-9)

    என்னும் அடிகள் கூறுகின்றன. உழவர் தங்களுடைய மண்டையில் மீனுடன் கள்ளும் வைத்து உண்டுள்ளனர் என்னும் கருத்தின் மூலம் உழவர் உண்கலமாகவும் மண்டை விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது.

         மண்டை என்னும் உண்கலம் கிணைவரிடத்திலும் இருந்துள்ளது. தடாரியை இசைத்து நின்ற இரவலன், ‘வெப்பம் கப்பிய என் மண்டை உண்கலத்தில் தெளிந்த மதுவை நிரம்பப் பெய்து, உண்ணத் தந்ததும் அல்லாமல் தன் கலத்தில் தான் உண்ணுதற்குரிய மான் இறைச்சிப் பொரியலையும் கொக்கின் நகம் போலும் அரிசிச் சோற்றையும் என் சுற்றத்தாரும் உண்க என்று வழங்கினான் என் தலைவன்’ எனக் கூறினான். இதனை,

               “மதியத் தன்னவென் னரிக்குரற் தடாரி
              இரவரை நெடுவா ரரிப்ப வட்டித்
              துள்ளி வருநர் கொள்கல நிறைப்போய்
              ………………………………………………………….
              அழல்கான் றன்ன வரும்பெறன் மண்டை
              நிழல்காண் டேற னிறைய வாக்கி
              யானுண வருள லன்றியுந் தானுண்
              மண்டைய கண்ட மான்வறைக் கருனை
              கொக்குகிர் நிமிர லொக்க லார
              வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
              விரைவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு
              புரையோன் மேனிப் பூத்துகிற் கலிங்கம்
              ஊரைசெல வருளியோனே” (புறம்.398:12-29)

    என்னும் செய்யுள்அடிகள்  கூறுகின்றன. மண்டையைக் காணும்தோறும் உணவின்மை தோன்றி வயிற்றுத் தீயை எழுப்பி வெதுப்புதலின், “அழல்கான் றன்ன மண்டை” என்றார். இவ்வாறு உணவின்றி வெப்பமிகுந்திருந்த என் வயிற்றிற்கு மண்டையில் உணவுவழங்கிக் குளிரச் செய்தான் தலைவன் என்று தடாரியை இசைத்து நின்ற இரவலன் உணர்த்தியுள்ளான். தடாரியை இசைத்து நிற்பவன் கிணைவன் எனப் பல பாடல்கள் கூறியுள்ளன. இப்பாடலும் மண்டை என்பதை உணவு உண்ணும் கலமாக வெளிப்படுத்தி உள்ளது. எனவே, மண்டை என்பது இங்குக் கிணைவர்க்குரிய உண்கலமாகக் கூறப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.

         மண்டை என்பது உணவு பெறும் அல்லது உணவு பெற்றுண்ணும் உண்கலம் (உணவுப் பாத்திரம்) என மேலே எடுத்துக்காட்டப்பட்ட செய்யுட்கள் நமக்கு உணர்த்தின. இம்மண்டை பாணர் என்பவருடன் மட்டும் இணைத்துக் கூறப்படவில்லை. இரவலர், உழவர், கிணைவர், விறலி ஆகியோருடன் இணைத்தும் கூறப்பட்டுள்ளன. மேலும், அரண்மனைக்கு வரும் இரவலர்களுக்கு உணவு வழங்கவும் இம்மண்டை விளங்கியிருக்கிறது. இம்மண்டையில் கள் வழங்கப்பட்டதைப் பல பாடல்களும் சோறு வழங்கப்பட்டதைச் சிலப்பாடல்களும் கூறியுள்ளன. எனவே, மண்டை என்பது கள், சோறு முதலியன உண்டற்குரிய உண்கலம் எனவும் இம்மண்டை அனைத்து இரவலர்களுக்கும் பொதுவானது எனவும் தெளிவாக அறிய முடிகிறது.

         உண்கலமாக விளங்கிய ஒன்று ஏன் மண்டை என்னும் பெயரால் அழைக்கப்பட்டது? என்னும் வினா எழலாம். மண்டை என்பதற்கு விளக்கம் கூறிய ஒளவை.சு.து. அவர்கள், ‘மண்டை, கள் முதலியன  உண்டற்குரிய மட்கலம்” (2010:511) என்று கூறியுள்ளார். இவரது விளக்கம் மண்டை என்பது மண்ணால் செய்யப்பட்ட பொருள் என்பதாக அமைந்துள்ளது. மண்ணால் செய்யப்பட்டதனால் மண்டை என அழைக்கப்பட்டதா? என்னும் ஐயம் எழலாம். சங்ககால மக்கள் பயன்படுத்திய பெரும்பாலான பொருட்கள் மண்ணால் செய்யப்பட்டவை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும், மண்டையானது பொன்னால் செய்யப்பட்டதாகவும் இருந்துள்ளது எனப் பாடல் கூறியுள்ளது. எனவே, மண்ணால் செய்யப்பட்டதனால் இப்பெயர் பெற்றிருக்காது என்பது தெளிவாகிறது. தமிழில் உள்ள சில சொற்களுக்கு விளக்கம் கூறுவதென்பது மிகக் கடினமான ஒன்றாகும். இன்னும் சில சொற்களுக்கு விளக்கமே கூறமுடியாது. இது தமிழ்மொழிக்கு மட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும். அவ்வகையில் மண்டை என்னும் சொல் அமைந்துள்ளது. எனவே, மண்டை என்னும் உண்கலம் நம் மண்டையின் ஓடு போன்று இருந்திருக்கலாம். ஆதலால் மண்டை எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.

    மண்டைப்பாணர் குறித்த விளக்கமும் விவாதமும்

         ச.காஞ்சனா தேவி அவர்கள், “மண்டை என்னும் உண்கலத்தை உடையவர் மண்டைப் பாணர் ஆவர்” (செம்மூதாய் சதாசிவம், 2015:73) என்று கூறியுள்ளார்.  இவ்விளத்தையே பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளார்கள். எனவே, ஒருவரது விளக்கமே இங்குப் போதுமானதாக அமைகிறது.

         உண்கலம் என்பது ஒவ்வொரு இரவலரிடத்தும் இருக்கின்ற ஒன்றாகும். ஏனெனில் அரசர் குலத்திற்கு இரக்கச் செல்லும் இவர்கள் அக்குலத்தார் இட்டு வழங்குகின்ற உணவுகளை அவ்வுண்கலத்தில்தான் பெற்றிருப்பர். அரசர் குலப் பெண்டிரும் இரவலர்களுக்கு உணவுகளை இட்டு வழங்கியதைப் பாடல்கள் எடுத்துக்கூறியுள்ளன. அவ்வகையில் இரந்துண்டு வாழும் ஒவ்வோர் இரவலரிடத்தும் ஓர் உண்கலம் இருந்திருக்கிறது. அவ்வுண்கலம் மண்டை என்னும் பெயரில் அழைக்கப்பட்டுள்ளது அல்லது வழங்கப்பட்டுள்ளது எனப் பாடல்கள் கூறுகின்றன. இரவலர்களுள் ஒருவரான பாணர்களிடத்தும் இம்மண்டை என்னும் உண்கலம் இருந்துள்ளது. இவர்களும் அம்மண்டையில் உணவுகளைப் பெற்று, உண்டு வாழ்ந்து வந்துள்ளனர். அறிஞர்கள் கூறுவது போன்று மண்டை என்பது பாணர்களுக்கும் உண்கலமாக அமைந்துள்ளது. இதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் மண்டை என்பது உண்கலம் எனக் கூறிய அறிஞர்கள், ஏன் மண்டைப் பாணர் என்றொரு வகையைக் கூறினர்? மண்டை அனைவருக்குமுரிய ஒன்று என இவர்கள் அறியவில்லையா? மண்டை என்னும் உண்கலத்தைப் பெற்றிருந்திருந்ததால் இவர்களை மண்டைப் பாணர் எனக் கூறலாமா? போன்ற வினாக்கள் எழுகின்றன.

         பாடுதல் தொழிலைச் செய்தவர் பாடுநர் என்றும் ஆடுதல் தொழிலைச் செய்தவர் ஆடுநர், கூத்தர் என்றும் யாழில் பண்ணிசைத்தவரைப் பாணர் என்றும் பறையிசைத்தவரைப் பறையர் என்றும் துடி இசைத்தவரைத் துடியர் என்றும் கிணை இசைத்தவரைக் கிணையர் என்றும் கூறியுள்ளனர்; அவர்களும் தங்களை அவ்வாறே அழைத்துக் கொண்டனர். இப்பெயர் ஒவ்வொருவரிடமும் உள்ள இசைக்கருவியை வைத்தும் அவர்களிடம் காணப்பட்ட கலைத்திறன் வேறுபாடு வைத்தும் தொழில் அடிப்படையிலும் அழைக்கப்பட்டதாகும். இவர்கள் அனைவரிடமும் மண்டை இருந்துள்ளது; மண்டையில் உணவு வழங்கப்பட்டுள்ளது. மண்டை அனைவருக்கும் பொதுவானதாக விளங்கியுள்ளது. இம்மண்டை என்னும் உண்கலம் ஓர் இசைக்கருவி போலவும் அதனை இசைத்துப் பாணர்கள் வாழ்ந்தது போலவும் பாணர்க்கே இது உரியது போலவும் மண்டைப் பாணர் என்றொரு வகையைக் கூறுகின்றார்கள் அறிஞர்கள். இரவலர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த மண்டையைப் (உண்கலம்), பாணர்க்குரியதாகக் கருதி மண்டைப் பாணர் என்றொரு வகையினர் இருந்தனர் எனப் பிரித்துக் கூறுவது எவ்வாறு பொருந்தும்? இம்மண்டையை உழவரும், கிணைவரும், விறலியும் வைத்திருந்தனர் எனவும் உணவும் உண்டுள்ளனர் எனவும் பாடல்கள் கூறியுள்ளன. இச்செய்தியினால் மண்டை விறலி, மண்டை உழவர், மண்டைக் கிணைவர் என்னும் வகைகளைக் நாம் கூற முடியுமா? முடியாது. கூறினாலும் அதனை ஏற்கவியலாது. ஏனெனில் மண்டை என்பது அனைத்து இரவலர்களுக்கும் பொதுவானதாகும். எனவே, மண்டைப் பாணர் என்றொரு வகை இல்லை என்பது புறநானூற்றுச் செய்யுட்கள் மூலம் தெளிவாகிறது.

    முடிவுரை

         ‘மண்டைப்பாணர் என்றொரு வகையினர் சங்கக்காலத்தில் இல்லை’ என்பது இக்கட்டுரையின் முடிவாக அமைகிறது. மண்டை என்பது கள், சோறு முதலியன உண்டற்குரிய ஒன்றாக விளங்கியுள்ளது. இம்மண்டையில் விறலி, பாணர், உழவர், கிணையர் போன்றோரும் உணவுபெற்று உண்டுள்ளனர். ஆதலால் இம்மண்டை அனைத்து இரவலர்க்குமுரிய பொதுவான உண்கலம் என்பது உணர்த்தப்பட்டது. இதனைப் பாணர்க்கு மட்டும் உரியது எனக் கருதுவதும் மண்டைப்பாணர் என்றொரு வகை இருந்தனர் என்று கூறுவதும் தவறாகும். மேலும், பாணர்க்கு மட்டும் உரியதாகக் கருதுவதற்கும் அவற்றினால் ஒரு வகையைக் கூறுவதற்கும் இது(மண்டை) இசைக்கருவியும் அன்று. எனவே, மண்டை என்பது இரவலர்களுக்குரிய பொதுவான உண்கலம் என்னும் கருத்தின் மூலம் மண்டைப் பாணர் என்றொரு பாணர் வகையினர் இல்லை என்பது இக்கட்டுரையின் முடிவாகக் கூறப்படுகிறது. மேலும், நாம் மண்டைப்பாணர் என்றொரு வகையைத் தனியாகக் கூறுவது ஏற்புடையதல்ல என்பதும் இக்கட்டுரை முடிவின் மூலம் உணர்த்தப்படுகிறது.

    துணை நூற்பட்டியல்

    1. செம்மூதாய் சதாசிவம்(பதி.ஆ.கள்), தமிழர் வாழ்வியல் மரபும் மாற்றமும், செம்மூதாய் பதிப்பகம், சென்னை-89, டிசம்பர்-2015.
    2. துரைசாமிப்பிள்ளை.ஒளவை.சு.(உ.ஆ.), புறநானூறு முதல் பாகம், பூம்புகார் பதிப்பகம், சென்னை-108. ஜூலை-2009.
    3. துரைசாமிப்பிள்ளை.ஒளவை.சு.(உ.ஆ.), புறநானூறு இரண்டாம் பாகம், பூம்புகார் பதிப்பகம், சென்னை-108. மார்ச்-2010.

     

     

    Share
  • நாட்டுப்புறப்பாடல்களில் தாலாட்டு

    சிந்து.மூ

     

    உதவிப்பேராசிரியர்

          தமிழ்த்துறை

        கற்பகம் பல்கலைக் கழகம்

           ஈச்சனாரி.

                மனித இனம் தோன்றியகாலம் முதலே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றியது எனலாம். மனிதனது உள்ளத்தில் தோன்றம் உணர்வுகளின் வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியமாகத் தோன்றுகிறது. வாய்மொழி இலக்கியமாக  விளங்குகின்ற  நாட்டுப்புறப் பாடல் ஏட்டிலக்கியமாக மாறியதில் முன்னோடியாக இருந்தது தாலாட்டுத்தான். தாலாட்டு மனித வாழ்வோடு தொடர்புடையது. மிகத் தொன்மையான தாலாட்டின் சிறப்பை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

    பெயர்க்காரணம்

              ‘தால்’ என்றால் நாக்கு. நாவினை ஆட்டிப் பாடுவதால் தால் + ஆட்டு தாலாட்டாயிற்று. குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்கும் தாய் அவ்வெலியை அடக்கத் தன் உதடுகளைக் குவித்து நாவினை ஆட்டிக் குரலையிடுவதே தாலாட்டாகும். தாலாட்டு நாட்டு வழக்கில் “ராராட்டு“ எனவும் வழங்கிவருகிறது. மேலும் தாலாட்டைத் தாராட்டு, தாலேலோ, ஓராட்டு, ரோரோட்டு, ராராட்டு, தொட்டில் பாட்டு, ஓலாட்டு, திருத்தாலாட்டு எனப் பல்வேறு பெயர்கள் இன்றைய உலக வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் வழங்கப்படுகிறது.1

                “தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் தாலாட்டு”2 என்பர் தமிழண்ணல். குழந்தைக்கு முதன்முதலில் புலனாகும் உணர்வுகளில் கூர்மையானது, குறிப்பானது செவியுணர்வே. தாயையும், பிறரையும் வேறுபடுத்தி உணர குழந்தைகளுக்கு  உதவுவது அவரவர் குரலே இக்கருத்தின் வழி, தாலாட்டுப் பாடலில் குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள பிணைப்பு தெளிவாக வெளிப்படுகிறது. பிறப்பின் போது பாடப்படும் தாலாட்டும், இறப்பின் போது பாடப்படும் ஒப்பாரியும் மனிதனுக்குக் கிடைத்தற்கரியதாய் உணரலாம்.

    தாலாட்டுப் பாடல்களின் தோற்றம்

                ‘தாலாட்டு’ என்ற சொல்லாட்சியை மையமாகாக் கொண்ட இடைக்கால இலக்கியங்கள் “தாராட்டு” என்றும், பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் “தாலேலோ” என்றும் குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம்.

                தொல்காப்பியர்  “குழவி மருங்கினும் கிழவதாகும்”3 என்று தொல்காப்பியத்தில் குழந்தைக்குரிய பருவகளைச் சுட்டிக்காட்டுகிறார்.மேலும், சங்க இலக்கியத்தில் புறப்பாடலாக விளங்கும் பரிபாடலிலும் “வரையழி வாலருவி வாதாலாட்ட”4 என்ற பாடல்வரிகள் தாலாட்டினைப் பற்றிக் கூறுகிறது.

                தமிழ் மொழியில் முதன் முதலாகத் தாலாட்டுப் பாடல்களைப் பாடியவர் பெரியாழ்வார். குலசேகர ஆழ்வாரும், பிள்ளைத்தமிழ்ப் புலவர்களும் தாலாட்டினைத் தாய்ப்பருவம் என்று தனித்துறையாக வளர்த்தனர். ஞானசம்பந்தர் தாலாட்டு, நம்மாழ்வார் தாலாட்டு போன்ற தாலாட்டுச் சிற்றிலக்கியங்கள் அதன் வளர்ச்சியைக் காட்டுவன எனலாம். தற்காலத்தில் தாலாட்டுப் பாடல்கள் சூழ்நிலைகளால் உணர்ச்சி வசப்படும் பாடல்களல்ல, தாயின் ஓய்விலே குழந்தை தவிழும் போது பிறக்கின்ற பாடலாகும் என்பதை உணரமுடிகிறது.

    தாலாட்டிசைக்கும் காலம்

                குழந்தை அழும் போது அதன் அழுகையை  அடக்கித்துயிலச் செய்யத் தாய் தாலாட்டுப் பாடுகிறாள். குழந்தைப் பிறந்த ஓரிரு வாரங்களிலிருந்து மூன்று வயது வரை குழந்தை தூங்க இத்தாலாட்டுத் தேவைப்படுகிறது. எனவே, அக்காலமே தாலாட்டிற்குரிய காலாமாகும். 96 வகைத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் பிள்ளைத் தமிழ் இலக்கியமும் ஒன்றாகும். அது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும். ஒவ்வொரு   பிள்ளைத் தமிழும் பத்துப் பருவங்களால் பாடப்பெறும். ஒவ்வொரு நிலையிலும் குழந்தையின் அழகினையும், சிறப்பினையும் உயர்வாகப் பாடப்படும்,

    தாலாட்டுப்பாடலின் அமைப்பு

                தாலாட்டுப் பாடல்கள் குறுகிய அளவு உடையன.ஆனால் பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களுக்கு அடிவரையரை இல்லை என்றே கூறலாம். குழந்தையின் உறக்க நிலைக்கேற்பவும், தாயின் மனநிலைக்கேற்பவும் தாலாட்டுப் பாடல்கள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ அமையப்பெறுகிறது.

    தாலாட்டு சமுதாயத்தில் பெறுமிடம்

                சமுதாயத்தில் பெண் தன் கருத்தை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு இடம். தன் எண்ணத்தை வெளிப்படுத்த தாய்க்கு வேறு இடம் இல்லாததால்  தாலாட்டில் வெளியாகின்றது எனத் தாலாட்டுப் பிறக்கும் நிலையை விளக்கியுள்ளமை தாலாட்டின் பயன் நிலையைச் சுட்டுவதாய் உள்ளது.

                இருவர் கொள்ளும் காதலைவிட, உடன் பிறந்தவர் கொள்ளும் வாஞ்சையை விட, உலகளக்கும் அருளினையும் விட பிள்ளைப் பாசமே ஆழமானது. இத்தகைய ”தாயும், சேயும் என்ற உறவுப் பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலை தான் தாலாட்டு”5 ஆகும்.

    தாலாட்டில் பாடுப்பொருளாக வருவன

    • பிள்ளைப்பேறு கிட்டியமைக்கு நன்றி கூறல்.
    • தெய்வம் தொடர்பான கதைகளைக் கூறல்.
    • குழந்தை இல்லாத போது தாய்பட்ட துன்பங்களைக் கூறல்.
    • குழந்தையின் அழுகைக்கானக் காரணங்களைக் கூறல்.
    • குழந்தைப் பேற்றை வேண்டி செய்த அறங்களைக் கூறல்.
    • குழந்தையை வர்ணித்துக் கூறல்.
    • குழந்தையின் எதிர்காலத்தை எண்ணி வர்ணித்தல்.

    தாலாட்டின் பிரிவுகள்      

    1.குழந்தை பற்றியன

                குழந்தையின் நிலையைப் பற்றித் தாலாட்டுப் பாடுதல் ஒரு வகையாகும்.

                             “என்

                        தேனே தினைமாவோ – என் சாமி

                        சிவந்தானோ மாங்கனியோ – என்

                        மாங்கனியே யாரடிச்சோரோ”

    என்ற பாடலில் குழந்தையின் நிலையிணை விளக்குகிறது.

    2.குழந்தைக்கு உரிமையானப் பொருட்களைப் பற்றியன

                குழந்தையின் சிலம்பு பற்றிக் கூறும் போது,

                             “என் போல் திருப்பங்கண்ணாய்

                        ஒருகால்  சிலம்பு அசைய – என்

                        மறுச்சு திருப்பங்கண்ணாய் – என்

                        வலதுகால் சிலம்பு அசைய”

    என்ற பாடல் சான்றாகும்.

    3.தாய்மாமன் சீர் வரிசை

              ‘தாயில்லாப் பெண்ணுக்குச் சீர் இல்லை என்பார்கள்’.அதுபோல தமையன் இல்லாப் பெண்ணக்குச் சீர் மட்டுமல்ல பலமும் குறைந்து விடுகின்றது.தாலாட்டுப் பாடல்களில் அதிகமாகச் சொல்லப்படும் உறவுநிலை தாய்மாமன் உறவுநிலையேயாகும்.

                பெண்கள் தன் உடன்பிறந்தோர் கொடுக்கின்ற சீதனங்களை அவ்வபொழுது ஞாபகப்படுத்திக் கொள்வதுண்டு. குழந்தைப் பிறந்தவுடன் தாய்மாமன், குழந்தையின் பாலுக்காகப் பசு மாடு வாங்கிக் கொடுத்தல் வழக்கம். இதனை ‘ஆச்சிமாடு கொடுத்தல்’ என்று அழைப்பர்.

                            “மழைக்கால் இருட்டுலே

                                  மாரளவு சன்னிலிலே

                                  குடப்பால் கொண்டுவரும்

                                  குணமுள்ளார் உன் மாமன்”

    என்ற வரிகள் மூலம், தாய்மாமன் குழந்தைக்கு எவ்வளவு இன்னல்களுக்கு இடையில் பால் கொண்டு வரும் நிலையினை உணர்த்துகிறது.

                தாலாட்டுப் பாடல்கள் தாயின் மனவோட்டத்தில் அமையப் பெற்று ,குழந்தையை தாயானவள் எல்லா நிலையிலும் வர்ணித்துப்பாடக்கூடிய நிலையைக் காணமுடிகிறது.

    முடிவுரை

    • நாட்டுப்புறப் பாடல்களுக்கு முன்னோடியாகத் திகழ்வது தாலாட்டாகும்.
    • தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் தாலாட்டு என்பது உணரமுடிகிறது.
    • இருவர் கொள்ளும் காதலை விட, உடன் பிறந்தோர் கொள்ளும் வாஞ்சையை விட, ஏன் உலகளக்கும் அருளினையும் விட, பிள்ளைப் பாசம் ஆழமானது என்பதை உணரமுடிகிறது.
    • தாயும் சேயும் என்ற உறவுப் பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலைதான் தாலாட்டு என்பதை உணரமுடிகிறது.
    • தாலாட்டுப் பாடல்கள் இருக்கும் வரை தாய்மாமனின் பெருமைகள் இருக்கும்.
    • தாலாட்டு தாய்க்குரிய இலக்கியமாகையால் அதில் தாய்மாமனின் பெருமையும், செல்வச் செழிப்பும், சீர்வரிசையும் சிறப்பாகப் போற்றக் கூடிய நிலையைக் காணமுடிகிறது.

    அடிக்குறிப்பு

    1.டாக்டர் சு.சத்திவேல் , நாட்டுப்புற இயல் ஆய்வு.ப-43

    1. தமிழண்ணல்,காதல் வாழ்வு,ப-10

    3.வ.த.இராமசுப்பிரமணியம் (உரையாசியர்),தொல்காப்பியம் பொருளதிகாரம் நூ-82

    4.அறிஞர்.வ.வே.சுப்பிரமணியன் சங்க இலக்கியம் மூலமும் தெளிவுரையும்,பரிபாடல்

        பா-6,52வது வரி

    1. தமிழண்ணல்,தாலாட்டு ப-11

     

    Share
  • ஒப்பீட்டு நோக்கில் வீரசோழிய யாப்புப் படலம் – தொன்னூல் விளக்க யாப்பதிகாரம்

     ம.பிரபாகரன்,

         ஆய்வாளர்,

    EFEO, புதுச்சேரி

                  ம.பிரபாகரன் photo - ஒப்பீட்டு நோக்கில் வீரசோழிய யாப்புப்படலம் - தொன்னூல் விளக்க யாப்பதிகாரம்                                                                   

                            ‘வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கத்தில் அமைத்துள்ள ஐந்திலக்கண முறைக்கும்  புத்தமித்திரர் தன் நூலான வீரசோழியத்தில் ஐந்திலக்கணத்தை அமைத்திருப்பதற்கும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. வீரசோழியம் தொல்காப்பிய மரபை விட்டுத் தன்போக்கில் எழுத்து, சொல் மரபை வடமொழியை ஒட்டி அமைத்துக் கொள்வதோடு பொருளிலக்கணத்திலும் தொல்காப்பியத்தைப் பின்பற்றாமல் வேறுமுறையில் அமைத்துக் கொள்கிறது. அணிக்குத் தண்டியின் காவியாதர்சத்தை மொழி பெயர்த்து அமைத்துக் கொள்கிறார் வீரசோழிய ஆசிரியர். யாப்பில் தொல்காப்பியம் யாப்பருங்கல மரபை ஒட்டி அவருக்கே உரிய ஒரு மரபை உருவாக்கி அமைக்கிறார். வீரசோழியம் செய்ததைப் போலவே வீரமாமுனிவரும் தமிழ்ப் பொருளிலக்கண மரபை முற்றிலும் தன் கோட்பாட்டின்படி அமைத்துள்ளார்’ என்று தன் கட்டுரையொன்றில் (மணற்கேணி9) முனைவர்.கி. நாச்சிமுத்து  கூறுகின்றார். மேற்கண்ட கூற்றில் பேராசிரியர் அவர்கள் வீரசோழியம் – தொன்னூல் விளக்கம் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரை, இவ்விரு நூல்களிலுமுள்ள யாப்பிலக்கணத்தை ஆராய்ந்து ஒற்றுமை, வேற்றுமைகளை சுட்டிக்காட்டுவதை தம் நோக்கமாகக் கொள்கிறது. கட்டுரையைத் தொடங்குவதற்கு முன் ஒரு கருத்து இங்குச்  சுட்டற்பாலது.  ராஜமாணிக்கம் என்பவர் தன்னுடைய வீரமாமுனிவருடைய தொண்டும் புலமையும் என்ற நூலில், தொன்னூல் விளக்க உரையில் நிறைய இடைச்செருகல்கள் இருப்பதாகக் கூறுவதால் இக்கட்டுரையில் தொன்னூல் விளக்கத்தின் உரை கணக்கில் கொள்ளப்படவில்லை.

                            முதலில் ஒரு கருத்தைக் கவனப்படுத்திக் கொள்ள வேண்டும். வீரமாமுனிவர், யாப்பிலக்கணத்தைப் பொறுத்தவரை எவ்விடத்திலும் தொல்காப்பியத்தைப் பின்பற்றவில்லை. ‘இங்கு இவர் தொல்காப்பியம் பற்றித் தெரிந்திருந்தாலும் அது கடினமான வழக்கத்திலில்லாத நூல் என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார். அக்காலத்தில் தொல்காப்பியம் எல்லாவகைத் தமிழறிஞர்களாலும் கற்கப்படாத நூலாக இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்’ (மேற்கண்ட கட்டுரை) என்ற முனைவர்.கி. நாச்சிமுத்து  கருத்தும் இவண் ஒப்பு நோக்கற்பாலது. நாம் இக்கட்டுரையில் வீரமாமுனிவர் பின்பற்றியுள்ள முந்தைய யாப்பிலக்கண நூல்களின் பெயரைத் தனித்தனியாக சுட்டவில்லை. அவற்றை நாம் சிந்தனைபள்ளியாகக் கருத்தில் கொண்டு கூறியுள்ளோம். அதாவது காக்கைபாடினியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலவிருத்தி, யாப்பருங்கலக்காரிகை என்று தனித்தனியாகச் சுட்டாமல் யாப்பருங்கல மரபு என்றே கூறியுள்ளோம். வீரமாமுனிவர் உறுப்புக்களைத் தொகுத்துக் கூறும் முறையில் யாப்பருங்கல மரபைப் பின்பற்றுகிறார். ஆனால் உறுப்புக்களை விரித்துரைக்கும் போது எழுத்தை விளக்காமல் விட்டுவிடுகிறார். யாப்பருங்கல மரபில் (யாப்பருங்கலம்) ‘தூக்கு’ என்ற உறுப்பையும் சேர்த்து உறுப்புக்கள் 7 என்னும் முறைமை இருந்ததை அறியமுடிகிறது. ஆனால் வீரமாமுனிவர் தூக்கை சேர்த்துக்கொள்ளவில்லை. தூக்கை வீரசோழியர் ஓர் உறுப்பாகக் கூறாவிடினும் தூக்கு என்ற ஓசைக்கு வீரசோழியம் (உரை) மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. வீரசோழியம் தளையை நிராகரிக்கிறது. தளையால் பாவினது ஓசையை உண்டாக்க முடியாது. தூக்கு அடிப்படையிலேயே பாவினது ஓசையை உண்டாக்க முடியும் என்பது வீரசோழியக் கொள்கை. இத்தன்மையைத் தொன்னூல் விளக்கத்தில் நம்மால் காணமுடியவில்லை. தூக்கு என்ற சொல்லை ‘பா’ என்ற பொருளிலது பயன்படுத்தினாலும் தளையே ஓசையை உண்டாக்கும் என்ற கொள்கையை உடையதாய் இருக்கிறது.

     உதாரணம்:

                            வெள்ளையுள் பிறதளை விரவா வெண்டளை

                       ஒன்றாய்ச் செப்பல் ஓசையாம் அஃதே

                       ஏந்திசை வெண்சீர் இயற்சீர் தூங்கிசை

                       ஒழுகிசை இரண்டும்உள எனில் ஆகும்

                            வெண்பா ஓசையின் விகற்பம் உணர்த்துகின்றார். பிறதளை விரவாது வெண்தளையே வந்ததால் விளையும் செப்பலோசை இதற்குரியது. வெண்சீர் மட்டும் வருவது ஏந்திசையும் இயற்சீரே பெறுவது தூங்கிசையும் இரண்டும் கலப்பது ஒழுகிசைச் செப்பலும் ஆம் (131:1978).

                            வீரசோழியம் தொல்காப்பியத்தைப் பின்பற்றி தளையை ஓர் உறுப்பாகக் கூறவில்லை. தொன்னூல் விளக்கம் தளையை யாப்பருங்கல மரபைப் பின்பற்றி ஏழுவகையாகக் கூறுகிறது. நாம் ஏற்கனவே கூறியது போல் வீரசோழியம் தளையை நிராகரித்தது அதன் கோட்பாட்டம்சத்தில் மிகவும் முக்கியமானதாகும். தொன்னூல் விளக்கத்தில் காணப்படும் உறுப்புக்களைத் தொகுத்துக் கூறும் முறைமையை நாம் வீரசோழியத்தில் பார்க்கமுடியாது. வீரசோழியம் தன் யாப்புப் படலத்தை அசைகளை விளக்குவதுடன் தொடங்குகிறது. அது எழுத்தைப் பற்றி எதுவும் விளக்கவில்லை. அதே போல் எழுத்திற்கு முந்தைய உறுப்பான மாத்திரையையும் வீரசோழியம் விளக்கவில்லை. யாப்பருங்கல மரபு  மாத்திரையைச் செய்யுள் உறுப்புக்களுள் ஒன்றாகத் தொகுத்து கூறவில்லை. எனினும் யாப்பருங்கல மரபைச் சார்ந்த   உரைகள் (யாப்பருங்கல்ம், யாப்பருங்கலக்காரிகை உரைகள்) மாத்திரையை விளக்குகின்றன. தொன்னூல் விளக்கம் மாத்திரையைப் பற்றி நூற்பாவில் எதுவும் கூறவில்லை. உரையைப் பற்றி ஒன்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. தொன்னூல் விளக்கம் எழுத்தை விளக்காமல் விட்டது வீரசோழியத்தைப் பின்பற்றியதனாலாகலாம். தளை 7 என்பதில் யாப்பருங்கலமரபோடு தொன்னூல் விளக்கம் ஒத்தமைகின்றது. ஆனால் வைப்பு முறையில் வேறுபடுகிறது. பின்வரும் அட்டவணை இதனைக் காட்டும்.

    வ. எண்    யாப்பருங்கலம்   வீரசோழியம் தொன்னூல்விளக்கம்

     

     1 இயற்சீர் வெண்டளை          –  நேரொன்றாசிரியத்தளை

     

     2  வெண்சீர் வெண்டளை          – நிரையொன்றாசிரியத்தளை

     

     3 நேரொன்றாசிரியத்தளை          – வெண்சீர் வெண்டளை

     

     4 நிரையொன்றாசிரியத்தளை          – இயற்சீர் வெண்டளை

     

     5 கலித்தளை          – கலித்தளை

     

     6 ஒன்றிய வஞ்சித்தளை         – ஒன்றா வஞ்சித்தளை

     

     7 ஒன்றா வஞ்சித்தளை         – ஒன்றிய வஞ்சித்தளை

     

                      அசையைப் பொறுத்தவரை தொன்னூல் விளக்கம் முந்தைய யாப்பருங்கல மரபைப் பின்பற்றி அசை, நேரசை, நிரையசை என இருவகைப்படும் என்றே கூறுகிறது. வெண்பாவின் இறுதியை பொறுத்தவரை முந்தைய யாப்பருங்கல  மரபு நாள், மலர், காசு, பிறப்பு என்பனவற்றுள் ஏதேனும் ஒன்றை கொண்டு முடியும் என்று காட்டுகின்றது. அதையே தொன்னூல் விளக்கமும் பின்பற்றுகிறது. இது குறித்த தொன்னூல் விளக்கப் பகுதியாவது:

                       வெள்ளைக்கு இயற்சீர் வெண்சீர் விரவி

                       ஏற்கும் அளவடி ஈற்றடி சிந்தடி

                       ஈற்றுச்சீர் அசைச்சீர் உக்குறள் மிகலுமாம்

     

    வெண்பாவின் இயல்பு உணர்த்துகின்றார். இயற்சீரும், வெண்சீரும் விரவி, அளவடியாய், ஈற்றடி சிந்தடியாய் ஈற்றுச்சீர் அசைச்சீர் ஆய் வரும். அசைச்சீர் ஆய் வரும். அசைச்சீர் உக்குறள் மிக்கும் வரும்.

     

                       ‘சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

                        கொல்லப் பயன்படும் கீழ்’

                                                              (130:1978)

     

                             வீரசோழியம் தமிழ்ச்சீரை முற்சீர், இடைச்சீர், கடைச்சீர் என்று பாகுபடுத்திக்காட்டும். இம்மரபைத் தொன்னூல் விளக்கத்தில் காணமுடியவில்லை. யாப்பருங்கல மரபு நாலசைச்சீர், ஓரசைச்சீர் ஆகிய இரண்டையும் பொதுச்சீராக அடையாளப்படுத்தும். ஆனால் தொன்னூல் விளக்கம் அசைச்சீரைப் பொதுச்சீரிலிருந்து தனியாக பிரித்துக்காட்டுகிறது. வீரசோழியத்தில் இத்தன்மை காணப்படவில்லை. பின்வரும் அட்டவணை இதனைத் தெளிவாகக் காட்டும்.

       யாப்பருங்கல மரபு   வீரசோழியம்  தொன்னூல் விளக்கம்

     

    இயற்சீர் – 4    முதற்சீர் (இயற்சீர்) அசைச்சீர்

     

     வெண்பா உரிச்சீர் – 4    இடைச்சீர் (உரிச்சீர்)   இயற்சீர் – 4

     

      வஞ்சி உரிச்சீர்    கடைச்சீர் ( கனிச்சீர்)   வெண்பா உரிச்சீர் -4,

    வஞ்சி உரிச்சீர் -4

      பொதுச்சீர்

    நாலசைச்சீர் -16

    ஓரசைச்சீர் – 2

       பொதுச்சீர்

    நாலசைச்சீர்

    இங்ஙனம் தொன்னூல் விளக்கம் அசைச்சீரைப் பொதுச்சீரிலிருந்து விலக்கிக்காட்டுவது கவனத்திற்குரியது. ஒரு அடியில்  எட்டுச்சீர் வரை வருவது சிறப்பு என தொன்னூல் விளக்கம் கூறுவது யாப்பருங்கல மரபைப் பின்பற்றியாகும். இலக்கண விளக்கத்தில் ஏழு சீர் வரை வருவது சிறப்பு என கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் வரும்  ‘நாற்சீர் கொண்ட தடியென படுமே’ என்ற சூத்திரம் இவண் எண்ணற்பாலது.

                            தொடைகளை விளக்குமிடத்து தொன்னூல் விளக்கம் யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது. ச.வே. சுப்பிரமணியன் அவர்கள், ‘தலையாகு, இடையாகு, கடையாகு எதுகைகள் இந்நூலுக்கே (தொன்னூல் விளக்கம்) உரியன (215)’ என்று கூறுவது பொருத்தமாக தோன்றவில்லை. இம்மூன்று எதுகைகளையும் தொன்னூல் விளக்கம் யாப்பருங்கலமரபிலிருந்தே பெற்றிருக்கிறது என்றே தோன்றுகிறது. யாப்பருங்கல விருத்தியில் இம்மூன்று எதுகைகளும் விளக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும் வீரசோழியம் ‘எதுகை எனினும் தொடை எனினும் ஒக்கும்’ என்று எதுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. வீரசோழிய யாப்பிலக்கணக்கோட்பாட்டில் எதுகை முக்கிய இடம் வகிக்கிறது. இத்தன்மையை தொன்னூல் விளக்கத்தில் காணமுடியவில்லை. எதுகைக்கு என இவர் இரு சூத்திரங்கள் ஒதுக்கியுள்ளார். இதனால் இவர் எதுகைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்று கூறமுடியாது. கீழ்க்காணும் ஒப்பீட்டு அட்டவணை தொன்னூல் விளக்கத்தின் தொடை பற்றிய நோக்கைத் தெளிவாக்கும்.

      யாப்பருங்கலம்   வீரசோழியம்  தொன்னூல் விளக்கம்

     

       மோனை, எதுகை, முரண்,இயைபு, அளபெடை   மோனை , எதுகை    மோனை, எதுகை,

    முரண், இயைபு, அளபெடை

    இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று  

    –

    இணை, பொழிப்பு,

    ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று.

    செந்தொடை, இரட்டைத்தொடை, அந்தாதித்தொடை செந்தொடை,

    இரட்டைத்தொடை, அந்தாதித்தொடை

    எதுகை

    வ.எண்      யாப்பருங்கலம்   வீரசோழியம்  தொன்னூல்

    விளக்கம்

       1     முதலெழுத்து குற்லாய் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்த எதுகை         ✓        ✓

     

       2 மூன்றாமெழுத்து ஒன்றின எதுகை           ✓        ✓
       3     இரண்டடி எதுகை            ✓        –

     

       4   சீர் முழுதும் ஒன்றிவந்த  எதுகை              ✓        –

     

       5     இன எதுகை             ✓         ✓

     

      6     உயிரெதுகை             ✓         –

     

      7 ஆசிடையிட்ட எதுகை

                ✓

             ✓

     

      8  தலையாகு எதுகை             –     தலையாகு

    எதுகை

      9  இடையாகு எதுகை             –    இடையாகு எதுகை

     

      10  கடையாகு எதுகை            –    கடையாகு எதுகை

     

    தொன்னூல் விளக்கத்தைப் பொறுத்தவரை வைப்புமுறையில், ஆசு எதுகைக்கு பின்னரே இன எதுகை இடம்பெற்றுள்ளது. ஒப்பீட்டு முறைக்காக மேல் அட்டவணையில் மாற்றிக் கூறப்பட்டது.

                            தமிழ்ப்பாவினங்களுடைய விளக்கமுறையைப் பொருத்தவரை வீரமாமுனிவரின் விளக்கமுறை மற்ற மரபுகளிலிருந்து வேறுபட்டு அமைகிறது. யாப்பருங்கலத்தில் ஒவ்வொரு பாவிற்கும் பிறகு அதன் இனங்கள் விளக்கப்படுகின்றன. வீரசோழியத்தில் பாவினங்கள் பாக்கள் விளக்கப்பட்ட பிறகு   மொத்தமாக, வரிசையாக விளக்கப்படுகின்றன. தொன்னூல் விளக்கத்தில் ஒவ்வொரு கூறின் கீழ் (துறை, தாழிசை, விருத்தம்) அனைத்து பாவினங்களும் விளக்கப்படுகின்றன. சான்றாகத் துறை எனும் கூறின் கீழ் வெண்டுறை, ஆசிரியத் துறை, கலித்துறை, வஞ்சித்துறை ஆகியவை விளக்கப்படுகின்றன. இது பிற மரபுகளில் காணப்படாதது ஆகும். கீழ்க்கண்ட அட்டவணைகள் இதனை உணர்த்தும்.

    யாப்பருங்கலம்:

          வெண்பா    ஆசிரியப்பா       கலிப்பா     வஞ்சிப்பா

     

          தாழிசை    தாழிசை       தாழிசை     தாழிசை

     

         துறை   துறை        துறை    துறை

     

         விருத்தம்    விருத்தம்       விருத்தம்     விருத்தம்

     

    யாப்பருங்கலக் காரிகை:

       வெண்பா   ஆசிரியப்பா      கலிப்பா   வஞ்சிப்பா

     

         விருத்தம்    தாழிசை       தாழிசை       தாழிசை

     

         தாழிசை   துறை        துறை        துறை

     

         துறை    விருத்தம்       விருத்தம்       விருத்தம்

     

    வீரசோழியம்:

     வெண்பா பாவினம்   ஆசிரியப்பாவினம்  கலிப்பாவினம்  வஞ்சிப்பாவினம்

     

       விருத்தம்   தாழிசை      தாழிசை   துறை

     

       தாழிசை   துறை     விருத்தம்    விருத்தம்

     

       துறை   விருத்தம்      துறை    தாழிசை

     

    தொன்னூல் விளக்கம்:

               துறை         தாழிசை  விருத்தம்

     

        வெண்பா      வெண்பா      வஞ்சி

     

        ஆசிரியம்      ஆசிரியம்      கலி

     

        கலிப்பா      கலிப்பா    வெள்ளை

     

       வஞ்சி      வஞ்சி    அகவல்

     

    மேலே கண்ட அட்டவணைகளில் யாப்பருங்கல மரபைப் போல் பாவின வைப்புமுறை வீரசோழியத்தில் அமையாமல் மாறுபட்டும்  தொன்னூல் விளக்கத்தில் பாவின வைப்புமுறை யாப்பருங்கலம், வீரசோழியம் ஆகிய இரண்டும் போல்  அமையாமல் மாறியும் அமைந்துள்ளமையை உற்றுநோக்குக.

                            பொதுநோக்கில் வீரசோழியத்தோடு தொன்னூல்விளக்கத்திற்கு வேறுபாடு இருப்பினும் சிறப்பு நோக்கில், அது வீரசோழியத்தை ஒட்டித் தன் கோட்பாட்டை உருவாக்கிக் கொள்கிறது. உண்மையில் வீரசோழியத்தைப் போல சில புதுமைகளைத் தொன்னூல் விளக்கம் படைத்துள்ளது என்றே கூறவேண்டும்.  வீரசோழியம் கலிவெண்பாவை வெண்பா வகையில் சேர்த்து புதுமை உண்டாக்கியிருக்கும். அதே போல் தொன்னூல் விளக்கமும், சவலை வெண்பா என்ற பாவை வெண்பா வகையில் சேர்த்துப் புதுமை செய்துள்ளது. சவலை வெண்பா வகையை மாறன் அலங்காரம் கூறினாலும், அதை வெண்பா வகையில் முதலில் சேர்த்தது தொன்னூல் விளக்கமேயாகும். சவலை வெண்பாவை வெண்பா வகையில் வைத்து விளக்கிய தொன்னூல் விளக்கம் கலிவெண்பாவை கலிப்பாவில் வைத்தே விளக்கியுள்ளது. வீரசோழியம் சவலை என்ற ஒரு பா வகையைத் தன் பத்தியக்கவி வகையில் வைத்துள்ளது. சவலையை அது முதற்சவலை, இடைச்சவலை, கடைச்சவலை என்று விளக்கும். வீரமாமுனிவர் சவலை வெண்பா கூறுவதற்கு வீரசோழியம் காரணமாக இருந்திருக்கலாம்.

                            தொன்னூல் விளக்கத்தைப் பொருத்தவரை முக்கியமாக அமைவது செய்யுளைப் பத்தியம், கத்தியம் என்று பகுத்திருக்கும் முறையாகும். இப்பகுப்பை வீரமாமுனிவருக்கு முன்னர் தமிழ் யாப்பிலக்கண மரபில் செய்திருப்பது வீரசோழியமே ஆகும். பகுப்பு நிலையில் ஒற்றுமையிருப்பினும் விளக்கமுறையில் வீரசோழியத்திற்கும் தொன்னூல் விளக்கத்திற்குமிடையில் வேறுபாடு உள்ளது. வீரசோழியம் பத்தியப் பிரிவில் கூறும் குறள், சிந்து, திரிபாதி, திலதம் முதலிய எதுவும் தொன்னூல் விளக்கத்தில் இல்லை. தொன்னூல் விளக்கம் தமிழ்ப்பாக்களையும் பாவினங்களையும் பத்தியமாகக் கூறுகிறது. அந்நூற்பா பின்வருமாறு.

     

                       ‘பத்தியம் என்ப பாவொடு பாவினம்

                        கத்தியம் அவைபோல் கலை அல்லனவே’

                                                                       (நூற்.250)

    வீரசோழியம் (மூலம்) கட்டுரைப்போலி, செய்யுள் போலி ஆகியவற்றைக் கத்தியமாகக் கூறும். ஆனால்  வீரசோழிய உரை ஒரு படி மேலே சென்று செய்யுள் போலி என்பதற்கு  தமிழ்ப்பா பாவினங்களைக் உதாரணமாகக் கொண்டு அவற்றைக் கத்தியம் என்று கூறும்.ஆனால் தமிழ்ப் பாக்களையும், பாவினங்களையும்    தொன்னூல் விளக்கம் ‘பத்தியம்’ என்று கூறுவதைக் கவனிக்க. தொன்னூல் விளக்கம் பத்தியம், கத்தியம் என்று வீரசோழிய மரபை அடியொற்றி கூறினாலும் அதிலிருந்து விலகி தனக்கென தனிக் கோட்பாட்டை வகுப்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளமுடியும். அடுத்துப் போலி பற்றி இவ்விரு நூல்கள் கூறும் கருத்துக்கள் முக்கியமானவையாகும். வீரசோழியம் பத்திய இலக்கணத்தில் மிக்கும் குறைந்தும் வருவன பத்தியப்போலி என்கிறது. இவற்றை அது கத்தியத்தில் அடக்கியது போல் தெரியவில்லை. வீரசோழியத்தைப்(மூலம்) பொருத்தவரை, கத்தியம் என்பது கட்டுரைப்போலி, செய்யுள் போலி ஆகிய இரண்டுமேயாகும் என்று தோன்றுகிறது. ஆனால் அது கட்டுரைப்போலி மற்றும் செய்யுட்போலி ஆகியவை எவை என்று கூறவில்லை.(வீரசோழிய உரைதான் கட்டுரைப்போலி என்றால் என்ன ? செய்யுள் போலி என்றால் என்ன? என்று விளக்குகிறது. தமிழ்ப்பாவினங்களை அது செய்யுட்போலி என்று கூறியது மேலே சுட்டிக்காட்டப்பட்டது).   தொன்னூல் விளக்கமோ தமிழ்ப்பாவினங்களின் இலக்கணத்தில் பிழைத்து வருவனவற்றைப் போலி என்கிறது. இது ஒரு வகையில் வீரசோழியர் காட்டும் பத்தியப் போலி போலவே தோன்றுகிறது. பத்தியம், கத்தியம், போலி இவையெல்லாம் வடமொழி இலக்கணங்கள் எனினும் வீரசோழியருக்கு இருந்த ஆழமான கோட்பாட்டுப் பின்னணி தொன்னூல் விளக்கத்திற்கு இருந்ததாகத் தெரியவில்லை. வீரசோழியரின் கோட்பாட்டைப் பொருத்தவரை பத்தியம் என்பது தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாக அமைகிறது. ஆனால் தொன்னூல் விளக்கம் வடமொழிப் பிரிவில் (பத்தியம்) தமிழ்ப்பாக்களைச் சேர்க்கிறது என்பது கவனத்திற்குரியது. இதன்மூலம் இரு வேறுபட்ட கற்றல்-கற்பித்தல் மரபை நம்மால் உணர முடியும். வீரசோழியத்தின் கற்பித்தல் மரபு ஏற்கெனவே விளக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில் தொன்னூல் விளக்கத்தின் கற்பித்தல் மரபை அதன் சமூகப் பின்னணி கொண்டு விளக்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கீழ்க்கண்ட அட்டவணைகள் வீரசோழியம், தொன்னூல் விளக்கம் ஆகியவை கூறும் பத்தியம் கத்தியம் ஆகியவற்றை ஒப்பிட்டுக் காட்டுகின்றன.

    பத்தியம்

       வ.எண்             வீரசோழியம்       தொன்னூல் விளக்கம்

     

        1          குறள்     வெண்பா               துறை

     

    அகவல்        X       தாழிசை   = 17

     

    கலிப்பா                 விருத்தம்

     

    வஞ்சி

       2   சிந்து  

     

       3  திரிபாதி  

     

       4   வெண்பா  

     

       5   திலகம்  

     

       6  விருத்தம்  

     

       7   சவலை  

     

    கத்தியம்

     வ.எண்      வீரசோழியம்   தொன்னூல் விளக்கம்

     

        1      கட்டுரைப்போலி     இலக்கணம் சிதையினும்

    இலக்கணப் பாவின்

    நடையோடு ஒப்ப வருவன

     

        2    செய்யுள் போலி  

     

    பத்தியப்போலி

    வ. எண்     வீரசோழியம்  தொன்னூல் விளக்கம்

     

      1   குறள் போலி                 –

     

      2    சிந்துப் போலி                –

     

      3    திரிபாதிப் போலி                –

     

      4     வெண்பாப் போலி                –

     

      5    திலதப் போலி                 –

     

      6   விருத்தப் போலி                 –

     

       7   சவலைப் போலி                 –

     

                            தொன்னூல் விளக்கம் தமிழ்ப்பாவினங்களை விளக்கி வரும் போது விருத்தம் பற்றிய பகுதியில் வடமொழி விருத்தத்தையும் சேர்த்து விளக்குகிறது. இது  குறிப்பிட்டுச்சொல்லத்தகுந்தது. வீரசோழியத்தில் வடமொழிவிருத்தம் தனியாக விளக்கப்படுகிறது. அது பத்தியக் கவிவகைகளில் ஒன்றாகக் கூறும் விருத்தம் என்பது தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாக அமைகிறது. இதைத் தொன்னூல் விளக்கத்தோடு ஒப்பிடமுடியாது. வீரமாமுனிவர் தமிழ் விருத்தத்துடன் வடமொழி விருத்தத்தைச் சேர்த்து விளக்குவதை யாப்பருங்கல விருத்தி, காக்கைபாடினி முதலானோர் வடமொழி சந்த தாண்டகங்களைத் தமிழ்ப் பாவினங்களுள் அடக்குவர் என்றும் தொல்காப்பியர் கொச்சகக் கலிப்பாவுள் அடக்குவர் என்றும் கூறுவதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். தொன்னூல் விளக்கம் தமிழ் விருத்தத்துடன் சேர்த்து வடமொழி விருத்தத்தை எண்ணிப்பார்ப்பதற்கு மேற்சொன்ன யாப்பருங்கல மரபு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். இதில் மற்றொரு செய்தியும்  கவனிக்கத்தக்கது. யாப்பருங்கல மரபைப் போல் தொன்னூல் விளக்கம் தமிழ் விருத்தத்திற்குள் வடமொழி விருத்தத்தை அடக்கவில்லை சேர்த்து எண்ணுகிறது. இது முக்கியமானதாகும். மேலும் தொன்னூல் விளக்க ஆசிரியர் சந்த விருத்தத்தின் வகையாக எடுத்துக்காட்டும் எழுத்து சந்த விருத்தம், அசைச்சந்த விருத்தம் ஆகியவை வீரசோழியம் எடுத்துக்காட்டும் வர்ண விருத்தம், மாத்திரா விருத்தம் ஆகியவற்றுடன் ஒத்துள்ளமை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். வீரசோழிய மரபில் உள்ள வர்ண விருத்தம், மாத்திரா விருத்தம் ஆகியவற்றை மொழிபெயர்த்து எழுத்து சந்த விருத்தம், அசைச் சந்த விருத்தம் எனத் தொன்னூல் விளக்கம் அமைத்துக் கொண்டது எனலாம். யாப்பருங்கல மரபில் மாத்திரா விருத்தம் தனியாக விளக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு விடயம், தொன்னூல் விளக்கம் சந்த விருத்தத்தை வண்ண விருத்தம் என்று கூறுவது மேற்கண்ட இரு மரபுகளிலும் இல்லாதது. மேற்கண்ட கருத்துக்கள் மூலம் தொன்னூல் விளக்கம், யாப்பருங்கல, வீரசோழிய மரபுகளை பின்பற்றினாலும் அப்படியே தம் நூலில் அமைத்துக் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும். இவ்விடத்தில்  முக்கிய கருத்தொன்றைச் சுட்டிக்காட்டுவது அவசியம். யாப்பருங்கல விருத்தி பாவுக்கு சாதி, நிலம், நிறம், ராசி ஆகியவை கூறும்போது தம் கருத்தை எங்கும் பதிவு செய்யாது. அங்ஙனம் பதிவு செய்யாமைக்கு அதனுடைய சமூகச் சூழல் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் வீரமாமுனிவர் பாவுக்குச் சாதி நிலம் முதலியன விரிக்கும் போது ‘ முதற்பாவாகிய நான்கிற்கும் சிலவிலக்கணங்களையுரைத்தார் முன்னோர். அவையொரு  பயனுமொரு காரணமுமின்றி முன்னர் நிறுத்திய மதத்திலூன்றினவாயினும் பிறன் மதங் கூறவே தந்திரயுத்தி யாகையிலவற்றைக் காட்டுதும் ‘ (214:1891) என்று தம் கருத்தைப் பதிவு செய்கிறார் (உரை இடைச்செருகல் நிறைந்ததாகையால் இக்கருத்து அவரால் சொல்லப்பட்டது என்று உறுதியாக கூறமுடியாதென்றே கூறலாம்). இங்ஙனம் பதிவு செய்வதற்கு அவருடைய ஐரோப்பிய பின்னணியே காரணமாகும். இதுவரை கண்ட கருத்துக்கள் பின்வரும் பேரா.கி. நாச்சிமுத்து அவர்களின் கூற்றை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன.

                            ‘கிளிப்பிள்ளை போல தொல்காப்பியருக்கு பின்வந்தோர் சொல்லிச் செல்ல வீரமாமுனிவர் மட்டும் முன்னையோர் கருத்தை மீட்டும் சொன்னாலும் தானாகச் சிந்தித்துத் தன் கருத்தைப் புதுமையாகப் புரட்சிகரமாக தன் இலக்கணநூலில் முன்வைக்கிறார். இதுமேலே சுட்டிய தமிழ் வழி வந்த சமூக நீதிக்கருத்துக்களை உட்கொண்டும் கிறித்துவக் கோட்பாடுகளின் பின்னணியில் ஐரோப்பியக் கிறித்துவக் கோட்பாட்டினைப் பின்பற்றி எழுந்த சமூகநீதிக் கருத்தை முன்னிறுத்தியும் அவர் செய்த வெளிப்பாடு எனலாம்’ (மணற்கேணி 9.9).

    நூலடைவு

    சுப்பிரமணியன் ச.வே. (பதிப்பாசிரியர், விளக்கவுரையாசிரியர்) தொன்னூல் விளக்கம், தமிழ்ப்பதிப்பகம், சென்னை மு.ப.1978.

    நாச்சிமுத்து. கி., வீரமாமுனிவர் (1680-1747) தொன்னூல் அகப்பொருளிலக்கணம் காட்டும் சமத்துவக் கல்விக் கொள்கை புதுமையும் புரட்சியும், மணற்கேணி இதழ் 9, டிசம்பர் 2011, பக்.33-41.

    மெக்கென்ஜி.காபன் அய்யர். ஜி. (பதிப்பாசிரியர்) தொன்னூல் விளக்கம், ADDISON & CO, Madras: 1891.

    வீரசோழியம் பெருந்தேவனார் உரை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், மு.ப.2008.

    Share
  • கலித்தொகைப் பாடல்களில் கவிதைவளம் – 1

    -முனைவர் சு. செல்வகுமாரன்                                  

    முன்னுரை

    எட்டுத்தொகை நூல்களில் சிறப்புக்குரிய ஒன்றாக விளங்குவது கலித்தொகை.  கலித்தொகையின் selvapicமொத்தப்பாடல்கள்-150 ஆகும். இவற்றுள் முல்லைக் கலிப்பாடல்கள்-17 (சோழன்நல்லுருத்திரன்), மருதக்கலிப்பாடல்கள்-35 (மருதன் இளநாகன்), குறிஞ்சிக்கலிப்பாடல்கள்- 29 (கபிலர்), பாலைக்கலிப் பாடல்கள் – 35 (சேரமான் பெருங்கடுங்கோ), நெய்தற்கலிப்பாடல்கள் – 33 (நல்லந்துவன்) என்பதோடு நெய்தற்கலிப் பாடிய நல்லந்துவனாரே ஒரு கடவுள்வாழ்த்துப் பாடலையும் பாடி இதனைத் தொகுப்பித்துள்ளதாக அறியமுடிகிறது. இக்கட்டுரையானது, கலித்தொகையில் முல்லைக்கலிப் பாடல்கள் முல்லைநில மக்களான ஆயர் வாழ்வினை கருத்தியல் மற்றும் காட்சிப்படுத்தல் ரீதியாக எடுத்துரைப்பதன் மூலம் எப்படி அப்பாடல்களை புலவர் கவிதைவளம் மிக்க பாடல்களாக உருவெடுக்கச் செய்துள்ளார் என்பதை ஆராய்கின்றது.

    காலம்

    ஒரு இலக்கியத்தை வாசிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் அது உருவாக்கப்பட்ட காலமும் சூழலும் மிகவும் அடிப்படையானது. அந்த வகையில் சங்க இலக்கிய உருவாக்கத்தின் காலம் குறித்த பார்வை நமக்குத் தேவையாய் உள்ளது. சங்க இலக்கியத்தின் காலம் குறித்து ஆய்வுசெய்த பேராசிரியர் ச. வையாபுரிபிள்ளை, கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய மூன்று நூலினையும்  காலத்தால் பிற்பட்டதாக இருக்கலாம் என்று கருதுகின்றார். பேராசிரியர் கமில் சுவலபில் அவர்களும் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய மூன்று நூலினையும்  பழமையான சங்கப் பிரதிகளிலிருந்து நீக்கிவைக்க வேண்டும் என்கிறார். கருத்துநிலை, பாடலின் சொல் மற்றும் தொடர் அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பிரதிகள் பிற பிரதிகளிலிருந்து வேறுபடுவதாக அவர் கருதுகின்றார் என்பதாக வீ.அரசு அவர்கள் தன் கட்டுரையில் எடுத்தாளுகின்றார். மேலும் இவை குறித்துத் தனது கருத்தினை முன்வைக்கும் வீ. அரசு சங்கப் பிரதிகளின் மேல்எல்லை கி.மு. 550 எனில் கீழ் எல்லை கி.பி 400 என்று கொள்ளலாம். ஆனால் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றின் மேல்எல்லை கி.பி 5ஆம் நூற்றாண்டு எனில் கீழ்எல்லை கி.பி 9ஆம் நூற்றாண்டு வரை அமையலாம் என்பதாக தனது யூகத்தை முன்வைக்கின்றார். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் வெறியாட்டு, பலி, நடுகல் உள்ளிட்ட சடங்குகளின் அம்சங்களைக் கொண்டே அவர் இந்த முடிவுக்கு வருகின்றார். மேலும் சங்க இலக்கியத்தை எட்டுதொகை, பத்துப்பாட்டு என்ற நிலையில் வகைமைப்படுத்தும் அமைப்பு முறையினையே கட்டுடைப்பு செய்கின்ற பேராசிரியர் வீ. அரசு அவர்கள் அதனை,

    “தொகுதி ஒன்று – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து

    தொகுதி இரண்டு – பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை

    தொகுதி மூன்று – கலித்தொகை.

    தொகுதி நான்கு – பரிபாடல், திருமுருகாற்றுப்படை” 1

    என்ற நிலைகளில் வரிசைப்படுத்துகின்றார். இதற்கு அவர் வைக்கும் சான்றுகளில் ஒன்றினை இங்குக் குறிப்பிடுவது அவரது கருத்தினை நாம் ஏற்புடையதாக்கிக்கொள்ள பெரிதும் உதவியாய் அமைந்திடும். வெறியாடல் சடங்கானது முதல் தொகுதியில் 36 இடங்களிலும், இரண்டாம் தொகுதியில் 3 இடங்களிலும், நான்காம் தொகுதியில் ஓர் இடத்திலும் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். மூன்றாம் தொகுதியில் அதாவது கலித்தொகையில் இடம்பெறவில்லை என்பதாகவும் பதிவுசெய்கின்றார். இத்தன்மை கலித்தொகையின் காலம் பிற்காலமே என்பதனை ஓரளவு உறுதிசெய்து கொள்ள ஏதுவாகின்றது.

    திணை

    சங்க இலக்கியம் குறித்த ஆய்வுகளில் திணையும் அதன் உள்ளீடான முதல், கரு, உரிப்பொருட்கள் குறித்த இலக்கண நூற்களின் பாகுபாடும், அவைகளின் கருத்தியல் நிலையும் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றினைக் கருத்தில் கொள்ளாது, அல்லது உரிய காரணங்களின்றி முற்றிலும் மறுத்துச் சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வினைச் செய்ய இயலாது. நாம் எடுத்துக் கொண்டுள்ள கலித்தொகைப் பிரதியானது அன்பின் ஐந்திணையான முல்லை என்ற பாகுபாட்டில் இடம் பெறுவதாகிறது. இதற்குரிய முதற்பொருள் அதாவது நிலம் காடும் காடு சார்ந்த இடமாகவும், பெரும்பொழுது கார்காலமாகவும், சிறுபொழுது மாலை நேரமாகவும் சுட்டப்படுகிறது. கருப்பொருட்களான நீர் – காட்டாறு, மரம் – கொன்றை, குருந்தா, புதல், பூ – முல்லை, பிட, தளா, பறவை – காட்டுக்கோழி, விலங்கு –  மான், முயல், உணவு – வரகு, முதிரை, தொழில் – நிரை மேய்த்தல், பறை – ஏறுகோட்பறை, யாழ் (பண்) – சாதாரி, தெய்வம் – மாயோன் (திருமால்), தோன்றல் – ஆயன், ஆய்ச்சி, ஊர் – பாடி, சேரி என்பதாகவும், உரிப்பொருளாக – இருத்தலும் இருத்தல் நிமித்தத்தினையும் முல்லை திணைக்குரியனவாகத் தொல்காப்பியம் சுட்டுகின்றது. பிற இலக்கணநூல்கள் இவற்றோடு சிலவற்றை இணைத்தும் விரித்தும் கூறுவதனையும் காணலாம்.

    “கைக்கிளை, மற்றும் பெருந்திணைகள் தொல்காப்பியம், இலக்கண விளக்கம், முத்துவீரீயம், தொன்னூல் விளக்கம், சுவாமிநாதம் போன்ற இலக்கண நூல்களில் அகமாகவும், புறப்பொருள் வெண்பாமாலையுள் புறமாகவும், வீரசோழியத்துள் அகப்புறமாகவும் இடம்பெறுகின்றன.

         நம்பியகப்பொருள் மற்றும் மாறன் அகப்பொருள் ஆகிய இரு நூல்களிலும் கைக்கிளையும், பெருந்திணையும் அகத்திணையியலில் அகமாகவும், ஒழிபியலில் அகப்புறமாகவும் சுட்டப்படுகின்றன. களவியற், காரிகை கைக்கிளையை அகப்புறம் எனக் கூறுகின்றது.”2 என்பார்.

    செம்மொழித் தகுதி – இலக்கிய வளம்

    ஒரு மொழி செம்மொழித் தகுதியாக்கம் பெற்றிட அம்மொழியின் தொன்மையோடு அதன் இலக்கிய வளமும் முக்கியப் பங்களிப்பு செய்கின்றது. அந்த வகையில் தமிழ் செம்மொழித் தகுதிபெற்றிட சங்க இலக்கியங்கள் முதன்மைக் காரணியாய் விளங்கின என்றால் மிகையல்ல. அவ் இலக்கியங்களுக்கு அத்தகைய சிறப்பு என்ன என ஆராய்கின்றபோது அறிஞர்கள் ஓர் இலக்கியம் செழுமை அல்லது முழுமை பெற்றிட அதற்குத் தேவையான சில பொதுமைக் கூறுகளை அவ்இலக்கியம் கொண்டிருக்க வேண்டும் என வரையறை செய்கின்றனர். இதனைப் பாவணர் அவர்கள் ‘தொன்மை, முதன்மை, என்மை, ஒன்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை’ எனப் பதினாறு நிலைகளில் வகைமைப்படுத்திப் பார்க்கின்றார். மணவை முஸ்தபாவின் கருத்தினைத் தனது கட்டுரையில் எடுத்தாளும் பேரா. மு. பழனியப்பன் அவர்கள் அவற்றை தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு – பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித்தாக்கமில்லாத் தன்மை, இலக்கிய வளம், உயர்சிந்தனை, கலை இலக்கியத்தன்மை, மொழிக் கோட்பாடு’ என வரையறை செய்கின்றார்.

    உலகில் உயர் தனிச் செம்மொழித் தகுதிபெற்ற அரபி, சீனம், பிரெஞ்சு, ஸ்பானிஸ், சமஸ்கிருதம், ஜெர்மன், லத்தீன், பாரசீகம், ஹீப்ரு, கிரேக்கம் ஆகிய பத்து மொழிகளின் இலக்கிய வளங்களோடு தமிழின் தொன்மை இலக்கியங்களை ஒப்பிட்டு அணுகிய இரா. நடராசன் அவர்கள் தமிழ் மொழியைப்பற்றிக் குறிப்பிடுகிறபோது “தமிழ் உயர்தனிச் செம்மொழி மட்டுமல்ல. அது தொன்மை மொழிகளின் முடிசூடா ராணி. செம்மொழிகளிலேயே அதுதனித்த பல சிறப்புகள் கொண்டது. மற்ற எல்லா செம்மொழிகளுக்கும் முன்னதாக இலக்கண நூல்களைக் கண்டது தமிழ்.

    விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம், கணிதம் என அனைத்துத் துறையும் செழித்த ஒரேமொழி” 3 என்று அதன் சிறப்பை எடுத்துரைக்கின்றார்.

    செம்மொழி பற்றிப்பேசும் டாக்டர். மு.வ தனது மொழிவரலாற்று நூலில் ஓரிடத்தில் 1952லேயே “இன்று உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக மட்டும் கருதப்படும் தமிழ்மொழி, உலகப் பெருமொழிகளுள் ஒன்றாகக் கருதப்படும் நிலையையும் பெற்றிருக்கும்” 4 என்று குறிப்பிட்டிருப்பது அவர்களின் மொழி குறித்த ஆழ்ந்த பார்வையினையும், தமிழ்மொழியின் தன்னிகரற்ற சிறப்பினையும் உணர்த்திநிற்கின்றன. இன்னும், தமிழைச் செம்மொழியாக்குவதில் ஆரம்பம் முதலே குரல்கொடுத்த வி.கே. சூரிய நாராயண சாஸ்திரி, பூரணலிங்கம் பிள்ளை ஆகியோரின் கருத்தும், பார்வையும் கூட இங்கு முதன்மைக்குரிய ஒன்றாக எண்ணிப்பார்க்க வேண்டியதாகின்றது.

    கட்டுரையின் மையமான இலக்கியவளம் என்பது இங்குக் கவிதைக்குரிய வளமாகவே இனங்காணப்படுகின்றது. கவிதையின்  உறுப்புகள் பற்றிக் குறிப்பிடும் திறனாய்வாளர்கள் கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் என்று நான்கினை மிகவும் அவசியமாக கருதுகின்றனர். அப்படியாயின் இவைகள் இல்லாது ஒரு கவிதை முழுமை பெற்றதாகவே வளம் மிக்கதாகவே அமைய இயலாது என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. எனவே இலக்கிய வளம் என்பதனை இலக்கியத்தின் உட்கூறுகளில் ஒன்றாக மட்டுமே நம்மால் பொருத்திப்பார்க்க முடியாது. கவிதை உருவாக்கத்தின் மையமாய்த் திகழும் புனைவு மொழியும், அந்த மொழியை உருவாக்குகின்ற, கட்டமைக்கின்ற, மொழியின் கூறுகளை அடுக்கிச் சொல்லுகின்ற, ஒரு படைப்பை முழுமைப்படுத்துகின்ற அல்லது படைப்பை நீட்டிச் செல்லுகின்ற ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு படைப்பாளியின் சிந்தனைவளம், கற்பனைவளம், கருத்தியல் வளம், அழகியல் வளம் என்பன நிறைந்து கிடக்கின்றன. அவை இன்றிப் படைப்பு செழுமையான படைப்பாக, வளம் மிக்க படைப்பாக வெளிப்பட முடியாது என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

    கவிதையின் வளமையை நாம் தனிமைப்படுத்திப்பார்ப்பது கடினம். சுருங்கச் சொன்னால் கவிதை மொழியின் இயங்கியலாய் அதன் உள்ளீடாய் செயல்படுகின்ற கற்பனை, கருத்தியல், சிந்தனை, அழகியல் கூறுகள் படைப்பாளியின் அனுபவத் திரட்சியிலிருந்து வெளிப்படுகின்ற போதே ஒரு படைப்பானது உருவாக்கம் பெறுகின்றது. இத்தருணத்திலேயே படைப்பாளியிடமிருந்து உவமைகளும், உருவகங்களும், தொன்மங்களும், குறியீடுகளும், படிமக் காட்சிப்படுத்தல்களும், கதைசொல்லல் நிகழ்வுகளும் அவனால் உருவாக்கப்படுகின்ற படைப்பிற்குள் ஊடுருவிச் செல்கின்றன. ஒரு வகையில் சொல்வதானால் இந்த ஊடுருவலையும் படைப்பையும், படைப்பாளியையும் நம்மால் பிரித்தறிவது மிகவும் இயலாதது என்பதே சரியாக இருக்கும். அதுபோலவே ஒரு கவிதையை அதன் கட்டமைப்பு, கருத்தியல், அழகியல், நோக்கம், மொழி, ஒலி அமைப்பு ஆகிய ஏதேனும் ஓர் அளவுகோலை வைத்து வளம்மிக்க படைப்பு என்றோ, வளம்குன்றிய படைப்பு என்றோ வரையறுத்துவிடவும் முடியாது.

    படைப்பு குறித்து விவாதிக்கும் ஜானதன் கல்லர் “இலக்கியத்தின் வள ஆதாரங்கள் மற்றும் உற்பத்தி நுணுக்கங்களைப் பற்றிய விவரணை என்ற விதத்தில் இலக்கியவியல் என்பது சொல்லணி வகைகளின் (Rhetorical figures) விவரணையாகக் குறுக்கப்படத்தக்கதல்ல. ஆனால் இலக்கியமொழி சார்ந்த எல்லா வகையான செயல்பாடுகளுக்குமான வளஆதாரங்களையும் ஆய்வு செய்யும் விரிவுபடுத்தப்பட்ட அணியிலக்கணத்தின் ஒருபகுதியில் பார்க்கப்பட முடியும்”5 என்னும் கருத்து ஏற்புடையதாகின்றது. மேலும் “இலக்கியம் வளர்ந்தெழுவதற்கு நிலைக்களனாக உதவும் பொருட்கள், மக்களும் இயற்கையுமே. இவ்விரு பகுதிகளையும் பிரித்து, இயற்கையை விடுத்து மக்களைப் பற்றியும் அல்லது மக்களை விடுத்து இயற்கையைப் பற்றியும் புலவர் பாடுவாரேல், அவ்விலக்கியம் குறைவுள்ள இலக்கியமாகவே விளங்கும். (There are two great subjects of poetry, the natural world and human nature. It is a terrible business for poetry when it is wholly employed on men or wholly employed on nature – Stop – ford Brooke) தமிழ்ப் புலவரோ, தம் புலமைத் திறனைக் காட்டுவதற்கு, முதற் பொருளாக மக்களையும், துணைப்பொருளாக இயற்கையையும் எடுத்துக் கொண்டனர். இயற்கையை தமிழ்ப்புலவர் கையாண்ட முறையில், வேறு எம்மொழிப் புலவரும் கையாண்டிலர்.” 6 என்னும் தனிநாயக அடிகளாரின் கருத்தும் இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும்.

    கலித்தொகையின் சிறப்பு – கவிதை வளம்

    கலித்தொகையின் அமைப்புமுறை பற்றிக் குறிப்பிடும் பழம் பாடல் ஒன்று ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ எனப் பதிவுசெய்திருப்பதன் மூலம் கலித்தொகையினைப் பிற நூல்களிலிருந்து தனித்த சிறப்புடையதாக அடையாளப்படுத்திக் காட்டுகின்றது. அதுமட்டுமல்லாது எட்டுத்தொகை நூல்களில் யாப்பு அமைப்பினால் பெயர்பெற்ற இரண்டு நூல்களில் ஒன்றாகவும் கலித்தொகை விளங்குகின்றது. தொல்காப்பியர் அகப்பொருளில் அமைந்த பாடல்களைப் பாடுவதற்குரிய இரண்டு யாப்புகளில் ஒன்றாக கலியாப்பினை அடையாளம் காட்டுகின்றார். “கலியே பரிபாட்டு ஆயிருபாவினும் உரியதாகும் என்மனார் புலவர்” 7 கலித்தொகை ஏறுதழுவுதல் என்ற புறம்சார்ந்த வீரத்தை மையப்படுத்திப் பேசியிருந்தாலும் அதற்கு அடிப்படையாக அகம் விளங்குவதும் கலித்தொகையின் சிறப்புகளில் ஒன்றாக இனங்காணத்தக்கது. கலியாப்பு பலவாறாய் விளங்குகின்றது. அவற்றுள் ஒத்தாழிசை எனும் யாப்பு வகையில் பாடப்பெற்றவை கலித்தொகைப் பாடல்கள்.

    சங்க அகப்பாடல்களில் கைக்கிளையில் அமைந்த பாடல்கள் கலித்தொகையில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.(கலி- 56,57,58,100) அவ்வாறே பெருந்திணைப்பாடல்களும் கலித்தொகையில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. (கலி-138-147) தொல்காப்பிய அகத்திணையியல் அகத்திணைகள் ஏழு எனச்சுட்டும்; “கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக்கிளந்த எழுதிணை என்ப” 8 இவ்விலக்கணத்துக்குரிய இலக்கியம் கலித்தொகை ஒன்றே ஆகும். மேலும் பிற முல்லைப் பாடல்களில் இடம்பெற்றிராத ஏறு தழுவுதலைக் காட்சிப்படுத்தலும் கலித்தொகையின் முல்லைக்கலிக்குரிய சிறப்பாகக் கொள்ளத்தக்கன. முல்லைக்கலிப் பாடல்கள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோலப் பிற இலக்கியங்களுக்கு இல்லாத பல தனித்த சிறப்புகளை உடையன. இதனைப் பாடுபொருள் – கருத்தியல் அடிப்படையில் வகைமைப்படுத்திடும் பேராசிரியர் ராஜ்கௌதமன் “ஆயர்கள் ஏறுதழுவுதலும், குரவை அயர்தலும் (பா – 101,102,103,104,105,106), ஏறு தழுவியவழி களவு, களவு வெளிப்பாடு மற்றும் அறத்தொடு நிற்றலும் (107,111,114,115), கைக்கிளை-பெருந்திணை சார்ந்த அகப்புறத்தலைவன் தலைவியரான ஆயமகனும் ஆயத்தியும் பற்றிய இயல்பில்லா காமியமும் (108,110,112,113,116,117) என்பதாக மூன்று நிலைகளில் பிரித்து நோக்குகின்றார்” 9

    முல்லைக்கலியைப் பொறுத்தமட்டில் அதில் இடம்பெறும் பாத்திரங்கள் (Character) ஆயர்குடியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களில் எருமைகளை வளர்ப்பவர்கள் கோட்டினத்தார், பசுவை வளர்ப்பவர்கள் கோவினத்தார், ஆடுகளை வளர்ப்பவர்கள் ஆட்டினத்தார் என்றும் சுட்டப்படுவதை அறியமுடிகிறது. முல்லைக்கலிப் பாடல் 101இல் ஆயர்கள் ஏறுதழுவுவதைத் தலைவிக்கு வெவ்வேறு நிலைகளில்  தோழி காட்சிப்படுத்துகின்றாள். இப் பாடலின் முற்பகுதி முல்லைநில மக்களின் நிலம்குறித்த ஒரு புறச்சூழலை நம் கண்முன் கொண்டு நிறுத்துகின்றது.

       “தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற்கு அரும்பு ஈன்று,
    முளி முதல் பொதுளிய, முட்புறப் பிடவமும்
    குளி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று…” 10

    கார்காலத்தின் தொடக்கத்தில் பெய்த முதல்மழையில் நிலம் குளிர்ச்சியடைந்து செடிகளிடத்தே நிரம்ப அரும்புகள் தோன்றியுள்ளன. பிடவமலர்ச் செடியானது காற்றில் அசைந்தாடுகின்றது. அதனை கள்ளுண்டான் நிலைபோல அசைந்தாடுவதாகவும், அதன் மொட்டானது வளைந்த துடுப்பு போன்றது என்றும் புலவர் காட்சிப்படுத்துகின்றார். இந்த படிமச் சித்தரிப்பு சார்ந்த காட்சிப்படுத்தல் கவிதையை இங்கு வளமையுடையதாக்குகின்றது. இவற்றின் அழகியல்தனம் வாசகனைக் குறிப்பிட்ட படைப்பை விரும்பி வாசிக்க ஆர்வப்படுத்துகின்றது. அத்தோடு வாசகனின் மனத்தில் தான் கண்டுணர்ந்த அனுபவப் பொருள்களின் மூலம் எளிதில் பதிவுபெற்றுவிடவும் இந்த அணிவகைச் செயல்பாடுகள் காரணியாக அமைகின்றன. இதனைக் கவிதை வளமையின் ஒரு நிலையாக நாம் கண்டுணர முடிகின்றது.

    தொடர்ந்து முல்லைக்கலிப்பாடலானது ஏறுதழுவுதலை எடுத்துரைக்கின்ற போது ஏறுதழுவுதலின் கடுமைசார்ந்த நிகழ்வுகள், புராணக்கூறுகளின் மூலம் காட்சிப்படுத்தப்படுவதும் முதன்மையான பதிவுகளாக விளங்குகின்றன.

         “அம்சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
          நெஞ்சம் பிளந்து இட்டு நேரா நடுவண், தன்
          வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்.” 11
        “படர் அணி அந்தி, பசுங் கட் கடவுள்

          இடரிய ஏற்று, எருமை நெஞ்சு இடத்து இட்டு
          குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்” 12
        “ஆர்இருள் என்னான் அருங் கங்குல் வந்து, தன்

          தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்
          தோளின் திருகுவான் போன்ம்;” 13         

    அதாவது, முல்லை நிலத்து மலர்களைத் தொடுத்து கண்ணியாகச் சூடியிருந்த ஆயர் இளைஞர்கள், தாம் விரும்பிய பெண்களை அடைதல் பொருட்டும், தமது வீரத்தை வெளிப்படுத்துகின்ற விதத்திலும் தொழுவினுள் நுழைந்து இறைவனின் குந்தாலிப் படைபோன்று கூர்மையுடையதாய் சீவப்பட்ட கொம்புகளை உடைய ஏறுகளை அஞ்சாது தழுவுகின்றனர். அவ்வாறு ஏறுதழுவுகின்ற இளைஞர்களை எருதுகள் தம் கூரிய கொம்புகளால் குத்தி அவர்களின் குடலைச் சரியச் செய்கின்றன. அத்தோற்றமானது, அழகிய திரௌபதியின் கூந்தலிலே கை நீட்டிய துச்சாதனின் நெஞ்சைப் பிளந்து, பகைவர் நடுவே தன் வஞ்சினத்தை நிறைவேற்றிய வீமனைப் போன்றிருந்தது என்றும், ஊழி முடிவிலே, பசிய நிறத்தைத்தன் பாகத்தே உடையக் கடவுள், உயிரினங்களை அழிக்கும் எருமைக்கடா மீது ஏறிவரும் கூற்றுவனுடைய நெஞ்சைப்பிளந்து, குடரைக் காளிக்கு இட்டு அதன் வயிற்றை நிரப்புவது போன்றிருந்தது என்றும், கரிய இருள் என்றும் கருதானாய், நடுஇரவிலே வந்து, தன் தந்தையைக் கொன்றவனைத் தன் ஆற்றலின் வலிமையினால் தலையைத் திருகிய அசுவத்தாமனைப் போன்றிருந்தது என்றும் தோழியின் வாயிலாக புலவர் தலைவிக்கு காட்சிப்படுத்துகின்றார்.

         இங்கு பலம் பொருந்திய எருதுகளையும், பசுக்களையும் அடக்கி ஆளத்தெரிந்த வலிதிறன் மிக்க இளைஞன் ஒருவனையேத் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கொண்டவளாய் விளங்கிடும் தலைவியின் எண்ணம் பிரதிபலிக்கப் படுகின்றது. மட்டுமல்லாது கடுமை நிறைந்த அந்த ஏறுதழுவல் காட்சியினைக் கண்ட தலைவியானவள் தான் விரும்பிய தலைவன், தன்னுடன் களவு மேற்கொண்டிருந்த தலைவன் ஒரு வேளை தனக்கு கிடைக்காமல் போய் விடுவானோ என்று கலக்கமுறுகின்றாள். அப்போது அங்கே நிகழக்கூடிய நல்ல பல நிமித்தங்களை எடுத்துக் கூறி தோழி தலைவியினை ஆற்றுப்படுத்துகின்ற விதம் முல்லைநிலத்துக்கே உரிய ஆற்றி இருத்தல் என்னும் கற்பு ஒழுக்கத்தை நினைவுபடுத்தும் விதமாய் உள்ளன.

         இங்கு மேற்காணும் பகுதிகளில் செம்மொழியின் கூறுகளாகக் கருதப்படும் தொன்மை, பண்பாட்டுக்கலை அறிவு – பட்டறிவின் வெளிப்பாடு, தனித்தன்மை, பொதுமைப் பண்பு போன்ற பல கூறுகளும் இடம்பெற்றிருப்பதை நாம் கண்டுணர முடிகிறது. இவை கவிதையின் தனித்த கூறுகளாக விளங்குபவை என்றாலும், அவை கவிதையைப் பொதுமை நிலையில் வளமைப்படுத்துகின்ற பன்முகப்பட்ட அடிப்படைக் கூறுகளாக விளங்குவன என்பதும் கவனத்திற்குரியது. இவை படைப்பாளியின் காலம், இடம், அனுபவம் என்பதோடு படைப்பு குறித்த புரிதலைப் பொறுத்து சற்றே மாறுபடுவதை நாம் காணலாம்.

    [தொடரும்]

     

     

     

     

     

     

    Share
  • அகநானூற்றில் முருக வழிபாட்டுப் பதிவுகள்

    -பீ.பெரியசாமி

    முன்னுரை

    சங்ககாலம் முதல் இன்றுவரை முருக வழிபாடு என்பது தமிழர் பண்பாட்டில் கலந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. இதனை, “மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும், முல்லை, குறிஞ்சி மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே“ (தொல்.அக.5) எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். இதன்வழி முருகனை மலையும் மலையைச் சார்ந்த நிலமுமாகிய குறிஞ்சி நிலக்கடவுளாக அக்கால மக்கள் வழிபட்டனர் என்பது காணக்கிடக்கிறது. இக்குறிஞ்சி நிலக்கடவுளின் வழிபாட்டுப் பதிவுகள் எங்கெல்லாம் எவ்வாறெல்லாம் அகநானூற்றில் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரை ஆராயவுள்ளது.

    வெறியாட்டு நடத்துதல்

    தொல்காப்பியம் களவியலில் வெறியாட்டு குறித்து கூறியுள்ளது. இதற்கென ஒரு துறையும் ஒதுக்கியுள்ளார் தொல்காப்பியர். முருகனுக்கு உரித்தான காந்தள் பூவினைச் சூடி ஆடுவது அது.

    ”வெறிஅறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
    வெறியாட்டு அயர்ந்த காந்தளும்”
    (தொல். கள)

    அகநானூற்றில்,

    ”சூர்உறை வெற்பன் மார்புறத் தணிதல்
    அறிதனள் அல்லல் அன்னை வார்கொல்
    …………………………………….. ………………. ……………………
    முருகன் ஆர் அணங்கு என்றலின்” 
    (அகம்.98)

    எனும் பாடலில், எனக்கு நேர்ந்த துன்பமானது தலைவனின் மார்பை அடைதல் அல்லாது விலகுவதில்லை. இதையறியாமல் அன்னையானவள் வெறியாட்டு நடத்த முனைகிறாள். வார்கோலினை வளைக்குமாறு கூறி என் வளை நெகிழ்தலை அன்னையானவள் அறிந்துகொண்டாள். இது என்னவென்று அறியாது குறிசொல்லும் முதுபெண்டிரிடம் கேட்டாள். அவர்கள் கையில் இருக்கும் பிரம்பால் என்னைத் தட்டிப் பார்த்து, ”முருகன் பிடித்து ஆட்டுகிறான்” என்று கூறினர். இதனை மனத்தில் கொண்டே தாய் வெறியாட்டுக்கு ஆயத்தம் செய்வதாக தலைவி கூறுகிறாள். மேலும்,

    ”அறியா வேலன் தரீஇ, அன்னை
    வெறிஅயர் வியன்களம் பொலிய ஏத்தி
    மறிஉயிர் வழங்கா அளவை”(அகம்.242) எனும் பாடலில், “பல பிரப்பரிசிகளைப் பலியாக வைத்தும், உண்மையறியாத வேலனைக் கொண்டுவந்து வெறியயரும் பெரிய களத்தினைப் பொலியுறுமாறு போற்றித் துதித்தும், ஆட்டுக்குட்டியின் உயிரைப் பலியிட்டும் வெறியாட்டு செய்வதற்கும் முனைந்தாள் அன்னை“ என்பதில் வெறியாட்டு நிகழும்போது முருகனுக்குப் பலியிடுதல் என்பது அக்காலப் பண்பாட்டு மரபில் இருந்துள்ளமையை அறிய முடிகிறது. இது காலப்போக்கில் மாறிவிட்டது. மேலும், வெறியாட்டுக் களத்தினைக் குறித்து, ”வேலன் வெறிஅயர் வியன்களம்“ (அகம்.182) எனும் பாடல்வரி கூறுகிறது. இதன்வழி வெறியாட்டு நிகழ்த்துவதற்கெனத் தனியிடம் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது பெறப்பட்டது.

    பலியிடும் மரபு

    சங்ககாலம் முதற்கொண்டே நம் தமிழினத்தில் பலியிடுதல் எனும் சடங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அகநானூற்றுப் பாடல்களிலும் காணமுடிகிறது. அவற்றுள்,

    ”படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
    நெடுவேள் பேணத் தணிகுவள் இவள்என
    ……………………….. …………….. …………………….
    முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்”
    (அகம்.22)

    எனும் பாடலில், வணங்காதவரைத் தேய்த்துப் பழித்த பலவாகிய புகழைக் கொண்டவன்; பெரிய கையினை உடைய நெடுவேளாகிய முருகன். அவனை வணங்கினால் இவள் துயரம் தீங்கும் என, அந்தவேளை அவர்கள் நினைத்தனர். அறிவுரை கூறுகின்ற முதுபெண்டிரும், அதுவே உண்மை என்று கூறினர். ஆகவே, வெறியாட்டுக்களம் நல்ல முறையில் அமைக்கப்பெற்று, வேலினை நிறுத்தி அதற்கு மாலையினையும் சூட்டினர். வலிமை நிறைந்த கோவிலிலே ஆரவாரம் உண்டாகுமாறு முருகனின் புகழினையும் பாடினர், பலியிட்டனர், செந்தினையினைக் குருதியுடன் கலந்து தூவினர். இவ்வாறு முருகனை அச்சம் பொருந்திய நடு இரவினில் அவ்விடத்திற்கு வரவழைத்தனர் என்பதன் வழி இரவினிலே பலியிடுதல் நடைபெற்றது என்பதும் குருதி கலந்த உணவு தூவப்பட்டது என்பதும் அறியப்படுகிறது.

    முருகனின் சிறப்பு

    முருகனின் சிறப்பினை அகநானூறு,

    ”உருகெழு சிறப்பின் முருகுமனைத் தழீஇக்
    கடம்பும் கணனும் பாடி நுடங்குடி”
    (அகம்.138)

    எனும் பாடலில், உட்குப் பொருந்திய சிறப்பினையுடைய முருகனைக் கையாற்றொழுது, மலையின்கண் வருவித்து, அவன் கடம்பையும் களிற்றையும் புகழ்ந்துப் பாடிப் பனந்தோடும் காந்தள் மாலையும் கைக்கொண்டு, இரவு முழுவதும் வறிதே அசைந்து ஆடினராதல் நன்றாகுமோ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும்,

    ”கடியுடை வியல்நகர்க் காவல் கண்ணி
    முருகு என வேலன் தரூஉம்
    பவருமாகப் பயந்தன்றால் நமக்கே
    ”    (அகம்.232)

    எனும் பாடலில், நாள்தோறும் விரவிய பூப்பலியோடு கலந்து, காவல் பொருந்திய பரந்த மனையினைக் காத்தல் கருதி, அன்னையானவள் நம் வேறுபாடு முருகனால் ஏற்பட்டதென்று எண்ணி, வேலனை அழைத்துவரும் காலமாகவே நமக்குவந்து விளைந்தது என்பதில் முருகன் மகளிரிடையே தோன்றும் வேறுபாட்டைக் களையும் தெய்வமாகக் காட்சிபட்டுள்ளார். மேலும்,

    ”மெய்ம்மலி உவகையன் அந்நிலைக் கண்டு
    முருகு என உணர்ந்து முகமன் கூறி
    உருவச் செந்தினை நீரோடு தூவிதூஉம்”   (அகம்.272)

    எனும் பாடல், நம் வீட்டினிடத்து, உள்ளத்திலே மிகுந்த மகிழ்ச்சியுடையவனாய் அவன்வந்து சேர்ந்தான். அந்தச் சூழலிலே, நம் தாயும் கண்டாள் எனின், முருகனே என நினைத்து முகமகிழ்ந்து வரவேற்பளிப்பாள். நல்ல நிறம் வாய்ந்த செந்தினையை நீரோடு தூவி, வந்தவனை முருகனெனவே நினைத்து வழிபடவும் தொடங்கிவிடுவாள் என்பதில் முருகனை எவ்வாறு அக்கால மக்கள் தன் மனத்தில் வைத்து வழிபட்டனர் என்பதை அறிய முடிகிறது.

    சூரபதுமனை அழித்தல்

    சூரபதுமன் எனும் அரக்கனை முருகப்பெருமான் அழித்ததனையும், அதனோடு தொடர்புடைய செய்திகளையும் அகநானூறு கூறுகிறது. இதனை,

    ”சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
    சினம்மிகு வேந்தன் தண்பரங்குன்றத்து”  
    (அகம்.59)

    எனும் பாடலில், சூரபத்மனை அவன் சுற்றத்தோடு தொலைத்த ஒளிச்சுடரும் முனையினையுடைய நெடுவேலினையுடையவன், சினம் மிகுந்த முருகன். அச்சினம் தணிந்து, அவன் அருளுடையவனாகக் கோயில் கொண்டிருக்கும் இடம் திருப்பரங்குன்றம் என்பதிலிருந்தும்,

    ”புரிகணத் தன்ன நாய்தொடர் விட்டு
    முருகன் அன்ன சீற்றத்துக் கருந்திறல்”   
    (அகம்.68)

    எனும் பாடலில், ஒலியையொத்த கடுஞ்சீற்றத்துடன் பகைவரை எதிர்க்கக் கூடியவனாகிய முருகனின் வலிமையை இவ்வடிகள் எடுத்துக் கூறுகின்றன.

    பெயர்

    முருகனை – செவ்வேள், முருகன், முருகு, வேலன் எனும் பெயர்களில் அகநானூற்றுப் பாடல்களில் சுட்டியுள்ளனர். இதனை, ”காடுகெழு நெடுவேள்” (அகம்.5) என்பதில், மலையும் மலையினைச் சார்ந்த இடத்துக்குமுரிய கடவுள் நெடுவேள் எனும் முருகன் என்பதை உணர்த்துகிறது.

    முடிவுரை

    முருகன் – மலையும் மலையினைச் சார்ந்த இடத்துக்குமுரிய கடவுள் என்பதும், முருகனை வழிபடும்போது பலியிடுதல் நடைமுறையில் இருந்தது என்பதும், அவ்வாறு செய்யப்பட்ட வழிபாட்டுக்கு வெறியாட்டு என்று பெயர் என்பதும், முருகன் சூரனை அழித்தான் என்பதும். அவ்வாறு அழித்தபின் சினம் தணிந்தபின் திருப்பரங்குன்றில் கோயில் கொண்டான் என்பதும் இக்கட்டுரை வாயிலாக அறியப்படுவனவாகும்.

    ******

    கட்டுரையாளர்
    தமிழ்த்துறைத்தலைவர்
    D.L.R.  கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம், ஆற்காடு.

     

     

    Share
  • மக்கள் கவிஞர் சுகிர்தராணியின் கவிதைச் சீற்றம்

    -சிவ. விஜயபாரதி

    முன்னுரை

    இலக்கியம் காலத்தின் கண்ணாடி. சமுதாயத்தின் பிரதிபலிப்பு. இலக்கிய மரபில் பன்னெடுங்காலந் vijayaதொட்டே பாடுபொருளும் மாறிவந்துள்ளன. எல்லோருக்கும் பிடித்த வடிவமாக, இலக்கியத்தின் பிள்ளையாக விளங்குவது கவிதை. எதை வேண்டுமானாலும் பாடுபொருளாகக் கொண்டு பாடுவதுதான் கவிதைக்குக் கிடைத்த சுதந்தரம். மக்கள் கவிஞர் சுகிர்தராணி தம் கவிதைகளில் சமுதாய விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகள் குறித்தும் திடகாத்திரமாக எழுதிருக்கிறார்.

    கவிதைக்குள் கண்ணிவெடி

    இலக்கியத்தின் அமைப்பைக் கூர்ந்து நோக்கின் தற்காலச் சூழலில் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று இரு கூறுகளை எடுத்து இயம்புகின்றனர் தமிழறிஞர்கள். கவிதைகள் கண்ணிவெடி போன்றன என்பார் எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள். புத்தகங்கள் புரட்சி செய்ய வேண்டும். கவிதைகள் கிளர்ச்சி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட புத்தகம்தான் நின்று வாழும்.

     மக்கள் கவிஞரின்  கவிதைகள் அரசியல் நிலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காதல், நாடகக் காதல், மதமெனும் இழிவு, சாதியச் சாக்கடையைத் தோலுரித்தல், அடிப்படை விளிம்புநிலை மக்களின் வலிகள், கோட்பாட்டுத் தத்துவங்கள், பெண்ணியச் சிந்தனைகள், காதலின் மென்மை, காமத்தின் வன்மை, பகைமுடிக்கும் சீற்றம், போராளியின் முழக்கம் எனப் பரந்துபட்ட விடுதலை ஒளிக்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளன.

    சமகாலப் பதிவுகள்

    கவிதைகள் சமகாலத்தின் பதிவுகளாக இருக்க வேண்டும். அதுவே உயிர்ப்புள்ளதாக இருக்கும். மதங்களின் கூடாரத்தில் வருணாசிரமத் தத்துவத்தில் கட்டமைக்கப்பட்டதுதான் சாதி. அது இன்றும் நின்றுநிலைத்து மனித உயிர்களைப் பலி கேட்கிறது. நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தபடி இருக்கும் இழிவை “நூற்றாண்டுகளின் ஒற்றைக் கேள்வி” என்னும் தலைப்பிலமைந்த கவிதை

    “தலை சாய்த்து நீரருந்தும்
    சிறு பட்சியைப்போல
    ______ _______ _______
    சேரி ஊராகாதா அம்மா?  {இப்படிக்கு ஏவாள்  பக்கம் 20 } என்ற கேள்வியின் வலி சமுதாயத்தின் அவமானம்.

    “சாதி என்பது இன்னும் கிராமங்களில் தான் கட்டமைக்கப்படுகிறது” என்றார் பெரியார். இரட்டை கிராமம் {ஊர் – சேரி}, இரட்டைச் சுடுகாடு, இரட்டைக் குவளை என்று விளிம்புநிலை மக்களைப் புறக்கணிக்கிற ஒதுக்குகிற சமூக அவலத்தை “வீடு திரும்புதல்”என்னும் கவிதை மூலம் பதிவு செய்கிறார்.

    “பித்தேறி திரிந்து கொண்டிருக்கிறோம்
    _____ ______  ______   ______  _______
    மேடையைவிட்டு
    நாமிருவரும் கீழிறங்குகிறோம்
    வரிசைதப்பி மக்கள் கலைகிறார்கள்
    நீ ஊருக்குள் போகிறாய்
    நான் சேரிக்குச் செல்கிறேன்.” {இப்படிக்கு ஏவாள்  பக்கம்  65}

    என்று முடிக்கும்போது வலிபொறுக்காது நெஞ்சின் குமுறலோடு வேற்றுமைக்கான சுவர் எதுவென அடையாளப்படுத்துவதன் மூலம்  மானுடத்தைத் தலைகவிழச் செய்கிறார்.

    வாழ்வு தரும் வலிகள்

    சூறாவளிக் காற்றில் பறக்கும் தூசு திசைகளற்றுத் துடித்து விழுவதெனப் புரட்டிப்போட்டு விடுகிற இவ்வாழ்க்கை, பொருளாதார நெருக்கடிகள் தரும் வலிகளை, வயிற்றுப் பிழைப்புக்காக அசையும் அசைவுகளை, வாழும் வாழ்க்கையைப் “பல் பிடுங்கப்பட்ட வாழ்க்கை” என்ற கவிதையில் சமநிலைத் தவறிஆடும் வாழ்க்கையின் தீராத துக்கத்தை,

    “ஒவ்வொரு அடியாக நடக்க நடக்க
    சமநிலைத் தவறி ஆடுகிறது வாழ்க்கை
    ஏந்தியிருக்கும் கழியின் இருபுறமும்
    தீராத துக்கமும்
    ஒருபோதும் காணப்படாத கனவுகளும்
    தொங்கிக் கொண்டிருக்கின்றன.” { இப்படிக்கு ஏவாள்  பக்கம்  15}

    என்று பிழைப்புக்காகக் கயிற்றின்மேல் நடக்கும் பெண்ணொருத்தியின் வாழ்வு தரும் வலியை வடுக்களாகக் காட்டுகிறார்.

    உயிர்தின்னி

    காலம் காலமாய் உயிர்தின்று ஏப்பம்விடும் சாதிகள், கொடும் வல்லூறுகள் பறந்த வண்ணம் இருக்கின்றன. அவைகள் விளிம்புநிலை மக்களில் பெண்களிடம் தன் கோபத்தைச் செலுத்துகின்றன.

    சாதி ஆதிக்கவெறிகளின் குறிகள் அப்பப்பா வலிகளின் உச்சத்தில் பீறிட்டெழும் யோனியின் குருதியைக் குடித்து கொப்பளித்துக் கும்மாளமடிக்கின்றன. துயர்நிரம்பிய இவ்வாழ்வைப் பொறுக்காது முடிவுகட்ட ஒட்டுமொத்த தலித் பெண்களின் மனக்குமுறல்களை போர்க்குரலெடுத்து ஓங்கி உரைக்கிறார்,

    ”கொலையும் செய்வாள் பறச்சி “என்னும் கவிதையில்,

    எங்கள் ஆடைகளை அவிழ்ப்பீர்
    அம்மணமாக்குவீர்
    வன்புணர்வீர்
    தமையனோடு புணரச் செய்வீர்
    —– ——   ——   —-   —- —
    இனி எவையும் மிச்சமில்லை
    நீங்கள் செய்வதற்கு
    ஆனால்
    நான் செய்ய ஒன்றுண்டு
    அது
    கொலையும் செய்வாள் பறச்சி” {இப்படிக்கு ஏவாள்  பக்கம் 31}

    இழிநிலையாக அரங்கேறிகொண்டிருக்கும் ஆணவக் கொலைவரை செய்து விட்டீர்கள் என்று கூக்குரலிட்டு மாவோவின் வரிகளை நினைவுபடுத்துகிறார். “எனக்கான ஆயுதத்தை என் எதிரியே தீர்மானிக்கிறான்.”

     உயர்சாதி இந்துக்களாகத் தன்னை கருதும் சமூகத்தில் பிறந்த பெண்களின் மனதில் மரித்துப்போகும் காதலை “பலியிடப்பட்ட காதல் என்னும் கவிதையின் வரிகள் உணர்த்துகின்றன.

    “சாணைப் பிடிக்கப்பட்ட சாதியின் கூர்வாளால்
    வெட்டப்படாத உனதுயிர் வேண்டியே
    கைவிடுகிறேன்
    நம்முடைய காதலை“ { இப்படிக்கு ஏவாள்  பக்கம் 36 }

    மதம் கட்டமைத்த சாதியம் அழிந்து போகக் கடவதாக! இல்லையெனில் நிலம் மலடாகட்டும் எனக் கொதிக்கிறார் “கொலை பார்க்கும் நிலம் “தலைப்பிலமைந்த கவிதையில்,

    “எனக்கு நானே சாபமிட்டுக் கொள்கிறேன்
     சாதியின் புல் பூண்டு மரம் மயிரென
     எவையும் முளைக்காத
     மலட்டு நிலமாகட்டும் நான்“ { இப்படிக்கு ஏவாள்  பக்கம்  46 }

    என்று கொடூரத்தின் வேர்களைச் சாடுகிறார்.

    காமத்தின் பெருவலி

    தனிமையின் விரக்தியும், காமத்தின் வெம்மையும் உடலையும் மனத்தையும் வாட்டுகின்றன. உடல் என்பது ஒரு வணிகப் பொருளாகிப்போன உலகமயச் சூழலில், இச்சையின் அர்த்தத்தை மீட்டு அதன்வழி பெண்ணின் விடுதலையைப் பேசுகிறார் ‘இரவு மிருகம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதை

    ”பருவப் பெண்ணின் பசலையைப் போல
    – – – – – – – – – – – – – – – – – –
    – – – – – – – – – – – – – – – – – –
    கூசும் வார்த்தைப் பிரயோகங்களைச்
    சன்னமாய் சொல்லியவாறு
    சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
    பறவைகளின் சிறகோசை கேட்டதும்
    என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
    ஓடிவிட்டது இரவுமிருகம்” {இரவுமிருகம் பக்கம் 19}

    மெழுகுவர்த்தியின் ஒளியும் தனிமையுமான வாழ்வில் இச்சை உடலைப் பருகுவதை பதிவு செய்கிறார்.

    ஆணாதிக்க மிருகங்கள் காமத்தின் வால்பிடித்துப் பித்தேறித் திரிந்தும், அது பெண்ணின் மனவலி எதையும் பாராமல் தேகத்தைக் கிழித்துப்போட்டு, எச்சிலும், காமநீரையும் சிந்திவிட்டுப் புணர்வு நிமித்தமாக மதர்த்துத் திரிவதை “கலவி வாசனை” என்னும் கவிதைமூலம் சமூக மனங்களைக் கிழிக்கிறார்.

    “கிழிந்த தேகத்தை
    நேர்படுத்திகொண்டு நிமிர்கிறேன்.
    மறுபடியுமென்
    உறுப்புக்கிளைகள் ஒடிந்துவிழும் படியாக
    வந்தமர்கிறது ஓர் உருவபூதம்
    – – – – – – – – – – – – – – – – – –
    முடிவின் பிந்தைய கணத்தில்
    இரத்தம் தோய்ந்த ஆடையைத்
    துவைத்துப் போடுகிறாள்
    பிரபஞ்சமெங்கும் கலவிவாசனை.”              {இரவுமிருகம் பக்கம் 30}

    முடிவுரை

    இவ்வுலகில் பிறந்த அத்தனை உயிர்களும் வாழப்பிறந்தவை. உரிமைகளுடன் வாழ்தல் மிகவும் அவசியம். வாழ்க்கை கொஞ்சம் காலம்தான். இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை

    “ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
    கோடியும் அல்ல பல” – என்கிறார்.

    ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கூற்றின்படிப் பிறப்பால் அனைவரும் சமம் என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் பதிந்து வேற்றுமையற்ற சமத்துவ சமுதாயம் என்ற ஒற்றைத் தத்துவத்தைநோக்கிப் பயணிக்கின்றன கவிஞரின் கவிதைகள்.

    ******

    துணை நூற்பட்டியல்

    • இப்படிக்கு ஏவாள் – சுகிர்தராணி – காலச்சுவடு பதிப்பகம் .
    • இரவு மிருகம் – சுகிர்தராணி – காலச்சுவடு பதிப்பகம் .
    • பெரியார் களஞ்சியம் – விடியல் பதிப்பகம்.
    • திருக்குறள் தெளிவுரை – மணிவாசகர் பதிப்பகம்.

    ******

    கட்டுரையாசிரியர்
    முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி),
    கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி
    எழுத : godhassan82@gmail.com
    பேச : 0 97 866 345 22

     

     

    Share
  • நாட்டுப்புறப் பாடல்களில் காதல்

    -சிந்து. மூ

    நாட்டுப்புறப் பாடல்கள் காலம் கடந்தும் இன்றும் மக்களிடையே வாழ்ந்து வருகின்றன. பண்டைய தமிழர்கள் இசையில் மிகுந்த நாட்டம் உடையவர்கள். அவ்வகையில் நாட்டுப்புறப் பாடல்கள் மிகுந்த ஓசைபெற்று அமைந்திருப்பதை உணரமுடிகிறது. மனத்தில் உள்ள உணர்வுகளை உள்ளவாறு வெளிப்படுத்தும் கண்ணாடியாக வாய்மொழி இலக்கியமான நாட்டுப்புறவியல் அமைவதைக் காணலாம். படிப்பறிவில்லாத பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகைகயில் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது. மனத்தில் உள்ள இன்ப துன்பங்களை மெய்ப்பாடுகளோடு எடுத்தியம்பும் இலக்கியமாகத் திகழ்கிறது.

    நாட்டுப்புறப் பாடல்களைக் குழந்தைப்பாடல்கள், உணர்ச்சிப்பாடல்கள், தொழிற் பாடல்கள், கொண்டாட்டப்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள் என வகைப்படுத்தலாம். அவற்றுள் உணர்ச்சி நிலையான காதலைப் பற்றி  ஆராய்வதாகும்.

    காதல் பாடல்

    நாட்டுப்புறப் பாடல்களில் காதல் முதன்மை பெறுவதைக் காணலாம். காதல் பாடல்களில் கற்பனை, அணிநயம் இடம்பெறுவதில்லை. மனத்தில் தோன்றும் காதலைத் தன் வாய்மொழி வார்த்தைகளால்  பாடல்களாக வெளிப்படுத்துவர்.

    காதல்

    ஆண் பெண் இருவரின் உள்ளத்தில் தோன்றும் ஒருவித உணர்ச்சியை வெளிப்படுத்துவது காதலாகும். அக்காதல் இன்பமும், பொருளும், அறமுடையது. தொல்காப்பியத்தில் அன்பின் ஐந்திணை பற்றிக் கூறும் தொல்காப்பியர்,

    ”இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
    அன்பொரு புணர்ந்த ஐந்திணை” 1 என்று சுட்டுகிறார்.

    இலக்கியத்தில் களவு ஏற்படும் காலத்தில்  தலைவிக்குச் செவிலி, தோழி, பாங்கன், பாங்கியிற் கூட்டம் எனத் தூதாக அமைவர். ஆனால் நாட்டுப்புறத்தில் உள்ள தலைவியின் காதலானது, பாடல்கள் வாயிலாக இனிமையாகவும், உண்மையான உணர்வுகளோடும் வெளிப்படுத்தப்படுகிறது.

    காதலானது மனிதனது பருவ காலங்களில் மொட்டவிழ்ந்து மலராகும் போது மனிதனது பருவத்தில் தோன்றும் உணர்வுகளால் காதல் என்னும் மணமானது பரப்பப்படுகிடுன்றது. வண்டும் மலரும் ஒன்றால் ஒன்று ஈர்க்கப்படுவதுபோல, ஆண்மையும், பெண்மையும் ஒன்றால் ஒன்று ஈர்க்கப்படுகின்றது.

    காதல் பாடலில்  இடம்பெறும் பொருண்மைகள்

    நாட்டுப்புறப் பாடல்களில் காதல் வயப்படல், வருணித்தல், அன்பு வெளிப்படல், இடஞ்சுட்டல், உரையாடல், காவல்செய்தல், மறக்கமுடியாமை, உறுதி நிலை ஆகியவை முதன்மையாக விளங்குவதைக் காணலாம். காதல் பாடல்கள் அன்பினை வெளிப்படுத்தும்  சிறந்த ஊடகமாக அமைகிறது என்றால் மிகையாகாது.

    காதல் வயப்படல்

    அறிமுகம் இல்லாத ஆணும், பெண்ணும் சந்திக்கின்ற சூழலில் ஏற்படும் கவர்ச்சியும், தொடர்ச்சியாக இரண்டு மூன்று முறை சந்திக்கின்ற போது மேலும் ஒருவரால் ஒருவர் கவரப்பட்டுக் காதல் கொள்ளும் நிலையே காதல் வயப்படல் என்று கூறலாம்.

    ”ஏரிக்கரையிலே
    ஊருக்குத் தெரியாம ஒதுக்குப்புறமா
    உன்ன பாக்கயல தூண்டிலில
    மாட்டிக்கிட்ட மீனு போல
    துடிக்குதடா ஏ மனசு……” 2 காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி தன் காதலை அழகாக வெளிப்படுத்துகிறாள்.

    வருணித்தல்

    காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் வருணித்துப் பாடுவது குறிப்பிடத்தக்கதாகும்.

    ”கொசுவம் கட்டி
    இடுப்பாட்டிப் போரபுள்ள
    உனக்காகக் காத்திருக்கும்
    மாமன சித்த திரும்பித்தா
    பாருபுள்ள……”3 என்று காதலன் காதலியையும்,

    ”முறுக்கு மீசை காரா
    முரட்டு காவல்காரா
    கருத்த உடம்புக்காரா
    கண்டாங்கி கட்டுனவளா
    கண்டுக்காமா போகாதடா……”4 என்று காதலி காதலனையும் வர்ணித்துப் பாடும் நிலையைக் காணலாம்.

    அன்பு வெளிப்படல்

    பெண் அன்பின் உறைவிடம் என்று கூறுமிடத்து நாட்டுப்புறப் பாடலில் ஆண் ஒருவன் பெண்மீது கொண்ட அன்பை,

    ”தங்கத்துக்குத் தங்கம் – பெண்ணே
    தனித்தங்கம் நான் இருக்கப்
    பித்தளைத் தங்கத்துக்குப் – பெண்ணே
    வீணாசைப் பட்டாயோ!” என்று பாடுவதிலிருந்து ஆணின் அன்பினை உணரமுடிகிறது.

    இடஞ்சுட்டல்

    காதலர்கள் யாரும் அறியாது சந்தித்துப் பேசும் விதமாகக் காதலன் காதலியிடம்,இடஞ்சுட்டுமாறு கேட்கும் நிலையில்,
    ”ஒதுக்குப்புறமா
    ஓலை குடிசையடுத்து
    ஒத்தடிப் பாதையிலுள்ள
    ரெட்டப் பனமரம் தா அடையாளம். 5” என்று சந்தித்துப் பேசுவதற்குரிய இடத்தினைக் காதலி குறிப்பிடுவதை உணரமுடிகிறது.

    காதலில் உறுதி

    ஆண்,பெண் காதலுக்குத் தன் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காதபோது உடன்போக்கு என்னும் நிகழ்வானது நடைபெறும். பெற்றோரின் சம்மதம் பெறும் வரைக் காத்திருந்து திருமணம் செய்வதும் உண்டு.

    ”கண்ணோடு கண்ணாக
    கலந்த உன்னைக்
    கல்யாணம் செய்யாம
    ஊரைவிட்டுப் போவதில்லை….” என்ற பாடலின் வாயிலாக நாட்டுப்புறப் பாடல்களில் காதலனும் காதலியும் உறுதியாக இருந்து மணம் முடிக்கும் நிலையைப் பெரும்பான்மையாகக் காணமுடிகிறது.

    முடிவுரை 

    நாட்டுப்புறப் பாடல்கள் உணர்ச்சி நிலையான காதலைப் பற்றி வெளிப்படையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

    ஆண்மையும், பெண்மையும் ஒன்று ஒன்றால் ஈர்க்கப்பட்டுக் காதல் வயப்படும் நிலையைக் காணமுடிகிறது.

    தன் காதலுக்கிடையே பலவித இன்னல்கள் தோன்றினாலும் தன் காதலில் உறுதியாக இருந்து வெற்றி கண்ட நிலையை நாட்டுப்புறப் பாடல்கள் பதிவு செய்கின்றன.

    நாட்டுப்புறக் காதலானது
    “செம்புலப்பெயல்நீர் போல,
    அன்புடை  நெஞ்சம் தாம்கலந் தனவே”6 என்னும் குறுந்தொகைப் பாடலின் வரிகளை மெய்ப்பிக்கும் தன்மையைக் காணமுடிகிறது.

    *****

    பின்னிணைப்பு

    1. மு.சண்முகம் பிள்ளை (ப.ஆ) தொல்காப்பியம்,பொருளதிகாரம்.களவியல் நூ – 1
    2. இராமாத்தாள் (தகவலாளர்) வயது 61, சித்தநாயக்கன் பாளையம்கோவை.
    3.  இராமாத்தாள் (தகவலாளர்) வயது 61, சித்தநாயக்கன் பாளையம்கோவை.
    4. இராமாத்தாள் (தகவலாளர்) வயது 61, சித்தநாயக்கன் பாளையம்கோவை.
    5.  இராமாத்தாள் (தகவலாளர்) வயது 61, சித்தநாயக்கன் பாளையம்கோவை.
    6. சங்கஇலக்கியமுலமும் உரையும் அறிஞர் ச.வே சுப்பிரமணியம்.
    7.  குறுந்தொகை பா.40

    *****

    கட்டுரையாசிரியர்
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    கற்பகம் பல்கலைக் கழகம்
    ஈச்சனாரி.

     

     

     

     

    Share
  • அறிவியல் தமிழ் – கற்றல் கற்பித்தல் – 2

    -முனைவர் ப. ஜெயகிருஷ்ணன்

     எழுத்துருக்கள் (Fonts)

               ஆங்கிலத்தில் எத்தனையோ எழுத்துக்கள் இருந்தாலும் TIMES NEW ROMAN மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தமிழில் குறிப்பிட்ட எழுத்துருவைப் பயன்படுத்துவதில்லை. அவற்றில் அபிராமி, அகல்யா, அகத்தியர், அக்னி, அஜந்தா, அகிலா, ஆட்சயா, அன்னை, அனுராதா, அரசு, இலக்கியா, அமலா, அப்பர், சந்திரா, ஹீனா, இளங்கோ, கம்பன், கண்ணதாசன், கோமளா ,நம்பி,ட்டினத்தார்,ருதி,ன்மொழி,மிழ்து,னவில்,ன்னி,ண்ணா,ந்தமிழ், சுரபி, பாமினி, மயிலை, லதா இவற்றுள் சில ஒருமொழியிலும் சில இரு மொழியிலும் இயங்கக் கூடியவை.

    இணைய இதழ்கள்

               இணையம் வழி வெளியிடப்படும் இதழ்கள் மின் இதழ்கள் எனப்படுகின்றன தமிழில்.1.திண்ணை. www.thinnai.com 2 தட்ஸ் தமிழ் www.thatstamil.oncindia.in 3.வார்ப்பு www.vaarappu.com (கவிதைக்கென்று வெளிவரும்) 4.பதிவுகள் www.pathivukal.com 5.மரத்தடி www.maraththadi.com 6.தமிழ் நெட் www.tamizham.net 7.தமிழ்க்கூடல் www.koodal.com 8.நிலாச்சாரல் 9.தமிழ் ஓவியம் 10. தமிழ்க் காவல் 11.தமிழ்த்திணை 12.வானவில் 13.ஆறாம்திணை 14.அம்பலம் 15. அரும்பு.

    வலைப்பூக்கள்

         ஆங்கிலத்தில் (Blogger) வலைப்பூ என்று குறிப்பிடுகின்றனர். இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்தையும் இதிலும் பதிவேற்றம் செய்யலாம். இணையதளத்தை உருவாக்கி நிர்வகிக்க அதிகப் பொருள்செலவு ஏற்படும். ஆனால் பொருள்செலவின்றி வலைப்பூ உருவாக்கி நிர்வகிக்க முடியும். ஒருவர் தன் சிந்தனைகளை வலைப்பூ வடிவில் இணையதளத்தில் உலவ விடமுடியும். உடனுக்குடன் பின்னூட்டம் அடிப்படையில் மாற்றங்களைச் செய்யமுடியும். யாகூ, எம்.எஸ்.என், ரீடிப் மெயில் என்பவை வழக்கில் உள்ளன. எனினும் கூகிள் நிறுவனத்தின் பிளாக்கர் என்பதே பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. புதிதாக வலைப்பூ உருவாக்க விரும்புபவர்கள் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.

    1. Creat an account 2.Name your blog 3.Choose your template அவரவர் விருப்பத்திற்கேற்ப மின்னஞ்சல் முகவரியை அமைத்துக் கொள்வது போலவே வலைப்பூ முகவரியும் அமைத்துக் கொள்ளலாம்.

    Selvi.blogspot.com –இதில் செல்வி என்பது வலைப்பூ பதிவர். மற்றவை இந்நிறுவனத்தைக் குறிக்கும் பொதுவான அமைப்பு.

    தமிழில் வலைப்பூக்கள்

               தமிழ்ப்பூக்கள், மானிடன், மு.இளங்கோவன், துரையரசன், திருமன்றில், மலையறிவு, குறிஞ்சி மலர், வாழ்க தமிழுடன்,உயிர்கொண்டு திளைத்தல், தமிழ்மொழி, தமிழ் அறிஞர்கள், அறிவுமதி, தமிழ்வலைப்பதிவர் உதவிப்பக்கம், திரட்டிகள் போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.

    கல்விசார் இணையதளங்கள்

         இவற்றை 1.கற்பிப்பவை 2.நூலகங்கள் 3.தகவல்கள் வழங்குபவை என மூன்று வகையாகப் பிரிக்கலாம். தகவல் தருபவையில் 1. விக்கிப்பீடியா 2. யூ.ஜி.ஸி, 3. மனிதவள மேம்பாட்டுத்துறை 4. தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை 5. தமிழ்வளர்ச்சித்துறை.

    வேலைவாய்ப்பு இணையதளங்கள்

    1.மத்தியரசு பணியாளர் தேர்வாணையம் 2.இந்திய ஆட்சிப்பணி 3.இணையவேலைவாய்ப்பு மையங்கள் (நாக்ரி.காம்).

    மின்னணுப் பாடநூல்

         வகுப்பறைப் பாடநூலுக்கும் மின்னணுப் பாடநூலுக்கும் இடையே மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. ஆசிரியர் உதவியின்றி சுயமாகக் கற்றுக் கொள்ளும் திறன் எவ்வாறெல்லாம் மின்னணுப் பாடநூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழை முதல் மொழி மற்றும் இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்வதற்கு எவ்வாறெல்லாம் இந்த மின்னணுப் பாடநூல்கள் பயன்படுகின்றன என்றும் ஆராய்வது தேவையானதொன்றாகும்.

               இவ்வகையில் தமிழை முதல் மற்றும் இரண்டாம் மொழியாகப் பல்லூடக முறையில் கற்பிப்பதற்கும் கற்பதற்கும் அரசும் தனியார் நிறுவனங்களும் பல்லூடகக் குறுந்தட்டுகளை வெளியிட்டுள்ளன. இவற்றில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தமிழ் உலகம்’ ஆலன்பார்க் இன்போடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘செம்மொழி’ தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சான்றிதழ் கல்விக்கான அடிப்படை நிலை, மற்றும் இடைநிலைக் கல்வி பல்லூடகக்  குறுந்தட்டுகளை அறிமுகம் செய்து நிறைகுறைகளைக் கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இக்கட்டுரைப் பின்வரும் பகுதிகளைக் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

               1.மின்னணுப் பாடநூல் சுருக்கம்
    2.பாடப்பொருள் மதிப்பீடு
    3.உரையாடல் பகுதி மதிப்பீடு
    4.பயிற்சிப் பகுதி மதிப்பீடு
    5.கணினிப் பயன்பாடு மதிப்பீடு.

    1.மின்னணுப் பாடநூல் சுருக்கம்

         1.தமிழ் உலகம்

               உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாக ஆங்கிலம் வழிக் கற்பதற்குத் ‘தமிழ் உலகம்’ என்ற தலைப்பில் இரண்டு குறுந்தட்டுகளை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் சாப்ட் நிறுவனத்தினர் தயார் செய்த பல்லூடக மென்பொருளைப் பின்பற்றிப் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கிலமொழி வழித் தமிழை முறையாகக் கற்க வேண்டுமென்ற ஆர்வமுடைய வெளிநாட்டவருக்கும், ஓரளவு தமிழ்தெரிந்த பிற மொழியினருக்கும், புலம்பெயர்ந்து தமிழை மறந்த தமிழர்களுக்கும் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள உதவும் முறையில் 25 அலகுகளாகப் பிரித்துப் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. இலக்கணப்பகுதி, உரையாடல் பகுதி, இலக்கியப் பகுதி, பயிற்சிப்பகுதி என்னும் பல்வேறு கோணங்களில் பாடக் கருத்துக்கள் மிக எளிமையாகப் பல்லூடக முறையில் விளக்கப்பெற்றுள்ளன. குறுந்தட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள கணினி நுணுக்கம் தமிழை முதல், இரண்டாம் மொழியாக ஆசிரியர் துணையுடன் மட்டுமே கற்கும் முறையில் அமைந்துள்ளது. ‘தமிழ் உலகம்’ குறுந்தட்டுகளின் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள செயல் திட்டங்கள் படித்தல் திறனை வளர்த்தல், பாடங்களின் பொருளைப் புரிந்துகொள்ளுதல், மொழி விளையாட்டுக்கள் என்ற முறையிலேயே அமைந்துள்ளன. இவற்றில் கணினி சரியான விடை தருபவர் என்னும் நிலையிலேயே உள்ளது. பயிற்சி செய்யும்போது மாணவன் தவறு செய்தால் தவற்றைச் சுட்டிக்காட்டும் கணினி நுணுக்கம் சிறிதளவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாடப்பகுதி மற்றும் பயிற்சிப்பகுதியில் அமைந்துள்ள மென்பொருள் மாணவர்களுக்குக் கற்றல் சாதனங்களைக் கொண்டு கொடுக்கும் வாகனமாக மட்டுமே அமைந்துள்ளது.

    1. செம்மொழி

            ஆலன் பார்க் இன்போடெக் நிறுவனம் இப்பல்லூடகக் குறுந்தட்டை வெளியிட்டுள்ளது. தமிழ்மொழியை முதல் மற்றும் இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்ள உதவும் முகமாகப் பாடங்கள் பல்லூடக முறையில் விளக்கப் பெற்றுள்ளன. .அடிப்படை எழுத்துப் பயிற்சி, உச்சரிப்புப் பயிற்சி, எண்கள் ,பாடங்கள், விடுகதைகள், செய்யுள், பாடல்கள், கதைகள் என்னும் எட்டு தலைப்புகளில் பாடக் கருத்துக்கள் விளக்கப் பெற்றுள்ளன. கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், உரையாடுதல், இலக்கணக் கூறுகளை அறிதல் போன்ற மொழித் திறன்களைப் பெறும் வகையில் ஆசிரியர் உதவியின்றி விளையாட்டு, வேடிக்கை என்று கற்கும் வகையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    1. சான்றிதழ்க் கல்வி அடிப்படை நிலை

               தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்தக் குறுந்தட்டில் தமிழ்ச் சான்றிதழ்க் கல்விக்கான அடிப்படை நிலை மற்றும் இடைநிலைப் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. அடிப்படை நிலையில் தமிழ் எழுத்துக்களின் ஒலி/வரி வடிவங்களும் எழுநூறுக்கும் மேற்பட்ட சொற்களும் சிறு தொடர்களும் பல்லூடக வசதிகளைப் பயன்படுத்திப் படிக்க ஆர்வமூட்டும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

         எழுத்துக்களின் ஒலிப்புப் பயிற்சி, எழுதும் பயிற்சி, எழுத்துக்களைக் கூட்டிப்படிக்கும் பயிற்சி, சொற்களைக் கூட்டிப்படிக்கும் பயிற்சி, பாடல் பயிற்சி போன்ற பயிற்சிகளுடன் பாடங்களை எளிதில் கற்கும் வகையில் பல்லூடக வசதிகளோடு ஆக்கப்பட்டுள்ளன. தொடக்க வகுப்புகளில் பயன்படும் வகையில் 15 தலைப்புகளில் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன.

    2.பாடப்பொருள் மதிப்பீடு

    1.எளிமையிலிருந்து கடினம்

         ஒரு மொழியில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று இலக்கண உட்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை முறைப்படி கற்கும் முறையில் பாடப்பகுதி அமைய வேண்டும். கற்றல் உத்தியான எளிமையிலிருந்து கடினம் என்னும் முறையிலும் பாட விளக்கம் அமைய வேண்டும். ஆனால் சில இடங்களில் கடினமான பகுதி முதலில் விளக்கப்பட்டுள்ளது. பாட விளக்கமும் முன்பின் முரணாக அமைந்துள்ளது.

           ‘தமிழ் உலகம்’ குறுந்தட்டில் வேற்றுமைகளின் விளக்கத்தைச் தொடர்ச்சியாக அடுத்தடுத்த இயல்களில் விளக்கியிருக்க வேண்டும். ஆனால் வேற்றுமை விளக்கம் முன்பின் முரணாகப் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளது. செம்மொழி மற்றும் சான்றிதழ்க் கல்வி குறுந்தட்டுகளில் ஓரளவு எளிமையிலிருந்து கடினம் என்னும் நிலையில் பாடப்பொருள் விளக்கம் அமைந்துள்ளது.

    1. இலக்கியத் தமிழும் பேச்சுத்தமிழும்

           ‘தமிழ் உலகம்’ குறுந்தட்டில் பேச்சுத்தமிழ்ப் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அளவிற்கு, செம்மொழி, சான்றிதழ்க்கல்வி  குறுந்தட்டில் பேச்சுத்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இலக்கியத் தமிழ் விளக்கப்பட்ட அளவிற்குப் பேச்சுத்தமிழ் விளக்கம் பெறவில்லை. பேச்சுத்தமிழைச் சிறப்பாகக் கையாளுவதற்கு நாட்டுப்புறப் பாடல்கள் வட்டார வழக்குச் சொற்கள் போன்றவற்றைக் கொடுத்திருக்க வேண்டும்,

    பொருளடக்கப்பகுதி

          ‘தமிழ் உலகம்’ குறுந்தட்டின் முன்னுரையில் பொருளடக்கப் பகுதி கொடுக்கப்படவில்லை. முன்னுரை அல்லது முதல் இயலில் பொருளடக்கப் பகுதி (Index) கொடுத்திருந்தால் குறிப்பிட்ட பாடப்பகுதியை எளிதாகக் கண்டு பிடிப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்.

         ஒரு மொழியை முழுமையாகக் கற்பதற்கு அம்மொழியிலுள்ள இலக்கியங்களைக் கற்க வேண்டும். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், கவிதை போன்றவற்றை இசையுடன் பாடலாகப் பல்லூடகம் வழிச் சிறப்பாக வெளிப்படுத்த முடியும். தமிழ் உலகம் குறுந்தட்டில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் பகுதியிலிருந்து ஓரிரு பாடல்கள் மட்டுமே இசையுடன் கொடுக்கப்பட்டுள்ளன. பிற குறுந்தட்டுகளில் குழந்தைப்பாடல்கள் மட்டுமே இசையுடன் கொடுக்கப்பட்டுள்ளன. பாடத்தோடு தொடர்புடைய பழமொழிகள், பாடல் வரிகள், தற்கால எழுத்தாளர்களின் படைப்புகள், குட்டிக் கதைகள், படங்கள் போன்றவற்றைப் பாடப்பொருள் விளக்கத்தின் இடையிடையே கொடுத்திருக்கலாம்.

    1. 2. உரையாடல் பகுதி மதிப்பீடு

            உலகில் தோன்றிய எல்லா மொழிகளிலும் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்த வேறுபாடு தமிழில் சற்று மிகுந்து காணப்படுகின்றது. கல்வி கற்றவர்களால் மட்டுமே பேச்சு வழக்கினையும் எழுத்து வழக்கினையும் சரளமாகக் கையாள முடியும். பேச்சுத் தமிழைக் கற்க இயற்கையான வழிகளைக் கடைப்பிடிப்பது சிறந்த முறையாகும். இவ்வகையில் பாடங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வீடு, விழாக்கள், சுற்றுலா போன்றவை பற்றியே அமைந்துள்ளன. சான்றிதழ்க் கல்வி குறுந்தட்டில் இப்பகுதி இயற்கையாக அமையவில்லை.

         ல, ள, ழ, ன, ண, ந, ற, ர ஆகிய எழுத்துக்களின் உச்சரிப்பைத் தெளிவாக உச்சரிக்கத் தெளிவான பயிற்சி கொடுக்கவில்லை என்றால் உச்சரிப்பில் பிழை ஏற்பட வாய்ப்புண்டு. தமிழ் உலகம், சான்றிதழ்க் கல்வி குறுந்தட்டுகளில் இவ்வகை எழுத்துக்களுக்குத் தெளிவான உச்சரிப்பும் பயிற்சியும் கொடுக்கப்படவில்லை. சில சொற்கள் பிழையாக உச்சரிக்கப்பட்டுள்ளன.

    (எ.டு)சந்த்திப்பேன்- சந்திப்பேன், சான்னு- சானு

    உறுப்புகளின் அசைவுகள்

         உரையாடலில் சில குறிப்பிட்ட உடல் உறுப்புகளுக்குப் பெரும் பங்களிப்பு உண்டு. வாயின் அசைவுகளை வைத்தே சைகை மொழியில் கருத்துக்களை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

           உடல்மொழி (Body Language) பேச்சு மொழிக்குத் துணையாக அமையும்  என்று மொழியியல் அறிஞர் கூறுவர். தமிழ் உலகம், செம்மொழி குறுந்தட்டுகளின் உரையாடல் பகுதி விளக்கத்தில் நிழற்படங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. நவீன கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரடியாக உரையாடும் முறையைக் கொடுத்திருந்தால் மொழி கற்பித்தல் இயற்கையாக அமைந்திருக்கும்

    3.பயிற்சிப்பகுதி மதிப்பீடு

               பயிற்சிப் பகுதி தன் மதிப்பிடுதல் முறையில் விளக்கப்பட்டுள்ளது. எளிய பயிற்சி அணுகுமுறைகள், துணைக்கருவிகள் உருவாக்கப்பெற்று சொல் விளையாட்டு, வாக்கிய விளையாட்டு என்னும் நிலைகளில் இப்பகுதி அமைந்துள்ளது. பாடங்களில் கற்றவற்றை மாணவர்கள் நினைவில் வைத்துள்ளனரா என்று கண்டறியும் பொருட்டே வினாக்கள் அமைய வேண்டும். ஆனால் வினாக்கள் அனைத்தும் பொதுவானவையாகவே அமைந்துள்ளன. இலக்கியத் தமிழைக் கற்றுக்கொள்ளும் முறையிலேயே பெரும்பான்மையான பயிற்சிகள் அமைந்துள்ளன.

               எழுத்துக்களை ஒன்றுசேர்த்து சொற்களை உருவாக்குவதும், சொற்களை இணைத்து வாக்கியங்களைப் படைப்பதுமாகிய இரண்டு முறைகளே பாடங்களில் பயிற்சியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் கற்போருக்கு எழுத்துக்களை இணைக்கும் பயிற்சியும் சொற்களை இணைக்கும் பயிற்சியுமே ஏற்படுகிறது. பொருளை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. எனவே ஆய்வுக்குரிய குறுந்தட்டுகளில் பொருளை அறிந்துகொள்ளும் முறையில் பயிற்சிகள் கொடுத்திருக்கலாம்.

    www.chennailibrary.com
    www.ezhilnila.com
    www.kalachuvadu.com
    www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html
    www.noolaham.net
    www.tamilmanam.net
    www.tamil.net/project
    www.tamilvu.org
    www.ta.wikipedia.org
    www.Viruba.com

    ******

    கட்டுரையாளர்
    தமிழ்த்துறை
    கேரளப்பல்கலைக்கழகம்
    காரியவட்டம்
    திருவனந்தபுரம் 695 581

                         

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 12

    -மேகலா இராமமூர்த்தி

    நாளைக் காலை எவரும் அறியாமல் நான் தலைவியை மலைச்சாரலிலுள்ள வேங்கை மரத்தடிக்கு அழைத்துவருவேன். நீங்களும் அவ்விடம் வந்துவிடுங்கள். அங்கிருந்தே நீங்கள் இருவரும் உங்கள் இல்லறப் பயணத்தை தொடங்கிவிடலாம் என்றாள் தோழி தலைவனைப் பார்த்து.

    அவள் யோசனைக்கு அமைதியாய்த் தலையசைத்துத் தன் ஆமோதிப்பைத் தெரிவித்தான் தலைவன்.

    அன்றைய இரவுப்பொழுது கழிந்தது. கதிரவன் தன் கிரணங்களை நீட்டிப் புவியின் இருளைத் தொட்டழித்தான். புள்ளினங்கள் மரங்களில் இருந்தபடியே பள்ளியெழுச்சி பாடின.

    தலைவியைச் சந்திக்க அவள் இல்லம் நோக்கி நடைபோட்டாள் தோழி. தலைவியைச் சந்தித்தவள், ”இன்னுமா நீ கிளம்பவில்லை? நேரம் கடந்துகொண்டிருக்கிறதே! புறப்படு சீக்கிரம்” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தாள்.

    உடன்போக்கன்றித் தானும் தலைவனும் இல்லறத்தில் இணைய வழியேதுமில்லை என்பதைத் தலைவியும் அறிந்திருந்தபோதிலும், அன்னையும் அத்தனும் அறியாது பிறந்தகம் நீங்கி, காதலனொடு தனித்துச் செல்ல அந்தப் பெண்ணுளம் மறுத்தது; உடன்பிறந்த நாணம் தடுத்தது. கால்களோ வாயில்கடக்க மறுத்து மறியலில் ஈடுபட்டன.

    தன்னைத் துரிதப்படுத்திய தோழியை நோக்கி, “இன்றே செல்லவேண்டுமா? நாளை செல்லலாமே!” என்று தட்டுத்தடுமாறி சொல் முத்துக்களை உதிர்த்தாள் தலைவி!

    தோழி வியப்பில் தன் புருவங்களை உயர்த்தியவளாய், ”பெண்ணே! என்ன சொல்லுகிறாய்?! நீ உடன்போக இசைந்தாய் என்று நான் கூறியதால்தான் தலைவன் குறியிடத்திற்கு வந்து உனக்காகத் காத்திருக்கின்றான். நீயோ கையும் காலும் ஓய்ந்து வருத்தமுற, இன்றைய பொழுது கழியட்டும்; நாளை போகலாம் என்கிறாயே! உன் சொற்கேட்டுத் தீயில்விழுந்த தளிராய் நான் நடுங்குகின்றேன். இனி நான் செய்வதற்கு ஏதுமில்லை” என்றாள் ஏமாற்றத்தோடு!

    நீயுடம்  படுதலின்  யான்தர  வந்து
    குறிநின்  றனனே  குன்ற  நாடன்
    இன்றை  யளவை  சென்றைக்  கென்றி
    கையுங்  காலும்  ஓய்வன  அழுங்கத்
    தீயுறு  தளிரின்  நடுங்கி
    யாவதும்  இலையான்  செயற்குரி  யதுவே.   (குறுந்: 383: படுமரத்து/படுமாத்து மோசிகீரன்.)

    தலைவி நாணமிகுதியால், ”இன்று வேண்டாம்… நாளை செல்வோம்” என்று கூறியபொழுதில், ”நாணினும் உன் கற்பே நனிசிறந்தது. காதலித்த தலைவனையன்றி வேறொருவனை நீ மணப்பது உன் கற்புக்கு இழுக்கு; ஆதலால் தலைவனொடு உன் வாழ்வை அமைத்துக்கொள்ள இன்றே புறப்படு!” என்று தலைவியை ஆற்றுப்படுத்துவதே இங்குத் தோழியின் நோக்கம்.

    நாணால் தடுமாறிய தலைவி, சிறுபொழுதில் தன்னிலை உணர்ந்தாள்; தமரறியாது தோழியொடு புறப்பட்டாள்.

    குறியிடத்தில், தலைவியை அழைத்துச்செல்ல ஏற்கனவே வந்து காத்திருந்தான் தலைவன்.

    ”அன்ப! நான் சொன்னதுபோலவே தலைவியை அழைத்துவந்து உம்மிடம் ஒப்படைத்துவிட்டேன் என்றாள் தோழி. உணர்ச்சிமேலீட்டால் அவள் குரல் கரகரத்தது. ஒருசில நொடிகள் மௌனமாய் நின்றவள், தான் சொல்லவேண்டிய கருத்துக்களை மனத்துக்குள் ஒழுங்குபடுத்திக்கொண்டு மீண்டும் பேச்சைத் தொடங்கினாள்…

    cow_elk”அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த, தண்ணிய நறிய மலைப்பக்கத்தின்கண், மெல்லிய நடையுடைய மரையா (female elk), இலைகளை விரும்பி உண்டு, துயிலுதற்கிடமாகிய, நல்ல மலை நாட்டையுடைய தலைவ! பெரிய நன்மையொன்றை ஒருவர் தமக்குச் செய்தால் அங்ஙனம் செய்தாரைப் போற்றாதாரும் உளரோ?  யாவருமே போற்றுவர்! ஆனால் அஃது சிறப்புக்குரியதன்று! சிறிதளவு நன்மையை இத்தலைவி பெற்றவளாயிருக்கும் காலத்திலும் விருப்பத்தோடு புலவிதீர இவளை நீ பாதுகாப்பாயாக! நினையன்றி பற்றுக்கோடு ஏதுமற்றவள் இவள்!” என்றாள் தோழி. 

    பெருநன்  றாற்றிற்  பேணாரும் உளரே
    ஒருநன்  றுடையள்  ஆயினும்  புரிமாண்டு
    புலவி  தீர  அளிமதி  இலைகவர்
    பாடமை  ஒழுகிய  தண்ணறுஞ்  சாரல்
    மென்னடை  மரையா  துஞ்சும்
    நன்மலை  நாட  நின்னல  திலளே.  (குறுந்: 115 – கபிலர்)
     

    இப்பாடலின் பொருளை இன்னும் சற்று எளிமைப்படுத்திச் சொல்வதானால்…”தலைவி இப்போது இளமை நலத்தினள்; தலைவனுக்கு இன்பம்நல்கும் பருவத்தினள்; ஆதலால் தலைவன் அவளை விரும்புவதில் வியப்பில்லை. ஆனால் இதே தலைவி நரைகூடிக் கிழப்பருவம் எய்தும் காலமும் வரும். அப்போது தலைவி,

    ”புதுமலர் அல்ல; காய்ந்த 
         புற்கட்டே அவள் உடம்பு! 
    சதிராடும் நடையாள் அல்லள்
     
         தள்ளாடி விழும் மூதாட்டி 
    மதியல்ல முகம் அவட்கு
     
         வறள்நிலம்! குழிகள் கண்கள்!”  என்று சொல்லும் நிலையில் இருப்பள்.

    அப்போதும் தலைவன் அவளை வெறுக்காது, அவளிடம் அன்புகாட்ட மறுக்காது அவளை இன்முகத்தோடு காக்கவேண்டும் எனும் தன் எதிர்பார்ப்பைத் தலைவனுக்கு இப்பாடலில் குறிப்பால் உணர்த்துகின்றாள் சிறுமுதுக்குறைவியான (சிறு பருவத்திலேயே பேரறிவு படைத்தவள்) தோழி.

    ஈதொப்ப, தலைவியைத் தலைவனிடம் ஓம்படுத்தி (அடைக்கலப்படுத்தி), இவள் இளமை யெழில்நலம் தளரினும், நன்னெடுங்கூந்தல் நரையெய்தினும் அன்பொடு புரப்பாய்” என்று தோழி மொழியும் பொருள்செறிந்த அரும்பாடலை நற்றிணையிலும் காணலாம்.

    அண்ணாந்து   ஏந்திய   வன முலை   தளரினும்
    பொன்நேர்   மேனி   மணியின்  தாழ்ந்த
    நல்நெடுங்  கூந்தல்  நரையடு  முடிப்பினும்
    நீத்தல்   ஓம்புமதி  பூக்கேழ்  ஊர
    இன்கடுங்  கள்ளின்  இழைஅணி  நெடுந்தேர்க்
    கொற்றச்  சோழர்  கொங்கர்ப்  பணீஇயர்
    வெண்கோட்டு  யானைப்  போஒர்  கிழவோன்
    பழையன்  வேல்  வாய்த்தன்ன  நின்
    பிழையா  நன்மொழி  தேறிய  இவட்கே.  (நற்: 10)

    தலைவியின்மாட்டுப் பெருங்காதலும் பேரன்பும் கொண்டவள் அல்லவோ தோழி? ஆதலால், தலைவியை இன்னும் சற்றுநேரத்தில் பிரியப்போகிறோம் எனும் உணர்வு அவளுக்குச் ஆற்றொணா வேதனையை அள்ளித்தந்தது. தன்னருமைத் தோழி அவள்விரும்பிய காதலனோடு இன்பமாய் வாழவேண்டும் எனும் நாட்டமும், அவளை இனி எப்போது மீண்டும் காண்போம் எனும் வாட்டமும் அவளை மாறிமாறி அலைக்கழித்தன.

    தன் உயிரன்ன தோழியாம் தலைவியைக் கண்ணின் கருமணியாய்த் தலைவன் பேணவேண்டும் எனும் தன் வேணவாவை மீண்டும் ஒருமுறை அவனிடம் அழுத்தமாகத் தெரிவிக்க விரும்பிய தோழி மேலும் சில சொல்லலுற்றாள்… 

    “அரும்புகள் முதிர்ந்த ஞாழலினது முட்டையைப் போன்ற திரண்ட மலர்களை  நெய்தலது கரிய மலரிலேwater-lily பெய்வதைப்போலக் குளிர்காற்றுத் தூவுகின்ற வன்மையுடைய கடற்கரைக்குத் தலைவ! ஈன்றவள் சினந்து வருத்தும்போதும் வாய்திறந்துஅன்னையே என்று அழுங் குழந்தையைப் போல் என் தோழியாகிய இத்தலைவிக்கு நீ இன்னாதவற்றைச்செய்தாலும், இனிதாகத் தலையளி செய்தாலும் இவள் நின்னாற் புரக்கப்பட வேண்டிய எல்லையிலிருப்பவள்; நின்னையன்றித் தனது மிக்க துன்பத்தை நீக்குவாரைப் பெற்றிலள் என்பதை அறிந்து இதமாக நடந்துகொள்க” என்றாள்.

    நனைமுதிர்  ஞாழற்  தினைமருள்  திரள்வீ
    நெய்தல்  மாமலர்ப்  பெய்தல்  போல
    ஊதை  தூற்றும்  உரவுநீர்ச்  சேர்ப்ப
    தாயுடன்று   அலைக்கும்  காலையும்  வாய்விட்டு
    அன்னா  வென்னுங்  குழவி  போல
    இன்னா  செயினும்  இனிதுதலை  யளிப்பினும்
    நின்வரைப்  பினளென்  தோழி
    தன்னுறு  விழுமம்  களைஞரோ  இலளே.  (குறுந்: 397 – அம்மூவனார்)

    தாய் தனக்குத் துன்பம் செய்தாலும் குழந்தையானது அழுதுகொண்டு அவளையே நாடி நிற்பதுபோல், தலைவனல்லால் வேறு பாதுகாப்பும், பற்றுக்கோடும் அற்றவளாய்த் தலைவி இருப்பதனால், அவளிடம் தலைவன் எப்போதும் தயவாய் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை அவனுக்குப் பல்லாற்றானும் வலியுறுத்துகின்றாள் தோழி.

    mother-and-child-pencil-artதாய் அலைப்பினும் தளர்நடைக் குழவி அவளையே நாடிநிற்கும் நிலையை குலசேகராழ்வார் இயற்றிய பெருமாள் திருமொழியும், நான்மணிக்கடிகை (எனும் பதினென்கீழ்க்கணக்கு) நூலின் 25ஆம் பாடலும் உருக்கமாய்ப் பேசுகின்றன.

     “….அரிசினத்தால்  ஈன்றதாய்  அகற்றிடினும்  மற்றவள்தன்,
    அருள்நினைந்தே அழுங்குழவி அதுவேபோன் றி ருந்தேனே” (பெருமாள். 5:1.)

    “குழவி அலைப்பினும்  அன்னேயென்  றோடும்” (நான்மணி. 25)

    தலைவனும் தலைவியும் தோழியிடம் பிரியாவிடைபெற்றுப் புறப்பட, விழிநீர் பார்வையை மறைக்க அவர்கள் செல்லும் வழியையே நெடுநேரம் பார்த்தபடி நின்றிருந்தாள் அந்த அருள்நங்கை!

    தலைவியின் நல்வாழ்வே தன்வாழ்வு எனும் நன்னர்நெஞ்சுடைய தோழியின் கழிபேரன்பு நமக்குப் பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. தன்னலம் என்பது கடுகளவுமற்ற தூயபெண்ணாய்த் தோழியைப் புனைந்திருக்கும் சங்கப் புலவோரின் திறத்தைப் போற்றுதற்கு வார்த்தையில்லை!

    [தொடரும்]

     

     

     

     

     

    Share
  •    அறிவியல் தமிழ் – கற்றல் கற்பித்தல் – 1

    –முனைவர் ப. ஜெயகிருஷ்ணன்

    முன்னுரை 

         மனிதனின் வளமான வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைவது அறிவியலாகும். அறிவியலை முறையாகப் பெறாத நாடும்,மொழியும் உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்க முடியாத அளவிற்கு அறிவியல் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.. உலகிலுள்ள அனைத்து மக்களும் அறிவியலை அவர்களது மொழிகளில் கொண்டுவரப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ச்சி அடைந்த நாடுகளான  பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் அறிவியல் தொழில்நுட்பக் கல்வியை அவர்களது மொழியிலேயே கற்கின்றனர். கி.பி. 2050-ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பம், கணினி வழிக்கல்வி ஆகியவற்றை முறையாகப் பெறாத ஆறாயிரம் மொழிகளில்  5980- மொழிகள் உலகில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும் என்று யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது. மாறி வருகின்ற உலகிற்கு ஏற்பத் தமிழ்மொழியும் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே அறிவியலைத் தமிழ்வழியில் கற்கவும் கற்பிக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளாக வெளிவந்த தமிழ் நூல்களிலுள்ள அறிவியல் செய்திகளும் ஆராயப்பட்டு வருகின்றன. இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று தமிழை மூன்றாக வகைப்படுத்துவர். அறிவியல் தமிழ் நான்காம் தமிழாக இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

          தமிழில் தொல்காப்பியம்,சங்க இலக்கியம் ஆகியவற்றில் ஏராளமான  அறிவியல் செய்திகள் காணப்படுகின்றன. இவை 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அறிவியலில் மேன்மையான அறிவு பெற்றிருந்ததை காட்டுகின்றன. தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூற வந்த நூலாயினும் அறிவியல், தத்துவம், மருத்துவம் வானவியல், சோதிடம், கணிதம் போன்ற துறைகளின் கருத்துக்களை வெளியிடும் ஒரு நூலாகவும் அமைந்துள்ளது.

    உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மேலைநாட்டு அறிவியல் சிந்தனையாளர்களான தேல்ஸ் (கி.மு.639-544) அனாக்ஸிமாண்டர்(கி.மு.611.547) ஷுனோபேன்ஸ்(கி.மு.576480) எம்படோகில்ஸ்(504-433) அரிஸ்டாட்டில் (கி.மு.384-322) போன்றோர்கள் வெளியிடாத பல அறிவியல் கருத்துக்களைத் தொல்காப்பியர் வெளியிட்டுள்ளார். உயிரினங்களின் வாய்ப்பாட்டைத் தொல்காப்பியர்.

               ”ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
              இரண்டறிவதுவே யதனொடு நாவே
              மூன்றறிவதுவே யவற்றொடு மூக்கே
              நான்கறிவதுவே யவற்றொடு கண்ணே
              ஐந்தறிவதுவே யவற்றொடு செவியே
              ஆற்றிவதுவே யவற்றொடு மனனே” என்று ஆறு வகையாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் தகுந்த எடுத்துக்காட்டுகளையும் தொடர்ந்துள்ள நூற்பாக்களில் தருவது அவரின் ஆழ்ந்த உயிர்கள் குறித்த அறிவை அறிந்து கொள்ள முடிகின்றது.

               புல்(ஓரறிவு); நந்து(இரண்டு அறிவு)
    எறும்பு(மூன்று அறிவு);தும்பி(நான்கு அறிவு);
    விலங்கு(ஐந்து அறிவு);மனிதன் (ஆறு அறிவு);

    என்ற பாகுபாடு பரிணாம வளர்ச்சியைத் தெளிவாக எடுத்தியம்பும் சிந்தனையாக அமைந்துள்ளது.

         தாவரங்களின் பல்வேறு பாகங்களான தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பூ, குழை என்று பிரித்து விளக்கியிருப்பது தாவரவியல் ஆசிரியர் தாவரங்களின் பாகங்களைப் படம் வரைந்து விளக்கியுள்ளது போல் அமைந்துள்ளது.

               ”தோடே மடலே ஓலை என்றா;
    ஏடே யிதழே பாளை என்றா
    ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
    புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்”
    (மரபியல்-87)

    பின்னர் எழுந்த சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், உரைநடை இலக்கியம், கவிதை, சிறுகதை, நாவல், புதுக்கவிதை ஆகியவற்றில் ஏராளமான அறிவியல் செய்திகளை அறிஞர்கள் தந்துள்ளனர். இவற்றை முறையாக ஆய்வுக்கு உட்படுத்திக் கற்கும்போது ஏராளமான அறிவியல் தமிழ் கலைச்சொற்களை நாம் பெறமுடியும்.

    தமிழில் அறிவியல் கலைச்சொல்லாக்க முயற்சியும் குறிப்பிடத்தக்க வரலாற்றினைக் கொண்டதாகும்.

     சான்றாக ‘அறிவியல்’ என்ற சொல்லின் படிநிலை வளர்ச்சியைக் கூறலாம்

         இயற்கை சாஸ்திரம்-1927
    பிரதம சாஸ்திரம்-1935
    அறிவுக்கலை-1942
    பொது விஞ்ஞானம்-1959
    அறிவு நூல்-1963
    விஞ்ஞானம் -1982
    அறிவியல்-1993-2012

    அறிவியல் கருத்துக்களை உள்வாங்கித் தமிழில் அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்பு, இலக்கணப் பிழைகள் இன்றி உருவாக்க முனைய வேண்டும். ஆனால் பல அறிவியல் நூல்கள் குறிப்பாகப் பாடநூல்கள் ஆங்கில வழி நூல்களின் நேரடி மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளன. ஆனால் இன்று எழுத்து சொல் வாக்கிய அமைப்புகளில் அறிவியலைக் தருவதில் ஒரு சீர்மையற்ற நிலையே காணப்படுகிறது. இந்த நிலை மாறவேண்டும்.

    தவறான மொழி பெயர்ப்பு

    The mineral wealth versus world population

         என்ற தொடர் தமிழ்வழிப் பாடநூலில் ‘உலக மக்கள் தொகைக்கு எதிராகத் தாதுச் செல்வங்கள் அமைகின்றன’ என்பது தவறான மொழிபெயர்ப்பாகும்.  ‘தாதுச் செல்வங்களும் மக்கள் தொகையும்’ என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும்

    சீர்மையற்ற மொழிபெயர்ப்பு

    ஒரு பொருளுக்குப் பல சொற்கள் வழங்குவது சீர்மையற்ற மொழிபெயர்ப்பாகும்.

    சான்று: பீக்கர், முகவை, ஜாடி

    சிமின்று, சிமெண்ட், சிமென்ட்டு, சிமெண்டு

    இலக்கணப் பிழைகளின்றி அறிவியல்தமிழ் அமையவேண்டும். குறிப்பாக எழுவாய் பயனிலை மாறிவருதல்,வேற்றுமை உருபுகளின் தவறான பயன்பாடு, ஒருமைப் பன்மை மயக்கம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்

    பேச்சு வழக்குச்சொற்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்

    சான்று: இராது, லியாக, முன்னமே, கெட்டியான.

    எழுத்து

    தமிழ் நெடுங்கணக்கில் 247 எழுத்துக்கள் உள்ளன. பிறமொழி உறவால் ஸ,ஷ, ஜ, க்ஷ ஆகிய கிரந்த எழுத்துக்களும் தமிழில் பயில்கின்றன. இலக்கண விதிகளில் பின்வரும் சில விதிவிலக்குகளை அறிவியல்தமிழில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    மொழி முதலெழுத்து

    இரப்பர், இரசாயன பந்தம்

    மொழி இடை எழுத்து

         எலக்ட்ரான் – க்ட்
    பெயின்ட் – ன்ட்

    மொழி இறுதி எழுத்து

         ஆர்பிட்
    ஸ் என்ற கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு
    ஸ்கான்டியம், ஸ்ரான்ஸியம்
    பாஸ்பரஸ் – பாஸ்பரசு – (தமிழ் மரபு)

    ஒலிபெயர்ப்பு முறைகள்

    உலகப் பொதுக்கலைச்சொற்கள் வழக்கில் அறிமுகமாகிவிட்ட பிறமொழிகள், அறிவியலாரின்பெயர்கள், சமன்பாடுகள், அளவுகள், குறியீடுகள், சுருக்கக் குறியீடுகள் ஆகியவற்றை அவ்வாறே அறிவியல் தமிழில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    கலைச்சொல்லாக்க முறைகள், பின்வரும் முறையில் அமைய வேண்டும்.

    நேருக்குநேர் மொழிபெயர்ப்பு
    இணைப்பு மொழிபெயர்ப்பு
    கருத்துப் பெயர்ப்பு

    சான்று (Salts – உப்புக்கள், Rock Salt – இந்துப்பு)

    ஒட்டுக்களைப் பெயர்த்தல்

    1. Exothermic reaction – வெப்பம் வெளியிடும் வினை- exo- வெளி
    2. Endothermic reaction – வெப்பம் கொள்வினை -Endo- கொள்
    3. Sub atomic particle – துணை அணுத்துகள்கள் -Sub-

     புதுச்சொல் படைத்தல்

          Element – தனிமம்;     Coal – நிலக்கரி
    Blow – ஊது; blowing – ஊதுதல்; blower – ஊதி.

    கணினிப் பயன்பாடு

         மேலைநாட்டு மொழிகளில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எண்ணற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் விளைவாக முதல்மொழி, இரண்டாம் மொழி, அந்நியமொழி என்ற நிலையில் கணினி வழிக் கற்பிப்பதற்கும் கற்பதற்கும் பல புதிய அணுகுமுறைகள் வெளிவந்துள்ளன. தமிழ் மொழியில் கணினிவழிக் கற்றலும் கற்பித்தலும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. கணினியை மொழி கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்துவதன் முக்கிய நோக்கமே அதன் பல்லூடகத் தன்மையாகும். கணினிவழிக் கற்றுத் தருவது என்பதாகாது; பல்லூடகத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் முழுமையாகக் கேட்டல், உணர்தல், பார்த்தல் போன்றவற்றின் அடிப்படையில் மொழியின் அடிப்படைத்திறன்களை வளர்ப்பதாகும். பல்வேறு கோணங்களில் பாடக்கருத்துக்களை மிக எளிமையாகச் சுலபமாக ஆர்வமூட்டும் வகையில் பயிற்றுவிக்கிறது பல்லூடகக் கல்வி. எனவே பல்லூடகத்தன்மையில் தயாரிக்கப்பட்டு ஆசிரியரின் துணையோடு நடைபெறும் மொழிக்கல்வி, மொழித்திறன்களை வேகமாக வளர்க்கஉதவும். பாடப்பொருளையும் எளிதில் கற்றுவிட முடியும்.

               எனவே தமிழில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள கணினிவழிக் கல்வி முறைகள் அனைத்தையும் இணையதளங்களில் உள்ள தமிழ் கற்பித்தல் முறைகளையும் மதிப்பீடு செய்யவேண்டும்.அதனடிப்படையில் நிறைகுறைகளைக் கண்டறிந்து குறைகளைக் களைந்தால், பிற மொழியினருக்குத் தமிழ்க் கற்பித்தல் சிறப்பாகச் செய்யஇயலும்.

    பல்லூடகம் வழி தமிழ்க் கற்றலும், கற்பித்தலும் 

         உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்றுவரை பல்வேறு முறைகளில் கற்பித்தலும் கற்றலும் நிகழ்ந்து வருகின்றன.

    கல்வெட்டு, ஓலைச்சுவடிகளில் இருந்த தகவல், அச்சு இயந்திரக் கண்டு பிடிப்பிற்குப் பின்பு காகித ஊடகத்திற்கு வந்தது போன்று இன்று கணினிக் கண்டு பிடிப்பினால் மின்னணு வடிவில் வந்துள்ளது என்றும் இது காலத்திற்கேற்ற ஊடக மாற்றம் என்றும் கூறுவார் எல்.இராமமூர்த்தி. கணிப்பொறி மென்பொருள், பல்லூடகம் (Multimedia), இணையம் போன்ற தகவல்தொடர்புச் சாதனங்களின் கண்டுபிடிப்பு இன்று எல்லாத் துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவது போன்று மொழிக்கல்வியிலும் இலக்கியக்கல்வியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. கற்பித்தல், கற்றலில் புதிய புதிய முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் பல கணிப்பொறி, பல்லூடகம்வழி அவர்கள் மொழியைக் கற்பிக்கவும் கற்கவும் பெரும் ஆர்வம்காட்டி வருகின்றன

               செம்மொழி என்ற உயர்வைப் பெற்றுவிட்ட தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியங்களையும் நவீனக் கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் வழிக் கற்பிப்பதும் கற்பதும் இன்று இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. தமிழைக் கணிப்பொறி வழிக் கற்பதற்கு அரசும் தனியார் நிறுவனங்களும் தமிழில் அறிமுக நூல்கள், இதழ்கள், கட்டுரைகள், குறுந்தட்டுகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளன.

    இணையமும் தமிழும்

         உலகையே ஒரே கைக்குள் மாற்றிவிட்ட ஆற்றல்வாய்ந்த தொழில் நுட்பம்தான் இணையம். இணையத்தில் செய்திகள் படிக்கலாம், படங்கள் பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம், அரட்டை அடிக்கலாம், பொழுது போக்கலாம், அறிவைப் பெருக்கலாம். உலகம் முழுவதிலும் உள்ள அனைத்துக் கணினிகளையும் ஒரே மின்னணு வலையில் சங்கிலிப் பிணைப்பில் ஒன்றாக்கிச் செய்யப்பட்டதுதான் இணையம்.

    இணையதளம்

               உலகில் முதல் இணையதளம் அர்பாநெட் ஆகும். தமிழில் முதல் இணையதளம் 1995- இல் தொடங்கப்பட்ட (Words home & Nation-Anthology of Singapore) வளையத்தில்தான் தமிழ் இணையம் வழக்கில் வந்தது.

    தமிழ் இணைய மாநாடு

               தமிழ் இணைய மாநாடு 1997-இல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்திலும், இரண்டாவது தேசிய மாநாடு 1999-இல் சென்னையிலும், மூன்றாவது 2000-இல் சிங்கப்பூரிலும், நான்காவது 2001-இல் மலேசியாயாவிலும், ஐந்தாவது கலிபோர்னியாவிலும் ஆறாவது அண்ணாப் பல்கலைக்கழகம், சென்னையிலும்  நடைபெற்றது.

    இணையம் வழி தமிழ் கற்றலும் கற்பித்தலும்

               ஆசிரியரை மையமிட்டக் கல்வி மாணவரை மையமிட்டக் கல்வி என்ற இரண்டு முறைகளும் மாறி இணையத்தை மையமாக வைத்த கல்வி என்று பரவலாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இணையம்வழி தமிழ்படிக்கப் பல இணையதளங்கள் உள்ளன. குறிப்பிடத்தகுந்தது தமிழ் இணையப் பல்கலைக்கழகமாகும். 17-2-2001-இல் தொடங்கப்பட்டது. மூன்று முதன்மையான பணித்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 1.கல்வித்திட்டம் 2. மின்நூலகம் 3. கணித்தமிழ்ப்பணிகள். இங்கு பின்வரும் ஆறு நிலைகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1.மழலைக்கல்வி 2.சான்றிதழ்க்கல்வி 3.பட்டையக்கல்வி 4.பட்டப்படிப்பு 5.பட்டமேற்படிப்பு ,6.ஆய்வு இவை தவிர பயணியர் தமிழ் சிறப்பு ஆய்வுத்திட்டங்களும் உள்ளன. இங்கு இணையம் வழித்தேர்வும் நடைபெறும். எந்த நாளிலும் எந்த நேரத்திலும் தேர்வு எழுதலாம். இணைய வழிப்பாடநூல் எழுதுவதும் தமிழ் இலக்கண இலக்கிய வடிவங்களைக் கற்பிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஒலிப்படக்காட்சிவழி ஆக்கப்பட்டுள்ளன. தேவாரம் போன்ற பாடல்கள் ஓசை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மின்நூலகம்

               நூல்களைக் கணினியில் பாதுகாக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இதற்காகச் செயலாற்றி வருகிறது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையமும் இப்பணியை செய்து வருகிறது. தமிழகத்திலுள்ள கன்னிமாரா நூலகம், தேவநேயப்பாவாணர் நூலகம், தஞ்சைப் பல்கலைக்கழக நூலகம் இப்பணியை செய்து வருகின்றன. உலகில் அனைவரும் பயன்படுத்தத் தக்க விதத்தில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயலாற்றிவருகிறது. தொல்காப்பியம் முதல் இக்கால இலக்கியம் வரை ஏறக்குறைய 250-க்கும் மேற்பட்டநூல்கள் 100000 பக்கங்களுக்கு மேல் அமைந்துள்ளன. இலக்கண இலக்கியம், சமய இலக்கியம், சிற்றிலக்கியம், நீதிநூல்கள், சித்தர் இலக்கியம், 20ஆம் நூற்றாண்டு இலக்கியங்களான கவிதை, உரைநடை, புதுக்கவிதை போன்றவை இடம்பெற்றுள்ளன. ரோஜா முத்தையா செட்டியாரின் நினைவால் சிகாகோ பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இங்கு 100000 நூல்கள் உள்ளன. இணைய முகவரி w.w.w.lib.uchicago.edu/su/southasia/rmrl/html,[itir சென்னை நூலகம் 2006-இல் தொடங்கப்பட்டது. www.chennailibrary.com, விருபா டாட்காம் நூலகம் தமிழ் தொடர்பான ஏராளமான தகவல்கள் கிடைக்கும் நூலகம் டாட்நெட் இது ஈழத்து நூல்களையும் இதழ்களையும் வெளியிட்டு வருகிறது.

    ஒருங்குறியீட்டு முறை

               கணினிகளுக்கிடையே தமிழ் எழுத்துக்களைப் படைப்பதில் எழுத்துச் சிக்கல் இருந்துவந்தது.  20-ஆம் நூற்றாண்டில் ஒருங்குறியீட்டு (Unicode) முறை வந்ததால் இச்சிக்கல் தீர்ந்தது. யூனிக்கோடு முறையில் டாம்,  டாப் என்ற இருவகை எழுத்துருக்களும் தமிழ் 99 விசைப்பலகையும் பயன்படுத்தப்பட்டது. இருந்தாலும் இடப் பிரச்சனையால் தமிழை முழுமையாக வெளியிட முடியவில்லை. 256 – எழுத்துக்குறிகளில் 128 குறியிடங்கள் ஆங்கிலத்திற்குக் கொடுக்கப்பட்டன. கணினி வல்லுநர்கள் 8 பிட் முறையை 16 பிட்டாக மாற்றினார்கள். 65536 குறியிடங்கள் கிடைத்தன. எல்லா மொழி எழுத்துக்களையும் பயன்படுத்த முடியும். முதல் மாநாட்டில் TSCII உருவாக்கப்பட்டது. இரண்டாவது மாநாட்டில்……TANSCII உருவாக்கப்பட்டது. இதில் தமிழுக்கு 128-160 இடங்கள் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 16 பிட் வளர்ச்சியால் தமிழுக்கு 2944முதல் 3072 ஒதுக்கப்பட்டன.  அவற்றில் 12 உயிர், 18 மெய், குறியீடுகள், கிரந்த எழுத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    [தொடரும்]

    ******

    கட்டுரையாசிரியர் பணிபுரிவது
    தமிழ்த்துறை
    கேரளப்பல்கலைக்கழகம்
    காரியவட்டம்
    திருவனந்தபுரம் 695 581

     

     

     

    Share