ஒப்பீட்டு நோக்கில் வீரசோழிய யாப்புப் படலம் – தொன்னூல் விளக்க யாப்பதிகாரம்

 .பிரபாகரன்,

     ஆய்வாளர்,

EFEO, புதுச்சேரி

              ம.பிரபாகரன் photo - ஒப்பீட்டு நோக்கில் வீரசோழிய யாப்புப்படலம் - தொன்னூல் விளக்க யாப்பதிகாரம்                                                                   

                        வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கத்தில் அமைத்துள்ள ஐந்திலக்கண முறைக்கும்  புத்தமித்திரர் தன் நூலான வீரசோழியத்தில் ஐந்திலக்கணத்தை அமைத்திருப்பதற்கும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. வீரசோழியம் தொல்காப்பிய மரபை விட்டுத் தன்போக்கில் எழுத்து, சொல் மரபை வடமொழியை ஒட்டி அமைத்துக் கொள்வதோடு பொருளிலக்கணத்திலும் தொல்காப்பியத்தைப் பின்பற்றாமல் வேறுமுறையில் அமைத்துக் கொள்கிறது. அணிக்குத் தண்டியின் காவியாதர்சத்தை மொழி பெயர்த்து அமைத்துக் கொள்கிறார் வீரசோழிய ஆசிரியர். யாப்பில் தொல்காப்பியம் யாப்பருங்கல மரபை ஒட்டி அவருக்கே உரிய ஒரு மரபை உருவாக்கி அமைக்கிறார். வீரசோழியம் செய்ததைப் போலவே வீரமாமுனிவரும் தமிழ்ப் பொருளிலக்கண மரபை முற்றிலும் தன் கோட்பாட்டின்படி அமைத்துள்ளார்’ என்று தன் கட்டுரையொன்றில் (மணற்கேணி9) முனைவர்.கி. நாச்சிமுத்து  கூறுகின்றார். மேற்கண்ட கூற்றில் பேராசிரியர் அவர்கள் வீரசோழியம் – தொன்னூல் விளக்கம் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரை, இவ்விரு நூல்களிலுமுள்ள யாப்பிலக்கணத்தை ஆராய்ந்து ஒற்றுமை, வேற்றுமைகளை சுட்டிக்காட்டுவதை தம் நோக்கமாகக் கொள்கிறது. கட்டுரையைத் தொடங்குவதற்கு முன் ஒரு கருத்து இங்குச்  சுட்டற்பாலது.  ராஜமாணிக்கம் என்பவர் தன்னுடைய வீரமாமுனிவருடைய தொண்டும் புலமையும் என்ற நூலில், தொன்னூல் விளக்க உரையில் நிறைய இடைச்செருகல்கள் இருப்பதாகக் கூறுவதால் இக்கட்டுரையில் தொன்னூல் விளக்கத்தின் உரை கணக்கில் கொள்ளப்படவில்லை.

                        முதலில் ஒரு கருத்தைக் கவனப்படுத்திக் கொள்ள வேண்டும். வீரமாமுனிவர், யாப்பிலக்கணத்தைப் பொறுத்தவரை எவ்விடத்திலும் தொல்காப்பியத்தைப் பின்பற்றவில்லை. இங்கு இவர் தொல்காப்பியம் பற்றித் தெரிந்திருந்தாலும் அது கடினமான வழக்கத்திலில்லாத நூல் என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார். அக்காலத்தில் தொல்காப்பியம் எல்லாவகைத் தமிழறிஞர்களாலும் கற்கப்படாத நூலாக இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்’ (மேற்கண்ட கட்டுரை) என்ற முனைவர்.கி. நாச்சிமுத்து  கருத்தும் இவண் ஒப்பு நோக்கற்பாலது. நாம் இக்கட்டுரையில் வீரமாமுனிவர் பின்பற்றியுள்ள முந்தைய யாப்பிலக்கண நூல்களின் பெயரைத் தனித்தனியாக சுட்டவில்லை. அவற்றை நாம் சிந்தனைபள்ளியாகக் கருத்தில் கொண்டு கூறியுள்ளோம். அதாவது காக்கைபாடினியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலவிருத்தி, யாப்பருங்கலக்காரிகை என்று தனித்தனியாகச் சுட்டாமல் யாப்பருங்கல மரபு என்றே கூறியுள்ளோம். வீரமாமுனிவர் உறுப்புக்களைத் தொகுத்துக் கூறும் முறையில் யாப்பருங்கல மரபைப் பின்பற்றுகிறார். ஆனால் உறுப்புக்களை விரித்துரைக்கும் போது எழுத்தை விளக்காமல் விட்டுவிடுகிறார். யாப்பருங்கல மரபில் (யாப்பருங்கலம்) ‘தூக்கு’ என்ற உறுப்பையும் சேர்த்து உறுப்புக்கள் 7 என்னும் முறைமை இருந்ததை அறியமுடிகிறது. ஆனால் வீரமாமுனிவர் தூக்கை சேர்த்துக்கொள்ளவில்லை. தூக்கை வீரசோழியர் ஓர் உறுப்பாகக் கூறாவிடினும் தூக்கு என்ற ஓசைக்கு வீரசோழியம் (உரை) மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. வீரசோழியம் தளையை நிராகரிக்கிறது. தளையால் பாவினது ஓசையை உண்டாக்க முடியாது. தூக்கு அடிப்படையிலேயே பாவினது ஓசையை உண்டாக்க முடியும் என்பது வீரசோழியக் கொள்கை. இத்தன்மையைத் தொன்னூல் விளக்கத்தில் நம்மால் காணமுடியவில்லை. தூக்கு என்ற சொல்லை ‘பா’ என்ற பொருளிலது பயன்படுத்தினாலும் தளையே ஓசையை உண்டாக்கும் என்ற கொள்கையை உடையதாய் இருக்கிறது.

 உதாரணம்:

                        வெள்ளையுள் பிறதளை விரவா வெண்டளை

                   ஒன்றாய்ச் செப்பல் ஓசையாம் அஃதே

                   ஏந்திசை வெண்சீர் இயற்சீர் தூங்கிசை

                   ஒழுகிசை இரண்டும்உள எனில் ஆகும்

                        வெண்பா ஓசையின் விகற்பம் உணர்த்துகின்றார். பிறதளை விரவாது வெண்தளையே வந்ததால் விளையும் செப்பலோசை இதற்குரியது. வெண்சீர் மட்டும் வருவது ஏந்திசையும் இயற்சீரே பெறுவது தூங்கிசையும் இரண்டும் கலப்பது ஒழுகிசைச் செப்பலும் ஆம் (131:1978).

                        வீரசோழியம் தொல்காப்பியத்தைப் பின்பற்றி தளையை ஓர் உறுப்பாகக் கூறவில்லை. தொன்னூல் விளக்கம் தளையை யாப்பருங்கல மரபைப் பின்பற்றி ஏழுவகையாகக் கூறுகிறது. நாம் ஏற்கனவே கூறியது போல் வீரசோழியம் தளையை நிராகரித்தது அதன் கோட்பாட்டம்சத்தில் மிகவும் முக்கியமானதாகும். தொன்னூல் விளக்கத்தில் காணப்படும் உறுப்புக்களைத் தொகுத்துக் கூறும் முறைமையை நாம் வீரசோழியத்தில் பார்க்கமுடியாது. வீரசோழியம் தன் யாப்புப் படலத்தை அசைகளை விளக்குவதுடன் தொடங்குகிறது. அது எழுத்தைப் பற்றி எதுவும் விளக்கவில்லை. அதே போல் எழுத்திற்கு முந்தைய உறுப்பான மாத்திரையையும் வீரசோழியம் விளக்கவில்லை. யாப்பருங்கல மரபு  மாத்திரையைச் செய்யுள் உறுப்புக்களுள் ஒன்றாகத் தொகுத்து கூறவில்லை. எனினும் யாப்பருங்கல மரபைச் சார்ந்த   உரைகள் (யாப்பருங்கல்ம், யாப்பருங்கலக்காரிகை உரைகள்) மாத்திரையை விளக்குகின்றன. தொன்னூல் விளக்கம் மாத்திரையைப் பற்றி நூற்பாவில் எதுவும் கூறவில்லை. உரையைப் பற்றி ஒன்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. தொன்னூல் விளக்கம் எழுத்தை விளக்காமல் விட்டது வீரசோழியத்தைப் பின்பற்றியதனாலாகலாம். தளை 7 என்பதில் யாப்பருங்கலமரபோடு தொன்னூல் விளக்கம் ஒத்தமைகின்றது. ஆனால் வைப்பு முறையில் வேறுபடுகிறது. பின்வரும் அட்டவணை இதனைக் காட்டும்.

வ. எண்    யாப்பருங்கலம்   வீரசோழியம் தொன்னூல்விளக்கம்

 

 1 இயற்சீர் வெண்டளை          –  நேரொன்றாசிரியத்தளை

 

 2  வெண்சீர் வெண்டளை          – நிரையொன்றாசிரியத்தளை

 

 3 நேரொன்றாசிரியத்தளை          – வெண்சீர் வெண்டளை

 

 4 நிரையொன்றாசிரியத்தளை          – இயற்சீர் வெண்டளை

 

 5 கலித்தளை          – கலித்தளை

 

 6 ஒன்றிய வஞ்சித்தளை         – ஒன்றா வஞ்சித்தளை

 

 7 ஒன்றா வஞ்சித்தளை         – ஒன்றிய வஞ்சித்தளை

 

                  அசையைப் பொறுத்தவரை தொன்னூல் விளக்கம் முந்தைய யாப்பருங்கல மரபைப் பின்பற்றி அசை, நேரசை, நிரையசை என இருவகைப்படும் என்றே கூறுகிறது. வெண்பாவின் இறுதியை பொறுத்தவரை முந்தைய யாப்பருங்கல  மரபு நாள், மலர், காசு, பிறப்பு என்பனவற்றுள் ஏதேனும் ஒன்றை கொண்டு முடியும் என்று காட்டுகின்றது. அதையே தொன்னூல் விளக்கமும் பின்பற்றுகிறது. இது குறித்த தொன்னூல் விளக்கப் பகுதியாவது:

                   வெள்ளைக்கு இயற்சீர் வெண்சீர் விரவி

                   ஏற்கும் அளவடி ஈற்றடி சிந்தடி

                   ஈற்றுச்சீர் அசைச்சீர் உக்குறள் மிகலுமாம்

 

வெண்பாவின் இயல்பு உணர்த்துகின்றார். இயற்சீரும், வெண்சீரும் விரவி, அளவடியாய், ஈற்றடி சிந்தடியாய் ஈற்றுச்சீர் அசைச்சீர் ஆய் வரும். அசைச்சீர் ஆய் வரும். அசைச்சீர் உக்குறள் மிக்கும் வரும்.

 

                   ‘சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

                    கொல்லப் பயன்படும் கீழ்’

                                                          (130:1978)

 

                         வீரசோழியம் தமிழ்ச்சீரை முற்சீர், இடைச்சீர், கடைச்சீர் என்று பாகுபடுத்திக்காட்டும். இம்மரபைத் தொன்னூல் விளக்கத்தில் காணமுடியவில்லை. யாப்பருங்கல மரபு நாலசைச்சீர், ஓரசைச்சீர் ஆகிய இரண்டையும் பொதுச்சீராக அடையாளப்படுத்தும். ஆனால் தொன்னூல் விளக்கம் அசைச்சீரைப் பொதுச்சீரிலிருந்து தனியாக பிரித்துக்காட்டுகிறது. வீரசோழியத்தில் இத்தன்மை காணப்படவில்லை. பின்வரும் அட்டவணை இதனைத் தெளிவாகக் காட்டும்.

   யாப்பருங்கல மரபு   வீரசோழியம்  தொன்னூல் விளக்கம்

 

இயற்சீர் – 4    முதற்சீர் (இயற்சீர்) அசைச்சீர்

 

 வெண்பா உரிச்சீர் – 4    இடைச்சீர் (உரிச்சீர்)   இயற்சீர் – 4

 

  வஞ்சி உரிச்சீர்    கடைச்சீர் ( கனிச்சீர்)   வெண்பா உரிச்சீர் -4,

வஞ்சி உரிச்சீர் -4

  பொதுச்சீர்

நாலசைச்சீர் -16

ஓரசைச்சீர் – 2

   பொதுச்சீர்

நாலசைச்சீர்

இங்ஙனம் தொன்னூல் விளக்கம் அசைச்சீரைப் பொதுச்சீரிலிருந்து விலக்கிக்காட்டுவது கவனத்திற்குரியது. ஒரு அடியில்  எட்டுச்சீர் வரை வருவது சிறப்பு என தொன்னூல் விளக்கம் கூறுவது யாப்பருங்கல மரபைப் பின்பற்றியாகும். இலக்கண விளக்கத்தில் ஏழு சீர் வரை வருவது சிறப்பு என கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் வரும்  ‘நாற்சீர் கொண்ட தடியென படுமே’ என்ற சூத்திரம் இவண் எண்ணற்பாலது.

                        தொடைகளை விளக்குமிடத்து தொன்னூல் விளக்கம் யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது. ச.வே. சுப்பிரமணியன் அவர்கள், ‘தலையாகு, இடையாகு, கடையாகு எதுகைகள் இந்நூலுக்கே (தொன்னூல் விளக்கம்) உரியன (215)’ என்று கூறுவது பொருத்தமாக தோன்றவில்லை. இம்மூன்று எதுகைகளையும் தொன்னூல் விளக்கம் யாப்பருங்கலமரபிலிருந்தே பெற்றிருக்கிறது என்றே தோன்றுகிறது. யாப்பருங்கல விருத்தியில் இம்மூன்று எதுகைகளும் விளக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும் வீரசோழியம் ‘எதுகை எனினும் தொடை எனினும் ஒக்கும்’ என்று எதுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. வீரசோழிய யாப்பிலக்கணக்கோட்பாட்டில் எதுகை முக்கிய இடம் வகிக்கிறது. இத்தன்மையை தொன்னூல் விளக்கத்தில் காணமுடியவில்லை. எதுகைக்கு என இவர் இரு சூத்திரங்கள் ஒதுக்கியுள்ளார். இதனால் இவர் எதுகைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்று கூறமுடியாது. கீழ்க்காணும் ஒப்பீட்டு அட்டவணை தொன்னூல் விளக்கத்தின் தொடை பற்றிய நோக்கைத் தெளிவாக்கும்.

  யாப்பருங்கலம்   வீரசோழியம்  தொன்னூல் விளக்கம்

 

   மோனை, எதுகை, முரண்,இயைபு, அளபெடை   மோனை , எதுகை    மோனை, எதுகை,

முரண், இயைபு, அளபெடை

இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று  

இணை, பொழிப்பு,

ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று.

செந்தொடை, இரட்டைத்தொடை, அந்தாதித்தொடை செந்தொடை,

இரட்டைத்தொடை, அந்தாதித்தொடை

எதுகை

வ.எண்      யாப்பருங்கலம்   வீரசோழியம்  தொன்னூல்

விளக்கம்

   1     முதலெழுத்து குற்லாய் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்த எதுகை         ✓        ✓

 

   2 மூன்றாமெழுத்து ஒன்றின எதுகை           ✓        ✓
   3     இரண்டடி எதுகை            ✓        –

 

   4   சீர் முழுதும் ஒன்றிவந்த  எதுகை              ✓        –

 

   5     இன எதுகை             ✓         ✓

 

  6     உயிரெதுகை             ✓         –

 

  7 ஆசிடையிட்ட எதுகை

            ✓

         ✓

 

  8  தலையாகு எதுகை             –     தலையாகு

எதுகை

  9  இடையாகு எதுகை             –    இடையாகு எதுகை

 

  10  கடையாகு எதுகை            –    கடையாகு எதுகை

 

தொன்னூல் விளக்கத்தைப் பொறுத்தவரை வைப்புமுறையில், ஆசு எதுகைக்கு பின்னரே இன எதுகை இடம்பெற்றுள்ளது. ஒப்பீட்டு முறைக்காக மேல் அட்டவணையில் மாற்றிக் கூறப்பட்டது.

                        தமிழ்ப்பாவினங்களுடைய விளக்கமுறையைப் பொருத்தவரை வீரமாமுனிவரின் விளக்கமுறை மற்ற மரபுகளிலிருந்து வேறுபட்டு அமைகிறது. யாப்பருங்கலத்தில் ஒவ்வொரு பாவிற்கும் பிறகு அதன் இனங்கள் விளக்கப்படுகின்றன. வீரசோழியத்தில் பாவினங்கள் பாக்கள் விளக்கப்பட்ட பிறகு   மொத்தமாக, வரிசையாக விளக்கப்படுகின்றன. தொன்னூல் விளக்கத்தில் ஒவ்வொரு கூறின் கீழ் (துறை, தாழிசை, விருத்தம்) அனைத்து பாவினங்களும் விளக்கப்படுகின்றன. சான்றாகத் துறை எனும் கூறின் கீழ் வெண்டுறை, ஆசிரியத் துறை, கலித்துறை, வஞ்சித்துறை ஆகியவை விளக்கப்படுகின்றன. இது பிற மரபுகளில் காணப்படாதது ஆகும். கீழ்க்கண்ட அட்டவணைகள் இதனை உணர்த்தும்.

யாப்பருங்கலம்:

      வெண்பா    ஆசிரியப்பா       கலிப்பா     வஞ்சிப்பா

 

      தாழிசை    தாழிசை       தாழிசை     தாழிசை

 

     துறை   துறை        துறை    துறை

 

     விருத்தம்    விருத்தம்       விருத்தம்     விருத்தம்

 

யாப்பருங்கலக் காரிகை:

   வெண்பா   ஆசிரியப்பா      கலிப்பா   வஞ்சிப்பா

 

     விருத்தம்    தாழிசை       தாழிசை       தாழிசை

 

     தாழிசை   துறை        துறை        துறை

 

     துறை    விருத்தம்       விருத்தம்       விருத்தம்

 

வீரசோழியம்:

 வெண்பா பாவினம்   ஆசிரியப்பாவினம்  கலிப்பாவினம்  வஞ்சிப்பாவினம்

 

   விருத்தம்   தாழிசை      தாழிசை   துறை

 

   தாழிசை   துறை     விருத்தம்    விருத்தம்

 

   துறை   விருத்தம்      துறை    தாழிசை

 

தொன்னூல் விளக்கம்:

           துறை         தாழிசை  விருத்தம்

 

    வெண்பா      வெண்பா      வஞ்சி

 

    ஆசிரியம்      ஆசிரியம்      கலி

 

    கலிப்பா      கலிப்பா    வெள்ளை

 

   வஞ்சி      வஞ்சி    அகவல்

 

மேலே கண்ட அட்டவணைகளில் யாப்பருங்கல மரபைப் போல் பாவின வைப்புமுறை வீரசோழியத்தில் அமையாமல் மாறுபட்டும்  தொன்னூல் விளக்கத்தில் பாவின வைப்புமுறை யாப்பருங்கலம், வீரசோழியம் ஆகிய இரண்டும் போல்  அமையாமல் மாறியும் அமைந்துள்ளமையை உற்றுநோக்குக.

                        பொதுநோக்கில் வீரசோழியத்தோடு தொன்னூல்விளக்கத்திற்கு வேறுபாடு இருப்பினும் சிறப்பு நோக்கில், அது வீரசோழியத்தை ஒட்டித் தன் கோட்பாட்டை உருவாக்கிக் கொள்கிறது. உண்மையில் வீரசோழியத்தைப் போல சில புதுமைகளைத் தொன்னூல் விளக்கம் படைத்துள்ளது என்றே கூறவேண்டும்.  வீரசோழியம் கலிவெண்பாவை வெண்பா வகையில் சேர்த்து புதுமை உண்டாக்கியிருக்கும். அதே போல் தொன்னூல் விளக்கமும், சவலை வெண்பா என்ற பாவை வெண்பா வகையில் சேர்த்துப் புதுமை செய்துள்ளது. சவலை வெண்பா வகையை மாறன் அலங்காரம் கூறினாலும், அதை வெண்பா வகையில் முதலில் சேர்த்தது தொன்னூல் விளக்கமேயாகும். சவலை வெண்பாவை வெண்பா வகையில் வைத்து விளக்கிய தொன்னூல் விளக்கம் கலிவெண்பாவை கலிப்பாவில் வைத்தே விளக்கியுள்ளது. வீரசோழியம் சவலை என்ற ஒரு பா வகையைத் தன் பத்தியக்கவி வகையில் வைத்துள்ளது. சவலையை அது முதற்சவலை, இடைச்சவலை, கடைச்சவலை என்று விளக்கும். வீரமாமுனிவர் சவலை வெண்பா கூறுவதற்கு வீரசோழியம் காரணமாக இருந்திருக்கலாம்.

                        தொன்னூல் விளக்கத்தைப் பொருத்தவரை முக்கியமாக அமைவது செய்யுளைப் பத்தியம், கத்தியம் என்று பகுத்திருக்கும் முறையாகும். இப்பகுப்பை வீரமாமுனிவருக்கு முன்னர் தமிழ் யாப்பிலக்கண மரபில் செய்திருப்பது வீரசோழியமே ஆகும். பகுப்பு நிலையில் ஒற்றுமையிருப்பினும் விளக்கமுறையில் வீரசோழியத்திற்கும் தொன்னூல் விளக்கத்திற்குமிடையில் வேறுபாடு உள்ளது. வீரசோழியம் பத்தியப் பிரிவில் கூறும் குறள், சிந்து, திரிபாதி, திலதம் முதலிய எதுவும் தொன்னூல் விளக்கத்தில் இல்லை. தொன்னூல் விளக்கம் தமிழ்ப்பாக்களையும் பாவினங்களையும் பத்தியமாகக் கூறுகிறது. அந்நூற்பா பின்வருமாறு.

 

                   ‘பத்தியம் என்ப பாவொடு பாவினம்

                    கத்தியம் அவைபோல் கலை அல்லனவே’

                                                                   (நூற்.250)

வீரசோழியம் (மூலம்) கட்டுரைப்போலி, செய்யுள் போலி ஆகியவற்றைக் கத்தியமாகக் கூறும். ஆனால்  வீரசோழிய உரை ஒரு படி மேலே சென்று செய்யுள் போலி என்பதற்கு  தமிழ்ப்பா பாவினங்களைக் உதாரணமாகக் கொண்டு அவற்றைக் கத்தியம் என்று கூறும்.ஆனால் தமிழ்ப் பாக்களையும், பாவினங்களையும்    தொன்னூல் விளக்கம் ‘பத்தியம்’ என்று கூறுவதைக் கவனிக்க. தொன்னூல் விளக்கம் பத்தியம், கத்தியம் என்று வீரசோழிய மரபை அடியொற்றி கூறினாலும் அதிலிருந்து விலகி தனக்கென தனிக் கோட்பாட்டை வகுப்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளமுடியும். அடுத்துப் போலி பற்றி இவ்விரு நூல்கள் கூறும் கருத்துக்கள் முக்கியமானவையாகும். வீரசோழியம் பத்திய இலக்கணத்தில் மிக்கும் குறைந்தும் வருவன பத்தியப்போலி என்கிறது. இவற்றை அது கத்தியத்தில் அடக்கியது போல் தெரியவில்லை. வீரசோழியத்தைப்(மூலம்) பொருத்தவரை, கத்தியம் என்பது கட்டுரைப்போலி, செய்யுள் போலி ஆகிய இரண்டுமேயாகும் என்று தோன்றுகிறது. ஆனால் அது கட்டுரைப்போலி மற்றும் செய்யுட்போலி ஆகியவை எவை என்று கூறவில்லை.(வீரசோழிய உரைதான் கட்டுரைப்போலி என்றால் என்ன ? செய்யுள் போலி என்றால் என்ன? என்று விளக்குகிறது. தமிழ்ப்பாவினங்களை அது செய்யுட்போலி என்று கூறியது மேலே சுட்டிக்காட்டப்பட்டது).   தொன்னூல் விளக்கமோ தமிழ்ப்பாவினங்களின் இலக்கணத்தில் பிழைத்து வருவனவற்றைப் போலி என்கிறது. இது ஒரு வகையில் வீரசோழியர் காட்டும் பத்தியப் போலி போலவே தோன்றுகிறது. பத்தியம், கத்தியம், போலி இவையெல்லாம் வடமொழி இலக்கணங்கள் எனினும் வீரசோழியருக்கு இருந்த ஆழமான கோட்பாட்டுப் பின்னணி தொன்னூல் விளக்கத்திற்கு இருந்ததாகத் தெரியவில்லை. வீரசோழியரின் கோட்பாட்டைப் பொருத்தவரை பத்தியம் என்பது தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாக அமைகிறது. ஆனால் தொன்னூல் விளக்கம் வடமொழிப் பிரிவில் (பத்தியம்) தமிழ்ப்பாக்களைச் சேர்க்கிறது என்பது கவனத்திற்குரியது. இதன்மூலம் இரு வேறுபட்ட கற்றல்-கற்பித்தல் மரபை நம்மால் உணர முடியும். வீரசோழியத்தின் கற்பித்தல் மரபு ஏற்கெனவே விளக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில் தொன்னூல் விளக்கத்தின் கற்பித்தல் மரபை அதன் சமூகப் பின்னணி கொண்டு விளக்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கீழ்க்கண்ட அட்டவணைகள் வீரசோழியம், தொன்னூல் விளக்கம் ஆகியவை கூறும் பத்தியம் கத்தியம் ஆகியவற்றை ஒப்பிட்டுக் காட்டுகின்றன.

பத்தியம்

   வ.எண்             வீரசோழியம்       தொன்னூல் விளக்கம்

 

    1          குறள்     வெண்பா               துறை

 

அகவல்        X       தாழிசை   = 17

 

கலிப்பா                 விருத்தம்

 

வஞ்சி

   2   சிந்து  

 

   3  திரிபாதி  

 

   4   வெண்பா  

 

   5   திலகம்  

 

   6  விருத்தம்  

 

   7   சவலை  

 

கத்தியம்

 வ.எண்      வீரசோழியம்   தொன்னூல் விளக்கம்

 

    1      கட்டுரைப்போலி     இலக்கணம் சிதையினும்

இலக்கணப் பாவின்

நடையோடு ஒப்ப வருவன

 

    2    செய்யுள் போலி  

 

பத்தியப்போலி

வ. எண்     வீரசோழியம்  தொன்னூல் விளக்கம்

 

  1   குறள் போலி                 –

 

  2    சிந்துப் போலி                –

 

  3    திரிபாதிப் போலி                –

 

  4     வெண்பாப் போலி                –

 

  5    திலதப் போலி                 –

 

  6   விருத்தப் போலி                 –

 

   7   சவலைப் போலி                 –

 

                        தொன்னூல் விளக்கம் தமிழ்ப்பாவினங்களை விளக்கி வரும் போது விருத்தம் பற்றிய பகுதியில் வடமொழி விருத்தத்தையும் சேர்த்து விளக்குகிறது. இது  குறிப்பிட்டுச்சொல்லத்தகுந்தது. வீரசோழியத்தில் வடமொழிவிருத்தம் தனியாக விளக்கப்படுகிறது. அது பத்தியக் கவிவகைகளில் ஒன்றாகக் கூறும் விருத்தம் என்பது தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாக அமைகிறது. இதைத் தொன்னூல் விளக்கத்தோடு ஒப்பிடமுடியாது. வீரமாமுனிவர் தமிழ் விருத்தத்துடன் வடமொழி விருத்தத்தைச் சேர்த்து விளக்குவதை யாப்பருங்கல விருத்தி, காக்கைபாடினி முதலானோர் வடமொழி சந்த தாண்டகங்களைத் தமிழ்ப் பாவினங்களுள் அடக்குவர் என்றும் தொல்காப்பியர் கொச்சகக் கலிப்பாவுள் அடக்குவர் என்றும் கூறுவதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். தொன்னூல் விளக்கம் தமிழ் விருத்தத்துடன் சேர்த்து வடமொழி விருத்தத்தை எண்ணிப்பார்ப்பதற்கு மேற்சொன்ன யாப்பருங்கல மரபு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். இதில் மற்றொரு செய்தியும்  கவனிக்கத்தக்கது. யாப்பருங்கல மரபைப் போல் தொன்னூல் விளக்கம் தமிழ் விருத்தத்திற்குள் வடமொழி விருத்தத்தை அடக்கவில்லை சேர்த்து எண்ணுகிறது. இது முக்கியமானதாகும். மேலும் தொன்னூல் விளக்க ஆசிரியர் சந்த விருத்தத்தின் வகையாக எடுத்துக்காட்டும் எழுத்து சந்த விருத்தம், அசைச்சந்த விருத்தம் ஆகியவை வீரசோழியம் எடுத்துக்காட்டும் வர்ண விருத்தம், மாத்திரா விருத்தம் ஆகியவற்றுடன் ஒத்துள்ளமை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். வீரசோழிய மரபில் உள்ள வர்ண விருத்தம், மாத்திரா விருத்தம் ஆகியவற்றை மொழிபெயர்த்து எழுத்து சந்த விருத்தம், அசைச் சந்த விருத்தம் எனத் தொன்னூல் விளக்கம் அமைத்துக் கொண்டது எனலாம். யாப்பருங்கல மரபில் மாத்திரா விருத்தம் தனியாக விளக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு விடயம், தொன்னூல் விளக்கம் சந்த விருத்தத்தை வண்ண விருத்தம் என்று கூறுவது மேற்கண்ட இரு மரபுகளிலும் இல்லாதது. மேற்கண்ட கருத்துக்கள் மூலம் தொன்னூல் விளக்கம், யாப்பருங்கல, வீரசோழிய மரபுகளை பின்பற்றினாலும் அப்படியே தம் நூலில் அமைத்துக் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும். இவ்விடத்தில்  முக்கிய கருத்தொன்றைச் சுட்டிக்காட்டுவது அவசியம். யாப்பருங்கல விருத்தி பாவுக்கு சாதி, நிலம், நிறம், ராசி ஆகியவை கூறும்போது தம் கருத்தை எங்கும் பதிவு செய்யாது. அங்ஙனம் பதிவு செய்யாமைக்கு அதனுடைய சமூகச் சூழல் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் வீரமாமுனிவர் பாவுக்குச் சாதி நிலம் முதலியன விரிக்கும் போது முதற்பாவாகிய நான்கிற்கும் சிலவிலக்கணங்களையுரைத்தார் முன்னோர். அவையொரு  பயனுமொரு காரணமுமின்றி முன்னர் நிறுத்திய மதத்திலூன்றினவாயினும் பிறன் மதங் கூறவே தந்திரயுத்தி யாகையிலவற்றைக் காட்டுதும் ‘ (214:1891) என்று தம் கருத்தைப் பதிவு செய்கிறார் (உரை இடைச்செருகல் நிறைந்ததாகையால் இக்கருத்து அவரால் சொல்லப்பட்டது என்று உறுதியாக கூறமுடியாதென்றே கூறலாம்). இங்ஙனம் பதிவு செய்வதற்கு அவருடைய ஐரோப்பிய பின்னணியே காரணமாகும். இதுவரை கண்ட கருத்துக்கள் பின்வரும் பேரா.கி. நாச்சிமுத்து அவர்களின் கூற்றை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன.

                        ‘கிளிப்பிள்ளை போல தொல்காப்பியருக்கு பின்வந்தோர் சொல்லிச் செல்ல வீரமாமுனிவர் மட்டும் முன்னையோர் கருத்தை மீட்டும் சொன்னாலும் தானாகச் சிந்தித்துத் தன் கருத்தைப் புதுமையாகப் புரட்சிகரமாக தன் இலக்கணநூலில் முன்வைக்கிறார். இதுமேலே சுட்டிய தமிழ் வழி வந்த சமூக நீதிக்கருத்துக்களை உட்கொண்டும் கிறித்துவக் கோட்பாடுகளின் பின்னணியில் ஐரோப்பியக் கிறித்துவக் கோட்பாட்டினைப் பின்பற்றி எழுந்த சமூகநீதிக் கருத்தை முன்னிறுத்தியும் அவர் செய்த வெளிப்பாடு எனலாம்’ (மணற்கேணி 9.9).

நூலடைவு

சுப்பிரமணியன் ச.வே. (பதிப்பாசிரியர், விளக்கவுரையாசிரியர்) தொன்னூல் விளக்கம், தமிழ்ப்பதிப்பகம், சென்னை மு.ப.1978.

நாச்சிமுத்து. கி., வீரமாமுனிவர் (1680-1747) தொன்னூல் அகப்பொருளிலக்கணம் காட்டும் சமத்துவக் கல்விக் கொள்கை புதுமையும் புரட்சியும், மணற்கேணி இதழ் 9, டிசம்பர் 2011, பக்.33-41.

மெக்கென்ஜி.காபன் அய்யர். ஜி. (பதிப்பாசிரியர்) தொன்னூல் விளக்கம், ADDISON & CO, Madras: 1891.

வீரசோழியம் பெருந்தேவனார் உரை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், மு.ப.2008.

1 thought on “ஒப்பீட்டு நோக்கில் வீரசோழிய யாப்புப் படலம் – தொன்னூல் விளக்க யாப்பதிகாரம்

  1. வாழ்த்துக்கள்…

    கட்டுரை மிகவும் நன்றாக வந்துள்ளது.

    இது போன்ற யாப்புக் கட்டுரைகளைத் தொடர்ந்து வழங்குவீர்கள் என்று

    எதிர்பார்க்கிறோம்.

    வல்லமைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published.